குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12/மரபுகளைக் காப்பது நமது கடமை


20

மரபுகளைக் காப்பது நமது கடமை


“தினமணி” மதுரைப்பதிப்பு 18.11.94

இந்த நூற்றாண்டு, இயக்கங்கள், சங்கங்களின் நூற்றாண்டு என்று கூறலாம். இந்தப் போக்கின் விளைவு என்ன? எதிர் விளைவுகள் என்ன? என்பதை ஆராய்ந்தறிவது சமய, சமூகச் சிந்தனையாளர்கள் பொறுப்பும் கடமையுமாகும்; சங்கங்கள் - அமைப்பதும் எளிதான ஒன்று. அதனை நெறிமுறைப்படுத்துவதில் மிகுந்த இன்னல்கள் ஏற்படும். நமது சமூகம் உணர்ச்சி வசப்படும் இயல்பினது. நமது சமூகத்திற்குக் கோபமூட்டி விடுவது எளிது. ஆனால் அமைதி வழியில் அழைத்துச் செல்வது எளிதன்று. இன்றுள்ள சூழ்நிலையில் நாட்டின் அமைதியையும் ஒருமைப்பாட்டையும் காப்பதே தலையாய கடமை.

நமது இந்து சமயம் ஒரு சமயமாகவோ மதமாகவோ தோன்றி வளர்ந்ததல்ல. நமது இந்து சமயம் ஒரு வாழ்க்கை முறை. சொல்லப்போனால் சைவம், வைணவம் என்று பல்வேறு பெயர்கள், காலப் பரிணாமத்தில் பெற்று விளங்கிய சமய நெறிகளே ஒருங்கிணைந்து இந்தியா என்று அடிப்படையில், இந்து சமயம் என்று ஒன்றாக்கினர். இந்து சமயம் ஒரு வாழ்க்கை முறை. இந்து சமயம் ஒரு பிரசார சமயமாக இருந்ததல்ல; இருக்கவும் இயலாது. பௌத்த, சமண மதங்கள் தோன்றிய பிறகுதான், நமக்கு மத நிறுவனங்கள் தோன்றுகின்றன. வேதங்களும் கூட வழி வழியாக வந்தவையேயாம். எழுதி, மலிவுப் பதிப்பு என்று விளம்பரப்படுத்தி விற்றவையல்ல. இந்து சமயம் கடவுள் வழிபாட்டை உயிர்ப்பாகக் கொண்டது. இந்த அடிப்படையில் எழுந்த திருக்கோயில்கள் பலப் பல. திருக்கோயில்களே நமது சமய நாகரிகத்தின் அடித்தளம். திருக்கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற எல்லை அளவுக்கு, நமது சமூக வாழ்க்கையில் திருக்கோயில்கள் இடம் பெற்றன.

திருக்கோயில்களில் ஆகமங்கள்-தந்திரங்கள் வழி நாள் தோறும் வழிபாடுகள் நடந்து வருகின்றன. ஆண்டில் சில சிறப்பு வழிபாடுகளும் திருவிழாக்களும் நடந்து வருகின்றன. இவைகளுக்கு என்று நெறிமுறைகள், மரபுகள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக இந்த நெறிமுறைகள், மரபுகள், முறை பிறழாமல் பின்பற்றப்பட்டு வருகின்றன. நாயன்மார்கள், ஆழ்வார்கள் இந்த மரபுகளை மீறாமல் பேணிக் காத்து, நமக்கு அளித்துச் சென்றுள்ளார்கள். ஆனால், நாம் நமது விருப்பம் போல மரபு மாற்றவோ நீக்கவோ, முயன்றால், பலரும் பல விதமாக எண்ணவும் மாற்றவும் முற்படுவர். முடிவாக, ஒன்றுமே இல்லாமல் போய் விடும். அதனால், மரபுகளைப் பேணுதல் என்பது தவிர்க்க இயலாதது மட்டுமல்ல; அவசியமும் கூட.

சமயமும், சமய வழிப்பட்ட சமூகமும் ஒருங்கிணைந்து வலிவும், பொலிவும் பெற வேண்டுமாயின் மரபுகள் பின்பற்றப்பட வேண்டும். இங்கு நாம் மரபுகள் என்று குறிப்பிடுவது பழக்கங்களை- வழக்கங்களை மையமாக வைத்து மட்டும் அல்ல. சமய நெறியை பாதுகாத்து அரண் செய்யும் நூல்கள், வழி வழியாக அங்கீகாரம் பெற்ற நூல்கள், பல உள்ளன. கடைசியாக நமக்குக் கிடைத்தவை பன்னிரு திருமுறைகளும், நாலாயிர திவ்வியப் பிரபந்தமுமாகும். இங்ஙனம் வரையறை செய்யப் பெற்றுப் பல நூற்றாண்டுகள் ஆகி விட்டன. அதற்குப் பிறகு, அற்புதமான பல நூல்கள் தோன்றியுள்ளன. ஆயினும், பதின்மூன்றாவது திருமுறை என்று வரிசைப்படுத்தவும், ஐயாயிர திவ்வியப் பிரபந்தம் என்று வரிசைப்படுத்தவும் எவருக்கும் துணிவில்லை. காரணம், மரபில் இருந்த பிடிப்பேயாகும். “முன்னோர் சொல்லைப் பொன்னே போல் காத்தல்” என்பது, பொருள் சார்ந்த ஒழுக்கமாகும். ஆதலால், நமது திருக்கோயில்கள் காலத்தால் பழைமையானவே. காலந்தோறும் நமது சமூக முன்னேற்றத்திற்கும், ஒருமைப்பாட்டு நலத்திற்கும், துணை நின்றவை; துணை நிற்பவை. நமது சமூக நாகரிகம், நமது திருக்கோயில்களைச் சார்ந்தே வளர்ந்தன; வளர்ந்து கொண்டிருந்தன. இந்த மரபு வழி நிற்றல் என்ற நெறி நமது சமூகத்திற்குத் தேவை.

அலைகள் வேகமாக அடிக்கும் பொழுது கப்பலுக்கு நங்கூரம் அவசியம் தேவை. நாளும், நமது நாட்டில் பல்வேறு இயக்கங்கள், சிந்தனை அலைகள், இயக்க அலைகள் மோதுகின்றன. இந்தச் சூழ்நிலையில், நமது சமய வழிப்பட்ட சமூகத்திற்கு மரபு என்ற நங்கூரம் அவசியமானது. இந்த நங்கூரத்தில், நமது சமூகம் நின்று - திருக்கோயில்களைச் சார்ந்து, குடிகளும், குடிகளைச் சார்ந்து கோயில்களும் வாழ்ந்து, நமது நாகரிகத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நமது வழி படும் தெய்வமாகிய கடவுள் கூட மரபுகளை அரண் செய்தே, தமது திருவிளையாடல்களை நிகழ்த்தியுள்ளார். நம்பியாரூரக்கும், சிவபெருமானுக்கும் இடையில் ஏற்பட்ட வழக்கைத் திருவெண்ணெய்நல்லூர்த் திருக்கோயிலில் இருந்த சபையே, கேட்டுத் தீர்ப்பளித்தது. நமது சமூகத்தின் மையம் திருக்கோயில். நமது சமூகத்தின் மேலாண்மை திருக்கோயில். திருக்கோயில் மரபுகள் வழி வழியாகப் பின்பற்றக் கூடியவை. இந்த மரபுகளை மீறி நடப்பது வரவேற்க இயலாத ஒன்று. அப்படியே மீற அனுமதித்தால் பலரும் மீறுவர் கடைசியில் நமக்கு என்று ஒன்றும் இருக்காது. நமது திருக்கோயில் மரபுகளும் சமுதாயம் நிலைகுலைந்து விடும்.

மிகப்பெரிய நிலையில் அடிவைக்கக்கூசிய இடத்தில் இன்றைய தலைமுறை புகுந்து விளையாடுகிறது. விமர்சன உலகம் எல்லைகளைக் கடந்து செல்கிறது. விளக்கங்கள், விளக்கையே கெடுத்துவிடும் போலத் தெரிகிறது. இந்தச் சூழ்நிலையில் நமது சமய நெறியிலும், நெறிவழிப்பட்ட மரபுகளிலும் நம்பிக்கை உடையவர்கள் சான்றோர்கள் மரபுகளைக் காப்பாவர்களாகவும், ஒருமை நலச் சிந்தனை யாளர்களாகவும் இருத்தல் அவசியம். சமய ஆர்வம், சமய வளர்ச்சியில் ஈடுபாடு, வரவேற்கத்தக்கதே! ஆயினும், இந்த ஆர்வம் மரபுகளைச் சார்ந்தே வளரவேண்டும். அதுவும் திருக்கோயில், திருக்கோயில் மரபுகளைக் காத்தல் என்பது விழுமிய கடமை. இந்த மரபு என்ற கற்களின் வரிசையில் ஒரு கல்லை இடையில் உருவினாலும் சுவர் முழுதும் மடமட என்று சரிந்துவிடும் இந்தத் தவற்றை நாம் ஊக்கமிகுதியால் செய்துவிடக்கூடாது.

திருக்கார்த்திகை ஒளி விளக்கு, திருவண்ணாமலையில் ஏற்றுவது என்ற மரபு தொடங்கியது. சிவன் ஒளி வடிவானவன். ஓங்கி உயர்ந்து அகன்று உள்ள சோதியினன் என்பது தத்துவம். நமது சமய நெறியில் ஒளி, உலகப் பொது! ஒளி நுழையாத இடம் இல்லை; ஒளியைப்பயன்படுத்தாத உயிர்க்குலம் ஒன்றுகூட இல்லை! அதுபோலவே, நமது சமயநெறியில்தான் தீ வேட்டல் (யாகம்) உள்ளது. ஐம்பெரும் பூதங்களில் தீ மட்டுமே துய்மையானது எந்தச் சூழ்நிலையிலும் துய்மையைக் காப்பாற்றிக் கொள்வது. நிலம், அழுக்கொடு சேர்ந்தால் அழுக்காகும். காற்று, துர்நாற்றத்துடன் சேர்ந்தால் துர்நாற்றம் வீசும். ஆனால் தீ - நெருப்பு அழுக்கொடு சேர்ந்தால் தன்னைச் சேர்ந்த பொருளையும் துய்மை செய்யும். தன்னையும் தூய்மை கெடாமல் பாதுகாத்துக் கொள்ளும். இந்தத் தத்துவத்தின் விளக்கமாக, கார்த்திகை மாதக் கார்த்திகையில் ஒளி விளக்கேற்றுவது, சொக்கப்பனை கொளுத்துவது என்ற மரபுகள் தோன்றின.

தமிழ்நாட்டில் எல்லாத் திருக்கோயில்களிலும் ஒளி விளக்கேற்றுகின்றனர். வீடுகள் தோறும் விளக்கேற்றுகின்றனர். மலைக்கோயில் உள்ள ஊர்களில் மலைத்திருக்கோயிலும் விளக்கு ஏற்றுகின்றனர். திருவிளக்கு ஏற்றும் இடம், ஏற்றுவோர், ஏற்றும் நேரம் ஆகியன எல்லாம் நியதி செய்யப் பெற்றுள்ளன; நமது முன்னோர்களால் திருக்கோயில்களில் இன்று வரை பல்வேறு மாற்றங்கள் நாட்டில் ஏற்பட்டபோதிலும் மரபு மாறாமல் நடந்து வருகின்றன. அந்த மரபுகளை அப்படியே காப்பாதுதான் நமது கடமை!

திருப்பரங்குன்றத் திருத்தலம், சங்ககாலத்திலிருந்து புகழ்பெற்று வளர்ந்து வந்துள்ள திருக்கோயில்; தமிழ்நாட்டு மக்களின் ஆர்வம் நிறைந்த பத்திமைக்குரிய திருக்கோயில். இத்திருக்கோயில் வழிவழி வரும் மரபுகள் வழி இன்றுவரை நடந்து வந்துள்ளது. இனிமேலும் நடக்கவேண்டும். திருக் கோயில் மரபுப்படி திருக்கோயிலில் விளக்கேற்றுவது என்பது தான் முறை. இந்த மாதிரி நிகழ்வுகளில் நாம் தனிப்பட்ட முறையிலோ கூட்டாகவோ தலையிடுதல் என்பது விரும்பத்தக்கதல்ல. காலப்போக்கில் திருக்கோயில் மரபுகளை - சமூக நியதிகளை எளிதில் கடக்கலாம் என்ற உணர்வு பலருக்கும் தோன்ற வாய்ப்பளித்துவிடும். இது வரவேற்கத்தக்கதல்ல. திருப்பரங்குன்றம் திருக்கோயிலின் மரபுவழி மலைவிளக்கு ஏற்றுவர் என்று நம்புகின்றோம். தமிழ் மக்கள் திருக்கோயில்களையும், திருக்கோயில் மரபுகளையும் காக்கத் துணை நிற்பர் என்ற நம்முன்னணியினரின் ஆர்வத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், வரவேற்க இயலவில்லை வரலாற்றுப் பிழையாகி விடுமோ என்ற அச்சம்.

“நன்றாற்ற றுள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை”.