குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12/மனித குலத்திற்குத் தொண்டு செய்வோம்
செய்வோம்:
மனிதகுலம் தோன்றிப் பலநூறாயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. மனித குலத்தின் சென்ற கால வரலாற்றில் சாதனைகள் பலப்பல உண்டு. அச்சாதனைகள் புவிக்கோளத்தை வளர்ந்தன; பேணிக்காத்தன; புவியை நடத்தி வந்துள்ளன. எத்தனை எத்தனையோ கொடிய போர்கள் நடந்த பின்னும் புவியில் பல்லுயிர்கள் - குறிப்பாக மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருப்பது வியப்புமட்டுமல்ல; அபூர்வமான செயல்திறன்.
மனிதர்கள் இந்த உலகைக் கூர்ந்து நோக்கவும் சிந்திக்கவும் தொடங்கிய நாளிலேயே சமயங்கள் தோன்றி விட்டன. இந்த உலக வரலாற்றில் எண்ணற்ற மதங்கள் தோன்றியிருந்திருக்கின்றன. அவற்றுள் சில மதங்கள் வழக்கத்தில் இல்லை. மிகவும் தொன்மையான கிரேக்க மதக் கலாசாரங்கள் இப்போது வழக்கில் இல்லை. ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித நாகரிகமும் சமயமும் சிறந்த முறையில் இடம் பெற்றிருந்தன.
மதங்கள் மக்களை இணைத்து வைக்கும் சாதனமாக ஒரு காலத்தில் விளங்கின. மதங்கள்தான் முதன்முதலில் மனித நேயத்தைக் கொள்கையாக - கோட்பாடாக ஏற்றுக் கொண்டு உலகந்தழிஇ வாழும் இலட்சியத்தை அறிமுகப்படுத்தின. மதங்களின் குறிக்கோள் உயிர்க்குல ஒருமைப்பாடே! அண்ணல் காந்தியடிகள் “ஒரு மனிதனை இன்னொருவரிடமிருந்து பிரிப்பதற்காக மதங்கள் ஏற்படவில்லை. மனிதர்களைக் சேர்த்து வைப்பதுதான் அவற்றின் நோக்கம்” என்று கூறினார். அருட்பிரகாச வள்ளலார்,
“எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்முயிர்போல் எண்ணி யுள்ளே
ஒத்துரிமை யுடையவராய் உகக்கின்றார்
யாவர்.அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்என நான் தேர்ந்தேன்”
என்று கூறியருளினார்.
இந்தப் பரந்த உலகின் ஜனசமுதாயத்துடன் ஒத்து வாழ நெறிமுறைகளை வகுத்து ஓதும் மதங்களே உண்மையில் சிறந்த மதங்கள். நீண்டநெடிய வரலாற்றுப் போக்கில் சமூகத்தில் தோன்றும் உளைச்சல்கள், இயலாமை, தேக்கம் ஆகிய காரணங்களால் இந்த மண்ணுலகத்திற்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்து நாள்தோறும் உலகத்தைப் புதுப்பித்து இயக்குவது மதத்தின் வேலை. இந்த உலகின் வளர்ச்சியில் மாற்றங்களில் ஆர்வம் காட்டாதுபோனால் உலகம் தேங்கிப் போகும். நமது உலகம் முன்னேறி வருகிறது; அறிவு விசாலமாகிறது. 5000 வருடங்களுக்கு முன் தோன்றிய மதங்கள்கூட இன்றும் நின்று நிலவுகின்றன. உலகின் பல்வேறு மதங்களைக் கண்ட தீர்க்கதரிசிகள் என்றும் ஏற்றொழுகக் கூடிய அறிவுரைகளை வழங்கியுள்ளனர். இந்தியாவிலும், உலகிலும் நின்று நிலவும் மதங்களைப் போற்றி ஏற்று ஒழுகுவோமாக; இந்த உலகம், போர்கலகங்களால் அழிந்து போகாமல் நிலைபெறச் செய்ய உத்தம தீர்க்கதரிசிகளை - மதங்களைக் கண்ட மாமனிதர்களை நினைந்து போற்றுவோமாக! இன்று இந்தியாவிலும் சரி, உலகிலும் சரி பல நூறு மதங்கள் நிலவுகின்றன. வரலாற்றுக்கு முந்திய ஷிண்டோ, ஹீப்ரு மதங்களைப் பின்பற்றுவோரும் உள்ளனர். ஆயினும், உலகில் இந்து மதம், பௌத்த மதம், சமண மதம், கிறிஸ்துவ மதம், இசுலாம் மதம் ஆகியன புகழ் பெற்ற மதங்கள். பல கோடி மக்களால் பின்பற்றப்படுபவை. இந்த மதங்கள் அனைத்தும் ஒரு குரலாக “மனித நேயம்! மனித குல ஒருமைப்பாடு” என்றே பேசுகின்றன.
இந்த உலகின் தொன்மையான மதங்களுள் மிகவும் பழைமை வாய்ந்தது இந்து மதமே. இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முந்தையது; சற்றேறக் குறைய 50 கோடி மக்கள் பின்பற்றி வரும் மதம். உண்மையைச் சொன்னால், இந்து மதம் ஒரு மதமே அல்ல. இந்து மதம் ஒரு வாழ்க்கை முறை. இந்த மதக் கோட்பாடுகள் கெட்டி தட்டிப் போனவையல்ல; நெகிழ்ந்து கொடுப்பவை. மற்ற மத நெறிகளையும் ஏற்று ஒழுகுவதற்கு அங்கீகரித்தது இந்து மதம் மட்டும்தான்; இந்த மதம் உலகின் எந்த ஒரு சிந்தனையையும் ஏற்கும். அது போல, வழிபாட்டு முறைகளையும் கூட ஏற்றுக் கொள்ளும். இந்த சமயம் காலந்தோறும் மாறி மாறி வளர்ந்து வந்திருக்கிறது என்பது மாபெரும் உண்மை. அதனாலேயே இந்தியா பல்வேறு மதங்கள் தோன்றவும், பல மதங்கள் சங்கமமாகவும் இடமளித்து வந்துள்ளது. இனியும் இடம் கொடுக்கும். பாரதி வாக்கில் இந்த மதத்தின் கொள்கை,
“ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகின்பக் கேணி”
என்று ஒலிக்கிறது.
இந்தியாவில் தோன்றிய மதங்களில் இன்று தென்கிழக்காசிய நாடுகள் முழுவதும் பரவலாகப் பரவியுள்ள மதம் பௌத்தமேயாகும். பௌத்த மதத்தைக் கண்டவர் புத்தர் பிரான். பௌத்த மதம் தோன்றிய காலம் சற்றேறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன் போகும். ஒரு பேரரசராகிய புத்தர் துக்கத்தில், துயரத்தில் கிடந்துழலும் மக்களைக் கண்டு வருந்தி முடியைத் துறந்து போதி மரத்தடியில் அமர்ந்து ஞானத்தை உணர்ந்தார்.
இன்று உலகில் நிலவும் மிகப் பெரிய மதம் பௌத்த மதம். தூய துறவில் முகிழ்த்த மதம், சற்றேறக் குறைய 75 கோடி மக்கள் பின்பற்றுகிறார்கள். உலக வரலாற்றில் போரற்ற உலகம், துறவு ஆகிய சிந்தனைகளைத் தோற்றுவித்து, வளர்த்த பெருமை பௌத்தத்திற்கு உண்டு. “பகைமையினால் பகை போகாது. தன் வேரைத் தானே கல்லாதே!” என்று உபதேசிக்கிற பௌத்தம் இந்த உலகிற்கு அணியாகும்.
உயிர் கொண்டு உலாவும் எந்த ஒன்றுக்கும் தீங்கு செய்யாதே என்று அறிவுரை வழங்கியது சமண சமயம். சமண மதத்தைக் கண்டவர் மகாவீரர். சமண மதம் தோன்றி 2600 ஆண்டுகளாயின. சமண மதத்தின் பேரறம் கொல்லாமையேயாகும். “ஒன்றாக நல்லது கொல்லாமை” என்று திருக்குறள் கூறுகிறது. “விரோதி என்பதாக ஒருவரைப் படைத்தில்லாதவனே வீரன்” என்ற சமணம் மனித குலத்திற்குக் கிடைத்த பெரிய அரண்.
அடுத்து நம்முடைய கவனத்திற்கு வருவது கிறிஸ்தவ மதம். 1950 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதம் இயேசு பெருமானால் நிறுவப் பெற்றது. இன்று கிறிஸ்தவ சமயம் பெரும்பான்மையான உலக மக்களால் பின்பற்றப்படுகிறது. இன்றைய உலகில் கிறிஸ்தவ மதம் சேவை மதமாகப் புகழ் பெற்று விளங்குகிறது. ஏசு நாதர்,
“தீமைக்குத் தீமை செய்ய வேண்டாம். ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைத் திருப்பிக் காட்டு! பகைவர் பாலும் மெய்யன்பு கொள்ளுங்கள். உங்களைப் பகைப்பவருக்கும் நன்மை செய்யுங்கள்” என்று போதித்தார். சமாதானம் செய்து வைப்பவர்கள் பாக்கியவான்கள் என்று ஏசு அருளிச் செய்துள்ளார். இன்றைய சூழ்நிலைக்கு ஏசு பிரான் அருளிச் செய்துள்ள அறிவுரைகள் மருந்தென விளங்குகின்றன. துன்புறுவோருக்கு உதவுவதைக் கடமை என்று ஏசு அறிவுறுத்தியுள்ளார். இன்றைய சூழ்நிலைக்கு, ஏசு மதம் மிகவும் ஏற்புடைய ஒன்றாக விளங்குகிறது.
இன்று உலக நாடுகளில் கவனத்தை ஈர்க்கும் மதம் இஸ்லாம். 1300 ஆண்டுகளுக்கு முன் நபிகள் நாயகம் பெருமானால் காணப் பெற்றது இஸ்லாம் சமயம். அராபிய சமுதாயத்தில் ஒளி விளக்கேற்றிய பெருமை நபிகள் நாயகத்திற்கே உண்டு. “ஒரே கடவுள்” என்ற கொள்கை வழி அராபிய சமுதாயத்தை ஒன்று படுத்தினார். வாழ்க்கையைத் தழுவி நிற்கும் மதம். செல்வம் புறக்கணிக்கப்படக்கூடியதல்ல என்று துணிந்து சொன்ன மதம் இஸ்லாம் மதமாகும். நபிகள் நாயகம் அவர்கள் அளவற்ற அருளாளனாகிய இறைவன் உணர்த்த அருளியது திருமறை குர்ஆன்.
“மனிதர்களிடம் இரக்கமில்லாதவர்களிடம், அல்லாவுக்கு இரக்கம் கிடையாது” என்ற நபிகள் நாயகத்தின் திருமறை வாக்கு நினைந்து நினைந்து உணரத் தக்கது.
உலகச் சமயங்கள் என்று நிற்கும் ஐந்து பெரிய சமயங்களைக் கண்டோம்! சமயங்கள் அனைத்தும் ஒரே ஆதார சுருதியில் பேதமின்றிப் பேசுகின்றன. கடவுள் ஒருவரே! “ஒருவனே தேவன்” என்றார் திருமூலர். “கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்ற முகம்மது நபியின் வாக்கும் உணர்க. மனித குல வாழ்க்கையில் நட்பும், உதவியும் முக்கியம். சமுதாய உறவில் நட்பே முதன்மையானது. இதனை உணர்த்தவே நம்பியாரூரருக்குச் சிவபெருமான் நண்பரானார்; தோழரானார். மீண்டும் புத்தரின் அருள் வாக்கு நினைவிற்கு வருகிறது. தீமை செய்யாமை, நன்மை மிகுதியாகக் செய்தல்; அன்பும், அருளும் கொள்ளுதல். ஆகிய பௌத்த நெறிகள் ஒவ்வொரு மனிதருக்கும் ஒழுக்கக் கோட்பாடுகளாகும். இஸ்லாம் என்ற சொல்லுக்குப் பொருள் சமாதானம், சகோதரத்துவம் என்பதேயாகும். இன்றைய உலகத்திற்கு அமைதி தேவை. மக்களுடைய வாழ்க்கை மேம்பாட்டிற்காகத் தோன்றிய மதங்கள் ஏன் இன்று அதைச் செய்வதில் வெற்றியடையவில்லை. மதங்கள் நிறுவனங்களாகி விட்டதால் ‘கெட்டி’ தட்டிப் போய் விட்டனரா? இன்று மனித வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டு விட்டது. உலகம் விரைந்து மாறி, முன்னேறி வருகிறது. மதங்கள் தோன்றிய காலத்திலிருந்த பிரச்சனைகள் வேறு; இன்றைய பிரச்சனைகள் வேறு. புரிந்து கொள்ள மதங்கள் முன் வரவில்லையா? அல்லது முடியவில்லையா? மனித உலகம் புதிய காற்றைச் சுவாசிப்பதில், மதம் தடையாக இருக்க விரும்புகின்றதா? இந்த உலகத்தின் நடப்பியல்புகளைப் புரிந்து கொண்டு, உலகம் அழியாமல்-மனிதப் பூண்டு அழிந்து ஒழியாமல் நிலை நிறுத்தக் கூடிய மதமே இன்று வேண்டும்.
இன்று என்ன தேவை? இலட்சிய சமுதாயம் தேவை. மாந்தருக்கு இலட்சியத்தை எடுத்துக் கொடுத்து, வழி நடத்திச் செல்லுகின்ற மதமே இன்று தேவை. இன்று மதம் தத்துவங்கள் பற்றி விவாதிக்காதீர்கள். மதங்கள் விவாதங்களைக் கடந்தவை. மதங்கள் அனுபவத்திற்கும், செயலுக்கு மட்டுமே உரியவை. இவர் தேவர்! அவர் தேவர் என்று வழக்காடுவதும், மதங்களுக்கிடையில் உயர்வு-தாழ்வு கற்பிப்பதும் ஒன்றுக்கும் உதவாத வேலை. பயனற்றது மட்டுமல்ல. அசோகர் ஸ்தூபியில் செதுக்கி வைத்த வாக்கியத்தை நினைவு கூர்க. “மற்றவர் மதங்களைக் கண்டிக்காதே” என்பதே அந்த மகா வாக்கியம்.
மனித உலகத்திற்கு அன்பையே போதிக்கும் மதமே நமக்குத் தேவை! உலகம் ஒரு குடும்பம் என்று அணைக்கும் மதமே இன்று தேவை. கடவுளை நம்புவோம்! மனித குலத்திற்குத் தொழும்பாய்த் தொண்டு செய்வோம்! எந்த விலை கொடுத்தும், சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் காப்போம்!
இந்த உயரிய நோக்கங்களுடன் திருவருள் பேரவை இயங்குகிறது. திருவருள் பேரவையின் பணி இன்றைய இந்தியாவிற்குத் தேவை! அனைவரும் சேர்ந்து, ஆக்கம் தரும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
எல்லா உலகமும் ஆனாய் நீயே.