குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12/முத்து மொழிகள்




10


முத்து மொழிகள்


தாய்மொழியில் வழிபாடு


இந்த உலகிலே எதையும் இழக்கலாம்-மறக்கலாம். ஆனால் தாய்மொழியை இழக்க இயலாது; மறக்க முடியாது. தன் சொந்த மொழியை இழந்து மறந்து பிறமொழிப் பற்றுக் கொண்டு வாழ்தல் பொய்க்காலில் நடப்பதற்குச் சமமாகும். எந்த இனமும் தத்தம் மொழியைப் பேச-பேண முன்வருவது போலவே தமிழர்களாகிய நாமும் முன்வர வேண்டும். தமிழ் உணர்வு கொண்டு, தமிழ்ச் சிந்தனையால் தமிழ் நாகரிகம் காக்க வேண்டும். எல்லாத் துறைகளிலும், எல்லாக் கட்டத்திலும் தமிழ் வாழ்வு வாழ விருப்பங்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் வழி நல்லோர்களாய், தண்டமிழ்ச் சிறார்களாய்ச் சிறக்க முடியும்.

தமிழையே பேச்சாகவும் மூச்சாகவும் கொண்டு வாழ்ந்ததனாலேதான் அன்றையத் தமிழன் தகைமை சான்ற தன்னிகளில்லாத வாழ்வு வாழ முடிந்தது. தமிழ், வாழவும் வாழ வைக்கவும் போதிக்கும் ஒரு செம்மொழி. உறவாடி மகிழவே மொழி உதவுகிறது. உணர்ச்சிகளை வாயாலே காட்டுவதுடன் கண்ணாலும் முகத்தாலும் காட்டிவிடலாம். உணர்ச்சியைச் செம்மைப்படுத்தி உறவாட உதவும் கருவியாக நமது மொழி கருதப்பட்டது.

இன்றைய நிலையில் கலப்பு வந்துவிட்டது. சந்தேகமும் சலனமும் இக்கலப்பால் தலைகாட்டுகின்றன. இறைவனிடத்தில் உறவாடக்கூடக் குறிப்பிட்ட ஒரு மொழிதான் வேண்டுமென்று வலியுறுத்துபவர்களை இன்று காண்கிறோம். எல்லாம் வல்ல-எல்லாம் அறிந்த எம்பெருமான் குறித்த ஒரு மொழி மட்டுமே தெரிந்தவராக இருக்கமாட்டார். தேவ மொழியாக ஒரே மொழியை விரும்பி, அம்மொழி வழித் தொடர்புகளுக்குத்தான் செவிசாய்ப்பவராக இறைவன் இருப்பாரா? சுரண்டலும் சுயநலமும் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், கடவுளின் பெயரால் சிலர் செய்த கண்மூடித் தனமான பொய்ப் பிரசாரங்களில் இதுவும் ஒன்றாகிவிட்டது. கடவுளை எங்கோ ஓரிடத்தில் வைத்து, எவரோ ஒருவரைத் துணைக்குக் கூப்பிட்டு, வழிபாடு நடத்தாத காலத்தில் குறிப்பான சில சடங்குகளும், குறித்த ஒரு மொழியும்தான் கடவுள் நெறிகாண உதவும் என்ற கோட்பாடு வளரவில்லை. தமிழர், முத்தமிழால் வைதாரையம் வாழவைக்கும் முதல்வனை வழுத்தினார்கள் வாழ்த்தினார்கள். அந்த வாழ்த்துதலுக்கு இறைவனின் இசைவும் இருந்தது. அத்தகைய இசைவினை இப்போதும் பெறலாம், பெறவும் முடியும்.

நல்லவர்களை உருவாக்கும் பண்ணைகளான தேவாலயங்களில் தாய்மொழியில் வழிபாடு இன்றியமையாத ஒன்றாகும். இதய தாடங்களை அடக்கி-அழித்து இனிய நிலையை உருவாக்க, தாய்மொழியால், எந்தையும் தாயுமான மங்கை பங்கனைப் போற்றிப் புகழ வேண்டும். “வடமொழியும் தென்தமிழும் ஆனான் கண்டாய்” என்ற தத்துவம் இப்பொழுது நடைமுறையில் அதிகமாக இல்லாதது வருத்தத்தைத் தருகிறது. இறைவன் தமிழ் மொழியில் எவ்வளவு பற்று வைத்திருந்தான் என்பது வரலாற்று மூலமாகவே கண்டு மகிழக்கூடியதாய் இருக்கிறது.

வேதம் ஓதி விழிநீர் பெருக்குவதைப் போலவே திருமுறைகளை ஒதியும் விழிநீர் பெருக்கலாம். திருமுறைச் செல்வர்களின் ஒருவரான மணிவாசகப் பெருமான் “நானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே” என்று அரற்றி அழுது அருளார் அமுதம் பெற்றார். அழுவதற்கு உள்ளம் உருக வேண்டும்; உணர்ச்சி கசிய வேண்டும். அவைகளின் நெகிழ்ச்சிக்குத் தாய்மொழிதான் உதவும். எந்த மொழி வல்லுநனும் தன்னையொட்டிய சிந்தனையைத் தன் சொந்த மொழியிலேதான் சிந்திக்கிறான். அதைப்போல் நம்மைச் சார்ந்த வழிபாட்டுச் சிந்தனையும்-சிந்தனை வெளிப்பாடும் நமது தாய் மொழியிலிருந்தால் நலம் பயக்கும்.

தமிழருக்குச் சொந்தமான சில தகைமை இருப்பது போல, இறைவனிடத்தில் சொந்த மொழிவழித் தொடர்பும் இருக்க வேண்டும். இப்படிக் கூறுவதால் எம்மை வேற்று மொழி வெறுப்பாளர் என்று எண்ண வேண்டாம். மொழித் தொடர்பினால்-காலத்தால் மூத்த சமய குரவர்கள் சிறப்புற வாழ்ந்ததுபோல நாமும் வாழ வேண்டுமென்ற விருப்பு நமக்கு உண்டாக வேண்டும். வேற்று மொழியை ஆதரித்து நமது மொழியைப் போற்ற வேண்டும். வடமொழியில் வேதம் என்பதை, நாம் மறை என்று தமிழ் ஆக்குகிறோம். வேதம் என்பது வேய்தல். அதாவது மூடுதல் எனப்படும். ஆணவத்தை மூடி மறைக்க வேதங்கள் உதவுகின்றன. நமது தாய்மொழியில் முகிழ்ந்த வேதமாகத் திருக்குறளைக் கருதுகிறோம். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய உறுதிப் பொருள்களைத் தர எழுந்த வேதம் குறள். தமிழில் பெரும் பெரும் வேதங்கள் உருவாகி இருந்திருக்கலாம். ஆனால் கடல் கோள்களினாலும் பூகம்பங்களினாலும் அழிந்து மறைந்திருக்கலாம். இப்போது நமக்கு உதவுவன திருமுறைச் செல்வங்களே. இச்செல்வங்கள்கூட மூடி மறைக்கப்பட்டிருந்தன. சிலர் தம் ஆதிக்க வாழ்வு ஆட்டங்கண்டு விடுமென்றஞ்சித் திருமுறைகளை மறைத்துப் பூட்டினர். சிதம்பரத்தில் மறைந்திருந்த திருமுறைகள் ஆண்டவனின் விண்னொலியாற் பெறப்பட்டன. அவற்றை நம்பியாண்டார் நம்பி தெரிந்து தமிழுலகுக்கு அளித்தார். அத்திருமுறைகள் மறைக்கப்பட்டதோடு மறைந்தொழிந்திருந்தால் இப்பொழுதிருக்கும் நமது நிலை என்னவாக இருக்கும்? தத்துவப் பெருக்கால் தம்மை உயர்ந்தவர்களாக எண்ணி இறும்பூதடையும் சிலர் தம்மை எப்படி இழித்துரைப்பார்கள்.

“கல்லைப் பிசைந்து மென் கனியாக்கி” என்பதுபோல - நம் நெஞ்சக் கனகல்லை நெகிழ வைக்கத் தாய்மொழி வழிபாடு உதவுகிறது. வழிபாட்டிற்குக் காதல், கனிவு, கசிவு தேவை. சிந்தனை வழியாகவே காதல், கசிவு, கனிவு போன்றவை பிறக்கும். காதலும் கசிவும் உண்டாகிவிட்டால் கோவிலிலே வக்கீல் வைத்து வணங்க வேண்டிய முறை தேவைப்படாது. யான் எனது என்ற செருக்கழித்துச் சமுதாயத்துக்கு நலம் பயக்கத் தெய்வ வணக்கம் பயன்பட வேண்டும். இமயத்திலே, பொதிகையிலே ஊற்றெடுக்கும் தண்ணீர் எங்கும் பரவி விரவி ஓடிப் பயனளிக்கிறது. ஆனால் மனிதனின் இதய மலையிலே ஊற்றெடுக்கும் ‘சிவமயம்’ கோவிலோடும் பூசை முறையோடும் நின்று விடுகிறது. வெளியில் வந்தவுடன் என் மயம் ஆகிறது. எவ்வுயிர்க்கும் ஈசனுக்கும் தமக்கும் அன்புள்ளவர்களாக ஆக்கும் பெற்றி வழிபாட்டுக்கு உண்டு.

எனவே, இனத்தை ஒத்த மொழியிற் பிடிப்பும்பாசமும் இருத்தல் வேண்டும். ஆண்டவனிடத்தில் சொந்த மொழி வழித்தொடர்பே அத்தகைய பலனைத் தருகிறது. இறைவன் பல வழிகளில் தமிழை அனுபவித்துச் சுவைத்திருக்கிறான். காசு கொடுத்தும், தூது நடந்தும் கன்னித் தமிழ் கேட்டதாக வரலாறு பேசுகிறது.

வடமொழியும் செந்தமிழும் வழக்கிழக்க வேண்டியவை யென்றால் வடமொழிக்குக் கொடுக்கப்பட்டது போல நம் தமிழுக்கும் இடங்கொடுக்கப்பட்டதா? இல்லையே! தமிழுக்கு இடங்கொடுக்கப்படாவிடில் தமிழர்களாகிய நாம் இடந்தேடி இன்பமடைய வேண்டாமா?

சுரண்டல்களினாலும்-சுயநலத்தினாலும் தமிழன்பின் தங்கிய நிலை இப்பொழுது சமயத்துறையில் அருக ஆரம்பித்துவிட்டது. இந்நிலை நல்லதொரு மாற்றத்தினை உருவாக்கி உண்மைநெறி உலகெல்லாம் பரவ உதவும்.

அகமும் புறமும்

ஆன்மாக்களுக்கு ஆசையதிகம். மனிதர்களுக்கிருக்கும் ஆசையை அளவிட்டு உரைக்கவியலாது. ஆசையை அழித்து விடுதல் என்பதில் நமக்கு நம்பிக்கையில்லை. எந்த மனிதனுக்கும் ஏதாவதொன்றிலே ஆசையிருக்கத்தான் செய்யும். எல்லாச் செல்வங்களையுமேற்று-உண்டு, உடுத்து உறங்கி வாழ விரும்புகின்றனர் சிலர்; செல்வாக்குப் பெருக்கால் சிறந்த பதவிகளைப் பெற்று வாழ ஆவல் கொள்கின்றனர் சிலர்; நாட்டை ஆளும் பேற்றினைப் பெற்று-நனிசிறந்து தலைவர்களாக வாழவிரும்புகின்றனர் ப்லர். இவ்வாறு ஒவ்வொரு வகையான ஆசைகளுடன் மனித இனம் அலைந்து கொண்டிருக்கிறது.

நாமுங்கூட நல்ல அருள்நெறி வாழ்வு வாழ்ந்து அறச் செல்வர்களாகத் திகழ்பவர்களைக் காண ஆசைப்படுகின்றோம். ஆசையைப் பொறுத்தமட்டில் நம் கைக்கொள்ள வேண்டியது ஒன்றேயொன்று-அதுதான் எல்லை. எதற்கும் ஒரு வேலி-எல்லை-வரையறை அவசியம் வேண்டும். மனிதனின் ஆசையுணர்வு அளவுக்கு அதிகமாக-எல்லை கடந்து செல்கிறபோது ஆபத்து நேருகின்றது. ஒரு வரையறையுடன் எந்த உயிருக்கும் இன்னலற்ற முறையில்-நன்மை பயக்கும் வகையில் ஆசை உருவெடுத்தால் அது போற்றப்பட வேண்டியதே.

மனிதனைக் குரங்குக்கு ஒப்பிடுவார்கள். இப்போதைய மனிதர்களில் சிலரைக் குரங்கொடு ஒப்பிடவும் முடிவதில்லை. இப்போதையச் சில மனிதர்களைவிட குரங்கு எவ்வளவோ உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கிறதெனலாம். குரங்கினது இயல்பு வெள்ளிடைமலை, கொம்பு விட்டுக் கொம்பு தாவுவது அதன் இயல்பான செயல். அஃது ஒரு கொம்பைவிட்டு மறுகொம்புக்குத் தாவும்போது முன்பு பிடித்த கொம்பை விட்டுவிட்டுத்தான் தாவுகிறது. ஆனால், அளவு கடந்த ஆசை வழிப்பட்ட மனிதனோ ஒன்றை விட்டு ஒன்றைப் பற்ற முயல்வதில்லை. எல்லாவற்றையும் ஒரு சேரப் பற்றி நிற்க விரும்புகின்றான். இந்த எல்லை கடந்த-வரம்பு மீறிய ஆசைப்பெருக்கினாலேதான் அவன் பல அல்லல்களுக்குள்ளாக வேண்டியிருக்கிறது.

அருமையான ஓர் ஆங்கிலக் கதையுண்டு; பொன்னிலே ஆசை கொண்டவன், தான் தொட்டதெல்லாம் பொன்னாக விரும்பி இறைவனிடத்தில் வரம் வேண்டித் தவமிருந்தான். துன்பங்கள் பலவற்றைத் தாங்கித் தவமிருந்ததால் இறைவன் எழுந்தருளினார். “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டருளினார். “யான் தொட்டதெல்லாம் பொன்னாக அருள் பாலிக்க வேண்டும்” என்று பக்தியுடன் விண்ணப்பம் செய்தாள். இறைவன் அவனுடைய விருப்பத்தை நிறைவேற்றி மறைந்தருளினார்.

வரம்பெற்ற நேரம் தொடங்கி வகை வகையான பொருட்களைத் தொட்டுத் தொட்டு அவைகளைப் பொன்னாக்கினான். பொன் குவியல் நிறைய நிறைய அவனது பூரிப்பு அளவு கடந்து அவளது உடலையே பூரிக்க வைத்தது. மகிழ்ச்சிப் பெருக்கு அவனைப் புதுமனிதனாக்கியது. பசியெடுத்தது. உணவுக்குப் பக்கத்திலே போய் உணவைத் தொட்டான். அவ்வுணவும் பொன்னாகியது. பசி அவனை வாட்டி வதைக்கக் கவலை தலைகாட்டியது. சாப்பிட முடியாதநிலை வந்துவிட்டதை எண்ணி ஏங்கினான். இந்த வருத்தத்தோடு வேறொரு பெருவருத்தமும் காத்திருந்தது. பக்கத்தில் நின்ற தன் பிள்ளையையும் தொட்டான். அதுவும் பொன்னாகியது. ஆசை வெறியால் ஆண்டவனிடம் கேட்டுப்பெற்ற வரம். வயிற்றுக்குள் சோற்றையே அனுப்ப முடியாமற் செய்து விட்டதை நினைத்து, “ஆண்டவனே! வயிற்றுக்குணவு கிடைத்தாலே போதுமானது” என அரற்றினான். ஆகவே ஆசைக்குக் கட்டுப்பாடு தேவை.

ஆசையை ஒழித்துவிடு என்பதைக் காட்டிலும் ஆசைக்கு எல்லை வகுத்துக் கொள் என்பது சாலச்சிறந்தது. ஏனெனில் ஆசை மனிதனைப் பொறுத்தமட்டில் ஒழிக்க முடியாதவொன்று. ஒரு சில நன்மைக்காக ஒருசிலர் ஆசையுணர்வுக்குத் தடைவிதிக்கலாம். பொதுப்படையாகச் சமுதாய வாழ்வில் ஆசையை அழிக்க முயல்வது முடியாத காரியம்-வரையறை செய்துகொண்டு வாழ்தலே இயலும்.

அன்பை-அறத்தைப் பேணி வாழ நாம் ஆசைப்பட வேண்டும். அறஞ்செய்வதற்காகவே வாழ்கிறோம் என்ற நினைப்போடு-அறமற்றவைகளை அறவே தள்ளி, இன்பத் தமிழ்நாட்டினுடைய இணையற்ற பண்பிணைக் காக்க ஆசைகொள்ள வேண்டும்.

‘அறத்தால் வருவதே இன்பம்’ என்ற கோட்பாட்டுக்குத் தலைசாய்த்து வாழ்ந்ததனாலேதான் பழந்தமிழ் நம் பாரில் உயர்ந்து பண்புவழிச் சிறந்திருந்தது. அகத்திலே அன்பை வளர்க்கவும் அறத்தைப் பேணவும் சமயச் சார்புடைய வாழ்வு தேவை. மனித வாழ்வுக்கு ஒரு கொள்கை-ஓர் ஒழுங்கு வேண்டும். அத்தேவைகளைச் சமயவாழ்வினாலே பெற முடியும். ஒரு மனிதனுக்கு நல்ல கொள்கைப் பற்றும், ஒழுக்கமும் வாய்த்தவுடன் பிறர் நலம் பேணுகின்ற மனப்பண்பு உண்டாகும்; அந்த மனப்பண்பு பிறர்க்குத் துன்பம் கொடுக்காமல் வாழ்வதோடு-பிறர்தருந் துன்பத்தைப் பொறுக்கும் வெற்றியையும் நல்குகின்றது.

தமிழரின் சமயப்பண்பு தன் நிகரில்லாதது; தலையாயது. அது பாவம் செய்யாதே என்று போதிக்காமல் பாவம் செய்ய நினைக்காதே என்கிறது. அது போலவே கொலை செய்ய நினைக்காதே-திருட நினைக்காதே என்கிறது. கொலை செய்தால்-திருடினால் பாவம் என்று சொல்லாமல், அவற்றை மனத்தில் நினைத்தாலே பாவம் என்று கூறுகிறது. இதிலிருந்து தமிழருடைய சமய நெறி சமுதாயத்தில் அன்பையும் அறத்தையும் உருவாக்க உழைத் திருக்கிறதென்பது புலனாகிறது. ஆன்மீக ஈடேற்றத்துக்குத் தமிழர் சமயம் தலைசிறந்த வழிகளைக் காட்டியிருக்கிறது. வழிவகைகளைக் காட்டியதோடமையாது, அவ்வழிப்பட்டு வாழ்ந்த வளமான நிலையுைம் பெற்றிருக்கிறது. புறவாழ்வின் சிறப்புக்கு அகவாழ்வின் துணை இன்றியமையாத தென்பதை உணர்ந்து உணர்த்திய சமயம் தமிழர் சமயம். அகப்புரட்சியின் பயனாகவே புறவாழ்வைத் தூய்மையுடையதாக ஆக்க முடியுமென்று எண்ணிச் செயல்பட்ட பண்பு பாராட்டி மகிழ்தற்குரியது.

சில வீடுகளிலே வெளிச்சுவர்களுக்கு வெள்ளையடித்து உட்சுவர்களைப் புறக்கணிக்கிறார்கள். வெளிச்சுவர் பார்ப்பவர்களின் பார்வையை ஈர்க்குமேயொழிய அவ்வீட்டில் வாழ்பவர்களுக்குப் பயன்தராது. உட்சுவர் தூய்மையற்று இருந்தால் வீட்டிலுள்ளவர்களின் நல்வாழ்வு பாழ்பட்டுப் போகும். ஆகவே உட்சுவரின் துய்மையைக் கவனித்தபின்பே வெளிச்சுவரைத் துய்மையாக்க முனையவேண்டும். மனிதவாழ்விலும் கூட அகவாழ்வைப் பற்றிய சிந்தனைக்குப் பின்பே புறவாழ்வைப் பற்றிய எண்ணம் எழவேண்டும். அதுவே மனித மரபு-தமிழ்மரபு. புறப் புரட்சியின் வெற்றிக்கு அகப்புரட்சி துணைசெய்யும். மணிவாசகர் போன்ற அனுபூதிமான்கள் அகத்துறைப் புரட்சியையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து உயர்ந்தார்கள்.

எனவே, ஆசைக்கு வரையறை வகுத்து, அன்பும், அறனும் கொண்ட வாழ்வு வாழ்ந்து, புறவாழ்வின் தூய்மைக்கு இன்றியமையாத அகவாழ்வை-ஆன்மீக வாழ்வைத் தூய்மையாக்கித் துன்பம் கண்டவிடத்துத் துடித்து-உடுக்கை இழந்தவன் கைபோல விரைந்து வேண்டியது செய்து-என்றும் எல்லா உயிர்களிடத்தும் பற்றுவைத்து வாழி வாழ்த்தி விடை பெறுகின்றோம்.


சமயத் தொண்டு

இந்த நூற்றாண்டிலே நமது சமயத்தைப் பற்றிய சிந்தனை அருகி வருகிறது. வாழ்வுப் பிரச்னைகளாலும் வேறு சில சூழ்நிலைகளாலும் கடவுள் நெறி பற்றிய எண்ணம் குறைந்து வருகின்றது. சிவநெறித் தத்துவத்தின் வழி வாழ்தல் என்பதும், சைவசமயக் கொள்கை வழித் தொண்டு என்பதும் இப்போது மாறிக் குழம்பிக் கிடக்கின்றன. இது ஒரு விதக் கலப்பாலும்-கலப்பினாலுண்டான சபலத்தாலும் வெள்ளத்தால் அள்ளுண்டு போவதைப் போன்றநிலை எப்படியோ வந்து புகுந்துவிட்டது. நான் பிற மத எழுத்தாளனல்லன். ஆனால் நமக்கென ஒரு கால் தேவை-ஒரு நெறி தேவை என்பவன். கலப்பு என்பது சுயத்துவத்தை அழிக்கவல்லது. உலகியல் நாகரிகங்களின் வரலாற்றிலே ஒன்றையொன்று கௌவி விழுங்கிய செய்திகளைப் படிக்கிறோம். மற்றையக் கொள்கைகளை-நெறிகளைப் பாராட்டுவதோடு, நமது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வலுப்படுத்த உழைக்க வேண்டும்.

சைவசமய வளர்ச்சி பற்றி “வரைபடம்” (Graph) போட்டுப் பார்த்தால் நிலைமை பளிச்செனப் புலப்படும். இந்நிலை மாற-மாற்றப்பட நாம் தீவிரமாக முனைய வேண்டும். பன்னெடுங் காலமாகக் கழிபேருவகையுடன் நல்வாழ்வுச் சூழலை உருவாக்கி உதவிய சைவநெறி பற்றிய எண்ணமும் செயலும் நம்மிடையே தோன்றி வளரவேண்டும். மனிதனின் வாழ்வை மலரச் செய்யவும்-மணம் பரப்பச் செய்யவுந்தான் மதங்கள் உதவுகின்றன. வெறும் சடங்குகள், உபதேசங்கள், போதனைகள் போன்றவற்றோடு மதம் நின்று விடக் கூடாது. அச்சம், ஆத்திரம், புகைச்சல், பொறாமை போன்றவை இன்றைய மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இத்தகு இழிந்த மனப்பான்மையை ஒழிக்க மதம் உதவ வேண்டும். உயிர்த்தொண்டுக்கு - உலகத் தொண்டுக்கு ஆன்மாவை ஆற்றுப்படுத்தும் பெரும் பொறுப்பு சமயத்துக்கு உண்டு.

அச்சமும் ஆத்திரமும் போன்றே ஐயமும் சஞ்சலமும் குழப்பமும் மனித மனங்களில் குடிகொண்டிருக்கின்றன. சந்தேகத்தை மாற்றச் சைவத்தை ஒட்டிய சில முடிவுகள் உதவுகின்றன. சைவ சித்தாந்தமென்பது ஒரு சிவநெறித் தத்துவம்; முடிந்த முடிவான கொள்கையைக் கொண்டது. சிவத்திரு ஆறுமுகநாவலர் அவர்கள் சைவ சித்தாந்தமே சித்தாந்தம்; மற்றவையெல்லாம் பூர்வபக்கங்கள் என்றார். சிந்தை செல்லுமிடமெல்லாம் சென்று முடிந்த முடிபைக் காண்பது சித்தாந்தம், சைவசித்தாந்தக்காரர்கள் மனிதகுலச் சஞ்சலங்களை அகற்றுவதோடு-நாத்திகத்தைத் தர்க்க முறையில் வெல்லலாம்; வெல்ல முடியும். குழப்பமே தெளிவுக்கு அடிப்படை. இப்போது சைவ சித்தாந்தக் கருத்துக்கள் சில ஒரு குழப்பநிலையை உண்டாக்கியிருக்கின்றன. இனித் தெளிவு வரலாம்; கட்டாயம் வந்தே தீரும்:

“சிந்தையுள் தெளிவுமாகித் தெளிவினுள் சிவமுமாகி” என்றார், அப்பரடிகள். ‘தெளிவிலே சிவநெறி ஊறிச் செம்மை நலங்கள் காணும் நாள் அதிக தூரத்திலில்லை. என்றும் நம்மை அவன் ஆட்டுவிக்கிறான்; நாம் ஆடுகிறோம்-அடக்கு விக்க நாம் அடங்குகிறோம். அனாதி காலம் தொட்டே அனாதியான ஆன்மா ஆண்டவனிடத்தில் அடிமைப்பட் டிருக்கிறதென்பதைத் தாயுமானவர் அழகுறச் சொல்கின்றார்.

“இரும்புநேர் நெஞ்சகக் கள்வனானாலும் உனை
இடைவிட்டு நின்ற துண்டோ?
என்றுநீ அன்றுநான் உன்னடிமை யல்லவோ
யாதேனும் அறியா வெறுந்’
துரும்பனேன்; என்னினும் கைவிடுதல் நீதியோ”

என்கிறார். நமக்கு வரும் இன்ப துன்பங்களுக்கு அவனே பொறுப்பாளி. இந்த விடை மிகமிக ஆழமான குளத்து நீரில் ஒரு திவலை. கற்கண்டில் ஒரு துண்டு. நானே கடவுள்-நானே பிரமம் என்றால் பொருந்துமா? “குறைவிலா நிறைவே கோதிலா அமுதே’ என்கிறது திருவாசகம். பரிபூரண நிறைக்குப் பெயர் கடவுள். அப்படியானால் அவனின் பிரதி பிம்பமான நாம் ஏன் நிறைவற்றுத் தொல்லைப்படுகிறோம்? இறைவனின் குழந்தைகளாக, இறைவனின் அடியார்களாக நம்மை நாம் எண்ணிக் கொள்ள வேண்டும். நமது சைவநெறி வாழ்வைத் தழுவியது; வாழ்வோடு இணைந்து பிணைந்தது. நிறைவான குடும்ப வாழ்வே சித்தாந்தச் சிவநெறி வாழ்வாகும்.

சேச்கிழார் பெருமான் சிவநெறித் தொண்டர்களைப் பற்றி நிறையச் சொல்லியுள்ளார். பூசலார் நாயனார் மனத்திலே கோவிலெடுத்து மகேசனைக் கண்டார். கோவிலுக்குப் போக வசதியில்லாதவர்கள்-வாய்ப்பில்லாதவர்கள் மானசீகமாக இறைவனை வழிபடலாம். திருக்கேதீஸ்வரம் செல்ல வசதியில்லாவிட்டால் திருக்கேதீஸ்வரப் பதிகம் பாடிப் பாலாவியின் கரைமேல் ஆண்டவனை அகத்திலே காணலாம். நாவுக்கரசர் உழவாரத் தொண்டால் கடவுளைக் கண்டார். திருக்குறிப்புத் தொண்டர் மெய்யடியார்க்குத் துணி துவைத்துக் கொடுத்துப் பரமன்பதம் அடைந்தார். நாமெல்லாம் நாயன்மார்களின் குருபூசைகளைக் கொண்டாடுகிறோமே தவிர அக்கொண்டாட்ட நாளில் தேவையானவற்றைச் செய்வதில்லை.

கண்ணப்ப நாயனார் குருபூசையில், கண் பார்வை குறைந்தவர்களுக்குக் கண்ணாடி வாங்கி வழங்கும் வழக்கம் மேற்கொள்ளப்பட்டால் எவ்வளவு நன்மை பெருகும். நாம் கைக்கொள்ள வேண்டியது நால்வரின் நெறி. நால்வரின் இயக்கம் சமுதாய இயக்கம். நால்வரின் வழிச் சென்றால் நம்மிடையே ஒரு ஒழுங்கு உண்டாகும். நமது மதம் இப்போது ஒழுங்கில்லாமற் கிடக்கிறது. ஒழுங்குபடுத்தப்பட்ட மதமாக நமது மதம் மிளிர வேண்டும். வெள்ளையன் தனது மதமான கிறித்தவத்தைத் தவிர்ந்த ஏனைய மதங்களை ஒன்றாக்கி இந்துமதம் என அதற்குப் பெயரிட்டான். இதனால் சில தனித்தன்மைகள் கெட்டுவிட்டன. கலப்பு ஒரு போதும் தனித் தன்மைகளைக் காப்பாற்ற உதவாது. மற்றைய மதங்களிடையே உள்ள ஒழுங்கு நம்மிடையே இல்லை. பன்னிரண்டு இலட்சம் இந்துக்களும் ஒன்றானால் ஒரு நல்ல விழுமிய ஒழுங்கு உண்டகாலாம். அப்பொழுதுதான் மேன்மை கொள் சைவநீதி உலகமெல்லாம் விளங்க வழியுண்டாகும்.

நாம் மதம் மாறியதைப் போன்று வேறு யாராவது மாறியிருக்கிறார்களா? நம்மிடையே எண்ணத் தொலையாத எத்தனையோ பேர் மதம் மாறியிருக்கிறார்கள். நம்முடைய மதத்துக்கு வேறு மதத்தவர்கள் வந்ததுண்டா? நம்மைப் பொறுத்த அளவில் மதமாற்றம் சர்வசாதாரணமாகிவிட்டது. இந்நிலைமாற சைவத் தமிழகம் பாடுபடவேண்டும். சிவநெறி பரப்பும் மடங்கள் ஆன்மாவுக்குத் தலைவனான ஆன்ம நாயகனை வழுத்துவதோடு நின்று விடுவதற்கில்லை - திருமடங்கள் திருத்தொண்டால் சிவநேயச் செல்வர்களை உருவாக்கவே எழுந்தவை. எந்நாளும் சமயப் பிரச்சாரம் செய்து-சித்தாந்த சிவவழி நிற்கவே அவை உதவுகின்றன. மனிதகுலத்துக்கு மாண்புறு தத்துவங்களைப் போதிக்கவே சைவமடங்களை நம் முன்னோர்கள் உண்டாக்கினார்கள். ஆனால் அவர்களது எண்ணம் சிலகாலம் சிதைவுற்றுப் பிறழ்ந்ததை மறுப்பதற்கில்லை. இப்பொழுது இந்நிலை மாறி வருகிறது. கைலாயத்து உச்சியுள்ள காளத்தியானைக் தன்னிலே கண்டு மற்றவர்களுக்குக் காட்டச் சைவப் பெரியவர்கள் முன் வர வேண்டும். இதனாலேதான் சைவ சமயத்துக்கு முழு நேர ஊழியர்கள் தேவை என்கிறேன். இறைவனைக் கைலாசவாசியாகவே சிலர் கருதுகிறார்கள். வான் பழித்து மண்புகுந்து மனிதரை ஆட்கொள்பவன் நம்பெருமான். ஆண்டவனை எட்ட வைத்து எண்ணும் நிலை மாற வேண்டும். மண்ணிலே விண்ணைக் கண்டு விண்ணகத்து வித்தகனை நெஞ்சத்தில் அமர்த்த வேண்டும். தட்டினால்தான் திறக்கப்படும்- கேட்டால்தான் கொடுக்கப்படும் என்று நமது சைவநெறி சொல்லவில்லை. வேண்டப்படுவதை அறிந்து-வேண்டிய முழுதும் தருபவன் இறைவன். ஆகவே நால்வர் நடந்து நடந்து வளர்த்த நமதுநெறி நாலாபக்கமும் பரவி விரவ வேண்டும். ஓர் ஒழுங்கு முறையான கட்டுக் கோப்பு நமக்குத் தேவை. கலப்பு, ஒழுங்கினை உண்டாக்க இடையூறாயிருக்கும். மற்றைய மதங்களிலுள்ள ஒழுங்கினை நமது மதத்தில் காண விரும்ப வேண்டும். மதம் மாறும் நிலையை நம்மிடையேயிருந்து விலக்க வேண்டும்.

இறை வழிபாடு

மனிதப் பிறப்பின் மாண்புறு நிலையை நயக்கத் தக்க நல்ல வழியில் அனுபவித்து உயரப் பழகிக் கொள்ள வேண்டும். மனிதன் வேகமாக உழலுகிறான்; சுழலுகிறான். ஆனால், ஏன்? எதற்காக உழலுகிறோம்? என்று அவன் சிந்திப்பதில்லை. குறிப்பாகத் தமிழர்களாகிய நமக்குக் கேள்வி கேட்பதென்பதே கசப்பாயிருக்கிறது. எதையும் துருவித் துருவி துணுக்கமாகவும் ஆழமாகவும் ஆராய்ந்ததினாலேதான் தத்துவாசிரியர்களும் பெரும் பேராசிரியர்களும் தோன்றினார்கள். மனிதச் சுழற்சி ஒருவிதத் தூய்மையைத் தருகிறது. அனுபவ உண்மைகள் அகத்தினை அலசித் தூய்மையாக்கித் துலங்க வைக்கின்றன.

கடலிலே உள்ள தண்ணீர் சூரிய வெப்பத்தினால் வான் நோக்கிச் சென்று, மீண்டும் மழையாகி மலை வழியே வருகிறது. மனிதனின் உள்ளப்பாங்கில் உப்புத் தன்மை நிறைய உண்டு. உப்புத் தன்மை சுழற்சி அனுபவத்தால் அற்றுப் போகிறது.

தங்கத்திற்கு எவ்வளவோ மதிப்புண்டு, அதை யொட்டிய வரலாறோ பெரிது. நிலத்திலே தோன்றி வளர்ந்து நமது கைக்கு வந்து பலவழிகளிலும் பக்குவமாகிப் பயன் படுத்தப்படுகிறது. நம்முள்ளே உள்ள ஆன்மா தங்கத்துக்குச் சமமானது. ஆனால், அது நிறைந்த பல அழுக்குகளால் பின்னப்பட்டுக் கிடக்கிறது. அழுக்கை அகற்றி ஆன்மாவை நல்வழிப் படுத்த ஆன்மநேயத் தொண்டுகளிலும்-சிந்தனைகளிலும் நாம் ஈடுபட வேண்டும். அழுக்கை அகற்றவே ஆண்டவன் நம்மை இங்கு அனுப்பினான். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் நன்றாகக் குளித்து விட்டு வாருங்கள் என்று நல்ல நீர்த்தேக்கத்தைக் காட்டி விட்டிருக்கிறான். நாம் நீர்த்தேக்கத்தைப் பற்றி நினைத்துப் பாராமல் அதனருகே நாற்றம் எடுத்துக் கிடக்கும் சேற்றினை வாரிப் பூசிக்கொண்டிருக்கிறோம். உடலுக்கு நலம் தேவை என்பது மறக்க முடியாதது. உடல் நலத்தோடு-உள நலத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

உடலைத் துய்மையாக்கப் பலவகையான சோப்புக்களை உபயோகிக்கின்றோம். ஆனால், உள்ளத் துய்மைக்கு எந்தச் சோப்பையும் நாம் தேடுவதில்லை. உள்ளத்தின் அழுக்கினைப் போக்கவல்ல சோப்பை ஆண்டவனிடத்திலேதான் நாம் சென்று பெற வேண்டும். தேவாரம் திருவாசகம் போன்றவற்றைப் பணமாகக் கொடுக்க எம்பெருமான் நம் உள்ளங்களைத் தாமாகவே கழுவிச் சுத்தமாக்கி விடுவர். எல்லாருக்கும் எல்லாச் செல்வங்களையும் பெற்றுப் பெருவாழ்வு வாழ விருப்பமுண்டு. ஆனால், முயற்சி செய்து முன்னேற முடியாத சோம்பல் உயரவிடாமல் தடுக்கிறது. முயற்சியின்றியே எல்லாம் வர வேண்டும். உழைப்பில் ஊக்கமும், சேமிப்பில் நாட்டமும், செயலில் சிக்கனமும் தேவை. உழைப்பைக் குறைத்துச் செலவைப் பெருக்குவது தான் இன்றைய நிலை. உழைப்பின் வழியால் வரும் வருவாய் சிறிதானாலும் செலவின் வழி விரிவாக இல்லாவிட்டால் தீங்கில்லை என்கிறார் வள்ளுவர்.

“ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை”

என்பது அவரது குறள். மலரும், செடிகொடிகளும் பார்ப்பதற்கு அழகைத் தருவது போல, மனிதர்களும் அழகைத் தர வேண்டும். அத்தோடு நறுமணம் கமழுஞ் சூழலையும் உண்டாக்க வேண்டும். எல்லாருக்கும் பயன்படத்தக்க வாழ்வினை வாழவேண்டும். இடுக்கண் வரும்பொழுது சிரித்துப் பொறுத்தலும், துன்பங்கண்ட விடத்துத் துடித்துத் தோள் கொடுத்துத் துணை செய்வதும் மனித வாழ்வின் மாண்புறு தத்துவங்கள். நம்மைப் படைத்தவனிடத்திலே ஒரு வஞ்சனையும் கிடையாது-அவன் பொதுவானவன். காற்றும் நிலவும் சூரியனும் எதுவும் கேட்காது-பலன் கருதாது பயன்தருவது போல இறைவனும் எதுவும் விரும்பாது அருள் சுரக்கிறான். ஆண்டவனின் அருள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை நாம் அறிந்து அதனைப் பெற்றுப் பலனை அனுபவிக்க வேண்டும்.

நன்னீர்ப் பெருக்கை அணைகட்டி நல்லமுறையில் வாய்க்கால்வழிச் செலுத்திப் பயிர்த் தொழிலுக்குப் பயன்படுத்திக் கொள்வதைப் போன்று அருள் நீர்ப்பெருக்கைப் பாய்ச்சி அப்பயிருக்கு ஆக்கமளிக்க வேண்டும். பயிர்த்தொழிலில் மிக மிகக் கவனமாய் இருப்பது அவசியம். களைகளைக் களைந்து, யானை போன்ற மிருகங்களிடமிருந்து காத்துநாற்று நட்டால் தான் நெற்பயிர் வளர்ந்து வீட்டுக்கு வந்து, பசியைப் போக்கும். அகப்பரப்பில் ஆன்மீகப் பயிரை அருள் நீரால் வளர்த்து, ஐம்புல வேடர்களின் முற்றுகைகளிலிருந்தும் காத்து, ஆன்ம நேயர்களாக வேண்டும்.

மூளை விரிவதைவிட இதயம் விரிய வேண்டும். இதய விரிவு “இன்பமே துன்பமில்லை” என எண்ணி ஆன்மீகப் பயிர் வளர்க்க உதவும். இன்பத்தைக் குறைவிலாது அள்ளித் தரும் இறைவன் நமது அழுக்குகளை வாங்குவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறான். ஆண்டவனது பிச்சாடன மூர்த்திக் கோலம் நிகரில்லா உண்மையை வெளிப்படுத்துகிறது. ஆன்மாக்களின் நன்மைக்கும், நல்வாழ்வுக்கும் இடையூறாயிருக்கும் எல்லாவற்றையும் பிச்சை கேட்பதைப் போல் கெஞ்சிக் கேட்டுப் பெறுகிறான். அவனது கெஞ்சும் நிலையைப் பெற அவன் திருவடிகளில் ஆழக்குளிக்க வேண்டும். நீராடல் உடல் நலம் தருவது போலவே திருவடிக் குளிப்பு ஆன்மநலம் நல்கும். ஆன்ம நேயத்திற்கு அன்பே அடிப்படை அன்பில்லாமல் ஆன்மீகப் பயிர் வளராது. என்னதான் படாத பாடுபட்டாலும் அகப்பரப்பிலே அன்பு விதையைத் தூவாவிடில் என்ன பயன்? கடவுள் நம்பிக்கை என்ற விதை அன்பை உருவாக்க உதவுகிறது. அன்பு விதை அருள் என்னும் குழந்தையை ஈன்று புரந்தருகிறது. அறம் இன்பத்தைத் தருகிறது.

பலனைப்பெற அதற்கு மூலகாரணமானது எதுவோ அது பயன்படுத்தப்பட வேண்டும். ஓர் ஊரிலே இரு சகோதரர்கள் இருந்தார்கள்; இருவரும் விவசாயிகள். ஒருவன் விவசாயத் துறையிலே பாடுபட்டுப் பயனடைந்தான். மற்றவனோ பாடுபட்டான்; ஆனால் பலனைப் பெறவில்லை. பயன் கிட்டாததால் ஒருவித வெறுப்பு அவனிடத்தே அரும்பியது. வாழ்வில் வெறுப்புக் கொண்டவன்போல் நின்றான். அவனருகே ஒரு பெரியவர் அணுகி வேளாண்மை பற்றி விசாரித்தார். அப்பொழுதுதான் அவன் வேதனைக்கு வித்தான வேடிக்கை வெளியானது. “உழுதாயா? பரம்படித் தாயா? உரம் போட்டாயா?” என்றெல்லாம் பெரியவர் கேட்டார். “ஆம், ஆம்” என்றே அவன் பதில் சொன்னான். பெரியவருக்கும் ஐயம் எழுந்தது! உடனே “விதை போட்டாயா?” என்று கேட்டார். விவசாயி விழித்தான்.

இரத்தத்தை வியர்வையாக்கி காலைமுதல் மாலை வரை உடலை வருத்திப் பாடுபட்டவன் விதைபோட மறந்து விட்டான். வேளாண்மை பயன்படுமா? விதை இல்லாது எங்காவது விளைச்சல் இருக்குமா? அது போல, வாழ்வின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் கடவுள் நம்பிக்கை என்ற விதை வேண்டும். கடள் நம்பிக்கை அற்றவாழ்வு விதைக்காத வேளாண்மைக்காரனின் நிலைக்குச் சமமானது.

நியாயத்தை, அன்பை, அருளைப் போதிக்கவே கடவுள் நம்பிக்கையும், சமயச் சார்பும் தேவைப்படுகின்றன. வாழ்க்கைக்குத் தேவையுள்ள பொருள்களான உணவு, உடை உறையுள் போன்றவற்றை முயற்சியால் பெறுவது போலவே, இம்மைக்கும் மறுமைக்கும் முக்கியமாக வேண்டப்படும் கடவுள் அருளை முயன்று பெற வேண்டும். அருள் வெள்ளத்தால் அகத்துய்மை உண்டாகும். சிலரது மனங்களிலே சிங்கம், புலி, கரடி, போன்றவைகள் வாழ்கின்றன. அவைகளை விரட்டி ஆண்டவனின் அருள் வெள்ளம் பெருக்க வேண்டும். அகத்துரய்மைக்கு அருள் இன்றியமையாதது. இதனை நாம் கருத்தில் கொண்டு கடவுளை வழிபடும் மனப் பழக்கத்தினை உண்டாக்க வேண்டும்.

கடவுளை எப்படி வணங்குவது? இது ஒரு பிரச்சனை. வழுபாட்டிற்குச் சிந்தனை தேவை. சிந்தனையை நிலைப்படுத்த ஒரு சாதனம் வேண்டும். அச்சாதனமே தெய்வ உருவங்கள். உருவ வழிபாட்டின் சிறப்பால் உள்ளுறு சோதியைக் காணமுடியும். தெய்வ உருவங்கள் கற்களிலே செதுக்கப்படுகின்றன. கல்லைக் கலையாக்கிக் கலையில் கடவுளைக் கண்டு வணங்கியவர்கள் நாம் நான் பேசிக் கொண்டிருப்பதைப் பெரிதாக்கி உங்கள் காதுகளில் செலுத்துகிறதே இந்த ஒலிபெருக்கி, இதன் ஆரம்ப நிலை வெறும் இரும்புதான். வெறும் இரும்பு தட்டி நிமிர்த்திப் பயனுள்ளதாக்கப் பட்டிருக்கிறது. அதுபோல் வெறும் கல், சிற்பியின் சிந்தனைச் சிறப்பாலும் கற்பனை வளத்தாலும் கலைத் துடிப்பாலும் கடவுட்கோலம் எடுத்திருக்கிறது. கடவுள் உருவங்களைக் கடவுளாக எண்ணும் நிலை வளர வேண்டும்.

செவிடனுக்குக் காது கேட்பதில்லை. அதைப் போல் நெஞ்சம் செவிடாக இருப்பவனுக்கு இறைப்பற்று ஏற்படுவதில்லை. நெஞ்சச் செவிடுநீங்க நெஞ்சத்தால் விரிந்தவர்கள் உதவ வேண்டும்.

இறைவனை வழிபடும் முறையிலே உயிர்ப்பலி மிகவும் கொடுமையானது. உயிர்ப்பலியை ஆண்டவன் விரும்புவதாக எண்ணக்கூடாது. தனது உயிர்களை வருத்தி அழிக்க ஆண்டவன் விரும்புவதில்லை. சிலர் இறைப்பற்று என்று கூறி, ஆடு, கோழிகளைப் பலியிடுகிறார்கள். அது தவறு. இத்தகைய பாதகச் செயல் பரமன் சந்நிதானத்தில் நடவாது தடுக்கப்பட வேண்டும். பாரம்பரியமாக இருந்து வந்த வழக்கம் என்பதால் உயிர்ப் பலியைத் தடுக்கச் சிலர் மறுக்கிறார்கள். அறிவு விரியாத அந்தக் காலத்து விவகாரகங்கள் அனைத்தும் அறிவு விரிந்த-நாகரிகம் வளர்ந்த இந்தக் காலத்தில் நடைபெறுவது நல்லதல்ல.

நமது காலிலே ஒரு ஆணி குத்தினால் “ஆ!” என்று அலறித் துடிக்கிறோம்! ஆட்டை வெட்டும் பொழுது அது என்ன பாடுபடும். ஆன்மாக்களுக்கு அருள் சுரக்கும் ஆண்டவன் அதைப் பொறுப்பானா?

என்னே, மனித வாழ்வின் குறிக்கோள்! உணர்ந்து ஆன்ம சுத்தியுடன் அருளியல் வாழ்வு வாழ்ந்து பயனடைய முன் வரவேண்டும். இந்தப் பிறவி என்னும் பெருங்கடலைக் கடக்க, கருணைக் கடலான, இறைவனின் ‘தாள்’ என்னும் தெப்பத்தில் ஏறிக்கொள்ள வேண்டும். பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார் என்கிறார் வள்ளுவர்.

உருவங்களைக் கடவுளாகவே கருதி வழிபடவேண்டும். இறைவனிடம் உள்ளம் ஒன்றி நிற்க, கடவுளைக் காட்டும் உருவம் உண்மையான கடவுளாகக் காணப்படும். கடவுட் கொள்கை உயிர்ப் பலியை வெறுக்கிறது. எல்லா உயிர்களுக்கும் தந்தையான மங்கைபங்கன் சில உயிர்களை வதைத்துப் பலியிடுதலைப் பொறுக்கமாட்டான். பலியிடும் பழக்கம் ஒழிந்து மறையச் சைவ உலகம் தீவிரமாக முனைதல் வேண்டும்.