குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13/கூட்டுறவுப் பண்பு


10. [1]கூட்டுறவுப் பண்பு

மது பாரதநாடு அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் சமுதாயத்தைப் பிரித்து வைத்தால்தான் தாங்கள் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று கருதிப் பிரித்துவைத்தார்கள்.

பொதுவாக, கருத்து வேறுபாடுகள் தோன்றுவது இயல்பு; தவிர்க்க முடியாதது. நீண்ட எதிர்கால இலட்சியங்களை மனத்தகத்தே கொண்டு, வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவது நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் இன்றியமை யாததொரு பண்பாகும். நாம் சில ஆண்டுகள் கூட்டுறவு இயக்கத்தில் ஈடுபட்டுக் கூட்டுறவுப் பண்பிலே திளைத்தால் கோபதாப உணர்வுகள் கூடக் குறைந்து மறைந்துவிடும். கூட்டுறவு இயக்கம் நம்மைப் பண்படுத்துகிறது- பக்குவப்படுத்துகிறது. நல்வாழ்வுக் கூட்டுறவுச் சங்கம் (Better living Co-operative) என்ற ஒரு புதுவகையான கூட்டுறவுச் சங்கம் ஆங்காங்கு ஏற்படுத்தப்பெற்று வருகிறது. அம்மாதிரிச் சங்கம் கிராமங்களில் பரவலாக ஏற்பட்டுவிட்டால் கிராம மக்களிற் பலர் வழக்கு மன்றங்களுக்குச் செல்வது கூடத் தவிர்க்கப்படும்.

கூட்டுறவு இயக்கங்களில் ஈடுபடுகிறவர்கள் சாதாரண சராசரி மக்களின் நிலையை நன்றாக அறிந்திருக்க வேண்டும். சமூகத்தை ஒரே மாதிரியாகக் கருதுகிற உணர்ச்சி கூட்டுறவு இயக்கத்தினாலேயே ஏற்படும்.

சமுதாயத்தைப் படிப்பிப்பது கூட்டுறவு இயக்கத்தின் தலையாய பண்பாகும். வளர்கின்ற மனித சமுதாயத்திற்கு ஜனநாயகப் பண்பும், கூட்டு வாழ்க்கைப் பண்பும், சேவை உணர்வும் இன்றியமையாதன.

கோயில்கள் கூட்டுறவு இயக்கங்கள், பஞ்சாயத்து மன்றங்களிற் பங்கேற்பவர்கள் அழுக்காறு, விருப்பு, வெறுப்புணர்வுகள் இல்லாதவர்களாக இருக்கவேண்டும். இவற்றிற்கெல்லாம் மேலாக மனச்செழுமையுடையவர்களாக இருத்தல் வேண்டும். இங்கு வாழ்கின்றவர்கள் எல்லாரும் வாழும் உரிமை பெற்றவர்கள். இந்தியாவின் குடிமகன் ஒவ்வொருவனுக்கும் வாழ்வுரிமை அளிப்பதே கூட்டுறவு இயக்கத்தின் இலட்சியம். கூட்டுறவு இயக்கத்தின் மூலம் காந்தீய தத்துவங்களை வளர்த்து நாம் பயன்பெற முடியும்.

வரியால் விலைவாசிகள் உயர்ந்து விட்டன என்கிறார்கள். இன்று பொதுவாக, உற்பத்தியாளர்கள். எண்ணிக்கையை விட வியாபாரிகளின் எண்ணிக்கையே உயர்ந்திருக்கிறது. சரக்குகள் பல கைம்மாறுவதால் நிர்வாகச் செலவு பல மடங்கு பெருகுகிறது. உற்பத்தியாளர்கள், வாங்குபவர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் இந்த விலைவாசி உயர்வை ஓரளவு தவிர்க்கமுடியும்.

கூட்டுறவு இயக்கத்தில் நுழைகிறவர்கள் ஒவ்வொரு வரும் நான் இந்தக் கூட்டுறவுக் குடும்பத்தின் ஓர் அங்கத்தினன் என்ற துய்மையான எண்ணத்தோடு நுழைய வேண்டும். உற்பத்தியாளர் நான் உற்பத்தி செய்கின்ற பொருள்களைக் கூட்டுறவுச் சங்கத்திற்குத்தான் விற்பேன் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். தங்கட்குத் தேவையானவற்றைக் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவே வாங்கவும் உறுதி கொள்ளவேண்டும். கூட்டுறவு இயக்க அங்கத்தினரிடையே சேமிப்பு உணர்ச்சி பெருக வேண்டும்.

விலை உயர்கின்ற பொருள்களைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் வாங்கவும் விற்கவும் முடியும். இவ்வளவு வசதிகளும், வாய்ப்புக்களும் இருந்தும் நாம் பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்கின்றோம்.

கூட்டுறவாளர்கள் தங்கட்குள் மனம் விட்டுப் பேசிப் பழக வேண்டும். அவர்கள் தங்கட்குள் சந்தேக உணர்வுகளுக்கு இடங்கொடுக்கக்கூடாது.

கூட்டுறவு இயக்கத்தின் மூலம் சமுதாயத்தில் உள்ள மிகச் சாதாரண மக்களுக்கும் வளமை தரமுடியும். நீண்ட கால அபிவிருத்திக் கடன்கள் வாங்குவதில் நமது மக்கள் இன்னும் போதிய அக்கறை காட்டவில்லை. கூட்டுறவுக் கடன் விஷயமாக இதைக்காட்டிலும் எளிமையாகச் சட்டங்கள் ஆக்கமுடியாது. கூட்டுறவு இயக்கத்தில் கடன் வாங்குவது மிகவும் சுலபமானது. கூட்டுறவு இயக்கத்தில் இன்று நமக்கு வாய்த்திருக்கிற அதிகாரிகள் அலுவலர்கள் எல்லோரும் இனிய பண்புடையவர்களாக பழகுதற்கு எளியவர்களாக இருக்கிறார்கள் என்பது பெருமகிழ்ச்சிக்குரியது.

இன்று, கூட்டுறவு இயக்கத்தில் ஈடுபட்டவர்களாவது வம்புவழக்குச் செய்து கொள்ளாமல் அன்பாகப் பண்பாகப் பழகி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும். கூட்டுறவு இயக்கத்திற்கும் அதிகார உணர்வுக்கும் நெடுந் தொலைவு. நம்முடைய நாடு எல்லார்க்கும் எல்லா வாய்ப்புக்களும் வழங்குகிற ஒரு சுதந்திர சோஷலிசக் குடியரசு நாடாக விளங்க நாம் எல்லாரும் அன்பாகப் பண்பாக, அண்ணனாக, தம்பியாக மனச்சாட்சியோடு பழக வேண்டும்.

  1. பொங்கல் பரிசு