குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13/கூட்டு வாழ்க்கை
மண்ணில் மனித வாழ்க்கை என்பது முன்மாற்றத்தை வளர்ச்சியை, முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டது. மானுடத்தின் குறிக்கோளை ஒரு வார்த்தையில் சொன்னால் "முன்னேற்றம்-PROGRESS" என்று கூறலாம். மனிதன் பொருளாதாரத் துறையிலும் சமய ஞானத் துறையிலும் பல அனுபவங்களைப் பெற்று வளர்ந்து முன்னேறி மகிழ்ச்சியை அனுபவிக்கிறான். அமைதியைக் காண்கிறான்.
மனித வாழ்க்கை மேம்பட முதல் தேவை எது? அன்பா? அறிவா? அன்பு என்றே பதில் கூறுவீர்கள். இல்லை! இல்லை! அறிவே முதல் தேவை. ஏன் அறிவார்ந்த நிலையில் காட்டப்பெற்று வளராத அன்பில் இடைமுறிவு ஏற்படும். விலங்குகளிடத்தில் நிலவும் அன்பைப் பாருங்கள்! பிறப்பில் பரம்பொருள். அமைதியில் மாந்தர் யாவரும் ஒரு குலமே. மனிதன் அறிவியலடிப்படையில் அன்பு காட்டிப் பழகுவானானால் அன்பு தோன்றும்; வளரும்! ஆக, வாழ்க்கையை வாழ்வாங்கு வாழக் கற்றுக்கொடுப்பது அறிவியலே! இத்தகு ஒரு சிறந்த அறிவியலைப் பின்தங்கிய கிராமப்புற மக்களாகிய எங்களுக்கு அறிமுகப்படுத்தி அழைத்துச் செல்கின்ற மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையத்திற்கும், காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வக விஞ்ஞானிகளுக்கும் நன்றி, கடப்பாடு.
மானுடம் சிறக்க மானுட சமுதாயம் தோன்றசிறப்புற இயங்க அறிவியலே அடிப்படை அதனாலேயே திருக்குறள் “அறிவு அற்றம் காக்கும் கருவி” என்றும், “அறிவுடையார் எல்லாம் உடையார்” என்றும் கூறியது. இன்று-நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமைய என்ன அறிவு தேவை? இன்று மனித உலகம் அறிவியல் துறையில் அளப்பரிய சாதனையைச் செய்துள்ளது. அறிவியலும் தொழில் நுட்பமும் பொருளாதாரத்தை வளர்த்து நுகர்வுப் பொருள்களைப் பலவாக்கி, வாழ்க்கை அனுபவங்களை எளிமையாக்கி இன்பத்தையும் சேர்த்துள்ளது. ஆயினும் நாம் எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று வினவினால் விடை எதிர்மறையே! ஏன் எதிர்மறைத் தன்மை வாய்ந்த விடை?
பல மனிதர்கள் தங்களுடைய முரண்டு தட்டிப்போன தன்மையை மாற்றிக்கொள்ள முன்வராமையினாலேயே முன்னேற்றம் தடைப்படுகிறது. எங்கு எல்லாம், நிர்வாணத் தன்மை வாய்ந்த சுயநலமும், ஆதிக்க மனப்பான்மையும் ஆட்சி செய்கிறதோ, அங்கு தனி மனிதன் மற்றவர்களோடு மோதுதலே செய்வான்.
மனிதன் தனி ஒரு தீவு அல்ல. பல நீர்த் திவலைகளை உள்ளடக்கிய ஏரி அனையவன். மனிதனிடத்தில் ஒப்படைக்கப் பெற்றுள்ள வைப்பாகிய ஆற்றல், அறிவு, கருவிகள் அளப்பில; ஆனால் மனிதன் இவற்றை முழுமையாக நேற்றும் பயன்படுத்தவில்லை! இன்றும் பயன் படுத்தவில்லை! அது மட்டுமா? அவன் இயற்கையாகப் பெற்ற பெரும் வைப்புக் கருவிகளில்-திறன்களில் சிலவற்றை அழித்தும் கெடுத்தும் இருக்கிறான். மனிதன் பல தவறான திருப்பங்களை எடுத்து வாழ்க்கையின் இலக்கிலிருந்து நெடுந்தொலைவு விலகிச் சென்றுவிட்டான்! இயற்கையோடு இசைந்து வாழ்ந்து முன்னேறிச் செல்லாமல் இயற்கையோடு முரண்பட்டுத் துன்பத்தையும் அதிகமாகத் தேடிக் கொண்டு விட்டான்! இந்தத் தவறு நிகழ்ந்ததற்குக் காரணம் மனிதன் கூடிச் சிந்தனை செய்து, முடிவு எடுக்கும் மரபைக் கைவிட்டதுதான்! மனிதனின் கூட்டுச் சமூக வாழ்க்கையில் நாள்தோறும் கூட்டு ஞானத்தைக் கண்டு வளர்த்துக்கொண்டு பயனடைதல் வேண்டும்.
சமுதாய உணர்விலும் சமுதாய ஒழுக்க நலத்திலும் சிறந்து வளர்ந்தால்தான் அன்பு வளரும். அன்பினால் சமுதாயம் உருவாவதில்லை. சமுதாய உணர்வின் செழிப்பில் தான் அன்பு வளர்கிறது. சமுதாய நலஞ்சார்ந்த வாழ்க்கையில் தான் வெறுப்புக்கு மாற்று-மருந்து அன்பு ஒன்று ஆகும். இத்தகு சமுதாய நலங்காணும் வாழ்க்கையில்தான் பொறை யுடைமை, மன்னித்தல், துன்பம் செய்யாமை, அகிம்சை ஆகிய பண்புகள் நிலவும்.
இன்று நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமைய உடனடியாகச் சமுதாய உணர்வும், அறிவும் தேவை. சமுதாய அமைப்புமுறைக் கட்டுமானத்தை-உருவாக்குவதே முன்னேற்றத்திற்குரிய ஒரேவழி! ஒரே ஒருவழி! இன்று நாம் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தீமை இழைத்துக் கொண்டு அழியும் பேய்களாக (Devil) மாறிவருகிறோம். இல்லை, இல்லை! பேய்கள்கூட இங்ஙனம் தம்முள் தீமை செய்து கொள்வதில்லை! ஆனால் மானுடம் அவற்றைவிடவும் கீழிறங்கிவிட்டது! இன்று வாழ்க்கையில் எண்ணற்ற சிக்கல்கள் தோன்றியுள்ளன. இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் தீர்வுகாணச் சிந்திக்காமல் சாதிகள், மதங்கள் இவற்றில் தொடர்பான வேற்றுமைகளை வளர்ப்பதில் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றோம்.
காலம் அரிதானது. காலம் விண்ணில் சிறகு கட்டிக் கொண்டு பறக்கிறது. காலத்தை வீணாக்காது பயனுள்ள செய்யவேண்டும். இன்று தோன்றுவன புதிய-புத்தம் புதிய சிக்கல்கள்! பிரச்சினைகள்! புதிய பிரச்சினைகளுக்கு, முந்திய நூற்றாண்டுகள் விட்டுச் சென்றுள்ள சிந்தனைப் போக்கின் அடிப்படையில் ஒருபோதும் தீர்வு காணமுடியாது. சென்ற காலம் மறைகிறது; மறைந்து போகிறது. ஏன் அழியக்கூடச் செய்கிறது; வெற்று அழிவு அல்ல; அந்த அழிவில் புதிய ஆக்கம் தோன்றுகிறது. இதுவே உலகத்தியற்கை.
இன்றைய சமுதாயச் சிக்கல்களுக்கும் பழைய முறை தீர்வுகளையும் முயற்சிகளையும் பின்பற்றுவதால்தான் நம்முடைய சமுதாயத்தில் வேறுபாடுகளும், வேற்றுமைகளும் அகலவில்லை. மருத்துவம் நடந்தது என்னவோ உண்மை! ஆனால் நோய் நீங்கியபாடில்லை! வறுமையும் ஏழ்மையும் அகல, பல பணிகள் செய்யப்பெற்றன, செய்யப்பெற்று வருகின்றன. ஆனால் வறுமையும் ஏழ்மையும் அகலவில்லை. நமது மக்களில் சரிபாதிப்பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர்! ஏன் இந்த அவலம்? நமக்குச் சிக்கல்களுக்குத் தீர்வு காணவேண்டும் என்ற ஆர்வத்தைவிட நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே மேலிட்டது. இந்த முறை பிழையான முறை.
நம் ஒவ்வொருவரிடமும் இன்னமும் நாடு தழுவிய நிலையில் உலகந் தழீஇய நிலையில் மொழி, இனம், சாதி, மதம் என்ற எல்லைகளைக் கடந்த மனிதகுல உணர்வு-மனித நேயம் உருக்கொள்ளவில்லை. சமுதாய உணர்வு பெறுதல் வேண்டும். திருக்குறள் மனிதகுலத்தைச் சார்ந்து ஒழுகு தலையே ஒழுக்கம் என்று கூறுகிறது.
“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்”
-குறள் 140
என்பது குறள். நாகரிகம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்? வாழ்கின்ற மாடமாளிகையும் கூடகோபுரங்களுமா நாகரிகத்தின் சின்னங்கள்! அல்லது விண்ணளந்து நிற்கும் கோபுரங்களா? இல்லை, இல்லை! நாகரிகத்தில் உயர்ந்து விளங்கிய மனித குலத்தின் படைப்புகளாக இவை விளங்குகின்றன. இன்று நாகரிகம் என்பது நம்முடைய உடம்பின் தோலைக்கூடத் தொட்டுப் பார்க்கவில்லையே!
“நாகரிகம் என்றால் நல்ல நடத்தை” என்று பொருள். “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்” என்று கலித் தொகை கூறும். அதாவது மக்கள் தொகுதியுடன் ஒத்தறிந்து ஒழுகுதலாகும். இங்ஙனம் ஒத்தறிந்து ஒழுகும் பொழுதுதான் சமுதாயம் உருவாகும்; உருவாயும் வருகிறது. எவ்வளவுதான் தனி மனிதன் சிறந்தவன் ஆனாலும்-அவனுடைய சிறப்புக்கே சமுதாய அமைப்புதான் காரணம். இரண்டு பேருடைய அறிவார்ந்த விவாதத்தில் பிறக்கும் அறிவுக்கும் சக்திக்கும் நிறைய ஆற்றல் உண்டு!
நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழக் கூடிய ஒரு சமுதாய அண்மப்பு தோன்றி வளர்ந்து வருகிறது என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். இன்று இந்திய சமூகத்தில் புரந்த நிலையில் மக்களாட்சி முறையும் கூட்டுறவு வாழ்வியல் அமைப்பும் வளர்வதுபோல ஒரு தோற்றம் இருப்பது தெரிகிறது. இல்லை பரந்த ஜனநாயகக் கூட்டு வாழ்க்கைமுறை அறிமுகப்படுத்தப் பட்டிருப்பதும் அத்தகைய வடிவங்கள் இருப்பனவும் உண்மை. ஆனால், உள்ளீடுதான் இல்லை! கூட்டு வாழ்க்கை ஆன்மாக்களிடத்தில் தாக்கத்தை-விளைவுகளை ஏற்படுத்தவில்லை. இந்தியாவில் நம்மிடம் மறைந்து போயுள்ள - மறைந்துகொண்டு வருகின்ற ஒரு முக்கியமான பழக்கம், பலர் ஒன்று சேர்ந்து கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஒரு குழுவாகப் பணியாற்றும் திறன்தான் என்பதாகும். ஒரே வழி கட்டுப்பாட்டு வடிவத்துடன் அமைந்த சில குழுக்களைப் பார்க்கிறோம். இந்தக் கட்டுப்பாடு, உயர் இலட்சியங்கள் இல்லாத தற்சார்புள்ள சிலரின் ஆதிக்க அடிப்படையில் முரண்பாடுகளை உள்ளடக்கிக்கொண்டு அமைந்துள்ள சந்தர்ப்பக் குழுக்களாகும். இந்த அமைப்புமுறை நீண்ட நெடுங்காலம் நிலவாது; மனித குலச் சிக்கல்களுக்கும் தீர்வு காணாது; சாதனைகளும் செய்யாது. இன்றைய உடனடித் தேவை - சமுதாய உணர்வைத் துண்டி வளர்த்து பாரத சமுதாய அமைப்பைக் காண்பதேயாகும்.
ஆன்மிகத் தன்மை வாய்ந்த உயிர்ப்புள்ள சமுதாய உணர்வு தேவை! நமக்குத் தேவை பருத்த உடல் அல்ல. திறமான, தரமான ஆன்மாக்களே தேவை. ஏன்? உடல் எப்போதும் தன்னலப் பற்றுடன் தனக்கு இன்பத்தையே எதிர்பார்க்கும்; நாடித் தேடி அலையும். ஆனால், ஆன்மா பிறர் நலனையே கருதக்கூடியது. இன்று சமயம் என்ற பெயரில் வளரும் மூடப் பழக்கங்களிலிருந்து மனித குலத்தை மீட்டுப் பிறருக்கு உழைத்தல் என்ற வேள்வி இயற்றவும், சமய நெறியைத் தொண்டு நெறியாக வளர்க்கவும் வேண்டும். மனித குலத்தின் நன்மைக்கு உழைப்பதில்தான் நமக்கு நலன்களும் உறுதிப்படுத்தப்பெறும் என்ற சிந்தனையை வளர்க்கவும், மனித குலத்தினிடையில் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் வளர்த்து இணக்கம் ஏற்படுத்தவும் வேண்டும்.
இவ்வாறான சமுதாய இணக்கம் ஏற்பட்டால்தான் மனிதகுலத்தின் பொது எதிரிகளாகவுள்ள அறியாமை, வறுமை, ஏழ்மை, வேறுபாடுகள், பகைமை, போர் இவைகளை எதிர்த்துப் போராட முடியும். மனிதகுலம் தழுவிய இந்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களே மாமனிதர்கள்! மதிப்பிற்குரியவர்கள்! புகழுக்குரியவர்கள்! மனித சமுத்திரத்திற்குள் மூழ்கிக் குளித்து மனிதகுல மேம்பாட்டையே தவமாகச் செய்யும் தவமே, தவம்! அறம்! மனிதகுலத்தின்பால் காட்டும் பெருந்தன்மையே ஒழுக்கம்!
இத்தகு மனிதகுல ஒழுக்கத்தை அறிவு நிலையிலும் செயல்நிலையிலும் வளர்க்க, கூட்டுறவு சமுதாய அமைப்பு மிகுதியும் துணை செய்யும். நாம் நம்முடைய மனிதகுல மேம்பாட்டுக்காக ஒரு புதிய சக்தியைத் தோற்றுவிக்க இயலாது. முடியாது. ஆனால், மனிதகுலம் உயர்ந்த இலட்சியங்களின் அடிப்படையில் ஒருமை உணர்வுடன் ஒன்றுபட்டால், கூடித் தொழில் செய்து வாழத் தலைப்பட்டால் ஒரு புதிய சக்தி தோன்றும்! இந்த அற்புதமான மனிதக் கூட்டுறவு சக்தி, படைப்பாற்றலுடையதாக விளங்கும். இந்தியாவின் மேடு பள்ளங்கள் நில அமைப்பில் மட்டுமல்ல, மனிதர்களிடையும் கூட இருக்கிறது. இந்த நிலை மாறி, எல்லாரும் எல்லாம் பெற்று இன்புறு நலன்களுடன் வாழ்ந்திடக் கூட்டுறவு வாழ்க்கையே சிறந்தது! “கூட்டுறவு” என்ற சொல்லைச் சிந்தனை செய்யுங்கள்! அது, கூட்டு வாழ்க்கையல்ல! கூட்டு வாழ்க்கை போதாது! வாழ்க்கையின் தேவைகள் நிறைவுற்ற நிலையிலும் வேறுபாடுகள் தோன்றியபோதும் சுயநலம், தன் மதிப்பு அடிப்படையில் கூட்டு வாழ்க்கை சிதையும். இங்கு தேவை கூட்டுறவு வாழ்க்கை உறவு அடிப்படையில் மலரும் வாழ்க்கை! இங்குக் குறிப்பிடப்பெறும் உறவு, சுற்றத்தின் வழிப்பட்ட உறவு மட்டுமல்ல. “யாதும் ஊரே, யாவரும் கேளிர்!” என்ற அடிப்படையில் கால்கொள்ளும் உறவு! உலகம் உண்ண உண்ணும் உறவு! உலகம் உடுத்த உடுத்தும் உறவு! பொருளாதார அடிப்படையில் மட்டும் தோன்றி வளரும் உறவல்ல, கூட்டுறவில் வளரும் உறவு! இஃது ஆன்ம நிலையில் வாழ்க்கையின் விவரிக்கப்பட முடியாதபகுதி என்ற சிந்தனையில் மலர்ந்து வளரும் உறவு! இத்தகைய கூட்டு உறவு மக்களிடத்தில் வளர்ந்தாலே பாரத சமுதாயம் தோன்றும்! இத்தகு கூட்டுறவு நிலையில் மக்களை நெறிப்படுத்தி வளர்க்க அரசு துணைசெய்ய வேண்டும். அதேபோழ்து அரசின் அதிகார அமைப்பாகக் கூட்டுறவு அமைந்துவிடக்கூடாது என்பதில் அரசு விழிப்பாக இருக்கவேண்டும்.
நமது பாரத சமுதாயமும் சரி, உலக சமுதாயமும் சரி எதிர்வரும் காலத்தில் சிறப்புற வளர, வாழ மனித இதயங்களைப் பரிவர்த்தனை செய்துகொண்டு, “ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும்” என்று வாழும்பொழுதுதான் இந்த மண்ணகம் விண்ணகமாக மாறும்!
(காரைக்குடி, மத்திய மின்வேதியியல் ஆய்வகம் -
அறிவியல் ஆய்வுக் கருத்தரங்கம் 1991, ஆகஸ்ட் 15:16.)
- ↑ சிந்தனைச் சோலை