குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13/திருப்பணி
இந்தப் பூவுலகம் மனிதர்கள் கூடிவாழ்ந்து இன்ப நலம் பெறுவதற்கேயாம். உலகியல் அமைப்பில் எப்பார்வை கொண்டு பார்ப்பினும், மனித இனத்திற்கு நலம் தருகின்ற காட்சியையே பார்க்கின்றோம். ஆனாலும் மனித சமுதாயத்தின் வாழ்க்கைப் போக்கில் இன்ப நலன்களைவிடத் துன்ப நலன்களே மிகுந்து காணப்பெறுகின்றன. இதற்குக் காரணம் என்ன? உலகியல் என்றோ, ஊழியல் என்றோ சொல்லித் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கக் கூடாது. மனித சமுதாயத்தை அச்சத்திலிருந்தும் துக்கத்திலிருந்தும் காப்பாற்றியே தீரவேண்டும். இந்த இலட்சிய நோக்குடனேயே மத சித்தாந்தங்கள் தோன்றின. ஆனால் நடைமுறையில் அந்தச் சாதனையைச் செய்யும் முயற்சியில் மதம் தோற்றுவிட்டதென்றே கூறவேண்டும்.
ஒரு பெரிய வண்டியை அதனுள் நுட்பமாக அமைந்திருக்கும் இயந்திரமே இயக்குகிறது. அதுபோல மனிதனுடைய ஆன்மாவாகிய உள்ளுணர்வைத் துாண்டிவிட்டுச் சிந்திக்க வைக்கின்ற ஆற்றலைக் காலப்போக்கில் மனித சமுதாயம் இழந்துகொண்டே வருகிறது. சிந்தனைச் சூழலும் கருத்துப் புரட்சியும் உருவானாலே, மனிதகுலம் தரத்திலும் தகுதியிலும் வளரமுடியும். மனிதகுலம் அறியாமையின் காரணத்தினால் வலியத் தன் தலையில் நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்வது போல மிக எளிதில் தீய உணர்வுகளின் வழி இழுத்தலைக்கப்படுகின்றது. தன்னைத்தானே நேசிக்கின்ற உணர்ச்சி வளர்ந்திருக்கின்றதே தவிர, தன்னைச் சுற்றியிருக்கிற மனிதகுலத்தை நேசிக்கவேண்டும் என்ற கருத்து தேவையான அளவிற்கு வளரவில்லை. உயர்ந்த சிந்தனைகளைத் தூண்டிவிட்டு மனிதகுலத்தை வளர்க்கப் பயன்பட வேண்டிய மதம் வறட்சியான பழக்க வழக்கங்களின் பாற்பட்டு ஆற்றல் இழந்திருப்பதை என்னென்று சொல்லுவது?
அன்பியல் வழிப்பட்ட வாழ்க்கை முறையைச் சமுதாயம் மேற்கொள்ளத் தவறிவிட்டால் நிச்சயம் கொடிய கொலைக் கருவிகளின் மூலம் உலகத்திற்கு அழிவே ஏற்படும். கொள்ளிக் கட்டையால் சொறிந்து கொண்ட குரங்கின் கதை போல் சமுதாயத்தின் கதையும் முடிந்து போகும். இத்தகு பேராபத்தினின்றும் சமுதாயத்தைக் காப்பாற்றச் சமய நெறியாளர்களும் சிந்தனையாளர்களும் முன்வரவேண்டும். அணுகுண்டு யுகத்தில் வாழும் நாம் உள் உணர்வால் அமைதியின் உச்சியை எட்டிப்பிடித்தால் ஒழிய மனித குலத்தைப் பேராபத்தினின்றும் மீட்க முடியாது. இன்றையச் சமுதாயத்திற்கு உடனடியான தேவை, வாழ்க்கையை வளமாக்கிக் கொள்கின்ற விஞ்ஞான அறிவு. விஞ்ஞான அறிவு வாழ்க்கையின் புறச்சூழலை வளர்த்துச் செழுமைப் படுத்த வேண்டும்; அதே காலத்தில் நம்முடைய பாரம் பரியமான அருளுணர்வு சமுதாயத்தின் உள் உணர்ச்சியைத் தூண்டி வளர்த்துச் செழுமைப்படுத்த வேண்டும்.
பாரத நாட்டுச் சிந்தனையாளர்களும், சமய நெறியாளர்களும் இத்திருப்பணியில் ஈடுபடவேண்டும்.
- ↑ பொங்கல் பரிசு