குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15/கல்வியியல் கட்டுரைகள்

1

கல்வியியல் கட்டுரைகள்


1. பாரதிதாசன் பல்கலைக் கழக

அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்

முதல் துணைவேந்தர் முனைவர் பி. சு. மணிசுந்தரம்

அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் 8-9-92

அ. கல்விச் சிந்தனை

பாராட்டுதலுக்குரிய துணைவேந்தர் அவர்களே!

கல்வியியல்துறைப் பேராசிரியர்களே! அறிஞர் பெரு

மக்களே! எல்லாருக்கும் நன்றி! பாராட்டு! வாழ்த்துக்கள்!


"கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்"


"கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை"


என்று திருவள்ளுவர் கல்வியைச் சிறப்பித்துள்ளார். கண் காணும் காட்சிகளை அறிவார்ந்த பார்வையுடன் பார்த்தால் தான் உண்மை புலனாகும். ஆக்கம் வந்தடையும். அஃதின்றேல், யாது பயன்? பயனல்லாதது மட்டுமல்ல, துன்பமும் விளையும் என்ற கருத்தில் "கண்" என்றார் திருவள்ளுவர். கல்வியே செல்வம். எப்படி? அறிவறிந்த ஆள்வினைதானே செல்வத்தைச் சேர்க்கும்; பாதுகாக்கும். அதுமட்டுமல்ல. எப்போதும் அழியாத் தன்மையுடன் வளர்வது கல்வியும் அறிவுமேயாம். அதனால் "கேடில் விழுச்செல்வம்" என்றார்.

"கல்வியினுரங் கில்லை சிற்றுயிர்க்கு உற்ற துணை”

என்றார் செந்தமிழ்க் குமரகுருபரர். கல்வியின் இன்றியமையாத் தன்மையை எண்ணிய பாவேந்தன் பாரதிதாசன்,

"கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக்
கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்"

என்றார்.

"கல்வியே ஆன்மாவின் உணவு” என்றான் மாஜினி. "கல்வி இல்லையேல் நம் ஆற்றல்கள் எல்லாம் தேங்கி நின்று விடும். பயன் தரா" என்றும் கூறினான். மனிதன் பிறப்பதில்லை. மனிதன் படைக்கப்படுகிறான். மனிதன் உருவாக்கப்படுகிறான். ஒரு குழந்தை பிறக்கிறது-அவ்வளவுதான்! அந்தக் குழந்தை முறையாக வளர்க்கப்படுவதன் மூலம் மனிதன் உருவாகிறான். ஏன்? மனிதனை உருவாக்குவதில் கல்வி வகிக்கும் இடம் பெரிது. அதனால்தான் “கற்காமல் இருப்பதைவிடப் பிறக்காமல் இருப்பதே மேல்” என்றான் பிளேட்டோ. திருவள்ளுவரும் கல்வியைப் பற்றி விரிவாகப் பேசுகிறார்.

கல்வி உளவியல்

மானுட வாழ்க்கை சிறந்து விளங்க, பருவம்தோறும் பருவங்களுக்கிசைந்த கல்வி கிடைக்கச் செய்யவேண்டும். பள்ளி செல்லும் வயதுக்கு முந்திய பருவத்தின் உளவியல், ஆரம்பப்பள்ளி மாணவர்களின் உளவியல், இளைஞர்களின் உளவியல் ஆகியவை பருவ உளவியலின் பிரிவுகளாகும். கற்பித்தலின் உளவியல், வளர்ப்பின் உளவியல், ஆசிரியரின் உளவியல் ஆகியவை கல்வி உளவியலின் பிரிவுகள், மாணவர்களின் பருவகால உளவியல்களுடன் கல்வி உளவியல் பிரிவுகள் இணைந்தும் இசைந்தும் சென்றால்தான் கல்விப் பயணம் சிறப்புற அமையும்!

கல்விக்கு வயது வரம்பு இல்லை. வாழ்க்கை முழுதும் கற்கவேண்டும்; சாகும் வரையிலும் கற்க வேண்டும்; சாகும் பொழுதுகூடப் படித்துக் கொண்டே சாகவேண்டும் என்பது திருக்குறள் கருத்து.

"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு”

என்பது திருக்குறள். ஆயினும் பருவந்தோறும் வளரும் உணர்வுகள், ஆர்வங்கள், வாழ்க்கையின் வளர்ச்சிகள், மாற்றங்கள் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு, கற்கும் கல்வி அமைய வேண்டும். நாள்தோறும் வாழ்க்கையை உந்திச் செலுத்தும் சாதனமாகவும் புத்துயிர்ப்பு வழங்கும் வாழ்க்கையை இயக்கும் சாதனமாகவும் அமைவது கல்வி.

கல்வி ஏன் தேவை?

கல்வி என்பது என்ன? கல்வி, ஆன்மாவினிடத்தில் இயல்பாக அளவின்றி இருக்கும் உயர்ந்த ஆற்றல்களைக் கண்டுபிடித்து வெளிக்கொணரும் ஒரு சாதனம். அடுத்து, இந்தப் பரந்த உலகத்தை ஆன்மா அறிந்துகொண்டு அனுபவிக்கத் துணை செய்வது கல்வி. ஆன்மாவின் ஆற்றலையும், ஆன்மாவின் பொறிபுலன்களின் ஆற்றலையும் வளர்த்து வாழும் உலகத்தின் பயன்களை முழுதாக அனுபவித்து ஆன்மா அறிவிலும் ஞானத்திலும் முதிர்ச்சியடையத் துணை செய்வது கல்வி.

கல்வி இல்லையானால் ஆன்மா அறியாமையின்வழி நடந்து அவதிப்படும். ஆன்மாவின் பொறிபுலன்களுக்குப் பயன் இல்லாமல் போய்விடும். கல்வி இல்லையாயின் இந்த உலகம் ஒர் "இருட்டுக்கண்டமே!" இருளில் நடக்கக் கை விளக்கு துணை செய்வதுபோல ஆன்மாவின் இருளகற்றும் கைவிளக்காகக் கற்ற கல்வியும் அறிவும் துணைசெய்யும். அதனால் வையத்துள் வாழ்வாங்கு வாழக் கல்வி தேவை.

கசடறக் கற்க

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"

என்கிறது திருக்குறள். கல்வி, கற்க வேண்டிய ஒன்று. நாள் தோறும் நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்பது மாணாக்கனின் பழக்கமும் வழக்கமும் ஆகவேண்டும். எத்தகைய நூல்களைத் தேர்ந்தெடுப்பது கற்பதற்கு? “கற்க கசடறக் கற்பவை” என்ற தொடருக்கு ஐயமில்லாமல்-பிழையில்லாமல் கற்பது என்று பொருள் கூறுவது ஏற்புடைத்தன்று. கசடு - குற்றம்: அதாவது ஆன்மாக்களிடத்தில் உள்ள அறியாமை! நான், எனது என்னும் செருக்கு, அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகிய கசடுகள் நீக்கத்திற்குரிய நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்கவேண்டும் என்பது பொருள். மனிதனை ஒழுக்கமுடையவனாகவும் நல்லவனாகவும் வாழும் முறையைக் கற்றுக் கொடுக்கவேண்டும் கல்வியின் நோக்கம் பட்டதாரிகளை உருவாக்குவதன்று. மனிதனை உருவாக்கவேண்டும். கல்வியின் நோக்கம் ஒழுக்கம் என்ப தறிதல் தேவை. அடிப்படைக் கல்வியிலிருந்து உயர்நிலைக் கல்வி வரை, குறிப்பாகப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் கல்வி வரை "மனித இன நலக் கோட்பாடு" கற்றுத் தருதல் வேண்டும். அதோடு சகிப்புத் தன்மை, உண்மையைத் தேடுவதில் ஆர்வம், முன்னேறிச் செல்லும் உணர்வுப் போக்கு ஆகியவற்றில் மாணவர்களுக்குத் தேர்ந்த பயிற்சி தருதல் வேண்டும்.

பண்டைக்காலக் கல்விமுறை

கல்விமுறை தொடங்கிப் பல்லாயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. தொல்காப்பியத்திலேயே நூல்புத்தகம் அறிமுகப்படுத்தப்பெறுகிறது. ஆதலால் அக்காலத்திலேயே கல்வி தரும் முயற்சிக்கு ஊக்கம் அளிக்கப்பெற்றது என்று தெரியவருகிறது. அதங்கோட்டாசான் என்ற ஆசிரியர் பற்றித் தொல்காப்பியப் பாயிரம் கூறுகிறது. ஏன்? ஆரிய மறைகள் வரலாற்றுக் காலத்துக்கும் முந்திய தொன்மையுடையவை என்பர். ஆரிய மறைகளாகிய ரிக், யசுர், சாம, அதர்வணம் ஆகிய நான்மறைகள் எல்லாம் வல்ல இறைவன் ஞானாசிரியனாக-ஆலமர் செல்வனாக அமர்ந்து அருளியவை என்பர். கல்வி அறிவு பெற நல்ல ஆசான் வேண்டும் என்று உபநிடதம் கூறுகிறது.

கல்வியியலின் தோற்றத்திற்கு மனித வரலாற்றை உந்திச் செலுத்தும் சிந்தனையே காரணமாக அமைந்திருக்க வேண்டும். மனிதன் தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தைப் புரிந்துகொள்ளச் செய்த முதல் முயற்சியே கல்வியின் தொடக்கமாகும். காலப்போக்கில் கல்வி, உலக இயற்கையினும் ஆற்றலுடையதாக வளர்ந்து, இயற்கையையே தன் ஆதிக்கத்தின்கீழ்க் கொண்டுவரக் கூடிய ஆற்றலாக வளர்ந்து பரிணமித்தது. பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் ச. முத்துக்குமரன் அவர்கள் அறிவை "ஆற்றல்” என்றும் கூறலாம் என்று கூறுகிறார். ஆதலால், கல்வியே உலகத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்கி, உலகத்தை அனுபவிப்பதில் வளர்ந்து, உலகத்தைத் தன் விருப்பத்திற்கு இயக்கிக் கொள்ளும் சிறப்பினைப் பெற்றிருக்கிறது.

இந்தக் கல்வி தனிமனிதப் பணிகளாகவே வளர்ந்தது குரு-சிஷ்யர் என்ற முறைதான் பண்டைய முறை. பின் கழகங்கள், பல்கலைக் கழகங்கள் என்று வளர்ந்து இன்று வலிமையான அடிப்படை அமைந்த நிறுவனங்கள் கல்வியை வழங்குபவையாக விளங்குகின்றன. பண்டைய வரலாற்றில் கல்வி வழங்கிய கழகங்கள்-சங்கங்கள் காசி, நாளந்தா, காஞ்சி, மதுரை போன்ற இடங்களில் அமைந்திருந்தன. காலப் போக்கில் கழகங்கள் பல, கல்வி கற்பிக்கும் பணியைவிட ஆய்வுப் பணியை மிகுதியும் மேற்கொண்டுவிட்டன! பண்டையக் கல்வி முறையில் ஆசிரியர்-மாணாக்கர்களிடையே நல்ல ஆக்கப்பூர்வமான உறவு இருந்தது. இந்த உறவு தரமான கல்வியைப் பெறுவதற்குத் துணைசெய்தது. பண்டைக் காலத்தில் ஆசிரியர்கள், மாணாக்கர்களுக்குக் கல்வி கொடுத்தார்கள் என்பதைவிட மாணாக்கர்களுடைய புலன்களை உழுது அவர்களிடத்தில் சில அறிவு வித்துக்களை விதைத்தார்கள்; சிறந்த குடிமக்களாக உருவாக்கினார்கள் என்று கூறலாம்.

ஆசிரியர் தம்முடைய கற்பிக்கும் திறனால் மட்டுமன்றி அவர்தம் நெறிசார்ந்த வாழ்க்கையாலும் மாணாக்கனுக்குக் கல்வி கற்பிக்கவேண்டும், என்பதையும் அறிக! அன்று ஆசிரியர் பக்கம் உயர்ந்திருந்தது. ஆசிரியர்களிடம் மாணாக்கர்கள் பணிவாக நடந்துகொண்டனர். "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது" கற்றனர். அன்று கல்வி, ஆசிரியர் வழங்கும் கொடையாகவே இருந்தது! அன்று கல்வி வழங்கும் ஆசிரியர் பணி ஒரு சமூகப் பணியாக இருந்தது. இன்று ஆசிரியர்களுக்குத் தாம் செய்வது தொண்டு என்ற நினைவுகூட இல்லை! தொழிலாக மாறிவிட்டது! மாணவர்கள் ஆசிரியர்களிடம் போதிய மதிப்புணர்வின்றிக் கற்கிறார்கள்; பழகுகிறார்கள். பண்டு இருந்தது போல ஆசிரியர்-மாணாக்கர் உறவு இருப்பதாகத் தெரியவில்லை. கல்வி, ஆசிரியர்-மாணாக்கர் உறவு என்ற அடிப்படை, கல்வித் தாகம் என்றெல்லாம் இன்று காண இயலவில்லை.

சென்ற காலக் கல்வி முறையில் பெரும்பாலும் செய்யுளே இருந்தது. பெரும்பாலோர் இலக்கியமும், ஒரு சிலரே கணிதம், வானசாத்திரம் முதலியன கற்றனர். எல்லாக் கல்வியும் செவிவழிக் கல்வியாகத் தோன்றி வளர்ந்துள்ளது. செவிவழிக் கல்வி வளர்ந்து பலநூறு ஆண்டுகளுக்குப் பிறகே எழுதுதல் மூலம் கல்வி வளர்ந்தது.

இன்று நிலவும் கல்வி முறை, மனநிறைவைத் தரத்தக்கதாக இல்லை. நாடு தழுவிய நிலையில் ஒரே கல்விமுறை நடைமுறையில் இருக்கிறது. இது அவ்வளவு சிறப்பன்று. வாழும் நிலப் பகுதிகளுக்கு ஏற்றவாறும், அமைத்துக் கொள்ளும் வாழ்வியல் அமைப்புக்களுக்கு ஏற்றவாறும் சிறப்புக் கல்விமுறை அமையவேண்டும். உலகம்-நாடு ஆகியனவற்றைத் தழுவி வளர, வாழ பொதுக் கல்வியும் தேவை. தேர்வுக்குத் தயார் செய்யும் வினா-விடைகளை மனப்பாடம் செய்யும் கல்வி, நாட்டுக்கும் சமூகத்திற்கும் பயன்தராது.

கல்விக்குரிய இலக்கணம்

"மனிதன் எப்போது தன்னுள் இருக்கும் அளவற்ற சக்தியை உணர்ந்து இயற்கையாகச் சுய அறிவையும் புதிய பெரிய எண்ணங்களையும் அடைகின்றானோ அப்போதோ அவன் கல்வி கற்றவனாகின்றான்" என்பது கல்விக்குரிய இலக்கணம். இன்றைய கல்வி முறையில் பெரும்பாலோர் மானுடத்தின் ஆற்றலையே உணர்வதில்லை. சுயசிந்தனை, சுய அறிவு என்பது காணக் கிடைக்காத ஒன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. இன்றைய கல்வி முறையில் புதிய பெரிய எண்ணங்கள் தோன்றவும் வளரவும் வாய்ப்பில்லை! பழங் காலத்திலும் சாதி முறைகள் இருந்தன. வேறுபடு சமயங்கள் பல இருந்தன. ஆனால், நெகிழ்ந்து கொடுக்கும் இயல்புடை யனவாக அவை இருந்தன. இன்றோ கல்வி பெறும் முறை, கற்கும் முறை அனைத்திலும் வேறுபாடுகள் விரவி, சாதி முறைகள் கெட்டித் தன்மை அடைந்து வருகின்றன.

நுண்மாண் நுழைபுலமில்லா அறிஞர்கள் சமுதாய உணர்வு இல்லாத அறிஞர்கள் உருவாக்கிய தீமையே சாதி, தீண்டாமை முதலியன. இவர்களுடைய மூளை வளர்ந்திருந்தது. இதயம் விரிவடையவில்லை. இத்தகைய அறிஞர்கள் ஆதிக்கக்காரர்களிடம் சோரம் போனார்கள்! அடிமையானார்கள். ஆதலால், ஒருசாராரின் ஆதிக்கத்தை - நிலப்பிரபுத்துவத்தைக் காக்கத் துணை போனார்கள்! அதனாலன்றோ துரோணர், ஏகலைவனுக்கு வில்வித்தையாகிய கல்வியை 'ஏகலைவன்’ என்ற ஒரே காரணத்திற்காகக் கற்றுத்தர மறுத்துவிட்டார்! ஆனால், ஏகலைவன் ஆசிரியரைப் பாவனை செய்து கற்றுக்கொண்டு விட்டான். இதிலிருந்து புலனாகும் ஒரு செய்தி, கல்விக்கு ஆசிரியர் இருந்தால் நல்லது. இல்லையானாலும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்பதாகும். இந்த முறையின் வளர்ச்சிதானே இன்று குறிப்புக்கள் (Notes) மூலம் கற்றுத் தேர்வது! அதுமட்டுமல்ல. அறிவுச்சேதம் ஏற்படக்கூடிய அளவிற்குக் குறைந்த மதிப்பெண்களில் தேர்ச்சி அளித்தல், இலவச மதிப்பெண்கள் அளித்துத் தேர்ச்சி அளித்தல் ஆகிய முறைகள் நடைமுறைக்கு வந்து விட்டன! இவையெல்லாம் கல்வியின் தரத்தைக் குறைப்பது மட்டுமல்ல, மானுடத்தின் எதிர்கால வரலாற்றையே பாழாக்கும் என்பதை உணரும் நாள் எந்நாளோ?

ஆரம்பக் கல்வி

இன்றைய நாளில் உயர்நிலைக் கல்விக்கு அதிக முதலீடு செய்கிறோம். அதாவது அடிப்படையைக் கவனிக்காமல் மேல்நிலைக் கட்டடங்களைக் கட்ட முயற்சி செய்கின்றோம். இன்று ஆரம்பக் கல்வி - அதுவும் கிராமப் புறங்களில் ஆரம்பக் கல்வி படுமோசமாகி வருகிறது. ஒரு குழந்தை, கருவுற்ற எட்டாவது மாதம் முதல் எட்டாவது வயது வரை சீராகப் பேணப் பெற்றால், கல்வி வாயில்கள் வழங்கப் பெற்றால் எந்தக் குழந்தையும் வளரும்; நன்றாக வளரும்; அறிவாளியாக வளரும். ஆரம்பப் பாடசாலைக் கல்வி ஐந்தாவது வயதிலிருந்து தொடங்குகிறது. கிராமப் புறங்களில் 2-5 வயதுவரை குழந்தைகளுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பில்லை. நகர்ப்புறங்களில் மாண்டிச்சோரி பள்ளி, கிண்டர்கார்டன் என்று இருக்கின்றன. கிராமப்புறக் குழந்தைகளுக்கு ஆரம்பப் பள்ளிக்கும் முற்பட்ட முதல்நிலை ஆரம்பக் கல்வி நிலையங்கள் (Pre Elementary School) திறக்கவேண்டும். இப்போது இயங்கிவரும் முதலமைச்சர் சத்துணவு மையங்களை அப்படியே முதல்நிலை ஆரம்பப் பாடசாலையாக அமைக்கலாம். நிதிப்பொறுப்பு அதிகம் வராது. அடுத்து ஆரம்பப் பாடசாலைகளில் இன்றுள்ள ஆசிரியர், மாணவர் விகிதங்கள் 1:60, 70, 90, 100 என்ற அளவில் எல்லாம் இருக்கின்றன. இங்ஙனம் ஆசிரியர் - மாணவர் விகிதம் இருப்பது கல்வியியல் நெறிமுறைக்கு முரணானது. 1:35 விகிதம்தான் இருக்கவேண்டும். அதுபோலவே, ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுடைய தரத்தையும் கூட்ட வேண்டும்.

ஆரம்பக் கல்வியில்தான் மாணவர்-ஆசிரியர் இருவகையினருக்கும் உள்ள பொறுப்பு அளவிறந்தது. இந்தக் கல்விப் பருவத்தில்தான் மாணவர்கள் எழுதும் பாங்கு, கூர்ந்து பார்க்கும் பார்வை, கவனத்துடன் கேட்டல், தேடுதல், சிந்தித்தல், படிக்கும்முறை, நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுதல் ஆகிய கற்கும் துறைகள் பலவற்றையும் கற்றுக் கொள்ளவேண்டிய நிலை உண்டாகிறது. கற்கும் நெறிமுறைகளில் கைவரப்பெற்ற மாணவர்கள் கல்வித் துறையில் பிற்காலத்தில் விரைந்து முன்னேறுவர். ஆதலால், ஆரம்பக் கல்வியில் பழக்கங்கள் படிந்து வழக்கங்களாக வளரக்கூடிய பருவத்தில் அதிகக் கவனம் தேவை. ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ஒருவர் ஒவ்வொரு மாணாக்கனாகக் கவனித்துக் கற்பிக்க வேண்டும் என்பதை நினைவிற்கொள்ளவேண்டும்.

ஆரம்பக் கல்வியில் முதல் இரண்டு வகுப்புப் பாடப் புத்தகங்களின் எண்ணிக்கை குறையவேண்டும். புத்தகம் இல்லாமல் இருந்தால்கூடக் குறையில்லை. நிறைய கல்விச் சாதனங்கள், கற்பிக்கும் கருவிகள் வழங்கப் பெறுதல் வேண்டும். குழந்தைகள் தங்கள் சக்திகள் அனைத்தையும் உபயோகிக்கும் தகுதியுடையவர்களாகச் செய்யும் கல்வி வழங்கப் பெறவேண்டும். ஆரம்பக் கல்வி நிலையில் உச்சரிப்பு கற்கும் பாங்கு, நூல்களைப் படிக்கும் முறை. அறிவைத் தேடும் பழக்கம், நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளல், சிந்தித்தல், கையெழுத்துப் பழகுதல் முதலிய பயிற்சிகள் முழுமை பெறுதல் வேண்டும். இதற்கேற்ற பருவம் மழலைப் பருவமே!

எத்தகைய கல்வி வேண்டும்?

நாம் எத்தகைய கல்வியை வழங்கவேண்டும்? கல்வியென்பது தெரியாததைத் தெரியச் செய்வது மட்டுமன்று; கற்றலுடன் வாழ்ந்திடவும், ஒழுக்கத்தில் நின்று ஒழுகச் செய்திடவுமாகும். கல்வி ஏட்டுக் கல்வியாக மட்டும் அமைந்துவிடக்கூடாது. செய்ம்முறைக் கல்வியும் அவசியம். உழைப்புக் கல்வியும் கூடத் தேவை. ஆதலால் குழந்தைப் பருவத்திலேயே உழைப்புப் பாடங்களில் தன் செயல்களை முன்கூட்டியே திட்டமிடும் திறமையையும் அதற்கான கருவிகளைத் தேர்ந்தெடுப்பதையும் கற்றுக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.

சாதாரணமாகச் சிலர் நம்புகின்றனர். நல்ல காரியங்களைச் செய்வதே பெருமை என்று! அப்படியன்று! நல்ல காரியங்களையும்கூட அச்சத்தின் காரணமாகவும், பரிசு-புகழ் முதலியன பெறக் கருதியும் செய்யலாம். ஆதலால், நல்ல காரியங்கள் செய்வது மட்டும் பெரிதன்று. நல்ல காரியங்களைச் செய்வதில் உண்மையான ஆர்வம் இருக்க வேண்டும். நல்ல காரியங்கள் செய்வதற்கு வேறு எந்தக் காரணமும் இருக்கக்கூடாது. "வீடும் வேண்டா விறல்” இதற்குப் பொருந்தும். நல்லது, நல்லதுக்காகவே! வேறு எதற்கும் அல்ல என்ற கடைப்பிடிப்பே தேவை.

கல்வியின் பயன்

காப்பியத்துறையில் கம்பன் ஒரு திருப்பு மையத்தைக் காட்டுகிறான்! அது என்ன திருப்பு மையம்? கம்பனுக்கு முன் வாழ்ந்தவர்கள் வெற்றிகளை அரசனுக்கு ஆக்கினார்கள். புராண ஆசிரியர்கள் வெற்றிகளைக் கடவுளுக்கும் தேவர்களுக்கும் ஆக்கினார்கள்! ஆனால், கம்பன், வெற்றியை மானுடத்திற்கு ஆக்கினான்! "மானுடம் வென்றதம்மா!” என்று பாடினான்! ஆம்! மானுடம் வெற்றிக்குரியது! கல்வித் துறைகள் பலப்பலவாக இருக்கலாம். ஆனாலும் கல்வியின் நோக்கம் ஒன்றே! அதாவது கல்வியின் நோக்கம் மனிதனை உருவாக்குவதேயாம்! கல்வியின் விழுமிய பயன் சிந்தையில் தெளிவு, அறிவு; ஆற்றல்; மனிதப் பேராற்றல்; நன்னெறியில் நின்றொழுகுதல் ஆகியன கல்வியின் பயன். நாகரிகத்தைக் கற்றுத் தருவதும் கல்வியாகும். கல்வி என்பது வாழ்க்கை முழுதும் தொடர்ந்து கற்க வேண்டியது. ஏன்? கல்வி நிறுவனங்கள் எப்படிக் கற்பது என்ற கற்கும் முறையைக் கற்றுக் கொடுப்பனவே தவிர, கல்வியைக் கற்றுத் தருவன அல்ல. கல்வியைக் கற்றுத் தரவும் இயலாது. வாழ்நாள் முழுதும் கற்கவேண்டும். தொடர்ந்து கற்கவேண்டும். தொடர்ந்து கற்றாலும் கல்வியில் மட்டும் முற்றுப்புள்ளி இடல் இயலாது. எப்போதும் கவனம் கல்வியின்பால் இருக்கவேண்டும்.

கல்வி, இருளகற்றும்-அறியாமையை அகற்றும் - கைவிளக்கு. கற்ற அறிவுடைமை என்றார்கள். அறியாமை என்றால் என்ன? பலர் நினைப்பது போல அறியாமை என்பது "ஒன்றும் தெரியாமை"யன்று. அறியாமை என்பது ஒன்றைப் பிறிதொன்றாக மாறுபட அறிதலும், உணர்தலுமேயாகும். அதாவது, நிலையானவற்றை நிலையல்லாதன என்றும், நிலையல்லாதனவற்றை நிலையாயின என்றும், நன்மையைத் தீமை என்றும், தீமையை நன்மை என்றும் அறமல்லாதனவற்றை அறமென்றும் முறைபிறழ உணர்தலே அறியாமை. திருக்குறள் அறிவைக் கருவியென்று பாராட்டுகிறது. தன்னையும் தன்னைச் சார்ந்த சமூகத்தையும் துன்பத்தினின்று பாதுகாக்கும் கருவியே அறிவு என்று திருக்குறள் கூறுகிறது.

"அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்”

என்பது திருக்குறள்.

இன்று வாழும் நம்முடைய சூழலில் கல்வி கற்றவர்கள் ஏராளமானோர். ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக நம்மை வருத்தும் வறுமை அகன்றபாடில்லை! சாதிப் புன்மைகள் அகன்றபாடில்லை! ஏன் இந்த அவலம்? அறியாமையை அகற்றவும் அறிவை வளர்த்துக் கொள்ளவும் கல்வி பயன்படவில்லை. வாழ்தலுக்குக் கல்வி துணை செய்யவில்லை. கற்ற நூற் கருத்தின்வழி மனிதன், குற்றங்களினின்றும் விடுதலை பெறவேண்டும். கற்ற நூற்கருத்தை வாழ்க்கையில் சோதனைப்படுத்தவேண்டும். அவ்வழி அறிவு பெறுதல் வேண்டும். எதிர்மறைச் சிந்தனைப் போக்கில், தீமையைச் சிந்தனை செய்யும் போக்கில் கல்வி அமையக்கூடாது. மானுடத்தில் வெற்றிக்கும் நல்வாழ்க்கைக்கும் எதிர்மறைச் சிந்தனைப் போக்கு, இம்மியும் உதவி செய்யாது. இன்றைய கல்விமுறை எதிர்மறுப்புடையதாக அமைந்துள்ளது. இதனால், இளைஞன் ஊக்கத்தையும் ஆர்வத்தையும் இழக்கிறான். கற்பிக்கும் முறையில்கூட மாணவனை எதிர்மறையில் அணுகக்கூடாது. ஓர் இயந்திரம் ஓடவில்லையென்றால் அந்த இயந்திரத்தை அடித்துப் பயன் என்ன? அந்த இயந்திரத்தில் இருக்கும் பழுதைக் கண்டுபிடிக்கும் வகையில் சிந்தித்து முயற்சிசெய்ய வேண்டியிருக்கிறது. இதுவே சரியான கல்வி போதனையாகும்.

தாய்மொழிக் கல்வி

இன்றைய கல்வி முறையில் அதுவும் கிராமப்புறத்தில் தாய்மொழிக் கல்வி தரமானதாக இல்லை. நகர்புறத்தில் ஆங்கில மொழிவழிக் கல்வியே பரவலாக நடைமுறையில் உள்ளது; ஆங்கிலமொழிவழிக் கல்வியே எங்கும் ஆதிக்கம் செலுத்துகிறது. தமிழர் அறிஞராக வளராமல், தமிழ் எப்படி வளரும்? தமிழில் கற்பித்தால்தான் தமிழனின் அறிவு வளரும். நாற்பது ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வி இயக்கம் நடைபெற்று வந்துள்ளது. இன்றும் நடைபெற்று வருகிறது; ஆயினும் மாற்றம் இல்லை. மாற்றம் ஏற்படாதது மட்டுமல்ல. தாய்மொழிவழிக் கல்விச் சிக்கல், இன்று மொழிச் சிக்கல் நிலையிலிருந்து கைமாறி சாதிச் சிக்கலாக, சமூக-பொருளாதாரச் சிக்கலாக உருமாற்றம் பெற்றுள்ளது. துறைதோறும் தமிழ் பயிற்றுமொழியாக இடம்பெற்று விட்டால் ஆங்கிலத்தை ஒருமொழியாகக் கற்பதில் தவறில்லை.

இன்று ஆங்கிலத்திற்கு, அளவுக்கு மீறிய முக்கியத்துவம் தருவதன் காரணமாகச் சிந்தனையும் அறிவும் பாதிக்கப்படுகின்றன. சிந்தனையாற்றலையும் அறிவையும் தராத கல்வி எதற்கு? இத்தகைய பரிதாபகரமான தீமையை விலை கொடுத்து வாங்கவேண்டுமா? ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறச் செலவழிக்கும் காலமும் மூளை உழைப்பும் அதிகமானவை. அப்படிச் செலவழித்தாலும் "தேர்ச்சி" பெற முடியவில்லை. தாய்மொழியில் - தமிழில் பயின்றால் எளிதில் குறைந்த நேரத்தில், குறைந்த உழைப்பில் தேர்ச்சி பெற முடியும்! ஆதலால், எவ்வளவு விரைவில் தாய்மொழிக் கல்வி இயக்கத்திற்கு மாறுகிறோமோ அவ்வளவுக்கு நமது சந்ததியினருக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது. ஆதலால், தாய்மொழியைப் போற்றுங்கள்! அவ்வழி மடமையைக் கொளுத்துங்கள்! தாய்மொழி வழி உள்ளக் கல்வியையும் உலகக் கல்வியையும் ஒருசேரக் கற்றுக் கொள்ளுங்கள்! உண்மைக் கல்வி நிறைவாகும்.

எண்ணும் எழுத்தும்

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு"

என்பது திருக்குறள்.

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்"

என்பது அவ்வையார் வாக்கு. அதாவது கணிதமும், இலக்கியமும் கண்ணெனப் போற்றப்பெறும் என்பதாகும். இவ்விரண்டில் இலக்கியம் கற்கும் முயற்சி பரவலாகக் காணப்படுகிறது.

இந்த நூற்றாண்டுக்கு ஏற்ப அறிவியலும் கற்க வேண்டும். அறிவியலில் புதிய நூல்களையும் இலக்கியங்களில் மிகப் பழமையானவற்றையும் கற்கவேண்டும். இலக்கியங்களில் பழமையான இலக்கியங்களில் உள்ள தரம், புதிய இலக்கியங்களில் காண்பது அரிதாக உள்ளது. வாழ்க்கை இலக்குகளின் தடம்கூட இல்லாதவைகளாகப் புதிய இலக்கியங்களில் பல வந்துவிடுகின்றன. கம்பனின் இராம காதை, சேக்கிழாரின் பெரியபுராணம், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம், திருவள்ளுவரின் திருக்குறள் இவைகளுக்கு ஒத்த புகழ்வாய்ந்த இலக்கியங்கள்! அவைகளுக்குப் பின் தோன்றவில்லையே! பாரதியும்-பாவேந்தனும் இதற்கு விதி விலக்கானவர்கள். மாணவர்கள் இலக்கியங்களை ஆர்வத்துடன் படிக்கும்படித் தூண்டவேண்டும்.

கிராமப்புறங்களில் கணிதம் கற்கும் முயற்சி போதாது. வாழ்க்கைக்குக் கணிதக் கல்வி இன்றியமையாதது. எண், எழுத்து இவ்விரண்டிலும் எண் முதன்மைப்படுத்தப்படுவதற்குக் காரணம் யாது? எண் தொடர்பான கணிதக் கல்வி, கணித அறிவு வாழ்க்கையின் இன்றியமையாத் தேவை. வாழ்க்கையை வாழுங் காலத்தை நெறிப்படுத்திக் கொள்ள, நலமுடன் வாழ, வாழ்க்கையின் மிகப்பெரிய சக்தியாக விளங்கும் பொருளியலை ஆண்டனுபவிக்கக் கணிதப் பயிற்சி தேவை. வாழ்க்கையின் அடிப்படைத் தேவை கணிதம். வாழ்க்கையில் செழிப்பும் பயன்பாடும் உளவாக்குவது எழுத்து; இலக்கியம்! ஆதலால் எண்ணை முதன்மைப்படுத்திக் கூறியது உணரத்தக்கது. அறிவியல், தொழில், நிதி ஆகிய வாழ்க்கையைத் தழுவிய பல்துறைகளையும் கற்க-சிறப்புறக் கற்கக் கணிதக் கல்வி இன்றியமையாதது. ஆதலால் கணிதக் கல்வி ஊக்குவிக்கப்படுதல் வேண்டும்.

மானுடம் கல்வியில் வளர்ந்து வாழும் நிலையில் கல்வித்துறை பலவாக விரிவடைகிறது. விரிவு, வாழ்க்கை அனுபவத்திலிருந்தும் புறநிலை ஆய்வுகளிலிருந்தும் நிகழ்கின்றன. இங்ஙனம் கல்வி இயல், இசை, நாடகம் என முதல் நிலையில் விரிவடைந்தது. பின் இயற்பியல், உயிரியல், வேளாண்மை இயல், கால்நடையியல், வேதியியல் என்றெல்லாம் வளர்ந்து வருகின்றது. விரிவடைந்து வருகின்றது. மேலும் விரிவடையும். இங்ஙனம் கல்வி, பல்வேறு துறைகளாக வளர்ந்தாலும் அவற்றுள்ளும் அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் நாம் சிறந்து விளங்குவது நாட்டிற்கு நல்லது. இன்று உலகத்தை நாளும் இயக்கி வளர்த்து எடுத்துச் செல்லும் பொறுப்பை அறிவியல் சார்ந்த தொழில்நுட்பமே செய்து வருகிறது. இனி எதிர்வரும் காலங்களில் அறிவியல் சார்ந்த தொழில் நுட்பத்திற்குரிய இடம் நிலையானது; பயனுடையது; சிறப்புடையது.

தொட்டி மீன்கள்

உணர்வுபூர்வமான சமுதாய அமைப்புத் தோன்றுதலுக்குக் காரணமாகவும் கல்வி அமைகிறது. மனித சமுதாய வளர்ச்சிக்குக் கல்வி அடிப்படை சமுதாய நலனுக்குரிய குணங்கள் தோன்றவும் வளரவும், பண்பு இடம் பெறவும் மனிதன் பெறும் கல்வியே துணை செய்கிறது. தான் வாழும் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு முன்னேறத் துணை செய்வது அவன் பெறும் கல்வியேயாகும். "உலகம் தழீஇயது ஒட்பம்" என்று திருக்குறள் கூறும். கடந்த பல நூறு ஆண்டுகளாகவே நமது நாட்டில் சமுதாய உணர்வு மங்கி மறைந்து வந்துள்ளது. இந்தக் குறை படித்தவர்களிடம் மிகுதியாக இருந்தது; இருந்து வருகிறது. மெத்தப்படித்தவர்கள் தான் மிகவும் கெட்டுப்போயினர். இன்று அந்தக் குறை வளர்ந்து பெரும்பாலோர் தொட்டி மீன்களாகிவிட்டனர். அதாவது தொட்டியில் வளர்ந்த மீன்கள் கடலில் விடப்பெற்றாலும் தொட்டியின் அளவுக்குத்தான் நீந்திச் சுற்றும்; தன்னுடைய நீந்தி வாழும் பரப்பளவை விரிவு செய்து கொள்ளாது. இன்றைய மனிதர்களும் சாதி, மதம், கட்சி என்ற எல்லைகளைக் கடந்து ஊர், நாடு, உலகம் என்றோ சமூகம், சமுதாயம், மானுடம் என்றோ தன்னுடைய இதயத்தை விரிவுபடுத்திக் கொள்ள மறுக்கின்றனர். இந்தத் தீமை கல்வி உலகத்திலிருந்து முற்றாக நீக்கப்படவேண்டும். வளரும் தலைமுறையினர்-மாணவர்கள் சமூகக் கல்வி பெற்றாக வேண்டும். மாணவர்கள் சமூகத்தின்-மானுடத்தின் ஓருறுப்பாகத் தங்களை நினைத்துக்கொள்ளவேண்டும். பாரதிதாசன் வார்த்தையில் சொன்னால் மானிட சமுத்திரத்தில் சங்கமமாகவேண்டும்.

"அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைத்துகொள்! உன்னை சங்கமமாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!”

என்பது பாரதிதாசன் கவிதை வரிகள்.

வரலாற்றுக் கல்வியில் மாறுதல் வேண்டும்

இன்று கல்வி கற்கும் பல்வேறு படிகளிலும் "வரலாறு” கற்பிக்கப்படுகிறது என்பது உண்மை. ஆனால் வரலாறு எப்படிக் கற்றுக் கொடுக்கப்படவேண்டுமோ அப்படிக் கற்றுக் கொடுக்கப்படவில்லை. சுரண்டல் பொருளாதாரச் சமுதாய அமைப்பு, பிற்போக்குத்தனம் ஆகியன வரலாற்றை உள்ளவாறு கற்க முடியாமல் தடை செய்கின்றன.

வரலாறு என்பது அரசர்களைப் பற்றியனவும், போர்களைப் பற்றியனவும் மட்டுமன்று. அரசர்களைச் சுற்றி மட்டும் எழுதுவது எப்படி வரலாறு ஆகமுடியும்? மக்களின் சிந்தனைப் போக்கையும், மக்களின் வாழ்க்கைப் போக்கையும் கூர்ந்து நோக்கி எழுதப்படுவதுதான் வரலாறு. சான்றாக இந்தியாவில் மொகலாய ஆட்சி அமைத்த பாபரின் படையெடுப்பு வரலாற்றில் அளவுக்கு அதிகமாகவே பேசப்படுகிறது. ஆனால், இந்தியாவுக்கு முஸ்லீம்கள் படையெடுப்பாளர்களாகத்தான் வந்தார்களா? அல்லது வர்த்தகம், கலாசாரப் பரிவர்த்தனை அடிப்படையில் வந்தார்களா? என்று தெரியாது. இந்தியாவிற்கு முஸ்லீம்கள் முதன் முதலில் வியாபாரத்துக்கே வந்தார்கள்; கலாசாரப் பரிவர்த்தனை நடந்தது. எனவே, இந்திய முஸ்லீம்களின் வாழ்க்கைக்கும் படையெடுத்து வந்தவர்களான கோரி, பாபர் முதலியோருக்கும் சம்பந்தம் இல்லை என்பது அறிஞர்கள் கருத்து. இது வரலாற்றில் பேசப்படவில்லை.

தீண்டாமையை எதிர்த்து வழிபாட்டுரிமை கேட்டு கி.பி. ஆறாம் நூற்றாண்டில் திருநாளைப்போவார் போர் தொடுத்திருக்கின்றார். இந்தச் செய்தி, தமிழ்நாட்டு வரலாற்றில் இடம் பெறவில்லை. திருநாளைப்போவார் வரலாறு, வரலாற்றில் எழுதப்படாதது மட்டுமன்று. பின்வந்த இலக்கியங்களிலும் கூடப் பரவலாகப் பேசப்படவில்லை. ஏன்? உயர் சாதி மனப்பான்மையில் இருட்டடிப்புச் செய்துள்ளனர். திருநாளைப்போவார் வழிபாட்டுரிமைக்காக ஒரு போரே நடத்தியிருக்கிறார். அன்று கொழுத்து வளர்ந்திருந்த புரோகிதர்களின் ஆதிக்கம் திருக்கோயிலில் எழுந்தருளியிருந்த கடவுளைக் கட்டுப்படுத்திவிட்டது போலும்! திருப்புங்கூரில் கடவுளால் கூட நந்தனாரைத் திருக்கோயிலுக்குள் அழைத்துக் கொள்ள முடியவில்லை. இறைவன் நந்தனாரைக் காணப் புரோகிதர்களின் கட்டுக்காவலைக் கடந்து வெளியே வர இயலவில்லை. நந்தியைத்தான் சற்று விலகும்படி சொல்ல முடிந்தது. இந்த வரலாறு அப்படியே கடவுளைப் பாதிக்குமா? பாதிக்காது. சமுதாயம் கடவுள் பெயரால் செய்யும் கொடுமைகளின் நிலை! திருநாளைப்போவார் வரலாறு உள்ளவாறு நமது நாட்டுக் கல்வித் திட்டத்தில் இடம்பெற்றிருந்தால் தீண்டாமை திருநாளைப்போவார் காலத்திலேயே போயிருக்கும்! அம்பேத்கார், அண்ணல் காந்தியடிகள் ஆகியோர் போராட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. இன்றையத் தலைமுறையினர் ஒரு குல முறையில் அமைதியுடன் வாழ்ந்திருப்பர். ஆரம்பக் கல்வித் திட்டத்தில் தீண்டாமை விலக்கு சாதி ஒழிப்பு ஆகியன கற்றுக் கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இத்தகைய பாடங்கள் முறையாகக் கற்பிக்கப் பெறுவதில்லை; கற்பதும் இல்லை. பல ஆண்டுகளாக,

"சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையில் - மேதினியில்,
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி”

என்ற பாடல் பாடத் திட்டத்தில் உள்ளது. இந்தப் பாடலை முறையாகப் பயிற்றுவித்தால் மாணவர்களுக்கு இந்த உலகில் சாதிகள் இல்லை! இரண்டே இரண்டு சாதிகள்தான்! என்பது உணர்வாக மாறியிருக்கும். இவையிரண்டு சாதிகளும் கூட இயற்கையல்ல! கடவுளின் படைப்புமல்ல! மனிதனின் படைப்பேயாம். உள்ளபடி இரண்டே சாதிதான்! அவை மற்றவர்களுக்கு உதவி செய்து அவர்கள் மகிழ மகிழ்பவன் உயர்சாதியினன்! மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழும் மனமிலாதான் இழி சாதியினன் என்று இந்தப் போக்கில் இந்தப் பாடல் கற்பிக்கப்பட்டிருந்தால் என்றோ நம்நாட்டில் திண்டாமை அகற்றப்பட்டிருக்கும்! ஆலய நுழைவுச் சட்டமே வேண்டியிருந்திருக்காது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப் பெற்றது. உயர்நிலைக் கல்வியில் ஜமீன்தாரி முறை பற்றிப் பேசப்படுகிறது. ஆனால் ஜமீன்தாரி முறை அறிமுகப்படுத்தியதன் மூலம் விவசாயிகள் அடிமைகளாக்கப் பெற்ற செய்தி சொல்லப் பெறவில்லை. ஆதலால், மக்களின் வாழ்நிலைப் போக்குகளே வரலாற்றுக்கு கரு. இந்தியாவில் வழி வழியாகப் பின்பற்றி வந்த கல்வியில் "இந்த இரண்டு சாதி முறை” உயிர்ப்பிக்கப்பெற்றுள்ளது என்ற துன்பியல் செய்தி யாருக்குத் தெரியும்? ஆதலால், மக்களை மையமாகக் கொண்ட வரலாறு கற்பிக்கப் பெறுதல் வேண்டும்.

பொருளாதாரக் கல்வியில் புதுமை தேவை

மாமுனிவர் மார்க்ஸ் எழுதிய மூலதனம் என்ற நூல் மனிதகுல வரலாற்றினைக் கவனமாகக் கற்றதன் பயனேயன்றோ! இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு முரண்பாடுகள்? பிரிவினைகள்? பொருளாதார ஏற்றத் தாழ்வுகள்? இந்தத் தவறுக்குக் காரணம் வரலாற்றுப் போக்கில் சமுதாயத்தில் ஏற்பட்ட ஆதிக்கம்தான்! "வல்லாண்மையுடையது வாழும்” என்ற நியதி, ஒழுக்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான்! வலிமையில்லாததற்கு வலிமை தருவது எப்போது? வாழ வைப்பது எப்போது? வல்லாண்மை உடையது வாழும் - இது இயற்கையின் நியதி! வல்லாண்மை இல்லாததும் வலிமை பெறமுடியும்; வாழ முடியும் என்ற சமூக நீதி வெற்றி பெறத் தக்க கல்வி, மாணவர்களுக்கு வழங்கப் பெறுதல் வேண்டும்.

இன்று இந்தியா கூட 37 ஆண்டுகளுக்குப் பிறகு, தான் வகுத்துக் கொண்ட - எடுத்துக் கொண்ட பொருளாதாரக் கொள்கையிலிருந்து தடம் மாறிச் செல்கிறது. அதாவது, நமது நாட்டின் பொருளாதாரக் கொள்கை, கலப்புப் பொருளாதாரமாகும். அதாவது நமது அரசின் பொருளாதாரக் கொள்கை தனியாருக்கு விரோதமானது அல்ல. ஆனால் அரசு, பொதுத்துறையை, கூட்டுறவுத் துறையை ஊக்குவித்து வளர்த்து ஆக்கம் சேர்க்கவேண்டும் என்பதாகும். இன்று இந்திய அரசு புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரால் தனியார் துறைக்கு அதிக ஊக்கம் தர எண்ணியுள்ளது. எப்படியிருந்தாலும் தனியார்துறை இலாப நோக்குடையதுதான்! அதில் இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயந்திரமயப்படுத்துவார்கள். வேலை வாய்ப்புகள் குறையும். பல நூறாயிரம் இளைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடும் நிலையில் இது சரிவருமா? அதுபோலவே நுகர்வோரின் நலங்கருதாமல் விலையை ஏற்றுவார்கள். இந்த விலைக் கொள்கை பெருவாரியான மக்களைப் பாதிக்கச் செய்யும். அதுபோலவே, திறந்த வெளிச் சந்தையின் மூலம் வியாபாரப் பொருளாதாரம் வளரும். ஆனால், உற்பத்திப் பொருளாதாரம் வளராது. பணப்புழக்கம் இருக்கும். ஆனால் அது சொத்தாக மாறாது. இது வளரும் நாட்டுக்கு ஒத்து வருமா? இந்தச் சிந்தனை இன்று உயர் கல்வியில் பொருளாதாரம் படிக்கும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறதா? மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள்? புதிய பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றி இன்றைய பொருளாதாரப் பேராசிரியர்கள், மாணவர்கள் பரவலாக விவாதிக்கவில்லையே! இதற்கெல்லாம் உயர்தரக் கல்வி வழிசெய்ய வேண்டாமா?

சுரண்டும் பொருளாதார அமைப்பு உழைப்பாளர் பங்கைத் திருடி மூலதனக்காரர்களாகி உலகியல் நடத்திவரும் முதலாளிகளிடம் விழிப்பாக இருக்கவேண்டும் என்று இன்னமும் வரலாறு கற்றுத்தர மறுக்கிறதே! இந்த முதலாளித்துவ ஆதிக்கப் போட்டியால் உலகத்தில் எத்தனை எத்தனை கொடிய போர்கள்? உயிர் அழிவுகள்? பொருட் சேதங்கள்? இந்த அழிவு வேலையில் படித்தவர்கள், மதங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் யார் எவர் என்ற வித்தியாசம் இல்லாமல் ஈடுபட்டனர். இன்றைய இளைஞர் களுக்குப் போர் மீது கடுமையான எதிர்ப்புணர்ச்சியைத் தூண்டி வளர்க்கவேண்டும். அவர்களை பாவேந்தன் பாரதி தாசன் பாடிய

"புதியதோர் உலகம் செய்வோம்!
கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்!"

என்ற பாடலை வாழ்க்கையின் இலட்சியமாக எடுத்துக் கொள்ளும்படி செய்யவேண்டும்.

மெய்ப்பொருளியல் கல்வி தேவை

இன்றுள்ள நமது சிக்கல்களுக்கு எல்லாம் மூலகாரணம் நாம் மெய்ப்பொருளறிவை இகழ்ந்து இழந்தமைதான். அதோடு பகுத்தறிவு பெயரால் மெய்ப்பொருள் அறிவாகிய செம்பொருள் அறிவுக்கும்-மதத்திற்கும் உள்ள வேறுபாடுகளை உய்த்துணராமல் ஒட்டுமொத்தமாக இழந்தமை பரிதாபத்திற்குரியது. மதச்சார்பற்ற தன்மை என்ற கோட்பாட்டின் பொருள் புரிந்துகொள்ளாமல், கடவுள் நம்பிக்கை, மெய்ப்பொருளறிவு ஆகியவற்றை அவசரப்பட்டு கல்வியிலிருந்து விலக்கியதுதான் காரணம். நாம் பூத, பெளதிக அறிவை வளர்த்தும் பொருளாதார அறிவை வளர்த்தும் இவையெல்லாவற்றையும் ஆளும் பேறுபெறும் மனிதனை அவனுடைய ஆன்மாவை-ஆன்மாவின் தரத்தை வளர்த்து உயர்த்தத் தவறிவிட்டால் இந்த உலகம் எப்படி இருக்கும்? சிதறுண்டு போன சோவியத் இதற்கு ஓர் உதாரணமாகும். ஆதலால், மெய்ப்பொருளியல் கல்வித் திட்டத்தில் இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு அறிவையும் ஞானத்தையும் வழங்கவேண்டும். மெய்ப்பொருள் கல்வித் தேர்ச்சியால்தான் ஆன்மநேய ஒருமைப்பாடு தோன்றும்! இன்றைய உலகத்திற்கு ஆன்ம நேய ஒருமைப்பாடு தேவை! ஆதலால், இளமைக் காலம் தொட்டே மெய்ப்பொருளியல் கல்வி கற்கவும் தமது பொறி புலன்களைப் பக்குவப்படுத்தி வளர்த்துக் கொள்ளவும், சமூகத்திற்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளவும் கற்றுக் கொடுக்கவேண்டும். ஆதலால் எல்லாக் கல்வி நிலையங்களிலும் இலக்கியம், வரலாறு, தத்துவம், இசை, கலை ஆகியன கற்பிக்கும் திட்டம் கட்டாயம் தேவை. வேறுபாடாற்ற ஒரு குலமே கடவுளின் சித்தம்.

இனிவரும் தலைமுறைக்குச் சிறந்த கல்வியை நாம் வழங்குவதற்குரிய முயற்சிகளை எடுத்துக் கொள்ளவேண்டும். வாழ்க்கையில் சற்றும் பயன்படாத செய்திகளை உருப்போடச் செய்யும் கல்விக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். எப்படியும் நமது சந்ததியினரை, அறிஞர்களாக்க நாம் முயலவேண்டும். அதற்கேற்ற கல்வியைத் தரவேண்டும். அறிவு பெறுவதிலும் வாழ்வதிலும் அக்கறையையும் ஆர்வத்தையும் காட்டத்தக்கவாறு கல்வி கற்பிக்கவேண்டும். ஐயத்தின் நீங்கித் தெளிந்த அறிவுடன் விளங்க, வாழக் கற்றுத் தரவேண்டும். நெடிய நோக்குடைய கல்வி கற்பிக்கவேண்டும்.

செய்வதன்மூலம் கல்வி

"செய்வதன்மூலம் கல்வி" என்பது ஒரு கொள்கை கல்வியின் பயனே செயற்பாடுதான். உடல், உள்ளம், ஆன்மா ஆகிய மூன்றையும் ஒருங்கே வளர்க்கும் கல்வி, செய்வதின் மூலம் கற்கும் கல்வியாகும். இன்று இந்தியாவை வருத்தும் மிகப்பெரிய சமூகக் கேடு, உழைப்பை அலட்சியப்படுத்தப்படுவதுதான். இந்த உலகத்தை இயக்குவதும் வளர்ப்பதும் உழைப்பேயாம். "அறிவு ஜீவிகள்," "உடலுழைப்பாளர்கள்" என்று இருவேறு உலகமாக இந்தியா பிரிந்து கிடக்கிறது. அறிவு ஜீவிகள் தங்கள் நலன்களை மட்டுமே கருதுகின்றனர். உழைப்பாளர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை. நாளும் வறுமையில் உழல்கின்றனர். இந்தநிலை மாறுவதற்குரிய கல்வி வழங்கப் பெறுதல் வேண்டும். மாணவர்களின் உழைக்கும் ஆர்வம் வளர்க்கப்பெறுதல் வேண்டும். முடிந்தால் உழைப்பின்மூலமே கல்வி கற்றுத் தரலாமல்லவா? இதுபற்றிப் பல்கலைக்கழகங்கள் எண்ணுதல் வேண்டும்.

வலிமையான அடிப்படை வேண்டும்

நம்முடைய கல்வித் திட்டத்திற்கு வலிமையான அடிப்படையை அமைக்கவேண்டும். அங்கனம் வலிமையான அடிப்படையை அமைப்பது எளிதன்று! கடினம்தான்! பகீரத முயற்சி தேவை. இந்த இலட்சியத்திற்காக நாம் அனைவரும் நமது செல்வம் உடல், உயிர், எல்லாவற்றையும் அர்ப்பணிக்கவேண்டும். எல்லாவற்றையும்விட நம்முடைய பணத்தையும் கல்வித் துறையில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும். இத்துறையில் நாம் செய்யும் முதலீடு அதிக அளவு பலமடங்கு திரும்பி வரும் என்பதை நாம் உணர்தல் வேண்டும். இன்று நாம் மதத்தின் பெயராலும் அரசியலிலும் செய்யும் முதலீடு அளவு, கல்வித் துறையில் குடும்பமும் சமூகமும் அரசும் முதலீடு செய்வதில்லை என்பது வருந்தத் தக்க உண்மையாகும். “இன்றைய பள்ளிகளே நாளைய நாடாளுமன்றத்தின் கருவறைகள்” என்பதை உணர்தல் வேண்டும். கற்றுத்தரக்கூடிய ஆசிரியப் பெருமக்களை முதலில் உருவாக்கவேண்டும். அவர்களுக்கு அனைத்து வகையிலும் சமூகத்தில் மிக மிக உயர்ந்த இடத்தைத் தரவேண்டும். தரமான சிறந்த கல்வியை வழங்கும் மகத்தான பொறுப்பு நம் முன்னால் இருக்கிறது.

நமது பல்கலைக் கழகங்கள் உயர் நோக்கங்கள் உடைய உயர் கல்வியை வழங்கவேண்டும். எதிலும் புதிய அறிவையும் உண்மையையும் தேடும் மனப்பாங்கை வளர்க்கவேண்டும். நாடுகள் வளர வளரத் தேவைகள் பெருகி வளரும். மானுடத்தின் வளரும் தேவைகளை ஈடுசெய்ய முயற்சி செய்வதே அறிவின் பயன் ஆக்கம்; ஆதலால், வளர்ந்து வரும் புதிய தேவைகளை ஈடுசெய்யும் முயற்சியே இன்று தேவை. இந்தப் போக்கிற்கேற்பப் புதியன கண்டுபிடிக்கும் முயற்சிகள் வளரவேண்டும். பழைய அறிவினை அறிந்து, பொருள் கண்டு வாழ்க்கையோடு இணைக்கவேண்டும். பழைய நம்பிக்கைகள் என்பன மூடத்தனமாகவே இருக்க முடியாது. அவற்றுக்கு ஏதாவது காரணம் இருந்தாகவேண்டும். அந்தக் காரணத்தைக் கண்டு வளர்ந்துவரும் புதிய வரலாற்றுடன் இணைக்கவேண்டும்.

இன்றைய இந்திய சமூகம் வேறுபாடுகள் மிக்குடையது. ஏற்றத்தாழ்வுகள் மிகவும் அதிகம். இன்று சமூக நீதி, அன்பு என்பன கிட்டத்தட்டப் பொருளற்ற சொற்களாகப் போய்விட்டன. இந்தக் கொடுமை சராசரி மனிதனிடத்தில் இல்லை! "மிக உயர்ந்த இடங்கள்” என்று சமுதாயம் எண்ணும் இடங்களே நெறியும் முறையும் இழந்து சமூக நீதிக்கு உலைவைத்து வருகின்றன. இன்று உயர்கல்வி கற்கும் மாணவர்களிடத்தில் சமுதாய வாழ்விலும் பொது வாழ்விலும் சமத்துவம் (Equality) சகோதரத்துவம் (Brother hood) சமூகநீதி (Social Justice) ஆகியவற்றின் மீது ஆவேசம் உண்டாகச் செய்து, இந்த உயர்ந்த கோட்பாடுகளுக்காகப் போராடும் குணத்தை உருவாக்கி வளர்க்கவேண்டும்.

இன்றையத் தலைமுறை மாணவர்கள், பல்கலைக்கழகக் கல்வி பெறும் மாணவர்கள் எக்கருத்தையும் ஆராய்ந் தறிந்து ஏற்கும் துணிவைப் பெறத்தக்க வகையில் பயிற்று விக்கப் பெறுதல் வேண்டும். ஓர் இளைய தலைமுறையை, புதிய வலிமையான வாழ்க்கையைக் கட்டுமானம் செய்யும் பணியைச் செய்ய உறுதி பூணுவோமாக!

***

ஆ. கல்விச் சீர்திருத்தம்

மதிப்புயர் நலஞ்சார்ந்த பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் அவர்களே! பேராசிரியப் பெரு மக்களே!

இன்று மாலை, “கல்விச் சீர்திருத்தம்” பற்றிச் சிந்தனை செய்ய வேண்டும். நமது நாட்டில் கல்விச் சீர்திருத்தம் என்று பேசத் தொடங்கினால், பல மணி நேரம் பேசுவதற்குச் செய்திகள் உண்டு, ஆயினும் காலத்தின் அருமை கருதிச் சில - செய்திகளை - அலையும், தங்களுடைய கவலைபடர்ந்த நினைவில் இருப்பவைகளை நினைவூட்டுவதே இந்தப் பேச்சின் நோக்கமாகும்.

வாழ்க்கையின் சாதனம்

மானுட வாழ்க்கை உயர்ந்தது. அதுவும் ஒரே ஒரு தடவைதான் வழங்கப்படுகிறது. ஆதலால், இந்தப் பிறப்பிலேயே மானுடத்தின் பயனை அடைதல் வேண்டும். "கல்வியைக் கற்பதிலும், ஞானத்தைத் தேடுவதிலும் நம்முடைய ஒவ்வொரு நாளையும் வாழ்க்கையின் கடைசி நாளாகக் கருதிக் கற்பதற்கும், ஞானம் பெறுதற்கும் உரிய முயற்சிகளில் ஈடுபடவேண்டும்” என்பது ஒரு பழைய அறிவுரை. மானுடம் - மனிதம் அறிவாலேயே மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுகின்றது. மற்ற உயிர்க்குலங்கள், இயக்க இயங்குவன. மனிதன் இயக்குகிறவன் இயங்குகிறவன். புவியை நடத்தும் பொறுப்பு மனிதனிடமே இருக்கிறது. புவியை நடத்தும் பொறுப்பை, மனிதன் சிறப்புறச் செய்வதற்குக் கல்வி தேவை அறிவு தேவை அறிவறிந்த ஆள்வினை தேவை. இங்கனம் மானுட வாழ்க்கை சிறப்புற அமையவும், புவிக்கோளம் இன்புற இயங்கவும், பயன்படும் சாதனமாக அமையும் கல்வி, சிறப்பானதாக, உந்து சக்தி உடையதாக அமைய வேண்டாமா? கல்வி, ஆன்மாவை எழுப்பி ஆவேசித்து இயங்கச் செய்ய வேண்டாமா? புவியை நடத்தும் ஆற்றலை மனிதன் பெற எத்தகைய கல்வி தேவை? அறிவு, வளரும் தன்மையது. "அறிதோறறியாமை” என்று திருக்குறள் கூறும். ஆதலால், கற்கும் கல்வியும் பெறும் அறிவும் வளர்ச்சிக் குரியன என்பதை மறந்துவிடக்கூடாது. நாள்தோறும், நாழிகை தோறும் மனிதன் புத்துணர்வு பெற்று வளரவேண்டும், மனிதன் வாழவேண்டும், பிழைப்பு நடத்தக்கூடாது.

மனிதனை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் என்பதை மறந்து விடக் கூடாது! உடல், உள்ளம், ஆன்மா இவை மூன்றும் பொருத்தப்பாட்டுடன் ஒத்திசைத்தும் வளர வேண்டும். உடலுக்கும் உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் மாறுபாடுகள் ஏற்பட்டால், மோதல்கள் ஏற்பட்டால் அனைத்து நலன்களும் கெடும்; வாழ்வு பாழாகும், வையகமும் துயருறும்.

கல்வியாளர்கள் சிந்திக்கும் உரிமை பெறவேண்டும்

அரசியலாளர், கல்வியை கல்வியாளர்களிடமிருந்து பிரிக்கவே முயற்சி செய்கின்றனர். கல்வியியல் சிந்தனையாளர்கள், துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் யாருக்கும் அரசியலைப் பற்றிய கருத்துக்களைக் கூறவோ, விமர்சனம் செய்யவோ உரிமை இல்லை என்ற நிலை உருவாகி வந்துள்ளது. கல்வியாளர் பலர் சூழ்நிலை காரணமாக இதில் அக்கறை காட்டுவதில்லை. அதனால் இன்று அரசியல், பொருளியல் பற்றித் தக்க விவாதங்கள் நடப்பதில்லை; மாணவர்களுக்குக் கற்பிப்பதில்லை. இது மிகப்பெரிய தவறு. வாழ்க்கையிலிருந்தும் அரசியலிலிருந்தும் கல்வி - கல்வியியலாளர்கள் விலகி நிற்பது ஒரு பொய்ம்மை; தற்கொலையும் கூட என்பதை அறிதல் வேண்டும். கல்வியியலாளர்கள், அறிஞர்கள், கட்சி அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்க்கலாம். தவிர்க்க வேண்டும். ஆனால், அரசியல், சமூக மாற்றங்கள், - பொருளாதாரக் கொள்கைகள் பற்றி - விவாதிக்கவும் விமர்சனம் செய்யவும் உரிமை வேண்டும். அப்போதுதான் நல்ல அரசியல் கால்கொண்டும்; சமுதாயம் வளரும். பல்கலைக்கழகங்கள் தன்னாட்சியுடையனவாக அமைய வேண்டும். கல்வி உலகில், சமுதாயத்தை அரசியலை நெறிப்படுத்துதலுக்குரிய வாய்ப்புக்கள் பெருகி வளரவேண்டும்.

ஆசிரியர் ஒருதுணையே!

மாணாக்கனின் அகத்தில் உறங்கிக் கிடக்கும் ஆற்றலை, ஒளியை வெளிக் கொணர்தலே கல்வி. கல்விக்கு மாணாக்கனது உளப்பாங்கினை அறிதல் முதல் தேவை. நல்ல கல்விமாணாக்கனிடமிருந்தே தொடங்குகிறது. ஆசிரியர் ஒரு துணையே நூல்கள் கருவிகளாகும். மாணாக்கனை வினாக்கள் கேட்கவும் விடைகளைக் காணவும் பயிற்றுவிக்க வேண்டும். ஒரோ வழி, ஆசிரியர் மாணாக்கர்களிடம் வினாக்களைத் தொடுக்கலாம். ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் ஆசிரியரே மாணாக்கர்களுக்கு விடைகளைக் கற்றுக் கொடுத்துவிடக்கூடாது. மாணாக்கர்களே முயன்று சரியான விடைகளைக் காணத் தூண்டவேண்டும். அவசியமிருப்பின் துணை வினாக்களைத் தொடுத்து, துணை வினாக்களுக்கு விடை காணும் முயற்சியின்மூலம், முக்கிய வினாவிற்கும் விடை காணும் முயற்சியில் ஈடுபடுத்தலாம். நல்ல அறிவைத் தேடும் பயணத்திலும், அடுத்துக் கருத்துக்கள் பரிமாற்றத்திலும் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இந்த முறையில் அமைவதே கல்வி.

கல்வி, புத்தகப் படிப்பு மட்டுமல்ல, அல்லது சில தகவல்களை மூளையில் திணித்துக் கொள்வதும் அல்ல. கல்வி, பன்முகத் தன்மையுடையது. கல்வியின் துறைகள் பலப்பலவாக நாளும் விரிவடைந்து வளர்ந்து வருவதை, கற்கும் மாணாக்கர்கள் உணர்ந்து, கல்விப் பயணத்தை விரிவுடையதாக்கிக் கொள்ளவேண்டும். கல்வி, ஆன்ம சக்தியின் வளர்ச்சிக்குத் துணையாக அமைவது. நம்மனோருடைய ஆன்ம சக்தியும், மனோ சக்தியும் பலாத்காரத்தினாலும் பயமுறுத்தலாலும் ஒடுக்கப்பட்டுப் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. இப்போது நம்மிடம் ஆன்ம சக்தி இருக்கிறதா? அல்லது செத்துவிட்டதா? என்பதைச் சோதனை செய்து கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். ஆன்ம சக்தியைத் தராத கல்வியும் ஒரு கல்வியா? பழையனவற்றை நினைவுகூர முடிகிறதா? புதியன எண்ணி ஏற்க முடிகிறதா? இன்றைய வாழ்க்கை ஆன்மாவின் உயிர்ப்பு இல்லாமல் இயந்திர மயமாகி ஓடிக்கொண்டிருக்கிறதே! இதுதான் கல்வியின் பயனா? இத்தகைய கல்வி நமக்குத் தேவைதானா?

மாணாக்கர்களின் நிலை

வாழ்நாளிலேயே மாணவப் பருவம் கிடைத்தற்கரியது. வாழ்க்கையில் சிறப்புக்குரிய - மாட்சிமைக்குரிய் பண்புகளைக் கற்றுச் சேர்த்துக் கொள்ளும் பருவம் இது! இன்று நமது மாணாக்கர்களுக்கு நாம் வழங்கியுள்ள, அளித்துள்ள வாய்ப்புக்கள் என்ன? இன்றைய மாணாக்கர்கள் நம்முடைய தலைமுறையிலிருந்து - தலைமுறையினரின் வாழ்க்கையி லிருந்து எந்த முன்னுதாரணத்தை - படிப்பினையை எடுத்துக் கொள்வார்கள்? அன்புகூர்ந்து சிந்தனை செய்யுங்கள்!

சுதந்திரம் பெற்ற பிறகு நம்முடைய வாழ்க்கையில் 'தியாகம்' 'நேர்மை' - ஆகியன விடை பெற்றுக்கொண்டு விட்டன போலத் தோன்றுகிறது. இன்று நிலவும் சமுதாயம் பண மதிப்பீட்டுச் சமுதாயம். ஆதலால், இந்தச் சமுதாயத்தில் கல்வியோ, திறமையோ தகுதியைத் தருவதில்லை. இன்று எங்கும் பணமே ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தப் பொருந்தாச் சூழ்நிலை, மாணாக்கர்களிடையில் மனமுறிவையே ஏற்ப்டுத்தியிருக்கிறது என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

இன்றைய மாணாக்கர்கள் கடந்துபோன யுகம், வரும் யுகம் ஆகிய யுக சந்திப்பில் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களால் கடந்த யுகப் பெருமைகளைக் காணமுடியவில்லை. அந்தப் பழைய - பிரமிக்கத்தக்க வரலாறு தொடரவும் இல்லை. அதேபோழ்து தங்களுடைய போக்கினாலே தங்களுடைய எதிர்காலம் பழுதுறப் போகிறது; இருள் சூழப் போகிறது என்பதை அறிந்துணராமல் நிற்கும் மாணாக்கர்களின் நிலை இரக்கத்திற்குரியது. இந்த அபாயத்திலிருந்து நமது மாணாக்கர்களை - எதிர்கால இந்தியாவை பாதுகாக்கத் துணிவான முயற்சிகள் தேவை. இத்தகு முயற்சியில் ஈடுபடும் பொழுது மாணாக்கர்களின் ஈடுபாடு, நடத்தை மதிப்பு, சமூகம் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு செய்ய வேண்டியன பற்றி எண்ணித் திட்டமிடல்வேண்டும்.

கல்விக் கூடங்கள் - வகுப்பறைகள்

முதலில் கற்பிக்கும் பணியில் நல்ல பயன்தரத்தக்க உத்திகளைக் கையாளவேண்டும். வாழ்க்கைக்கும் நடை முறைக்கும் உதவாத, காலத்தால் தேய்ந்துபோன கருத்துக்களைத் திரும்பத் திரும்பக் கற்றுக் கொடுக்கும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அது போலவே கற்பிக்கும் கல்விக்கூடங்களிலும், அவற்றின் அமைப்பிலும் நடப்பிலும் மாற்றங்களைக் கண்டு புதுமைப்படுத்துதல் வேண்டும்.

பள்ளிகள், கல்லூரிகளின் வகுப்பறைகள் நல்லெண்ணமும், நம்பிக்கையும், ஆர்வமும், உரிமையும், உறவும், சுறுசுறுப்பும் உடையனவாக விளங்குதல் வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், கற்கும் முறைகளை, ஆய்வு முறைகளை அறிமுகப்படுத்தி நெறிப்படுத்துவனவேயாம். ஆதலால், வகுப்பறைகளிலேயே மாணாக்கர்களுக்கு, படிக்க வேண்டிய பிற நூல்கள் அறிமுகப்படுத்தப் பெறுதல் வேண்டும். அதுபோலவே, படிக்கும் நூல்களைத் தேர்வு செய்வதில் மாணாக்கர்களுடைய விருப்பம் அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். இன்றையக் கல்வி உலகத்தில் மாணாக்கர்களின் விருப்பம் செயற்பாட்டிற்கு வருவதில்லை.

மாணாக்கர் விரும்பும் கல்வி அமையவேண்டும்

மாணாக்கர்கள் தாம் படிக்க விரும்பும் துறையைக் கூடத் தேர்ந்தெடுத்துப் படிக்க முடிவதில்லை. மாணாக்கர்களுக்கு அவர்களின் இளமைக் காலம் முதலே எத்துறைக் கல்வியில் விருப்பமும் நாட்டமும் இருக்கிறது என்பதை அறிந்து, அவர்தம் விருப்பத்தின்படியே அவர்களைத் தூண்டி அவர்கள் கற்பதற்கும் ஆய்வு செய்வதற்கும் பணி செய்வதற்குமுரிய வாய்ப்புக்களை வழங்கவேண்டும். மாணாக்கர்கள் கற்கும் கல்வி, அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அமைய வேண்டும். அஃதன்றிச் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அதை நிர்ணயிக்கும்படி அனுமதித்தல் கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் மாணாக்கர்கள் வெறுப்படையும் சூழ்நிலை உருவாகக் கூடாது. அதனால், கல்வி நிறுவனங்களில் பல விழாக்களை நடத்தலாம். அந்த விழாக்களை நடத்தும் பொறுப்புக்களையும் முழுமையாக மாணாக்கர்களிடம் ஒப்படைக்கலாம். அதுபோலவே விளையாட்டு, சமூகப் பணிகள் முதலியவற்றிலும் மாணாக்கர்கள் பங்கேற்கும்படி செய்யவேண்டும். மாணாக்கர்களுடன் ஆசிரியர்கள் தோழமை உணர்வுடன் கலந்து கொள்வது வரவேற்கத்தக்கது. மாணாக்கர்களின் சிந்தனைத் திறனையும், செயல்திறனையும் வளர்க்கக் களப்பணித் திட்டங்கள், கருத்தரங்குகள், சிக்கல்களுக்குத் தீர்வு காணும் பயிற்சிகள் முதலியன நடத்துதல், கல்வியின் குறிக்கோளை அடைய உதவியாக இருக்கும். வளரும் மாணாக்கர்கள் அறிவை அமைதியாகவே ஏற்பர். அதற்காகக் கவலைப்படவேண்டிய அவசியமில்லை. மாணாக்கர்கள் கல்வியில் ஆர்வம் பெறவும், கல்வி மற்றும் பிற துறைகளில் ஆராயவும், எந்தவொரு கருத்தையும் பகுத்தறிந்து உண்மையையும், புதியனவற்றையும் கண்டுபிடிக்கும் வகையில் கற்பிக்கப் பெறுதல் வேண்டும். பாவேந்தன் பாரதிதாசன் "அறிவை விரிவாக்கு ! அகண்டமாக்கு!" எனக் கூறியாங்கு மாணாக்கர்களின் அறிவு விரிதற்கு ஏற்றபடி கற்பித்தல் முறை அமையவேண்டும். படித்ததையே திரும்பத் திரும்பப் படித்தல், நெட்டுருச் செய்து ஒப்பித்தல், வாழ்க்கைக்கு இம்மியும் பயன்படாத செய்திகளை மூளையில் திணித்தல் போன்றவை இனியும் தொடர்தலாகா. மாணாக்கர்கள் தங்கள் அறிவுப் பரப்பை வளர்த்துக் கொள்ள வகுப்பறைகள் துணை செய்யவேண்டும்.

"கற்றிவ னாயினும் கேட்க”

என்பது திருக்குறள். அதனால், கல்வியில் மட்டுமன்றி, கேள்வியாலும் கல்வி பெறமுடியும்; அறிவைப் பெறமுடியும். எனவே, தக்கார் பலரின் இனிய ஆய்வுரைகளை, வரலாற்றுக்கு விசை கொடுக்கும் உரைகளைக் கேட்கும் வாய்ப்பு அடிக்கடி வழங்கப்பெறுதல் வேண்டும். மாணாக்கர்களுக்கு வழங்கப்பெறும் கல்வி, ஆய்வு மனப்பான்மையைத் தூண்டி வளர்ப்பதாக அமையவேண்டும். சிறப்பாக மாணாக்கர்கள் அவர்கள் காணும் சமூக அமைப்பு, கலாச்சாரம், உற்பத்திப் பொருளாதாரம், கிராம முன்னேற்றம், சமூக மாற்றத்துக்குத் தேவையான ஆயத்தங்கள் முதலியன பற்றி ஆய்வு செய்தல் பயனுடையதாக அமையும். இத்தகு சிறந்த கல்வி கற்ற சமுதாயம் அமைய வேண்டுமானால், ஆரம்பக் கல்வி, அதாவது தொடக்கக் கல்வி நிலையிலேயே கவனம் செலுத்தப்படுதல் வேண்டும்.

ஆரம்பப் பாடசாலைகள் திருத்தம் பெறவேண்டும்

இன்றைய நமது நாட்டு ஆரம்பக் கல்விநிலை பரிதாபகரமானது. மாணாக்கர்கள் விரும்பி ஆர்வத்துடன் கற்கத்தக்கதாக ஆரம்பக் கல்வி அமையவில்லை என்பது ஒரு வருந்தத்தக்க உண்மை! இன்றைய ஆரம்பக் கல்வியில் கற்பிக்கும் திறன், ஆரம்பப் பாடசாலைகளின் சூழ்நிலை இவற்றை உடனடியாக மேம்படுத்துதலுக்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பெறுதல் வேண்டும். ஆரம்பக் கல்வி, உயிர்ப்பும் அழகும் கவர்ச்சியும் இயற்கைச் சூழலும் உடையதாக அமையவேண்டும். கற்பிக்கும் சாதனங்கள் தேவையான அளவு இருக்க வேண்டும். இன்று 90% ஆரம்பப் பாடசாலைகளில் போதுமான கல்விச் சாதனங்கள் இல்லை! கரும்பலகை வசதிகூட இல்லாத பள்ளிக்கூடங்கள் பலப்பல. தொடக்கக் கல்வி வழங்கும் பள்ளிகளின் வகுப்பறை பாவம், துக்கமும் ஆற்றாமையும் சோம்பலும் படர்ந்ததாக இருப்பதை இன்றும் காணலாம். அதுமட்டுமா? ஆரம்பப் பாடசாலைகளில் வகுப்புக்கு ஓர். ஆசிரியர் என்ற நியதிகூட நடைமுறையில் இல்லை. பல ஆரம்பப் பாடசாலைகளில் முதல்வகுப்பு, இரண்டாம் வகுப்புகள் வகுப்பறைகளாக இருப்பதில்லை! சிறுவர்களை அடைத்து வைக்கும் கொட்டடிகள் போல இருக்கின்றன. நூறு சிறுவர்களுக்கு ஓர் ஆசிரியர் எப்படி வகுப்பை நிர்வாகம் செய்வார்? கல்வி கற்பிப்பார்? ஆரம்பப் பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு, ஆகக் கூடுதல் நிலையில் 35 மாணாக்கர்கள். என்ற விகிதம் நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டும். ஆரம்பப் பாடசாலைகளில் பாடப் புத்தகங்களின் சுமையைக் குறைக்க வேண்டும். முதல் இரண்டு வகுப்புகளில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். ஆரம்பப் பாடசாலைகளில் பள்ளித் தோட்டம் அமைத்தல், பள்ளிச் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் முதலியவற்றை ஆசிரியர்கள் மேற்பார்வையில் மாணாக்கர்கள் செய்யப் பயிற்சியளிக்க வேண்டும். விளையாட்டுத் திடலும் பள்ளித் தோட்டமும் இல்லாத பள்ளிகள் கல்விப் பணியை முழுமையாகச் செய்ய இயலாது. உழைப்பில் மாணாக்கன் பெரும் அனுபவத்தைப் பெறுகிறான். அதுமட்டுமல்ல. உழைப்புப் பாடங்களின் வழி திட்டமிடல். கருவிகளை இயக்குதல், செய்தல் முதலிய பயன்பாடுடைய கல்வியையும் பெறமுடியும். ஆரம்பப் பள்ளி மாணாக்கர்களிடம் புலனுணர்வு, வளர்ச்சி, நினைவாற்றல் வளர்ச்சி, கற்பனை வளர்ச்சி, சிந்தனை வளர்ச்சி, ஆளுமை வளர்ச்சி ஆகியன முறையே தோன்ற வேண்டும் என்பது உளவியல் கோட்பாடு, கல்வியியலின் நியதி. இன்று இந்த நிலை இல்லை என்பது நாடறிந்த உண்மை. ஆரம்பப் பள்ளியில் கல்வியியல் நியதிகள் நடைமுறைப் படுத்தப்பட்டாலே அறிஞன் தோன்றுவான்; மனிதன் தோன்றுவான்.

மாணாக்கரின் பருவ நிலையை உணரவேண்டும்

மாணாக்கன் உயர்நிலைப் பள்ளிக் கல்வி, மேல்நிலைப் பள்ளிக் கல்வி கற்கும் காலம், மிகவும் இடர்ப்பாடுகள் நிறைந்த காலம்! மாணாக்கனின் வயது வளர்ந்து வருகிறது. அதாவது 11-15-16-17 வயது வரையிலான பருவம். இது வளரும் பருவம்; இளம்பருவ மாணாக்க, மாணாக்கியரின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும் காலம். இது ஏன்? இந்தப் பருவத்தில் பெரியவர்களுக்குரிய குணங்கள் தோன்றத் தொடங்கும். உடலமைப்பு, புதிய பண்பு, சுய உணர்வு, தன் மதிப்பு ஆகிய இயல்புகளும், பண்புகளும் தோன்றும். சமூக நடவடிக்கைகளில் இயல்பாக ஆர்வம் தலைப்படும். இந்த உணர்வைக், கற்பித்தல் மூலம் ஆசிரியர் உலகம் வழிகாட்ட வேண்டும். இந்தப் பருவ காலத்தில் மாணாக்கரிடம் தோன்றும் "பெரியவன்” என்ற உணர்வின் தோற்றத்தையும், அதன் மூல ஊற்றையும் ஆசிரியர்கள் அங்கீகரித்து நயமுடையதாக்க வேண்டும். இந்த வளரிளம் பருவத்தில்தான் பெரியவர்களுக்கும் - ஆசிரியர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையிலான உறவு முறியக்கூடிய வாய்ப்புக்கள் தோன்றும். இந்தப் பருவ காலத்தில் மாணாக்கர்களுடன் பெரியவர்கள் ஆசிரியர்கள், ஒரு புதிய உறவை - சக வாழ்வு உறவை-வளர்த்துக் கொள்ள முன்வரவேண்டும். இந்த முயற்சி கற்பித்தலுக்கு மிக மிக அவசியம்!

செயல்திறனுடைய கல்வி தேவை

இந்த வளரும் இளம் பருவத்தில் தான், மாணாக்கன் தானே படிக்க விரும்பிக் குறிப்புப் புத்தகங்களை நாடுகின்றான். ஏன் ஆசிரியர் கற்பித்தலிலும் மன நிறைவு பெறாமல் இருத்தலால் அல்ல. சுய முயற்சி எண்ணமே அது. எது எப்படியானாலும் ஆசிரியர் - மாணாக்கர்களுக்கிடையேயுள்ள கல்வி உறவில் குறிப்புப் புத்தகங்களை அனுமதிப்பதற்கில்லை. ஆசிரியர் - மாணாக்கர் முறையில் கல்வி கற்றால்தானே விவாதங்கள் தோன்றவும் அவ்வழி சிந்தனை வளரவும் வாய்ப்புகள் ஏற்படும். வளரும் பருவத்துக் கல்வியில் உடல் உழைப்புக் கல்வி கட்டாயம் இடம் பெற வேண்டும். விஞ்ஞானம் - விஞ்ஞான சோதனைக் கல்வி கணிசமான அளவுக்கு இடம் பெறவேண்டும். அறிவியல் சோதனைகளைச் செய்து மாணாக்கன் கற்க வேண்டும். வேளாண்மை, கால்நடை வளர்த்தல், முதலிய தொழிற் பாடங்கள் பாடத்திட்டத்தில் இடம் பெறுதல் அவசியம். இவை பாடத்திட்டத்தில் சேர்ந்தால்தான் வேளாண்மை, கால்நடை வளர்த்தல் முதலியவற்றில் அலட்சியப் போக்கு இல்லாமல் ஆர்வம் காட்டுவர். வளரும் இளம் பருவத்தில் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் மாணாக்கர் பெறும் கல்வி, நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு கருவியாக இருக்க வேண்டும். இந்தப் பருவத்தில் மாணாக்கனின் - இளைஞனின் முழுத் திறமையையும் வளர்க்கும் முயற்சி தேவை. மாணாக்கனுக்குச் செயல் திறமையுடைய கல்வி தேவை என்பதை அறிக.

ஆண் - பெண் சேர்ந்து பயிலவேண்டும்

உயர்நிலைக் கல்வியில் நமது நாட்டில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கல்வி நிலையங்களே தேவை. இத்தகு கூட்டுக் கல்வி முறையிலும் ஒரோவழி சில தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது. என்றாலும் விளையும் பயன் மிகுதி என்பதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். தனித்தனியே பிரித்து வைக்கும்பொழுது தோன்றும் கவர்ச்சி, ஆர்வம் ஒன்றாகப் படிக்கும்பொழுது தோன்றுவதில்லை. கூட்டுக் கல்வியில் பழகும் வாய்ப்புக்கள் இருப்பதால் கவர்ச்சி வயப்பட்ட ஆர்வம் குறைகிறது. வாழ்க்கையின் பிற்காலத்திலும் சமநிலை உணர்வு கால்கொள்கிறது ஏன்? தங்களுக்கேற்ற துணையைத் தேடிக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. திருமணங்கள் "செய்து" வைக்கப்படும் வரையில் வரதட்சணைக் கொடுமை நிலவும். திருமணங்கள் நிகழவேண்டுமே தவிர, செய்து வைத்தல் கூடாது. இதுவே மரபு இயற்கை நியதியும்கூட.

பல்வகைப் பணிக்கல்வி

உயர்நிலைக் கல்வியில் மாணவர் அவை அமைத்துப் பள்ளியின் பணியை மேலும் பகிர்வு செய்து அளிக்கலாம். தமிழ் இலக்கிய மன்றம், ஆங்கில மன்றம், அறிவியல் மன்றம், கணித மன்றம், தோட்டப் பணி மன்றம், விளையாட்டுக்குழு, சமயப்பேரவை, மாணவர் நலக்குழு எல்லாம் அமைத்துப் பணி செய்யும் பொறுப்பை மாணாக்கர்களிடம் வழங்கலாம். மாணாக்கர்கள் சந்தா முறையில் நிதி சேர்க்கவும் வாய்ப்பளிக்கலாம். சாரணர் பயிற்சி, தேசிய மாணவர்படை, செஞ்சிலுவைச் சங்கம் முதலியன பள்ளிகளில் தொடங்க வேண்டும். விடுமுறை நாள்களில் சமூகத் தொண்டு செய்யப் பழக்கலாம்.

மேல்நிலைக் கல்வியில் அறிமுகப்படுத்தப்பெற்றுள்ள தொழிற் படிப்பின் சான்று பெற்ற அளவிலேயே பணி பார்க்கும் உரிமை வழங்குதல் கடமை. கலை, இசை, நாடகம் முதலிய துறைகளில் ஆர்வத்தை உண்டாக்கவேண்டும். தேசிய மாணவர் படை மூலம் நாட்டின் சேவைக்குரிய பயிற்சிகள் தரவேண்டும். மேல்நிலைக் கல்வியில் ஆளுமைப் பயிற்சி வழங்கப்படுதல் அவசியம். மேல்நிலைப் பள்ளி, கல்லூரி இவ்விரண்டு நிலையிலும் சமய வகுப்புக்கள், பிரார்த்தனை போன்றவைகள் சேர்க்கப்படவேண்டும்.

உயர் கல்வியில் கல்லூரி நிலையில் ஆய்வு மனப்பான்மை, புதியன புனைதல் முதலானவை அமைத்துத் தரலாம். அறிவியல் சார்ந்த தொழில்நுட்பக் கல்வியும் கற்றுத் தரவேண்டும். அறிவுழைப்பு, உடலுழைப்பு இவ்விரண்டுக்கும் கல்லூரிப் பருவமே சிறந்தது. கல்லூரிக் கல்வி நிலையில் பொறுப்புள்ள குடிமகனாக, குடிமகளாக வளர்க்க வேண்டும்.

கல்லூரிகள் - பல்கலைக் கழகங்களின் பணி

பல்கலைக் கழகங்களைப் பொறுத்தவரையில் நல்ல ஆய்வு அன்றாடம் நிகழ வேண்டும். கல்லூரி நிலையில் ஆய்வியல் சோதனைக் கூடம் சிறப்பாக அமையவேண்டும். புதிய அறிவியல் உண்மைகளைத் தேட மாணவர்களுக்கு நிறைய வாய்ப்புண்டு. நாட்டில் நிகழ்வுகளைக் கணித்து நாடு செல்லவேண்டிய திசையில் செலுத்தக் கற்றுத் தரவேண்டும். ஆய்வுகள் சமுதாயத் தொடர்புடையனவாக நடத்தப்பட வேண்டும். பல்கலைக் கழக மாணாக்கர்களை இந்த நாட்டின் அரசியல், பொருளாதார ஆய்வுகளை நடத்தவும் அவ்வழியில் தயக்கம் சிறிதுமின்றி வாழ்க்கையை நடத்தவும் பழக்கவேண்டும்.

பல்கலைக் கழகங்கள் வரலாற்றில் நின்று புகழ் பெறத்தக்க ஆய்வாளர்களையும், சாதனையாளர்களையும் உருவாக்கித் தரவேண்டும். கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றவர்களைச் சார்ந்து வாழ்கிறவர்களாகவும், மற்றவர்கள் உழைப்பிலே பயன்பெறுகின்றவர்களாகவும் விளங்குகிற தீமையிலிருந்து விடுதலை பெறக்கூடிய மாணாக்கர்களை - தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பது பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் விருப்பமாகும். இந்த நல்லெண்ணம் நிறைவேறக்கூடிய வகையில் நமது பல்கலைக் கழகங்களின் செயற்பாடு அமையுமாக.

கல்விக்கூடங்கள் - சூழல் - வசதி

கல்வி பயிற்றுவிக்கும் கூடங்கள், ஊருக்கு வெளியில் அமைதியான சூழ்நிலையில் இருக்கவேண்டும். இரைச்சல், தூசி, முதலியவற்றால் பள்ளிச் சூழல் கெடக்கூடாது. பள்ளி, நல்ல இயற்கைச் சூழலில் நடைபெற வேண்டும். பள்ளியைச் சுற்றி வேம்பு, அரசு ஆகிய மரங்கள் நிறைய நடவேண்டும். வகுப்பறைகள் நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் உடையனவாக அமையவேண்டும். சுகாதார வசதிகள் செய்யப் பெற்றிருக்கவேண்டும். இன்று நூற்றுக்குப் பத்துப் பள்ளிகளில்கூட இந்த வசதி இல்லை. இனிவரும்காலத்தில் முழுமையான வசதியை உருவாக்க வேண்டும். இதற்குச் சமூகமும் அரசும் நிறைய உதவியும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும். இன்று நாடு தழுவிய நிலையில் கல்வி இலவச மாதத் தருதல் வேண்டும்; தரமான கல்வி தருதல் வேண்டும். கல்வி தருவதற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது என்ற கருத்து உருவாகி விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்திய உயர்நீதி மன்றமும் கல்வி நிறுவனங்கள் நன்கொடை வாங்கக் கூடாது என்று தடை விதித்திருக்கிறது. இஃதொரு திருப்புமையம்; வரவேற்கத்தக்க நடைமுறை மாற்றம்.

நிதி உதவி வேண்டும்

கல்வி நிறுவனங்கள் முறையாக வளர, நிறைய நிதி தேவை. கடந்த பல ஆண்டுகளாக அரசு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் நிதி போதுமான அளவுக்கு அளிக்கவில்லை. தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இதே நிலைதான். அரசு போதுமான நிதியளிக்க முன் வராததால்தான் நன்கொடை வாங்கும் பழக்கம் கால்கொண்டது என்பதை நினைவுகூர்தல் வேண்டும். ஆதலால், அரசு போதுமான நிதி உதவி செய்யவேண்டும். பெற்றோர்களும், சமூகமும்கூட நிதி வழங்க முன்வரவேண்டும். சமூகத்தில் பணம் இல்லாமல் இல்லை. மக்கள் மதம், அரசியல் பெயரில் எவ்வளவோ செலவழிக்கிறார்கள். ஏன், பள்ளிக்குத் தமது மக்கட் செல்வங்களின் எதிர்கால மேன்மைக்குச் செலவழிக்கக்கூடாது? கல்விக்குச் செலவழிக்கும் பணம் உண்மையில் செலவு அல்ல. அஃதொரு வகையான முதலீடு என்று பெற்றோர்கள் கருத வேண்டும்; அரசும் கருதவேண்டும். இது மிகவும் குறைந்த செலவில் தேசத்தைக் காக்கும் பணியுமாகும் என்பதை ஆள்பவர்கள் உணர்தல் வேண்டும்.

அரசு தலையீடு கூடாது

அரசு நிதி உதவி செய்யும் ஒரே காரணத்திற்காகப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் ஆகியவற்றின் நிர்வாகத்தில் - குறிப்பாக பாடப்புத்தகக் குழு, பாடப் புத்தகங்கள் தேர்வு செய்வதிலும், ஆசிரியர் தேர்விலும், தலையிடக்கூடாது. அப்படித் தலையிட்டால், கல்விப் போக்கு அடிக்கடி மாறும். கல்வியின் தரமும் குறையும். கல்வியை தன்னாதிக்கம் உள்ள ஒரு வாரியத்தில் ஒப்படைப்பது நல்லது. எந்த நாட்டில் கல்வியில் சுதந்திரம் இல்லையோ அங்கு அடிமைத்தனம் வளரும்; பயமும் வளரும். கொத்தடிமைகளை வைத்துக் கொண்டு என்ன செய்ய இயலும்? கல்வித் துறையில் அமெரிக்க முறையைப் பின்பற்றுவது நல்லது. அதாவது கல்வியில் எல்லா நிலைகளிலும் - எல்லாப்படி நிலைகளிலும் சுதந்திரம் தேவை. தவறுகள் நேராமல் அரசு கண்காணிக்கலாம்; பாடநூல் நிறுவனங்கள் அரசுச் சார்பு இல்லாமல் சுதந்திரமான ஓர் அமைப்பாக இருக்கவேண்டும். பாட நூல் நிறுவனம் கல்வியியல் நிபுணர்களால் நிர்வாகம் செய்யப் பெறுதல் வேண்டும். ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு - பதவி உயர்வு முதலியன ஆசிரியரின் பணித்திறன் மதிப்பீட்டு அடிப்படையிலேயே அமையவேண்டும்.

மாணாக்கர்

மாணாக்கர்கள் கல்வி பயிலும்காலத்தில் கல்வியில் ஆர்வம் காட்டவேண்டும். நல்ல உடல்நலம் பெற்றிருத்தல் அவசியம். தங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் இதுவென நிர்ணயித்துக் கொள்ளும் மனப்பான்மையும் மாணாக்கர்களுக்குத் தேவை. மாணாக்கன் நிலையில், கட்டுப்பாடான வாழ்க்கையை வாழக் கற்றுக் கொண்டால்தான் கற்பதில் முன்னேறமுடியும். காலம் போற்றுதல், ஆசிரியர்களை மதித்தல் முதலிய நற்பழக்கங்கள் மாணாக்கர்களுக்கு இன்றியமையாதன. கவர்ச்சியின் வழிச் செல்லாமல், கல்வியிலும் தம்முன்னேற்றத்திலும் மாணாக்கர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். நாள்தோறும் முறையான கல்விப் பயிற்சி, சிந்தனைப் பயிற்சிகளைச்செய்து வளரவேண்டும். "கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆவான்" என்றொரு பழமொழி உண்டு. அதாவது காணும் காட்சிகளைக் கூர்ந்து நோக்கி, அவற்றின் அமைவுகளையும் உள்ளீடுகளையும் அறிதல் வேண்டும். அதுபோலவே அறிஞருரை கேட்பதிலும் ஆர்வம் காட்டவேண்டும். கல்விப் பயணம் நீண்டது; அகலமானது, ஆழமானது என்ற உணர்வுடன் கற்றதில் திருப்தி அடைந்துவிடாமல், என்றும் கற்கும் மாணாக்கனாக இருக்கும் மனோநிலை கற்பவர்களுக்கு வேண்டும்.

இனிய அன்புடைய மாணாக்க நண்பர்களே! கல்வி பயிலுங்காலத்தில் அரசியற் கட்சிப் பணிகளில் ஈடுபடாதீர்கள்! நீங்கள் வளர்ந்து கல்வியை முடித்துக்கொண்டபிறகு நீங்கள் இந்த நாட்டை நடத்தும் பொறுப்பை ஏற்கும்போது, இந்தப் புவியைத் திறமையாக நடத்த இப்போதே திட்டமிடுங்கள்! நாளைய வரலாறு உங்களுடையதே! இது உறுதி! திரைப்படங்களையே நம்பி-அதுவே வாழ்வு என்று நம்பி-நடக்காதீர்கள். உங்களுடைய வாழ்க்கையை அறிவும் ஆற்றலும் ஆளுமையும் உடைய வாழ்க்கையாக உருவாக்கிக் கொள்ளுங்கள்! 'உங்களை இந்த நாடு நம்பி இருக்கிறது' என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.

மாணாக்கர்கள் இளமைக் காலத்திலேயே தங்களுக்கென ஒரு குறிக்கோளை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தக் குறிக்கோள் தற்சார்புடையதாக மட்டுமல்லாமல் நாட்டு நலமுடன் எதிர்வரும் தலைமுறையினருக்கும் ஆக்கம் அமைந்ததாய் இருக்கவேண்டும். நாடு விடுதலை பெற்றதிலிருந்து எத்தனையோ திட்டங்கள் தீட்டியும் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேறியும் இந்த நாட்டில் இன்னமும் சம வாய்ப்புச் சமுதாயம் அமையவில்லை! பழைய தலைமுறைகளில் வீடுகள் நாட்டுக்கு வந்தன, இன்றோ நாட்டையே வீட்டுக்குக் கொண்டுபோகும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளனர். இதனால், நாடு எய்த்துக் களைத்து நிற்கிறது! இன்று இந்த நாடு தங்களைத் தாங்கும் என்று நம்பாமல், நீங்கள் இந்த நாட்டைத் தாங்கும் ஆற்றலுடனும் உறுதியுடனும் நாட்டு வாழ்க்கையில் அடி எடுத்து வையுங்கள் என்று இன்றைய மாணாக்கர்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

ஆசிரியர்கள்

கல்வியியலில் ஆசிரியருக்கு உள்ள பொறுப்பும் பங்கும் அளவிடற்பாலதன்று; மகத்தானது. ஒரு மாணாக்கனது வாழ்க்கையை உருவாக்குவதில் ஆசிரியர் பூரணப் பொறுப்பை ஏற்கிறார். அவ்வழி நாட்டை வளர்ப்பதிலும் பங்கேற்கிறார். ஆதலால், சமூகத்தில் ஆசிரியருக்குத் தகுதியான ஓர் இடத்தை அளித்தல் அவசியம், ஆசிரியர் மதிக்கப்படுதல் வேண்டும். ஆசிரியர்களை அவர்களுடைய கற்பித்தல் பணியில் ஊக்கப்படுத்தும் முயற்சி, பெற்றோர்கள் பக்கலிலிருந்தும் அரசுச் சார்பிலும் தேவை. ஆசிரியர்களுடைய அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்பெறுதல் வேண்டும். ஆசிரியர், சமூகத்தால் உரியவாறு பேணப் பெறுதல் வேண்டும். அப்போதுதான் ஆசிரியர்கள் தமது பங்கை உரியவாறு சமுதாயத்திற்குச் செய்யமுடியும், கல்விப் பண்பும் வெற்றிகரமாக அமையும்.

ஆசிரியர் – மாணாக்கர் உறவு

மாணாக்கர்கள் - ஆசிரியர் உறவு நல்ல வண்ணம் அமைதல் வேண்டும். இன்று நமது நாட்டில் மாணாக்கர் - ஆசிரியர் உறவு போதிய அளவு இல்லை. மாணாக்கர்கள் நலனில் போதிய அக்கறை காட்டும் ஆசிரியர்கள் இல்லை என்றே கூறலாம். தப்பித்தவறி ஓரிருவர் இருந்தால் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்! மாணாக்கர்கள் - ஆசிரியர் உறவு மிகவும். கவனமாகப் பேணப்படவேண்டிய ஒன்று. பொதுவாக மாணாக்கர்கள் தம்பால் அக்கறை காட்டும் ஆசிரியர்களையே விரும்புகிறார்கள். வகுப்பறையில் எடுத்த எடுப்பிலேயே பாடத்தைத் தொடங்காமல் சில நிமிடங்கள் அன்பு கெழுமிய, அகநிலை தழுவிய உறவு வளர்க்கும் உரையாடல்கள், நிகழ்வுகள் நிகழ்த்தியபிறகு பாடம் நடத்துதல் நலம் பயக்குமா என்பதை ஆசிரியர்கள் ஆராய்க! அதுபோலவே பாட முடிவிலும் மாணாக்கர்கள் - ஆசிரியர் கற்பித்ததை வாங்கிக் கொண்டார்களா? என்பதைப் பரிவுடன் ஆராய்ந்தறிவது பயன்தரும். ஆசிரியர்கள் மாணாக்கர்களுக்கு அறிவு வழியிலும் அகவழியிலும் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருத்தல்வேண்டும். ஆசிரியர்கள் மாணாக்கர்கள்பால் உளமார ஆர்வம் காட்டினால் மாணாக்கர்களை எளிதில் திருத்தமுடியும்; திருப்பமுடியும் என்பதை ஆசிரியப் பெருமக்கள் அறிதல் வேண்டும்.

ஆசிரியர் கடமைகள்

இன்று பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் ஆசிரியப் பணி இயந்திரம் போல உயிர்ப்பு இல்லாமலே நடைபெறுகிறது. பாடக் குறிப்புகள் எழுதுவதுகூட ஒரு சடங்காகப் போய்விட்டது. கல்வி அதிகாரிகள் வரும் நேரத்தில் ஒரே மூச்சில் பாடக் குறிப்பு எழுதும் ஆசிரியர்களும் உள்ளனர். தம் வகுப்பில் கற்பதில் கடைசி வரிசையில் (தரத்தில்) இருக்கும் மாணவர்களையும் நினைவிற்கொண்டு பாடக்குறிப்புகள் எழுதுவதில்லை. பாடக் குறிப்பு, ஒப்புநோக்குச் செய்திகள் பெரும்பாலும் இருப்பதில்லை. ஒப்பு நோக்குப் புத்தகங்கள் எடுத்துப் படித்துக் குறிப்பு எழுதும் பழக்கம் இல்லை.

ஆதலால், கற்பிக்கும் ஆசிரியருக்கும், கற்கும் மாணாக்கருக்கும் இடையே உள்ள இடைவெளி மிக அதிகம் என்ற உண்மையை உணர்த்தத்தான் வால் மட்டுமே நுழையவில்லை என்ற எலிக்கதை பிறத்தது. மாணாக்கனுக்குப் புரியும்படி சொல்லிக் கொடுக்கவேண்டும் என்ற முனைப்பு ஆசிரியர்களிடம் தேவை. கற்பிக்கும் முயற்சியை உரிய அளவு ஏற்காமல் மாணாக்கனுக்கு "முட்டாள்" பட்டம் சுட்டுவது, பிற்பட்ட சமூகத்தினை சார்ந்தவன் என்று கூறுவது முதலியன ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும். இன்று வகுப்பறையில் ஆசிரியர் செய்யும் பணியை, ஓர் ஒலி நாடாக்கூடச் செய்துவிடும் என்பதை உணர்தல் அவசியம். ஆசிரியர்கள் மாணாக்கர்களுக்குக் கற்பிக்கும் பாடத்தைப் பலகாலும் படித்து அந்தப் பாட நூற் கருத்தைச் செழுமைப்படுத்தப் பல நூல்களைக் கற்றல், பல ஆய்வுகள் செய்தல், சோதனை செய்தல் முதலியவற்றைச் செய்து தனது அறிவினைச் செழுமைப்படுத்திக் கொண்டால்தான், கற்பித்தலைத் திறமையாகச் செய்யமுடியும். உலகியலில் முறையான அலுவல் நேரம் மிகக் குறைவு ஆசிரியர்களுக்குத்தான். ஆசிரியர், சராசரி ஒரு நாளைக்கு 5% மணிநேரம் தான் பணி செய்கிறார். ஆண்டு ஒன்றுக்கு 200 நாள்கள்தான் பணி நாள்கள்! ஏன் இவ்வளவு குறைந்த நாள்கள் பணிக்கு வரையறை செய்யப்பட்டது? மற்ற பணிகள் எல்லாம் செய்யும் மணி நேர அளவுக்குச் செய்தால் போதும்! பள்ளி வகுப்பறையில் ஒரு மணி நேரம் கற்பிக்கும் பணி செய்ய வேண்டுமென்றால், அந்த ஆசிரியர் வகுப்பிற்கு வெளியேயும் குறைந்தது ஒரு மணிநேரமாவது உழைக்கவேண்டும். அதாவது கற்பிக்கும் பாடத்தைப் படித்தல், சிந்தித்தல், குறிப்புகள் தயாரித்தல், காட்டுவதற்குக் காட்சிப் பொருள்கள் தயாரித்தல் முதலிய பணிகள் உள்ளன என்பதைக் கருத்தில் கொண்டேயாம். ஆனால், இந்த உண்மையை ஆசிரியர்கள் உணர்த்திருக்கிறார்களா என்பது விளங்கவில்லை. அவர்கள் வகுப்பறை நேரத்தைத் தவிர மற்றநேரம் தங்களுக்குரியது என்று எண்ணி வீணாக்குகின்றனர். சிலர் அரசியல் இயக்கங்களில் ஈடுபாடு கொண்டு புனை பெயரில் பங்கேற்கின்றனர். மற்றும் சிலர் துணைத் தொழில்களை (வட்டிக்கடை முதலியன) செய்யத் தொடங்கிவிட்டனர். இவர்களுடைய மனப்போக்கில், ஆசிரியப் பணி இரண்டாம் இடத்திற்கு வந்துவிட்டது. சென்ற பல ஆண்டுகளில் ஆசிரியர்களின் வாழ்க்கைத் தரம் உயர அரசு கணிசமான அளவு ஊதியத்தை உயர்த்தி இருக்கிறது. இழலும் உயர்த்தவேண்டும் என்று அரசை வற்புறுத்தலாம். இதைவிட்டுவிட்டு ஆசிரியர்களுடைய நேரம், மாணவர்களுடைய நேரம் என்பதை மறந்து ஆசிரியர் தன்மையை வளர்த்துக் கொள்ளும் பணியில் செலவழிக்காமல், புறம்பான வழிகளில் செலவழிப்பது நேர்மையும் அன்று முறையும் அன்று. ஆசிரியர்கள் தொடர்ந்து கற்பது, ஆய்வு செய்வது என்று இருந்தால் நமது பள்ளிகளில், கல்லூரிகளிலேயே பல, புதிய உண்மைகள் வெளிப்படவும் - கண்டுபிடிப்புகள் செய்யவும் வாய்ப்புண்டு என்பதை ஆசிரியப் பெருமக்கள் உணர்தல் வேண்டும்.

நமது நாடு கல்வியில் முன்னேற வேண்டிய நிலையிலேயே இருக்கிறது. இந்த முன்னேற்றம் கற்பிக்கும் ஆசிரியரின் ஆற்றலையும், அவருடைய முயற்சியின் அளவையும் பொறுத்ததேயாம். நமது நாட்டின் முன்னேற்றம் ஆசிரியர் கற்பிக்கும் ஆற்றலையும் மாணாக்கர்களை நெறிப்படுத்தும் பண்பையும் சார்ந்திருக்கிறது என்பதை நமது ஆசிரியப் பெருமக்கள் அறிதல் வேண்டும். இந்த நாட்டில் எந்த நிலையில் தவறுகள் நிகழ்ந்தாலும் அல்லது சோம்பல் நிலவினாலும் நாட்டின் வளர்ச்சிப் போக்கு அவ்வளவாகப் பாதித்துவிடாது! ஆனால், பள்ளிகளின், கல்லூரிகளின், பல்கலைக்கழகங்களின் வகுப்பறைகளில் செய்கின்ற தவறு - செய்யவேண்டாதன செய்தலாகிய தவறு, சோம்பல் ஆகியன நிகழ்ந்தால் நாட்டின் வரலாறே கெடும் என்ற அபாயத்தை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்தாகவேண்டும். ஆசிரியர்கள் சமூக வளர்ச்சிக்கும் மாறுதலுக்குமுரிய பிரதிநிதிகளாவர். ஆசிரியர்கள் எப்போதும் புதியனவற்றைத் தேடிய வண்ணம் இருத்தல் வேண்டும். ஆசிரியர்கள் எதிர்பார்த்தும் எதிர்பாராமலும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதோடன்றி, அத்தீர்வைச் சமுதாயத்திற்கும் உரிமைப்படுத்தவேண்டும். வளர்ச்சியும் மாற்றமும் இயற்கையின் வரலாற்றின் நிகழ்வு என்பதை அறிந்து உணர்ந்து மாற்றத்துக்கு உந்து சக்தியாக இருப்பவர்கள் ஆசிரியர்கள். ஆனால், நம்முடைய சமுதாயத்தில் எந்தக் காலத்திலாவது கல்வி, சமுதாய மாற்றத்திற்கு உரிய கருவியாக இருந்ததாக நினைவில்லை. இருக்கவேண்டும் என்ற எண்ணமும் நமக்கு இல்லை! படித்தல்! பட்டம் பெறுதல், வேலை தேடுதல், வேலையைச் செய்யாமலே ஊதியம் பெறுதல் ஆகியன இன்றைய நடைமுறைகளாக-வாடிக்கைகளாக-ஆகிவிட்டது.

இன்று நூற்றுக்குத் தொண்ணூறு இளைஞர்கள் எத்துறையில் பட்டம் பெற்றாலும் அவர்கள் எங்கோ ஒரு அலுவலகத்தில், தொழிற்சாலையில் நாள்களை எண்ணி மாதக் கடைசியில் ஊதியம் வாங்கும் வேலையையே விரும்புகின்றார்கள்; விரும்பித் தேடி அலைகின்றார்கள். அது கிடைக்கும் வரை எந்த ஒரு வேலையையும் சுயமாகச் செய்ய முன்வரமாட்டேன் என்கிறார்கள். பொறுப்பையும் ஆபத்துக் களையும் சந்திக்கும் துணிவு அவர்களுக்கு இன்மையே இதற்குக் காரணம். இந்த நாட்டில் எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பை உண்டாக்கி வழங்கமுடியும். அதற்குரிய நிதி ஆதாரங்கள் கிடைப்பதில்லை. இந்தச் சூழ்நிலையை நமது இளைஞர்கள் உணர்ந்து தாமே தொழில் தொடங்கவும் பண்ணைகள் அமைக்கவும் முன்வரவேண்டும். சுதந்திரமாகச் சுய தொழில் செய்வதில் இன்பம் காணவேண்டும்.

நமது நாட்டின் கல்வித்தரம், அறிவின் ஆக்கம் ஆகியன தேசிய முன்னேற்றத்தில் வகிக்கும் பங்கு அதி முக்கியமானதொன்றாகும். இதற்கு ஆசிரியர்களே முக்கிய காரணமாக விளங்குகிறார்கள். நமது தேசத்தின் முன்னேற்றம் நமது ஆசிரியர்களையே சார்ந்தது. இன்று நமது நாடு முன்னேறுகிறதா? கடன் சுமை கூடுகிறது! பொதுத் துறைகள் இழப்பில் ஓடுகின்றன! கையூட்டுகள் மலிந்துவிட்டன. சமுதாய வாழ்வில் சாதி, மதங்கள் கொட்டமடிக்கின்றன! எங்குப் பார்த்தாலும் வன்முறை கிளர்ச்சி! அமைதியின்மை பொது வாழ்க்கையின் தரத்தில் ஒரு சரிவு! இவற்றிற்கெல்லாம் ஆசிரியர் பொறுப்பேற்க வேண்டாமா? அன்புகூர்ந்து எண்ணிப்பாருங்கள்! ஆசிரியர்களின் பணிகள் சிறந்தால் இக்குறைகள் நீங்குவது உறுதி! நமது நாட்டிற்கு - தேசிய வாழ்க்கையின் தர உயர்வுக்குப் பாடுபட ஆசிரியர்களும் சமூகத்தினரும் பொறுப்பேற்க வேண்டும். நமது நாட்டு மக்களின் மேம்பாட்டுக்கும் கல்வி மேம்பாட்டுக்கும் உரிய முயற்சிகள், பயனளிக்காது தோல்வி ஏற்பட்டால், அத்தோல்விக்கும் பல காரணங்கள் உண்டு என்பது ஒத்துக் கொள்ளக்கூடிய உண்மை. ஆயினும் ஆசிரியர்களின் தன்மையும் ஈடுபாடும் பெரிய காரணமாக அமையும் என்பதை மறந்துவிடுதல் கூடாது! அதற்கேற்ப நமது ஆசிரியர்கள், சமுதாயத்தை மேம்பாடுறுத்தும் பணியில் ஈடுபடவேண்டும்.

இன்று நமது நாட்டை வேலையில்லாத் திண்டாட்டம் வருத்தி வருகிறது. பல நூறாயிரம் இளைஞர்கள் வேலையில்லாமல் தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி நிச்சயமில்லாமலே அழுதுகொண்டு இருப்பதை மறுக்க முடியுமா? மறக்க முடியுமா? நமது கல்வி முறையில் அறிவியல், தொழில் நுட்பங்கள் விரிவடையச்செய்திருக்கும் நிலையிலும் தொழிற் கல்வி விரிவுபடுத்தப்பெற்றும் ஏன், எதனால் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது? கல்வித் துறையில் தொலை நோக்கோடு திட்டமிடத் தவறியமையும், பல ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தையே கற்பதாலும் - கற்பிப்பதாலும் ஏற்பட்டுள்ள இடர்ப்பாடு இது. வளர்ந்து வரும் புதிய சூழல்களுக்கு ஏற்றவாறு மாணவர்களை ஆற்றுப்படுத்தும் திறமைக் குறைவுமே இன்றைய வேலையில்லாத் திண்டாட்டத்துக்குக் காரணம் என்பதை உணர்ந்து திருத்தம் காண முயலுதல் வேண்டும். இன்றைய இந்தியா விரைவில் சமூக மாற்றத்தை அடைதல் வேண்டும். இது காலத்தின் கட்டாயம்! சமுதாய மாற்றத்திற்குரிய கருதுகோள்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தோன்றி, அவைகளைப் பாடத்திட்டத்தில் சேர்த்து படித்திருந்தும் செயற்பாடின்மையால் மாற்றம் ஏற்படவில்லை. இந்தச் சூழ்நிலையில் இன்று நாம் நம்முடைய ஆசிரியர் சமூகத்திற்கு வசதிகளையும் வாய்ப்புக்களையும் வழங்கி ஊக்கம் தந்து பேணுதல் வேண்டும்.

இந்தியா வளரும் நாடு. இந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன. வறுமைக்கோட்டிற்குக் கீழ் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வாழ்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் ஆசிரியர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் அரசு தவிக்கலாம்; பெற்றோர்கள் கவலைப்படலாம். ஆயினும் ஆசிரியர்களுடைய தேவைகளை நிறைவு செய்ய, கொஞ்சம் காலம் பிடிக்கலாம் என்பதை ஆசிரியப் பெருமக்கள் உணரவேண்டும் என்பது நமது வேண்டுகோள்! அங்ஙனமின்றி ஆசிரியர்கள் மாறுபட்ட உணர்வில் பரபரப்புணர்வுடன் எரிச்சல் அடைகின்றனர். தங்களுடைய தேவைகளை மட்டுமே நினைவிற்கொண்டும், முன்வைத்தும் போராடத் தொடங்கி விடுகின்றனர். அவர்களைச் சுற்றியுள்ள மாணாக்கர்களையும் சுற்றுப்புறத்தையும் மறந்துவிடுகின்றனர். இந்த ஆசிரியர்கள் தங்களுடைய கடமைகளைப் புறக்கணித்துவிட்டு மாணாக்கர்களுக்குத் தவறான வழியைக் காட்ட முற்படுகின்றனர். பல்வேறு புதிய சிக்கல்களையும் தோற்றுவித்து விடுகின்றனர். ஆயினும் சமூகமாற்றத்தைக் கொண்டு வருவதில் ஆசிரியர்களுக்குள்ள ஈடுபாடு, திறமைகள் முதலியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு வாய்ப்புக்களை வழங்கி ஊக்கமளிக்க வேண்டும். ஏன் எனில் வேறு எந்தப் பணியையும்விடச் சிக்கலானது, கடுமையானது ஆசிரியப் பணி என்பதை மறந்து விடுதல் - கூடாது. பொறுப்பினை ஏற்றுக்கொண்ட ஆசிரியர்களும் உளமாரத் தங்களுடைய உழைப்பை அர்ப்பணித்து ஒத்துழைப்புத் தரவேண்டும். காலத்தின் அருமை கருதி விரைந்து செயற்பாடுறுதல் வேண்டும்.

ஒரு பள்ளியின் செயற்பாடு கட்டாயத்தின்பாற்பட்டதாக அமையாமல், சுய விருப்பமும் ஆர்வமும் கலந்ததாக அமையவேண்டும். அப்படி அமையாவிடின் மக்கள் ஆட்சிக்கு ஊறு விளையும். ஆதலால், ஆசிரியர்கள் பள்ளியின் வாயிலாகச் சமூகத்தின் தரத்தைத் திருத்தி அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியப் பயிற்சிக்குரிய கல்வித் திட்டத்தில், கற்பிக்கும் திறமை, நெறிமுறையினாலான கல்விக்கு வலிமை சேர்த்தல், மாணாக்கர்களைப் புது வழிப்படுத்துதலுக்குரிய உத்திகள் அடங்கியனவாக பயனுள்ள மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். ஆசிரியர் அவரிடம் ஒப்படைக்கப் பெற்ற மாணாக்கனின் முழுமையான வளர்ச்சிக்குப் பொறுப்பேற்று அந்த மாணாக்கனை ஒரு மேதையாக, ஒரு நல்ல குடிமகனாக உருவாக்குதலில் வெற்றி பெறவேண்டும். இதுவே ஆசிரியர்களிடம் சமுதாயம் எதிர்பார்ப்பது. இத்தகு உயர்ந்த பொறுப்பு வாய்ந்த பணியை ஆசிரியர் செய்ய, அவர் பணி செய்யும் கல்விக்கூடம் ஒரு சுயாட்சித் தன்மையுடைய நிரந்தர அமைப்பாக விளங்கு வதும் அவசியம் என்பதையும் கல்வியாளர்களும் அரசும் உணரவேண்டும்.

இங்கே ஆசிரியர்களின் குறைகளையும் நிறைகளையும் எடுத்துக் கூறியிருக்கிறோம். குறைகள் மிகுதியாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளனபோல் தெரிகிறது. இந்த விமர்சனங்கள் மதிப்புணர்வுடனும் நல்லெண்ணத்துடனும் சொல்லப்படுபவையேயாம். இவைகளையும் கடந்த சில நல்லாசிரியர்களும் இருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

அண்மையில்கூட ஒரு நல்லாசிரியரை - இலட்சிய நோக்குடைய ஆசிரியரை நமக்கு 'தினமணி' (7-9-92) இதழ் அறிமுகப்படுத்தியது. அவர்தான் பவானிசாகர் மல்லியம்பட்டி ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பி. அருணாசலம். மல்லியம்பட்டியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியில் மிகவும் பின் தங்கியவர்கள். ஐந்தாம் வகுப்பைக் கூடத் தாண்டுவதில்லை. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையனையாவது பள்ளியிறுதி வகுப்பு (எஸ். எஸ். எல். ஸி) தேர்ச்சி செய்யவைக்க வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டு உழைத்து வந்திருக்கிறார். 1982இல் தொடங்கியது அவர் முயற்சி. 1992-ல் இரண்டு மாணாக்கர்களைத் தேர்வு பெற வைத்திருக்கிறது. மாணாக்கர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் ஆசிரியர் அவர் செலவிலேயே மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்வாராம். இத்தகு பெரிய மனம் படைத்த ஆசிரியர்கள் இன்னும் பலர் இருக்கலாம். இத்தகு அருள்நலங் கனிந்த ஆசிரியப் பெருமக்களுக்கு நன்றி! பாராட்டு! வாழ்த்துக்கள்!

ஆசிரியர்கள் நலன்பேண ஓர் ஆலோசனை

நமது நாட்டில் ஆசிரியர் தங்களுடைய நலன்களுக்காகத் தொழிற்சங்கவாதிகளைப் போல் போராடுகிறார்கள். இதனால் கல்வி பாதிக்கிறது. ஆசிரியர்கள் செய்வது தொழில் அல்ல; தொண்டு. இதனை ஆசிரியர்களும் மறவாது நினைவிற் கொள்ளவேண்டும். அரசும் ஆசிரியர்களை, போராட்டங்களில் ஈடுபடாதபடி கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஆசிரியர்கள் நலன் கருதி வழிகாட்டவும் அறிவுரை கூறவும் மாநில அளவில் ஒரு தன்னாட்சித் தன்மையுடைய குழுவை நியமிக்கலாம். இக்குழுவின் தலைவராக, உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியை நியமிக்க வேண்டும். இக்குழுவில் ஆசிரியர்களின் பிரதிநிதிகள், அரசின் பிரதிநிதிகள் இருத்தல் வேண்டும். இக்குழு அவ்வப்பொழுது ஆசிரியர்கள் பற்றிய அனைத்துப் பிரச்சனைகளையும் ஆராய்ந்து ஆணையிட வேண்டும். இந்த ஆணை சட்டபூர்வமானது. சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் இந்த ஆணையை நிறைவேற்றக் கடமைப்பட்டவர்கள் என்ற சட்ட வரையறையும் வேண்டும். இங்ஙனம் ஆசிரியர்களுக்கு உத்தரவாதமும் பாதுகாப்பும் தரக்கூடிய சட்ட சம்மதமான ஓர் அமைப்பைக் கண்டு நிறுவுதல் அவசர அவசியக் கடமை. இந்த அமைப்பு தோன்றிச் செயற்படத் தொடங்கிய பிறகு ஆசிரியர்கள், இயக்கம் நடத்தும் உரிமையைத் தடுத்துவிடலாம்.

இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஆசிரியர்களுடைய பிரச்சனைகளை ஆய்வு செய்து, முடிவுகள் எடுத்து, நடைமுறைப்படுத்துவதற்கு என்றே தேர்ந்தெடுக்கப்பெற்ற ஆசிரியர்களின் பிரதிநிதிகள், அரசின் பிரதிநிதிகள் கூட்டுக் கூட்டம் - மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு அப்போதே உண்டு - இல்லை என்று முடிவு எடுக்கப்படுகிறது. எடுத்த முடிவுகளை அரசு நடைமுறைப்படுத்துகிறது; பள்ளி நிர்வாகம் நடைமுறைப் படுத்துகிறது. இந்த நடைமுறையை நமது நாட்டில் நடைமுறைப்படுத்துவதன்மூலம் ஆசிரியர்களின் போராட்டத்தைத் தவிர்க்கலாம் என்பது பற்றி அரசு ஆலோசிக்க வேண்டும்.

சமுதாய அமைப்பே சீர்குலைந்து கிடக்கும்பொழுது ஆசிரியர்களிடம் எங்ஙனம் நிறைவைக் காணமுடியும்? நியாயமான கேள்வி! ஆசிரியர்களிடம் இயக்கத்தையும் அர்ப்பணிப்பு உணர்வையும் நாம் எதிர்பார்க்கிறோம். இல்லை! நாட்டின் நலன்கருதி வேண்டிக்கொள்கின்றோம். சமுதாயச் சீர்திருத்தம் ஆசிரியர்களிடமிருந்து தொடங்கட்டும் என்பது தான் நமது எண்ணம் விருப்பம். இன்று நாட்டை நன்னெறியில் நடத்திட ஆசிரியர்களுக்கு உள்ள ஆற்றலும் திறமையும் துணை செய்யும் என்று நம்புகின்றோம்.

பெற்றோர் கடமை - சமுதாயக் கடமை

ஆசிரியர்கள் அவர்களுடைய பொறுப்பு வாய்ந்த பணியைச் செய்யப் பெற்றோர்களுடைய ஒத்துழைப்புத் தேவை. அஞ்சல்தலையில், ஒட்டுதலுக்குரிய ஒருவகைப் பசை இருக்கிறது என்பது உண்மை. ஆனாலும் அந்தப் பசை ஒட்டுதலுக்குப் போதாது. புறத்தே ஈரப்பசையைக் கூட்ட வேண்டும். அதுபோல ஆசிரியர் பணிக்குப் பெற்றோர் ஒத்துழைப்புத் தேவை.

ஆனால் இன்று கல்வி பயிலும் மாணாக்கர்களின் பெற்றோர்களில் 60 விழுக்காட்டினர் கல்வி நலம் பெறாதவர்கள். கல்வியைத் துய்த்தும் அனுபவித்தும் அறியாதவர்கள். அதனால் தானே, கல்விப் பருவத்தில் வேலை செய்யக்கூடாது; பள்ளிக்கு வரவேண்டிய வயது வந்த அனைத்துக் குழந்தைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்பது நமது ஆசை, நியதிச் சட்டமானது. ஆனால் நடைமுறையில் வெற்றி கிடைக்கவில்லை, குழந்தைகள் வேலை பார்ப்பதை தடைசெய்யக்கூடிய அளவுக்கு நமது முயற்சியும் இல்லை; பெற்றோர்களின் சூழ்நிலையும் இல்லை. ஆயினும் பெற்றோர்களே உங்களுடைய குழந்தைகளைக் கல்வியில் ஈடுபடச் செய்வது அவசியம். இந்தப் பணியை ஆங்காங்குள்ள மாதர் சங்கங்கள், இளைஞர் மன்றங்கள், திருக்கோயில்கள், செய்யலாம்.

பெற்றோர்களுக்குக் கல்வியில் ஆர்வம் வந்தால் தான், குழந்தைகளின் கல்விப் பயணம் முழு வெற்றிதரும். குழந்தைகள் பள்ளிக்கு வராமல் நிற்க அடியிற்கண்ட காரணங்கள் உண்டு.

1. பல குடும்பங்களில் தாய், தந்தை வேலை செய்யப் போவது, இத்தகைய குடும்பங்களில் அடுத்த சிறு குழந்தையை வைத்துக்கொள்வது ஒரு பிரச்சனை. முதலமைச்சர் சத்துணவு மையங்கள் ஓரளவு இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைத்தாலும், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பிரச்சனை தொடர்கின்றது. இந்தக் குழந்தைகளைப் பாதுகாக்க ஊர்தோறும் "குழந்தைகள் காப்பகங்கள்" அமைத்து உதவி செய்து, அந்த மழலைப் பருவத்திலேயே கல்வியை விளையாட்டின் மூலம் அறிமுகப்படுத்தலாம். தக்க செல்வர்கள் அல்லது திருக்கோயில்கள், திருமடங்கள், முதலமைச்சர் சத்துணவு மையங்கள் தத்து எடுத்துப் பாடப் புத்தகங்கள், கணிதம் கற்பிக்கும் கருவிகள், மூளையை இயக்கும் விளையாட்டுப் பொம்மைகள், வாங்கிக் கொடுப்பது பயனுடையதாக அமையும். இந்த இரண்டு நிலைகளைக் கடந்து ஆரம்பக் கல்விக்கு வந்தால் ஓரளவு பெற்றோரின் ஒத்துழைப்புக் கிடைக்கும். ஆயினும், ஆரம்பப் பாடசாலை நிலையில் ஆசிரியர்களும் சமூகமும் ஒத்துழைத்தால் அதிகத் தொல்லையின்றிப் பெற்றோர்களின் ஒத்துழைப்பைப் பெறமுடியும். இந்த நிலையில் நிதி நிலை வாய்ப்பாக இருக்காது. சமூகம் தான் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும்.

2. ஆடு, மாடுகள் மேய்ப்பது கிராமப் புறங்களில் சிறுவர், சிறுமியர்களின் வேலை. இந்தப் பொறுப்பை ஊராட்சி மன்றங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். பொதுவாக கிராமங்களில் பணி செய்யும் ஆசிரியர்களுக்கும், படித்த பொறுப்புள்ள சமுதாய உறுப்பினர்களுக்கும் உள்ள அக்கறை அளவுக்குப் பெற்றோர்களின் ஒத்துழைப்பைப் பெறமுடியும். இதுதான் இன்றைய நிலை.

ஆசிரியர்கள் பெற்றோர்களின் ஒத்துழைப்பை எவ்வளவு பெறமுடியுமோ அவ்வளவு பெற முயற்சியெடுத்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் பயனடையத் தக்கவகையில் முதலுதவி, மனையியல், பொது அறிவு வகுப்புக்களை நடத்தலாம். பெற்றோர்கள் அன்றாடம் பள்ளியில் என்ன நிகழ்கிறது என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நெருக்கமான உறவும் தொடர்பும் இருத்தல் வேண்டும்.

பெற்றோர்கள் உயர்நிலைக் கல்வி, கல்லூரிக் கல்வி ஆகியவற்றில் பயிலும் மாணாக்கனை அவன் தங்கள் பிள்ளைகளாக இருந்தாலும்-சக வயதுக்கு வளர்ந்து வந்துள்ள அவர்களுடன் கலந்து பழகுதல் வேண்டும். விளையாட்டுக் களின்பொழுதும் நூல்களைப் படிக்கும் பொழுதும் அவர்களுடன் கலந்து கொள்ளவேண்டும். ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணாக்கர்களின் பெற்றோர்களிடம் அடிக்கடி தொடர்புகொண்டு மாணாக்கர்களின் வாழ்க்கையை மேம்பாடடையச் செய்வதில் பெற்றோர்களுடைய ஒத்துழைப்பைப் பெறவேண்டும். அனைத்து மட்டக் கல்வி நிறுவனங்களிலும் பெற்றோர் - ஆசிரியர் தொடர்பு மையங்கள் உயிர்ப்புடன் இயங்கச் செய்யவேண்டும்.

‘தங்களுடைய பிள்ளைகளை நாடறிந்த சான்றோனாக ஆக்குவதன் மூலமே மனையறத்தின் பயனை அடைய முடியும். ‘‘நல்ல தாய்”, “நல்ல தந்தை” என்ற புகழை அடைய ஒவ்வொரு பெற்றோரும் முயற்சி செய்யவேண்டும். தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சிக்கும் சீரான வளர்ச்சிக்கும் செலவழிப்பதை மகிழ்வுடன் செய்யவேண்டும். இளமைக் காலத்தில் குழந்தைகளிடத்தில் மனமுறிவு ஏற்பட அனுமதிக்கக்கூடாது. தங்கள் பிள்ளைகள் தானே என்றும், இளையோர் என்றும் கருதி அலட்சியப்படுத்தாமல் அவர்களுடன் தோழமை உணர்வுடன் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசிக் கலந்துரையாடி மகிழ்வது, குழந்தைகளின் வளர்ச்சிக்குத் துணையாக அமையும். சிவபெருமான் முருகனிடம் பிரணவப் பொருள் கேட்டறிந்த வரலாற்றின் உட்பொருளும் இதுவேயாம்.

பெற்றோர்கள் தமது பிள்ளைகள் கல்விச் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளத் தாராளமாக உதவி செய்ய வேண்டும். பல இடங்களைப் பார்ப்பதன்மூலம் பல்வேறு பட்ட சமூகத்தினருடன் கலந்து பேசிப் பழகுவதன் மூலமும் இளைஞர்களின் அறிவு விரிவடையும்; புத்துணர்வு பெறுவார்கள்; மனித குலத்தை நேசிக்கும் உயரிய பண்பைப் பெறுவர். கல்விச் சுற்றுலாவில் செலவிடும் முதலீடு, பலமடங்கு பயன்தரும் என்பதைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்ந்து ஆண்டுதோறும் கல்விச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் படித்து மகிழ, நல்லதோர் நூலகம் அமைத்துத் தருவதைத் தலையாய கடமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தொகுப்புரை

கல்விச் சீர்திருத்தம் என்ற தலைப்பில் நிறையச் சிந்தித்திருக்கின்றோம். நம்முள் கல்வித் துறையில் செய்ய வேண்டிய பணிகள் மலைபோல் குவித்துள்ளன. தரமான கல்வி வசதிகள், கல்விக்குள்ள நிறைந்த பயிற்சி வசதிகளைச் செய்துமுடிக்க நமது தமிழ் நாட்டின் வரவு செலவுத் திட்டத் தொகை முழுவதையும் ஒதுக்கினாலும் போதாது என்ற நிலையே வரும். ஆயினும், நாம் அடுத்த தலைமுறைக்குச் செய்யவேண்டிய ஒரே ஒரு தலையாய பணி சிறந்த கல்வியைத் தருதலேயாகும். இந்தப் பணியை நிறைவேற்ற, “பள்ளித்தல மனைத்தும் கோயில் செய்குவோம்” என்ற பாரதியின் வாக்கினை நினைவிற்கொண்டு ஊர் தோறும் பள்ளிகளை வளர்க்க நிதியளிக்க வேண்டும். அன்று, பாரதி பாடியது எப்படியோ? இன்றைய சூழ்நிலையில் பாரதியின் வாக்கை பொன்னெனப் போற்றி - எழுத்தறிவு நல்கும் போரில் ஈடுபடுவோமாக நல்ல இலட்சிய நோக்குடைய ஆசிரியர்களைக் கண்டு, நாட்டை அவர் தம் வழியில் இயக்குவோமாக! எதிர்வரும் தலைமுறையினரை அறிவும் ஆற்றலும் விழுமிய குறிக்கோளும் உடையவர்களாக உருவாக்கி நாட்டிற்கு அணியென விளங்கச் செய்ய, நம்மை அர்ப்பணிப்போமாக! உறுதிகொள்வோமாக!

இனிய அன்புடையீர்! நமது தலைமுறையில் வாழும் சிறந்த அறிஞராகிய துணைவேந்தர் டாக்டர் ச.முத்துக்குமரன் அவர்கள் தலைமையில் முதல் துணைவேந்தர் முனைவர் பி. சு. மணிசுந்தரம் அறக்கட்டளையின் சார்பில் கல்வியைப் பற்றிய சிந்தனை செய்ய, பேச, கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி! கல்வியியலில் துறைப் பேராசிரியர் முனைவர் - எஸ். புருஷோத்தமன் அவர்களுக்கும் நன்றி!

நமது இலட்சியம் உயர்ந்ததாக இருக்கட்டும்!
இ. தாய்மொழியில் கல்வி

அன்புடைய பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் ச. முத்துக்குமரன் அவர்களே! பேராசிரியப் பெரு மக்களே !

இன்று கல்விச் சிந்தனைத் தொடரில் மூன்றாவது சொற்பொழிவு. இந்தப் பேச்சு கல்வி மொழி பற்றியதாகும். இன்று, கல்வி மொழி பற்றிய சிக்கல் இந்தியாவை - குறிப்பாகத் தமிழகத்தைக் குழப்பிக் கொண்டிருக்கும் சிக்கல் மட்டுமல்ல. அதிகக் கவலையைத் தரக்கூடியதும் ஆகும்!

இந்தியா ஒரு பெரிய நாடு! சற்றேறக்குறைய 380 மொழிகள் பேசப்பெறும் நாடு. நூற்றுக் கணக்கான மொழிகளில் பதினெட்டு மொழிகளே தேசிய மொழிகள் என்ற தகுதியைப் பெற்றுள்ளன. இவற்றுக்கும் இந்தி, இந்திய நாட்டு மக்களை இணைக்கும் மொழி என்ற அடிப்படையில் இந்திய நாட்டு அரசின் அலுவலக மொழியாகவும் இடம் பெற்றிருக்கிறது! ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக இடம் பெற்றிருக்கிறது. ஆயினும் ஆங்கிலம் எத்தனை ஆண்டுகள் இணை ஆட்சி மொழியாக இருக்கும் என்ற வரையறை திட்டமாக இல்லை! தமிழ்நாட்டில் எழுந்த இந்தி எதிர்ப் புணர்வு, தமிழை வளர்க்கப் பயன்படாமல் ஆங்கிலத்திற்குச் சாதகமாக அமைந்துவிட்டது என்ற வருந்தத்தக்க உண்மையை உணர்த்தாமல் இருக்க இயலவில்லை!

சிந்தனைத் தெளிவுக்கு வாயில் கல்வி

மானுடம் வெற்றிபெறத் தரமான கல்வி தேவை. வகுப்பறையில் ஆசிரியர் - மாணாக்கர்களுக்கிடையே வினாவின் மூலம் கலந்து பயிலும் கல்வியே அறிவைத் தரமுடியும். தாய் மொழிப் பாட வகுப்பில் - தமிழ் மொழிப்பாட வகுப்பில் மாணாக்கர்கள் ஐயம் கொள்கின்றனர்; கேட்டுத் தெளிவு பெறுகின்றனர். ஆங்கில மொழி வழிக் கற்கும் பாடங்களில் பெரும்பாலும் வினாக் கேட்கப்படுவதில்லை. ஏன்? முதலில் பிழையில்லா ஆங்கிலத்தில் வினாக் கேட்கவேண்டுமே! மாணாக்கன் கேட்கும் வினாவில் இலக்கணப் பிழையிருந்தால் ஆசிரியர் அதைப் பிடித்துக்கொண்டு விமர்சனம் செய்வார்! மாணாக்கன் பாடு அழாக்குறையாக அமையும். கடைசி வரையில் ஆசிரியர் ஐயத்தைத் தெளிவிக்கமாட்டார். இதனால் கல்வி வளர்வதில்லை. ஐயங்கள் தெளிவதில்லை; அறிவு வளர்வதில்லை. இந்தக் குறை நீங்கக் கலந்துரையாடல்களிலும் விவாதங்களிலும் மாணாக்கர்கள் கலந்து கொள்ளவேண்டும்.

வகுப்பறையில் கலந்துரையாடிச் சிறந்த முறையில் கற்ற கல்வியையும், அக்கல்வியின் வழி பெற்ற கருத்துக்களையும் சிந்தனைப் பட்டறையிலும், செயற்களத்திலும் சோதனை செய்து பெறுவதே அறிவு. இந்த அறிவே வாழ்க்கைக்குத் துணை செய்ய இயலும்! அறிவு பெறுதலுக்குரிய கல்வி, சிந்தனையைத் துரண்டுவதாக அமையவேண்டும். சிந்தனையும், சிந்தனையின் தெளிவுமே அறிவுக்கு வாயில்கள் என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் வேண்டும். “சிந்தனையுள் தெளிவுமாகி” என்ற அப்பரடிகள் அருள்வாக்கினை எண்ணத்தில் கொள்வது நல்லது.

அறிவு தேவை

வாழ்க்கை வெற்றிபெற அறிவு தேவை. அறிவை எப்படிப் பெறலாம்? கல்வியின் மூலம் அறிவு பெறலாம் - பெறமுடியும் என்பது பொது விதி! ஆனால் கற்றவர்கள் எல்லாரும் அறிவுடையவர்களாக இருக்கிறார்களா, என்ன? “கற்ற நிர் மூடர்” என்ற வழக்கினை ஓர்க “பலகற்றும் கல்லார் அறிவிலாதார்” என்ற திருக்குறளையும் எண்ணிப் பார்க்க வேண்டும். கல்வி, அறிவு பெறுதலுக்கு வாயிலாக அமைய முடியும்! ஆனாலும் சிந்தனை, செயல் இரண்டும் இருந்தால் தான் கல்வி பயனுடையதாக, அறிவு வழங்கும் இயல்பினதாக அமைய முடியும். வாழ்வாங்கு வாழத் துணைசெய்யும்; அறிவினைப் பெற, சிந்திக்க கற்றுக் கொள்ளவேண்டும். சிந்தனையில் தெளிவும் - முடிவும் காணவேண்டும். முடிவுகள் செயல்களாக உருக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு அறிவினைப் பெறுதல் வேண்டும்.

அறிவு

அறிவு ஒரு கருவி; மனிதனை, மனித சமூகத்தைத் துன்பத்திலிருந்து - பாதுகாக்கும் கருவி. இந்த அறிவு என்னும் கருவி பண்டைக்காலத் தமிழர்களிடம் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால், பிற்காலத்தில் அதாவது சற்றேறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளாகத் தமிழர்கள் இந்த அறிவினை இழந்து விட்டார்களோ என்ற ஐயம் தோன்றுகிறது. அல்லது அறிவினைப் பெறும் முயற்சியே இல்லையா? அல்லது அறிவு இருந்தும் பயன்படுத்தவில்லையா? அறிவைப் பயன்படுத்தாமல் இருக்க இயலாது. அறிவு ஓர் இயங்கும் கருவி. தானே இயங்கும் கருவி. தமிழர் வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் அறிவு நம்மனோரிடத்தில் இல்லைபோல் உணர வேண்டியிருக்கிறது. நம்மிடையில் கற்றவர்கள் மெத்தப் படித்தவர்கள் பலர் உள்ளனர். பேசும் திறமை உடையவர்கள் நிறைய பேர் உண்டு. ஆனால், சமுதாயச் சிக்கல்களை அறைகூவல்களாக ஏற்றுக்கொண்டு போராடுபவர்கள் தான் இல்லாமல் போனார்கள். அதுமட்டுமா? அயல் வழக்கின் வழிவந்த நவக்கிரக வழிபாட்டை ஏற்றுக்கொண்டதன் விளைவாக வாழ்நிலைக்குக் கிரகங்களைக் காரணம் தாட்டுதல் தலைவிதியைக் காரணமாகக் கூறல் போன்ற அறிவுக்குப் பொருந்தாத, தமிழர் மரபுக்குப் பொருந்தாத நிலைப்பாடுகளை எடுத்துக்கொண்டதன் விளைவாக நாளும் வறுமை வளர்கிறது. இது என்ன கொடுமை: “வினையே ஆடவர்க்கு உயிரே” என்று வாழ்ந்தனர் தமிழர்.

நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்

நரகத்தில் இடர்ப்படோம் நடலையல்லோம்;

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம்

இன்பமே எந்நாளும் துன்பமில்லை;

நாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான

சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்

கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்

கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகினோமே!

என்னும் நெறிபற்றி நிற்கவேண்டிய தமிழ்மக்கள் நிலை இரங்கத்தக்கதாயிற்று. இனிவரும் காலத்தில் சமுதாயத் தீமைகளை அறியாமையை வேற்றுமைகளை, வறுமையை, ஏழ்மையைத் தாங்கிக் கொண்டிருக்காமல் அவற்றை எதிர்த்துப் போராடும் போர்க்குணம் உடையவர்களைப் பல்கலைக் கழகங்கள் நாட்டுக்கு வழங்குதல் வேண்டும். வாழ்க்கைக்குப் போர்க்குணம் இன்றியமையாதது. தமிழர்க்கு உலகில் வேறு எந்த இனங்களையும் விடப் போர்க்குணம் மிகுதி! நமது சங்க காலமே போர்க்காலம் தானே! உடன் பங்காளிப் போராட்டமாகப் போனதுதான் அவலமாயிற்று! மாந்தருக்குள் சண்டை நடந்தது போதும்! இனி சமூகத் தீமைகளை எதிர்த்துப் போராடி, சமுதாயத்திற்குச் சமவாய்ப்பு - சமநிலை உருவம் கொடுப்போமாக!

தாய் மொழியிலேயே சிந்தனை இயங்கும்

கல்வியில் வளர, சிந்தனைப் பயிற்சி தேவை. சிந்தனையே மனிதனுக்கு நுண்மாண் நுழைபுலத்தினை வழங்கும். சிந்தனை எளிதில் புலனாகா உண்மைகளைக் காணத் துணை செய்யும். சிந்தனை சார்ந்த கல்விதான் அறிவாக ஆக்கம் தருகிறது; சிந்தனை அறிவை விரிவாக்கும். சிந்தனைத் திறன், பிறந்த நாள் தொட்டுப்பேசிப் பயிலும் தாய் மொழியிலேயே இயங்கும். தாய்மொழி வழிச்சிந்தனைக்கு எந்த ஒன்றையும் விரைவில் ஆய்வு செய்து முடிவெடுக்கும் - தெளிவான முடிவெடுக்கும் ஆற்றல் உண்டு. நமது நாட்டில் கல்வி பயிலும் அனைத்து நிலைகளிலும் சிந்தனையைத் துண்டும் தாய்மொழி வழிக் கல்வியே தேவை. தாய்மொழி வழிக் கல்வி - மக்களிடத்தில் சென்று துணையாக அமையும்.

மொழிச் சிக்கல்

இந்தியா சிக்கல்கள் நிறைந்த நாடு. உண்ணும் உணவிலிருந்து உயர் மனிதனை உருவாக்கும் உணர்வுவரை இங்குச் சிக்கல்தான். இந்தியாவில் சிக்கல் இல்லாத துறை ஏதாவது உண்டா? நாடு ஒரு நாளாவது அமைதியாக நகர்ந்ததுண்டா? சிக்கல்களை உருவாக்குவதன் மூலமே வாழ்க்கையை நடத்துகிறவர்கள் இன்று பலகிவிட்டனர். நாளொரு கொலையும் பொழுதொரு கொள்ளையுமாக நாடு துக்கச் சுமையைத் துரக்கிக்கொண்டு நகர்கிறது. ஏன்? நல்ல தரமான பண்பாட்டுக் கல்வி வழங்கத் தவறியதன் விளைவே காரணமாகும். வளரும் இளைஞர்களுக்கு உயர்ந்த இலட்சியத்தை - குறிக்கோளைக் காட்டி வழிகாட்ட, வழி நடத்தத் தவறிவிட்டோம்! வழிகாட்டும் தகுதியை நாம் பெற்றிருக்கிறோமா? இதுவே ஒரு பெரிய கேள்வி.

எந்த ஒன்றையும் உணர்ச்சியுடன் அணுகும் பழக்கம் நாட்டில் வளர்ந்து வருகிறது. நமது மொழி, அந்நிய மொழி என்ற அணுகும் முறை உணர்ச்சியைத் தூண்டத்தான் செய்யும். அதற்குப் பதிலாக உலகமாந்தர் பேசும் மொழிகள் அனைத்தும் நம்முடைய மொழிகளே! அதில் நமது தாய்மொழி ஒன்று. தாய்மொழி உரிமையுடைய மொழி. மற்ற மொழிகள் உறவு மொழிகள் என்பதை உணரவேண்டும். ஒவ்வொருவரும் எத்தனை மொழிகளைக் கற்க இயலுமோ அத்தனை மொழிகளைக் கற்கவேண்டும். “நான்கு மொழிகள் கற்றவன் நான்கு மனிதர்களுக்கு ஈடாவான்” என்று மன்னர் சார்லஸ் கூறினான். நம்முடைய நாட்டில் மூன்று மொழித் திட்டமே வெற்றிகரமாக நடைபெறவில்லை சாரளங்கள் நிறைந்த வீட்டில் தாராளமாக ஒளியும் வளியும் புழங்கி - நலவாழ்வளிப்பது போலவே, பல மொழிக் கல்வியும் நலம் தரும். அது அறிவை விரிவு செய்யும்; அகண்டமாக்கும். ஆனால், நமது அணுகுமுறை சரியாக இருந்தால்தான் எல்லாம் நடக்க இயலும்! தாய் மொழிப் பற்றினையும் பிறமொழிப் பற்றினையும நீக்கினாலே தூய்மையான உண்மை புலப்படும். அறிவிலே தெளிவு காண இயலும்.

தாய்மொழி, வழிபாட்டுப் பொருளன்று. தாய்மொழிப் பற்று செயலில் காணப்பெறுதல் வேண்டும். எந்த மொழி உயர்ந்தது என்ற விவாதம் அவசியம் இல்லாதது, தாய் மொழியை, தமிழைச் சிந்தை மறந்து வாழ்த்துவதால் மொழி என்ன பயனை அடையும்? அல்லது தமிழர்தான் என்ன பயனை அடைவர், பாவேந்தன் கூறியது போல்,

“செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித் தேனே!
நைந்தா யெனில் நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!”

என்று தமிழை உயிராகக் கருதித் தமிழை வளர்க்கும் பணியில் அயராது உழைத்திட வேண்டும். துறைதோறும் தமிழ் வளர்தல் வேண்டும்; வளர்க்கப் பெறுதல் வேண்டும். கல்வித் துறைக்கு மொழி ஒரு கருவி என்ற தெளிவு வேண்டும்.

அன்புகூர்ந்து மொழிச் சிந்தனைப் பெரிது படுத்தாதீர்கள்! பயிற்று மொழிச் சிக்கலில் எந்தமொழி உயர்ந்தது என்பதல்ல கேள்வி! எம்மொழி தேவை என்பது தான். காலம் தேவையை உணர்த்தும்; தேவைகள் நிறைவு செய்யப்பெறும்! உணர்ச்சியைத் தொடும் மொழி, மதம் ஆகிய துறைகளில் நிதானம் கடைப்பிடிக்கப்படுதல் வேண்டும். ஒவ்வொரு இந்தியனும் அவனுடைய தாய்மொழியால் சிறந்த அறிஞராக விளங்கவேண்டும். தாய்மொழிக் கல்வியிலும், தாய் மொழிப் பண்பிலும் சிறந்து விளங்குகிறவர்கள் பிற மொழிகளை எளிதில் கற்க முடியும்; கற்க வேண்டும். இந்தியாவைக் கண்டுணர்ந்து அனுபவிக்க வேண்டுமானால் இந்திய மொழிகள் பலவற்றையும் கற்கும் முயற்சி தேவை. அரசும், சமூகமும் பல மொழிகளைக் குறைந்த காலத்தில் கற்பதற்குரிய மையங்களைத் தோற்றுவித்து வசதிகள் செய்து தரவேண்டும்.

கல்வி மொழி

இன்று நமக்குக் கல்வி மொழி எது? இன்று தமிழ்நாட்டில் கல்வி மொழி ஏழைகளுக்குத் தமிழ்; வசதியும் வாய்ப்புமுடையவர்களுக்கு ஆங்கிலம். கல்வி மனிதர்களை ஒன்றுபடுத்தும் சாதனம்! ஆனால், இங்குக் கல்வியே இரண்டு வகையாக இருக்கிறது. கல்வியில் இரண்டு சாதி உருவாகிறது. இது அவசியம் தானா? அல்லது நியாயமா?

கல்வி மொழி தாய்மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்ற கருத்து உலகந்தழீஇய உண்மை. அந்நிய மொழியாகிய ஆங்கிலம் கல்வி மொழியாக இருக்குமாயின் ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்று அம் மொழியறிவை வளர்த்துக் கொள்வதே நோக்கமாகிவிடும். தாய்மொழியாயின் அம்மொழி பற்றிய அறிவும், இலக்கண வரம்பும் இயல்பாகவே அமைந்துவிடுவதால் தாய் மொழியை ஒரு மொழியாகக் கற்கவேண்டிய அவசியமில்லாமல் நேரடியாகப் பொருளறிவு பெறும் முயற்சி ஏற்படும். ஆங்கில வழிக் கற்கும்பொழுது மொழியறிவு முட்டுப்பாடு இருப்பதால் பெறும் பொருளறிவு குறைவாகிவிடும். தாய்மொழி வழிக் கற்றால் பொருளறிவு கூடுதலாகப் பெறமுடியும். தாய்மொழி வழியே அறிவியலில் பல துறைகளையும் கற்பது எள்ளிது. தாய்மொழியில் சிந்தனைக் கிளர்ச்சி எழுவதைப்போல அந்நிய மொழிகளில் ஆங்கிலத்தில் தோன்றுவதில்லை. ஆங்கில வழிக் கல்வி என்பது ஒரு சுமை என்பதை அறிக. தாய்மொழி வாயிலாகத்தான் எளிதில் மக்களை அணுக முடியும். “தாய்மொழியிலேயே - பிரதேச மொழியிலேயே கல்வியைப் பரப்ப வேண்டும்” என்று அமரர் நேருஜி கூறினார். 1941-ல் பூரீ நகரில் இந்தியக் கல்வி மாநாடு ஒன்று நடந்தது. அந்த மாநாடு “கல்லூரிகளில் அனைத்துப் பாடங்களும் தாய்மொழி வாயிலாகவே கற்பிக்கப் பெறுதல் வேண்டும்” என்று தீர்மானித்தது. ஆனால் நடைமுறைக்கு வரவில்லை. வடபுலத்தில் இந்தியைத் தாய்மொழியாகப் பெற்றிருப்பவர்கள் தாய்மொழி வழிக் கல்வித் திட்டத்தைத் தொடங்கிவிட்டார்கள். ஆக்ரா, அலிகார் முஸ்லீம், அலகாபாத், காசி இந்து, பீகார், லக்னோ, நாகபுரி, உஸ்மானியா, இராசபுதனா, சாகர், என்.என்.டி.டி. ஆகிய பல்கலைக் கழகங்கள் எல்லாம் இந்தி மொழி வழியாகவும், தாய் மொழிகள் வழியாகவும் இ.ஆ.ப., உயர் பட்டப் படிப்பு, பட்டப் படிப்பு முதலியவற்றைத் தொடங்கி 25 ஆண்டுகளுக்கு மேலாகக் கற்பித்து வருகின்றன என்பது அறியத் தக்கது. இத்துறையில் தமிழ்நாடு தான் பின்னடைவில் இருக்கிறது. நாம் இந்தியை ஏற்க மறுத்தபோதெல்லாம் தமிழைப் போல் இந்தி ஒரு வளர்ந்த மொழியல்ல, வளமான மொழியல்ல என்ற காரணங்களையே கூறிவந்தோம். இன்றைய நடப்பு நிலையைப் பார்த்தால் இந்தி, தமிழைவிட வளர்ந்த மொழியாக 21ஆம் நூற்றாண்டில் விளங்கும் போலத் தெரிகிறது. தமிழின் வளர்ச்சியற்ற வருந்தத்தக்க வரலாற்று நிகழ்வு தமிழர்க்கும் தமிழுக்கும் வராமல் தடுக்க உடனடியாகத் தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் தமிழைப் பயிற்சி மொழியாக்கிடுதல் வேண்டும். இனியும் இந்த முயற்சியில் ஒரு நொடி காலத்தாழ்வு ஏற்பட்டாலும் தமிழரின் வளர்ச்சி பாதிக்கும்; தமிழ் சமஸ்கிருத மொழியடைந்த நிலையை அடையும்.

“இந்திய தேசிய ஒருமைப்பாடு ஏற்பட, தாய் மொழி வழிக் கல்வி அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப் பெறவேண்டும்” என்று இந்திய தேசிய ஒருமைப் பாட்டுக் குழு தீர்மானித்தது. ஆங்கிலம் பயிற்சி மொழியாகத் தொடர்ந்து இருப்பது இந்திய மொழிகளின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் தாய் மொழி வழிக் கல்வியே வழங்கப்பெறுகிறது. இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் மொழிக்கு வரி வடிவம் - எழுத்துக் கண்டனர். ஜப்பான் நாடு, தாய்மொழி வழிக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதால் இன்று அந்தநாடு, அறிவியலில், தொழில் நுட்பத்தில் உலக நாடுகளில் சிறந்து விளங்குகின்றது. எந்த ஒரு ஜப்பானியனும் இந்தியனைப்போல் - தமிழனைப்போலக் கையறு நிலையில் இல்லை. சிந்தனையைத் தூண்டாத, சிந்திக்கத் துணை செய்யாத மொழி வழியே கல்விப் பெறுவது தற்கொலைக்குச் சமம். உண்மையில் அறிவுபெற விரும்பினால் தாய்மொழி வழிக் கல்வியே தேவை. உலகத்தில் எந்த ஒரு நாட்டிலும், அந்நிய மொழி, கல்வி மொழியாக, பயிற்று மொழியாக இல்லை. சோவியத் ஒன்றியத்தில் மாநிலங்கள் அனைத்திலும் தாய்மொழி வழிக் கல்வியே அன்றும் நடைமுறையில் இருந்தது; இன்றும் இருக்கிறது. இன்று சோவியத் நாட்டின் அறிவியல் வளர்ச்சி சாதாரணமானதா? சோவியத் ஒன்றியத்தின் பொது மொழியாகிய ருஷ்ய மொழி, புரட்சிக்குப் பின்தான் வளரத் தொடங்கியது. தமிழுக்கோ மூவாயிரம் ஆண்டுக்கால வரலாறு உண்டு; இலக்கியம் உண்டு; இலக்கணமும் உண்டு.

தமிழ் ஒரு பழைமையான மொழி வளர்ந்து வரும் மொழி. அப்படியானால் தமிழில் ஏன் அறிவியல் கற்பிக்கக் கூடாது? முடியாதா? தமிழில் அறிவியல் நூல்கள் இல்லை என்று காரணம் கூறுவர். தமிழ் வழிக் கல்வியைத் தொடங்கித் தொடர்ந்து நடைபோட்டால்தான் நூல்கள் வெளிவர இயலும், பாடப் புத்தகங்களுக்காகக் காத்திருக்க இயலாது, காத்திருக்கக் கூடாது. தாய்மொழி வழிக் கல்வி நடைமுறைக்குப் புத்தகங்கள் இல்லை என்று காத்திருப்பது பற்றி வங்கத்துக் கவிஞர் ரவீந்திரநாத தாகூர் “தழைக்குப் பின் மரம், கரைக்குப் பின் நதி” என்று இருப்பது போல ஆகும், என்று கூறியதை உய்த்துணர்க. அண்ணல் காந்தியடிகள் தாய்மொழி வழிக் கல்வியை வற்புறுத்தினார். அதுவும் உடனடியாகச் செய்யவேண்டும் என்றார். மேலும் “தாய்மொழி வழிக் கல்வியைக் கட்டாயமாக உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்; இதில் தாமதம் ஏற்படுமானால் சோர்வு வளரும். ஒரு நாடு சோர்வைத் தாங்கிக் கொள்வதைவிட, குழப்பத்தைத் தாங்கிக்கொள்வது நல்லது” என்றார் அண்ணல் காந்தியடிகள். தாய்மொழி வழிக் கல்வி வழங்குதல் மூலம் உடல், உள்ளம், ஆன்மா இம் மூன்றும் வளரும் என்பது அண்ணல் காந்தியடிகளின் திடமான நம்பிக்கை.

ஆங்கிலத்தை நீட்டிக்கவிடக்கூடாது

தாய் மொழி வழிக் கல்விக் கொள்கையினால் ஆங்கிலம் அகற்றப்படுமா? அப்படி ஒன்றும் இல்லை. தாய் மொழியில் - தமிழில் அறிவியல் துறைகள் கற்கப்படுவதன் மூலம் ஆங்கிலம் அகற்றப்படாது; ஆங்கிலம் அகற்றப்பட வேண்டிய அவசியமும் இல்லை. ஆங்கிலம் ஒரு மொழியாகக் கற்கப்பெறும். மொழிப் பாடம் வேறு, பயிற்சி மொழிவேறு, தமிழ் பயிற்று மொழியாக வேண்டும். எல்லா மட்டங்களிலும் தாய் மொழி வழியே - தமிழ்மொழி வழியே கல்வி கற்பிக்கப் பெறுதல் வேண்டும்; சோதனைக்குக் கூட ஆங்கிலம் பயிற்று மொழியாக நீடிக்க அனுமதிக்கக்கூடாது.

ஆதிக்கத் தீமை

தாய்மொழி வழி - தமிழ்மொழி வழிக் கல்வி உழுத நிலத்தில் பெய்த மழை போன்றது! ஆங்கில வழிக் கல்வி கற்பாறையில் பெய்த மழை போன்றது.

தமிழ்நாட்டில் தாய்மொழி வழிக் கல்வியை - தமிழ் மொழி வழிக் கல்வியை விரும்பாதவர்கள் தடையாக இருப்பவர்கள் இரண்டு முதல் ஏழு சதவீதத்தினராக இருக்கும் மேட்டுக் குடியினர்தாம்! மக்கள் யாவரும் சமநிலையில் கல்வி கற்று முன்னேறுவதை விரும்பாதவர்கள், ஆங்கில வழிக் கல்வியை ஆதரிக்கின்றனர். இன்றும் அறிஞர்கள் என்று மதிக்கப்படுபவர்கள் பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள் அனைவரும் தாய்மொழி வழிக் கல்வியை - தமிழ் மொழி வழிக் கல்வியை ஆதரிக்கின்றனர். ஆயினும் எங்கோ ஒரு தயக்கம் இருக்கிறது. தமிழ்நாடு அரசு கல்வியிலும் இரு மொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது; இது தவறு! இந்தியாவிற்குத்தான் இருமொழிக் கொள்கை! தமிழ் நாட்டு அரசின் நடைமுறைக்குத்தான் இருமொழிக் கொள்கை; கல்விக்கல்ல; கல்வித்துறையில் தமிழ்நாட்டில் தமிழ்மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்; ஆங்கிலம் ஒரு மொழியாக மட்டும் கற்பிக்கப்படுதல் வேண்டும். ஆனால் தமிழ் நாடு அரசு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் பயிற்று மொழியாக வைத்திருப்பது தமிழ் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது. தமிழ் பயிற்று மொழியின் மூலம் கற்பதின் பயனை அறியாத பெற்றோர்கள் மேட்டுக்குடியினர் வழியில் ஆங்கில வழிக் கல்வியையே தமது பிள்ளைகள் கற்கவேண்டும் என்று விரும்புகின்றனர். பெரும்பாலும் தமிழ் வழிக் கல்வியைத் தேர்ந்தெடுப்பவர்கள் தமிழுக்கு ஆக்கந்தரும் திறமுடையவர்களாக இருப்பதில்லை தரமும், திறமும் உடையவர்கள் ஆங்கில மொழி வழிக் கல்வி வகுப்புகளிலேயே சேர்கின்றனர். இதனால் சம வாய்ப்பு மறுக்கப்படுகிறது; ஒருமைப்பாடு இல்லாமல் போகிறது. ஆதலால் ஆங்கில மொழி வழிக் கல்வி வகுப்புக்களைத் தமிழ்நாடு அரசு மூடவேண்டும். ஆங்கில மொழி வழிக் கல்வி கற்பிக்கும் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தரக்கூடாது. மாணவர்களும் - ஆங்கில மொழி வழிக் கல்வி வகுப்புக்களை மறுத்து, தமிழ் வழிக் கல்வி வகுப்புக்களிலேயே சேர்ந்து படிக்கவேண்டும். தமிழ்நாட்டில் ஆங்கிலப் பயிற்சி பெற்றவர்கள், மேட்டுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுடைய சமூகத்தின் நலன்களைக் காத்துக்கொள்ள, சாதாரணப் பொது மக்களிடமிருந்து விலகி, உயர்வு நிலை எய்த விரும்புகிறார்கள். இஃது ஓர் ஆதிக்கத் தீமை, விரும்பத்தக்க குணம் அல்ல. இம்முயற்சிக்கு அரசு துணை போகக்கூடாது.


தமிழ்நாடு அறிவியலில் வளராமைக்குக் காரணம்


இஃது அறிவியல் யுகம். ஆனால் தமிழ்நாடு அறிவியலில் வளரவில்லை. ஏன்? அண்மைக் காலத்தில் உலகின் பல பாகங்களிலும் அந்தந்த நாட்டு மொழிகளில் அறிவியல் வளர்ந்துள்ளது. செர்மன் மொழி, ருஷ்ய மொழி, சப்பானிய மொழி ஆகிய மொழிகள் முதலியன குறிப்பிடத்தக்கவை. இன்று இந்த மொழிகளைப் படிக்கப் பலரும் விரும்புகின்றனர். தமிழும் பயிற்றுமொழியாகி, தமிழில் அறிவியல் வளர்ந்தால் தமிழையும் உலக மாந்தர் விரும்பிப் படிப்பர். செயற்பாட்டின்மையே காரணம். ‘தமிழ் வாழ்க’ என்று கூச்சல் போட்டால் போதுமா? தமிழன் வளர்ந்தால் தமிழ் வளரும் - வாழும். நாட்டில் மொழிப் பாதுகாப்புப் பணியே நடைபெறுகிறது. அதுவும் கூட முழுமையாக அல்ல. தமிழ் பாதுகாப்புப் பணி வேறு தமிழ் வளர்ச்சிப் பணி வேறு. “தமிழ் வளர்ச்சிப் பணி இன்னமும் தொடங்கப் பெறவில்லை” என்பார் விஞ்ஞானி வா.செ. குழந்தைச்சாமி. தமிழ் காலந்தோறும் பகைப்புலம் கண்டு வெற்றி பெற்றுத்தான் வளர்ந்து வந்திருக்கிறது. சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளால் தமிழனின் ஆன்மீக வாழ்க்கை தான் பாதித்தது; மூளையை - புத்தியைப் பாதிக்கவில்லை. ஆனால் ஆங்கிலம், தமிழ் வளர்ச்சியைத் தடை செய்து தமிழனின் அறிவு வளர்ச்சியையே கெடுத்துவிட்டது. இந்நிலை ஆற்றொனாத் துயரம் தருகிறது. ஆங்கிலம் வளர்ந்த வகுப்பினரின் சுயநலத்திற்கு ஆக்கம் சேர்த்ததால் நிலை பெற்றுவிட்டது. ஆனால் இது நீடிக்கும் என்று நம்பாதீர்கள்.

காலந்தாழ்த்தக்கூடாது

ஆங்கிலம் இந்திய நாட்டின் இணை ஆட்சிமொழியாக நாடாளுமன்றத் தீர்மானத்தின் வழி நடைமுறையில் இருக்கிறது. ஆனால் ஆங்கிலம் - இந்தியாவின் இணை ஆட்சி மொழியாக நீடிக்குமா? எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்? அமரர் நேருவின் உறுதிமொழி, "இந்தி பேசாத மக்கள் விரும்புகின்ற வரை ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக - நீடிக்கும்" என்பதுதான். ஆக என்றாவது ஒரு நாள் இந்தி ஏற்கப்படும்; ஏற்கப்பட வேண்டும் என்பது முடிவு. நாம் இந்தியை எப்போதுமே ஏற்கமாட்டோம் என்றால் ஏற்றுக் கொண்ட உண்மைக்குப் புறம்பான செயலாகப் போகும் என்பதை அறிக. இன்று இந்தியாவில் தமிழ் நாட்டைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் மும்மொழித் திட்டம் நடைமுறையில் இருக்கிறது; இந்தி கற்பிக்கப்படுகிறது. ஏன்? தமிழ் நாட்டில்கூட அரசு பள்ளிகளிலும் கிராமப்புறப் பள்ளிகளிலும் அதாவது தமிழ் வழிக் கல்வி கற்பிக்கும் பள்ளிகளிலும்தான் இந்தி கற்பிக்கப்படுவது இல்லை. நகர்ப்புறங்களில் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கும் பள்ளிகளில் இந்தியும் ஒரு மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. ஆக தமிழ் நாட்டிலும் இந்தி படிக்கிறார்கள், முன்னேறியவர்கள் - முன்னேறக்கூடியவர்கள். தமிழ்நாட்டில் இந்தி படிக்கிறவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிவருகிறது. இவர்களே நாளை இந்தியை வரவேற்று நடைபாவாடை விரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏமாற்றம் பெரும்பாலும் கிராமத்து மக்களுக்குத்தான். எனவே ஆங்கில வழிக் கல்விப் பள்ளிக்கூடங்கள் மூடப்பெற்றால்தான் தமிழ் வளரும்; தமிழன் வளர்வான்; தமிழ்நாடு வளரும்; நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற வேற்றுமை அகலும். இல்லையெனில் தமிழ்நாட்டின் எதிர் காலம் ஒளிமயமாக இருக்காது; இருக்கமுடியாது. ஆங்கிலத்தை எடுத்துவிட்டால் அந்த இடத்திற்கு இந்தி வந்து விடும் என்று சொல்வதில் உண்மை இல்லை. நமது அரசியல் சட்டம் பிரிவு 345 - 348 விதியின்படி மாநிலங்களின் அனைத்து நடவடிக்கைகளும் அந்தந்த மாநில மொழிகளிலேயே - தாய்மொழியிலேயே நடைபெற வேண்டும் என்பதாகும். இது அரசியல் சட்டம். ஆதலால் தமிழ்நாட்டில் இந்தி வர வழியும் இல்லை; வாயிலும் இல்லை. நடுவண் அரசின் இணை ஆட்சி மொழியாக ஆங்கிலம் நீட்டிக்கப்படுமாயின் அதில் பங்கேற்க ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்றல் போதும். ஆனால் நடுவண் அரசின் அணுகுமுறையில் காலப் போக்கில் ஆங்கிலம் அகற்றப்பட்டுவிடும். இந்த இடத்தில் அந்தந்த மாநில மொழி இடம்பெறும் போலத் தெரிகிறது. உதாரணமாக இந்திய ஆட்சிப் பணித் தேர்வை மாநில மொழிகளில் எழுதல்ாம் என்று அரசு அறிவித்திருக்கிறது. தமிழிலேயே இந்திய ஆட்சிப் பணித் தேர்வு எழுதலாம். அது போலவே நாடாளுமன்றத்தில் தாய்மொழியிலேயே பேசலாம். வினாக்கள் கேட்கலாம் என்ற நடைமுறையையும் கொண்டு வந்துவிட்டார்கள். இதனால் காலப்போக்கில் இந்திய அரசின் செயல்முறைகளில் இந்திய மொழிகளே இடம் பெறும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இது வரவேற்கத்தக்க ஒன்று. ஆதலால் இனியும் காலந்தாழ்த்தாது அனைத்து நிலைகளிலும் அனைத்துத் துறைகளிலும் தமிழைப் பயிற்றுமொழியாக்க வேண்டும். 

பயிற்று மொழியாகும் தகுதியுடையது தமிழ்

தமிழ், பயிற்று மொழியாவதற்குரிய தகுதி பெற்ற மொழி என்பதையும் அறிக. மாமன்னன் இராசராசன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலும் அப்பெருமன்னன் கடலில் ஒட்டிய கப்பலும், கரிகாலன் கட்டிய கல்லணையும் தமிழரின் அறிவியல் - தொழில் நுட்பத்திற்குச் சான்றுகளாக விளங்குவன. இவை மட்டுமா? தமிழிலக்கியங்களில் பரவலாகத் தாவர இயல் செய்திகள், பொறியியல் செய்திகள், மருத்துவ இயல் செய்திகள் காணக்கிடக்கின்றன. அந்தக் கருத்துக்களைத் தொடர்ந்து செயலாக்கம் தந்து வளர்க்காமையால் தமிழ் வளர்ச்சியில் ஒரு தேக்கம் ஏற்பட்டுவிட்டது. சமச்சீரான தட்ப வெப்ப அறைகளைப் பற்றி இளங்கோவடிகள் தாம் இயற்றிய சிலம்பில் கோவலன் வாழ்ந்த எழுநிலை மாடத்தைக் காட்டுகிறார். ஏன் கண்ணப்பர் வரலாற்று நிகழ்வு கி.மு. 42 என்பார் சிவக்கவிமணி சுப்பிரமணிய முதலியார். கிறிஸ்து பிறப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே ‘கண் பதிய முறை’ மருத்துவத்தை இந்தியா கண்டிருக்கிறது என்பதைக் கண்ணப்பநாயனார் வரலாற்றின் வழி அறிகின்றோம். ஆயினும் என்ன பயன்? தொடர்ச்சி இல்லையே! வளர்ச்சியில் நாட்டமில்லையே! ஆதலால் தமிழ் அறிவியல் மொழியாக வளராததற்குத் தடை தமிழின் தகுதிப்பாட்டுக் குறையல்ல. வரலாறு செய்த பிழையும் அல்ல; தமிழரின் மூளைச் சோம்பலே காரணம்! செயலின்மையே காரணம். இந்த நூற்றாண்டிலாவது விழிப்புணர்வு பெற்று வளரத் தமிழ்வழிக் கல்வி பெறுவோம்! அறிவு பெறுவோம்! தமிழை வளர்ப்போம்!

தமிழ் வழிக் கல்வி கற்பித்தால் சிந்தனை விரிவடையும். வினாக்களும் விடைகளும் கல்வியில் இடம் பெறும். அறிந்த - உணர்ந்த கல்வி பெற இயலும். நெட்டுரு அவசியப்படாது. ஆதலால் அறிவு பெற தமிழ் வழிக் கல்வியே தேவை.

இன்று, தமிழ் பயிற்று மொழி ஆவதற்குத் தடை - தமிழின் தகுதியின்மை காரணம் அல்ல. சமூக மேலாதிக்க மனப்போக்கே காரணம். பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் மனிதர், மேலே எழுந்து வந்துவிடக்கூடாது என்று கருதுகின்றனர். இந்தச் சமூக மேலாதிக்கக் கொள்கை தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் சமஸ்கிருதம் வளர்ந்து வந்தது. அந்தச் சூழ்நிலையில் தமிழர் சமஸ்கிருதம் படிக்கத் தடை விதிக்கப்பட்டது. இந்தி, இந்தி பிரசார சபைகளில் படிக்கப்பெற்றது. ஆனால் எல்லாரும் இந்தியைப் படிக்க வாயில் திறந்து விட்டபோது இந்தி எதிர்ப்பு இயக்கம் தோன்றியது. இது ஒரு சமூக ரீதியான பின்னடைவு என்பதை உணர்தல் வேண்டும்.

திட்டமிட்டுச் செயல்படவேண்டும்

தமிழ் பயிற்று மொழியாவதற்கு நன்றாகச் சிந்தித்துத் திட்டமிடுதல் வேண்டும். தமிழ்ப் பல்கலைக் கழகம் இந்தப் பணியைச் செய்யலாம். இப்போதும் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அறிவியல்புலம் என்று ஒன்று அமைந்து சில பணிகளைச் செய்து வருகிறது. ஆயினும் இதுபோதாது. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் உள்ள அறிவியல் ஆய்வுக் கழகங்கள் அவ்வப்பொழுது ஆய்வு செய்து, கண்டுபிடித்து, வளரும் புதிய அறிவியல் சார்ந்த தொழில் நுட்பங்களைத் தமிழில் வெளிவரச் செய்யவேண்டும். அதுபோலவே, உலக நாடுகளில் வெளிவரும் அறிவியல், தொழில் நுட்ப நூல்களைத் தமிழாக்கம் செய்து அச்சிட்டுத் தமிழ் நாட்டு மக்களுக்கு வழங்கவேண்டும். சாதாரண மக்களும் பங்கேற்கக் கூடிய அறிவியல் தொழில் நுட்பக் கருத்தரங்குகளை நடத்த வேண்டும். பாவேந்தன் பாரதிதாசன்;


“உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூல்கள்
ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்
சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்”


என்று கூறியாங்கு நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ் நாட்டின் சிற்றூர்களில் எல்லாம் அறிவியல், தொழில்நுட்பச் செய்திகள் சாதாரண மக்களால் பேசப்படும் செய்தியாக இடம் பெறவேண்டும்.

தமிழ் பயிற்று மொழியாதல் மூலம் அடியிற்கண்டுள்ள நன்மைகள் உண்டு என்று நமது பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் ச. முத்துக் குமரன் அவர்கள் பட்டியலிடுகிறார்கள்:

  1. இயற்கையாக அறிவு பெறலாம்
  2. விரைவாகக் கற்கலாம்
  3. முழுமையாக அறிவு பெறலாம்
  4. சுயமரியாதையை வளர்க்கலாம்
  5. கற்றது நன்கு மனதில் பதியும்
  6. எளிதாகக் கற்கலாம்
  7. சரியாகப் புரிந்து கொள்ளலாம்
  8. கற்கும் நேரம் முழுதும் பயன்படும்
  9. பள்ளிக்கும் வீட்டிற்கும் தொடர்பு வாய்க்கும்
  10. எல்லாரும் உயர்கல்வி கற்கலாம்

இவற்றுடன்

  1. சிந்தனை வளரும்!
  2. அறிவு விரிவாகும்!
  3. புதியன காண வாயில்கள் தென்படும்
  4. மூலைக்குச் சோர்வு வராது

என்றும் சேர்த்துக் கொள்ளலாம்.

முயன்று வெற்றிபெறுவோம்!

1937-ம் ஆண்டில் கூடிய தேசியக் கல்வி மாநாடு தாய்மொழி மூலமே கற்கவேண்டும் என்று தீர்மானம் இயற்றி வலியுறுத்தியது.

கோத்தாரி கமிஷன் அறிக்கை “இந்திய மொழிகளை அறிவியல், தொழில் நுட்பஞ் சார்ந்த மொழியாக் வளர்த்து நவீன்ப்படுத்த வேண்டும்” என்று கூறியது. இந்தப் பணி நிறைவேற வேண்டுமானால் “உயர்கல்வி முதல் பல்கலைக் கழகங்கள் வரையில் மாநில மொழிகள் - தாய் மொழி, மக்கள் மொழி - முதலில் பயிற்று மொழியாதல் வேண்டும்” என்று வற்புறுத்தியுள்ளது.

தமிழ் பயிற்று மொழி இயக்கம் கடந்த அரைநூற்றாண்டாக முயன்றும் வெற்றி பெறவில்லை. ஏன்? மாணவர்கள், பெற்றோர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை. நாடு தழுவிய நிலையில் அனைத்து மக்களும் அகன்ற அறிவு பெற்றால்தான் தமிழ் பயிற்று மொழி இயக்கம் வெற்றி பெறமுடியும்; தமிழ்மொழி அறிவியல் மொழியாக வளரமுடியும். “நமது கொள்கை வெற்றிபெறும் வரையில் முழுமனத்தோடு முயன்று ஆவன அனைத்தையும் தயங்காமல் செய்து வைத்தால் நாம் விரைவில் வெற்றி பெறுவோம். ஆனால் வெற்றிபெறும் நாள், வேண்டினால் வராது; வணங்கினால் வராது; சினந்தால் வராது; முயன்றால் மட்டுமே வரும்! அந்நாள் விரைவில் வருமாறு அனைவரும் ஒன்றாக முயல்வோமாக!” என்ற பெ.நா. அப்புசுவாமி அவர்களின் அழைப்பை ஏற்போமாக!

தொகுப்புரை

இனிய அன்புடையீர்! மனித குலத்திற்கு வாய்க்கும் அருட்கொடைகளில் தாய்மொழியும் ஒன்று. தமிழர்களின் தாய்மொழி தமிழ். இது இலக்கிய இலக்கண வளம் செறிந்தது; நீண்டநெடிய வரலாறுடையது.தமிழ் மொழியைக் காலங்கள் தோறும் உரியவாறு பேணி வளர்த்துக் காத்து, நமக்குத் தந்தருளி இருக்கிறார்கள் நமது முன்னோர்கள். நீர், நெருப்பு இரண்டையும் கடந்து தமிழ் வென்று விளங்குகிறது. இந்த நூற்றாண்டு அறிவியல் நூற்றாண்டு. இந்த அறிவியல் நூற்றாண்டுக்கு ஏற்றாற்போல் தமிழை அறிவியல் மொழியாகத் தமிழர்கள் வள்ர்க்கும் முயற்சியில் தமிழர்கள் ஈடுபடவில்லை. தங்களுடைய சிந்தனையை அறிவியல் சார்ந்ததாக அமைத்துக் கொள்ளவில்லை. இவற்றுக்கெல்லாம் காரணம், தமிழ் பயிற்று மொழியாகத் தமிழ்நாட்டில் இடம் பெறாதது தான். கல்வித்துறையின் அனைத்து நிலைகளிலும் - துறை தோறும் தமிழையே பயிற்று மொழியாக்க வேண்டும். ஆங்கில வழி கற்கும் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். ஆங்கிலத்தை ஒரு மொழியாக மட்டுமே கற்கவேண்டும். அறிவியலில் துறைதோறும் தமிழ் நூல்கள் காணவேண்டும். முன்னேற வேண்டும். இது தமிழன் செய்யவேண்டிய - காலம் வழங்கியுள்ள கடமை. இக்கடமையை நாம் நிறைவேற்றுவதைப் பொருத்தே நமது எதிர்காலம் அமையும்.

2. கல்வியியல் கட்டுரை

மானுடம் வெற்றிபெற வேண்டும். இது மானுடப் பிறப்பின் குறிக்கோள் பயன். மானுடம் வெற்றிபெற முதல் தேவை அறிவு; இரண்டாவது தேவை அறிவறிந்த ஆள்வினை; மூன்றாவது தேவை ஒப்புரவு நெறி மேற்கொண்டு ஒழுகுதல். இம்மூன்றனுள் முதல் நிலையில் அறிவு வாய்க்கப்பெறின் மற்ற இரண்டும் தாமே வந்தமையும். இம்மூன்றும் தனித்தனியே எண்ணிக் கூறப் பெற்றாலும் உடனிகழ்வாலும், ஒத்திசைவாலும் பயன்பாட்டாலும் ஒன்று போலவே கருதினாலும் தவறில்லை.

அறிவு தலையாயது. எப்பாடுபட்டேனும் அறிவைத் தேடுதல் வேண்டும். அறிவு எங்கிருந்தாலும் தேடிச் சென்றடைதல் வேண்டும். ஏன்? அறிவுடையோருக்கு எதிர் காலம் பற்றிய சிந்தனை உண்டு; செயல் உண்டு. அறிவுடையார் எல்லாம் உடையார். மானுடத்திற்கு வாய்க்கும் கருவிகளுள் மிகச் சிறந்த கருவி அறிவேயாம். அறிவு, மானுடத்தைத் துன்பத்திலிருந்து மீட்கும். அறிவு, மானுடத்தை வளர்க்கும்; புகழ்பெறச் செய்யும், அறிவு பெறுவதற்குரிய வாயில்கள் பலப்பல. அவற்றுள் தலையாயது கல்வி.

இன்று இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் - கற்காதவர்கள் மிகுதி. கற்றவர்கள் மிகமிகக் குறைவு. கற்றவர்களிலும் அறிவுடையார் மிகமிகச் சிலரேயாம். இன்று இந்தியா சந்தித்துவரும் இன்னல்கள் பலப்பல. ஏன் இந்த அவலம்? எங்கும் எவரிடமும் எடுத்துக் கொண்ட பணியில் சிரத்தையில்லை. அதாவது அக்கறை இல்லை. எங்கும் எவரிடமும் சந்தேகம், பரஸ்பரம் சந்தேகம் நிலவுகிறது. நம்முடைய ஆட்சியமைப்பு, சட்டங்கள்கூட சந்தேகங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. உண்மையில் களத்தில் பணி செய்வோர் சிலர். ஆனால் அப்பணி சிறப்பாக நடைபெறுகின்றதா என்று பார்ப்பவர் பலர். இதனாலேயே, இந்தியா வளரவில்லை. போதிய வளர்ச்சியின்மையின் காரணமாக ஒருமைப்பாடு கால்கொள்ளவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, கடன் சுமை இவற்றால் நாடு நலிவடைந்து வருகிறது. “அறிவற்றவன், சிரத்தையை இழந்த மனிதன், ஐயுறுகிற மனிதன் கெட்டே போகிறான். அதனாலேயே நாம் கேட்டின் அண்மையிலேயே இருக்கிறோம்.” என்ற சுவாமி விவேகானந்தரின் உரையை எண்ணுக உணர்வு கலந்த நிலையில் உன்னுக; மாற்றங்களை விரும்பி வேட்புறுக.

மனிதனை வளர்க்கக் கல்வி தேவை. அதுவும் ஆரம்பக் கல்வி இன்றியமையாதது. ஆரம்பக் கல்வியில் தரம் பேணப்படுதல் வேண்டும். ஒரு குழந்தைக்கோ இளைஞனுக்கோ முன்னேற்றத்திற்குரிய கல்வியைப் பெற உரிமை உண்டு. அவர்களுக்கு வாழ்க்கையின் அடிப்படைத் தேவையாகிய சிறந்த கல்வியை வழங்குவது பெற்றோர்களின் தலையாய கடமையாகும். கடமை மட்டுமல்ல, பொறுப்பும் ஆகும். ஏன் பெற்றோர்களுடைய கடமை மட்டும்தானா? சமூகத்தின் பொறுப்பும், கடமையுமாகும். சமூகத்தின் பொறுப்பும் கடமையும் மட்டுமன்று அரசின் தலையாய கடமையுமாகும். கல்விக்குச் செலவிடும் தொகை கொழுத்த வட்டி கிடைக்கும் மூலதனமாகும். அதுமட்டுமன்று தேசப் பாதுகாப்புக்கு படை மட்டுமன்று போலீசு மட்டுமல்ல, கல்வியே மிகக் குறைந்த செலவில் செய்யப் பெறும் பாதுகாப்பு ஆகும்.

மனிதப் பிறப்பு உயர்ந்தது; மிக மிக உயர்ந்தது. எண்ணரிய ஆற்றல்கள் உள்ளடங்கிய பிறப்பு மானுடப்பிறப்பு. மானுடத்தின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை. ஆயினும் மானுடத்தின் உள்ளடக்கமாகிய ஆற்றல் கல்வியினாலேயே செயற்பாட்டு நிலையையும் பயன்பாட்டு நிலையையும் எய்தும். கல்வி என்பது சற்றும் பயன்படாத செய்திகளை மூளையில் திணித்து, திரும்ப அவைகளைத் தேர்வுகள் மூலம் வெளிக் கொணர்வதல்ல. வைரக்கற்களுக்குள் ஒளிந்து கிடக்கும் ஒளியைக் கடைசல் மூலம் வெளிக் கொணர்வதைப் போல, மனிதனிடத்தில் முதலீடாக இருக்கும் உயர்ந்த ஆற்றல்களைக் கண்டுபிடிப்பதும் அந்த ஆற்றலை வளர்ப்பதும் கல்வியின் நோக்கமாகும்; பயனாகும். "பொதுக்கல்வி" என வந்தபின் இந்தத் தனித்தன்மைமிக்க செயல்முறைகள் ஆசிரியர்களிடத்தில் காணப்பெறவில்லை; மாணவர்களிடமும் காணப்பெறவில்லை.

மனிதன், வாழ்க்கையை முறையாக மதிப்பீடு செய்யத் தெரிந்து கொள்ளவேண்டும். இன்று பலர் வாழ்க்கையை மிகமிகச் சாதாரணமாக மதிக்கின்றனர். நிலையாமையை அதிகமாக எண்ணுகின்றனர்; வாழ்க்கையைக் கொச்சைப் படுத்துகின்றனர். பொன்னுக்கும், பொருளுக்கும் வாழ்க்கையை ஒத்தி வைக்கின்றனர். இவர்களிடம் "காலம் பொன்போன்றது" என்ற பழமொழி எடுபடுமா? வாழும் காலம் அருமையானது; மிக மிக அருமையானது.

"வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி
மதித்திடுமின்”

என்று அன்று திருநாவுக்கரசர் வாழ்க்கையை மதிப்பீடு செய்தார். இன்று மீண்டும் வாழ்க்கையை வாழுங்காலத்தை முறையாக நன்மதிப்பீடு செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இது கல்வியின் முதற்குறிக்கோள்! மனிதன் தன்னுள் இருக்கும் அளவில்லாத ஆற்றலை உணர வேண்டும். தனக்கு இயல்பாக வாய்த்துள்ள நுண்ணறிவை-சுய அறிவைத் துரண்டிக்கொண்டு வாழ்க்கையின் அனுபவத்திற்குக் கொண்டு வரவேண்டும். மனிதன், வாழுங்காலத்தில் நொடி தோறும் புதிய புதிய எண்ணங்களை அடைய வேண்டும். அந்த எண்ணங்களும் உலகை நோக்கி விரிந்தனவாகவும் உயர்வுடையனவாகவும் அமைதல் வேண்டும். அவன் எண்ணிய எண்ணங்களை அடைய, புத்தார்வத்துடன் எழுச்சியுடன் உழைப்பவனாகவும் இருக்க வேண்டும். இவ்வளவையும் மனிதன் பெறும்படி செய்வது கல்வி, இத்தகைய கல்வியை நாம் நமது தலைமுறையினருக்குத் தருகிறோமா? தர முயற்சியாவது எடுக்கிறோமா? எண்ணிப் பாருங்கள். நமது குழந்தைகளிடம் வளர்ந்து வரும் சார்புகளைச் சார்ந்தே வாழும் மனப்போக்கை மாற்றவேண்டும். குழந்தைகள் தன்னம்பிக்கையுடன்கூடிய தற்சாற்பு நிறைந்த வாழ்க்கையைப் பெறச் செய்வதையும் கல்வியின் நோக்க மாகக் கொள்ள வேண்டும். நமது குழந்தைகள் அவர்களுடைய முழு ஆற்றலையும் உபயோகிக்கும் தகுதியுடைய வர்களாகச் செய்ய வேண்டும். இங்ஙணம் குழந்தைகளை வளர்ப்பதே உண்மையான கல்வி.

இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியர்கள். இன்றைய இளைஞர்கள் நாளைய இந்தியாவை ஆள்பவர்கள். ஆதலால், கல்வி என்பது அவர்களின் எதிர் காலத்தில் எழும் சிக்கல்களுக்குத் தீர்வு காணக்கூடிய வகையில் அமைய வேண்டும். கல்வி ஏன்? நல்ல காரியங்கள் செய்வதற்காக மட்டுமா? இல்லை. ஒரோவழி நல்ல காரியங்கள் கற்காதவர்கள், அறிஞர்கள் மூலமாகக்கூட நடந்துவிடலாம். ஆதலால், நல்லவனாக வாழ்ந்திடவும் நன்மைகள் செய்யவும் கற்றுக்கொடுப்பது கல்வியின் நோக்கமன்று நல்லவர்களாகவும் வாழவேண்டும்; வல்லவர்களாகவும் வாழவேண்டும். நன்மை செய்வதில், நல்ல காரியங்களைச் செய்வதில் ஆர்வம் உடையவர்களாகவும் இன்பம் அடைபவர்களாகவும் விளங்க வேண்டும். நாம் தரும் கல்வி விலங்கியலிலிருந்து மனிதரை மீட்டு, மனிதராக்கி இம்மண்ணில் அமரர்களாக்கி வாழ்ந்திடச் செய்தல் வேண்டும். அத்தகு விழுப்பம் நிறைந்த கல்வியை நாம் நமது குழந்தைகளுக்கு வழங்குகிறோமா? எண்ணுக!

நமது நாட்டு கல்விமுறை எதிர்முறையானதாகவே அமைந்திருப்பதை நாம் உணர்ந்ததாக வேண்டும். கடவுள் பெயரால் அமைந்துள்ள நமது புராணக் கதைகள்கூட எதிர்மறை அமைப்பேயாகும். தவறு செய்தான், தண்டிக்கப்பட்டான்; மன்னிக்கப்பட்டான் என்பது போலத்தான் நமது புராணங்களில் அமைந்துள்ளன. நமது சிந்தனை, கல்விமுறை எல்லாமே மறுப்பின் வழியன. அதாவவது எதிர்மறை வழியினவேயாம். இதனால், நமது இளைஞர்கள் ஊக்கத்தை இழக்கின்றனர். வாழ்க்கையில் ஆர்வம் என்பதனைப் பெறாமலே, சுற்றி சுற்றி வந்து எய்த்துக் களைத்துப் போகின்றனர். நமது நாட்டுக் கல்வி முறையில் புத்தகங்களின் சுமைதான் கூடியிருக்கிறது. புத்தகச் சுமை குறைந்து சிந்தனைத் திறன், செயல் திறன் வளர்வது அவசியம். செயல் மூலம் கல்வி என்பது இன்றைய உலகின் நடைமுறை, நமது நாட்டில் செயல் மூலம் கல்வி முறையை மிகுந்த அளவு அறிமுகப்படுத்துதல் வேண்டும். அவசியமும்கூட நமது நாட்டுக் கல்வி முறையில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் தாய்மொழி தமிழைப் புறக்கணிக்கும் போக்கு மேலோங்கி வருகிறது. ஆங்கிலத்திற்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவது ஏன் என்பது விளங்கவில்லை. ஆங்கிலம் வாயிலாகக் கற்பதனால் மற்ற பாடங்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. இது மிகவும் இரங்கத்தக்கநிலை. தாய்மொழியை மதித்துப் போற்றுங்கள்; மடமையைக் கொளுத்துங்கள்; தாய் மொழிக் கல்வியும் உள்ளக் கல்வியும் உலகக் கல்வியும் நமது மாணவர்களுக்குத் தேவை. இன்றைய போக்கு நமது மாணவர்களின் தற்சார்பான சிந்தனை வளர்ச்சி, அறிவு வளர்ச்சியை மிகவும் பாதிக்கும். தாய்மொழிக் கல்வி ஊற்றுப் பெருக்கனையது. அந்நிய மொழிவழிக் கல்வி காட்டாற்றில் எப்போதோ ஓடிவரும் வெள்ளம் போன்றது. தாய்மொழி வாயிலாக வரலாற்றியலை, அறிவியலை, பொருளியலை, தொழில் நுட்பவியலைக் கற்பின் நமது இளைஞர்கள் வளர்வர். நமது இளைஞர்கள் - மாணவர்கள் அறிஞர்களானால்தான் தமிழ்மொழி வளரும், தமிழ்நாடு வளரும். ஆதலால் தமிழ்நாட்டில் பயிற்றுமொழி தமிழாகவே இருத்தல் வேண்டும். அதேபோழ்து ஆங்கிலத்தை ஒரு மொழியாக நன்றாகப் படிக்கவும் வேண்டும். ஏன், இன்று பல மொழிகளையும் நமது இளைஞர்கள் கற்கத் தூண்டும் வகையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் "மொழிகளின் அவை" அமைப்பதை ஒரு கொள்கையாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க முயற்சி.

கல்வி, ஓர் இயக்கமாதல் வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய திருக்குறள்:

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"

என்று கூறியது.

'கற்க' என்பது ஆணைச் சொல். ஆம், யாதொரு காரணமும் கூறாமல் அனைவரும் கற்க வேண்டும். மனிதர்கள் தங்களிடமுள்ள உள்ளம், மனம், புலன்கள், பொறிகள் ஆகியவற்றில் உள்ள குற்றங்கள் நீங்குவதற்குரிய நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்கவேண்டும். உயிர்களைச் சார்ந்த நோய்க்கு நல்ல கருத்துக்களே மருந்து. உயிர்க்குலம் குற்றங்களினின்றும் விடுதலைப்பெற்று நல்லெண்ணம், நம்பிக்கை, ஒத்து வாழ்தல் ஆகிய நெறியில் வாழக் கல்வி துணை செய்யும்.

கல்வி முயற்சி பலமுனை முயற்சியாகும். கல்விக் களம் பெற்றோர், மாணவர், ஆசிரியர், சமூகம் என விரிவாகப் பரந்து கிடக்கிறது. இதில் முதல் நிலையில் உள்ள பெற்றோர்கள் நமது கல்வித்துறைக்கு வாய்ப்பாக அமையாதது ஒரு பெருங்குறை. ஏன் எனின், நமது நாட்டின் பெற்றோர்களில் பலர், எழுத்தறிவு இல்லாதவர்கள். இவர்களில் பலர் விபத்துக்களின் காரணமாகப் பெற்றோர்களானவர்கள். இவர்களுக்குக் குழந்தைகள் வளர்ச்சியில் போதிய அளவு அறிவியல் சார்ந்த ஆர்வம் இல்லை. ஆதலால் இவர்களை நம்பி நாம் கல்விப் பயிரை வளர்க்க முடியாது. அடுத்து, மாணாக்கர்கள், இவர்கள் நல்லவர்கள்! எழுதப்படாத கரும்பலகை போன்றவர்கள். சமூகம்... குறிப்பாக அரசியல் ஊடாடாத வரையில் மாணவர் உலகம், நல்ல உலகமே! அடுத்து நமது கவனத்திற்குரிய பொறுப்புள்ள உறுப்பு ஆசிரியர் இனம். ஆம்! ஆசிரியர்கள். நமது சமுதாயத்தின் முன்னோடிகள்; மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள்! நாம் அனைவரும் ஆசிரியரிடமிருந்தே கற்றுக் கொள்கின்றோம். ஆசிரியர் என்போர் போதிப்பவர் மட்டுமல்லர். ஆசிரியரின் வாழ்க்கையே ஒரு நூல் போன்றது. நாம் யாரிடமிருந்து கற்றுக் கொள்கிறோமோ அவர்தான் ஆசிரியர். இளந் தலைமுறையினரின் அறிவு வளர நல்ல ஆசிரியர்கள் வேண்டும். ஆம்! கல்வியின் பொறுப்பு ஆசிரியர்களிடமே பெரும்பான்மையும் இருக்கிறது. ஒரு சிறந்த ஆசிரியர் தன்னிடம் ஒப்படைக்கப்பெறும் மாணவர்களின் உள்ளத்தினை ஆலோசித்து நின்று அற்புதமாக உருவாக்குகிறார். அதனால் சமூகத்தின் வரலாற்றில் ஆசிரியர்களுக்கு உள்ள இடம் மிகமிக உயர்ந்தது. ஆனால், இன்றைய நமது சமுதாயத்தில் ஆசிரியர்களுக்கு நமது மாணவர்கள், பெற்றோர்கள் கொடுக்கும் இடம் அவ்வளவு சிறப்பாக இல்லை.

அதேபோழ்து ஆசிரியர்களுடைய பொருளாதார வாழ்நிலை முதலியன கடந்த காலத்திருந்ததைவிட உயர்ந்திருக்கிறது. ஆயினும், மேலும் இன்னமும் ஆசிரியர்களுடைய வாழ்நிலைத் தரத்தை உயர்த்தவேண்டும். இந்தப் பொறுப்பு அரசுக்கும் சமூகத்திற்கும் இருக்கிறது. இத்துறையில் அதிகக் கவனமும் முயற்சியும் தேவை.

அதுபோலவே, ஆசிரியர்களுடைய கல்வி நிலை, கலாசார நிலையையும் வளர்த்து உயர்த்தியாக வேண்டும். திருவள்ளுவரின் "அறிதோ றறியாமை” என்ற திருக்குறள் வரி, சமுதாயத்தில் வேறு எவருக்குப் பொருந்தினாலும் பொருந்தாது போனாலும் ஆசிரியர் உலகத்திற்குப் பொருந்தும்; பொருந்தவேண்டும். ஆசிரியர்களுடைய அறிவுத் திறனும் செயல்திறனும் போதிக்கும் திறனும் இடையறாத நிலையில் வளர - வளர்த்துக்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பெற வேண்டும். இன்று இந்தச் சூழ்நிலை இல்லை. பள்ளிகளிலும் - மாவட்ட அளிவிலும் ஒப்புநோக்கு நூலகங்கள் (Reference library) தேவை. செய்முறை ஆய்வுக் கூடங்கள் அமைய வேண்டும். ஒர் ஆசிரியர் திறமையாகப் பாடம் சொல்லித்தர வேண்டுமெனில், பல மணி நேரம் அவர் சிந்திக்க வேண்டும்; கற்க வேண்டும்; குறிப்புகள் தயாரிக்க வேண்டும். இத்தகு அருமையான முயற்சியில் ஆசிரியர்கள் ஈடுபடுவதற்குரிய வசதிகள் அளிக்கப்பெறுதல் வேண்டும்; சூழ்நிலைகள் உருவாக்கப்பெறுதல் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஆசிரியர்களின் பொருளாதாரத் தேவைகள் நிறைவு செய்யப்பெறுதல் வேண்டும். ஆசிரியர்களுடைய வாழ்க்கைத் தேவைகள் நிறைவேறாத நிலையில் ஆசிரியர்கள் ஓய்வு நேரங்களைப் பொருள் செய்யும் முயற்சிக்கே பயன்படுத்துவர். இதனால் கற்கும் நிலை பாதிக்கும்; கல்வி உலகம் தரத்தை இழக்கும்; எதிர்காலம் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் என்பதை அரசு அறிந்து உரியன செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவோமாக! மனிதம் வளரும் தன்மையது. வளரும் சமுதாயமே வாழும். ஆதலால் கல்விச் சிந்தனை மாறவேண்டும்; வளர வேண்டும். பழைய பாடங்களையே, பல்லவி அனுபல்லவி ஆக்குவதில் பயன் இல்லை. ஆசிரியர்கள் பழக்கப்பட்டுப் போன பாதையிலிருந்து விலகிப் புதுமை நெறிகளில் பொதுமை நெறிகளில் நடை பயிலவேண்டும். சமுதாயத்தில் எழும் புதுப்புதுச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் ஆற்றலை ஆசிரியர்கள் பெற்று, அத்திறனை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவேண்டும். புதிய கல்வி முறைகளிலும் சமயச் சார்பற்ற வாழ்முறைகளிலும் ஆன்மநேய ஒருமைப்பாட்டிலும் மாணவர்களுக்கு அக்கறையை ஆசிரியர்கள் துரண்டி வளர்க்க வேண்டும்.

அடுத்து ஆசிரியர்-மாணவர்கள் உறவில் உள்ள ஒரு பிரச்சனை. ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதை மாணவர்கள் ஏற்க முடியாத நிலையில் மாணவர்களில் பலர் மந்த நிலையில் இருப்பது. இன்று பள்ளிகளுக்கு வந்துள்ள மாணவர்களில் பலர், முதல் தலைமுறையாக வந்துள்ளனர். தரமான கல்விச் சூழலுக்குரிய பாரம்பரியம் (Hereditary) சுற்றுப்புறச் சூழ்நிலையும் (Environment) இந்த மாணவர்களுக்கு இல்லை. இவர்களுடைய மூளைப் புலன்கள் முதன் முறையாக இயக்கப்படுகின்றன. கடினத் தன்மை இருக்கலாம். ஆயினும் ஆசிரியப் பெருமக்கள் கடின உழைப்பை மேற்கொண்டால் இவர்களையும் முதல்தர மாணவர்களாக்க முடியும். ஓர் இயந்திரம் ஓடவில்லையானால் அந்த இயந்திரத்தைத் தூக்கியா எறிந்து விடுகின்றோம்? அல்லது இயந்திரத்தை அடிக்கிறோமா? ஓடாத இயந்திரத்தை அடித்தால் பயன் ஏற்படுமா? இயந்திரத்தில் உள்ள பழுதைக் கண்டுபிடித்து பழுதை நீக்குவதன் மூலம் இயந்திரத்தை ஓடவைக்க முடியும். இதுபோன்றதே ஒரு சிறந்த ஆசிரியரின் கடமை. உண்மையான கல்வி முறையும்கூட, ஆசிரியர் மாணவரைப் பயமுறுத்துவதன் மூலமோ, அடிப்பதன் மூலமோ கற்பித்துவிட முடியாது. மாணவரிடம் உள்ள குறைகள் நீக்கப் பெறுதல் வேண்டும். கல்வி கற்பதற்குரிய இனிய உள்ளார்வம் தோற்றுவிக்கப்பட்டாதல் வேண்டும். தண்ணீர் எப்படி மெள்ள மெள்ளக் கல்லையும் கரைத்துவிடு கிறதோ, அதுபோல ஒர் ஆசிரியர் தமது அன்பு நிறைந்த ஆர்வம் கூடிய முயற்சியால் எவ்வளவு மோசமான மாணவனையும் திருத்த முடியும்; அறிஞனாக்க முடியும். தேவை ஆசிரியரின் கருணையே!

நாம் நம்முடைய இளந்தலைமுறை பெறும் கல்வியில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும். இந்தக் கல்விப் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பள்ளி ஆசிரியர்களைப் போற்றுவோம்! அவர்களுடைய வாழ் நிலைகள் உயர உரியனவெல்லாம் செய்ய உறுதி கொள்வோம்!

நம்முடைய கல்வித்துறைக்கு இன்னும் பலமான அஸ்திவாரம் தேவை. இன்றைய சூழ்நிலையில் நம்முடைய கல்வித் துறைக்குப் பலமான அஸ்திவாரம் அமைப்பது கடினமாக இருக்கலாம். ஆயினும் செய்தேயாக வேண்டும். நமது உடல், உள்ளம், ஆன்மா - முக்கியமாகப் பணம் ஆகிய எல்லாவற்றையும் நமது இளந்தலைமுறையினரின் கல்வி வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புச் செய்ய வேண்டும். இன்று சமயத்துறையிலும் அரசியல் துறையிலும் செய்யப்படும் முதலீட்டில் கணிசமான ஒரு பகுதியை பள்ளிகளுக்குச் செய்ய நாம் எண்ணவேண்டும். எண்ணினால் உறுதியாக நடக்கும்.

3. அறிவியல் யாருக்காக?

"அறிவுடையார் எல்லாம் உடையார்" என்றது திருக்குறள். அறிவே வாழ்க்கையை இயக்கக்கூடியது. ஒரு நாட்டுக்குப் பெருமை சேர்ப்பவர்கள் அறிவுடைய மக்களேயாவர். அறிவில்லாத மக்கள் தங்களுக்குத் தாங்களே தீமையும் செய்துகொண்டு மற்றவர்களுக்குத் துன்பமும் இழைப்பர்.

இயல்பாக அமைந்த வாழ்க்கை பதப்படுத்தப்படாத கச்சாப் பொருள் போன்றது. அறிவு நலஞ்சார்ந்த வாழ்க்கையில்தான் வாழ்க்கை வளர்கிறது; பண்படுகிறது; ஆன்மா சிறப்படைகிறது.

அறிவு எது? படிப்பறிவு அறிவுக்கு வாயிலேயாம். படிப்பறிவே அறிவாகாது. வாழ்வறிவுதான் அறிவு. அதாவது வாழ்க்கையை, வாழ்க்கையின் அமைவுகளை நிகழ்வுகளை அணுகும் பாங்கு, ஆய்வு செய்யும் பாங்கு ஆகியனதான் அறிவாகும். காரண காரியங்களை நுண்மாண் நுழைபுலத்துடன் ஆய்வு செய்தலே அறிவுடைமை. வாழ்க்கையில் துன்பங்கள், தீமைகள் ஒவ்வாமைகள் ஆகிய அனைத்துடனும் சமாதானம் செய்துகொண்டு அழுதுகொண்டே அனுபவித்துத் தீர்க்காமல் அவைகளுக்குரிய காரணங்களைக் கண்டு, அக்காரணங்களை அகற்றி நலன்களைப் படைப்பதூஉம், காண்பதூஉம், மானுட வாழ்க்கையின் தொழில்; குறிக்கோள்.

துன்பத்துக்குப் பகை அறிவே! "அறிவு அற்றம் காக்கும் கருவி” என்றார் திருவள்ளுவர். இன்று நம்மிடையில் 'அறிவு' பற்றி நிகழும் கொள்கை என்ன? பல புத்தகங்களில் உரிய கருத்துக்களை மூளையில் ஏற்றி, பின் அவற்றைப் பேச்சாகவும் எழுத்தாகவும் தருவதே அறிவு என்று எண்ணம் பரவியுள்ளது. பல நூல்களைக் கற்பது அறிவு பெறத் தூண்டலாம்; துணை செய்யலாம். ஆனால் செய்களத்தில் பெறுவதே அறிவு. உலக வரலாற்றில் ஒளியைப் பரப்பிய தாமஸ் ஆல்வா எடிசன் மூவாயிரம் பொருள்களை - பொருள்களினூடே உள்ளீடாக இருந்த ஆற்றலைச் சோதித்து அறிந்தார்; அறிவைக் கருவியாக்கினார். அவருடைய புத்தறிவு புவியில் புது ஒளியைப் பரப்பியது. ஆம்! வாழ்க்கையில் துன்பங்களைச் சந்திப்பது இயல்பு. ஆனால், துன்பங்கள் இயற்கை என்றும், துன்பங்கள் மாற்ற இயலாதவை என்றும் எண்ணக்கூடாது; முடிவுக்கும் வரக்கூடாது. நேற்றைய அவலம் இன்றைய அறிவறிந்த ஆள்வினைக்குத் தூண்டு கோள்! இன்றைய அறிவறிந்த ஆள்வினை நாளைய ஆக்கம்! வாழ்க்கையை இன்று, நாளை என்று பிரித்துப் பகுத்தது பக்குவப்படுத்துதலுக்கேயாம். "இன்று மட்டுமே வாழ்க்கை! நாளை யாரறிவார்?" என்று நிலையாமைத் தத்துவத்தின் பிடியில் சிக்கிப் புலம்புதல் அறியாமை. நாளையும் நமது வாழ்க்கை இருக்கிறது. நாளை மட்டும் அல்ல, நாளை மறுநாளும் இருக்கிறது. நாளை மறுநாள் மட்டும் அல்ல, என்றென்றும் ஆன்மா வாழ்கிறது என்பதே உயர் சமய நெறிக்கொள்கை. அது மட்டுமல்ல, நாளைய வரலாற்றில் நினைவு கூறப்படுதலும் வாழ்தல்தானே! வரலாற்றில் நினைவு கூறப்படும் வாழ்க்கையைத்தானே "உளதாகும் சாக்காடு” என்று திருவள்ளுவர் கூறினார்.

ஆம்! இன்று பலர் வாழ்கின்றனர்! இல்லை! வாழ்வது போலக் காட்டுகின்றனர்! ஆனால் உண்மையில் வாழவில்லை. "வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே!” என்ற திருவாசம் அறிக, வாழும் பொழுதே செத்துப் போனவர்களே பயன்பாடு இல்லாத வாழ்க்கையைச் சுமந்துகொண்டு திரிபவர்களே, வையத்திற்குச் சுமையாக இருப்பவர்களே எண்ணற்றோர். இவர்கள் வாழ்வில் செத்தவர்கள்; ஒரு சிலர் சாவில் வாழ்பவர்கள்! மரண வாயிலின் விளிம்பிலும் அறிவு மூச்சுவிட்ட கிரேக்க நாட்டறிஞன் சிந்தனையாளர் சாக்ரடீஸ் நினைவுக்குரியவர். மானுடத்தின் அறிவியல் சார்ந்த அணுகுமுறை நிலவும் வரை சாக்ரடீஸ் வாழ்வார். மரணத்தை வென்று புறங்கண்ட அப்பரடிகள் உழைப்பும் தொண்டும் மானுடத்தின் உயர்நிலையாக நிலவும் வரையில் வாழ்வார். மற்றும் அறியாமையால் இழைத்த இன்னல்களைத் தாங்கிக் கொண்டு அன்பையும் கருணையையும் வழங்கியருளிய ஏசு வாழ்கிறார்! இதுதான் உளதாகும் சாக்காடு! இத்தகு வாழ்வியல் எளிதில் கிடைக்குமா? உடற்சுகமும் சோம்பலும் பேணப்படும் வரை சாதலே மிகுதி! உளதாகும் சாக்காடு ஏது? "உளதாகும் சாக்காடு" பற்றிய அறிவியல் மக்களிடையில் அறிமுகப்படுத்தப்படுதல் வேண்டும்.

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நீறீஇத் தாம்மாய்ந் தனரே

என்று புறநானூறு கூறியது. ஆதலால், துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாது சாவைக்கண்டு அஞ்சாது வாழ்தல் வேண்டும் என்ற அறிவியல் சார்ந்த உண்மையை நமது நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டு, வாழ்தலை விருப்புடன் நிகழ்த்த முன்வரும்படி செய்தல்வேண்டும். வெறும் பிழைப்பு நடத்தாமல் வாழவிரும்பும் மானுடத்தின் கருவியே அறிவுடைமை.

ஆன்மாவிற்கு அழிவில்லை. ஆன்மாக்கள் என்றும் வாழக்கூடியவையே. ஆனாலும் இந்த ஆன்மாக்கள் கால நியதிகளின்பாற்பட்டவை. அதாவது காலந்தோறும் உயிர்கள் பண்பாட்டு வாழ்நிலையில் படிமுறை வளர்ச்சிகளைக் கண்டாக வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் காலத்துடன் இசைந்த வளர்ச்சியை இழப்பின் வாழ்க்கை பாழ்படும். ஆதலால், காலத்தைத் தவறாமல் பயன்படுத்தி மேம்பாடடைதல் வேண்டும். மானுடத்தின் வாழ்வில் முதற்பொருள் காலமே என்பதறிக மக்கள் அறியாமையால் இன்று காலம் பொன் போன்றது என்றும், காலம் கண் போன்றது என்றும் கூறுகின்றனர். இது தவறு மட்டுமல்ல அறியாமையும் கூட காலம் வேறு எதனுடனும் இணைத்துப் பேசக்கூடியதல்ல; உவமிக்கக்கூடியதல்ல.

காலம், காலத்திற்கே நேர்; வாழ்க்கையின் முதற் பொருளும் காலமே என்ற அறிவுப்பார்வை மக்களிடத்தில் பரவிடவேண்டும். காலத்தை நல்ல நாள் என்றும் கெட்ட நாள் என்றும் ‘இராகுகாலம்’ என்றும் ‘சகுணம்’ சரியாக இல்லை என்றும் யோகம் சரியாக இல்லை என்றும் கூறிக் காலத்தை வீணாக்கும் அறியாமையை மக்களிடத்திலிருந்து அகற்றிக் காலம் பற்றிய அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டும்.

மக்கள் தங்களுடைய வாழ்க்கைக்கு அவர்களே பொறுப்பு. மக்களின் வாழ்க்கை அமைபுக்கு வேறு யாரும் காரணமல்ல. ஊழும்கூடக் காரணமல்ல. ஊழ் என்பதும் வாழ்க்கையிலிருந்து பிறந்த தத்துவமே! ஒவ்வொருவரின் பழக்க வழக்கங்களே ஊழ்த்து ஊழாக உருப்பெறுகிறது. மானிடர் தாம் மேற்கொள்ளும் பழக்கங்களில் விழிப்பாக இருக்கவேண்டும். இன்று தொடங்கும் பழக்கம் இன்றோடு நிற்பதில்லை. இன்றைய பழக்கம் சில நாட்களில் வழக்கமாக மாறிவிடும். வழக்கங்களிலிருந்து மனிதர் எளிதில் விடுதலை பெற முடிவதில்லை. ஆதலால் நமது பழக்கங்களும் வழக்கங்களுமே ஊழ் ஆகும். நமது பழக்கங்களும் வழக்கங்களுமே ஊழ் என்பது. அப்பழக்கங்கள் தவிரப் பழகுவதன் மூலமே ஊழினை வெற்றி பெறவேண்டும். “பழக்கம் தவிரப் பழகு மின்” என்றது சாத்திர நூலும், ஊழியல் குறித்த அறிவைத் தெளிவாகப் பெற்றால் வளர்ச்சி வந்து பொருந்தும். நன்றாக வாழலாம். நாடும் வளரும்.

மக்கள், தங்களுடைய வாழ்க்கையுடன் இணைந்துள்ள நிலம், நீர், தீ, வளி, வான் ஆகிய ஐம்பூதங்களைப் பற்றிய அறிவைப் பெறுதல்வேண்டும். நிலம், வாழ்க்கை நிகழும் இடம் மட்டுமல்ல. வாழ்க்கையின் இன்றியமையாத் தேவையாகிய உணவைத் தருகிறது. ஆனால், இன்று பலர் நிலத்தைப் பேணுவதில்லை; நிலத்திற்கு ஒருவகையான உயிர்ப்பு ஆற்றல் இருப்பதை உணர்வதில்லை; நிலத்தை வளமாகப் பாதுகாக்காமல் மண் அரிப்புக்கு இலக்காக்கியும், உரப்படுத்தாமல் பூசாரம் இழக்கச் செய்தும் அழிக்கிறார்கள். நிலத்தின் மேற்பரப்பில் உள்ள மண் கண்டமே பசுமையை கருவுயிர்க்கும் ஆற்றலுடைய மண். இந்த மண் கண்டம் தோன்ற ஒராயிரம் ஆண்டுகள் ஆகின்றன என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். கல்தோன்றி மண் தோன்ற நீண்ட காலம் பிடிக்கிறது. ஆதலால் நிலப்பரப்பின் மேற்பகுதி மண் கண்டத்தை பாதுகாக்கவேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும்? நிலமகள் எப்போதும் பசுமையால் மூடப் பெற்றிருக்க வேண்டும் என்ற அறிவியல் சார்ந்த நோக்கில் மக்கள் வளர்ந்தால் இந்த நாட்டு நிலம் தள்ளா விளையுளாக வளரும், மாறும்!

நிலத்தைப் போலவே, தண்ணிரையும் துய்மையாகக் காப்பாற்றுவதுடன் தண்ணிர் வளத்தையும் பராமரிக்க வேண்டும். பழங்காலத்தில் தண்ணிர் தாராளமாகக் கிடைத்திருக்கும்போல் தெரிகிறது. அதனால் தாராளமான செலவினங்களைத் ‘தண்ணிரைப்போல’ என்று கூறுவதுண்டு. இன்று மழை வளம் குறைவதால் நிலத்தடி நீர் வளமும் குறைகிறது. ஆதலால் நீர் மேலாண்மை அறிவியல் மக்களிடம் வளர்ந்தாக வேண்டும். அதுபோலவே மழை வளத்தை மேலும் மேலும் பெறவும் நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாக்கவும் காடுகள் துணை செய்யும். ஆதலால் நல்ல உயரமான அடர்த்தியாக வளரக்கூடிய மரங்களைக் காடுகளாக வளர்க்கவேண்டும். காடுகள் பல நோக்குப் பயனுடையன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். காடுகள் பற்றிய அறிவியல் சார்ந்த விழிப்புணர்வே மக்கள் நலன் காக்கும். நாட்டின் வளம் காக்கும்.

உயிர், உடல் சார்ந்த வாழ்க்கையை நடத்துகிறது. ஆதலால் உடல், உடலின் இயக்கம், உடலின் தேவைகள் ஆகியன பற்றிய அறிவியல் உணர்வு தேவை. உடம்பு வளர்ந்தால்தான் உயிர் வளரும். “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!” என்றார் திருமூலர். உடம்பு ஒரு அறிவுக் கருவி. உயிரின் அறிவு வாயில்கள் புலன்கள் உயிரின் செயற் கருவிகள் பொறிகள் இவைகளைத் திறம்பட வளர்த்துப் பாதுகாத்துக்கொள்ளும் அறிவியல் பாங்கு மக்களிடத்தில் வளரவேண்டும். நல்ல உணவு, நறுநீர், தூய்மையான காற்று, வெப்ப தட்பம் நிறைந்த வாழ்விடம் ஆகியன நல்வாழ்வுக்கு ஆதாரங்கள். நல்ல உழைப்பும் ஓய்வும் உறக்கமும் வாழ்வுக்குத் தேவை. இவற்றையெல்லாம் பெற்று மக்கள் வாழ்ந்திட, மக்களிடம் அறிவியல் சென்றாக வேண்டும்.

உடலை இயக்குவது உழைப்பு. உலகை இயக்குவது உழைப்பு. உழைப்பினை ஆள்வினை என்பார் திருவள்ளுவர். “அறிவறிந்த ஆள்வினை” என்பது திருக்குறள் குறைந்த நேரத்தில், குறைந்த சக்தியைச் செலவிட்டு உழைத்து அதிகப் பயன் கொள்வது அறிவறிந்த ஆள்வினையாகும். இன்றைய உலகில் உழைப்பை எளிமைப்படுத்திப் பெரும் பயன் அடையச் செய்யக்கூடிய கருவிகள் பல வந்துள்ளன. கருவிகள் உழைப்பே அறிவியல் யுகத்தின் புரட்சி. நாளும் கருவிகளில் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அறிவியல் யுகத்திற்கு ஏற்ற இந்தக் கருவிகளைக் கையாண்டு உழைத்து வாழ மக்களைப் பயிற்றுவிக்கவேண்டும்.

உழைப்பு, மானுடம் கண்ட ஒப்பற்ற பண்பு உழைப்பே உலக வாழ்க்கையின் உயிர்ப்பாக விளங்குகின்றது. உழைப்பும் உற்பத்தி சார்ந்த உழைப்பாக இருப்பது நல்லது “பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை” என்றார் திருவள்ளுவர். பொருள் என்பது என்ன? பணமா? இல்லை; இல்லை! பணம் பிறப்பதற்குக் காரணமாக இருக்கும் உயிர்க்குலம் நுகர்ந்து வாழும் - அதாவது உண்டும் உடுத்தும் அனுபவித்தும் மகிழும் பொருள்களே பொருள்கள். இன்று பொருளின் உண்மையான நிலைமை தெரியாதார் பலர் பண்டங்களைத் தேடாமல் பணத்தையே தேடுகிறார்கள். இன்று நமது நாட்டுச் சமுதாயம் பண மதிப்பீட்டுச் சமுதாயமாகப் போய்விட்டது. அதனால் பணம் பண்ணும் பரிசுச் சீட்டு முதலியனவற்றை அரசே விற்கும் அவல நிலை தோன்றிவிட்டது. இன்று பனத்தால் பணம் சம்பாதிக்கும் ஆர்வமே மக்களிடையே வளர்ந்துள்ளது. ஆதலால் நாட்டை - நாடாக - வளமான நாடாகப் படைத்தளிக்க அறிவியல் சார்ந்த உழைப்பு தேவை.

உலக வாழ்வியலை, உயிரோட்டமாக இருந்து இயக்குவது பொருளியல், பண்டம் மாற்று முறைக்குப் பதிலாக நாணய மாற்றுமுறை வந்த பிறகு இன்றைய செல்வம் உலகந்தழுவிய வடிவத்தைப் பெற்றிருக்கிறது. ஆதலால் பொருளியல் சார்ந்த அறிவியல் தேவை. திருக்குறள்,

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு”

என்று கூறுகிறது. இயற்றலாவது-பொருள் வருதலுக்குரிய புதிய வாயில்களைக் கண்டறிதலும் அவ்வாயில்களுக்குத் திட்ட வடிவம் கொடுத்து இயங்கி உழைத்துப் பொருளை ஈட்டுதலாகும். ஈட்டும் செல்வம் சில்லறையாக அழிந்து போகக்கூடாது. ஈட்டும் செல்வம் “முதல்” ஆகும் தகுதி பெறும் வரையில் காத்தல் வேண்டும். காத்த செல்வத்தை வாழ்க்கையின் துறைகள் பலவற்றிற்கும் வகுத்துப் பயன்படுத்த வேண்டும். பொருளாதார அறிவு, மக்களிடையில் வளர்ந்தால்தான் அவர்களைச் சுரண்டிக் கொழுக்கும் வர்க்கத்தினரிடமிருந்து மக்களைக் காக்க முடியும். மக்கள் பொருளியல் சார்ந்த அறிவியலில் போதிய அறிவு விளக்கம் பெற்றால்தான் பல தலைமுறைகளாக வாட்டி வதைக்கும் வறுமை ஏழ்மையிலிருந்து மக்களை மீட்க முடியும். “உள்ளவர்களுக்கு மேலும் தரப்படும். இல்லாதவர்களிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்” என்ற விவிலிய உரையை ஓர்சு! உணர்க!

இன்று அறிவியல்துறை பலப்பலவாக வளர்ந்துள்ளது. நாளும் வளர்ந்துகொண்டிருக்கிறது. இயற்பியல், உயிரியல், தாவரவியல், வேதியல், மின்னியல் என்றெல்லாம் வளர்ந்து வந்துள்ளன. மேலும் விண்ணியல், பொறியியல், கணிதவியல், கணிப் பொறியியல் என்றெல்லாமும் வளர்ந்துள்ளன; வளர்ந்து வருகின்றன. மேலும் உடலியல், உளவியல், சமூகவியல், ஒழுக்கவியல், அறம் சார்ந்த நீதியியல், பழகும் பாங்கியல் என்ற எண்ணற்ற துறைகள் மானுட வாழ்வியலைச் சுற்றி வளர்ந்துவருகின்றன. இவ்வாறு துறைதோறும் வளர்ந்துவரும் அறிவியலில் மக்கள் தேர்ச்சி பெற்றால்தான் அவர்களுடைய வாழ்வு சிறக்கும்.

இவற்றுள்ளும் சமூகவியல் அறிவு, நமது மக்களுக்கு மிகுதியும் தேவை. ஏன்? நமது மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகச் சாதிப் பிரிவினைகளாலும் மதப் பிரிவினைகளாலும் பிரிந்து கலகம் செய்துகொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள்; வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைய மானுட உலகம் புதிய அறிவியல் உலகத்தில் வளர்கிறது; வாழ்கிறது. அறிவியல் உலகம் நாடுகளைக் கடந்து, கடல்களைக் கடந்து, மலைகளைக் கடந்து புவியுருண்டையை இணைத்து இன்று வெற்றி பெற்றுள்ளது. இன்று எந்தச் சிக்கலானாலும் புவியைச் சார்ந்த சிக்கல்தான். ஆனால் நாட்டு மக்களோ பழைய பானைக்குள் தலையை விட்டுக் கொண்டு தத்துவங்கள் பேசுகின்றனர். இன்று இந்தியா புறவுலக வளர்ச்சியில் 20ஆம் நூற்றாண்டில்தான் இருக்கிறது! ஆனால் இந்தியனின், தமிழனின் மூளையும் உள்ளமும் காட்டுமிராண்டித்தனமான வாழ்ந்த யுகத்திலேயே இருக்கிறது. இந்தியன் மாறவில்லை. தமிழன் மாறவில்லை. ஆதலால் இந்தியர்கள், தமிழர்கள் புத்தம் புதிய உள்ளம் பெற்று சமூக மாந்தர்களாக விளங்க வேண்டும். எந்த நாட்டில் சமூக மனசாட்சி, சமூக உணர்வு, சமூக ஒழுங்கியல், சமூக ஒழுக்கவியல், சிறந்த முறையில் வளர்ந்து, சிறந்த சமுதாயம் வடிவம் பெறுகிறதோ அந்த நாடுதான் வளர முடியும்; வாழ முடியும். இதற்கு இன்று ஜப்பானை உதாரணமாகப் பின்பற்றலாம். ஆயினும் உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஆப்பிரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் எல்லாம் சமூகவியல் சிறப்பாக இருக்கிறது. அந்த நாடுகளின் மக்கள் நாட்டுக்காக உழைக்கிறார்கள்; நாட்டுக்காக வாழ்கிறார்கள். நமது நாட்டிலோ நாட்டையே திருடி வீட்டுக்குக் கொண்டுபோவதே மிகுதி. இந்த நாட்டில் எப்படி சமூகம் உருவாகும்? “ஒருவன் எல்லோருக்காகவும் எல்லோரும் ஒருவருக்காகவும்” என்ற சமூகவியல் அறிவு, உணர்வு, ஒழுக்கம் நமது மக்களைச் சென்றடைய வேண்டும். அன்று தான் நமது நாடு வளரும்; வாழும்.

சமூக அமைப்புக்கும் இயக்கத்துக்கும் உந்து சக்தி அன்பு. அன்பு ஒரு ஆற்றல் நிறைந்த மொழி. அன்புணர்வும் அன்புணர்வு சார்ந்த ஒழுக்கமும் வாழ்வியலும் ஆயிரம் மேடைகளிலும் உயர்ந்தவை, அன்பின் மொழி மெளனப் புரட்சி செய்யும்; எண்ணற்றோரை இணைக்கும்; ஒரு நெறிப்படுத்தும். இத்தகு அன்பினை காட்டுதல் - பெறுதல், அன்பின் பயணத்தின் தடைகளை அறிதல், தடைகளை விலக்கி அன்பால் திணைந்த மாந்தருலகத்தைக் காணுதல் ஆகிய வாழ்க்கைப்பற்றிய அறிவியல் இன்றைய தேவை; உடனடியாகத் தேவை. புவிக்கோளம் அழியாமல் பாதுகாக்க, அன்பினால் உருப்பெறும் மானுடத்தினாலேயே இயலும்; முடியும்.

இந்த நூற்றாண்டில் ஒரு அறிவியல் பற்றிப் பேசாது விட்டால் கற்றுத் துறைபோய அறிஞருலகம் மன்னிக்காது. அது எந்த அறிவியல்? அதுதான் அரசியல். அரசியல் என்பது ஓர் அறிவியலேயாம். இதனை Political science என்பர். ஆனால் நமது மக்களில் பலருக்கு இல்லை. இல்லை! இன்று நாம் காண்பது கட்சிகள்! கொடிகள்! தலைவரைப் புகழ்தல்! கட்சிக்காரரே சுற்றம் - நாட்டு மக்கள் என்பனதான்! நமது நாட்டு மக்களோ தேர்தலில் வாக்களிப்பதை ஒரு தீராக் கடமையாகச் செய்து முடிக்கின்றனர். ஆனால் அரசியல் அறிவு இல்லாது போனாலும் மக்கள் கட்சிகளின் போக்கில் விருப்பு வெறுப்புக்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தேர்தல் முடிவுகளில் புலனாகிறது. விருப்பு-வெறுப்புக்கள் மட்டுமே அவற்றின்பாற்பட்ட உணர்ச்சிகள் மட்டுமே நிரந்தரத் தீர்வைத் தந்துவிட முடியாது. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கக்கூடிய வகையில் மக்களாட்சி அமையத்தக்க வகையில் உள்ள கொள்கை, கோட்பாடு உடையவர்களை மக்கள் ஆதரித்து ஆட்சியில் அமர்த்த வேண்டும். ஆட்சியின் திட்ட்ங்கள், செயற்பாடுகள் அவற்றில் உள்ள குற்றங் குறைகள் முதலியவற்றை மக்கள் கூர்ந்து கவனித்து விமர்சனம் செய்யும் அறிவைப் பெற்றால்தான் நல்ல அரசு அமையும். மனிதன் பயமின்றிச் சுதந்திரமாகப் பேச, எழுத வாழ வாய்ப்பு வேண்டும். -

அறிவியலில் மணிமுடியாகத் திகழ்வது சமயம். சமயமும் ஓர் அறிவியலேயாம். அறிவியல் துறையில் உயிரியலில் சமயவியல் வருகிறது.

“அறிவுதந்தெனை ஆண்டுகொண்ட
அற்புதம் அறியேனே!”

என்பது திருவாசகம்.

உயிர் நிறைநலம் பெறுதலே வாழ்க்கையின் நோக்கம்; குறிக்கோள். அந்நிறைநலமாகிய இன்ப அன்பினை நோக்கித் தொடங்கிய பயணமே வாழ்க்கை. இன்றோ சமயவியல் அறிவியலாக விளங்காமல் மூடத்தனம் நிறைந்த கொள்கைகள், கோட்பாடுகள், பழக்கங்கள், வழக்கங்கள், சடங்குகள், நிறைந்து பயனற்றுப் போனதோடன்றி, நம்முடைய காலத்தையும், ஆற்றலையும், செல்வத்தையும் கொள்ளையடிக்கிறது! இவை மட்டுமா! மனிதத்தை முட்டாளாக்கி பயமுறுத்தி ‘கடவுள் கோபம்’ என்றெல்லாம் சொல்லி, வாழ்க்கையைக் கெடுக்கின்றது! கடவுள் ஒருவர் தான்! ஒருவரே தான்! சத்தியமாக வேறொரு கடவுள் இல்லை! இதுவே உண்மை. ஒரே கடவுளை வணங்கும் மாந்தர்களிடையில் மதங்களைப் படைத்து, வேற்றுமையை வளர்த்து பகைமையை மூட்டி இந்தப் புவியைக் கலகக் காடாக்கி வருகின்றனர். இதுவல்ல சமயம் !

சமயம் ஒரு சிறந்த-அறிவியலுள் சிறந்த அறிவியலாகும். குறைவிலா நிறைவாக, கோதிலா அமுதாக, அறிவுக்கு அறிவாக, நன்றாக, இன்பமாக விளங்கும் பரம்பொருள் நெறி நின்று, எண்ணி வாழ்தல் மூலம், உயிர்கள் தாமும் நிறைநலம் பெறுதலே, சமயவியல். இத்தகு சமயவியல் அறிவு, மக்களைச் சென்றடையாதவரை அவர்கள் ஞானம் பெறமாட்டார்கள். இந்த மண்ணகம் விண்ணகமாகாது.

இந்த யுகம் அறிவியல் யுகம். இந்த அறிவியல் யுகத்தில் அறிஞர்கள் மக்களுக்காக அறிவியலை வளர்த்து மக்களை அறிவியல் நெறியில் ஈர்த்து, இணைத்து, அழைத்துச் சென்றாலே, மன்பதை சிறக்கும்; வையகம் வளரும்; வாழும்!

4. தமிழ்ப் பல்கலைக் கழக
அறக்கட்டளைச் சொற்பொழிவு


1-8-1991


1.மக்களுக்காக அறிவியல்

மானுட வாழ்க்கை

வாழ்க்கையென்பது இன்னமும் பூரணமாக விளக்கப் பெறாதது. வாழ்க்கையென்பது ஒரு அந்நிய மொழி போலவே இன்றுவரை விளங்குகிறது. எல்லாரும் இதைத் தவறாகவே உச்சரிக்கிறார்கள்.

மானுட வாழ்க்கை மாயையுமல்ல. பொய்யும் அல்ல; கற்பனையும் அல்ல; விபத்தும் அல்ல. இந்த வாழ்க்கை உண்மை; முற்றிலும் உண்மை, மானுட வாழ்க்கை வாய்த்ததே ஒரு நல் வாய்ப்பு. மானுட வாழ்க்கை அருமையானது; மதிப்புயர்வுடையது.

“வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி” என்பது திருமுறை மொழி.

மானுடம் பெற்றுள்ள அறிவுக் கருவிகள் ஐம்புலன்கள். மானுடத்திற்கு வாய்த்துள்ள செயற்கருவிகள் ஐம்பொறிகள். மானுடம் அற்புதமானது. மானுடம் வெற்றி பொருந்திய வாழ்க்கையை நடத்த வேண்டும். மானுடம், மானுடத்தின் தோற்றம் விந்தைமிகு அறிவியல் ஆக்கமாகும். இந்த மானுடம் தோற்றத்திலும் சரி, மானுடம் வாழும் புவிக் கோளத்திலும் சரி, எத்தனை கோடி இன்பச் சூழல்கள்! இயற்கை வளங்கள்! இவற்றில் மானுடம் அனுபவித்துவரும் மகிழ்ச்சி அனுபவங்களை எண்ணத்தான் இயலுமா? இந்த உலக அமைப்பில் மானுடத் தோற்றத்தில் எத்தனை எத்தனை அறிவியல் நுட்பங்கள்! யாரோ, எவரோ, எதுவோ ஒன்றின் செயல்திறன் புவிக்கோள இயக்கத்தில் வெளிப்படுகிறது. இந்த உலகத்தின் அமைப்பிலும், விளக்கத்தக்க இயக்கத்திலும் ஏதோ ஓர் ஒழுங்குமுறை பிறழா நிகழ்ச்சி இருக்கிறது. அது எதனால்? நிச்சயமாக மனிதனைவிட மேம்பட்ட சக்தியாக இருக்க வேண்டும். அது கடவுளைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்? என்ற சிசிரோ என்னும் அறிஞனின் கருத்து சிந்தனைக்குரியது.

ஒரேயொரு சவ்வரிப் பிரமாணமுள்ள விந்து தாயின் கருப்பையில் அற்புதமான மானுட உடலை உருவாக்குகிறது! இந்த உலகப் படைப்பில் - இயக்கத்தில் மனிதனுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்று இருக்கிறது. அறிவுக்குப் புலனாகாத ஒரு இரகசியம் இருக்கிறது. இன்னமும் ஆய்வுக்குரியதாகவே அமைந்து இருக்கிறது. சிலர் அது கடவுள் என்பர்; சிலர் இயற்கை என்பர்; இன்னும் இது விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. மானுடம் உடல் அல்ல; மானுடம் உயிர் அல்ல. மானுடம் உடம்பும் உயிரும் இணைந்தது. உயிர் அறிவுக் கருவிகள் பொருந்திய - புலன்கள் அமைந்த நுண்ணுடம் புடையது. மானுடத்தின் உடல், செயற்பாட்டுக்குரிய பொறிகள் அமைவுடன் கடியது. மானுடம் வெற்றிக்குரியது. மானுடம் வென்று விளங்குவதற்குரிய அமைவுகள் பலவும் கூடியது. அதனாலன்றோ கம்பன், “மானுடம் வென்றகம்மா!” என்று கூறுகின்றான்.

மானுட வாழ்க்கை ஒரு தொடர் நிகழ்ச்சி. மானுடத்தின் வாழ்க்கை என்று நிறைவு பெறும்? என்று முடியும்? யார் கண்டது: மானுடம் வெற்றி பெறுவது மானுடத்தின் வாழும் தரத்தைப் பொருத்தது. மானுடம் எதிர்பார்ப்புகள் பல உடையது. வரலாறே மானுடத்தால் தான் இயக்கப் பெறுகிறது. மானுடம் முதலில் வாழ்தல் வேண்டும். பிழைப்பு நடத்தக்கூடாது. வாழும் மாந்தர் சிலரே! பலர் பிழைப்பு நடத்துகின்றனர்; உண்டு, உறங்கிக் காலங்கழிக்கின்றனர்; வெந்ததைத் தின்கின்றனர் விதி வந்தால் சாகின்றனர். என்னே கொடுமை!! உண்டு உறங்கிச் சாவதற்காகவா வாழ்க்கை அல்லது கலகப் பூச்சிகளாகச் சிலநாள் வாழ்ந்து சாவதற்காகவா? இல்லை, இல்லை! மானுடம் வாழ்வதற்கே!. புலன்களை, பொறிகளை வென்று விளங்கும் வாழ்க்கையே வாழ்க்கை!

உருண்டோடும் நாள்கள் ஊனை வளர்ந்திடும்; உடலை வளர்த்திடும். ஆனால் உயிரை வளர்க்காது; உணர்வை வளர்க்காது. உயிரையும் உணர்வையும் வளர்க்கும் முயற்சி ஆன்மாவுக்குத் தேவை! ஆம்! கருவிகளைப் பயன்படுத்தத் தெரிந்த மனிதன் உலகியலில் வெற்றி பெறுகிறான். அது போல், தமது பொறிகளை முறையாகப் பயன்படுத்தக் கற்றுக் கொண்ட மாந்தனும் வளர்கின்றான்; வெற்றி பெறுகின்றான். பொறிகள், மதம் பிடித்த யானைகள்! இவைகள் மாவுத்தனைத் தம் தம் திசையில் இழுத்துச் செல்லும்! இப் பொறிகளை அடக்கி வெற்றி கொண்டு தாம் விரும்பியவாறு இயக்கிப் பயன்கொள்வதே மானுடத்தின் வெற்றி. பொறிகளின் மீது தனியரசாணை செலுத்தும் மானுடம் வெற்றிபெறும். மானுடம், மானுட வாழ்க்கை இயக்கத் தன்மையுடையது. தேக்கம் மானுடத்திற்குப் பகை! ஆதலால், மாந்தன் ஓயாது ஒழியாது செயற்பட்டால் வெற்றி பெறுவான்.

மானுடத்திற்கு விரிந்து பரந்த செயற்களம் இயற்கையாகவே அமைந்துள்ளது. செயற்பாட்டுக்கே உரிய புலன்களும் பொறிகளும் அமைந்துள்ளன. மானுடம் தொழில் புரிதலையே இலட்சியமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். மானுடம் தொழில் செய்வதிலேயே வளர்கிறது! பக்குவப்படுகிறது. மானுடம், மானுடத்தின் வளர்ச்சிக்காக அமைந்த புவிக்கோளத்துடன் பொருந்தித் தொழில் புரிதல் வேண்டும்! உடன் பிறந்து வாழும் மாந்தருடன் கூடித்தொழில் புரிதல் வேண்டும். மானுடம் பொய்யாய், கனவாய், பழங்கதையாய்ப் போய்விடக்கூடாது. மானுட வாழ்வு முழுமையுடையதாக அமையின் மானுடம் வெற்றிபெறும்! இந்த வையகம் பயன் பெறும்; வரலாறு சிறக்கும்; இந்தப் புவிக்கோளத்தில் வளம் கொழிக்கும்; எல்லாரும் இன்புற்று வாழ்வர்!

மானுடத்தின் வளர்ச்சி

இந்தப் புவிக்கோளத்தில் உயிர்க்குலம் தோன்றிப் பல நூறாயிரம் ஆண்டுகள் உருண்டோடிய பிறகு பரிணாம வளர்ச்சியில் மனித குலம் தோன்றியது. உயிர்க்குலம் - மனிதகுலம் படைக்கப்பட்டதன்று. உயிர் என்றும் உள் பொருள் “உள்ளது தோன்றாது இல்லது வாராது” என்பது கோட்பாடு! மனித குலம் தோன்றி மெள்ள மெள்ள இன்றுள்ள நாகரிக நிலைக்கு வளர்ந்து வந்திருக்கிறது. ஆதி மனிதன் நிர்வாண நிலையில் திரிந்தான். குடும்ப அமைப்பு இல்லை. முதலில், கிடைத்ததைத் தின்றான். பின் மெள்ள உள்ளிருந்து உந்திச் செலுத்திய உணர்வினாலும் நடைமுறை களினாலும் கருவியைக் கண்டு பிடித்தான். மனித நாகரிகம் மனிதனுக்குக் கருவித் தொடர்பு கிடைத்ததிலிருந்து தான் மாறி வளர்ந்து வருகிறது. முதலில் கல், கம்பு முதலியன கொண்டு வேட்டையாடினான். அதன்பின் ஈட்டி, வில் - அம்பு முதலியன கண்டு வேட்டையாடினான். இறைச்சியைச் சுட்டுப் பக்குவப்படுத்தித் தின்றான். பாலுணர்வு - மான உணர்வு தலைதூக்கியது. தழைகளை உடுத்துக் கொண்டான். அதன்பின் மெள்ள மெள்ள ஆடை உலகத்திற்கு வளர்ந்து வந்தான். வேளாண்மை செய்தான். விலங்குகளை வளர்த்தான். குகைகளில் வாழ்ந்தவன் வீடுகள் கட்டினான்.

தொடக்க காலத்தில் மனித குலம் இயற்கைக்கு அஞ்சி வாழ்ந்தது. பின் இயற்கையைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டது. இப்போது மனிதகுலம் இயற்கையை வென்று வாழத் தலைப்பட்டுள்ளது. இந்தச் சாதனையை மனித குலம் செய்ய முடிந்தது சிந்தனை செய்யும் இயல்பினாலேயாம். இன்று மனிதன் காலத்தையும் காலனையும் வென்று விளங்குகின்றான். இன்று தூரம் ஒரு பிரச்சனையல்ல. உலகம் சுருங்கி வந்துவிட்டது. இன்றைய மனிதன் அறிவியலைக் கருவியாகக் கொண்டு சந்திரன் இயல்பு கண்டு ஆராயத் தலைப்பட்டுள்ளான். கண்டம் விட்டுக் கண்டம் செல்லும் ஏவுகணைகள் செய்துள்ளான். மனிதனின் வளர்ச்சி அற்புத மானது; அதிசயிக்கத் தக்கது. ஆயினும் உலகியலில் வளர்ந்துள்ள அளவுக்கு அருளியலில் வளரவில்லை. நயத்தக்க நாகரிகம் வளரவில்லை.

மனித நாகரிகம் மேம்பாடு அடையாமல் பழைய சரித்திரத்தை நோக்கித் திரும்பச் செல்கிறது. கற்கால மனிதர்களைப் போலக் கலகம் செய்கிறான். விரிந்த பரந்த உலகத்தில் வாழ்வதறிந்தும் சின்னப் புத்தியையே பாராட்டுகிறான். திரும்பவும் மனிதனை மடைமாற்றம் செய்து வாழச் செய்ய வேண்டும்.

மூட நம்பிக்கை

அறிவியல் வளர்ந்து வருகிறது; நாளும் வளர்ந்து வருகிறது. அதேபோழ்து மனிதர்களிடம் உள்ள மூட நம்பிக்கைகள் அகன்றனவா? இல்லை? மூட நம்பிக்கைகள் அகலாத நிலையில் அறிவியல் வளர்ச்சி போதிய பயனைத் தராது. விமானத்தில் பறக்கும் நிலைக்கு வளர்ந்த மனிதன் கருப்பர் வாழும் பகுதியெனப் பிரித்தல் முறைதானா? ஆதி திராவிடர் வாழும் காலனி என்று ஒதுக்குதல் அறிவுடைமையா? இதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இனம், சாதி வேறுபாடற்ற மனித குலத்தை உருவாக்காத நிலையில் விமானத்தால் என்ன பயன்? “யாதும் ஊரே ! யாவரும் கேளிர்!” என்ற இலக்கியம் வாழ்வாகாமல் உலகஞ் சுற்றி வருவதில் என்ன பயன்? மனிதன் என்ன பருந்தா? கழுகா? சமூகச் சிந்தனையும் மனித நேயமும் இல்லாதவர்கள் - இன்று ஏற்றுக்கொள்ளும் மத யாத்திரரை பலப்பல.

உலகம், கோள்களால் இயங்குகிறது. கோள்கள், மனிதனின் கைக்கு எட்டிய அனுபவத்திற்கு வரும் நாள் தூரத்தில் இல்லை என்பதைச் சந்திரனுக்கு மனிதன் சென்றதன் மூலம் அறிவியல் நிரூபணம் செய்திருக்கிறது. ஆக, உலக இயக்கத்திற்குச் சாதனமாக உள்ள கோள்கள் - கிரகங்கள் தெய்வங்கள் அல்ல; அவை வணங்கத் தக்கவையல்ல. பயன்படுத்திக் கொள்ளத்தக்கன என்ற உண்மையை உணர வேண்டாமா? கிரகங்களைப் பற்றிய அறிவு இன்று வளர்ந்துள்ளது. சந்திரனைக் கண்டு எட்டிப் பிடித்த பின்னும் மற்ற கிரகங்களைக் காணும் முயற்சி நடப்பதறிந்தும் நவக்கிரக வழிபாடு செய்யலாமா? இது பக்தித் துறையிலுள்ள மூடநம்பிக்கை. பகுத்தறிவுத் துறையிலும் மூடநம்பிக்கைகள் இல்லாமல் இல்லை.

கிரகங்களின் சஞ்சாரத்திற்கும் நமது நரம்பு மண்டலத்திற்கும் உறவு இருக்கிறது. அதனால் கிரகங்களின் நகர்வு களுக்கும் இயக்கத்திற்கும் ஏற்ப, நமது நரம்பு மண்டலத்தில் பாதிப்புகள் ஏற்படும். இந்தப் பாதிப்புகள் நமது உடலியக்கத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்தப் பாதிப்புகளிலிருந்து உடலை - உடலியக்கத்தைக் காத்துக் கொள்வது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது அறிவுடைமையேயாகும். ஆனால் பகுத்தறிவுவாளர் இதை மூடநம்பிக்கை என்று சொல்கின்றனர். இது தவறான அறிவியலுக்கு முரணான முறை.

நல்ல உடல், நோயை எதிர்த்துப் போராடிப் பாதுகாத்துக் கொள்ளும். உடல், வலிமை குன்றின் தற்சார்புச் சூழ்நிலைகளால் பாதிக்கப்பெற்று நோய் உருவாகிறது. எனவே நோயின்றி வாழ்தலும் நோய் வந்தால் மருத்துவம் செய்து கொள்ளும் முறையும் வளர வேண்டாமா? நோயில்லாமல் நெடியநாள் வாழும் முறைமையைக் கற்றுக் கொள்ள வேண்டாமா?

வளமும் வாழ்வும் மானுடத்தின் படைப்பு. உழைப்பே மூலதனம். முயற்சியே முன்னேற்றத்தின் படி விதி என்பது என்ன? என்றெல்லாம் தெரிந்து கொண்டு அறிவறிந்த ஆள்வினையுடன் வாழவேண்டாமா? விதித் தத்துவத்தின் பொருள் புரியாமல் ஆற்றல் மிக்க வாழ்க்கையை முடக்கிப் போட்டு ஆண்டாண்டு காலமாக அழுதுகொண்டிருப்பது நியாயமா ? திருஞானசம்பந்தர் அருளியதுபோல் ஊனமுடையாராக வாழலாமா?

"அவ்வினைக் கிவ்வினை யாமென்று
சொல்லும் அஃதறிவீர்,
உவ்வினை நாடா திருப்பதும்
உந்தமக்கு ஊன்மன்றே!”

வாய்த்த பிறப்பிற்கு ஏற்ப முறையாக வாழும் ஆர்வம் வேண்டும். ஆன்ற அறிவு வேண்டும். ஆக்கம் பல நல்கும் ஆள்வினை வேண்டும்.

விதியை நிர்ணயிப்பது எது?

இந்திய தத்துவ ஞானத்தில் ஊழ் - விதி என்பது மேலாதிக்கம் செய்வது ‘விதி’ என்பது என்ன? வீதி - விதி என்னும் சொற்களை ஒப்புநோக்கிப் பொருள் கொள்க. பலகாலும் பலரும் நடப்பது வீதி. பலகாலும் பலரும் தனி மனிதரும் பழகுவது விதி - ஊழ் விதி, வாழ்க்கையின் துறைதோறும் உண்டு! விதி பற்றி எண்ணுவது தவறில்லை. ஆனால், விதி மாற்ற முடியாதது என்ற கருத்து ஏற்புடைய தன்று. விதி, பழக்கங்களால் வழக்கங்களால் ஆவது. மனிதன் பழக்கங்களின் வயப்பட்ட பிராணி என்று சொல்லும் வழக்குண்டு. பழக்கங்கள் மனிதன் எடுத்துக் கொள்பவை; எளிதில் கைவிடக்கூடியவை. பழக்கத்தின் முதிர்ச்சி வழக்கங்கள்! வழக்கங்கள் மனிதன் மீது ஆதிக்கம் செலுத்தும் இயல்புடையன. மனிதன் எளிதில் வழக்கங்களிலிருந்து மீளான். இந்த வழக்கங்களை ‘விதி’ என்றும் கூறலாம். ஆக, மனிதனின் பழக்கங்கள் வழக்கங்கள் ஆகின்றன. வழக்கங்கள் விதிகள் ஆகின்றன.

இந்த விதிகள், சிந்திக்க மறுக்கும் மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன என்பது ஒரு நம்பிக்கை, இவையெல்லாம் உண்மையும் கூட. நாளும் மனிதன் தன்னைப் புத்துயிர்ப்புச் செய்து கொள்வனாயின் விதி மேலாதிக்கம் செய்யாது. நேற்றைய தவறுகளைத் திருத்திக் கொள்ளத்தானே இன்றைய வாழ்க்கை. விதி மாற்ற இயலாதது என்ற கருத்து ஆட்சேபனைக்குரியது; ஆய்வுக் குரியது. விதியின் அமைவை மாற்ற முடியாதெனில் பிறப்பு ஏன்? அறிவு ஏன்? கடவுள் ஏன்? மனிதனின் விதியை மனிதனே நிர்ணயிக்கிறான்; முடிவு செய்கிறான். அவரவர் செய்த செயற்பயனை அவரவரே துய்ப்பதிலிருந்து தப்பித்துக் கொள்ளாமல் முறைப்படுத்துவது நியதி. இந்த நியதி ஒரு மேலாண்மையின் வழி விருப்பு வெறுப்பு இல்லாமல் செய்யப்படுகிறது.

வாழ்க்கையென்பது கட்டிமுடிக்கப் பெற்ற மாளிகையல்ல. மனிதன் முயன்று கட்டிக் கொண்டே இருக்கும் மாளிகை. மனிதன் வாழத் தொடங்கினால் அவன் வாழ்வு வளரும்; மாற்றங்களைப் பெறும். “விதிக்கு விதி செய்வதை”க் கம்பனும் ஏற்றுப் பாடியிருக்கிறான், “ஊழையும் உப்பக்கம் காணலாம்” என்பது வள்ளுவம். ஊழ் - விதி அவனவனுடைய தனி வாழ்க்கையில் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அது எப்படி சமூகத்தைப் பாதிப்படையச் செய்ய இயலும்? ஒரு மனிதனைத் தாழ்த்தப்பட்டவனென்றும் ஏழை என்றும் தாழ்த்தவோ ஒடுக்கவோ எந்த விதிமுறைக்கு அதிகாரம் வந்தது? அந்த அதிகாரத்தை வழங்கியவர் யார்? ஒழுக்கங்கள்தான் காரணம் என்றால் நடைமுறையில் அப்படி அல்லவே! இன்று தாழ்த்தப்பட்டவன் பிறக்கிறான். பார்ப்பனன் பிறக்கிறான். ஏழை பிறக்கிறான். முதலாளி பிறக்கிறான். இது சாத்தியமா? நடைமுறையா? அல்லது நியாயம்தானா? இல்லை! இந்த அநியாயங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இவை சமூக நீதியின்மையால் சமூக விதிகளை மீறிய கொடிய செயல்கள்! சமூக ஊழ் என்றும் கூறலாம். சமூக விதி, தனி மனிதனைப் பாதிக்கிறது. தனி மனித விதி சமூகத்தையும் பாதிக்கிறது. ஆதலால் மனிதனின் வாழ்க்கை விதியை நிர்ணயிப்பது அவனுடைய அறிவறிந்த ஆள்வினையே! இடையீடு இல்லாது சோர்வு இல்லாது செய்யும் முயற்சிகளே! நாளும் நாளும் வளரும் உழைப்பின் ஆக்கமே மானுடத்தின் வாழ்க்கை பயன்; எல்லாம்! ஊழே துணை செய்யாது போனாலும் மனிதன் வெற்றி பெறுவான்! மனிதன் தலை விதியை அவனே நிர்ணயிக்கிறான்! -

அறியாமை

“அறிவுடையார் எல்லாம் உடையார்” என்றது திருக்குறள்! அறிவே வாழ்க்கையைப் பயனுடைய வகையில் இயக்குவது. நாட்டுக்குப் பெருமை, மக்கள் தொகையின் அளவல்ல; அறிவுடைய மக்கள், அறிவறிந்த ஆள்வினை யுடைய மக்கள் சிலர் வாழ்ந்தாலும் அந்த நாடு வளரும்! பெருமையுறும். அறிவில்லாத மக்கள் நாட்டுக்குச் சுமை! அறிவில்லாத மக்கள் தங்களுக்குத் தாங்களே தீமை செய்து கொள்வர். மற்றவர்களுக்கும் காரணமில்லாமலே துன்ப மிழைப்பர்; அறிவில்லாதவர்களே மூட நம்பிக்கைகளில் முடக்குண்டு கிடப்பர். அறிவில்லாதவர்கள் தாமும் வாழார்; மற்றவர்களையும் வாழவிடார். அறிவில்லாதவர்கள் சிந்திக்க மறந்து விடுவர். இல்லை, இல்லை! சிந்திக்க மறுத்துவிடுவர். அறிவில்லாதவர்கள் சொன்னாலும் கேட்கமாட்டார்கள்; கேட்டாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்; செயல்பட மாட்டார்கள்; வாழவும் மாட்டார்கள். அறிவில்லாதவர்கள் கழனியில் பதர்ப் பயிர் அனையர்; ஆம், தலை விரித்தாடுவர்! அகங்காரத்துடனிருப்பர். இவர்கள் மூர்க்கர்கள். ஒரு பெரிய கொடுமை அதிசயம் இவர்களுக்கு தமக்கு அறிவில்லை என்பது தெரியாததுதான். இல்லை என்று தெரிந்து கொண்டால்தான் தேடுவார்களே!

அறியாமை கொடுமையானது. அறியாமை சாபக்கேடு! அறிவு ஆக்கம் அறிவு இன்பம், அறிவு வாழச் செய்யும்; அறிவு புகழ் சேர்க்கும்; அறிவு பெரியாராக்கும்.

குழந்தை பிறக்கிறது! மனிதன் பிறக்கவில்லை. மனிதன் உருவாகின்றான்! மனிதன் உருவாக்கப்படுகின்றான். குழந்தை மனிதனாவது உருவத்தால் மட்டும் அல்ல. அறிவால் தான் மனிதன் உருவாகின்றான்! அறிவில்லாதவர்கள் உருவத்தில் வளர்ந்தாலும் “மக்களே போல்வர்” தான்! உறுப்பொத்தல் மக்கள் ஒப்பல்ல. பதப்படுத்தப்படாத சக்காப்பொருள் தொழிலுக்குப் பயன்படாது. அதுபோலத்தான் அறிவு நலம் இல்லாத மனிதன் எதற்கும் பயன்படான். அறிவு நலஞ் சார்ந்த வாழ்க்கையில் வளர்ச்சி உண்டு; மாற்றங்கள் உண்டு; வளம் சேரும்; வாழ்க்கை சிறக்கும்; புகழ் பூத்த வாழ்வு அமையும். அறிவு குற்றங்களினின்று மீட்டு எடுக்கும். அறிவு குறைகளைத் தவிர்க்கத் துணை செய்யும்.

அறிவு எது? கற்ற கல்வி அறிவாகுமா? தகவல்களும் செய்திகளும் தெரிந்தால் அறிவாகுமா? தொடுத்த வினாக்களுக்கு விடை சொல்லுவது அறிவாகுமா? இல்லை, இல்லை! இவையெல்லாம் அறிவின் வாயில்கள். நல்ல பயன்களைத் தருவது அறிவு. நல்ல காரியங்களை நாளும் நாடிச் செய்தல் அறிவு. ஊக்கம் கைவிடாதது அறிவு. சூழ்நிலைகளை அறிவு வென்று விளங்கும். கவனமான உழைப்பு, உறுதியான உழைப்பு அறிவுக்கு அடையாளம்!

அறிவுக்கு வாயில்கள் பலப்பல. ஆனாலும் அறிவு வெளிப்பட்டுத் தோன்றும் களம் சிந்தனை! கல்வி, கேள்வி, செயல் ஆகியன அறிவின் வாயில்கள்! கற்ற அறிவு, கேட்ட அறிவு, நுண்ணறிவு, பட்டறிவு என்று அறிவு பலப்பல. நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை, தன் வாழ்க்கையின் நிகழ்வுகளை அறிவுப் பாங்குடன் அணுகுவது அறிவு; அறிவியல். எந்த நிகழ்வுக்கும் எது அடிப்படை? காரணம் எது? காரியம் எது? பயன்பாடு என்ன? என்றெல்லாம் ஆய்வு செய்து வாழச் செய்தல் அறிவுதான்!

வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் நிகழ்வுகள்! தீமைகள்! துன்பங்கள்! ஒவ்வாமைகள்! இவைகளைத் தாங்கிக்கொண்டு அனுபவிப்பதா? அல்லது போராடி வெற்றி பெறுவதா? இந்த வினாக்களுக்குரிய விடையில்தான் அறிவின் மாட்சி புலப்படும். “துன்பங்களும் துயரங்களும் இயற்கை, வினைப் பயன். இவைகளை அனுபவித்துத்தான் தீரவேண்டும்! தீர்வே இல்லை” - என்று மூடத்தனத்தில் மூழ்கி அழுது அழுது வாழ்தல் அறியாமை. வாழ்வதற்குப் பதில் வாழ்க்கையைத் துாக்கிச் சுமப்பது அறியாமை.

அறிவு

மனிதன் - மனிதகுலம் அறியாமையிலிருந்து விடுதலை பெறவேண்டும். மனிதன் அறிவுப் பிராணி. ஆனால், இயல்பாக அறியாமையில் கிடந்துழல்கின்றான். ஏன் இந்த அவலம்? அறியாமை என்றால் என்ன? பெரும்பாலோர் தங்களுடைய அறியாமையையே அறிவு என்று பறைசாற்றிக் கொண்டு உலாவருகின்றனர். ஐயோ.. பரிதாபம்! “அறிவுடையோம் யாம்!” என்னும் செருக்கே அறியாமைதான்! அறியாமை என்பது ஒன்றும் தெரியாமையன்று. யாதொன்றும் அறியாதார் உலகில் அன்றும் இருந்ததில்லை; இன்றும் இல்லை. இனிமேலும் இருக்கமாட்டார்கள். அப்படியானால் அறியாமை என்பது என்ன? ஒன்றைப் பிரிதொன்றாக முறை பிறழ உணர்தலுக்கு அறியாமை என்று பெயர். அதாவது நல்லதைத் தீயதென்றும் தீயதை நல்லது என்றும் இன்பத்தைத் துன்பம் என்றும் துன்பத்தை இன்பம் என்றும் முறை பிறழ உணர்வது அறியாமை.

‘நன்றுடையானை, தீயதில்லானை’ - என்பது தேவாரம். நன்றுடையான் என்று கூறினாலே போதும்; தீயதில்லான் என்று எதிர் மறையாகவும் கூறியது எதனால் என்று ஆய்வு செய்க! மக்கள் நன்மை, நல்லது, நன்று என்று எண்ணிக்கொண்டிருப்பவை பல தீமையும் கலந்த நன்மையேயாம். எது நன்று? எது நன்மை? எங்கும் எப்பொழுதும் - எல்லாருக்கும் எது நன்மை பயக்குமோ அதுவே நன்மை. ஒருபொழுது நன்மையாக இருப்பது பிறிதொரு பொழுது தீமையாக்வும் இருப்பது நன்மையாகாது. அதுபோலவே, ஒருவருக்கு நன்மையாகவும் பிறிதொருவருக்குத் தீமையாகவும் இருப்பது நன்மையாகாது. அதனால் மக்கள் நன்மையென்று கருதிக் கொண்டிருக்கும் தன்மையல்ல கடவுள், இது அறியாமைக்கு ஓர் எடுத்துக் காட்டு.

வாழ்க்கை ஒரு நெடியபயணம். பல்வேறு துறைகளையும் படிகளையும் இடர்ப்பாடுகளையும் கடந்து வளர்ந்து முன்னேற வேண்டியது வாழ்க்கை. பல்வேறு மனிதர்களைச் சந்திக்க வேண்டிய அவசியமும் கட்டாயமும் வாழ்க்கையில் உண்டு. எண்ணத் தொலையாத சிக்கல்களுக்குத் தீர்வு உண்டு. வாழ்க்கையைப் பயனுடையதாக்க வேண்டும் வாழ்க்கையைப் பயனுடையதாக்குவதற்குப் பெரிய தடையாக இருப்பது அறியாமையேயாம். திருக்குறள்,

“பிறப்பென்னும் பேதைமை”

என்று கூறும்.

"இருளே உலகத் தியற்கை இருளகற்றும்
கைவிளக்கே கற்ற அறிவுடைமை”

என்றும் சான்றோர் கூறுவர், அறியாமையினின்று விடுதலை பெற்றால்தான் வாழ்க்கை வளரும்; மாறும். எதையும் ஏன்? எதனால்? என்று கேள்வி கேட்டு எப்படி சிக்கலுக்குத் தீர்வு காண்பது என்று எண்ணி ஆய்வு செய்து தீர்வு கண்டு வாழ்தலுக்கு அறிவே முதல்; முடிவு; எல்லாம்!

மனிதன் தனது புலன்களையும் பொறிகளையும் முறையாக இயக்கிப் பயன் கொள்ளத் துணை செய்வது அறிவு. துன்பத் தொடக்கின்றி வாழ்வதற்கு அறிவு பயன்படுகிறது. அறிவு பலதிறத்தன. எழுதப் படிக்கத் தெரியாதவர்களிடம் கூட அறிவு இருக்கும். இது பொது அறிவு. வாழ்வின் அடிப்படையொடு தொடர்புள்ள இந்த அறிவு வளமான வாழ்க்கைக்குப் போதாது. -

அறிவு வளர்ச்சிக்குக் கல்வி முதல் தேவை. திருக்குறள் ‘கற்க’ என்று ஆணையிட்டது. கல்வி, புலன்களின் விரிவாக்கத்திற்குப் பயன்படும். கல்வி, பொறிகளிடத்தில் பண்பட்ட செயல்முறையினைக் காணும். கல்வி, சென்ற பல தலைமுறையினருடைய வாழ்க்கையை அறிந்து கொள்ளத் துணை செய்கிறது. கல்வி, வாழ்க்கையின் இலக்குகளை ஏற்றுக் கொள்ளத் தூண்டுகிறது. அந்த இலக்குகளை அடையவும் துணை செய்கிறது. அறிவியல் வளர்ச்சிக்குப் பின் தான் இலக்கியப் படைப்பு, தொழில் நுட்பம், பொருளியல், சமயநெறிகள், அரசியல் முதலியன.

கல்வி கற்பதன் மூலமே அறிவு ஆக்கம் பெற்றுவிடாது கற்றார் வாய்க் கேட்டது அவசியம். ஏன்? கேட்டறிவது மிகமிக அவசியம். மூளைகள் பலவிதம். ஒரு மனிதனின் மூளை சென்ற வழியே செல்லும். இது பலருக்கும் இயல்பு. சிந்திக்கும் பழக்கம் உடைய சிலர் விதிவிலக்காய் பலமுறை கற்றுச் சிந்தித்துப் பொருள் காண்பர்; மெய்ப் பொருள் காண்பர் தெளிவு காண்பர். ஆயினும் பல மூளைகளின் அறிவு ஒரு சேரத் துணை செய்வது கேட்டறியும் முறையில் தான். “கற்றில னாயினும் கேட்க!” என்றது திருக்குறள்.

அறிவு மனிதனைத் துன்பத்திலிருந்து மீட்டு எடுப்பது. அறிவு, நாள்தோறும் புத்துயிர்ப்புத் தந்து புதுவாழ்வு தருவது. இந்த அறிவே பூரணத்துவம் அமைந்த வாழ்க்கைக்கு முதல்.

அறிவியல்

அறிவியல் என்பது என்ன? நம்முடைய உடல் இயங்குகிறது; உயிர் செயற்படுகிறது. நம்மைச் சுற்றியிருக்கின்ற உலகம் இயங்குகிறது. ஓயாது இயங்கித் தொழிற்படுவதே இயற்கை. இவற்றோடு பிறந்து வளரும் மனிதன் - வாழும் மனிதன் இந்த இயக்கங்களின் காரணம் என்ன? ஏன்? என்று வினாத் தொடுக்கின்றானே அந்த வினாத்தான் அறிவியலின் தொடக்கம். அந்த வினாக்களுக்குக் காணும் விடைகளே அறிவியல்! அறிவியலின் வாய்பாடுகள் அனைத்தும் விடைகளே. நிலத்தின் இயல்பு, புவிக்கோள் இயக்கம், தண்ணிரின் தண்மை, வளி மண்டலம், எரி சக்தி என வாழ்க்கைக்குத் துணையாயமைந்து கிடப்பனவற்றை யெல்லாம் பற்றி அறிதலே அறிவியல்.

இந்த அறிவியல் தொடங்கி உலகளாவியதாக வளர்ந்து வந்துள்ளது. இன்று மனிதனுடைய ஆய்வுப் புலன் நுழையாத துறை இல்லை. விண்ணும் மண்ணும். இன்று மனிதனுடைய அறிவாராய்ச்சிக்குக் களங்களாகிவிட்டன. நிலத்தியல்பும், நீரின் இயல்பும், கதிரவனின் இயல்பும், வளிமண்டலத்தின். இயக்க இயல்பும் இன்று அறியப்படுகின்றன, உணரப்படுகின்றன. ஏன்? ஐம்பூதங்களைக் கண்டு அஞ்சி வாழ்ந்த மனிதன் இன்று அவற்றை அடக்கி ஆண்டனுபவிக்கக் கற்றுக் கொண்டுவிட்டான். மனிதன் பிறந்த நாளன்றே அவனைத் துன்பமும் மரணமும் தொடர்ந்தது. இன்றோ மனிதன் மரணத்தைத் தள்ளி வைத்துக் கொண்டே போகிறான். காலப் போக்கில் மரணமிலாப் பெருவாழ்வும் அடைந்துவிடுவான். ஆனாலும் மனிதனின் பேராசைகளும் இயற்கை நிகழ்வுகளும் புதுப்புதுத் துன்பத் தொடக்குகளை உருவாக்கிய வண்ணம் இருக்கின்றன. இன்று போகும் போக்கைப் பார்த்தால் மானுடம் தோற்கும் போலத் தெரிகிறது. அறிந்தும் சுற்றுப்புறச் சூழலைக் கெடுக்கிறான் மனிதன். பகையும் போரும் கொடியது என்று கற்கிறான்; உணர்கிறான். ஆயினும் போர்க் கருவிகளைச் செய்வதிலிருந்து அவன் இன்னமும் ஓய்வு பெறவில்லை. இது கடவுள் உலகம். ஆயினும் கடவுள் பெயராலேயே கலகங்களை உருவாக்குகின்றான். மனிதனுக்கு இன்னமும் வாழ்வில் விருப்பம் இல்லை. சகோதரத்துவத்தை அவன் உணர மறுக்கிறான். இன்றைய மனிதனுக்குச் சமாதானத்தில் வேட்கை இல்லை. அமைதியில் அவனுக்கு நாட்டம் இல்லை. ஐயோ, பாவம்! கையில் விளக்கைப் பிடித்துக் கொண்டே கிணற்றில் விழுகின்றான்.

அறிவியல் வளரத் தொடங்கிய நிலையிலேயே தொழில் நுட்பமும் வளரத் தலைப்பட்டது. அறிவியலை அறிந்து கொள்வது, தொழில் நுட்பத்தைக் காண்பது ஏன்? அறிவியல் எப்படி வளர்ந்தது? மனிதன் கருவிகளைக் கண்ட காலமே தொழில் நுட்பம் தொடங்கிய காலம்! மரங்களிலிருந்து காய்த்தவைகள் விழுகின்றன. பட்டுப்போன குச்சிகள் விழுகின்றன. பட்டுப்போன குச்சிகள் விழுகின்ற வேகத்தில் மண்ணில் குத்திக் கொள்கின்றன. காய்கள் விழுந்த இடத்தில் பள்ளம் விழுகிறது. இதனை ஆராய்ந்த மனிதன் நிலத்தை உழுது பயன்படுத்த முடியும் என்று அரிகின்றான். கலப்பை உருவாகிறது. மனிதன் கண்ட முதல் அறிவியல் தொழில் நுட்பம் வேளாண்மைதான் என்று எண்ணத் தோன்றுகிறது.

வேளாண்மை

வேளாண்மைத்துறை அறிவியல் நாளும் வளர்ந்து இன்று அது ஒரு சிறந்த அறிவியல் துறையாக விளங்குகிறது. இன்று நமது நாட்டில் உணவுப் பொருள் பற்றாக்குறை இல்லை. தன்னிறைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை அடையத் துணையாக இருந்தது வேளாண்மைத்துறை அறிவியலே. நிலத்தின் இயல்பறியும் அறிவியல் வளர்ந்துள்ளது. மண் சோதனை செய்து மண்ணுக்குத் தகுந்த பயிரினம் பயிரிடலாம்; அல்லது நிலத்திற்கு ஏற்ற உரம் முதலியன இட்டுப் பண்படுத்தி நிலத்தின் இயல்பை மாற்றலாம் என்ற தொழில் நுட்பம் கிடைத்துள்ளது. மற்றும் பயிர்ப் பாதுகாப்புமுறைகள் வளர்ந்துள்ளன. குறுகிய காலப் பயிர்கள் இன்னபிற கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக வேளாண்மைத் துறையில் இயந்திரங்கள் நிறைய வளர்ந்துள்ளன. பலநூறு ஏக்கர் நிலத்தை இரண்டு மணி நேரத்தில் எளிதில் சாகுபடி செய்யக் கடிய அளவுக்கு வேளாண்மையியலில் இயந்திரப் புரட்சி வளர்ந்து வந்துள்ளது. வேளாண்மைத்துறை அறிவியல் வளர்ச்சி மக்களுக்காகவே. ஆனால், மக்கள் எவ்வளவு தூரம் புரிந்து கொண்டிருக்கின்றனர்?

நிலம்

ஐம்பூதங்களில் தலையாயது நிலம்! ஏன் ? மானுடத்தின் வாழ்க்கை முழுதும் நிகழ்வது இந்த மண்ணில் தானே! மனிதனுக்கு வேண்டிய உணவைத் தருவது நிலமே. நிலத்தின உயிர்ப்பு நிலை உணரப்படுவதில்லை. இன்று மக்கள் பணத்தை மதிக்கிறார்கள். ஆனால் நிலையான அடிப்படைச் சொத்தாகிய நிலத்தின் மதிப்பைக் குறைத்துவிடுகிறார்கள். சரியானபடி உரமிடாமல் நிலத்தைச் சுரண்டியே வாழ்கிறார்கள். இதனால் நிலம் பூசாரத்தை இழக்கின்றது. ஒரோவழி உரமிட்டாலும் இரசாயன உரங்கள் - யூரியா போன்றவை உண்மையில் உரங்களே அல்ல. அவை நிலத்தில் பற்றாக்குறை நிலையில் உள்ள உரத்தைப் பயிர் எடுத்துக் கொள்ளத் துணை செய்யும் ஒருவகையான கிரியா ஊக்கியேயாம். நிலத்திற்கு இயற்கை உரமே சாணம், குப்பை கலந்து மட்க வைத்த கம்போஸ்டு உரமே சிறந்த உரம். இந்த கம்போஸ்டு உரத்துடன் யூரியா ஒரு பங்கு கலந்து 48 மணி நேரம் வைத்திருந்து இடலாம். இது உரமேற்றிய உரம். பசுந்தழை உரம் நிறைய இடவேண்டும். இங்ஙணம் நிலத்தின் வளத்தைக் காப்பாற்ற வேண்டும்.

வேளாண்மைத் தொழில் சிறக்க மண் சோதனை செய்து மண்ணின் தரத்தையும் உரத்தின் தேவையையும் அறிதல், நிலத்தைப் பண்படுத்தல், நிலத்திற்கேற்ப பயிர் தேர்வு செய்தல், சுழற்சி முறையில் பயிர் மாற்றம் செய்தல், விதைகளை நேர்த்தி செய்தல், பயிர்ப் பாதுகாப்பு முதலிய துறைகள் உள்ளன. பயிர்ப் பாதுகாப்புத் துறையில் பூச்சிகளை எதிர்த்துப் போராட இன்று ஒட்டுண்ணி என்றும் “உயிர்க் குயிர் பகை” என்றும் சொல்லப் பெறுபவை வந்துவிட்டன. இது ஒரு நல்ல முன்னேற்றம். நிலத்தை வளமாகப் பாதுகாக்காமல் மண் அரிப்புக்கு இரையாக்குகிறார்கள். மண் அரிப்பு என்றால் என்ன? நிலத்தின் மேற்பரப்பில் உள்ள ஒரு முழம் உயரம் படிந்துள்ள மணலே கருத்தாங்கும் ஆற்றலுடையது. இதனை மண்கண்டம் என்று கூறுவர். இந்த மண் தோன்றுவதற்குப் பல நூறாயிரம் ஆண்டுகள் ஆகியுள்ளன. “கல்தோன்றி மண் தோன்றாக் காலம்” என்று புறப்பொருள் வெண்பாமாலை கூறும். இந்த மண் கண்டத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். தன் போக்காகத் தண்ணிர் ஓடுதலால் ஏற்படுவது மண் அரிப்பு. வரன் முறையில்லாமல் நிலத்தில் கால்நடைகள் மேய்ப்பது, புயல், காற்று இவைகளால் மண் அரிப்பு ஏற்படுகிறது. நிலம் பாத்தியாகப் பிரிக்கப்பெற்று வரப்புக்கள் கட்டப்பெற வேண்டும். நிலத்தில் ஏதாவது மரம், செடி, கொடிகள் இருந்து கொண்டே இருக்கவேண்டும். அப்படியிருந்தால் மண் அரிப்பிலிருந்து நிலத்தை மீட்கலாம்.

நிலத்தில் தண்ணிர் தேங்கக்கூடாது; நிற்கக்கூடாது. “நீர் மறைய நீர் விடு” என்பது பழமொழி. நீர் தேங்கி நின்றால் நிலம் களர் நிலமாக மாறிவிடும். களர் நிலத்திற்கு என்று பயிர்கள் இருந்தாலும் ஏன் களர் நிலமாக வேண்டும்?

நிலத்தின் வளத்தையும் நிலத்தடி நீர் வளத்தையும் மனித வளத்தையும் காப்பாற்றக் கூடிய ஒரே வழி மரங்கள் வளர்த்தலேயாம். நிலங்களின் பூசாரத்தைக் காப்பதற்கு மரங்களிலிருந்து உதிரும் தழைகள் உதவி செய்கின்றன. நிலத்திற்குள் செலுத்தி நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்கிப் பாதுகாக்கின்றது. சிலர் நினைப்பதுபோல உழுவதால், மரங்கள் நடுவதால் தண்ணிர் வீணாவதில்லை. மாறாக மரங்கள் 10% தான் தண்ணிர் குடிக்கும். மண் குடிப்பதையும் சேர்த்தால் 20% க்கு மேல் போகாது. ஆனால் நிலத்தில் தாவரங்கள், மரங்கள் இல்லாது போனால் நிலம் மண் அரிப்புக்கு இரையாகி நிலம் முழுதுமே பாழ்படும். அதுமட்டுமல்ல. பெய்த மழை நீர் 10% முதல் 20% தான் பயிற்களுக்குச் சேரும். மீதி மழை நீரெல்லாம் வீணாகிவிடும். அல்லது ஆவியாகிவிடும். நிலமகள் என்றும் எப்போதும் பசுமைக்கோலத்தில் விளங்கவேண்டும்.

மரம் வளர்ப்பு

மரம் வளர்ப்பு ஒரு நல்ல விவசாயப் பணி, மரங்கள் பயன்படுவதுபோல வேறு எந்த உயிர்வர்க்கமும் பயன்படுவதில்லை. புவிக்கோளத்தின் தட்ப வெட்ப நிலைகளைச் சீராகப் பராமரிக்கவும், சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாதுகாக்கவும் மரம் வளர்ப்பதே நல்லது. தூசிகளிலிருந்து பாதுகாப்பு, பேரிரைச்சலிலிருந்து பாதுகாப்பு - மரங்கள் தருகின்றன. மரங்கள் மழையைத் தருகின்றன. இந்தப் புவிக் கோளத்தில் உயிர்ப்புக் காற்று பிராணவாயுவின் அளவுக்கு அடங்கியதாக கரியமில வாயு இருக்க வேண்டும். கரிய மிலவாயு, பிராணவாயுவை விடக் கூடுதலாகிவிட்டால் சுற்றுப்புறச் சூழ்நிலை பாதிக்கிறது. இதனால் மழை பெய்யாது. இன்று என்ன நிகழ்கிறது? நமது நாட்டின் சுற்றுப் புறச் சூழ்நிலையில் காடுகள் அழிக்கப் பெற்றதாலும் மரங்கள் வெட்டப்பட்டதாலும் பிராணவாயுவுக்குத் தட்டுப்பாடு! அதுமட்டுமா? ஆலைகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளி வரும் புகை முதலியனவும் கரியமில வாயுவின் அளவைக் கூட்டியுள்ளன. இதனால் பெய்யும் மழையின் அளவு குறைந்து வருகிறது. பெய்யும் மழையும் முறையாகப் பெய்வதில்லை. நீண்ட இடைவெளிகளுக்குப் பிறகு பெய்கிறது. அல்லது புயலாக, வெள்ளமாக அமைந்து விடுகிறது. இவற்றையெல்லாம் சீரமைக்க வேண்டும் எனில் மரம் வளர்க்கும் பணியில் அனைவரும் ஈடுபடவேண்டும். வீட்டுக்கு ஒரு மரம் போதாது. நபருக்கு ஒரு மரம் திட்டமிட்டு வளர்க்கவேண்டும். ஊராட்சிகள் வீதி ஓரங்களில் மரங்கள் நடுவதன்மூலம் ஊருக்கு அழகுதரலாம். மக்களுக்குத் தூசி இல்லாத தூய்மையான காற்றுக் கிடைக்கும். பள்ளிகள் எல்லாம் பசுஞ்சோலையாக மாறவேண்டும். நிலமகள் நிர்வாணமாக இல்லாமல் பசுஞ்சோலையை ஆடையாக அணியும் நாளிலேயே, நமது நாடு நாடாவளம் உள்ள நாடாக வளரும்.

நீர் நிர்வாகம்

“நீரின்றமையாது உலகு” - என்றார் திருவள்ளுவர். தண்ணிருக்கு மூலம் மழையே! இதனைத் திருவள்ளுவர் “வானின்றமையாது ஒழுக்கு” என்று கூறுகிறார். ஆதலால், தண்ணீருக்கு மூலமாக உள்ள மழையைப் போதிய அளவு பெறும் முயற்சி தேவை. பெய்யும் மழைத் தண்ணீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்தும் நீர் மேலாண்மை தேவை. பூமியில் இயற்கையாகத் தோன்றியது நீர். இப்பூமி முக்கால் பாகத்திற்கு மேல் கடல் நீரால் சூழப்பட்டிருந்தாலும் கடல் நீர் பயன்படும் நீர் இல்லை. குடிக்கத் தண்ணிருக்கே பற்றாக்குறை உள்ள நாடு நமது நாடு. நீர் வளம் இல்லாத நாடு என்று கூறமுடியாது. ஆனால் நீர் நிர்வாகம் போதிய அளவு இல்லை.

தண்ணிரை அளவோடு பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். நிலத்தடி நீரைப் பராமரிக்க வேண்டும். நிலத்தை உழுதல், மரங்கள் நடுதல் மூலம் நிலத்தடி நீரைப் பராமரிக்கலாம். சிலர் நினைப்பதுபோல நிலத்தை உழுவதாலும் மரங்கள் பராமரிக்கப்படுவதாலும் தண்ணிர் ஏரி, குளங்களுக்கு வராது என்பது தவறு. மரங்கள் அவற்றின் வேர்கள் வழியாகத் தேவையான தண்ணிரை எடுத்துக் கொண்டு மீதியை நிலத்திடி நீராகச் சேமிக்க உதவி செய்கின்றன. தண்ணிர் குறைவாகக் குடிக்கும் பயிர்களைத் தேர்வு செய்து பயிர் செய்வது பயனுடையது. எல்லாப் பயிர்களுக்கும் தண்ணிர் அளவுண்டு. அளவுக்கு மேலே பாய்ச்சினாலும் குடிக்காது. அந்தத் தண்ணிர் வீண்தான். தண்ணிரைப் பற்றிய மனப்பான்மை மாறுவது அவசியம். நீர் மேலாண்மை அறிவியல் வளரவேண்டும்.

காற்று

அடுத்து, காற்று! உயிர்கள் உயிர்ப்புடன் வாழ்வதற்கு முதல் தேவை காற்றே. மனிதன் பிறந்த நாள் முதல் இறக்கும் வரையில் ஓயாது சுவாசிக்கிறான். அவனுடைய முயற்சியின்றியே சுவாசிக்கிறான். இந்தக் காற்றைத் தூய்மையாகப் பேணவேண்டும். புகை, தூசி முதலியவை காற்றைத் தூய்மைக்கேடு அடையச் செய்கின்றன. தூய்மைக் கேடடைந்த காற்றை மனிதன் விலக்கிச் சுவாசிக்க இயலாது. ஆதலால், காற்றைத் தூய்மையுடையதாகப் பேணவேண்டும். ஆதலால் தூசியில்லாத சாலைகள், தெருக்கள் தேவை, இது உடனடியான தேவை. ஆனாலும் இந்தியா போன்ற நாட்டில் சாத்தியமல்ல. ஆதலால் தூசி வடிகட்டி என்று பாராட்டப் பெறும் மரங்களை வீதிகளிலும் வீடுகளைச் சுற்றியும் வளர்க்க வேண்டும். புகையில்லா அடுப்புகள் மகஞ்சூனா வந்து விட்டன. திருக்கோயில் கருவறைகளிலும் கூடக் கற்பூரம் கொளுத்துவதை விட நெய் விளக்கேற்றி வழிபடும் வழக்கம் வளர்ந்து வருகிறது. ஆனால், ஆலைக் கழிவுகளும் ஊர்ப்புறக் கழிவுகளும் காற்றைத் தூய்மைக் கேடு, செய்வது குறைந்த பாடில்லை. இத்துறையில் மேலும் கவனம் தேவை. குப்பை கூளங்கள், கழிவுகளை உடனுக்குடன் குழிகளில் போட்டு மூடவேண்டும். மக்களும் ஊராட்சிமன்றங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆலைகளின் கழிவு காற்றில் கலக்காமல் செய்ய நிறையப் பாதுகாப்பு முறைகள் வந்துவிட்டன. இவற்றைக் கட்டாயம் பயன்படுத்தவேண்டும்.

கால்நடை

மனிதனின் தோழமை மிக்க உயிர்களில் கால்நடைகளும் அடங்கும். மரங்களைப் போலவே கால்நடைகளும் மனித வாழ்க்கைக்குத் துணை செய்வன. ஏன்? நிலம், மரங்கள் இவைகளுக்கு உரமூட்டக்கூடக் கால்நடைகளின் எருக்கள் தேவைப்படுகின்றன. ஆதலால், கால்நடைகள் மனித வாழ்க்கையில் முதலிடம் பெறுகின்றன. மனிதனின் சிறந்த உணவு பால். பசுமாடுகளைத் தரமாகப் பேணி வளர்க்க வேண்டும். பசுவை வணங்கும் வழக்கம் நாட்டில் உள்ளது. ஆனால், முறையாக வளர்ப்பதில்லை. பசு மாடுகள் வளர்ப்பு ஒரு நல்ல தொழில். ஆனால் நமது நாட்டில் இன்னமும் கால்நடைகள் வளர்ப்பு; ஒரு நல்ல தொழிலாக உருக்கொள்ளவில்லை. அன்று பசுவாகிக் கன்று ஈன 12 மாதம் அல்லது 15 மாதம் போதும். ஆனால், நமது நாட்டில் 3 ஆண்டுகள் ஆகின்றன. அதுபோலவே, ஆண்டுக்கு ஒரு கன்று அல்லது 15 மாதத்திற்கு ஒரு கன்று ஈனும். ஆனால் நமது நாட்டில் கறவை மறைவைக் காலம் சராசரி 8 மாதமாக இருக்கிறது. இது பொருளாதார இழப்பு. செயற்கைமுறைகளில் கருத்தரிப்புச் செய்யும் முறை வளர்ந்து வருகிறது. செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்வதிலும் கூட நமது கால்நடைப் பல்கலைக் கழகம் செபடக்ஸ் வடிகட்டுதல் என்ற முறையை ஆய்வு செய்து அறிமுகப் படுத்தியுள்ளது. இது நல்ல பயனுள்ள முறை, ஆடு மாடுகளுக்குச் சுத்தமான நல்ல தண்ணீர் கொடுக்க வேண்டும். இதுபோலத் தேவையான தீவனமும் ஆடு மாடுகளுக்குத் தரவேண்டும். பசு மாட்டுத் தீவனத்தில் பிண்ணாக்கு முதலிடம் பெறுகிறது. செலவும் குறையும்.

அதிக முதலீடும் உழைப்புமின்றி வளர்க்கப்படுவது மீன். மீன் ஒரு சிறந்த உணவு. மீன் வளர்ப்பு தண்ணீரைத் தூய்மையாக வைத்துக் கொள்ள உதவும். கால்நடை வளர்ப்பில் செம்மறி ஆடுகள் வளர்ப்பு ஒரு தொழில், வெள்ளாடுகள் ஆழ்கூள முறையில் வளர்க்கலாம். அப்படியல்லாது வெள்ளாடுகள் வளர்ப்பது விவசாயத்திற்கு உதவி செய்யாது. கால்நடைகளுக்குப் பசும்புல் நிறையத் தேவை. கால்நடை வளர்ப்பு ஒரு வேளாண்மைத்துறை, தொழில். கால்நடை வளர்ப்பில் செல்பாக்ஸ்களும் முறை கடைப்பிடிக்கப் பெறுதல் வேண்டும். மரபு, மரபியல் மாற்றங்கள் மற்றும் உணவு, மருந்து முதலிய துறைகளில் நிறைய ஆய்வுகள் நடந்துள்ளன. ஆய்வுகள் நடந்து கொண்டேயிருக்கின்றன. இந்த ஆய்வின் முடிவுகள் என்று கிராமப்புறங்களின் மாட்டுக் கொட்டில்களுக்கு வருகின்றனவோ அன்றுதான் நாடு வளரும். கால்நடை வளர்ப்பு இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. விவசாயிகளுக்குக் கால்நடை வளர்ப்பு தவிர்க்க இயலாதது; கட்டாயத் தொழிலுமாகும்.


வேதியியல்


வேதியியல் துறையில் பல தொழில்கள் வளர்ந்து வந்துள்ளன. குறிப்பாக மனிதன் படைத்த பலவகைப் பொருள்களை அழியாமல் பாதுகாக்க வேதியியல் அறிவியல் பயன்படுகிறது. நமது நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு ஏறத்தாழ ரூபாய் 10,000 கோடி மதிப்புள்ள பொருள்கள் அழிந்து வருகின்றன. இந்த அழிவிலிருந்து நாட்டைக் காக்க வேதியியல் அறிவியல் துறை துணை செய்யும். உலோகப் பொருள்கள், குறிப்பாக இரும்பு அரிமானத்திற்கு ஆளாகாமல் தடுக்கும் முறை உள்ளது. அதுபோலவே அதிவேகக் கடத்திகள் பற்றிய ஆய்வு முடிவுகள். மின் தடைகள் அளவு குறைகின்றன. இயந்திரங்களை வேகமாக இயக்குவதால் காலமும் ஆற்றலும் மிச்சப்படுகின்றன.

பொருளியல்

மனித வாழ்க்கையின் இன்றியமையாத் தேவை பொருள். “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பது திருக்குறள். திருக்குறள் குறிப்பிடும் பொருள், மனித வாழ்வின் இயக்கத்திற்கு இன்றியமையாத் தேவையாகிய உண்பனவும் தின்பனவும் உடுத்துவனவும் ஆகிய பண்டங்களே. உண்மையில் இவையே பொருள்கள். இந்தப் பொருள்களில் சில இயற்கையில் தோன்றுவன. மற்றபடி பெரும்பாலும் மனத முயற்சியில் உற்பத்திச் செய்யப் படுவனவே பொருள்கள். மனிதனின் நுகர்வுக்குரியன தரும் தொழில்களே விவசாயம், கால்நடை வளர்ப்பு, தொழிற்சாலைகள் முதலியன. மனிதனின் வாழ்க்கை முழுதும் பொருளைச் சுற்றியே வட்டமிடுகின்றது. மனிதனின் அகநிலை, புறநிலைப் பண்புகள் கூடப் பொருளைச் சார்ந்தவையேயாம். பொருட் சார்பிலேதான் சமய நெறிகளும்கூட ஆக்கம் பெறுகின்றன.

உடல் நல்ல வண்ணம் வளர வேண்டும். பாதுகாக்கப் பெறுதல் வேண்டும். உயிர் உடலைச் சார்ந்துதான் வாழ்கிறது. உடலும் உயிரும் ஒன்றையொன்று தழுவியன. நல்ல உடலில் நல்ல ஆன்மா! நல்ல ஆன்மாவினிடத்தில் நல்ல மனம்! ஆதலால், உடல், உடலியல் உடலியக்கத்திற்குத் தேவையான பொருள்கள் பற்றிய அறிவியல் தேவை. திருமூலர் உடன் பாட்டாலும் எதிர்மறையாலும் உடம்பின் நலன் பற்றிப் பேசுகின்றார்.

“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!”
“உடம்பார் அழியின் உயிரார் அழிவார்”

என்பார் திருமூலர். உடம்பின் உழைப்புத் திறனை வளர்த்துக் கொள்ளுதல் மிகவும் தேவை. உடம்பை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் அறிவு தேவை. நல்ல அறிவியல் சார்ந்த உழைப்பு தேவை. உடலின் வளர்ச்சி, உயிரின் ஆக்கம் உழைப்பில் இருக்கின்றன. உலகை இயக்குவது உழைப்பு. குறைந்த நேரத்தில் குறைந்த சக்தியைச் செலவிட்டு உழைக்கவும் உழைப்பின் பயனைக் காணவும் மனிதத்தின் உழைப்பை எளிமைப்படுத்தவும் அரிய கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. உடல் தேவை, உழைப்பின் காலத்தைச் சிக்கனப்படுத்தி உயிர்த் தேவையாகிய கற்றல், கேட்டல், நட்பாடல், பிரார்த்தனை போன்றவைகளில் பயன்படுத்த ஆன்மாவை வளர்த்துக் கொள்ளவேண்டும். ஏன்? மானுடம் உயர்நிலையை உன்னத நிலையை அடையவேண்டும்.

உழைப்பு, மானுடம் வாழ்க்கைப் போக்கில் கண்ட ஓர் அரிய பண்பு. உலகத்தின் உயிர்ப்பும் உழைப்பேயாம். அந்த உழைப்பும் அறிவியல் சார்ந்த உழைப்பாக உற்பத்தி சார்ந்த உழைப்பாக அமைந்தால் நல்லது. பணம் படைக்கப்பட்ட பின் பணத்திலிருந்து பணம் செய்யும்முறை வளர்ந்து வந்துள்ளது; வளர்ந்து வருகிறது. இது நெறியுமன்று; முறையுமன்று. இன்று உற்பத்தி சாராத உழைப்பில் செல்வம் திரட்டுவதுபோல உற்பத்தி சார்ந்த உழைப்பில் செல்வம் திரட்ட இயலவில்லை. இது ஒரு பெரிய குறை.

இன்று நமது நாட்டில் இருப்பது பண மதிப்பீட்டுச் சமுதாயம். இதை மனித மதிப்பீட்டுச் சமுதாயமாக மாற்றவேண்டும்; வளர்க்க வேண்டும். பணத்திலிருந்து பணம் சம்பாதிக்கும் முறை வளர்ந்து பரிசுச் சீட்டில் வந்து நிற்கிறது. இன்று அரசுகளே பரிசுச் சீட்டுகள் விற்கும் நிலைக்கு வந்துள்ளமை வேதனைக்குரிய செய்தி. பொருள் ஈட்டுதலுக்குரிய புதிய புதிய வாயில்களைக் கண்டாகவேண்டும். பொருளை ஈட்டும் துறைகள் எண்ணியவாக நாளும் பெருக வேண்டும்; பொருள் ஈட்டவேண்டும். ஈட்டும் பொருளைச் சேமிக்க வேண்டும். சேமித்த பொருளை நலஞ்சார்ந்த வாழ்க்கைக்காகத் திட்டமிட்டுச் செலவழிக்க வேண்டும்.

பொருள் ஈட்டல் - செலவிடுதலில் திட்டமிடும் அறிவு தேவை. “திட்டமிலாதான் வாழ்க்கை தேடுவாரற்றுப் போகும்” என்பது பழமொழி. பொருள் ஈட்டுவதற்குப் பொருள் உற்பத்திக் களங்கள், பொருள் உற்பத்திக்குத் துணை செய்யும். கருவிகள், மனித சக்தி இவைகளுக்கு நமது நாட்டில் பற்றாக்குறை இல்லை. ஆனால், இவைகளைப் பயன்படுத்தி நாம் கால்பகுதிகூட இன்னமும் செல்வத்தை ஆக்கவில்லை. உடலால் உழைக்கும் குணம் வளரவில்லை. எழுத்தில், பொருளில் ‘போலி’ போல உழைப்பிலும் போலிகள் வந்துள்ளன. இதனாலேயே நாடு வளரும் நாடாகவே இருந்து வருகிறது. பொருள்கள் செய்து குவித்தால் மட்டும் போதாது. உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் சமச்சீர் விநியோகம் செய்யப்பட வேண்டும். நமது நாட்டில் செல்வ விநியோக முறையில் ஏராளமான சீர்கேடுகள்! சுரண்டும் சமுதாய அமைப்பே கால்கொண்டிருக்கிறது. உழைப்புக்குத் தகுந்த ஊதியத்திற்கே போராட வேண்டியதிருக்கிறது. உழைப்பு, விலைப்பண்டம் ஆகிவிட்டது. சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் மிகுதி. பிறர் பங்கை, உழைப்பாளிகளின் பங்கைத் திருடி வாழ்பவர்கள் இன்று சமுதாயத்தில் வாழ்கின்றனர். உயர்நிலையில் வாழ்கின்றனர். ஆட்சியே அவர்களுக்காகத் தானே நடக்கிறது. இந்த அவலம் நீடிக்கும் வரையில் எப்படி எல்லாரும் இன்புற்று வாழமுடியும்? அதோடு ஊழ் - தலைவிதி தொடர்பான நம்பிக்கை வேறு, வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குத் தடை மேலும் மனிதத் தராதரம் என்ற பெயரில் அமைந்துள்ள பிரிவினைகள்; மனிதர்கள், மனிதர்களுடன் போராடும் நிலை உருவாகிப் பொருளியல் சார்ந்த முயற்சியினை முடக்கிவிட்டது. விட்டது. ஆதலால், நமது நாட்டில் பொருளியல் வளர்ச்சி வேகம் உரியவாறு இல்லை. தனிமை உணர்வின் காரணமாகக் கூட்டு உழைப்புமுறை முறையாக வரவேற்கப்படவுமில்லை. ஒரோவழி தென்பட்டாலும் கூட்டு வாழ்க்கையில் காணப்படும் ஆர்வம் குறைவே. இதனால் நிலங்கள் துண்டாடப்பட்டுவிட்டன. இரண்டு ஏக்கருக்குக் குறைவாக உரிமை பெற்றுள்ள விவசாயிகள் பல ஆயிரக் கணக்கில் உள்ளனர். இந்த இரண்டு ஏக்கரும் கூட சிதறுண்டு கிடக்கும் நிலை. இந்த விவசாயம் கட்டுபடி ஆகுமா? ஆலோசனை செய்க, கால்நடை வளர்ப்பிலும் பொருள் புழக்கம் போலத் தோற்றம். உண்மையில் பொருளாதார இழப்பே. தரமான கால்நடைகள் வளர்ப்பு அறிமுகப்படுத்தப்படுதல் வேண்டும். இங்ஙனம் பொருள் சார்ந்த அறிவியல் வளர்ந்தால் மக்கள் வளர்வர்; நாடு வளரும்;

மருத்துவம் - சுகாதாரம்

நோயற்ற வாழ்வு தேவை. இதற்குச் சுற்றுப்புறச் சூழ்நிலைப் பாதுகாப்புத் தேவை. சுற்றுப்புறச் சூழ்நிலைப் பாதுகாப்புக்குச் சுகாதாரம் தேவை. சுகாதார வசதி பெருகினால் நோய்கள் அணுகா. மருத்துவ மனைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும்; கட்டுப்படுத்தலாம்.

இன்று நமது நாட்டில் மருத்துவமனைகள் பெருகி வளர்வதைப் போல சுகாதார வசதிகள் வளரவில்லை. பாதுகாக்கப்பெற்ற குடி தண்ணீர் இன்றும் பலகோடி மக்களுக்குக் கிடைக்கவில்லை. இன்று தூசியற்ற சாலைகள் இல்லை. கழிப்பறை வசதிகள் போதாமை. நல்ல சத்துணவு உண்ண வழியில்லை. இதனால் நாளும் நோய்கள் பெருகி வளர்கின்றன. இவையெல்லாம் முறையாக அமையும் நாள்வரை நாட்டு மக்கள் காத்திருக்கப் போகிறார்களா? அல்லது தாங்களே செய்துகொண்டு நலமுடன் வாழப் போகிறார்களா?

எந்தத் தண்ணிரையும் கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்தால் நல்லது. வீடுகளைச் சுற்றியும் வீதிகளைச் சுற்றியும் நல்ல மரங்கள் வளர்த்தால் சுத்தமான காற்றும் கிடைக்கும்; தூசி வடிகட்டியாகவும் பயன்படும். நான்கு வேப்ப மரங்கள் ஒரு குளிர் சாதனப் பெட்டிக்குச் சமம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். மரங்கள் பலவகையிலும் பயன்படக்கூடியவை. நல்ல காற்றோட்டமும் கதிரொளியும் புகுதலுக்குரியவாறு வீடுகள் கட்டப்பெறுதல் வேண்டும். வீடுகளுக்கிடையில் போதிய இடைவெளி வேண்டும். கழிவு நீர்களை அப்புறப்படுத்தி உறிஞ்சு தொட்டிகள் கட்டி அவற்றில் விட வேண்டும். கழிப்பிட வசதிகள் இல்லாத வீடுகள் கூடாது. அப்படிக் கட்ட வசதியில்லையென்றால் வார்தாமுறைக் கழிப்பிடமாவது அமைத்துக் கொள்ள வேண்டும். கழிவுகளை, குழிகளில் போட்டு மூடினால் பாதுகாப்பு: மேலும் உரமும் கிடைக்கும்.

நன்றாகச் சாப்பிடக் கற்றுக் கொள்ளவேண்டும். நமது நாட்டில் பலருக்குச் சாப்பிடத் தெரியாது. சுவைக்காக மட்டுமே சாப்பிடுகிறவர்கள் பலர் உடல் ஓர் இயந்திரம். இந்த இயந்திரத்துக்குத் தேவையான உணவு தரவேண்டும். உண்ணும்பொழுது முதலில் உடலுக்குத் தேவையான உணவுகளை உண்ணவேண்டும் அறிவியல் முறைப்படியும், அறநெறிப்படியும் எண்ணினால் புலால் உணவு அவசியமில்லை என்பதே முடிவு. தாவரவகை உணவே நல்லது. தாவர வகை உணவு நல்ல உடல் நலத்தையும் அமைதியான வாழ்க்கையையும் தரும். காய்களும் கனிகளும் சிறந்த உணவு. உணவில் அரிசியின் அளவைக் குறித்து, காய்களையும் அதிகமாகக் கொள்வது நல்லது. ஒரே அரிசி உணவு இல்லாமல் கோதுமை மற்றும் தானிய வகைகளையும் சுழற்சிமுறையில் சேர்த்துக் கொள்வது நல்லது. அதுபோலவே, பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

உடம்பு, உழைப்புக்கு உரிய சாதனம். பயன்படுத்தப் பெறாத உடம்பு நோய்க்கு இரையாதல் இயற்கை கதிரொளியில் தோய்தலும் காற்றில் தோய்தலும் உடலுக்கு நலம் தரும்; ஆற்றல் கூட்டும்; ஆயுளை வளர்க்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக உடல் நலத்திற்கு ஆன்ம நலம் தேவை. ஆன்ம நலத்தினை அரண் செய்ய உடல் நலம் தேவை. ஆன்ம நலத்தின் விளைவு மன நலம். மன நலத்திற்கு அரண் நல்ல சமுதாய அமைப்பும் அறிவின் தெளிவும் ஆகும்.

சமூகவியல்

மனிதன் ஒரு சமூகப் பிராணி, மனிதன் கூடி வாழப் பிறந்தவன். மனிதன் குடும்பம், சமூகம், சமுதாயம், தேசிய இனம் என்ற பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து இணைந்து ஒன்றுபட்டு வாழப்பிறந்தவன். ஆனால் நடைமுறையில் மனிதன் தோன்றிய காலந்தொட்டு நடைபெறவில்லை. நன்மையும் பலனும் இருக்கிறவரையில் சேர்ந்திருக்கிறான். அது கிடைக்காது என்றவுடன் பிரிந்து பகை கொள்கிறான் மோதுகிறான். அன்பு, நன்றி என்ற சொற்கள் அகராதியில் மட்டும் உள்ள. சொற்களாக மாறிவிட்டன. ஏன்? அரசியல் விஞ்ஞானமே மனித உறவுகளின் எல்லைகளை நிர்ணயித்து மோதல்களைத் தவிர்த்து மனித குலத்தை ஒன்றுபட்டு நின்று. வளரவும் வாழவும் தான் தோன்றியது. இன்று அந்த அறிவியல் சார்ந்த அரசியலை எங்கே காணமுடிகிறது? அரசியல் கட்சிகள் இன்று இழிநிலைக்கு வந்து விட்டன. அரசியல் கட்சிகள் சமுதாயத்தை உடைத்திருப்பதுபோல வேறு எதுவும் உடைக்கவில்லை. கட்சிகள் - அவரவர் கட்சிகள் என்ற சிற்றெல்லைக்குள்ளேயே விளையாடுகின்றன. அவற்றுக்குள்ளே உட் குழுக்கள் எண்ணற்றவை. திருக்குறள் கூரிய "பல் குழு" இன்றைய அரசியல் கட்சிகளிடத்தில் தான் உள்ளன. மக்கள் மனம் இறுக்கத்தில் சிக்கிக் கொண்டதால் அதற்கு நேர் எதிரில் செல்கின்றன. இன்று பிரச்சினைகளை வைத்தே கட்சிகள் வளர ஆசைப்படுகின்றன; அதனால் பிரச்சினைகளைத் தேடி அலைகிறார்கள்.

மனித குலம் நல் வாழ்வு வாழ இன்னும் நெடியதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. நமது நாட்டில் முன்னேற்றம் என்ற திசையில்.நடந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நடை மிக மிக மெது. மற்ற நாடுகளை நோக்க நாம் ஒரு நூறு ஆண்டுகள் பின்னடையில் இருக்கின்றோம். இது உறுதி ஏன்? ஒரு மூலப்பொருள் கூட இல்லாத ஜப்பான் நாடு இன்று உலகச் சந்தையைப் பிடித்தாள்கிறது. அமெரிக்க நாட்டுச் சந்தைகூட இன்று ஜப்பான் வசம் இருக்கிறது. உலகப் போரில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட ஜெர்மனி இன்று திரும்ப ஆலைகளையும் தொழிற்சாலைகளையும் கட்டி, மாட மாளிகை கூடகோபுரத்துடன் விளங்குகிறது. எப்படி? எதனால்? அந்த நாடுகளின் மக்கள் வாழ்க்கையில் ஒற்றுமை இருக்கிறது. கூட்டுறவு வளர்ந்திருக்கிறது. கடின உழைப்பு இருக்கிறது. வேலை நிறுத்தங்கள் கூட உற்பத்திக்கும் வேலைக்கும் இடையூராக நடப்பதில்லை. நமது நாட்டிலோ நாட்டுப் பிரிவினைக் கிளர்ச்சிகள்! கடின உழைப்பு என்பது மருந்துக்குக்கூட இல்லை. வேலை நிறுத்தம் செய்யும் பழக்கத்தின் காரணமாக ஏதாவது காரணத்தைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள் நம்முடைய நாட்டினர். ஆம்! இங்கு வேலை நிறுத்த நாட்களுக்கும் ஊதியம் உண்டு. நமக்கு நமது நாட்டைப் பற்றிய கவலை. சமூகத்தைப் பற்றிய நினைப்பு இல்லை. நாம் ஒரு சமுதாயமல்ல. ஒரு கூட்டம். அவ்வளவு தான். "ஒருவருக்காக எல்லாரும்" "எல்லாருக்காகவும் ஒருவர்" என்ற சித்தாந்தத்தைப் புரிந்துகொண்டு வாழத்தலைப் பட்டால் எல்லாரும் வாழலாம்; இன்புற்று வாழலாம். ஆனால், நமது நினைப்பு என்ன? "எல்லாரும் நமக்காகவே இருக்கிறார்கள்" என்று நினைக்கிறார்கள். இதனால் சமூக உறவுகள் பாதிக்கின்றன. ஒருவரோடு ஒருவர் இணைந்து நல்ல உறவுடன் வாழ்வது ஒர் அறிவியல் சார்ந்த முயற்சி. சாதனை என்று கூடச் சொல்லலாம். இங்ஙனம் ஊர் தோறும் ஒரிருவர் வாழ்ந்தால் கூட அற்புதங்கள் நிகழ்த்தலாம்.

அன்பு, உறவு, நம்பிக்கை, நல்லெண்ணெம் முதலியன விலைச் சரக்குகளல்ல. மனிதன் தன்னிடத்தில் வளர்த்துக் கொள்ளக்கூடிய பண்புகள். இவைகள் வளர்வதற்குத் தடையாக அமைபவை சுயநலம். சொத்து! சொத்து இன்று மக்களைப் பேயாட்டம் ஆடவைத்துள்ளது. சொத்து ஒரு கருவி என்ற அணுகுமுறை இல்லாமல் "சொத்தே வாழ்வு” என்ற கொள்கை உருப்பெற்று விட்டதால் சொத்தின் காரணமாக உடன்பிறந்தாரும் கூட பகைவர்களாகி விடுகின்றனர். ஈன்ற தாய்கூட அந்நியப்பட்டு நிற்கும் நிலை! தனி உடைமைச் சமுதாயம். பண மதிப்பீட்டுச் சமுதாயம் நிலவும் வரை இந்த மனிதக் கூட்டத்தின் போக்கு மாறாது. கூட்டுறவு சமுதாயம் தோன்றுதல் வேண்டும். உத்தரவாதம் தேவை.

சமூகவியல் அறிவு, நமது மக்களுக்கு மிகுதியும் தேவை. ஏன்? நமது மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகச் சாதிப் பிரிவினைகளாலும் மதப்பிரிவினைகளாலும் பிரிந்து கலகம் செய்துகொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள்; வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைய மானுட உலகம் புதிய அறிவியல் உலகத்தில் வாழ்கிறது; வளர்கிறது. அறிவியல் உலகம் நாடுகளைக் கடந்து, கடல்களைக் கடந்து, மலைகளைக் கடந்து, புவியுருண்டையை இணைத்து இன்று வெற்றி பெற்றுள்ளது. இன்று எந்தச் சிக்கலானாலும் புவியைச் சார்ந்த சிக்கல்தான் ஆனால், நாட்டு மக்களோ பழைய பானைக்குள் தலையை விட்டுக் கொண்டு தத்துவங்கள் பேசுகின்றனர். இன்று இந்தியா புறவுலக வளர்ச்சியில் 20ஆம் நூற்றாண்டில்தான் இருக்கிறது. ஆனால், இந்தியனின் தமிழனின் மூளையும் உள்ளமும் காட்டுமிராண்டித் தனமாக வாழ்ந்த யுகத்திலேயே இருக்கிறது. இந்தியன் மாறவில்லை. தமிழன் மாறவில்லை. ஆதலால், இந்தியர்கள் தமிழர்கள் புத்தம்புதிய உள்ளம் பெற்று, சமூக மாந்தர்களாக விளங்க வேண்டும். எந்த நாட்டில் சமூக மனச்சாட்சி, சமூக உணர்வு, சமூக ஒழுங்கியல், சமூக ஒழுக்கவியல் சிறந்த முறையில் வளர்ந்து சிறந்த சமுதாயம் வடிவம் பெறுகிறதோ அந்த நாடுதான் வளரமுடியும் வாழமுடியும். இதற்கு இன்று ஜப்பானை உதாரணமாகப் பின்பற்றலாம். ஆயினும் உலகின் பெரும்பான்மையான நாடுகளில் - ஆப்பிரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளைத் தவிர மற்ற நாடுகளிலெல்லாம் சமூகவியல் சிறப்பாக இருக்கிறது. அந் நாடுகளின் மக்கள் நாட்டுக்காக உழைக்கிறார்கள்; நாட்டுக்காக வாழ்கிறார்கள். நமது நாட்டிலோ நாட்டையே திருடி வீட்டுக்குக் கொண்டு போவதே மிகுதி. இந்த நாட்டில் எப்படி "சமூகம்" உருவாகும்?

பழகும் பாங்கியல்

மனிதன் மதிக்கப்படுதல் வேண்டும். அங்கீகரிக்கப் படுதல் வேண்டும். மனிதன் அங்கீகரிக்கப்படாதவரை சமூகச் சிக்கல்களுக்குத் தீர்வு காண இயலாது. மனிதனை அங்கீகாரம் செய்ய, பழகும் உறவுகளே துணை செய்ய இயலும். ஒருவரோடு ஒருவர் பழகி வெற்றிகொள்ள அறிவியல் அறிவு தேவை. ஒவ்வொருவருக்கும் பலமும் உண்டு. பலவீனமும் உண்டு. குறையும் உண்டு; நிறையும் உண்டு. இவற்றில் பலவீனங்களையும், குறைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பலத்தையும் நிறையையும் எடுத்துக் கொண்டு பாராட்டி மகிழ்ந்து உறவு கொண்டாடி வளர வேண்டும்; வாழவேண்டும். பலவீனத்தையும் குறையையும் மருத்துவப் பாங்கில் அணுகி அகற்ற வேண்டும். ஒருவரோடு பழகுதலும் உறவு கொள்ளுதலும் ஒரு கலை; பண்பு. "பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்" என்றது கலித்தொகை. ஆங்கில மொழியில் பழகும் பாங்கியல் சார்ந்த நூல்கள் நிறைய வந்துள்ளன. நமது மொழியில், அத்தகைய நூல்கள் மிகுதியாக வரவில்லை. நமக்கு ஒருவரோடு ஒருவர் பழகுவது, உறவை வளர்த்துக் கொள்வது என்பது இன்னமும் கடமையாகக் கருதப்பெறவில்லை. ஒருவர் ஒருவரைக் காணவும் கலந்து பேசிப் பழகவும் பணம் கேட்பார்கள் போலத் தெரிகிறது. ஏதாவது ஓர் அவசியம் பிடர் பிடித்துத் தள்ளினால் ஒழிய, காண்பதில்லை. இது வளரும் வாழ்க்கைக்குத் துணை செய்யாது. ஒருவரை ஒருவர் காண்பதும் பழகுவதும் கலந்து பேசுவதும் வாழ்க்கையின் வளர்ச்சிக்குக் கட்டாயத் தேவை. கேட்காத கடன் வராது. பார்க்காத பயிர் வளராது. பழகாத நட்பு வளராது என்பது ஆன்றோர் வாக்கு விபத்துக்கள் நிகழும் பொழுது காணப்பெறும் இனந்தெரியாது எழும் உணர்ச்சி ஏன் நன்மை செய்ய உருவாவதில்லை ? சமாதானம் ஏன் தோன்றவில்லை? "யாரொடும் பகை கொள்ளலன் என்றபின் போரொடுங்கும் புகழொடுங்காது” என்ற கம்பன் கண்ட மனித வாழ்வின் இலக்கண்ம் ஏன் இலக்கியமாகவில்லை? மனிதர்கள் சமூக வாழ்க்கை வாழத் தலைப்படவேண்டும். அப்போதுதான் அவனுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியும். இது உறுதி. இல்லையெனில் வெந்ததைத் தின்று கலகம் செய்து வெற்று மாந்தராகச் சாகவேண்டியதுதான்.

ஆம் கூடி வாழ்வது பலம்! மனிதர்கள் கூடி வாழ்வதற்குரிய வாயில்களே அதிகம்! வாய்ப்புக்களும் பலப்பல. இயற்கையாக அமைந்த உடல் அமைப்பு, தொழில் அமைவுகள் பால் வகைப் பிரிவுகள் கூடி வாழ்தலின் அவசியத்தை உணர்த்துகின்றன. கண்கள் மற்றவர்களைப் பார்த்துப் பழகும் அமைப்பிலேயே அமைந்துள்ளன. செவிகளும் மற்றவர்கள் கூறுவதைக் கேட்கவேயாம்! உலக மாந்தரைக் கண்டு அவர்தம் வாய்ச் சொல் கேட்டுப் பழகும் அமைப்பே உடல் அமைப்பு. வாய் கூடப் பிறருடன் பேசத்தான். நமக்கு நாமே பேசிக் கொண்டால் ஐயப்படுவார்கள். ஆனால் நடைமுறையில் நமக்கு மற்றவர்களுடன் உள்ள உறவு தளர்கிறது.

ஒருவர் மற்றொருவரிடம் பழகி வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டுமெனில் எதிர்பார்ப்புக்கள் இல்லாத அன்பு காட்டவேண்டும். நோன்பு என்றால் என்ன? இன்று உண்ணாது, உறங்காது வாழ்தலே நோன்பு என்று கருதுகின்றனர். இல்லை, இல்லை!

"தனக்கென முயலா நோன்றான்
பிறர்க்கென முயலுநர்”

என்று புறநானுறு கூறும். பிறர்க்கென முயன்று உதவி செய்தலே நோன்பு, இதனை பாரதி

"ஊருக்கு உழைத்திடல் யோகம்”

என்றான். ஆதலால் உறவு வளர வேண்டுமாயின் தன் முனைப்பும் தற்சார்பும் இன்றி வாழ்தல் வேண்டும். இதுதான் வாழும் முறைமை. பலருடன் கூடி வாழும் வாழ்க்கையில் ஏமாற்றங்களும் இழப்புக்களும் இருந்தால்கூட ஏற்றுக் கொண்டு அன்பு காட்டவேண்டும்; உறவு பேணவேண்டும்?

நம்முடன் பழகுபவரின் குணநலங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். நட்பு, உறவு, நீதி, சட்டம், பக்தி முதலியன கூடக் குறுக்கிடக்கூடாது. உறவுக்கு அடுத்த இடத்தில்தான் இவையெல்லாம்! ஏன்? உறவுகள் நல்ல வண்ணம் பராமரிக்கப் பெற்றால்தானே நீதியை எடுத்துக் கூறமுடியும்! அவரும் கேட்பார். உறவு கெட்டுப்போன நிலையில் சொன்னால் முதலில், சொல்பவர் மீது சந்தேகம்!, ஆதலால், சொல்லும் நீதியிலும் ஐயப்பாடேதோன்றும்! அதனால்தானே சிவபெருமான் சுந்தரர் செய்த துரிசுகளுக்கு உடந்தையாக இருந்தார்.

நட்பும், உறவும் கலந்த வாழ்க்கையின் ஊடே வேறு எதுவும் - பனம், பரிசு, பதவி, புகழ் ஆகிய எதுவுமே தலை காட்ட அனுமதிக்கக்கூடாது. பழக்கம், பழக்கத்திற்காகவே, உறவு, உறவுக்காகவே! வேறு எதற்காகவும் அல்ல. ஏன்? மற்றவை நட்புறவைத் தொடர்ந்து வரக்கூடியவை. வாழ்க்கையின் முதல் அன்பு, நட்பு, உறவு என்பதறிக. ஒவ்வொரு மனிதனுக்கும் குணங்கள் மாறுபடும். மாறுபட்ட குணங்களை அங்கீகரித்துப் பழகும் பாங்கிருந்தால்தான் நட்பு வளரும். உறவில் ஐயப்பாடு தலைகாட்டக்கூடாது. இழப்பைவிட ஐயப்பாடு - சந்தேகம் கொடிது, ஆதலால் நட்புறவுக்கு நம்பிக்கை அடிப்படை கர்ணன், துரியோதனன் மனைவி விளையாடும் காட்சியை வில்லிப்புத்துரார் எடுத்துக் காட்டுவது உணர்க. சந்தேகம் ஒரு தீமை, சந்தேகம் எந்த ஒரு நன்மையும் தராது. பாதுகாக்கவும் செய்யாது. ஐயம் வேறு; ஆய்வு வேறு. சிலர் ஆய்வையே ஐயம் என்று கருதுகிறார்கள். இது பிழை. ஆய்வு, வளர்ச்சியின்பாற்பட்டது.

நல்லெண்ணம் வளர வேண்டும். நல்லெண்ணங்களாலேயே நட்பு உரம் பெறும். வாழ்க்கை ஆக்கம் பெறும். கெட்டவர்களுக்கு நல்லனவும் தீயனவாம். தீயனவும் நல்லனவாம். அதாவது நல்லது சொன்னால் - செய்தால்கூட நம்பமாட்டார்கள். இதில் ஏதோ சூதிருக்கிறது என்பர். இதற்குக் காரணம் பரஸ்பர நம்பிக்கையும் நல்லெண்ணமும் இல்லை என்பது தான். நம்பினார் கெடுவதில்லை. மனிதன் நம்பிக்கையோடும் நல்லெண்ணத்தோடும் வாழ்ந்தால் எவராலும் எந்தக் கேடும் செய்ய இயலாது. பாதிப்புக்களும் ஏற்படாது.

நட்புறவுகளுக்கு அன்பு, நம்பிக்கை, நல்லெண்ணம் இவற்றைத் தொடர்ந்து மண்ணின் பண்பும், மறக்கும் பண்பும் தேவை. "நன்றல்லது அன்றே மறப்பது நன்று" என்று திருக்குறள் கூறியது. மன்னித்தல் என்பது அருட்பண்பு. மன்னிக்கும் பண்புக்கு இணை இந்த உலகில் இல்லை. "அறியாமல் செய்கிறார்கள் மன்னித்து விடுக" என்ற ஏசுவின் பிரார்த்தனையை ஓர்க மறத்தல் நிகழ்ந்தால்தான் மன்னிப்புக்குப் பொருள் உண்டு, பயன் உண்டு. என்று இப்பண்புகள் எல்லாம் நினைத்து மகிழக்கூடியவையாகி விட்டன என்று நம் மக்கள் வாழ்க்கையில் இடம் பெறும்?

அரசியல்

இந்த நூற்றாண்டில் ஒர் அறிவியல் பற்றிப் பேசாது விட்டால் சுற்றுத் துறைபோய அறிஞருலகம் மன்னிக்காது. அது எந்த அறிவியல்? அரசியல் என்பது ஒர் அறிவியலேயாம். நமது மக்களில் பலருக்கு இந்த அறிவியல் இல்லை. இன்று நாம் காண்பது கட்சிகள்! கொடிகள்! தலைவரைப் புகழ்தல்! கட்சிக்காரரே சுற்றம்! நமது நாட்டு மக்களோ தேர்தலில் வாக்களிப்பதை ஒரு தீர்ாக் கடமையாகச் செய்து முடிக்கின்றனர். அரசியல் அறிவு இல்லாது போனாலும் மக்கள், கட்சிகளின் போக்கில் விருப்பு வெறுப்புக்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தேர்தல் முடிவுகளில் புலனாகிறது. விருப்பு - வெறுப்புக்கள் மட்டுமே அவற்றின்பாற்பட்ட உணர்ச்சிகள் மட்டுமே நிரந்தரத் தீர்வைத் தந்துவிடமுடியாது. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கக்கூடிய வகையில் மக்களாட்சி அமையத்தக்க வகையில் உள்ள கொள்கை, கோட்பாடு உடையவர்களை மக்கள் ஆதரித்து ஆட்சியில் அமர்த்த வேண்டும். ஆட்சியின் திட்டங்கள், செயற்பாடுகள் அவற்றில் உள்ள குற்றங்குறைகள் முதலியவற்றை மக்கள் கூர்ந்து கவனித்து விமர்சனம் செய்யும் அறிவைப் பெற்றால்தான் நல்ல அரசு அமையும். மனிதன் பயமின்றிச் சுதந்திரமாகப் பேசவும், எழுதவும், வாழவும் வாய்ப்பு வேண்டும்!

மனிதகுலம் பல நூறாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த பிறகே தங்களுக்கிடையில் இருந்த பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண அரசியலைக் கண்டனர். அரசியல் மனித உறவுகள், உரிமை களின் எல்லைகளை நிர்ணயிப்பது, மக்கள் தங்களைத் தாங்களே மேலாண்மை செய்ய அரசைக் கண்டனர். காலப் போக்கில் அரசைக் கண்டனர், காலப்போக்கில் அரசியல் பலவாகத் தோன்றியது. இன்று பரவலாக இருக்கும் அரசுகளை முடியரசு, குடியரசு என்பர். முடியரசு மன்னராட்சி. மக்கள் முடியாட்சியுடன் போராடி அதனை அகற்றிக் குடியரசு கண்டனர். இன்று தரமான நலம் பயக்கும் குடியரசு விரல் விட்டு எண்ணத்தக்கவை சிலவேயாம். குடியரசில் வாக்காளர்கள் தரம் கூடினால்தான் குடியரசு சிறப்பாக அமையும். சில சமயங்களில் குடியரசு, முடியரசைவிட மோசமாகப் போய்விடுவதைக் கண்டிருக்கிறோம்.

நமது நாட்டுக் குடியரசு வளரவேண்டும். மேலும் வளர வேண்டும். தேர்தலில் ஆதிக்கம் வகிக்கும் பணம், சாதி, மதம் இவைகளை அறவே நீக்கவேண்டும். பண ஆதிக்கத்தை அரசும் தேர்தல் ஆணையமும் எளிதில் நீக்கலாம். அதாவது, தேர்தல் செலவை அரசே ஏற்கவேண்டும். அரசியற் கட்சிகளின் கணக்குகள் தணிக்கை செய்யப் பெறுதல் வேண்டும். அடுத்து, சாதி மதங்களின் ஆதிக்கத்தைத் தேர்தலிலிருந்து அகற்ற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். பெரும்பான்மையான சாதியை, மதத்தைச் சேர்ந்தவர்களை அந்தந்தத் தொகுதிகளில் நிறுத்துவதற்குச் சில நெறிமுறைகளைத் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டும். நமது அரசு சமயச் சார்பற்ற அரசு. ஆதலால் சமயச் சார்புடைய கட்சிகளை அரசியல் கட்சிகளாகத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக்கூடாது.

தேர்தல் அறிக்கைகளை, தேர்தல் அறிவித்த 15 நாளில் தயார் செய்து மூன்று படிகள் முத்திரை வைத்த உறையில் வைத்து, தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் தந்துவிட வேண்டும். தேர்தல் ஆணையம் ஒரு குறிப்பிட்ட நாளில் அனைத்துக் கட்சிகளின் முன்பாகத் திறந்து தேர்தல் ஆணையத்தின் முத்திரை வைத்துத் தரும் தேர்தல் அறிக்கையினைக் கடந்த உறதிமொழி எதுவும் கட்சிகள் தரக்கூடாது. தேர்தலில் கூட்டணிகள் நிற்க அனுமதிக்கக்கூடாது. தேர்தலில் கூட்டணி அமைத்து நிற்க வேண்டியிருப்பின் ஒரே தேர்தல் அறிக்கை அடிப்படையில் நிற்கவேண்டும். மந்திரி சபையும் கூட்டணி மந்திரி சபையாக இருக்க வேண்டும். தேர்தலில் அளிக்கப்பெற்ற வாக்குகளில் 50% வாக்குகள் பெறாத கட்சிகள் ஆட்சி அமைக்க அனுமதி இருக்கக்கூடாது. தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை தொகுதி வாரியாக எண்ணுதல் கூடாது. இந்தச் சில சீர்திருத்தங்களைச் செய்தால்கூடப் போதும்! நமது நாட்டில் மக்களாட்சி சிறக்கும்.

சமயவியல்

இன்று நம்மிடையே நிலவும் மதங்கள், சமயங்கள் அனைத்தும் உண்மையிலிருந்து நீண்டதூரம் விலகி வந்து விட்டன. இன்றைய மதங்கள் நம்பிக்கையை மட்டுமே நம்புகின்றன. ஆனால், உண்மையில் சமயம் ஆய்வு நெறிகளைச் சார்ந்தது தான்!

"நானார் என் உள்ளமார் ஞானங்களார்
என்னையார றிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல்
மதிமயங்கி
ஊனார் உடை தலையில் உண்பலிதேர்
அம்பலவன்
தேனார் கமலமே சென்று தாய்
கோத்தும் பீ!

என்று ஆய்வுநெறி வகுத்துத் தருகிறது திருவாசகம்.

திருஞானசம்பந்தரும்

"ஏதுக்கு ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா"

என்றார். ஏன்? ஏதுக்களுக்குப் பொருள் காண்பதும் எடுத்த மொழியாளர் அறிவும் எல்லைக்குட்பட்டவை என்பதால் விலக்கினார். இறைவனைக் காணும் அறிவே அறிவு என்பதை

"அறிவு தந்தெனை ஆண்டு கொண்டருளிய

அற்புதம் அறியேன்!”

என்ற திருவாசகம் உணர்க. உயிர் நிறைநலம் பெறுதலே வாழ்க்கையின் நோக்கம்; குறிக்கோள். அந்த நிறைநலமாகிய இன்ப அன்பினை நோக்கித் தொடங்கிய பயணமே வாழ்க்கை.

இன்றோ சமயவியல் அறிவியலாக விளங்காமல் மூடத்தனம் நிறைந்த கொள்கைகள், கோட்பாடுகள், பழக்கங்கள், வழக்கங்கள், சடங்குகள் நிறைந்து பயனற்றுப் போனதோடன்றி. நம்முடைய காலத்தையும் ஆற்றலையும் செல்வத்தையும் கொள்ளையடிக்கின்றது. இது மட்டுமா? மனிதத்தை முட்டாளாக்கிப் பயமுறுத்தி கடவுள் கோபம் என்றும் சொல்லி வாழ்க்கையைக் கெடுக்கின்றது.

கடவுள் ஒருவர் தான்! ஒருவரே தான்! சத்தியமாக வேறு ஒரு கடவுள் இல்லை! இதுவே உண்மை. ஒரே கடவுளை வணங்கும் மாந்தர்களிடையே மதங்களைப் படைத்து, வேற்றுமையை வளர்த்து, பகைமையை மூட்டி இந்தப் புவியைக் கலகக் காடாக்கி வருகின்றனர். இதுவல்ல சமயம் சமயம் ஒரு சிறந்த அறிவியலுள் சிறந்த அறிவியலாகும். குறைவிலா நிறைவாக, கோதிலா அமுதாக, அறிவுக்கு அறிவாக, நன்றாக, இன்பமாக விளங்கும் பரம்பொருள் நெறி நின்று எண்ணி வாழ்தல் மூலம் உயிர்கள் தாமும் நிறைநலம் பெறுதலே சமயவியல். இத்தகு சமயவியல் அறிவு மக்களைச் சென்றடையாதவரை மக்கள் ஞானம் பெறமாட்டார்கள். இந்த மண்ணகம் விண்ணகமாகாது.

முடிவுரை

அறிவியல் மக்களுக்காகவே. மக்களின் மேம்பாட்டுக்காகவே அறிவியலை எந்தக் காரணத்தை முன்னிட்டும் மக்களுக்கு விரோதமான காரியங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. மேலும் மேலும் அறிவியல் நெறி வழி மனிதகுலம் மேம்பாடு அடைந்து இந்த மண்ணில் விண்ணகம் தலைப்படுமாறு செய்யவேண்டும்.

முனைவர் ஏசுதாசன் அவர்கள் அறக்கட்டளையின் சார்பில் 'மக்களுக்காக அறிவியல்' என்ற சொற்பொழிவாற்றிடக் கிடைத்த வாய்ப்பை இனிதே போற்றி மகிழ் கின்றோம். அறக்கட்டளையினருக்கும் தமிழ்ப் பல்கலைக் கழகத்தினருக்கும்

நன்றி! பாராட்டு! வாழ்த்துக்கள்!