குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15/சமயவியல் கட்டுரைகள்

2


சமயவியல் கட்டுரைகள்

'1. சமய வாழ்வு'

வாழ விரும்புகின்ற-வாழ்கின்ற மனித சமுதாயத்திற்கு மார்கழித் திங்கள் மிக முக்கியமான திங்கள். மனித குலத்தை நன்னெறியில் அழைத்துச் செல்லும் திங்கள் மார்கழித் திங்கள். பன்னிரெண்டு திங்களில் பள்ளி எழுச்சி பாடுகின்ற திங்களும் இந்தத் திங்கள் தான். இத் திங்களில் பாவை நோன்பு என்றே சொல்லுகிறோம். பாவைப் பாட்டுப் பாடுகிறோம்-பாவைப் பாடல்களைப் பாடச் சொல்லுகிறோம். பரிசுகள் வழங்குகிறோம். எனினும், பாவைப் பாடல்களைப் பாடும் எழுச்சி பெறுகவில்லை. பாவை நோன்பின் அடிப்படையை நாம் மறந்துவிட்டோம். நமது மாணிக்கவாசகப் பெருமான் சொல்லியவண்ணம் தமிழகத்துப் பெண்கள் இப் பாவை நோன்பை நோற்பார்களானால் வீட்டிலும் நாட்டிலும் ஞானச் செல்வம் பெருகும்.

சுந்தரரை ஈன்றெடுத்துக்-கொடுத்த தந்தையும் ஒரு நாயனார், தாயும் ஒரு நாயனார். சுந்தரரை ஈன்றெடுத்த இசை ஞானியார் புகழை நாவால் கூறமுடியாது என்று சேக்கிழார் பெருமானே பேசுகின்றார். இசை ஞானியார் குடும்பம் ஒரு ஞானக் குடும்பம். அவர் குடும்பம் சமயம் தழுவிய குடும்பம்.

வீடுகளில் சமய வாழ்வு இருந்தால் நாட்டில் சமயப் பண்புமிகும். சமயம் கற்றுக்கொடுக்கக்கூடியதல்ல அனுபவத்தால் எடுத்துக்கொள்ளக்கூடியது. இன்றைக்கு நமது சமய உலகில் சமய ஒழுக்கம் இலைமறை காய்மறையாகவே இருக்கிறது. மாணிக்கவாசகர் பெண்ணின் விளையாட்டு - தொழில் தொடர்பில் திருப்பொன்னுரசல், திருப்பொற் சுண்ணம், அம்மானை முதலிய பல பதிகங்களைப் பாடியுள்ளார். வீட்டில் கோவிலின் சூழல் அமையுமானால் திருக்கோவில்கள் திருவருளின் பெட்டகமாகத் திகழும்.

சமயத் துறையில் பெண்களுக்குப் பெரும் பங்குண்டு. பெண்கள் எதையும் சீக்கிரமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆண்கள் அப்படியல்ல. உணர்ச்சி வேகத்தில் ஒன்றைச் சட்டென்று ஒத்துக் கொள்வார்கள் - உதறித் தள்ளுவதிலும் அப்படித்தான்.

அன்று, பாண்டிமாநாட்டை ஆண்ட மன்னனே வழிவழி வாழ்ந்த சைவத்தைவிட்டுச் சமண மதத்திற்கு மாறினான்-ஆனால், மங்கையர்க்கரசி மாறவில்லை. சொந்தக் குடும்ப வாழ்க்கையின் நலன்களை - குலத்தை - குடும்பத்தை வளர்க்கின்ற தெய்வத்தைத்தான் குல தெய்வம் என்கிறோம். சேக்கிழார் பெருமான் மங்கையர்க்கரசியைத் தவிர வேறு எவரையும் "குலதெய்வம்" என்று பாராட்டவில்லை. மங்கையர்க்கரசியை "எங்கள் குலதெய்வம்" என்று பெருமை யோடு பேசுகின்றார். சிவநெறியின் பெருமை சிறப்பு மங்கையர்க்கரசிக்கு உண்டு.

பொதுவாக ஐந்து ஆடவர்களை மதம் மாற்றுவதை விட ஒரு பெண்ணை மதமாற்றுவது சிறந்தது என்பது விவிலிய மதத்தினரின் கோட்பாடு, பெண்களிடத்துப் பரவிய கொள்கை மேலும் மேலும் வளரும் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம். மாணிக்கவாசகரும் இந்தப் பேருண்மையை உணர்ந்து தான் பாவையர்க்குப் பாடினார். பாவை காட்டும் பண்பட்ட வழியில் சென்றால் நாடு நலமுறும் பாவையர்க்கே பாடினார் என்பதில் இன்னொரு தத்துவப் பொருளும் உண்டு. உலகத்திற்கு நாயகன் ஒருவன் - அவனே இறைவன். அவனை ஆன்ம நாயகன் என்பார்கள். ஏனைய உயிர்கள் அனைத்தும் நாயகியர் என்பது வழக்கு.

திருப்பெருந்துறை மண்ணில் இன்றும் ஞானத்தின் தேக்கம், இருக்கிறது "திருப்பெருந்துறை என்று சொன்னேன் - என் பிறப்புறுத்தேன்" என்று பேசுகின்றார். நாட்டின் போக்கு - சமுதாயத்தின் பலவீனம் இவற்றைத் தெளிவாகக் கணக்கில் எடுத்து வைத்துக் கொண்டு பாடினார் மாணிக்க வாசகர் "என்னை ஒரு வார்த்தை உட்படுத்தி ஆண்டாய்” என்று பாடிநின்றார். சொல்லாமற் சொல்லிக் குறிப்பால் உணர்த்தி ஆட்கொள்ளும் உயரிய நெறி நமது சிவநெறி.

நான் மாணிக்கவாசகரை எம்பெருமான் என்றே குறிப்பிடுகின்றேன்; அழைக்கின்றேன். "அறிவினாற் சிவனே ஆனவன்” என்று பாராட்டப்பெற்றவர் அல்லவா மாணிக்க வாசகர். சிவநெறியில் அடியார்களுக்குச் சிறப்புண்டு. சிவ பூசை செய்தாலும் செய்யலாம். திருவாசக பூசை பண்ணினாலும் பண்ணலாம். இரண்டும் ஒரு பயனைத்தரும் என்பது ஆன்றோர் வழக்கு.

எம்பெருமான் இறைவனைப் பார்க்கின்ற காட்சி தனிச்சிறப்பு வாய்ந்தது.

"ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியே!” என்கிறார். "சோதியே! சுடரே! சூழ் ஒளி விளக்கே!" என்று பேசுகிறார். இறைக் காட்சியில் எப்போதும் வண்ணம்தான் முதலில் தோன்றும். வண்ணம்தான் அதுகாட்டி வடிவு காட்டி மலர்க் கழல்கள் அவைகாட்டி.." என்கிறார். "கண்ணாலும் யானும் கண்டேன் காண்க" என்கிறார். "புவனியில் சேவடி தீண்டினன் காண்க” என்று பேசுகின்றார்.

பொதுவாக மனிதக் காட்சிக்கும் இறைக்காட்சிக்கும் வேறுபாடு உண்டு. மனிதக் காட்சியில் வடிவம் முதலில் தோன்றும். பின்னர் உறுப்பு நலன் தோன்றும். அண்மையில் நெருங்கிய பின்பே வண்ணம் தோன்றும். இறைக்காட்சி அப்படியல்ல. வண்ணம் காட்டினார். வடிவு காட்டினார்....மலர்க்கழல்கள் காட்டினார் என்று முறை வைத்துப் பேசுகிறார் மாணிக்கவாசகர்.

பஞ்ச பூதங்களில் நெருப்புக்குத் தனி ஆற்றல் உண்டு. நிலம், நீர், காற்று யாவும் அசுத்தத்தோடு சேர்ந்தால் தாமும் தமது தூய்மையை இழக்கும். தீ மட்டும் தன்னைச் சார்ந்த அசுத்தத்தை மாசுகளை எரித்துத் தனது தூய்மையையும் காப்பாற்றிக்கொள்ளும் இத்தகைய தீ ஒளியைத்தான்..... அனற்பிழம்பைத்தான் "சோதியே” என்கிறார். கார்த்திகை அன்று நாம் ஏற்றுகிற சொக்கப்பானை இதன் அறிகுறிகள்.

"பொய்யினைப் பெருக்கிப் பொழுதினைச் சுருக்க” என்று எம்பெருமான் பாடுகின்றார். மாணிக்கவாசகரைப் பொறுத்தவரை இது உண்மையல்ல....மாணிக்கவாசகர் போன்ற சிவஞானச் செல்வர்கள் பிறர் மீதுள்ள குற்றத்தைத் தன்மீது ஏற்றிச்சொல்வது மரபு. அம்மரபின் வழிப்பட்ட தாகவே இதனைக் கருதவேண்டும்.

"வாழ்க்கையில் அறியாமைகூடப் பிழையல்ல. அறியாமையை அறிவு என்று நினைத்துக்கொண்டு மயங்குவதுதான் பெருந்தவறு என்று குறிப்பிடுகிறார் மாணிக்கவாசகர்.” குடும்பங்களைவிட நாடு வேண்டும் என்பார் சிலர்; குடும்பமே பெரிதென மதிப்பார் சிலர் நாடும் வீடும் சேர்ந்த வாழ்வே நலமுடைய வாழ்வு. அவ்வாறு நாடும் குடும்பமும் வாழ்வதற்குரிய பிரார்த்தனை தான் பாவை நோன்பு.

நாடு செழிக்க மழை வேண்டும். பெண்கள் வானமழை வேண்டி நோன்பிருந்தார்கள். இதையே மாணிக்கவாசகர் "எம்பிராட்டி அருளே என்னப் பொழியோல் ஓர் எம்பா வாய்" என்று பேசுகிறார். மழை, வேண்டுவார் வேண்டாதார் என்று பார்ப்பதில்லை. அதுபோல, எம்பிராட்டி அருளுக்குக் காலம்.கருத்து வேறுபாடு...... எல்லைக்கோடு இவை இல்லை.

பொதுவாக மனையற வாழ்க்கையும், பிறவும் இடையிலே ஒரு சாதனம்தான். இலட்சிய வாழ்க்கையுடைய ஒரு பெண் பிறவி விடுதலையையே விரும்புகிறாள். அந்தப் பிறவி விடுதலைக்கு, இலட்சியத்தோடு ஒத்த கணவன் வேண்டும் என்கிறாள். இன்ப துன்பங்களுக்குக் கட்டுப்பட்ட பிறவித் துன்பத்தினின்றும் விடுதலை பெறுவதுதான் அவளது இலட்சியம். அதனால்தான்,

"எங் கொங்கை நின் அன்பர்
அல்லார் தோள் சேரற்க

எங்கைகள் நினக் கல்லாது

எப்பணியும் செய்யற்க”

என்று வேண்டுகின்றார். நோன்பிலும் தவத்திலும் சிறந்த பழைய சிவனடியார்களை நோக்கி, "புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதோ?” என்று விண்ணப்பிக்கின்றார்.

ஒரு மாம்பழ விற்பனைக்காரி;பழங்களைப் பறிக் கிறாள்; பறிக்கும்போது பிஞ்சுகளும் காய்களும் விழுந்து விட்டன. எல்லாவற்றையும் சேர்த்துச் சந்தைக்குக் கொண்டு போகிறாள். வந்தவர்கள் பழங்களையே வாங்கிச் செல்கின்றனர். இன்னும் ஒரே ஒரு பழம்தான் இருக்கிறது-அத்தோடு காய்களும் பிஞ்சுகளும் இருக்கின்றன. பெரிதும் ஏக்கமடைகிறாள். சமுதாய நாகரிகம் படைத்த ஒருவன் வருகிறான். அவன் காயையும், பிஞ்சையும் சேர்த்து வாங்கிச் செல்லுகிறான். காய் பச்சடிக்கும், பிஞ்சு ஊறுகாய்க்கும் உதவும் என்று கருதி அவன் அவற்றை வாங்கிச் செல்லுகிறான்.

மாணிக்கவாசகர் அமைச்சராக இருந்தார். கோவில் திருப்பணி செய்தார்.எனினும் புளியம்பழம்போல பற்றற்று இருந்தார். "புளியம்பழம் ஒத்திருந்தேன்” என்று அவரே பேசுகின்றார்.

புளியம்பிஞ்சுபோல் இருப்பவர்கள் மனித விலங்குகள் புளியங்காய்போல் இருப்பவர்கள் மனிதர்கள். புளியம்பழம் போல் இருப்பவர்கள் ஞானிகள். புளியம் பிஞ்சு தோற்றமிருக்கும். ஆனால் பயன்படக்கூடிய சத்து ஒன்றும் உள்ளே இருக்காது. அதேபோல பலரிடத்து மனித உருவமிருக்கும், ஆனால் மனித சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய மனிதப் பண்பு இருக்காது. காயில் பசையிருக்கும். ஆனாலும் புளிக்கும் அதுமட்டுமின்றி, ஓடும் பசையும் ஒட்டிக்கொண்டிருக்கும். அதே போல காய்போன்ற மனிதர்கள் தன்னலப்பற்று மிக்குடையவர்களாக இருப்பர்... மற்றவர்களுக்குப் புளித்த வாழ்க்கை நடத்துவர். பழம் சுவையுடையதாக இருக்கும்; ஓடும் உட்பகுதியும் பற்றற்ற நிலையில் தொடர்பு கொண்டிருக்கும். பழம்போன்ற மனிதர்கள் மற்றவர்கட்கு இன்பந் தரத்தக்க விதத்தில் வாழ்வார்கள், தன்னலப் பற்றின்றி வாழ்வார்கள்.

மாணிக்கவாசகர், இறைவனைத் தினையளவு நேரம் கூடப் பிரிந்திருக்க முடியவில்லை என்பதனைத் "தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பன்று" என்று பேசுகின்றார். எம்பெருமானை ஆட்கொண்ட இறைவன், அவரை விட்டுச் சென்றார். இறைவனைப் பிரிந்த இப்பிரிவுத் துயர் திருவாசகம் முழுவதிலும் சாறாக ஓடியிருக்கிறது. இப்பிரிவின்றேல் திருவாசகம் பிறந்திருக்காது. மாணிக்க வாசகரிடம் சொற்கள் வந்து ஏவல் செய்திருக்கின்றன.

"கோதாட்டி அருளும் சீலம்" என்று பேசுகின்றார். அடியார்களை ஆட்கொள்வதுதான் சீலம். அதுதான் இறைவனின் கடமைப்பாடுங்கூட. இந்தக் கடமையையும் இறைவன் கடமையாக எண்ணிச் செய்யாமல் விளை யாட்டாகவே செய்கிறோம்.

"காலமொடு தேச வர்த்தமான மாதிக்
கலந்துநின்ற கருணைமொழி"

என்றார் தாயுமானார். "கணக்கு, வழக்குகளைக் கடந்த திருவடி” என்றும், "விரதங்கள் மாண்ட மனத்தினன் கண்டாய்" என்றும் அப்பரடிகள் பேசுகின்றார். மாணிக்க வாசகரோ,

முன்னைப் பழம்பொருளே
முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் -
பெயர்த்தும் அப்பெற்றியனே!”

என்று பாடிப்பரவுகிறார்.

இல்லங்கள் தோறும் இறைவன் எழுந்தருளுகின்றான். ஆன்மாக்களை உய்விக்க வான்பழித்து இம்மண் புகுந்து மனிதரை ஆட்கொள்ளுகிறான். ஆன்மாக்கள் குடியிருக்கும் இல்லங்களின் பட்டியல் இங்கு அற நிலையங்களுக்கு வேண்டும். மதரீதியில் வீடுகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட வேண்டும்.

மாணிக்கவாசகர் தான் பெற்ற இன்ப அனுபவத்தைப் பேசுகின்றபோது,

"செங்கணவன்பால் திசைமுகன்பால்
தேவர்கள்பால் எங்கும் இல்லாதோர் இன்பம்"

என்று குறிப்பிடுகின்றார்.

"நான் ஈடிணையற்ற உனது திருவடிகளைப் பெற்றேன்” என்கிறார். இத்தனையே,

"தந்தது உன் தன்னை:
கொண்டது என் தன்னைச்

சங்கரா ஆர்கொலோ சதுரர்!"

வணிகக் கண்ணோட்டத்தோடு முடிக்கிறார்.

"நாம் நீறணிவது நம்வினை போக, இறைவன் நீறணிவது தம்மைத்தொழுகின்ற அடியார்களின் வினை நீறாக" என்கின்றார். முழுவடிவாகப் பார்த்தால், திருவெம்பாவை வீட்டுப்பாட்டு இந்த வீடுகளில் நாம் அந்தப் பாடல்களைப் பாடினால் அந்த வீட்டின்பம் இங்கேயே கிடைக்கும். வீடு செழிக்கும்.நாடு செழிக்கும். அடுத்த ஆண்டில் ஆற்றங்கரைகளில் பாவை நோன்பு நோற்கும் முறை வரவேண்டும். இப்படிச் செய்தால் நாடுதழுவிய குடும்பங்களுக்கும் குடும்பங்கள் தழுவிய நாடும் தோன்றும்.

திருப்பாவை, திருவெம்பாவையைவிட மொழிநடையில் எளிமையானது, ஆனாலும் தத்துவச் செறிவிற்கும் பொருள் வளத்திற்கும் குறைவில்லை. எம்பாவையை விடத் திருப்பாவையில் பெண்மையை மிகுதியாகப் பாக்கிறோம்.

வில்லிபுத்துர் மண்ணும், மண்ணின்றெழும்பும் துர்சியும், தூசியைக் கொணரும் காற்றும் நல்லின்பம் தரும் என்பது ஆன்றோர் வழக்கு. திருப்பாவைக்கு எழுதிய உரையினை ஈடு என்று அழைக்கின்றனர். ஈடும் ஓர் இணையற்ற இலக்கியமாக விளங்குகிறது. வைணவம் சம்பிரதாயத்தையும் மரபையும் காப்பாற்றி வந்துள்ளது. வேதங்களையும் ஒத்துக் கொண்டுள்ளது. ஆனாலும், வைணவர்கள் திவ்வியப் பிரபந்தத்தை வேதங்களைக் காட்டிலும் முக்கியமானதாகக் கருதுகிறார்கள். நாமே வேதங்கள் முதன்மையானவை என்கிறோம். ஆனாலும், திருமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறோம்.

வாழ்க்கை நெறியைக் காப்பாற்ற உதவுவன திரு வெம்பாவையும் திருப்பாவையும்.

திருவெம்பாவையால் நாடு செழிக்க மழைமொழியும். மழைபொழிந்தால் நெல் விளையும், சோறு கிடைக்கும் திருப்பாவையால் பால்வளம் பெருகும். இரண்டையும் படித்தால் பாற்சோறு கிடைக்கும்.

'செய்யாதன செய்யோம்
தீக்குரளைச் சென்றோதோம்”

என்று ஆண்டாள் பேசுகிறார். எதைச் செய்யக் கூடாதோ அதைச் செய்யாதிருப்பது முதல் ஒழுக்கம். அதைச் செய்யாதிருக்கச் சில விதிகள் வேண்டுமே. பெரும்பாலும் செய்யத்தகாதன செய்வதற்கு ஊனின் பெருக்கமே முதற்காரணமாக உள்ளது. எனவே, அவ்வூனினைப் பெருக்காமல் இருக்க நோன்புக்காலத்திலாவது நெய், பால் முதலிய சத்துணவுகளை நீக்கவேண்டும் இதற்காகவே,

'நெய்யுண்ணோம் பாலுண்ணோம்' என்றனர்.

வைணவப் பரம்பரையில் வாழ்க்கை நெறியைப் பாடியவர் ஆண்டாள். சைவப்பரம்பரையில் இறை அன்பிலே ஊறித்திளைத்தவர் கண்ணப்பர். இறைவனே அழகு. அந்த அழகுக்கு அழகு செய்யச் சூடிக்கொடுத்தார் அந்தச் சுடர்க் கொடியாள். ஆண்டாளும், கண்ணப்பரும் அன்பு நெறி நின்றவர்கள். கடவுளை வாழ்வுப் பொருளாகக் கண்டவர்கள். ஆண்டாள் கண்ணனைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்பினார்.

மனிதனின் கண்ணுக்குப் பாவை இன்றியமையாதது. அது இருந்தால் தானே காட்சி. அதுபோல, திரு வெம்பாவையும், திருப்பாவையும் இருபாவைகள். அவற்றின் மூலம் நாம் ஞானக்காட்சியை அனுபவிக்கலாம். கடவுள் நம்பிக்கையில் சந்தேகம் இருப்பவர்கள் பாவையைப் படியுங்கள். அது உங்களை இன்ப அனுபவத்திற்கு இழுத்துச் செல்லும்.

திருவெம்பாவை திருப்பாவைப் பாடல்கள் மனித வாழ்க்கையை ஈடேற்றும். திருவாசகம், சிவானந்த அனுபவம் பொங்கி எழுந்தபோது வந்த பாடல்கள். குற்றால நீரருவி போல்-குற்றாலத்தருவியில் தண்மையை அனுபவிக்கின்றோம்; மாணிக்கவாசகர் தந்த திருவாசகத்தில் தண்ணார் தமிழளிக்கும் தென்பாண்டி நாட்டானின் தண்ணருளை அனுபவிக்கின்றோம். குற்றாலத்தருவியில் குளித்தால் உடலின் வெப்பம் கழியும்; மாணிக்கவாசருடைய திருவாசகத் தேனருவியில் மூழ்கித் திளைத்தால் உயிரின் மல வெப்பங்கள் கழியும்; துன்பம் நீங்கும்; இன்ப அன்பு பெருகும்; விடுதலை கிடைக்கும். -

மனிதன் உணர்ச்சியின் பிண்டம் தெரிந்தோ தெரியா மலோ மனிதன் உணர்ச்சி வசப்படுகிறான். அவ்வுணர்ச்சி வெற்றியும் தரலாம்-தோல்வியும் தரலாம். அந்த உணர்ச்சிகளினின்றும் மனிதனை விடுதலை பெறச் செய்வது சற்றுக் கடினமானது. உணர்ச்சி தோன்றுவதை அடிப்படையிலேயே தடுத்துவிடுவது என்பது முடியாதது. அந்த உணர்ச்சிகளால் அவன் வாழுகிறானா? அல்லது விழுகிறானா என்பவற்றை யெல்லாம் அறிந்து அவனை ஆற்றுப்படுத்தி-ஒழுங்குபடுத்தி விட்டால் உயரிய பயனை அடையலாம். அந்த உணர்வுகளை வேறு வழிகளில் திருப்பி அவனைப் பக்குவப்படுத்துவதற்குரிய சாதனம்தான் சமயம், மனிதனின் உணர்ச்சிகளை இன்ப அன்பிலே ஈடுபடுத்தவே பக்தி, சமயம், கடவுள் எல்லாம் இருக்கின்றன.

சமய வாழ்வும், சமயத் தொடர்பும் இல்லாதவன் கரடு முரடாகவே இருப்பான். அவன் மனம் மண்பானை போன்றது. ஒரு தடவை உடைந்தால் ஒட்ட வைப்பது கடினம். சிலர் சமயச்சார்பிலே ஊறித் திளைத்தவர்கள் போலக் காணப்படுவார்கள். ஆனாலும் அவர்கள் வாழ்க்கையிலே சமயப் பண்பு-சமய அனுபவம் இருக்காது.

'கற்றாழையும் கள்ளியும் இயல்பாக முளைப்பன. அவற்றிற்கு நீரோ, எருவோ, மனித முயற்சியோ தேவையில்லை. ஆனால் களைவிளையும் நிலத்தைக் கழனியாக்கி அதிலே நெல் விளைவிக்க எருவும், நீரும் மனித முயற்சியும் தேவை. மனிதனின் பலவீன அமைப்பை மாற்றி, அவனைப் பயன்படுகின்றவனாக மாற்றியமைக்க வேண்டும். அதற்குச் சமயம் பயன்படுகிறது. பிறரை வாழ்விப்பது என் கடமை என்ற கருத்தை வளர்ப்பது சமயத்தின் அடித்தளமான நோக்கம்.

மனிதனை நல்லாற்றுப்படுத்தும் சக்தி சொற்களுக்கு இருக்கிறது. இந்த நாட்டின்மீது பற்றும், இந்த நாட்டு மக்கள் நல்வாழ்வு பெறவேண்டுமே என்ற ஏக்கமும் உடையவர்களின் சொற்கள், வாழும் மனிதர்களின் உள்ளத்திலே புதிய தெம்பை உண்டாக்கும்.

ஆண்டாள் நாச்சியாரும், மாணிக்கவாசகரும் உணர்ச்சியில் ஊறித்திளைத்தவர்கள். 'தான் வாழ வேண்டும் - தனக்கு நல்ல கணவன் வாய்க்கப்பெற வேண்டும்' என்று ஆண்டாள் நாச்சியார் கருதினாள் என்பதை ஒத்துக் கொள்ளுவதில் தவறில்லை. ஆண்டாளின் எண்ணத்திலே தன்னலம் இருந்தது. ஆனால் அந்தத் தன்னலம் மற்றவர்களைப் பாதிப்பதாக இல்லை. மற்றவர்களை உறிஞ்சுவதாக இல்லை. தன்னலமே இருக்கக்கூடாது என்று சொல்ல முடியாது. அந்தத் தன்னலம் மற்றவர்களுக்குத் தீங்காக அமைந்துவிடக் கூடாது என்பதுதான் முக்கியம்.

நம்முடைய அரசியல் சட்டத்தின் அடிப்படை அமைப்பே எல்லாரும் எல்லா வாய்ப்பும் பெற்று வாழ வேண்டும் என்பதுதான். இத்தகு நாடு தழுவிய வாழ்க்கை யுணர்ச்சி ஆண்டாள் நாச்சியாரிடம் இருந்தது. அவர் சமுதாயத்திற்குத் தலைமை தாங்கிய அருளியல் கவிஞர்.

பாதகத்திற்கு முதற் காரணமாக இருப்பது மனம். மனிதனின் உள்ளுணர்வுகளைப் பக்குவப்படுத்திட்டால் தீமை நிகழா, தவறு செய்ய வேண்டும் என்ற உணர்விலிருந்தே மனிதனை விடுதலைப் பெறச் செய்ய வேண்டும்.

நமது திருக்கோவில்கள் அங்கு வருகிறவர்களின் மனப்புண்களைக் கணக்கில் எடுத்துப் பார்த்து அவர்களைப் பக்குவப்படுத்தும் பண்ணைகளாக விளங்க வேண்டும். உயிர்களைப் பக்குவப்படுத்தும் பண்பாட்டு நிலையங்கள் திருக்கோயில்கள். மனிதர்களை அவ்வாறு பக்குவப்படுத்தும் தகுதியும், திறமையும் உடையவர்களே மதப்பிரச்சாரகர்களாக வரத் தகுதியுடையவர்கள், பொதுவாக மனித தர்மத்திற்குப் பணியும் பண்பும் நம் மக்களிடையே வளரவேண்டும்.

நம்முடைய உணர்வில் அன்பை-அறத்தை-உடன் பிறப்பு உணர்வைக் கொப்பளிக்கச் செய்யும் சக்திவாய்ந்தது ஆண்டாளின் திருப்பாவை. ஆண்டாளிடத்தில் நல்ல உணர்வு இருக்கிறது-திருவருள் சிந்தனை இருக்கிறது-நல்ல தமிழ் இருக்கிறது. இவற்றை வைத்துப் பாவை பாடினார் ஆண்டாள் நாச்சியார்.

இரும்பை நெருப்பில் போட்டுச் சூடாக்கிச் சம்மட்டியால் அடித்தால்தான் அது வில்லாக வளையும். அது போல மனிதனை நோன்பிலே வருத்திப் பக்குவப்படுத்தினால்தான் அவன் பயன்படும் மனிதனாவான்.

ஆண்டாள் நாச்சியார் வீட்டைச் செழிப்படையச் செய்ய வேண்டுமென விரும்பினார். அதன் வழியே நாட்டையும் செழிப்படையச் செய்ய வேண்டுமென விரும்பினார். ஆண்டாள் நாச்சியார் கண்ணனையே வழிபட்டார். கண்ணனிடத்தில் காதல் கொண்டார். கண்ணனின் முதுகிலே ஒரு ஈ, கொசு உட்கார்ந்தால் கூடப் படபடத்தார். அத்தகைய தூய பக்தி நமக்கு வேண்டும்.

செய்யக்கூடாதனவற்றைச் செய்யக் கூடாது; தீக்குறளைச் சென்றோதக் கூடாது; முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற தலையாய மூன்று ஒழுக்கங்களை ஆண்டாள் நாச்சியார் வலியுறுத்துகிறார்.

கிறித்தவர்கள் முதலியோரின் சமயப் பிரச்சாரத்திற்கு மையமாகத் "தொண்டு" அமைந்திருக்கிறது. நம்மவர்களின் சமயப் பிரச்சாரத்திற்குப் பெரும்பாலும் பேச்சுதான் மையமாக அமைந்திருக்கிறது. எனவே நம்மில் 70 விழுக்காடு தோல்வியடைகிறோம்.

அறங்கூறும் அவைகளிலே நடக்கும் வழக்குகளைக் கணக்கிலெடுத்துப் பார்த்தால், கிறித்தவர்களின் வழக்குகளை விட, முஸ்லீம்களின் வழக்குகளைவிட நம்மவர்களின் வழக்குகளே மிகுதியாக இருக்கும் பிச்சைக்காரர்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டால் இந்து மதத்திலேதான் அதிகமாக இருப்பார்கள்; சிறைக் கைதிகளை எடுத்துக் கொள்ளுங்கள், அவர்களிலும் இந்துக்கள் தாம் அதிகம் இருப்பார்கள்.

கிறித்தவர்களிலே முழுநேர ஊழியர்கள் இருக்கிறார்கள். ஒரு சர்ச்சுக்கு மூவாயிரம் குடும்பங்கள் என்று கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். அந்த முழுநேரத் தொண்டர்கள் மூவாயிரம் குடும்பங்களுக்கும் தொண்டு செய்கிறார்கள். மூவாயிரம் குடும்பங்களின் நன்மை, தீமைகள் யாவற்றிலும் அவர்கள் கலந்து கொள்கிறார்கள். அதுபோல நமது கோயில், களும் சமுதாயத்தின் மையங்களாக விளங்கவேண்டும். நாமும் தொண்டின் வழியான பிரச்சாரம் செய்யவேண்டும். ஒரு கோயிலுக்கு மூவாயிரம் குடும்பங்கள் வீதம் பிரிக்கப்பெற வேண்டும். அவர்கள் குடும்பத்திற்கு ஒரு ரூபாய் வீதம் கோயிலுக்கு கொடுக்க வேண்டும். அதிலிருந்து அந்த மூவாயிரம் குடும்பத்தினருக்கும் மருத்துவ வசதி, கல்வி வசதி முதலியனவற்றைச் செய்து கொடுக்க வேண்டும்.

எல்லையைப் பகைவர் ஆக்கிரமித்திருப்பதைப்போல, நம்மிற் பலரை அறியாமையும் ஆணவமும் ஆக்கிரமித்திருக்கின்றன. தலைமையில் நம்பிக்கையும் தளராத முயற்சியும் நம்மை அந்நியரிடமிருந்து காப்பாற்றும்; அன்பு பண்பாடு, அனுபவம் முதலியன நம்மை ஆணவம், அறியாமை என்பவற்றின் பிடியிலிருந்து காப்பாற்றும். சமுதாயத்தின் முழு மட்டமும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று ஆண்டாள் நாச்சியார் விரும்பினார். வீட்டிலும் நாட்டிலும் சமய வாழ்வை - சமயப் பண்பைக் காப்பாற்றுங்கள் என்று பெண்களுக்குக் கூற அவர் திருப்பாவை பாடினார்.

மின்சாரத்துடன் இணைக்கப் பெற்ற கம்பி மின்சக்தி பெறுவதுபோல, நம்முடைய உள்ளம் கல்லாக-மண்ணாகஇரும்பாக இருந்தாலும் திருப்பாவைப் பாடல்களைப் பாடும்போது, இறைவனின் தண்ணருட்சாரலை நாமும் பெற்று அனுபவிக்கிறோம்.

2. சமய மறுமலர்ச்சி

தமிழினத்தின் வாழ்வு சமயப் பண்பிலே வளர்ந்து வளம் பெற்றது. வாழ்க்கைக் கடலில் வீசும் துன்பத்தை இன்பமாக மாற்றிக் கொடுப்பது சமயம். அன்பு பொருந்தியஅறந்தழுவிய-ஒழுக்கம் நிறைந்த நல்வாழ்வைக் கொடுக்கும் தகுதி சமயத்திற்கே உண்டு. சமயச் சார்பற்ற ஒழுக்கம் உலகில் நிலைபெற்றிருத்தல் இயலாது. தனிவாழ்வின் தேவைகள் நிறைந்துகொண்டிருக்கின்ற அளவுக்குத்தான் சமயச் சார்பற்ற ஒழுக்கம் நிலை பெற்றிருக்க முடியும். வாழ்க்கையில் தேவை பெருகி, அவை கிடைக்காதும் போகுமானால், ஒழுக்கம் சிதைந்து-எவ்வாற்றாலும் தேவையை நிறைவு செய்துகொள்ள மக்கள் தலைப்படுவர். சமய வாழ்வொன்றாலேயே நீதியையும் நேர்மையையும், ஒழுக்கத்தையும் காக்க முடியும். இதனை நன்குணர்ந்தே தமிழ் மக்கள் சமய வாழ்க்கையின் இன்றியமையாமையை வற்புறுத்தினர்.

தமிழர் கண்ட சமய வாழ்வு அகம், புறம் இரண்டும் ஒத்த சமய வாழ்வு. இரண்டும் இயைந்து கலக்காத வாழ்வு வாழ்வல்ல. அதனாலேயே அகமும் புறமும் (புறக் கருவிகள்) ஈடுபடுகின்ற வழிபாட்டு முறையைத் தமிழகத்துச் சமயம் வற்புறுத்துகின்றது. நமது சமயம் வழிபாட்டுக் கலையிலும் வாழ்த்துகின்ற பண்பிலும் மிகச் சிறந்து நிற்கின்றது. அதனால் வழிபாட்டுக்காக விண்ணை அளந்து காட்டுகின்ற பல நூற்றுக்கணக்கான ஆலயங்களை எடுத்து வழிபட்டனர். அதன் மூலம் அகத்தின் நல்லுணர்ச்சியைக் காத்துப் பெருக்கிக் கொண்டனர். புறத்தால் தாங்கும் வேடங்கள் பலவற்றைக் கைக்கொண்டு, அவற்றின் மூலமும் சிந்தனையைத் திருத்திச் சிவத்தில் ஆழ்த்தினர். காலப்போக்கில் சமய வாழ்வு சிதைந்துகொண்டே வந்தது. சமயம் வேறு, வாழ்க்கை வேறு என்ற புல்லிய உணர்ச்சி தலையெடுத்து வளர்ந்தது. வாழ்க்கையோடு ஒட்டிய சமயம் சடங்குச் சமயமாக மாறிவிட்டது. அகத்தைத் துய்மைப் படுத்தச் செய்யப் பெறும் சடங்குகள், உள்ளத் தோய்வுடன் செய்யப் பெறாமையினால் வழிபாடுகளும் சடங்குகளும் நெஞ்சத்திற் கலக்கவில்லை. இருதயத்தில் ஒலிக்கவேண்டிய சமயம் வாயளவிலே ஒலிக்கும் நிலைக்கு வந்து விட்டது. உண்மைச் சமய வாழ்வு அருகிக்கொண்டே வந்தது. அதனால் பண்பாடும் சிதைந்து சாதி முதலியப் போலிப் பிளவு மனப்பான்மைகளும் உருவெடுத்து விட்டன.

ஆனால் இப்பொழுது சில ஆண்டுகளாக எங்கும் ஒரு மாற்றம். சமயத்துறையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. சமயச் சார்பற்ற வாழ்க்கை சாரமற்ற வாழ்க்கை என்று மக்கள் நம்புகின்ற நிலைக்கு வந்துள்ளனர். வாழ்க்கையோடு ஒன்றுபட்ட சமய வாழ்வை விரும்புகின்ற வேட்கையும் மலர்ந்திருக்கிறது. எங்கும் சமயத்தின் பேச்சு, ஊர்தோறும் கூட்டு வழிபாட்டு இயக்கங்களும் பொதுப் பிரார்த்தனைகளும் உண்டாகிக் கொண்டிருக்கின்றன.

சமயத்தால் எழுந்தவை திருமடங்கள். சமயத்துக் காகவே வாழும் தகுதியுமுடையன திருமடங்கள். சமயக் கொள்கையைப் பேணிக் காத்து-மக்களை அருள் நெறியில் ஆற்றுப்படுத்தும் கடமையை மேற்கொண்டவைகளே திருமடங்கள். சன்மார்க்க சாலைகளாக-தமிழ் வளர்க்கும் பண்ணைகளாக விளங்கியவை-விளங்க வேண்டியவை திருமடங்கள். நல்லூழின்மையின் காரணமாக இந்த நிலை சிலகாலம் மாறுபட்டிருந்தது என்பதை ஒத்துக்கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது. இப்பொழுது சில ஆண்டுகளாக மடாதிபதிகளின் வாழ்க்கையிலும் மாற்றம்; அவர்களும் பணியில் ஈடுபட்டுவிட்டார்கள்.

சமய நூல்கள் எல்லாம் அச்சு வாகனமேறி வெளிவந்து கொண்டிருக்கின்றன. சமய நூல்களின் பயிற்சியிற் சிறந்தார்க்குப் பரிசுகள் வழங்கி ஊக்கமும் உணர்வும் ஊட்டப் பெறுகிறது. கல்வி நிலையங்கள் பல கண்டு, அவற்றின் மூலம் அறிவோடு அருளுணர்ச்சியும் தரப்படுகிறது. வீதிகளிலும் வீடுகளிலும் நின்று சமயக் கொள்கைகளைப் பரப்புகின்றனர். சேரிகளிலும் - சிறைகளிலும் கூடப் புகுந்து தமது பணிகளைச் செய்யத் தலைப்பட்டு விட்டனர். நாட்டின் வரலாற்றில், சமயத்தில் மடாதிபதிகளால் ஏற்பட்ட இம்மறுமலர்ச்சி வரவேற்கத் தக்கது-வாழ்த்தத் தக்கது.

தக்க அறிவு சான்ற பெருமக்களின் தனி வாழ்விலும் இன்று ஒரு மாற்றம் காண்கிறது. ஆங்கிலம் படித்து ஊழியம் பார்த்து ஊதியம் பெறுதலிலேயே ஈடுபட்டிருக்கும் மனநிலை இன்று பலரிடத்தில் இல்லை. அவர்களும் அருள்நெறி வளர்க்கும் பணியில் பல்வேறு பகுதிகளிலும் சிறந்த முறையில் சமயப் பணி செய்து வருகின்றார்கள். இத்தகு பெருமக்களால் தமிழகத்தின் சமயத் துறையில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி மறக்க முடியாததொன்று.

தமிழ் நாட்டில் தமிழ்ப் பெருமக்களது உணர்வில் எழுந்தவை ஆலயங்கள். முத்தமிழ் பயிலும் பள்ளிகளே தேவாலயங்கள். தமிழ் பயிலவேண்டிய ஆலயத்தில் தமிழ் மறக்கப்பட்டது. வேற்றுமொழி இடம் பெற்று வேரூன்றி விட்டது. கடவுளோடு உறவாடிய கன்னித் தமிழ் என்று வரலாறு பேசுவர். நால்வரின் தமிழ் மறையே நானிலத்தை வாழ்விக்கும் என்று எடுத்துப் பேசுவர். எனினும் ஆலயத்தில் தமிழுக்கு இடங்கொடுக்கா திருந்தனர். நெஞ்சந் தொடாத மொழியில் வழிபாடு செய்வது பழக்கத்தின் மூலம் வழக்க மாகிவிட்டது. தமிழ் அன்பர்களுக்கும் தமிழ்த் தொண்டர் களுக்கும் இந்த நிலை தாங்கொணாத் துயரத்தைத் தந்தது. தேவார, திருவாசகங்கள் முழங்காத ஆலயங்கள் எதற்கு என்ற எண்ணம் இதயங்களில் எதிரொலித்தது. எண்ணம் பாழ்படுமா? இன்று தமிழ் நாட்டில் பல தேவாலயங்களில் அருமைத் தமிழில் அருச்சனையும் வழிபாடும் நடைபெறுகின்றன. தமிழ் நாட்டின் எல்லா ஆலயங்களிலும் முத்தமிழ் முழங்குங் காலம் விரைவில் வர மறுமலர்ச்சி வித்திட்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது.

தமிழ் நாட்டின் தனித்த பண்பு சமயச் சண்டையில் ஈடுபடாது, பல்வேறு சமயங்களையும் உவப்புடன் ஒப்பக் கருதும் பண்பாடு ஆகும். இது தமிழர்களுக்கு இயற்கையிலேயே உண்டு. எனினும் இடையில் பல சந்தர்ப்பங்களில் சமய வெறியும் பூசல்களும் எழுந்தன. ஆனால் மறுபடியும் இன்று பிற சமய வெறுப்பின்றிச் சமயம் வளர்க்கப் பெறுகிறது. சமயத்துறையில் வெறுப்பும் காழ்ப்புங்கொள்ளாது பல்வேறு சமயங்களையும் ஒப்பக் கருதும் இன்றைய மறுமலர்ச்சி காலத்திற் கேற்ற மறுமலர்ச்சி; தேவையான மறுமலர்ச்சியுமாகும்.

சமயத்தின் பேரால் சாதிகள் பிறப்பிக்கப் பெற்றது உண்டு;இன்று சாதிகள் தகர்த்தெறியப் பெற்று வருகின்றன. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற பண்டைத் தமிழனின் குரல் மீண்டும் தமிழகத்தில் ஒலிக்கிறது. வாழ்க்கையிலும் கைக்கொள்ளப் பெறுகிறது. தமிழினம் ஓர் குலமாக ஒன்றுபட, சமயத்துறையில் ஏற்பட்டுள்ள இந்த மறுமலர்ச்சி வேண்டத் தக்கது; விரும்பத் தக்கது.

இங்ஙனம் தமிழ் நாட்டில் சமயத்துறையில் புதியதொரு பொலிவும் மறுமலர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இம் மறுமலர்ச்சி இயக்கத்தில் ஆயிரக்கணக்கான ஆர்வமுடைய இளைஞர்களும், பெருமக்களும் ஈடுபட்டுள்ளனர். இத்தகு மறுமலர்ச்சியால் தமிழகம் அருள் வெள்ளம் பொங்கித் ததும்பும் திருநாடாக விளங்கப் போகிறது என்று நமது இதயம் சொல்லுகிறது.

3. இறைவன்

மனித உயிர்களுக்கு எப்பொழுதும் நல்ல சமயம் தான். சிலருக்கு கொஞ்சம் முன்னே நடக்கலாம்-சிலருக்குக் கொஞ்சம் பின்னே நடக்கலாம். அவ்வளவுதான்.

சமாதானம் செய்து கொள்வதில் நம்மவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள், இனம், மொழி, நாகரிகம் இவைகளையெல்லாம் கடந்து நமது சமயத்தைக் கொண்டு போயிருந்தால் அது இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கும்.

வாழ்க்கைக்கு ஒரு நோக்கு இருக்கிறது-உயிர்ப் பொருளாக இருந்தாலும் உயிரில் பொருளாக இருந்தாலும் அறிவில்லாதவைகளாக இருந்தாலும் அதன் அசைவில் ஒரு நோக்கு-இலட்சியம் இருக்கிறது, பொருள், வாழ்க்கையின் இலட்சியமாக இருந்தால் அதைப் பெற்றுவிட்டபோது அமைதிபெற வேண்டும். பெறுகிறோமா? அறிவு, வாழ்க்கையின் இலட்சியமாக இருந்தால் அதைப் பெற்று அமைதி பெறுகிறோமா? புகழ், வாழ்க்கையின் இலட்சியமாக இருந்தால் அது கிடைத்ததும் அமைதி பெறுகிறோமா? இல்லையே!

மனிதன் வாழத்தான் பிறந்திருக்கிறான்-அவன் தன்னலக்காரனாக இருந்தால்கூட எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் வீட்டிற்குச் சுவர், வயலுக்கு வேலி, ஆற்றுக்குக் கரை போல தன்னலத்திற்கு ஓர் எல்லை வைத்துக் கொள்ள வேண்டும்.

"மனமெனும் குரங்கே" என்றார் இராமலிங்கர். இந்தக் காலத்திற்கு அதுகூட அவ்வளவு பொருத்தமானதாக நமக்குத் தோன்றவில்லை. குரங்கு ஒரு கொம்பிலிருந்து இன்னொரு கொம்பிற்குத் தாவுவும்போது முன்பு பிடித்துக்கொண்டிருந்த கொம்பை விட்டுவிட்டுத்தான் தாவும். மனிதன் அப்படியில்லை. ஒன்றைப் பிடித்துக் கொண்டு, ஓராயிரத்தை ஒருசேரப்பிடிக்க நினைக்கிறானே!

பண்பியல் வழியாகத் தன்னை வழிப்படுத்திக்கொள்வது தான் வழிபாடு; அவ்வாறு வழிபடுத்திக் கொள்ளச் செய்கின்ற பண்பாடுதான் நம்மை உயர்ந்த பாதையில் வழிப்படுத்திக் கொள்வது. ஒழுங்குபடுத்திக் கொள்ள உயிரின் பிரயாணத்தில் நமக்கு வழிபாடு இன்றியமையாதது.

நம்மை இறைவன் படைத்தான் என்பதோ நாமே இறைவன் என்பதோ சரியான சுருத்தல்ல. இறைவன் உலக உயிர்களுக்குத் தாய் போன்றவன், தந்தை போன்றவன், தோழன் போன்றவன். "மன்னுயிர்” என்றார் வள்ளுவர். உயிர் நிலையானது. அது அழிவதுமில்லை, பிறப்பதுமில்லை. உயிர் என்றைக்கும் ஓர் உள் பொருள்தான். கற்கண்டு கட்டியில் எப்படி கசப்பு வரும்? ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பாராட்டிப் பேசப்பெற்று வருகிற இறைவன் பல்வேறு குண வேறுபாடுகள்-பண்பியல்புகள் உள்ள மனிதர்களைப் படைக்க முடியுமா? உயிருக்குப் புலன்களை நுண்ணுடம்பைத் தருவதன் மூலம் அவன் உதவுகின்றான். சிவபெருமான் ஓர் உடன்போக்குத் தோழன், பொன்னை, பொருளை, போகத்தைக் கொடுத்து உடன்வந்து நம்மைத் திருத்தி அழைத்துக்கொண்டு போகின்றான்.

தங்கத்தை உயிருக்கு ஒப்பிடலாம். தங்கத்திற்கு ஒளியுண்டு, விலை மதிப்பு உண்டு. அது மண்ணோடு மண்ணாகத்தான் கிடக்கிறது. அது ஏன் என்று கேட்க முடியுமா? தொழிலாளி-விஞ்ஞானி அதை மண்ணிலிருந்து பிரிக்கின்றான்-தூய்மைப்படுத்துகின்றான்-அது ஒளி பெறுகிறது. இதை வைத்துக்கொண்டு தொழிலாளி தங்கத்தை உண்டாக்கியதாகக் கூறலாமா? அது போலவே, ஆன் மாவைச் சூழ்ந்திருக்கிற ஆணவம் என்ற அழுக்கை இறைவன் போக்குகின்றான். அதற்காக இறைவன் நம்மைப் படைத்தான் என்று சொல்ல முடியுமா? "இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ?” என்றார் அப்பரடிகள். இறைவன் அந்தப் பிறவிப் பயத்தை - பிணியைப் போக்குகிறான். மனித சமுதாயம் பரிபூரணத்தை நோக்கிப் போவதுதான் வாழ்க்கை என்பது, அவனை முழு மனிதனாக ஆக்குவதே சமயம். உப்பு, புளி, மிளகாய், கத்தரிக்காய் எல்லாம் மூட்டை மூட்டையாக இருந்தாலும் அவற்றை அப்படியே எப்படிச் சாப்பிட முடியும்? அதை நாக்குக்கும் மூக்குக்கும் சுவையான வகையில் சமைத்துத் தானே சாப்பிட முடியும்; அப்படிச் சமைத்துக் கொடுப்பதுதான் சமையல். அதுபோல மனித வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதுதான் சமயம்.

கடவுள் என்பதன் மறுபொருள் பரிபூரணம் என்பது தான். இறைவனை 'குறைவிலா நிலவே! கோதிலா அமுதே' என்கிறார் மாணிக்கவாசகர்.

கடவுள் பயங்கரப்பொருள் அல்ல-கடவுளிடத்து நமக்குப் பரிவும் பக்தியும் வேண்டுமே தவிர பயமும் பக்தியும் இருத்தல் கூடாது. ஆண்டவனைப் பார்த்து அடிமை பயப்படுவதுபோல இறைவனைப் பார்த்து மனிதன் பயப்பட வேண்டியதில்லை.

எண்ணத்தால் சிந்தனையால் நாம் செய்த தீமைகளை நன்மைகளை நாம்தான் அனுபவிக்க வேண்டும் என்பது மனித ஒழுக்க நியதி. இதை உணர்த்தாத நிலையில் மனிதன் எண்ணற்ற ஒழுக்கக் கேடுகளைச் செய்து கொண்டேதான் இருப்பான். அதை உணர்த்துவதற்குத்தானே சமயம்.

நமது சமயம், கடவுளை வாழ்க்கைப் பொருளாக-வாழ் முதலாக-வாழ்வுப் பொருளாகக் கண்டது.

திருஞான சம்பந்தர் தெருவழியே நடந்து சென்றபோது சிவமணம் கமழ்ந்தது. எண்ணத்தில் சிவமணம் ஏற்பட்டு அது பரவுகிறது. மனத்திற்கு மனமுண்டா என்பது சமீபகாலம்வரை ஐயப்பாடாகத்தான் இருந்தது. இப்போது கொலைகாரனை, திருடனைத் துப்பறியும் நாய் கண்டுபிடித்து விடுகிறது. இதிலிருந்து மனத்திற்கு மனம் உண்டு என்பதை நம்பத்தானே வேண்டும்.

"கயிலாயத்து உச்சியுள்ளான் காளத்தியான்
அவன் என் கண்ணுள்ளானே"

என்றார் மாணிக்கவாசகர்.

கண்ணுளான் என்பதை மறந்து விட்டோம். அவன் எங்கேயோ இருப்பதாக எண்ணுகிறோம். கடவுளை வாழ்த்துவதெல்லாம் நமக்காகத்தானேயன்றி கடவுளுக்காக அல்ல. காற்றைச் சுவாசிப்பது காற்றுக்காகவா? சோற்றைத் தின்பது சோற்றுக்காகவா? எனவே கடவுளை வாழ்த்துவதும் வழிபடுவதும் நமக்காகத்தானேயன்றி கடவுளுக்காக அல்ல.

வளர்ந்து வருகிற அறிவியல் உலகில் தலைசிறந்தவர்களாகக் கருதப்பெறுகிற விஞ்ஞானிகள் கூட கடவுள் நம்பிக்கையை மறுக்கவில்லை. இன்று கண் பாங்கிகள் உள்ளன. கண்தானம் செய்தவர்களின் கண்களை, பார்வையிழந்தவர்களின் இமைகளில் பொருத்தி மீண்டும் கண் ஒளி பெறச் செய்யலாம். ஆனால், பத்துபேரின் கை, கால் முதலிய அவயவங்களை வாங்கி ஒரு மனிதனை உருவாக்க முடியுமா? நாம் உண்ணுகின்ற உணவுதான் பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகி இறுதியில் இரத்தமாகிறது. ஆனால், நாமே அந்த உணவுப் பொருள்கள் யாவற்றையும் ஒரு சேரக் கலந்து எத்தகைய இரசாயன மாறுதல்களாலும் ஒரு சொட்டு இரத்தத்தைப் பிரித்தெடுக்க முடியுமா? இப்படி நாம் தோல்வியுறும்போதுதான் அதனை உருவாக்கும் பேராற்றலை-இறைவனை நாம் உணர்கிறோம்.

அ, ஆ, முதலிய தமிழ் எழுத்துக்களைக் கொண்டு தான் திருக்குறள், கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் முதலிய யாவும் உருவாக்கப் பெற்றன என்பதனாலேயே எல்லாம் ஒன்று என்று கூறிவிடலாமா? கூற முடியுமா? அ, ஆ வை எடுத்து, எண்ணி, சிந்தித்துத் தொகுத்துக் கவிஞன் பெருமை செய்கின்றான். அவன் எடுத்து எண்ணி, சிந்தித்துத் தொகுத்ததற்கேற்ப அந்தக் காவியம், கவிதை சிறப்புப் பெறுகிறது. அது போல, எல்லாவற்றையும் கல் என்று கூறிவிடலாமா? சிற்பி எப்படி எண்ணி சிந்தித்துச் செதுக்குகின்றானோ அதற்கேற்ப அந்தச் சிலையும் சிறப்புப் பெறுகிறது.

திருக்கோயில்களில் உள்ள மூர்த்திகளைத் திரு உருவங்களாக எண்ணிப் பார்ப்பது பாவம். 'இவன் அவன்' என்ற மேலான நோக்கோடு பார்க்க வேண்டும். அவனையே இறைவனாக எண்ணிக் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க வேண்டும்.

செவிப்புலன் இல்லாதவனுக்கு ஒலிபெருக்கி கேட்காது. கண்பார்வை இல்லாதவனுக்கு ஒளி தெரியுமா? அதுபோல நெஞ்சம் தூய்மையாக இருந்தால் இறைவனைக் காணலாம். நெஞ்சமே அவனுக்கு-இறைவனுக்கு இடமாக வேண்டும். இறைவனைக் காண இருதயம் தேவை;அந்த இருதயத்தைப் பிசைந்து கனிவாக்க-காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கத்தான் வழிபாடு. வழிபாட்டால் உள்ளுணர்ச்சி ஆன்ம உணர்வு பெருக வேண்டும். இல்லையானால் வழிபாட்டால் ஒரு பயனுமில்லை. அதற்கு அரற்றி அழுது தொழவேண்டும்.

இறைவனை நாம் எங்கும் தேடிப்போக வேண்டியதில்லை. இறைவன் நமக்காக இங்கு இறங்கி வருகின்றான். வான்பழித்து இம்மண் புகுந்து நம்மை அவன் ஆட்கொள்ளுகிறான். தினமும் காலையில் வழிபாடு செய்யுங்கள். திருக்குறள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூல் - திருவாசகம் நம்மை உயர்ந்த அனுபவத்திற்கே அழைத்துச் செல்லும் வழிபாட்டு நூல். அதை ஓதுவதும் வழிபடுவதுமே வழிபாடுதான்.

கவிதையைப் பாராட்டுவது, கவிஞனுக்கு மரியாதை செலுத்துவது. ஓவியத்தைப் பாராட்டுவது ஓவியனுக்கு மரியாதை செய்வதுபோல, உலக மனிதர்களுக்குச் சேவை செய்வதும், மரியாதை செய்வதும் உலக மக்களின் தலைவனான தாயும் தந்தையுமான இறைவனுக்கு மரியாதை செய்வதுபோல.

தேவைக்கு ஏற்ப அறம் செய்ய வேண்டும். அதை செய்வதற்கு முயற்சிதான் வேண்டும். வாழ்க்கை முழுவதும் வழிபாடாக இருக்க வேண்டும். அந்த வழிபாடு சிறக்க திருக்கோவிலுக்கு வந்து அவனையே காண வேண்டும். அத்தகைய வழிபாடு பரவினால், உலகம் ஒன்றே மனிதர்கள் யாவரும் ஒரே குலம் 'இன்பமே எந்நாளும் துன்பமில்லை' என்ற சங்கநாதம் முழங்கும்.

4. காணப் படாத கடவுள்

மக்கள் அறிவும் உணர்வும் பெற்று உலகத்தைப் பார்க்கத் தொடங்கிய காலத்தில் கடவுட் கொள்கை எழுந்தது.

காணப்படும் இவ் வுலகினை ஆக்கி, அழித்து நடாத்துகின்ற ஒரு முதற் பொருளை உணர்ந்தனர் மக்கள்.'அம் முதற் பொருள், தோற்றமும் ஈறும் இல்லாதது. பேராற்றலும் பேரருளும் உடையது என்றெல்லாம் திருந்திய அறிவின் துணைகொண்டு தெரிந்து தெளிந்தனர். கண்டதைக் கொண்டு காணாததை உணர்தல் அறிவின் இயற்கை ஆற்றின் புதுநீர்ப் பெருக்கைக் கண்டபொழுது "தொலைவில் மழை பெய்தது” என்றும், கூரையின்மேற் புகையைக் கண்ட காலத்து, "வீட்டினுள் நெருப்புளது” என்றும் உணர்ந்து கூறுதல் மக்கள் இயல்பு. அதுபோல இவ்வுலகின் வியத்தகு அமைதிகளைக் கண்டு, இவைகளை இங்ஙனம் அமைத்தவனான பேரருளும் பேராற்றலும் உடைய முதல்வன் ஒருவன் உளன் என உணர்தல் அறிவின் இயல்பு. இவ்வுலகின் நடப்பில் காணப்படும் ஒவ்வோர் ஒழுங்கும் முறை பிறழா நிகழ்ச்சியும் முதல்வனது அமைப்பன்றோ ! இதனை மணிவாசகப் பெருமானது,

"... நாடொறும்
அருக்கனிற் சோதி அமைத்தோன் திருத்தகு
மதியில் தண்மை வைத்தோன் திண்திறல்
தீயின் வெம்மை செய்தோன் பொய்தீர்
வானிற் கலப்பு வைத்தோன் மேதகு
காவின் ஊக்கம் கண்டோன் நிழல்திகழ்
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட
மண்ணில் திண்மை வைத்தோன் என்றென்று
எனைப்பல கோடி எனைப்பல பிறவும்
அனைத்தனைத் தவ்வயின் அடைத்தோன்.”

என வரும் அருள்மொழிகள் விளக்குகின்றன "சிசிரோ” என்ற உரோம அரசியல் ஞானி, "பொருள்களின் இயற்கை யமைப்பில், மனிதனது மனத்தின் அப்பாற்பட்டதும் ஆராயும் அறிவு புக முடியாததும் ஆகிய ஒர் இயல்பு இருக்கிறது. இத்தகைய இயல்பை ஆக்கித் தருவது மனிதனை விட மேம்பட்டதாதலின் கடவுளைத் தவிர அது வேறு எதுவாக இருக்க முடியும்?” என்று கடவுளுண்மையை மிக அழகாகச் சுட்டிக் காட்டுகின்றார். முத்தொழிற் படுகின்ற இவ்வுலகு காணப்படுகின்ற அறிவற்ற பொருள். எனவே, தானாக முத்தொழிலிற்பட இயலாது. ஆதலின் உலத்தைத் தொழிற்படுத்துகின்ற தலைவன் ஒருவன் உண்டு. ஆதலால்தான் மெய்கண்ட தேவர் முதலிய பெருமக்கள், "காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுளைக் காண்க” என்று ஆணையிட்டனர்.

"அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கிய மலத்துளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்"

என்பது சிவஞானபோதம். இச் சூத்திரக் கருத்துரையில் "கடவுளை முதலாக உடைத்து இவ்வுலகம்” எனக் கூறினரேனும், காணப்பட்ட உலகைக் கொண்டே கடவுளுண்மை துணிய வேண்டுத்ல் நோக்கிச் சூத்திரத்தில் "தோற்றிய திதியே” என உலகத்தை முன்னரும் "ஒடுங்கி உளதாம்” எனக் கடவுளைப் பின்னரும் கூறினார்.

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

என்று திருவள்ளுவரும் ஒதுகின்றார்.

இக்குறளுக்கு, "காணப்பட்ட உலகத்தால் காணப் படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், ஆதிபகவன் முதற்றே உலகு என உலகின்மேல் வைத்துக் கூறினார்" என்று பரிமேலழகர் எழுதிய உரையும் உணரத்தக்கது. இங்ங்னம் முதல்வன் உலகின் காரணனாக-நிற்கின்ற மாட்சிமையை அப்பர் பெருமான், -

"தானலாது உலகம் இல்லை”
"எல்லா உலகமும் ஆனாய் நீயே"
"உலகுக் கெல்லாம் வித்தகன் காண்"

என்றெல்லாம் கூறிக் காட்டுகின்றார்கள்.

5. கொற்றக் குடை தாழ்க

தமிழ் நாட்டின் வரலாற்றிலும் தமிழ் மொழியின் வரலாற்றிலும் தலைசிறந்தது. சங்க காலம். தமிழிலக்கியங்கள் தோன்றி வளர்ந்தது இக்காலத்திலேயாம். சங்க இலக்கியங்கள் தமிழ் மக்களது வாழ்க்கையினின்று எழுந்தன. தமிழினத்தின் வரலாற்றையும், பண்பாட்டையும் அறிந்து கொள்ளத் துணையாய் இருப்பவை சங்க இலக்கியங்களேயாம். தமிழ் மக்கள் அகத்துறை, புறத்துறை ஆகிய இரு துறைகளிலும் திறம்பட வாழ்ந்தனர். இவ் விரு துறை வாழ்வியல் மக்களிடத்தும் அன்புணர்ச்சியும், அருளுணர்ச்சியும், அறவுணர்ச்சியும் அமைந்து கிடந்தன. மக்கள், நெஞ்சந்தோய்ந்த கடவுட் பற்றும், சிந்தனையிற் சிறந்த வழிபாட்டுணர்ச்சியும், பக்தி உணர்ச்சியும் கொண்டிருந்தனர்.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பான் தலைசிறந்த மன்னன்.அவன் தென்குமரி நாட்டின் பஃறுளி ஆறு கடல் கொள்ளப்படுவதற்குமுன் இருந்தவன். அதாவது ஏறக்குறைய பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவன். இம் மன்னர் பெருமானைக் காரிகிழார் என்ற சிவநெறிச் செல்வர் பாடியுள்ளார். காரிகிழாரின் பாடல் செவியறிவுறூஉத் துறையில் அமைந்திருக்கிறது. இப்பாடல் வழுதியின் பண்புகளைத் தெளிவுபடக் கூறுகிறது. அதோடு அவனுக்குப் பல அறவுரைகளையும் எடுத்தியம்புகிறது. அவன் வேள்விகள் பல வேட்டவன்; மாற்றாரை அறப் போரால் வென்று மறக்கள வேள்வி புரிந்தோன்; வரையாது கொடுக்கும் வள்ளல். இத்தகு மன்னர் மன்னனுக்குப் புலவர் பெருமகனார் தந்த அறவுரை,

"யாருக்கும் தாழாத கொற்றக் குடை தாழ்க’

என்பது. இது அவரது ஆணை. இது புதினமாய்த் தோன்றவில்லையா? மன்னனது குடை தாழ்க என்று சொல்வதா?

பிறவா யாக்கைப் பெரியோனாகிய முக்கட் செல்வரின் நகரை கோயிலை வலஞ் செய்யத் தாழட்டும் என்றுதான் புலவர் பாடுகின்றார். நகரைப்போல அகன்று பெரிதாய்ச் சிவபெருமானுக்குத் திருக்கோயில் அவ்வளவு பழைய காலத்திலேயே அமைந்திருந்தது என்று இதிலிருந்து தெரிகிறது. சங்க இலக்கியங்களில் திருக்கோயில்களை நகரம் என்றே குறிக்கப்பட்டுள்ளன.

"கட்வுட் கடிநகர்” என்று கற்றவர்கள் போற்றும் கலித்தொகை பேசுகிறது. மாலை நேரத்தில் தமது அருமைப் புதல்வர்களைத் திருக்கோயில் வலஞ்செய்து வரச் செய்கின்ற பழக்கம் அக்காலத்தில் இருந்திருக்கிறது. தலைவி தனது மகனைச் சேடியோடு கடவுட் கடிநகர் வலஞ்செய்து வர அனுப்பிய செய்தியைக் "கடவுட் கடிநகர்தோறு மிவனை வலங்கொளீஇ வாவெனச் சென்றாய்" என்று மருதக்கலி எடுத்துரைக்கிறது. யாருக்கும் வணங்காத மன்னன் முழுமுதற் பொருளாம் சிவனுக்கே வணங்கும் இயல்பினன்.

செந்தண்மை பூண்டொழுகும் கடப்பாட்டினராய், நான்மறை ஓதி வாழ்த்தியல் வழங்கு அந்தணர்கள் முன்பு வணங்காமுடி வணங்கட்டும் என்று கூறுகின்றார்.

"பணியிய ரத்தைநின் குடையே
முனிவர் முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே"

என்பது காரிகிழாரின் வாய்மொழி, சங்க கால மக்களது வாழ்க்கையில் இயல்பிலேயே சமய வாழ்வு அமைந்திருந்தது. வாழ்க்கை வேறு, சமயம் வேறு என்று பகுத்துக்காணும் பொய்மைப் பண்பு பிற்காலத்தைச் சேர்ந்தது. இப்பாடல் தமிழினத்தார் மிகப் பழைய காலத்திலேயே சிவநெறிப் பற்றில் சிறந்து விளங்கி அகன்ற, பெரிய, பரந்த திருக் கோயில்கள் எடுத்து வலஞ்செய்து வாழ்த்தி வணங்கினர் என்பதையும், மெய்யுணர்வு பற்றிய அருமறை நூல்கள் விளங்கி இருந்தன என்பதையும் அருள்நெறி விளக்கஞ் செய்யும் அருளாளர்கள் பலர் வாழ்ந்தனர் என்பதையும் விளக்கி நிற்கின்றது.

6. எது உயர்ந்தது

இன்றைய உலகில் மக்களாட்சி வேட்கை எல்லோரிடத்திலும் இருக்கிறது. உலகில் பெரும்பாலான இடங்களிலும் மக்களாட்சியே நடைபெற்று வருகிறது. மக்களாட்சியில் மக்களுக்குள் உயர்வு தாழ்வு இருக்காது. ஜனநாயகத் தத்துவத்தினுடைய அடிப்படை "மக்களை மக்களாக மதிப்பிடுதல்" என்று ஜான் ஆபிரகாம் லிங்கன் கூறுகின்றார். இது மறுக்க முடியாத தொன்று. மனம் படைத்த மக்களை அன்புணர்ச்சியின்றிப் பண்பாட்டின் நெறியறியாத நிலையிலே கேவலமாக நடத்துதல் கொடுமையிலுங் கொடுமை, ஜனநாயக வேட்கை இன்று எங்கும் பூரணமாக மலர்ந்துள்ளது.

ஜனநாயகத் தத்துவம் தமிழகத்திற்குப் புதியதல்ல. "ஒன்றே குலம்" என்று பல ஆயிர ஆண்டுகளுக்கு முன்னேயே தமிழின் கூறினான். சங்க காலத் தமிழகத்தில் பூரண ஜனநாயக உணர்ச்சி மலர்ந்திருந்தது.

"பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை இகழ்தல் அதனிலு மிலமே”

என்பது தமிழன் கண்ட ஜனநாயகம். ஜனநாயகத் தத்துவம் பூரண அன்பின் அடிப்படையில் தோன்றி வளர்ந்து வளம் பெற்றது. ஜனநாயகத் தத்துவத்தின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் அடிப்படை சமயம். ஜனநாயகத் தத்துவத்தின் தந்தைகளும் காவலர்களும் ஒருபொழுதும் சமய நெறிகளுக்கு மாறுபட்டார்களில்லை.

உண்மைச் சமய வாழ்வு அருகினமையினாலேயே மக்களிடையே இனவெறி தலைகாட்டியது-அதிகார்வெறி வீறிட்டெழுந்தது. இந்நிலை முதிர்ந்த போதுதான் ஜனநாயகக் கொள்கைக்கு உயிரூட்டி அதை நிலைநாட்டும் மனப்பான்மை உலகில் ஓங்கியது. ஆனால் சமயக் கொள்கைக்கு விரோதமாகவோ, அல்லது சமயத்தை அழிக்கும் எண்ணத்துடனோ ஜனநாயகம் தோன்றவில்லை ஜனநாயகத்தை வளர்ப்பதின் மூலம் சமயத்தையும் வளர்த்து உண்மைச் சமய வாழ்வை மக்களிடையே நிலவச் செய்யலாம் என்ற நம்பிக்கையோடு ஜனநாயகத் தத்துவம் தோற்றுவிக்கப்பட்டது என்று கூடச் சொல்லலாம். மனப் பிளவுபட்டுக் கிடக்கும் சமுதாயத்தை ஒன்றுபடுத்தி எல்லோரும் இன்புற்று வாழப் பணி செய்வதிலே ஜனநாயகத்திலும் சமயக் கொள்கை சாலவும் உயர்ந்தது.

மக்களை மக்களாக மதிக்கச் சொல்லிக் கொடுப்பது ஜனநாயகம். மக்களைக் கடவுளாக மதித்து அன்பு செய்யக் கற்றுக் கொடுப்பது சமயம். தன்னோடு ஒப்பாக நினைப்பதிலும், தன்னிலும் உயர்ந்ததாக மதிப்பிடுதல் பெரிதும் நன்மை பயக்கும் என்பதற்கும் ஐயமுண்டோ?

"மக்களுக்குச் செய்யும் தொண்டு மகேசுவரனுக்குச் செய்யும் தொண்டு" என்பார் திருமூலர். வருவோர்களுக்கெல்லாம் உண்டி கொடுத்தோர், உடைகொடுத்தோர் இன்னும் பிற வேண்டுவன வெல்லாம் செய்தார்கள் சைவச் செல்வர்கள். இத்தகு தொண்டின் விளக்கங் கூறுவதே திருத்தொண்டர் புராணம் எனும் திரு நூல். "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே” என்பது உண்மைச் சமய வாழ்வு வாழ்ந்த சான்றோரின் திருவுள்ளம். எனவே, மக்களை மக்களாக மதிக்கும் ஜனநாயகமா, மக்களைக் கடவுளாக மதித்து அன்பு செய்யச் சொல்லும் சமயமா, இவற்றுள் எது உயர்ந்தது?

7. அன்பும் அருளும்

மக்களை மக்களாக வாழ்விப்பது அன்பும் அருளு மேயாம். நாச சத்திகள் தலைகாட்டாத வண்ணம் தடைசெய்து இன்பத்தை வழங்குவது அன்பும் அருளுமேயாம். மக்களை நன்னெறியில் அழைத்துச் செல்வது அன்பும் அருளுமேயாம், இவ்விரு அருமை மிகு உணர்ச்சிகளை மக்கள் இழப்பராயின் நரகத்தின் நிரந்தர உரிமையாளர்களாகி விடுகின்றார்கள். "அருளும், அன்பும் நீக்கி நீங்கா நிரயம் கொள்பவர்" என்று புறநானூறு பேசுகின்றது. அத்தகையாரோடு இணங்கற்க என்று ஆணையிடுகின்றது. தேவையை நிறைவு செய்து கொள்வதற்காகக்கூட இப் பண்புணர்ச்சிகளைக் கைவிடலாகாது. அங்ஙணம் கைவிடுபவர்கள் அறிவுடையவர்களல்லர் என்று தமிழ்மகள் கூறுகின்றாள். தலைவன் பொருள்வயிற் பிரியப் போகின்றான் என்ற செய்தியைக் கேட்ட தலைவி, தோழியிடம் அறம் பேசுகின்றாள். அருளையும் அன்பையும் துறந்து பொருளீட்டுதல் தமிழ்ப் பண்பாடல்ல, அறிவுடமையுமல்ல.

"அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்"

என்பது தமிழ்மறை. "இதனை அறிந்தும் தலைவர் பொருள் வயின் அகலுவாராயின், அவர் அறிவுடையவரே ஆகுக" என்று இகழ்ச்சிக் குறிப்பில் பேசுகின்றாள் தலைமகள்.

"அருளுமன்பு நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயின்
உரவோ ருரவோ ராக"

என்பது பாடல். அருளும் அன்பும் தவழ்ந்த வாழ்க்கையே வாழ்க்கை என்று பேசும் தமிழ் நாகரிகத்தை என்னென்போம்!

உலகத் தொடர்பு நிறைந்த வாழ்க்கையில் எங்கும் அன்பைக் கண்டு, அன்பைச் செலுத்துவது அருள். தொடர்புடையார்மாட்டு எழும் பரிவுணர்ச்சி அன்பு. ஆனால், கடவுட் காட்சியில் கலந்த வாழ்க்கையில் வேறொரு துறையாக அமைந்து விளக்கம் நல்குகிறது. அங்கு முழுமுதற் பொருள் உயிர்கள் மாட்டுக் காட்டும் பரிவுணர்ச்சி அருள். அவ் அருளைப் பெறுவதற்காக ஆண்டவன்பால் உயிர்கள் கொள்ளும் பரிவே அன்பு அவ் அன்பும் அருளும் கலக்கின்ற பொழுது அறம் தோன்றுகிறது. இதனை,

"யாஅ மிர்ப்பவை பொருளும் பொன்னும் போகமும்
அல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்.
உருளினர் கடம்பின் ஒலிதாரோயே"

என்று பரிபாடல் விளக்குகிறது. "உன்தன் வார் கழற்கு அன்பு எனக்கு நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே” என்பது மணிவாசகர் மணி மொழி. அருளின்றி அன்பில்லை; அன்பின்றி அருளில்லை. இவ்விரண்டு மின்றி அறம் இல்லை. எனவே, அருளும் அன்பும் கொண்டு அறம் பல செய்து வாழ முயல்வோமாக!

8. வள்ளுவரும் வாதவூரரும்

"ஒன்றென்றிரு தெய்வ முண்டென்றிரு" என்ற உண்மையை உள்ளவாறு உணர்த்தியது நமது தமிழ் நாடே யாகும்.

“தெய்வந் தெளிமின்,தெளிந்தோர்ப் பேணுமின்” என்று எடுத்துச் சொல்லிய நாடு நம் தமிழகமே யாகும். நேற்றைய பாரதியார்கூடப் "பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்” என்று பறைசாற்றினார். தமிழர்களின் கலைக் களஞ்சியங்களிலே, படித்தவர் போற்றும் பத்துப்பாட்டிலே, புலவர்கள் போற்றும் புறநானூற்றிலே கற்றோர் ஏத்தும் கலித்தொகையிலே, அறிஞர்கள் போற்றும் அகநானூற்றிலே, பண்புடையோர் போற்றும் பரிபாடலிலே, குவலயத்தார் கொண்டாடும் குறந்தொகையிலே, கடவுள் மணமும் சிவம் எனும் தேனும் தேங்கிநின்று ஆரா இன்பத்தைத் தருகின்றது. இத்தகைய தெய்வத் தமிழ் நாட்டிலே பிறந்த தலைசிறந்த உலக கவிகள்தான் நமது வள்ளுவரும் வாதவூரரும். அவர்கள் நிறைமொழி மாந்தர்கள். அவர்கள் வாய்மொழி மறை மொழிகளாகும். மறைமட்டும் அன்று. அவர்களது நூல் சிறந்த இலக்கியமுமாகும்.

அட்சன் என்ற ஆங்கிலப் புலவர், "மொழியின் வாயிலாக வாழ்க்கை முறையினை எடுத்துக்காட்டுவது இலக்கியமாகும்."[* 1] என்று கூறியுள்ளார். இந்த முறையில் இருபுலவர்களும் வாழும் வகையை வகைபடக் கூறியுள்ளார்க்ள். அவர்கள் தாம் கண்டதை, அப்படியே உள்ளதை உள்ள வாறே கூறியுள்ளார்கள். சிறந்த கருத்துக்கள் நிறைந்திருக் கின்றன. விஸ்வகண்ட் மார்லி என்ற பேராசிரியர் "இலக்கியம் மக்களுக்கு நல்லொழுக்கம் புகட்டுவதில் ஒரு சிறந்த கருவியாக விளங்குகிறது"[t 1] எனக் கூறியாங்கு 'திருக்குறளும் திருவாசகமும்' ஈடும் இணையு மற்றிருக்கின்றன. இந்த நிலையில் இருபெரு மக்களது நூல்களும் சாலச் சிறந்தனவாகத் திகழ்கின்றன.

இருவரும் உலக மகாகவிகள். அவர்களது வாய் மொழிகள் உலகத்தவரால் போற்றப்பட்டுப் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால் இன்றையத் தமிழகத்திலே வள்ளுவரை அறிந்திருப்பாரே அன்றி வாதவூரரை அறிந்திருக்க மாட்டார்கள். வள்ளுவரைக்கூட அவருடைய சுயரூபத்தில் பார்த்திருக்கமாட்டார்கள் என்றே சொல்லவேண்டும். வள்ளுவரை நாத்திகராக ஆக்கப் பெரிதும் முயல்கின்றனர். முதல் நான்கு அதிகாரங்கள் அவர் இயற்றியதல்ல என்று அறியாமையால் அரற்றுகின்றனர். வள்ளுவர் வாய்மொழியில் தொட்ட தொட்ட இடமெல்லாம் தெய்வ மணம் வீசுவதை அறியாமையின் காரணமாக அறியாமல் திகைத்து நிற்கின்றனர். ஆனால் இந்த அளவுக்கு வாதவூரரைப் பிடிக்கவும் இல்லை. அவரது அறிவுருவைச் சிதைக்கவும் இல்லை. "இங்கே தமிழ் மாணவன் புதைக்கப்பட்டு கிடக்கின்றான்” (Here lies a student of Tamil) என்று புதைகுழியில் பிறநாட்டுப் பெரியாராகிய போப் ஐயரை எழுதச் செய்தது. திருவாசகமே யாகும். நோபில் பரிசு பெற்ற கவி ரவீந்திரநாத் தாகூருக்குத் 'தமிழ் படிக்க வேண்டும்' என்ற ஆசையை எழுப்பியதும் திருவாசகமே யாகும். வள்ளுவர் குறளும் வாதவூரரது வாசகமும் தமிழரின் தனிப் பெரும் வைப்பு: தமிழரின் கண்கள்.

வள்ளுவரும் வாதவூரரும் சமய நெறியில் ஒத்த கொள்கையினர். வள்ளுவரின் சமயம் பலப்படச் பேசப்படுகின்றது. தமிழரின் சமயம் 'சைவத் திருநெறி' என்பதை ஸர் ஜான் மார்ஷல், போப் ஐயர் போன்ற மேனாட்டறிஞர்களுடைய ஆராய்ச்சியின் முடிபால் அறிந்துகொண்டமையாலும், சைவ நூற் கொள்கைகட்கு இணங்க முதற்கடவுளை மாதொரு பாகன் என்னும் பொருட்பட 'ஆதிபகவன்' என்று கூறினமையானும், சைவத்திரு நெறியின்கண் பேசப்படும் திருவடிப் பேற்றைப் பத்து குறள்களுள் ஏழு குறள்களில் வலியுறுத்தி யுள்ளமை யானும், சைவப் பெருமக்களை அழைப்பதுபோல ஆசிரியரை நாயனார் என்று அழைக்கின்றமை யானும், அவரது திருவுரு சைவத் திருவேடப் பொலிவுடன் விளங்குகின்றமையானும் வள்ளுவர் சைவத்திருநெறியினர் என்றே நாம் கொள்ள வேண்டியிருக்கின்றது. வாதவூரரைப் பற்றி யாவருக்கும் இந்த விஷயத்தில் ஐயமே இல்லை. இனி அவர்களது வாய்மொழிகளைக் கொண்டு அவர்களைப் பார்ப்போம்.

வள்ளுவர் வாய்மையின் பயன் கடவுளைத் தொழுதல் என்று கூறினார்.

"கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றா டொழாஅ ரெனின்"

என்பது திருக்குறள், வள்ளுவர் நயமான முறையில் கடவுளைத் தொழாவிடின் கல்விக்குப் பயனில்லை என்று கூறினார். வாதவூரர் இறைவனை வணங்காதவர்கள் அறிவில்லாதவர்கள் என்று சொல்லுகின்றார்.
"தறிசெறி களிறும் அஞ்சேன்
தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன்
விண்ணவர் நண்ணா மாட்டாக்
செறிதரு கழல்கள் ஏத்திச்
சிறந்தினி திருக்க மாட்டா
அறிவிலாதவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே."

என்பது திருவாசகம்.

இறைவனது இணையடிகளைப் பற்றிப் பேசுதலே வினைத்துன்பத்திலிருந்து விடுபட வழி என்பதை வள்ளுவர்,

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு."

என்று கூறுகின்றார். இக்கருத்தையே மாணிக்கவாசகர்.

"ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள்,
இருவினை மாமரம் வேர்பறித் தெழுந்து"

என்று கூறிகின்றார். இறைவனது திருவருட்பெருக்கு இரு வினைகளாகிய பெரு மரங்களை வேருடன் பறித்தெறிகின்றது என்பது அடிகளின் கருத்து. வள்ளுவர் வினை இரண்டும் சேராது என்று அடக்கமும் அமைதியும் நிறைந்த முறையால் கூறுகின்றார். வாதவூரர் ஆண்மையோடு வீறுகொள் உணர்ச்சியோடு,

"வல்வினையின் வாயில் பெர்டியட்டிப்
பூவல்லி கொய்யாமோ?"

என்று அருளுகின்றார். பேச்சில் மட்டும்தானா? இல்லை. தம் பத்தியின் மேம்பாட்டால், தாம் வினையிலியாக ஆனதைத் தானே கூறியுள்ளார்.
"சிந்தனைநின் தனக்காக்கி நாயி னேன்.தன்
கண்ணினைநின் திருப்பாதப் போதுக் காக்கி
வந்தனையுமம் மலர்க்கே ஆக்கி வாக்குன்
மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்க ளார
வந்தனை.ஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை
மாலமுதப் பெருங்கடலே மலையே உன்னைத்
தந்தனைசெந் தாமரைக்கா டனைய மேனித்
தனிச்சுடரே இரண்டுமிலித் தமிய னேற்கே"

என்று அருளுகிறார் தாம் வல்வினையினின்றும் விடுபட்டதை.

வள்ளுவர் முதற்கடவுளைத் "தனக்குவமை இல்லாதான்" என்று கூறுகின்றார். இக்கருத்தை அடிகள்,

"முன்னோன் காண்க முழுதோன் காண்க
தன்நேர் இல்லோன் தானே காண்க”

என்று அழகாகக் கூறி விளக்குகின்றார்கள். சிவபெருமான்து தனக்கு உவமை இல்லாத திறனை இளங்கோவடிகள், "விண்ணோர் அமுது உண்டுஞ் சாவ, ஒருவரும் உண்ணாத நஞ்சு உண்டு இருந்தருள் செய்குவாய்," என்றும், "பிறவா யாக்கைப் பெரியோன்" என்றும் கூறி விளக்குகின்றார்.

பிறவிப்பிணிக்கு மருந்து இறைவனடி சேர்தலே என்று வள்ளுவர் கூறுகின்றார்.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார்."

என்பது திருக்குறள். இக்கருத்தை அடிகள்,

"பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க"

என்றும்,

"மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி"

என்றும்,

"பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்”

என்றும் அருளியுள்ளார்கள்.

வள்ளுவர் அந்தணர் என்ற சொல்லை அருளாளார். என்ற பொருள்பற்றித் துறவிகளுக்கு ஏற்றிச்சொல்லுகின்றார். இப்பொருளிலேயே அடிகளும் அந்தணர் என்ற சொல்லைக் கையாண்டுள்ளார்.

"அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.”

என்பது குறள்.

"தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணன் அந்தணனாய் அறைகூறி வீடருளும்
அங்கருணை வார்கழலே பாடுதுங்கா ணம்மானாய்”

என்கிறார் வாதவூரர். எல்லா உயிர்களையும் கருணையின் மேலீட்டால் வலிய அழைத்து வீட்டினை நல்கும் பேரருளாளன் ஆண்டவன் என்பது அடிகளின் கருத்து.

அன்பில்லாத வாழ்க்கை பாலைநிலத்தின்கண் வற்றல் மரம் தளிர்த்தை ஒக்கும் என்றும் கூறுகின்றார் வள்ளுவர். வற்றல் மரமே தளிர்க்காது.அதுவும் பாலை நிலைத்தின்கண் ‘எங்கனம் தளிர்க்க முடியும்? எனவே, வற்றல் மரம் பயனற்றது என்று கூறுகின்றார்.

"அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றன் மரந்தளிர்த் தற்று."

என்பது திருக்குறள், இந்த வற்றல் மரத்தையே அடிகளும்,

"கூடிக்கூடி உன்அடியார்
குனிப்பார் சிரிப்பார் களிப்பாரா
வாடிவாடி வழியற்றேன்
வற்றல் மரம்போல் நிற்பேனோ”

என்று ஆண்டவனிடம் முறையிடுகின்றார். பயனற்ற வற்றல் மரநிலையிலிருந்து தம்மை உய்விக்கத் தம் அகத்து உள்ளத்தை உருக்கிடும் அன்பினைத் தந்தருளுமாறு இறைஞ்சுகின்றார்.

"ஊடிஊடி உடையாயொரு
கலந்துள் ளுருகிப் பெருகிநெக்
காடிஆடி ஆனந்தம்
அதுவேஆக அருள்கலந்தே"

என்பது அடிகளின் அருண்மொழி.

இங்ங்னம் ஊனெலாம் நின்றுருக, தூய அன்புறு பக்தியுடன் வணங்க முன்னைத் தவம் இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர், -

"தவமுந் தவமுடையார்க் காகும்"

என்று கூறுகின்றார். இக்கருத்தை அடிகள், செறிதரு தவத்தின் பயனாகிய அருளின் மேல்வைத்து இறைவனை வணங்க அவன் அருள் வேண்டும் என்பதாக்கி,

"அவனரு ளாலே அவன்றாள் வணங்கி"

என்று கூறி விளக்குகின்றார்கள்.

துரய தவத்தால், அன்புறு பத்தியால் விரும்புவதை எல்லாம் பெறலாம் என்பது வள்ளுவர் கருத்து.

"வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ
மீண்டு முயலப் படும்"

என்பது திருக்குறள். இக்கருத்தை அடிகள், "பரந்துபல் ஆய்மலர் இட்டுமுட் டாது.அடி யேஇறைஞ்சி
இரந்தஎல் லாம்எழக்கேபெற லாம்என்னும் அன்பர் உள்ளம்
கரந்துநில் லாக்கள்வ னேநின்தன் வார்கழற்கு அன்பு
..............................எனக்கு
நிரந்தர மாய்அரு ளாய்நின்னை ஏத்த முழுவதுமே”

என்று மிக அழகாக அருளியுள்ளார்கள்.

- 'தவ்த்தின் பய்னால் 'நான்' என்னும் ஆணவமலத்தின் காரியமாகிய அகங்காரம் ஒழிய வேண்டும் என்பதும், அங்ஙனம் ஒழியப் பெற்றால், மன்னுயிர்கள் எல்லாம் தொழும் என்பதும் வள்ளுவர் கருத்து.

"தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்"

என்பது திருக்குறள். அடிகள் இக்கருத்தை,

"நாம் ஒழிந்து சிவமானவா பாடித்
தெள்ளேணங் கொட்டாமோ?”

என்றும் அருளியுள்ளார்கள். அதாவது சீவபோதம் (தற்போதம்) நீங்கித் திருவருளில் தோய்ந்து எல்லாவற்றையும் திருவருளாகவே பாவித்தல். இதனைக் குமரகுருபர அடிகளார், இலக்கண வாய்பாட்டில் வைத்து மிக அழகாக, "பின்னம் ஓர் மாத்திரை குறுகினேன் பின்" என்று கூறினார்கள்.

உண்மையான தவமும் பக்தியும் இல்லாமல் வேடத்தாலும் செயலாலும் பக்தியுடையார் போலப் பிறருக்குக் காட்டித் திரிபவர் பலர் உளர் என்பது வள்ளுவர்

"மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்."

என்பது திருக்குறள். இக்கருத்தை அடிகள் மிகஅழகாகக் கூறி நம்மை மகிழ்விக்கின்றார். வள்ளுவர் நடிக்கின்றனர் என்று கூறி நிறுத்தினார். அடிகள் நடிப்பதோடன்றி, உண்மைத் தவத்தினுடைய பயனைப்பெற விரும்பி வினாவுகின்றார்கள் என்று கூறுகின்றார்.

"நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நானடுவே
விடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்

என்பது அடிகளின் அருண்மொழி.

உலகப் பற்றும், வாதனைகளும் நீங்கப் பற்றற்ற பரம் பொருளைப் பற்றிக் கொள்ளவேண்டும் என்பது வள்ளுவர் கருத்து.

"பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றை
பற்றுக பற்று விடற்கு"

என்பது வள்ளுவர் வாக்கு அடிகள் இக்கருத்தை,

"கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார்
குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச்
சுற்றிய சுற்றத் தொடர்வு அறுப்பான் தொல்புகழே
பற்றிஇப் பாசத்தைப் பற்றற்றநாம் பற்றுவான்
பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய்."

என்றும்,

"பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற
மெய்த்தேவர் தேவர்க்கே சென்றுர்தாய் கோத்தும்பி"

என்றும் அருளியிருப்பன அறிந்து இன்புறுத்தக்கன.

அல்லற்பிறவிக்குக் காரணம் ஆசை என்பதே பெருமக்களது கருத்து. "ஆசையறுமின்கள் ஆசையறுமின்கள்" என்று அறிவுரை கூறுகின்றார் திருமூலர், அவாவே பிறப்புக்கு விதை என்பதை வள்ளுவர்,

"அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பினும் வித்து"

என்பது திருக்குறள். இக்கருத்தை அடிகள்,

"...அவா வெள்ளக் கள்வனேனை
மாசற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ
என்னைநீ ஆட்கொண்ட வண்ணந் தானே"

என்று அருளியுள்ளார்கள்.

அல்லற் பிறவி நீங்கிப் பேரா இயற்கையைப் பெற வேண்டும் என்பதே வள்ளுவர் குறிக்கோள். இதனை ஆசிரியர்,

"வேண்டுங்கர்ல் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்டா வரும்”

என்று கூறுகின்றார். இக்கருத்தையே அடிகள், தாம் எத்தகைய இன்ப வாழ்வையும் வேண்டாது, பிறப்புறுக்கும்படியாகவே இறைஞ்சுகின்றதாகக் கூறுகின்றார்.

"வாழ்த்துவதும் வானவர்கள்
தாம்வாழ்வான் மனம்நின்பால்
தாழ்த்துவதும் தாம்உயர்ந்து
தம்மைஎல்லாம் தொழவேண்டிச்
சூழ்த்துமது கரம்முரிலும்
தாரோயை நாயடியேன்
பாழ்த்தபிறப் பறுத்திடுவான்
யானும் உன்னைப் பரவுவனே."
என்பது அடிகளின் அருண்மொழி.

அருளொடும் அன்பொடும் வாராத செல்வம் எவ்வளவு உயர்ந்ததாக இருப்பினும் கொள்ளுதல் கூடாது என்பது வள்ளுவர் கருத்து.

"அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்”

என்பது திருக்குறள். ஆண்டவன் அடியாரைக் கருதிக் கொள்வது அருளாகும். அடியார் அவ்வருளைப் பெறக் கொள்வது அன்பாகும். இதனைத்தான் அடிகள் பல இடங்களில் விதந்து கூறியுள்ளார். இக்கருத்தை,

"உன்றன் வார்கழற்கு அன்பு எனக்கு
நிரந்தரமாய் அருளாய் நின்னைஏத்த முழுவதுமே”

என்று வேண்டுகிறார். இஃதன்றி வேறு எவ்வகை இன்பத்தையும் விரும்பவில்லை.

"கொள்ளேன் புரந்தரன்
மால்அயன் வாழ்வு குடிகெடினும்”

என்றும்,

"வானேயும் பெறில் வேண்டேன்”

என்றும்,

"வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம்
வேண்டேன் மண்ணும்விண்ணும்"

என்றும் கூறுகின்றார். மேலும், திருவருளால் நரகம் புக நேரினும் வருந்தேன்’ என்றும் கூறுகிறார்.

"நரகம் புகினும் எள்ளேன் திருவருளாலே
இருக்கப்பெறின்”

என்று கூறுகின்றார்.

அறிஞர்களால் உண்டு என்று பேசப்படுகின்ற கடவுள் மறுபிறப்பு, இருவினை முதலியன, இல்லை என்று சொல்லும் நாத்திகர்கள் வள்ளுவர் காலத்திலும் இருந்திருக்கிறார்கள் அவர்களை வள்ளுவர் 'பேய்' என்று கூறுகின்றார்.

"உலகத்தார் உண்டுஎன்பது இல்லென்பான், வையத்து
அலகையா வைக்கப் படும்"

என்பது திருக்குறள், இவ்வகையினரை வாதவூரர் மூர்க்கர் என்றும், ஆணலாதவர் என்றும், கூறுகிறார். நாத்திகர்களை,

"ஆத்த மானார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்"

என்று குறிக்கின்றார். அவர்களுடைய இணக்கம் தீயது என்பதை,

"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை'

என்றும்,

"வாணிலாங் கண்கள் சோர
வாழ்த்திநின் றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே”

என்று கூறி விளக்குகின்றார்.

வானுலக வாழ்வினும் மேலாயதே வீட்டுலக வாழ்வு என்பது வள்ளுவர் கருத்தே இக்கருத்து சைவத் திருமுறைகளிலும் சிறப்பாக அடிகளின் வாசகத்திலும் பரந்துகிடக்கின்றது.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்"

என்று வானுலக வாழ்வையும்,

"யானென தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்”

என்று விட்டின்பத்தையும் குறிக்கின்றார் வள்ளுவர். 'யான்' என்ற அகப்பற்றும் எனது என்ற புறப்பற்றும் அழிதலே வீட்டினை எய்துதற்குரிய வழி என்று வள்ளுவர் குறிக்கின்றார். இக்கருத்தை அடிகள்,

"மேவும் உன்தன் அடியாருள்
      விரும்பி யானும் மெய்ம்மையே
காவி சேரும் கயற்கண்ணாள்
      பங்கா உன்தன் கருணையினால்
பாவி யேற்கும் உண்டாமோ
      பரமா னந்தப் பழங்கடல் சேர்ந்(து)
ஆவி ஆக்கை யான்எனது என்(று)
      யாதும் இன்றி அறிதலே”

என்று கூறி விளக்குகின்றார்.

இதுவரையில் வள்ளுவர் நூலின் முதல் இரண்டு பால்களைக் கொண்டு வாதவூரரது திருவாசகத்தைப் பார்த்தோம். இனி, வள்ளுவர் நூலின் இன்பத்துப் பாலையும் வாதவூரரது இன்பப் பெரு நூலாகிய திருக்கோவையாரையும் பார்ப்போம். வள்ளுவர் தமிழர் நாகரிகத்திற்கேற்ப அகனைந்திணைக்கண் பாற்பட்ட இன்பத்தைக் காமத்துப் பாலின்கண் விரித்துரைக்கின்றார். அடிகள் வாதவூரர் தமிழரின் உயர்ந்த நாகரிகத்தின் அம்சமாகிய பேரின்ப வாழ்வை அகத்துறை இலக்கணத்தில் வைத்து விளக்கிக் காட்டுகின்றார். இருப்பினும், இருவரிடையேயும் ஒத்த கருத்துகள் உண்டு என்பதை ஒரு குறளைக் கொண்டு கூறிவிட்டு முடித்துக் கொள்கிறோம்.

தலைமகனைப் பிரிந்த தலைமகள் பெரிதும் வருந்துகின்றாள். தலைவியின் துயரத்தைக் கண்ட தோழி, சிறிது நாழி மறக்கவேண்டும் என்று வற்புறுத்துகின்றாள். இதைக் கேட்ட தலைவி, "தலைவரை மறந்தால், நீத்தே விடவேண்டும். அப்படியல்லாது, இப்பொழுது நினைத்திருந்தால் மறுமைக்கண் அவரை எய்தி இன்புறலாம்; அதனால் மறக்க மாட்டேன்," என்று கூறுகின்றாள்.

"இலங்கிழாய்! இன்று மறுப்பின்என் தோள்மேல்
கலம்கழியும் காரிகை நீத்து"

என்பது திருக்குறள். இக்கருத்தை அடிகள் அப்படியே ஆண்டவன்பால் வைத்துக் கூறியிருக்கும் பாடலைப் படித்துப் படித்து இன்புற வேண்டியிருக்கிறது.

"குறப்பாவை நின்குழல் வேங்கையம்
       போதொடு கோங்கம்விராய்
நறப்பா டலம்புனை வார்நினை
       வார்தம் பிரான்புலியூர்
மறப்பான் அடுப்பதொர் தீவினை
       வந்திடிற் சென்றுசென்று
பிறப்பான் அடுப்பினும் பின்னுந்துன்
       னத்தகும் பெற்றியரே."

என்ற பாடல் படிக்கின்ற பொழுதெல்லாம் இன்ப உணர்ச்சியை வாரிவாரி வழங்குகின்றது. ஒரு தரம் புலியூரை நினையும் வாய்ப்பைப் பெற்றவர்கள், மறக்கும்படியாக ஒரு தீவினை வந்து மூண்டாலும், பல பிறப்புக்களிற் பிறந்தாலும், பின்னும் சென்று சேரத் தகும் தன்மையையுடையவர் என்பது கருத்து.

இங்ஙனமாக, வள்ளுவரும் வாதவூரரும் கடவுள் ஒருவர் உண்டு; அவர் தனக்குவமையில்லாதவர்; அவரை வணங்குதலே மானிட வாழ்வின் பயன்; அன்பும் அருளுமே செல்வம்; மற்றச் செல்வங்கள் செல்வங்களன்று, பிறவி நீங்க வேண்டும்; வீட்டின்பமே சிறந்த இன்பம் என்று ஒத்த கருத்தினராக ஓதியுள்ள மெய்ம்மொழிகளை உள்ளவாறு உணர்ந்து பயன் பெறுதலே நமது கடமை.

9. நான் அறிவேன்

‘நான் அறிவேன்' என்றவுடன் பயப்படுகிறீர்களா? 'காட்டிக் கொடுத்து விடுவேனோ' என்று கவலைப்படுகிறீர்களா? அப்படியெல்லாம் ஒன்றும் நேரிடாது; பயப்படாதீர்கள்; தைரியமாகக் கட்டுரையைப் படியுங்கள்.

'போதாமை' என்ற மனப் பண்பு பெரும்பாலான மக்களிடையே பரவியுள்ளது. 'போதும்' என்ற பண்பு ஒரு சிலரிடத்தில்தான் உள்ளது. போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து என்பது ஏட்டளவில்தான்; செயலில் இல்லை. அதனாலன்றோ எமர்சன், "போதுமென்ற மனத்தை எவ்வாறு அடைவது என்று காட்டுவதும், எவ்வாறு இன்னும் பெருக்கிக்கொள்வது என்ற எண்ணத்தை அழிப்பதுமே தூய பெருநெறி" என்றார்.

வேண்டாமை என்னும் செருக்கு என்றார் திருவள்ளுவரும். 'ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்' என்றார் திருமூலரும். போதும் என்று திருப்தியடைந்த பூரண மனந்தான் பூரண ஐசுவரியமாகும், என்றார் நபிகள் நாயகம். போதும் என்ற மனோபாவத்தோடு பறவைகளைப் போல வாழ வேண்டும்; என்றார் மகாத்மா. ஆகவே, 'போதாமை' என்ற மனோநிலை எல்லோராலும் வெறுக்கப்படுகிறது. இன்னும் வேண்டும் என்ற இப்பிணிக்கு மருந்து நீதியும் நடுவு நிலையுமே ஆகும்.

'போதாது' என்று சொல்லுகிறவர்களிற் சிலர் இயற்கையாகவே தேவையுள்ள நிலையில் இருப்பார்கள். அவர்கள் கடமைகளைச் செய்தும் பெறவேண்டியவற்றைப் பெறாது வருந்துவார்கள். 'உழைத்ததின் பயனைக் காணோமே' என்று கவலைப்படுவார்கள். அவர்கள் நிலை இரங்கத் தக்கதொன்றே யாம்.

பெரும்பாலோர் கடமையைச் செய்யமாட்டார்கள். செய்யவேண்டியவற்றைச் செய்யமாட்டார்கள். கடமையைச் செய்யாமலே உரிமையைப் பெற முயல்வார்கள். கடமை என்பதொன்று உண்டு என்பதையே மறந்துவிடுவார்கள். அத்தகையாருள் ஒருவர்தான், 'நான் அறிவேன்' என்றார். 'பெறவேண்டியவற்றின் பாக்கியை நான் அறிவேன்' என்று கூறுகின்றார். அவரது ஆசை தீராத ஆசையாக இருக்கிறது.

அன்பரின் ஆசை வெறுக்கத் தக்கது அல்ல, தீயது அல்ல; போற்றத் தக்கது; புகழத் தக்கது. அன்பரின் இன்னும் வேண்டும் என்ற ஆசை பொன்னைப் பற்றியது அல்ல; பொருளைப் பற்றியது அல்ல. பேராவியற்கையைப் பற்றியது. இன்பத்துள் இன்பத்தைப் பற்றியது. அறவாழி அந்தணன் தாள் சேர்தலைப் பற்றியது. அன்பரின் விருப்பம் சற்றே நிறை வேறியது. ஆண்டவனைக் கண்டார். கண்குளிரக் கண்டார். மாலமுதப் பெருங்கடலை மண்ணிலே கண்டார். பிறப்பிறப்பை நீக்கும் பெரு மருந்தைக் கண்டார். துன்பம் துடைக்கும் தூய சோதியைக் கண்டார். நெஞ்சத்தைக் கோயிலாகக் கொண்ட நிமலனைக் கண்டார். அகம் நெகக் கண்டார்; அன்புருகக் கண்டார். இன்பப் பெருவெள்ளத்தில் ஆழ்ந்தார். ஆனால் எல்லாம் சிறிது காலம். கண்ணால் கண்ட திரு உரு மறைந்தது. கண்ணால் கண்ட இறைவன் மறைந்தான். அன்பரைத் தனியே விட்டுச் சென்றான். இன்பத்தின் அனுபவம் இடையறவுப்பட்டது. பிரிவினால் வருந்துகின்றார் அன்பர்; புலம்புகின்றார். பிரிவுத் துன்பம் கொடியதுன்பம் அல்லவா? இனியார்ப் பிரிவு இன்னாது என்பது பொய்யா மொழியல்லவா? பிரிவாற்றாமையால் திண்வரை உருளவும், தீயில் வீழ்கவும் செழுங்கடல் புகவும் எண்ணுகின்றார்.

"உன்றன் வார்கழற்கு அன்பெனக்கு
நிரந்தரமாய் அருளாய்”

என்று இரந்து வேண்டுகின்றார்.

தினையின் பாகமும் பிரியாமலிருக்க வேண்டுகின்றார். இந்த உரிமையைக் கேட்கின்றபொழுது அன்பர் தமது நிலையைச் சிந்தித்துப் பார்க்கின்றார். நீதியுணர்ச்சியோடு, நடுவு நிலைமை உள்ளத்தோடு சிந்தித்துப் பார்க்கின்றார். அறனறிந்து ஆன்றமைந்த அமைச்சரல்லவா அவர்? தெரிதலும் தேர்ந்து செயலும் வல்ல அமைச்சர் அல்லவா? சிந்தனையின் முடிவில் அவர் தம்மை உணர்ந்தார். தம் குறையை உணர்ந்தார். தமது குறையை,

"தண்மலரிட்டு முட்டா திறைஞ்சேன்”

"ஆமாறுன்திருவடிக்கே அகங்குழையேன்; அன்புருகேன்"

"விரையார்ந்த மலர்துவேன்; வியந்தலறேன்
நயத்துருகேன்"

என்று சொல்லுகின்றார். இருப்பினும் திருவடி இன்பத்தைப் பெற விரும்புகிறேன். கடமையைச் செய்யாது உரிமையைப் பெற விரும்புகிறேன். என்னே அதிசயம்? என்று சிந்திக்கின்றார். அன்பர்.

'எச்சம் அறிவேன் நான் எனக்கு இருக்கின்றதை அறியேன்' என்பது மாணிக்கவாசகர் வாக்கு.

"கடவுள் உண்டா? கடவுள் என்று ஒன்று இருந்தால் ஒருவர் துன்பத்தையும் மற்றவர் இன்பத்தையும் அனுமதிப்பானேன்? எத்துணையோ கோயில்களில் பூசைகள் நடந்தும் நாட்டைப் பஞ்சம் நலிப்பானேன்?' என்றெல்லாம் கேட்கின்ற அன்பர்களுக்கு அடிகளின் சிந்தனை பதில் கூறுகின்றது.

10. சேக்கிழார் நெறி

சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் வரலாற்றுக் காப்பியம், புராணிக காலத்துச் செல்வாக்கின் காரணமாகப் "பெரிய புராணம்" என்று பெயர் சூட்டப் பெற்றுள்ளது. புராணம் என்ற சொல்லுக்குப் "பழைய வரலாறு” என்பது பொருள். ஆனால், காலப் போக்கில் உள்ளனவும், புனைந்து கூறவனவும் இணைந்த நிலையில் புராணங்கள் தோன்றலாயின. அதனால் காலப்போக்கில் புராணங்கள் மீது அறிஞருலகத்திற்கு இருந்த ஈடுபாடு குறைந்தது.

ஆனால், சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் மாக்கதை உண்மையான வரலாற்று நூல், பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழகத்தின் உளவியல், சமூகவியல், சமயவியல், அரசியல் ஆகியவற்றினைப் பெரிய புராணம் மூலம் தெளிவாக அறிய முடிகிறது. சேக்கிழார் சோழ நாட்டின் முதலமைச்சராக இருந்தவர். இவரின் அமைச்சுப்பணி சோழ அரசுக்கு எவ்வளவு பயன்பட்டதோ தெரியாது. ஆனால், திருத்தொண்டர் காப்பியத்துக்கு அடிப்படையாகவுள்ள வரலாற்றுத் தடயங்கள் காண்பதற்குப் பெரிதும் உதவியாக இருந்திருக்கவேண்டும். வரலாற்றுப் போக்கில் எந்த ஒரு கருத்தும் அல்லது பொருளும் தவற விடாமல் சாலைகள், ஊர்கள் - அவையிருந்த நிலை ஆகியன அனைத்தையும் நூல் புலப்படுத்துகிறது.

சேக்கிழார், தமது நூலின் விழுமிய கருத்தாகக் குறிக்கோளாகத் திருத்தொண்டையே எடுத்துக் கொண் டிருக்கிறார். அடியார்களானாலும், இறைவனானாலும் அவர்களுடைய தகுதி குறித்துப் போற்றப் பெற்றுள்ளதைவிட அவர்கள் இயற்றிய தொண்டு அல்லது பணி காரணமாகவே போற்றப் பெற்றுள்ளார்கள், வாழ்க்கை, தொண்டிற்குப் பயன்படும் பொழுதுதான் முழுமையடைகிறது; பொருளுடையதாகிறது; பயனுடையதாகிறது. இதுவே பெரிய புராணத்தின் தத்துவம்.

இன்று சமூகத்தில் நிலவும் சில தீமைகள் பன்னெடு நாள்களாகத் தமிழகத்தில் நிலவிவரும் தீமைகளேயாம். அவற்றில் ஒன்று தீண்டாமை. தீண்டாமை நிலப்பிரபுத்துவ சமுதாயத்தை யொட்டி வளர்ந்த பண்ணையடிமைச் சமுதாயத்தில் கால் கொள்கிறது. பண்ணையடிமைச் சமுதாயத்தில் நிலப்புரத்துவத்தைத் தொடர்ந்து சுதந்திர மின்றிக் கொத்தடிமை செய்யும் அடிமைச் சமுதாயம் தோன்றுகிறது; தோற்றுவிக்கப்படுகிறது; நிலைப்படுத்தப்படுகிறது. இங்ஙனம் கொத்தடிமைச் சமுதாயமாக்கப் பெற்ற உழவர்கள், உடல் உழைப்பாளர்கள் ஒதுக்கப் பெற்றனர். அவர்களுக்குச் சராசரி மனித உரிமைகள் கூட வழங்கப்பெறுவதில்லை. திருக்கோயில் வழிபாட்டுரிமையும் கூட மறுக்கப்பட்டது.

நிலப் பிரபுத்துவமும் சாதிமுறைகளும் கைகோத்து வளர்ந்தன. உயர் சாதியினர் நிலப் பிரபுக்களாயினர். நிலப் பிரபுக்கள் உயர் சாதியாயினர். ஒரோவழி உயர் சாதியினர் ஆகாவிடினும் சமாதான நிலையில் அடுத்த அடுத்த சாதியினர் என்ற தரத்தைப் பெற்றனர். இத்தகைய நிலப் பிரபுத்துவ பண்ணையடிமைச் சமுதாயத்தில்தான், தீண்டத் தகாதவர்களின் சமூகத்தில்தான் திருநாளைப் போவார் தோன்றுகிறார். திருநாளைப் போவார், தீண்டத்தகாதவர்களின் வழிபாட்டுரிமைக்காகப் போர்க்கொடி தூக்குகிறார். உயர் வேதியர் குலம் மறுக்கிறது. உயர் வேதியர் குலம், திருநாளைப் போவாரைத் தீயிலிட்டுப் பொசுக்குகிறது. ஆனால், ஆன்மீகத் தரத்தால், பத்திமையின் மேம்பாட்டால் தீயிலிடப் பெற்ற திருநாளைப் போவார் வெந்து மடியாமல் வெளியே வருகிறார். அவர்தம் ஆற்றல்கண்டு தில்லைவாழ் அந்தணர்கள் திருநாளைப் போவாரை "ஐயர்" என்று போற்றுகின்றனர். இது வரலாறு. சேக்கிழார் திருநாளைப் போவார் மூலம் மனித குலத்தில் தீண்டப்படாதவர்களின் உரிமைக்காகப் போராடுகிறார்.

பழந்தமிழகத்தில் தீண்டாமையைப் போலவே தமிழகத்தை வருத்திய தீமைகளில் சாதிவேற்றுமையும் ஒன்று. சேக்கிழார் தமது நூலில் சாதிப் பெயர்களை குலப் பெயர்களை அப்படியே கையாள்கிறார். இது அன்று இருந்த நிலை. ஆனால், சேக்கிழார் இந்த சாதிவேற்றுமைகளுக்கு ஆட்பட்டிருந்த சமுதாயத்தைச் சாதி வேற்றுமையற்ற சமுதாயமாக்க முயல்கிறார்; மெள்ள சமுதாயத்தை நகர்த்துகிறார். சுந்தரருக்குக் கலப்புத் திருமணத்தைச் செய்து வைப்பதில் சிவபெருமான் ஈடுபட்ட வரலாற்றைச் சுவைப்படக் கூறுகின்றார். சுந்தரர், பிறப்பால் ஆதிசைவம், வளர்ப்பால் மன்னர் குலம்; முதல் மணம் முடிந்தது, உருத்திர காரிகையர் குலம்; இரண்டாவது திருமணம் வேளாளர் குலம். இங்ங்னம் சாதிகள் கலப்பை, நயம்பட எந்தவிதமான கிளர்ச்சியுமின்றி அறநிலையிலேயே சேக்கிழார் பெரிய புராணத்தில் செய்து காட்டுகிறார். இங்ஙனம், ஒரு காலத்தில்-தமிழகத்தில் அமைதியாகச் சாதி ஒழிப்பு இயக்கம் நடைபெற்றது; வெற்றியும் பெற்று விளங்கியது. ஆனால், தமிழகம் இத்தகைய வரலாற்று நிகழ்வை தொடர்ந்து கடைப்பிடிக்கவில்லை. இன்றைய தமிழகத்தில் சாதிகளைத் தவிர வேறு என்ன இருக்கிறது?

சேக்கிழார், திருஞானசம்பந்தர் - திருநீலகண்டயாழ்ப்பாணர், திருஞானசம்பந்தர்-திருநாவுக்கரசர், திருநாவுக்கரசர் அப்பூதியடிகள் ஆகியோர் உறவு நிலைகளை விளக்கும் இடங்கள் உணர்வைத் தொட்டு வளர்க்கக் கூடியன. திருப்புகலூரில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், முருகநாயனார் ஆகிய மூவரும் ஒன்று கூடுகின்றனர்; கூடிக் கலந்து உண்டு பேசி மகிழ்கின்றனர். சேக்கிழார். இதனை உடனுறைவின் பயன்பெற்றார் என்று அழகுறப் பேசுகிறார்.

சேக்கிழார் விலக்கிய தீண்டாமையும், நீக்கிய சாதி வேற்றுமைகளும் மீண்டும் தமிழகத்தை வருத்துவது சேக்கிழார் செந்நெறிக்கு உடன்பாடன்று. சாதிவேற்றுமைகளற்ற சமுதாயம் காண்பதே சேக்கிழார் செந்நெறிக்குரிய பயன். காளத்தியப்பனைக் கண்ணப்பர் ஊனெலாம் நின்றுருகும் அன்பால் அருச்சித்த காட்சியைச் சேக்கிழார் என்பையும் உருக்கும் தமிழில் எடுத்துக் கூறுகிறார். இன்று எங்கே கண்ணப்பர்கள்! ஏன், கருவறை சாத்தப்பட்டது? கருவறை ஒரு குலத்தாருக்கே உடைமையானது எப்படி? இது சேக்கிழார் செந்நெறிக்கு அடுக்குமா? சாதாரணமான மக்கள் வழிபாட்டு உரிமையை இழந்ததால்தானே பத்திமையை இழந்தனர்? ஞானத்தை இழந்தனர்: சாதாரண மக்களுக்குக் கடவுட் கோயில் கடமைகள் இல்லாமல் போனதால் தானே மதம் மாறினர்! மதம் மாறிக் கொண்டிருக்கின்றனர்! கடமை இல்லாத சமுதாயத்தில் உரிமை இருக்காது! உரிமையில்லாத சமுதாயத்தில் சுரண்டி வாழும் வர்க்கம்தானே வளரும்? இன்றைய திருக்கோயில்கள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விடவில்லையா, என்ன? இந்த இழிவு நிலையிலிருந்து என்று மீள்வது? சேக்கிழார் செந்நெறி என்று உயிர்ப்புப் பெறும்? அருள் கூர்ந்து சிந்தனை செய்யுங்கள்! புறநூனூற்றுக் கவிஞன்.

ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பணிவார் பறைப்பப்
படைந்தோன் மன்றஅப் பண்பிலாளன்
இன்னாது அம்மஇவ் வுலகம்
இனிய காண்க, இதன் இயல்புணர்ந் தோரே!

(புறம் - 194)

என்று பாடினான். இயற்கை வழிப்பட்ட துன்பங்களைக் கூடக் கவிஞன் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை; இன்பதுன்பம் நிறைந்த இருவேறு நிலை வழிப்பட்ட சமுதாயத்தைக் கவிஞனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இச்சமுதாய அமைப்புக்குக் காரணம் படைப்பாளனாகவே இருந்தாலும் அவனைப் பண்பிலாதவன் என்று கவிஞன் ஏசுகிறான்! இன்னாதனவுள்ள உலகத்தை இனிய உலகாக அமைக்க வேண்டும் என்று உறுதி கொள்கிறான்; போர்க்குணத்தோடு ஆர்ப்பரிக்கிறான்; மற்றவர்களையும் அழைக்கிறான்.

'இன்னாதம்ம இவ்வுலகம்! இனிய காண்க!' இது கவிஞனின் ஆர்ப்பரிப்புக் குரல்! இந்த விழுமிய கருத்துத் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் தமிழக வரலாற்றில் மாற்றமில்லை! தமிழகத்தின் வரலாறு சுமந்ததையே சுமந்து கொண்டு நகர்ந்து கொண்டிருந்தது! சுந்தரர் அவிநாசிக்குச் செல்கிறார்! அங்கு ஒரு வீட்டில் அழுகுரல்! பிறிதொரு வீட்டில் மங்கல ஒலி! இவ்விரண்டையும் நோக்கும் சுந்தரர்,

மறையோர் வாழும் அப்பதியின் மாடவீதி மருங்கணைவார்
நிறையும் செல்வத்து எதிர்மனைகள் இரண்டில்
                                      நிகழ்மங்கல இயங்கள்
அறையும் ஒலி ஒன்றினில்; ஒன்றில் அழுகைஒலி
                                      வந்தெழுதலும் ஆங்கு
உறையும் மறையோர்களை "இரண்டும் உடனே நிகழ்வது
                                      என்?" என்றார்.

(பெ.பு. வெள்ளானை-5)

என்று கேட்டதாகச் சேக்கிழார் பாடிக் காட்டுகிறார். அதனால், சேக்கிழார் துன்பமே இல்லாத ஒரு சமுதாயத்தைக் காண எண்ணி அம்முயற்சிக்குத் துணையாகவே காப்பியம் செய்தார். ஆனால், காப்பியத்தின் கருத்து, காலத்தை வென்று வளங்க முடியாமல் தமிழினம் சதி செய்து விட்டது இரங்கத் தக்க நிலை! இன்று இன்பமும் துன்பமும் இயற்கையில் நிறைந்த சமுதாயம் மட்டுமில்லை! துன்பம் செயற்கையிலும் உருவாக்கப்படுகிறது! சமுதாயம் நைந்து அவலநிலையை அடைந்து கொண்டிருக்கிறது. இதற்கு விடிவுகாலம் தோன்றுமா? சேக்கிழாரின் பெரியபுராணம் ஓதுதல் மட்டுமின்றி சேக்கிழாரின் நூற் கருத்துக்கள் வாழ்க்கையிற் செயற் பாட்டுக்கு என்றைக்குச் சேக்கிழாரின் ஆர்வலர்கள் முயலுகிறார்களோ அன்றே சேக்கிழார் நூல் தோன்றியதன் பயன் மானுடத்துக்குக் கிடைக்கும். அந்த நல்ல நாளை எதிர்பார்ப்பது இயல்பல்லவா? நல்ல நாள்கள் தானே வருவதன்று! நல்ல நாள் என்பது திருவருளும் சிந்தனையில் தோய்வும் அறிவறிந்த ஆள்வினையும் உடைய சான்றோரே நாட்களை நல்ல நாள்களாக்குகின்றனர். அத்தகைய நல்ல நாளை விரும்பித் தவம் செய்வோமாக! சேக்கிழார் செந்நெறி மலர்க!

சேக்கிழார் செந்நெறி மணக்கும் மலர் மலர்க! சேக்கிழார் செந்நெறியை எண்ணியும், சொல்லியும், கேட்டும், துணை நின்றும், தொண்டு செய்வோர் அனைவரும் வாழ்க! வளர்க!

11. கச்சியப்பர்

பன்னீராயிரம் பாடல்களைக் கொண்ட மிகப் பெரிய நூல் கச்சியப்ப சிவாசாரியார் அவர்களின் கந்தபுராணம். 'கந்தபுராணத்திற்கு எந்தப் புராணமும் ஈடில்லை' என்பது வழக்கு வாழ்வியலின் பல நுட்பங்களைக் கொண்ட, ஒரு பெருநூல் அது. திருவள்ளுவர், கம்பர், திருமுறை பாடிய நாயன்மார்கள் ஆகியோரின் வாக்கியங்கள் பலவற்றைக் கச்சியப்பர் அப்படி அப்படியே பல இடங்களில் எடுத்துக் கையாண்டிருக்கிறார். இவ்வகையில் அவர் முன்னோர் சொல்லைப் பொன்னே போல் போற்றும் ஒரு சிறந்த காவிய ஆசிரியராக விளங்குகிறார்.

வழிபாட்டிற்காக வழிபாட்டுத் துறையில் காவியம் செய்கின்றவர்கள், நேரடியாகத் தாமே இறைவனின் திருவருளை அனுபவித்து அந்த அனுபவ உண்மைகளைக் காவியம் ஆக்கும் போதே அந்தக் காவியம் தனிச் சிறப்படைகின்றது. நமது கச்சியப்ப சிவாசாரியார் அத்தகைய அனுபவ ஞானம் பெற்ற பெரியார், சிவலிங்கத் திரு மேனியைத் தொட்டுத் தழுவிப் பூசனை செய்து இறையருட் பேற்றை-இறையின்பத்தை அனுபவிக்கும் நல்ல வாய்ப்பு அவருக்கு இருந்தது. எனவே அவரது பாடல்கள் வழி பாட்டிற்கு உகந்தனவாக இருப்பதில் வியப்பில்லை.

கச்சியப்ப சிவாசாரியாரின் பன்னிராயிரம் பாடல்களில் திருமுருகன் வழிபாடுதான் அடிப்படைக் கருத்தாக-மையக் கருத்தாக அமைந்திருக்கிறது.

திருத்தம், சீர்திருத்தம், புரட்சி என்ற சொற்கள் யாவும் பொருளால் மாறுபட்டனபோல் தோன்றும். ஆனால் காலத்திற்கேற்ப எழுந்த சொற்களேயன்றி கருத்தால் மாறுபாடு கற்பிக்கத்தக்கன அல்ல அவைகள். அதுபோலவே காவியம் காப்பியம் என்பனவெல்லாம் சமயச் சார்புடைய தொன்மை சான்ற வரலாறுகளுக்கு-இலக்கியங்களுக்குப் புராணம் என்று பெயர். இன்று புராணம் என்று சொல் சற்று கேவலமான பொருளில் பயன்படுத்தப் பெறுகிறது. எனினும், புராணம் என்ற பெயரை மறந்துவிட்டு நாம் கந்தபுராணத்திற்குள் நுழைந்தால் நல்ல சமுதாயச் செய்திகள் பலவற்றைப் பெறலாம்.

கடல்நீர் தண்ணீர்தான்-எனினும் அதை வாங்கி வையகத்திற்கு வழங்க வானம் இருப்பதுபோல தேங்கிக் கிடக்கின்ற இறையருளை வாங்கி நமக்கு வாரி வழங்க சிவாசாரியார்கள் இருக்கிறார்கள். அவ்வாறு இறையருளை வாங்கி வாரி வழங்குகின்றவர்கள் அதை ஏற்றுக் கொள் கின்றவர்களைப் பற்றிய-வாங்கிக் கொள்கின்றவர்களைப் பற்றிய திறமான அறிவு பெற்றிருக்க வேண்டும். அந்த அறிவு நமது கச்சியப்ப சிவாசாரியாரவர்கட்கு மிகுதியும் இருந்திருக்கிறது. அவருக்கு சமுதாயத்தைப் பற்றிய சிந்தனை எவ்வளவு இருந்திருக்கிறது என்பதற்கு அவரது கந்தபுராணம் தக்க சான்றாக விளங்குகிறது.

பிறப்பினால் கற்பிக்கப் பெறுகின்ற-நிலவுகின்ற சாதியுணர்வுகள் சமயநெறிக்கும் சமுதாய உணர்வுகளுக்கும் முரண்பட்டன என்ற கருத்து நீண்டநாள் வழக்கமாக இருந்து வருகின்றன. சமுதாய ஒழுங்கு மரபின் தலை மகனான நமது கச்சியப்ப சிவாசாரியார் தமது நூலில்,

"சிறிய ரென்றுஞ்
       சிலரைச் சிலர்மேல்
நெறிய ரென்றும்
       நினைவது நீர்மையோ?

இறுதியில் உயிர்யாவும்
         ஒன்றே யென
அறிதல் வேண்டும் அஃ(து)
         உண்மைய தாகுமே"

என்று பேசுகிறார். இறுதியில் உயிர்யாவும் ஒன்றே என்ற உறுதிப்பாடு, "பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற வள்ளுவப் பெருந்தகையின் கருத்தைச் சிறந்ததொரு விளக்கமாக இல்லையா?

உலகியல் இன்ப துன்பங்களுக்குக் காரணம் என்ன என்பதை இன்று அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் ஆய்வது போலவே, அன்று நமது கச்சியப்ப சிவாசாரியார் ஆராய்ந்திருக்கிறார். அவரவர் செய்த செயல்களால் தீமையும் நன்மையும் அவரவரை வந்தடைகின்றனவே யொழிய மற்றவர்களால் நமக்குத் தீமையும் நன்மையும் வருவதில்லை-பிறர்தர வருவனவுமல்ல என்கிறார் அதுமட்டுமா? அதற்கு ஆதாரமாக, இன்னொரு அருமையான கேள்வியையும் கேட்கிறார். அமுதம் இருக்கிறது. அந்த அமுதத்திற்குச் சுவை கொடுத்தவர் யார்? நஞ்சு இருக்கிறது. அதற்குத் தனிச்சுவை வழங்கியவர் யார்? என்று கேட்கிறார். தீதும் நன்றும் பிறர் தர வாரா- அவரவர் வினைவழி அவரவர் என்ற கருத்தை நமது கச்சியப்ப சிவாசாரியார் வலியுறுத்திப் பேசுகிறார்.

"தீங்குவந் தடையு மாறும்
         நன்மைதான் சேரு மாறும்
தாங்கள்செய் வினையி னாலே
         தத்தமக் காய வல்லால்
ஆங்கவை பிறரால் வாரா
         அமுதம்நஞ் சிரண்டி னுக்கும்
ஓங்கிய சுவையின் பேதம்
          உதவினார் சிலரு முண்டோ”

என்று கேட்கிறார்.

ஆம். வாழ்க்கை ஒரு மருத்துவமனை-மக்களெல்லாம் நோயாளிகள். இறைவன் நோய் தணிக்கும் மருத்துவன். இதுதான் உண்மை. இந்த வாழ்க்கையிலே உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் நாம் இடம் கொடுக்கக் கூடாது.

இன்பமும் துன்பமும் உலகின் இயற்கை எனவே இன்பம் வந்தபோது இனிதென மகிழ்வதோ, துன்பம் வந்த போது துளங்கிச் சோர்வதோ சரியான கொள்கையல்ல. ஆன்றோர் இந்த இருவகையுணர்வுகளுக்கும் இடங்கொடுக்க மாட்டார்கள் என்று பேசுகிறார். .

"இன்பம தடைந்த காலை
        இனிதென மகிழ்ச்சி யெய்தார்,
துன்பம துற்ற போது
        துண்ணெனத் துளங்கிச் சோரார்
இன்பமும் துன்பந் தானும்
       இவ்வுடற் கியைந்த வென்றே
முன்புறு தொடர்பை ஒரார்
     முழுவது முணர்ந்த பேர்கள்"

என்று அழகாகக் குறிப்பிடுகிறார். எனவே இன்பதுன்பங்களை நாம் அனுபவிக்கப் பழக வேண்டும். 'ஓடும் பொன்னும் ஒப்ப நோக்கும்' உள்ளத்திண்மை பெற வேண்டும்.

கச்சியப்ப சிவாசாரியாரின் போர்ப்படலப் பாடல்கள் போற்றிப் பாராட்டத்தக்கன. கச்சியப்ப சிவாசாரியார் போர் வரலாறு-போர் அனுபவம்-போர் நுட்பம் கைவரப் பெற்றவர் என்று கருதப்பெறத்தக்க வகையில் அந்தப் போர்ப்படலம் அமைந்திருக்கிறது.

போரில் சூரபதுமன் அழிக்கப் பெறவில்லை. உயிர்கள் உள்பொருள், இறைவனைப் போல், 'என்றும் உள்ள பொருள்' என்று ஆகிவிட்ட பிறகு அதை அழிப்பது எப்படி? எனவே, சூரபதுமன் அழிக்கப்பட்டான் என்பது தவறு. மேலும், சூரபதுமன் அறிவின் மேலோனாகவும், சிறந்த பக்தனாகவும் விளங்கியதாகப் பேசப்படுகிறது; நல்ல ஆற்றல் வாய்ந்தவன் என்று பேசப்படுகிறது. எனினும், ஆணவ மிகுதியால் அவன் தனது ஆற்றலை துஷ்பிரயோகம் செய்தான். அப்போது நமது திருமுருகன், எழுந்தருளி, சூரபதுமனை வென்று, அவனது ஆணவத்தை அடக்கி ஆட்கொண்டான். அவ்வளவு தானே தவிர சூரபதுமன் கொல்லப்பட்டதாகவோ, அழிக்கப்பட்டதாகவோ கருதுவது தவறு.

அன்று வாழ்ந்த நமது சிவாசாரியார்கள் நமது கச்சியப்ப சிவாசாரியாரைப் போலவே தெளிவான தத்துவப்புலமை பெற்றிருந்தனர். சுகானுபவம் பெற்றிருந்தனர். அவற்றின் கூட்டுக் கலவையாகப் பல அருட்பாடல்களை வடித்துத் தந்திருக்கின்றனர்.

கந்தபுராணம் மிகச்சிறந்த பக்திக் காவியம். நமது கச்சியப்பர் நல்ல பாத்திரத்தைப் பற்றிப் பேசும்போதும் சரி, கெட்ட பாத்திரத்தைப் பற்றிப் பேசும்போதும் சரி; வாழ்க்கையின் குறை நிறைகளைப் பின்னிப் பிணைத்தே பேசினார். முருகனைப்பற்றிப் பேசும்போதும் சூரபதுமனைப் பற்றிப் பேசும்போதும் அப்படியேதான்.

சூரபதுமன் நமது முருகப்பெருமானைப் பற்றிப் பேசுகின்றபோது.

"சூழுதல் வேண்டும் தாள்கள்
தொழுதிடல் வேண்டும் அங்கை
தாழுதல் வேண்டும் சென்னி
துதித்திடல் வேண்டும் தாலும்
ஆழுதல் வேண்டும் தீமை
அகன்றுநான் இவற்(கு)ஆ ளாகி
வாழுதல் வேண்டும்; நெஞ்சம்
தடுத்தது மானம் ஒன்றே" என்று குறிப்பிடுவதாகக் கச்சியப்பர் கூறுகிறார். ஆம்; திருமுருகனின் நிறைவையெல்லாம் சூரபதுமன் பாராட்டி விட்டு, 'மானம் ஒன்றுதான் இடையே நின்று தடுத்தது' என்றான் என்றால் அவனது உள்ளத்தை-பண்பை என்ன வென்று பாராட்டுவது?

இவ்வாறு பல்லாற்றனும் சமுதாயப்போக்குத் தழுவிய சமய காவியமான பக்திப் பனுவலை-கந்தபுராணத்தைத் தமிழ்ப் பெருமக்கள் அனைவரும் படித்துப் பயன்பெறுவார்களாக.

கச்சியப்பர் நெறி நம் நெறி-நம்மனோர் நெறி அந்நெறி பற்றியொழுகி நாம் இன்பமும் பயனும் பெறுவோமாக!

12. அருணகிரிநாதர்

சமயத்தை சமயவழிபட்ட தத்துவத்தை, அனுபவிப்பவர்கள் - அனுபவிக்கப் பிறந்தவர்கள் மதச் சண்டைக்குப் போகமாட்டார்கள். இறைவன், சாதி, மதம், இனம், நாடு முதலியவற்றையெல்லாம் கடந்தவன், எனவேதான் மாணிக்கவாசகர், தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” என்று பாடினார். இறைவன் எங்கும் நிறைந்து பரவியிருக்கிறான். அவன் பல்வேறு நாட்டிலும் பல்வேறுப் பெயரால் பாடிப் பரவப்பெறுகிறான். அவ்வாறு பல்வேறு நாட்டிலும் பல்வேறு பெயரால் பாடிப் பரவப் பெறுகிற அந்த இறைவனுக்குத் தென்னாட்டிலே சிவன் என்று பெயர். தென்னாட்டவராகிய நாம் அவனைச் சிவன் என்ற பெயரால் அழைக்கிறோம். அவன் திருப்பெயர்களில் சண்டை சச்சரவில்லை. ஒரே குழந்தையை ஒரு வீட்டில் தாய் வேறு பெயர், தந்தை வேறு பெயர் சொல்லி அழைப்பதில்லையா? அவர்கள் இருவரும் வெவ்வேறு பெயர் சொல்லி அழைத்தாலும் அவர்கள் அழைப்பது அந்த ஒரே குழந்தையைத்தானே. வாழ்க்கைக்கு வழிகாட்டுவோர் சிலர்; அந்தச் சிலரினும் வாழ்க்கை அனுபவத்தைப் பெறாமலேயே - அனுபவம் இல்லாமலேயே வழிகாட்ட வருபவர்கள் உண்டு. தித்திக்கும் செந்தமிழில், முருகனின் திருப்புகழ் பாடிய சந்தத் தமிழ் வித்தகர் அருணகிரியார் நிறைந்த அனுபவம் பெற்று வழிகாட்ட வந்தவர். அவர் 'அனுபவ நிறைவான' ஆசிரியர். வாழ்க்கைக் கடலில் வீழ்ந்து நீந்தி, அமிழ்ந்து, மிதந்து, மூச்சுத் திணறிக் கடைசியில் முத்தும் எடுத்துக் கொண்டு வந்தவர். ஆழக் குளித்து இறைவன் என்ற முத்தை எடுத்து வந்தவர்.

கடலுக்கும் வாழ்க்கைக்கும் நிறைந்த தொடர்பிருக்கிறது. கடலுக்கு ஆழம் தெரியாது - வாழ்க்கைக்கு எல்லை தெரியாது. கடலில் அலைகள் மோதும். வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மோதும். கடலில் ஆழக்குளித்து முத்தெடுப்போரும் உண்டு. மீன் பிடிப்போரும் உண்டு, வெறுங்கையோடு கரையேறுவோரும் உண்டு. வாழ்க்கையில் பல அனுபவங்களைப் பெறுவோரும் உண்டு. நைந்து நைந்து வாழ்வின் பயனை அனுபவிக்காமல் சாவோரும் உண்டு. அருணகிரியின் வாழ்க்கை ஒர் அலைகடலை ஒத்தது. அங்கு சிற்றலையும் உண்டு. பேரலையும் உண்டு. வாழ்க்கையில் சிற்றலையாகிய இன்பமும் பேரலையாகிய துன்பமும் உண்டு. அலை வரும் போது மிதந்தோ, மூழ்கியோ அதினின்று நாம் தப்பித்துக் கொள்வது போல, இன்ப துன்பங்களில் அமிழ்ந்து விடாமல் மிதக்க - அனுபவிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இன்பத்தை மதுவென்றோ, துன்பத்தை மருந்தென்றோ எண்ணி மயங்கவோ தயங்கவோ கூடாது. இரண்டையும் மருந்தென்று கருதி அனுபவிக்கப் பழக வேண்டும். அருணகிரியார் ஆழக் குளித்து இறைவன் என்ற முத்தை எடுத்தவர். கடலில் முத்தெடுப்பதுதான் சிறந்தது. வாழ்க்கையில் கடவுள் நம்பிக்கையோடு வாழ்வதுதான் சிறந்தது.

மணிக்கவாசகரைக் காட்டிலும் அருணகிரியாருக்குத் தான் வாழ்க்கை அனுபவம் மிகுதியும் உண்டு என்று நான் கருதுகிறேன். அப்படிக் கருதவதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இறைவனின் பெரிய நாடகத்தில் அருணகிரியார் ஒரு சிறந்த பாத்திரத்தை ஏற்றிருந்தார். வாழ்க்கையின் எல்லாக் கோணங்களையும் ஒழுங்காக-உயிருணர்ச்சிகளுக்குப் படும்படியாக - அவர் செய்த தவறுகளை மற்றவர்கள் செய்யும்போது அவர்கள் கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் வரும்படியாகச் சொல்லியிருக்கிறார். அருணகிரியின் பாடலுக்கும், மாணிக்கவாசகரின் பாடலுக்கும் தான் படிக்கின்றவர்களை அழ வைக்கும் சக்தியுண்டு.

அருணகிரியார் அழுது அழுது பாடினார்-நம்மையும் அழ வைக்கிறார். அவர் பாடிய காலத்தில் அழுது கொண்டே பாடினார். இன்று நாம் அவற்றைப் பாடும் போது அழு கிறோம். அன்று ஆழ்கடலில் மூழ்கி மூச்சடக்கி முத்தெடுத்த பெருமகன் அருண்கிரியார் என்றோம். அப்படி அவர் முத்தெடுத்த முன்பு பாடியது அலங்காரம். முத்தெடுத்த பின்பு பாடியது அநுபூதி.

செய்முறைக் கல்வி தமிழரிடம் வளர்ந்திருந்த அளவிற்கு வேறு எவரிடமும் வளர்ந்திருந்ததாக நாம் அறிய முடியவில்லை. காட்சியிலேயே பாடஞ் சொல்லிக் கொடுக்கும் முறை தமிழனுக்குத்தான் மிகுதியும் உண்டு.

நடராசப் பெருமான் தெற்குப் புறமாகப் பார்த்து ஆடிக்கொண்டிருக்கிறார். அவர் ஏன் தெற்கு புறமாகப் பார்த்து ஆடிக்கொண்டிருக்கிறார் என்பதற்குப் பதில் கூறுவது போல் கூறுகிறார். "உடலுக்கும் உயிருக்கும் உண வாகத் தென்றலும் தென் தமிழும் தெற்கில்தானே உண்டு” என்று, அதுமட்டுமா? சொல்லுவதைக் கேட்பவர்களும் தமிழகத்திலேதானேயுண்டு.

நம் நாட்டுச் சிறுவர் சிறுமியர்களுக்கு அருச்சனைக்காசு எவ்வளவு என்று நாம் சொல்லிக் கொடுத்திருக்கிறோமேயொழிய எந்தச் சாமி எந்தத் தத்துவம் உடையது என்பதைச் சொல்லிக் கொடுக்கவில்லை-சொல்லிக் கொடுப்பதுமில்லை.

முருகன் திருக்கோயிலை மலைமீது அமைத்த நமது தமிழர்கள் உயர்ந்த தத்துவத்தோடுதான் அமைத்திருக் கிறார்கள். வெளியே நாம் காணும் மலைப்புறத்தே குன்று இருக்கிறதே அது நமது அகத்திலே உள்ள குன்று. 'குணமெனும் குன்றேறி நின்றார்' என்றார் திருவள்ளுவர். திருக் கோவிலிலே முருகனைத் துறவுக் கோலத்தில் காண்கிறோம். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பரிபூரணத்துவம் அடையும் போது மனிதன் துறவியாவான் என்பதுதான்.

ஆணவம் ஒரு பெருங்காயப் பாண்டம்போல; அது எப்போதும் மணம் வீசிக்கொண்டே இருக்கும். சில சமயங்களில் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

விஞ்ஞான ஆசிரியர் வாய்ப்பாட்டை நம்பவில்லையானால், மருந்துகளுக்கும், சோதனைக் குழாய்களுக்கும்தான் கேடே தவிர உரிய பயன் கிடைக்காமல் போகாது. அது போல, மக்கள் இறைவனை-திருவருளை நம்பவில்லையென்றால், வாழ்வின் பெரும் பயன் இல்லாமற் போகும். இறைவனைப் பற்றிக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருத்தல் கூடாது.

'ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் சோதிக்க வேண்டாம்' என்கிறார் திருஞானசம்பந்தர். தொழுது - தொழுது தேவர்களின் கைகள் சிவந்தன-பரவை வீட்டிற்குச் சுந்தரரின் தமிழ்ப் பாடல் கேட்க நடந்து நடந்து சிவபெருமானுக்குக் கால்கள் சிவந்தன என்பது வரலாறு. தமிழ்ப் பாடலைக் கேட்பதற்காக நடந்து நடந்து கால்கள் சிவந்த சிவபெருமானுக்கு இன்று தமிழில் வழிபட்டால் பிடிக்காமல் போகுமா?

வாழ்க்கை என்பது கடல் என்று முன்னமேயே குறிப்பிட்டோம். அந்த வாழ்க்கைக் கடலில் நீந்திக் கரையேற அருணகிரிக்கும், மாணிக்கவாசகருக்கும், இரண்டு புணைகள் கிடைத்தன. அருணகிரியார் மனத்திற்குத் தட்டிய ஊறி உருவெடுத்த திருவுருவம் முருகன்; மாணிக்கவாசகரின் மனத்திற்குத் தட்டிய ஊறி உருவெடுத்த திருவுருவம் சிவபெருமான்.

நாம் எதை நினைத்தாலும் ஒன்றியிருந்து நினைக்க வேண்டும். அருணகிரியாரின் ஞானம் வழிவழி ஞானம். அவர் காலத்தை மிக நன்றாகப் புரிந்து கொண்டவர் என்பது இன்னொரு சிறப்பு. அவர் காலத்தில் சந்த இசைத் தமிழுக்கு நல்ல வாய்ப்பும் வரவேற்பும் இருந்தது. எனவே, அவர் சந்தத் தமிழ் பாடினார்.

அருணகிரியார் புலன்களின் வழியே முருகனை அனுபவித்தார் - பொறிகளும் அனுபவிக்கும்படி செய்தார். புலன்களை-சிந்தையைத் திருத்தும் உணர்வைப் பெற வேண்டும். அதற்கு அருணகிரியாரின் பாடல்கள் பெரிதும் உதவுவன.

தொண்டு செய்தல், வழிபாட்டுப் பாடல்களைக் - கனிவோடு பாடுதல், திருக்கோயில்களுக்குச் சென்று திருவுருவங்களை வழிபடுதல் முதலியன இன்றியமையாதன. 'தொண்டலாது உயிர்க்கு ஊதியமில்லை', என்பது நமது தமிழ் மரபு "வெற்று நிழலுக்கும் உதவா உடம்பு" என்கிறார் அருணகிரிநாதர் தொண்டின் சிறப்பைப் பற்றியும் அதன் இன்றியமையாமையைப் பற்றியும் அவர் நிறையப் பாடியிருக்கிறார். "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்" நல்லதொரு குடி வாழ்க்கையை அவர் "நெய்யின் அளவேனும் பகிர்ந்து கொடுமின்கள்" என்று வலியுறுத்துகிறார். நாளும் கோளும் அடியாரை ஒன்றும் செய்ய முடியாது என்பதனை,

நாளென் செய்யும்? வினை
       தானென் செய்யும்? எனை நாடி வந்த
கோளென் செய்யும் கொடுங்
       கூற்றென் செய்யும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கயுைம்
       தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும்
       எனக்கு முன்னேவந்து தோன்றிடுனே

என்ற பாடல் மூலம் விளக்குகிறார். வாழும் சமுதாயத்திற்கு-மனித குலத்திற்கு வாழும் வழியை-நீண்ட கால இலட்சியத்தைக் கற்றுக் கொடுத்த ஞானி அருணகிரியார். அவர் பாடலைப் பாடித் திருவருள் இன்பம் பெறுவோமாக.

15. விவேகானந்தரின் அடிச்சுவட்டில்
1

மானுடத்தின் வரலாற்றில் பழமைப் பற்றாளர்களுக்கும் புதியன வேட்பாளர்களுக்கும் காலங்காலமாக மோதல் நடந்து வந்துள்ளன. ஒருசில சமயங்களில் பழமை வெற்றி பெற்றதுண்டு. ஆனால், புதுமையே தொடர்ந்து இயக்க நிலையில் வெற்றி பெற்று வருகிறது; வளர்ந்து வருகிறது. பழமை நைந்துபோன துணி போல உடுத்தப் பயன்படாது. புதுமை வாழ்க்கையை உயிர்ப்புடன் இயக்கும் தன்மையுடையது. மாணிக்கவாசகர் புதுமையை வரவேற்றுப் பாடியுள்ள பாடல் படிக்கத்தக்கது.

"முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே!"

என்ற திருவாசக வரிகள் கவனத்துடன் படிக்கத்தக்கவை. கடவுள் பழம்பொருள்! கால எல்லைகளைக் கடந்த பழம் பொருள்! ஆனால், அந்தப் பழம் பொருளே ஆன்மாக்களின் அனுபவத்தைக் குறிக்கோளாகக் கொண்டு ஆன்மாக்களுக்கு ஏற்றவகையில் ஆன்மாக்கள் வாழும் காலம், தேசம் ஆகிய சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் ஆன்மாக்களின் இயல்பான புத்துணர்வு, விருப்பார்வத்திற்கு ஏற்பவும் எதிர் வரும் காலங்களின் புதுமையாகவும் விளங்குகின்றது. இறைவன் மாறிவரும் காலம், தேசம், பழக்கவழக்கங்களுக்குள் கலந்து நின்று அவையேயாகி அருள்புரிகின்றார் என்பார் தாயுமானார்.

"காலமொடு தேசவர்த்த மானம் ஆதி
கலந்துநின்ற நிலைவாழி! கருணை வாழி"

என்பது தாயுமானார் வாக்கு

"தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா இன்று
தோன்றியநூல் எனும் எவையும் தீதாகா"

(சிவப்பிரகாசம் 12)

என்ற சாத்திர நூல் கூறம்.

தமிழ் இலக்கண மரபு.

"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே"

(நன்னூல் 462)

என்பதாகும். பழையன தாமே அழியும் என்றும் புதியன அந்த இடத்தைப் பிடிக்கும் என்றும் விளக்கப் பெறும் கருத்து ஒரு வரலாற்று உண்மையாகும். ஏன்? இறந்தது விலக்கலும் எதிரது போற்றலும் வாழ்வியல் நெறி ஆம்! காலத்தொடு கலந்து வாரா நெறிகளால் யாது பயன்?

2

இன்று எங்குப் பார்த்தாலும் வேற்றுமைகள் வலியுறுத்தப்படுகின்றன. முரண்பாடுகள் மோதல்களாகி விடு கின்றன. உயர்வு தாழ்வுகளை நிலைப்படுத்தும் முயற்சிகளில் "பீடங்கள்" தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இன்றைய சூழ்நிலை பொதுவாக நன்றாக இல்லை! எந்த ஒரு நல்ல கொள்கைக்கும் எதிர்ப்பு! ஏன்? சமுதாய முரண்பாடுகள் பூதங்களாகக் காட்டப்படுகின்றன. இல்லை, இல்லை! முரண்பாடுகள் உருவாக்கப்படுகின்றன! இந்தச் சூழ்நிலையில்,

சாதி ஒழிப்பு!
தீண்டாமை ஒழிப்பு!
சுரண்டல் முறை ஒழிப்பு!
ஆதிக்க முனைப்புக்கு எதிர்ப்பு!

ஆகிய இன்னோரன்ன உயரிய கொள்கைகளைக் கூட மூர்க்கத்தனமாகத் தாக்குகின்றனர் பழமைவாதிகள்! அவர்கள் சாவா? வாழ்வா? என்ற போராட்டத்திற்குத் தயாராகி விட்டனர்.

கடவுள் பொது! கடவுள் மானுடத்தின் தந்தை! எழுந்தருளியுள்ள திருக்கோயில் மானுடத்தின் பொது வீடு! இதுதான் சமயம்! ஆனால், கடவுளுக்கே சாதிகளைக் கற்பித்துப் பேணுகின்றன. மதபீடங்கள்! கடவுளை, கடவுள் திருமேனியைத் தொட, பூசனை செய்ய - அனுபவித்து அழக்கூட எல்லா மாந்தருக்கும் உரிமை இல்லை! கடை கோடி மனிதன் - கடைகோடி மனித சமுதாயத்தினர்த் தீண்டத்தகாதவர்களாகப் பலநூறு ஆண்டுகளாக வைக்கப் பட்டுள்ளனர். இந்த நிலை மாற வேண்டும் என்று எழுதினால், பேசினால் பீடங்கள் எதிர்க்கின்றன.

இன்றைய உலகின் நிலை இதோ! இதயம் இருப்பின் எண்ணுங்கள்! -

பட்டினி கிடப்போர் 50 கோடி
பிணிவாய்ப்பட்டோர் 150 கோடி
பஞ்சத்தில் தவிப்போர் 100 கோடி

வேலை வாய்ப்பு இல்லாதோர் 50 கோடி

எழுத்தறிவு இல்லாதோர் 81.4 கோடி

இத்தகு அவல நிலையில் - இந்த அவலச் சூழ்நிலையில் சமநிலை, சமவாய்ப்புச் சமுதாய அமைப்பு பற்றிப் பேசினால் ஆத்திரத்துடன் பழமைவாதச் சமூக அமைப்பு போராட முன்வருகின்றது. "தலைவிதி"த் தத்துவம், "கடவுளின் சித்தம்” பற்றிப் பேசித் திசை திருப்புகின்றனர். சமதர்ம சமுதாய அமைப்புக்குப் போராடுபவர்களை நாத்திகர் என்று வசைபாடுகின்றனர்.

கடவுள் ஒருவரே! மதங்கள் பலப்பல! இன்று மதங்கள் மானுடத்திற்கு நன்மை செய்யும் ஆற்றலை இழந்து விட்டன! 'சொர்க்கம்' என்ற நினைப்பில் நரகத்தையே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்! இன்றைய மதம் "கடவுள் மத" மாக இல்லை. நம்முடைய மதங்கள் கடவுளை விழுங்கிச் செரிமானம் செய்து கொண்டு பல நூற்றாண்டுகள் உருண்டோடி விட்டன! இன்றைய மதங்களில் சடங்குகள், ஆசாரங்கள், முடை நாற்றம் வீசும் மூடத்தனமான பழக்கவழக்கங்கள் நிறைந்து விட்டன! மதமெனும் பேயே நடமாடுகிறது! அதனாலன்றோ, "வேதம் புதுமை செய்” என்றான் பாரதி. விவேகானந்தர். ஒரு புது மதமே தேவையென்றார்! இந்த உலகில் புதியமதம் காணப் பலர் முயன்றனர். கொழுத்த முதலாளித்துவம், கெட்டித்தன்மை வாய்ந்த மதபீடங்கள் - இவற்றுக்கு பிழைப்புக் காரணமாக துணை போகிய அராஜகத் தன்மை ஆகியவற்றால் இந்த உலகம் அல்லற்படுகிறது; அழிவை நோக்கிச் செல்கிறது! அழிவை நோக்கிச் செல்லும் இந்த உலகத்தைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

ஆம்! இது உடனடியாகச் செய்ய வேண்டிய பணி! கல்லறைக்குப் போகவேண்டிய பழமை, மூர்க்கத்தனமாக எதிர்க்கும்! உன்னைக் கொல்லலாம்! அஞ்சற்க! துணிவோடு நில்! கடந்தகால வரலாற்றைக் கூர்ந்து கவனித்துப்பார்!

எதிர்ப்புக்களைச் சந்தித்து உயிர்துறந்தவர்களே வெற்றி பெற்றுள்ளனர். அவர்களே இன்றும் வாழ்கின்றனர்.

உயிர்ப்புள்ளோர், உயிர்ப்புடன் வாழ்வை இயக்குவோர் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சார்! உயிர்ப்புள்ள மனிதனுக்கு ஊக்கம் அதிகம் ஆதலால் உயிர்ப்புடன் வாழ்! - இதுவே விவேகானந்தர் அறிவுரை.

3. கர்மபலன்

நமது நாட்டு மக்களில் பெரும்பாலோர் தலைமுறை தலைமுறையாக ஏழ்மையில் கிடந்து உழல்கின்றனர். பஞ்சத்திலும் பட்டினியிலும் செத்தோர் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. அதுமட்டுமா? போதிய நல்லுணவு இன்மையால் நாளும் செத்துக் கொண்டிருக்கும் மக்கள் ஏராளம் ! பச்சிளங்குழந்தைகளின் சாவுகள் எழுதிக் காட்ட இயலாதன. ஒரு வீட்டில் வாழ்கிறார்கள். பக்கத்து வீட்டில் சாகிறார்கள், வயிற்றுக்கு வெறும் சோறு கிடைக்காமல் சாகிறார்கள். இந்தியாவின் இந்தத் துன்பியல் வரலாறு வளர்ந்து வருகிறது. கடவுள் அவதாரங்கள் நடந்தும் கூட இந்த நாட்டின் ஏழ்மையை அகற்ற முடியவில்லை! ஐயோ, பாவம். சிவபிரான் மண்ணுலகிற்கு வந்தபோது கூட ஏழைப்பிட்டு வாணிச்சியின் உதிர்ந்த பிட்டுதான் அவனுக்குக் கிடைத்தது. இது இந்த நாட்டின் தலைவிதி!

நாடு விடுதலை பெற்ற பிறகும் சராசரி இந்தியனுக்கு எல்லாம் கிடைக்கவில்லை. இல்லை, இல்லை! எதுவும் கிடைக்கவில்லை. இந்த நாட்டு மகக்ளில் சரிபாதிப் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ்தான்! ஏன் இந்த அவலம்? நமது மக்களுக்கு, ஏன் இந்த வறுமை? ஏழ்மை? என்று சிந்திக்கத் துணிவில்லை. ஏழ்மையும் இழிவையும் அவமானத்தையும் தாங்கித் தாங்கிப் பழகிப்போய் விட்டனர்! போர்க்குணம் அறவே இல்லை, மழுங்கிப் போன மூளைகள்! இதற்குச் சராசரி மக்களா காரணம்? இல்லை! இந்துமத சாஸ்திரங்கள், புராணங்கள் ஓதும் கர்மபலன் நம்பிக்கையே காரணம்! அல்லற்படும் மக்கள் அவர்களுடைய ஏழ்மை முற்பிறப்புகளின் தொடர்ச்சி-பரிசு என்று இந்துமத போதகர்கள் மதக்குருமார்கள் சொல்லிச் சொல்லி நம்பவைத்து விட்டனர். இந்த மூடநம்பிக்கையிலிருந்து நமது நாட்டு மக்களை அருள் திரு விவேகானந்தர் மீட்க விரும்பினார்; அதற்காகப் போராடினார்! ஆனாலும் காரியம் நடக்கவில்லை!

1897 இல் கல்கத்தாவில் மார்வாடிகளின் அரவணைப்பில் வளரும் பசுப் பாதுகாப்பு சங்கத்தின் பிரசாரகரை நோக்கி விவேகானந்தர், "மத்திய இந்தியாவில் ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் சாகிறார்களே அவர்களைக் காப்பாற்றக் கூடாதா?" என்று கேட்கிறார். அதற்கு அந்தப் பசுப் பாதுகாப்பு சங்கப் பிரசாரகர் “பட்டினியில் சாவது கர்மாவின் விளைவு பாபத்தின் பயன்" என்று கூறுகிறார். இதனைக் கேட்ட விவேகானந்தர் கோபப்படுகிறார்! உணர்ச்சிவசப்பட்டு "என்ன பொய்யான பேச்சுக்கள்! மனிதர்கள் கர்மபலனால் சாகிறார்கள் என்று கூறுகிறார்களே, இந்த நாடு அடியோடு நாசமாகிவிட்டது" என்று கூறுகிறார்!

விவேகானந்தருக்குப் பிறகு ஒரு நூற்றாண்டு உருண்டோடி விட்டது. இப்போது இந்துமதத் தலைவர்கள் கர்மபலனை “ரேஷன்கார்டு" உவமை கூறி விளக்கி இதோபதேசம் செய்து கொண்டிருக்கின்றனர். எந்தாய் நாடே எப்போது விழிப்பாய்? உனக்கும் கர்மபலன் இருக்கிறதோ?

4. சாஸ்திரம் கற்பிக்க வேண்டும் - எப்போது?

நமது நாடு ஒரு வளரும் நாடு. ஆனால் நாடு முழுமையாக எப்போது வளரும்? நமது நாடு வளர என்ன தேவை? ஆலமரத்தின் ஒரு சிறு விதைக்குள் உயிர்ப்புச் சத்து தான் - ஜீவ சத்து தான் பெரிய ஆலமரமாக வளர்கிறது. விதை பெரிய மரமாக வளர்ந்ததற்குக் காற்று, கதிரவன் தரும் சூடு, தண்ணீர் ஆகியவை துணையேயாம், வளர்ச்சி, வித்தின் உயிர்ப்பு. அதுபோல், நமது நாடு வளர வேண்டும். முதலில் நாம் வளர வேண்டும். நமக்கு நம்மிடத்தில் நம்பிக்கை வளர வேண்டும்.துணிவு வேண்டும். புத்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் வளராமல் நமது விதியை நாம் ஆளாமல் எப்படி நாட்டை ஆளுவது? வளர்ப்பது? இவை நடைபெறக் கூடும். இவையெல்லாம் மட்டும் போதா, நமது விலங்குகளை உடைத்து நம்மை மாமனிதராக்குகின்ற துறவு மனப்பான்மையும் வேண்டும். துறவு என்றால் உடனே காவித்துணியும் கமண்டலமும் மட்டும் ஏன் நினைவிற்கு வருகிறது? தன்னலத்தைத் துறத்தல், சமூகத்தை நேசித்தல், நாட்டை நேசித்தல், உயிர்க்குலத்தை நேசித்தல், உண்பித்து உண்ணுதல், உடுக்கச் செய்து உடுத்தல் இவைதான் உண்மையான துறவு. இந்தத் துறவு காலப்போக்கில் கோலங்களாகிக் குணங்கள் ஆகாமல் தேக்கமடைந்து விட்டன.

இந்திய சந்நியாசிகளுக்கு இன்றுள்ள அறைகூவல் மதங்கள் அல்ல. பாபர் மசூதியும் அல்ல. இராமர் கோயிலும் அல்ல. இன்று நமது நாட்டில் 70% மக்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். அறியாமையில் மூழ்கிக் கிடப்பவர்கள் 58.9% விழுக்காட்டு மக்கள் ஏழ்மையில் கிடந்து உழல்கின்றனர். நடமாடும் கோயில்கள் நலிந்து அழுகின்றன. சராசரி அறிவே இல்லாதவனுக்கு ஞானோபதேசம் செய்யப் போகிறீர்கள். இதோபதேசம்; முத்தியின் இன்பம் இன்று. நமது நாட்டு மக்களுக்கு விளங்குமா? இலையைப் பொத்தலாக்கி விட்டு அறுசுவை உணவு படைப்பதாக உறுதி மொழி கூறுவது நியாயமா?

நமது நாடு இன்று அந்நிய உதவியை நம்பி வாழ்கிறது. இன்றைய இந்தியன் கடனிலே பிறந்து கடனிலே வளர்ந்து கடனோடு சாகிறான். இந்தியன் அடுத்த தலைமுறைக்கு கடனையே மூலதனமாகத் தருகிறான். இது ஏன் ? இந்தியாவில் மதச் சடங்குகள், அரசியல் ஆர்ப்பாட்டங்கள் சுக வாழ்க்கையின் தேவைகளில் 25% குறைந்தால் கூட மிகப்பெரிய மூலதனம் சேரும். எல்லாரும் ஒரு மணி நேரம் ஊர்வேலை, நாட்டுவேலை என்று ஒதுக்கிச் செய்தால் நாட்டில் வளர்ச்சிப் பணிகள் நாளும் நடக்கும்.

நமது வளர்ச்சி, நமது நாட்டின் வளர்ச்சி, அது நம்மாலே நடக்க வேண்டும் நாமே இந்தப் புவியை நடத்த வேண்டும். பொதுவில் நடத்த வேண்டும். நிற்பானேன்? பணியைத் தொடங்குமுன்னே வெற்றி தோல்விகளைக் கணக்கிட்டுக் கலங்குவானேன்? எந்த ஒரு பணியும் தொடக்கத்தில் எதிர்ப்புகளைச் சந்திக்கத்தான் வேண்டும் நமக்கு ஏற்படும் எதிர்ப்புக்களை நம்மை வளர்க்கும் உயிர்ப்புக்களாக ஏற்றுக் கொண்டு நடைபோட வேண்டும். எழுந்திரு புவியை நடத்த முற்படு! பொதுவில் நடத்த முற்படு! வேலை செய்! எப்போதும் வேலை செய்து கொண்டேயிரு! இன்றைய மனித வளம் வேலைகளில் முழுமூச்சாக நாட்டுப் பணியில் ஈடுபடும் நாளிலேயே இந்தியா வளரும்! வாழும்! இதுவே விவேகானந்தர் சென்ற பாதை! அவர் நடந்த பாதையில் நடை போடுவோமாக!

விவேகானந்தரின் அருள்வாக்கு இதோ! உங்கள் படிப்பு இந்தப் பரிதாபக் குரல்களின் தேவையை நிறை வேற்றுமா? நிச்சயம் நிறைவேற்றாது. மேலைநாட்டு விஞ்ஞானத்தைக் கொண்டு பூமியை நன்றாக உழுது உணவுப் பொருள்களை மிக அதிகமாக உற்பத்தி செய்யுங்கள். விஞ்ஞானத்தின் துணையுடன் உங்கள் சொந்த முயற்சியையும் இணைத்து வருவாய்க்குரிய புதிய வழிகளைக் கண்டுபிடியுங்கள்; பிறரிடம் அடிமை வேலை செய்து பொருள் ஈட்ட முயலாதீர்கள். தங்களுக்கு வேண்டிய உணவையும், உடையையும் தாங்களே ஈட்டிக் கொள்ளுமாறு அவர்களுக்கு நான் போதிக்கிறேன். உணவுக்காகவும் உடைக்காகவும் கவலைப்பட்டுக் கவலைப்பட்டு இந்த நாடே இப்படிப்பட்ட, நாசத்திற்கு வந்துவிட்டது. இதை நீக்குவதற்கு என்ன வழியைத் தேடியிருக்கிறீர்கள்? உங்கள் சாஸ்திரங்களையெல்லாம் கங்கையிலே வீசி எறியுங்கள். மக்களுக்கு அதிகமான உணவுப் பொருள்களையும் ஆடைகளையும் உற்பத்தி செய்ய கற்றுக் கொடுங்கள். அதன் பிறகு அவர்களுக்கு நேரமிருந்தால் சாஸ்திரங்களைக் கற்பியுங்கள்.

5. பேச்சும் செயலும்

தமிழ் நாடு பேச்சில் முன்னேறிய நாடு. தமிழர்கள் பேசுவதில் வல்லவர்கள். ஆண்டுதோறும் பல நூறு பேச்சாளர்கள் உருவாகி வளர்ந்து வருகின்றனர். நமது நாட்டில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மேடைகள் நடைபெறுகின்றன. ஏன்? பேச்சே ஒரு தொழிலாகி விட்டது. பேச்சில் சொற்சிலம்பங்கள் இருக்கும்; தத்துவப் பொழிவுகள் விளங்கும்; புதுமை பொலியும்; புரட்சிக் கனல் வீசும். மூச்சு விடாமல் பேசுவார்கள். இப்படிப் பேச்சுக் கச்சேரி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறதே! நாட்டில் நடந்தது என்ன ? அறியாமை நீங்கியதா? வறுமை நீங்கியதா? தீண்டாமை நீங்கியதா? இல்லை, சாதி வேற்றுமைகள்தான் நீங்கியதா? ஒன்றும் நடைபெறவில்லை. ஏன்?

சொல்லுதல் யார்க்கும் எளிது. செயல் யாவர்க்கும் அரியது என்று வள்ளுவம் அறிவுறுத்தியது. இதுவே உண்மை. சிலருக்குச் சொல்லத் தெரியும். சொல்வதற்குரிய அறிவு விளங்கும். ஆனால் அச்சொல்லின் பொருளைச் செயற்படுத்துவதில்லை. காய்க்காத மலர்கள் அழகாக இருக்கலாம்; மணக்கலாம் பசி தீருமா? மாந்தர் உலகின் முன்னேற்றம் பேச்சில் இல்லையே! செயலில் அல்லவா இருக்கிறது. வறுமையைப் பற்றி அம்மம்ம! எத்தனை பேச்சுக்கள் பட்டிமன்றங்கள்! கவிதைகள்! ஆனால், நடந்தது என்ன? பேசியவர்கள் இரண்டாவது ஊதியம் பெற்றார்கள்;வளர்ந்தார்கள்; வாழ்கிறார்கள். ஆனால் மக்களின் வறுமை. அகன்ற பாடில்லை. அறியாமை அகற்றும் கல்வியை இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே திருவள்ளுவர் உயர்த்திக் கூறினார். என்னாயிற்று? 18 உரைகள் எழுந்தனவேயன்றி எழுதப் படிக்க எல்லோரும் கற்கவில்லை; கற்பிப்பாரும் இல்லை. ஏன்? ஏன்? நாம் என்ன மூச்சு விடுவது செயலுக்காகவா? இல்லையே! உயிர் பிழைத்து வாழத்தானே மூச்சுவிடுகின்றோம்! இந்த நாட்டில் செயல் இல்லை! செயல் இல்லை! கடவுளைக் சுற்றி வருவர்; முணுமுணுப்பர், ஆனால் காரியங்களைக் கடமைகளைச் சுற்றிவாரார்! போதும் போதும், எதிர்வரும் இருபத்தோராம் நூற்றாண்டிற்குள் நமது நாட்டைப் புதுக்கியாக வேண்டும். பேச்சு மேடைகள், பட்டிமன்றங்கள் அமைப்பது போல் செயற்களப் பணிமனைகள் அமைப்போம் ! உழைப்போம்! இதுவே விவேகானந்தர் அடிச்சுவட்டில் செய்வதற்குரிய அடையாளம்.

"நீங்கள் பேசுவதில் மட்டும்தான் அறிவாளிகள். செயலைப் பொறுத்தவரையில் முட்டாள்கள்!” என்று அருளிய விவேகானந்தரின் வேதனை நிறைந்த குரலை எண்ணுங்கள்! பேச்சைக் குறையுங்கள் மூச்செல்லாம் முயற்சியாக வாழ்வோமாக!

6. நான் ஏன் சோஷலிஸ்டு?

சோஷலிஸம் - என்ற தத்துவம் மாமுனிவர் மார்க்சின் மூலதனம் என்ற நூல்வழி உலகத்திற்கு அறிமுகப்படுத்தப் பெற்றது. ஆனாலும் சோஷலிஸம் என்ற தத்துவக் கொள்கை அறிவியல் வடிவம் பெறாமல் கொள்கை வடிவில், பலநூறு ஆண்டுகளாகவே தமிழிலக்கியங்களில் இடம் பெற்றிருந்தது.

"எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லைமாதோ'

என்று கம்பன் சோஷலிசத்தைக் கடந்த பொதுவுடைமைச் சமுதாய அமைப்பு நடைமுறையை அறிமுகப்படுத்துகின்றான். இராமன், மக்களிடம் "எதுவினை?” என்று கேட்பதன் மூலம் உழைப்பு வேலையைப் பற்றிய சிந்தனையைத் தூண்டுகின்றான். அருட்பிரகாச வள்ளலார்,

"வல்லார்க்கும் மாட்டார்க்கும் வாய்ப்பளிக்கும் வாய்ப்பே" என்று சோஷலிச தத்துவத்தை இலக்கண வடிவிலேயே அறிமுகப்படுத்துகின்றார். ஆயினும் வள்ளலாரின் பாடல் மிகுதியும் சமயத் துறையைச் சார்ந்தவர்களாலேயே பாடப்பெற்று வந்ததால் சோஷலிசச் சிந்தனை செயல் வடிவம் பெறவில்லை; புரட்சி தோன்றவில்லை. பக்திப்புனலில் வள்ளலாரின் புரட்சித் தீ அணைந்து விட்டது. இலக்கியச் சுவையில் கம்பனின் அரசியல் சிந்தனை அவியலாகி விட்டது.

எது சோஷலிசம்? சோஷலிசத்தைப் பற்றிய கருத்தில் கூடக் குழப்பம்! ஆம்! சோஷலிசமே சோறுபோடும்; துணி கொடுக்கும் என்று சொல்கின்றனர். இல்லை, இல்லை! சோஷலிசம் சோறு போடாது; சோறுபோடக் கூடாது. சோஷலிசம் மனிதனை மனிதனாக்கும்; அறிவுடையவனாக்கும்; திறன்மிக்க தொழிலாளனாக்கும், படைப்பாளியாக்கும். அவ்வழி அவன் சோறு தேடிக் கொள்வான்.

உழைப்புக்கு வாய்ப்பு! எல்லாருக்கும் ஆற்றலுக்கேற்ற வேலை வாய்ப்பு! வேலைக்கேற்ற கூலி! உழைப்புக்கேற்ற கூலி! இதுவே சோஷலிசம்.

சோஷலிசம் என்ற சொல்லுக்கு நல்ல தமிழாக்கம் "வாய்ப்பு' என்ற சொல்லாகும். வாய்ப்புக்கள் எல்லாருக்கும் பொது.சாதி, மதம், கட்சி பாராமல் எல்லாருக்கும் வேலை! எல்லாரும் உழைத்தலுக்கு ஏற்ற வாய்ப்பு. இது சமுதாய வளர்ச்சியின் - முன்னேற்றத்தின் முதற்படி உழைப்பதன் மூலமே எல்லாரும் எல்லா நலன்களும் எய்தல் வேண்டும். ஆனால், மக்களின் வாங்கும் சக்தி, உலகச்சந்தை நிலவரம் ஆகியன அடிப்படையில் தான் செல்வம் பெருக இயலும், ஏன் படைப்பில் கூடப் படைப்பாளியின் - உழைப்பாளியின் உழைப்புத் திறன் குறைவின் காரணமாகப் படைப்புப் பொருள்கள் குறையலாம். தேவைக்குரியனவற்றைக் கூட உற்பத்தி செய்ய இயலாமல் போகலாம். இந்த மாதிரிச் சூழ் நிலைகளில் மக்களின் தேவைகள் நிறைவு செய்யப் பெறாது போதல் இயற்கை ஆயினும் தொடர்ந்த உழைப்பின் மூலமும் சுரண்டல் முறையிலிருந்து செல்வத்தைப் பாதுகாப்பதன் மூலமும் மக்கள் தங்களுடைய தேவையைப் பெற முடியும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

சோஷலிசம் என்ற தத்துவம் அதன் அளவில் அது நிறைவான தத்துவம் அல்ல; கொள்கை அல்ல; கோட்பாடு அல்ல; ஆயினும், மனித குலத்தின் வறுமையை, ஏழ்மையை அகற்றும் பணியில் தொடக்கத்தில் சோஷலிசத்தைத் தவிர வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை. விவேகானந்தர் சோஷலிசத்தை விரும்பி ஏற்றுக் கொண்டார். அவர் அப்படி ஏற்றுக் கொண்டதற்குரிய காரணத்தை "நான் சோஷலிஸ்டாக இருப்பது அது ஒரு நிறைவுள்ள முறை என நான் நினைப்பதாலல்ல. ஆனால் முழுப்பட்டினியைவிட அரை வயிற்றுணவு மிக்கமேலானது" (விவேகானந்தர் அவரது சமூக-அரசியற் கருத்துக்கள். பக். 78) என்று விவேகானந்தர் அருளியுள்ளமையால் அறியலாம்.

ஆனால், இன்று சோஷலிசமே கேள்விக் குறியாக உள்ளது. ஏன்? சோஷலிச சமுதாய அமைப்பின் மூலம் உழைப்பாளர் கைக்கு ஆட்சி மாறியது. ஆட்சிக்கு வந்த உழைக்கும் வர்க்கம் உழைப்பைத் தவிர்த்தது. மெல்ல உழைப்பை மறந்தது. அதன் விளைவு சோஷலிச சமுதாய அமைப்பில் கண்ட நாடு, முதலாளித்துவ நாட்டில் இன்று இரக்க வேண்டியிருக்கிறது. மனித உலகம் தனக்குத்தானே தீமை இழைத்துக் கொள்கிறது!காப்பார் யார்?
7

இந்தியா இன்று ஒரு வினோதமான நாடாகத் திகழ்கிறது. பணப்புழக்கமும் நிறைய இருக்கிறது. அதே போழ்து பணப்புழக்கமே இல்லாத சிற்றுார்களும் உண்டு. பல நூறாயிரங் குடும்பங்களுக்கு இன்று பணப்பஞ்சம் இருக்கிறது. ஏன்? சில நிறுவனங்களும் கூடப் பணப் பற்றாக்குறையால் இடர்ப்படுகின்றன. நல்ல நோக்கமும் செயற்பாடும் இருந்தாலும் நிறைவேற்ற நிதி ஆதாரங்கள். இருப்பதில்லை; நிதி கிடைப்பதில்லை, நிதிப்பற்றாக்குறை என்பது ஒரு கடுமையான பிரச்சனை. இந்தப் பணப்பற்றாக்குறை இயற்கையானதா? அல்லது நிர்வாகக் கோளாற்றால் அமைந்ததா? பணப்பற்றாக்குறை. இயற்கையாக அமையாது. இயற்கையாக அமைவது ஏழ்மை. பணப்பற்றாக்குறை என்பது ஏழ்மையல்ல.

இந்தப் பணப்பற்றாக்குறையினால் இடர்ப்படும் நிறுவன நிர்வாகத்தில்கூட மனிதச் சிக்கல்களும் தோன்றும். செய்ய வேண்டியனவற்றைச் செய்ய இயலாது. சிலர் பணப்பற்றாக்குறைக்காகச் செலவைச் சிக்கனப்டுத்த எண்ணுவர். வரவுக்கேற்பச் செலவு செய்யும் குணம் இது. நல்ல குணம்தான். ஆனாலும் வளரும் நாட்டுக்கும் நிறுவனத்திற்கும் இந்தக் கொள்கை ஒத்துவராது. அதுமட்டும் அல்ல, வளர்ச்சியைக் கடுமையாகப் பாதிக்கும். அதனால்தான் திருவள்ளுவர், பொருளியலைக் கூறும் பொழுது,

"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு"

என்று கூறினார்.

இயற்றல் என்றால், பொருள் வருதலுக்குரிய-பொருள் ஈட்டுதற்குரிய புதிய புதிய வாயில்களைக் காணுதல் என்பது கருத்து. அதாவது பொருள் ஈட்டத்துக்குரிய அறிவு, ஆற்றல், பொருள் ஈட்டுவதற்குரிய வாயில்கள், செல்வ உற்பத்திக் களங்கள் எல்லாம் இருந்தும் புதிய பொருள் வருவாய்க்குரிய வாயில்களை உருவாக்காமல், பொருளை ஈட்டாமல் சிக்கனப்படுத்துவது நல்ல பழக்கமல்ல. நாள்தோறும் பொருள் வருவாய்க்குரிய புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். செயல் செய்து கொண்டே போனால் பொருளின் தேவை இருக்கத்தான் செய்யும். பொருளின் தேவையே மனிதனை, பொருள் இயற்றும் முயற்சியில் ஆற்றுப்படுத்தும். பொருள் இயற்ற எடுத்துக் கொள்ளும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். இதுவே சுவாமி விவேகானந்தரின் அறிவுரை.

"தொண்டுக்குப் பணம் ஒரு பிரச்சனை அல்ல. தொண்டினைத் தொடங்கு தொடர்ந்து செய்; பொருள்கள் தாமே வரும்” என்றார் சுவாமி விவேகானந்தர்.

14. தமிழ்நெறியும் லெனினியமும்
1

தமிழினம் கல் தோன்றி மண் தோன்றக் காலத்தே தோன்றி வளர்ந்து வாழ்ந்துவரக் கூடியது. தமிழரின் தாய் மொழியாம் தமிழ், காலத்தால் மூத்தது; கருத்தாலும் மூத்தது. தமிழ் காலத்திற்குக் காலம் தேவையான இலக்கியங்களைப் பெற்றுச் செழித்து வளர்ந்த செம்மொழி. தமிழிலக்கிய உலகத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய காலத்திலிருந்து நமக்கு இலக்கியம் கிடைத்திருக்கிறது; சிந்தனை தெரிகிறது. அச்சிந்தனை உலகம் வளர்த்து வந்திருக்கின்ற வகையும் விளங்குகிறது. இன்று கிடைத்திருக்கின்ற தமிழிலக்கிய மரபில் முற்போக்குச் சிந்தனையே மேம்பட்டு விளங்குகிறது. இருபதாம் நூற்றாண்டில் நின்று வாழ்கின்ற நாம், இரண்டாம் நூற்றாண்டில் அல்லது ஏழாம் நூற்றாண்டில் இருபதாம் நூற்றாண்டின் தீவிரத்தை-அப்படியே அதே உருவத்தில் எதிர் பார்க்க முடியாது. வரலாற்றுப் பார்வையில் அப்படி எதிர் பார்க்கவும் கூடாது. ஆனால், அந்தக் கருத்துக்கள் தோன்றிய காலத்தில் உலக மொழிகளில் நிலவிய கருத்துக்களைவிட தமிழ்க் கருத்துக்கள் முற்போக்காகவும், தீவிரமாகவும் இருந்திருக்கின்றன. தமிழ்ச் சிந்தனையின் அடிச்சுவடுகள், இன்று மனித குலத்தைக் கவர்ந்துள்ள மார்க்ஸீய சித்தாந்தத்துடன் அடிப்படையில் முரண்படவில்லை. மாறாக, மார்க்ஸீயே சித்தாந்தத்தின் அடிப்படைக்கூறுகள் மார்க்ஸீயம் தோன்றுவதற்குப் பல்நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழிலக்கியத்தில் கால் கொண்டுள்ளன. மார்க்ளியத்தின் சிறந்த விரிவுரையாளனாக விளங்கி மார்க்ஸீயத்தை நடை முறைப்படுத்தி வெற்றி கண்ட மாமேதை லெனின் உடைய சிந்தனைகளோடு நமது சிந்தனைகளை இணைத்து ஆராய்வது நமது கடமை. இந்த நூற்றாண்டில் பிறந்து வாழும் ஒருவன் லெனினியத்தை அறியாமல் வாழ்வானானால் அவன் ஓர் அறியா மகனேயாவான். அவர் தம் வாழ்க்கையில் அது குறையே! காரணம், மனித இயலை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து மனித சமுதாயத்தைப் பற்றி நிற்கின்ற துன்பங்களுக்கெல்லாம் காரணம் கண்டதோடல்லாமல் அவற்றிற்கொரு முடிவு கண்ட பெருமை லெனினியத்துக்கு உண்டு. நமது சமுதாயத்தில் வழிவழி வளர்ந்து வந்துள்ள சிந்தனைகளும்-லெனினியமும் கலந்து இணைந்த ஒரு வாழ்க்கைமுறை இன்றையத் தேவையாக இருக்கிறது. அத்தகைய வாழ்க்கைமுறை சாத்தியமாவதற்கு முன்னோடியாக நமது வழி வழி அந்த மரபுகளை லெனினியத்தோடு இணைத்துச் சிந்தனை செய்யவும், கற்கவும் வேண்டியது நமது கடமை. அந்த வகையில் இந்தக் கட்டுரை ஓர் எளிய முயற்சி.

மனிதன் இன்றியமையாது பெற வேண்டிய கருவி அறிவு. இந்த அறிவு மனிதனின் சிந்தனையில் அறிவுதோன்றி அவ்வழிக் கருத்துத் தோன்றி அவ்வழி உலகத்திற்கு விளக்கம் கிடைத்ததென்பர். இவ்வழியில் - மனிதனின் சிந்தனையை மூல முதலாகக் கொண்டே வாழ்க்கை முறைகளும் குணங்களும் தோன்றின என்பது இந்த அணியின் கருத்தாகும். இந்த உலகத்தை மானுட சமுதாயத்தின் வாழ்க்கை முறைகளைக் காணப்பெறும் - பொருள்களை முதலாகக் கொண்டு ஆராயும் முறை உலக லெனினியமாகும் அஃதாவது மனிதனின் எண்ணம் - சிந்தனை அனைத்தும் உலகின் சார்பில், அவன் சார்ந்துள்ள பொருள்களை முதலாகக் கொண்டு தொடங்குகிறது என்பதேயாகும். நமது இலக்கிய மரபும் லெனினியத்தின் வழிப்போக்கிலேயே அமைந்துள்ளது. தொல்காப்பியம் நிலவுலகத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்காகப் பிரித்தது. குறிஞ்சி, மலையும் மலையைச் சார்ந்த நிலமுமாகும். மருதம், கழனியும் கழனியைச் சார்ந்த நிலமுமாகும். நெய்தல் கடலும் கடலைச் சார்ந்த நிலமுமாகும். தொல்காப்பியம் இங்ங்னம் நிலத்தைப் பிரித்துக் கொண்ட பிறகு, அந்த நிலத்திற்கு இயைந்தவாறே மனிதனின் ஒழுக்கத்தையும் கண்டு வகுத்துக் கூறுகிறது. அதாவது, ஒழுக்கம் சார்ந்த நிலச்சார்பல்ல; நிலத்தினைச் சார்ந்த ஒழுக்கமேயாகும். அதாவது; மூலம் - சிந்தனையும் ஒழுக்கமு மல்ல; நிலத்தின் இயல்பேயாகும். ஏன்? தொல்காப்பியன் ஒருபடி வளர்ந்து வழிபடும் தெய்வத்தையும் கூட நிலத்தின் சார்பினதாக அமைத்தான். கடவுள் என்ற மூலத்திலிருந்து நிலம் தோன்றிற்று என்பதற்கு மாறாக நிலத்தின் இயல்பில் பெற்ற உணர்வுகளுக்கேற்பக் கடவுள் வழிபாடு தோன்றுவ தோடன்றி நிலத்திற்கு நிலம் மாறுபடுவதாகவும் அமைந்தது எண்ணத் தக்கது.

திருவள்ளுவரும் மனிதனின் அறிவு, அவனிடத்தில் தோன்றுவது போலத் தெரிகிறதே தவிர, அவனிடத்திலேயே மூலமாகத் தோன்றுவதில்லை என்று தெளிவாகக் கூறுகிறார். அது மட்டுமன்றி மனிதனின் அறிவு, அவன் சார்ந்திருக்கின்ற இனத்திலிருந்தே தோன்றுகிறது என்றும் கூறுகிறார்.

"மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு”

என்பது வள்ளுவம். மனத்திலிருந்து அறிவு வருவது போலத் தோன்றுவது ஒரு மாயத் தோற்றமே. மனிதனின் அறிவு அவன் சார்ந்துள்ள இனத்தின் தொடர்பிலேயே தோன்றுகிறது. இனம் என்ற சொல்லில் உலகப் பொருள்களும் அடங்கும். பொருளை முதலாகக் கொண்டு தோன்றும் அறிவே - ஒழுக்கமே உலகியல், என்ற லெனினியத்தின் கருத்து தமிழ் மரபு தழுவிய கருத்தேயாம்.
2

லெனினியம், எதையும் அறிவின் அடிப்படையில் எதார்த்த உணர்வோடு ஆராய்ந்து முடிவெடுப்பதாகும். இரண்டும் இரண்டும் நாலு என்ற விடை வருவதைப் போல எந்த ஒன்றையும் அறிவில் ஆராய்ந்து அனுபவரீதியாக முடிவெடுக்க வேண்டுமென்பது லெனினியத்தின் அடிப்படை விதி. லெனினியம், "விரிந்தும் பரந்தும் கிடக்கின்ற இந்த உலகம் இயற்கையானது” என்கிறது. இந்த உலகத்தைப் படைத்த - இந்த உலகத்திற்கு அப்பாற்பட்ட இன்னொரு சக்தி உண்டென்பதை நம்புவதில்லை. இல்லை, நம்ப மறுக்கிறது! அதோடு, "இந்த உலகம் ஒரு மாதிரியாக இல்லை; வேறுபட்டுக் கிடக்கிறது; முற்றிலும் முழுமைபெற்றுப் பக்குவமாக இல்லை. அது வளர்கிறது; மாறி வருகிறது; முற்றிலும் இன்பமாக இல்லை; துன்பக் கலப்பு இருக்கிறது. இந்தக் காரணங்களால் உலகம் இயற்கையேயாம்” என்பது லெனினியத்தின் தத்துவங்களுள் ஒன்று. -

தமிழிலக்கிய மரபுகளைப் பொருத்தவரையில் இந்த உலகம் பற்றிய கருத்து ஒரு மாதிரியாக இல்லை. காலத்திற்குக் காலம் மாறுபடுகிறது. ஒரு நூலுக்குள்ளேயே கூட இரண்டு விதக் கருத்துக்கள் பேசப்படுகின்றன. உலகம் இறைவனால் படைக்கப் பெற்றது என்ற கருத்தும் உலவுகிறது; உலகம் இறை வனுடைய திருவருள் நோக்கால் மாயையில் தோன்றியது என்பாருமுளர். இறைவனே உலகம் என்றும், உலகமே இறைவன் என்றும், பேசப்பட்டு இருக்கிறது. எது எப்படி யிருப்பினும் உயிர் வர்க்கங்கள் கடவுளால் படைக்கப் பட்டவையல்ல என்று தமிழ்ச் சமய மரபு அறுதியிட்டுக் கூறுகிறது. இங்ஙனம், தமிழிலக்கிய மரபில் பல குரல் உலகத்தைப் பற்றிய கருத்தில் ஒருமைப்பாடில்லாது போனாலும் உலகம் கடவுளால் படைக்கப்பட்டதன்று. உலகம் தானே தோன்றியது. இந்த உலகத்தின் இயக்க ஆற்றலைக் கடவுளாகவே கருதினார்கள் என்ற கருத்து லெனினியத்துக்குச் சார்பாக அமைந்திருக்கிறது. பொதுவாக இந்தக் கருத்தே வலிமை பெற்றும் வளர்ந்து வந்திருக்கிறது.

சங்கத் தமிழ் நூல் ஐங்குறுநூறு ஒரு சிறந்த இலக்கியம். ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து ஓர் இனிய பாடல்.அந்தப் பாடல்,

நீல மேனி வாலிழை
பாகத்து ஒருவன் இருதாள்
நிழற்கீழ் மூவகை உலகும் முகிழ்த்தன முறையே!

என்பது உலக உயிர்கள் பரிணாம வளர்ச்சிக்கு ஆணும் பெண்ணும் இயைந்த கூட்டு வாழ்க்கை இன்றியமையாதது. அவ்வழித் தோன்றும் உயிர்த் தோற்றமே இயற்கை அஃதில்லாத பெளராணிகத் தோற்றங்கள் அறிவியலுக்கும் ஒத்தன அல்ல; இயற்கையோடும் இயைந்தனவாகா. அத்தகைய அநாகரிகப் படைப்புகள் பேதைமைத் தன்மையின் படைப்புகளேயாம். அதனால், உலகிற்குக் கடவுளைத் தந்தையாகக் கருதிய தமிழ், அவளை மங்கை மணாளனாகக் கண்டது. ஆனால் அந்தப் படைப்பு தத்துவப் படைப்பேயாம். பருவுடல் வழிப்பட்ட பால்படைப்புமன்று கூட்டுமன்று.

இதனை மேற்கூறிய "நீலமேனி" என்ற பாடலில் "தாள் நிழற்கீழ்" என்பதால் அவன் தாளாண்மையில் தோன்றிற்று உலகம் என்றும் கூறலாம். ஆயினும், ஆசிரிய்ர் 'முகிழ்த்தன' என்று கூறுவதால் அவனுடைய தாளாண்மையால் தோன்றிற்று என்று பொருள் கொள்ள முடியவில்லை. காரணம், 'முகிழ்த்தன' என்ற சொல் தன்வினைச் சொல்லே பிறவினை அன்று. ஆதலால் உலகம் இறைவனுடைய தண்ணளியின் நிழலில் தானே தோன்றிற்று என்று கொள்ளுதலே சிறப்புடைய பொருளாகும். உலகம், தானே தோன்றிற்று என்ற லெனினியத்தோடு இந்தக் கருத்து இசைந்திருக்கிறது. தமிழ் இலக்கண நூலுள் ஒன்றாகிய புறப்பொருள் வெண்பா மாலையும் இந்த அடிப்படையிலேயே உலகத் தோற்றத்தைப் பற்றிப் பேசுகிறது. அதாவது:

"வையகம் போர்த்த வயங்கொளிநீர்-கையகலக் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வானொடு
முன்தோன்றி மூத்த குடி”

என்பது பாடல். இந்தப் பாடல் மூலம், உலகம் நீர்ப்பரப்பாக முதலில் இருந்தது. பின்பு பரிணாம வளர்ச்சியில் கல் தோன்றிற்று. கல் கரைந்தும் உடைந்தும் மண் தோன்றுதற்கு முன்பு தமிழினம் தோன்றிற்று என்று விளங்குகிறது. 'கல் தோன்றி மண்தோன்றி' என்ற சொற்களின் மூலம் தானே தோன்றிற்று என்பதே பெறப்படுகிறது. 'தோன்றுதல்' என்ற சொல்லும் தன்வினைச் சொல்லேயாம்.

அப்பரடிகள் "இறைவன் உலகத்தைப் படைத்தான்” என்று ஒரேவழி கூறியிருந்தாலும், மிகுதியாக இறைவனே உலகம் என்ற கருத்தும், உலகமே இறைவன் என்ற கருத்தும் தான் அப்பரடிகள் திருமுறையில் அதிகம் பயிலுகிறது. இறைவன் படைக்கப்பட்டவன் அல்லன். ஆதலால், உலகமே இறைவன் என்ற கருத்தால் உலகம் படைக்கப்பட்டதில்லை என்பதும் பெறப்படுகிறது. "எல்லா உலகமும் ஆனான்" என்றும், "அனைத்துலகும் ஆனானை" என்றும், "உலகமெல்லாம் ஆயவனை" என்றும், "உலகானானை" என்றும் அப்பரடிகள் அருளிச் செய்துள்ளார்கள். சிவநெறியில் சிவலிங்க வழிபாடே தொன்மை வழிபாடு. சிவலிங்க வழிபாட்டின் பரிணாம வளர்ச்சி, இறைவன் உலகமாக இருக்கிறான் என்ற அடிப்படையிலேயே தோன்றி வளர்ந்து வந்திருக்கிறது. சிவலிங்கத் திருமேனியின் ‘பாணம்' உலகத்தின் சின்னமேயாகும். இறைவன் உலகமாக இருக்கிறான் என்பதை விட அப்பரடிகள் எல்லா உலகமும் இறைவனானான்" என்றே குறிப்பிடுகிறார். ஆனால், உலகத்தை இறைவனாகக் கருதி வழிபாடு தோன்றிற்றென்றும் பொருள் கொள்ள வழியிருக்கிறது. இங்ஙனம் ஆராய்ந்து பார்க்கும் பொழுது உலகம் பற்றிய கருத்தில் லெனினியத்திற்கும், தமிழிலக்கிய மரபிற்கும் மிகுதியும் முரண்பாடில்லை.

3

உலகம் படைக்கப் பட்டதன்று; இயற்கையானது என்ற செய்தியை முன்னால் ஆராய்ந்தோம். அந்த வகையில் லெனினியத்துக்கும் தமிழ் மரபுக்கும் முரண்பாடின்மையையும் கண்டோம். ஆயினும், இந்த உலகத்தின் இயக்கம்மாறுதல்-வளர்ச்சி ஆகிய தொழிற்பாடுகளைப் பற்றி நாம் ஆராய வேண்டியதிருக்கிறது. இந்த உலகத்தின் தொழிற் பாட்டில் ஓர் ஒழுங்கும். முறை பிறழாத நிகழ்ச்சியும் இருப்பதைக் காண்கிறோம். இந்த ஒழுங்கு முறை உலகத்திற்கு எப்படிக் கிடைத்தது? அஃதும் இயற்கையா? உலகம் சடப்பொருளா? அல்லது உயிர்ப் பொருளா? அல்லது இரண்டும் கலந்த பொருளா? சடப்பொருளுக்கு மாறுதலும் வளர்ச்சியும் உண்டா? என்ற ஏராளமான வினாக்களுக்கு விடை காண்பதில் உலகிடை நிலவும் தத்துவங்கள் அனைத்தும் முரண்படுகின்றன. சிசிரோ என்ற பேரறிஞன், இந்த உலகத்தின் நிகழ்வு முறைகளில் மனிதனுடைய சக்திக்கு அப்பாற்பட்ட செயல்முறைகளைப் பார்க்கிறோம். உலகத்தின் நிகழ்வுகளில் ஒரு மாறா முறை வழிப்பட்ட நிகழ்ச்சியையும் (order) ஒழுங்கு பெறாத நிகழ்ச்சியையும் (inconsistent) பார்க் கிறோம். நிச்சயமாக இவைகளுக்கு மனிதன் காரணமாக இருக்க முடியாது. மனிதனை விட மேம்பட்டதொன்றாகத் தான் இருக்க வேண்டும். அது கடவுளையன்றி வேறுயாதாக இருத்தல் கூடும்? என்று கூறுகிறார்.

பகுத்தறிவு படைத்த மனிதனைவிட இயற்கை ஒரு வகையில் ஒழுங்காகவே இயங்குகிறது. அதீதமாகச் சில சந்தர்ப்பங்களில் இயற்கையின் சீற்றத்தால் துன்பங்கள் விளையினும், பொதுவாக இயற்கை அழகாக இருக்கிறது. ஆக்கப்பாடுடையதாக இருக்கிறது; உயிரினங்கள் பலவற்றிற்கும் வாழ்வளிக்கிறது. இயற்கையின் எழில் தோற்றத்திலும் அதன் விளைவுகளை நுகர்தலிலும் உயிரினம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. நாட்காட்டிகள் கடிகாரங்கள் முதலியன வைத்தறியாத இயற்கையுலகம் காலந் தவறாது செயற்படுகிறது! கதிரொளி தெரிகிறது! மரங்கள் பூக்கின்றன; காய்க்கின்றன; கனி தருகின்றன! இவை நிகழ்வதில் ஒரு குறிப்பிட்ட கால அமைப்பு முறையிருக்கிறது. இந்த முறைகளும் மாறுபடவில்லை. காலந்தாழ்த்தி அலுவல்கள் செய்யும். அதுவும் கடிகாரம் கட்டிய மனிதனைப் பார்க்கிறோம். ஆனால் ஞாலத்து நிகழ்வுகளில் காலத் தாழ்ச்சியில்லை. இத்தகைய வியத்தகு முறைகளுக்கு எது அடிப்படை? இயற்கையின் இயல்பா? உலகத்தின் உள்ளீடமா? அல்லது உலகத்திற்கு உயிர்ப்புத் தன்மை யுண்டா? அல்லது மனிதன் இயக்குகின்றானா? அல்லது கடவுள் இயக்குகின்றானா என்பதைத் தொடர்ந்து ஆராய்வோம்.

4

நம்முடைய ஆய்வில் மிகவும் சிக்கல் நிறைந்த பொருள் ஆன்மா. அதாவது உயிரைப் பற்றியதாகும். லெனினியம் உயிர் சம்பந்தப்பட்ட செய்தியில் நம்முடைய தமிழ் மரபோடு முரணி நிற்கிறது. உடலுக்கு அப்பாற்பட்ட உயிர் ஒன்று இல்லையென்பது லெனினியத்தின் கோட்பாடு. ஆனால் தமிழ்மரபு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உயிர் என்ற தனிப் பொருளை ஒத்துக் கொண்டே வந்திருக்கின்றது. இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய திருவள்ளுவர் உடம்பும் உயிரும் வெவ்வேறானது என்றே குறிப்பிடுகிறார். காதலன் - காதலி இடையே இருக்கும் உறவுக்கு உவமை கூற வந்த திருவள்ளுவர் உடம்பொடு உயிரிடை நட்பை உவமை காட்டினார்.

"உடம்போ டுயிரிடை யென்னமற் றன்ன
மடந்தையோ டெம்மிடை நட்பு"

என்பது குறள், காதலன் - காதலி இவ்விருவரிடையே ஏற்படுகிற உறவுக்கு. உடம்புக்கும் உயிருக்கும் இருக்கும் நட்பை உவமையாகக் காட்டினார். இதிலிருந்து உடலும், உயிரும் வெவ்வேறு என்பது தெளிவாகிறது. அது போலவே,

"குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு"

என்ற திருக்குறளும் உடம்பையும் உயிரையும் வேறு வேறாகக் காட்டுகிறது. ஆதலால் உடம்பே உயிரல்ல; உடம்பின் இயங்கு சக்தியும் உயிரல்ல. உடம்பில் தங்கியிருந்து பணிகளைச் செய்வது உயிர்.

உயிர்கள் நிலை பெற்றவை. உயிர்களுக்குப் பிறப்பும் இறப்பும் இல்லை. உயிர்களைக் கடவுள் படைக்கவும் இல்லை. உயிர்கள் என்றும் நிலைபேறான தன்மையுடையன என்பது தெளிவாகிறது. புறநானூற்றுக் கவிஞர்.

"மன்னா வுலகத்து மன்னுயிர்”

என்று பாராட்டுகிறார். திருவள்ளுவரும்,

"மன்னுயி ரோம்பி அருளாள்வார்க் கில்லென்ப

தன்னுயி ரஞ்சும் வினை"

"தம்மில் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது"
என்று கூறியுள்ள குறள்களில் மன்னுயிர் என்றே குறிப்பிடுகிறார் மன்னுயிர் என்றால், நிலைபேறான தன்மையுடைய உயிர் என்றே பொருள்படும். ஆதலால், உயிர்கள் உடம்பைக் கருவியாகக் கொண்டே வாழ்ந்து கடமைகளைச் செய்கின்றன என்பது பெறப்படுகிறது. உடம்பு என்ற சொல்லிலும் "உடு” என்ற முதனிலைச் சொல் உயிர் எடுத்துக் கொண்ட உடையே உடம்பு என்பதைத் தெளிவாக விளக்குகிறது. உயிர் உடம்பினைக் கொண்டு தன்னுடைய மேம்பாட்டுக்குரிய கடமைகளை செய்கின்றது என்பதே தமிழ்க் கருத்து. உயிர் என்றும் உள்பொருள் என்றே தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் ஒரு முகமாகக் கூறுகின்றன. தாயுமானவரும்.
"என்றும் நீ அன்று நான்”

என்றார். அதாவது தோற்றத்தால் உயிரும் கடவுளும் ஒன்றற்கொன்று பிந்தியது மல்ல; காலத்தால் ஒத்த இயல்புள்ளவை என்று கூறுகிறார்.

ஆதலால் உயிர் என்றும் உள்பொருள். அதற்குப் பிறப்புமில்லை; மறைவுமில்லை என்பது தெளிவாகிறது. அந்த உயிர் கடவுளைப் போல கால எல்லைகளைக் கடந்தது. அந்த உயிர் உடலைக் கருவியாகக் கொண்டு இயங்குகிறதே தவிர உடலுக்கு உயிர்த் தன்மை இல்லை. உடலுக்கு உயிர்த்தன்மை உண்டெனக் கூறும் நெறி தமிழ் நெறியல்ல. உயிர் பிரிந்த வழி உடல் உயிர்ப்பின்றி - பேச்சின்றிப் பிணமாகக் கிடப்பதைப் பார்க்கிறோம். உடலே உயிராக இருக்குமாயின் இந்த அவல நிலை ஏன்? ஆதலால், உயிரை உள்பொருள் என்று ஒத்துக் கொண்டு அந்த அடிப்படையில் மேலும் லெனினியத்தை ஆராய்வோம். உயிரைப் பற்றிய தெளிவான முடிவு ஏற்பட்டாலே லெனினியத்தின் முழு வடிவத்தை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
5

உயிர் பற்றிய கொள்கையில் பெளத்த நெறி சற்று வளர்ந்த கொள்கையைக் கண்டது. அதாவது, இவ்வுடம்பின் வேறாய் எல்லாவற்றையும் அறிவதாகிய அறிவு உண்டு எனக் கொண்டு, அறிவை ஒத்துக் கொண்டது. ஆனால் உயிர் உண்டென்ற கொள்கை பெளத்தத்திற்கு இல்லை. அறிவு என்பது ஐம்பொறிகளுக்கும் புலப்படுவதில்லை. அறிவு, ஓர் அனுபவத்தின் மையம். "யான். இதனைக் கண்டறிந்தேன்"என்றும், "கேட்டறிந்தேன்” என்றும், “சுவைத்தறிந்தேன்" என்றும், "நுகர்ந்தறிந்தேன்” என்றும், “தொட்டறிந்தேன்" என்றும் கூறுவதனால், அறிவதை அனுபவமாகவும், அந்த அனுபவத்தை கொண்ட உயிர் ஒன்று தனியே உளது என்பது பெறப்படுகிறது. "யான்" என்றும் "எனது” என்றும் உரிமை கொண்டாடுவதே உயிர்தானே! "யாம் அறிவதில்லை. அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற" என்ற திருக்குறளில் "யாம்" என்று சுட்டிக்கொண்ட ஓர் உயிர்க்கு அறிவு என்ற அறிதற் கருவி துணை நின்று தொழிற்படுவதே பெறப்படுகிறது.

திருவள்ளுவர் தமது திருக்குறளில் அறிவை உடைமை யாகப் பேசுகிறார். "அறிவுடையார் எல்லாம் உடையார்” என்பது குறள். உடைமை என்றதனாலேயே உடையவன் ஒருவன் உண்டென்பது வெளிப்படையான உண்மை. உயிர்க் குரிய பண்பாகும். "நான் அறிந்தேன்” “என்னறிவு" என்னும் வழக்கில் "நான்” என்பதொரு பொருளும், அதனோடு ஒற்றுமைப்பட்ட அறிதற் பண்பும், உணரத்தக்கன.அறிவு, ஒரு பண்பேயன்றிப் பொருளாகாது. உடம்புடன் பொறிகளும் மனமுமே உயிர். "உயிரெனத் தனியே வேறொரு பொருளில்லை" என்பது பெளத்தம். உடல் உறக்கத்தில் கிடக்கும் பொழுது அறிவு விளங்குவதில்லை. உறக்கத்தின் போது அறிவு செயற்படுதலுமில்லை ஏன்? பல சமயங்களில் அறியாமையோ என்று கருதக்கூடிய சில செயல்களும் நிகழ்கின்றன. உடலும் பொறிகளும் அவை தம் முன் முரண்பட்டு, ஒன்று அறிந்ததைப் பிறிதொன்று அறியாது குழப்பத்தை விளைவிக்கின்றன. கண், ஒளியை அனுபவிக்கிறது.

ஆனால், அதே ஒளியைச் செவி அனுபவிப்பதில்லை. செவி, இசை ஒலியைக் கேட்டு அனுபவிக்கிறது. கண், அந்த ஒலியைக் கேட்டு அனுபவிப்பதில்லை. இந்தப் பொறிகள் நுகர்தலிலும் சரி, தமக்கு ஒதுக்கப்பட்ட களங்களிலும் சரி, ஒரு வழிபட்ட குறையுடைய அறிவையே பெற்று விளங்குகின்றன. பூரணத்துவம் இல்லை. உயிர், மனத்தினும் மாறுபட்டது. உயிர் ஒன்றே, இந்த ஐம்பொறிகளாலும் பெறும் இன்பத்தை முற்றிலும் முழுதுமாக ஈடுபட்டு அனுபவிக்கிறது ஒரு விளக்கு, தன்னைச் சூழ்ந்திருக்கின்ற பொருள்களைக் காட்டித் தன்னையும் காட்டிக் கொள்வது போலச் சித்தத்தையும், பிறிது உண்டாயவற்றையும் அறிவித்துத் தன்னையும் அறிவித்து நிற்கும் என்று கூறின், உருவங்கள் முதலிய பொருள்களையும் அவற்றைக் காட்டி நிற்கும் விளக்கையும் கண்டு நிற்கும் கண்போல சித்தத்தையும் விடயத்தால் அறியும் இந்திரியங்களையும் உணர்வான் ஒருவன் தனியே உண்டென்று அறிதல் வேண்டும்.

இன்னும் ஒருயிர் நெறியினர் (ஏகான்ம வாதிகள்) உயிரை பற்றி விசித்திரமாக விளக்கம் கூறுவர். "அறிவுடைய உயிர் ஒன்றே, உடம்புகள் தோறும் வேறு வேறாய்க் காணப்படுகின்றது” என்பது அவர்தம் கொள்கை குடங்கள் தோறும் வேறு வேறாய்த் தோன்றும் திங்களின் வடிவு. அக்குடங்கள் உடைந்த வழி குடங்கள் தோறும் இருந்த திங்கள்தான் இல்லையாகித் திங்கள் ஒன்றுமே நிலைபெறுகிறது. அது போல, இவ்வுடம்புகளெல்லாம் போயவிடத்து, உயிர் ஒன்றேயாக இருக்கும் என்பதும் ஒரு கொள்கை. இந்தக் கருத்தும் உவமையும் நேரியதன்று. திங்களினிடத்துக் காணப்படும் ஒளி வடிவும், வட்ட வடிவும் அதன் நிழல்கள் எல்லாவற்றினும் காணப்படுதல் போல, ஒருயிரினிடத்துக் காணப்படும் அறிவும் செயலும் ஏனைய உயிர்களிடத்தும் காணப்படுதல் வேண்டும். இங்ஙனமின்றி அவை, ஒவ்வோரிடத்திலும் ஒவ்வொன்றாகப் பல தரப்பட்டு நிகழக் காண்டலால், "உயிர் ஒன்றே" என்னும் முறை சிறிதும் பொருந்தாது. தண்ணிரின் அசைவால், தண்ணீரில் தெரியும் திங்களின் நிழலும் அசைவது போல் தோன்றினும் திங்களுக்கு அந்த அசைவில்லை. அதுபோல உடம்பின் வினைகளால் உயிருடம்பின் உள்ளிருக்கும் உயிர், துன்புறுதல் தோன்றினும் ஒன்றே யாய அவ்வுயிர்க்கும் இயற்கையில் அவ்வினைத் தொடக்கு இல்லை. ஆயின், இந்த உவமை பொருந்தாது. உயிரின் சேர்க்கையின்றி உடம்பு ஒரு வினை செய்ய இயலாது.

6

உயிரைப் பொருத்தவரையில் நமது நாட்டு உலகாயத வாதம் கூறுகின்ற கொள்கைகளும், லெனினியத்தின் கொள்கைகளும் உடன்பாடுடையன. அதாவது, உடலின் வேறாய் உயிர் என்ற ஒன்று இல்லையென்பதாகும். இங்ஙனம் அவர்கள் கூறுவதற்கு அடிப்படைக் காரணம் அல்லது அடிப்படையானது, "கண்ணால் காணக் கூடியன-மட்டுமே உண்மை. மற்றைய எல்லாம் பொய்" என்ற கோட்பாடாகும். ஆய்வுக்கு அடிப்படையான இந்த அடிப்படைக் கோட்பாட்டிலேயே தவறு இருக்கிறது. உலகம் பரந்து பட்டது. அனைத்துலகத்தையும் அல்லது அனைத்துலக இயல்புகளையும், ஒரு பொறியால் கண்டு அனுபவித்தல் அல்லது உணர்தல் என்பது அருமை. அது எளியதல்ல என்பது மட்டுமன்று, இயலாததுமாகும்.

அதோடு உலகிடை நிலவும் பல்வேறு பொருள்களுக்கும் ஓரியல்புமட்டும் உரிமையன்று பல்வேறு இயல்பு களுண்டு. அப்பல்வேறு இயல்புகளையும் ஒரே நேரத்தில் - ஒரு பொறியால் அனுபவித்தல் இயலாது. அப்பொருளின் பல்வேறு இயல்புகளில், பல்வேறு பொறிகளும் தனித்தனியே தன்னியல்புக் கேற்றவாறு கலந்து, ஒரே பொருளில் ஒன்றிக் கலந்து அனுபவிக்கும் பொழுதே, அனுபவம் தோன்றுகிறது; வாழ்க்கை சிறக்கிறது. இன்பத்திற்கும் இந்த இயல்பு உண்டு என்று, பெருமக்கள் கூறியுள்ளனர்.

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள

என்பது திருக்குறள்.

பெண் ஒரு பொருள்தான். ஆனால், வேறு வேறு இயல்பு பெண்ணுக்கு உண்டு. ஐம்பொறிகளும், தனித்தனியே அந்தப் பெண்ணின் ஓரியல்பைத்தான் அனுபவிக்க முடிகிறது. ஒரு பொறிக்கு ஓரியல்பு அனுபவத்திற்கு வாரமையின் அந்த இயல்பு இல்லையென்றோ, பொருளில்லை என்றோ கூறமுடியாது. ஏன்? அறிவையே கூட நேரடியாகக் காணமுடியாது. அறிவை, செயற்பாடுகளிலேயே காண முடியும், மணம் கண்ணால், பார்க்கக் கூடிய ஒன்றன்று. மூக்கால் நுகர்ந்து அனுபவிக்கக் கூடியதே. மணம், கண்ணால் பார்க்கக்கூடியதின்மையின் காரணமாக இல்லையென்று கூறமுடியாது ஏன்? உயிரியலில் இன்றியமையாத் தேவையாகிய காற்றே கண்ணின் காட்சிக்கு வருவதன்று. ஒரு பொருள் உள்பொருளா? இல்பொருளா? என்பதை ஒரு பொறியினைக் கொண்டு அளந்து கூறுதல் கூடாது.

ஐம்பொறிகளாலும் கண்டு ஆராய்ந்து, ஐம்புலன் களாலும் கண்டுணர்ந்து, அவைகளுக்கும் மேலாய அறிவாலும் ஆராய்ந்து முடிவெடுத்தலே ஏற்புடையதாகும். கட்புலனுக்கும் பருப்பொருள்கள் மட்டுமே காட்சிக்கு வரும், அடுத்து, வண்ணமும் ஒளியும் காட்சிக்கு வரும். சில மெய்ப்பாடுகளும் கட்புலனுக்கு வருதல் கூடும். துண் பொருள்களும் பெரும்பாலான தன்மைகளும் அல்லது குணங்களும், உணர்வுகளும் கட்புலனுக்கு வாரா. ஆதலால் கண்ணால் காண்பன மட்டுமே, உண்மையென்ற அடிப்படையே குறைவுடையதாகும்.

உலகாயத அடிப்படையில் உடலுக்கு வேறாக உயிரை நம்புவதில்லை. இந்த உடலுக்கு முந்தியதாகவோ, அல்லது பிந்தியதாகவோ யாதொன்றும் இல்லை. அதாவது உயிர் இல்லை என்பதே அவர்கள் கோட்பாடு, உயிரும், உடலும் ஒன்றே என்பது இக்கொள்கை. "ஐம்பூதக் கூட்டினாலாகிய (நிலம், நீர், தீ, வளி, ஆகாயம்) இந்த உடம்பு தோன்றும் பொழுதே, அந்தக் கூட்டின் விளைவாக, உடலுக்கு உணரும் சக்தியும், சிந்திக்கும் சக்தியும் கிடைக்கிறது. அந்த இயக்கத்திற்கு அறிவு உண்டு; உணர்வு உண்டு” என்பதே இக்கொள்கை. "இந்தப் பொருட்சார்பு வலிமை குறையும் பொழுது, அந்த ஆற்றலும் குறைந்து போகின்றது. பின் மரணம் வருகிறது” என்பதும் அக்கொள்கை, அதற்கு அவர்கள் எடுத்துக் காட்டும் உதாரணம் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றின் கூட்டு ஏற்படும் பொழுது ஏற்படும் சிவப்பு வண்ணம் போல இந்தப் பூதங்களின் கூட்டால் உணர்வு ஏற்படுகிறது என்பதே. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இவற்றின் கூட்டால் ஏற்படும் வண்ணம் நிலத்திற்கு நிலம், இனத்திற்கு இனம், மொழிக்கு மொழி வேறுபாடுடையதாக இருப்பதில்லை என்பதை உணராதது ஏனோ? வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பை குப்பன் கூட்டினாலும், குப்புசாமி சாஸ்திரி கூட்டினாலும், குவின் கூட்டினாலும், குயின்டாங் கூட்டினாலும் வண்ணம் ஒரு தன்மைத்தே. வேறுபாடுகள் இல்லை. அது போலவா, மனிதனின் சிந்தனை இருக்கிறது? உணர்வு இருக்கிறது: ஓரிடத்தில் பத்துப்பேர் இருந்து வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு போட்டால், வண்ணம் ஒன்றேயாம். ஆனால், அந்தப் பத்துப் பேரின் உணர்வு ஒன்றல்ல, அது மட்டுமின்றிக் காலத்திற்குக் காலம் இந்த வண்ணம் வேறுபட்டதாகவும் வரலாறு இல்லை. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பைக் கூட்டக் கற்றுக் கொண்ட காலம் முதல், இன்று வரையில் வண்ணத்தில் வளர்ச்சியுமில்லை, மாறுதலுமில்லை, மனிதவுயிர்கள் அப்படியா வாழ்ந்து கொண்டிருக்கின்றன? என்ற வினாவுக்கு இதுவரையில் விடை கிடைக்கவில்லை.

7

மேலும், உயிர்த் தொகுதிகளுக்கிடையில் எண்ணத் தொலையாத வேறுபாடுகள் இருக்கின்றன. நாம் இங்கு வேறுபாடுகள் என்று சொல்லும் பொழுது, இயற்கையில் உள்ள வேறுபாடுகளையே குறிக்கின்றோம். செயற்கை வேறுபாடுகளை யல்ல, ஆண் பெண் என்ற பால் வேற்றுமை இயற்கை புழு-பூச்சி என்ற வேறுபாடு இயற்கை பறவைவிலங்கு என்ற வேறுபாடு இயற்கை மாடு-மரம் என்ற வேறுபாடு இயற்கை. இத்தகைய வேறுபாடுகளுக்கு அடிப்படை என்ன? மேலும் அறிவு, ஆற்றல் இவைகளில் வேறுபாடுகள் இருப்பதைக் காண்கிறோம். இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன? பிறந்த நாள்தொட்டு பெருநெறி பற்றி ஒழுகியவர்கள் துன்புறவும், சிறுமையே செய்தவர்கள் மகிழவும் காண்கின்றோம். இதற்குக் காரணம் என்ன?

இந்த வினாக்களுக்குச் சமயநெறியைச் சார்ந்தோர்கள் முற்பிறப்பின் புண்ணிய பாவத்தைக் காரணமாகக் காட்டுவார்கள். உலகாயத நெறியைச் சார்ந்தவர்கள் முற்பிறப்பு-பிற்பிறப்பு இவைகளை நம்புவது இல்லை. அங்ஙனம் கூறுவது சமயநெறியாளர்களின் மயக்கம் நிறைந்த செயல் என்றே கூறுகின்றனர். சமயிகளுடைய இந்தக் கூற்று, "முயற்கொம்பிலேறி ஆகாயப் பூவைப் பறித்தல்" என்ற கூற்றில் எவ்வளவு பைத்தியக்காரத்தனம் இருக்கிறதோ அவ்வளவு பைத்தியக் காரத்தனம் இதிலும் இருக்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் திரும்பவும் கேட்கிறார்கள். "நமது கையில் ஐந்து விரல்கள் இருக்கின்றன. இந்த ஐந்து விரல்களும் ஒரு மாதிரியாக இல்லை, ஒன்று நீண்டும் பிறிதொன்று குட்டையாகவும் நம்முள், வேறுபட்டிருக்கின்றன. இதற்குக் காரணம் என்ன? என்று இந்த வினாவுக்கு விடைசொல்வது மிகவும் சுலபம். ஐந்து விரல்களும் சடப்பொருள்கள். விரல்களுக்கு உயிர்ப்பில்லை, இயக்கினால் இயங்கும் தன்மையன. ஆனால் உயிரோ, உயிர்ப்பாற்றல் உடைய ஒரு பொருளாக இருக்கிறது. நாம் நீளம், அகலம், எடை போன்ற அளவுகளாலாய வேறுபாடுகளைப் பற்றி அவ்வளவாகக் கவலைப் படவில்லை. இந்த வேற்றுமைகள், அவர்கள் கூறுவது போல இயற்கையாகவேயானாலும் ஆகட்டும். இங்கு நாம் உயிர்த் தொகுதிகளுக்கிடையே உள்ள வேற்றுமை யென்று எடுத்துக் கொண்டது. உயிர்ப்பாற்றல்-உணர்வில் அறிவில் துய்ப்பாற்றில் உள்ள வேறுபாடுகளேயாம் உயிர், தன்னிகரற்ற உயிர்ப் பாற்றல் உடையது. அதற்கொரு சான்று இதோ!

ஒன்றரை, ஒன்றரை, ஒன்றரை அடிப்பரப்பள வுள்ளதும் இருபத்தைந்து பவுண்டுக்குக் குறையாத எடையுள்ளதுமான ஒரு பாராங்கல்லை ஒரு கட்டைவிரல் பரிணாமமேயுள்ள ஒரு வேர் கல்லித் துக்கித் தள்ளுகிறது. நிச்சயம் உருவக்காட்சியில் பாராங்கல்லே பெரியது. வேரோ சிறியது. ஆனால், இந்த வேர் எப்படிக் கல்லைக் கெல்லித் தூக்குகிறது? இந்த உயிர்ப்பாற்றலும் கூட உயிர் வர்க்கத்தினிடையில் அளவில் கூடியும் குறைந்தும் இருப்பதைக் காண்கிறோம்.

புலிக்கும் புழுவுக்குமிடையில் உள்ள உயிராற்றல் தன்மை ஒரு மாதிரியானதல்ல; வேறுபட்டுக் கிடக்கிறது. அது போலவே, ஆணின் ஆற்றல்களும் நுகர்வுப் புலன்களும், உணர்வுகளும் பெண்ணின் இயல்புக்கு முரண்பட்டன. இம்முரண்பாடு இல்லையாயின் கவர்ச்சியுமில்லை; வாழ்க்கையுமில்லை. இந்த வேறுபாடுகளையும் வெறும் சுபாவம் என்று மட்டும் கூறமுடியுமா? என்பது ஆய்வுக்குரியது.
15. அருள்நெறி இயக்க வளர்ச்சி

தமிழகம் தெய்வ மணம் கமழும் திருநாடு. இறை மணம் கமழும் இன்பத் திருநாடு, அருமைத் தமிழும் அருள்நெறியும் இணைந்து வாழ்ந்த தமிழ்நாடு. இத்தகைய திருநாட்டில் இடைக்காலத்தில் சமயத்திற்கு எதிரிடையான கருத்துக்கள் பரவலாயின. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற உலகாயத நெறி தலையெடுத்தது. கடவுள் ஏது, அது வெறும் கற்பனை, மனப் பிராந்தி, திருக்கோயில்கள் எதற்கு? என்பன போன்ற நச்சுக் கருத்துக்கள் நாட்டிலே நடமாடத் தொடங்கின. இது எதிர் முகாம்நிலை. உடன்பாட்டுத் துறையிலும் கூட சமய உணர்ச்சியும், அனுபவமும், நிகழ்ச்சிகளும் அகலமாக இருந்தனவேயொழிய ஆழமாக இல்லாது போயிற்று. வாழும் சமுதாயத்தோடு தொடர்பு கொள்ளத் தக்கதாக சமயம் உயிரூட்டத்தோடு இல்லை, இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டில் தீய சக்திகள் வளரலாயிற்று. இதனை எண்ணி வருந்திய சில அன்பர்கள் சமய வளர்ச்சிக்கென ஒரு முறையான விரிந்த அளவில் ஒரு இயக்கத்தைக் கண்டு வேலை செய்ய வேண்டும் என்று எண்ணினர். திருவருளும் கூட்டுவித்தது. இந்த எண்ணத்திற்கு ஒரு புதிய வேகத்தைக் கொடுப்பதற்காகவே போலும் திராவிட கழகத்தலைவர் இராமசாமிப் பெரியார் அவர்கள் திருச்சியில் நடந்த தமது கழக மாநாட்டில் திருக்கோயில் திருவுருவங்களை உடைப்பதெனத் தீர்மானம் செய்தனர். முன்னைய எண்ணத்திற்கு இத் தீர்மானம் அதிக வலுவூட்டியது. இதன் பலனாக குன்றக்குடியில் 10-8-52-இல் நூற்றுக்கணக்கான அன்பர்கள் கூடினார்கள். அன்றே அருள்நெறித் திருக்கூட்டம் தொடங்கப் பெற்றது.

வேலைத் திட்டம்

சமயக் கருத்துக்களைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு விரிந்த எல்லையில் கிராமங்கள், நகரங்கள் வாரியாக கிளை நிறுவனங்கள் அமைத்துப் பிரசாரம் செய்தல், சமயக் கருத்துக்களை மக்கள் கொள்ளும் வகையில் சிறந்த முறையில் விளக்கிச் சொல்லுவது, உழவாரப் பணி செய்தும் இயன்ற சிறு பணிகளைச் செய்தும் சிறிய கோயில்களைக் காப்பாற்றுதல். ஊர்தோறும் கூட்டு வழிபாட்டு முறையினை வளர்த்தல், சமுதாய நலத்திற்குரிய பொதுநலத் திருப்பணிகளில் ஈடுபட்டு சமுதாயத்திற்கும் சமயத்திற்கும் நெருங்கிய சம்பந்தத்தை உண்டாக்க முயற்சித்தல் இவைகளையே நோக்கமாகக் கொண்டு அருள்நெறித் திருக்கூட்டம் தொடங்கப் பெற்றது.

எங்கும் எழுச்சி நிறைந்த காட்சி

செயலற்ற, உறங்கிக் கிடந்த சமய உலகத்திற்கு அருள்நெறித் திருக்கூட்டத்தின் தோற்றம் ஒரு புதிய எழுச்சியைத் தந்தது. தமிழகத்தின் மூலை முடுக்குகள் எல்லாம் அருள்நெறிச் செய்தி பரவியது. நாள்தோறும் சிற்றுார் முதல் பேரூர் வரையிலும் நூற்றுக்கணக்கான மேடைகள் போடப்பட்டன. ஆங்காங்கு அருள்நெறி அறிஞர்களும் ஊழியர்களும் சிறந்த முறையில் மக்கள் முன்னே சமயத்தை எடுத்து வைத்தனர். பத்துப் பன்னிரண்டு பேர்களுக்கு மேலே கூடாது இருந்த சமய பிரசார மேடைகள் மக்கள் வெள்ளத்தைக் காணத் தலைப்பட்டது. இயக்கம் எதிர்பார்த்த அளவுக்கு மேலாகவே சிற்றுார் முதல் மாவட்டம் வரையில் கோபுரம் என் உயர்ந்து வளர்ந்தது. ஏன்? கங்கைக் கரை சீமை முதல் கன்னியாகுமரி வரையிலும் இயக்கம் கால் கொண்டது. தமிழர்கள் வாழும் ஈழத்திலும், மலேயத்திலும் இயக்கம் இடம் பெற்று வளர்ந்தது. மற்ற எந்த இயக்கமும் காணமுடியாத அளவுக்கு ஒரு மகத்தான வெற்றியை-புகழை இயக்கம் அடைந்தது.

வழிபாட்டு முறையில் வளர்ச்சி

திருக்கூட்டம் முக்கியமாக கருதிச் செய்த தொண்டு மக்களைத் திருக்கோயில் வழிபாட்டு முறைகளில் அழைத்துச் செல்வதேயாகும். எங்கு பார்த்தாலும் கூட்டு வழிபாட்டு இயக்கங்கள் தொடங்கப் பெற்றன. இளைஞர்கள் முதல் பெரியோர்களும் ஆர்வம் நிறைந்த உள்ளத்துடன் ஆங்காங்கு வழிபாட்டு இயக்கத்தில் ஆர்வத்தோடு பங்கு கொண்டனர். அது மட்டுமன்றி ஈரோடு போன்ற நகரங்களில் உள்ள திருக் கூட்ட ஊழியர்கள் ஞாயிறு தோறும் அயல் இடங்களுக்குச் சென்று வழிபாட்டு வளர்ச்சியை மக்களிடையே வளர்க்கும் திருப்பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆண்டுதோறும் கால்நடை யாத்திரையாகவும் பல ஆண்களும் பெண்களும் பல சிற்றூர்களுக்கும் பேரூர்களுக்கும் நடந்தே சென்று திருத்தல யாத்திரை செய்து கிராமங்களிலும் நகரங்களிலும் ஒரு பெரிய எழுச்சியை உண்டாக்கினர். எங்கும் திருவாசக விழாக்கள் எடுக்கப் பெற்றன. தமிழ்நாட்டில் ஆயிரக் கணக்கானவர்கள் திருக்கோயிலுக்குச் செல்லும் உணர்ச்சியையும் திருவாசகம் படிக்கும் உணர்ச்சியையும் பெற்றனர் என்பது மிகையன்று. 1952-இல் மாத்திரம் திருவாசக சிவ புராணப் பிரதி மட்டும் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பிரதி களுக்கு மேல் விற்பனையாயிருக்கிறது என்று சொன்னால் இயக்கத்தினுடைய எதிரொலி நாம் புரிந்து கொள்ளக் கூடியதேயாகும். இன்னும் ஆங்காங்கு நடைபெறுகின்ற கூட்டு வழிபாட்டு இயக்கங்களில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.

திருக்கோயில் திருப்பணி

இங்ஙணம் வழிபாட்டுத் துறையில் ஆர்வத்தோடு வேலை செய்த இயக்கம் ஆங்காங்கு கவனிப்பாரற்றுக் கிடந்த திருக்கோயில்களின் மீது கவனம் செலுத்தியது. ஆங்காங்கு ஊழியர்கள் உழவாரப் பணியைச் செய்து, செடி கொடிகள் முளைத்து, அதன் மூலம் சிதைய இருந்த திருக்கோயில்களைக் காப்பாற்றினர். மதுரையில் இம்மையில் நன்மை தருவார் திருக்கோயிலில் ஆண்டுகள் பலவாகத் தூர்ந்து கிடந்த திருக்குளத்தைச் சுத்தம் செய்த திருப்பணி தமிழகம் மறக்க முடியாததொன்று. நூற்றுக்கணக்கான படித்த இளைஞர்கள், பெரியவர்கள் தாங்களே தட்டும் மண்வெட்டியும் தாங்கி, சேறும் சகதியும் அள்ளிக் கொட்டிய காட்சி அரிமர்த்தன பாண்டியன் காலத்தில் வைகைக்கு அணை கோலிய காட்சி போலவே இருந்தது. இதனையொட்டி அத்திருக்கோயிலும் அருள்நெறித் தொண்டர் கழகத்தின் முயற்சியால் பல அன்பர்களின் பேருதவி கொண்டு சுற்றுப் பிரகாரங்கள் தளவரிசை முதலியன இடப்பெற்று சிலரே வந்து கொண்டிருந்த கோயில் இன்று பலர் வரும் திருக்கோயிலாக மாறியது. இது போலவே மாணிக்கவாசகப் பெருமான் அவதரித்த திருவாதவூர் திருத்தலத்திலும் நமது ஊழியர்கள் 1952-ஆம் ஆண்டில் உழவாரப் பணிசெய்து திருவாசக விழாவும் நடத்தினர். அந்த எழுச்சியின் பயனாக நமது இயக்க அன்பர்கள், ஊழியர்கள் முயற்சியால் அத்திருக்கோயிலுக்கு மின்விளக்கு அமைக்கப்பட்டது. அதிலிருந்து தொடர்ச்சியாக அக்கோயில் முழுமையும் திருப்பணியாகும் அளவுக்கு வளர்ந்தது. அது போலவே திருநாவுக்கரசு சுவாமிகள் பல ஆண்டுகள் தங்கி உழவாரப் பணி செய்த திருப்பூந்துருத்தி திருநாவுக்கரசர் திருமடம் கவனிப்பாரற்றுப் பாழாகத் தொடங்கிற்று. அங்கும் நமது ஊழியர்கள் உழவாரப் பணி தொடங்கி அத்திருமடத்தை (காலியிடத்தை) கூட்டித் துப்புரவு செய்து, அயறாது திருப்பணி செய்தனர். தமிழகத்தின் தனி சமயத் தலைவராக திருத்தொண்டின் நெறி வாழ வந்த திருநாவுக்கரசப் பெருமான் வாழ்ந்த இடமிருந்த கேவல நிலை எண்ணிப் பார்த்த ஒவ்வொரு வரையும் வேதனைக்குள்ளாக்கியது. அதிலும் எண்ணத்தின் இதயக் குமுறல் பயனையே தந்தது. தற்பொழுது அத்திருமடம் புதுப்பிக்கும் திருப்பணி நடந்து வருகிறது. ஒருநாள் இரவு பத்து மணியிருக்கும். கும்பகோணம் அரசலாற்றங்கரையில் தனியாக உட்கார்ந்திருந்தோம். சில இளைஞர்கள் அவ்வழியே வந்தனர். அவர்களை அழைத்துச் சில கேள்விகளைக் கேட்டுப் பேசியதன் மூலம் அவர்கள் அருள்நெறி இயக்கத்தைப் பின்பிற்றுபவர்கள் என்பது புரிய வந்தது. அதுமட்டுமன்றி அங்கு அவர்கள் வசிக்கும் தெருவில் உள்ள பழுதடைந்த பிள்ளையார் கோயில் ஒன்றை இளைஞர்களாகச் சேர்ந்து களிமண்ணால் அடைப்புக்கள் அடைத்து அந்தக் கோயிலைப் பாதுகாத்து அவர்களே நாள்தோறும் முறை வைத்து வழிபாடு செய்யும் சேதியை அறிந்தோம். இந்த அளவுக்கு இளைஞர்களையும் அருள்நெறி இயக்கம் கவர்ச்சித்திருந்ததைக் கண்டு மிகவும் மகிழ்ந்தோம். அந்த இளைஞர்களுடைய வழிபாட்டுணர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு அப்பழுதுற்ற கோயிலைத் தக்க அன்பர்களைக் கொண்டு புதிதாக திருப்பணி செய்து கும்பாபிடேகமும் நடத்தப் பெற்றது. சாத்துரர் தாலூகாவில் ஒருமுறை நாம் சுற்றுப் பிரயாணம் செய்து கொண்டிருந்த பொழுது, ஒத்தையால் என்ற கிராமத்திற்குச் சென்றோம். அக்கிராமத்தில் ஒரு சர்ச்சைத் தவிர இந்துக்கள் வழிபாட்டிற்கு என்று ஆலயம் இல்லாதிருந்தது. இல்லை, இல்லை. ஒரு திருமால் ஆலயம் ஒன்று ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக புழக்கமன்னியில் பூட்டி செடி கொடிகள் முளைத்துச் சிதைந்து இருந்தது. அன்று மாலையே ஊழியர்கள் அந்தக் கோயிலுக்குள் நுழைந்து செடி கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர். அன்று முதன் முதலாக நாமே அந்தக் கோயிலுக்கு விளக்கேற்றி முதலில் வழிபாடு செய்தோம். அந்தக் கோயில் இப்பொழுது இயக்க ஆதரவாளர்களாலும் ஊழியர்களாலும் திருப்பணி செய்யப் பெற்று வருகின்றது. இயக்கத்தினுடைய திருப்பணிகளில் சில முக்கியமானவற்றையே நினைவு படுத்தினோம்.

சமுதாயத் தொண்டு

இங்ஙனம் சமயத்துறையில் வேலை செய்த அருள் நெறித் திருக்கூட்டம் சமுதாயத்தை மறந்துவிடவில்லை. சமுதாயத்தை சரியான மனப்பாங்கில் அமைத்துக் கொண்டால்தான் சமயவேலை ஒழுங்காக நடைபெறும் என்று ஊழியர்கள் நம்பினர். குறிப்பாக தீண்டாமை ஒழிப்பு வேலையில் நம்முடைய இயக்கம் செய்துள்ள வேலைகள் மிகச் சிறப்புடையன. நம்முடைய இயக்கத்து ஊழியர்கள் சேரி சேரியாகச் சென்று அவர்களிடையே செளஜன்யமாகப் பழகி சேரிகளில் கூட்டுப் பிரார்த்தனை இயக்கங்களை நடத்தினர். அவர்களுடனேயே உடனிருந்து உண்டு சமத்துவத்தை நடைமுறையில் காட்டினர். சிவன்ராத்திரி, வைகுண்ட ஏகாதசி முதலிய சமய, திருநாட்களிலும், சுதந்திர தினம், குடியரசு தினம் முதலிய அரசியல் திருநாட்களிலும் ஊழியர்கள் சாலைகள் அமைத்தல், தண்ணிர் வரும் கால் வாய்களை வெட்டுதல் முதலிய சமுதாயத்திற்குப் பயன்படும் திருத் தொண்டுகளைச் செய்தனர் என்பது நினைவுறத் தக்கது. தமிழ் நாட்டில் வீசிய கொடும் புயலால் பாதிக்கப் பட்ட பிராந்தியத்து மக்களுக்கு தலைவர்களும் ஊழியர்களும் சென்று அறிவுரைகள் சொல்லி ஆறுதல் கூறி உணவுக்கு அரிசியும் உடைகளும் வழங்கினார்கள். அண்மையில் நடந்த முதுகுளத்துர் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களுக்குச் சென்று சமாதான செய்தி தரும் தூது கோஷ்டியினராக இருபது ஊழியர்கள் கால்நடையாகவே சென்று ஆறுதல் கூறி சமாதான திருத்தொண்டு செய்தனர். பொதுவாக எந்தவிதமான சமுதாயத் தொண்டு என்றாலும் நம்முடைய இயக்கத்தினர்கள் முன்னின்று முழு மூச்சுடன் செய்வார்கள். அப்படிச் செய்வதிலே அவர்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. விரிக்கிற் பெருகும் என்று அஞ்சி இந்த அளவில் நிறுத்திக் கொள்கிறோம். -

திருப்பணி மன்றத்தின் தோற்றம்

பிரசார் முறைகளிலும் சமுதாய திருத்தொண்டுகளிலும் வெற்றி நடைபோட்ட இயக்கம் ஆழமான நிர்மாண வேலைகளைச் செய்து சமுதாயத்திற்கும் சமயத்திற்கும் ஆக்கம் தர வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது. அதற்கென 1955 ஜூன் மாதம் அருள்நெறி திருப்பணி மன்றத்தைக் கண்டோம். கல்வி வசதி செய்து கொடுத்தல், மருத்துவ வசதி செய்து கொடுத்தல், திக்கற்ற குழந்தைகளை வளர்த்தல், ஏழை மாணவர்களுக்குப் படிப்புக்குரிய வசதி செய்து கொடுத்தல் முதலிய நிர்மாண வேலைகள் செய்வதே திருப்பணி மன்றத்தின் நோக்கம். திருப்பணி மன்றம் தொடங்கி சற்றேறக் குறைய மூன்று வருடங்களேயாகின்றன. எனினும் அதனுடைய வளர்ச்சி நம்மவர்கள் பெருமைப் படத்தக்க அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இம்மன்றத்தின் சார்பில் திக்கற்ற குழந்தைகள் இல்லங்கள் மூன்று, அரிஜன் மாணவர் விடுதிகள் இரண்டு, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி ஒன்று, ஆசிரியை பயிற்சிப் பள்ளி ஒன்று, உயர்தர ஆரம்பப்பாட சாலை நான்கு, ஆரம்பப் பாடசாலைகள் ஆறு ஆகிய நிறுவனங்கள் தற்பொழுது சீரிய முறையில் நடந்து வருகின்றன. மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு மருத்துவ நிலையங்களுக்கு வாடகையின்றி இடம் அமைத்துக் கொடுத்திருக்கின்றோம். கல்லூரி பயிலும் இளைஞர்கள் உதவிச் சம்பளம் பெறுகின்றனர். திருப்பணி மன்றத்தின் உதவி பெற்று இரண்டு இளைஞர்கள் கல்லூரிப் படிப்பு முடித்து வெளிவந்திருக்கின்றனர் என்பது நாம் அறிந்ததே.

வெளியில் நடந்த அதிசயம்

இங்ஙனம் சமுதாய, சமயத் துறைகளில் மொழி உணர்ச்சியோடு நாம் செய்துவந்த நிர்மாண வேலை மக்கள் மன்றத்திலே ஒரு பெரிய மாறுதலை ஏற்படுத்தியது. ஏன்? நமக்கு கருத்திலே மாறுபட்ட இயக்கங்களாகிய திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், பொதுவுடைமைக் கட்சி முதலிய இயக்கங்கள் கூட நம்முடைய வேலையைப் பார்த்து, அத்துறையில் நம்மோடு தொடர்பு கொள்ள முன்வந்தன. குறிப்பாக திராவிட கழகத் தலைவர் ஈ.வெ. இராமசாமிப் பெரியார் அவர்கள் நம்முடைய வேலைமுறைகளையும் திட்டங்களையும் பார்த்துப் பரிவோடு நம்முடன் தொடர்பு வைத்துக் கொள்ள முன்வந்தார். இத்தொடர்பு சரியானதல்ல எனக்கருதி நம்மோடு தோளொடு தோள் கொடுத்து வேலை செய்த சில ஊழியர்கள் நம்மை விட்டுப் பிரிந்தனர். அங்ஙனம் அவர்கள் பிரிந்து சென்றது நமக்கு வருத்தத்தைத் தந்தாலும் அவர்கள் அங்ஙனம் பிரிந்து செல்கின்ற அளவுக்கு ஒன்றும் விபரீதமாக நடந்துவிடவில்லை என்பதை நாம் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. கருத்து மாற்றம் உடையவர்களிடம் கலந்து பழகி, கருத்தைப் பறிமாறிக் கொள்ளுவதுதான் சிறந்த முறை என்று நாம் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. நீண்ட நாட்களாக தூரத்திலே நின்று தெரிந்து கொண்டோ, தெரியாமலோ தன் மனத்தில் பட்டவாறெல்லாம் விமரிசனம் செய்து கொண்டிருந்த அவர்களைத் தற்பொழுது நம்முடைய வேலைத் திட்டங்களாலும், நம்முடைய சீரிய கருத்துக்களாலும் நம்பால் இழுத்து, காழ்ப்பின்றி நாம் சொல்லுவதைக் கேட்கின்ற அளவுக்குத் தயார் செய்திருக்கின்றோம். இதுவே தமிழகத்தில் அருள்நெறித் திருக்கூட்டத்தின் சிறந்த முயற்சி என்று சொன்னால் கூட தவறில்லை. இனிமேல் நாம் சொல்லுகின்றவற்றை அவர்கள் கேட்டு சிந்தித்து தெளிந்து பின்பற்றுவதற்குரிய காலம் வெகு தூரத்தில் இல்லை; வெகு சீக்கிரத்திலேயே இருக்கிறது என்று நம்புகின்றோம். காரணம், நம்முடைய இயக்கம் கால வெள்ளத்திலே இறந்து போகின்ற சாதாரண கருத்துக்களைத் தாங்கியது அல்ல என்றும் எப்பொழுதும் மாறுபடாத எல்லாம் வல்ல இறைவனின் திருவருளைத் தாங்கி நிற்கின்ற இக்கருத்து இவ்வுலகில் மீண்டும் நிலவியே திரும். இதற்கு எத்துணையும் ஐயம் இல்லை.

பெருமைக்குரிய வளர்ச்சி

சற்றேறக் குறைய ஆறு ஆண்டுகள் தமிழ்நாட்டில் வேலை செய்த நமது இயக்கம் வேறு எந்த இயக்கத்திற்கும் இல்லாத அளவுக்கு மிகக் குறுகிய கால எல்லையில் நிறைந்த வளர்ச்சியடைந்திருக்கிறது என்று எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மிகச் சிறிய அளவில் தொடங்கிய இயக்கம் இன்று ஆசிய நாடுகள் முழுவதும் பரவி ஒரு பேரியக்கமாக மலர்ந்திருப்பதை எண்ணிப் பூரிப்படை கின்றோம். இந்த அளவுக்கு நமது இயக்கத்திற்குத் தோன்றாத் துணையாக இருந்து அருள்பாலித்த குன்றில் அமர்ந்துறையும் குமரப் பெருமான் திருவடிகளைச் சிந்தித்து வாழ்த்து கின்றோம். இயக்கத்தின் வளர்ச்சியில் ஆதரவு காட்டிய அன்பர்களுக்கும் பொருள் வழங்கிய புரவலர்களுக்கும் அயறாது ஆர்வத்துடன் ஊழியம் செய்த ஊழியர்களுக்கும் நம்முடைய நன்றி கலந்த வாழ்த்து.

16. கோயில்களும் இளைஞர்களும்

நாம் அள்ளியுண்ணாமல் கடவுள் வந்து ஊட்டுவார் என்று கருதுகிற அறவீனமான கடவுள் நம்பிக்கை எனக்கில்லை; "கொடுக்கிற தெய்வம் கூரையைப் பொத்துக் கொண்டு கொடுக்கும்” என்ற பைத்தியக்காரத்தனமான கடவுள் நம்பிக்கை இடைக்காலத்தில் முளைத்ததுதான். நாம் உழைக்காமல், முயற்சி செய்யாமல் சோம்பேறியாக வாழ வேண்டும் என்பது இறைவனின் திருவுள்ளும் அல்ல - சாதாரணமான ஒரு தாய்கூடத் தன் குழந்தை தத்தித் தத்தி முயன்று நடை பழக வேண்டும் என்றுதான் விரும்புவாளே தவிர, அது சோம்பேறியாக இருக்க வேண்டும் என்று விரும்பமாட்டாள். உலகத்தில் ஒரு தாயே தன் குழந்தை சோம்பேறியாக இருக்கக் கூடாது என்று விரும்புகிறாள் என்றால் உலகின் தாயாக இருக்கிற கடவுள் தனது மக்கள் சோம்பேறியாக இருக்க வேண்டும் என்று கருதுவாரா? நாம் உழைத்து வாழ வேண்டும் என்பதற்காகவே கடவுள் நமக்குக் கைகளையும் கால்களையும் தந்திருக்கிறார். நிலத்தைத் தந்து விதையைத் தந்து, நம் கையில் மண்வெட்டியையும் தந்து - நம்மை உலவவிட்டிருப்பதே நாம் சோம்பேறியாக இராமல் உழைத்து வாழவேண்டும் என்பதற்குத்தான்.

சில ஊர்களில் சிவன் கோயில் பாழடைந்து கிடப்பதைக் கண்டு மிகவும் வருந்துகிறேன். இந்து மதத்தையே புனர் நிர்மாணம் செய்ய வந்தவர்களாக கருதப் பெறுபவர்களின் கண்களில் பட்டும்கூட இந்தக் கோயில் மீதுள்ள காட்டை வெட்டி எடுப்பதில் கவனம் செலுத்தப் பெறவில்லை என்பது வருத்தத்திற்குரியதுதான். இப்படிப் பல்வேறிடங்களிலும் சிற்றுார்களில் நமது கோயில்கள் பல இடிந்து பாழடைந்து கிடக்கின்றன.

கோயில்கள் சமுதாயத்தின் பொதுச் சொத்து. இளைஞர்களுக்கு இளமையும், செயலார்வமும், அக்கறையும் இருந்தால் இப்படிப் பாழ்பட்டுக் கிடக்கின்ற கோயில்களைப் புதுப்பிக்க முன்வாருங்கள்! கோயில் இருந்து குடிமக்கள் இருந்தால்தான் சிறப்பு.

அன்று மூவேந்தர் காலத்திலும் நாட்டு மக்கள் எல்லோருக்கும் கல்வி பெறும் உரிமை இருந்ததாக இல்லை. எனவேதான் நம்மிடையே பரவலான அறிவுப் புரட்சியும் கருத்துப் புரட்சியும் ஏற்படவில்லை, பின், உயர்ந்த சாதிக் காரர்கள் என்போருக்கும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த வசதி படைத்தவர்களுக்குமே கல்வியுரிமை இருந்தது. இன்று நமது ஆட்சியில் அந்நிலை முழுக்க முழுக்க மாறி எல்லோரும் கல்வி பெறுவதற்கான வசதியும், வாய்ப்பும், உரிமையும் வழங்கப் பெற்றிருக்கிறது.

மனிதனின் இன்றியமையாத் தேவைகளை அரசாங்கமோ, சமுதாயமோ கொடுத்தாக வேண்டும். இறைவன் காற்றைப் படைத்து அளித்தார்; கவின்மிகும் மணமலரைப் படைத்தளித்தார்-கதிரவனின் ஒளியைப் படைத்தளித்தார். இவற்றை யாரும் வேலிபோட்டு மறைத்து விட முடியாதபடி-எல்லோரும் துய்த்து மகிழத்தக்க வகையிலே படைத்துத் தந்தார். இவற்றை அவர் நேரே கொடுத்தார். அறிவு, சோறு துணி இவற்றை மனிதன் மூலம் மனிதனுக்குக் கொடுக்கலாம் என நினைத்தார். மனிதன் களங்கத்தை உண்டாக்கி விட்டான்; கறைப்படுத்திவிட்டான்.

விலங்குக்கும் மனிதனுக்கும் வேறுபாடு இருக்க வேண்டாமா? தின்னுவதில் யானை மனிதனை வென்று விட்டது; ஊர் சுற்றுவதில் காக்கையும் நாயும் மனிதனை வென்று விட்டன; இனப்பெருக்கம் செய்வதில் பன்றி மனிதனை வென்றுவிட்டது. எனவே, எந்த வகையில் மனிதன் உயர்ந்தவன்? சிந்தனையால்தான் மனிதன் சிறந்தவனாக உயர்ந்தவனாக வாழமுடியும். அந்தச் சிந்தனா சக்திக்குத் தடை விதிக்கலாமா?

இங்கு எல்லோருக்கும் படிப்புச் சொல்லிக் கொடுத்து விட்டால் அவர்கள் பரம்பரையாகச் செய்கிற தொழிலைச் செய்யாமல் விட்டுவிடுவார்கள் என்று சிலர் கூறுகிறார்கள் உழைப்புக்கும் உழைப்பவனுக்கும் மரியாதை கொடுக்காத வரை படித்தவர்கள் ஏதேனும் சிறு உத்தியோகமாக இருந்தாலும் உத்தியோகம் பார்க்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். யாராலே சமுதாயம் வளர்கிறது என்பதை உணர்ந்து அவர்களுக்குத் தகுதியும் மரியாதையும் கொடுத்தால் உழைப்பவர்கள் உழைப்பார்கள்.

நாட்டிலே அறிவுப் புரட்சியும், சிந்தனைப் புரட்சியும் உருவாகத் துணை செய்ய வேண்டிய ஆசிரியர்கள் தயவு செய்து தங்கள் தொழிலைத் தொழிலாகக் கருதாதீர்கள்; அதைத் தொண்டு என்று கருதிக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்றால் அவர்கள் குறைந்தது நான்கு மணி நேரமாவது படித்து, நான்கு மணி நேரம் சிந்தித்து அதன் பிறகு எப்படிச் சொல்லிக் கொடுத்தால் மாணவர்கள் புரிந்து கொள்வார்கள் என்பதை அறிந்து சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு அதிப்படியான பொறுப்பு இருக்கிறது. இன்றைய ஆசிரியர்களில் பெரும்பாலோருக்கு அது இல்லை. ஆசிரியர்கள் அறிவு வளர்ச்சிக்கான நல்ல-பயனுள்ள புத்தகங்களையே படிக்க வேண்டும். இன்றைக்கு ஆசிரியர்கள் கூட வெறும் பொழுது போக்குக் கதைகளையே படிக்கிறார்கள்.

இன்று வீண் பொழுது போக்குவதற்கு நமக்கு நேரமில்லை. இந்த நாட்டின் கடைசி ஏழைமகன் சோறும் துணியும் பெற்று வாழுகிறவரை சற்று அதிகமாகவே உழைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது. அப்படியிருக்க, நாம் வீண் பொழுது போக்குவது கொடுமையினும் கொடுமை.

'தன்பெண்டு தன்பிள்ளை சம்பாத்தியம் இவையுண்டு தானும் உண்டு' என்று கருதுகிற உள்ளம் கடுகு உள்ளம்; அது தன்னல உள்ளம். தெரு மக்கள் - ஊர் மக்களின் வாழ்க்கை நலனில் அக்கறை கொள்ளுகிற உள்ளம் துவரை உள்ளம்; அது பொதுநல உள்ளம். சாம்பாரில் கடுகு அதிகமாகப் போனால் சாம்பார் கசக்க ஆரம்பித்துவிடும். சாம்பாரில் பருப்பு அதிகரித்தால் சாம்பாருக்கு சுவை அதிகரிக்கும். எனவே தன்னலம் பெருகுவது கடுகு அதிகரிப்பது போல; பொதுநலம் பெருகுவது பருப்பு அதிகரிப்பது போல.

மற்றவர்களின் பேச்சுக்கும் கருத்துக்கும் நாம் மதிப்புக் கொடுக்க வேண்டும்; மற்றவர்கள் பேசுவதைக் கேட்கத்தான் நமக்குக் காது கொடுக்கப்பட்டிருக்கிறது. காதுக்குக் கீழேதான் வாய் இருக்கிறது. எனவே, முதலில் மற்றவர்கள் கருத்துக்கு மதிப்புக் கொடுத்துக் கேட்டு, அதன் பிறகுதான் நாம் பதில் சொல்ல வேண்டும் அப்படி நாம் மதிப்புக் கொடுப்பதுதான் ஜனநாயகம்.

அண்மையில் நான் நேருஜி அவர்களின் சொற்பொழிவு ஒன்றைப் படித்தேன்; அதைத் திரும்பத் திரும்பப் படித்து அனுபவித்தேன்.

"கருவிலேயே கிழடு தட்டிப் போனவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; கருவிலேயே கிழடு தட்டியவர்கள் என்றால் சுறுசுறுப்பு இல்லாமல் மந்தமாக வழவழ கொழ கொழ என்று இருப்பதுதான்; அத்தகையவர்கள் தீ வைப்பவர்களைக் காட்டிலும் கொடியவர்கள்; வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல இளைஞர்கள் இருக்க வேண்டும்” என்ற நேருஜி அவர்களின் அறிவுரை சிந்தனைக்குரியது - வருங்கால பாரதத்தை உருவாக்கப் போகிற இளைஞர்களுக்கு மிகவும் இன்றியமையாதது.

இன்றையப் பள்ளிகளே, நாளைய பாரதத்தின் அடித்தளம்; ஆசிரியர்களே மாணவர்களை உருவாக்கும் சிற்பிகள், மாணவர்களே வருங்காலத் தலைவர்கள். ஒவ்வொரு மாணவரின் குறை நிறைகளையும் பண்பியல்களையும் கொண்ட 'சாதகங்கள்' ஆசிரியர்களிடம் இருக்க வேண்டும். சமுதாயம் வளர்வதற்குரிய கல்வியை மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் சுறுசுறுப்பாக ஓடியாடி விளையாட வேண்டும்; அவ்வப்போது செய்ய வேண்டிய வேலைகளைக் காலத்தோடு ஒழுங்காகச் செய்ய வேண்டும். இன்று எல்லாருக்கும் எல்லாக் கதவுகளும் திறந்து விடப்பட்டிருக்கின்றன. யாரும் எந்த உத்தியோகத்திற்கும் வரலாம். எனவே இளைஞர்கள் எல்லோரும் நன்றாகப் படிக்க வேண்டும். அவர்கள் கெட்டப் பழக்கங்களைப் பழகிக் கொள்ளக் கூடாது; எல்லோரிடமும் அன்பாகவும் பண்பாகவும் பழகுங்கள். உங்கள் கால் கைகளுக்கு வேலை கொடுப்பது போல மூளைக்கும் வேலை கொடுங்கள்.
17. அன்புச் சமயம்

(மலேசியா நாட்டில் முத்துமாரியம்மன் கோயிலில் 7-7-1982 அன்று ஆற்றிய உரை)

போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்குமுரிய தலைவர் அவர்களே! பெரியோர்களே! நண்பர்களே! சகோதரர்களே! சகோதரிகளே! குழந்தைகளே! அனைவரையும் நான் காணவும், கண்டு கலந்து பேசி மகிழவும் வாய்ப்பளித்த அனைவருக்கும் எனது நன்றி; பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள்!

சாதாரணமாக உலகத்தில் ஒவ்வொரு உயிரும் தன்னைத் தற்காத்துக் கொள்ள முயற்சிப்பதுதான் அதனுடைய கடமை. ஒரு நல்ல பேருந்து ஒடுகிறது என்று சொன்னால், ஒரு நாய் கூடத் தன்னை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று விரைந்து சாலையை விட்டு விலகிவிடும். அதுபோல ஒவ்வொருவரும் தங்களைத் தற்காத்துக் கொள்ளுவார்கள். தங்களுடைய தவறுகளைச் சரியானவையென்று கூறுவதும், உங்களை விட என்னுடைய தவறுகள் மோசமானவையல்ல என்பதெல்லாம் ஒவ்வொரு உயிருக்குமுள்ள தற்காப்பு உணர்ச்சியைக் காட்டும்.

போர் வீரர்கள் தற்காப்பு உணர்வை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. தமிழ் நாட்டில் திரைப்படம் பார்க்கிற பைத்தியம் கூட இருப்பதால், அதைப் பார்க்கிற பொழுது, அது ஒன்றும் தவறில்லை என்று மிக அருமையாகச் சொல்லுகிறார்கள். பொதுவாகவே நான் சொல்வதுண்டு. "உலக நாடுகளில் எங்காவது தோல்வி, தவறு, குற்றம் இருந்து இதற்கு ஏதாவது சமாதானம் சொல்ல வேண்டுமானால் நல்ல தமிழர்களாகப் பார்த்து அனுப்பினால் நல்ல சமாதானம் சொல்லுவார்கள்" அது நம்முடைய பழக்கம்.

ஆனால், என்னைப் பொறுத்த வரையில் வரவேற்புரை வழங்கிய நண்பர் சொன்னதைப் போல நான் யாரையும் கோபித்துக் கொள்ளத் தயாராக இல்லை. காரணம், உயிர்கள் பழக்கத்தின் வழிப்பட்டவை. அடிக்கடி இப்படிச் சொற்பொழிவுகளைக் கேட்டு பழகியிருந்தால் அவர்கட்கு இது ஆர்வமாக இருந்திருக்கும். படத்திற்குப் போகமாட்டார்கள். படம் அடிக்கடி பார்ப்பது, அது பார்த்துப் பழகினதால்; பார்க்காது போனால் என்னவோ போல ஒரு குறையாக இருக்கும். அதனால் படத்தின் மீது பற்றாகப் போவதற்கு படம் மட்டும் ஒரு காரணமல்ல. அதைப் பார்க்காது போனால் ஏதோ தூக்கம் வராதது போல ஒரு சூழல்பழக்கத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது.

உதாரணம் ஒன்று சொன்னால் விளங்கும். நல்ல வேப்ப மரத்திலே புழுக்கள் வளருகின்றன. அவை வேப்பங் கொழுந்துகளைத் தின்று வளரும். நமக்குத் தெரியும் வேப்பங் கொழுந்து எப்படியிருக்கும் என்று! கசக்கும், அந்த வேப்பங்கொழுந்துகளைத் தின்றுதான் அந்தப் புழுக்கள் வளருகின்றன. அந்தப் புழுக்களைப் பிடித்து, நல்ல இனிக்கின்ற கரும்பிலே கொண்டு போய்விட்டால், அந்தக் கரும்பு அந்தப் புழுக்களுக்கு பிடிக்காது; இனிக்காது. மிகவும் தொல்லையாக இருக்கும் காரணம்; அதற்குக் கசப்பைப் பழகிப் போனதின் காரணமாகக் கரும்பு கசக்கிறது; வேம்பு இனிக்கிறது என்று சொல்லுவார்கள். இந்த உயிர்கள் பழக்கத்தின் வழிப்பட்டவை இதை "உழுத சால்வழியே உழுதல்” என்பார்கள்.

சில மாடுகள் தானாகப் போகும். ஓர் இடத்திற்குத் தானாகத் திரும்ப வந்துவிடும். அதற்கு யாரும் வந்து 'பிரேக்' போட வேண்டாம். அது தானாக சாலையிலே மேலே போகும். சந்தைப் பேட்டைக்கு வண்டியைக் கட்டி வைத்து விட்டால் வண்டிக்காரர், தூங்கிவிடுவார். வண்டியோடு மாடுகள் போய் நின்றுவிடும். அதற்குக் காரணம், அது பழக்கத்தின் வழிச் செல்லுகின்ற பழக்கம். அதுபோல, நல்ல பழக்கம் பழகுதல் என்பது ஒரு நல்ல கலை.

அது படத்தைத் தவிர வேறொன்றும் மகிழ்ச்சிக்கு, களிப்புக்கு இடமில்லை என்று செய்துவிட்டு, "இன்றைக்குப் படத்திற்குப் போகிறார்களே! அடிகளாரின் பேச்சுக்கு இல்லையே” என்று சொன்னால் சரியில்லை. அதற்கு, அடிக்கடி இந்தப்படம் வருகிற நாளெல்லாம் பார்த்து, ஒரு பேச்சுக்கு ஏற்பாடு செய்து, அதிலிருந்து திரும்பக் கொண்டு வந்து சோதனைப்படுத்தி நிறுத்த வேண்டும். அப்படிப் பழக்கப்படுத்தி விட்டால் இன்றைக்குப் படத்திற்குக் கூப்பிட்டால் கூட வரமாட்டார்கள். தொல்லை என்று சொல்லுவார்கள். எனவே பழக்கம்தான் பெரிய காரியம்.

ஆனால், இப்பொழுது நம்முடைய நாட்டிலே சாதாரண மக்களுக்குக் களிப்பு, மகிழ்ச்சிக்குப் பேசும் படத்தைத் தவிர வேறொன்றும் இல்லை. அதுவும் பெண்கள் பகுதி மிகவும் கடுமையான வழிகளிலே கவர்ச்சிக்கப்படுகிறது. அண்மையில் ஒரு திரைப்படக் கொட்டகையில் ஐநூறு பேர் இருக்கிற பொழுது அது தீப்பிடித்துக் கொண்டது. அதில் இறந்து போனவர்கள் கிட்டத்தட்ட ஒரு முந்நூறு பேர் பெண்கள்தான். அதாவது திரைப்படக் கொட்டகையிலே அதிகமான இடத்தைப் பிடிப்பவர்கள் இப்பொழுது பெண்கள்தான், என்பது நாம் அறிந்த வரலாறு; உலகறிந்த வரலாறு. அது என்ன காரணம் என்றே என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒருக்கால், ஆடவர்கள் உழைப்பின் மேல் போவதாலும், புறத்தே வேறு, வேறு துறைகளில் அவர்கட்குக் களிப்பும் மகிழ்ச்சியும் இருப்பதாலும், பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் இத்தகைய மனோபாவங்கள் இருக்கின்றனவா என்பதை சிந்திக்க வேண்டும்.

இப்பொழுது திரைப்படம் 8-45 மணிக்கு என்று சொல்லுகிறார்கள். அதற்கேற்றவாறு என்னுடைய பேச்சை முடிக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு வகையில் உதவி செய்திருந்தால், அவரை எட்டுமணி வரை பேசவைத்து உங்களைப் போகாமல் இருக்கிறீர்களா என்று சோதிக்கலாம் என்று நினைத்திருந்தேன். அவர்தான் நீங்கள் திரைப்படத் திற்குப் போவது வரையறுக்கத் தக்கது என்றும், அதில் ஒன்றும் தவறில்லை என்றும் சொல்லிவிட்டார். இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால், அவரும் மிக விரைவில் முடித்துவிட்டு, அவர் தம் குழந்தைகளுடன் சென்று பார்க்கலாம் என்ற எண்ணமோ என்று தெரியவில்லை, அதனால் நான் அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை.

அடுத்து, அவர் நல்ல நிர்வாகி, நல்ல அறங்காவலர், நல்ல தலைவர் என்பதற்கு நல்ல சான்று சொன்னார். எவ்வளவு முடியுமோ, அவ்வளவு செய்கிறோம் என்று சொன்னார். பொதுவாக, யாரும் மாட்டிக் கொள்ளக் கூடாது. மாட்டிக் கொண்டால் அது பெரிய பிரச்சனை. இந்த அறையிலே நிர்வாகக் குழு உறுப்பினர் இருக்கிறார். இன்னொரு நிர்வாகக் குழு உறுப்பினரும் இருக்கிறார். எனவே நாளைக்குப் போட்டி போட்டுக் கொண்டு கேள்விகள் கேட்பார்கள். அவர் யார் ஒருவரையும் மாட்டிக் கொள்ளாமல் செய்திருக்கிறார்.

பொதுவாக, எனக்கு இங்கே பேசுவதற்குரிய தலைப்பை இங்கேயே கொடுத்திருக்கிறார்கள். இரண்டு, மூன்று கேள்விகளையெல்லாம் தயாரித்து முன்பாகவே கொடுத்திருக்கிறார்கள்.பொதுவாக, நம்முடைய சமயம் எது? சமயத்தின் பெயர் எது? என்று அடிக்கடி கேட்பார்கள். நம்முடைய சமயம் என்று சொன்னால், குறிப்பாகத் தனிப்பட்ட முறையில் இங்கே வாழ் வாழ்பவர்களைப் பார்த்தால், நாம் "சைவசமயம்” என்று கூறுவது தவறில்லை போலத் தெரிகிறது.

சைவமும், வைணவமும் சேர்ந்து வாழுகின்ற இடங்கள் இருக்குமானால் அந்தப் பகுதியிலே நாம் இந்து சமயம் என்று சொல்லலாம். வைணவமும், சைவமும் சேர்ந்து வாழ்கின்ற ஒரு கூட்டுப் பெயருக்கு இந்து சமயம் எனப் பெயர். இங்கே, நாம் பெரும்பான்மையோர் சைவர்களாக வாழ்கிறோம். திருநீறு அணிகிறார்கள். இந்தச் சமயத்திற்குச் "சைவம்" என்று எப்படிப் பெயர் வந்தது என்கிறார்கள். பொதுவாக ஒரு சமயத்திற்குப் பெயர், அதை தோற்றுவித்த கடவுளின் பெயர், அல்லது அந்தச் சமயம் எந்தக் கடவுளை, எந்தப் பெயரில் வழிபடுகிறதோ அதை வைத்து, அல்லது அந்தச் சமயத்தைத் தோற்றுவித்த ஆசிரியரின் பெயரை வைத்துதான் பெரும்பாலும் சமயங்களின் பெயர் வழங்கும்.

நம்முடைய சமயத்தைப் பொறுத்த வரையில் அதைத் தோற்றுவித்தவர்கள் கிடையாது. அது காலங் கடந்தது; பழமையானது. ஆசிரியர்கள் பலர் இதற்கு வந்தாலும் கூட, வளர்த்தவர்களே தவிர, அவர்கள் தோற்றுவித்தவர்கள் என்று சொல்லமுடியாது. நாம் வழிபடும் தெய்வத்தின் பெயர் சிவமாக, சிவபெருமானாக இருப்பதனால் சிவத்தை வழிபடுகிற சமயத்திற்கு அது எழுத்து விகாரமடைந்து 'சைவ சமயம்' என்று வந்தது. ஆக, சிவசமயமாக இருக்கிற சமயத்திற்குத் தான் சைவ சமயம் எனப் பெயர். சிவபெருமான் முழு முதற் கடவுள், அவரை வணங்குவது நம்முடைய கடமை. இப்பொழுது, நம்முடைய குழந்தைகள் பாடிய திருவாசகப் பாடலில் கூட, மூவருக்கும் அப்பாற்பட்ட தெய்வமாக-பரம் பொருளாக இருக்கிறான் என்கிறார்கள்.

இந்த சிவபெருமான் என்பவர் உலகத்திற்கு முதல்வனாகவும், எல்லார்க்கும் தலைவனாகவும் இருக்கிறார் என்பது நம்முடைய மரபு. ஆனால், பிற்காலத்தில் வந்த பழக்கங்களை வைத்து அவர்கள் கேட்டிருக்கிறார்கள். "சைவமாக இருப்பவர்கள் எல்லாம் புலால் உண்ணாமல் இருக்க வேண்டுமா?" என்று கேட்டிருக்கிறார்கள். பொது

வாகக் கடவுள் என்று சொன்னால், சமயம் என்று சொன்னால் அன்பு என்று பொருள்.

"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆகும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே”

- என்று திருமூலர் சொல்லுவார்.

அன்பு இல்லாத ஒரு சமயம் இருக்கிறது என்று சொன்னால் அது நம்முடைய வயிறு தான் சுடுகாடு என்று சொல்லுமாம், மனிதர்கள் இறந்தால் சுடுகாடு எங்கோ மண்ணிலே, ஏதோ ஊருக்கு எல்லையிலே இருக்கிறது. ஆனால் விலங்குகள் இறந்தால் சுடுகாடு நம்முடைய வயிறுதான்.

நமக்கு நம்முடைய சமயம் அன்புச் சமயமாக இருப்பதாலே திருவள்ளுவர், "அன்பின் வழியது உயிர்நிலை” என்று கூறுகிறார். ஒருவருக்கு உயிர் இருக்கிறதா இல்லையா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பார்கள். டாக்டர் என்று சொன்னால் "ஸ்டெதாஸ் கோப்பை" வைத்துப் பார்ப்பார். ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்று "போய் விட்டதா?"என்று நம்முடைய வீட்டிலே, நாட்டு வைத்தி யரைக் கேட்டால் அவர் கையில் நாடி பிடித்துப் பார்ப்பார். பாட்டியைக் கேட்டால் காதைத் தொட்டு, கையைத் தொட்டுப் பார்த்து உயிர் இருக்கிறதா இல்லையா என்று கூறுவாள். சின்னக் குழந்தைகள் அல்லது பள்ளிக் கூடத்திலே படிக்கிறவர்களைக் கேட்டால் தன்னுடைய துணியின் வெள்ளை நூலை எடுத்து மூக்கில் வைத்து, அது ஆடுகிறதா, இல்லையா என்று பார்ப்பார்கள். அதாவது சுவாசம் இருக்கிறதா, இல்லையா, என்று பார்ப்பார்கள், ஆக உயிர் இருக்கிறதா, இல்லையா, என்று பார்ப்பதற்கு இவைகளெல்லாம் நாட்டிலே அளவு கோல்கள். ஆனால் திருவள்ளுவர் என்ன சொல்லி விட்டார்? இவைகள் எல்லாம் அளவு கோல்கள் இல்லை என்று சொல்லிவிட்டார். சில பிணம் வீட்டிலேயும் இருக்கும். சாப்பிடும்; நடக்கும். எல்லாம் செய்யும். ஆனாலும் பிணம் தான் என்கிறார். உயிர் இல்லை என்கிறார். உயிர் இருக்கிறது என்பதற்கு அடையாளம், அவர்களுடைய வாழ்க்கையிலே அன்பு சார்ந்த பழக்கங்கள் இருக்க வேண்டும்.

இந்த உயிர் எங்கே இருக்கிறது என்று கேட்டால் நிறையப் பேருக்குச் சொல்லத் தெரியாது. சொல்லத் தெரியாததினால் உயிரே இல்லை என்று சொல்வி விடுகிறார்கள். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இவை மூன்றும் சேர்ந்தால் சிவப்பாக ஒரு நிறம் வருகிறதல்லவா? அதுபோல, இந்தப் பஞ்ச பூதங்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்தால், அது ஆடும்; பாடும்; ஓடும்; நடக்கும். அவ்வளவு தான்! உயிர் என்று ஒன்று இல்லை. எல்லாம் கற்பனை என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், அந்த வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு எல்லாம் சேர்ந்தால் ஒரே மாதிரி சிவப்பாக வருகிறதே, ஆனால், எல்லா உயிரும் ஒரே மாதிரி இல்லையே! அதனுடைய உயரம், நிறம், பேச்சு, நடை, உடை, பாவனை, குணம் இவற்றில் பேதங்கள் எத்தனை உண்டோ அத்தனை பேதங்களும் இருக்கின்றன. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பைக் கூட்டினால் நிறம் வருகிற மாதிரி என்று எப்படிச் சொல்ல முடியும்? ஆதலால், உயிர் உண்டு என்பது நம்முடைய நாட்டுக் கொள்கை.

ஆனால், உயிர் எங்கே இருக்கிறது? சில பேருக்குச் சோற்றிலே உயிர் வைத்திருப்பார்கள். அவன் சாப்பிடவில்லை என்று சொன்னால் இறந்து போய் விடுவான். ஆகவே பொழுது விடிந்து, பொழுது போனால் சாப்பாடு; சாப்பாடு. அவன் அதற்காகவே பிறந்திருக்கிற மாதிரி, தேடித் தேடி அலைந்து கொண்டிருப்பான். சோற்றிலே உயிர் இருக்கும். இன்னும் சில பேருக்கு உயிர் வேறு இடத்திலே இருக்கும். ஒருவர் நல்ல பணம் சம்பாதித்து வங்கியிலே போட்டு வைத்திருப்பார். அந்த வங்கி திடீரென்று "திவால்" ஆகிவிட்டது. "திவால்” ஆகிவிட்டது என்றால் தெரியுமல்லவா? நொடிந்து போயிற்று. பெரிய இடத்தில் பணம் சேர்ந்தால் நொடிக்கும். நொடிக்க வைத்து விடுவார்கள். அது நொடிந்து போயிற்று. நொடிந்து போனவுடனே, இந்தப் பணம் போட்டிருந்த ஆளுக்கு, அந்த வங்கி நொடிந்து போனது என்ற செய்தியைப் பார்த்ததால் உடனே மூச்சு நின்று போயிற்று. அப்படியென்றால், அந்த ஆளுக்கு உயிர் எங்கே இருந்தது? பணத்திலே இருந்தது. எனவே, சிலருக்கு உயிர் சோற்றிலே இருக்கிறது; சிலருக்குப் பணத்திலே இருக்கிறது.

இன்னும் சிலர் இருக்கிறார்கள்? மிகவும் உயர்ந்தவர்கள். ஒரு நல்ல அரசர் தமிழ்நாட்டிலே ஆண்டார். பாண்டிய நாட்டை ஆண்டார். அவனுடைய நாட்டிலே ஒரு காலத்திலே ஒரு தவறு நடந்துவிட்டது. ஓர் ஆளை ஏன் என்று கேட்காமல் என்னவென்று கேட்காமல் கொன்று விட்டார். அந்த அரசன் கொன்ற உடனே, கொல்லப்பட்டவனின் மனைவி அரச மன்றத்திற்கு வந்து வழக்குத் தொடுத்தாள். "என் கணவன் தவறு செய்யாதவன்; அவனைக் கொன்று விட்டாயே" என்று வழக்குத் தொடுத்தாள். அரசனுக்கு உண்மை தெரிந்தது. தவறு செய்து விட்டோம் என்ற உண்மை தெரிந்தது. உண்மை தெரிந்தவுடன் அவன் அழவில்லை; புலம்பவில்லை; ஆத்திரப்படவில்லை. உண்மையில் தான் தவறு செய்து விட்டோம் என்று தெரிந்தவுடனே அவனுடைய உயிர் பிரிந்து விட்டது. அவன் அரியணையிலிருந்து அப்படியே கீழே விழுந்து விட்டான்; இறந்து விட்டான்! அப்படியென்றால், அவனுக்கு உயிர் எங்கே இருந்தது? நீதியில் இருந்தது. அரசே நீதியில் தங்கி இருந்தது. இப்பொழுதெல்லாம், அப்படியானால் 'என்ன செய்வது? நஷ்டஈடு வாங்கிக் கொள்ளுங்கள்; அதைச் செய்து கொள்ளுங்கள்; இதைச் செய்து கொள்ளுங்கள்' என்பார்கள். ஆனால், அவன் தன்னுடைய உயிரையே கொடுத்துவிட்டான். அந்த அரசனுக்கு உயிர், நீதியிலே இருந்தது.

அவனுடைய மனைவி, அரண்மனையில், அத்தாணி மண்டபத்தில் பாண்டியனுக்குப் பக்கத்திலே இருந்தான். இவன் சுருண்டு கீழே விழுந்தவுடன், அவன் உயிர் பிரிந்தவுடனே, அவளும் கீழே விழுந்து இறந்து போனாள். அதிலே, யார் உயிர் முன்னே பிரிந்தது என்று சொல்ல முடியாத அளவுக்கு உயிர் பிரிந்தது என்று சொல்லுவார்கள். அது யார்? பாண்டிமாதேவி! பாண்டிய மன்னனுடைய மனைவி, கணவன் உயிர் பிரிவதற்கு முன்பாகவே, அவனுடைய உயிர் எங்கு செல்கிறது என்று தேடிச் செல்வாள் போல், உயிர் பிரிந்தது. அந்த அரசிக்கு உயிர் எங்கே இருந்தது? கணவன் பால் கொண்ட அன்பிலே, கற்பிலே உயிர் இருந்தது. இவைகளெல்லாம் உயிர் இருந்த இடங்கள். பாண்டியன் அரசவையிலே உயிரை வைத்திருந்தான். பாண்டியமாதேவி, கணவன் மாட்டுள்ள அன்பிலே, பற்றிலே உயிர் வைத்திருந்தாள்.

இப்படியெல்லாம் சொல்லிவிட்டு, நமக்கு உயிர் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். நமக்கு உயிர் எங்கே இருக்கிறது என்றால், எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று இழுக்கிறோம். திருவள்ளுவர் சொல்கிறார். "அன்பு காட்டுகிற பழக்கத்திலே, வழக்கத்திலே உயிரை வைத்துக்கொள். அன்பு காட்டுவதற்காகவே வாழு! உனக்கு அன்பு காட்ட முடியாமல் இடர்ப்பாடுகள் ஏற்படுகிறது என்றால், உயிரைத் துறக்கத் தயாராக இரு" அப்படிப்பட்ட சமயம் நம்முடைய சமயம்.

"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்" அன்பு வேறு; கடவுள் வேறல்ல. அன்பே தான் கடவுள் என்று நம்முடைய நாட்டுச் சமயம் சொல்கிறது. எனவே, அன்புச் சமயமாக இருப்பதாலே, அச்சமயம் உயிர்க் கொலைகளை வரவேற்பதில்லை. காலப் போக்கில், சைவ நெறியில் இருப்பவர்கள், சித்தாந்த நெறியில், சிவநெறியில் இருப்பவர்கள் புலால் உண்பதில்லை என்ற பழக்கம் வந்தது. காலப் போக்கில் அதற்குப் பெயராக சைவ சமயம் என்று வந்து விட்டது. சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் புலால் உண்பதில்லை. அப்படி இருப்பதுதான் மிகச் சிறப்பு. ஆனால், நாடு போகிற போக்கைப் பார்த்தால் சாத்தியமா என்று தோன்றவில்லை. கூடிய வரை முயற்சி செய்து பாருங்கள்.

வாரத்திற்கு ஒருநாள் காய்கறி சாப்பிடுங்கள்; பின் இரண்டு நாளாக மாற்றுங்கள்; மூன்று நாளாக மாற்றுங்கள். இப்படிச் சிறிது சிறிதாக மாற்றுவது நல்லது. பொதுவாகவே நல்ல சத்தான உணவுகள் கிடைக்க, படிப்பதற்கு, எழுதுவதற்கு, வேலை செய்வதற்கு எல்லாம் நல்ல காய்கறி, பழங்கள், உணவுகள், உதவி செய்வதைப் போல, மற்ற உணவுகள் உதவி செய்யாது. ஆகவே, சைவ சமயம் என்பதற்குப் புலால் உண்ணாமை என்பது ஒரு கொள்கை ஒரு ஒழுகலாறு, அப்படி ஒழுகலாறு, இருப்பதற்குக் காரணம் என்னவென்று சொன்னால் அது கடவுள் என்பதற்கு அன்பாக இருப்பார் என்பதுதான் காரணம். அது அவருக்கு இலக்கணம். உலகம் முழுவதும் அவருடைய உயிர் ஓவியமாக இருப்பதனாலே, அதை அவர் ஒரு கேள்வியாகக் கூடக் கேட்பார். இப்படியெல்லாம் நாம் விழாக்கள் செய்யும் பொழுது தென்னை மரத்திலே குருத்து வெட்டித் தோரணம் கட்டுகிறோம். அப்புறம் வாழை மரத்தை வெட்டிக் கட்டுகிறோம். அது கூடத் தவறுதான், அது நமக்கு அழகாக இருப்பதற்கு அவ்வாறு செய்கிறோம். நமக்கு அழகாக இருக்கிறது என்பதற்கு ஒரு குருத்து மட்டையை வெட்டினால், ஒரு குலை தேங்காய் போய்விட்டது. அது இந்தக் குரல்வளையைப் பிடித்து நசுக்குவது போல தான், அந்தத் தென்னங்குருத்தை வெட்டுவது.

பழைய காலத்திலே ஓர் அரசன் இருந்தான். அவன் வேட்டைக்குப் போனான். வேட்டைக்குப் போன பொழுது, அந்த மலையிலே, காட்டிலே ஒரு நல்ல முல்லைக் கொடி படர்ந்து இருந்தது. அது படர்ந்து பூக்கிறகாலம். அந்தக் கொடி படர்வதற்கு ஒரு கொம்பு இல்லாமல் தவித்தது. நன்றாகக் கொடி படர்ந்து நிற்கிறது. அது படர்வதற்கு ஒரு கொழு கொம்பு இல்லாமல் அரும்புகள் கட்டி, அது தத்தளித்துத் தவித்துக் கொண்டிருந்தது. அந்தக் கொடியிலே அரும்புகளும் சேர்த்துச் சுற்றியிருந்ததாலே அது வாய் திறந்து "எனக்கு ஒரு கொழுகொம்பு கொடுப்பார் இல்லையா” என்று கேட்டது போல இருந்ததாம். ஏனென்றால், முல்லை அரும்புகள் வெள்ளையாகத்தான் இருக்கும். ஆக, வரிசையாக முல்லை யரும்புகள் சுற்றியிருக்கின்றன. கொடி படரத் தவிக்கிறது. ஆகவே, அரசன் பார்க்கிறான். அரசன் பார்த்தவுடனே, உயிர் இரக்கத்தில் வெளிப்பட்டுத் தான் ஊர்ந்து வந்த தேரிலிருந்து இறங்கி, அந்தத் தேரையே அந்தக் கொடிக்குப் பக்கத்தில் நிறுத்தி, அந்தக் கொடியைத் தேரிலே படரவிட்டு வந்து விட்டான். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பாரி என்ற ஒரு அரசன் இருந்தான். அவன் முல்லைக்குத் தேர் கொடுத்தவன். அவ்வளவு செடி கொடிக்கும் கூட உயிர் உண்டு என்று உணர்ந்தது நம் நாடு, செடி, கொடிக்கு உயிர் உண்டு என்று கண்டுபிடித்தது யார் என்றால், உடனே சர் 'ஜகதீஸ் சந்திரபோஸ்' என்று சொல்வார்கள். ஆனால், பழைய காலத்திலேயே செடி, கொடிகளுக்கு உயிர் உண்டு என்று கண்டுபிடித்தது நம்முடைய சமயம்; இலக்கணம்; நம்முடைய மரபு.

எனவே, வாழை, தார் ஈன்று, அது இனிமேல் உயிர்ப்பாக வாழ வேண்டிய அவசியமில்லை என்றால் தான் வெட்டலாமே தவிர, நாம் குருத்துக் கன்றுகளையும், தார் ஈன்று அதனுடைய வாழ்க்கை முடியாத வாழை மரங்களையும் வெட்டிக் கட்டுவது என்பது ஒரு நல்ல மரபல்ல. அதுவும் கிட்டத்தட்ட தேவை இல்லாத ஒரு உயிர்க் கொலை தான். ஆதலாலே, செடி, கொடிகளுக்கும் உயிர் உண்டு என்று நம்புவது அதுதான்.

வேடிக்கையாகப் பாரதி கேட்டான். உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். நம் நாட்டிலெல்லாம் அநாதைப் பிள்ளைகள் இருக்கிறார்கள். அநாதைப் பிள்ளைகளுக்கு விடுதிகள் கூட இருக்கின்றன. அநாதைப் பிள்ளைகள் இருப்பதைப் போல, எங்காவது அநாதைத் தென்னை மரங்கள் இருக்கின்றனவா? இல்லை! அநாதை மாமரம்? இல்லை. பார்த்தீர்களா? அநாதைத் தென்னை மரம் இல்லை; அநாதை மாமரம் இல்லை. ஆனால், அநாதைப் பிள்ளைகள் இருக்கிறார்கள். அப்படியென்றால், செடி, கொடிகள் நம்மைவிட வளர்ந்திருக்கா? இல்லையா? வளர்ந்திருக்கிறது! பாரதி கேட்டான் "வகைவகையாக நிற்கும் செடி, கொடி மரங்கள் யாது தொழில் செய்து பிழைத்தல் அறியா” வரிசை, வரிசையாகத் தென்னை மரத்தைப் பார்க்கிறோம்; வேலி போடுகிறோம் தண்ணீர் ஊற்றுகிறோம்; மரம் வைக்கிறோம்; பாதுகாக்கிறோம்; நாம் என்னென்ன வேலை செய்கிறோம். ஒருவரைக் கேட்டால் நான் 'காண்ட்ராக்டர்' என்கிறார். இன்னொருவர் நான் 'ஆசிரியர்' என்கிறார். இன்னொருவர் நான் மிலிட்டரியில் இருக்கிறேன் என்கிறார். இப்படி ஒவ்வொருவரும் ஒரு வேலை செய்கிறார்கள்.

இரண்டு தென்னை மரங்களைப் பார்த்து "என்ன வேலை செய்கிறாய்?" என்றால், அது என்ன சொல்லும்? அதற்கு வேலை, கொடுக்கிற தண்ணீரை எடுத்துக் கொள்வது; அதைத் தனக்கு உணவாக ஏற்றுக் கொண்டு பாளை விடுவது; காய்ப்பது; ஏன் காய்க்கிறது? மக்களுக்காக, எந்தத் தென்னை மரத்திலாவது தேங்காய் பறித்தவுடன், பத்து, இருபது பேர் பக்கத்திலே நின்று கொண்டு, 'இப்படி நான்கைந்து தேங்காய்களை ஈன்ற தென்னை மரமே! உனக்கு நன்றி" என்று சொல்வார்களா?

இப்பொழுது நிகழ்ச்சி நிரலில் போட்டிருக்கிறார்கள். "நன்றி கூறல்" நான் அரை மணி நேரம் பேசி விட்டுப் போனால் நன்றி சொல்வர்கள். "அடிகளார் அவர்களுக்கு நன்றி; சமக்காளம் விரித்தவர்களுக்கு நன்றி, ஒலி பெருக்கி அமைத்தவர்களுக்கு நன்றி,” என்று சொல்லுவார்கள். தென்னை மரத்திற்குப் போய் நன்றி சொல்வதில்லை. காய்ப்பது என்பது அதனுடைய கடமை. காய்த்தவுடன் காய்களை உதிர்ப்பதும், வேண்டியவர்களுக்கும், தேவையான வர்களுக்கும் கொடுப்பது அதனுடைய கடமை. எனவே, தென்னை மரம் வளர்ந்தால் நிச்சயமாகப் பலன் தரும், என்ற உத்திரவாதம் இருக்கிறது. ஒரு மரத்தைக் கூட அநாதையாக விடாமல், 'கோர்ட்' வரை போய்ப் பாதுகாக்கிறோம்.

இந்த மனிதனை அப்படி வளர்த்தால் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை யாருக்குமே இருப்பதில்லை. சில தாய்மார்களுக்குக் கூடத் தங்கள் பிள்ளைகள்மேல் நம்பிக்கை இருப்பதில்லை. அப்படியே வைத்துக் கொண்டு, சோறூரட்டி, சீராட்டி பழகுகிறபொழுது "நீ பெரிய பிள்ளையாகி சம்பாதிக்கிற பொழுது எனக்குக் கொடுப்பாயா?” என்று கேட்கிறார்கள். "எனக்குக் கொடுப்பாயா?" என்று கேட்கிற சந்தேகம் ஏன் வருகிறது? கொடுக்கும் என்று ஏன் நம்பவில்லை! இன்னும் சில பேருக்குச் சிறு புத்தியாய் இருந்தால் "எனக்குக் கொடுப்பாயா? அப்பாவிற்குக் கொடுப்பாயா?" என்பார்கள். ஆகவே மனிதர்கள் பெரும்பாலும் சுயநலமாக ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவது, வளர்ப்பது என்பதெல்லாம் தவிர்க்க முடியாத ஒரு சுயநலத்தின் தேவையின் காரணமாகவுே கூடுகிறார்கள். இந்தத் தேவைகளுக்கு அப்பாற்பட்டு அன்பாக இருப்பது என்பது என்னுடைய கடமை. உதவியாக இருப்பது என்பது என்னுடைய கடமை. இது என்னுடைய ஆன்மாவின் இலட்சியம் என்று வாழ ஆரம்பித்தால் மனிதர்கள் உலகத்திலும் நிச்சயமாக நன்றாக இருக்கலாம்?

உலகத்திலே வேறு எங்கே பூட்டும், சாவியும் இருக்கிறது; மனிதன்தான் நிறைய பூட்டும் சாவியும் உற்பத்தி செய்கிறான். அரசின் சிறையில் சாவி காவலர் கையில் இருக்கிறது; நம் வீட்டைப் பூட்டின சாவி நம் கையில் இருக்கிறது. எப்படியும் பூட்டு பூட்டுத்தானே! சில பணக்காரர்களுடைய வீட்டில் வாயிலைப் பூட்டி விட்டுக் காவல்காரன் வெளியில் இருப்பான். நியாயமாகப் பார்த்தால், இரவில் அந்தக் காவல்காரன் கையிலே அவர்கள் சிறைக் கைதிதான்; வேறொன்றுமில்லை. ஏனென்றால், அவன் பூட்டைபூட்டி, சாவியைக் கையிலே வைத்துக் கொண்டிருப்பான். அவன் நாளைக்குப் புரட்சிகரமாக மாறி, 'உன்னை வெளியில் விடமாட்டேன்' என்று சொன்னாலும் சொன்னதுதான், கம்பன் இவ்வாறு கனவு கண்டான். "கள்வனும் இல்லை; காவல் செய்வாரும் இல்லை" என்று சொன்னான்.

அன்பாக இருப்பது இலட்சியம் என்று சொல்ல வேண்டும் இப்பொழுது, நமது அறங்காவலர்கள் எல்லாம் மிகவும் அன்பாக இருக்கிறார்கள். மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். இவர்கள் மூன்று பேரும் இவ்வளவு நெருக்கமாக இருப்பதை இன்னொரு நிர்வாகக் குழு உறுப்பினர் பார்த்தால் சும்மா இருப்பாரா? "என்ன! கோடி வேலுவிடம் இந்தத் தர்மலிங்கம் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறாரே! குமரன் ஏன் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்" என்று ஆராய்ச்சி செய்வார். உடனே பக்கத்திலே இருப்பவர் சும்மா இருக்கமாட்டார். "ஏதாவது காரணம் இல்லாமல் இருக்குமா?” என்பார்? இப்படி நாம் அன்பாக இருப்பதென்பது ஒரு சுய நலம் என்ற மனப்போக்கு நாட்டிலே, மனித சமுதாயத்திலே வளர்ந்தாகிவிட்டது.

'சைவசமயம்' என்று சொன்னால் அது அன்புச் சமயப் அதனால் 'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பில்லை' என்றார். எங்கே பார்த்தாலும் சைவ சமய வரலாற்றிலே பார்த்தால் "அன்பின் பிழிவு, அன்பின் நெகிழ்ச்சிதான்." ஒரு சிறிய கதை சொன்னால் அன்புக்கு எவ்வளவு அருமைப்பாடு என்பது தெரியும். திருப்பனந்தாள் என்று தமிழ்நாட்டிலே ஒரு திருத்தலம் இருக்கிறது. அந்தக் காலத்தில் ஆணோ, பெண்ணோ விரும்புகிறவர்கள் போய் பெருமானுக்குப் பூப்போட்டுக் கும்பிடலாம் என்பது பழங்கால விதிமுறை. இடைத்தரகர்கள் வருவதற்கு முன்பு இருந்த முறை. ஒரு அம்மையார் தினந்தோறும் வீட்டில் நல்ல பூவை எடுத்துத் தொடுத்துக் கொண்டு போய் ஒரு மாலை போட்டு சாத்தி விட்டு வணங்கிவிட்டு வருவார்கள். தடாதகைப் பிராட்டியார் என்று பெயர். ஒரு நாள் மாலை போடப் போகிற நேரம்! கடவுள் விளையாட நினைக்கிறார். கடவுள் நம்மோடு விளையாட ஆரம்பித்தால் நன்றாக விளையாடுவார். அவர் விளையாட வர வேண்டும். அவர் வருவதற்குத் தகுதியாக நாம் ஆகிவிட்டால், அதற்குப் பிறகு அவர் நம்முடன் நன்றாக விளையாடுவார்; போராடுவார்; சண்டைபோடுவார்; சாப்பிடுவார். எல்லாம் செய்வார். அவர் கற்பனைப் பொருள் அல்ல.

ஆனால், கடவுள் என்ன செய்வார்? சிறிது சோதித்துப் பார்ப்பார். இப்பொழுது நான் நினைத்தேனே! எட்டு மணி வரையில் உங்களைப் பேச வைத்துவிட்டு 8.45 மணி வரை கேட்க வைத்து நீங்கள் அலுவல்களுக்குப் போகிறீர்களா? இல்லையா? என்று நினைத்தேனல்லவா? அது போல, சிவபெருமான் என்ன செய்தார்? அந்த மாலையை எடுத்து சாத்தப் போகிற நேரம் பார்த்து இடுப்பிலிருந்த புடவையை நெகிழச் செய்கிறார். கையில் மாலையை எடுத்து சுவாமிக்குப் போட வேண்டும். புடவை இடுப்பில் நெகிழ்கிறது; அவிழ்கிறது. இப்பொழுது மாலையைப் போடுவதா? மாலையைக் கீழே வைத்துவிட்டு மானத்தை மறைக்க புடவையைக் கட்டுவதா? கேள்விக்குறி வந்தாயிற்று. ஒரு வினாடிதான் இந்த சிந்தனை. தன்னிடத்திலே அளவுகடந்த நம்பிக்கையும், ஈடுபாடும் கொண்ட பக்தர்கள் வாழ்க்கையில் வினாக்கள் கேட்கப்பட்டால், பிரச்சனைகள் வந்தால், அதற்கு முடிவு காண்கிற பொறுப்பு கடவுள் எடுத்துக் கொள்வாரே தவிர இவர்களிடம் விடுவதில்லை. அதை எல்லா இடத்திலேயும் பார்க்கலாம்.

பிரச்சனைகளைக் கடவுளிடம் விட்டுவிட்டால், அவன் சுலபமாக முடிவு எடுத்து விடுவான். இப்பொழுது நமக்குக் கடவுளிடம் விட விருப்பம் கிடையாது. கடவுளிடம் பிரச்சனையை விடாமல் நாமாக எடுத்துக் கொண்டு போய், "நாமாக ஜோசியரிடம் கேட்டு, அவன் எட்டுக் குழப்பம் குழப்பி, பின் புத்தி சொல்வதற்காக அவனிடம் ஆலோசனை கேட்டு, எல்லாவற்றையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி நம்மைப் பைத்தியக்காரனாக்கி விடுவான். பிரச்சனை என்றால், நீ கடவுள் நம்பிக்கை உடையவன் என்றால் நீ கடவுளிடம் விட்டுவிடு. உடனே இந்த அம்மையார் பார்த்தார்கள். கடவுள் நம்பிக்கை வந்தாகி விட்டது. கடவுள் பார்த்தார். புடவை கீழே விழுந்து விடக் கூடாது. மாலையைப் போடவில்லை என்றாலும் அந்த அம்மையார் வருந்துவார்கள் என்று சொல்லி, அந்தத் திருமேனி உருவம் உடனே குனிந்து, அந்த எக்கிய நிலையிலேயே மாலையைப் போடக் கூடிய அளவுக்கு அந்தத் திருமேனி குனிந்து கொடுத்தது. திருமேனி குனிந்து கொடுத்தவுடனே அந்த அம்மையார் எக்கிய நிலையிலேயே மாலையைப் போட்டு விட்டுத் தற்காத்துக் கொண்டார்கள்.

அப்படிக் குனிந்த சுவாமி நீண்ட நாள் நிமிரவே இல்லை. இந்தச் செய்தி சோழனுக்கு எட்டியது. சோழன் நாட்டிலே, சுவாமி. இப்படிக் குனிந்திருக்கக் கூடாது என்று நிமிர்த்த முயன்றான். சங்கிலிபோட்டு யானையைக் கட்டி, குதிரையைக் கட்டி இழுத்து சுவாமியை நிமிர்த்த முயன்றான். சுவாமி நிமிரவில்லை. இந்தச் செய்தி இப்படியே பரவுகிறது.

திருக்கடவூர் என்ற ஊரிலே ஒருவர் இருந்தார். அவர் மிகவும் அன்பாக இருப்பவர். கடவுளிடத்திலும் மிகவும் அன்பாக இருப்பவர். அவருக்கு அந்தச் செய்தி கிடைத்தவுடன் நாம் போய்ப் பார்ப்போம் என வந்தார். அவர் இந்த யானை, குதிரை எல்லாவற்றையும் அவிழ்க்கச் சொல்லி விட்டு, சங்கிலியெல்லாம் கழட்டச் சொன்னார். இரண்டு அல்லது மூன்று முழத்திலே தென்னை நாறினால் ஆன கயிறு எடுத்து, தனக்கும் அந்த சுவாமிக்குமாக முதுகிலே போட்டுக் கட்டி, அவர் மூச்சுப் பிடித்து இழுக்க முயன்றார். உடனே, சிவபெருமான் நினைத்தார் "ஐயோ! இந்தக் கயிறு முரட்டுக் கயிறாக இருக்கிறதே. இந்தக் கயிறு போட்டு இவன் இழுக்கிறானே, இவன் முதுகெலும்பிலும், முதுகிலும் உறுத்தி வலிக்குமே” என நினைத்தார். உடனே நிமிர்ந்தார். இறைவன் எதனால் குனிந்தார்? அன்பினால் குனிந்தார். அப்படியென்றால், திரும்பவும் நிமிர வேண்டுமென்றால் அன்பினால் தான் நிமிர வேண்டும். கடவுள் அன்பாக இருப்பார் என்பதற்கு ஒரு உதாரணம் சொன்னேன். பணபலம், படை, குதிரை, யானை நிமிர்த்த முடியாத ஒன்றை ஒரு குங்கிலியக் கலையனாருடைய முதுகிலே கயிறு போட்டவுடன் அது நிமிர்கிறது என்றால், குங்கிலியக் கலையனாருடைய முதுகிலே கயிறு உறுத்துமே என்பதற்காக நிமிர்ந்தார். எனவே, பிரச்சனை என்றால் கடவுளிடம் விட்டுவிட வேண்டும்.

இப்பொழுது பாஞ்சாலியை எடுத்துக் கொள்ளுங்கள். துரியோதனன் அவையில் கொண்டு வந்து துகில் உரிகிறார்கள். அவன் துகில் உரிந்து கொண்டே வருகிறான்; புடவை குறைந்து கொண்டே இருக்கிறது. இவள் கத்திக் கொண்டே இருக்கிறாள். புடவையை நன்றாக இருக்கி தன் இடுப்பில் கட்டிப் பிடித்துக் கொண்டே கத்துகிறான், "கண்ணா, கண்ணா" என்று கத்துகிறாள். கடவுள் பார்த்தார். இனியும் அவளுக்கு நம்பிக்கை இருக்கிறது. தன்னால் காப்பாற்றிக் கொள்ளமுடியும் என்று நினைக்கிறாள் ஒன்றை மறந்து விடாதீர்கள். நீங்கள் உங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிற வரையில் கடவுள் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டே இருப்பார்; வரவே மாட்டார்; ஓர் உதவியும் செய்ய மாட்டார். நம்மால் முடியாது என்று ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்தால் கடவுள் வருவார். ஏனென்றால், தேவையில்லாமல் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டுத் தொல்லைபடுத்தமாட்டார். அது ஒரு மிகவும் நடுநிலைமையான ஒரு நிலை, உயிர்களின் மன நிலை வளர்ச்சி அடைய வேண்டும் என்பதுதான்.

பாஞ்சாலி முதலில் கையை இடுப்பில் பிடித்துக் கொண்டே கத்திக் கொண்டிருந்தாள். "கண்ணா, கண்ணா” வென்று, கடைசிச் சுற்றுதான் மீதி. இனி நம்மால் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்று தெரிந்து கைகளைத் தலைமீது தூக்கி, "கண்ணா" வென்று கத்தியவுடனே புடவை நீண்டது. அதுதான் நாம் கோவிலுக்குப் போனால் கைகளைத் தலைமீது குவித்துக் கும்பிடுவது என்பது. அதன் பொருள் என்னவென்றால், என்னுடைய முயற்சியினால் என்னுடைய வாழ்க்கையை நடத்திக் கொள்ள முடியவில்லை. என்னுடைய பிரச்சனைகளைத் தீர்வு காண முடியவில்லை. 'கடவுளே நீ உதவி செய்' என்பதின் அடையாளம் தான் கைகளைத் தலைமீது தூக்கி வணங்குகிற பழக்கம்.

ஒரு கடற்கரைக்குப் போகிறோம். நீச்சல் குளத்திற்குப் போகிறோம். ஒருவன் நீந்திக் கொண்டிருக்கிறான். கை மேலே நீள்கிறது. கரையிலே நிற்கிற நாம் என்ன நினைப்போம்? நீந்துகிறான் என்று தான் நினைப்போம். அவன் உடலெல்லாம் தெரியாமல், கழுத்து வரை உள்ளே போய் கைமட்டும் மேலே தூக்கினால், நீந்தவில்லை போலிருக்கிறது. கீழே விழுந்து விட்டார். சரி கீழே இறங்கித்துக்கு என்று சொல்லுவோம். அதுபோல, வாழ்க்கையில் அவிழ்ந்து விடுவோம் போல் இருக்கிறது. என்னைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு என்றைக்குத் தோன்றி நம்முடைய கைகளைத் தலைமீது குவித்து வணங்கிக் கூப்பிடுகிறாமோ, அப்பொழுது இறைவுன் வெளி வந்து உதவி செய்வான். அதுவரையில் செய்யக் கூடாது என்பதல்ல. அவரவர் முயற்சியும், அறிவும், திறமையும் பயன்பட்டு வருகிற பொழுது நாம் ஏன் வீணாக வரவேண்டும் என்றுதான் இறைவன் வருவதில்லை. அதனால்தான் "சிரங்கு விவார் ஒங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க" என்று மாணிக்கவாசகர் சொன்னார். எனவே கடவுள் நம்மிடத்திலே அன்பு மயமானவர்.

அவர் உன்னிடத்திலே கேட்பதெல்லாம் அன்புதான். நாம் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் என்றெல்லாம் தருகிறோமே, அதை அன்போடு தருகிறோமா? சிலபேர் அன்பைத் தவிர மற்றதெல்லாம் கடவுளுக்குக் கொடுப்பார்கள். சூடம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் எல்லாம் தட்டிலே இருக்கிறது. தேங்காய் மூடி வரும்வரை காத்துக் கொண்டிருப்பார்கள். தவிர, அன்பைத் தரமாட்டேன் என்கிறார்கள். அது கூடாது. கடவுளுக்குத் தேவை நம்முடைய இதயபூர்வமான அன்புதான். அந்த அன்பிலே சிலர் "அப்பா” என்று கூப்பிடுவது தான் ஆசைப்படுகிறார் அவருக்கும், உனக்கும் உறவு வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார். அவரை நீ பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று தான் ஆசைப்படுகிறார். ஆனால், இப்பொழுது உபயம் என்று சொன்னால், ரூபாய் ஆயிரம் அல்லது ஐநூறு கொடுத்தால் தான் என்று சொன்னால் நாம் கோயிலுக்கு உபயம் செய்துதான் கடவுளின் அன்பைப் பெறவேண்டுமென்பதில்லை. நீ ஒன்றுமே கொடுக்க வேண்டாம் நீ வந்து தூரத்திலே நின்று பார்த்துவிட்டு "அப்பா" என்று அன்பாகக் கும்பிட்டுப் போனால் கூட அவருக்கு மிகவும் திருப்தியாக இருக்கும். ஆகவே, காசு, பணத்தால், பொருளால் கடவுளின் அன்பைப் பெற நினைப்பது தவறு. கடவுள் என்ன 'லஞ்சம்' வாங்குகிறவரா என்ன? 'லஞ்சம்' வாங்கிக் கொண்டு அருள் செய்கிறார் என்றால் கிடையாது. அது நாம் பழக்கத்தில் கொண்டு வருவது.

தாய் குழந்தைக்கு மிட்டாய் கொடுப்பாள். பின் சிறிது நேரம் கழித்து பாதி தின்று கொண்டிருக்கும் பொழுது, அப்புறம் குழந்தை சிறிது கிள்ளிக் கொடுக்கும் இதில் குழந்தையா தாய்க்கு மிட்டாய் கொடுக்கிறது என்று பொருள். அது ஒரு உபச்சாரம் அவ்வளவு தான். அதுபோல உலகிலுள்ள எல்லாப் பொருளும் கடவுளுக்குச் சொந்தம். அவன் தான் உலகம். நீ அன்பினாலே, பெருமையினாலே, பாசத்தினாலே, கொடுக்கக் கூடியது தானே தவிர, அதற்கு இப்படித் தான் பழக்கம் என்றல்ல, நாம் தூய்மையான மனத்தோடு, நல்ல தூய அன்போடு கடவுளை வணங்குவது தான் சிறப்பான பொருள்.

பூவும், தண்ணீரும் போதுமானது. கோயிலில் பலபேர் வருவதினாலே, கடவுளை வழிபடுவதனாலே, ஒரு நல்ல விளக்குப் போட்டால் போதுமானது. அதனால், கோயிலில் நாம் எளிமையாக வழிபாடு செய்யலாம். நம்முடைய மக்கள், நம்முடைய வாழ்க்கையிலும் சரி, கோயில் நிகழ்ச்சிகளிலும் சரி, நிறையப் பணத்தை செலவழித்து விடுகிறோம். நம்முடைய வாழ்க்கைத் தேவைக்கு மேலே, செலவழித்து, பணம் இல்லாமல் கடைசியில் நாம் தொல்லைப்படுகிறோம். எனவே, வாழ்க்கைச் செலவுகளாக இருந்தாலும் சிக்கனமாகச் செய்ய வேண்டும். சமயச் சடங்குகளாக இருந்தாலும் சிக்கனமாகச் செய்ய வேண்டும். கடவுள் உலகத்தில் எந்தப் பொருளையும் எதிர்பார்த்துக் காப்பதில்லை. அவர் நீ வருவாயா என்று எதிர்பார்க்கிறார், நீ கூப்பிடுவாயா என்று எதிர்பார்க்கிறார். நீ அன்புடன் அழைப்பாயா என்று தான் எதிர்பார்க்கிறார். அதைத் தவிர வேறொன்றுமில்லை. அதனாலே, காசுகளை வைத்து, பணத்தை வைத்து, சடங்குகளின் ஆடம்பரங்களை வைத்து கடவுளை நாம் வழிபட வேண்டுமென்பதில்லை. மற்ற ஒப்பனையெல்லாம் மனிதனுடைய மகிழ்வுக்குத் தானே தவிர வேறொன்றுமில்லை.

நீங்கள் முத்து மாரியம்மனை வணங்குகிறீர்கள். காலையில் நான் முத்து மாரியம்மன் என்ற பெயரைப் பார்த்தவுடன், பாரதியின் முத்து மாரியம்மன் பாடல் ஒன்றை நினைத்துப் பார்த்தேன். பாரதி எப்படி நம்முடைய வாழ்க்கையிலே நிகழ வேண்டும் என்று கற்பனை செய்து காட்டுகிறான். நாள்தோறும் நாம் கவலையிலே இணைந்து, அழிந்து பாவியாக வாழ்கிறோம். நாள் முழுவதும் கவலைப்படுவது என்பது வாழ்க்கைக்கு மிகவும் பிடிக்காத ஒரு செயல். மரத்தைக் கரையான் பிடித்தால், எப்படி அழிந்து போகிறதோ, அதே போல, மனிதனைக் கவலை பிடித்தால் அழிந்து போகும். கவலையினால், ஆகக் கூடிய காரியம் ஒன்றுமே கிடையாது. வருவன வரும், வராமல் போகப் போவதில்லை.

"பரியினும் ஆகாவாம் பால்அல்ல உய்த்துச்
சொறியினும் போகா தம"- (குறள் - 376)

என்றார் திருவள்ளுவர். நீ ஒன்றைக் கட்டிப்பிடித்துக் காப்பாற்றினாலும் உனக்கு உரியது அல்லாத்து போகத்தான் போகிறது. நீ வரவேண்டாம். வரவேண்டாம் என்று விரைந்து கதவைச் சாத்தினாலும் வருவது வந்தே சேரும். எனவே, நாளை என்ன நிகழப் போகிறது என்பதைப் பற்றி அலட்டிக் கொள்ளாதே நிகழ் காலத்தை உறுதியாக நம்பு, அதில் பிடிவாதமாக இரு சிறப்பாக வாழு. நேற்று நடந்தது நடந்து விட்டது. நாளை வரப்போவதும் வரத்தான் போகிறது. நாம் ஏன் கவலைப் படுவானேன்.

இந்த ஜோசியக்காரன், ராசிபலன் எல்லாம் நம்முடைய சமூகத்தை பலவீனப்படுத்துவன. நம்முடைய சமூகம் என்றைக்கு ராசிபலன் எல்லாம் படிக்காமல் தப்பித்துக் கொள்கிறதோ, அன்றைக்கு நீங்கள் நிச்சயமாக வளர்வீர்கள்; வாழ்வீர்கள். காரணம், அது நம்முடைய வாழ்க்கையை அலைமோதவிட்டு விடுகிறது. எப்படி இருந்தாலும் நமக்கு ஒரு கடவுள் இருக்கிறார். அவரை நாம் நம்புகிறோம். நம்முடைய தன்னம்பிக்கை இருக்கிறது. கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் என்பது இரண்டு பெரிய இயந்திரங்கள்; பெரிய கருவிகள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

எனவே இந்த நம்பிக்கைகளோடு நீங்கள் வாழ வேண்டும். கவலை என்பதைச் சற்றும் அணுகவிடக் கூடாது. அது மனித உலகத்தையே அரித்துத் தின்கிற கொடிய பூச்சி, அதற்கு இடம் கொடுக்காதீர்கள். இறைவனிடத்திலே, உனக்கு நான் என்ன ஏவல் செய்ய வேண்டும் என்று கேட்டுப் பழகுங்கள். அவருக்கு உங்களால் இயன்ற சிறிய சிறிய பணிகளைச் செய்து, காசு இல்லாமல் பணம் இல்லாமல் நல்ல பணிகளைச் செய்து, நீங்கள் பணிவிடை செய்து வாழ வேண்டும். எந்தத் தொழிலாக இருந்தாலும், இறைவனுடைய கருணையினால், அது நல்ல தொழில் என்று உணர வேண்டும், நமக்கு இருப்பதிலே திருப்தி இல்லாமல், இல்லாதவைகளைப் பற்றிக் கவலைப்பட்டாலே கவலை தோன்றிவிடும். நமக்கு இப்பொழுது கிடைப்பது கஞ்சிதான் என்று சொன்னாலும், இந்தக் கஞ்சியை விட சிறந்த அமுதம் வேறொன்றுமில்லை என்று கருதிச் சாப்பிட்டால், அது அமுதமாக மாறிவிடும். அமுதமே கிடைத்து விடுகிறது. இந்த அமுதத்தைவிட அந்த அமுதம் சிறப்பானது என்று எண்ணிச் சாப்பிட்டால் சாப்பிட்டது நஞ்சாக மாறிவிடும். எனவே, மனிதனுக்குத் தன்னம்பிக்கையும், தன்னிறைவும், போதும் என்ற மனப்போக்குகளும் தேவையானவை.

எதிர்காலத்தைப் பற்றி நன்கு திட்டமிட வேண்டும். எல்லாவற்றிற்கும் நம்முடைய சக்திதான் அடிப்படையாக இருக்கிறது. அறிவு, ஆற்றல் படைத்ததாக உலகத்தில் பார்க்கலாம். சிலர் அறிவு உடையவர்களாக இருப்பார்கள். ஆனால், ஆற்றல் இல்லாதவர்களாக இருப்பார்கள். சிலருக்கு அன்பு இருக்கும். ஆனால் அன்பை நெறிப்படுத்தி பயன்படுத்தத் தெரியாமல் இருப்பார்கள். நன்கு அன்புடன் இருப்பார்கள். ஆனால், அவர்களால் ஒரு பயனும் இருக்காது. காரணம், அவர்களுடைய அன்பைச் செயல்படுத்துகிற ஆற்றல் இல்லை. சிலருக்கு நல்ல அறிவு இருக்கும். ஆனால், அவர்களால், அறிவை செயல்பாட்டிற்குக் கொண்டு வர முடியாது. நன்கு நிறையப் படித்திருப்பார்கள். நல்ல ஞானம் இருக்கும் ஆனால் செயல்பாடு இருக்காது. எவ்வளவு உயர்ந்த தத்துவமானாலும் அதற்குச் செயல் உருவம் வேண்டும். சிலருக்கு ஒழுக்கம் இருக்கும். அது கூட ஆற்றலாக மாறாது. கண்ணகிக்கு என்ன சிறப்பு? பூம்புகாரிலே அவள் கற்புடையவள் தான். தெய்வத்தைக் கூட வணங்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தாள். நோன்பு நோற்றாள். ஆனால், அங்கே அவளுடைய கற்பு ஆற்றலாக உருவாக்கப்படவில்லை. கனவாகக் கடந்து கொண்டிருந்தது. ஆனால், பாண்டிய நாட்டிற்குச் சென்றவுடன் மதுரையில் அந்தக் கற்பு ஆற்றலாக உருவாக்கப்படுகிறது. ஓர் அரசையே அறைகூவல் கேட்குமளவிற்கு, ஒரு நாட்டையே எரிக்கிற அளவிற்கு அவளுக்கு ஆற்றல் பிறந்திருக்கிறது என்று சொன்னால், கற்பு ஆற்றலாக உருவாக்கப் பட்டிருக்கிறது. மாதவியினுடைய கற்பு ஆற்றலாக உருப்பெறவில்லை; பாண்டியமாதேவியின் கற்பு ஆற்றலாக உருப்பெறவில்லை. எனவே, கற்பானாலும் சரி ஒழுக்கமானாலும் சரி, அறிவானாலும் சரி, அன்பானாலும் சரி, அது ஆற்றலாக உருப்பெற வேண்டும். ஆற்றல் என்பதுதான் ஆதாரம்; சக்தி அதைப் பாரதி சொல்லுவான், எல்லாவற்றிற்கும் ஆதாரம் சக்திதான் என்று.

ஆக நம்பிக்கை என்பது வாழ்க்கைக்கு இன்றியமையாதது. நாளைய வாழ்க்கை நிச்சயமாக நம்முடையது என்று நம்புங்கள். நாளை நிச்சயமாக நாம் எடுத்த காரியம் நடைபெறும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். தேர்வில் வெற்றி பெறுவோம் என நம்பிப்போய் உட்கார்ந்து எழுதினால் தெரியாத வினாவுக்குக் கூட விடை கிடைக்கும். "தவறி விடுவோமா? தவறி விடுவோமா?” என்று பயந்து கொண்டே இருந்தால், படித்தது கூட மறந்துவிடும். எனவே, வாழ்க்கையில் தன்னம்பிக்கை தேவை. "நான் இதைச் செய்வேன்; செய்யக்கூடும்; செய்ய முடியும்" என்ற தன்னம்பிக்கையோடு வளர வேண்டும்; வாழ வேண்டும்.

எனவே, சைவ சமயம் என்பது ஆற்றல் மிக்க சமயம், அது ஒரு காலத்திலும் கொத்தடிமைப்பட்டதே கிடையாது.

"நாமார்க்கும் குடியல்லோம்
நமனை யஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம்
நடலை யல்லோம்
ஏமாப்போம்; பிணியறியோம்
இன்பமே எந்நாளும் துன்பமில்லை”

என்று அப்பரடிகள் பாடினார். பாட்டை பார்த்தால் பீடு நடை போடுகிற பாட்டாக இருக்கும். ஆனால், அது விபூதி பூசிய துறவி பாடின பாட்டு. அந்தத் துறவி, பெரிய அரசியல் புரட்சியும் அருளியல் புரட்சியும் செய்தவர்.

"நாமார்க்கும் குடியல்லோம்; நமனையஞ்சோம்” என்கிறார். சிலபேர் செத்துவிட்டால் கூடப் பரவாயில்லை. செத்து விடுவோமா என்று பயந்து கொண்டே செத்துப் போய் விடுவார்கள். எவ்வளவு முறைதான் ஒருவர் சாவது? சிலபேர் நடை பிணம் போல் நடப்பார்கள். உற்சாகமே இருக்காது; ஊக்கமே இருக்காது; கிளர்ச்சியே இருக்காது. ‘என்னவோ இருக்கிறேன்' என்பார்கள். அது கூடாது.

'நடலையல்லோம்; ஏமாப்போம்; பிணியறியோம். இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்று சொன்னார்கள். இந்த அருமையான சைவசமயத்தை நீங்கள் வாழ்க்கையாக ஏற்றுக் கொள்ளுங்கள். புலால் உண்பதைத் தவிர்ப்பதைக் கூடுமானவரை முயற்சி செய்யுங்கள். நம்முடைய வாழ்க்கையில் அன்பு சார்ந்த பழக்க வழக்கங்கள் இருக்க வேண்டும்; நாம் மற்றவர்களிடம் அன்பு காட்டுவதோடு, மற்றவர்களும் நம்மிடம் அன்பு காட்டுகிற அளவுக்கு நாமும் எளிமையாக இருக்க வேண்டும். மனித உயிரிடம் மட்டுமின்றி, மற்ற உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டும். நம்முடைய வாழ்க்கையின் செயல்பாடுகள் கண்டிப்பாக மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும். நம்முடைய அன்பையும், அறிவையும் நாம் ஆற்றலாக உருவாக்க வேண்டும். கடவுளை நம்புகிற பொழுது முழுமையாக நம்ப வேண்டும். கடவுள் நம் பிரச்சனைகளுக்குத் துணை நிற்பார் என்று நாம் உறுதியாக நம்பினால் கடவுள் கண்டிப்பாகத் துணை நிற்பார். வாழ்க்கையில் கவலை என்பது எந்த இடத்திலும், எந்தக் கோணத்திலும் இருக்கக் கூடாது. “நாளை நமக்கு உரியது” என்ற நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் அன்பு மிளிரட்டும். அதன் மூலம் நீங்களும் வாழ்ந்து, மற்றவர்களையும் வாழ வையுங்கள். வாழுங்கள் என்று கூறி வாழ்த்தி விடைபெறுகிறேன்.


பிழை காட்டு: <ref> tags exist for a group named "*", but no corresponding <references group="*"/> tag was found
பிழை காட்டு: <ref> tags exist for a group named "t", but no corresponding <references group="t"/> tag was found