குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15/பொதுவியல் கட்டுரைகள்
3
1. தமிழ்
இன்றைய உலக வரலாற்றில் மொழி இன்றியமையாத ஓர் இடத்தைப் பெற்றிருக்கிறது. நம்முடைய நாட்டில் பலர் மொழியைப் பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொள்ளாமல், மொழியைப் பற்றிப் பேசுவது, எண்ணுவது, மொழி உரிமையைக் கேட்பது குற்றம் என்று கருதுகிற காலத்தில் நாம் வாழ்கிறோம்! இந்தத் தலைமுறையில் தமிழர்களாகிய நமக்குச் சில இன்றியமையாத கடமைகள் இருக்கின்றன என்பதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
ஒரு மனிதன் ஒடுகிறான்; நடக்கிறான்; உழைக்கிறான்; முயற்சி செய்கிறான். இதற்கு அவனுக்கு இரண்டு கால்கள் அவசியமாகத் தேவை. நல்ல மாளிகைக் கட்டி சுவர்கள் எழுப்பி அதற்கு முன்னே பெரிய பூங்கா என்று பெயரிட்டிருக்கிறார்கள். அந்தப் பூங்கா பூங்காவாக இருக்க வேண்டுமென்றால், அங்கே செடிகள் தேவை. உயர்ந்த மலர்ச் செடிகளாயினும் அதற்கு வேலி தேவை. அது போலவே, மாபெரும் கோபுர அமைப்புடைய கோயிலாயினும் அங்கு மூர்த்தி இருந்தால்தான் சிறப்பு. பூங்காவிற்கு வேலியும், ஆலயத்திற்கு மூர்த்தியும் எப்படி இன்றியமையாதவையோ அதுபோல மனித சமுதாயத்திற்கு மொழி இன்றியமையாத ஒன்று என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. சிலர் பரந்த நோக்கத்தில் மொழி என்பது கருத்தைத் தெரிவிக்கத்தானே? அது எந்த மொழியாக இருந்தால் என்ன? மொழியை வைத்து வாதாடக் கூடாது என்று சொல்லுகிறார்கள். மொழி கருத்தைத் தெரிவிக்கும் சாதனம் என்பதைவிட மொழிதான் கருத்தையே உருவாக்கத் துணை செய்வதால் மொழி விழியைப்போல் போற்றப்பட வேண்டும் என்றுதான் சொல்லவேண்டும்.
வழி வழியாக வளர்ந்திருக்கின்ற தமிழ்ச் சமுதாயத்தைப் பார்க்கின்றபோது, அதனுடைய இலக்கியச் சிறப்பு, மற்ற எல்லாச் சிறப்புக்களையும் பார்க்கும்போது, மொழி சமுதாயத்தின் ஊற்றுக்கண்கள்போல இருந்து வருகிறது.
இரண்டு கால்களும் இடைக்காலத் தமிழகத்தில் நொண்டியாகப் போய்விட்டன.
ஒரு கால் தாய்மை உலகம். இன்னுமொரு கால் தாய் மொழி. இந்தத் தாய்மை உலகத்தை இடைக் காலத்தில் அடிமையாக்கினோம். •
அதுபோலவே, தாய்மொழி ஆட்சி மொழியாகாமல் வேற்று மொழி ஆட்சியில் இருந்தது. ஆட்சியில் தமிழ் இல்லை. இசையரங்கிலும் தமிழ் இல்லை. ஆலயத்திலும் தமிழ் இல்லை. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சம் போராடி ஆட்சிமொழி பயிற்சிமொழி என்று சொல்லுகிறோம்.
கோயில் வழிபாட்டை எடுத்துக் கொண்டால் தமிழிலும் வழிபடும் உரிமை வேண்டும் என்றுதான் கூறுகிறோம்.
இந்த எண்ணங்களைப் பார்க்கும்போது என்னுடைய வழிவழிப் பரம்பரையினர் நினைக்கின்றார்கள். எனக்கு இரண்டு மொழிகளும் கண்கள் போலத் தேவையானவை. சமய உலகம் மொழிச் சிக்கலுக்குள் சிக்கக் கூடாது என்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.ஓரளவு மனித குலத்திற்குப் பரந்த பண்பாடு தேவை தான். ஆனாலும் தற்கொலை செய்துகொள்ளுகிற அளவிற்குப் பரந்த பண்பாடு இருப்பது நமக்கு நல்லதல்ல.
கவிஞர்கள் புலவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
தனி மனிதனுக்கு ஊறு வரும்போது அவன் பொறுமை காட்ட வேண்டியது இன்றியமையாத ஒன்று. தனி மனிதனுக்குக் கேடு வரும்பொழுது அமைதியாக இருப்பது தேவையான குணங்களில் ஒன்று. ஆனால் நாட்டிற்கும், இனத்திற்கும் ஊறு வரும்பொழுது பொறுமையோடு இருக்க வேண்டும் என்றால் வாழ்ந்த பரம்பரை வீழ்ந்து போகும்.
என்னை ஒருவன் இழிவுபடுத்தினால் பொறுமையாக இருக்க முடியும்; அது பண்பாடும்கூட.
ஆனால் என் மொழியை, மொழிவழி நாகரீகத்தைப் பழித்துப் பேசும்போது பொறுமையாக இருந்தால் மானமற்றவன் என்றுதான் பொருள்.
இது சமய உலகத்திற்குக்கூட இன்றியமையாத ஒன்று என்று வற்புறுத்திக் கூற விரும்புகிறேன்.
அந்தச் சமயம்-அந்தச் சிந்தனை வழியாகப் பிறக்கின்றது அனுபவ வாழ்க்கை.
அறிவைத் தொட்டு உணர்வைத் தொட்டுத் தாய்மொழி ஆணை புரிவதுபோல் இன்னுமொன்று துணை செய்ய முடியாது.
பொதுவாக ஆங்கிலத்தைப் பயில இந்தியைப் பயில ஆசிரியர்கள் தேவையில்லை. ஆனால் தமிழைப் பயில வேண்டுமானால் இலக்கண முறையோடு படிக்கவேண்டுமென்றால் ஆசிரியர் தேவைதான்.
ஆனால் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள், பேசட்டுமே தெரிந்தவர்கள், கவிதைகளைக் கேட்டால் எழுச்சி பெறுகிறார்கள்! அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்றாலும் இன எழுச்சிக்கும் தாய்மொழி இன்றியமையாதது.
தமிழ் காலத்தால் மூத்ததாக, இந்த வையம் கையசைத்த காலத்திலேயே பையப் புலவர் நாவில் தவழ்ந்து பழகியது என்பார் கவிஞர்.
அந்தக் கவிஞனின் கருத்து இன்றியமையாத ஒன்று. உலகத்தின் பல்வேறு இலக்கியங்களை-வரலாறுகளை ஆராய்ந்து பார்க்கும்போது, மற்ற இனங்கள் மொழிவழிப்பட்ட காலத்திற்கு முன்பே தமிழ் வளர்ந்திருந்தது.
இதற்குச் சான்றாகச் சொல்ல வேண்டுமானால் தமிழுக்கு உள்ள இனிமையும் எளிமையும் உலகத்தில் வேறு எம்மொழிக்கும் இல்லை என்று கூறலாம். இந்த இனிமையும் எளிமையும் தமிழுக்கு எப்படி வந்து சேர்ந்தது?
இதனோடு தகுதியாக வைத்து எண்ணக்கூடிய பழமையுடையதாக வட மொழியைச் சொல்வார்கள். அதற்குக்கூட இல்லாத ஒர் எளிமை, இனிமை தமிழுக்கு எப்படி வந்து சேர்ந்தது என்று பார்க்கவேண்டும்.
கண்ணை மூடிக்கொண்டு பண்டு தொட்டே தமிழுக்கு இனிமையும் எளிமையும் இருந்தது என்று சொல்லத் தயாராக இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளாகக் கவிஞர்கள், புலவர்கள், நாவில் பழகி பழகித் தமிழ் இனிய, எளிய மொழியாக உருவாகியிருக்கிறது. அதனால்தான் தமிழுக்கென்று இனிமையிருக்கிறது. தமிழ் காலத்தால் மட்டுமல்ல கருத்தாலும் மூத்ததாக இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. மனிதனுடைய குறைகளைப் பார்த்து அவனைத் திருத்திப் பக்குவப்படுத்தத் தேவையான அளவில் தமிழ் வளர்ந்திருக்கிறது. மனித மனத்தைப் பக்குவப்படுத்தும் திறன் அதற்கு உண்டு. தமிழனிடத்திலே ஒரு பெருங்குறை உண்டு. சீக்கிரமாக ரசிப்பான். ஆனால் சீக்கிரமாகச் செயல்பட மாட்டான். கவிதைகளை நன்றாகக் கேட்பார்கள்; மிக நன்றாக இருக்கிறது என்று கையொலி எழுப்புவார்கள். ஆனால் மார்பைக் காட்டு என்றபொழுது பலர் பின்னே போகிற நிலையைப் பார்க்கலாம்.
அறிவு ஊட்டும் தமிழ் அறிவுக்கப்பால் உணர்வையூட்டுகிற தமிழ், செயல்படுத்தத் தூண்டும் தமிழ் என்று தமிழை முத்தமிழாக, இயல், இசை, நாடகத்தமிழ் என்று பிரித்தார்கள்.
இவற்றை நாம் நமது உரிமையாக்கிக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் இருக்கின்ற ஒரே குறை தமிழர்கள் எதையும் சீக்கிரம் ரசித்துத் தலையசைத்துக் கேட்பார்கள். ஆனாலும் அடுத்த நிமிஷத்தில் செயல்படுத்த வரும்பொழுது, அவனுடைய தன்னலம், சுயநலம் குறுக்கே நின்றுவிடும் என்பது அவனுடைய சமுதாயத்திற்குப் பெரும் கேடாக இருக்கிறது என்பதைத் தொடர்ந்து சரித்திரத்தில் பார்க்கிறோம்.
நமக்குத் தேவை இலக்கியத்தை ரசிப்பது மட்டும் அல்ல. எந்த ஒரு வரலாறு ஆயினும், எந்த ஒரு கவிதையாயினும், அதைச் செயல்படுத்த முடிகிறதா என்று தமிழர்கள் பார்க்க வேண்டும்.
தமிழர்களுக்குத் தங்களுக்கென ஒரு மரபு இருக்கிறது என்பதை மறந்துவிடுகிறார்கள்.
எது வந்தாலும் கடைவீதியில் கொள்முதல் செய்வதில் இவர்களைவிடச் சிறந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. வெகு சீக்கிரமாகக் கொள்முதல் செய்வார்கள்.
அதிலும் ஒரு பெருங்குறை என்னவென்று சொன்னால், தமிழர்கள் எப்பொழுதும் சீக்கிரமாக அடிமைப் படமாட்டார்கள்; நிச்சயமாகப் போர் செய்வார்கள். ஆனால் கொல்லைப் புறங்களின் வழியாக, சாளரங்கள் வழியாக வருகிற சதி இருக்கிறதே, அது அப்பாவித் தமிழர்களுக்குத் தெரியாது. வந்ததற்குப் பின்னே போய்விட்டுப் போகிறது; பரவாயில்லை என்று பச்சாதாபம் பேசுவார்கள்.
இதனால் தமிழர்கள் தங்கள் சொந்த மொழிக்காகப் போராடவேண்டி இருக்கிறது.
நம்முடைய தமிழ் காலத்தாலும் கருத்தாலும் மூத்தது என்று இருக்கின்ற உணர்வை நாம் பெருக்கவேண்டும். இவைகள் எல்லாவற்றையும் நாம் நீண்டகால நினைவில் வைத்துக் கொண்டு செல்வதால் பயனில்லை.
இன்றைக்குத் தமிழ் வளர்கிறதா என்று பார்க்க வேண்டும். இன்று தமிழ் ஆர்வம் பொங்கித் ததும்புகிறது. கங்கையைப்போல் காவிரியைப்போல் பொங்கித் ததும்புகிறது என்று சொல்கிறார்கள். உண்மையில் நடைமுறையில் அப்படியிருக்கிறதா? உண்மையிலேயே தமிழ் ஆர்வம் கங்கையைப் போல்-காவிரியைப்போல் பொங்கித் ததும்பி வழிந்தோடுகிறதா? அப்படி ஓடுவதாக நான் கருதவில்லை. தமிழர் தமிழரைப் பார்த்தால் தமிழில் பேசுவது குற்றம் என்று கருதுகின்றனர். தமிழில் கோயில்களில் வழிபாடு செய்ய வேண்டியது என்ன அவசியம்: வடமொழியில் செய்யலாம் என்று பெருமையாகக் கருதுகிறவர்கள் இருக்கிறார்கள்.
இன்றைக்குத் தமிழ் ஒரே ஒரு துறையில்தான் வளர்ந்திருக்கிறது என்று சொல்லுகிறார்கள்.
அதுவும் பேசும் படத்துறையில் . வளர்ந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.
கலை, வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால் கலையே வாழ்க்கையாகிவிடுமா என்று தோன்றுகிறது.
கலை தேவைதான், வேண்டாம் என்று சொல்ல வில்லை. அடிமைப்பட்டு நொந்து, செத்துக்கொண்டிருக்கிற சமுதாயத்தின் வாழ்க்கை முழுவதும் கலையாக்கி விடுவோமேயானால், அதில் மகிழ்ந்து கடமைகளை மறந்து விடுவோம் என்று எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்.
கலை வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால் தமிழகம் இந்தத் துறையில்தான் முன்னணியில் வந்திருக்கிறது. சில பொழுது படிக்க, சில பொழுதில் தூக்கி எறியக் கூடிய கதைகளை, புத்தகங்களை எழுதுவதிலேயே நாம் ஈடுபட்டிருக்கிறோம்.
இதைவிட்டு இன்று தமிழுக்கு என்ன தேவை என்பதைத் தமிழ்ப் பெருமக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
உலக அரங்கிலே வானவெளிக்குச் செல்லுகிற காலத்தில் நாம் வாழ்கிறோம். வானவெளியில் சென்று அண்ட உலகத்தைச் சுற்றிவரலாம் என்ற காலத்தில் வாழ்கிற நாம், இந்தக் காலத்தில் இந்த நாட்டில் தாய்மொழியில் அறிவியலைச் சொல்லிக் கொடுக்கலாமா கூடாதா? என்ற ஆராய்ச்சியில் இருப்பதைப் பார்க்கும்போது வெட்கமாக இருக்கிறது! வேதனையாகவும் இருக்கிறது.
இன்றைக்கு ரஷ்யப் பேரறிஞன் வானவெளிக்குச் செல்கிறான். அமெரிக்க அறிஞன் வானவெளியைச் சுற்றி வருகிறான்.
இந்தக் காலத்தில்-இந்த நூற்றாண்டில் தமிழ் இளைஞர்கள் படிக்கின்ற கல்லூரிகளில் தமிழில் அறிவியலைப் போதிப்பதுபற்றி இன்னமும் சிந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால் அது வேதனைக்குரியதாகவே இருக்கிறது.
நாம் கங்கைக் கரையிலிருந்து நீர் எடுத்துவந்த பரம்பரை என்பது உண்மைதான். ஆனால் இந்த நூற்றாண்டில் அவைகள் சில பொழுது படித்து எழுச்சி பெறப் பயன்படும்.
ஆனால், நம்முடைய நாட்டில் தமிழ் வளர்ச்சி என்றால் அறிவியல் மொழி, பொருளியல் மொழியாகவும், தொழிலியல் மொழியாகவும் ஆக்க முயற்சி செய்யவேண்டும்.தமிழில் தொழிலியல், பொருளியல் நூல்கள் தேவை. நீண்ட நாட்களாக சக உறவைப்பற்றி-ஒப்புரவைப்பற்றி பேசுகிற நாட்டிலே, நேருக்கு நேர் ஒருவருக்கொருவர் முரண்பட்டுப் பேசுகின்ற காட்சிகளையும் தமிழனைத் தமிழன் இழிவு படுத்துகின்ற காட்சியையும் பார்க்கிறோம்.
இவைகளைப் பார்க்கும்போது நம்முடைய இலக்கியங்கள் நம்மால் சீரணிக்கப்படவில்லை என்று தோன்றுகிறது.
தவிர, குடும்பங்களில் வயது வந்தவர்களுக்கு இலக்கியப் பயிற்சி இன்று கிடையாது.
இந்த நாட்டில் மிகச் சிறந்த பொதுமறையாக விளங்கும் திருக்குறள்கூட மூன்றரைக்கோடி தமிழர்களில் இன்னும் இரண்டு கோடி மக்களுக்கு அறிமுகம் செய்யப்படவில்லையென்றால் அது என்னுடைய பொதுமறை என்று சொல்லித் தைரியமாக பவனி வருகின்ற நாட்களை உருவாக்கவில்லையென்றால் நம்முடைய இலக்கிய முயற்சிகள் எல்லாம் எங்கு சென்று முடியும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழர்கள் என்றால் அவர்களுக்கென ஒரு நூல் இருக்கிறது, அது வாழ்க்கை நூல். திருக்குறள் என்று சொல்லி, மூன்றரைக் கோடி தமிழர்களில் ஒரு கோடித் தமிழரைப் பாமரர் என்று ஒதுக்கிவிட்டால்கூட இரண்டு கோடித் தமிழர்களாவது படிக்கவேண்டும்.
ஒன்றாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் தேசத்தலைவர்கள் பலருக்கு இருக்கிறது. ஆனாலும் இந்தியா ஒன்றே என்பதை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், அப்படி விரும்புகிற அரசியல் தலைவர்களுக்கு ஒரு யோசனை சொல்லத் தோன்றுகிறது.
- ஒரு மொழியைப் பொது மொழி ஆக்குவதன் மூலம் இந்திய தேசத்தின் ஒற்றுமையைக் காப்பாற்ற முடியாது. இந்த நாட்டிலே எல்லா மொழியினர்க்கும், எல்லா மதத்தினருக்கும் ஏற்றதாக ஒரு தேசிய நூல் இருக்கிறது.
- அதுதான் திருக்குறள் என்று சொல்லவேண்டும். அந்த நூலை இந்தியப் பேரரசு இந்தியாவின் தேசிய நூலாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.
எப்படி தேசத்திற்கென ஒரு தேசியக் கொடியும், தேசத்திற்கென ஒரு தேசிய பண்ணையும், தேசிய மொழியும் தேவையோ அதுபோல ஒரு தேசிய நூல் தேவை என்று கார்லைல் என்ற பேரறிஞர் சொல்கிறார். இந்தியாவுக்குத் தேசிய மொழி வேண்டும் என்று முயன்று கொண்டிருக்கும் பேரரசு இந்தியாவிற்குத் தேசிய நூல் வேண்டும் என்று விரும்பித் திருக்குறளை ஏற்றுக் கொண்டால், இந்த நாட்டில் திருக்குறள் வழிப்பட்ட எண்ணம், சிந்தனை வாழ்க்கை வளரும். அதன் வழியாக இந்தியாவின் ஒற்றுமையை வளர்க்க முடியும்.
இநதியாவின் தேசிய நூலாக இருக்கும் தகுதி படைத்த ஒரே நூல் திருக்குறள்தான்.
இக் கருத்துக்களை எண்ணத்தில் வைத்துச் சொல்லும் போது, திருக்குறள் தமிழ் மக்களிடையே அறிமுகம் செய்யப் படவில்லையென்றால் நம் முயற்சி வெற்றி பெறாது. தமிழ்ப் பெருமக்கள் தாங்கள் தமிழர்கள் என்று எண்ணுவதற்கு அடையாளமாக ஒவ்வொருவர் வீட்டிலும் திருக்குறள் இலக்கியப் பயிற்சி குடும்பப் பயிற்சியாக மலர வேண்டும். அதன் வழிப்பட்ட எண்ணமுறைகள், வாழ்க்கை முறைகள் வளரவேண்டும்.
தமிழர்கள் என்றால், ஒரு குடும்பம் என்றுதான் பெயர். அந்த நோக்கத்தில்தான் 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்று பாடினான். ஆனால் அவனோடு பிறந்து வாழ்கிற தன்னைச் சார்ந்த ஒரு தமிழனிடத்தில் கூட கருத்து முரண் பாடு வந்துவிட்டால் காழ்ப்பாக மாற்றிக் கொள்கிற கேட்டை மாற்ற நாம் முயற்சி செய்ய வேண்டும். அந்த எண்ணத்தைப் பார்க்கும்போது, தமிழன் இன்று போதுமான அளவு வளரவில்லை. அவன் திசைமாறிப் போகிற போக்கை மாற்ற முயற்சிக்கவேண்டும்.
இன்றைக்குத் தமிழ் போதுமான அளவு வளரவில்லை. அறிவியல், பொருளியல், தொழிலியல் மொழியாகத் தமிழ் வளரவேண்டும்.
'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் பெயர்த்தல் வேண்டும் என்று பாரதி சொன்னான். அன்றைக்கொரு காலத்தில் தத்துவத்தில், அறத்துறையில் தமிழ் சிறந்திருத்தது. அதைப் படித்துப் பயன் பெறுவதற்குப் பல மேல்நாட்டு அறிஞர்கள் வந்தார்கள். இதுபோல் இன்னும் 50 ஆண்டுகள் கழித்துத் தமிழினை ஒரு விஞ்ஞான, அறிவியல், தொழிலியல் மொழியாக ஆக்க வேண்டும் என்ற அளவுக்கு இந்த நூற்றாண்டிற்கு ஏற்றவாறு தமிழை வளர்க்க வேண்டும், காலத்திற்கு ஏற்றவாறு தொண்டு செய்தால்தான் மொழி வளர முடியும்; அப்படியில்லையென்றால் மொழி காலப்போக்கில் சீரழிந்துவிடும்.
இந்த நூற்றாண்டுக்குத் தேவையான அளவிற்குத் தமிழ் வளர்க்கப்படவில்லை. அதற்கான முயற்சி இல்லை. எங்கோ ஒர் இரண்டு முயற்சிகள் நடைபெறுகின்றன.
இதைப் பார்க்கும்போது, இந்த மொழியை உலகத்தோடு உலகமாக வளர்ப்பதற்குரிய முறைகளில் திட்டமிட்டு முயற்சியெடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் எதிர் காலத்தில் வளரும்.
அப்படிப் பார்க்கும்போது நம்முடைய தமிழ் காலத்தாலும் கருத்தாலும் மூத்ததாக இருந்தாலும்கூட இந்தத் தலைமுறையினர்க்கு வேண்டிய சாதனைகளைச் செய்வதற்கு முயற்சிக்க வேண்டும் என்று சொல்ல ஆசைப்படுகிறேன்.
மொழிவழி மக்களை ஒன்றுபடுத்த முடியும். அந்த முயற்சிகளை நாம் உருவாக்கி அதன் மூலமாக நம்முடைய நாடு, நம்முடைய மொழி, நம்முடைய இனம் என்ற கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களுக்கு இலக்கியப் பயிற்சி வேண்டும். ஊர்தோறும் நூலகங்கள் பெருகவேண்டும். தமிழனிடம் கேட்டால் என்னுடைய நூல், வாழ்க்கை முறை திருக்குறள் என்று சொல்லவேண்டும். என்னுடைய மொழி இன்னது என்னுடைய சமயம் இன்னது என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட பயிற்சி கொடுக்கவேண்டும்.
தமிழ்த் தாய்க்குத் திருக்குறளும், இளங்கோ அடிகளின் நெஞ்சையள்ளும் சிலம்பும், தொல்காப்பியரின் ஒல்காப்பெரும் புகழ் தொல்காப்பியமும், குண்டலகேசியும், மணி மேகலையும் போன்ற பல பழம்பெரும் அணிகளை அணிவித்து நாம் மகிழ்ச்சியில் திளைக்கின்றோம்.
தமிழ் அன்னை அணிந்துள்ள அணிகள் யாவும் பெருஞ் சிறப்புடையனவே. ஆனாலும் இவைகளை எல்லாம் இந்த நூற்றாண்டில் செய்திருக்கிறோமா? இப்படிக் கேட்பதைவிட ஒரு சிறு உதாரணம் சொல்லுகின்றேன்.
ஒரு தாய் இருக்கிறாள். வயது மூத்த தாய். அந்தத் தாயின் அருமை மகன் அரசியல் அலுவலகத்திலிருக்கிறார். ஒரு நாள் அந்த மகனிடத்தில் அந்தத் தாய் கேட்கிறாள். "தம்பி! நீ வளர்ந்துவிட்டாய். கை நிறைய சம்பாதிக்கிறாய். ஆனாலும், நான் போட்டுக் கொண்டிருக்கிற நகைகள் எல்லாம் உன் அப்பா போட்டதுதானே? நீ ஒன்றும் செய்து போடவில்லையே” என்று கேட்கிறாள்.
இன்று தமிழ்த்தாய் போட்டிருக்கிற அணிகளைப் பார்த்தால் பழைய சிலப்பதிகாரம், பழைய குண்டல கேசி, பழைய குறள், பழைய மணிமேகலையாக இருக்கின்றன. இதைப் பார்த்து தமிழ்த்தாய் இன்றைக்கு, தமிழ் மக்களே, நான் இன்று அணிந்துள்ள அணிகள் யாவும் உங்கள் அப்பன், பாட்டன், முப்பாட்டன் ஆகியோர் வழங்கியன. நீங்கள் எனக்குப் புதிதாக என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால் நாம் என்ன பதில் கூறமுடியும்?
தமிழ் என்று சொல்லுந்தோறும் நினையுந்தோறும் இன்பப் புது மது பெருக்கெடுத்து ஓடுகின்றது. ஆம். தமிழே இனிமை; இனிமையே தமிழ். தமிழே அழகு; அழகே தமிழ். "தமிழ் என்பது சிவம், இனிமை” என்றது பேரிசைச் சூத்திரம். சொல்லினும், கேட்கினும், சிந்தை நிறைக்கத் தோன்றும் இன்ப நல்லியல் நோக்கித் தமிழ் என்று அறைந்தனர் சொல்லறிஞர். அமிழ்தென்பதே தமிழாயிற்று என்பது சொல்லாராய்ச்சியாளர் முடிபு. "என்று முள இனிய தென் தமிழ்" என்று களிகூரப் பாடுகின்றார் கம்பர். தேன் தமிழ் என்பது தென் தமிழாயிருக்கவேண்டும் என்பதைத் தமிழ் இன்பம் நுகர்ந்தவர்கள் சொல்லுவார்கள். "தேனுறத் தமிழும்” என்றது கல்லாடம், "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவ தெங்குங் காணோம்" என்று பாரதியார் பாராட்டுகின்றார். "தேமதுரத் தமிழோசை” என்றும் கூறுகின்றார். "பாலொடு தேன் பழம் இவைகள் உண்ண இனித்திடுமால், ஏல நினைத்தாலும் இனிப்பாய் தமிழ்த் தாயே" என்றார் மற்றொரு புலவர். அழகுடை நங்கையைத் "தமிழ் தழீஇய சாயலவர்” என்று பேசுகின்றது சிந்தாமணி,
தமிழின் தொன்மையைப் பற்றி என்ன சொல்லுவோம். உலகின் ஆதிமொழிகள் ஐந்தனுள் ஒன்றாக நமது அருமைத் தமிழ் விளங்குகின்றது. இன்று இவ்வுலகில் வழங்கும் மொழிகள் 7500 வரையுள. இம் மொழிகளெல்லாம் ஒர் அடி மரத்தினின்றும் கவர் விட்டுக் கிளைத்த கொம்பர்களை ஒத்தன. மொழிகள் எல்லாவற்றையும் ஆராயுமிடத்து அவைகள் எல்லாம் சில இனங்களில் அடங்குகின்றன. அவ்வினங்களும் பின்பு ஒரு தனிமொழியினின்றும் பிரிந்தனவாகக் காணப்படுகின்றன. அத் தனிமொழி எதுவென நீண்ட காலம் ஆராயப்பட்டது. இன்று மேல்நாட்டு அறிஞர்கள் செய்துள்ள ஆராய்ச்சிகளை ஒருங்கு வைத்து நோக்குவோமாயின் தமிழ் மொழியே அம்மொழி என்று பெறப்படும்.
இங்ஙனம் கூறுவது பேராசையால் அல்ல. பழந் தமிழ் மக்களது நகரங்களாகக் கருதப்படும் மொகஞ்சதாரோ, ஹரப்பா முதலிய நகரங்களில் தமிழ் வழங்கிற்று. மதுரை, திருநெல்வேலிப் பக்கங்களில் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட சவச் சமாதிகள் தோண்டிக் கண்டு பிடிக்கப்பட்டன. அவைகளிற் சிந்து வெளியில் வெளியான புதை பொருள்களில் காணப்பட்டவை போன்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஐதராபாத்தில் தோண்டிக் கண்டுபிடிக்கப்பட்ட சமாதிகளில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களிலும் அவ்வகை எழுத்துக்கள் காணப்பட்டன. இலங்கையிலே கேகாலை என்னுமிடத்தில் உள்ள மலை ஒன்றிலும் அவ்வகை எழுத்துப் பொறிக்கப்பட்டிருக்கின்றது.
இவைகளை யெல்லாம் ஒருங்கு வைத்து ஆராயுமிடத்து இமயமலை முதல் இலங்கைவரையில் ஒரு மொழியே ஒரு காலத்தில் வழங்கிற்று என்பதும் அமொழி தமிழ் மொழியே என்பதும் தெரிய வருகிறது. மேலும், மக்கள் இனத்தின் தோற்றமே தமிழகத்தில்தான் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இற்றைக்கு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய நாகரிகமாகக் கருதப்படும் "லெமூரியா கண்டம்" தமிழ் நாகரிகத்தில் சிறந்து இருந்தது என்பது வரலாறு. நமது நினைவெல்லைக்கும் வரலாற்று அறிவுக்கும் எட்டியவரை தமிழ் வரலாற்றில் நமக்குத் தோன்றும் காலம் கி.மு. 30,000 ஆகும். இக் காலத்தில் தமிழ் மொழி பண்பட்ட முறையில் சங்கங்களின் மூலம் வளர்க்கப்பட்டது.இறையனார் களவியலை நக்கீரர் வகுத்த உரையுடன் நாம் படிக்கும் பொழுது நாம் தலை, இடை, கடைச் சங்கங்களைப் பற்றித்தான் அறிகிறோம். ஆனால் சங்க இலக்கியங்களையும், சங்க காலத்திற்குப் பிற்பட்ட இலக்கியங்களையும் படிக்கும்பொழுது சங்கங்களுக்கு முந்தியும் பிந்தியும் தமிழ்நாட்டில் தமிழ்ச் சங்கங்கள் நடைபெற்றதற்குச் சான்றுகள் நிறைய இருக்கின்றன. தமிழ்ச் சங்கங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நடைபெற்று வந்துள்ளன. நமது வரலாற்று அறிவுக்கு எட்டிய முதல் தமிழ்ச் சங்கம் கி.மு. 30,000 முதல் 16,500 வரை நடந்ததாகும். இது பஃறுளி ஆற்றுத் தென்மதுரைத் தமிழ்ச் சங்கமாகும். இச்சங்கம் நடைபெற்றதற்குச் சான்று பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடிய புறப்பாட்டாகும்.
"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே"
இன்று நம்மிடையே நிலவுகின்ற இலக்கியங்கள் பெரும்பான்மையும் கடைச் சங்கத்தைச் சார்ந்தனவேயாம். தமிழ்ச் சங்கங்கள் இக்காலத்துப் பல்கலைக் கழகங்களைப் போன்றன. மாணவர்கள் இருக்க, படுக்க, உண்ண, உடுக்க முதலிய எல்லா வசதிகளையும் பெற்று வந்தார்கள். அதாவது அவை குருகுல வாசம் (Residential University) சங்கங்களாக இருந்தன. இச் சங்கங்களில் சீனா, காந்தாரம், எகிப்து, பாபிலோனியா, அக்கேடியா, அமெரியா, பாரசீகம், இலங்கை முதலிய இடங்களிலிருந்தும் மாணவர்கள் படித்துச் சென்றுள்ளனர் என்று தெரிகிறது. நாலந்தா, தக்க சீலம் முதலிய ஆரிய நாட்டுப் பல்கலைக் கழகங்கள் ஏற்படுவதற்குப் பன்னூறாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே, தமிழ்நாட்டில் தமிழ்ச் சங்கங்கள் நடைபெற்று வந்தன என்பதற்கு வடநாட்டு நூல்களிலேயே ஆதாரங்கள் உள்ளன. சங்கம் என்ற சொல் தமிழ்ச்சொல் அன்று. அதனால் தமிழ்ச் சங்கம் என்பதற்குச் சரியான சொல்கிடையாது. ஆதலால் வடநாட்டு நாலந்தா, தக்கசீலம் முதலிய சங்கங்களைப் பார்த்துத்தான் தமிழ்ச் சங்கங்கள் தோன்றின என்று கூறுகிறவர்களும் இருக்கிறார்கள்.
"கதநபம" என்னும் அவைந் தெழுத்தும், எல்லா உயிரோடும் செல்லுமார் முதலே. "சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே", "அவை ஒள எனும் ஒன்றலங் கடையே”' என்றிருக்க வேண்டிய தொல்காப்பியச் சூத்திரம், பிழைபட்ட முறையில் இரண்டு சூத்திரங்களாகப் பிரிக்கப்பட்டு "அ, ஐ, ஒள எனும் மூன்றலங் கடையே” என்று பதிப்பிக்கப்பட்டுள்ளதேயாம். இன்னோரன்ன கருத்துக்களைக் கொண்டு தமிழ் மிக மிகத் தொன்ன்மயான மொழி என்பதையும் முன்மொழி என்பதையும் துணிந்து கூறமுடிகின்றது. தலைமையாய் அமைந்த தனி இயற்பிதா மொழி என்பது பேரிசைச் சூத்திரம், காலத்தில் முதுமொழியாயினும் ஆற்றலில், வளத்தில், இன்பத்தில், இளய தமிழாகவே-கன்னித் தமிழாகவே விளங்குகின்றது. முன்னைப் பழமைக்குப் பழமையாயும் பின்னைப் புதுமைக்குப் புதுமையாயும் இலங்குகின்றது இன்பத் தமிழ்.
தமிழில் புது இன்பப் புது மது வெள்ளம் பொங்கி வழிந்துகொண்டே இருக்கிறது உலகறிந்த உண்மை. இன்றும் தமிழ் மக்களிடையே தமிழ் ஆர்வமும் தமிழ் அன்பும் பெருகி வருகிறது என்பதை நாம் மறுக்கவில்லை-மறுக்கவும் முடியாது. ஆனால் ஒன்று மாத்திரம் சொல்லுவோம். தமிழின் தரம் குறைந்து கொண்டே வருகிற தென்பதுதான் அது. இதை யாரும் மறுக்கமாட்டார்கள் என்று நம்புகிறோம். ஏனைய எம் மொழிகளையும்விடத் தமிழில் கவிதை வளம் அதிகம். தமிழ்க் கவிதைகளில் சொல்லாற்றல், யானை நடந்து போவது மாதிரி இருக்கும். இன்பச்சுவை அமுதொழுக்கை நிகர்த்திருக்கும். கற்பனைச்சுவை மல்கியிருக்கும். தமிழ்க்கவி மிக மிக உயர்ந்தது. "கவியாக உருவம் எடுக்கும் பொழுது தமிழைப் பார்த்தால் அதன் நுணுக்கமும், நயமும் கிரேக்க மொழிக்கும் இல்லை என்று சொல்லவேண்டும். அப்படிச் சொல்லுவது மிகைகூறும் படாடோபம் அல்ல” என்று டாக்டர் வின்சலோ என்ற அறிஞர் கூறுகின்றார்.
இன்று தமிழ் நாட்டில் ஒரு புதுநோய் பரவி வருகிறது. அதுதான் வசன கவிதை என்பது. யாப்பு இலக்கணம் கைக்குள் அடங்காமற்போய் வசனத்தை ஆசிரியர்கள் கையாண்டால் அது கவிதையாகிவிட முடியாது. இந்த வசன கவிதை முயற்சி தமிழ்க் கவிதை உலகிற்கே இழிவைத் தேடித் தந்துவிடும் என்பதில் ஐயமில்லை. வசனம் வளம் பெற்றது நக்கீரர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர், சேனாவரையர் போன்ற உரையாசிரியர்களாலேயாம். இவர்களுக்கு முன் உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் என்ற பகுதியில் தகடூர் யாத்திரை, பெருந் தேவனார் பாரதம் முதலிய நூல்களில் வசனம் காணப்பெறுகின்றது. தமிழில் சாசனக் கல் வெட்டுக்களிலும் வசனமே கையாளப்பட்டு வந்திருக்கின்றது.பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப்பின் தமிழ்நாட்டில் எவ்வித ஞான வளர்ச்சியும் இல்லாமல் போலிப் புலமையும், வரட்டு ஜம்பமுமே தலை தூக்கி நின்றன. இந்தச் சீர்கேடான நிலை நீங்க ஒரு மறுமலர்ச்சி தேவைப்பட்டது. இம் மறுமலர்ச்சி 150 ஆண்டுகட்கு முன் நமது நாட்டில் அடி எடுத்து வைத்த ஆங்கிலேயர்களால் தோன்றிற்று என்று சொன்னால் மிகையாகாது. ஆங்கிலேய அதிகார வர்க்கத்துடன் கையில் விவிலிய நூலுடன் பல பாதிரிமார்களும் வந்தார்கள். அவர்கள் தமிழ் மக்களிடையே, விவிலிய நூல்களின் கொள்கைகளைப் பரப்புவதற்காகத் தமிழில் மொழி பெயர்த்தார்கள். இக்காலத்திலேயே இராமாயண, பாரத வசனங்கள் எழுந்தன. இக்காலத்திலிருந்த யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் அவர்கள், தமிழில் எளிமையும், நயமும், பொருள் வளமும் சிறந்த அநேக வசனநூல்கள் எழுதினார்கள். நாளடைவில் ஒரு புல்லுருவி தோன்றிற்று. அதுதான் பிறமொழிச் சொற்கள் வசனத்தில் விரவி வந்தமையாகும.
இன்று தனித் தமிழைப் பரப்புகிற பத்திரிகைகள் ஒன்றிரண்டுதான் நாட்டில் உள்ளன. பெரும்பாலான பத்திரிகைகள் கலப்பு மொழியிலேயே வெளிவருகின்றன. வழக்கிலும் கூடப் பிறமொழிச் சொற்கள் மிக அதிகமாகப் பெருகிவிட்டன. இச்செயலால் "தமிழுக்கு எப்பொழுதும் தனித்து இயங்கும் ஆற்றல் உண்டு" என்று கால்டுவெல் போன்ற மேல்நாட்டு அறிஞர்கள் சொன்ன தன்மையை இழக்கும்படி நேரிடலாம். தனித் தமிழ் நடையை நாட்டிலே வளர்க்கப் பாடுபடுகின்ற "தமிழ் நாடு” போன்ற இதழ்கள் தமிழ் மக்களுடைய முழு ஆதரவைப் பெறவேண்டும். எனவே, இனி நாம் நமது முன்னோர்களைப் போலவே தமிழை வளர்க்கவேண்டும். நமது முன்னோர்களின் தமிழ் அன்பு மிக மிகச் சிறந்தது என்பதை நினைவூட்டிக் கொண்டால் நமக்கும் உணர்ச்சி பிறக்கலாம்.
இசை இன்பம் தருவது. ஒருங்கே பொறி புலன்களுக்கு இன்பந் தருகின்ற பெருமை இசைக்குண்டு. "இசை” என்னுஞ் சொல்லுக்கு "வயப்படுத்துவது" "இசைவிப்பது” என்பது பொருள். மரஞ் செடி கொடிகள் முதலிய ஓரறிவு உயிர்கள் முதல் ஆறறிவு படைத்த மக்கள் வரையில் எல்லா உயிர்களையும் வசப்படுத்துகின்ற ஆற்றல் இசைக்குண்டு. உயிரற்ற கல், மண், நீர், காற்று முதலிய சடப் பொருள்களையும் பாடுகின்றவர்களின் எண்ணத்தோடு இசைத்து இயங்கச் செய்கின்ற ஆற்றல் இசைக்குண்டு. உணர்ச்சியற்றவர்களுக்கும் உணர்ச்சியை ஊட்டுகின்ற பேராற்றல் இசைக்குண்டு; கன்னெஞ்சையும் கசியச் செய்கின்ற திறன் இசைக்குண்டு; நல்லுணர்வை நல்குகின்ற திறன் இசைக்குண்டு; குழைந்த உள்ளத்தைத் தருகின்ற திறனும் இசைக்குண்டு.
தமிழ் மக்களது வாழ்க்கையிலே இசை ஒன்றியிருந்தது. இருக்கிறது. தமிழ் வளர்த்த சங்கங்களிலே இசை பயிலுகின்ற இடம் தனியே இருந்தது. அத்தகைய இடத்தை "இசைச் சூழல்” என்று குறிக்கின்றார் வாதவூரடிகள். தமிழே "முத்தமிழ்" என்றுதான் பேசப்பெறுகின்றது. தமிழ்ச் சமுதாயத்தில் குழந்தைப் பருவமுதல் இறுதிக்காலம் ஈறாக இசை தோய்ந்திருக்கின்றது. பிள்ளைப் பருவத்தில் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியூட்டி உறங்க வைக்க "ஊசற் பாட்டுக்கள்” பாடப் பெற்றன; அப் பாட்டுக்கள் ஊசல்வரி என்று சங்க இலக்கியங்களில் பேசப் பெற்றுள்ளன. இன்னும் விளையாடுங் காலத்தில் பாடுகின்ற பாட்டுக்கள் "கந்துகவரி" முதலியன. "மங்கல வாழ்த்துப் பாடல்”, “செருப்பறை" "வள்ளைப் பாட்டு" முதலிய பாவினங்களும் சங்க காலத்தில் பயின்றன. இவையல்லாமல் ஆறுகள், கடற் கரைகள் முதலியவற்றின் இயற்கையின் எழிலின்பத்தில் ஈடுபட்டுப் பாடிய பாடல்கள் "ஆற்றுவரி”, “கானல்வரி” முதலியனவாம். தெய்வத்தைப் பரவும் பாட்டுக்கள் “தேவபாணி” எனப்படும். சங்க நூல்களில் "பரிபாடல்” என்பதும் ஒன்று. அது முற்றும் இசைப் பாட்டினாலேயே ஆனது. "பரிபாட்டு” என்பது ஒருவகையான இசைப் பாட்டுக்குப் பெயர். இவ்வாறு பண்டைத் தமிழ் மக்கள் எந்நிலையிலும் இசைப்பாடல்களில் மனந்தோய்ந்து மகிழ்ந்திருக்கிறார்கள். தற்பொழுதும் தமிழ் நாட்டிலே எந்தத் தொழிலிலும் இசையைப் பயன்படுத்திக் களைப்புத் தெரியாத நிலையில் வேலையை முடிக்கின்றனர். அவை "ஏற்றப் பாட்டு, உழவுப்பாட்டு" முதலியனவாம்.
"பாடலோர்த்தும் நாடகம் நயந்தும்" என்று 'பட்டினப் பாலை'யில் வருகின்ற தொடர் பண்டைத் தமிழ் மக்களது வாழ்க்கையில் இசை தோய்ந்திருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். தமிழ்மொழி முத்தமிழாகவே இயங்கிற்று என்பதை முதலில் சொன்னோம். தமிழிலக்கண ஆசிரியர் அகத்திய முனிவர் முத்தமிழுக்கும் இலக்கணம் செய்தார். சிகண்டியார் என்னும் புலவர் "இசை நுணுக்கம்” என்று ஒரு இசைத் தமிழ் நூல் செய்தார். இளங்கோவடிகள் முத்தமிழ்க் காப்பியமாகச் சிலப்பதிகாரத்தைச் செய்தார். "பழுதற்ற முத் தமிழ்ப் பாடல்” என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்தைப் புகழ்கின்றார். அடியார்க்கு நல்லாரும் இசைத் தமிழின் இயல்புகளை நன்கு அறிந்தவர். இங்ஙணமெல்லாம் இசைநலம் பண்டைக் காலத்தில் மிகவும் சிறந்திருந்ததென்றே தெரிகின்றது. கண்ணகனார், கண்ணனாகனார், கேசவனார், நன்னாகனார், நல்லச்சுதனார், நாகனார், பித்தாமத்தர், பெட்டகனார் முதலிய பெருமக்கள் பலரும் இசைத் தமிழ்ச் செல்வார்களாக விளங்கினர்; இவர்களெல்லாம் பரிபாடலுக்கு இசை வகுத்தவர்களாவர்.இசை உயிர்,பாடல் உடல் உயிரின்றி உடல் இயங்காது; உடல் இன்றேல் உயிருக்கும் இயக்கம் இல்லை, பயனுமில்லை. எனவே, பாடுகின்ற பாடல்களின் பொருளை உணர்கின்ற நிலை வருகிற பொழுதே இசைக் கலையின் பயனை அனுபவிக்கச் சாதாரண மக்களிலிருந்து பெரியவர்கள்வரை முடியும். மேலும் வாழ்க்கையை வளப்படுத்தத்தானே கலைகள்? வெறும் இசை, கேட்கச் சிறிது நேரம் இன்பமாக இருக்குமே யொழிய வளம் பயப்பதில்லை. நல்ல கருத்துள்ள பாடல்களை இசையுடன் பாடுகின்ற பொழுது, கேட்பதனால் நல்ல உணர்ச்சியையும், மெய்ப்பாட்டையும் அடைய முடிகிறது; உண்மை இன்பத்தையும் அனுபவிக்க இயலுகிறது. எனவே, தமிழிசைதான் இந்த நாட்டிற்குத் தேவையென்று நிச்சயமாக நம்புகிறோம். இந்த நம்பிக்கை வேற்று மொழியின்கண் உள்ள வெறுப்பினால் அல்ல என்பதையும் உணர்த்த ஆசைப்படுகின்றோம்.
தமிழ் மக்கள் சமயத்துறையில் இசையைப் பெரிதும் போற்றினர்; இறைவனையே ஏழிசையாகவும், இசையின் பயனாகவும் கண்டு வழிபட்டனர். ஆண்டவனை அகங்குளிர்ந்த உள்ளத்துடன் இசையொன்றப் பாடுகின்ற பண்பு தமிழ் மக்களுக்கே உரியது. ஆண்டவன் தமிழோடு இசை கேட்கின்ற பெரு விருப்பினனாக விளங்குகின்றான் என்றே அவர்கள் உணர்ந்து ஓதினர். ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் முதலிய சமயப் பெருமக்கள் இசை கலந்த பாடல்களைப் பாடிப் பரமனை மகிழ்வித்ததோடு மக்களிடையேயும் பக்தி உணர்ச்சியைப் பரப்பினர். இசையின்கண் எழுந்த வேட்கையினால் மதுரை ஆலவாயண்ணல் யாழ்ப்பாணருக்குத் திருமுகங் கொடுத்தார். அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவராகிய ஆனாய நாயனார் ஏழிசையைக் குழலில் ஊதிப் பேரின்பப் பெருநிலை பெற்றார். இசையினால் இறைவனை ஏத்துதலாற் பெறும் பயனை "அளப்பில கீதஞ் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளுமாறே" என்று அநுபூதிச் செல்வர் சொல்லுகின்றார். பிற்காலத்தில் தமிழிசை சமயத்தின் அரவணைப்பிலேயே வளர்ந்தது; இன்றும் தமிழிசை நிலவுவது இசைநலத்தோடு அமைந்த தேவாரப் பதிகங்களால்தான்.
முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்திலே இசைக் கருவிகளைப்பற்றிப் பேசுகின்ற பொழுது "மிடற்றுப் பாடல்” என்று ஒன்று குறிக்கின்றார். இது வாய்ப்பாட்டைக் குறிக்கும். இங்ஙனம் இசைக் கருவிகளோடு "மிடற்றையும்" சேர்த்துச் சொன்ன பெருமை தமிழருக்கே உரியது. "மிடற்றுப் பாடல்” என்பதற்குச் சிலப்பதிகார அரும்பதவுரை யாசிரியர், "மூலா தாரந் தொடங்கிய மூச்சைக் காலாற் கிளப்பிக் கருத்தால் இயக்கி ஒன்றெனத் தாக்கி இரண்டெனப் பகுத்து பண்ணிர்மைகளைப் பிறப்பிக்கப்பட்ட பாடலியலுக்கு அமைந்த மிடற்றுப் பாடல்” என்று விளக்குகின்றார். ஓசையோடு இசைந்து செல்லுங் கருத்தின் இயக்கம் இதில் நினைவாய் எடுத்துக் காட்டப் பெறுகின்றது. முதலில் எழுந்த ஓசை, பின் இசையும் பண்ணும் என்று இரண்டு வகையாக இசைக்கப்படுவதனால் இவ்வுரையில் இரண்டெனப் பகுத்துக் கூறினார். இசை பண் உருவங்கொள்ளும்போது "பண்கள்" எனவும், "திறங்கள்” எனவும் பாகுபாடு கொள்ளப்படும். அவற்றுள் ஏழு நரம்புகளும் நிறைந்தது பண்; அதற்குக் குறைந்த நரம்புகள் அமைந்தது திறம். திறங்கள் பண்களுக்கு இனமானவை. ஒளியில் ஏழுவகையான நிறங்களிலிருந்து இயங்குதல்போல ஒலிகளும் ஏழுவகைகளாக இயங்கி வெளியிற் காரியங்களை நிறைவேற்றுகின்றன. அவ்வேழு வகை ஒலிப்பிரிவுகளே இங்கு ஏழு நரம்புகள் எனப்பட்டன. திலங்களுக்கும், காலங்களுக்கும் எனப் பண்களை முறைப் படுத்தியும் வைத்திருக்கின்றனர். சிறப்பாகக் காலை நேரத்துக்கு மருதப் பண்ணும், மாலை நேரத்துக்குச் செவ்வழிப் பண்ணும் உரியதாகும். பண்ணிசையின் ஆக்கத்திற்குத் தேவார ஆசிரியர்கள் மூவரும் செய்த தொண்டு மிகவும் போற்றுதற்குரியது. தேவாரத் திருமுறைகளில் பண்கள் பேசப் பெற்றுள்ளன. அதாவது பகற்பண், இராப்பண், பொதுப்பண் என்று இந்தப் பண்களுக்குரிய கட்டளை பேதங்களையும் திருமுறை கண்ட புராணம் எடுத்துச் சொல்லியுள்ளது. கட்டளை என்பது எதைக் குறிக்கும் என்பதுபற்றி மாறுபட்ட கருத்துக்கள் பல உலவு' கின்றன. பெரும்பாலும் கட்டளை என்பது இசையினுடைய கலையைப் பற்றியதாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணுகின்றோம் திருமுறைகண்ட முறைப்படி பண்களையும் அவ்வவற்றிற்குரிய கட்டளைகளையும் பதிகங்களையும் தெளிவுற எழுதி வெளியிடுவது அவசியமாகும்.
தமிழிசை வளர்ச்சியுற நல்ல கீர்த்தனைகள் வேண்டும். அக் கீர்த்தனைகள் பொருட் செறிவும் இசைப் பொருத்தமும் பெற்றிருத்தல் வேண்டும். இத்தகைய கீர்த்தனைகளின் பெருக்கிற்குச் 'சாகித்ய கர்த்தாக்கள்' இசைப் புலமையும் தேர்ச்சியும் பெறவேண்டும். தமிழ்ப் புலவர்களும் இசை துணுக்கங்களைக் கற்று முத்தமிழ் வளர்ச்சிக்குப் பணி செய்யவேண்டும்.
இசைக்கலை வாழ்க்கையிலே தோய்ந்து விளங்குகின்ற பெருமை படைத்ததென்பதையும், தமிழ் மக்களது வாழ்க்கையில் கருக்குழி முதல் சவக்குழி வரையில் இசை கலந்திருக்கிறது என்பதையும் தமிழ் மக்கள், கலைகள் அனைத்தையும் இறைவழிபாட்டிலேயே ஈடுபடுத்தி மகிழ்ந்தனர் என்பதையும் சங்க காலத்திலே தமிழிசைக் கென்றே நூல்கள் இருந்தன என்பதையும், இசை வளர்ச்சியில் மூவர் செய்த தொண்டு மதிப்பிற்குரியது என்பதையும், பண்ணிசையின் கருவூலமாகத் தேவாரங்கள் விளங்குகின்றன என்பதையும், தமிழிசையின் வளர்ச்சிக்கு இயற்றமிழும் இசைத்தமிழும் ஒருங்கே பயின்றவர்களின் தொகை பெருக வேண்டும் என்பதையும் நினைவுபடுத்துகிறோம்.
தமிழ்ப் பெருங்குடியினர் ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் வாழ்ந்தனர். வரலாற்று அறிஞர்களால் சிறந்த நாகரிக காலமெனப் பாராட்டப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம்; அன்றியும் தமிழக மன்னர்கள் இமயத்தில் கொடி உயர்த்தி ஆண்டனர். வங்கத்தில் தமிழ் அரசர்கள் இருந்து "சேரமரபினர்” என்ற பெயரில் ஆட்சி செலுத்தி இருக்கின்றனர். இராசேந்திர சோழன் கங்கை வெளியிலும் தனது ஆட்சியைச் செலுத்தினான். தமிழக மன்னர்கள் காலத்தில் தமிழ் நாட்டின் எல்லையாக வடக்கே இமயமும் தெற்கே ஈழமும் இருந்திருக்கிறது.
அதற்குப் பிற்காலத்தில் தமிழகத்தின் வட எல்லை வடவேங்கடம். "வடவேங்கடந் தென்குமரி, ஆயிடைத் தமிழ்கூறு நல் உலகத்து" எனப் பனம்பாரனார் கூறுகின்றார். "வேங்கடங் குமரி தீம் புனற் பெளவமென்றிந் நான்கெல்லை தமிழது வழக்கே” என்று சிகண்டியாரும் கூறுகிறார். நமது தேசியக் கவிஞர் பாரதியாரும்,
"நீலத் திரைக்கடலோரத்திலே நின்று
நித்தந் தவஞ்செய் குமரிஎல்லை-வட
மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ் நாடு"
அரசியலுக்கு இலக்கியத் தொடர்பு உண்டா? அரசியலுக்கல்ல - சமுதாயத்திற்கு அன்றாட வாழ்விற்கு இலக்கியம் தேவையா என்ற நிலைக்கு மக்கள் வந்திருக்கிறார்கள். வீட்டுக்கு வேலி தேவை; ஆனால் வேலியே வீடாகி விடாது-விடக்கூடாது. சமுதாயத்தைக் காப்பாற்றத் திருடாதே என்று அறம் சொல்லுகின்றன; மீறித் திருடினால் பிடிப்பதுதான் அரசியல்.
இன்று நம் நாட்டில் நோக்கும் திசையெல்லாம் அரசியல்தான். நம் நாட்டில் நிறையக் கொடிகளைப் பறக்க விடுகிறார்களே தவிர இலக்கியப் பண்ணைகள் பெருகியிருக்கின்றனவா? எத்தனை எத்தனை கட்சிக் கொடிகள்!
மேலும், இங்கு திரைப்படக் கொட்டகைகள் பெருகிய அளவிற்கு-சிற்றுண்டிசாலை பெருகிய அளவிற்குப் புத்தக சாலைகள் பெருகி இருக்கின்றனவா? இல்லையே. இருக்கின்ற புத்தகசாலைகளிலும் தரமான புத்தகங்களைப் பார்க்கின்றோமா? தரமான புத்தகங்களை மக்கள் படிக்கிறார்களா? கடைத்தெருவில் சென்று பாருங்கள். கீழ்த் தரமான உணர்ச்சியைக் கிளறிவிடும் புத்தகங்கள்தாமே பெரும்பாலும் விற்கின்றன.
மனிதனுக்கு மனிதன் உறவு கொண்டாடுவதற்குத்தான் மொழி: இலக்கியமும் அதற்குத்தான். பலதரப்பட்ட பண்பாடு உடையவர்கள்-உணர்வுடையவர்கள் ஒன்றுபட்டு வாழ வழி செய்யத்தான் இலக்கியம் இருக்கிறது. குறைகள் மறைந்து ஒழிந்து ஒற்றுமை ஏற்படுவதுதான் மக்களாட்சியின் அடிப்படை. ஆனால் அந்த அடிப்படை மறைந்து இன்று பிரிவுகளும், குறைகளுமே எண்ணப் பெறுகின்றன. இலக்கியங்களின் மூலமாக நாம் விரும்பும் சமுதாயத்தைக் காட்டவேண்டும். திருக்குறள் ஒப்புயர்வற்ற சிறந்த இலக்கியம். சமுதாயத்தின் புதிய எழுச்சிகளுக்கெல்லாம் வள்ளுவத்தில் நாம் உரை காணவேண்டும்.
"யான் எனது என்னும் செருக்கு அறுப்பான்
வானோர்க்கு உயர்ந்த உலகம்புகும்”
என்கிறது வள்ளுவம். இதற்கு, யான் என்ற அகப்பற்றையும் எனது என்ற புறப் பற்றையும் விட்டொழிக்க வேண்டும் என்றே உரை காணப்பட்டிருக்கிறது. யான் எனது என்ற உணர்வுகளை நாம் விட்டொழித்து விட்டால் வாழ்க்கையில் சுவை ஏது? எனவே, வாழ்க்கையில் இன்பங்காண, சுவைகான யான் எனது என்ற உணர்வு இன்றியமையாதது. ஆனால், யான் எனது என்ற உணர்வினால் பிறக்கின்ற செருக்கு - ஆணவம் வெறுத்து ஒதுக்கத்தக்கது.
சமய இலக்கியங்களும் சமுதாயத்தைவிட்டு விலகியவை அல்ல. கோவில்களும் திருமடங்களும் சமுதாயத்தின் ஜீவனாக இருந்து வந்திருக்கின்றன. சமய நிலையங்களுக்குப் பொன்னும் பொருளும் குவிய ஆரம்பித்த பிறகு அவற்றை ஆதிக்கம் செலுத்த விரும்பிய சில ஆதிக்கக்காரர்கள் தங்கள் ஆதிக்கத்தில் யாரும் குறுக்கிடாமல் தடுத்துக் காத்துக்கொள்ள விரும்பினார்கள். அதை யொட்டியே சமயம் சமுதாயத்தை விட்டு விலகியது. "குறை விலாது உயிர்கள் வாழ்க" என்றார் அப்பரடிகள், "நாமர்க்கும் குடியல்லோம்" என்று ஏழாம் நூற்றாண்டிலேயே முதன் முதலாக சுதந்திர முழக்கம் செய்தார் அப்பரடிகள். இன்று இந்தக் கொள்கைகளையெல்லாம் நாம் சமுதாயக் கண்ணோட்டத்தோடு பார்க்கிறோமா? வெறும் பாராயணப் பாட்டாகத்தானே வைத்துக் கொண்டிருக்கிறோம்.
நமது இலக்கிய மரபு அன்பு மரபு; உலக இலக்கியங்களுக்கெல்லாம் தாயாக விளங்கும் தனிப்பெரும் மரபு. இடித்தோ இணக்கியோ, மனித சமுதாயத்தை முன்னோக்கி இழுத்துச் செல்ல எழுந்தவைதாம் நமது இலக்கியங்கள்.
நாடு முழுவதும் இலக்கிய பரம்பரையை - இலக்கியச் சிந்தனைகளை உருவாக்கினால் நிச்சயமாக-எளிதாக தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கிவிட முடியும். இதற்கு அரசியலின் பெயரால் தனித்தனிக் குழுக்கள் தேவையில்லை. கங்கை கரையிலிருந்து காவிரிக்கரை வரையிலே நமது இலக்கியச் சிந்தனைகள் வளர்ந்துவிட்டால் "எல்லோரும் மனிதர்கள்" என்ற வள்ளுவத்தின் வாழ்க்கை நெறியைப் பரப்பிவிட்டால் எல்லோரும் ஒரே குலமாக வாழமுடியும்.
நம் நாடும் இனமும் வளராமற் போனதற்குக் காரணம் ஒன்றையொன்று அழிக்கும் மனப்பான்மை இருந்ததுதான். எதுவும் எதையும் அழிக்காது; எதுவும் எதனாலும் அழியாது என்ற நம்பிக்கை எல்லா மக்கள் மனத்திலும் வேரூன்ற வேண்டும். மொழியால் மாறுபட்டாலும், மதத்தால் வேறுபட்டாலும் அன்பின் மூலமாக ஒருமைப்பாட்டை உண்டாக்கிவிட முடியும்; தேசிய ஒருமைப்பாடு உயிரினும் மெல்லியது. அதைக் காப்பது நமது பிறப்புரிமை.இலக்கியம் மனித குலத்தின் ஊற்றுக்கண் போன்றது. அதற்கு ஏற்ப அரசியல் உருவாகின்றது. வள்ளுவம் ஒப்பற்ற உலகப் பேரிலக்கியம் என்கிறோம். தமிழ் நாட்டில் உள்ள மூன்றரைக் கோடித் தமிழர்களில் எத்தனை பேருக்குத் திருக்குறள் தெரியும்? எனக்கும் உலகுக்கும் இன்றைக்கு இருக்கும் தொடர்பு போல அன்றைக்கு வள்ளுவருக்கும் உலகுக்கும் தொடர்பில்லை. இன்று உலகம் என்னை நெருங்கி விட்டது. பழைய காலத்தில் ஆத்திரப்பட்டால், பகைமை கொண்டால் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள ஈட்டி மட்டுமே அவர்கள் கையில் இருந்தது. ஈட்டி எட்டின மட்டுமே குத்தும். ஈட்டிக்கு எட்டாமற் போனால் ஆபத்தில்லை; அதன் பிறகு சில அடி தொலையில் இருப்பவனைச் சுட்டொழிக்கத் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. அது சற்றுத் தொலைவில் இருந்தவனையும் சுட்டது. இன்றோ, அணுகுண்டுக் காலம். ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கின்றவர்களையும் ஏவுகணைகளின் மூலம் அழித்துவிடக் கூடிய கொடுமையான கருவிகள் கையில் உள்ள காலம். அதனால் அன்றைய மனிதனின் ஆத்திரத்திற்கும் ஆபத்திற்கும் இடையே இடைவெளி இருந்தது. இன்றோ ஆத்திரத்தின் நிழலாகவே ஆபத்து இருக்கிறது. இந்த உண்மையை இலக்கியக் கர்த்தாக்கள் நன்றாக உணர வேண்டும். இன்றைய மக்கட் சமுதாயத்திற்குத் தேவையானதை அவர்கள் உருவாக்கித் தரவேண்டும். கிணற்றில் ஊறுகின்ற தண்ணீரை வெளிக் கொணர்ந்து அதைப் பலரும் உண்ணத் தருவதுதான் இலக்கியம்; கிணற்றிலே தண்ணீரைக் கொண்டுபோய் ஊற்றுவதல்ல.
வறுமை மிகவும் கொடுமையானதுதான். ஆனால் வறுமைக்கு மருந்து பணம் என்று பலர் கருதிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கருத்துச் சரியானதல்ல. உழைப்பும் உழைப்புக்கு அடிப்படையான முயற்சியும்தான் வறுமையைப் போக்கும் அருமருந்து, இலக்கியக் கர்த்தாக்கள் இத்தகைய எண்ணத்தை மக்கள் மனத்திலே உண்டாக்கப் பாடுபடவேண்டும்.
பழைய தடத்திலேயே இலக்கியக் கர்த்தாக்கள் வழி நடக்கக்கூடாது. பொய்யைப் பொய் என்று சொன்னாலும் பலர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இருந்தாலும் இலக்கிய கர்த்தாக்கள் அதைப் பொய்யென்று துணிந்து சொல்லத்தான் வேண்டும்.
நாய் நன்றியுள்ளது என்கிறார்களே, அது எப்படி உண்மையாக இருக்க முடியும் நாய் நன்றியுள்ள பிராணியாக இருந்தால் அது தன் இனத்தினிடம் அல்லவா நன்றியாக இருக்கவேண்டும். அப்படி இருக்கிறதா? ஒரு முதலாளி அவன் தன்னிடம் வேலை பார்த்த மனிதனைப் பார்த்து, அவனைவிடத் தனது நாய் நன்றியுள்ளது என்றான். இதை வைத்துக்கொண்டு நாமும் நாய் நன்றியுடையது, என்று பாடஞ் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இது நியாயமா?
நாம் சொல்லவேண்டிய கருத்துக்களை இலக்கிய ரீதி யாகச்சொன்னால் எதிர்க்கின்றவர்கள் இருக்க மாட்டார்கள். வள்ளுவர் கண்ட சமுதாயத்தையும் கம்பர் கண்ட சமுதாயத்தையும் நாம் மக்களுக்கு எடுத்து விளக்கிக் காட்டவேண்டும்.
"நாம் அன்று தமிழர், இன்று இந்தியர்; அடுத்த தலை முறையில் உலகத்தவர்"என்றுதான் வரும், மனித வாழ்க்கையை ஒழுங்குபடுத்த - பரிபூரணமாகச் செய்ய இலக்கியம் பயன்படுமாறு செய்யவேண்டும். உணவுப் பஞ்சம் உடைப் பஞ்சத்தைத் தீர்க்கவேண்டும் என்றாலும் மனிதன் வாழத் தகுதியுடையவனாக ஆக இலக்கியம் அவசியமாகும்.
இன்று தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குழு அமைத்திருக்கிறார்கள். இந்திய ஒருமைப்பாட்டுக்குத் திருக்குறளை இந்திய அரசாங்கம் தேசீய நூலாக ஏற்றுக் கொள்ளவேண்டும். ஒரு மொழியால் தேசீய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியாது.இந்த ஒரு நூலால் முடியும் என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒருமை மூலமாகத்தான் ஒற்றுமை வரும் என்று நினைத்தால், அது தவறு. மனிதனை நேசிக்கத்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை உணரச் செய்துவிட்டால் தேசீய ஒருமைப்பாடு பற்றி கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுமா? தேசீய ஒருமைப்பாடுதான் நம் உயிர் நிலை. அதைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை. இதை நிறைவேற்ற யார் யாருக்கு எந்தெந்த வைத்தியம் செய்ய வேண்டுமோ அந்தந்த வைத்தியம் செய்ய வேண்டும். எல்லோருக்கும் ஒரே மாதிரிப் பத்தியம் என்று எதிர்த்துப் பேசுகிறவர்கள் நாவை அடக்கி விடுவதால் இலட்சியம் நிறைவேறாது; இங்கு இருப்பவர்களுக்குள் அன்பை ஏற்படுத்த வேண்டும்.
ஒருமைப்பாட்டுக்கு இலக்கிய உணர்ச்சியும், இலக்கியச் சிந்தனையும் மிகவும் தேவை.
பாரதியையும், வள்ளுவரையும் இரண்டு கண்களாக இணைத்து நாட்டு மக்களுக்குச் சொல்லவேண்டும்.
சமுதாயத்தின் ஊற்றுக் கண், மொழி, ஒருவருக்கொருவர் அன்பை உண்டு பண்ணவே மொழி இருக்கிறது; மோதிக்கொள்வதற்காக அல்ல. திருக்குறளைத் தேசிய இலக்கியமாக இந்திய சர்க்கார் ஏற்றுக்கொண்டு, அனைவரும் அதன்படி நடக்கச் செய்தால் நிச்சயம் தேசீய ஒருமைப்பாடு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
இன்பத் தமிழில் இலக்கியங்கள் நிறைய உண்டு. தமிழ் வளர்த்த சங்கங்களுக்கு முன்னும் பின்னும் தமிழ்ப் பெருமக்களின் உணர்வுத் திறனிலிருந்து உருவெடுத்த இலக்கியங்கள் பல. தமிழகத்தில் தோன்றிய இலக்கியங்கள் பல கிடைக்கவில்லை. அவ்வப்பொழுது எழுந்த கடல் கோள்களால் பல இலக்கியங்கள் கொள்ளப்பட்டன. தமிழர் பெட்புறப் பேணாத காரணத்தால் கறையான்கள், ஒரு சிலவற்றைச் சுவைகண்டழித்தன. எனினும், நல்லூழின் காரணத்தால் ஒருசில இலக்கியங்கள் எஞ்சியுள்ளன. தமிழ் மொழியில் பல நல்ல இலக்கியங்கள் இருந்தன-இருந்து கொண்டிருக்கின்றன: வளர்ந்து கொண்டுமிருக்கின்றன.
அன்றாட வாழ்க்கை அல்லல் நிறைந்த வாழ்க்கை-துன்பச் சுழல் கவ்விடும் இடும்பையே நிறைந்த வாழ்க்கை இல்வாழ்க்கையில் பல்வேறு சமயங்களில் தளர்வு தலை காட்டும். தளர்வாலும், துன்பத்தின் சூழலாலும், இன்பத்தின் நிலைக்களனாய வாழ்க்கை, வெறுப்பு நிறைந்ததாக மாறிவிடும். வெறுப்புணர்ச்சியின் காரணமாக நேர்மை என்ற நேர்கோட்டிலே, செம்மை நலஞ்சிறந்த செந்நெறியிலே, செல்லவேண்டிய மக்கள் வழிதவறிச் செல்ல நேரிடும். அப்பொழுது, நல்ல நினைவையும்-அறிவையும் உணர்வையும் ஊட்டித் தளர்ச்சியை நீக்கி நேர்மை பொருந்திய நெறியிலே அழைத்துச் செல்லும் திறனுடையனவே நல்ல இலக்கியங்கள். நல்லனவே எண்ணும், புலனழுக்கற்ற அந்தணாளர்களின் உணர்ச்சிகளே நல்ல இலக்கியங்கள். நல்லெண்ணங்களின் தொகுப்பே இலக்கியம் என்று கூறுவர் எமர்சன். மக்களுக்கு நல்லொழுக்கத்தைக் கற்றுக்கொடுத்து வாழ்வாங்கு வாழச் சொல்லிக் கொடுப்பதே நல்ல இலக்கியத்திற்குரிய சான்று. இலட்சியம் நிறைந்த வாழ்க்கை நெறியில் அழைத்துச் செல்லும் ஒப்பற்ற தொண்டைத் திறம்படச் செய்வதே பேரிலக்கியமெனக் கருதினர் தமிழ் மக்கள். அதனால்தான் தமிழர்கள், "இலக்கியம்" என்ற சொல்லை "இலக்கு" என்ற சொல்லிலிருந்து தொடங்கி வளர்த்துள்ளார்கள்.
மக்கள் அனைவரும் ஒரே குலம் என்று பரந்து பட்ட எண்ணம் தமிழினத்திற்கே யுரிய தனித்த இயல்பு. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற உயர்ந்த நாகரிகம் தமிழர் நாகரிகம். இத்தகு புனித நாகரிக வாழ்க்கையினின்றும் தமிழர் நழுவினர். அதிலும் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று கூறி, "மகவெனப் பல்லுயிரையும் ஒக்கவே பார்க்கும்” பண்பினை நல்கும் சமயத்தின் பேரால் காலப்போக்கில் குறுகிய பல சாதிப் பிரிவுணர்ச்சிகளையும் வகுப்பு வாத வுணர்ச்சிகளையும் கற்பித்துக் கொண்டனர். சமய நெறிக்குச் சாதிப்புன்மை உடன்பட்டதல்ல. மக்களினம் அனைத்தும் ஓரினம். அந்த இனத்தில் தமிழர் ஒரு குலம் என்ற பேருண்மையை வலியுறுத்துகின்றன தமிழ் இலக்கியங்கள்.
"பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே”
என்று கூறி, உயர்வு தாழ்வுப் புன்மைகளைப் புறக்கணிக்கிறது தமிழிலக்கியம். தமிழிலக்கியம் காட்டுகின்ற மற்றொரு பண்புநெறி இன்னாதென செய்தாருக்கும் இனியனவே செய்தலாம். "கேளிர் போலப் பயின்றோர் நஞ்சு கொடுப்பினும், உண்பர் நனி நாகரிகர்" என்று பேசுகிறது தமிழ் இலக்கியம். இப்பண்பாட்டினைத்தான் நமது திருவள்ளுவர்,
"பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்"
என்று கூறி விளக்குகின்றார். உலகம் ஒன்றையே சார்ந்திருக்கிறது; அந்தச் சார்பு பற்றியே நிலைபெற்றும் இருக்கிறது. அந்த ஒன்றுதான் பண்பாடு. பண்பாடற்ற நிலையில் மக்கள் வாழும் உலகு இருப்பதைவிட அழிவதே நல்லது என்பது திருவள்ளுவர் கருத்து.
"பண்புடையார்ப் பட்டுண் டுலக மதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்"
என்பது திருக்குறள். இங்ஙணம் தமிழிலக்கியங்கள், பரந்து பட்ட-விரிந்த நோக்கத்தையும், ஒப்புரவுப் பண்பையும் வளர்த்து மக்களினத்தை அமைதியும் இன்பமும் நிறைந்தபண்பாட்டிற் சிறந்த பெருவாழ்வு வாழத் துணை செய்து நிற்கின்றன.
தமிழ்ப் பெருமக்களது அறிவு, உணர்ச்சி, தெளிவு முதலியன குறைவறப் பொருந்திய வாழ்க்கையின் அனுபவத்தினின்று எழுந்தது கடவுள் கொள்கை. தமிழ்க் குடியினர், மிகப் பழங்காலந்தொட்டே, நெஞ்சந் தோய்ந்த சமய வாழ்க்கை வாழ்ந்து, கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டிருக்கின்றனர். தாம் கண்ட கலைகள் அனைத்தையும் (இசை, கூத்து, ஒவியம், சிற்பம், இலக்கியம்) கடவுள் நெறியின் சார்பில் நின்று, வளர்த்து, வளம் படுத்தி, இறையருட் பணிக்கே பயன் படுத்தினர். தமிழிலக்கியங்கள் அனைத்திலும், கடவுள் நெறியும், வழிபாட்டுணர்ச்சியும் உயிர் நிலையாக அமைந்து கிடக்கின்றன. பழங்காலத் தமிழ்ப் பெருமக்கள் நகரமனைய பெருங்கோயில்களை மூவா முதற் பொருளுக்கு எடுத்திருக்கின்றனர். ஏறக்குறைய இற்றைக்குப் பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, கடல் கொண்ட தென்குமரி நாட்டிலே நகர மனைய திருக்கோயில் இருந்ததாகத் தெரிகிறது. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பானைக் 'காரி கிழார்' என்னும் தமிழ்ப் புலவர் பாடுகின்றார். தமது பாடலின் மூலம், அம்மன்னனுக்கு நல்லுணர்வு கொளுத்துகின்றார். “யாருக்கும் தாழாத கொற்றக்குடை தாழ்க!” என்று கூறுகின்றார். ஆம். “மன்னவர்க்கெல்லாம் மன்னவனாக, பிறவா யாக்கைப் பெரியோனாக விளங்கும் முக்கட் செல்வரின் திருக்கோயிலை வலம் வருவதற்காகக் கொற்றக்குடை தாழ்க" என்று செவியறிவுறுத்துகின்றார்.
"பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே"
என்பன புறநானூற்று அடிகள். திருக்கோயில்கள் நகர மென்று நவிலப் பெறுகின்ற அளவுக்குப் பரந்து-விரிந்து-அகன்றதாக அமைந்திருக்கின்றன. கற்றவர்கள் போற்றும் கலித்தொகையிலும் "கடவுட் கடி நகர்” என்று திருக்கோயில்கள் பேசப் பெற்றுள்ளன. கடவுள் நெறியும், வழிபாட்டுணர்ச்சியும் நல்ல தெளிவினின்று உருவாகும் உயர்ந்த நெறிகள். அதனால்தான் முத்தமிழ்க் காப்பியத்தை ஆக்கித் தந்த இளங்கோவடிகள் "தெய்வந் தெளிமின்” என்று அறவுரை கூறி நம்மையெல்லாம் அருள் நெறியிலே ஆற்றுப்படுத்துகின்றார்.
இன்று தமிழன்பும், தமிழார்வமும் மக்களிடையே அரும்பி மலர்ந்திருக்கின்றது. ஆனால் பழந்தமிழ்க் கொள்கைக்கு முரண்பட்ட நிலையில் ஒரு சாரார் தமிழை வளர்க்க-தமிழர் நிலையை உயர்த்தப் பாடுபடுகின்றனர். தமிழ் வேறு, சமய நெறி வேறு என்று கருதுகின்றனர். வாழ்க்கை வேறு, சமய நெறி வேறு என எண்ணுகின்றனர். தமிழருக்கே உரிய சமய நெறியினையும் பிறருடையது எனத் தவறாகக் கருதுகின்றனர். தமிழினத்தின் குருதியிலே கலந்து படிந்திருக்கின்ற சமயப் பண்பினை வேண்டாதன என்று கருதுகின்றனர். புலவர் பெருமக்களது இலக்கியங்களையெல்லாம்-தமதறிவின் திறத்திலேயே நின்று-ஒவ்வாமை கண்டு இழித்துப் பேசுகின்றனர். திருவள்ளுவரது திருக்குறளிலுங்கூட முழுவதும் கொள்ளத் தக்கதில்லை, அதிலும் வேண்டாதன உண்டு என்று சொல்லுகின்ற அளவுக்கு ஒரு சில தமிழர்கள் வந்து விட்டதை என்னென்று கூறுவது? இதுவா தமிழன் நிலை: இந்த நிலை வளருமானால் தமிழ் வளருமா? தமிழினம் தலைநிமிர்ந்துதான் வாழ முடியுமா? "நல்ல புத்தகத்தை அழித்தல் கொடுமையிலுங் கொடுமை” என்று மகாகவி மில்டன் கூறுகின்றான். எனவே, பண்டைத் தமிழிலக்கியங்களைப் பாங்குறப் படித்து-வாழ்க்கையில் அமைத்துக் கொள்ளவேண்டியது தமிழரின் தலையாய கடமை.
தமிழகம் வள்ளல் தன்மை நிறைந்த நாடு. சர்தலின் இன்னாதது கொடாது வாழ்வது என்பது தமிழினம் கண்ட முடிபு. தமிழகத்தில் பல வள்ளல்கள் வாழ்ந்தனர். பாரி ஒரு தலைசிறந்த வள்ளல். கொடை மடம் பட்ட வள்ளல். நற்றமிழ் நவில்வோரால் பாராட்டப் பெற்ற வள்ளல். அவன் இன்னார், இனியர் என்றெல்லாம் பாராது பொதுமையான நோக்குடனேயே பொருள் வழங்குகின்றவன். உயிர் அனைத்தும் அவனுக்கு ஒன்று. செடி கொடிக்கும் உயிர் உண்டு என்று இன்று விஞ்ஞானி சொல்லுகின்றான். அன்றே பாரி இதனை உணர்ந்திருந்தான். முல்லைக்குத் தேர் நிறுத்திய வள்ளலல்லவா? "பாத்திரம் அறிந்து பிச்சை இடு" என்பது பழமொழி. ஆனால் இந்தப் பழமொழி பாரிக்கு இல்லை. பாரி எல்லோருக்கும்-மடவருக்கும் மெல்லியருக்குங்கூட வாரி வழங்குவான். அப்படிக் கொடுத்தலையே, தனது கடப்பாடாகவும் உடையவன். இந்த அரிய பண்பாட்டைப் பாரட்ட நின்னத்த கபிலருக்குப் பாரியினுடைய வள்ளன்மைக்கு உவமை சொல்ல உலகில் யாரும் எந்தச் செயலும் ஏற்றதாய்த் தோன்றவில்லை. அவர் பரமனை எண்ணுகின்றார். இவ்வுலகில் எத்தனையோ நறுமண மலர்கள் உண்டு. அப்படியிருக்க சூடத்தகாத மலரும், நல்லனவென்றும் தீயனவென்றும் இரண்டிலும் வைத்தெண்ணப்படாததுமான எருக்கம் பூவை இறைவன் சூடினான். எருக்கம் பூவாயினும் ஒருவன் நெஞ்சந் தோய்ந்த அன்புணர்ச்சியுடன் கொடுப்பானாயின் கடவுள் அதை ஏற்றுக்கொள்கிறார். இறைவனுக்குகந்த எண்வகை மலர்களில் எருக்கம் பூவும் ஒன்று "விரைசார்ந் தழியாத புல்லெருக்கஞ் சூடிக்கொண்டாய்” என்று வாட்போக்கிக் கலம்பகம் பேசும். பரமனுடைய இந்தப் பண்பைப் பாரியினுடைய வள்ளன்மைக்கு உவமையாகக் காட்டுகின்றார் பொய்யா நாவிற் கபிலர். அறிவில்லாதவர்களும், புல்லிய குணமுடையாரும் பாரியை நம்பி, மதித்து அவனிடம், பொருள் பெறவேண்டுமென்ற ஆசையோடு சென்றால் பொருளைப் பெற்று இன்பவாழ்வு நடத்தலாம். அதுபோலவே, மக்கள் இறைவனிடத்து நம்பிக்கைகொண்டு, பொய்ம்மையாயவெல்லாம். போக்கிப் பேரருள் செய்வான் என்று உறுதியான எண்ணத்தோடு, நெஞ்சந் தோய்ந்த அன்போடு சென்றால் அவனருள் பெற்று வாழலாம் என்ற உண்மையை உணர்த்துகின்றார். இறைவழிபாடு உள்ளத்தைப் பொறுத்ததே யொழியப் பொருள்களைப் பற்றியதல்ல என்ற பேருண்மையை மறத்தல் கூடாது.
"நல்லவுந் தீயவு மல்ல குவியிணர்ப்
புல்லிலை யெருக்க மாயினு முடையவை
கடவுள் பேணே மென்னா வாங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கைவண் மையே”
சங்க இலக்கியங்கள் மக்கள் வாழ்க்கையையே அடிப்படையாகக்கொண்டு எழுந்தன. அவைகளுள் நல்ல பேரறங்கள் பேசப் பெறுகின்றன. அறிஞர்கள் மனிதனைச் 'சமுதாயப் பிராணி' என்று சொல்லுகின்றார்கள். அதாவது அவன் பிறருக்காக வாழ்கிறான்; பிறரோடு கலந்து வாழக் கடமைப்பட்டவன் என்று சொல்லுகிறார்கள். இங்ஙனம் பிறருக்கென்றே வாழ்ந்த பெருமை தமிழ்ச் சமுதாயத்திற்கு உண்டு. தமிழன் என்றுமே தன்னைப் பற்றிக் கருதியதில்லை. "பிறருக்கென முயல்வார் உண்மையானே உலகம் உண்டு" என்று தமிழ் மன்னன் பேசுகின்றான். “தனக்கென வாழாப் பிறர்க் குரியாளன்” என்று அகநானூறு கூறுகின்றது. பிறருக்கு நன்மை செய்வதிலே தீமை வரினும் ஏற்றுக்கொண்டு நன்மையே செய்கின்ற பண்பாட்டைத்தானே திருவள்ளுவர், "மருந்து மரம்” என்ற உவமையால் விளக்குகின்றார்.
இந்த அருமையான, பிறர் நலம் பேணுகின்ற பண்பாட்டிற் சிறந்தவன் தேர்வண் மலையன் என்ற வீரத் திருமகன். அவனை வடம வண்ணக்கண் பெருஞ் சாத்தனார் என்ற புலவர் பாராட்ட நினைத்தார்; பாராட்டினார். புலவரது பாராட்டுரையிலே உவமை ஒன்று அழகு பெறுகிறது. தேர்வண் மலையன் தனது முயற்சியால் - புயவலியால் திரட்டிய பொருளை எல்லாம் யாவர்க்கும் வழங்குகின்றான். தனது பொருளைத் தான் நுகரவில்லை-அனுபவிக்கவில்லை-அனுபவிக்க அவன் ஆசைப்பட்டதும் இல்லை. அவனது சிந்தனை பிறரது வாழ்க்கையில் அவன் விரும்பியது அவனைச் சாதாரண மகிழ்ச்சியால் ஆழ்த்துகின்ற நறவு. இதனை எண்ணுகிறார் புலவர்.
தேர்வண் மலையனது பண்பாட்டை விளக்கிக் கூற உவமையைத் தேடுகின்றார். அவரது கூர்த்த அறிவு-நீண்ட நாள் அனுபவ உணர்ச்சி எருதினை தினைவூட்டியது.ஆம்! விளைநிலம் உழுது, எருவைக்கொட்டிக் கொடுத்து, நல்ல உணவுப் பொருளை-விளைவித்துக் கொடுப்பது எருதுதானே? எருதின் உழைப்பால் உலகம் உண்ணுகின்ற உணவைப் பெறுகிறது. இங்ஙனம் உலகுக்கு உணவு கொடுக்கின்ற எருது, மக்களால் கழிக்கப்பெற்ற-பயனற்ற வைக்கோலைத் தின்று வாழ்கின்றது. அந்த வைக்கோலைத் தின்பதுங்கூட மறுபடியும் உணவு விளைவுத் தொழிலில் ஈடுபட்டு உலகத்தவருக்கு உதவி செய்ய வேண்டுமே என்ற எண்ணத்தினால்தான். இதனைப் புலவர் எண்ணுகின்றார்-பாடுகின்றார்.
"உழுத நோன்பக டழிதின் றாங்கு
நல்லமிழ் தாகநீ நயந்துண்ணு நறவே”
என்று உளங் குளிரப் பாராட்டுகின்றார்.
இந்தப் பாட்டினைப் படிக்கும்போது தமிழ்நாட்டுத் திருக்கோயில்களின் நினைவு நமக்கு வரும். அங்கு நந்திக்குத் (காளை வடிவம்) தனிச்சிறப்பு வழங்கப்பட்டிருப்பதன் உண்மை புலனாகும்.
சமய வாழ்க்கை பிறர் நலம் பேணுகின்ற வாழ்க்கை வெறுப்புணர்ச்சி இல்லாத-பூசலற்ற நிலையிலே வாழச் சொல்லியது சமயம். ஆண்டவனை வணங்கப் போகும் ஆலயம் சொல்லித் தரும் பாடம் 'பிறருக்காக வாழ்க' என்பதே ஆம். திருக்கோயிலிலே முதலிலே எருதுதான் காட்சியளிக்கிறது. அந்தக் காட்சி சொல்லும் அறவுரை தலையாய அறவுரை "ஏ, மனிதனே! நீ மனிதன் என்று மார் தட்டாதே. பகுத்தறிவாளன் என்று பறை சாற்றாதே; பெருமிதங் கொள்ளாதே! இந்த எருதினுடைய-பிறர் நலங் கருதுகின்ற, உழைக்கின்ற, உள்ளத்தை முதலில் பெறுவாயாக அந்த உள்ளம் உனக்கு வந்து விட்டதானால் சமய வாழ்க்கையில்இறைவனோடு தொடர்பு கொள்ளும் இன்ப வாழ்க்கையில் நுழைகின்றாய்!” என்று திருக்கோயில் சாற்றுகின்றது.அதனாலன்றோ சமயப் பெருமக்கள், எருதையே ஊர்தியாகவும், கொடியாகவும் அமைத்தனர்.
இங்ஙணம் பிறர் நலமே சொன்ன சமயத்திலும் எங்ஙனமோ சாதிச் சண்டைகள் நுழைந்துவிட்டன! உயர்வு தாழ்வு மனப்பான்மைகள் உட்புகுந்து விட்டன!! தன்னலப் பேராசையும்கூடக் குடியேறிவிட்டது!! இந்த உணர்ச்சிகள் சமய வாழ்க்கைக்குப் புறம்பானவை. மனித நாகரிகத்திற்கு நஞ்சு. இவையனைத்தும் அழிந்தொழியப் பெறுதல் வேண்டும். பெருஞ்சாத்தனார் காட்டுகின்ற பேரறநெறியிலே, தமிழ்ப் பெருமக்கள் கண்ட சமய வாழ்க்கை வற்புறுத்துகின்ற, "பிறர் நலம் பேணுகின்ற பேரறம்” மலர்க! வாழ்க!! வளர்க!!
யாரும் எதையும் எதற்காகவும் அழிக்க வேண்டியதில்லை. கொஞ்சம் மாற்றிக்கொள்ள முடியுமா என்று பார்க்கலாம்; உலகில் தோன்றிய எதுவும் அழிந்துபடுவதில்லை; ஒன்று பிறிதொன்றாக வடிவெடுக்கும் என்பதுதான் உண்மை; குப்பை உரமாகிறது; விதை மரமாகிறது. இதனால் குப்பையும், விதையும் அழிந்துபட்டதாகவா கருதுவது? எனவே, தமிழுக்கும் தமிழருக்கும் இப்போது ஏற்பட்டிருக்கிற அச்சம் தேவையில்லை.
மொழி வெறுமனே ஒருவர் கருத்தை மற்றவர்க்குத் தெரிவிக்க உதவும் ஒரு கருவிதான் என்று கூறுகின்ற கூற்றை நாம் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை.
காக்கை கரையவில்லையா? கன்று கதறவில்லையா? குயில் கூவவில்லையா? ஆந்தை அலறவில்லையா? இவற்றிடையே மொழி இல்லை என்பது உண்மைதான். ஆனால் அடையாளம் தெரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறோமா? இல்லையே. எனவே மொழியோடு, மொழியை ஒட்டிய நாகரிகம் இல்லையானால் மொழியே கூட வேண்டியதில்லை என்று கூறுவதில் ஏதும் தவறில்லை. மொழி ஊற்றுக்கண் போன்றது; மனித சமுதாயத்தின்-சமுதாய நாகரிகத்தின் ஊற்றுக்கண், அந்த ஊற்றுக்கண் அடைபட்டு விட்டால் மனித சமுதாயம் காட்டுமிராண்டியாகிவிடும்; செயலற்றதாகிவிடும் - வேட்கை தணிக்கும் நீரில்லாத ஊருணியாகிவிடும்.
வாழும் சமுதாயத்திற்குத் தாய்மொழி மிகமிக இன்றியமையாதது; தாயில்லாத பிள்ளை சவலை ஆவது போலவே, தாய்மொழி இல்லாத சமுதாயம் சவலையாகிப் போகும்.
பொதுவாக எத்தனை மொழிகளை வேண்டு மானாலும் கற்றுக்கொள்ளலாம். அதில் தவறில்லை குழந்தைக்குத் தாய்ப்பால் வலு ஊட்டும்; சிறந்த உணவும்கூட எனினும் புட்டிப்பால் அத்துணைச் சிறப்புடையதா? இல்லையே அதுபோலவே, தாய்மொழியைத் தாய்ப்பால் என்றால், பிறமொழிகளைப் புட்டிப்பால் என்று குறிப்பிடலாம்.
உலக நூல்கள் - அறிவியல் நூல்கள் யாவற்றையும் கற்கத்தான் வேண்டும்; கற்கவில்லையாயினும், செவிவழிச் செய்திகளாகக் கேட்டறியலாம். இதைத்தான் கற்றிலனாயினும் கேட்க என்றார் வள்ளுவப் பெருந்தகை. இவ்வழிப் பார்க்கும்போது, கல்லாதவர்களும் கேட்டுப் புரிந்துகொள்ள - அதைப்பற்றி எண்ண சிந்திக்கத் தாய்மொழியைப்போல் வேறு எந்த மொழி பயன்பட முடியும்?
இன்றையச் சமுதாயச் சூழலில் எத்துணை எத்துணையோ வேறுபாடுகள் - வேற்றுமைகள். இருப்பினும், தமிழை - தமிழின் வாழ்வை, தமிழின் நலத்தை மையப்புள்ளியாக வைத்துக்கொண்டு நாம் வேறுபாடுகளை மறந்து ஒருமைப்பாட்டுணர்வால் ஒன்றுபட்டு வாழமுற்பட வேண்டும். வேறுபாடுகளுக்கு இடங்கொடுத்து, அவற்றால் சிலரிடமிருந்தோ, சமுதாயத்திலிருந்தோ விலகி வாழுகிறவன் விலங்காகிப் போகிறான். வேறுபாட்டிலும்கூட விழுமிய ஒருமைப்பாட்டை உண்டாக்கி வாழத் தெரிந்தவன்தான் உயர்ந்த மனிதனாகிறான்.
உலகத்தை - மனித குலத்தை ஒருமைப்படுத்தத்தான் மொழியே யொழிய வேறுபாட்டுணர்வுகளை உண்டாக்கி, அவற்றால் சண்டை போட்டுப் பிரிந்து வாழ்வதற்கல்ல. உலக மனித குலத்தை ஒருமைப்படுத்த எழுந்த மொழியை வேறுபாட்டுணர்வுகளுக்கு வித்திட - வேறுபாட்டுணர்வுகளை வளர்க்கப் பயன்படுத்துவது நல்லதல்ல. அது மொழி வழி நாகரிகமல்ல. 'சமஸ்கிருதம்' என்பதற்குச் செய்யப் பட்டது என்பதுதான் பொருள். தமிழ் அப்படியன்று. அது இயற்கைமொழி. தானே வளர்ந்த மொழி - அது வாழ்க்கை மொழி - தமிழுக்கு இனிமையுமிருக்கிறது - எளிமையுமிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக செஞ்சொற் புலவர்கள் பல்லாயிரவர் நாவிலே தவழ்ந்து தவழ்ந்து அந்த இனிமையையும் எளிமையையும் அது பெற்றுத் திகழ்கின்றது. தமிழுக்கு இலட்சியமிருக்கிறது. .
திருக்குறள் மொழியால் தமிழ்நூல். அது கருத்து வழி உலகப் பெருநூலாக விளங்குகிறது. எப்படி வாழவேண்டும் என்பதற்கு இலக்கணம் செய்தார் வள்ளுவப் பெருந்தகை.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்”
'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்'-ஒழுக்கம் என்றார். ஆம். பலவற்றையும் ஒருவன் கற்றிருந்தாலும் கூடப் பத்துப் பேரோடு கூடி வாழத் தெரியாதவன் அறிவில்லாதவனே என்கிறார். பத்து மனிதர்களோடு கூடிவாழத் தெரிந்தாலே அது பெரிய ஒழுக்கம் என்கிறார்.
இந்த நாட்டுச் சராசரி மனிதனுக்கும் சென்று எட்டுகிற அளவில் எளிமையாகவும் மிகச் சுருக்கமாகவும் ஒன்றே முக்காலடியில் வள்ளுவர் திருக்குறளைச் செய்தார். திருக்குறளின் மையம் மனிதகுலம் ஒரே குலம் என்பதுதான். திருவள்ளுவருக்குப்பின் இன்றையச் சூழ்நிலையில் - ஒருவரையொருவர் விழுங்கி ஏப்பமிட்டு விடுவார்களோ என்ற அச்சத்தினால் ஒருகுலம்-ஓருலகம் என்று பேசுவதில் என்ன வியப்பு இருக்கிறது? மூட்டைப்பூச்சி மொய்க்கின்ற கட்டிலில் படுத்துக் கொண்டு மூட்டைப் பூச்சிகளின் தொல்லையால் விழித்திருப்பது ஏகாதசி விரதமாகுமா? இன்று ஒருமைப்பாடு ஒரு குலம் பேசுவது அப்படிப்பட்டது தான். வள்ளுவரோ அச்சத்தின் அடிப்படையில், மனிதகுல ஒருமைப்பாட்டைப் பேசவில்லை-அவர் அன்பின் அடிப்படையில், நட்பின் அடிப்படையில் ஒருமைப்பாடு பேசினார். திருவள்ளுவருக்கு முன்பிருந்த நூல்கள் மதத்தைக் கடவுளை - சாதியைக் குறிப்பிடவில்லை. திருவள்ளுவர், தமிழன் என்று கூட இல்லை, உலகை நோக்கியே பேசினார். உலக மனிதனுக்கே பேசினார். -
அன்பின் வழியது உயிர்நிலை-பிறப்பு, ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்பன போன்ற விழுமிய கருத்துக்களால் வள்ளுவர் அனைத்துலக மனிதனுக்கே பேசியவராகிறார்.
அன்பு என்றால் என்ன என்ற கேள்வியை நாமே கேட்டுப் பார்ப்போம். அன்புக்கு ஒரு வடிவம் கொடுக்க முடியுமா? வள்ளுவர் அன்புக்கு வடிவம் கொடுத்தார்.இன்னொருவர் துன்பங்கண்டு இரங்கி கண்ணிர் விடுவதுதான் அன்பு என்கிறார்.
"அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்கண்
புன்கணிர் பூசல் தரும்"
என்றார். எவ்வளவு அருமையான விளக்கம், தென்னையும் வாழையும் மற்றவர்களுக்கென்றே வாழ்வதுபோல மனிதனும் மற்றவர்களுக்கென்றே வாழ்வானானால் பலர் அவனுக்கு உறவாக வருவார்கள்.
உலகின் தொண்டின் நெறி மறைந்திருந்த காலத்தில்-தொண்டின் நெறியை மக்கள் மறந்திருந்த காலத்தில் தொண்டின் நெறியை நினைவுபடுத்த சேக்கிழார் பெருமான் அவதரித்தார். வடவர்கள் நாகரிகம் தமிழகத்தில் கால்கோள் செய்துவிடுமோ என்று பலர் அச்சமுற்று வாழ்ந்த காலத்தில் வடவர் நாகரிகம் தமிழகத்தில் பரவாமல் தடுத்துக் காக்கக் கம்பர் தோன்றினார். அதுபோல, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒழுக்கத்திற்கு இழுக்கு நேர்ந்த காலத்தில் ஒழுக்கத்தை நிலைநிறுத்திப் புதிய தெம்பை ஊட்ட வள்ளுவர் தோன்றினார்.
நேற்றிருந்த ஒரே பெரும் ஒழுக்க நூல் திருக்குறள். இன்றிருக்கும் ஒரே பெரிய ஒழுக்கநூல் அதுதான். நாளை, ஏன் இனி வருங்காலத்தில் இருக்கப்போகும் ஒரே பெரிய ஒழுக்க நூலும் அதுதான். எனவே, வள்ளுவத்தை வாழ்க்கை நூலாக நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒரு சிந்தனைக் குழு அமைத்து வள்ளுவத்தை-வள்ளுவத்தில் உள்ள மனோ தத்துவக் கருத்துக்களை ஆராய வேண்டும். வள்ளுவர் காலத்திற்குமுன் அடித்தவன் புகழே பேசப் பெற்றது. இன்றோ அணைத்தவன் புகழ்தான் பாராட்டப் பெறுகிறது.
இன்று பழமைக்கும் புதுமைக்கும் இடையே ஒரு பெரும் போராட்டம் நிகழ்ந்து வருகிறது. பழையன யாவும் பழையனவே என்பார் ஒரு சாரார். புதுமை யாவுமே ஏற்புடையனவல்ல என்பார் ஒரு சாரார். எது பழைமை எது புதுமை என்பதிலே இருவருக்குமே திட்ட வட்டமான கருத்தில்லை. திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்பதால் இன்று அது பழையதாகிவிடுமா? அது புதுமைக்குப் புதுமையாகப் போற்றப் பெறும் தனிச் சிறப்பு வாய்ந்ததாக விளங்குகிறதே. இன்றே முளைத்ததாயினும் ஒன்று தேவையற்றதாகி விடும்போது அதைப் பழைமை என்று கூறி ஒதுக்கி விடுவதிலே தவறில்லை. இக்கருத்தோடு நாம் திருக்குறளை அணுகினால் அது பழையதாகுமா? பழைமை என்று அதனை ஒதுக்க முடியுமா? புதுமை பழமையைச் சீரழிப்பதாக இருக்கக்கூடாது. அது பழமைக்குச் செழிப்பூட்டுவதாக இருக்கவேண்டும்.
தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே தோன்றி இன்றும் வழக்கில் உள்ளது-போற்றிப் பாராட்டப் பெறுகிறது என்பது திருக்குறளுக்குரிய சிறப்பாகும். இந்நூல் உண்மையிலேயே சிறப்புடையதா? அல்லது காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்ற பழமொழியின்படி நாம் அதைச் சிறப்பிக்கிறோமா என்பதை ஆராயவேண்டும்.
திருக்குறளின் கருத்து கால எல்லைக்கு உட்பட்டதல்ல. காலங்கடந்த தத்துவங்களையுடையது அந்நூல். திருக்குறள் சாதி, இன, மொழி, நாடு வரையறைகளைக் கடந்து உலகம் தழீஇய பொது நூல். அது மனித குலத்தின் நீதிநூல்.
வள்ளுவத்தில் அதிசயங்கள் அற்புதங்கள் கிடையாது. அன்று வள்ளுவர் சொன்னதை நாம் இன்று கையாள முடியவில்லையென்றால், அது நூலின் பிழையன்று; நாம் மனிதத் தன்மையிலிருந்து மனிதப் பண்பிலிருந்து நெடுந்துாரம் விலகிச் சென்றிருப்பதே காரணமாகும். கல்விக்கும் வாழ்க்கைக்கும் இன்றுள்ள உறவு அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் உள்ள உறவைப்போல் இருக்கிறது. நமது வாழ்க்கைப் போக்கில் வள்ளுவத்தின் நிழல் படியவில்லை. மனிதர்களின் வாழ்க்கையை அகத்தாலும் புறத்தாலும் வளப்படுத்துவதே கல்வி, சராசரி மனிதனால் நடைபயிலக்கூடிய அறநெறியே கூறினார் அவர். வாழ்க்கை முறைபற்றிச் சமுதாயத்தின் சாதாரண படியில் உள்ள சராசரி மனிதனுக்குச் சொல்ல விரும்பிய அளவில் சுருக்கமாக-தனித் தனியே எளிய முறையில் கூறினார்.
வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களையும் அவர் பேசுகின்றார். அனைத்தும் அனுபவித்த ஒருவர் கூறுவது போலவே பேசுகிறார். திருக்குறளே அனுபவ விளக்கமாகக் காட்சியளிக்கிறார். திருவள்ளுவர் சமுதாயத்தின் பல்வேறிடங்கட்கும் சென்று பல்வேறு தரப்பினரையும் பார்த்து - நாட்டில் பலர் பேசிய - வழக்கில் இருந்த பல்வேறு செய்திகளையும் கருத்துக்களையும்கூட நினைவில் வைத்துக் கொண்டு நூல் செய்திருக்கிறார். மிகச் சிறந்த பொற்கொல்லர் போல, வள்ளுவர் சொற்களுக்கு மெருகேற்றியிருக்கிறார். அவர் ஒரு கைவந்த சொல்தச்சராகவே விளங்குகிறார்.
இன்று, அள்ளித் தெளித்ததெல்லாம் கோலம் என்பது போல, பலர் வாழ்க்கை நடத்துகின்றனர். வரலாற்றைப் படிப்பதிலே நாம் அவ்வளவு அக்கறை காட்ட வேண்டியதில்லை. நாம் ஒரு புதிய வரலாற்றை உருவாக்க முயற்சிக்க வேண்டும். நமக்கு முன் வாழ்ந்தவர்கள் செய்த தவறுகளை நாமும் செய்து வீழ்ச்சியடையக் கூடாது.
தொடக்கத்தில் மனிதன் கண்களால்தான் பேசியிருக்கிறான். உள் உணர்வுகளுக்குத் தக்கபடி கண் ஆடும். மனிதன் கண்களைக் கட்டுப்படுத்தி வாழ முடியாது. இதனால்தான், இறைத்தோற்றத்தில்கூட அப்பரடிகள் முதன் முதலில் குனிந்த புருவத்தைப்பற்றிப் பேசுகிறார்.
வள்ளுவர் காலத்தில் நம் மக்களில் பலர் எண்ண - சிந்திக்க விரும்பாமலேயே வாழ்ந்தார்கள். எனவே வள்ளுவர், எண்ணவேண்டும் - சிந்திக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். எண்ணிச் சிந்தித்துச் செயற்படுவதன் மூலம் உலகத்தை வெற்றி பெறமுடியும்.
புறத்துறையில் புரட்சி செய்தவர்கள் ஏராளம்; ஆனால் அகப்புரட்சி செய்தவர்கள் மிகச் சிலரேயாவர். அந்த அகப் புரட்சியும்கூட ஆற்றொழுக்காக இல்லாமல் இடையிடையே தடைப்பட்டுத் தளர்வுற்று வந்திருக்கிறது. மனிதன் அக வளர்ச்சியில் தேய்ந்து கொண்டே வந்திருக்கிறான்: மனிதன் வாழத்தானே புதிய புதிய சாதனங்கள் எல்லாம் என்பதை அவன் எண்ணிப் பார்க்கக்கூட மறந்துவிட்டான்.
குடிப்பிறப்புச் சிறப்பு மனிதனுக்கு இன்றியமையாதது. திருவள்ளுவர், அப்பரடிகள் ஆகியோரின் குடிப்பிறப்புச் சிறப்பு இன்று நம்மிடம் இருக்கிறதா?
'நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்'
என்று வீட்டுக்குள்ளே அடங்கிக் கிடப்பவனைப் பார்த்து - குடும்ப வாழ்க்கையின் செழுமையில்லாதிருப்பவனைப் பார்த்துப் பேசினார்.
'உலகத்தோடு ஒத்து வாழு; ஒதுங்கி வாழாதே' என்று பேசுகிறார் திருவள்ளுவர். நீ சென்று குடியேறிய நாட்டை உன் நாடாக எண்ணிப் போற்று; அதனை உன் நாடாகவே ஆக்கிக்கொள். அந்நாட்டை உன் நாடாக ஆக்கிக்கொள்ள அந்நாட்டு மொழிகளையெல்லாம் கற்றுக்கொள் என்கிறார். உலகத்தை உன்னிடத்தே இழுக்க முயற்சிக்காதே. உலகம் தங்கும் இடத்தில் நீ தங்கிவிடு என்கிறார். வள்ளுவம் அருமையானதொரு வாழ்க்கை இலக்கியம்.இன்று உலகச் சந்தையில் அந்நியர் கருத்துக்கள் வந்து மலிந்து கிடக்கின்றன. அவற்றின் தோற்றத்தையோ, கவர்ச்சியையோ கண்டு ஏமாறாமல், மெய்ப்பொருளைக் கண்டு பயன் பெறவேண்டும்.
'எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு'
என்றும்,
'எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
பெய்ப்பொருள் காண்பதறிவு'
என்றும் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.
இலட்சம் செங்கல் கொட்டிக் கிடந்தாலும் அது கட்டிடமாவதில்லை; அவற்றை அடுக்கிச் சந்து பதிந்துதான் சுவரை எழுப்பவேண்டும். உடைந்த செங்கல்லையும் முழுச் செங்கல்லையும் இணைத்து இடைவெளி ஏற்பட்ட இடத்தில் முழுச் செங்கல்லையும்கூட உடைத்துப் போட்டுச் சந்து நிரப்புவதுபோல, மனிதனும் தனது சொந்த மதிப்பையும் சுகத்தையும் குறைத்துக்கொண்டாவது சமுதாயச் சுவரை எழுப்ப முற்படவேண்டும். உடைந்த செங்கல்லையும் முழுச் செங்கல்லையும் இணைத்துச் சுவரை எழுப்புபவர் கொத்தனார்; சமுதாயத்தில் உள்ள வலிமையுடையவனையும் வலிமையற்றவனையும் இணைத்து ஒருசேர அழைத்துச் செல்லுபவரே சமுதாயத் தலைவராவார்.
சோஷியல் (Social) என்ற ஆங்கிலப் பதமே விருப்பு வெறுப்புக்களைக் கடந்து உள்ளம் ஒன்றியப் பழகும் பண்பைக் குறிப்பது. இதைத்தான் திருவள்ளுவர் 'ஒப்புரவு' என்று குறிப்பிடுகிறார். மற்றவர்களோடு சேர்ந்து பழகும் போது அப்படிச் சேர்ந்து பழகுவதனால் ஏதேனும் கேடுகள் விளையுமானாலும் அவற்றையும் பொறுமையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். 'ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்' என்கிறார் வள்ளுவர். ஒத்தது அறிதல் என்பதற்குப் பொருள் மற்றவர்களுக்கும் ஒத்ததறிந்து என்பதேயாகும். அப்படி மற்றவர்க்கும் ஒத்ததறிந்து வாழ்பவனே உயிர் வாழ்பவன்.
பழகிய நண்பரிடத்துக் குற்றம் கண்டவிடத்தும் பொறுத்துக்கொள் என்கிறார் திருவள்ளுவர். மனிதனையும் மாமனிதனையும் இணைத்துச் சமுதாயக் கட்டடத்தை எழுப்ப இந்தப் பொறுமைப் பண்பு இன்றியமையாதது.
சமயம் கடவுள் நம்பிக்கை ஆகியவற்றில் மிகத் தெளிவான கருத்துடையவர் திருவள்ளுவர். வீடுபற்றி அவர் பேசிய அளவிற்கு வேறு யாரும் பேசியதில்லை.
'புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு'
என்ற குறட்பாவின் மூலம் திருவள்ளுவர் வீடுபேற்றின் மேன்மையை விளக்கியிருக்கிறார். "
நாகரிகம் என்பதற்கே புதியதொரு விளக்கம் தந்தவர் திருவள்ளுவர். நண்பர் ஒருவர் நஞ்சு கலந்த பாலைக் கொடுத்தாலும் அதை வாங்கிக் குடித்துவிடு - நஞ்சு கலந்தது என்று நினைக்காமல் குடித்துவிடு என்று கூறுகிறார். நஞ்சு கலந்தது என்று நாம் நினைத்தால் நமது முகத்தில் மரணக்குறி படரும்; நஞ்சு கலந்தது என்பதை நாம் அறிந்துகொண்டோம் என்பதை அந்த நஞ்சு வைத்த நண்பர் உணர்ந்தால் அவர் வருந்துவார். அந்த வருத்தத்தைக்கூட அவருக்குக் கொடுக்கக் கூடாது என்கிறார். நஞ்சு என்று நினைக்காமல் குடித்தால் அது நம்மைக் கொன்றுவிடாது; நஞ்சையும் மாற்றும் வல்லமை தூய செங்குருதிக்கு உண்டு. சாக்ரடீசுக்கு நஞ்சு கொடுத்தார்கள். அவர் நஞ்சு என்று தெரிந்து-நஞ்சைச் சாப்பிடுகிறோம் என்று அறிந்து அதைச் சாப்பிட்டார்; செத்துப் போனார். அப்பரடிகளுக்கும் நஞ்சு கொடுக்கப்பட்டது. அந்த நஞ்சை அப்பரடிகள் உண்டும் சாகவில்லை.'பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்”
என்று நயத்தக்க நாகரிகம் பேசிய வள்ளுவர் பிறந்தநாடு அன்றோ நமது நாடு? எனவே நஞ்சினையும் உண்டு வாழ்ந்தார் நமது ஞானத் தலைவர் அப்பரடிகள்.
மனிதன் ஒரு சொரி சிரங்கு பிடித்தவன் போல; அரிப்பு ஏற்பட்டபோது சொரிந்து கொள்வான்; சொரியும் போது சுகமாக இருக்கும். பின்னர் எரிச்சல் ஏற்படும். அவ்வாறு எரியெடுத்ததும் இனிமேல் சொரியக்கூடாது என்று தனக்குள் எண்ணிக் கொள்வான். பின்னர் ஊரல் ஏற்படும்போது அதை மறந்து சொரிய ஆரம்பித்துவிடுவான். அது போலவே பலர் அன்பு, அருள் என்று படிக்கும்போது அன்பும் அருளும் காக்கவேண்டும் என்று எண்ணிக் கொள்வார்கள்; அடுத்த நேரமே அவற்றை மறந்து விடுவார்கள். இத்தகைய பண்பு, வாழும் மனித சமுதாயத்திற்கு நல்லதல்ல. நாம் கற்கவேண்டும்; கற்ற நெறியில் நிற்க வேண்டும். வாழ்க்கையில் வழுக்கலும், இழுக்கமும் ஏற்படும்போது ஊன்றுகோல் போல நின்று உதவுவது திருக்குறள். வீட்டிலும், நாட்டிலும் குறள் மணம் கமழ வேண்டும்; குறள் வாழ்வு மிளிர வேண்டும்.
விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டுக் கிடந்தது நமது பாரத தேசம். இந்த நாட்டு மக்கள் ஊமையராய்... செவிடர்களாய்... உணர்வின்றி நெடுமரம்போல் வாழ்ந்தார்கள். ஆதிக்கக்காரர்களும் சவாரி செய்வதற்கு இலாயக்காகக் கூனிக் குறுகி வாழ்ந்தார்கள். வாழ்க்கையில் வளம் இல்லை. ஆனால், வறண்ட வேதாந்தங்கள் உண்டு. மண்ணகத்து வாழ்வுபற்றிய அறிவு சூன்யம்; ஆனால் விண்ணகத்தைப் பற்றி ஆயிரமாயிரம் கற்பனைகள், எண்ணற்ற சமயங்கள். ஆனால் கிராமத்தில் அருளாட்சி இல்லை. அகத்திலும் புறத்திலும் இருளாட்சி செய்த காலம். இருள்கடிந்து எழுகின்ற ஞாயிறென பாரத சமுதாயத்தில் அண்ணல் காந்தியடிகள் தோன்றினார். அடிமைகளாக வாழ்ந்த நமக்குச் சுதந்திரம் வாங்கித் தந்தார். இல்லை-சுதந்திரமாக வாழவும் கற்றுக் கொடுத்தார். இந்நாடு சுதந்திரம் பெற்றது. நாமிருக்கும் நாடு நமதாயிற்று. நமக்காக நாமே ஆட்சி செய்யும் குடியாட்சியும் மலர்ந்தது. ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து புகழ்பெற்ற சுதந்திர பாரதநாட்டின் குடிமக்களாக நாம் வாழ்வது முன்னைத் தவத்தின் விளைவே.
நாடு சுதந்திரம் பெற்றுவிட்டது. ஆனால், அந்நிய விளைவுகளை-அவற்றின் அடிச்சுவடுகளை அழித்துமாற்றியமைத்துப் புதிய சமுதாயத்தை அமைக்கும் பெருங்கடமை நம் முன்னே நிற்கிறது. பிறர் வாழ்வதற் கென்றே நாம் பிரித்து வைக்கப் பெற்றோம். ஒளிவிளக்கில் விழும் விட்டில் பூச்சிகளைப்போல, நம்மையே அழித் தொழிக்கக்கூடிய சாதி, இன, மத வேற்றுமைகளை ஏதோ புனிதமானவை யெனக் கருதிப் போற்றி வளர்த்து வந்திருக்கிறோம். சுதந்திர பாரத சமுதாயம் ஒரு குடும்பம். அக் குடும்பத்தில் பலமொழி பேசுவோர் உண்டு-பல்வேறு நாகரிக முடையோர் உண்டு. எனினும், வேற்றுமைகளைக் கடந்து- மறந்து விழுமிய ஒருமைப்பாடு கண்டுவாழும் ஒரு குடும்பமேயாம். இதற்கு மாறான உணர்வுகள் நாட்டிற்கும் நல்லதல்ல- நமக்கும் நல்லதல்ல.
உலகப் பெரும்போரின்போது சர்ச்சில் 'வெற்றி! வெற்றி!' என்ற குரல் வழியே அந்நாட்டு மக்களை எழுச்சியும் புத்துணர்வும் பெறச் செய்து வெற்றி பெற்றான். இன்று நம்முடைய நாட்டிற்குத் தேவைப்படுகின்ற இன்றியமையா உணர்வும், 'ஒன்றே குலம்-வளர்க ஒருமைப்பாடு' என்பனவே யாகும். வீட்டிலும் வீதியிலும் நாம் அன்றாட வாழ்க்கையில் கொண்டொழுகும் "ஒருமைப்பாட்டுணர்வே" தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்க உதவும். ஊராட்சி மன்றங்களில் பொறுப்பேற்றிருக்கும் நண்பர்கள் தங்களுடைய கிராமச் சமுதாயத்தை அன்பியல் தழுவிய-உறவோடு கலந்த ஒரு குடும்பமாக ஆக்குவதில் முயற்சித்து வெற்றிபெறுதல் வேண்டும்.
தேசிய ஒருமைப்பாட்டின் அடித்தளம் கிராமச் சமுதாய அமைப்பிலேயே இருக்கிறது.
இந்தியா என்றால் கிராமம்; இந்திய நாட்டின் இதயம் கிராமங்கள். இந்திய நாட்டின் எண்பது விழுக்காடு மக்கள் கிராமங்களிலேயே வாழ்கின்றார்கள். அவர்களிற் பெரும் பாலோர் வேளாண்குடி மக்கள். அவர்களால் உண்பிக்கப் பெறுவோர் பலர். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் முன்னிருந்த நிலைதான். இதை எண்ணிப் பார்க்கவும் நெஞ்சம் குமுறுகிறது. உழைப்பவர் வாழ்க்கையில் சோர்வு, உழைக்காதவர்கள் நகரங்களில் "வெளிச்சம் போட்டு” வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சாதி ரீதியான ஆதிக்கம்-சமுதாயத்தை அட்டைபோல் உறிஞ்சி அலைக்கழிக்கச் செய்யும் நிலப் பிரபுத்துவமுறை ஆகியவைகளால் வலிவும் வனப்பும் வளமும் இழந்துபோன கிராம வாழ்க்கைக்குப் புத்துயிரூட்டியது நாம் பெற்ற சுதந்திரம். வேளாண்குடி மக்கள் உழைப்பில் நியாயமான பங்குபெற வழிசெய்தது ஏன் ? அண்ணல் காந்தியடிகள் சொன்னதுபோல, உழவர்களுக்கு உழும் நிலத்தில் உரிமை கிடைக்கும் வண்ணம் நிலச் சீர்திருத்தத்தைக் கொணர்ந்து, இத்தகு புதிய சாதனைகள் விவசாயிகளிடத்தில் எழுச்சியைத் தந்திருக்கின்றன-தன்னம்பிக்கையைத் தந்திருக்கின்றன-உற்பத்தியைப் பெருக்கியிருக்கின்றன.
நமக்குத் தெய்வசாநித்யம் தெரியுமோ தெரியாதோ, ஆனால் எண்ணற்ற தெய்வங்களைப்பற்றி நமக்குத் தெரியும் ஆனால், பாரினில் வாழ்ந்திட மட்டும் கற்கமாட்டோம். நமது பாட்டன் பூட்டன்கள் ஏடெடுத்தடுக்கிப் பூசித்தனர். ஏடு கிடைக்காதவன் ஆயுத பூசையின் பெயரால் மண்வெட்டியும் கலப்பையும் வைத்துக் கும்பிட்டான். எத்தனை பூசை போட்டும் அந்தக் கலைமகள் தேவியின் கருணா கடாட்சம் இந்த நாட்டில் இல்லை. அறிவிலே தெளிவில்லை, ஆற்றலிலே உறுதியில்லை. வெந்ததைத் தின்றார்கள்; விதிவந்தபோது செத்தார்கள். "மரணமிலாப் பெருவாழ்வு” என்று சித்தர் சொன்னது ஏட்டில் இருந்தது. படித்த பண்டிதர்கள் பதவுரையும் பொழிப்புரையும் சொன்னார்கள். எனினும் பாரினில் அந்த வாழ்க்கை-"மரணமிலாப் பெருவாழ்வு” இல்லை. சுதந்திரம் வந்தது. தேடித் திரிந்தாலும் கிடைக்காத கல்வி சமுதாயத்தையே தேடி வந்தது. கவிஞன் பாரதி,
"வீடுதோறும் கலையின் விளக்கம்
வீதிதோறும் இரண்டொரு பள்ளி”
என்று முழங்கினான். அம்முழக்கம் சுதந்திர ஆட்சியில் நடைபெறுகிறது. இன்று "தமிழகமெங்கும் கல்வி" என்பதே பேச்சு. "ஒரு பள்ளியைத் திறப்பவன் ஒன்பது சிறைச் சாலையை மூடுகிறான்” என்பது பழமொழி. மேலும், "கல்வி ஆயிரங்காலத்துப் பயிர்" என்பதும் பழமொழி. இன்றைய தமிழகத்தின் கல்வித்துறை மறுமலர்ச்சி எதிர்காலத் தமிழகத்தின் ஏற்றத்திற்கு ஏற்ற அறிகுறியாகும். ஊராட்சி மன்றங்கள் கல்வி நிலையப் பொறுப்பை மேற்கொண்டிருக்கின்றன. வளரும் பயிருக்கு வான்மழைபோல வளரும் குழந்தைக்குக் கல்வி மன்றத்தின் தலைவர்கள் உறுப்பினர்கள் கல்வித்துறையில் இன்னும் அதிக ஈடுபாடு கொள்ள வேண்டும். மேதைத் தன்மைக்குச் சாதியும், அதிர்ஷ்டமும் வேண்டும் என்பது பத்தாம் பசலிக் கொள்கை; இன்று நாம் முயன்றால் நம் கிராமத்தில் எண்ணற்ற மேதைகளை உருவாக்க முடியும். ஆதலால் ஊராட்சி மன்றங்கள் எல்லோருக்கும் கல்வி-எப்படியாவது கல்வி-வையத்துள் வாழ்வாங்கு வாழக் கற்றுக்கொடுக்கும் கல்வியளிக்கும் பொறுப்பை மேற்கொள்ளவேண்டும்.
குழந்தைகள் மட்டும் கற்றால் போதாது. இன்று வாழும் “வளர்ந்தவர்"களுக்கும் கூடக் கருத்துப் புரட்சி தேவைப்படுகிறது. அடிமைக்கால உணர்வுகள், ஆதிக்க எண்ணங்கள் தன்னலநாட்டம் இவற்றிலிருந்து நம்மிற் பலர் இன்னும் விடுதலை பெறவில்லை. வளர்ந்துவரும் சமுதாயத்திற்கு ஏற்றவாறு இணைந்துவாழ நாம் அனைவருமே நம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டியிருக்கிறது. ஆதலால் கிராமத்தில் வாழும் நெறிகாட்ட "வள்ளுவர்" எத்துறையிலும் எப்பொழுதும் எதிலும் "அஹிம்சை" என்ற காந்தீயத் தத்துவம் ஆகியவற்றைப்பற்றிக் கேட்க-சிந்திக்க வாய்ப்புக்களை உண்டாக்கவேண்டும்.
சுதந்திரத்திற்கு முன்னர் இந்த நாட்டில் வாழ்ந்த மக்களின் சராசரி வயது சற்றேறக்குறைய 26 தான். வேத மந்திரங்கள் முழங்க, ஜாதகம் கணித்துப் புரோகிதர்களால் "நூறாண்டு வாழ்க" என்று வாழ்த்தப் பெற்றவனும்கூட 26 வயதில்தான் செத்தான். ஆனால் அவன் கவலைப்படவில்லை. வழக்கம்போல விதி முடிந்தது என்று நினைத்து அமர்ந்திருப்பான். அவனுக்குத் தெரியுமா நாம் சுகாதாரக் குறைவாக வாழ்கிறோம் என்று? கங்கையும் காவிரியும் அவனுடைய தத்துவத்தின்படி தீர்த்தங்கள் தாம். ஆனால் ஆற்றின் கரையோரங்களையே அவன் மலங்கழிக்கும் இடமாகக் கொண்டு மாசுபடுத்துவதைப்பற்றி அவன் எண்ணிப் பார்த்ததில்லை. காலரா, பிளேக் வந்தால் காளியைக் கும்பிடுவான். ஐயகோ! பாவம் சுதந்திரத்திற்குப் பிறகு, காலரா, பிளேக் முதலியன எங்கோ ஓடி ஒளிந்துவிட்டன. ஊராட்சி மன்றங்கள் கிராமத்தின் சுகாதாரத்தைப் பேணுவதில் கண்ணுங் கருத்துமாக இருத்தல் வேண்டும். நோயற்ற வாழ்க்கையும், நிறைந்த வாழ்நாளும் போற்றுதற்குரியன. அதனால், வீட்டையும், வீதியையும் தூய்மையாக வைத்துக் கொள்ள கிராம மக்களைப் பழக்குதல்வேண்டும். அதனாலன்றோ பாரதி,"சந்தித் தெருப்பெருக்கும்
சாத்திரம் கற்போம்"
என்றான். மேலும் வாழ்க்கைக்குத் தேவையான-சத்துள்ள இயற்கை உணவுகளை நமது கிராம மக்கள் எண்ணிப் பார்த்து உண்பதில்லை. வெறும் அரிசிச் சோறு, மனித வாழ்க்கைக்கே மாபெரும் பகையான புளி, மிளகாய் இவற்றில் மூழ்குகிறார்கள். ஆங்கிலேயன் அதிலும் கெட்டிக்காரன் ஆனான். உடலுக்கு இதந்தரும் நம்முடைய மிளகை வாங்கிக்கொண்டு, எரியூட்டும் மிளகாய் தந்தான். நாமோ மிளகாய் சட்னி அபாரம் என்போம்! பொருந்தா உணவுப் பழக்கத்தைத் தவிர்க்க மக்கட்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். கைக்குத்தலரிசி, நல்ல காய்கறிகள், பால், தயிர் இவைகளை உண்டு உடல் நலத்தோடு உங்கள் கிராமத்து மக்கள் வாழும்படி செய்ய வேண்டும்.
கிராம மக்கள் நிலையான பொருள் வளமும் சீரான வாழ்வும்பெற ஊராட்சி மன்றங்கள் ஊக்கமூட்டி வழி நடத்தவேண்டும்.
கிராமச் சமுதாயத்தில் பெரும்பான்மையோராக இருக்கும் விவசாயிகள் துணைத் தொழில் இன்றிப் போதிய வருவாய் பெறமுடியாது. ஆதலால் ஜப்பான் தேசத்தைப் போல, கிராமத்தின் ஒவ்வொரு வீடும் தொழிலகங்களாக வளர்ந்து காட்சியளிக்க வேண்டும். மேலும் வேளாண்மைத் துறையிலும் புதிய வழித்துறைகளைக் கையாண்டு திருந்திய முறையில் சாகுபடி செய்து, உயர்ந்த அளவு விளைச்சலைக் காணத் தூண்டவேண்டும். கிராமத்தின் தேவைகள் அனைத்தையும் அந்தக் கிராமமே உற்பத்தி செய்யும் அளவிற்குக் கிராமம் வளர்ச்சியடைய வேண்டும். தன்னிறைவு இல்லாத கிராமத்தின் செல்வம் நகர்வாழ் மக்களால் சூறையாடப்படும். ஆதலால் ஊராட்சி மன்றங்களால் தமது கிராமத்திற்கேற்றவாறு திட்டங்களைக் கண்டு செயல்படுத்தி மூன்றாவது ஐந்தாண்டுத்திட்ட கால எல்லைக்குள் தன்னிறைவு உள்ள கிராமமாக்குதல் வேண்டும்.
கிராமத்தில் தேங்கிக்கிடக்கும் மனித சக்தியை வெளிப்படுத்திச் செயல்படுத்தும் ஆற்றல் கூட்டுறவு இயக்கத்திற்கு உண்டு. சுதந்திர பாரத சமுதாயக் குடும்பத்தின் இலட்சியம் சோஷலிச சமுதாய அமைப்பு. அந்த இலட்சியத்தை அடைய நம்முடைய இரண்டு நேர்ப்பாட்டைகள்: (1) கிராம ராஜ்ய மாகிய பஞ்சாயத்தும் (2) கூட்டுறவுமாகும். பிரிந்து கிடக்கும் மனித சக்திகளைக் கூட்டுறவு இயக்கத்தின் மூலம் ஒன்றுபடுத்த முடியும். கூட்டுறவால் நாட்டுயர்வு ஏற்படும். ஆதலால் கிராமத்தின் எல்லா முயற்சிகளையும் வேளாண்மை முதல் வாணிபம்வரை கூட்டுறவு முறையிலே செய்ய முயற்சிப்பது நல்லது. கூட்டுறவின் மூலமே சுரண்டுபவன், சுரண்டப்படுபவன் என்ற இரண்டு சாதிகளை ஒழிக்க முடியும். அம்மட்டுமல்ல-எதிலும் எப்படியாவது இலாபம் எடுத்தாக வேண்டும் என்ற வடிகட்டிய பிற்போக்குணர்விலிருந்து சமுதாயத்தைப் பேணிக்காப்பாற்றவும் முடியும். கூட்டுறவின் மூலம் "நமக்காக எல்லோரும் எல்லோருக்குமாக நாம்” என்ற உயர்ந்த வாழ்க்கை முறை உருவாகும்-உறவு கலந்த பந்தபாசம் பல்வேறு குடும்பங்களுக்குள் ஊடுருவி வளரும்.
மக்களாட்சி முறை இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கொள்கை உலகம் முழுவதிலும் மனிதன் இந்த சுதந்திரத்திற்காகப் போராடிப் போராடி இந்த உரிமையைப் பெற்றிருக்கிறான். அப்படிப் பெற்றது ஆளுவதற்கோ, ஆதிக்கத்திற்கோ அல்ல. சுதந்திர நாட்டில் ஆளும் இனம் ஆளப்படும் இனம் என்ற வேறுபாட்டிற்கு இடமே இல்லை. ஆட்சிமுறை என்பது நல்வாழ்விற்கு உரிய நடைமுறை அமைப்பேயன்றி ஆதிக்கத்திற்காக அன்று. சுதந்திர நாட்டில் நாட்டின் குடியரசுத் தலைவரிலிருந்து கிராமத்தின் ஆட்சித் தலைவர் வரை அனைவரும் சமுதாயத் தொண்டர்கள்-காவலர்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆதலால் ஊராட்சி மன்றங்களில் பொறுப்பேற்றிருக்கின்ற நாம் நல்லெண்ணத்திற்கும், நம்பிக்கைக்கும் உரிய குடியாட்சி முறையை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் தோன்றி வளர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள். ஐந்து வயதுப் பையனுக்கும் ஐம்பது வயது முதியவருக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஐந்து வயதான சமுதாயத்திற்கும் 50 வயதான சமுதாயத்திற்கும் வேறுபாடு காணப்பெறுகிறது. உலகில் எந்த விலங்கினங்களுக்கும் இல்லாத பெருஞ்சிறப்பு, பெருமை மனித சமுதாயத்திற்கு உண்டு. காரணம் மனித சமுதாயத்திற்கு வரலாறு இருக்கிறது. புலிக்கும் புறாவுக்கும், காக்கைக்கும் கரடிக்கும் குருவிக்கும் கோட்டானுக்கும் வரலாறு இல்லை.
மனிதகுல வரலாற்று மையமாக லெளகீக-உலகாயத எண்ணங்கள்தாம் உணர்ச்சி பெறுகின்றன என்னைப் பொறுத்த வரையில் உணர்ச்சிகளை உண்டாக்குவதற்குக் கருத்துப் புரட்சியே சரியான சாதனம், கருவி என்று கருதுகின்றேன். கருத்துப் புரட்சிதான் மனித வாழ்க்கையின் கேந்திரமாக மையமாக இருப்பது. சில சமயங்களில் கருத்தின் பேரால் அந்தக் கருத்தைச் சொன்ன ஆட்கள் பெருமை பெறுவார்கள்; இன்னும் சில சமயங்களில் ஆட்களின் பேரால் அந்த ஆட்கள் சொன்ன கருத்துச் சிறப்பு பெறும். எனினும், எப்போதுமே மையமாக ஆட்சி பெறுவது கருத்துதான்.
நம் நாட்டைப் பொறுத்த வரையில் கருத்தை மறந்து விட்டு ஆளை விமர்சிப்பது, ஆளுக்குப் பெருமை செய்வது ஒருவகை. ஆளை மறந்துவிட்டுக் கருத்தை விமரிசிப்பது, கருத்துக்குச் சிறப்புக் கொடுப்பது இன்னொருவகை. ஆள் வழிச் சிந்திப்பதைவிடக் கருத்துவழிச் சிந்திப்பதுதான் சிறந்தது. கருத்து வழி மனிதர்களைச் சிந்திக்கப் பழக்கி விட்டால், காலப்போக்கில் எந்தக் கருத்து நல்ல கருத்தோ அந்தக் கருத்து மக்கள் மனத்தில் தேங்கி நிலைபெற்றுவிடும். எனவே, ஆத்மாவைக் கருத்துவழிச் சிந்திக்கச் செய்ய வேண்டும் என்றே நாம் எண்ணி முயற்சி செய்கின்றோம். இதைத்தான் சமயமும் வலியுறுத்துகின்றது. பொதுவாக எவர் பேசினார் என்பதுதான் முக்கியம். வாய்ப்பும் வசதியும் இருக்குமானால் கருத்தைச் சொல்லும் மனிதரைப் பாராட்டலாம். மனிதரைப் பாராட்டுவது என்றால் படம் திறந்தோ, நினைவுச் சின்னம் எழுப்பியோ, விழா நடத்திப் பூசனை செய்வதோ அல்ல. அவர் சொன்ன வெளியிட்ட அருமையான கருத்துக்களை வாழ்க்கையில் ஏற்றி நடைமுறைக்குக் கொண்டுவருவதுதான்.
திருவள்ளுவர் ஒரு கருத்துப் புரட்சிக்காரர். அவர் காண விரும்பிய சமுதாயம் கருத்து வழிபட்ட சமுதாயம். அவர் சமுதாயத்தைப் பார்த்த முறை வேறு. வளர்ந்து வருகிற தமிழ்ச் சமுதாயத்திற்கு வாழ்க்கை நூல் செய்தார் அவர் வள்ளுவர் என்பதை வள்ளும் என்றே நாம் குறிப்பிட விரும்புகின்றோம். காரணம், கருத்து வழிச் சிந்தனை வேண்டும் என்பதையே நாம் வற்புறுத்துகின்றோம். வள்ளுவத்தில் கவிதை நயம் இல்லை, கற்பனை இல்லை, பொய் இல்லை, புனைந்துரை இல்லை. வள்ளுவத்தின் மையக் கருத்து வாழ்க்கை, வாழ்க்கை, வாழ்க்கை.
நமது நாட்டைப் பொறுத்தவரையிலே, கொள்ளிடக் கரையிலே கிடக்கின்ற மணலைக்கூட எண்ணிவிடலாம் போலிருக்கிறது. குவிந்து கிடக்கின்ற சாதிகளை எண்ண முடியாது. சாதி என்பது நம்மைப் பிடித்து ஆட்டி அலைக் கழித்துக்கொண்டு வருகிற ஒரு தொத்து நோய், வள்ளுவமோ, சாதி வேறுபாடற்ற-ஒருகுல சமுதாயத்தைக் காண விரும்பியது. எனவேதான் அது, "பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்களுக்கும்” என்று பேசுகின்றது.
சாதீய முறைக்குச் சமயம் ஆதரவு தரவில்லை. "ஒன்றே குலம்" என்பது திருமந்திரம், "சாதிகுலம் பிறப்பென்னும் சுழிபட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயகனை" என்று பேசுகிறது மாணிக்கவாசகம். "சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்” என்கிறது அப்பர் தேவாரம். சமய ரீதியாகச் சாதிகள் உற்பத்தியாக வில்லை-சாதீய முறைக்குச் சமயம் ஆதரவு தரவில்லை என்பதற்கு இதைவிட என்ன வேண்டும்.
சாதீய முறை முதலாளித்துவ முறை. முதலாளித் துவவாதிகள் தங்கள் சுரண்டலுக்கும் சுகபோகங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டு விடாமல் தடுத்துக் காத்துக் கொள்ளவே சாதீய முறைகளை உருவாக்கி அதற்கு ஆதரவும் கொடுத்து வருகின்றார்கள். சாதீய முறையை உருவாக்கிய அந்த முதலாளித்துவ சுரண்டல்காரர்கள் தங்கள் கொள்கையை உறுதிப்படுத்தச் சமயத்தை-மதத்தைத் துணைக்கழைத்துக் கொண்டார்கள். மன்னன் ஆணை என்றால் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறவர்களும் மகேசுவரன் கட்டளை என்றால் மறுக்காமல் ஒத்துக்கொள்வார்கள். இதை வைத்தே முதலாளித்துவ வாதிகள் சமயத்திற்கும் சாதீய முறைக்கும் முடிச்சு போட்டார்கள். அவ்வளவுதான். எனவே, சாதிய முறை நமது சமயத்திற்கு முற்றிலும் முரண்பட்டது.
மனித குலத்தை ஒருகுலமாக்குவதுதான் வள்ளுவத்தின் தலையாய கொள்கை. மனிதனை மனிதன் அடித்துப் பிடித்துச் சுரண்டி வாழக்கூடாது; மனிதனை மனிதன் மதிக்க வேண்டும் என்ற கொள்கை வள்ளுவத்தில் வலியுறுத்தப் பெறுகிறது.
அன்பு அன்பு என்று நாம் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பேசி வருகின்றோம். எனினும் அன்பைப் பலர் பார்த்ததே இல்லை-பலருக்குத் தெரியாது. எங்கள் மாவட்டங்களில் மண்ணிலும் ஈரமில்லை-மக்கள் மனத்திலும் ஈரமில்லை. நஞ்சையும் புஞ்சையும் நல்வளம் கொழிக்கின்ற மண்ணில் ஈரமிருக்கிறது. ஆனால் மண்ணில் ஈரமிருக்கிற அளவிற்கு மக்கள் மனத்திலே ஈரமிருப்பதாகத் தெரியவில்லை. ஒருவருக்கு என்னதான் செல்வமிருப்பினும், செல்வாக்கு சுகவாழ்வு கிடைத்திருப்பினும் அன்பு இல்லை என்றால் என்ன பயன்?
"அன்புடையர் எல்லாம் உடையர்; அன்பிலார்
என்னுடைய ரேனும் இலர்"
என்கிறது வள்ளுவம். "அன்பின் வழியது உயிர்நிலை” என்று வலியுறுத்துகிறது, அது. நமது சமயக் கொள்கையும் அதுதான். நமது சமயத்தின் மையக் கொள்கை எவரிடத்திலும் எப்போதும் அன்பாயிரு என்பது தானே.
நமக்கு வாழ்க்கையிலே பெரும் வரட்சி இருக்கிறது. அந்த வரட்சியைப் போக்கி வாழ்வை வளமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை. அதற்கான முயற்சி பலரிடம் இல்லை. நான் வேடிக்கையாகக் கூறுவதுண்டு. "மடங்களிலே மட்டும்தான் முன்பு சந்நியாசிகள் இருந்தார்கள். இப்போது வீடுகளிலும் பலர் சந்நியாசிகளாக ஆகிவருகிறார்கள்” என்றும், உழைக்க வேண்டும் என்ற ஆர்வமில்லை - முயற்சி இல்லை. பசித்தால் உண்பதும், தூக்கம் வந்தால் தூங்குவதுமாகவேதான் பலர் வாழ்கின்றனர்.
மனிதன் உழைக்கப் பிறந்தவன்; அவனது இலட்சியம் உழைப்பு. அந்த உழைப்பால் பெறுகின்ற உவகை - இன்பம் - மகிழ்ச்சி, அவ்வளவுதான்-உழைப்பையும் உழைப்பால் பெறுகின்ற இன்பத்தையும் சமயம் வெறுக்கவில்லை.
நமக்கு முயற்சி தேவை-புதிய நம்பிக்கை தேவை. பலர் ஏழையாக பாமரராக வாழ்வதும், சிலர் அவர்களது உழைப்பை உறிஞ்சி-சுரண்டிச் சுகவாழ்வு வாழ்வதும் விதிஅவரவர் தலையெழுத்து என்பது சரியானதல்ல. அது பழைய பத்தாம் பசலிக்கொள்கை. அந்தப் பழையக் கொள்கையை நாம் விட்டொழிக்க வேண்டும்.
"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்"
என்றுதான் வள்ளுவம் பேசுகின்றது. நமது மதத்தைப் பொறுத்தவரையில், "மனிதன் முயற்சி செய்யவேண்டும்-உழைக்க வேண்டும்” என்றுதான் வற்புறுத்துகிறது. யாரும் யாரையும் சுரண்டி வாழ்வதை மதம் அனுமதிக்கவில்லை.
இன்று, “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. உள்ளதைக்கொண்டே திருப்தியாக இரு" என்ற பழமொழிகள் மக்களின் ஆசைகளையும், முயற்சிகளையும் அருகச் செய்வனவாக உள்ளன. பலரிடம் ஆசையும் இல்லைஆவல் நிறைந்த வாழ்க்கையுமில்லை. ஆசைப்படாதே என்றால் இன்னொருத்தருடைய சொத்துக்கும் ஆசைப் படாதே என்பதுதான் பொருளே தவிர, நீ வாழ ஆசைப் படாதே-உன் வாழ்வில் வளமை கூட்ட விரும்பாதே என்பது கருத்தல்ல. ஏழைகளின் வாழ்வை உறிஞ்சிச் சுரண்டி வாழும் ஒரு பணக்காரனை - சுரண்டல்காரனைப் பார்த்து இன்னும் மற்றவர் வாழ்வை-வளத்தைச் சுரண்டி வாழ ஆசைப்படாதே, சுரண்டியது போதும் என்று திருப்தியோடு இரு என்பதாக மற்றவர் கூறியதுதான். ஆனால் இன்று நைந்து நலிவுற்று, வாழுகின்ற பல்லாயிரக்கணக்கான ஏழை மக்களின் ஆசையை ஒடுக்கி, அவர்களின் முயற்சியை ஒழித்து, தங்கள் சுரண்டல் தொழிலை தொடர்ந்து நடத்திவர-தங்களைப் பாதுகாத்துக்கொள்ளப் பயன்படுத்தும் பழமொழியாக ஆகிவிட்டது. "போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து" என்பது. அப்பாவியான ஏழையும் இதையே நம்பிக்கொண்டு, "நமக்குக் கிடைத்திருப்பது போதும்" என்று முயற்சியின்றியே வாழத்தலைப்பட்டு விட்டான்.இன்று நம்மிலே பலருக்கு, அடுத்தவன் அவன் வாழ்வில் என்ன தப்பு பண்ணுகிறான் என்பதுதான் தெரிகிறதே தவிர, அடுத்தவனுக்கு என்ன நட்டம் ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிவதில்லை. நாலுபேர் கூடுகிற இடத்தில் நாம் எதை எண்ணிச் சிந்தித்து பேசுகிறோமோ, அதுதான் பெரும்பாலும் நடைமுறைக்கு வருகிறது. எனவே, அவ்வாறு நாலுபேர் கூடுகிற இடத்தில் நாம் நல்லனவற்றையே எண்ணி, நல்லனவற்றையே சிந்தித்து, நல்லனவற்றையே பேசவேண்டும்.
மனிதன் வயிராற உண்ணவேண்டும்; அதே நேரத்தில் கிடைத்ததை உண்டுவாழத் தன்னைத் தயார்செய்து கொள்ள வேண்டும். சுவையுணவுதான் பிடிக்கும் என்று பேசக்கூடாது. சுவையுணவுகளைப் பற்றிச் சமய இலக்கியங்களிலும் பேசப்படுகின்றன. ஆனால், சுவையுணவுபற்றிப் பிடிவாதம் பிடிக்கலாமா? மருந்துக்கு குடிக்கலாம் என்றால், குடியிலேயே மயங்கிக் கிடப்பதா? காதல், வாழ்வுக்கு நன்மை பயப்பது என்றால், பரத்தையர் வழிபட்டு மயங்கிக் கிடப்பதா?
திருவள்ளுவர் காணவிரும்பிய சமுதாயம் "ஒப்புயர் வற்ற சமுதாயம்”-உலகப் பொதுமை காக்கும் சமுதாயம். குடிகாரனைக்கூட மன்னித்துவிடலாம்-சமுதாயத்தைச் சுரண்டி வாழ்பவனை மன்னிக்கவே முடியாது. தனித்தனி ஒழுக்கத்தைவிடச் சமுதாய ஒழுக்கம் சிறந்தது என்றுதான் வள்ளுவர் பேசுகிறார். "தான் இன்பத்தை அடையாமல் அடைய விரும்பாமல் செயல் முடித்தல் ஒன்றினையே விரும்புகிறவன் தன் சுற்றத்தவரின் துன்பத்தை நீக்கி, அதனைத் தாங்கிக் கொள்ளுகின்ற துரண்போலாவான்" என்றார் வள்ளுவர். இன்று, "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற ஒருலக-ஒரே குல சமுதாயம் காணும் முயற்சியில் மனித சமுதாயம் ஈடுபட்டிருக்கிறது. எனவே, மனித சமுதாயத்தில், மனித குலத்தில் யாருக்கும் துன்பம் ஏற்படாமல் காக்க-துன்பம் துடைப்பதும், நமது கடமை என்று ஒவ்வொருவரும் எண்ணவேண்டும்.
நாம் நம்மை வள்ளுவன் சாதி என்று சொல்லிக் கொள்ளவே விரும்புகின்றோம். பழமையையும், புதுமையையும் இணைத்து ஒரு பாலம் கட்டவே நாம் ஆசைப்படுகின்றோம். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு தோன்றிய வள்ளுவர், நாடுவாழ நல்லபல கருத்துக்களைத் தந்தார். எனவே அவர் கருத்தின் வழித் தாயாகவும், தந்தையாகவும் விளங்குகிறார்.
வள்ளுவரும் புத்தரும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர்கள். இந்த நாடு எப்படி இருக்கவேண்டும்? சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வள்ளுவர் எழுதிய நூல்தான் திருக்குறள். இப்பெரு நூல் நம் நாட்டில் இருக்கின்ற பெருமை நமக்குண்டு. அது தவிர நம்முடைய பண்பாட்டிலே, நடைமுறையிலே திருக்குறள் வாழ்வு மலரவில்லை.
புத்தர் சொன்னதையே வள்ளுவரும் சொல்கிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார் வள்ளுவர். இதை நாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், சாதி, விடாமல் நம்மைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அது புத்துயிர் பெற்றிருக்கிறதே தவிர குறையவில்லை. இருபதாம் நூற்றாண்டில் கூட சாதி இருந்தால்தான் சமூகங்கள் வளர முடியும் என்று கூறுகிற கட்சிகளும் இருக்கின்றன. சாதி முறையினால் தமிழர்கள் எவ்வளவு ஏமாந்து போனார்கள் என்று பார்க்கவேண்டும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார் வள்ளுவர், அதற்கு முன்னே சங்ககாலப் புலவர்கள் 'யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றனர். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்றார் திருமூலர். ஆனாலும்கூட மூன்றரைக் கோடித் தமிழர்கள் உள்ள இந்த நாட்டில் பத்தொன்பதாயிரத்துச் சொச்சம் சாதிகள் இருக்கின்றன. வடக்கே, புத்தர் சாதி உணர்ச்சியை எதிர்த்தார். சாதிகள் கூடாது; உயிர்கள் அனைத்தும் சமம் என்றார். இதையே திருவள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார்.
புத்தர் "அன்பாக இரு” என்றார். அன்பு என்ற வார்த்தையின் ஆழம் ரொம்ப அற்புதமானது. இந்த சாதி முறைகள் இருக்கின்றனவே, அவை ஏதோ சாஸ்திர ரீதியாகக் கடவுளால் அமைக்கப்பட்டதாகக் கூறிச் சிலர் புனிதத் தன்மை கற்பிக்கிறார்கள். ஆனால் சாதிமுறைகளில் புனிதத் தன்மைகளே கிடையாது. சாதிமுறைக்கும் கடவுளுக்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது.
இன்று இங்கே, தெருவழியே திருவள்ளுவர் நடக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அவருக்கு எதிரில் ஓர் ஆணழகன் வருகிறான். அந்த ஆள் கடலையையும் மற்றவற்றையும் கையில் வைத்துக்கொண்டு கொரித்துக் கொண்டே வருகிறான். அந்த ஆள் பெட்டிக் கடையில் கடலை வாங்கியபோது ஒரு சின்னஞ்சிறு குழந்தை, வாழப் பிறந்தும் வாழ முடியாமல் ஏங்கித் தவிக்கும் குழந்தை, "ஐயா பிச்சை” என்று கேட்கிறது. அந்த ஆணழகன் சாஸ்திர தத்துவங்களைக் கரைத்துக் குடித்த ஆள். அந்தக் குழந்தையின் கதறலைக் கண்டு கொஞ்சமும் அதற்குக் கொடுக்காமல் "சீ; தரித்திரம்" என்று அஷ்டோத்திரம் செய்துகொண்டிருக்கிறார். இந்தக் காட்சியைத் திருவள்ளுவர் பார்த்தால், பார்த்துவிட்டு அந்த ஆணழகனைத் திருவள்ளுவர் கேட்பார்; "உனக்கு உயிர் இருக்கிறதா?" என்று. -
"என்ன அப்படிக் கேட்கிறீர்கள்? நான் நடக்கிறேன்; உடை உடுத்திக் கொண்டிருக்கிறேன்; சிரிக்கிறேன்; சாப்பிடுகிறேன். என்னைப் பார்த்து உயிர் இருக்கிறதா என்று கேட்கிறீர்களே?” என்பான் அவன். திருவள்ளுவர் உடனே, "இவை எல்லாம் உன் உடம்புக்கு உயிர் இருக்கிறது என்பதைத்தான் காட்டுகின்றன. ஆனால் உன் உயிருக்கு உயிர் இருக்கிறதா? உயிருக்கு அன்பு என்ற உயிர் இருந்தால் நீ இரக்கப்படுவாய். இன்னொருவன் துன்பத்தைக் கண்டு இரங்குவது "அறிவினாலாவதுண்டோ?” என்பார்.
நொண்டியின் துயரமும், குஷ்டரோகியின் துயரமும் தான் புத்தரின் துறவுக்குக் காரணமாக இருந்தன. பிறர் துன்பத்தைக் கண்டு கண்டு கவலைப்பட்டவர்கள் இந்தப் பெரியவர்கள். புத்தர், இராமலிங்கர், திருவள்ளுவர் ஆகியோர் இந்த வழிவந்தவர்கள். புத்தர் தமிழ்நாட்டுச் சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவர் அல்லர். ஆனாலும் தமிழ் நாட்டில் ஓர் அற உணர்ச்சி - அன்பு உணர்ச்சி புத்தர் காலத்திற்கு முன்பே அரும்பிவிட்டது. இருந்தாலும் வளர முடியாமல் இருந்தது. "உயிர்களிடத்தில் அன்புகாட்டு; கருணை காட்டு; அதுவே ஒழுக்கம், கடவுள் நெறி என்ற கொள்கை. அதுவேதான் வள்ளுவர் கொள்கை. ஆனால் நடைமுறையில் என்ன பார்க்கிறோம்? கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை மனிதனிடத்தில் செல்வாக்குப் பெற்றன. காலப் போக்கில் பணரீதியாக ஆதிபத்தியம் செய்ய நினைத்தவர்கள் கடவுளை, மதத்தை தங்களுக்கு ஏகபோகமாக ஆக்கிக் கொண்டார்கள் அதனால் பணக்காரன் புண்ணியம் செய்தவன்; ஏழை பாவம் செய்தவன். அது அவனவன் தலை விதி என்று சொல்லத் தொடங்கினார்கள். இதனால் நாட்டில் மதத்தின் பெயரால் தப்பும் தவறும் ஏராளமாக நடக்கத் தொடங்கிவிட்டன. இன்று நாம் சோஷலிச சமுதாயம் காண விரும்புகிறோம். திருடனும் காவற்காரனும் இல்லாத சமுதாயத்தைக் காண விரும்புகிறோம்.
நம் நாட்டில் இன்று கணக்கெடுத்துப் பாருங்கள். திருவள்ளுவரைப் பற்றித் தமிழ்நாட்டில் நல்ல விளம்பரம் செய்கிறார்கள்.தமிழர் வீடுகளைக் கணக்கெடுத்துக்கொண்டு எத்தனை வீடுகளில் திருக்குறள் இருக்கிறதென்று கணக் கெடுத்துப் பாருங்கள். ஒவ்வொரு வீட்டிலும் நான்கு பூட்டுக்கள் இருக்கும். ஏனெனில் மனிதன் அவநம்பிக்கையில், சந்தேகத்தில் வாழ்கிறான். ஒருவனையொருவன் நம்பி வாழவில்லை. இதுதான் திருவள்ளுவர் பிறந்த நாடு என்று சொல்லுகிறோம். இந்த நாட்டில் கள்வரும் இல்லை; காவல் செய்வாரும் இல்லை என்ற நிலை இல்லை.
மதம் மனிதனிடத்து நம்பிக்கையை, அன்பு நெகிழ்ச்சியை ஊட்டுவதுதான். ஆனால் நம் நாட்டுக் கொள்கையில் பணநாயகம் பெருகியது. ஆகவே வீடுகளில் குறள் புகுவதற்குப் பதில், தேவாரம், திருவாசகம் புகுவதற்குப் பதில் பூட்டுக்கள் நுழைந்தன. பூட்டுக்களாலும் காப்பாற்ற முடியாத போது போலீஸ்காரர்களைச் சிருஷ்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நாட்டின் பண்பாடு சிதறிவிடுகின்றது. களவு காவல் பெரிய தத்துவம். மனிதன் முதலில் வந்தானா? காவற்காரன் முதலில் வந்தானா? மனித சமுதாயத்தில் காவற்காரன் முதலிலும் மனிதன் பிறகும் வந்தனர். பணக்காரன், பிறருக்குத் தேவைப்படுவதை அவன் ஒருவனே சுரண்டி வைத்திருக்கிறான். ஒரு நேரத்தில் பல ஆயிரக்கணக்கானவர்களுக்குத் தேவையானதை அவர்களே தேக்கி வைத்துக் கொள்கிறார்கள்.
அதை, வயிற்றுப் பசியால் வாடுகிறவன் பார்க்கிறான். பசி மனிதனை மிருகம் ஆக்கிவிடுகிறது. மனித சமுதாயத்தில் பசி என்றால் கோபம்வரும் என்பதைத் திருவள்ளுவர் ஒப்புக் கொள்கிறார். பசிக்கிறது என்று ஒருவன் கேட்கும்போது சாப்பிட்ட கையைக்கூட உதறாதவரைக் கையை மடக்கிக் கொண்டு குத்துகிறார் திருவள்ளுவர். குத்துகிற இடம் முகவாய்க்கட்டை
"ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கையர் அல்லா தவர்க்கு”
ஆகவே, முதல் திருடன் சேமித்தவன். இரண்டாவது திருடன்தான் திருடன். இதைத்தான் காந்தியடிகள் சொன்னார். தனக்குத் தேவையானது தவிர சேமித்து வைத்திருக்கிறவனும் திருடன்தான் என்றார் காந்தியடிகள். நமக்கு அறிவும் பண்பாடும் வந்துவிட்டதால் சமவாய்ப்புச் சமுதாயத்தை உருவாக்கவும் எல்லோருக்கும் உடுக்க உடை உண்ண உணவு கொடுக்கவும் வேண்டும். அப்படிப்பட்ட சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்றால், "இல்லை இல்லை இது தர்மத்திற்கு ஆபத்து” என்று புதுக்குரல் கொடுக்கிறார்கள். மூன்றும் மூன்றும் ஆறு பேரும் வாழ்ந்தால் நாடு வாழ்ந்துவிடுமா? கடவுள் தர்மம் ஆகியவற்றின், பெயரால் பணக்கார உணர்ச்சியை ஏகபோக உணர்ச்சியை உருவாக்கும் முயற்சி மதத்திற்கு விரோதமானது. மனிதனை மனிதனாக வாழவைப்பதுதான் மதம். வள்ளுவர், புத்தர், இராமலிங்கர் வழியில் செல்லும் நாம். சிறுவர்கள் இளமையில் கல்வி பெறவேண்டும். அதுதான் கடவுள் நெறி; பண்பாடு என்று கூறுகிறோம். வள்ளுவரும் புத்தரும் உலகத்தை நேசி, அன்பு காட்டு. அதுவே மனித தர்மம் என்றார்கள். அந்தக் கொள்கைகையை வீடு வீடாகப் பரப்பவேண்டாமா? அந்தக் கொள்கை வீடு வீடாகப் பரவினால் வக்கீல்களுக்கு நாட்டில் செல்வாக்கு இருக்குமா? அல்லது சினிமாக்களுக்குத்தான் செல்வாக்கு இருக்குமா? புத்தர் வள்ளுவர் கொள்கைகளைத் தமிழகம் என்று உணர்கிறதோ அன்றுதான் நாடு வளரும்.
இந்தத் தலைமுறையில்தான் நாம் பெரும் புரட்சி செய்திருக்கிறோம். கடந்த தலைமுறைவரை படிப்பிற்கும் கூட சாதி தேவைப்பட்டது. கொஞ்சநாள் பணம் தேவைப்பட்டது. சாதியின் காரணமாகவே சிலர் கெட்டிக்காரர்களாகவே பிறக்கிறார்களாம். ஆனால், குடும்பச் சூழ்நிலைதான் படிப்புக்குக் காரணம். நம்மவர்கள் வீட்டிலே படிப்புக்குரிய சூழ்நிலை இல்லாமல் போய்விட்டது. பாரம்பரியமாகத் தாய் தகப்பனார் படிக்காதவர்கள். அவர்களிடம் பையன் எப்படிப் படிக்கிறான் என்று கேட்டால் "எப்படியோ பையன் கஷ்டப்பட்டுப் பள்ளிக் கூடத்திற்குப் போய்வருகிறான்" என்பார்கள். பள்ளியிலிருந்து பையன் வீடு வந்ததும் மாட்டைப் பிடித்துக் கட்டு என்று உத்தரவு வரும். குழந்தைகள் படிக்கும் சூழ்நிலை இன்னமும் உருவாகவில்லை. அந்தச் சூழ்நிலையை உருவாக்கி விட்டால் தமிழ் சமுதாயம் கல்வி பெற்றுவிடும். அதைக் கருத்தில் கொண்டுதான் கல்வியை முதலில் பொதுச் சொத்தாக்கியிருக்கிறோம். செல்வத்தைப் பொதுவுடமை யாக்குவது பிறகுதான். இப்போது மனிதனின் அறிவுக் கண்ணைத் திறந்துவிடுகிற தலைமுறையில் வாழ்கிறோம்.
வள்ளுவர் தலைசிறந்த கவிஞர். நம் காலத்துக் குழந்தைகள் தலைவர்களாக வரும்போது, வழக்கு மன்றங்களின் எண்ணிக்கை, பீடிக் கடைகளின் எண்ணிக்கை குறையும். அதற்கு வள்ளுவர், புத்தரின் கொள்கைகள் பரவ வேண்டும் என்று வற்புறுத்திச் சொல்ல விரும்புகிறோம். அன்றுதான் நாடு சிறக்கும். நாமும் சிறந்து வாழ்வோம்.
தமிழக மக்களுக்குத் தமிழன் என்ற உணர்ச்சி வரவேண்டும். ஒருவரையொருவர் பார்க்கும்போது சாதியை மறந்துவிட்டுத் தமிழன்; தமிழ்ச்சாதி என்று பார்க்கவேண்டும். தமிழர்களை ஒன்றுபடுத்தும் உணர்ச்சி என்று ஏற்படுகின்றதோ, தமிழன் பெருமை பெற்றால் அது தன் பெருமை என்ற உணர்ச்சி என்று ஏற்படுகின்றதோ அன்றுதான் நாம் பெருமை பெறுவோம்; வாழ்வோம்; அதற்கு இளைஞர்கள் தகுதி பெறவேண்டும். வள்ளுவரும் புத்தரும் இந்நாட்டில் சாதி வேற்றுமைகளை ஒழித்து ஒருகுலமாக்கியவர்கள். அப்படியே வாழவேண்டும் என்று இந்தத் தலைமுறையில் நினைக்கிற நாம் அந்தக் கொள்கைகளை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும்.அறிவைப் பற்றிய பேச்சு திருக்குறளில் நிறைய உண்டு. அறிவு மிகமிக இன்றியமையாதது என்பதைத் திருவள்ளுவர் ஒத்துக் கொள்கிறார் என்பதும் உண்மை. ஆனால் ஒன்றை மிகுந்து வற்புறுத்தும்போது அவர் அன்பைத்தான் வலியுறுத்துகின்றார். அன்பிற்குத்தான் ஆக்கமும், ஊக்கமும், ஆற்றலும் கொடுக்கின்றார். திருக்குறளை அறநூல் என்று போற்றுகிறார்களே தவிர அறிவு நூல் என்று யாரும் கூறியதில்லை, கூறுவதுமில்லை. திருக்குறளை இவ்வாறு அறநூல் என்று கூறுகின்ற அளவினாலேயே அது அன்பு நெறியை வற்புறுத்துகின்ற ஒரு பெருநூல் என்று தெளிந்து உணரலாம்.
திருவள்ளுவர் அறிவை ஒத்துக் கொள்ளுகின்றார்; அறிவு அற்றம் காக்கும் கருவி என்கின்றார். அன்பைப் பற்றி அவர் பேசும்பொழுது அதனை ஒரு கருவி என்று கூறாமல் உயிர்த் தொடர்பாக - நெகிழ்ச்சியாக - உணர்ச்சியாகக் குறிப்பிடுகின்றார். உயிர்த் தொடர்புடைய ஒரு பண்பாடு என்பதைத் திருவள்ளுவரே ஒத்துக் கொள்ளுகின்றார்.
திருவள்ளுவர் தமது நூலை முப்பால்களாக - அறம் பொருள் இன்பம் என்று மூன்று பிரிவுகளாக அருளியிருக்கிறார். இந்த முப்பால்களிலும் பேசப்பெற்ற பெருமை அன்பு நெறிக்குண்டு என்பதை நாம் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அறத்துப் பாலிலே முழுக்க முழுக்க அன்பு பற்றிப் பேசுகின்றார் - பொருட்பாலிலே பேசுகின்றார் - இன்பத்துப் பாலிலே முழுக்க முழுக்க அன்பு பற்றிப் பேசுகின்றார். இவ்வாறு முப்பால்களிலும் பேசப்பெறுகிற ஒரு பெருநெறி உண்டென்றால் அது அன்பு நெறிதான் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இனி அறிவு நெறி பொருட்பாலில் மட்டுமே - அதுவும் அரசனைப் பற்றிப் பேசும்பொழுது - அரசியலைப் பற்றிப் பேசும் பொழுது குறிப்பிடப் பெறுகிறது. அறத்துப் பாலில் மெய்யுணர்வு அதிகாரத்தில் மட்டும் ஓரளவு வற்புறுத்தப் பெறுகிறது.
"எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
என்பது திருக்குறள். இங்கு வற்புறுத்தப் பெறும் இந்த அறிவிலும்கூட அன்பினால் விளைந்த ஞானத்தைச் சொல்லுகிறாரே தவிர அந்த ஞானத்தை மறுக்கின்ற அறிவைப் பற்றிப் பேசவில்லை. எனவே முப்பால்களிலும் வலியுறுத்தப்பெற்ற அன்பு நெறியில்தான் திருவள்ளுவருக்கு அதிக ஈடுபாடு இருந்திருக்க முடியும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கின்றது.
அடுத்து, திருக்குறள் உலக சமுதாயத்திற்காக - மக்கள் குலத்தின் வாழ்வுக்காக எழுந்தது என்ற அடிப்படைக் கருத்து எதிர்க்கட்சி நண்பர்களுக்கு உடன்பாடுடையதாக இருக்குமானால் இந்த உலக சமுதாயத்தைப் பின்னிப் பிணைத்து இணைத்து வாழ்விக்கின்ற நெறியாகத் திருவள்ளுவர் அன்பு நெறியைத்தான் மேற்கொண்டிருக்கிறார் - கையாளுகிறார் என்பதை மறுக்க மாட்டார்கள், 'அன்பின் வழியது உயிர் நிலை என்று திருவள்ளுவர் பேசுகின்றார். என்போடும் நரம் போடும் தசையோடும் நாம் இந்த உலகில் பிறந்து நடமாடுகின்ற பயன்கூட அன்பு காட்டுவதற்குத்தான் என்று திருவள்ளுவர் மிக அழகாக வலியுறுத்துகின்றார்.
"அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்பதோல் போர்த்த உடம்பு”
என்கிறார். 'நீ என்பு தோல் போர்த்த உடம்பாக இருக்கிறாய்' என்கின்றார். அறிவு இல்லாவிட்டால் நீ என்பு தோல் போர்த்த உடம்பாவாய்' என்று அவர் கூறவில்லை. அன்பினாலே உயிர்தங்கி வாழாது போனால் அது என்பு தோல் உடம்பர்கி விடுகிறது என்கின்றார். மிருகக்காட்சி சாலையில் காட்சிப் பொருளாக வைக்கப்படவேண்டிய கூடு ஆகிவிடுவாய் என்று எச்சரிக்கின்றார்.
அடுத்து, உலகில் நிலவுகின்ற சண்டைகள், சச்சரவுகள், விவாதங்கள் ஆகியவற்றிற்கெல்லாம்.பெரிதும் அடிப்படைக் காரணமாக இருப்பது அறிவுதான் என்று கூறுவதிலே தவறிருக்க முடியாது. மனிதன், அறிவினாலே சட்டப்படி எனக்குச் சொந்தம் என்று சொல்லுகின்றான். இன்னும் பல்வேறு காரணங்களை - நியாயங்களைக் காட்டிச் சொந்தம் கொண்டாடுகின்றான். இத்தகைய உணர்வுகளையெல்லாம் அடித்துத் தொலைக்கவேண்டும் என்று சொன்னால் அது அன்பினாலேதான் முடியும் என்பது திருவள்ளுவர் கருத்து.
'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு”
என்பது திருக்குறள். எல்லாம் தமக்குரியர் என்று சொல்லுகின்ற உணர்வு எங்கே தோன்றுகிறது? அன்பின்மையில் தானே அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு அன்புடையவன் தன்னைத் தன் உடைமையைத் தன் வாழ்க்கையை உலக மக்கள் குலத்தின் ஆக்கத்திற்காகக் கொடுப்பான் என்பதுபோல அன்பினைப் பெரிதுபடுத்திக் கூறுகின்றார் திருவள்ளுவர்.
அடுத்து,
"அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று"
ஆனாலும், அன்பை முறைப்படுத்துவதற்கு அறிவு துணை செய்யலாம் என்றார். அதே நேரத்தில் அன்பில்லாத உயிர் வாழ்க்கை பாலைவனத்தில் பட்டமரம் தளித்தாற் போன்றது என்கின்றார். பாலைவனத்திலே தளிர்க்குமா? இன்னும் அதற்கு மேலே போய் கடுமையாக எச்சரிக்கின்றார் திருவள்ளுவர்.
"என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்”
என்கின்றார் திருவள்ளுவர். ஆம். அறக்கடவுள் சுடும் என்கின்றார். யாரை? அன்பில்லாதவர்களை! எப்படி? என்பில்லாத புழுக்களை வெயில் சுட்டு வருத்துவது போல! இப்படிக் கூறுகின்ற வள்ளுவர், 'அறிவில்லாதவர்களை, அறக் கடவுள் சுடும் என்று சொல்லவில்லை அறிவில்லாதவன் தன்னைத் தானே கெடுத்துக் கொள்வான் என்பதுபோல வேண்டுமானால் பேசியிருக்கலாம். அப்படி, அன்பில்லாதவனை அறக்கடவுள் சுடும் என்று சொல்லுகின்ற பொழுது, சுடும் என்ற அச்சத்தினைக் காரணங் காட்டியாவது இந்த வையத்தை அன்பு வழியிலே அழைத்துச் செல்லவேண்டும் என்ற விருப்பம் திருவள்ளுவருக்கு இருந்தது என்று நாம் உணர்ந்து கொள்ளலாம்.
இனி குடும்ப வாழ்க்கைக்குப் பொருளாதாரம் எவ்வளவு இன்றியமையாத ஒன்று என்பது அனைவருக்கும் தெரியும். பொருளை ஈட்ட அறிவு துணை செய்கிறது என்ற செய்தியும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனாலும்கூடத் திருவள்ளுவர் குடும்ப வாழ்க்கைக்கு மூலப் பொருளாக-முதற் பொருளாக இன்றியமையாததாக அன்பையும் அறனையுமே வற்புறுத்துகின்றார்.
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"
அடுத்து, இல்வாழ்வு மேற்கொண்டுள்ள ஒத்த மனமுடைய மணமக்கட்கு அன்பு வேண்டும்-அறம் வேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்துகின்றார். மறந்துங்கூட அவர் அறிவை வலியுறுத்தவில்லை-அறிவு இன்றியமையாத தேவை என்ற கருத்திலே வேறுபாடு இல்லை. ஆனாலும்கூட,
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”
என்றே திருவள்ளுவர் வலியுறுத்துகின்றார். அறிவின் முயற்சியிலே பொருளீட்டுகிறார்கள்-அறிவின் முயற்சியாலே என்னென்னவோ செய்கிறார்கள். ஆனாலும் திருவள்ளுவர் இதனையும்கூட ஒப்புக்கொள்ளவில்லை.
"அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரளி விடல்”
என்று குறிப்பிடுகின்றார் பொருள் செயல் வகை என்ற அதிகாரத்தில், அன்போடு வாராத பொருளை நீ வைத்துக் கொள்ளாதே-இழந்துவிடு என்றே சொல்லுகின்றார்கள். பொருட்பாலிலும்கூட அவர் அன்பு நெறியையே வலியுறுத்து கின்றார். .
அடுத்து, அரச இயல்பு கூறவந்த திருவள்ளுவர், "எண்பதத்தால் ஒரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தால் தானே கெடும்" என்று கூறுகின்றார். எண்பதத்தான் என்பது அன்பினாலேயே வருகின்ற இனிய தண்ணளி, தொடர்ந்து,
"குடிதழிஇக் கோலோச்சும் மாநில மன்னன்
இடிதழீஇ நிற்கும் உலகு"
என்கின்றார் திருவள்ளுவர். ஆம் குடிகளைத் தழுவிப் போ! தழுவிக் கோலோச்சு என்று கூறுகிறார். வெறும் அறிவால் மட்டும் விவாதம் பண்ணிக்கொண்டிருக்கிற எந்த மன்னனும் நாட்டு மக்களைத் தழுவிப் போக முடியாது, தரணியாளும் மன்னனிடத்துக் குடிமக்கள் எதிர்பார்ப்பது தலையளிதான். குடை எப்படி வெயிலின் வெப்பத்திலிருந்து மனிதனைக் காப்பாற்றுகிறதோ, அப்படியே அரசனுடைய தண்ணளி-அரசனுடைய அன்புக் கருணை, இந்த நாட்டு மக்களைத் துன்பங்களினின்றும் துயரங்களினின்றும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே மன்னனிடத்தே குடை இருக்கிறது.
"துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு”
என்கின்றார் திருவள்ளுவர். இந்த விரிந்த உலகம், வான்மழை பொய்த்தால் வறண்டு விடுவதுபோல, மன்னனுடைய தண்ணளி இல்லாத போனால் அந்த மன்னனின் ஆட்சியின் கீழ் உள்ள நாடு கெட்டுப்போய் விடும் என்கிறார். இங்கும் திருவள்ளுவர் அன்பு நெறியைத்தான் வலியுறுத்துகின்றார்.
அடுத்து,
"படைகுடி, கூழ்அமைச்சு, நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு”
என்கின்றார் திருவள்ளுவர். இவற்றில் அறன் ஒன்றைத் தவிர ஏனைய ஐந்தும் அன்பின் வழிபட்டவை தாமே! பொதுவாக ஒர் அரசனிட்த்திலே படைகளுக்கு அளவு கடந்த அன்பும் பற்றும் இருந்தால்தான் அந்த அரசனுக்காக அவர்கள் போர்க்களத்தில் நின்று போராடி உயிர் துறப்பார்கள். அவர்களுக்கு மன்னனிடத்து அன்பும் பாசமும் இல்லையானால், அவர்கள் போர்க்களத்திற்குப் போவதுபோலப் போய் வேறெங்காவது தூங்கிவிட்டு முகாமை மாற்றானுக்குக் கொடுத்துவிட்டும் வந்துவிடுவ்ர்க்ள். அரசன் என்றும் படைகள் என்றும் வேற்றுமை பாராட்டாத உறவு கலந்த வாழ்க்கை முறை தேவை.
அடுத்து, நட்பு உலகம். நட்பும் அன்பினால் பெறக்கூடிய ஒன்றுதான். அதற்கடுத்து, நற்குடிப் பிறந்தாரின் இயல்புகள் என்று திருவள்ளுவர் ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறார். அஞ்சாமை, அறிவு, ஈகை, ஊக்கம் இவை நற்குடிப் பிறந்தாரின் இயல்புகள் என்கின்றார். இவற்றில் ஈகை அன்பு வழிபட்டது என்கிறார் திருவள்ளுவர். காட்சிக்கு எளியனாக இருத்தல் வேண்டும்.
"காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்"
அறிவுடையவர்களோ, தம்மை நாடி வருகின்றவர்களின் தரம், தகுதி முதலியவற்றை ஆராய்வார்கள். வந்திருக்கிறவன் பெரிய மனிதனா? சின்ன மனிதனா? படித்தவனா? படிக்காதவனா? வறியவனா? செல்வச் சீமானா என்பவற்றையெல்லாம் பார்ப்பார்கள்-ஆராய்வார்கள். ஆனால், அன்புடையவர்களாக இருப்பவர்கள் இந்தத் தரம், தகுதி, வேறுபாடுகள் ஆகியவற்றையெல்லாம் ஆராய மாட்டார்கள். காட்சிக்கு எளியனாக இருப்பவன் தன்னை நாடி வந்திருப்பவன் ஒரு குடிமகன்-அவனிடத்து அன்பு காட்ட வேண்டியது தன்னுடைய கடமை என்று கருதி அன்பு காட்டுவான். இந்த உணர்ச்சி அன்பினால் வரக்கூடியதே யன்றி, அறிவினால் வரக்கூடியதன்று.
'இன்சொல்லால் ஈத்தளிக்க வல்லாற்கும் தன்சொலார் றான்கண் டனைத்திவ் வுலகு.'
என்கிறார் திருவள்ளுவர். 'இன்சொலால் ஈத்தளிக்கவல் லார்க்கு' என்று சொல்லுகின்றார். இனிய சொல்லாலே கொடுத்துக் காப்பாற்றுகின்றவர்களை இந்த உலகம் புகழ்ந்து பாராட்டும். அவர்களுக்கு ஒரு பெரு நிலையை உண்டாக்கும் என்கிறார்.
'முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்'
என்று பேசுகிறார்.
இப்படி இதுகாறும் நாம் கூறிய செய்திகளிலிருந்து பார்த்தால், அறிவு நெறியைத் திருவள்ளுவர் உடன்படுகின்றார். ஆனாலும், அன்பு நெறியை மிகுதிப்படுத்துகிறார் என்பதை உணரலாம். இப்படி நாம் கூறுவதற்குச் சான்று அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகிய முப்பால்களிலும் திருவள்ளுவர் அன்புநெறியை வலியுறுத்துவதைக் காட்டலாம். அறிவு நெறியோ மருந்துபோல் பயன்படுத்தப் பெறுகிறது. இன்னும் சொல்லப் போனால், அன்பு நெறிதான் நூல் முழுதும் வலியுறுத்தப் பெறுகிறது. இவற்றிற்கெல்லாம் மேலாக, காமத்துப்பால் முழுவதுமே அன்பு நெறியை வலியுறுத்துவதற்காகச் செய்யப் பெற்றது போலவே தோன்றுகிறது. இனியவை செய்தல், இன்னா கூறாமை, வெஃகாமை, அழுக்காறாமை முதலிய ஒழுக்கங்களையெல்லாம் தோற்று விக்கின்ற தன்மை அன்பு நெறிக்குத்தான் உண்டே தவிர அறிவு நெறிக்கு அல்ல. அறிவு நெறியை வற்புறுத்துகிற எந்த அதிகாரத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். ஈதல் அன்பால் விளையக்கூடியது-ஒப்புரவறிதல் அன்பால் விளையக்கூடியது-'ஒத்ததறிவான் உயிர் வாழ்வான்' என்றால் அதுவும் அன்பு நெறியை வலியுறுத்துவதுதான்.
'தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்'
என்கிறார் திருவள்ளுவர்.
கற்ற அறிவுடையவர்களாக இருப்பார்களானால், தாம் பெறுகிற இன்ப அனுபவத்தை ஊராரும் உலகத்தாரும் பெறவேண்டும் என்று விரும்ப வேண்டும். அப்போதுதான் அந்த அறிவுக்குப் பயன் உண்டு என்கின்றார். அறிவு இருந்தாலும் அது அன்பினுடைய அடி நிழலிலே வந்து தழைக்க வேண்டும். அவ்வாறு அன்பின் அடி நிழலிலே வந்து புகாது போனால் அதற்கு மரியாதையும் மதிப்பும் இல்லை என்பது போல,
'அறிவினால் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தன்நோய்போல் போற்றாக் கடை'
என்று பேசுகின்றார். படித்தவர்கள் - சான்றோர்கள் நிறையப் பேர் இருக்கலாம். ஆனாலும், பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாது போனால் 'அறிவினால் ஆகுவதுண்டோ?' என்று கேட்கின்றார். அது மட்டுமன்று. அறிவு நெறிக்குக் குறைகளும் குற்றங்களும் உண்டு என்றும் திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார். அன்பு நெறிக்கும் அவர் குற்றம் குறை கற்பிக்கவில்லை. 'புல்லறிவாண்மை' என்கின்றார்-அறிவு 'மயங்கும்' என்கின்றார்-வறுமை அறிவைக் கொல்லும் என்று சொல்லுகின்றார். ஆனால், வறுமை அன்பைக் கொல்லும் என்று அவர் குற்றம் குறை கற்பிக்கவில்லை. 'புல்லறி வாண்மை' என்கின்றார்-அறிவு 'மயங்கும்' என்கின்றார்-வறுமை அறிவைக் கொல்லும் என்று சொல்லுகின்றார். ஆனால், வறுமை அன்பைக் கொல்லும் என்று அவர் எங்கும் சொல்லவில்லை இப்படிப் பல்வேறு வகைகளிலும் பார்க்கின்றபொழுது, திருக்குறளில் அன்பு நெறியே மிகுதியும் வற்புறுத்தப் பெற்றிருப்பதை யுணரலாம்.
இனி, அறிவையும் அன்பையும் ஒப்பு நோக்கிப் பேசுகின்ற இடத்தில், திருவள்ளுவர் என்ன சொல்லுகின்றார் என்பதுதான் இதற்கு எடுத்துக்காட்டாக இருக்க முடியும். அறிவு நெறியின் மேன்மையைப் பற்றிக் கூறுகிற குறட்பாக்களில் அறிவை வலியுறுத்திக் கூறுகிறார். அதுபோல 'அன்புடைமை' அதிகாரத்தில் அன்பை வலியுறுத்துகிறார். ஆனாலும் இரண்டையும் ஒப்பு நோக்கிப் பேசுகின்ற பொழுது, ஒன்றை மிகுதிப்படுத்தியும் இன்னொன்றை அடுத்த படியில் வைத்துப் பேசுகின்றார். அப்படிப்பட்ட குறட்பாக்கள்,
'அறிவினால் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தன்நோய்போல் போற்றாக் கடை'
என்பதும்,
'அவிசொரிந்து ஆயிரம் வேட்டவின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று'
என்பதும் ஆகும். அவிசொரிந்தாயிரம் வேட்டல் என்பது அறிவுநெறி. இப்படிச் செய்தால் என்ன பயன் கிடைக்கும் என்று கணக்கிட்டு எண்ணிப்பார்த்து, சுருதிப்படி சாத்திரப்படி செய்வது அறிவுநெறி. ஆனால், ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமை அன்புநெறி-இந்நெறிதான் சிறந்தது; மேலானது என்பது திருவள்ளுவர் கருத்து.
மேலே கூறிய இரு குறட்பாக்களின் செய்திகளும் நமக்கு நிறைவான செய்திகள். இதனை எதிர்க்கட்சியினர் இரண்டொன்றைக் கூறி மறுப்பார்கள். "அறிவுடையார் எல்லாம் உடையார்” என்று சொல்லிவிட்டார்.
'இன்மையுள் இன்மை விருந்தோரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை'
என்று சொல்லிவிட்டார்; இவற்றாலெல்லாம் அவர் அறிவு நெறியைத்தானே மிகுதியும் வலியுறுத்தியுள்ளார் என்று கேட்பார்கள்.
'கண்ணுடையர் என்போர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையார் கல்லா தவர்'
என்ற குறட்பாவை எடுத்துக் காட்டுவார்கள். கண்ணோட்ட மில்லையானால், அது கண் அல்ல-புண் என்று உணரப்படும் என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். அடுத்து, அதிகார முறைவைப்பைப் பார்த்தாலும்கூட, அன்பு நெறியை வற்புறுத்துகிற அதிகாரங்கள், அன்பினால் விளைகின்ற உணர்ச்சிகள், பண்பாடுகளை வலியுறுத்துகிற அதிகாரங்கள் நிறைய இருக்கின்றன - இவற்றாலெல்லாம் வள்ளுவர் மிகுதியும் வலியுறுத்திய அன்பு நெறியே என்று அறியலாம்.
இயற்கை உலகியலில் ஏதோ ஓர் ஒழுங்கிருக்கிறது. அந்த ஒழுங்கு ஆண்டாண்டுக்காலமாக மாறவில்லை. அந்த ஒழுங்கை மையமாக வைத்தே மனித உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரோரு வழி அந்த ஒழுங்கு தவறும் பொழுதுதான் விபத்துக்கள் தோன்றுகின்றன. விபத்துக்களின் விளைவாக அழுகை தோன்றுகிறது.
இயற்கையில் உள்ள ஒழுங்கைவிட மனித குலத்தில் ஒழுங்கு சற்று அதிகமாகவே இருத்தல் வேண்டும். காரணம் இயற்கை நியதியின்பாற்பட்டது. மனிதன் அதற்கும், மேலாக அறிவு, அன்பு ஆகிய ஒழுங்கின் நிலைக்களன்களாகிய உணர்வுகளைப் பெற்றவன். ஆனால் இன்றோ, ஒழுக்க நடையும் தளர்ந்து வருகிறது அவ்வழி ஒழுங்கும் நிலை பெறவில்லை. ஏன் இந்த நிலை? ஒழுக்கம் ஒழுங்கு ஆகியவைகளையும்கூடப் பரந்த நிலையில் இயல்புகளுக்கேற்றவாறு நோக்காமல் சிறிய எல்லைக்குட்பட்ட தன்னல நோக்குடனேயே நிர்ணயிக்கத் தலைப்பட்டுவிட்டார்கள். இன்று ஒருவர் ஒழுக்கமென்று கூறுவது பிறிதொருவருக்குத் துன்பமாகவும், தொல்லையாகவும் இருப்பதைக் காண்கின்றோம். இந்த அவல நிலைக்குக் காரணம், மனித குலத்திடையே ஒருமைப்பாட்டுணர்வு வளராமையேயாம். அவ்வழிப்பட்ட அன்பும் அரும்பி மலரவில்லை. மனமாற்றத்திற்கு அடிப்படையான கருத்துப் புரட்சியும் ஏற்படவில்லை.
ஒழுக்கத்தினின்று ஒழுங்கு தோன்றுகிறது. இது தொடக்கநிலை; அறிவுநிலை, பின் ஒழுங்கிலிருந்து ஒழுக்கம் தோன்றுகிறது. இது வழி நிலை பயிற்சிக் கொள்ளும் நிலை, முன்னையது புலன்களின் சார்புடையது. பின்னையது பொறிகளின் சார்புடையது. முன்னையது சுதந்திரமானது. பின்னையது அஞ்சியும் செய்யலாம். ஒழுங்கு நெறி கற்றுக் கொடுக்க முற்றிலும் தகுதிப் பாடுடையவன் இயற்கையென்ற பேராசிரியன். ஆனாலும் மனிதனிடத்தில் கற்றுக் கொள்ளும் உணர்ச்சியைவிட அனுபவிக்கும் உணர்ச்சியே மேலோங்கிற்று. அவன் இயற்கையிலிருந்து பாடம் படித்துக்கொள்ளத் தவறிவிட்டான். ஆனாலும், அடக்கியாண்டு அனுபவித்துக் கொண்டு வருகிறான். எதையும் அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வு ஆசையை வளர்க்கும். அவ்வழி விரும்பத்தகாத போட்டாப் போட்டிகள் தோன்றும். ஒழுக்கம் உறுதியற்றுப் போய்விடும். ஒழுங்கு நிலை தடுமாறும்.
இயற்கையிலிருந்து ஒழுக்கத்தையும் ஒழுங்கையும் கற்றுக்கொள்ளத் தவறிவிடும் மனிதனுக்கு ஒழுங்கைக் கற்றுக் கொடுப்பது சமுதாயம். அந்த பரந்துபட்ட சமுதாயக் குடும்பம் என்ற நிலைக்களனிலிருந்து ஒழுங்கைக் கற்றுக் கொள்ளுகிறான். பாரம்பரியம் என்பது உணர்ச்சிகளின் சங்கிலி - உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு. இது எங்கோ ஒரோ வழிதான் மாறும் பெற்றோர் சமுதாயம் பெருமைக்குரியதாக அமையாத போனால் ஒழுங்குகள் மாறும். அவை உறுதிக் கொள்ள முடிவதில்லை. ஒழுங்குகள் கால்கொள்வதில்லை. அஞ்சல் தலையில் ஒட்டுதற்குரிய பசையுண்டு. எனினும் அதுவே ஒட்டுதற்குப் போதாது. அதற்குப் புறச் சேர்க்கையாகச் சிறிது தண்ணீரும் தேவை. அதுபோலத் தனி மனிதன் தன் சிந்தனையாலும் அறிவினாலும் ஒழுங்கைக் கடைப் பிடிக்க எவ்வளவுதான் முயற்சித்தாலும் அதைக் காப்பாற்றிக் கொள்ளப் பெற்றோர் சமுதாயத்தின் ஒழுக்க முறை துணை செய்யாவிட்டால் பயனில்லை. இன்றையச் சூழ்நிலையில் பள்ளிக்கூடத்திற்கும் வீட்டிற்கும் போர் நடந்து கொண்டிருக்கிறது!ஆசிரியர்களும் பெற்றோர்களும் இரு அணிகளாகப் பிரிந்து நின்று போர் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் போர் இன்றோ நேற்றோ தொடங்கியதல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகின்றது இந்தப் போராட்டத்தில் ஆசிரியர் உலகம் தொடர்ந்து தோல்வியைக் கண்டு அனுபவித்து வருகிறது. அது ஒரு பொழுதும் வெற்றி பெற்றதில்லை. பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுப்பதற்கு மாறான வாழ்க்கையே வீட்டிலும், நாட்டிலும் நாம் காண்கின்றோம் அதனாலன்றோ, 'பள்ளிக் கணக்குப் புள்ளிக்குதவாது' ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது என்ற பழமொழிகள் தோன்றின. பெற்றோர் சமுதாயம் மனம் வைக்க வேண்டும். நேற்றைய அனுபவத்தின் விளைவாக வரும் அறிவோடியைந்த வாழ்க்கையை விரும்பி ஏற்றுக் கொள்ளவேண்டும். தம்முடைய குழந்தைகளும் அதனை ஏற்றுக்கொள்ளும்படி முயற்சி செய்ய வேண்டும். நன்றல்லவற்றை ஒதுக்க வேண்டும். நன்றுடையராக இருந்தால் மட்டும் போதாது. தீமையைக் கடிந்து விலக்கு மாற்றலுடையராகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நன்றியின் பயனை அனுபவிக்க முடியும். நன்றியின் பயன் விளையும். "நன்றுடையானை...தீயதிலானை" என்பது தமிழ் மறை. இன்றையக் குறை நாளை நிறையாக வேண்டும். இதுவே வாழ்க்கை முறை. குறையே ஒரு பெருங் குற்றமாக முடியாது குறையே ஒரு குற்றமன்று. ஆனால் குறையைக் குறையென்றுணராமல் இருப்பதுதான் குற்றமாகும். இன்று பலரிடம் குறையைக் குறையென்றுணரும் அறிவு இருக்கிறதா என்பதே கேள்வி அந்த அறிவும் ஆற்றலுடன் செயல்படுகிறதா என்று பார்ப்பது அவசியம். எப்படி உலகியல் அரும்பு மலர்ந்து மலராகிறதோ பிஞ்சு காயாகிக் கனியாகிறதோ அதுபோல, மனிதனும் குறைகளைக் கடந்து பூரணத்துவம் பெற்று முழுமனிதனாக வளர்ந்து அதற்குரிய வாழ்க்கை முறைகளைப் பெற்று, வாழ்க்கையில் வெற்றி பெறுவதேயாகும். அந்த வாழ்க்கை முறைக்கு விடும் நாடும் துணை செய்யவேண்டும். ஆசிரியர்கள் புனிதமான தொண்டில் ஈடுபட்டிருப்பவர்கள். ஆசிரியத் தொழில் யாழை மீட்டுதலைவிட நுணுக்கமான தொழில். யாழை மீட்டுகிற வழி மீட்டாது போனால் இனிய இசை தோன்றாது. யாழும் கெடும். கேட்பவர்களும் அருவறுப்பர். புறப்பொருளாகி, நம்முடைய பூரண இயக்குதலுக்குக் கட்டுப்பட்ட யாழின் நிலையே இதுவானால், புலப்படாப் பொருளாகவும் நம்முடைய பூரண ஆற்றலுக்குக் கட்டுப்படாததாகவும் உணர்ச்சிகளின் சின்னமாகவும் இருக்கின்ற உயிர்களைத் திருத்தும் வேலை எவ்வளவு சிக்கலானது. சிக்கலானது மட்டுமல்ல, உலகில் எத்தொழிலுக்கும் தேவைப்படுகின்ற ஆற்றலைவிட இதற்கு ஆற்றல் அதிகமாகத் தேவை என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒழுங்கின் பெரும் பகுதி, பிறர் வாழ்க்கையிலிருந்து எடுத்துக் கொள்வதேயாகும். ஆசிரியர்கள் தம்முடைய வாழ்க்கை முறையினாலேயே மாணவர்களுக்கு ஒரு பேராசிரியராகத் திகழ வேண்டும். சொல்லுக்கும் செயலுக்கும் இடையே ஏற்படும் வேற்றுமை அல்லது பிளவு உடலுக்கும் உயிருக்கும் இடையே தோன்றும் பிளவைப் போன்றது. உடலினின்றும் உயிர் பிரிந்தால் பினமாகும். செயலினின்றும் சொல் பிரிந்தால் சொல் பிணமாகும். அதற்கு ஆற்றல் இல்லை ஆதலால் ஆசிரியர்கள் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டவேண்டும் அடுத்து, மனம் நுண்ணியது, மெல்லியது. பின்னிக் கிடக்கும் முடிச்சுகளைச் சிக்கல் நீக்கிச் சீர்செய்ய எத்துணைப் பொறுமை தேவையோ அதைவிடப் பன்னூறு மடங்குப் பொறுமை தேவை, மனித குலத்தின் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு, குறை காண்பது எளிது - ஆனாலும், குறைகளுக்குரிய காரணங்களைக் கண்டுபிடிப்பதே அரிய முயற்சி. காரணங்களைக் கண்டு, அக்காரணங்களையே களைந்து குற்றங்கள் தோன்றா வண்ணம் செய்தல் வேண்டும் அதனாலன்றோ திருவள்ளுவர்."நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்"
என்கிறார்.
"நோய் முதல் நாடி” என்று குறிப்பிடுகிறார். "மூல நோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்” என்பது தமிழ்மறை. ஆசிரியர்கள் மலர்களில் கையாளும் மென்மையை விட அதிக நுணுக்கமாக மாணவர்களை-மாணவர் மனங்களைக் கையாளவேண்டும் அவர்களின் உணர்ச்சிகளை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஒரு மதிப்பும் கொடுக்க வேண்டும். எனினும் தன் திசையில் செல்ல அனுமதிக்கக் கூடாது. அப்படியானால், தடை செய்வது என்று பொருள் அல்ல. அவர்களை நல்வழிப்படுத்துதல் வேண்டும் இதனைத் திருமூலர் "மடை மாற்றல்” என்று குறிப்பிடுவார். உணர்ச்சி களை அடக்கமுடியாது-ஆனாலும் அந்த உணர்ச்சிகள் பற்றிப் படர்கின்ற கொழுகொம்புகளை மாற்றிவிடுவதின் மூலம் சீர் செய்ய முடியும். போர் செய்யும் உணர்ச்சி இயல்பிலேயே மனிதனுக்கிருக்கிறது இந்த உணர்ச்சியைத் தன்னலத்திற்காக-தன் உற்றார் உறவினர்களோடு போரிடும் வகையில் வளராமல் தடுத்துத் தீமையை எதிர்த்துப் போராடும் போருணர்ச்சியாக வளர்க்கலாம்-வளர்க்க வேண்டும். உழவர்கள் நிலத்தின் இயல்பைத் தெரிந்து கொண்டாலே சிறந்த விவசாயிகளாகிறார்கள். அதுபோல ஆசிரியர்கள் குழந்தைகளின் மன இயல்பைத் தெளிவாகப் புரிந்து கொண்டாலே நல்லாசிரியர்களாகத் திகழமுடியும். நிலத்தின் இயல்புக்கு ஏற்றவாறு உரமிடப்படுதல் போல குழந்தைக்ளின் மன இயல்புக்கு ஏற்றவாறு நல்ல கருத்துணர்வுகள் வழங்கப் பெறுதல் வேண்டும். உடல் நலத்திற்கு ஏற்ற உணவுகள் கிடைக்காதபோது, உடல் நோய்வாய்ப்படுவது போலவே, மனநலத்திற்கேற்ற கருத்துண்வுகளும் கிடைக்காதபோது ஒழுக்க உண்ர்வுகளும் தளரத்தான் செய்யும். அதனைப் பருவ் மறிந்து தேவையறிந்து ஆசிரியர்கள் வழங்க வேண்டும்-ஆசிரியரால் வழங்கப் பெற்ற கருத்துணவைச் செறித்து செயல்படுத்தப் பெற்றோர்கள் துணை நிற்கவேண்டும். மனித குலத்திற்குள் அன்பு வழிபட்ட துணையும் அமைதி தழுவிய நல்வாழ்க்கையும் வளர-ஒழுங்கு வளர ஆசிரியர்களும் பெற்றோர்களும் முயற்சித்து வெற்றியடைய நம்முடைய பிரார்த்தனை.
செல்வ வளம் கொழித்த நாடு செந்தமிழ் நாடு. சோறு படைத்த நாடு; வறுமையின் வாடையே தெரியாத நாடு, ஒரு காலத்தில். இப்பொழுது எங்கும் பட்டினி-பஞ்சம் தலை காட்டுகிறது. உணவுப் பொருள்கள் உற்பத்தி குறைந்து வருகின்றன. தமிழ் நாட்டில் இயற்கை உணவுகள் பல உண்டு. சிறப்பாகக் கிழங்கு, தேன், பழவகைகள். இவைகள் தமிழகத்திலேயே விளைவிப்பாரின்றி விளைந்து கொண்டிருந்தன.
உழவர் உழாத, நன்கு பயன்படு பொருள்களை நிறையக் கொண்டிருந்தது தமிழகம் என்று சங்க இலக்கியங்களால் பெறப்படுகிறது. பாரியினது பறம்பு நாடு இத்தகைய வளம் நிறைந்தது என்று கபிலர் பாடுகின்றார். மூங்கில், நெல், பலாப்பழம், வள்ளிக்கிழங்கு, தேன் முதலியவை நிலமகள் தாமே அளித்த தகவுடைப் பொருள்கள். உழவர் உழுது பயிரிடும் பொருள்களும் செழுமையுடன் வளர்ந்து வளம் பெருகின நாடு இந்த நாடு. பண்டைத் தமிழகம் களிற்றைக் கொண்டு கதிரடித்தது. ஆனால் இன்றையத் தமிழகம் நேர்மாறான நிலையில் காட்சி தருகிறது. இன்று தாமே விளையும் பொருள்களின் மிகுதி இருப்பதாகத் தெரியவில்லை. பாரி வள்ளல் இருந்த, பறம்பு மலையாகக் கருதப்படுவது இன்றைய பிரான்மலையேயாம். இப்பிரான் மலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் படிக்கணக்கில் தேன் கிடைத்துக் கொண்டிருந்தது. இப்பொழுது தேன் கூட்டைத் தேடிப்பிடிக்க வேண்டியிருக்கிறது. எனவே, தமிழகத்தின் வளத்தில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இவ்வீழ்ச்சிக்குக் காரணம் யாதெனச் சிந்தித்தல் வேண்டும்.
குறையிருக்கும் இடத்தைக் கண்டு நிறைவு செய்தல் வேண்டும். அதுதான் இன்றைய பஞ்சத்தைப் போக்க வழி. குற்றத்தைத் தமிழ் நாவலர் திருவள்ளுவர் எடுத்துக் கூறியுள்ளார். குற்றமற்ற நிலையில் நிறைந்த விளைபொருள் களைத் தருகின்ற நிலம்கூடப் புகழ் இல்லாத உடம்பைச் சுமந்தால் பயன் குன்றும் என்று அவர் கூறுகிறார். இங்குப் புகழ் எனப் பேசப் பெறுவது இன்று பெரும்பான்மையோரால் கருதப்படும் புகழ் அல்ல. வள்ளுவனார் "பொய்யாமை யன்ன புகழில்லை” என்று பேசுகின்றார். பொய் அறியாத வாழ்க்கையே அவர் குறிப்பிடும் புகழ்.
"பொய்யறியா வாய் மொழியார் புகழ் நிறைந்த நன்மாந்தர்” என்று மதுரைக் காஞ்சி கழறுகிறது. இத்தகு மாந்தர்கள்தாம் புகழுடைச் செல்வர்கள். அவர்களே நல்லவர்கள். "எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நிலமகளும் நல்லவள்” என்றுதானே புறநானூறு கூறுகிறது. இத்தகு நலம் நிறைபுகழ்ச் செல்வர்களைத் தாங்கப் பெறாத நிலத்தின் பயன் குன்றும்.
"வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்"
என்பது வள்ளுவர் வாய்மொழி. எனவே, இன்றைய வறுமைக்குக் காரணத்தை வள்ளுவர் காட்டுகின்றார். அறமல்லாதவற்றை மக்கள் விரும்பி ஒழுகுவதனாலே வளம் குன்றும் என்று குறிஞ்சிக் கலியும் கூறுகிறது.
"சிறு குடியிரே! சிறுகுடி யிரே!!
வள்ளிகீழ் விழா வரைமிசைத் தேன்தொடர
கொல்லை குரல்வாங்கி யீனா மலைவாழ்நர்
அல்ல புரிந்தொழுக லான்”
என்பது கருத்துவளம் நிறைந்த கலித்தொகையின் அடிகள். இந்த அடிகளைத் தமிழ் மக்கள் சிந்தனையில் இருத்த வேண்டும். சிந்தையிலிருத்துவதோடன்றி வாழ்க்கையிலும் அமைத்துக்கொள்ள வேண்டும். நல்லனவே எண்ண வேண்டும். அறமே ஆற்றவேண்டும். அச்சத்தாலும் அன்பாலும் நல்லறநெறிக்கு ஆற்றுப்படுத்துகின்ற நெறிநின்று வாழ்ந்து அல்லன செய்யாது நல்லனவே செய்து வாழ்ந்தால் வயலும் விளையும், நிலமும் உயரும்.
மாநிலத்துயிர்கள் வாழ்க்கையின் இன்ப நலம் நீர் வளத்தைச் சார்ந்திருக்கிறது. நீரின்றி வாழ்க்கையே இல்லை. "நீரின்றமையா உலகம் போல" என்று நற்றிணையே பேசுகிறது. "மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை," என்று ஒழுக்க நூல் ஓதுகிறது. அதனாலன்றோ நல்லனவே சொல்லும் திறமுடைய திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துக்குப் பின் வான்வளத்தை வாழ்த்துகிறார்.
இறைவனது பேரருளை மக்கள் உணரக் கருவியாக அமைந்து கிடப்பது இயற்கை இயற்கை உடல், இறைமை நிலை உயிர். முதல்வனது கங்கு கரையற்ற கருனைப் பெருக்கே வான்மழை, "இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்" என்று மாணிக்கவாசகர் பாடுகின்றார்.
வானம் பொய்ப்பின் வளம் குன்றும் வளம் குன்றினால் வாழ்க்கையில் இன்பம் அருகித் துன்பம் பெருகும். மழைவளம் மாறின் வையுதம் திெட்டுவிடும். ‘உல்கு புரப்பதுமாகி என்று புறம் பேசுகின்றது. மதலையின் பசிநோய் அறிந்து பாலூட்டி வளர்க்கும் தாய்போல மழையானது வேண்டின காலத்தே பெய்து, உலகை அளித்துப் பாது காக்கும் முறைமையது என்று மருதக்கலி கூறுகிறது. அருளுணர்ச்சியைப் புலப்படுத்தக் குறிஞ்சிக் கலி ஆசிரியர். "மழையினும் அருள் சிறந்தாய்" என்று கூறுகின்றார். “மா மழை போற்றுதும் மா மழை போற்றுதும்" என்று இளங்கோவடிகள் இன்புற ஏத்துகின்றார்.
தலைவிக்குத் தண்ணளி செய்யவேண்டிய கடமைப்பாடுடைய தலைமகன் ஒருவன் தலைவியைப் பிரிய எண்ணங்கொண்டான். தனது எண்ணத்தை எடுத்துக் கூற முயன்ற தோழி மழை வளம் மாறுபடுங்காலத்து உலகம் கெடுவதுபோல, நீ பிரியுங் காலத்துத் தலைவியின் அழகு கெடும் என்று கூறுகிறாள்.
"யாநிற் கூறுவ தெவனுண் டெம்மினு
நீநற் கறிந்தனை நெடுந்தகை வானந்
துளிமாறு பொழுதினில் உலகம் போலுநின்
னளிமாறு பொழுதினில் வாயிழைகவினே"
என்பது கலித்தொகை பிரிவுத் துயரின் எல்லையில் உழலும் தலைவி தனது வருத்தத்தினுடைய மிகுதிக்கு எல்லையாகவும் மழையின்மையைத்தான் குறிப்பிடுகின்றாள். கோடை உலகத்தைச் சுடும்படியாகப் பெய்யாமற் போன மேகம் வருத்துமாறு போலத் தலைவனது கைவிடுஞ் செயல் வருத்துகிறது என்று நெய்தற்கலி ஆசிரியர் நயம் பெறக் காட்டு கின்றார். மழையின்மை துன்பத்துள் துன்பம்; வான்மழை செல்வத்துள் செல்வம்.
இங்ஙனம் உலகை வாழ்விக்கும் மழை தவறாது பொழிய வேண்டுமானால், அதற்காவனவும் அறிந்து கொள்ளுதல் வேண்டும். இன்று பலர் வான் மழைக்குக் காரணம் கடலும், கதிரவனும், குளிர்ந்த காற்றும் என்றே கருதுகின்றனர். இவையே காரணமாயிருப்பின் இன்று மழைவளம் வற்றுவானேன்?
செயற்கை முறையில் மழை வரவழைக்கும் முயற்சியில் விஞ்ஞான உலகம் ஈடுபட்டுள்ளது. அவர்கள் வெற்றியும் காணக்கூடும். ஆனால் அவ் வெற்றி வையகம் முழுவதுக்கும் பயன் தருமா என்பதை எல்லோரும் சிந்திக்க வேண்டும். எங்கோ ஒரு பகுதியில் பெரும் பொருட் செலவில் இயற்கை மழை பெய்விக்க இயலும், ஆனால் செலவின்றி மாநிலம் முழுவதற்கும் பயன் தருகின்ற பெருமழையை விரும்புவோமானால், நமது பண்டைத் தமிழ்ப் பெருமக்கள் மழைக்குக் காரணம் என்று கருதிய அறவுணர்வுகளையும் சிந்தித்து வளர்க்க வேண்டும்.
மக்கள் அன்பின்றி - அறவுணர்வின்றி - அருளொழுக்கமின்றி - அல்லாதனவே செய்து வாழ்ந்தால் மழை பொழியாது என்று தமிழ்ச் சான்றோர்கள் கருதி நல்ல வண்ணமே வாழ்ந்தனர். மழை நீங்குதற்குக் காரணமான கொடுமையை உடைய ஊர் என்று பாலைக்கலி பகருகிறது. மங்கை நல்லாரின் கடவுட் கற்பு நிலையும் வான்மழை பொழிதற்குத் துணை செய்யும். "வான்தரு கற்பினுள்" என்று பாலைக் கலி பேசுகிறது. எனவே, மழைத்துளி பெருகி - மாநிலம் செழித்து - செல்வ வளம் கொழித்து - இன்ப நலம் பூத்திட - மகிழ்ச்சியிற் சிறந்து மக்களினம் வாழ விரும்புமானால் அன்பு பெருக வேண்டும். அறம் பல வளரவேண்டும், நல்லனவே எண்ணவும், பேசவும், செய்யவும் மக்கள் முயலவேண்டும். இதனை யாரும் மறுக்க முடியாது. இது சங்கத் தமிழர் அறிந்து போதித்த நீதியுமாகும்.
இன்று தமிழகம் வான் மழையின்றி வாடுகின்றது. பல்லோரை உண்பிக்கும் நெற்பயிர்கள் வாடுகின்றன. மக்கள், குடிக்கும் நீருக்குக் கூடப் பரிதவிக்கின்றனர். பசும் போர்வை போர்த்து அழகு பொலியத் தவழ்ந்த தமிழன்னையின் அழகு அழிந்துபட்டது. பொழிவதற்கே உரிய காலத்திலும் கூடப் பொய்த்துவிட்டது. புயல், அறத்தின் நெறிதவறி, குற்றம் இல்லாத கோவலனைக் குற்றமுடையானெனக் கருதிக் கொலை செய்தான் பாண்டியன் நெடுஞ்செழியன். அக்கொலையால் அன்றைய தமிழகம் பன்னிரண்டாண்டுகள் கொடிய பஞ்சத்தால் அவதியுற்றது. அதுபோலவே இன்றைய மனிதன் தகாதனவற்றைச் செய்தால், அறம் பேணாது வாழ்ந்தால், வான் மழை தவறி, வளமெல்லாம் மறைய, அல்லற் படுவது இயல்பாகும். இனியாவது அரசியற் காரணம் பற்றியும், அல்லது வேறு எக்காரணம் பற்றியும் சரி, அறமல்லாதன செய்யோம் என்ற உறுதி மொழியைப் பூண்போமாக! குற்ற மெல்லாம் குணமெனக் கொள்ளும் பேரருட் பெருங் கடவுளும் பெருமழை தந்து நம்மை வாழ்விப்பானாக.
தமிழ்நாட்டில் கம்பனுக்குக் கொஞ்சம் எதிர்ப்பு உண்டு. கம்பனை எதிர்க்கிறார்களோ, இல்லையோ, இராமனை எதிர்க்கிறார்கள். இராம காதை ஒரு சர்வ தேசியக் காதை, அது ஒரு நாடோடி வரலாறுபோல. மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் பேசப்படுகிற ஒரு தேசிய வரலாறு. ஆனால், அந்த இராம காதை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பலமாதிரியாக வழங்கப் பெறுகிறது.
காவியத்தில் வருகின்ற ஒரு காவியத் தலைவனை நாம் ஆராயும்போது, அந்தப் பாத்திரத்தின் குண தோஷங்களைக் காணவேண்டுமே தவிர அந்தப் பாத்திரம் எந்த இனத்தவராயிருந்தால் நமக்கென்ன? கம்பன் தான் எடுத்துக் கொண்ட பாத்திரங்களின் வாயிலாக என்ன சொல்ல நினைக்கிறான் என்பதைத்தான் நாம் காணவேண்டும். அந்தப் பாத்திரம் கங்கைக் கரையில் பிறந்தால் என்ன? காவிரிக் கரையில் பிறந்தால் என்ன? அதைப்பற்றி நமக்கென்ன கவலை? இன்று சிலருக்கு இராமன்மீது இருக்கிற வெறுப்பெல்லாம் வான்மீகியால் வந்ததேயன்றி இராமன் மீது ஏதும் வெறுப்பில்லை.
எனக்குச் சமுதாயத்தின் நல்வாழ்வில் சற்று அதிகமான பற்றும் அக்கறையும் உண்டு. எனவே சமுதாயம் வாழ வழி வகுக்கும் இலக்கியத்தையே - சமுதாயத்தின் இன்றியமையாத் தேவையைப்பாடும் இலக்கியத்தையே இலக்கியம் என்று நான் கருதுகிறேன். எனவே கம்பனை எனது சமுதாயக் கண்ணோட்டத்துடனேயே நான் பார்க்கிறேன். கம்பன் அயோத்திமாநகரின் சக்கரவர்த்தியை மட்டுமா பாடிப் போனான் ?
கம்பனிடத்தில் ஒரு குல உணர்ச்சியைப் பார்க்கிறோம். உலகமே ஒன்று என்று அவன் கருதுகிறான். நிர்வாகத்திற்கும் ஆட்சி நலத்திற்காகவுமே எல்லைக் கோடுகள் பிரிவுகள் கற்பிக்கப் பெற்றுள்ளன. கம்பனுக்கு முன்னும் கூடத் திரு மந்திரம் புறநானூறு போன்ற இலக்கியங்கள் எல்லாம் ஒரு குலநெறியை - ஓர் உலகக் கொள்கையை வற்புறுத்தியுள்ளன. ஆனாலும் மனிதன் அவற்றைப் படித்தான் - ரசித்தான் - சீரணித்துக் கொள்ளவில்லை. "அன்பால் ஆதரவால் மனித குலம் வாழவேண்டும்" என்று போதித்த மாபெரும் தத்துவ மேதை கன்பூசியஸ் தோன்றிய கம்யூனிஸ்டு சீனா இன்று, மனிதனை மனிதன் அடக்கியாள வேண்டும். மனிதன்மீது மனிதன் ஊர்ந்து செல்லவேண்டும் என்ற எண்ணத்தால், ஆணவ வெறி கொண்டு போருக்கும் ஆக்கிரமிப்புக்கும் கிளம்பி யிருக்கிறது. நாம் என்ன நினைக்க முடியும்? கம்யூனி சத்துக்கும் - கம்யூஷியசின் அறநெறிக்கும்தான் தொடர் பில்லையே!
"ஒன்றைக் கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டு, ஒற்றை ஆடையை ஒருவன் கேட்டால் அவனுக்கு இன்னொன்றையும் கொடு" என்று இயேசுநாதர் கூறினார். ஆனால் இன்றைய நிலை என்ன? புத்தகத்தில் படித்தது வாழ்க்கையில் படியவில்லை.
"உயிர்களிடத்து அன்பாயிரு - ஆசையை விட்டு ஒழி - ஆசையே துன்பங்களுக்கெல்லாம் காரணம்” என்று புத்தர்பிரான் போதித்தார். நாம் இன்று காணும் நடைமுறை? நேருக்குமாறான போர்க்கோலம். மனிதனின் உணர்வும் - பாசமும் உறவை மையமாகக் கொண்டது என்பதறிந்த மாணிக்கவாசகர், இறைவனையே "உறவே" என்று அழைக்கிறார். நமக்கு அறிமுகப்படுத்துகின்றார். அப்பரடிகளும் "அன்புடைய மாமனும் நீ - மாமியும் நீ" என்று சமுதாய உறவின் முறையில் பிணைக்கின்றார்.
இராமன் அயோத்தியை ஆண்ட மாமன்னனின் திருமகன். இடத்தாலும் இனத்தாலும் - குலத்தாலும் வேறுபட்ட அனுமனையும், குகனையும், வீடணனையும் தன் தம்பிகளாக ஏற்றுக் கொண்டமையை - இனிய தமிழில் கம்பன் விளக்குகின்றான்.
இராமன்மீது வான்மீகத்தின் வழியில் இருந்த - சில குறைகள் எனக் கருதக் கூடியவைகளையும். கம்பன் தமிழகத்திற்கேற்ப செப்பம் செய்திருக்கிறான். இன்னும் சொல்லப்போனால், கம்பன் தமிழ் நாகரிகத்தை - தமிழ்ப் பண்பை - தமிழ் மரபைக் காத்த காவலன் என்றுகூடக் கூறலாம். எனவே நமக்குக் கம்பன் வேண்டும் என்று கூறுவதில் எத்தகைய தவறுமில்லை.
நேற்று நான் செய்த ஒரு பிழை பெரிதல்ல - இன்று அது பிழை எனத் தெரிந்தபின் - பிழை திருத்தி வாழ்வதுதான் சிறப்பு. பிழை மறைந்துபோகும் - பின்னைய வாழ்வு வரலாற்றில் இடம்பெறும்.
இன்றைக்கு எண்ணுறு ஆண்டுகட்கு முன் இந்தக் கருத்தை வலியுறுத்திய கம்பன் நமக்கு வேண்டாமா? கருத்துவழி வள்ளுன் பெற்றெடுத்த மாபெரும் கவிஞன் கம்பன். அவன் வள்ளுவன் வலியுறுத்திய நாகரிகத்தைப் பின்னணியாகக் கொண்டு பெரிய காவியத்தைப் பாடினான்.
இன்று உலகம் முழுவதுமே சமுதாயத்தின் பொதுச் சிக்கலைப்பற்றிப் பேசும் நிலைக்கு வந்து விட்டது.
இன்றைய உலகின் - சமுதாயத்தின் பொருளியல் கொள்கையில் மூவகைக் கொள்கைகள் நிலவுகின்றன. முதலாவது மனிதன் அவனவன் திறமைக்கு ஏற்றவாறு எவ்வளவு பொருளும் திரட்டலாம்; அனுபவிக்கலாம். அது அவனுடைய பிறப்புரிமை, சட்டமும் அவன் உரிமையைக் காப்பாற்றித் தரும். தனி மனிதனுக்குள்ள முக்கியத்துவத்தை மறக்காதது - இது முதலாளித்துவக் கொள்கை, அமெரிக்காவின் நடைமுறைக் கொள்கை இன்னொன்று மனிதனுடைய திறமைகள் எவ்வாறிருப்பினும் அவனுடைய செல்வத்துக்கும், அனுபவத்திற்கும் கட்டுப்பாடுகள் உண்டாக்கி இயந்திரம்போல் மனிதனை வாழச் செய்வது. தனிமனிதனைப் பற்றியே கவலைப்படாமல் சமுதாயத்தையே முதன்மைபடுத்துவது. இதுவே கம்யூனிசம். இவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாக தனி மனிதனுடைய திறமைகளுக்கும் வாய்ப்பளித்து - எந்த ஒருவருடைய திறமையும் - மற்றவருடைய திறமையை - வாய்ப்பை அபகரிக்காமல் இருக்கும் படி தடுத்து எல்லோருக்கும் - எல்லா வாய்ப்புக்களும் கிடைக்கும்படி செய்வது, சோஷலிசம். இதுவே நம்முடைய தாயகத்தின் கொள்கை. இத்தகைய சமுதாயத்தைப் பற்றிக் கம்பனும் பேசுகிறான்.
"கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை; யாரும்
கொள்வார் இலாமைக் கொடுப் பார்களும் இல்லை மாதோ"
என்று குறிப்பிடுகிறான். எவ்வளவு அழகான கருத்து கொள்பவர்கள் யாருமில்லையாதலின் கொடுப்பவர்கள் யாருமில்லையாம். அதுமட்டுமல்ல - அங்கு 'வள்ளல்கள்' என்று யாருமே இல்லையாம்; ஏன்? வறுமை இருந்தால் தானே அதைத் தணிக்க வள்ளல்கள் இருக்க வேண்டும்? கொடுப்பதற்கேயுள்ள இயல்பு' என்பது இப்போது மற்றவர்களின் தலையைத் தடவத்தான் பயன்படுகின்றது.
கம்பனோ,
"வண்மை இல்லையோர் வறுமை இன்மையால்"
என்று பேசுகிறான். அந்த நாடு இப்படி இருந்ததா என்று சிலர் கேட்கலாம். அப்படி ஒரு நாடு இருந்ததோ, இல்லையோ, அத்தகைய ஒரு நாடு வேண்டும் என்று கம்பன் விரும்பினான். இப்படிப்பட்ட ஒரு சோஷலிசக் கருத்தை யார் சொல்லியிருக்கிறார்கள்? இப்படிப்பட்ட கவிஞன் நமக்கு வேண்டாமா?
அடுத்து,
"எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்த லாலே
இல்லாரும் இல்லை உடை யார்களும் இல்லை மாதோ!"
என்று பேசுகின்றான். எல்லா மனிதர்களுக்கும் வாய்ப்பிருக்க வேண்டும். (Oppurtunity for all) என்பதுதான் சோஷலிசம். இதைத்தான் "எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே" என்று குறிப்பிடுகின்றான். இன்றைக்கு எண்ணுறு ஆண்டுகட்கு முன் இத்தகையதொரு சோஷலிசக் கருத்தைச் சொன்ன கவிஞன் கம்பன் ஒருவன்தான்.
கம்பன் காணவிரும்பிய சோஷலிச நாட்டிலே - சமுதாயத்திலே சில அடிப்படைப் பண்பாட்டைக் காட்டுகின்றான். அங்கு எல்லோருமே அவரவர்களுக்குரிய நெறியோடு நின்றார்களாம். ஒன்றேயொன்று மட்டும் நெறி கடந்து சென்றதாம். அதுதான் வெள்ளம், ஆம். மனிதன் நெறிகடந்து போகவில்லை. வெள்ளம் அஃறிணைதானே!
மனிதன் என்றால் அவனுக்குக் குறிக்கோள் இருக்க வேண்டும் - வாழ்க்கைக்கு ஓர் இலட்சியம் இருக்க வேண்டும்.குறிக்கோள் வேறு, தேவை வேறு. குறிக்கோளை அடையத் துணைநிற்பவனே தேவையாக இருக்கவேண்டும். பிறப்பு - இறப்பு - இவைகளின் வழி உண்டாகின்ற துன்பங்களிலிருந்து உயிர் விடுதலை பெறுதல் உயிரின் குறிக்கோள். இந்நிலை யினை அடைய உயிருக்குத் தேவை பொன்னும் பொருளும் போகமும் கலந்த வாழ்க்கை குறிக்கோள் இல்லாத வாழ்க்கை தான் நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கம்பன் காண விரும்பிய நாட்டில் குறிக்கோள் இல்லாதவர்கள் - குறிக்கோளை அழித்தவர்கள் யாருமேயில்லை. ஆம், மனிதன் குறிக்கோளோடு வாழவேண்டும் என்று கம்பன் விரும்பினான்.
"நெறி கடந்து பரந்தன நீத்தமே
குறி அழிந்தன குங்குமத் தோள்களே”
என்று பேசுகின்றான் கம்பன். பெண்கள் தமது தோள்களில் எழுதிய குங்குமக் குறிதான் அழிந்தனவாம். கம்பன் இப்படிக் கூறுவதன் மூலம் நெறிகடந்து வாழாதே - குறிக்கோள் இல்லாத வாழ்க்கை வாழாதே என்ற இரண்டு கருத்தையும் வலியுறுத்துகின்றான். இத்தகைய கம்பன் நமக்கு வேண்டாமா?
இன்று பெரும்பாலும் அடுத்தவன் பெறுகின்ற பதவி உயர்வுகளிலும், புகழிலும் கூட நமக்கு மனஅமைதி இருப்பதில்லை. அழுக்காறுதான் மிகுந்திருக்கக் காண்கிறோம். சாதாரணமாகப் பிறர் நன்றாக உடுப்பதையும் உண்பதையுமே கண்டு மனம் பொறாதவர்கள் மிகுந்திருக்கிறார்கள்.
"உடுப்பது உம் உண்பது உம் காணிற் பிறர்மேல் வடுக்கான வற்றாகுங் கீழே"
இராமனுக்கு முடிசூட்டுவதற்குத் தசரதன் முடிவு செய்தான். முடிசூட்டு விழாவிற்குரிய ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. அன்னை கைகேயிடம் இராமன் வாழ்த்துப் பெறப் போகிறான். கைகேயி மிகவும் நல்லவள். அவளைக் கெடுத்தது கூனியே உள்ளத்தால் கூனிக் குறுகியவள் கூனி. நாட்டு வழக்கிலே நாம் பார்க்கிறோம். உள்ளத்தால் கூனிக் குறுகிய கிழங்கள் புறங்கூறுதலையும் பொறாமை கொண்டு பேசித் திரிதலையும் இன்றும் நாம் பார்க்கிறோம். இத்தகையவர்கள் காலரா, பிளேக் நோய்களைவிடக் கொடியவர்கள். இலையிலே பல காய்கறிகள் இருந்தாலும்கூட எல்லாவற்றையும் நாம் சாப்பிடுவதில்லை. பார்த்துத்தானே சாப்பிடுகிறோம். அப்படித்தான் பக்கத்திலே நம்மைச் சூழ்ந்திருப்பவர் களையும் நாம் பார்த்துப் பழகவேண்டும். இதைத்தான், "சேரிடமறிந்து சேர்” என்றார்கள். கூனியின் போதனையால் கைகேயி மனந்திரிந்தாள். "இராமா! நீ காட்டுக்குப் போக வேண்டுமாம் - உன் தம்பி பரதன் நாடாள வேண்டுமாம். இது உன் தந்தையின் ஆணை” என்றாள். முடிசூடி, ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டிய எனக்கு ஆரண்ய வாழ்வா? நாடாள வேண்டிய நான் காடாள வேண்டுமா? என்று துளியாவது மனம் வருந்தினானா? இல்லை. வேறு என்ன செய்தான் ?
"அன்னையே! தாங்கள் கூறினால் நான் கேட்க மாட்டேனா? மன்னவன் ஆணை என்று ஏன் சொல்ல வேண்டும்? என் தம்பி பெற்ற வாழ்வு நான் பெற்ற வாழ்வன்றோ? என் தம்பி பெற்ற செல்வம் நான்பெற்ற செல்வமன்றோ? தங்கள் பணியினை நான் தலைபணிந்து ஏற்றுக் கொள்கிறேன். இன்றே இப்போதே கானகம் செல்லுகிறேன். விடை கொடுங்கள்” என்று கூறிப் பணிந்து காடு செல்லு கிறான்.
"மன்னவன் பணியன்று ஆயின்
நும்பணி மறுப்ப னோஎன்
பின்னவன் பெற்றசெல்வம்
அடியனேன் பெற்ற தன்றோ
என்இதின் உறுதியப்பால்
இப்பணி தலைமேற் கொண்டேன்
மின்னொளிர் கானம்இன்றே
போகின்றேன் விடையும் கொண்டேன்”
என்பது கவிதை. இப்படி அவன் - இராமன் கூறியது ஒப்புக்கு உபசாரத்துக்குக்கூட இல்லை. "ஆட்சி உனக்கில்லை - நீ ஆரண்யம் ஏற்கவேண்டும்” என்ற இரண்டு அடி விழுந்த போதும், இராமனின் முகம் அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதுபோல மகிழ்ச்சியால் பூத்துத் திளைத்திருந்ததாம். இது எவ்வளவு பெரிய - சிறந்த பண்பு. இத்தகு மனப்பண்பு வேண்டும் என்று கூறிய கம்பன் - இத்தகு சமுதாய அமைப்பை விரும்பிய கம்பன் நமக்கு வேண்டாமா?
சமுதாய பொருளாதார வாழ்க்கையில் தான் கம்பன் முற்போக்கான கருத்துப் படைத்தவன் என்பதில்லை. குடும்ப வாழ்க்கையிலும் கம்பன் மிக முற்போக்கான கருத்துக் கொண்டிருந்தான்.
"தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலர்ள் பெண்”
என்று வள்ளுவப் பெருந்தகை பெண்ணுக்கு இலக்கணம் வகுத்தார். அந்த இலக்கணத்திற்குரிய இலட்சியப் பெண்ணாகச் சீதை விளங்குகிறாள்.
இராவணன் சீதையின் உடலைத் தொட்டுத் துரக்கிச் சென்றதாக வான்மீகியின் இராமகாதை பேசும். கம்பனோ சீதையின் கற்புக்கு இழுக்கு வந்துவிடக் கூடாதே என்று கருதி பாணகசாலையோடு பெயர்த்துச் சென்றதாக மாற்றியிருக்கிறான்."சிறைகாக்கும் காப்பு எவன்செயும் மாதர்தம் நிறைகாக்கும் காப்பே தலை"
என்ற வள்ளுவனின் வாக்கை மனத்திற் கொண்டு சீதையை நிறையுடையவளாகக் காட்டுகிறான் கம்பன்.
இராவணன் சீதையை அசோகவனத்தில் சிறை வைத்திருக்கிறான். இராவணனின் ஆடம்பர வாழ்க்கை அவனது சீரும் செல்வாக்கும் ஆண்மகனையே மயக்கிவிடும் என்றால் மகளிரைச் சும்மாவிடுமா? சிறிதேனும் மனம் திரிந்தாளா? இல்லை. இராவணனின் எந்தச் சர்வாதிகார ஆட்சியும்கூட அவளைத் தொடமுடியவில்லையே.
இனி சீதையின் நிலை என்ன? தன் கணவனை - தன் சுற்றத்தை - உற்றார் உறவினரை அத்தனை பேரையும் பிரிந்திருக்கிறாள். அப்படிப் பிரிந்து இருக்கும் நேரத்திலும் கூட இராமனைப் பற்றியே சிந்தனை செய்கிறாள். விருந்து வந்தால் அவன் எப்படி விருந்துபசாரம் செய்யப் போகிறான் என்றெல்லாம் என்னென்னவோ சிந்தித்துக் கவலைப்படுகிறாள். அரக்கர் மத்தியில் அவள் இருக்கிறாள். இராமனின் தூதுவனான அனுமன் வருகிறான். அவள் தனது தோள்மீது ஏறிக்கொண்டால், தான் அவளை இராமனிடம் கொண்டு போய்ச் சேர்த்து விடுவதாகக் கூறுகிறான். அவள் சரி என்றால் இராமனை அடைந்துவிடலாம்; சரி என்றாளா? இல்லை. அவ்வாறு இராவணனின் காவலிலிருந்து தான் தப்பி ஓடினால், இராமனின் வில்லுக்கு - வீரத்திற்கு இழுக்கு நேரிடுமே என்று கூறி மறுத்துவிட்டாள். எவ்வளவு அருமையான ஒரு குடும்பத் தலைவியாக விளங்குகிறாள்? இத்தகு கம்பன் வேண்டாமா?
இன்று உலகம் முழுதுமே குடியாட்சிக் கருத்துப் பரவியிருக்கிறது - பரவி வருகிறது. இன்றைக்கு எண்ணுறு ஆண்டுகட்கு முன்பு குடியாட்சி மலராத காலத்தில் கம்பன் குடியாட்சிக்குக் கால்கோள் செய்திருக்கிறான். "மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்" என்று புறநானூறு பேசுகிறது. அதாவது அரசனுக்காக மக்கள்! ஆட்சிக்காக மக்கள் என்பதேயாம். மன்னன் உயிர் என்றும், மக்கள் உடல் என்றும் கூறினால், உயிர் தங்கியிருப்பதற்காக - உயிர் வாழ்ந்திருப்பதற்காகத்தானே உடம்பு? மன்னனுக்காக மக்கள் என்பதுதானே இதன் கருத்து? கம்பன் இந்தக் கருத்தை மாற்றுகிறான். மக்களுக்காகவே ஆட்சி என்ற கருத்தை வலியுறுத்துகின்றான். “மன்னன் உடம்பு; மக்கள் உயிர்” என்ற குடியரசு சித்தாந்தத்தை அப்போதே பாடியிருக்கிறான். குடியாட்சி என்றால் என்ன என்று தெரியாத காலத்தில் - முடியாட்சிக் காலத்தில் முடியாட்சிக் காவியத்தில் இத்தகையதொரு குடியாட்சிக்குக் கால்கோள் செய்த கம்பன் நமக்கு வேண்டாமா? இப்படிப்பட்ட கம்பனை வேண்டாமென்று சொல்ல நமக்கு என்ன உரிமை இருக்கிறது?
கம்பன் நமக்குக் காட்டும் இராமன் காவியத்தலைவன். ஒரு மாபெருந்தலைவன். அடுத்து, இராமாயணத்தில் நூற்றுக்கு நூறு குறைவில்லாத நிறைவுடைய ஒரு பாத்திரம் கும்பகர்ணன்; அவன் வீரத்தில் சிறந்தவன். உடன் பிறந்தான் பாசத்தில் சிறந்தவன்; நன்றியறிதல் உடையவன்.
எவ்வளவு நல்லவனாக - பக்திமானாக - படித்தவனாக இருந்தாலும் சமுதாய நீதியின் மீது - சமுதாய ஒழுக்கத்தின் மீது மோதினால் அறம் அவனைச் சும்மா விடாது; கடவுள் அவனைச் சும்மா விடமாட்டார். இராவணன் நல்லவன், வல்லவன் - சிறந்த சிவபக்தன் - சாத்திரப் பேரறிஞன். எனினும் அவன் ஒருவனும் ஒருத்தியும் கூடி அமைதியாக வாழும் - இல்வாழ்க்கையின் மீது தன்னல வெறியோடு மோதினான். இராவணின் செய்கை நியதியல்ல; நீதியுமல்ல என்று கும்பகர்ணன் எடுத்துக் காட்ட தவறினான் இல்லை. அதே சமயத்தில் மாற்றானிடமிருந்து தன் உடன்பிறந்தானைக் காக்க - செஞ்சோற்றுக்கடன் கழிக்க - நன்றியுணர்வைக் காட்ட இராமனோடு போர் புரிகிறான்.அன்று போர்முனையில் ஓர் ஒழுங்கு - நியதி இருந்திருக்கிறது. போர்க்களத்திலே இராவணன் நிராயுதபாணியாக நின்றுகொண்டிருக்கிறான். நிராயுதபாணியாக நிற்கும் இராவணனைப் பார்த்து இராமன், “இன்று போய் நாளைவா” என்கிறான். இன்றையப் போரில் ஓர் ஒழுங்கு இருக்கிறதா? நேரம் இருக்கிறதா? இலக்கு இருக்கிறதா? இன்றைக்கு எண்ணுறு ஆண்டுகட்கு முன்பு இவ்வளவு அருமையான போர்முறை ஒழுக்க நெறி பேசிய கம்பன் நமக்கு வேண்டாமா?
இலக்கியம் காலத்தின் கண்ணாடி - சமுதாயம் நின்று நிலைபெறுவதற்கான தேவையான கருத்துக்களைத் தருவது. அத்தகு இலக்கியங்கள் எல்லாக் காலத்திற்கும் எல்லாக் கருத்தினருக்கும் ஏற்றனவாகப் பெரும்பாலும் விளங்கும். காலமாறுபாட்டால் கருத்து வளர்ச்சியால் ஒரு சில ஒத்துவராமலும் இருக்கலாம். இலக்கியத்தை நாம் ஆராயும்போது அந்த இலக்கியம் தோன்றிய காலம், அந்தக் காலச் சமுதாயத்தின் வாழ்க்கை முறை முதலியவற்றை நாம் மனத்திற் கொண்டே ஆராய வேண்டும். இலக்கியத்தில் நாம் கொள்ளத் தக்கனவும் இருக்கும்; ஒதுக்கித் தள்ளத் தக்கனவும் இருக்கும்; எனவே, ஓர் இலக்கியத்தைப் படித்தால், அடிமாறாமல் அப்படியே சென்றுவிடுவோம் என்று கருதுவது நிறைவுடையதாகாது. செருப்பு நமக்காகத்தான் இருக்கிறது. அதற்காகச் செருப்பு இழுத்துச் செல்லும் வழிக்கே நாம் போய்விடுகிறோமா? அதுபோல நமக்காக - நம் வாழ்வுக்காக உள்ள இலக்கியங்களைப் படித்து, கொள்ளத்தக்க கொள்கைகளை நாம் கடைப் பிடிப்பதே சரியானது.
கம்பன் சமுதாய ரீதியிலும், ஆட்சித் துறையிலும், குடும்ப வாழ்க்கையிலும் மட்டுமல்ல, அறிவியல் துறையிலும் கூட மிகச்சிறந்த கருத்துக் கொண்டு விளங்கினான். அத்தகு புரட்சிக் கவிஞனை, புதுமைக் கவிஞனை, புத்துலகச் சிற்பியை வேண்டாம் என்று கூறமுடியுமா? வேண்டாம் என்றால் இன்றைக்கு எண்ணுறு ஆண்டுகளுக்குமுன் நாம் வாழ்ந்த சிறந்த வாழ்க்கைச் சுவட்டை அழிக்க முற்படுகிறோம் என்றுதான் பொருள். கம்பன் வேண்டாமா?
ஈதலும் இசைபட வாழ்தலும் தமிழினத்தின் தனிப் பண்பு. "செல்வத்தின் பயனே ஈதல்” என்பது தமிழினத்தின் இதய கீதம். மாரிபோல் வாரி வழங்குதலே தமிழினத்தின் தலையாய செயல். "இயல்வது கரரேல்" எனும் பழமொழி தமிழ் நாட்டில் யாவரும் அறிந்த பொதுமொழி. "இயல்வது" என்ற சொல்லின் பொருளாழத்தை ஏடுகள் காட்ட முடியுமா? முடியாது. தமிழினத்தின் வரலாறுதான் காட்ட முடியும்.
தலைவனைப் பிரிந்த தலைவி ஒருத்தி, "இயல்வது கரவேல்” என்ற பழமொழிக்கு விளக்க உரை தருகின்றாள். பிரிவால் வருந்துகின்றாள் தலைவி. அன்புடைத் தோழி ஆறுதலுரைகள் பல பகர்ந்து தேற்றுகின்றாள். 'தலைவர் பொய்யா நாவினர் - அருளொழுக்கம் பூண்டவர். ஆதலால் நினக்கு அருள் செய விரைவில் திரும்பி வருவார்' என்று சொல்லுகின்றாள். தோழிக்குத் தலைவி எடுத்தோதுகின்றாள். "ஈ என்று இரந்து நிற்கும் இரவலர்க்கு, தம்மால் இயல்வதைச் செய்யாது கரத்தால் மாட்டாத நெஞ்சம் வற்புறுத்தலின் நம்முடைய காதலர் காதலித்தது பொருளேயாம்” என்று கூறுகின்றாள். அதாவது இரக்கப்படுவோரிடத்துப் பொருளில்லா திருக்கலாம். ஆனால் பொருளை முயன்று தேடும் வலிவுடைமையைப் பெற்றிருக்கலாம். அங்ஙனம் வலிவிருந்தும் இரவலர்க்குப் பொருள் இல்லை என்னின் அதுவும் இயைவது கரத்தலேயாம் என்பது தமிழர் கோட்பாடு."இல்லோர்க் கில்லென்றியைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிய நம்மிலும்
பொருளே காதலர் காதல்"
என்பது தலைவியின் வாய்மொழி.
ஈத்துவக்கும் இன்பம் இணையற்ற இன்பம். இத்தகு இன்பத்தைத் தமக்கு உரிமையாக்கிக் கொள்ள ஒவ்வொரு வரும் விரும்புவர்.
பிறந்திருப்பவர் அனைவரும் பயனுடையரல்லர். வள்ளுவனாரும்கூட "மக்கட்பதடி” என்று கூறி ஒதுக்குகின்றார் ஒரு சிலரை கூற்றுவன் கொள மாளுதல் பயனற்றது. அங்ஙனம் மரிக்கின்றவர்கள் தவப்பேறு உடையவர்களல்லர். பிறருக்கெல்லாம் பெட்புற உதவ, சேட்புலம் படர்ந்து பொருளிட்டுதல் வேண்டும். அதுவே பயனுடையது; புகழுமாம்.
"நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
கோளுற விளியார்பிறர் கொளவிளிந் தோரெனத் தாள்வளம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர்.”
என்பன மாமூலனாரின் மணிமொழிகள்.
இங்ஙனம் வாழ்ந்தாரும் மரித்தாரும் தமிழகத்தில் பலருண்டு. இறந்த பிறகும் புதைகுழியினின்றும் வெளிப் போந்து ஈந்தாரும் உண்டு. செத்தும் கொடுத்த சீதக்காதியை அறியாதார் யார்? மாரியைப்போல் வாரி வழங்கிய பாரியை அறியாதார் யார்? பாரிமன்னன் படைமடம் பட்டானில்லை. ஆனால் கொடைமடம் பட்டதுண்டு. அவனுடைய ஆட்சியில் முந்நூறு ஊர்கள் இணைக்கப்பட்டு, குன்றாவளத் தனவாய் உழைப்பின்றே கிடைக்கும். இயற்கை உணவுப் பொருள் மிகுதியும் வாய்ந்த மலைகள் பாரியின் பறம்பு நாட்டில் உண்டு. பாரியின் கைவண்ணம் சொல்லுந்தரமன்று. முல்லைக் கொடியின் துன்பத்தையும் தனது துன்ப மெனக் கருதியதன்றோ அவனுடைய அருளுண்மை. பற்றிப் படரும் கொம்பின்றிக் குழைந்து வாடிய கொடி முல்லைக்கு நீள்மணித் தேரை நிறுத்தியது அவனுடைய பண்பு ஆம். மறக்க முடியாததொரு மாண்புடைச் செய்தி. இறந்து வந்த பாணர்களுக்கும் புலவர்களுக்கும் முந்நூறு ஊர்களையும் கொடுத்துவிட்டான். தனக்கென ஒன்றேனும் இல்லாத நிலையில் ஈத்து இன்பம் துய்த்தான்.
வாழ்க்கையில் தமிழர்கள் கையாண்ட ஒழுக்க நெறிகளும் பண்பு நெறிகளும் பலப்பல. அவற்றுள் தலையாயதொன்றாம் ஈகைப் பண்பையே ஈண்டுச் சந்தித்தோம். தமிழரோடு தமிழ்ப் பண்பாடும் வளரவேண்டும். பண்டைத் தமிழரின் வாழ்வு முறையில் தமிழர்கள் வாழ முயல வேண்டும். தமிழர்கள் சிந்தனையில் - செல்வத்தில் திளைத்து, தமிழ் வளர்த்து, அறம் பல புரிந்து, இன்பம் பொருந்தி வாழத் துணை செய்வதே இலக்கியங்கள். அத்துணையே நாளும் நமக்குக் காட்டிக் கொடுக்கும் தனித் தமிழ்த்தாள்கள் பல தோன்ற வேண்டும். வாழ்க தமிழ்! வளர்க தமிழ்நாடு!! ஓங்குக நல்லறம்!!!
ஐரோப்பிய நாடுகளின் சித்தாந்தங்களையும் மனித இன வரலாற்றையும்விட பாரதத்தின் சித்தாந்தங்களும் மனித இனவரலாறும் மிகப் பழமையுடன் சிக்கல்களுக்கு மேலெழுந்தவாரியாகத் தீர்வு காண்கின்ற சில நாடுகள் உண்டு. நமது நாட்டு மேதைகள் சிக்கல்களை நன்கு ஆழ்ந்து சிந்தித்து அவை தீர்வதற்குரிய வகையில் இறுதி முடிவு கண்டிருக்கிறார்கள். அத்தகு மேதைகளில் சிறந்து விளங்குபவர் அண்ணல் காந்தி அடிகள்.
பிரெஞ்சுப் புரட்சியும் ரஷ்யப் புரட்சியும் கிழக்கு இராமநாதபுரத்தில் - பங்குனி மாதத்தில் - நடுப்பகல் பனிரெண்டு மணிக்குக் காணும் வெப்பம் போன்றவை. காந்தியடிகளின் புரட்சி இளவெயில் போல, பொதிகை மலைத் தென்றல் போல, என்றாலும் அவருடைய புரட்சி வலிமையும் - உறுதியுமுடையதாக விளங்கியது.
காந்தியடிகள் தலைசிறந்த ஞானி. அறியாமை கலப் பில்லாத தூய அறிவிற்குத்தான் ஞானம் என்று பெயர். அது பேரொளியணையது.
காந்தியடிகள் பழைய பண்புகளுக்கும் நிகழவிருக்கும் புதுமைப் பண்பிற்கும் ஒர் இணைப்புப் பாலத்தை ஏற்படுத்தினார். கங்கையும் யமுனையும் கலப்பதுபோல பழமைக்கும் - புதுமைக்கும் இடையே வேறுபாடு தெரியாத விழுமிய ஒற்றுமையை உருவாக்கினர். புதியதொரு சமுதாயத்தை உண்டாக்கினார்.
நம்மிடையே எப்படியோ ஒரு தனிமை உணர்ச்சி வளர்ந்து இருந்தது. அதன் காரணமாகப் பழக்கவழக்கங்களில் நாம் கூனிக்குறுகி வாழ்ந்தோம். அந்தக் கூனல் அந்நியர்கள் ஏறி உட்கார்ந்து சவாரி செய்வதற்கு வசதியாக இருந்தது. காந்தியடிகள் நமது கூனை நிமிர்த்தினார். கத்தியை எடுத்துக் கொடுக்காமல் - இரத்தம் சிந்தும்படி செய்யாமல் நமது கூனை நிமிர்த்தினார். அதுவரை சுகமாக உட்கார்ந்து சவாரி செய்தவர்கள் சவாரி செய்ய முடியவில்லை - இறங்கி விட்டார்கள். இந்த அதிசயத்தைக் காந்தியடிகள் செய்து முடித்தார்.
எதையும் எப்படியும் செய்யலாம். என்று காந்தியடிகள் கருதியதில்லை. வாழ்க்கையின் இலட்சியம் உயர்ந்ததாக இருக்க வேண்டும். அந்த இலட்சியத்தை அடையும் வழி முறையும் உயர்ந்ததாக இருக்கவேண்டும் என்பது காந்தியடிகளின் விழுமிய கொள்கை.
புதிய சமுதாய அமைப்புப்பற்றி அவர் கனவு கண்டார் என்று கூறுவதே சாலப் பொருத்தமானது. ஏனெனில் கனவுகள் நிறைவேறாமல் போவதும் உண்டு.
இந்த நாடு சுதந்திரம் பெற்றபோது எப்படியிருந்தது என்பது நாம் அறிந்த உண்மையே. வாழ்ந்த வாழ்நாள் முழுதும் வாழ முடியாமல் இளமையிலேயே மரணமடைந்தோர் எண்ணிக்கை அதிகம். சமுதாயத்தில் ஏழைகளே அதிகமாக இருந்தார்கள். மனிதனை மனிதன் தொட்டால் தீட்டு என்கிற மனோபாவம் இருந்தது. இவ்வளவுக்கும் விடிவு காண விரும்பினார் காந்தியடிகள், மனித குலத்தை ஒரு குலமாக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். காந்தியத் தத்துவம் சமரச தத்துவம், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிவழி வந்த தத்துவம். திருவள்ளுவரும், அப்பரடிகளும், இராமலிங்கரும் போற்றிப் பாராட்டி வந்த தத்துவங்களை நடைமுறைக்குக் கொண்டுவர முயற்சித்தார். உணவிலும், உடையிலும், போக்குவரத்திலும் மாற்றம் வந்திருக்கிறது - மனிதனுடைய மனத்திலே மட்டும் மாற்றம் வரவில்லை. 'அணைத்து வாழு' என்று ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருக்கிறார்களே, அந்தப் பண்பு இன்றுவரை வளர்ந்திருக்கிறதா? மாறாக எப்படி அடித்தால் அவனுக்கு நன்றாக வலிக்கும்? எப்படி அடித்தால் அவனை வீழ்த்தலாம் என்று ஆராய்கின்ற பண்பு வளர்ந்திருக்கிறது.
இன்று நம்மை நாமே ஆத்ம சோதனை நடத்திக் கொள்ளும் நிலைக்கு நாம் வந்திருக்கிறோம். இந்த நாட்டின் சமுதாய வரலாற்றில் காந்தியடிகளின் சித்தாந்தம் முழுக்க முழுக்கப் பொருந்தும். அதுதான் சர்வோதயம். எப்படி உதயம் இயல்பாகவே ஏற்படுகிறதோ அது போல சமுதாயத்தில் எல்லோரும் வாழுகின்ற ஒரு நல்ல அமைப்பு முறை இயல்பாகவே-தானாகவே உருவாக வேண்டும். அப்படித் தன்னியல்பாக வளர்வதுதான் சர்வோதயம்.
'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்ற தாயுமானாரின் சித்தாந்தம் சர்வோதயத்தின் முழுச் சித்தாந்தம் என்று கூறலாம்.
'தனியொருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை யழித்திடுவோம்' என்று பாரதி பாடினார். அந்தத் தனி யொருவன் யாராக இருக்க முடியும்? உரிமைகளைக் கேட்க வாயற்று, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வழியும் வலிமையும் அற்று மூலையிலே ஒதுக்கப்பட்டுக் கிடக்கின்ற ஒருவனைப் பற்றித்தான் பாரதி பேசுகிறார். அத்தகைய ஒருவனை நோக்கிச் சோறும் துணியும் போடும்படி செய்வதுதான் சர்வோதயம்,
தொண்ணுாற்றைந்து பேரின் வாழ்க்கை உரிமைகளை -அவர்களிடத்து உரமும் உறுதியும் இல்லையென்ற காரணத்தால் எஞ்சியுள்ள பேர் பறித்துச் சுகவாழ்வு வாழுகிறார்களே இந்நிலை இருக்கலாமா?
நமது பாரதத்தின் தலைமை அமைச்சர் நேரு அவர் களுக்கு நிலப் பிரச்னையில் மிகவும் அக்கறை இருக்கிறது. எனினும், கொசு கடித்தால் கூட 'புலி அறைகிறது - முதலை விழுங்குகிறது என்று கூப்பாடு போடுகிறவ்ர்கள் சிலர் இங்கு இருக்கிறார்கள். நமது இன்றைய அரசாங்கம், தேவைக்கு அதிகமாக நிலத்தைச் சேர்த்து வேலி கட்டி வைத்துக் கொண்டிருப்பவர்களிடம் இழப்புக்குரிய ஈட்டுப்பொருள் கொடுத்து நிலத்தைப் பெறுகிறது. இதிலேயே தனியுரிமை பறிபோகிறது என்று கதறுகிறார்களே!
நிலப் பிரச்னையைப் பொறுத்தவரை நாம் எவ்வளவு விரைவில் முடிவெடுக்கிறோமோ அவ்வளவு நல்லது. இல்லையானால், கிழக்குக் கோடி வீட்டில் தீப்பற்றி எரியும் போது மேற்குக் கோடி வீட்டில் வாழ்பவர் தன் வீட்டின்மேல் தண்ணீர் அள்ளிக் கொட்டிக் காப்பாற்றிக் கொள்ள முயன்ற கதை போலவே ஆகும். புத்திசாலியாக இருந்தால், தீப்பிடித்த வீட்டில் தண்ணீரை அள்ளிக் கொட்டி அந்தத் தீயை அணைப்பதின் மூலம் எல்லா வீடுகளையும் காப்பாற்றலாம். அவனுடைய வீடும் காப்பற்றப் பெறும். மனித சமுதாயத்தில் எந்த ஒரு கோடியில் வறுமை இருந்தாலும் அது நம்மை அரித்துத் தின்றுவிடும் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
நாம் எதற்கும் கும்பிடுபோட மிக நன்றாகக் கற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால், எதைக் குறிப்பிடுகிறோமோ அதனுடைய தத்துவத்தை மட்டும் வாழ்க்கையில் காப்பாற்ற மாட்டோம். புறக் காட்சிகளையும், புறத் தத்துவங்களையும் பார்த்து அவற்றை நம்முடைய வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டும்.
காந்தியடிகளின் நினைவாக நாம் சத்தியம் செய்து உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். அவர் வலியுறுத்தி வந்த தத்துவங்களை - சித்தாந்தங்களை நாம் கொஞ்சம் கொஞ்சமாகவாவது வாழ்க்கையில் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி பெறவேண்டும்.
சமய வாதி என்றால் நல்ல மணமுள்ள மலர்போல இருக்க வேண்டும். மலரின் மணத்தினாலாய இன்ப அனுபவம் மனிதர்களுக்கேயாம் - மலர்களுக்கல்ல. மலர் இருக்கும் செடி அனுபவிப்பது பலருக்கு அருவருப்பூட்டும் உரத்தைத்தான்; ரோஜா மலர் வண்ணத்தால் மணத்தால் பலருக்கு விருந்தளிக்கிறது; அதுபோலவே மனிதனும் காட்சியாலும் செயலாலும் மற்றவர்களுக்கு இன்பம் அளிக்க வேண்டும். அது மனிதனின் கடமை. இதனை நமக்கு உணர்த்துவதுதான் சர்வோதயம்.
நாம் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு தொய்வு ஏற்படவில்லை. இப்போது தொய்வு ஏற்படுமோ என்ற அச்சம் பிறந்திருக் கிறது. அந்த அச்சத்தைப் போக்கும் முயற்சியில் சர்வோதய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
நாம் பூரண சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டு மென்றால், சர்வோதய தத்துவங்களை நடைமுறைக்குக் கொண்டுவருவது தவிர வேறு வழியில்லை. சமுதாய ரீதியதாக-சமய ரீதியாக-அரசியல் ரீதியாக அற்புதமான ஓர் விளக்கு சர்வோதயம். விளக்கைச் செய்து கொள்ள முடியாதவர்களாக நாம் இருக்கலாம். விளக்கைச் செய்து கொடுத்த பிறகு அந்த விளக்கை ஏற்றி, இருளைப் போக்கி விளக்கொளியில் வாழ முடியாதவர்களாக இருக்கலாமா?
காந்தியடிகளுக்குப் பிறகு, வினோபாஜி சர்வோதய இயக்கத்தின் தலைவராக விளங்குகிறார். இந்த 20-ஆம் நூற்றாண்டிலேயே வினோபாஜி நம்மிடையே வாழுகின்ற காலத்திலேயே காந்தியடிகள் காண விரும்பிய சர்வோதய சமுதாயத்தை - புதிய சமுதாயத்தைக் காணவேண்டும் என்ற முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும். நாம் அனைவரும் ஓரணியில் சேர்ந்து, அண்ணல் காந்தியடிகளுக்குக் காணிக்கையாக அவரது சித்தாந்தங்களை ஆண்டுக்கு ஒன்று வீதமாகவாவது எடுத்துக்கொண்டு நடைமுறைக்குக் கொணர முயற்சிக்க வேண்டும்.
"அகிம்சையை இன்றைய உலகம் ஏற்காது - ஏற்க முடியாது; ஒருவனை ஒருவன் அடுதலும் தொலுதலும் புதுவது அன்று; 'இவ்வுலகத்து இயற்கை என்று புறநானூறு பேசுகின்றது. எனவே உலகம் உள்ளவரை பிற உயிர்களைத் துன்புறுத்தல் - இம்சித்தல் இருந்தே தீரும்" என்று சிலர் சொல்லுகிறார்கள்.
உலகம் வளர்ந்து செல்லக்கூடியது. இன்று ஆங்காங்கு பல்வேறிடங்களில் அடி உதை கத்திக்குத்துகள் நிகழ்ந்த போதிலும் அவை யாவும் முன்னைய அளவிற்கு - பண்டைக் காலத்தில் இருந்த அளவிற்கு இன்று இல்லை.
அன்றைய நிலையில் வாளை - கத்தியை இடையில் சொருகிச் செல்வது, மதிப்பிற்குரியதாகப் போற்றப் பெற்றது; இன்று பழிப்பிற்குரியதாகக் கருதப்பெறுகிறது.
வாளைச் செருகிக் கொண்டு செல்லவும் மனிதன் கூசுகிறான்.
மனைவியை அடித்து உதைத்து அடக்கியாளுவது இடைக்காலத்தில் ஆண்மகனுடைய - கணவனுடைய கவுரவமாக - வீரச் செயலாகக் கருதப்பெற்றது. இன்று வெறுத்து ஒதுக்கத்தக்க இழிநிலையாக எண்ணப் பெறுகிறது.
உழவனை அச்சுறுத்திச் சவுக்கால் அடிப்பது அன்றைய மிட்டா மிராசுகளின் செல்வாக்கைக் காட்டுவதாக இருந்தது. அச்செயல் இன்று யாரும் ஏற்க மறுக்கின்ற இழிசெயலாகக் கருதப்பெறுகிறது. இவையெல்லாம் காலத்தின் வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள நற்பண்புகள். இம் முன்னேற்றம், ஏதோ திடீரென்று ஏற்பட்ட முன்னேற்றமன்று. அதாவது,
சிறு தம்ளரில் விரைவில் உயரும் நீர்மட்டம்போல் விரைவில் பெற்ற உயர் நிலையன்று. விரிந்து உயர்ந்த ஏரியில் துளித் துளியாக நீர் சேர்ந்து சிறிது சிறிதாக ஏற்றமடையும் நீர்நிலை போன்றது. மெல்ல மெல்ல உயர்ந்துவரும் இக்காலத்தில் அன்று பாடிய புறநானூற்றின் வேறு பல அடிகள் ஒத்துவந்தாலும் "ஒருவனை ஒருவன் அடுதலும் தொலுதலும்......இயற்கை?" என்ற வரிகள் எக்காலத்துக்கும் ஒத்துவருவன என்று எப்படிக் கொள்ள முடியும்? 'ஒருவனை ஒருவன் அடுதலும் தொலுதலும் புதுவதன்று' என்று கருத்து இன்று ஒத்துவருவதாக இல்லை.
'உலகப் பிரச்னைகள் எல்லாம் இன்று படை பலத்தால் தானே தீர்க்கப் பெற்றன? உலகமே படைபலத்தை நம்பி வாழும் நேரத்தில் அகிம்சை பேசுவதால் - அகிம்சையை ஏற்பதால் பயன் என்ன? என்ற வினா எழுப்பப் பெறுகிறது.
குறிப்பிட்ட ஒரு நல்ல கொள்கை, அது எந்தக் கொள்கையாயினும் நடைமுறைக்கு வருதல் என்பது சற்றுக் கடினமானதுதான். தீயது விளைவது போல நன்மை அத்துணை விரைவில் விளைந்து விடுவதில்லை. எனது வீட்டில் கொசு இருக்கிறது என்பதற்காக அடுத்த வீட்டிலும் கொசு இருக்கிறது என்றோ, எனது வீட்டில் இல்லாததால் அடுத்த வீட்டிலும் கொசு இல்லை என்றோ திடீர் என முடிவு கட்டிவிடுவது கூடாது. அகிம்சையைப் பற்றிச் சிந்திக்கக் கூடிய - நடைமுறையில் கடைப்பிடிக்கக்கூடிய சூழ்நிலை இன்றைய உலகம் முழுமையும் மெல்ல மெல்லப் பரவி வருகின்றது. அணு ஆயுத சோதனைத்தடை, அணு ஆயுத உற்பத்தித் தடை போன்ற துாய நல்லுணர்வுகள் தலையெடுத்து வரும் காலம் இது. இந்த நேரத்தில் அகிம்சையை மேற்கொள்வதால் ஏற்படுகின்ற நன்மை மிகப் பெரியது.
பண்டைய நிலையில் அகிம்சையால் விளையும் பயன் அவ்வளவு பெரிதன்று. ஏனெனில் அன்றைய ஆயுதம் வாளும் ஈட்டியும் அம்பும்தான். அவற்றால் விளையும் பயன் தீமையைவிட மிகமிகக் குறைவு. அன்று ஒரு மனிதன் கையிலிருந்த வாளினால் ஒரு சிலரே இறந்துபட நேரிட்டது. இன்றோ ஒரு சிறு அணுகுண்டால் கோடிக்கணக்கான மக்கள் - ஏன் இந்த உலகமே அழிந்துவிடக்கூடும். எனவே இன்றையச் சூழ்நிலையில்தான் அகிம்சை நெறி அணு ஆயுத சோதனைத் தடை, அணு ஆயுத உற்பத்தியைக் குறைக்க நிகழும் கிளர்ச்சி - படைபலக் குறைப்பு முதலியன அகிம்சை நெறி வெற்றியடையத் தொடங்கியுள்ளமைக்கு அறிகுறியாகும். இவை யெல்லாம் அன்பு நெறியின் - அருள் நெறியின் - அகிம்சை நெறியின் வெற்றிகள்!
'அகிம்சையால் சாதித்தது என்ன ? அகிம்சை பேசிவரும் நாடு சாதித்த சாதனைகள் அனைத்துமே அகிம்சையை அடிப்படையாகக் கொண்டவைதாமோ? என்று கேட்கின்றனர்.
எந்த ஒரு செயலையும் இடம் பொருள் ஏவல்கட்கு ஏற்பவே, நல்லதா கெட்டதா என்று முடிவு செய்ய வேண்டும். பொதுவாக, நன்மை பயக்கும் ஒரு செயல், இடம் பொருள் ஏவல்கட்கு ஏற்ப தீமை பயப்பது போலத் தோன்றுவதும், தீமை பயப்பது போன்ற ஒரு செயல் இடம் பொருள் ஏவல்கட்கு ஏற்ப நன்மை பயப்பதும் உண்டு.
மனிதன் வாழும் வீட்டிற்குள் பாம்பு நுழைந்து அடுத்த வனைத் தீண்ட முயலும்போது அகிம்சை பேச முடியுமா? அடித்துக் கொல்லுதல்தானே மரபு? வீட்டில் புகுந்த பாம்பை அடித்துக் கொல்வது வழக்கம் என்ற எண்ணத்தில் காட்டிற்குள் புகுந்து புற்றினைப் பெயர்த்துப் பாம்புகளை எல்லாம் தேடிப் பிடித்து அடித்துக் கொல்வது சரியாகுமா? முன்னது கடமை வழிபட்ட அகிம்சை, பின்னது இம்சை.
ஒரு மனிதன் இறந்து விட்டால் அவனது உடலைச் சுடுவது கடமை. அது இம்சையாகாது. சுடுவதை நினைவிற்கொண்டு உயிருடன் இருப்பவனது உடலைச் சுடுவது சரியாகுமா? எதற்கும் இடம் பொருள் ஏவல் காலம் உண்டு!
அகிம்சை வழி நிற்க வேண்டுமானால் படைகளே கூடாது. நம் நாட்டிலோ படைபலம் பெருக்கும் நிலை நிலவுகின்றது. இது ஒன்றே இன்றையச் சூழ்நிலையில் அகிம்சையை நிலைநாட்டமுடியாது என்பதற்கு சான்றாகாதா என்கின்றனர்.
இன்றைய உலகில் சிலர் எடுத்த எடுப்பிலேயே சண்டை போடுபவராக உள்ளனர். ஆயினும் அவர்களும்கூட தம் கை கண்ணில் குத்தும்போதும் தம் பல் நாக்கைக் கடித்துவிடும்போதும் அவற்றை நொந்து கொள்ளுகிறார்களா? அவற்றின் தவறுகளுக்காக அவற்றை வெட்டி விசி எறிந்துவிடுவதில்லையே.
ஆனால் அண்டை அயலான் தனக்கு ஏதேனும் சிறு தீங்கு செய்துவிட்டாலும் கத்தியும் கையுமாகப் புறப்பட்டு விடுகின்றனர். இத்தகைய மனிதர்கள் உளவலிமையற்றவர்கள். இவர்கள்தான் கத்தியும் கம்பும் தேடுவர். உள்ள வலிமையுள்ளவர்கள் தீங்கினையும் பொறுத்திருக்கும் ஆற்றல் பெற்றிருப்பார்கள்.
படைபலத்துக்காக நாம் படையைப் பெருக்குவது உண்மைதான் ! எனினும் நமது படைப் பெருக்கம் தற்காப்புக்காகவேயன்றி மற்றவனை அடிப்பதற்கு அன்று.
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நாம் நம் நாட்டைக் காப்பதற்காகப் போர் தொடுக்கிறோமே தவிர, அடுத்தவனைவென்றால் பேரரசாகலாம் என்ற போர் வெறி காரணமாக வீம்புக்காக நம் படையைப் பெருக்கவில்லை. வலியச் சென்று பிறர் பொருளைத் தீண்டக்கூடாது - தீண்டுவது தவறு என்ற கொள்கையை உடையது நம் அரசு.
அகிம்சை என்பது பிற உயிர்களைக் கொல்லாமல் இருப்பது மட்டுமன்று. அது மிகமிக நுண்ணியது ஆழ்ந்த பொருளுடையது. ஒருவன் அகிம்சை நெறியாளன் என்றால் அவன் தன் எண்ணத்தாலும் பேச்சாலும் செயலாலும் பிறர்க்குத் துன்பம் வருவனவற்றை நினைக்காமல் - பேசாமல் - செய்யாமல் வாழவேண்டும். அதுதான் அகிம்சை, தீயன நினையாதே - தீயன பேசாதே - தீயன செய்யாதே என்பதுதான் அகிம்சை.
மனிதன் அண்டை வீட்டுடன் பக்கத்து நாட்டுடன் ஒட்டி வாழும்போது சிற்சில துன்பங்களைப் பெறுகிறான். அவற்றை எல்லாம் பொறுத்துக் கொள்ளத்தக்க உள்ளம் வேண்டும்; உள்ள வலிமை உடையவனே அகிம்சையை நிலைநாட்டுவான். உள்ளவலிமையற்றவன் எதற்கெடுத்தாலும் சண்டையிடுவான் - போர் தொடுப்பான். உள்ள வலிமையுடன் அகிம்சையைப் பேணுவதால் அவன் அடையும் பயன் மிகப் பெரியது. அகிம்சை நெறியில் நிற்பவனிடம் அறிவு, பெருமை, ஆற்றல் இவை வளரும்.
அகிம்சை நெறியாளன் மேற்கொள்ளத்தக்க நெறிகளுள் முதலாவது அவன் சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது நல்லது என்பதாகும். அதன் மூலம் அவன் பெரும் பகுதி நன்மையைப் பெறலாம் - சமாதானத்தை நிலைநாட்டலாம்.
அவன் பின்பற்ற வேண்டிய இரண்டாவது நெறி தன் ஆத்திரத்தைக் குறைத்துக் கொள்ளுதல். மற்றவன்மீது தான் கொண்டிருக்கும் ஆத்திரத்தைக் குறைப்பதற்கு ஒரே வழிதான் உண்டு. அது தன் கருத்துக்கு மாறுபட்டவனிடம் - மாற்றுக் கருத்துடையவனிடம் யோசனை கேட்பதாகும். தன் கருத்துடன் ஒத்த கருத்துடையவனிடம் பெறும் யோசனை ஆத்திரத்தைக் கிண்டிக் கிளறிவிடப் பயன்படுமே தவிர அணைக்கப் பயன்படாது. நெருப்பும் பெட்ரோலும், நெருப்பும் எண்ணெயும் ஒத்துப்போகக் கூடியன. நெருப்பை அணைக்க எண்ணெய் அல்லது பெட்ரோலின் துணையை நாடக்கூடாது; மாறாக அத்துடன் மாறுபட்ட மணல் தண்ணீர் இவற்றின் துணையை நாடவேண்டும். அது போலத் தன் ஆத்திரத்தைக் குறைத்துக்கொள்ள மாறுபட்ட கருத்துடையவனையே நெருங்கி ஆலோசனை கேட்க வேண்டும்.
அகிம்சையைப் பின்பற்ற நினைப்பவன் கொள்ளத்தக்க மூன்றாவது நெறி தற்பெருமை கொள்ளாமை ஆகும். தற்பெருமை கொள்பவனிடமும் அகிம்சை குடிகொள்வ தில்லை. மற்றவனுக்கு மதிப்பு கொடுப்பவனிடமே அகிம்சை நின்று நிலைக்கும்.முடிவாக அணுஆயுதத் தடையும் போர் நிறுத்தச் சூழலும் உருவாகிவரும் இக்காலத்தில் உலகம் அகிம்சையை ஏற்று நடக்க இயலும். இன்றைய உலகத்திற்கு அந்த அகிம்சை நெறிதான் வழிகாட்ட முடியும்.
காந்தியத் தத்துவம் என்ற மையக்கோட்டில் அரசியல் இருந்தது - அருளியல் தழுவிய அரசியல் இருந்தது. ஆன்மார்த்த சிந்தனைகளும் இருந்தன. இப்படி ஒரு தத்துவ கர்த்தாவை நாம் அடிக்கடி காண்பதில்லை. வள்ளுவத்தில் ஒரு குறை இருந்தது. அதுவும் காந்தியிடத்தில் இல்லை. அதுதான் விடுதலையுணர்வு. அதையும் காந்தி வற்புறுத்தினார்.
தமிழகத்திற்குச் சில பண்பியல்கள் உண்டு. எல்லா நாகரிகங்களிலும் சிறப்பியல்புகள் உண்டு. எனினும் வழிவழி நாகரிகம் பாழ்பட்டு நின்ற நமது பாரதத்திற்கு விடுதலை வாங்கித்தர அவர் கையாண்ட முறை புதியது - போற்றத்தக்கது. அன்றும் தமிழகத்தில் அகிற்புகை போன்ற துணிகளை உற்பத்தி செய்தமைக்காகப் பல கைத்தறியாளர்களின் கட்டை விரல் துண்டிக்கப்பட்டன என்று வரலாறு கூறுகிறது.
சுதந்திர நாட்டில் சுதந்திரமாகச் சிந்திக்க என்ன செய்ய முன்வரவேண்டும். விடுதலையுணர்வை உண்டாக்க முதலில் பொருளியல் விடுதலை வேண்டும்.
காந்தியத் தத்துவம் ஒரு செயல் செய்தால், பலவற்றையும் ஒருங்கே திருத்தும் ஒரு சக்தி வாய்ந்தது.
கதர் நூற்றால், ராட்டைச் சுற்றினால் சுதந்திரம் வந்து விடும் என்றார் காந்தி. சேர, சோழ, பாண்டியர் காலத்தில் பொழுது போக்குக்காக, விளையாட்டாக நாடு பிடித்திருக் கிறார்கள் வெள்ளையர்கள். நாடு பிடித்ததின் நோக்கம் தங்கள் உற்பத்திகளை இங்குக் கொண்டுவந்து விற்பதற்குத் தான். 'என் நாட்டுப் பொருளாதாரத்தை வெள்ளைக்காரன் சுரண்டுவதைத் தடுக்கிறேன்' என்ற உணர்வோடு ஏழை மனிதன் கதர் வேட்டியைக் கட்டும் போது எண்ணுவான்; காந்தியடிகள் மனப்புரட்சியை உண்டாக்கினார். அவரது போராட்டம் ஆதிக்க எதிர்ப்பே அன்றி ஆள் எதிர்ப்பல்ல. அங்கே அரசியல் ஒழுக்கத்தை மனித ஒழுக்கத்தைப் பார்க்கிறோம். காசில்லாமல் போகலாம் - கைகள், கால்கள் இல்லாமல் போகாதே. எனவே நூற்றுக் கட்டிவிடலாம் என்ற பொருளியல் உணர்ச்சியை இந்த கதர் மூலம் காண்கிறோம். நிர்மாண இயக்கங்களாக தீவிர அரசியல் ஊழியர், தீவிர நிர்மாண ஊழியர் என்று இரு பிரிவுகளாகப் பிரிந்து செயல்படலாம். வசதியுடையவர்கள் - வாய்ப்பு உடையவர்கள் - கையுடையவர்கள் எந்த ஆட்சியிலும் வாழ்ந்துவிடுகிறார்கள்; வாழ்ந்துவிடுவார்கள். எதிலும் மிதக்கத் தெரிந்தவர்கள் யார் ஆண்டாலும் மிதக்கக் கற்றுக் கொள்வார்கள். காந்தி சாதாரண மக்கள் வாழ விரும்பினால் நகரம் என்ற கரையான் பல கிராமங்களை அரித்துச் சாப்பிடுகிறது. கிராம மக்கள் கோடானு கோடி பேர் இருக்கிறார்கள். அவர்கள் கிராமிய ரீதியிலே ஒரு பெரு எழுச்சியை உண்டாக்க வேண்டும்.
குறைந்த நேரத்தில் அதிக உற்பத்தி என்பது மட்டுமல்ல நமது பிரச்னை. எவ்வளவு அதிகப்படியானவர்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்க முடியும் என்பது தான் - பலருக்கு வேலை வாய்ப்பில்லை - வேலை செய்ய சக்தியுள்ளவர்கள் பலர் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்குப் போகும் நிலையில் உள்ளதை மாற்றியாக வேண்டும். இம்முயற்சியில் பொருளாதார இலாகா நட்டத்தைப் பார்க்க முடியாது. அறம் அருள் என்றும் தீமை செய்தாலும் பொறுத்துக்கொள் என்றும் கூறிய வள்ளுவர்,"ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கைய ரல்லா தவர்க்கு”
என்கிறார். ஆம், கீழ் மக்கள் தமது கன்னத்தை நொறுக்கும் வளைந்த கைகளையுடையவர்க்கல்லாமல் மற்றவர்களுக்குத் தாம் உண்டு கழுவிய ஈரக்கையையும் உதறமாட்டார்கள். எச்சிற்கையால் காக்கைகூட விரட்ட மாட்டார்கள்.
இன்றைய பொருளாதார நிலை நாட்டிற்கு ஆபத்து. வறுமையிற் செம்மை என்று நாம் கூறியிருக்கிறோமே தவிர வளமையில் பங்கு கொடு என்று சொல்லக் கூசியே வாழ்ந்து வந்திருக்கிறோம். சராசரி மனிதர்களுக்கு மேல் வாய்ப்புக் கொடுக்க முற்படவேண்டும்.
அரசாங்கம் வேலை கொடுப்பதற்குரிய சூழ்நிலையை உருவாக்க முடியுமே தவிர, அரசாங்கமே வேலை கொடுக்க முடியாது. உற்பத்தி இங்கு பெருகி இருக்கிறது என்றாலும், அது பரவலாக எல்லோரிடமும் சென்று சேரவில்லை என்ற குறைபாடு இன்று இருக்கிறது. உழைப்பது கடமை - தேவையைப் பெறுவது உரிமை. உரிமை என்ற கடமை உணர்ச்சிதான் சிறந்தது. பசி என்ற கொடுமையை உடனடியாக அழிக்க வேண்டும். அது தான் சிறந்த அறம் - தர்மம் பசிக்கொடுமை, வறுமையைப் போக்க அது கொடுத்து மாளாது. எனவே வாழ்வதற்கான வழிகளைக் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும். அதற்குத்தான் சர்வோதய சமுதாயம் - சமத்துவ சமுதாயம் என்றெல்லாம் பெயர்.
கையால் நூற்கின்றபோதும் நெய்கின்ற போதும் அவர்கள் நல்ல எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் அந்த உடைகளை நாம் உடுத்தும்போது அந்த எண்ணங்களின் பிரதிபலிப்பு இருக்கும். கதர் வாங்கினால், காசு கொடுத்துக் கருத்தையும் வாங்கினதாகக் கூடக் கூறமுடியும். எண்ண வலிவுக்கு இருக்கும் ஆத்மசக்தி சாதாரணமானதல்ல - நம்முடைய தேசத்தின் சின்னமாக - இந்தியக் குடிமக்களின் சின்னமாக நினைத்து நாம் கதர் அணிய வேண்டும். வாயில்லாதவனுக்குக் கூட வீடு தேடிக் கொண்டுபோய் சோறு கொடுப்பது நமது கடமை - அதிலே ஒவ்வொரு குடிமகனுக்கும், குடிமகளுக்கும் பொறுப்பு இருக்கிறது.
எல்லோருக்கும் வாழ்வு தருவதுதான் இன்று நமக்கிருக்கும் முதல் வேலை. இங்கு ஆளும் தகுதியுடையவர்களாக ஒரு பிரிவினரையும் ஆளப்படும் தகுதியுடையவர்களாக இன்னொரு பிரிவினரையும் பழக்க வேண்டும்.
குடியரசு நாட்டில் ஆளுவது மட்டுமே பொறுப்புடையது அல்ல - நல்ல குடிமக்களாக - குடியாட்சித் தத்துவத்தில் திளைத்தவர்களாக வாழ்வதும் பொறுப்புடையதுதான். அந்தப் பொறுப்பு வளரும்போது, ஊழியம் பெரிதேயன்றி, ஊதியம் பெரிதல்ல என்ற உயர்நிலை உருவாகிவிடும்.
21.நாமும் பூமிதான இயக்கமும்
முன்னுரை
இந்தியநாடு இன்பத்திருநாடு. கங்கை முதல் காவிரி முதலிய புண்ணிய நதிகளின் புனல்கொடையால் பல்வளம் கெழுமியநாடு, அன்பே நினைந்து அறமே புரிந்து அருள் ஒழுக்கம் மேற்கொள்வோர் வாழும் பெருநாடு. இந்திய நாட்டின் வரலாற்றில் அன்பின் நிகழ்ச்சிகளே மிகுதி. தானத்திலும் உயர் ஞானத்திலும் சிறந்தது இந்தியநாடு. அணுகுண்டு சகாப்தத்தில் அஹிம்சையின் மூலமாக விடுதலை பெற்றதே இந்தியநாட்டின் பண்பாட்டிற்குத் தக்கசான்று. சமுதாயத்தின் நலனுக்குப் பொருளியல் சமத்துவம் மிக மிகத் தேவையானது. சமத்துவம் இல்லையானாலும், தனி மனிதனுடைய அத்தியாவசியமான சுய தேவையாவது நிறைவு செய்யப் பெறுதல் வேண்டும். அங்ஙனம் சுயதேவை நிறைவு வராவிடில், வெறுப்பும், வெறியும் சமுதாயத்தில் வளரத்தொடங்கி, கலகங்களை விளைவித்து, கொலையைப் பெருக்க ஏதுவாகும். உலக வரலாற்றில் இத்தகு இரத்தக் கரை படிந்த நிகழ்ச்சிகள் பலவற்றைக் காண்கின்றோம். இன்றைக்கும் உலகம் முழுவதிலும் வாதப்பிரதிவாதத்தில் இருந்துவரும் முக்கியப் பிரச்னையும் இதுவேயாம். பலாத்காரத்தின் மூலம் பொருளாதார சமத்துவத்தைக் கொண்டுவர உலகின் வடதுருவத்தில் உள்ள நாடு திட்டமிட்டு, திட்டத்தைப் பரப்பி சாதனையாக்க உழைத்துக் கொண்டு வருகிறது. உலகின் மேற்கொடியில் உள்ள வளம்படைத்த நாடு அதைத் தடுக்க, போர் முதலிய பல துறைகளையும் மேற்கொண்டு சாதிக்கப்பாடுபடுகிறது. இந்த நிலையில், இந்தியா, நாட்டில் பொருளாதார சமத்துவம் கொண்டுவர மனித தருமத்தின் அடிப்படையில் அன்று நெறிப் புரட்சியாகக் காட்சி அளித்து, மக்கள் மனத்தை மாற்றி, சமத்துவத்தைக் கொண்டுவர முயல்கின்றது; ஓரளவு சாதித்தும் விட்டது என்றுகூடச் சொல்லலாம். காந்தியத்தின் வழி விளக்காம் வினோபாஜி அவர்களுடைய நிலக்கொடை இயக்கம் அருளியலின் விளைவு - உண்மையிலேயே நிரந்தரமான சமத்துவத்தை நிலைநிறுத்துவது. பாரத கண்டத்தின் பண்பின்வழி அரசியல் விடுதலை பெற்றோம். இன்று பொருளியல் விடுதலைக்கு முயன்று கொண்டிருக்கின்றோம்.
வாழ்க்கையில் இன்பம்
வாழ்க்கை பெரும்பகுதி சுவையற்றதாக துன்பச் சுழலில் சுழல்கிறது. “உண்டி முதற்றே உலகு" என்பது பழமொழி. மனித வாழ்வுக்கு முதல் தேவை உணவும் உடையும். இவற்றிற்குப் பின்பு தான் மற்றவற்றைப் பற்றி மக்கள் சமுதாயத்திற்குக் கவலை. உயிர் வாழ வயிற்றுக்கு உணவும், குளிருக்கு உடலைக் காத்துக் கொள்ள ஓர் ஆடையும் கிடைத்துவிட்டால் அதுவே இன்பமென நினைப் போர் பெரும்பகுதியினர். "பசித்தவனுக்கு ரொட்டிதான் கடவுள்” என்றொரு முதுமொழி உண்டு. ஆழ்வார் பெரு மகனும் "தின்கின்ற சோறும் பருகுகின்ற நீரும் வெற்றிலையும் பாக்கும் நீ" எனக் கடவுளைக் கண்டு காட்டுகின்றார். எனவே மக்கள் சமுதாயத்திற்கு இன்பம் அன்றாடத் தேவையின் நிறைவில்தான் இருக்கிறது.
இன்றைய நிலை
வளம்பல படைத்த நாட்டில் வறுமை தலைவிரித்தாடுகின்றது. இன்பம் பூத்துக்குலுங்கிய நாட்டில் துன்பச் சூறாவளி சுழன்றடிக்கின்றது. தாராளம் வாழ்ந்த நாட்டில் தரித்திரம் தாண்டவமாடுகிறது. வாழ்வில் வறுமையோடு போராடும் கொடிய பாதகமான சூழ்நிலை - பசி பசி என்ற ஈனக்குரல் எங்கும் கேட்கப்படுகிறது. உயர்ந்த அடுக்கு மாளிகையில் சிலர் வாழ்வு, அம்மாளிகையின் முகப்பில் சாக்கடை அருகில் நாயொடு பொருதும் பலர் வாழ்வு. இதனால் எங்கும் பொறாமைக் கனலும் மனப் புழுக்கமும் வளர்கின்றன. இதனின்றும் களவும் கொலையும் பெருகுகின்றன. நல்லது தீயது என்பது பற்றிய சிந்தனையே மக்களிடம் குறைந்து வருகிறது. போலீஸ் கூடங்களும், நீதி மன்றங்களும் பெருகிவருகின்றன.
வாழ்க்கையில் சமயம்
ஒழுக்கம் சமய வாழ்வின் அடிப்படை, நீதியும், நேர்மையும், வாய்மையும் சமய வாழ்வின் அணிகலன்கள் இவற்றை வளர்ப்பதற்கும், உறுதிப்படுத்துவதற்கும், இறவாத இன்பம் பெறுவதற்கும், வழிபாடு வழிகோலுகிறது. ஆனால் இன்றைய சமுதாயம் வாழ்க்கையின் தேவைக்கே போராடிக்கொண்டிருக்கும் பொழுது நல்லறப் பண்புகளைப் பற்றிச் சிந்திக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இம்மையை மறந்து மறுமையைப் பற்றிச் சிந்திக்கும் பேருள்ளம் ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் அமைதல் கூடும். அத்தகையோரே ஞானிகள் மகாத்மாக்கள். மகாத்மாக்கள் நிலையில் பொதுமக்களையும் கருதுதல் கூடாது. எனவே பொது மக்களைப் பொறுத்தவரையில் இம்மை வாழ்வின் நிறைவான நிம்மதியான வாழ்வுக்குப் பின்தான் சமயம், கடவுள் நம்பிக்கை முதலியன பற்றிய சிந்தனை. ஆதலால்தான் இன்றைய மக்களிடை உலகியல் தேவையைப் பற்றிய சிந்தனை பரவியிருக்கிற அளவுக்கு சமயத்தைப்பற்றிய சிந்தனை இடம்பெறவில்லை.
எதிரான போக்கு
இந்திய நாடு மத நம்பிக்கையில் சிறந்த நாடு. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மத நம்பிக்கை அடிப்படையிலேயே வளர்ந்த நாடு. இந்து மதம் உலக மதங்கள் பலவற்றுள்ளும் கொள்கையால் சிறந்து தலைமை வகிக்கிறது. ஆனால் அதை அனுஷ்டிப்பவர்கள் எண்ணிக்கையில் சிலராயினர். இந்திய நாட்டிலும் இடையில் இந்து மதம், மக்கள் சமுதாயத்தோடு தொடர்புகொள்ளாமையினாலும், அன்றாட வாழ்வில் பங்குகொள்ளாமையின் காரணமாகவும் இந்துக்கள் பலர், தம்முடன் நெருங்கிய தொடர்பைக் கொண்ட பிற மதம் புகலாயினர். பிற மதம் புகுந்தபின் இந்து மதத்தை இழிவானதெனவும், குறுகிய நோக்கங்கள் கொண்டது எனவும் கருதலாயினர். இக் கருத்து வளர்ந்து காலப்போக்கில் இந்து மதத்திற்கு எதிர்ப்பு மனோபாவத்தை மக்களிடையே தூண்டிவிட்டது. வறுமையை ஒழித்துக்கட்டி, எல்லோருக்கும் இன்ப வாழ்வைத் தருவதே தங்களது இலட்சியம் எனச் சொல்லிக் கொள்ளும் அரசியல் கட்சிகளும், சமூகத்தைச் சீர்திருத்துகின்றோம் என்று சொல்லிக்கொள்ளும் இயக்கங்களும் கடவுள் நம்பிக்கையை மறுக்கின்றன. மக்களினத்தின் நிரந்தரமான இன்பத்திற்குத் தடை விதிப்பது மத நம்பிக்கை தான் எனத் தீவிரமாகப் பரப்பி, மக்கள் சமுதாயத்தைச் சமயத் துறை வாழ்விற்கு எதிரிடையான பாதையிலே அழைத்துச் செல்கின்றன. மக்களும், தாங்கள் வறுமையின் கொடுமையினின்றும் விடுபெறப் போகின்றோம் - நல்லதொரு இன்பவாழ்வை நடத்தப்போகின்றோம் என்ற நினைப்புகள் கடவுளை மறந்து, அவர்கள் வழிச்செல்லத் தலைப்படுகின்றனர்.
முதல் சிகிச்சை
- இங்ஙனம் வறுமையின் காரணமாக நேர்மைக் கோட்டினின்றும் விலகி நீதி என்ற நித்யத்துவத்தைக் கடந்து ஒழுங்கு என்ற உத்தம நெறியை இகழ்ந்து, கடவுள், மறுபிறப்பு இருவினை என்ற நினைப்புக்களைக் கனவிலும் கருதாது, தவறான வழிகளில் தேவையை நோக்கிப் போகும் சமுதாயத்தை, அன்பு வழியில் - அறத்தாற்றில் - அருள் நெறியில் - கடவுள் நம்பிக்கையில் சிறந்த பக்திப் பெரு வாழ்வில் அழைத்துச் செல்ல விரும்பினால், அவர்களுடைய வறுமை நோய்க்கு மருந்து தேவை. அன்றாட வாழ்வில் துன்பச்சாயல் இல்லாதிருந்தால்தான் நல்லறப் பண்புகளும், நல்லொழுக்கமும், பக்தியும் வளர முடியும். துன்பத்தின் காரணமாகத் தீமை புரையோடியிருக்கும் சமுதாயத்திற்கு முதல் சிகிச்சை வாழ்க்கையின் இன்றியமையாத் தேவையை நிறைவு செய்வதேயாம். இம் முதல் சிகிச்சை சீர்பெற நடந்து, வாழ்க்கையில் இன்பம் மலர்ந்துவிடின் தானே கடவுள் நம்பிக்கையும், மறுமை நோக்கும், சமய வாழ்வும் குடி கொண்டுவிடும்.
இதனைத்தான் ஆந்த்ரேமோர்வா என்னும் பிரெஞ்சு நாட்டுப் பேராசிரியர் "டாக்டர் ஓ' கிரேடி மீண்டும் வருகிறார்" (The Return Dr. O'Grady)என்ற தம் நூலில் கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகின்றார்.
- "நல்லுணர்ச்சிகளை மனிதனிடத்தில் தூண்ட வேண்டும். தூய ஒழுக்கம், வேதாந்த ஆராய்ச்சி, மதக் கொள்கைகள் இவை பரவி மனிதனை முன்பு செம்மைப்படுத்தின.
- அத்தகைய சூழ்நிலையை மீண்டும் அமைத்தல் நலமாகும். தாழ்மையுற்றவர்கள் அவமானமுற்றவர்கள் இவர்களின் மனப் புண்களை ஆற்றவேண்டும். இப்படிப்பட்டவர்கள்தான் போர் உணர்ச்சியை வளர்ப்பார்கள். இவர்களிடத்தில் இன்பம் இல்லாத காரணத்தால். வெஞ்சினந்தான் இவர்கள் உள்ளத்தில் அரசு செலுத்தும். அதைத் தவிர்க்க நாம் எழ வேண்டும்”
திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும், திருவீழிமிழலையில் ஆற்றிய தொண்டும் இதுதானே? ஒன்றுமில்லாத வறுமைநிலை வரையில் இளையான்மாரர் செய்த திருத்தொண்டும் இதுதானே? மணிமேகலை மனித சமுதாயத்திற்குச் செய்த சேவையும் அதுவேயன்றோ?
நாம், சற்றேறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன் தோன்றி அருள் வளம் பழுத்து வளர்ந்ததொரு சமய நிலையத்தின் தலைமைப் பொறுப்பைத் தாங்கி நிற்கும் தொண்டர். தமது ஸ்தானத்துக்குரிய கடமை மக்கள் மன உணர்ச்சியைக் காத்து நல்லற வாழ்வுத் துறையில் அழைத்துச் சென்று, பக்தியுடன் கலந்த சமயப்பெரு வாழ்வு வாழச்செய்தலாகும். இத் திருப்பணியை நமது முன்னவர்கள் அவ்வக்காலத்திற்கு உகந்த முறையில் திறம்படச் செயலாற்றி வந்துள்ளனர். இன்றோ சமய நிலையமும் கூட மக்களொடு வழக்காடுவதற்கு நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலையில் மக்கள் மனம் அமைந்துள்ளது. அறநிலையங்களிடத்தில் மக்கள் காட்டிவந்த மதிப்பும் அனுதாபமும் அந்த அளவுக்கு மாறி நிற்கின்றது. தனி மனிதன் வாழ்விலேயே காவலை பாரதியார் வெறுக்கின்றார். எனினும் சமுதாயத்தைத் தலைமை வகித்து அழைத்துச் செல்லக்கூடிய சமயத் தலைவர்களும்கூட காவலோடு உலவ வேண்டிய அளவுக்கு அற உணர்ச்சியும் சமயப் பண்பாடும் கெட்டுள்ளது. எனவே இன்று நம்முடைய முதலாய தொண்டு சமுதாயத் துன்பத்தைத் துடைத்து, இன்பத்தை மலரச் செய்து, அதன் மூலம் சமய வாழ்வை மக்கள் மனதில் இடம்பெறச் செய்வதாகும்.
சமுதாயத்தின் துன்பத்தைப் பரிபூரணமாகத் துடைக் கின்ற திருத்தொண்டிலே காந்தியத்தின் வழி வினோபாஜி ஈடுபட்டார். மக்கள் மனத்தில் அன்புவித்திட்டு மன மாற்றத்தை உற்பத்திசெய்து நிலத்தானம் பெற்று, வாடுகின்ற ஏழைகளுக்கு நிலத்தை அளிக்க முன்வந்தார். இச்செய்தியைக் கேட்ட ஏழை மக்களின் முகத்திலே மகிழ்ச்சி மலர்ந்தது. கொடிய கொலைக்களத்தில் படைக்கலம் தாங்கி நின்றவர்களும் அன்பு வழியில் மாறியதை ஹைதராபாத்தில் கண்டோம். அரசியல் கலப்பில்லாது, சமுதாயத்தை உயர்த்தும் ஒப்பற்ற அருள்நெறி இயக்கம் இது என்று நாம் மனப்பூர்வமாக நம்புகின்றோம். பூமி தானத்தின் மூலம் வறுமையின் வாட்டம் தவிர்க்கப்படுகிறது. துன்பம் துடைக்கப்படுகின்றது. வெறுப்புணர்ச்சி விடைபெறுகிறது. கொலை, புலைத் தன்மைகள் புறம்போகத் தலைப்படுகின்றன. இவற்றின் பயனாக மக்களிடையே சமய நம்பிக்கையும் வாழ்வும் இடம்பெறுகிறது. இந்த இயக்கத்தை ஆண்டவனின் துரண்டுதலின் பேரில்தான் தொடங்கினேன் என்று வினோபாஜி சொல்லியுள்ளதே இதற்குச் சான்றாகும். வினோபாஜியின் வேள்வி அருள் ஒழுக்கத்தின் எதிரொலி, யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற பண்பின் வழி நின்று ஈகைத் தன்மையைப் பெருக்கி இன்பத்தை விளைவிக்கிறது.
- மக்களிடையே சமய உணர்ச்சியை வளர்த்து, நல்லறச் செல்வர்களாக வாழ்விக்கும் பொறுப்பு நாம் வகிக்கும் ஸ்தானத்திற்கு உரிய தலையாய கடமையாகும். மக்களின்
- வேதனைக் குரலில் எப்படிச் சமயத்தை வளர்க்க முடியும்? தந்தையும் தாயுமாக விளங்கும் ஆண்டவன் திருக் கோயில்களுக்கு முன்பே ஏழைகளின் பட்டாளத்தைப் பார்க்கும் பரிதாபகரமான காட்சியை என்னென்பது? இந்த நிலையில், சமய வளர்ச்சிப் பணியில் இறங்கிய நாம், முதலில் பசிப் பிணிக்கு மருத்துவம் தேவை என்பதை உணர்ந்தோம். இதே நிலையில் வினோபாஜியால் பூமிதான இயக்கம் தொடங்கப் பெற்றது. இந்தப் பண்பாட்டின் அடிப்படையில் ஏழ்மையை நீக்க இந்த இயக்கம் பெரிதும் உதவுமென்று நாம் நம்பினோம். இந்த இயக்கம் வெற்றி பெறும்போது மக்களிடையே நிலவியுள்ள தீய உணர்ச்சிகள் அருகி, நல்லற உணர்ச்சிகள் பெருகும். அதன் காரணமாக, சமய வாழ்வும் நாட்டில் மலர்ந்து விடுமென்ற அளவுகடந்த நம்பிக்கையுடன் பூமிதான இயக்கத்திற்கு நம்முடைய ஆதரவையும் வாழ்த்தையும் உரியதாக்குகின்றோம்.
அருளறம் பேணும் பேரன்பர்களே! வையம் வாழ்ந்தால் நாமும் வாழ்வோம். நமது உடன் பிறந்த சகோதரர்களின் துன்பம் துடைக்க மனமுவந்த பலவகையானும் தானம் செய்யுங்கள். எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுங்கள். ஈத்துவக்கும் இன்பம் இணையில் இன்பம். ஈத்தலின் மூலம் இந்திய நாட்டைச் சிறைக்கூடம் இல்லாத நாடாக சிவமணம், கமழும் திருநாடாக ஆக்குங்கள். அதுவே அருள் நெறி.
இன்பம் பொலிக!
கால வளர்ச்சியில் மனித குலம் வளர்ந்திருக்கிறது. அப்படி வளர்வதென்பது இயற்கை வள்ளுவரும் அப்பரடிகளும் சேக்கிழாரும் வாழ்ந்த காலத்திற்குப் பிறகு மனிதகுலம் வளரவில்லை என்ற கூற்றினை ஒப்புக்கொண்டு விடுவதற்கில்லை. இன்று பல்வேறு நாட்டுப் பேரறிஞர்களின் சிந்தனைகளும், கருத்துச் செல்வங்களும் இங்கு வந்து குவிந்திருக்கின்றன. இப்படி வளர்கின்ற - வளர்ந்து வருகின்ற - புதிய சமுதாயத்தோடு நாமும் நமது வாழ்க்கையை இணைத்துக் கொள்ளாவிட்டால் காலப் போக்கில் நாம் ஒதுங்குவோம் - ஒதுக்கப்படுவோம்.
"முன்னைப் பழம் பொருட்கும்
முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும்
பேர்த்துமப் பெற்றியனே"
என்று இறைவனை ஏற்றிப் போற்றுகிறது திருவாசகம், அந்தத் திருவாசகத்தைப் பாடிப்பரவி வருகிற பல அன்பர்கள் கூடப் பின்னைப் புதுமையை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள் - மறுக்கிறார்கள். எனவேதான் நமது சமயம் உலகப் பெருஞ்சமயமாக ஆகவில்லை. வளர்ந்து வாழவேண்டிய - சமுதாயத்திற்குக் கருத்துப் புரட்சி இன்றியமையாததாகும்.
வாழ்க்கை ஒரு பெரும் போராட்டம். மனிதன் காலை எட்டு மணிக்குக் கொள்ளுகின்ற கோலமும் கருத்தும் மாலை எட்டு மணிக்கு அப்படியே இருப்பதில்லையே. எனவேதான் வாழ்க்கையில் சிக்கல் ஏற்படுகிறது. நூல் சுருளில் ஏற்படுகிற சிக்கலை எடுப்பதில் கூட மனிதர்கள் அக்கறையும் ஆர்வமும் காட்டுகிறார்கள்; வாழ்க்கையில் ஏற்படுகிற சிக்கலை நீக்குவதில் பெரும்பாலானவர்கள் அக்கறையோ, ஆர்வமோ காட்டுவதில்லை.இயேசு, முகம்மதுநபி, காந்தியடிகள் ஒவ்வொரு காலத்தில் தோன்றி வெற்றி பெற்றார்கள் என்று பேசுகிறோம்; ஆனால், அன்றாட வாழ்க்கையில் மனிதர்கள் வெற்றி பெற்றார்களா என்ற கேள்விக்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும்? புத்தரை வாதில் வென்ற வரலாற்றை நமது சைவ இலக்கியத்தில் படித்துப் பரவசமுற்றுப் பாராட்டுகிறோமே தவிர, இன்றைய நடைமுறையில் - நாட்டில் "பெளத்தம்" - மக்கட் சமுதாயத்தை வென்றிருக்கிறது. மேதினியில் பல் வேறிடங்களுக்கும் சென்று பரவியிருக்கிறது என்ற உண்மையினைச் சைவ அன்பர்கள் அறிந்துகொள்ள மறுக்கிறார்கள்!
இலக்கியம் வேறு, சமயம் வேறு என்ற கொள்கையை நாம் ஒத்துக்கொள்ள முடியாது. தொல்காப்பியர் காலத்திலிருந்து, பாரதியார் காலம் வரையிலே குணரீதியான தத்துவ வழிபட்ட சமயம் ஒத்துக் கொள்ளப் பட்டுத்தான் வந்திருக்கிறது.
எண்ணத்தையும் சிந்தனையையும் ஒழுங்குபடுத்தி, அவற்றைச் சுவையூட்டத்தக்க வகையில் சொல்லுவது தான் இலக்கிய மரபு. சமுதாயத்தில் கருத்துப் புரட்சியை ஏற்படுத்திச் சிந்தனையைத் துரண்டிவிடுவதுதான் இலக்கியத்தின் விழுமிய பயன்.
நாம் இன்று "சமயம்” என்று கருதிக் கொண்டிருக்கிற பலவற்றில் (Form) உருவ அமைப்பு இருக்கிறதே தவிர உயிரோட்டம் இல்லை. எனவேதான் இன்றையச் சமயம், நீரில்லாத ஆறுபோல மணமில்லாத மலர் போலத் தோற்றம் அளிக்கிறது.
வாழ்க்கையின் தேவை வேறு; இலட்சியம் வேறு.இந்த வாழ்க்கையில் இன்பம் பெறப் பொருள் தேவை. அதற்காக பொருளே வாழ்க்கையின் இலட்சியம் என்று கருதிவிடலாமா? அதுபோல, சமய அனுபவம் நமது வாழ்க்கையின் இலட்சியமாக வேண்டும்; அந்த இலட்சியத்தைப் பெறப் பூவும், புனலும் சூடனும் பிறவும் தேவை. எனவே, தேவையைக் கடந்து இலட்சியத்தை அடைய நாம் முயற்சிக்க வேண்டும். சமய அனுபவத்தை விட்டு விலகிய ஒதுங்கிய இலக்கியம் தமிழில் உண்டா என்பது ஐயப்பாட்டிற்குறியது. அப்பரடிகள் "நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்" என்று பேசுகின்றார். ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, இந்தச் செய்தியை உலகுக்கு அறிவித்திருந்தால், ஏழாம் நூற்றாண்டிலேயே சுதந்திர உணர்வைத் தட்டி எழுப்பிய அப்பரடிகளின் புரட்சியை அகில உலகமும் அறிந்து கொண்டிருக்குமே! பாராட்டியிருக்குமே! வாழ்க்கையைச் சுவையாகக் கருதும் பிற்போக்குச் சமய உணர்வு மிகப் பிற்காலத்தில் எழுந்ததேயாகும்.
தொல்காப்பியர் இயற்கைச் சூழலுக்கு ஏற்ப நிலத்தைப் பிரித்தார்; அந்த நிலத்தில் வளர்கின்ற மரம், செடி, கொடிகள், மனித வாழ்க்கைப் பண்புகள், விலங்கினங்கள் இவற்றை வைத்து மட்டும் அவர் நிலங்களைப் பிரிக்கவில்லை. மக்கள் வழிபடும் தெய்வமும் அந்தப் பிரிவிற்குச் சூழலாக அமைகிறது "நீலமணி மிடற்று ஒருவன்போல மன்னுக பெரும நீயே" என்று வாழ்த்துகிறார் ஒளவையார்.
இவர் ஆரோக்கியத்திற்கான மருந்துகள் சாப்பிட்டும் செத்துப் போவார்கள்; வேறு சிலர் மருந்து சாப்பிடாமலும் கூட உயிரோடிருப்பார்கள். தேவர்களுக்கு மனிதர்களைப் பற்றியே அக்கறையில்லை. அவர்கள் தாம் விரும்புவனவற்றையே செய்வார்கள்.
"தேவர் அனையர் கயவர்; அவரும்
மேவன செய்தொழுக லான்”
என்று நகைச்சுவை ததும்பப் பேசுகிறார் திருவள்ளுவர். எண்ணிச் சிந்தித்துச் செயல்படுபவர்களே மனிதர்கள்! அப்படி எண்ணிச் சிந்தித்துப் பார்க்காமல் விரும்பிய வண்ணமே செயல்படுகின்ற 'தேவர்கள்' மீது அப்பரடிகளும் கோபப்படுகிறார் - 'வாழ்வதும் வானவர்கள் தாம் வாழ' என்ற வரி மூலம் மணிவாசகரும் தேவர்கள் மீது ஆத்திரப்படுகிறார். சாவதற்குரிய துன்பங்களை ஏற்று வாழ்பவர்கள் என்றும் வாழ்வர். "விண்ணோர்கள் அமுதுண்டும் சாவர், சிவபெருமான் நஞ்சுண்டும் சாகார்" என்கிறார் இளங்கோ அடிகள்.
நமது பன்னிரு திருமுறைகள் வேதம் என்ற அளவோடு மட்டும் இல்லை; மனித சமுதாயத்தின் வாழ்க்கை நெறி பற்றியும், பேசுகின்றன. புறச்சமயச் சடங்குகளை அப்பரடிகள் சாடிய அளவிற்கு வேறு யாரும் சாடியதில்லை. இருபதாம் நூற்றாண்டின் சமுதாய அமைப்பை - தேவையை ஏழாம் நூற்றாண்டிலேயே அப்பரடிகள் பேசினார்.
இறைவன் சந்நிதியில் பாடப்பெற்ற பாடல்கள் திருமுறைப் பாடல்கள்; திருமுறை பாடிய பெரியார்கள், இறைவன் சந்நிதியில் உலக விளையாட்டைப் பார்த்தார்கள். உலக மக்களின் இன்ப துன்பங்களைப் பார்த்தார்கள். எல்லா உலகமும் ஆனாய் நீயே என்று இறைவனிடத்திலேயே சொன்னார் அப்பரடிகள். நாட்டிலும், வீட்டிலும் மக்களிடத்திலும் சொல்லவேண்டிய செய்திகளை யெல்லாம் இறைவனிடத்துச் சென்று இறைவனையே சாட்சியாக வைத்துச் சொல்லுவது போலச் சொல்லியிருக்கிறார்கள்.
அப்பரடிகள் தோன்றிய காலம் சங்க காலத்தை விட மிகச் சிக்கலான காலம்; சமயப் பயன் மிகுந்திருந்த சங்க காலத்தில் சமயத்தைப் பற்றி அதிகம் பேசவேண்டி நிலை இல்லாமல் இருந்தது. சங்க காலத்திற்குப்பின் போரும் போர் உணர்வும் இருந்தன. போர் உணர்வில் வளர்ந்தவர்கள், போர் இல்லாதபோது தமக்குள்ளேயே ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டார்கள். ஒரு சமயம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் முன்னிலையில் மூவேந்தர்களும் கூடிப் பேசியிருக்கிறார்கள். ஒருவன் ஒருத்தி என்ற ஒழுக்க நெறிக்கு ஊறு நேர்ந்த காலத்தில் 'ஒருவன் ஒருத்தி' என்ற சித்தாந்தத்தை உணர்ந்த அம்மையப்பனைப் பாடிப் பரவினார் அப்பரடிகள்.
அப்பரடிகள் காலத்தில் கடவுள் நம்பிக்கை அருகியிருந்தமையால் அவர் முழுக்க முழுக்கச் சமயத்தையும். கடவுள் நம்பிக்கையையும் வளர்க்க வேண்டியதாயிற்று. எனவே அவர் கடவுள் நம்பிக்கையை அதிகம் வலியுறுத்தினார்.
முழுமையுடைய வாழ்வே சமய வாழ்வு. சமயச் சூழலில் முழுமையுடைய வாழ்க்கையை உருவாக்குவதற்கென்றே அமைந்தன. தொல்காப்பியர் காலத்துச் சமயத்தை விட அப்பரடிகள் காலத்துச் சமயம் உயர்ந்தது. நமது சமயம் காலத்தில் மூத்தது, கருத்தாலும் மூத்தது. உடலை வலுப்படுத்துவதற்கு உடற்பயிற்சியும் அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கு அறிவுப் பயிற்சியும் உள்ளன. அதுபோல உணர்வை சிந்தனை வழிப்படுத்துவதற்குரியது சமயப் பயிற்சி. இலக்கியமும், இலக்கியங்கண்ட சமயமும் நமது வாழ்க்கையில் அமையுமானால் வாழ்க்கையில் சிக்கலே இருக்காது. வாழ்க்கையில் அத்தகு இலக்கியம் மலர்ந்தால் சமுதாயத்தை வாழ்விக்கும் சமய மனம் வீசும்.
தனிமனிதனுக்கு உரிமை உண்டா இல்லையா? தனி மனிதனுக்கு உரிமையில்லாத நாட்டில் சுதந்திரம் எப்படியிருக்க முடியும்? சமுதாய உரிமை என்று பேசும் போதுகூட தனி மனித உரிமை ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். மழை மலையிலே பெய்து வாய்க்கால் வழியாக ஓடிக் கழனிகளுக்கு வந்து, மீண்டும் தனித்தனியாகப் பயிர்களுக்குத்தானே போகிறது. அது போல சமுதாய உரிமை - சோஷலிச உரிமை - பொது உரிமை என்று சொல்லுகிற போதும்கூட அது தனி மனிதனை வந்து சாரத்தான் செய்கிறது. சமுதாய உரிமை முதன்மைப்படுத்தப்படும்போது, தனிமனித உரிமையை மறுப்பதாகக் கொள்ளக்கூடாது. சமுதாயப் பிரிவிலே தனி மனித உரிமை நசுக்கப்பட வேண்டும் - பொசுக்கப்பட வேண்டும் - ஒடுக்கப்பட வேண்டுமென்று சொல்கிறார்கள். அப்படித் தனிமனித உரிமை நசுக்கப்பட்டு பொசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு விட்டால் அவர்களெல்லாம் மிருகக்காட்சிக் கூண்டிலே போய் வாழ்வதா? தனிமனித உரிமை நசுக்கப் படுவதோ - பொசுக்கப்படுவதோ - ஒடுக்கப்படுவதோ நமது இலட்சியமல்ல. தனிமனித உரிமை சமுதாயத்திற்குக் கேடு தரும் என்ற ஓர் எண்ணம் வருகிறபோது, தனிமனித உரிமையை ஓர் எல்லைக்குள் கட்டுப்படுத்துவதுதானே தவிர தனிமனித உரிமையை நசுக்குவதும் பொசுக்குவதும் ஒடுக்குவதும் அல்ல சமுதாயத்தின் இயல்பு. எனவே சுதந்திர நாட்டில் முதன்மைபடுத்தக் கூடியது தனி மனித உரிமையா, சமுதாய உரிமையா? இந்தக் கேள்வியே எப்பொழுது எழும் என்று கருதுகிறீர்கள்? ஓர் எடுத்துக் காட்டுக் கூறினால் நன்றாகப் புரியும்.
ஒரு மிராசுதார் இருக்கிறார். அவருக்கு உள்ளூரிலே இருபத்தைந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. மற்ற ஊர்களிலும் அவருக்கு நிலபுலன்கள் உண்டு. உள்ளூரிலே அவர் மாடு கன்றுகள் வைத்திருக்கிறார். தமது 25 ஏக்கர் நிலத்தில் சொந்தப்பண்ணை வைத்தால் அவருக்கு நிறைய வைக்கோல் கிடைக்கும் எனவே அவர் அந்த 25 ஏக்கர் நிலத்தில் சொந்தப் பண்ணை வைக்க விரும்புகிறார். அவரைச் சார்ந்தோரும் அதையேதான் சொல்லுகிறார்கள். அதே நேரத்தில் நிலமில்லாத விவசாயிகள் பலர் ஊரிலே இருக்கிறார்கள்.
மிராசுதாருக்குத் தேவை வைக்கோல். அவருக்கு வேண்டிய நெல் மற்ற இடங்களிலிருந்து வந்துவிடுகிறது. மிராசுதாருக்கு மாடு கன்றுகளுக்கு வேண்டிய வைக்கோல் தேவை. அந்த ஊரில் இருக்கிற இருபது முப்பது விவசாயிகளுக்கு, ஆம் நிலமில்லாத அந்த விவசாயிகளுக்கு உழ நிலம் தேவை. உணவுக்கு நெல் தேவை இப்பொழுது எது முக்கியம் என்று பாருங்கள். இங்கு இவருக்குத் தேவை வைக்கோல்; அவர்களுக்குத் தேவை நெல் - இந்த நிலையில் தனிமனிதரான மிராசுதாரின் சொந்தப் பண்ணையை அனுமதிப்பதா? நிலமில்லாத அந்த விவசாயிகள் நிலத்தை உழ அனுமதிப்பதா? தனிமனிதருடைய மாடு கன்றுகளுக்கு வைக்கோல் தேவையிருக்கிறதே, அதைவிட இருபது முப்பது நிலமில்லாத விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு உழுவதற்கு நிலத்தைக் கொடுப்பதுதான் சரியானது. நியாயமானது. இம்மாதிரி ஒரு குறிப்பிட்ட கட்டம் வரும்போது தனிமனித உரிமை முதன்மையானதா சமுதாய உரிமை முதன்மையானதா என்பதுதான் பிரச்னை.
இனி, தனி மனித உரிமை முக்கியமா? முக்கியமில்லையா என்பதுகூடப் பேச்சல்ல. தனிமனித உரிமையைக் காப்பாற்றுவதற்குத்தான் சமுதாயமே தோன்றியது. எனினும் தனிமனித உரிமை எந்த அளவோடு இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு வரையறை தேவை.
தனிமனித உரிமை, தனிமனித வளர்ச்சி என்றெல்லாம் கூறுகிறார்கள். தனிமனித உரிமை வேறு - தனிமனித வளர்ச்சி வேறு. தனிமனித வளர்ச்சி பாராட்டற்குரியதுதான். ஆனால் ஒருவர் ஓராயிரம் வேலி நிலத்திற்கு மிராசுதாராக இருக்க அவரே ஏகபோகமாக அந்தப் பெருநிலத்தை வைத்து அனுபவித்துக்கொள்ள அந்தத் தனிமனித வளர்ச்சி பயன்படக்கூடாது.
தனிமனிதனுடைய வளர்ச்சி பரிணாம வளர்ச்சி இல்லாமல் சமுதாயம் நலம்பெற முடியாது. ஆனாலும் தனிமனித வளர்ச்சியால் சமுதாயத்திற்கு ஒரு தீங்கு வருகிறபொழுது நிச்சயமாக அதனை ஓர் அளவிற்குள், எல்லைக்குள் உட்படுத்தியாக வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை.தனிமனித வளர்ச்சி மிகவும் முக்கியமானது. தனிமனித உரிமை நசுக்கப்பட்டால் ஒரு சமுதாயம் வாழமுடியாது. எனவே தனிமனித உரிமை என்றும் நசுக்கப்படாது-நசுக்கப்பட விடக் கூடாது. சோஷலிச பாணி சமுதாயத்தில் தனிமனித உரிமை சாவதாகக் கருதக்கூடாது. மாறாகத் தனிமனித உரிமை காப்பாற்றப்படும்.
தனிமனித உரிமை நசுக்கப்பட வேண்டும் - பொசுக்கப்பட வேண்டும் - பறிக்கப்பட வேண்டும் என்பது நமது சோஷலிச சமுதாயத்தின் இலட்சியமன்று. தனிமனித உரிமை நசுக்கப்பட்டு விட்டால் - ஒடுக்கப்பட்டு விட்டால் - பிடுங்கப்பட்டு விட்டால் சமுதாயத்தில் ஒரு தேக்கம் - சூனியம் ஏற்பட்டுவிடும். தனிமனித ஆசைகள் - உணர்வுகள் தூண்டிவிடப்பட வேண்டும். இரண்டு சட்டைகள் போடுகிற இடத்தில் நான்கு சட்டைப் போட வேண்டும் என்ற ஆசை வருகிறது; அது தேசத்தின் மறுமலர்ச்சிக்கு அடையாளம்.
“ஏதோ சினிமா பார்த்து தகர டப்பாப் பாட்டுக் கேட்பதற்குப் பதிலாக வானொலி கேட்க வேண்டும் என்ற ஆசை தோன்றியிருக்கிறது. அது வளர்ச்சியின் அடையாளம்” நம்முடைய நாட்டில் எல்லோரும் எல்லா நலன்களும் பெற்று வாழ வேண்டும் என்பதுதான் நமது இலட்சியம். இதனால் சமுதாய உரிமை வளர்கின்ற போது தனிமனித உரிமை அழிந்து போகாது. ஆனாலும் நாட்டுக்குப் பயன்படும் பணத்தைத் தனியொருவன் தன் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிவைப்பதைச் சமுதாயம் அனுமதிக்காது.
தனிமனிதனுடைய சிந்தனையுரிமையை - அறிவுரிமையை அரசு பிடுங்க முடியுமா? தனிமனிதனுடைய பேச்சுரிமைக்கு மரியாதை கொடுப்பது நமது சுதந்திர நாடுதானே! இங்கு சமுதாய உரிமைக்குக் கேடுதரும் தனி மனித உரிமை கட்டுப்படுத்தப்படும். சமுதாய உரிமைக்குக் கேடு தராத தனிமனித உரிமைகள் உயிரினும் இனிதாகப் போற்றப்படும். ஆம், சமுதாயத்திற்குக் கேடு பயக்காத - சமுதாயத்தை அரித்துத் தின்னாத தனிமனித உரிமைகள் தெய்வச் சிலைகளைப் போல தூய்மையாகப் போற்றிக் காப்பாற்றப்படும். இதுதான் இந்த நாட்டின் பொதுவிதி. இதற்காகத்தான் இந்த நாடு சுதந்திரம் பெற்றது.
"இந்த நாட்டில் இருக்கிற எல்லா மக்களும் சாதி, இன, மொழி, மத, கட்சி வேறுபாடுகளின்றி எல்லாவிதமான உரிமைகளையும் இந்த நாட்டில் பெறுவார்கள்” என்பதுதான் நமது அரசியல் சாசனம் - அரசியல் வேதம். அரசியல் சாசனம் வழங்கிய இந்த தனிமனித உரிமையை இனி, இந்த உலகத்தில் யாராலும் பறிக்க முடியாது என்றாகி விட்டது. இனி தனி மனித உரிமைக்கு ஆபத்து வரப்போவதேயில்லை. ஆனால், தனிமனிதன் திறமையினால் - போட்டியினால் - வலிமையினால்- வாய்ப்பினால் சமுதாயத்தினுடைய பெருவாரியான உரிமைகளை வாரிச்சுருட்டி முடக்கிக் கொள்ளுவதை அனுமதிக்க முடியாது.
நம்முடைய சுதந்திர நாட்டில் தனிமனித உரிமை போற்றிப் பாதுகாக்கக் கூடியது. ஆனாலும், சமுதாய உரிமைக்குக் கேடுவரும்போது தனிமனித உரிமையைப் புறக் கணித்துச் சமுதாய உரிமைக்குத்தான் முதன்மை தருவோம் - தரவேண்டும் - அதுதான் நியதி - அதுதான் நியாயம் - அதுதான் ஒழுக்கம் - அதுதான் தருமம் - அதுதான் கடவுளின் நெறி!
மனிதர்கள் உணர்ச்சிகளின் நிலைக்களன்; உணர்ச்சி உயர்வையும் தரும்; தாழ்வையும் தரும். உயர்வும் தாழ்வும் வருவதற்கு உணர்ச்சியே பொறுப்பல்ல. உணர்ச்சியைப் பற்றி நிற்கின்ற அறிவுச்சார்பே காரணம். அறிவே முழுக்க முழுக்கக் காரணம் என்று கூறிவிட முடியுமா? அறிவையும் ஆட்சி செய்யக்கூடிய ஆசைக் களன்களே காரணமாகும். வாழ்க்கை என்பது பல்வேறு முரண்பட்ட உணர்வுகளாலும், அனுபவங்களும் ஆகிய ஒன்றேயாகும். இத்தகு வாழ்க்கை யனுபவங்களைப் பலருக்குத் தெரிவிக்கத் தோன்றிய சாதனமே எழுத்து.
வாழ்க்கை என்பது ஒரு நுண்மாண்கலை, உடல் தங்கி உலவுவோரெல்லாம் வாழ்ந்தவர்களாகி விடமாட்டார்கள். அதனாலன்றோ தமிழ்மறை "வாழ்வாங்கு வாழ்தல்" என்று பேசுகிறது.
தனிமனிதர்களுக்கும் சமுதாயத்திற்கும், தண்ணீர்க்கும் தாமரைக்கும், மண்ணுக்கும் மரத்திற்கும் இருக்கும் தொடர்பு போல இணைந்த தொடர்பு உண்டு. தனிமனித அனுபவங்களிலிருந்தே சமுதாயம் வளர்கிறது; வளம் பெறுகிறது. சமுதாயச் சூழலே தனி மனிதர்களின் அனுபவத்திற்குத் தூண்டு கோலாக இருக்கிறது. சமுதாய அரங்கில், எழுத்தாளன் மற்ற எல்லோரையும் விட பெரும் பொறுப்பைத் தாங்குகிறவனாவான். அவனுடைய அனுபவம் எவ்வளவுக்கெவ்வளவு தரமானதாகவும் தகுதியுடையதாகவும் இருக்கிறதோ, அந்த அளவுக்கு நாடும் உயரும். அதனாலன்றோ, சங்க காலத்துச் சான்றோனாகிய கபிலனை "புலனழுக்கற்ற அந்தணாளன்" என்று ஒரு புலவர் பாராட்டினார்.
புலமை, புலவர் என்ற சொல்வழக்குகள் புலன்களை உழுது பண்படுத்திய சான்றோர் என்பதைக் குறிப்பனவே. புலவர் என்பதை அறிவுத் தொடர்புடைய சொல்லாக மட்டுமே கருதுவதற்கிடமில்லை. அறிவோடு, அநுபவமும் நிறைந்தது என்ற விளக்கமே பொருந்தும்.
மொழியறிவும் எழுத்துத் திறனும் மட்டும் எழுத்தாளனுக்கு இருந்தால் போதா. உள்ளார்ந்த சால்பு தழுவிய அனுபவமும் தேவை. நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் நிழல்தரும் மரங்கள் வைத்து வளர்ப்பது மரபு. அம்மரத்தின் நிழல் அனுபவிப்பதற்கும், படுத்து உறங்குவதற்கும் இனிமையாக இருக்கும். எனினும், அந்த மரம் அனுபவித்து உறங்குவதற்காக வைத்து வளர்க்கப் பெற்றதல்ல; வழிப் பயணத்தில் களைப்பு ஏற்படாமல், இனிமை தழுவிய சூழலில் நடைபயிலவேயாகும். அதுபோலவே, வாழ்க்கை இலட்சியத்தை நோக்கி, நடைபோடும் மனித சமுதாயத்திற்குச் சிறந்த உணர்வுகளைத் தந்து, அவற்றின் வழி அனுபவப்படுத்த எழுத்தாளர் படைக்கும் இலக்கியங்களில் எழுத்துத் திறனும், திறனைச் சார்ந்த சுவைகளும் வாழ்க்கையில் களைப்பு ஏற்படாமல் இருப்பதற்கேயாகும். ஆனால் காலப் போக்கில் எழுத்தாளரின் அனுபவத்தைவிட எழுத்துத் திறனே மேலோங்கி நிற்கத் தலைப்பட்டு விட்டது. அது மட்டுமல்ல. யாருக்காக எழுத்துப் படைக்கப்பட்டதோ அவர்கள் படித்து அனுபவிப்பதற்கு ஏற்ற முறையில்லாமல் திறமையைக் காட்டுகின்ற முறையில் கடுந்தமிழ் நடையில் சில, இலக்கியங்கள் தோன்றின.
எழுத்தாளன் சமுதாய அரங்கில் ஒரு மிக முக்கியமான பொறுப்புள்ள இடத்தைப் பெறுகிறான். மனிதர்கள் எல்லோரும் பிறப்பால் சம நிலையுடையவர்களேயாம். எனினும், அறிவும், அனுபவமும் எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.
சமுதாயப் பெரு வெள்ளத்தில் சிலர் அறிவிலும் அனுபவத்திலும் சிறந்து தலைமைக்கும் வழிபாட்டிற்கும் உரியராக விளங்குவது தவிர்க்க முடியாதது. உலகியற்கையும் கூட இந்த வரிசையில் சிறந்த எழுத்தாளர்கள் வரக்கூடும். கோடானு கோடி மக்களைத் தமது அனுபவத்தால் எழுந்த இலக்கியப் படைப்புக்களின் மூலம் நல்வழி நடத்திச் செல்லுபன் எழுத்தாளன். பள்ளத்திலிருந்து மேட்டுக்கு அழைத்துவந்து வழி நடத்திச் செல்லுபவன் எழுத்தாளன். அவன் தொழிலாளியுமல்ல - தொழில் பண்ணுபவனுமல்ல. எழுத்தாளன் பணம் சேர்க்கக்கூடாது. அவன் சமுதாயத்தின் முன்னோடித் தியாகி. அவன் காசை எதிர்பார்ப்பானாகில், கருத்தைக் காசு கொடுப்பவனுக்கேற்ப மாற்றிக் கொள்வான். பொருள் படைத்தவர்களைப் புகழ்ந்து இச்சை பேசும் இலக்கியங்களைப் படைக்கத் தொடங்கி விடுவான். அவனால் ஏற்றம் பெறத்தக்க நிலையில் உள்ள கோடானு கோடி மக்களை வஞ்சித்து விடுவான். சங்க காலப் புலவர்கள் பலர் வறியவர்களாக இருந்தார்கள் என்று வரலாறும் இலக்கியங்களும் பேசுகின்றன. புலவர்களுக்கு வறுமை தொடர்புடையது என்று சிலர் ஏளனமாகவும் பலம் வருந்துதற்குரிய முறையிலும் சொல்லிக் காட்டுவார்கள். சங்ககாலப் புலவர்கள் வறியவர்கள் அல்லர். அவர்கள் விரும்பியிருந்தால் வளங்கொழிக்க வாழ்ந்திருக்க முடியும். அவர்கள் வறுமையை வலிய ஏற்றுக் கொண்டார்கள். அதனாலேயே அவர்கள் நடுநிலை பிறழாமல் அறத்தை எடுத்துக்கூற முடிந்தது. ஆதலால் எழுத்தாளர்கள் விருப்பும் வெறுப்பும், காய்தலும் உவத்தலுமின்றி இந்த நாட்டு மக்களின் அனுபவத்திற்கும் முன்னேற்றத்திற்கும் உரிய எழுத்துக்களைத் தோற்றுவிக்க வேண்டும்.
ஒரு சமுதாயத்தினுடைய எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் சமுதாயத்தில் பரவும் கருத்துக்களே காரணமாகும். ஆதலால் எழுத்தாளர்கள் இருந்த இடத்திலேயே இருந்துவிடாமல், உலகத்தின் போக்கு, காலத்தின் தேவை இவற்றைக் கருதி எழுத்தாளர்களைப் படைக்க வேண்டும். சென்ற நூற்றாண்டுத் தமிழ் எழுத்துலகில், 'முன்னோர் சொல்லைப் பொன்னேபோல் போற்றுவதும்' என்ற மனப்பான்மையில் பழைய இலக்கியங்களையே திருப்பித் திருப்பி வேறு வேறு பாவினங்களிலும் உரைநடையிலும் சொல்லிவரும் வழக்கே பெரு வழக்காக இருந்தது. "இறந்தது விலக்கல் எதிரது போற்றல்” என்பது இலக்கண விதியாக இருந்தும், மரபியல் மயக்கத்திலே எதிரது போற்றும் முயற்சியைச் செயற்படுத்தவில்லை. மரபுவழிப் போற்றுதல் இன்றியமையாத ஒன்றேயாம். ஆனாலும், வாழ்க்கையில் அடிப்படைக் கூறுகளுக்கே மரபியல் பொருந்தும். செயல் முறைகளிலும், வாழ்க்கை முறையிலும் மாறுபாடுகள் தோன்றுவது தவிர்க்க முடியாதது. தேவையானதும் கூட.
மாறுதலும் முன்னேறுதலும் சமுதாயத்தின் உயிர்ப் பண்பு. இவ்வுயிர்ப்பண்பை இழந்த சமுதாயம் வளராது வாழாது ஓட்டம் தடைப்பட்டு நின்ற குட்டை போல் தேங்கிக் கெட்டுவிடும். எழுத்தாளனின் மிக முக்கியப் பொறுப்பு இந்த மாறுதல் உணர்வையும் முன்னேற்ற உணர்ச்சியையும் மக்கட்குத் தருவது.
மனித சமுதாயத்தில் குறுகிய இனமொழி நிலப் பற்றுக்கள் ஆட்சி செய்வதைப் பார்க்கிறோம். மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு இந்தக் குறுகிய உணர்வுகள் பெரும் முட்டுக்கட்டை. மேலும், அன்புக்குப் பதில் பகையை வளர்த்து உறவைக் கெடுத்து மனித சமுதாயத்தை அழித்து விடக் கூடியனவுமாகும். இந்த உணர்வுகளினின்றும் மனித சமுதாயத்தை விடுதலை செய்வது எழுத்தாளரின் தலையாய கடமை. தமிழ் எழுத்துலகில் சங்ககாலம் தொட்டு, இந்த உணர்வுகளை எதிர்த்துக் கருத்துக்கள் வற்புறுத்தப் பெற்று வந்திருந்தும் கூட அந்த ஒருமைப்பாட்டுணர்வு மனித சமுதாயத்தில் பூரணமாக இடம் பெறவில்லை. "யாதும் ஊரே யாவரும் கேளீர்" "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" "உலகத்தோடு ஒட்ட ஒழுகல்" ஆகிய கருத்துக்களடங்கிய எழுத்துக்களுக்கு விரிவுரைகளும், விளக்க உரைகளும் நாட்டிலே நடமாடினவே தவிர வாழ்க்கை முறைக்கு வரவில்லை. நாகரிகத்தின் சிறப்பு தூய்மை என்றெல்லாம் காரணம் காட்டப்பெற்றாலும் கூட அதன் பின்னணி ஆதிக்க உணர்ச்சியேயாகும். மனித சமுதாயத்தின் வரலாற்றில் பெரும் பகுதியை ஒரு சில மனிதர்களின் ஆதிக்க உணர்ச்சியே போர் மயமாக்கி விட்டதைப் பார்க்கிறோம். இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞான நூற்றாண்டு. இல்லை. அப்படிச் சொல்லுவது கூட சரியில்லை. விஞ்ஞானம் என்பது வாழ்க்கையை வளர்த்து மனித சமுதாயத்தை மேனிலைக்கு அழைத்துச் செல்லப் பயன்படுத்துவதேயாகும். ஆனால் இன்று அது திசை தவறி மக்களைக் கொன்று குவிக்கும் குண்டுகளைக் குவிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது. ஆதலால், மனித சமுதாயத்தின் ஒருமைப்பாட்டு வளர்ச்சி சென்ற நூற்றாண்டைவிட இந்த நூற்றாண்டுக்கு இன்றியமையாத் தேவையாகும். குறிப்பாக பாரத நாடு பல்வேறு மொழி பேசும் மக்களும், மதச்சார்புடைய மக்களும் வாழும் நாடு. இங்கு முளைத்த குறுகிய பிரிவினை யுணர்வுகளினாலேயே இந்த நாடு அடிமைப்பட்டது. நமது நாட்டின் சுதந்திரம் நமக்கு உயிரினும் இனியது. சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு உணர்வினாற் சிறந்த ஒருமைப்பாடு இந்த நாட்டு மக்கட்குத் தேவை. குறுகிய பற்றுக்கள் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கிப் பாயும் தண்ணீர்போல, குறுகிய பற்றுக்களைக் கடந்து, வாழ்வது பள்ளத்திலிருந்து மேட்டிற்குத் தண்ணிரை ஏற்றுவதுபோல. மேட்டிலிருந்து பள்ளத்திற்கு யாரும் தண்ணீரை இறைப்பதில்லை. பள்ளத்திலிருந்து மேட்டிற்கு இறைப்பதே மரபு. இதற்கே முயற்சி என்று பெயர். இன்றும் சிலர் ஒருமைப்பாட்டுணர்வுக்கு விரோதமாக குறிகியபற்றின் வழி மனிதர்களை அழைத்துச் செல்ல எழுதுகிறார்கள். அது இலட்சியம் தவறிய எழுத்து. இன்றைய இந்தியத் தமிழ் எழுத்தாளர் கடமை இந்த நாட்டு மக்களிடையே உளங்கலந்த உணர்வினாலாய ஒருமைப்பாட்டுணர்வை வளர்க்க உதவும்படி எழுதுவதேயாகும்.
மனிதர்கள் எல்லோரும் இன்புற்று வாழவே இவ்வையகம். சிலர் வாழ்வதும் பலர் வாழ்விழந்து அல்லற்படுவதும் நீதியுமாகாது; நியாயமுமாகாது; ஒழுக்கமுமாகாது. நீதி என்ற சொல் சமய இயலோடு தொடர்புடையது. நியாயம் என்ற சொல் அரசியலோடு தொடர்புடையது. ஒழுக்கம் என்ற சொல் சமுதாய இயலோடு தொடர்புடையது. இவ்வாறு முத்துறையிலும் ஏற்றுக் கொள்ளப் படாத ஒரு வாழ்க்கை முறை சமுதாயத்தில் நிலவுவதைப் பார்க்கிறோம்.
தமிழகத்தில் சென்ற தலைமுறையின் எழுத்தாளர்கள் கூட இந்தத் தரங்கெட்ட சமுதாய அமைப்பை நியாயப்படுத்த முயற்சித்த வெட்கக் கேட்டை என்னென்று சொல்வது! ஐயகோ! பாவம் எழுத்தாளன் மட்டுமா? சமய வழிப் பயின்றவர்கள்கூட அநீதியையும், அநியாயத்தையும் கட்டிக் காக்க முயற்சித்தனர் என்பதை எண்ணிப் பார்க்கும் போது வேதனையே பெருகுகிறது. இன்றைய பாரத சமுதாயத்தில் உடனடியாகத் தேவை எல்லோரும் இன்புற்று வாழுகிற சமநிலை சம வாய்ப்புச் சமுதாயத்தை உருவாக்குவதுதான். இதையே இன்றைய நமது ஆட்சித் தலைவர்கள் "சோஷலிச சமுதாய அமைப்பு” என்று கூறுகிறார்கள். இத்தகையதொரு சமுதாய அமைப்பை 300 ஆண்டுகட்கு முன்பே கம்பன் பேசியிருக்கிறான். இத்துறையில் வள்ளுவனைவிடக் கம்பன் மிஞ்சிவிட்டான். திருவள்ளுவர் "இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று” என்றார். ஆனால், கம்பனோ, "கொள்வார் இலாமையால் கொடுப்பார்களும் இல்லை மாதோ" என்று பேசுகிறான். இன்றைய இந்திய எழுத்துலகில் செல்வாக்குப் பெற்றிருப்பவர்கள் பெரும்பாலும் இக்கொள்கைக்கு முரண்பட்டவர்களாகவே இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறோம். இன்றையப் பத்திரிகை உலகில் ஆதிக்கம் செலுத்தும் பல பத்திரிகைகள் வகுப்புவாதத்திற்கும் சுரண்டி வாழும் முதலாளித்துவத்திற்கும் துதிபாடும் வகையிலேயே இருப்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள் என்றே கருதுகிறேன். அதுமட்டுமா? தருமத்தையும் மதத்தையும் சாட்சிக்கு இழுத்துக் கொள்ளும் அலங்கோலப் போக்கையும் பார்க்கிறோம். எல்லோரும் இன்புற்று வாழும் வாழ்க்கைக்கு மக்களைத் தயார் செய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள். இக்கருத்துக்கு முரணான பிற்போக்குச் சக்திகளின் மூதேவித் தன்மையை மக்களின் முன்னே அம்பலப்படுத்தத் தவறாதீர்கள். "தனியொருவனுக்கு உணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று முழங்கிய கவிஞன் உங்கள் முன்னோடி என்பதை மறந்துவிடாதீர்கள்.
நம்முடைய தமிழ் இலக்கிய வரலாறு காலங்கடந்தது. தமிழ் இலக்கிய வரலாறு மூவாயிரம் ஆண்டு பழமையுடையது. தமிழ், வாழ்வில் கலந்த இலக்கிய வளம்பெற்ற மொழி என்னும், பழந்தமிழ்ப் புலவர்கள் காலத்தின் தேவையறிந்து இலக்கியம் செய்ததைப் பல இன்றைய தமிழ் எழுத்தாளர்களும், இன்றையத் தேவையறிந்து எழுத்தை வளர்க்க வேண்டும். நாம் வாழ்வது அறிவியல் நூற்றாண்டு. எனினும் இன்னும் தமிழில் போதிய அறிவியல் நூல்கள் வரவில்லை. அறிவியலைத் தமிழில் கொண்டுவர முடியுமா முடியாதா என்ற கேள்வியும் தயக்கமும் நம்மிடமிருக்கிறது. இது ஒரு பெரும் குறை. தமிழில் அறிவியல், தொழிலியல், பொருளியல், உளவியல் நூல்கள் நிறைய வெளிவர வேண்டும். அப்பொழுதே தமிழ் வளரும், தமிழர்களும் வளர முடியும். இத்துறையில் எழுதிக் குவிக்கும் எழுத்தாளர்கள் எண்ணற்ற பேர்கள் தமிழன்னைக்குத் தேவை. இத்துறை எழுத்தாளர்கள் தமிழில் தயாராவதற்குத் தமிழ் பயிற்சி மொழியாக வேண்டும். அரசாங்கம் எவ்விதமான தயக்கமுமின்றித் தமிழைப் பயிற்சி மொழியாக்க வேண்டும். தமிழ் எழுத்தாளர்கள் இத்துறையில் உழைப்பதன் மூலமே தமிழைச் சாகாமல் காப்பாற்ற முடியும்.
மனித வாழ்வின் இறுதி இலட்சியம் எல்லாவிதமான உணர்வுகளினின்றும் விடுதலைபெற்று அமைதி நிறைந்த இன்ப அன்பிலே திளைப்பதுதான். இந்த, விடுதலையைத் தருவதுதான் சமயநெறி. இத்தகு சமயச் சார்பு நிரம்பிய வாழ்க்கையில் மனித சமுதாயம் வளராது போனால் சுட்டதோசையைத் திரும்பத் திரும்பச் சுடுவது போல அவல உணர்வுகளிலே அழுந்தி வாழ்க்கையே துன்பச் சுமையாகி விடும். ஆத்திக நாத்திகச் சண்டைகள் செய் முறைகள் சடங்குகளைப் பற்றியனவாக இருந்து, மாறுதலையும் வளர்ச்சியையும் தரும் வகையில் இருக்கலாமே தவிர அடிப்படைச் சமய உணர்வையே பாதிப்பதாக இருக்கக் கூடாது. சமய வாழ்வு தூய்மையான ஓர் இலட்சியக் கோடு. அந்த இலட்சியக் கோட்டை நாம் அழித்து விடுவதினால் மனித சமுதாயத்தையே இலட்சிய நோக்கில்லாததாக்கி விடுகிறோம் என்பதை. நாம் மறந்துவிடக்கூடாது. அப்பரடிகள் இத்தகு தூய இலட்சியக் கோட்டையே சமய நெறியெனக் காட்டினார். அந்நெறியே காந்தியடிகள் நின்று வாழ்ந்த வாழ்க்கை, தமிழ்த் தந்தை திரு.வி.க. போற்றிய நெறியும் அதுவே. ஆதலால், பண்பட்ட வாழ்க்கையோடியைந்த சமயப் பண்பை வளர்க்கும் வகையில் எழுத்துக்கள் வளர வேண்டும்
பாரத இந்தியாவின் பண்டைய வரலாறு மற்ற எதனையும்விட இந்திய ஒற்றுமைதான் இன்றியமையாத ஒன்று என்பதைத் தெளிவாகப் போதிக்கிறது. இந்தியத் தேசிய ஒற்றுமையில்தான் இந்தியாவின் அரசியல் பொருளாதாரத்தின் பிரகாசமான எதிர்காலம் திகழவிருக்கிறது.
எந்தச் சாதியாக இருந்தாலும் சரி; எப்படிப்பட்ட இனத்தினராக இருந்தாலும் சரி அல்லது சமயத்தவராக இருந்தாலும் சரி இந்தியாவைப் பிளவுபடுத்தும் எந்த நோக்கத்தையும் நாம் அனுமதிக்க முடியாது. இந்திய ஒற்றுமையே இந்தியர் மதிக்க ஒவ்வொருவரின் முதன்மையான குறிக்கோளாக இருக்கவேண்டும் என்பதை மக்கள் மன்றத்தில் கற்பித்தாக வேண்டும்.
மொழி இன அடிப்படையில் இந்தியாவிலிருந்து தனித்துப் பிரிந்து போகவேண்டும் என்கிற கொள்கை மக்கள் மன்றத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளது என்பது உண்மைதான்; இதில் ஐயத்திற்கு இடமில்லை என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.
ஆனால், பிரிவினை சக்தி பிரமாதமாக வளர்ந்துவிட்டதே என்று நாம் மனத்தளர்ச்சி கொள்ளும் நிலை எதுவும் இல்லை. காரணம், இந்திய ஒற்றுமை உணர்வும் ஆற்றல் பெற்று வலிவுடையதாகத்தான் இருக்கிறது. ஆனால், நல்லது நிகழவேண்டும் என்பதற்காக இதில் அதிக அளவிற்கு நம்பிக்கை வைக்காமல் இருக்கலாம். பயனளிக்கும் விதத்தில் பாரத ஒற்றுமை சக்தியைப் பலப்படுத்த நமது எல்லா ஆற்றலையும் ஒருங்கு திரட்ட வேண்டும்.
மொழிப் பிரச்னை இந்திய ஒற்றுமையைச் சிதைக்கும் முக்கியமான பிரச்னை என்பதை யாராலும் மறுத்துக் கூற முடியாது. தங்களின் நாகரிகப் பண்பாட்டில் தாய்மொழியில் மோகித்து இருப்பதும் நம்பிக்கை வைப்பதும் மனித இயல்பேயாகும்.
ஆகவே, இந்திய ஒருமைப்பாட்டை விரும்பும் நாம் துரபிமானம் இன்றி எவருக்கும் கேடு இல்லாத வகையில் மொழிப் பிரச்னையை அணுகியாகவேண்டும். இயற்கையை எதிர்க்கும் எந்த நடவடிக்கையும் பயனளிக்காது. மாறாகத் தோல்வியைத்தான் அணைக்கும். அதுவே, மாநில அரசும் மத்திய அரசும் பிரதேச மொழிகளை எல்லா வகைகளிலேயும் முன்னேறச் செய்ய தீவிரமான நடவடிக்கைகள் மேற் கொண்டாக வேண்டும்.
குறிப்பாக உங்களின் கருணை வாய்ந்த கவனத்திற்கு ஒன்றைக்கூற விரும்புகிறோம். இந்தி மொழி தங்கள் மீது திணிக்கப்படுமோ என்ற அச்ச உணர்ச்சி தமிழ் மக்கள் மத்தியில் பரந்து பரவி இருக்கிறது. அதிக அளவுக்கு இந்தி மொழியைப் பயன்படுத்தியாக வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற அச்சமும், அதன் விளைவாக மற்ற மாநில மொழி களைக் காட்டிலும் அதிக ஆற்றலையும் வளப்பத்தையும் பெற்று பிரதேச மொழிகளை இந்தி மொழி ஆதிக்கம் செலுத்துமோ என்ற பீதியும் தமிழ் மக்களிடை நிலவிக் கொண்டிருக்கிறது. மொழி ஆதிக்கத்தின் காரணமாக அரசியல் நிலையிலும் பொருளாதார நிலையிலும் இழப்புகளை ஏற்க வேண்டிய நிலை நேருமோ என்ற அச்ச உணர்வு தமிழரிடத்தில் பரவிக் கிடக்கிறது.
ஆனால், மேற்கண்ட அச்சத்திற்கும் பீதிக்கும் எந்தவித இடமும் இல்லை; வாய்ப்பும் கிடையாது. காரணம், நமது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தனிப்பட்டவர் வளர்ச்சிக்கும் எல்லா இனத்திற்கும் நல்ல முழுமையான பாதுகாப்பளித்திருக்கிறது.
மாநில அளவில் பிரதேச மொழியான தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கவும் கல்வித்துறையில் தமிழைப் பயிற்சி மொழியாக்கவும் அரசினர் கொள்கை வகுத்து நடைமுறைப்படுத்துவதாக இருந்தபோதிலும் இந்த வகையில் பலபடப் பாராட்டும் விதத்தில் முன்னேற்றமோ தேர்ச்சியோ இல்லை என்றே கூறலாம். இந்தியாவில் பேசப்படும் இந்தி தவிர்த்த மற்ற பிரதேச மொழிகள் வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றன; நல்ல முறையில் வளர்ந்து செழித்தோங்கி இருக்கின்றன என்ற கருத்தை வேறுபட்ட மொழி பேசும் இனத்தவரின் உள்ளத்தில் பதியவைத்து, நம்பிக்கை ஊட்ட வேண்டியது நமது முதல் கடமையாக இருத்தல் வேண்டும். இதில் நாம் வெற்றி காண்போமானால், மொழியின் பெயரால் இந்திய தேசிய ஒருமைப்பாட்டை எதிர்க்கும் தீய சக்தியை முறியடித்துவிட முடியும்.
இந்திய ஒற்றுமையைக் குலைக்கும் சக்தியைத் தடுத்து முறியடிக்க கீழ்க்கண்ட நடைமுறை வேலைகளில் ஈடுபடலாம் என சில ஆலோசனைகளைத் தெரிவிக்கிறோம்.அலுவலக வேலைகள் அனைத்திற்கும் பிரதேச மொழிகளைப் பயன்படுத்துவதற்கும் கல்வித் துறையில் பிரதேச மொழிகளைப் பயிற்று மொழிகளாக்குவதற்கும் எல்லா மாநில அரசுகளும் மத்திய அரசின் உதவியோடு தீவிர நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த வேலை நிறைவெய்த வேண்டும்.
அறிவியலில் அன்றைய நாள்வரை அடைந்துள்ள விஞ்ஞான அறிவையும் பொருளியல் மேம்பாட்டையும் தொழில் வளர்ச்சியையும் ஒவ்வொரு பிரதேச மொழியிலும் களஞ்சியமாக்க வேண்டும்.
மத்திய அரசாங்க வேலைக்காகத் தேர்வு எழுதும் பல்வேறுபட்ட பிரதேச மொழி மக்களை, இந்தி மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற கேடு பயக்கும் துரபிமான எண்ணம் இல்லாமல் அவர்கள் தாய்மொழியிலேயே தேர்வு எழுத மத்திய அரசு அனுமதிக்கலாம்.
இந்திய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த ஒரு மொழி இன்றியமையாதது என்பதில் துளியும் சந்தேகம் இருக்க வேண்டாம். அந்த ஒரு மொழியும் மத்திய ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதிலும், அதுதான் இந்திமொழி என்பதிலும் சிறிதும் ஐயத்திற்கு இடமளிக்க வேண்டாம்.
ஆனால், அதே நேரத்தில், அந்தந்த மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் தங்கள் தங்கள் பிரதேச மொழியிலே அலுவலக நிர்வாகத்தை மேற்கொள்ள மத்திய அரசாங்கம் கவனித்துக்கொள்ள வேண்டும். பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களுக்கு இவ்வேற்பாடு மனநிறைவளிக்கக் கூடியதாகும். நல்ல தேச ஒற்றுமையை உண்டாக்கவும்கூட இது உதவியாக அமையும்.
மாநிலப் பிரதேசங்களில் ஒற்றுமையைக் குலைக்கும் சக்தி அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. பிரிவினைக்காக வாதாடியவர்கள் கூட பிரிவினைக் கொள்கையை இப்போது கைவிட்டுவிட்டார்கள். இந்த நேரத்தில், அரசாங்க வேலைகளுக்கு ஆள் அமர்த்துதல், உதவியளித்தல், நிவாரண மளித்தல், ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழான அபிவிருத்தி வேலைகள் அனைத்திலும் தப்பான அபிப்பிராயத்திற்கு இடமளிக்காத - எந்த வகையிலும் வேற்றுமை காட்டாத ஒரே விதமான கொள்கையை அரசாங்கம் மேற்கொண்டால் இனவழிப்பகுதி இடத்தைக் காட்டி தேச ஒற்றுமையை எதிர்க்கும் சக்தியைத் தகர்க்க முடியும்.
பொருளாதார ஏற்றத்தாழ்வும் தேசிய ஒற்றுமையைக் குலைக்கும் பெரிய காரணமாக அமையும் என நாங்கள் கருதுகிறோம். நமது இறுதிக் குறிக்கோளான ஜனநாயக சோஷலிச சமுதாயத்தைக் காண உடனடியாக நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
தற்போது இருப்பதைப்போல எந்தவித சாதி வேறுபாடும் இல்லாது ஒருவருக்குக் கொடுக்கப்படுவதுபோல் அனைவருக்கும் வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டால்தான் நல்ல தேச ஒற்றுமையை உண்டாக்க முடியும். ஆகவே எல்லா வகையிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வை நீக்க கூட்டுறவு முறையை எல்லா வழிகளிலும் மேற்கொள்ள வேண்டும்.
வகுப்பு வாதமும் சாதீயமும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன என்பதில் திடமான நம்பிக்கை கொண்டிருக்கிறோம். தேர்தல் காலத்தில் அரசியல் லாப வேட்டைக்காக அரசியல் கட்சிகள் சாதீய உணர்வைத் தூண்டிவிடுகின்றன. இச்செயல் இரங்குதற்குரியது மட்டுமல்ல; வருந்துதற்குரியதுமாகும். இதுபோன்ற காரியங்களைத் தடுக்கவும் ஆக்கம் கொடுப்பதைத் தளர்த்தவும் நமது எல்லாச் சக்திகளையும் பயன்படுத்தியாக வேண்டும்.
சாதீய உணர்ச்சியையும் வகுப்புவாத உணர்ச்சியையும் எழாமல் செய்யக் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற் கொள்ளலாம்.விண்ணப்ப பாரங்களிலும் தஸ்தாவேஜிகளிலும் எந்த சாதியைச் சேர்ந்தவர், எந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்று கேட்கப்படும் முறை நீக்கப்பட வேண்டும். எந்த சாதி எந்த வகுப்பு? என்று கேட்கும் இடத்தில் மேற்கண்ட கேள்விகளுக்குப் பதிலாகப் பொருளாதார நிலை, கல்வித் தகுதி, சமூக நிலையில் மனுதாரர் தாழ்ந்தவரா? - என்று கேட்கும் வண்ணம் முறையை மாற்றியமைக்க வேண்டும்.
எல்லாத் தேர்தல்களிலும் இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளிலும் சாதி சமயக் கோட்பாடு, சமயத் தத்துவம், நிறம் ஆகியவற்றிற்கு முதன்மையளிக்காமல் தங்களின் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
சாதியின் அடிப்படையிலோ அல்லது வகுப்பின் அடிப்படையிலோ சங்கம் அல்லது அமைப்பு எதுவும் இருக்கக்கூடாது என்று சட்டமியற்ற வேண்டும்.
சாதியைப் பற்றியோ வகுப்பைப் பற்றியோ எழுதுதற்கும் பேசுதற்கும் மற்ற சாதி அல்லது வகுப்பை எதிர்த்துப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் யாருக்கும் எந்த அமைப்பிற்கும் - பத்திரிகைகளுக்கும் அனுமதி வழங்கக்கூடாது.
கல்வி வல்லுநர்களும் சமயவாதிகளும் ஒன்று கூடிக் கலந்தாலோசிக்க வேண்டும். சாதி வேற்றுமைகளையும் வகுப்பு உணர்வுகளையும் மறக்கும் நோக்கத்தில் பொது மக்களை ஓர் இடத்தில் கூட்டி, அங்கே தீவிரமான பிரச்சாரத்தாலோ அல்லது தொகுதி தொகுதிகளாகப் பிரித்து நடைமுறை வேலைகளில் ஈடுபட்டோ வகுப்பு வாதத்தையும் சாதீயத்தையும் தடுத்த நிறுத்த மத வாதிகளும் கல்வி வல்லுநர்களும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.
மக்கள் மத்தியில் ஒருமை உணர்வை உண்டாக்குவதே தத்துவ ரீதியாக மதத்தின் முதன்மையான குறிக்கோளாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சில காலங்களில் கண்மூடித் தனமான பிடிவாத குணத்தால் சமய ஆக்கிரமிப்பைப் பொது மக்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
வெற்றிகரமாக விடுதலை வாங்கித்தந்த நமது பக்திக்கும் விசுவாசத்திற்கும் பாத்தியமான 'இந்தியாவின் தந்தை' அண்ணல் காந்தியடிகளுக்குப் பிறகு மத சிந்தனையுடைய மக்கள் ஒற்றுமையை நோக்கித்தான் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.
சமயப் பிடிவாதத்தின் காரணமாகத் தற்கால இந்தியாவில் தேசிய ஒருமைப்பாட்டில் குலைவு ஏற்படுமோ என்று பயப்படத் தேவையில்லை. ஆனால், அதே நேரத்தில், சமயத்தின் மூலமாகத் தேசிய ஒருமைப்பாட்டை உண்டாக்குவதில் கண்ணும் கருத்துமாகக் கவனம் செலுத்த வேண்டும்; தேசிய ஒருமைப்பாட்டிற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டும்.
அதற்கு, கீழ்க்கண்ட வழிமுறைகள் ஆலோசிக்கப் படலாம்.
எல்லா மதத் தலைவர்களையும் சமய உணர்வு கொண்டவர்களையும் கொண்ட மன்றம் ஒன்று ஏற்படுத்தி, பொது மேடையில் அவர்கள் ஒருங்குகூடி மதவிளக்கம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். அண்ணல் காந்தியடிகள் நடத்திக் காட்டியதைப்போல எல்லா மதத்தினரும் கலந்துகொள்ளக்கூடிய பொது வழிபாடு நடத்தவேண்டும்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அளித்துள்ள தனி மனிதரின் அடிப்படை உரிமைகளுக்குக் கேடு விளை விக்காத வகையில் ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மதம் மாறிச் செல்வதை, சட்ட ரீதியாகத் தடுத்தாக வேண்டும்.
மற்ற மதத்தை எதிர்த்தோ அல்லது குற்றம் குறை கண்டுபிடித்து அபிப்பிராயம் கூறும் விதத்திலோ போதனை புரிவதும் எழுதுவதும் சட்டப்படி குற்றமாகும் என்று பிரகடனப்படுத்த வேண்டும்.
குறிக்கோளுடைய வாழ்க்கையை நோக்கும் எதிர்கால சமுதாயத்தைக் கல்வி. ஒன்றால்தான் முன்னேற்றுவிக்க முடியுமாதலால் தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்குவதிலும் கல்வி முதன்மை இடத்தைப் பெறுதல் வேண்டும்.
ஒருமைப்பாட்டை உருவாக்குவதில் சில காலம் கல்வி கூட தோல்வியடைந்தது. காரணம், நடைமுறையில் அது மிகவும் தாழ்ந்து இருந்ததேயாகும். தற்போது இருப்பதைவிட இந்தியக் கல்வித் திட்டத்தில் இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்கும் வகையில் செயல் முறையில் அதிக அளவு மாற்றம் ஏற்படுத்தலாம்.
அதற்குரிய ஆலோசனைகள்.
ஒவ்வொரு கல்வி நிறுவனமும் குறித்த காலத்தில் கொடியேற்று விழா நடத்தல் - தேசிய கீதம் இசைத்தல் தேசிய உறுதி மொழிச் சத்தியம் எடுத்துக்கொள்ளுதல் ஆகிய முறைகளை நடைமுறையில் கொள்ள வேண்டும். தேசிய உறுதி மொழி கீழ்க்கண்ட விதத்தில் எடுத்துக் கொள்ளலாம்:-
மொழியால் நாம் தமிழர்கள் - தேசத்தால் நாம் இந்தியர்கள். நாமெல்லாம் இந்தியக் குடிமக்கள் என்று இதயபூர்வமாக உறுதி மொழி எடுத்துக் கொள்கிறோம். எந்த நிலையிலேயும் மொழியாலோ மதத்தாலோ அல்லது சாதியாலோ எந்தவிதமான வேற்றுமையும் எழுதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். பாரதத் தாய்க்கும் பாரத மக்களுக்கும் பணி செய்து வாழ ஆயத்தம் எடுத்துக் கொள்வோமாக!
(மாநிலப் பகுதிக்குத் தக்கவாறு உறுதி மொழியின் முதற் சொற்றடரை மாற்றிக் கொள்ளலாம்.)
ஒருமைப்பாட்டைக் குலைத்துப் பிரிவினை, உணர்ச்சியைத் தூண்டக்கூடிய இலக்கிய வரலாற்றுப் பாடங்களைப் பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கப்பட வேண்டும். ஒற்றுமையை உருவாக்கக்கூடிய பாடங்களை வலியுறுத்த வேண்டும்.
இந்தியா முழுமையும் சுற்றிப் பார்த்து வர நீண்ட சுற்றுப்பயண நிகழ்ச்சிகளில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் பங்கு கொள்ள இயன்ற உதவிகளையும் வசதிகளையும் அரசினர் அளிக்க வேண்டும். குறைந்தது மற்ற மாநிலங்களையாவது சுற்றிப் பார்வையிட்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் வேறுபட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், எண்ணக் கருத்தைச் சுதந்திரமாகப் பரிமாறிக் கொள்ள இயலும். ஆகவே இதன் மூலம் மற்ற மாநில மக்களோடு நெருங்கிய உறவுகொள்ளவும் முடியும். இந்திய ஒருமைப்பாடு ஆற்றல் பெற்று வலிமையடையக் கூடும்.
உள்ளத்துணர்ச்சியோடு ஒன்றியதாகத் தேசிய ஒருமைப்பாடு அமைய வேண்டுமே அல்லாது புறப்பகட்டாக அமைந்துவிடக் கூடாது. இந்த வகையான இந்திய ஒருமைப் பாட்டைப் பெறுதற்கு சக்தி வாய்ந்த ஒரு தேசிய இலக்கியத்தைக் கண்டாக வேண்டும். அந்த இலக்கியம் அனைத்திந்தியாவும் ஆதரித்து ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைதல் வேண்டும். சொந்த இலக்கியத்தைப் பெற்ற ஒரு நாடு நல்ல மாட்சிமை பெறும் என்பது கார்லைனின் கருத்து.
சாதியாலோ சித்தாந்த நம்பிக்கையாலோ அல்லது மதத்தாலோ ஏற்படுகின்ற துரபிமானம் இல்லாத நல்ல பண்பாடு உடைய வாழ்க்கையைப் பற்றிப் போதிப்பது திருவள்ளுவரின் திருக்குறளாகும்.
மனித வாழ்க்கைக்கு இலக்கணமாகத் திகழும் திருக்குறளை இந்திய மாநில மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்த்தாக வேண்டும். மத்திய அரசாங்கம் திருக்குறளைத் தேசிய இலக்கியமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.அனைத்திந்தியாவின் எல்லாக் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் முக்கிய பாடமாகத் திருக்குறளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒருமைப்படுத்தக் கூடிய கருத்தையும் நல்ல குணாதிசயங்களையும் எதிர்கால இளஞ் சந்ததியினரின் சிந்தனையில் ஏற்பட இந்த ஏற்பாடு வழிவகுக்கக் கூடும்.
நான் கருத்து வியாபாம் செய்யும் ஒரு வாணிகன்; எனது வணிகத்திற்கு மேடைகளே சந்தைகள்.
இன்று, நிலப்பிரபுத்துவத்திற்குச் சாவுமணி அடித்தாகிவிட்டது; பத்து ஏக்கர் நிலம் வைத்திருப்பவனை விடச் சில வெண் பொற்காசுகளை வைத்து வாணிபம் செய்கிறவர்களுக்குத்தான் இன்று சிறப்பு இருக்கிறது. எந்த ஒரு துறையிலும் மனிதன் தன்னைத் தகுதிபடுத்திக் கொள்ளும் அளவிற்குச் செழிப்பும், செழுமையும் பெறுதல் வேண்டும்.
ஆன்மீகம், எங்கோ ஓர் உலகத்திற்குப் போக டிக்கட் வாங்குகிற "புக்கிங் ஆபிஸ்" அல்ல; மத உலகம் இன்று வாணிகமாகிவிட்டது. அந்த வாணிகத்திற்கு விற்பனை வரி இல்லை; வருமான வரியுமில்லை.
ஆன்மீகத்தின் அடிப்படை எண்ணம் தன்னை அறிதலாகும். ஆன்மாவைப்பற்றி அறிதல் ஆன்மீகம், அதாவது உயிரியலைப் பற்றிய அறிவு.
நான் யார்? என் உள்ளம் யார்? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். நாம் மனிதனாக வாழ்கிறோமா, மாடாக வாழ்கிறோமா? சிங்கம் புலி கரடியாக வாழ்கிறோமா என்பதை அறிதல் வேண்டும். மனிதன் தன் குறைகளை அறிதல் இன்றியமையாததாகும்; குறைகளை அறிந்து கொள்ளுதல் திருந்துவதற்கு உதவியாக இருக்கும்.உடலை மூளையைப் பழக்கப்படுத்திக் கொள்வது போல நமது மனத்தையும் நாம் நல்ல முறையில் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். புரியாத புதிராக இருக்கின்ற மனிதனைப் பக்குவப்படுத்தி அவனை நிறைவுடையனாக்குவன மதம், கடவுள் நம்பிக்கை முதலியன. நாம் பல்வேறு வகையான உணவுகளையும் சாப்பிட்ட பிறகு, கொஞ்சம் ஊறுகாயைச் சாப்பிட்டால், நாம் சாப்பிட்ட எல்லாம் சீரணித்து, அந்த ஊறுகாயின் மணம் மட்டும் மேலெழுந்து நிற்பதுபோல, மதமும் கடவுள் நம்பிக்கையும் நம்மிடமுள்ள வஞ்சம், பொய், களவு, சூது, சினம் முதலியனவற்றையெல்லாம் சீரணிக்கச் செய்து அன்பையும், சகோதரத்துவத்தையும் மேலோங்கி நிற்கச் செய்யும்.
ஒரு நாடு ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவது அந்நாட்டின் ஆன்மீகத்துறை வளர்ச்சியைப் பொறுத்து தான். ஒரு நாடு ஒழுக்கக் கேடடைந்துள்ளது என்பதற்கான அறிகுறி சட்டப் புத்தகங்களின் குவியல்தான்!
'சட்டம் ஒரு வலை;' பெரிய வண்டுகள் அதில் மாட்டிக் கொள்வதில்லை; துளைத்துக்கொண்டு வெளி வந்துவிடுகின்றன. அப்படி வலையைப் பிய்த்துக் கொண்டு வெளியேறுகிறவர்கள் தாங்கள் வெளியேறுவது மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காகப் பத்து சிறியவர்கள் மாட்டிக் கொள்ள வேண்டும் என்றும் எண்ணுவதுண்டு.
பொதுவாகக் கலப்படம் செய்வது என்பது குற்றம். அதற்கு உடந்தையாக இருப்பதும் குற்றம். ஆனால், இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக கலப்படம் பண்ண எண்ணுவதைக் குற்றமாகக் கருதுவதில்லை. சட்டங்கள் முழு நிறைவுடையனவாகத் தோன்றிவிடுவதில்லை. முழங்காலில் ஒரு புண் ஏற்பட்டால் அதன் மீது கட்டுப் போடுகிறோமே, அதுபோல்தான் சட்டத்தில் திருத்தங்கள் சேர்த்துக் கொள்வதும்.சமயம் ஒன்றுதான் மனிதனைத் திருத்துவதற்குரிய சரியான சாதனம்; ஒளவையார் தனது 'ஆத்தி சூடி'யில் 'அறம் செய்' என்று கூட வலியுறுத்தவில்லை.'அறஞ்செய விரும்பு' என்றுதான் வற்புறுத்துகிறார். செயற்பாட்டைக்கூட அல்ல செயற்பாட்டிற்குரிய விருப்பத்தைச் சீர்படுத்திச் செழுமைப்படுத்துவது சமயம், இதனைத்தான்,
"எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்"
என்று பேசினார் திருவள்ளுவர்.
விண்ணோக்கிச் செல்லும் பொருளை மண்ணோக்கி இழுக்கும் ஈர்ப்புச் சக்தி மண்ணுக்கு இருப்பது போல வானோக்கிப் பறக்கிற மனிதனையும் கீழ்நோக்கி இழுத்து வருகிற ஆற்றல் வஞ்சனை, பொய், புனைகருட்டு முதலியவற்றிற்கு இருக்கின்றன. இத்தகு ஆற்றல் படைத்த வஞ்சனை, பொய், புனைகருட்டு ஆகியவற்றின் ஆற்றலை அடக்கி மனிதனாக, மாமனிதனாக ஆக்கும் சக்தி மதத்திற்கும், கடவுள் நம்பிக்கைக்கும் உண்டு.
தன்னலமே இல்லாமல் இருக்க வேண்டும் என்று கூட நான் கூற விரும்பவில்லை; தன்னலத்திற்கு ஓர் எல்லைக் கோடு இருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. அத்தகைய எல்லைக்கோட்டை வகுப்பதுதான் ஒழுக்கம். தனி மனிதர்களுக்கு மட்டுமல்ல - வணிகர்களுக்கும் இந்த ஒழுக்கம் இன்றியமையாதது.
'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்' என்றார் திருவள்ளுவர். உழவுத் தொழில் உற்பத்தித் தொழில், களங்கம் ஏற்படுத்தவும் வாய்ப்பில்லாத தொழில், வாணிபத் தொழில் அப்படியல்ல. எளிதாகக் களங்கம் ஏற்படுத்திவிடக் கூடிய தொழில். வாணிபத் துறையை யொட்டித் தமிழகத்தில் இலக்கியங்களே தோன்றியுள்ளன. சிலப்பதிகாரத்தில் கோவலனின் குடிச் சிறப்பு கூறப்பெறும் போது, வணிகச் சிறப்புப் பேசப்பெறுகிறது. பொருள் ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு மாற்றப்படும் போது ஓரிடத்தில் அதிகமாகச் சுரண்டப்படக் கூடாது.
காய்தலும் உவத்தலும் இன்றிப் பேசும் பண்பியல்பு அன்றிருந்தது. இன்று, யார் எதைப் பேசுவது என்ற வரையறை கூட இல்லாமல் யாரும் எதையும் பேசுகின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
வணிகர்கள் பெரும் பொறுப்புடையவர்களாக இருத்தல் வேண்டும். கலப்பில்லாத நல்ல பண்டங்களையே வழங்குவதன் மூலம் மக்களின் உடலையும் உயிரையும் பாதுகாக்கும் பாதுகாவலர்களாக வணிகர்கள் விளங்கமுடியும். ஒழுக்கம் அன்பு இவற்றைக்கூட வணிகக் கடைகளில் கற்றுக் கொள்ளலாம். முகத்தால் அமர்ந்தினிது நோக்கும் பண்பு இன்று கடைகளில் தானிருக்கிறது ஆத்மார்த்தீக உலகத்திற்கும் வணிக உலகத்திற்கும் உறவு ஏற்பட்டால் அன்பும் பண்பும் ஒழுக்கமும், நாணயமும் செழித்தோங்கி வளரும்.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, உற்பத்தித் துறையில் ஈடுபட்டிருப்பவர்களின் எண்ணிக்கையைவிட வணிகத் துறையில் ஈடுபட்டிருப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாகி இருக்கிறது. அது நல்லதல்ல - வணிகர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும். இது சம்பந்தமாக வணிக சங்கங்களே திட்டமிட்டு ஒரு நல்ல ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.
நாட்டில் ஒழுக்கத்தைப்பற்றிப் பெரிதாகப் பேசுவார்கள். ஆனால் சிறிதளவுகூட வாழ்க்கையில் கடைப் பிடிக்கமாட்டார்கள். தனிமனித ஒழுக்கத்தைப் பெரிது படுத்திச் சமுதாய ஒழுக்கத்தை அலட்சியப்படுத்துவதால் "சமுதாய ஒழுக்கம்" சீர்குலைகிறது. சமுதாய நெறி தழுவிய வாழ்க்கை மலர வேண்டும்.விலைவாசி ஏற்றம் பற்றிப் பேசப்படுகிறது. இம்மாதிரி நேரங்களில் விலையேற்றம் வரவேற்கத்தக்கது தான். எனினும் விலைவாசி ஏற்றம் உற்பத்தி செய்கிறவனுக்குக் கிடைக்க வேண்டும்.
"வரி உயர்வினால் விலைவாசி உயர்ந்திருக்கிறது; இதற்கு வணிகர்கள் பொறுப்பில்லை" என்று வணிகர்கள் கூறுகிறார்கள். இன்று, 60 சதவிகித மக்களுக்கு, விலைவாசி உயர்வுக்கு ஏற்பச் சாமான்கள் வாங்கி வாழ்க்கை நடத்த வருமானம் இல்லை. தனிமனித வாழ்க்கையில் சோஷலிசப் பண்பு இல்லையானால் சமுதாயதத்தில் சோஷலிச ஒழுக்கம் நிலைக்காது. அடிமைக் காலத்தில் நாம் பலவாறாகப் பிரிக்கப்பட்டோம். இன்று சுதந்திர நாட்டில் - சுதந்திர மக்களாக வாழ்கிறோம். நம்மிடையே, நாமெல்லாம் "ஒரே குடும்பம்"என்ற பாச உணர்வு வளரவேண்டும். வளர்ந்துவரும் புதிய சமுதாயத்திற்கு இந்தக் குடும்ப உணர்வு இன்றியமையாதது. வணிகர்களும் இந்த “ஒரு குடும்ப" உணர்வோடு சராசரி மக்களின் வாங்கும் சக்தியை வளர்க்கப் பாடுபட வேண்டும்.
வணிகத் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் தினமும் சிட்டைப் புத்தகத்தைப் பார்த்துக் கணக்கு முடிப்பது போல ஒவ்வொரு நாளிலும், நாம் ஒழுக்கம், பண்பு ஆகியவற்றால் வளர்ந்திருக்கிறோமா என்று அன்றாடச் செயல்களைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யவேண்டும்.
ஆன்மீகமும் வாணிகமும் தாமரையும் தண்ணீரும் போல. நமது வாழ்க்கை, பொருள், முயற்சி, ஒழுக்கம் அனைத்திலும் ஆன்மீக வாழ்க்கை கலந்திருக்க வேண்டும்.
சாப்பிடுகிற மனிதனுக்குப் பசி நீங்கவேண்டும்; குளிக்கிற மனிதனுக்கு அழுக்கு நீங்கி, உடல் வெப்பம் தணிய வேண்டும். வழிபாடு செய்கிற மனிதனுக்கு உள்ளத்தில் உள்ள வெப்பக்காடு குறைய வேண்டும். இதற்குத் தாய்மொழியில் வழிபாடு செய்வது இன்றியமையாதது. உள்ளத்தின் அழுக்கைப் போக்கி, வெப்பத்தைத் தணித்துத் தூய்மைப் படுத்தும் கோயில்களை வணிகத் துறையாக்கிவிட்டால் நாம் எங்கே போய் நமது உள்ளத்தைத் துாய்மையாக்கிக் கொள்ள முடியும்? எங்கே போய், வெப்பத்தைத் தணித்துக் கொள்ள முடியும்? ஒரு மனிதனின் அன்பும், கருணையும் உலக மக்களை அணைக்கும்போதுதான் அவன் ஆத்மார்த்தீக மனிதனாகிறான்.
வணிகத்துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் மக்கட்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுப்பது போல - அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான அன்பையும் பண்பையும் கற்றுக் கொடுக்க முடியுமா? அரிசி விற்கும் கை அருளியலையும் விற்க முடியும் என்பதை வணிகப் பெருமக்கள் உண்ர்ந்து தொண்டுபுரிய முன்வரவேண்டும்.
"சமாதானம் செய்து வைப்பவர்கள் பாக்கியவான்கள்" - என்பது ஏசுவின் இனிய செய்தி. வாழ்க்கையின் பேறுகளை உண்மை, அறிவு, ஆனந்தம் என்று முறைப்படுத்துவார்கள் அருளாளர்கள். இன்றைய மானுடம் ஆனந்தம் - மகிழ்ச்சி, இன்பம், உடலுக்குரிய சுகம், களிப்புக்களை நிறைய பெற்று வளர்ந்துள்ளது. ஆயினும் ஆன்மாவில் அமைதி இல்லை; ஆனந்தம் இல்லை; ஏன்? நாம் முற்றிலும் ஆவேசமானதும் விரைவுணர்வு பொருந்தியதும் அற்புதமானதுமாகிய சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நமது வாழ்க்கையில் ஏராளமான அடிப்படைப் பிரச்சினைகள் உள்ளன. இந்தப் பிரச்சினைகளைப் பற்றிய நமது கருத்து, இன்றுள்ள கருத்துடன் முற்றிலும் மாறுபட்டது. அதுமட்டுமல்ல, அன்றைய கருத்து அறியாமையின் காரணமாக அப்படி இருந்தது என்று இன்று உணர்கின்றோம். அன்று பிரச்சினைகளை அணுகும் முறை நம்பிக்கை அடிப்படையிலான முறை; இன்று அப்படியல்ல. இன்று அறிவறிந்த நிலையில் சிந்திக்கின்றோம். நமது யுகம், அறிவியல் யுகம்! நமது பூமியில் உயிரினங்கள் தோன்றி 400 கோடி ஆண்டுகள் ஆகின்றன. மனித இனம் தோன்றி 40 இலட்சம் ஆண்டுகள் ஆகின்றன. நீண்ட இந்தக் காலக் கட்டத்தில் மானுடம் மெள்ள மெள்ள பரிணாம வளர்ச்சியில் மானுடமாயிற்று. மானுடம் தோன்றிய உடனேயே அறிவியல் விழிப்பும் மெள்ள மெள்ளவே வளர்ந்து வந்தது. இந்தத் தலைமுறையுகம், அறிவியலை முழுமையாக உணர்ந்த யுகம்! அறிவியலின் பலன்களை முழுமையாக அனுபவிக்கும் பேறு இந்தத் தலைமுறைக்குத்தான் கிடைத்துள்ளது. இந்தப் பேறு நீடிக்குமா? நீடித்து வளருமா? இருபத்தோராம் நூற்றாண்டின் நுழைவாயிலில் நிற்கும் நாம் நம்மையே அழித்துக் கொள்ளாவிட்டால் இந்தப் பேறு நிலைக்கும். ஆனால், நம்முடைய எதிர்பார்ப்பு, பிழையெனத் தெரிகிறது! வளைகுடாவில் போர் தொடங்கி விட்டது: இந்த மானுடத்தின் தலைவிதியை யார் நிர்ணயிப்பது. நல்லவண்ணம் அமைய வேண்டும் என்று பிரார்த்திப்போமாக!
சமாதானம் என்றால் என்ன? போர் இல்லாத நிலைமட்டுமல்ல. சமாதானம் என்பது போர் இல்லாத நிலை என்றால் "மயான அமைதி' என்று பொருள் கொள்ளல் கூடாது! சுரண்டும் அதிகார வர்க்கத்திற்குப் பணிந்து வாழ்தலுமல்ல. நாம் ஏதாவது நல்லது செய்தால் அதனால், மற்றவர்களுக்கு நோதல் ஏற்படும் என்று எண்ணி, யாதொன்றும் செய்யாதிருத்தலும் அல்ல. சமுதாயம் உயிர்ப் புடையது வாழ்வது, மானுடத்தின் வாழ்வுக்குத் தேவைகள் பலப்பல உள்ளன. வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தி செய்யப் பெறும் நிலையில்தான் அமைதி தோன்றும்; சமாதானம் தோன்றும்! மக்கள் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் சுதந்திரம் தேவை. எந்தக் காரணத்தை முன்னிட்டும் மக்களிடத்தில் பயம் இருத்தல் கூடாது. பயமில்லாமல் சுதந்திரமாக உழைப்பைப் பயன்படுத்திப் பணியாற்ற வேண்டும். உழைப்பின் பயனை மக்கள் அடைய வேண்டும்; "வாழ்க்கையின் தேவைகளை அடையத்தக்க சுதந்திரமான உழைப்போர் தேவையே” என்றார் போப் பால்.
மானுடத்தின் சென்ற கால வரலாறுகள் ஊக்கமளிப்பனவாயில்லை. போர்கள் நிறைந்த ஆண்டுகளே மிகுதி. மானுடத்தின் நீண்டகால வரலாற்றில் போர் இல்லாத காலம் 292 ஆண்டுகள் தான் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். கடந்த காலத்தில் இந்த உலகம் பதினையாயிரத்துக்கும் அதிகமான போர்களைச் சந்தித்துள்ளது. 140 இலட்சம் உயிர்கள் கொல்லப்பட்டுள்ளன.
இன்றைய நிலை என்ன? இன்று வாழும் பலர் இன்றைய எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்களாக, சென்று போன காலங்களின் கருத்துக்களிலேயே, பழைமையின் பிடிப்புக்களிலேயே வாழ்கின்றனர். இவர்கள் பானையில் தலையை விட்டுக் கொண்டு தலையை எடுக்க முடியாமல் தவிப்பதைப் போல வாழ்கின்றனர். பைத்தியக்காரர்களே போரினை, விரும்புகிறவர்கள்! எந்த வகையான தருக்கவியலும் போரினை வரவேற்கவில்லை. மாறாக, போரை மறுதலித்தே வந்துள்ளன.
இந்த உலகில் பல மொழிகள் பேசும் மக்கள் வாழ்கின்றனர்; பல மதங்கள் நிலவுகின்றன! இந்த பரந்துபட்ட மக்களிடையே நட்புறவும் நல்லிணக்கமும் தேவை. மதங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கே உரியன். மதங்கள் அரசியல், பொருளாதார வாழ்க்கையில் ஊடுருவ அனுமதிப்பது விரும்பத்தக்கதுமல்ல அனுமதிப்பதற்கும் இல்ல. மானுடத்தின் வரலாற்றில் நடந்த பல போர்கள் மதங்கள் அரசியலில் ஊடுருவியதனாலேயே ஏற்பட்டவை என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.மதம் மக்களின் நல்வாழ்க்கை அமைப்புக்கே! என்று, 'இவர் தேவர் - அவர் தேவர்' என்ற விவாதங்கள் தலையெடுக்ககின்றனவோ அன்று மதச்சண்டைகள் தோன்றுவது இயல்பாகி விடும். ஆதலால், "கடவுள் ஒருவரே! அந்த ஒருவரையன்றிப் பிறிதொருவர் இல்லை! மானுட சாதி ஒன்றே! சமுதாய நீதியில் ஒரே நீதி!” என்ற கோட்பாட்டினை முன் வைத்து, சமாதான சகவாழ்வுக்குப் போராட வேண்டும்.
சமாதான வழியில் வாழும் சமுதாயம் அமைந்தாலே எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கக் கூடிய புதிய சமூக அமைப்பைக் காணமுடியும். நாடுகள் இராணுவச் செலவுகளைத் தவிர்த்து மூலவளங்களை மக்களின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தினால் அற்புதமான சமுதாயம் தோன்றும். மானுட சாதியின் போர்க்குணம், ஆக்க வழிகளில் மடை மாற்றம் செய்யப்பெற வேண்டும். மானுடத்தை அறியாமை, வறுமை, பிணி ஆகியவற்றிலிருந்து மீட்கும். ஆக்க வழியிலான போர் உடனடியாகத் தொடங்கப்படுதல் வேண்டும்.
எல்லா விதத்திலும் சமாதானச் சூழ்நிலையில் வாழும் சமுதாயமே வளரும்; வாழும்; உத்தமமானதும் கூட ! சமாதானம் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
இன்றுள்ள தேவை சமாதானம்! சமாதானம் ! வேறொன்றும் இல்லை! சமாதானம் இன்றைய மானுட வாழ்வில் நிபந்தனையாகி விட்டது. சமாதானத்தைப் பேணுவோம்! பாதுகாப்போம்!
விஞ்ஞானம் வளர்கிறது! இல்லை, வளர்க்கப்படுகிறது! காலம் எல்லைகளைக் கடந்து மனிதகுலம், உறவு கொண்டு இந்தப் பூமியில் ஒரு சேர உண்டு, களித்து மகிழ்வதற்காகத் தானே வாழ்கிறது! ஆனால் என்ன நடக்கிறது? அருள் நெறியா வளர்கிறது? சன்மார்க்கமா ஆட்சி செய்கிறது? சைத்தான் மருள் நெறியில் அழைத்துச் செல்கின்றானே! போர்க் கருவிகள் செய்தல் தொழிலாக அல்லவா அமைந்து விட்டது! இரும்பைப் பிடித்த துருவும் சும்மா இருக்காது. ஆயுதம் தொட்டவனும் சும்மா இருக்க மாட்டான். நாளுக்கு நாள் கொலைக் கருவிகள் உற்பத்தி - அதுவும் அணு, இரசாயன் ஆயுதங்கள் செய்யப்படுகின்றன. இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பூமியின் காற்று மண்டலம், தண்ணீர் மாசுபடுகிறது. இந்த மாசு பல தலைமுறைகளுக்குப் பாதிப்புச் செய்யும் என்று அறிவியல் உலகம் எச்சரித்திருக்கிறது; எச்சரித்துக் கொண்டிருக்கிறது! பணப்பேயும் அதிகாரப் பிசாசும் பிடித்தாட்டுபவர்களுடைய காதில் இந்த அபயக்குரல் விழவில்லையா? அல்லது விழுந்தும் விழாதது போல நடிக்கிறார்களா?
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க உலக மெங்கிலுமுள்ள அனைத்துச் சமய நெறிகளைச் சார்ந்தவர்களும் ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும். போர் வெறியை, போர் ஆயுதங்கள் தயாரிப்பை எதிர்த்துப் போராட வேண்டும். உலக நாடுகள் பேரவை - ஐக்கிய நாடுகள் சபை ஆற்றல்மிக்குடையதாக அமைய வேண்டும். அது போலவே உலக சமயங்களின் மையம் - சபை ஒன்று தொடங்கப் பெறுதல் வேண்டும். இந்த உலக சமய சபை உலகத்தில் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் சமாதானத்தையும் வளர்க்கப் பாடுபட வேண்டும்; உழைக்க வேண்டும். மானுடம் வென்று விளங்க வேண்டும். கணியன் பூங்குன்றன், அருளிய "யாதும் ஊரே யாவரும் கேளிர்!" என்ற வாக்கு மெய்யாகவே உருப்பெறுதல் வேண்டும். இதுவே அமைதிக்கு வழி!
யாதொரு நிபந்தனையும் இன்றி மானுடம் வளர, வாழ உத்தரவாதம் அளிப்பதே அறிவியலின் நோக்கம் ! அறிவியலின் கடமை! இந்த நோக்கம் நிறைவேற இப்புவியிலுள்ளோர். அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். வியாபார லாப நோக்கமின்றி நுகர்வுப் பொருள்கள் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும். உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் தனி ஒருவன் கூடப் பட்டினியால் சாக அனுமதித்தல் கூடாது. அறியாமை, முற்றாக அகற்றப்படுதல் வேண்டும். விரைவில் உலகம் தனக்கு ஒரு மொழியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த உலக மொழியை உலக மாந்தர் அனைவரும் கற்றுப் பேச வேண்டும். விரைவில் கடவுள் - மானுடம் தழுவிய உலகப் பொதுச் சமயமும் ஒன்று கண்டாக வேண்டும். இதற்கு வழி வகுப்பதற்கு வாய்ப்பாகப் போற்றுதலுக்குரிய போப்பாண்டவர், திருச்சபைகளுக்குப் பல சமயங்களுடன் விவாதித்தல், கலந்துரையாடல், தெளிவு காணல் நெறியை அறிமுகப்படுத்தியுள்ளார். இது வரலாற்றின் திருப்புமையம்! போதும், போதும் பிரசாரங்கள்! மாந்தர்களிடையே அடிக்கடி கூடுதல், கலந்துரையாடல் முதலியன நிகழட்டும்! அமைதிகாண வழி இதுவே! அமைதியை வளர்ப்போம்! காப்போம்!
இன்றைய மானுட உலகம் வேண்டி நிற்பது அமைதியை சமாதானத்தை! அமைதி சமாதானம் என்பவை இன்றைய பாரதத்தில் அருமையாகிவிட்டன! எங்கும் வெறுப்பு! பகை! கலகம்! வன்முறைக் கொடுமை! 1990-ல் மட்டும் 36500 கொலைகள் நடந்துள்ளன. இவை தவிர கலகங்களால் செத்தவர்களும் உண்டு. இந்த பூமியின் பல்வேறு பாகங்களில் ஏற்பட்ட திடீர் யுத்தங்கள், சண்டைகள், தீவிரவாத இயக்கங்கள் இவற்றால் உலகமும் அமைதியை இழந்திருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் திருவருள் பேரவையின் பணிகள் கடினமாகியுள்ளன. கட்டாயமாகியுள்ளன. சுதந்திர இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரும் ஒரு குலம்; ஓர் இனம் எல்லாம் இந்தியர் என்ற மரபைப் போற்றுவோம். இந்திய மக்களாகிய நாம் பாஸ்பரம் நல்லெண்ணம், நம்பிக்கையுடன் ஒன்றுபட்டு வாழ்வோம் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது என்பது விழுமிய கொள்கை; நாகரிகம். நமது அரசு, சமயச் சார்பற்ற அரசு, சமயச் சார்பற்ற தன்மை நமக்கு கிடைத்த நாகரிகமாகும்; கபீர்தாஸ், விவேகானந்தர், நாராயணகுரு, வள்ளலார், அண்ணல் காந்தியடிகள் ஆகியோர் தங்கள் இன்னுயிரையும் கொடுத்துக் காப்பாற்றிய கொள்கை சமயச்சார்பற்ற தன்மை; இந்திய ஒருமைப்பாடு!
இந்தியா சுதந்திரமடைந்து அரைநூற்றாண்டு கூட முடியவில்லை. அதற்குள் நாட்டின் பல பகுதிகளில் "மண்ணின் மைந்தர்" கொள்கை இயக்கம்! பிரிவினை வாதம்! சாதிச் சண்டைகள்! மதச் சண்டைகள்! காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையில் இன்று பதற்றநிலை! இந்தச் சூழ்நிலையை அறை கூவலாக ஏற்றுக்கொண்டு அன்பையும் நல்லிணக்கத்தையும் ஒருமை நிலையையும் மக்களிடத்தில் வளர்த்து அமைதியையும் சமாதானத்தையும் வழங்கும் கடப்பாடே திருவருள் பேரவையின் கடப்பாடு! தமிழ் நாட்டை அமைதிப் பூங்காவாகப் பாதுகாக்க திருவருட் பேரவை இயற்றிய பணிகள் செய்த தியாகங்கள் அளப்பில. தமிழக மக்கள் திருவருட் பேரவைக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர்; அமைதிப் பணிக்கு அழைக்கின்றனர்; ஆயினும் நமது பணி மேலும் சிறப்பாக நடக்க முடியும்; நடக்க வேண்டும்.
இன்னும் தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் அமைதியை, சமாதானத்தைக் காண உழைக்கும் நாம் தஞ்சையில் கூடுகிறோம். சமாதானத்தை வளர்க்க அணிதிரள்வோம். இந்த பூமியை அமைதியான, சமாதானச் சூழ்நிலையில் வைத்துக்கொள்ள உழைப்போம்! திருவருட் பேரவை வாழ்க! வளர்க அதன் அமைதிப்பணி!
கடவுள் பெயரால் சப்தமேற்போம். கடவுள் திருநாமத்தின் பெயரால் மாந்தர் ஒரு குலம் என்பதை உறுதிப்படுத்து வோம்! இந்த வையகத்தில் அமைதியான வாழ்க்கையை உறுதிப்படுத்துவோம்!
(TNF inc, USA)
இனிய அன்புடையீர்,
நாட்டிடைக் கடந்தும், கடலிடைக் கடந்தும் அமெரிக்காவில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தங்களுடைய தாய்த் தமிழகத்தின் வளர்ச்சி பற்றிக் கவலையுணர்வுடன் எண்ணிச் செயற்பட முனைந்த உள்ளங்களுக்கு ஆயிரம் ஆயிரம் பாராட்டுக்கள்! நன்றி!
தமிழகம் காலத்தால் முந்தியது. தமிழினம் காலத்தால் முன் தோன்றி மூத்த இனம். செப்பமான மொழியும் சிறப்புடைய வாழ்வியலும் கண்டவர்கள் நமது முன்னோர். உலகப் பொதுமறையாக விளங்கும் தகுதி மிகுதியுமுடைய திருக்குறளைத் தந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறந்து விளங்கியது தமிழரின் சிந்தனை உலகம். சிந்தனையிலும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள். அதுபோலவே, வாணிகம் முதலிய துறைகளிலும் சிறந்து விளங்கிய பெருமையை வரலாறும் தமிழிலக்கியங்களும் எடுத்துரைக்கின்றன. ஆயினும் என்? இத்தகு புகழ் பூத்த வாழ்க்கை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வாழ்க்கை காலப்போக்கில் தமிழர் தம் வாழ்க்கையில் அயல்வழக்குகள் ஊடுருவியதன் பயனால் காதல் மறைந்தது; காமம் தலையெடுத்தது; வீரம் விலை போனது; கோழைத்தனம் குடி புகுந்தது; சமயநெறிகள் மறைந்து மதங்கள் தலையெடுத்தன; பல கடவுள் வழிபாடு அறிமுகப் படுத்தப்பட்டுத் தமிழர் வாழ்வு நலியத் தொடங்கியது.
தமிழினம், குலமரபு கண்டு தழைத்து வளர்ந்தது. அயல் வழக்கால் சாதிகள், தீண்டாமை போன்ற சமூகத்தை உருக்குலைத் தழிக்கும் புற்றுநோயனைய சமூகத் தீமைகள் ஊடுருவின. இனவழிப்பட்ட கட்டுமானம் - ஒருமைப்பாடு சீர்குலைந்தது. அறிவறிந்த ஆள்வினையைத் தமிழர்கள் இழந்தனர். அதிர்ஷ்டத்தை - விதியை நம்பத் தலைப்பட்டனர்; வீழ்ச்சி தலைப்பட்டது; ஆட்சிகள் கவிழ்ந்தன. வீழ்ச்சியின் வரலாறு தொடர் கதையாகி வருகிறது. இனிய அன்புடையீர், மிகக்கடுமையான தடுப்பு முறையின் மூலம்தான் தமிழ் நாட்டைத், தமிழ் இனத்தைக் காப்பாற்ற முடியும். அத்தகைய உயர் முயற்சிக்குரிய விவேகமும் ஆற்றலும் உடைய தங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.
இன்றைய தமிழகம் எங்கோ போய்க் கொண்டிருக்கிறது. இந்தியாவில் விற்பனையாகும் பரிசுச் சீட்டுக்களில் 70% விற்பனை தமிழ்நாட்டில்தான். திரைப்பட அரங்குகள் 2500க்கு மேல் உள்ள நாடும் தமிழ்நாடுதான். உலக நாடுகளிலேயே பகலும் இரவும் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு தமிழ்நாட்டில் தான் உள்ளது! எங்கும் ஒருவிதமான சோம்பல்! அதே போழ்து சுகவாழ்வு வேட்கையும் மிகுதி. முரண்பட்ட வாழ்நிலை! இவ்விதமான இரண்டு எதிர்த்திசை வளர்ச்சிப் போக்கை நாம் ஆழ்ந்த கவனத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் மக்கள் தொகை வளர்ச்சி கூடிக்கொண்டு வருகிறது. 1981இல் தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 48 கோடியாகும். 1991இல் 57 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்காகத் திட்டமிடும் தங்கள் பணிகளை வரவேற்பதில், தங்களோடு ஒத்துழைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.
பழங்காலத்தில் தமிழ்நாடு இன்றைய கேரளம், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியன அடங்கிய நிலப் பகுதியாகும். ஆதலால் தண்ணிர்ப் பிரச்சினை இல்லை. இன்றோ மொழிக் கலப்பால் மொழி பிரிந்து, இனம் பிரிந்து, நிலம் பிரிந்து ஒரு சிறிய பகுதிக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்து வருகின்றோம். அதனால் - நிலப்பிரச்சினையால் நீர்வளம் குறைந்து விட்டது. கேரளநாடு, மேற்குநோக்கி ஓடிக் கடலில் கலக்கும் நீரைத் தமிழ்நாட்டுக்குத் தரமறுக்கிறது. கர்நாடகம் காவிரியில் நீர்விட மறுக்கிறது. இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ்நாடு வறட்சியால் தொடர்ந்து பாதித்து வருகிறது. பல ஆயிரம் விவசாயத் தொழிலாளர்கள் வேலையிழந்து வருகின்றனர். தமிழ்நாடு வளம் பெற முதல்நிலையில் தென்மாநில ஆறுகள் இணைக்கப்பட வேண்டும். வடபுலப் பேராறாகிய கங்கையைக் காவிரியுடன் இணைக்கும் பெரிய திட்டத்தைப் பற்றி எண்ண வேண்டும். உலக வங்கியின் உதவியை நாடவேண்டும். இந்திய - அமெரிக்க அரசுகளைத் தூண்ட வேண்டும். இந்த முயற்சியில் வெற்றி பெற்று விட்டால் தமிழ்நாட்டின் வளம் நிலையாகக் காப்பாற்றப் பெறும், இஃது ஒருதலையான திட்டம். நவீன இயந்திரங்களும், தொழில் நுட்பங்களும் நிலங்களை ஒருங்கிணைத்து அமெரிக்கா போலவே நமது தமிழ்நாட்டிலும் கடலை, சோளம் முதலியன விளைவிக்கும் பண்ணைகள் அமைக்கலாம். எண்ணெய்த் தேவை நிறைவுபெறும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அந்நியச் செலாவணியும் கிடைக்கும். இந்த தரிசு நிலப்பரப்பைச் சாகுபடிக்குக் கொண்டுவர திட்டங்களுடன் முன்வருபவர்களுக்குத் தமிழ்நாடு அறக்கட்டளை உதவி செய்யலாம்.இந்தத் தரிசு நிலத்தில் பெரும்பான்மை போதிய தண்ணீர் வசதியில்லாதவை. ஆதலால் தண்ணீர் நிறையத் தேவைப் படாத ஆமணக்கு பயிரிடலாம். ஆமணக்கு எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் அடிப்படையிலான தொழில்கள் தொடங்க வாய்ப்புண்டு.
இத்தகையதொரு தொழில் இதுவரையில் தமிழ் நாட்டில் இல்லை என்பதையும் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம். இந்தமாதிரித் தொழில் ஒன்றை பசும் பொன் தேவர் திருமகன் மாவட்டத்தில் தொடங்கும் திட்டம் கருவில் இருக்கிறது,
Castor Oil Based Industries
- Hydrogenated Castor Oii (3000 TPA)
- Total Capital Investment Rs. 18930 lakhs
- Dehydrated castor oil Fatty acids (1000 TPA)
- By product Glycerol (125 TPA)
- Total Capital Investment Rs. 20700 lakhs
- Hard Fat (9000 TPA)
- By product: Spent Catalyst
- Total capital Investment Rs. 287.25 lakhs
- Castor Stear in/Stearic acid & Castor olein\oleic acid (9000/ 7650 TPA)
- Total Capital Investment Rs. 718.00 lakhs
- திட்ட மதிப்பீடு உத்தேசம் ரூபாய் 13 கோடி இத்தொழிலுக்குத் தமிழ்நாடு அறக்கட்டளை முதலில் இவ்வளவு முதலீடு செய்ய வாய்ப்பில்லையானால் படிப்படியாக முதலீடு செய்து தொடங்கலாம். இந்த 13 கோடி ரூபாயையும் ஒரே காலத்தில் முதலீடு செய்ய வேண்டிய அவசியமும் வராது. பத்தாண்டுத் திட்டம் இதற்குத் தீட்டிப் படிப்படியாக நடைமுறைப்படுத்தி முழுமை நிலைக்குக் கொண்டு வரலாம். தொடக்க நிலையிலேயே 13 கோடியில் முழுநிலையில் தொடங்குவதற்கும் தடையில்லை. ஆனால் முதலிரண்டு ஆண்டுகளில் ஆமணக்குச் சாகுபடிசெய்து ஆமணக்கு மூலப்பொருள் கிடைக்க வேண்டுமென்பதால் மூன்றாண்டுத் திட்டமாகவும் வகுக்கலாம். இந்தத் திட்டத்தின் மூலம் ஏராளமான விவசாயிகள் பயன்படுவர். நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். இந்தத் தொழிலில் முதலீடுசெய்யும் முதலீட்டுக்கு 34% இலாபம் கிடைக்கும். இத்திட்டத்தை ஒத்துக் கொண்டால் இத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்குரிய முயற்சிகளுக்கு நாமும், காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வக இயக்குநர் விஞ்ஞானி பேராசிரியர் எஸ்.கே. ரங்கராஜன் அவர்களும் பூரண ஒத்துழைப்புத் தரக்கடமைப்பட்டிருக்கிறோம். இத்தொழிலைத் தமிழ்நாட்டில் அமைப்பதென்றால், பசும்பொன் தேவர் திருமகன் மாவட்டம், இராமநாதபுர மாவட்டம் இரண்டும் தான் ஏற்புடையவை. இந்த மாவட்டங்களில் முன்பே ஆமணக்கு 1000 ஏக்கரில் சாகுபடியாகிக் கொண்டிருக்கிறது. மேலும் சாகுபடி செய்ய வாய்ப்புண்டு. ஆதலால் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் தேவர் திருமகன் மாவட்டம் இரண்டையும் இணைக்கும் இளையான்குடிப் பகுதியில் இத்தொழில் அமைவது சாலப்பொருத்தம் என்பதையும் தமிழ்நாடு வளர்ச்சி அறக்கட்டளையின் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்.
அடுத்துத் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கியமான இடம் வகிப்பது கால்நடை வளர்ப்பேயாம். கால்நடை வளர்ப்பு ஒரு தனித்தொழில் அல்ல; பன்முனையில் பயன்தரும் தொழிலாகும். கால்நடை வளர்ப்பு சிறப்புடன் நடைபெற்றால் விளைபுலன்களுக்கும் இயற்கை உரம் கிடைக்கும்; வேளாண்மை மகசூலும் நன்றாக இருக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல தரமான பால் - பாலுணவு முதலியன கிடைக்கும். இன்று தமிழ்நாட்டில் 17% பேருக்குத்தான் கொழுப்புச் சத்துள்ள உணவு கிடைக்கிறது என்பது கவலையுடன் கவனிக்கத்தக்கது. கால்நடை வளர்ப்புக்காக பால்மாடு, ஆடுகள் வளர்ப்புக்காக வறுமை கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு இந்திய அரசும் மாநில அரசும் ஊரக ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் பலகோடி ரூபாய்களை வழங்குகின்றன. ஆனால், இந்தத் திட்டத்தால் போதிய பயன் விளையவில்லை. இந்தக் குறையை நிறைவுசெய்ய தமிழ்நாட்டில் தனியார் துறையிலோ, கூட்டுத் துறையிலோ பங்களிப்பு முறையில் தரமான கால்நடைப் பண்ணைகள் அமைத்து நல்ல தரமான பால் மாடுகளை வளர்த்து வழங்கலாம். அமெரிக்கா போன்ற நாடுகளில் 20 முதல் 50 லிட்டர் வரை ஒரு மாடு பால் தருகிறது. ஆனால் தமிழ்நாட்டிலோ பெரும்பாலான மாடுகள் 2 முதல் 5 லிட்டர் தான் தருகின்றன. 8 முதல் 18 லிட்டர் வரை கறக்கும் மாடுகளும் உண்டு. ஆனால், எண்ணிக்கையில் மிகக் குறைந்தவை. ஆனால், தமிழ்நாட்டிற்குத் தரமான கால்நடைப் பண்ணைகள் அமைக்கும் திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது நமது கருத்து. கருத்து மட்டுமல்ல வேண்டுகோளும் கூட.
தமிழ்நாட்டில் இன்று இளைஞர்கள் திசைதெரியாமல் திகைத்து நிற்கின்றனர். இதற்குப் பெரிதும் காரணம் வேலையில்லாதத் திண்டாட்டமே. தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு நிலவரம் இதோ:வேலையின்மை
(31 டிசம்பர் 1984 முடிய பதிவில் உள்ள வேலையற்றோர் எண்ணிக்கை)
1. | மாவட்ட வேலை வாய்ப்பு பதிவு அலுவலகங்கள் | 1,361,980 |
2. | துணை வேலை வாய்ப்பு அலுவலகங்கள் | 2,42,868 |
3. | உயர்கல்வி (professional) வேலை வாய்ப்பு அலுவலகம் (Employment office) | 37,031 |
4. | மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் (தொழில் நுட்ப பிரிவினர்) மதுரை, சென்னை, திருச்சி) | 59,402 |
5. | உடல் ஊனமுற்றோர்க்கான சிறப்பு வேலைவாய்ப்பு பதிவு அலுவலகங்கள் | 6,659 |
மொத்தம் | 1,707,940 |
மொத்த வேலைவாய்ப்பு அலுவலகங்கள் 39
வேலையின்மை குறியீடு விவரம் (1970=109)
பொருள் | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | |
1. | பதிவு செய்தவர்கள் | 126.4 | 127.4 | 142.9 | 136.9 | 138.1 |
2. | வேலை வாய்ப்பு பெற்றவர்கள் | 126.7 | 159.2 | 174.2 | 179.2 | 142.8 |
3. | பதிவு செய்து காத்திருப்பவர்கள் | 275.8 | 314.0 | 352.6 | 382.6 | 425.4 |
இன்று தமிழ்நாட்டிலும் சரி, இந்திய நாட்டளவிலும் சரி மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மேம்பாடு குறித்து நாடு தழுவிய விவாதம் நடக்கிறது. இஃதொரு நல்ல சகுனம். பிற்படுத்தப்பட்டோருக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடுகள் பற்றிய சட்டங்கள் உள்ளன. இவையெல்லாம் மகிழ்ச்சிக்குரிய நட வடிக்கைகளே! ஆயினும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர். பிற்படுத்தப்பட்டோர் பெரும்பாலும் கிராமங்களில் தான் வசிக்கின்றனர். கிராமப்புறங்களில் தரமான கல்வி இல்லை. பொதுவாக ஆரம்பக் கல்வியில் அதிலும் குறிப்பாக மூன்றாவது வகுப்பு வரை போதிய கவனம் செலுத்தினால் நல்ல தரமான படிப்பாளிகளை எதிர்கால அறிஞர்களை உருவாக்கமுடியும். இத்துறையில் தமிழகம் மிகவும் பின்தங்கி உள்ளது. தமிழ்நாடு அறக்கட்டளை, தமிழ்நாட்டின் சிற்றுரர்களில் உள்ள ஆரம்பப்பாட்சாலைகள் சிலவற்றைத் தரமான கல்விகொடுக்க முயற்சி செய்வது தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் துணை செய்யும்.
இஃது ஓர் அறிவியல் உலகம், இன்றைய உலகத்தை அறிவியல் இயக்குகிறது. இயந்திரமூளை வந்துவிட்டது. இயந்திர மனிதன் உருவாகிவிட்டான். இத்துறையில் மற்ற நாட்டு மக்களைப்போல் தமிழ்மக்கள் வளரவேண்டும். அப்போதுதான் உலகத்தோடு நமது நாடும் ஒருசேர வளர முடியும். ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுத்துக்களைப் பெற்ற ஜப்பான் அறிவியல் துறையில் குறிப்பாக மின்னணுவியல் துறையில் வளர்ந்து உலகத்தில் வலிவும் வளமும் பெற்றுள்ள நாடுகளின் வரிசையில் முன்னிலையில் இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? உலகின் எல்லா நாடுகளிலும் பயிற்றுமொழி தாய்மொழியாகவே இருக்கிறது. தாய்மொழிவழிக்கல்வி சிந்தனையை வளர்ப்பது. அயல்மொழிவழிக் கல்வி மனப்பாடம் மட்டுமே. அறிவை விரிவு செய்யவும் அகண்டமாக்கவும் தாய்மொழிவழிக்கல்வியே துணைசெய்யும். நமது தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பயிற்று மொழியையும் இந்திய அரசின் ஆட்சி மொழியையும் ஒன்றாக எண்ணிக் குழப்புகின்றனர். ஆட்சி மொழியில் நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும். இதற்கு ஆங்கிலத்தை ஒரு மொழியாக கற்றால் போதும். அறிஞர்கள், விஞ்ஞானிகள், தொழில் மேதைகள் உருவாகத் தாய்மொழி தமிழே பயிற்சி மொழியாக இருத்தல் வேண்டும். தமிழ்மொழி காலந்தொறும் அவ்வக்காலத்திற்கேற்ப வளர்ந்து வந்தமொழி. ஆனால் ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு இன்றுவரை இந்த நூற்றாண்டின் செல்வமாகிய அறிவியல் செல்வத்தைத் தமிழ் பெறவில்லை; நூல்கள் இல்லை என்கின்றனர். தேவை தோன்றினால் தானே படைப்புகள் தொடரும். ஆதலால், தமிழ்நாடு அறக்கட்டளை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு அப்பல்கலைக்கழகத்தின் அறிவியற்புலத்தினை முழுமையாக இயக்கவேண்டும். தமிழில் அறிவியல் ஆய்வுகள் நிகழவும் நூல்கள் எழுதவும் வெளியிடவும் தமிழ்நாடு வளர்ச்சி அறக்கட்டளை உதவி செய்யவேண்டும். இது காலத்தால் செய்யவேண்டிய கட்டாயக் கடமை. இன்று இத்துறையை நாம் கவனிக்கத் தவறினால் தமிழர்கள் உலக இனமக்களுடன் நிற்க முடியாமல் பின்தங்கி விடுவர். அதுமட்டுமல்ல. தமிழ்நாட்டிலும் இருண்ட நிலை உருவாகிவிடும். ஏன்? ஒளிவு மறைவு இல்லாமல் இந்தி மொழியைவிடத் தமிழ்மொழியில் பின் தங்கி விடும். அவ்வழி தமிழ்மக்களும் தாழ்வர். தமிழ்நாட்டில் மீண்டும் மேட்டுக்குடி ஆட்சி முறை உருவாகும். இதை விரும்புகிறீர்களா? உங்களில் யாரும் விரும்பமாட்டீர்கள் என்று நம்புகின்றோம்.
அதுபோலவே அறிவியலைத் துறைதோறும் தாய் மொழியில் கற்பிக்க முன்வரும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கு அறிவியல் ஆய்வுக் கூடங்கள் அமைக்க உதவி செய்யலாம். நடமாடும் அறிவியல் ஊர்திகள் அமைத்து மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு வழங்கி மாணவர்களுக்கு அறிவியல் கல்வியையும் பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வையும் உண்டாக்கலாம். இது தொடர்பாக நம்முடைய சொந்த வேண்டுகோளையும் தமிழ்நாடு அறக்கட்டளை முன் வைக்க விரும்புகின்றோம். பசும்பொன் தேவர் திருமகன் மாவட்டத்தில் அறிவியல் பணிசெய்யும் சுதேசி விஞ்ஞான இயக்கத்திற்கும் மாவட்ட அறிவியல் மன்றத்திற்கும் ஒரு நடமாடும் அறிவியல் ஊர்தி அவசிய அவசரத் தேவையாக இருக்கிறது. இத்துறையில் நாம் இப்பொழுது செய்துவரும் பணியை அங்கீகரித்துத்தான் இந்தியப்பேரரசு, நமக்கு தேசீய விருது வழங்கிப் பாராட்டியிருக்கிறது. இந்தப் பணி மேலும் சிறப்பாக அமைய ஒரு நடமாடும் அறிவியல் ஊர்தி வாங்கி வழங்கினால் மிகவும் உதவியாக இருக்கும். இந்த வகையில் தமிழ்நாட்டு அரசு உதவி போதிய அளவு கிடைப்பதில்லை. அதுபோலவே தமிழ்வழிக் கற்கும் தரமான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து உதவி செய்தால் இந்தியப் பணித் துறையில் சரிந்துவரும் நமது தகுதியை உயர்த்திக் கொள்ள இயலும்.
இன்று தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் வறுமை வளர்ந்து வருகிறது. பணவீக்கத்தினால் ஏற்பட்ட பணப் புழக்கம் கூட கிராமங்களில் இல்லை. கிராமங்கள் வளர்ந்தாலே நாடு வளரும். கிராமப்புற வளர்ச்சிக்கு முன்சொன்ன திட்டங்கள் அனைத்தும் உரியனவே. தமிழ்நாட்டில் சில சிற்றுார்களைத் தத்து எடுத்து முழுமையான வளர்ச்சிக்குக் "குன்றக்குடி மாதிரி"(Kundrakudipattern) திட்டமிட்டுச் செய்ய முன்வரும் தொண்டு நிறுவனங்களுக்குத் தமிழ்நாடு அறக்கட்டளை உதவலாம். குன்றக்குடியிலும் ஒரு மருத்துவமனை, திருமண மண்டபம் கட்டவேண்டும். கிராமத்திட்டக் குழுவிற்குக் கூட்டச்செலவு, நிர்வாகச்செலவு ஆண்டுதோறும் ஒரு லட்சரூபாய் வருகிறது. இந்தச் செலவைத் தற்போது குன்றக்குடி ஆதீனம் ஏற்றுள்ளது. குன்றக்குடியில் திருமண மண்டபம் தமிழ்நாடு அறக்கட்டளை கட்டித்தந்து அதன் வருவாயிலிருந்து தொடர்ந்து திட்டமிடலும் வளர்ச்சிப்பணிகளும் நிகழும். குன்றக்குடியில் மட்டுமல்லாமல் மற்ற இடங்களிலும் இந்தப்பணியைச் செய்ய உதவியாக இருக்கும்.
தமிழ்நாடு அறக்கட்டளை நிறுவனத்தாரின் நல்லெண்ணத்திற்குப் பாராட்டு! தமிழ்நாட்டின் வளர்ச்சியை உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அணுக மாட்டீர்கள் என்று நம்புகின்றோம். அதோடு நெடிய பயன் தராத திட்டமில்லாத தர்மங்களையும் இலவசங்களையும் விரும்பமாட்டீர்கள் என்று நம்புகின்றோம். இந்தியாவிலேயே ஐந்தாவது திட்டத்திற்குப்பிறகு திட்டமிடுதலிலேயே தாமதம். திட்டச் சார்பில்லாத செலவினங்களே நம்முடைய அரசில் அதிகம். கிட்டத் தட்ட அரசையும் தேர்தல் சாதனமாக மாற்றிக் கொண்டு வருகின்றனர். இத்தகைய தவறுகளைத் தமிழ்நாடு அறக்கட்டளையினர் செய்யவேண்டிய நெருக்கடி இல்லை என்றே நம்புகின்றோம். தமிழ்நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு நெடுந்தொலைவு நோக்குடன் திட்டமிடுங்கள்! இத்துறையில் தமிழ்நாட்டில் ஓர் ஆலோசனைக் குழுவை அமையுங்கள்! இந்த ஆலோசனை குழுவில் தமிழ்நாட்டின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களை, அறிவியல் மேதைகளை இடம்பெறும்படி செய்யுங்கள்! இந்திய தேசிய விஞ்ஞான மையங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். காரைக்குடியில் அமைந்துள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வக இயக்குநரும் மற்ற விஞ்ஞானிகளும் இந்தவகையில் உங்களுக்குப் பூரண ஒத்துழைப்புக் கொடுப்பார்கள் என்று அவர்கள் சார்பில் உறுதி கூறுகின்றோம். தமிழ்நாடு வளர், இலக்குகளை வடிவமைப்போம்! ஒருங்கிணைந்த உணர்வுடன் உழைப்போம்! நன்றி!
31. அழகப்பா பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாப் பொழிவு
4-4-1994
அழகப்பா பல்கலைக் கழக வேந்தர் அவர்களே! துணைவேந்தர் அவர்களே! பேராசிரியப் பெருந்தகையர்களே! மாணவர்களே! திருவருள் துணையால் வாழிய நலத்துடன்; வளத்துடன்!
அழகப்பா பல்கலைக் கழகம் தோன்றுதற்குக் காரணமாக அமைந்த வள்ளல் அழகப்பர் அவர்கள் அறிவைத் தேடுவதில், அறிவைத் தருவதில் ஆர்வம் மிக்கவர். பொதுவாக நகரத்தார் வட்டித் தொழில் செய்யும் இயல்பினர். தனி வட்டி என்ற வழக்கில், கூட்டு வட்டியே நடைமுறை. ஆனால் அழகப்பர் கொழுத்த வட்டி ஈட்டித்தரும் முதலீடு என்று கூறப்பெறும் "கல்வியில் முதலீடு” செய்தார். அருகில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் வள்ளல் டாக்டர் அழகப்பர் முயற்சியினாலும் முதலீட்டினாலுமே காரைக்குடிக்கு வந்தது. இன்று இந்த ஆராய்ச்சி நிறுவனம் நமது பகுதிக்கும் நாட்டிற்கும் செய்து வரும் தொண்டு அளப்பரியது. வள்ளல் டாக்டர் அழகப்பர் கொடையில், மழலையர் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரையில் தோன்றி வளர்ந்தன; வளர்ந்து வருகின்றன. பல ஆயிரக்கணக்கான அறிஞர்களை நாட்டுக்குத் தந்துள்ள பெருமை, அழகப்பா கல்வி நிறுவனங்களுக்கு உண்டு.
- "மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
- பெருந்தகை யாக்கப் படின்”
என்ற திருக்குறளுக்கும்,
- "இம்மைச் செய்தது மறுமைக்காம் எனும்
- அறநிலை வாணிகன் ஆய்அலன்"
என்ற புறநானூற்று வரிகளுக்கும் வள்ளல் டாக்டர் அழகப்பர் இலக்கியமானவர்.
வள்ளல் அழகப்பர் புகழ் வளர்க! வாழ்க!
கம்பன் இலக்கிய உலகில் புதிய தடத்தைக் கண்டான்; அந்தத் தடத்தை நமக்கும் காட்டுகிறான். கம்பனுக்கு முன் அனைவரும் கடவுள் வெற்றி பெற்றார் என்றனர். சிலர் மன்னன் வெற்றி பெற்றனன் என்றனர். இலக்கிய உலகில் முதன்முதலில் "மானுடம் வென்றதம்மா!" என்று பாடுகிறான் கம்பன்! ஆம்! மானுடம் வெற்றி பெறவேண்டும் என்பது கம்பனின் விருப்பம்; விழைவு.
- "எவ்வழி நல்லவர் ஆடவர்
- அவ்வழி நல்லை வாழிய நிலனே!"
என்று புறநானூறு கூறும்! மானுடம் வெற்றிபெறுதல் வேண்டுமெனில் மானுடத்தின் பொறிகளும் புலன்களும் நனி சிறந்து விளங்குதல் வேண்டும். மானிடர் அறிவுடையராதல் வேண்டும்.
- "அறிவுடையார் எல்லாம் உடையார்”
என்பது திருக்குறள். சென்ற காலத்தில் மானுடம் வெற்றி பொருந்திய வரலாற்றை இயக்கி வந்தமையை வரலாற்றில் காண்கிறோம். இலக்கியங்களில் படிக்கிறோம். ஆயினும் மானுடத்தின் வரலாற்றில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை அலட்சியப்படுத்திவிட முடியாது. மானுடத்தின் வரலாற்றில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இன்றைய தலைமுறை அந்த பின்னடைவுகளைத் தவிர்க்க வேண்டும். இஃது இன்றைய இளைய பாரதத்தின் முன்னுள்ள கடமை.
இன்று நம்முடைய சமுதாயத்தை நாம் வழிநடத்திச் செல்லவில்லை; செல்ல இயலவில்லை. ஏன்? இன்று நம்முடைய வாழ்க்கைப் போக்கின் அமைப்பினால், சமுதாயம் என்ற ஒன்றே இன்னமும் உருக்கொள்ளவில்லை. நாம் ஒரு கூட்டமாக வாழ்கிறோம். ஆனால், கூடித் தொழில் செய்து வாழவில்லை நம்முடைய நாட்டில் கூட்டுறவு போதிய வெற்றியைப் பெறவில்லை. நாம் ஒரு சமுதாயமாக வாழ முயன்றோம். இல்லை! காடுபோல வாழ்கிறோம்! தோட்டம்போல, தோப்புப்போல வாழ முயன்றோம் இல்லை. பன்னூறு ஆண்டுகளாக எப்படியோ விளைந்த வேற்றுமைகள் மேலும் மேலும் வளர்கின்றன.
இந்தியா, நிலப்பரப்பால் ஒரு நாடுதான! ஆனால், நாம் அனைவரும் இந்தியராகவில்லை. சாதிகள், மொழிகள், மதங்கள் ஆகியன நம்மை வேற்றுமைப் படுத்துவதில் - ஒருவருக்கொருவரை அந்நிய படுத்துவதில் போதிய வெற்றிகளைப் பெற்றே வருகின்றன. இது மறுக்கமுடியாத - வருந்தத்தக்க உண்மை. நம்மை இந்தப் புவியில் - புவிக்கோளத்தில் நடக்கும் சம்பவங்கள் - நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. சம்பவங்களும் நிகழ்ச்சிகளும் நம்முடைய ஆளுமைக்குக் கட்டுப்பட்டனவாக இல்லை. புவி ஈர்ப்பு ஆற்றலால் பொருள்கள் கீழே விழுதல்போல, புவியின் நிகழ்வுகள் நம்மை இழுத்துச் செல்கின்றன; அல்லது ஆட்டிப் படைக்கின்றன. நாம் உணர்ச்சி வசப்படுகிறோம். நம்மை சுற்றிலும் நடக்கும் சம்பவங்கள் - நிகழ்வுகள் நம்மைக் கடுமையாகப் பாதிக்கின்றன. இந்த பாதிப்புக்களே நம்மை வழி நடத்துகின்றன; வாழ்தலுக்கும் காரணமாகின்றன. நாம் இந்தப் புவியை இந்தப் புவியின் வரலாற்றைத் திட்டமிட்டு நடத்தவேண்டும். புவியை நடத்துக! நடத்துக புவியை!
மானுடம் இந்தப் புவியை நடத்த அறிவு என்ற கருவியைப் பெற்றாக வேண்டும். அறிவை "கருவி” (Instrument) என்று திருக்குறள் கூறுகிறது. தகவல்களின் தொகுப்பு அறிவு அல்ல. அறிவு ஒரு கருவி. வாழ்க்கையைத் துன்பத்திலிருந்து பாதுகாக்கும் கருவி அறிவு.
- "அறிவு அற்றம் காக்கும் கருவி"
என்பது திருக்குறள். இந்த அறிவைத் தேடவேண்டும். நல்லறிவு எந்த மூலையில் இருந்தாலும் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் தேடிச்சென்று அடைதல் வேண்டும். நபிகள் பெருமான் "சீனத்திலாயினும் அறிவை அடையத் தவறாதே" என்றார். அறிவு மனிதனை, மனித குலத்தைத் துன்பத்திலிருந்து துயரங்களிலிருந்து பாதுகாக்கும் கருவி என்பது திருக்குறள் கருத்து.
அறிவைப் பெறுதலுக்குரிய சாதனங்கள் பலப்பல. அவற்றுள் தலையாயது கல்வி. "கற்க" என்று திருக்குறள் கூறுகிறது. 'கற்க என்பது எக்காலத்துக்கும் இயைந்து நிற்கும் ஆணைச்சொல். "கற்க "கற்றுக்கொண்டே இருப்பாயாக" என்கிறது. கற்றல் என்பது ஒரு தொடர் பணி! இன்று பட்டம் பெறும் மாணவர்கள் தொடர்ந்து கற்க வேண்டும், வாழ்நாள் முழுதும் கற்க வேண்டும். ஆம்! ஒவ்வொருவரும் படைப்பாற்றல் மிக்க மனிதனாகும் வரையில் கற்க வேண்டும். கற்றல் என்பது நாள்தோறும் செய்யக்கூடிய இயல்பான பணி என்று கலித்தொகை கூறும். கற்க என்று அறிவுறுத்திய திருவள்ளுவர் "கசடறக் கற்பவை கற்க” என்று தொடர்ந்து கூறுகிறார். சிலர் கூறுவது போலப் பிழையின்றிக் கற்றலை 'கசடறக் கற்க” என்று திருவள்ளுவர் கூறியிருக்க மாட்டார். முன்னோடியான, வெற்றி பொருந்திய வாழ்க்கையை நடத்தவேண்டும். இதற்குத் தடையாகப் பல குற்றங்கள் ஆன்மாவில் பொருந்தியிருக்கின்றன. நமது முன்னேற்றத்திற்குத் தடையாக ஆன்மாவிடத்தில் அமைந்துள்ள குற்றங்கள் எவை எவை என்று கண்டறிதல் வேண்டும். தற்சலுகையின்றி கண்டறிதல் வேண்டும். உடற்பிணி, உணவாலும் மருந்தாலும் போகும். ஆன்மாவைச் சார்ந்த பிணி நல்ல நூல்களின் கருத்துக்களினாலேயே நீங்கும் நூலகத்தை "உயிர் மருந்தகம்" என்றழைப்பதும் உண்டு.
மாணவ நண்பர்களே! உங்கள் முன்னேற்றத்திற்குத் தடை வெளியே இல்லை. உங்களிடத்திலேயே தடையிருக்கிறது! தடைகளாக இருக்கும் குற்றங்களைக் கண்டுணர்க! அந்தக் குற்றங்கள் நீங்குதலுக்குரிய நூல்களைத் தெரிந்தெடுத்துக் கற்பீர்களாக! தொடர்ந்து கற்பீர்களாக! இங்ஙனம் தொடர்ந்து கற்கும் கல்வியே நமக்குத் துணை. நமக்கு பலம்! இலக்கியங்களில் படிக்கத் தக்கன பழைய இலக்கியங்கள்! அறிவியல் நூல்களில் படிக்கத்தக்கன புதிய நூல்களாகும்.
உண்ணும் உணவு உடலுக்கு வலிமையாதல் போல், கற்கும் கல்வி அறிவாகி, உணர்வாகி, ஒழுக்கமாகி, செயலாகிப் பயன் தரவேண்டும். கற்கும் கல்வி, மனிதத்தை உருவாக்குதல் வேண்டும். ஒரு காலத்தில் கல்வியே கூடப் பிரிவினைக்குக் கருவியாக அமைந்தது. பிற்காலத்தில்தான் பிரிவினைகளை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர். ஆனால், இன்னமும் பூரண வெற்றி கிடைத்தபாடில்லை. கல்வி, அன்பையும் இன்பத்தையும் மானுடத்திற்குத் தரவேண்டும். அதுவே கல்வி கற்றலும் கேட்டலும் அறிவு பெறுதலுக்குரிய வாயில்கள் ! நாள்தோறும் கற்றலும் கேட்டலும் உடையவர்களைப் பெரியோர் என்று திருஞானசம்பந்தர் போற்றினார்.
"கற்றல் கேட்டலுடையார் பெரியார்”
என்பது திருஞானசம்பந்தர் வாக்கு
இன்றைய உலகம் சுருங்கிவிட்டது. ஆதலால் நமது கல்வியும் உலகந்தழுவியதாக அமைதல் வேண்டும். உலகந்தழழீ இய ஒட்பம் நமக்குத் தேவை. நிறைய சாளரங்கள் உள்ள மாளிகை, நல்வாழ்க்கைக்கு ஏற்றது. உலகந்தழுவிய ஒட்பம் பெற, மொழிகள் என்ற சாளரங்களைத் திறந்து விடுங்கள்! பல மொழிகளைக் கற்பது நல்லது. குறைந்தது நான்கு மொழிகளை கற்றவர்கள் பலவான்களாக விளங்குவர். மொழிச் சாளரங்களைச் சாத்திவிடாதீர்கள். ஒரு மொழியின் ஆதிக்கத்தை எதிர்ப்பதையும் அம்மொழியைக் கற்பதையும் ஒன்றாகக் கருதக்கூடாது. நமது தலைவர்கள் ஆங்கிலேயர் களுடைய ஆதிபத்தியத்தை எதிர்த்தார்கள்; ஆனால் ஆங்கிலத்தைத் துறைபோகக் கற்றிருந்தனர், ஆங்கிலேயர்கள் மெச்சும் அளவுக்கு ஆங்கிலம் பேசினார்கள். இது இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக அமையும் என்று நம்புகிறோம்.
பல மொழிகளைக் கற்க வேண்டும் என்று சொல்வதால் தாய் மொழியின் நிலை என்ன?
"வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ"
என்று பாரதி கூறியதை நினைவு கூர்க.
தாய்மொழிக் கல்வி மரத்திற்கு மண்போல இன்றி யமையாதது. மாணவர்கள் தமிழ் வழியாகக் கற்கும் வாய்ப்பை இன்னமும் பெறவில்லை. அறிவியல் துறைகள் பலவற்றையும் தாய்மொழியின் வாயிலாகக் கற்க வேண்டும். கல்விக்குச் சிந்தனை அவசியம். இன்று பொதுவாகக் கல்வித் துறையில் சிந்தனைத் திறனும் படைப்புத் திறனும் குறைந்து வருகின்றன. அதற்குக் காரணம் தாய்மொழிவழிக் கல்வி இல்லாமல் போனதேயாம். அதனால் தமிழரிடத்தில் அறிவியல் சார்ந்த வளர்ச்சி போதுமானதாக அல்லது வளர்ந்துவரும் காலத்தின் தேவையை ஈடு செய்யக்கூடியதாக இல்லை. தமிழர் வாழ்வு சிறக்க, தமிழ் வளர தாய்மொழி வழி அனைத்துத் துறைகளும் கற்பிக்கப் பெறுதல் வேண்டும். ஆய்வு நோக்கில் ஆங்கில மொழியை ஒரு மொழியாகப் படித்துத் தேர்ச்சி பெறவேண்டும். கல்வியில் இந்த செயல்முறை அவசியமானது.
இன்றைய இந்தியா நெருக்கடியான, ஆனாலும் நிலையான முன்னேற்றத் திசையில் சென்றுகொண்டிருக்கிறது. நாட்டின் முன்னேற்றத்திற்குப் பணி செய்யக்கூடிய் கடமை ஆர்வலர்களை, அறிவறிந்த ஆள்வினையுடையோரை நாடு அவாவிக் கொண்டிருக்கிறது. சுயநலமின்றி, முற்றாகக் கையூட்டு முதலிய பலவீனங்களில் சிக்காமல் நாட்டிற்கு ஊழியம் புரியும் சக்தியை இன்றைய இளையபாரதம் பெற வேண்டும். இது நமது வேண்டுகோள்! பிரார்த்தனை!
மண்புழுவைப் பாருங்கள்! மெளனமாக அந்த மண்புழு உழைப்பு இயற்றுகிறது. ஆனால், மானுடத்தின் வாழ்க்கையில் ஆரவாரம் மேம்படுகிறது. விளம்பர நெடியே அடிக்கிறது. விளம்பரம் வேறு, புகழ் வேறு. இன்றைய இளைஞர்களே புகழ் புரிந்து வாழுங்கள்! வேண்டாம் விளம்பரம்! இளையபாரதம் இன்புறு நலன்கள் அனைத்தும் பெற்று வாழ்க! இது நமது விருப்பம்; விழைவு; பிரார்த்தனை. ஆயினும், "இளைய நண்பர்களே! இன்பங்களைப் பெருக்கிக் கொள்வதிலிருந்து விடுதலை பெறுவீர்! வாழ்க்கைக்கு இலக்குகளை நிர்ணயிப்பீர்களாக குறிக்கோள் இதுவெனக் கூறிக்கொள்வீராக! நமது குறிக்கோள் எதிர்காலமாக அமையட்டும்! நமது குறிக்கோள் சொர்க்கம் அடைவதாகவோ, முக்தி அடைவதாகவோ அமைவதை விரும்பாதீர்கள்! நாம் வணங்க வேண்டிய முதல் தெய்வம், நமது நாட்டில் வாழும் மக்களே!” என்று விவேகானந்தர் அறிவுறுத்திய அறிவறிந்த ஆள்வினையை மேற்கொண்டு நாட்டை மேலும் மேலும் தற்சார்புடையதாக்குக!
"நாடென்ப நாடா வளத்தன”!
என்ற திருக்குறளுக்கு இசைந்த நாடாக நமது நாட்டை அமைத்திடுக. இந்தியாவை வருத்தும் அறியாமை, வறுமை, ஏழ்மை ஆகியவற்றை எதிர்த்துப் போராடுக! ஒருமைப்பாடு காண்பீராக! புதிய பாரதம் உருவாகட்டும்!
இந்தியா தனக்கெனப் பண்பாடும் நாகரிகமும் பெற்று விளங்கும் புகழ் பூத்த நாடு.
"ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள்
உலகின்பக் கேணி”
"எல்லாரும் அமரநிலை எய்தும் நன் முறையை
இந்தியா உலகிற்கும் அளிக்கும்! - ஆம்!
இந்தியா உலகிற்கு அளிக்கும்."
என்று பாரதி கூறிய வாசகங்களை உணர்க! பாரதியின் வாக்கை வரலாறு ஆக்கும் சாதனையைச் செய்வீர்களாக!
இந்தியா ஒரு நாடு. அரசியல் ரீதியாக இந்தியா ஒரு நாடானது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகளை ஆட்சி யாளர்கள். வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடலாம். ஆனால், பண்பாடு, கலாச்சார ரீதியில் இந்தியா ஒரு நாடாக வரலாற்றிற்கு எட்டாத காலத்திலேயே விளங்கியது. பழைய இந்தியாவில் பல மொழிகள் பேசப்பெற்றன. பல மதங்களும் அனுஷ்டிக்கப் பெற்றன. ஆயினும் கலாசாரம் ஒன்றாகவே விளங்கியது. இது இந்த உலகத்திலேயே ஒரு புதுமை, "வட பெருங்கல் - தென்குமரி” என்று தமிழ் இலக்கியங்கள் கூறும். யாத்திரை பற்றி "காசி - இராமேசுவரம்" என்று சொல்லப்படும் வழக்கு பலரும் அறிந்ததே. பாவேந்தன் பாரதிதாசன்.
"இமயச் சாரவில் ஒருவன் இருமினால்
குமரியிலிருந்து மருந்து கொண்டு ஓடினான்."
என்று கூறியபடி ஒருமைப்பாட்டினை - உணர்வு பூர்வமான ஒருமைப்பாட்டினை வளர்த்துக் காப்போம்!
ஒன்று சேர்ந்து நம்மைக் காத்துக் கொள்வோம்!
ஒன்று சேர்ந்து உண்போம்!
ஒன்று சேர்ந்து வீரியம் பெறுவோம்!
ஒன்று சேர்ந்து அறிவொளி பெறுவோம்!
எவரையும் வெறுக்காமல் இருப்போம்!
ஓம் சாந்தி! ஒம் சாந்தி! ஒம் சாந்தி!”
என்னும் பழைய உபநிஷத் வாசகத்தை நினைவு கூர்வோம்!
இந்தியாவின் ஒருமைப்பாடு இந்தியாவின் பலம். இந்தியாவை ஒரு வலிமையான நாடாக உருவாக்க முதல் தேவை இந்திய ஒருமைப்பாடு. இதனை வளர்த்துக் காத்துக் கொள்ள உறுதி கொள்வோம்.
இன்று இந்தியாவில் பொருளாதார நெருக்கடி இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கிறது.இந்த சூழ்நிலையிலிருந்து தப்பப் புதிய பொருளாதாரக் கொள்கை மூச்சுவிட அனுமதிக்கிறது. ஆயினும் போதிய பயன் - இளையபாரதம் பயனுறத்தக்க வகையில் அமையுமா? "டங்கல்" எங்கு அழைத்துக் கொண்டு செல்லும் என்ற வினாக்குறிகள் இளையோரிடம் எழுவதை நம்மால் கேட்க முடிகிறது. அவர்களின் பெருமூச்சும் தெரிகிறது. ஆயினும் தளராதீர்! இந்தியாவைத் தற்சார்பான பொருளாதார நாடாக்கச் சபதம் ஏற்பீர்! சுரண்டும் பொருளாதாரக் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்! உண்மையான சுதந்தரம், சமத்துவம் ஆகிய கொள்கைகளுக்கும் சுயநலத்திற்கும் தொடர்பே இல்லை! ஆனால், இன்றுள்ள நிலை வேறு. சுதந்தரத்தின் பொருள் உணர்வீர்! சமத்துவ சாத்திரம் ஏற்பீர் கடின உழைப்பினை மேற்கொள்வீர்! புதியதோர் உலகம் அமைப்பீர்களாக. புறநானூற்று நெறியில் "பிறர்க்கென முயலும் நோன்பினை" நோற்பீராக!
இன்று நம்மை வருத்தும் பண மதிப்பீட்டுச் சமுதாயம், பண வீக்கம் முதலிய துன்பங்களிலிருந்து விடுதலை பெறவேண்டும். நாட்டை நலிவுறச் செய்யும் கருப்புப் பணப் பொருளாதாரம் என்ற புற்று நோயிலிருந்து நாட்டைப் பாதுகாக்கவேண்டும். நம்முடைய நாட்டுப் பொது வாழ்வின் தரம் வரவரக் குறைந்து வருகிறது; வன்முறைகள் வளர்வது வருந்தத்தக்கது. இந்தியா வளரும் நாடாக விளங்கி, நமது இளையபாரதம் வறுமைக்கோட்டினை அகற்றுதல் வேண்டும். இது நமது எதிர்பார்ப்பு.
நமது நாட்டினை வளப்படுத்துவதற்குரிய வாயில்கள் நமக்கு நிறைய உள்ளன. இன்னும் நமது நாட்டில் கோடிக்கணக்கான ஹெக்டர் நிலம் தரிசாகக் கிடக்கிறது. இந்நிலத்தையெல்லாம் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். கால்நடை வளர்ப்பு, இன்றுவரை நமது நாட்டில் கட்டுபடியாகக்கூடிய ஒரு தொழிலாக வளரவில்லை; இடம் பெறவில்லை. வேளாண்மை அறிவியலும் கால்நடை வளர்ப்பும் இணைந்து, முறையான "அறிவியல் சார்ந்த தொழில் நுட்ப”த்துடன் இயற்றப்படின் நமது நாட்டில் நிலையான பொருளாதாரம் உருவாகும். இன்றைய தொழிலை அறிவியல் சார்ந்த தொழில் நுட்பத்துடன் இன்றையக் கருவிகள் கொண்டு செய்தால்தான் வெற்றி பெற இயலும். ஆய்வகங்களின் அறிவியல் சார்ந்த முடிவுகளுக்கும் மக்களின் செயற்பாட்டுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைக்கப்படுதல் வேண்டும். விஞ்ஞானத்தை விளை புலன்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சி வெற்றி பெறுதல் வேண்டும். அன்றுதான் பாரதம் வளரும்!
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு வெகு வேகமாக முன்னேறி வந்தது. உணவில் தன்னிறைவு அடைந்தது; அணு ஆராய்ச்சி, விண்வெளி ஆராய்ச்சி முதலியவற்றில் முதலிடம் பெற்றது. ஆயினும் அண்மைக் காலமாக ஒரு பின்னடைவு ஏன் ? காரண காரியங்களை ஆய்வுசெய்து காலத்தை வீணாக்குவதில் பயன் இல்லை. நம்முடைய முன்னோர், தலைமுறை தலைமுறையாகப் பல்வேறு சிறந்த இலக்கியங்களையும், விண்ணளந்து காட்டி வினைமறைக்கும் கோயில்களையும் தந்து சென்றனர். எங்களுக்கு நேர் மூத்த தலைமுறை நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்தது. நாங்கள் இளைய பாரதத்தினராகிய உங்களுக்கு எதையும் புதிதாகத் தரக்கூடிய நிலையில் இல்லை! எங்களை மன்னித்து விடுங்கள்! நாடு உங்களைத் தாங்க வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள்! நாட்டை நீங்கள் தாங்க வேண்டிய திருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். இந்தியத் தேர், இடைவழியில் சகதியில் - சேற்றில் சிக்கிக் கொண்டு நிற்கிறது. இந்தியத் தேரின் சக்கரங்கள் அந்நிய மூலதனம், சாதிச் சழக்குகள், மதப்பிணக்குகள் ஆகிய சகதிகளில் சிக்கிக் கொண்டு புதைந்து நிற்கிறது. சுயநலம், கையூட்டு ஆகியன மோதி தேரின் அச்சு முறியும் நிலையில் இருக்கிறது. இளைய பாரதத்தினரே! உடன் தோள் உயர்த்தி வாருங்கள்! தேரைத் தூக்கி நிறுத்துவோம்! அதன்பின் வடம் பிடித்துத் தேரை எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதான இடம் நோக்கி இழுத்து, தேரினை நிலை சேர்ப்போம். இருபத்தோராம் நூற்றாண்டுக்குள் இந்தியத் தேரினை தேர் நிலைக்குக் கொண்டு சேர்க்கும் வலிமையை இளையபாரதம் பெறுக.
வளர்க வள்ளல் அழகப்பர் புகழ்!
'பொன்'னுரை
தவத்திரு பொன்னம்பல அடிகளார்
நேரு பெருமகனாரின் பொது வாழ்க்கையில் மகாத்மாவின் தாக்கம் இருந்தது. ஒரு படைப்பாளியின் படைப்புகளில் தாம் ஏற்றுக்கொண்ட இலட்சிய புருஷரின் தாக்கம் இருப்பது இயல்பு வெகுசிலருக்கே தாம் ஏற்றுக்கொண்ட இலட்சியத் தலைவர் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவது உண்டு. பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு விண்பழித்து மண்ணில் கால்பதித்து இறைவன் திருவடி தீட்சை தருவது உண்டு. இறைவனின் உய்விக்கும் பணியில் சில நேரங்களில் பக்குவப்படாத ஆன்மாக்களுக்கும் அவன் அருட்பார்வை அமைந்து விடுவதுண்டு.
‘தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!'
என்று குருவருள் வழியே திருவருளும் துணை நிற்க, சில ஆன்மாக்களுக்கு இன்ப அன்புப்பேறு வாய்ப்பதுண்டு. மணிவாசகப் பெருமானுக்குக் குருந்தமரத்தடியில் இறைவனின் திருவடி தீட்சை வாய்க்கப் பெற்றது. கடைக்கோடி ஆன்மாவாகிய நம்மை எப்படி இறைவன் இறைபணிக்குக் குருவருளின் வழியே ஆட்படுத்தினான்? என்னே, அவன் எளிவந்த கருணைப் பெருவெள்ளம்! -
போகங்களைத் துய்த்து மகிழவேண்டிய சித்தார்த்தர் எப்படி போதிமரத்தடிப்புத்தராக மாறினார்? கண்ணியம் மிக்க ஆங்கிலக் கனவானாக லண்டன் மாநகரில் உலா வந்த மோகனதாஸ் கரம்சந்த், ஆசைகள் துறந்ததன் அடையாளமாய் ஆடைகள் துறந்து அரைநிர்வாணப் பக்கிரியாய், மகாத்மாவாய் உலா வந்தாரே! இப்படி மகத்தான மனிதப் புனிதர்களைப் போல் அல்லாமல் கனவுகளையும் கற்பனைகளையும் சுமந்து திரியும் ஒரு சராசரி இளைஞனைத் துறவுப் பாதைக்கு மாற்றியது எது? காந்தம் கண்ட இரும்புபோல் நம்மைக் கவர்ந்து இழுத்தது எது? குருமகாசன்னிதானத்திடம் பிறைநிலாவாகத் தொடங்கிய உறவு நிறைநிலாவாக வளர்ந்தது. பின்னோக்கிய நிகழ்வுகள் நம்மைக் கரைத்து இழுத்துச் செல்கின்றன.