குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2/சிந்தனைச் செல்வம்

3



சிந்தனைச்செல்வம்

அன்புநெறி

லகத்தில் சிறந்தது அன்பு. அன்பிற் சிறந்த தவம் இல்லை. ஏன்? அன்பே கடவுள்! அன்பே சிவம்! இத்தகைய உயர்ந்த அன்பு நெறி உலக உயிர்களைத் தழைத்து வளரச் செய்யும் அரிய உணவாகவும், அருமருந்தாகவும் விளங்குகிறது. உயிர், இந்த இனிய உடலோடு இணைந்தது ஏன்? உறவு கொண்டது ஏன்? இந்த வினாவுக்கு வள்ளுவம் விடை கூறுகிறது.

          அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
          என்போடு இயைந்த தொடர்பு

உடல் பாவத்தின் சுமையன்று. உயிரை அன்பினில் ஈடுபடுத்தி வளர்க்கும் கருவி உடல், உயிருக்கு உடல் கிடைக்காது போனால் ஏது காதல்? ஏது நட்பு: ஏது சுற்றம்? ஏது கடவுள் பக்தி? இவ்வளவையும் படைத்துத் துறைதோறும் உயிரை அன்பினில் வளர்த்து அன்பேயாக அமர்ந்து இன்புறத்தானே இந்த வாழ்க்கை! அதனாலன்றோ, அன்பின் திருவுருவமாக விளங்கிய கண்ணப்பரை, சேக்கிழார் "கும்பிட்ட பயன்” என்று குறிப்பிடுகின்றார். வாழ்க்கையின் உயர் இன்பமாக விளங்குவதும் அன்பு. அதை அடையும் நெறியாக இருப்பதும் அன்பு. ஆதலால், வையகத்திற்குப் பொருள் அன்பேயாம்! "அன்பலால் பொருளும் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே” என்பார் அப்பரடிகள்.

அன்பு, எளிய சொல்! ஆனால், அரிய வாழ்க்கை. அன்புடையராக இருத்தல் எளிதன்று. விண்ணுலகும்கூட அன்பை நோக்கி ஏங்கித் தவம் செய்கிறது. அன்பு நெறியை வளர்த்து மானிட சாதிக்கு உரிமையாக்க எத்தனையோ சான்றோர்கள் தம்மையே களப்பலியிட்டும்கூட முயன்றனர். அன்பு நெறி முழுமையான வெற்றியை அடையவில்லை. மானிட சாதி அன்பை வளர்த்துப் பேண சமுதாய அமைப்பையும் அப்பணிக்குத் துணையாகச் சமய நெறிகளையும் பணிக்கு இடையூறு ஏற்படின் தக்காங்கு துணை செய்ய அரசியலையும், அன்புணர்வை இடையறாது வளர்க்க இலக்கியங்களையும் தோற்றுவித்தனர்; படைத்தனர். ஆனால் முடிவு என்ன? கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிபுகுந்தது போல இந்தப் புனிதமான அன்பு நெறியின் வாயில்களே துன்பியல்களை விளைவித்திருக்கின்றன.

சமயச் சண்டைகள், நாட்டுச் சண்டைகள், மொழிச் சண்டைகள்! உலகத்தில் கானல்நீரைக் கங்கை நீரெனக் கூறுவது போலக் கூறினர். எந்தவொரு பற்றும் வரையறைகளைக் கடத்தல் கூடாது. மனித உலகம் என்ற பொதுமைக்குத் தடையாகப் பற்றுக்கள் வளர்தல் தீமை! தீவிரப் பற்றாளர்கள் வளர்ப்பது தீமையையே! அன்புடையீர், நினைமின்! மனிதரை மனிதர் வருத்தும் கொடிய கொலைக் கருவிகள் நூற்றாண்டுக்கு நூற்றாண்டு வளர்ந்து வருகின்றனவா? குறைந்து வருகின்றனவா? எட்டிய தூரத்தில் இருக்கும் மனிதனை அடிக்கும் தன்மையினனாக இருந்த மனிதன், எண்ணிப் பார்க்க முடியாத தொலைவிலுள்ள

மனிதனை, ஏன் இனிமேல் தோன்றக்கூடிய சமுதாயத்தையும் கூட உருக்குலைத்து அழிக்கக்கூடிய அணுக் கருவிகளைக் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளான்.

வாழும் மானிட சாதியை மருந்தெனக்காக்கும் அரசியலில் காழ்ப்புணர்ச்சிகள், கொலை வெறிகள்! இவற்றின் விளைவாக இயற்கையன்னையின் கொடைகளாக விளங்கும் காற்றும் தண்ணீரும்கூட கலப்படமாகும் கொடுமை! ஊர்களை, நாடுகளை, கண்டங்களை, அண்டங்களைச் சாலைகள் இணைந்து வெற்றி பெற்று விட்டன.

ஆனால், மனித நெஞ்சங்களை இணைப்பதில் நன்னெறிகள் வெற்றி பெறவில்லை. அதன் காரணமாகப் புறத்தே பொற் குவியல்கள் தோன்றினாலும் அகத்தே அமைதியில்லை. காற்றினும் கடிது செல்லும் விமானத்தில் உலகைச் சுற்றி வந்தாலும் உள்ளத்தில் உறவு நெறிகளைக் காணோம்! அன்பு கூர்ந்து இத்தகு நெறியல்லா வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி இடுமின் உலக ஒப்புரவு நெறி கொண்டு ஒழுகுமின்!

            அறிவை விரிவுசெய்! அகண்ட மாக்கு!
            விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
            அணைத்துக்கொள்! உன்னைச் சங்கம மாக்கு?
            மானிட சமுத்திரம் நானென்று கூவு!
            பிரிவில்லை, எங்கும் பேத மில்லை!
            உலகம் உண்ணஉண்: உடுத்த உடுப்பாய்!
            புகல்வேன் உடைமை மக்களுக்குப் பொது!
            புவியை நடத்து பொதுவில் நடத்து

என்று பாவேந்தன் பாரதிதாசன் சொன்ன புதுமையும் பொதுமையும் நிறைந்த நெறியினை நடைமுறைப்படுத்துமின்! அன்பு நெறி தழைக்கும்.

     அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
      என்பும் உரியர் பிறர்க்கு.

அறிவு வாழ்க்கை!

றிவுடையார் எல்லாம் உடையார் என்பது வள்ளுவம். அது எப்படி, அறிவுடையார் எல்லாம் உடையவராக இருக்கமுடியும்? இன்று படித்த பட்டதாரிகளில் பலர் வேலை வாய்ப்பு இல்லாமலும் வாழ்க்கை வசதிகள் இல்லாமலும் அல்லற்படுகின்றனர்.

ஆதலால், அறிவுடையார் எல்லாம் உடையார் என்பது நடைமுறைக்கு இசைந்த செய்தியா? ஆனால், அறிவு எது என்பதன்பொருளை அறிந்தால் இந்த வினாவைக் கேட்கமாட்டார்கள். கல்வி வேறு; அறிவு வேறு. கல்வியின் வாயிலாக அறிவைப் பெறலாம்; பெறக்கூடும். ஆனாலும் கல்வியே அறிவன்று. அதுமட்டுமன்று.

அறிவு பெறுதலுக்குரிய வாயிலும் கூட குறுகிய எல்லையுடையதன்று. அது பரந்துபட்டது. வாழ்க்கையை முழுமையாக வாழ முயன்றால் வாழ்க்கையின் படிநிலைகளிலேயே அறிவு தோன்றும்; அறிவியல் உண்மைகள் புலப்படும். இது வாழ்வியல் வரலாற்று உண்மை. இன்று பெரும்பாலும் பிழைப்பு நடத்தும் நிலையே மேலோங்கி வருகிறது. வாழ்க்கையை உள்ளார்ந்த அனுபவங்களுடன் சுவைத்து வாழும் வாழ்க்கைக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. வாழ்க்கை எந்திர மயமாகிவிட்டது. அதனால் வாழ்க்கை ஒரு பல்கலைக்கழகம் என்ற அரிய உரை, இன்று வாழ்க்கையில் காட்டப்பெறும் அலட்சியத்தின் காரணமாகவும் கொச்சைத் தனமான ஆசைகளின் காரணமாகவும் அவலப்பட்டுவிட்டது. சராசரி, தனிமனித வாழ்க்கையிலிருந்து சமுதாய வாழ்க்கைவரை இந்தக் குறை பரவலாகக் காணப்பெறுகிறது.

வாழ்க்கையில் நாம் ஈட்டும் பொருள்களோ நாம் அடையும் இன்ப துன்பங்களோ நம்மை வளர்த்து விடவும்; அழித்துவிடவும் முடியாது. அதனால், இவைகள் அலட்சியப்படுத்த தக்கனவும் அல்ல. இவைகள் கருவிகள்; வாயில்கள்! இவற்றின் பயனை வாழும் உலகம் எடுத்துக் கொள்ளுதலுக்கே அறிவு என்று பெயர்.

இத்தகு அறிவு முறையாகத் தலைப்படின் துன்பங்கள் தொடர் கதைகளாக முடியாது. என்றோ கேட்ட 'நல்ல தங்காள்' கதையைப் போன்ற நிகழ்ச்சிகள் இன்றும் நடைபெறுகின்றனவென்றால், "நல்ல தங்காள் கதை"யின் கருப்பொருள், நம்முடைய கவனத்திற்கு வரவில்லை. ஆதலால் நல்லதங்காள் கதையின் நிகழ்வுக்குக் காரணமாக அமைந்த சமுதாய அமைப்பை மாற்றும் பணியை, ஒழுக்கத்தை நாம் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. அதனால், நமது நாட்டில் எந்தத் துன்பங்களும் தொடர் கதைகளாக வருவனவே தவிர, சிறுகதைகளாகக் கூட மாறவில்லை. ஏன்? சமுதாயச் சிக்கல்களை; துன்பத்தை நாம் கருதும் மனப்பாங்கில் தவறு இருக்கிறது; அணுகும் முறையில் அறிவுப் பாங்கு இல்லை.

"இப்படித்தான் இருக்கும்” என்ற முடிவிலேயே நமது வாழ்க்கைப் பயணத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறோம். ஏன் இப்படித்தான் இருக்கவேண்டும்? இப்படி இருக்கக்கூடாதா? என்ற வளர்ச்சியின் முதல் நிலை வினாவைக்கூடகேட்கும் நிலையில் நாம் வளர்க்கப்படவில்லை; வளர விரும்பவில்லை. சென்றகாலம் என்பதே நிகழ்காலம், எதிர்காலம் என்ற மயக்கத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம். அதன் காரணமாக நேற்றைய அறிவு அப்படியே முடம்பட்டுக்கிடக்கிறது.

முடவர்கள் ஓடியாடித் திரிய முடியாமல் உட்கார்ந்த இடத்திலிருந்தே புலம்புவதைப் போலச் சென்றகால அறிவினின்று வளர்ந்து அறிதோறும் அறியாமை என்ற வள்ளுவத்திற்கு இலக்கணம் படைக்க நமக்கு உயிர்த் துடிப்பில்லாததால் சென்றகால அறிவிலேயே முடம்பட்டு அதற்குப் பதவுரை, பொழிப்புரை சொல்லிப் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறோம். "அறிவுடையார் ஆவதறிவார்" என்ற வள்ளுவத்தை மறந்துவிட்டோம். அறிவு என்பது எதையும் தேர்ந்து தெளிவதாகும். அறிவுடையோர் கடவுளை நம்புவது, வழிபடுவது என்பது பாவங்களைக் கழுவுவதற்காக அல்ல. அல்லது இறைவன் சந்நிதியில் பிச்சைக்காரர்களாகச் சென்று யாசிப்பதற்காக அல்ல. அவர்கள் கடவுளை நம்புவதும், வழிபாடு செய்தும்கூட, பண்ணப் பணைத்த அறிவினைப் பெறுவதற்குத்தான்! அதனாலன்றோ சமய வாழ்க்கையின் பயனை ஞான வாழ்க்கை என்கின்றனர். ஞானம் என்பது திரிபிலாத பேரறிவு; முறை பிறழ்வில்லாத நிறை அறிவு: மயக்கமில்லாத தெளிவு. அத்தகைய பேரறிவு தோன்றின் உடற்பொறிகள் ஓராயிரம் புதுமையை நோக்கும் திசைதோறும் காணும்! புலன்கள் படைக்கும்! உலகு செழிக்கும்.

இத்தகு ஆற்றல் பெற்றோரே அறிவுடையார், இத்தகைய பேரறிவைப் பெற நல்ல நூல்களை நாள்தோறும் தேர்ந்தெடுத்து முறையாகக் கற்க கற்ற நூற்கருத்துக்களை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திச் சோதனை செய்க! அந்நெறி நின்று ஒழுகுக! அந்தப் பேரொழுக்கம் அறிவாக, ஞானமாக வளர்ந்து வாழ்க்கையை நிறைவு செய்யும்! எல்லாம் நல்கும்!

கல்வியின் பயன்!

டவுள், பேரறிவினன், பேரறிவாளன்; அது மட்டு மன்று, துய்மையான அறிவினனும்கூட! அறிவிலும் பலபடிவளர்ச்சிகள். தூய்மையான அறிவு என்பது வளர்ந்த நிலை. அறியாமையும் அவலமும் இல்லாதது தூய்மையான அறிவு. 'அறிவே தெய்வம் என்று இன்று சிலர் கூறுகின்றனர். அங்ஙனம் கூறுவதில் பெரும்பிழை ஒன்றும் இல்லை! ஆனால், எந்த அறிவு தெய்வம்? இந்த வினாவுக்கு விடை வேண்டாமா? அறியாமையேகூட சில சமயங்களில் அறிவு என நம்பப்படுகிறது. சில சமயங்களில் அரைகுறை அறிவுகூட ஆர்ப்பாட்டம் செய்கிறது! அறிவு முற்றாக அறியாமையினின்றும் விடுதலை பெற்றுத் துன்பத் தொடக்கு இல்லாததாக இருக்கவேண்டும். அதுவே தூய்மையான அறிவு. தூய்மையான அறிவு விவகாரம் செய்யாது; அழிக்காது! ஆனால் ஒயாது தொழிற்பட்டுக் கொண்டிருக்கும்! ஏன்? தூய்மையான அறிவுக்குக் குறைகளும் அவ்வழி நேரும் துன்பங்களும் சற்றும் உடன்பட்டு வாரா. ஆதலால், இவைகளை எதிர்த்துத் தூய்மையான அறிவு போராடும். போராடுதல் என்றால் சண்டை போடுதலன்று! உழைப்பு வேள்வியில் ஈடுபடுதல்.

தாள், உழைப்பின் சின்னம். ஆதலால், உழைப்பையே தாள் என்று உருவகப்படுத்திக் கூறுதல் புலனெறி வழக்கம். சில உழைப்புகள் பயன் தரா. பயன் தராதது மட்டுமின்றித் துன்பத்தையும் தரக்கூடும். ஆதலால், உழைத்தால் மட்டும் போதாது. அது நல்ல உழைப்பாக இருக்க வேண்டும். கடவுளின் உழைப்பு நல்ல உழைப்பு. சாதாரண நன்மையல்ல. மிக மிக உயர்ந்த நன்மை, தற்சார்பும் தன்னலமும் இல்லாத உழைப்பு. "தனக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுநர்” என்னும் புறநானூற்றை அறிக!

கடவுள் தூய்மையான அறிவினன்; நல்லுழைப்பினன். இங்ஙனம் விளங்கும் வாலறிவனின் நற்றாளைத் தொழுதல் என்பது, அத்தூய அறிவினை எண்ணிச் சிந்தித்தல் மூலம் தூய்மையான அறிவினைப் பெறுதல். நற்றாள் தொழுதல் என்பது, அத்தகைய "உயிர்க்குலம் காக்கும் நல்லுழைப்பினை வழிபாடாக இயற்றுதல்"-என்பது கருத்து.

கற்றல், உயிர் விளக்க முறுதலுக்காக! உயிர் விளக்கமுறுதல் என்றால் அறியாமையிலிருந்து விடுதலை பெறுதல். கல்வியின் பயன், அறிவு பெறுதல்; அறியாமை நீங்குதல்; அறிவு விளக்கமுறுதல்; தூய்மையான அறிவாக மாறுதல்; நல்லுழைப்பில் ஈடுபடுதல், இவையெல்லாம் கற்ற கல்வியின் பயன். வழிபடுதல் என்பது சடங்கு மட்டுமன்று.

வழிபடுதல் என்ற சொல்லுக்கு விளக்கம் வழிப்படுதல் என்பதேயாம்; அதாவது, வழி நிற்றல். ஆதலால், தொடர்ந்து நல்ல நூல்களைக் கற்க வேண்டும். ஓயாது தூய அறிவினனாகிய கடவுளைச் சிந்திக்க வேண்டும். கடவுளைச் சிந்திப்பதன்மூலம் பெறும் தூய்மையை, மானிட உயிர்களுக்கு வழங்க நல்லன நல்கும் உழைப்பை மேற்கொள்ள வேண்டும். உழைப்பு, கடவுளுக்குச் செய்யும் காணிக்கை!

இங்ஙனம் தூய்மையான அறிவு பெற்று வாழ்பவர்கள், நல் உழைப்பின் மூலம் வையகத்திற்கு வாழ்வளிப்பவர்கள்-போற்றத் தக்கவர்கள்.

"கற்றல் கேட்டலுடை யார்பெரி யோர்கழல்
                                            கையால் தொழுதேத்தப்
பெற்ற மூர்ந்த பிரமாபுர மேவிய பெம்மான்
                                             இவனன்றே”

என்பார் திருஞான சம்பந்தர்.

இன்று, கற்றல் என்பது செப்பமான முறையில் அமையவில்லை. ஏட்டுப் படிப்பினும் உயர்ந்தது கற்றல், 'கற்றல்' என்ற செயல் முறையிலேயே சிந்தித்தல், உய்த்துணர்தல், கற்பனை செய்தல் ஆகிய கல்வித் தொடர்பான செயல் முறைகள் யாவும் நிகழவேண்டும். இன்று அத்தகைய கல்வி குறைவு! ஞாலத்தில் உயர்ந்தது கேள்வி! ஆனால், எதைக் கேட்டது! கேட்கத் தகாதனவற்றையெல்லாம் கேட்கவேண்டிய தீவினை நம்மை இன்று பிடித்தாட்டுகிறது.

கதவு போடாக் காதுகளுக்கு ஓயாத தொல்லை. நல்லன போலக் கோள் சொல்லி, பகை மூட்டி வயிறு வளர்ப்போர் இன்று பல்கிப் பெருகி விட்டனர். அதனால் தான் திருவள்ளுவர் "எனைத்தாலும் நல்லவை கேட்க!” என்றார்.

உயிரை வளர்ப்பது நல்ல கல்வி, நல்ல கல்வியின் பயன் தூயஅறிவு.தூய அறிவின் பயன் ஆக்கத்தினை, இன்பத்தினை வழங்கும் நல்லுழைப்பு. இவை இறைவன் நாமத்தைக் கற்றலாலும் அவனுடைய பொருள் சேர் புகழைக் கேட்பதாலும் கிடைக்கும். எங்கும் தூய்மையான அறிவு வளர்வதாக! நாடெங்கும் நல்ல உழைப்பு வேள்வி வளர்வதாக! வையகம் துயர் தீர்வதாக! இதுவே வள்ளுவம் கடவுளை வாழ்த்தும் வாழ்த்து!

             கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
             நற்றாள் தொழாஅர் எனின்.

திருக்குறள் நெறி

திருக்குறள், உலகப் பொதுமறை. மனித குலத்தை மையமாகக் கொண்ட வாழ்வியல் திருமறை. திருக்குறள், பொதுமை நோக்குடையது. திருக்குறள் காட்டும் நெறி, வேற்றுமைகளைக் கடந்த நெறி; ஒருமைப்பாட்டு நெறி.

திருக்குறள் கடவுள் நம்பிக்கை அருமையானது; எளிமையானது. தனக்குவமை இல்லாத ஒருவனே கடவுள். அவன் வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாதவன்; தூய அறிவினன்; அறத்தின் திருவுருவம். திருக்குறள் காட்டும் கடவுள் வழிபாட்டு நெறி, கடவுளைச் சிந்தனை செய்தல், இடைவிடாது நினைத்தல் என்ற அளவினதேயாம்.

திருக்குறள் நெறி காதல் வழி உருவாகும் இல்லற வாழ்க்கையேயாம். இல்லற வாழ்க்கையின் சிறப்பு முழுவதும் இல்லத்துக்குரியவளாகிய பெண்ணாலேயே அமைகிறது. இல்லற வாழ்க்கையின் சிறப்புடைய பயனை நன்மக்கள் வாயிலாகத்தான் உணர முடியும்.

திருக்குறள், தவம் செய்தலை நோக்கமாக உடையது. துறவு நெறியையும் எடுத்துக் கூறுகிறது. திருக்குறளின் துறவு அருமையில் எளிய ஆற்றல் உடையது. துறவொழுக்கத்தின் தலையாய பண்பு, எதனையும் ஏற்றுத் தாங்கிக் கொள்ளல். எந்த உயிர்க்கும் தீங்கு செய்யாமை. அறிந்த மெய்ப்பொருள் வாயிலாக தவத்தின் ஆற்றலறிந்து ஒழுகுதல்.

உயிர், பதிவுகளுக்குரியது. நினைந்து செயல்படும் அனைத்தும் உயிரில் பதிவுகளாகின்றன. இந்தப் பதிவுகள் மீண்டும் வாழ்க்கைப் போக்கில் மேம்பட்டு வருதலையே ஊழ் என்கிறோம். ஊழ், பழக்கங்களின் பதிவு; வழக்கங்களின் சுவடு, உழுத சால் வழிச்செல்லும் எருதினைப்போல் பழக்கங்களின் வழியே செல்லுவது உயிரின் இயல்பு. ஆனால், ஆழமாகச் சிந்தித்துப் பழைய பதிவுகளை அழித்து, புதிய பதிவுகளை உண்டாக்கலாம். இங்ஙனம் செய்யும் வாழ்க்கையையே அறிவறிந்த ஆள்வினையுடைய வாழ்க்கை என்று குறள் பாராட்டும்.

திருக்குறளின் அரசியல், முறை செய்து காப்பாற்றுவதில் தொடங்கி மெள்ள மெள்ள ஆட்சியாக வளர்கிறது. அரசியல் முழுமையாக வளர்ந்த நிலையில், முறையில் நிறுத்தியும் நிற்காமல் வரம்புகளைக் கடந்து மற்றவர்க்குத் துன்பத்தைத் தரும் அளவுக்குச் செல்லுபவர்களைக் கடிந்து நெறியில் நிறுத்த ஆட்சி உரிமை பெற்றிருக்கிறது.

திருக்குறள், தலைமகளை "வாழ்க்கைத் துணைநலம்" என்று சிறப்பிக்கிறது. குடும்பத்தின் அகத்திணை வாழ்வியலுக்குத் தலைமகள் தலைவியாகவும், புறத்திணை வாழ்வியலுக்குத் தலைமகன் தலைவனாகவும் திருக்குறள் அமைத்துக் காட்டுகிறது. ஆயினும் இல்லத்தின் பொருளாட்சி பெண்ணிடத்திலேயாம். குடும்ப அமைப்பில் சுற்றத்தாரைப் பேணுதலும், விருந்தினரை உபசரித்தலும் அடங்குகின்றன. ஒரு தலைமகன் பொருள் ஈட்டுவதின் மூலம் அரசுக்கு வரி செலுத்தி, அரசைப் பாதுகாக்கின்றான். தன் குடும்பத்தையும் சுற்றத்தாரையும் பேணிப் பாதுக்காக்கின்றான். திருக்குறள் காட்டும் ஒப்புரவு நெறி கட்டாயம் இல்லாமல் இயல்பான நிலையில் "ஒருவருக்காக எல்லாரும், எல்லாருக்காகவும் ஒருவர்" என்ற சமுதாயப் பொதுமையைப் படிமுறையில் தோற்றுவித்து வாழும் இயல்புடையது. குறள் காட்டும் ஒப்புரவுநெறி உலகப் பொதுநெறி, சமநிலைச் சமுதாயம் அமைக்கத் துணை செய்யும்.

உயிர்க் குலத்தை வாழ்விக்கும் அன்பே குறள்காட்டும் வாழ்வு. அன்புநெறி வாழ்விக்கும், அறம் இன்பஅன்பினை நல்கும்.

திருக்குறள் நெறி அருமையானது; எளிமையானது. எல்லாருக்கும் ஏற்றது; வாழ்வாங்கு வாழத் துணை செய்வது.

இறையியல் வாழ்க்கை

வாழப் பிறந்தது மானிட சாதி மானிடப் பிறப்பின் குறிக்கோள் சாவதன்று வாழ்வதுதான்! அதுவும் மண்ணகத்தில் வாழ வேண்டும். பெறுவன பெற்று, துய்ப்பன துய்த்து வாழ வேண்டும். அதனால்தானே மறையெனப் போற்றப் பெறும் திருக்குறளில்- வாழ்வாங்கு வாழ வழி காட்டும் நூலில் காமத்துப் பாலும் கூறுகிறார்! அது மட்டுமா? "தாமரைக் கண்ணன் உலகத்து இன்பத்தைவிட காதலின்பம் உயர்ந்தது" என்பது திருக்குறள் கருத்து.

அதனால், தாமரைக் கண்ணன் உலகத்து இன்பத்தைக் கொச்சைப் படுத்துதல் என்பது பொருளன்று! திருக்குறள் தோன்றிய காலச் சூழ்நிலையில் இவ்வுலக வாழ்க்கையை, பொருள் வாழ்க்கையை, காதலின்ப வாழ்க்கையைக் கொச்சைப்படுத்தும் நெறிகள் தோன்றிப் பரவின. அக்கருத்தைத் திருக்குறள் மறுக்க வேண்டிய காலக் கட்டாயம் இருந்தது.

அதனால் நிலமிசை-நிலத்தின் கண் நெடுநாள் வாழச் சொல்கிறார்; வாழ, வழி காட்டுகிறார்! நிலத்தின்கண் நெடுநாள் வாழ வழி என்ன? கடவுள் நேரிடையாகவே தம்பொறுப்பில் வாழ்விப்பாரா? அல்லது வாழும் உயிர்க்குத் துணையாக நின்று உயிரையே அது செய்யும் முயற்சியினால் வாழச் செய்வாரா?

கடவுள் எப்போதும் நேரிடையாகப் பொறுப்பேற்க மாட்டார். அங்ங்ணம் பொறுப்பேற்று உயிர்வளர்ச்சிக்குத் துணை செய்யாது, கடவுள், காரணங்களாக அமைந்து உதவி செய்வாரே தவிர, காரியங்களாக வந்து உதவி செய்ய மாட்டார். உயிருக்கு அறிவும், கற்றலும் உரிமையாதல் மூலமே உயிர் தற்சார்பு நிலையை எய்தும். அப்படியல்லாது கடவுளே தம் பொறுப்பில் காப்பாற்றினால் மையொற்றுத் தாள் போல வாழும். தற்சார்பைப் பெறாது.

ஆதலால் நிலமிசை நெடுநாள் வாழ, நிறை நலம் மிக்க கடவுள் திருவடிகளை இடைவிடாது நினைத்தல்; அவ்வழி இறைவனின் நலன்களைப் பெறுதல்; நின்றொழுகுதல். இதனை "மாண்டி சேர்தல்” என்றார்.

சேர்தல் பருப்பொருள் வழி நிகழும் சேர்க்கையன்று! உணர்வு வழி நிகழும் சேர்க்கையேயாம்! அதாவது. நினைத்தல், ஒழுகுதல். ஒருவர் ஒன்றை உரிமையாகப் பெற்றிருக்கும் நிலையை ஒழுகலாறே காட்டும்! அன்பைப் பற்றிக் கற்றல் நிலை வேறு! கேட்டல் நிலைவேறு சொல்லும் நிலை வேறு! இம்மூன்றிலும் பெருந்திறன் பெற்றோர்கட்ட அன்புடையராதல் அரிது! அன்புடையராக வாழும் பண்டை, உயிர் உரிமையாக-உடைமையாகப் பெற்ற பின்னரே அன்புடையராக ஒழுகுவர். ஒழுகுதலே உடைமை களின் உரிமை நிலையைக்காட்டும்; உணர்த்தும்!

கடவுள்நெறி என்பது, அவர் தாம் மேற்கொண் டொழுகும் ஒழுக்க நெறிகளாலேயே உணரப்படும். கடவுளை நினைந்து அந்நெறி நின்று ஒழுக விரும்பின், கடவுள், விரும்பும் உயிர்கள் மாட்டு விரைந்து உள்நின்று உதவி செய்வான்; காட்டுவான்; வழி நடத்துவான். கடவுள் நம் மனத்தில் எழுந்தருள நெடிய காலம் தேவையில்லை. புற்றாக மரமாக நின்று தவம் செய்ய வேண்டியதில்லை. தேவை, கடவுளைப் பற்றி நினைத்தல் ஒன்றே!

நினைத்தல் என்பது ஆழமான சொல். ஆசைகளால் உந்தப்பெற்றும் துன்ப அலைகளால் எய்ப்புண்டு இரங்கத் தக்க நிலையிலும் கடவுள் நினைவு வருதல்- நினைத்தல் ஆகாது. நீள நினைத்தாலே நினைத்தல்-அசை வில்லாது நினைத்தலே நினைத்தல்-நினைப்பும் மறப்பு மின்றி நினைத்தலே நினைத்தல்-ஒருமையுடன் நினைத்தலே நினைத்தல்-அலையும் மனத்தினாலன்றிச் சிக்கெனப் பிடித்து நிலையாக நினைத்தலே நினைத்தல் நினைத்தல் அருமையான அகநிலைப் பயிற்சி !

உலகியல் வாழ்விலே கூட நட்பு, காதல், பணிக்கள வாழ்க்கையில்கூட நினைக்கும் பயிற்சி இருந்தால் நிறைந்த ஆற்றல் பெறலாம்; கிடைத்த உறவுகளையும் செழிப்பாக வளர்த்துக் கொள்ளலாம்; அபசுரம் இருக்காது. ஆதலால் திருவிழாவுக்குத் திருவிழா கடவுளை வழிபடுதல், நினைத்தல் ஆகாது. நினைப்பற நினைக்க வேண்டும்! அப்படி நினைந்தால் நினைப்பது முன்பா? கடவுள் வந்தருளித் துணை நிற்றல் முன்பா? என்று கண்டு கொள்ள முடியாத கால விரைவில் கடவுள் இதயத்தின்கண் எழுந்தருளி நின்றருளுவான். சாக விரும்பாதீர்! நிலமிசை நெடுநாள் வாழ விரும்புமின்! வாழ்வாங்கு வாழ ஆர்வம் காட்டுமின்!

நிலமிசை நெடுநாள் வாழ்வாங்கு இன்புற்று வாழ வழி என்ன? நிறைநல மிக்க கடவுள் திருவடிகளை நினைப்பற நினைத்தல், நீள நினைத்தல்! அவ்வழி கடவுள் நலன்களைப் பெற்று, உரிமையுடைய உடைமைகளாக்கிக் கொள்ளுதல்; அவ்வழி ஒழுகுதல். இதுவே வள்ளுவம் உணர்த்தும் இறையியல் சார்ந்த வாழ்க்கை!

            மலர்மிசை ஏகினான் மாண்டி சேர்ந்தார்
            நிலமிசை நீடுவாழ் வார்.

            பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
            நெறிநின்றார் நீடுவாழ் வார்.


வேண்டுதலும் வேண்டாமையும்


உயிர், இன்பம் துய்த்து வாழவே விரும்புகிறது. ஆனால், நிகழ்வு பெரும்பாலும் இதற்கு மறுதலையாகவே உள்ளது. துன்பங்களே மிகுந்து வருகின்றன. ஏன்? உயிர் ஆசைகளால் அலைப்புறுவது. அப்படியானால், வாழ எண்ணுதல் தவறா? என்று கேட்கத் தோன்றும்! வாழத்தான் வாழ்க்கை! இன்புற்றமர்ந்து வாழத்தான் வாழ்க்கை! வாழ்வாங்கு வாழ்தல் வேறு; ஆசைப்பட்டு அழிதல் வேறு !

ஆசையென்பது முற்றாகச் சார்புடையது! தன்னலமே நாடுவது! மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாதது. ஆசை யுடையவர்கள், மற்றவர்கள் எல்லோரும் தனக்குக் கடமைப் பட்டிருப்பதாக நினைப்பார்கள். ஆனால் அவர்கள் கனவிலும்கூட மற்றவர்களுக்குக் கடமைப்பட்ருப்பதாக நினைக்கமாட்டார்கள்! இதைத்தானே கென்னடி கூறினார். "நாடு உனக்கு என்ன செய்தது என்று நினைக்க வேண்டாம். நீ, நாட்டுக்கு என்ன செய்தாய் என்று நினைப்பாயாக!" என்று! இந்த வார்த்தைகள் தோன்றுவதற்குரிய சூழ்நிலை உலகில் அமைந்திருந்தது என்பது கருத்து.

எதிலும் ஆர்வம் காட்டலாம். ஆனால், ஆசை கூடாது. ஆர்வம் வேறு! ஆசை வேறு. ஆசை மிகவும் கொச்சைத்தனமானது. ஆசையுடையவன், எல்லாம் தனக்கே என்பான்! மற்றவர்களை ஒதுக்கியே வாழ்வான்! அல்லது ஒத்துப் போகமாட்டான்; வேற்றுமைகளுக்கும் சண்டைகளுக்கும் காரணமாக அமைவான்! ஆயிரம் "நொண்டிக் காரண"ங்களைக் கூறுவான்! ஆயிரம் நன்மைகள் செய்த ஒருவர், ஒரு நன்மை செய்யத் தவறிவிட்டால் அவன் பொறுக்க மாட்டான்! செருக்கித் திரிவான்! ஆனாலும் நிர்வாணமாகத் திரிவான்.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்;
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்

என்றார், திருமூலர்.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பினும் வித்து

என்றார் திருவள்ளுவர்.

ஆர்வம் என்பது சிந்தனையின்பாற்பட்டது. வளர்ச்சித் தன்மையுடையது. ஆர்வமுடையவர்கள் கூடியே வாழ்வர். எந்த நிலையிலும் ஒத்துழைத்தலேயே விரும்புவர்; வேற்றுமை பாராட்டமாட்டார்கள். இத்தகு ஆர்வம் இருந்தால் அன்பு இருக்கும். அன்பு, ஆர்வத்தை மேன்மேலும் வளர்க்கும். அன்புக்கும் ஆர்வத்துக்கும் காரணங்கள் கிடையாது, எல்லைகளும் கிடையாது. பொதுவாக மனித குலத்தை வருத்தும் துன்பங்களுக்குக் காரணம் வேண்டுதல், வேண்டாமை என்பனவேயாம்.

இன்று, யாண்டும் வேண்டுதலும் உள்ளது; வேண்டாமையும் உள்ளது. நம்முடைய வழிவழிப் பழக்கங்களில்கூட இந்த வேண்டுதல், வேண்டாமைச் செல்வாக்கு மிக அதிகமாகத் தாக்கிப் பாதித்துள்ளது.

அதனால், வேண்டியவர் வேண்டாதவர் என்ற அணிகளுக்கிடையில் சமுதாயம் சிக்கித் தவித்துச் சீரழிகிறது; துன்பங்கள் பெருகிவிடுகின்றன! ஆதலால், வேண்டும்வேண்டாமை என்ற குறுகிய-துன்பங்களைத் தரும் எல்லை களுக்கு இரையாகக்கூடாது. எங்காவது தலைகாட்டினாலும் அன்பினால் ஒத்துழைத்து மாற்றி ஒப்பற்ற ஒரு கூட்டுச் சமுதாயத்தைப் படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி அடைய வேண்டும். அப்போதுதான் துன்பம் தீரும்! எங்கும் எப்பொழுதும் இன்பம்! பெருகும்!

கடவுள், வேண்டுதல், வேண்டாமை இல்லாதவர். ஆதலால் சாதியமைப்புகள், பணக்காரன்-ஏழை என்ற வேறுபாடு, நாடு, எல்லை முதலிய வேறுபாடுகள் அனைத்தும் மனிதனால்-இல்லை, விலங்குணர்ச்சியுள்ள மனிதனால்வேண்டும், வேண்டாமை என்ற நச்சுப் பாம்பால் கடிக்கப் பட்ட நச்சு மனிதனால்-படைக்கப் பட்டவையே! இந்த நச்சுப் பாம்பு மானிட சாதியைக்கடித்துப் பல ஆயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன! இந்த நஞ்சிலிருந்து மானிட சாதியைக் காப்பாற்றக் கொடுத்த அன்பு, அருள், ஒருமைப்பாடு முதலிய மருந்துகள் எல்லாம் செல்லுபடியாகவில்லை. ஏன்? இந்த மருந்துகளும்கூட சார்ந்ததன் காரணமாக நஞ்சாகி விட்டனபோல் தெரிகிறது.

இன்று, எங்கும் சாதிச் சண்டைகள்! கட்சிச் சண்டைகள்! தெருச் சண்டைகள்! ஊர்ச் சண்டைகள்! நாட்டுச் சண்டைகள்! சமயச் சண்டைகள்! அந்தோ! வாழப் பிறந்த மானிட சாதி வேண்டும், வேண்டாமை என்ற நஞ்சினால் உள்ளிடழிகிறது; உருக்குலைந்து போகிறது!

அளப்பரிய மானிட சக்தி சில்லறைச் சச்சரவுகள், சண்டைகளில் வீணடிக்கப்படுகிறது! கடவுளையும் இந்தக் கொடுமைகளுக்கு மனிதர்கள் சாட்சியாக்கியிருக்கிறனர். அதனால்தான் கடவுள் காணப்படாத பொருளானார் போலும்! வேண்டுதல், வேண்டாமை என்ற வேற்றுமைகள் கடவுளுக்குக் கிடையாது. வேண்டுதல்', வேண்டாமை உள்ள இடத்தில் கடவுள் இருக்கவும் மாட்டார், வரவும் மாட்டார்! துன்பத்தின் பிறப்பிடமே, வேண்டுதல் வேண்டாமையேதான்.

கடவுளை நம்புகிறவர்கள், வழிபடுகிறவர்கள் உண்மையில் வழிபாடு செய்தால் வேண்டுதல், வேண்டாமை' என்ற வேறுபாடு அவர்களிடத்தில் இருக்காது; இருக்கக் கூடாது! அப்படியிருக்குமானால் கடவுளை வழிபடும் அவர்கள் வழிபடுவதாக நடிக்கிறார்கள் என்பதே பொருள்.

பத்திமையுடையோர் எங்கும் இறையருளைக் காண்பர்; எதிலும் இறையருளைக் காண்பர்; அவர்களுக்கு விருப்பும் இல்லை, வெறுப்பும் இல்லை, பகைவரும் இல்லை, நண்பரும் இல்லை. மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கித் தண்ணிர் ஓடிவருவதைப் போல, "பள்ளந்தாழ் உறுபுனலாகத்” திருவருளை நோக்கியே உணரத் தலைப்படுவார், செயலாற்றுவர். பத்திமை என்பது செயலற்ற நிலையன்று. செயல் நிறைந்த நிலை,.

ஆனாலும், பத்திமையின் பாற்பட்டெழுகுபவர்கள் செய்யும் செயலில் இலாப நோக்கு இல்லை. புகழ் நாட்டமில்லை. உயிர்கள் இன்புறுதலே நாட்டம். பத்திமையிற் பழுத்தவர்கள் வேற்றுமைகளை அகற்றுவர். ஒருமைப் பாட்டை வளர்ப்பர். அதுவே தூய அன்புநெறி, அருள்நெறி.

ஆதலால், வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாத கடவுளை வழிபட்டு, வேண்டுதல், வேண்டாமை என்ற தீய சுழற்சியிலிருந்து விடுபடுக! அப்போது துன்பம் தொலையும்; இன்பம் கிடைக்கும்! உலகம் செழிக்கும்!

           வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
           யாண்டும் இடும்பை இல.

வறிதே பொருதற்க!

யிரின் இயல்பு இகலுதல். யாரோடாயினும் எவ்வகையிலாயினும் போராடாது வாழ்தல் உயிருக்கு இயல்பன்று! போர் அல்லது பொருதல் முழுமையாகத் தீதா அல்லது நன்றா என்ற வினாவிற்கு விடைகாணுதல் எளி தன்று. போர், நன்றாதலும் உண்டு; நன்றும் தீதும் போருக் குரிய காரணத்தைப் பொறுத்தவை.

வள்ளுவர் ஒரு வாழ்வியற் கவிஞர். அப்பட்டமான தத்துவமலையில் மோதி, வாழ்க்கை வறிதே கழிவதில் வள்ளுவருக்கு விருப்பமில்லை. அதனாலன்றோ "நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு” என்றும், "பொய்ம்மையும் வாய்மையிடத்த" என்றும் அவர் அறம் பேசுகின்றார்.

போர்க்குணம், உயிரின் இயற்கைதான்! ஏன்? போர்க்குணம் இல்லாத மனிதன் ஒரு நடைப்பினமே! ஆனால், போர் யாருடன்? எப்படி? என்பதுதான் கேள்வி! - ஒவ்வொரு மனிதனும் அன்றாடம் தன்னுடைய மனத்தோடு கூடப் போராடவேண்டும். அவனை எதிர்த்துப் போரிட்ட அழுக்காற்றினை, அவாவினை, வெகுளியினை ஒடுக்கி வெற்றிகாண வேண்டும்.

உலகியலை முழுதாக உணர்ந்த வள்ளுவர் "அழுக்காறு என ஒருபாவி” என்று கூறுவதன் உண்மை, அறிவுணர்வுடன் வாழ்ந்தவர்களுக்குத் தெரியும் ! ஒவ்வொருவருடைய மனமும் பிறிதொன்றைப் பார்த்து அழுக்காற்றில் அலைவதை மறுப்பார் உளரோ? ஒருகால், ஒரு சிலருடைய அழுக்காறு, வெகுளி-இன்னாச்சொல் என்ற அளவிற்கு வளராமல் இருக்கலாம். ஆனால், அழுக்காறு இருப்பது என்பது என்னவோ உண்மை, அழுக்காற்றின் வழிதான் அவா. தோன்றுகிறது. பொருள் நுகர்வு வேட்கை, தேவையினால், மட்டும் தோன்றுவதன்று. "அவரை'. 'இவரைப் பார்த்துத் தான் அல்லது கேட்டுத்தான் அவா தோன்றுகிறது. அவா, எரியும் பெரு நெருப்பினை நிகர்த்தது. அதிலும், குப்பை கூளங்களோடு சேர்ந்து எரியுமானால் எளிதில் அனைத்தற்கியலாது.

அதுபோல, அறிவிலும் உணர்விலும் வலிமையற்ற குப்பையனைய மனிதர் அவாவழிப்படின் வெகுளி என்ற எரிவழிப்படுவர். இத்தகையோரின் வெகுளி வெளிப்படின். ஒட்டுக் கேட்பர்; ஒற்றறிய முனைவர்; சிறுமை தூற்றுவர், ஏன்? 'ஒரு கை பார்ப்போமே!” என்று முனைந்து நிற்பர். அவ்வழி சிறுமை செய்வர். பெருமைக்கும் சிறுமை செய்வர். ஆதலால், வெகுளிவழிப் பொருதல்-போராடுதல் தீது.

வாழ்க்கையில் வளம்காண விரும்புவோர் தமது பொறிகளோடும், புலன்களோடும் ஓயாது போராடுவர்; புன் னெறியினின்றும் விலகுவர்; நன்னெறியில் நிற்பர்; அறிவறிந்த ஆள்வினையில் ஈடுபடுபவர்; வளம்பல படைப்பர் வையத்து வாழ்வாங்கு வாழ்வர். அன்னவர், தீயோர் இகலிப் பொருது வந்தாலும் ஒதுங்குவர். அவரொடு பொருத ஒருப்படார். வறிதே பொருதின் வளம்கெடும்; வாழ்க்கை பாழாகும்; இம்மையும் மறுமையும் கெடும்.

வளம்சேர வாழ நினைப்போர் இகல்வரினும் ஏற்றுக் கொள்ளார். வெகுளுதலும், அவ்வழி இகலுதலும் ஆக்கம் தரா இழப்பையே நல்கும். ஆக்கம் வேண்டின் இகலுதலைத் தவிர்த்திடுக! இகலி வருவோரையும் ஆற்றுதல் செய்க!

விரைந்து வெகுண்டு இகலுதல் பகையைத் தோற்று விக்கும், ஆதலால், வெகுளுதல் தவிர்த்திடுக! பொருந்தா வழி இகலிவருவோரையும் வாழும் இயல்பு அறிந்து பொறுத் தாற்றிடுக! இதுவே வள்ளுவர் காட்டும் வாழும் வழி!

ஒருவர் விரைந்து வெகுளுகின்றார்-இகலிச் சாடுகின்றார் என்றாலே, அவர் விரைந்து கெடுகின்றார் என்பது பொருள் ஒரு பொருள் விண்நோக்கி ஏறும்பொழுது அப்பொருளில் ஆட்டம் மிகுதியாக இருக்காது. அதே பொருள் இறங்கி வரும் பொழுது மிகுதியாக ஆடும். அதுபோலக் கேட்டினைத் தழுவிக்கொள்ள நினைப் பவர் வெகுளிகொள்ளுதற்குரிய சூழல் இல்லாத பொழுதும் வெகுளுவர்; இகலிப்பொருதுவர் உற்றார்-உறவினரோடு கூடப் பொருதுவர்; நல்லவர்களுடன் கூடப் பொருதுவர்; ஏன் ! ஒன்றுமறியாத அப்பாவிகளுடன் கூடப் பொருதுவர். வெகுளுதற்குரிய காரணங்களைக் கண்டு பிடிப்பவர், இல்லாதுபோனாலும் படைத்திடுவர். அப்போது சிறு செயல்கள் கூடப் பெரிதாகத் தோன்றும். இந்த அடையாளங்கள் என்றைக்கு ஒருவர் வாழ்க்கையில் காணப்படுகின்றனவோ அன்று அவருடைய வாழ்க்கை முற்றுப் புள்ளியை நோக்கி விரைந்து சென்றுகொண்டிருக்கிறது என்ற முடிவுக்கு வரலாம்.

இங்ஙனம், வறிதே இகலுகின்றவர் அல்லது உணர்ச்சி வசப்பட்டுத் தம்முடன் முரணி இகலிவருவோரை இகலுபவர் யாராயினும்-அவர்கள் எவ்வளவு பெரிய வளத்தோடு கூடிய வாழ்க்கை வாழ்ந்தாலும் நிச்சயமாக அதனை இழப்பர்

படைவலி யுடையரானாலும் அதனை இழந்து அடிமையாவர். ஏன்? அவர்கள் கடவுளின் கருணையையே பெற்று மாபெரும் சக்திகள் பெற்றவராயினும் அவற்றையும் இழந்து வெறும் மனிதராவர். இதுவே வரலாறுகாட்டும் படிப்பினை! இதிகாசங்கள்-புராணங்கள் உணர்த்தும் உண்மை !

துரியோதனன் வறிதே வெகுண்டு இகலிப் பொருததின் காரணமாக எல்லாவற்றையும் இழந்தான்! துரியோதனன் அகத்தே ஐவரோடு போராடாமல், புறத்தே ஐவரோடு போராடியதால் ஆக்கத்திற்குப் பதிலாக அழிவை அணைத்துக் கொண்டான்.

சூரபதுமன், வலிமையின் மிகுதியால் வெகுண்டு இகலுகின்றான்; ஆற்றலை இழக்கின்றான். அவனைப் பிடித்தாட்டிய பேய், அதிகாரம் அம்மம்ம! அதிகாரம் படுத்துபாடு இவ்வளவா! அவ்வளவா! அஃது உலகத்தில் அழித்துச் சுவைத்த மனிதர்கள் பலர்! மலையனைய மனிதரைக்கூட அது வீழ்த்தியிருக்கிறது! இந்த அதிகாரப் பேய் பிடித்து ஆட்ட, கொடுத்த தெய்வத்தோடேயே இகலி நின்றான் சூரன்! முடிவு, உங்களுக்குத் தெரிந்ததே!

வையத்துள் வாழ்வாங்கு வாழ நினைந்திடுவோர் வெகுளி தவிர்த்திடுக! இகலுதலைத் தவிர்த்திடுக! காரண மின்றியும் வலிந்து இகலி வருவோரிடமிருந்து ஒதுங்கி வாழ்க! எவ்வகையிலும் இகலுதல் நன்றன்று! பொருதல் புண்ணியம் சேர்க்காது! வெகுளியையும் போர்க்குணத்தையும் அறவே விடமுடியாவிடில், நம்மையே நோக்கிப் போரிடுவோம்! நம்முடைய வாழ்வியல் நோக்கத்தோடு ஒத்துவராது நம்மொடு பொருதுகின்ற பொறிகள்- புலன்களொடு போரிடுவோம்!

அத்தகு பகை மாற்றமுடியாததாயின் அப்பகையின் வலிமையை நிகர்த்த வலிமையைப் பெருக்கி வளர்த்துக் கொள்க! ஒத்த வலிமை ஒர்ந்து கண்டபின் பகை மேற்கொள்க! வெற்றி கிடைக்கும்! வீழ்ந்தாலும் விழுப்புண் கிடைக்கும்! மெலியாராக இருந்து புண்படுதல் பகைவர்க்கு இகழ்ச்சியையும், தமக்குப் புகழ்ச்சியையும் தருவது. பகைவர்க்கும் இகழ்ச்சியைத் தரக்கூடாது. வீரத்தில் விழுப்புண்பட்டுத் தாங்கி இன்னாரை வென்றான் என்ற பெரும்பகைச்சிறப்பைப் பகைவர்க்குத் தருதல், பகை யிலும்-பகைவழிப்பட்ட மரணத்திலும் தரும் கொடை!

எக்காரணத்தைக் கொண்டும் தம்மின் மெலியாரோடு மோதற்க! அஃது அறமன்று, ஆண்மையுமன்று புகழுமன்று புண்ணியமுமன்று.

<poem>இகல்காணான் ஆக்கம் வருங்கால், அதனை மிகல்காணும் கேடு தரற்கு,

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தகவில்லாத் தாவில் விளக்கம் தரும்.</poem>

4



அறவழி காட்டி

வள்ளுவன் புகழ்பாடி வண்டமிழ் வளர்க்கின்ற இந்தத் தமிழ்க் கூட்டத்தினரிடையே. தமிழ் மதுரை என்று சொல்லுகிறபொழுதே நம்மையுமறியாது நம் உள்ளங்களில் ஒரு மகிழ்ச்சி எழுகிறது. இந்த மதுரையம்பதியின்கண்ணே நீரும் நெருப்புங்கூடத் தமிழ்ச்சுவை யறியும், அறிந்திருந்தது என்று வரலாறு பேசும். இத்தகைய மதுரைம்பதியில் வாழ்ந்து வளர்கின்ற உங்கள் தமிழ்ப்பற்றுக்கு வரையறை சொல்ல முடியாது. என்று தமிழ் மதுரை காண்பேம் என்றுதான் பேசுகிறார் பெரும்புலவர். மாணிக்கவாசகப் பெருந் தகையார் ஆண்டவனை நோக்கி "கூடலின் ஆய்ந்த ஒண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ" என்று பாடுகிறார். இதைச் சொல்லுகிற பொழுது நமது உள்ளம் இனிக்கின்றது.

அறப்பெருஞ் செல்வர் வள்ளுவர் தமிழகத்திலே பிறந்தார் என்ற காரணத்தினால் அவரைத் தமிழர் என்று கூறுகின்றோம்; ஆனால் அவர்நோக்கம், அவர் நூல், அவர் இலட்சியம் அனைத்தும் உலகத்தைச் சார்ந்திருந்தமையால் உலகப்பெரும் புலவராக அவர் காட்சியளிக்கிறார். அதனால் தான் பாரதியார் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்கொண்ட தமிழ்நாடு” என்று பாராட்டுகிறார். வள்ளுவரின் அருமை மொழிகள் மேற்றிசை நாடுகளில் விரும்பப்படுகின்றன. ஆனால், ஒரு சில இளைஞர்கள், ஒரு சில பெருமக்கள் மேல்நாடு முன்னேறுகிறது என்றும், தமிழகம் மட்டும் இன்னும் பண்டைய நிலையிலிருந்தே வாழ்கிறது என்றும் கூறுகிறார்கள் அல்லவா? எனினுங்கூட, அவர்களுடைய அறிவுத் திறன் எவ்வளவுதான் எட்டிச் சென்றிருந்தாலுங்கூட வள்ளுவரின் வழிஇல்லை என்றுதான் சொல்லவேண்டும். வள்ளுவர் கண்ட கண்டு வாழ்ந்த நிலை, சமய வாழ்க்கை முறைகளெல்லாம் மேல் நாட்டு அறிஞர்களின் கருத்துக்கு அகப்படவில்லை. அப்படி வாழ்ந்து காட்டவும் அவர்களால் முடியவில்லை. ஆகையால் அந்தப் பெருமையை நாம்பெறத்தான் வேண்டும். இந்த நிலையில் தான் 'செந்தமிழ்நாடெனும் போதினிலே, இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே' என்று பாரதியார் சொல்லியது போல வள்ளுவர் பிறந்தார். அவர் புகழோடு வாழ்ந்து பூரண மனித நிலையில் வாழ்விக்க வேண்டும் என்று விரும்பிய ஞானப் பெருஞ் செல்வர். இந்த நாட்டிலே பிறந்து அருமையான முறையை ஆக்கித் தந்த ஒன்றின் காரணமாகவே இந்தப் பெருமையைப் பெற்று விளங்குகிறார். அந்தக் காரணத்தினாலே தமிழகத்தின் பெருமை இமயத்துக்கு அப்பாற் சென்று புகழ் தருகிறது என்று சொல்லலாம். அவரை மனங்குளிரப் பாராட்டி மகிழத்தான் வேண்டும்.

இந்த நிலையில் தமிழ் மதுரையைப்பற்றி எப்பொழுதும் ஒரு நினைவு நமக்கு உண்டு. திருவள்ளுவப் பெருந்தகையார் சொல்லுகிறார்,

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்

என்று. உணர்ச்சியளவிலே, உள்ளத்தளவிலே எத்தனையோ பெருமக்கள் ஒன்றுபட்டு வாழ்கின்ற காட்சியை இந்த நாட்டிலே பார்க்கமுடியும். என்றோ ஒரு காலத்தில் தமிழ்த் தாயின் வழியாக வள்ளுவரைப் படிக்கின்ற பேறு கிடைத்தது. அக்காரணத்தினாலே வள்ளுவர் புகழ்பாடுகின்ற பெருமை பெற்றவர்கள் அனைவரைப் பற்றிய நினைவும் எழுவது இயல்புதான்.

திருஞான சம்பந்தப் பெருந்தகையார் வெற்றிக் கொடி நாட்டிய மதுரையம்பதியிலே உலகத்தில் அன்பு நிலவ வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டு திருவள்ளுவர் கழகம் இருந்து பணி செய்கின்றது என்று நாமும் நினைத்துதான் இருந்தோம். எனவே உணர்ச்சியால் பழக்கம் இருந்தது அன்று; இன்று புணர்ச்சியால் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் வள்ளுவரைப்பற்றி எண்ணுகிற பொழுது வள்ளுவர் வாழ்ந்த நிலை என்ன என்று எண்ண வேண்டியிருக்கிறது. அவர் இவ்வளவு அருமையான நூலை யாக்கித்தந்தார் என்று சொன்னால் அவருடைய பெற்றோர் அவர் காலத்திய மக்களது மன நிலை முதலியன எப்படி யிருந்திருக்க வேண்டும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

"வள்ளுவர் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு எழுத்தாணியால் இந்நூலை எழுதி வைத்தார்’ என்று சொல்ல நம் மனம் இசையுமா? வள்ளுவர், வாழ்ந்த காலத்தில்-நூல் செய்த காலத்தில், தமிழகம் வள்ளுவர் கண்டு சொல்லிய முறைப்படி வாழ்க்கை நடத்தியது என்பதை நாம் மறக்கக்கூடாது. தொன்றுதொட்டே' அத்தகையதொரு சிறந்த வாழ்க்கை தமிழகத்தில் நிகழ்ந்தமை யினாலேயே திருவள்ளுவர் போன்ற பெருந்தகையார்கள் பிறக்க முடிந்தது.

வள்ளுவர் வழிவந்த பரம்பரை என்று சொல்லுகிற நம்மிடையே இன்று அறிவுக்குறை ஏற்பட்டுவிட்டது. வள்ளுவரைப் பற்றிப் பறை சாற்றுகின்றோம்; அரங்கு கூட்டு கிறோம்; எனினும் பெரும்பாலான மக்களிடத்தில் தமிழ்ப் பண்பாடு நிறைந்த வாழ்க்கை-அறநெறி வாழ்க்கை அமையப்பெறவில்லை என்பதை நினைந்து வருந்தத்தான் வேண்டியிருக்கிறது. திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் தமிழகம் அறநாடாக அறம் வழங்குகின்ற பூமியாக, அறத்தின் தாயகமாக, பிறருக்கு வழங்குகின்ற பெருந்தகையாளரின் உறைவிடமாக இருந்திருக்க வேண்டும் என்று உறுதியாய்க் கூறலாம். இந்தச் சூழ்நிலையிலே வளர்ந்த வள்ளுவர் தமக்குப்பின்னே வருகிற தமிழ்ச் சமுதாயம் சீற்றம்புரியக் கூடாதே என்ற பெருநோக்கங் கொண்டு பெருநூலை ஆக்கித் தந்தார். ஒவ்வொன்றையும் பத்து முறைகள் திருவள்ளுவர் வற்புறுத்துகின்றார். திருக்குறளைப் புகழ்ந்து கூறும் 'திருவள்ளுவ மாலை என்ற ஒரு நூல் உளது. பதினோராண்டுகளாக உங்களிடையே பணிபுரிந்த இக்கழகத்தில் திருவள்ளுவ மாலையைப் பற்றிச் சொல்ல வேண்டுவதில்லை.

ரெவரண்ட் பெர்சிவல் சொல்லுகிறார், வள்ளுவரைப். போல் அழுத்தந்திருத்தமாக அறம் எடுத்துக் கூறியவர்கள் இல்லை; திருக்குறளை ஒப்ப ஒரு நூல் மக்களாகப் பிறந்து வேறு எந்த மொழி பேசுகின்ற மக்களிடத்தும் அமையப் பெறவில்லை" என்று.

ஹீஸ் என்ற ரோமாபுரிக்கவிஞர் இலக்கியத்தைப் பற்றி மதிப்பிடுகின்றார். அக்கவிஞர் "உனது இலக்கியத்தைப் பொது மக்கள் முன்னிலையில் குறைந்தது ஒன்பது ஆண்டுகளுக்கு வை; அதற்குப் பிறகும் மக்கள் அதை விரும்புவார்களானால் உனது இலக்கியம், சிரஞ்சீவி இலக்கியம் என்று சொல்” என்கின்றார். ஒன்பது அல்ல; இரண்டாயிரம் ஆண்டுகள், ஏன்? காலத்தையெல்லாம் கடந்த ஒரு நூலாக வேறு எந்த நூலும் இத்துணைக் காலத்துக்கு இருந்தது இல்லை; மொழி பெயர்க்கப்பட முடியாதவளவில் தொண் ணுாறு மொழிகளிலே மொழி பெயர்க்கப்பட்ட ஒரு பெரும் நூலாகத் திருக்குறள் காட்சியளிக்கிறது என்று எண்ணுகிற பொழுது தமிழன் தலைநிமிர்ந்து நிற்கத்தான் ஆசைப் படுகிறான். எனினும் தமிழ்ப் பெருமக்களுக்கு ஒன்று கூற விரும்புகிறோம்.

திருவள்ளுவர் தமிழ்நாட்டிற் பிறந்தார் என்ற கார ணத்தை வைத்துக்கொண்டுமட்டும் தமிழ்ப் பெருநூல் என்ற காரணத்தை வைத்துக்கொண்டு மட்டும் பெருமைப்படாது, திருவள்ளுவப்பெருந்தகையார் வழிநின்று வாழ ஒரு திருக்கூட்டம் இருக்கிறது என்ற சொல்லைப் பெற்றுப் பெருமைபெற வேண்டும். அதுதான் நாம் வள்ளுவருக்குச் செய்கின்ற கைமாறு-கொடுக்கின்ற காணிக்கை என்பதை நினைவுபடுத்த ஆசைப்படுகிறோம்.

இந்த நிலை நாட்டிலே வளருமானால் துன்பம் இல்லை; வறுமை இல்லை. இதனை உறுதியாய்க் கூறும் நம்பிக்கையும் உண்டு. வள்ளுவர் சொல்கிற அறநெறி வாழ்க்கை இந்த நாட்டில் காட்சியளிக்குமானால் இந்த நாட்டிலிருக்கின்ற இன்னல்களெல்லாம் மாய்ந்து போகும். இன்று பெரும்பான்மையும் நம்மை வருத்துகின்ற ஒன்று உணவுப்பஞ்சம்; உணவுப்பற்றாக்குறை. இந்தப் பற்றாக் குறையின் அடிப்பட்ை மழையின்மை. திருவள்ளுவர் உலகத்தைக் கண்டார்; மேகத்தைக் கண்டார்; வானையும் கண்டார்; மலையையும் கண்டார்; நீலத்திரைக் கடலையும் கண்டார். இவற்றையெல்லாம் ஒரு முதற் கடவுள் இயக்கு கிறார் என்று முதல் அதிகாரத்திற் சொல்லுகிறார். அப்படி அனுபவித்து, உலகத்தை உணர்ந்து கொள்ளுகின்ற அறிவு நமக்கு இல்லை. ஆனால் அவர் அதை நன்குணர்ந்து வான் துளியின் கண்ணேதான் உலகம் இருக்கிறது என்று வான் சிறப்பைக் கூறுகிறார். வள்ளுவர் வான் சிறப்பு என்று ஒர், அதிகாரம் பாடும் அளவுக்கு அந்த வான், பெருமை பெற்றிருக்கிறது. வான் துளியின் கண்ணே தான் ஒழுக்கம் நிலைபெற்றிருக்கிறது, நிலைபெற வேண்டும் என்று சொல்லுகிறார். ஒழுக்கம் நிரம்பப் பெற வேண்டும் என்று சொன்னால், ஒழுக்கம் நிறைந்தவர்களாக மக்கள் வாழ வேண்டும் என்று சொன்னால் வான்துளி வேண்டும் என்று சொல்லுகிறார்.

மக்கள், மக்களாக வாழவேண்டுமானால், அறப் பெருஞ் செல்வராக வாழ வேண்டுமானால், பொய்மை நெறி கடித்து மெய்மைநெறி நின்று வாழ்தல் வேண்டும். இவ்வாறு வாழ மழைபெய்யுமென்று வள்ளுவர் கூறுகின்றார். அவ்வாறு வாழாததன் காரணத்தால்தான் வான் வறண்டுவிட்டது; பெருவளங் குன்றிவிட்டது; கிணறு குளங்கள் சுருங்கிவிட்டன என்று வள்ளுவர் மறைமுகமாக உணர்த்துகின்றார்.

திருவள்ளுவப் பெருந்தகையார் 'புகழ்' என்ற அதிகாரத்தில்,

             வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
             யாக்கை பொறுத்த நிலம்

என்று கூறுகின்றார். புகழ் இல்லாத உடலைத் தாங்கிக் கொண்டிருக்கிறது இந்தப் பூமி, அப்படித்தாங்கிக் கொண்டி ருக்கும் நிலையிருக்குமானால் வளங்குன்றும் என்று சொல்லு கிறார்.

உலகத்திலே வள்ளுவருக்கு, ஏன்? பட்டினத்தடிகளுக் கூடத் தாயன்பு விஞ்சியிருந்தது. மணிவாசகப்பெருமான் "பால் நினைந்துாட்டும் தாயினுஞ் சாலப்பரிந்து நீ" என்று தான் பாடுகின்றார். அந்த அன்பு நிலைக்கு உவமை காட்டு கிறபொழுது தாய்மை வருகிறது. அதனால்தான் இந்த நாட்டிலே எதையெடுத்தாலும் தாய் தாய் என்று வாய்குளிரப் பாடுகின்றோம். வள்ளுவர் இந்தப் பூமியைத் தாய் என்று சொல்லுகிறார்; எண்ணுகிறார். நாமும், வெள்ளையரும், கருப்பரும், சிவப்பரும் எல்லோருமே இந்த அருமைத் தாயின் புதல்வர்கள்! நாம் அனைவரும் நன்றாக வாழவேண்டும் என்று அவள் ஆசைப்படுகின்றாள். அதன் பெருட்டுப் பொன்னும் மணியும் அளித்திருக்கின்றாள். இவ்வளவு செய்கின்ற தாய்க்கு ஒரு ஆசை உண்டு.

           வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
           வேண்டாமை வேண்ட வரும்!

இக்குறளில் வேண்டாமை என்ற ஒன்றை எவ்வளவு வேண்டுகிறார்! யாருக்கும் ஆசை உண்டு; முற்றும் துறந்தவர் கட்குக்கூட உண்டு. அதுபோன்று இத்தாய்க்கும் ஒர் ஆசை சில மாதங்கள் தாங்கி நின்று ஈன்றெடுத்த தாய் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது உண்டியும் உறையுளுந்தான். இதைக் கொடுக்காமற்போனால் ஊரார் தூற்றுவர் எனப் பயந்து நாம் கொடுத்துவிடுவதுண்டு. ஆனால் நில மகளாகிய இத்தாய் ஒன்று விரும்புகிறாள். எல்லா மக்களும் பொய்மை நெறி கடிந்து மெய்மை நெறி நின்று புகழ் பெறவேண்டும் என்று விரும்புகின்றாள். அந்த மகிழ்ச்சியிலே திளைக்கின்றாள். இவ்வாறில்ல்ையானால் வருத்தப்படுகின்றாள். மகிழ்ச்சியிருந்தால் தானே எதுவும் செய்ய இயலும். இப்பொழுதும் ஆலவாயண்ணல் சோமசுந்தரப் பெருமானைக் கண்ட மகிழ்ச்சியிலே-அரசுபுரிந்த அங்கயற்கண்ணியைக் கண்ட மகிழ்ச்சியிலே ஏதோ சில சொற்களை உங்களிடத்திற் சொல்ல வந்திருக்கின்றோம். இவ்வாறில்லாமல் வருத்த நிலையிருந்தால் பேசத்தான் இயலுமா? அவ்வாறு ஏதேனும் மனத்துயரம் நம்மிடையே கப்பிக்கொள்ளுமானால் நம் செயல்கள் செயற்படுவதில்லை; செயற்பட்டாற்கூட முழுதும் பயன் தருவதில்லை; ஆகவே, இந்த நில மகளாகிய அன்னை வருத்தப்படுகிறாள்; துன்புறுகின்றாள்; அழுகின்றாள். இங்கே கொஞ்சம் மருத்துவத்தைக் கலக்கின்றார் திருவள்ளுவர். ஓயாத கவலையும் வருத்தமுங்கொண்டு துன்புறும் உள்ளம் உள்ள ஒருவனைத் தொட்டுப் பார்த்தால் அவன் உடலில் வெப்பநிலை புலப்படும். அருகில் நின்றால் அவன் விடும் பெருமூச்சுச் சுடுதலை யுணர்வர். இந்த நிலை நிலமகளாம் அன்னைக்கு ஏற்படுகின்றது. புகழ் படைத்த செல்வர்களாக நம் மக்கள் இல்லையே என்றுவருந்துகின்றாள்; துன்புறுகின்றாள். அவள் விடுகின்ற மூச்சு பெருமூச்சாக-வெப்பக் காற்றாக ஆகிவிட்டது. மேகம் திரண்டு வருகின்ற பொழுது குளிர்ந்த காற்று அதன்மேல் வீசினால் மழைபெய்யும் என்று பள்ளியில் பால பாடத்தில் படிக்கின்றோம். அங்கே குளிர்ந்த காற்றுப் போகமுடியாத நிலையில் எங்ங்னம் மழைபெய்யும்? நிலமகள் தான் வெப்பக் காற்றுவிடுகின்றாளே! இவ்வளவும் எண்ணித்தான் வள்ளுவர் இங்ங்ணம் சொல்லியிருப்பார் என எண்ணுகின்றோம்.

வசையிலா வண்பயன் குன்றும் எனத்தொடங்கும் இந்த அருமையான திருக்குறளை நினைந்து நினைந்து வாழ வேண்டும்.

திருவள்ளுவருக்கு மாளிகை எடுக்கவேண்டுவது இன்றியமையாததொன்று. அதற்கு முன்னே திருவள்ளுவர் கண்ட ஒழுக்க நெறிக்கு, வாழ்க்கை நெறிக்கு, அறநெறிக்கு மக்கள் உள்ளத்தில் அறமாளிகை எடுக்கவேண்டுவது மிக இன்றியமையாததொன்று என்பதை நினைவுபடுத்த வேண்டும். அந்த அக மாளிகை எழுகின்ற காலத்திலே வள்ளுவரின் புற மாளிகையும் தானாக எழுந்துவிடும் என்ற நம்பிக்கை உண்டு.

பாரதியார் பாடலில் அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல் என்ற அடிக்குப் பலரும் பலவாறு பொருள் சொல்வர். இது பற்றிச்சிலர் 'பாரதியார் ஆலயங்கள் கட்டுவதை வெறுத்தார். அவர் கண்டு காட்டிய தருமம் எழுத்தறிவித்தல்தான். அன்ன சத்திரங்களும் வேண்டாம் என்று கூறினர். பாரதியார் வெறுப்புணர்ச்சியால் ஆலயங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. நாட்டில் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் இருப்பினும் மக்களுக்கு அங்குச் சென்று வழிபடும் அறிவு இல்லை. அதனை நினைந்து வாழ்கின்ற அறிவு இல்லை. எனவே, அடிப்படையான அறிவைக் கொடுத்துவிட்டால் உணர்ந்து வழிபடுவார்கள். அதன் காரணமாக அவர்களே ஆலயங்களை எடுப்பர் என்ற நம்பிக்கையைத்தான் பாரதியார் சொல்லி வைத்தார்.

இதுபோலத் திருவள்ளுவரிடத்தில் பெருமதிப்பை இந்தக் கழகம் ஏற்படுத்தி வருகின்றது. நமது நலத்திற்கென்று நூலாக்கித் தந்த பெரும் புலவருக்கு நாம் கைம்மாறு செய்யவேண்டும் என்ற உணர்ச்சியை இந்த நாட்டு மக்களுக்கு ஊட்டிவிடுவீர்களானால் இவ்வுலத்தின்கண் திருவள்ளுவருக்கு எங்கும் இல்லாத நிலையில் இரத்தின மாளிகை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உண்டு.

திருவள்ளுவரைப்பற்றி அறியாதாரும் உண்டு என்பதை உணர்ந்து முதன்முதலில் குன்றக்குடிக்கு வந்தவுடன் வள்ளுவர்க்கு விழாக் கொண்டாடினோம். சமயாசாரியார்கள் விழாவை நடத்தாது வள்ளுவர் விழா நடத்தி யமைக்குக் காரணம் ஒன்று கூறினோம்; மக்கள் உள்ளத்திலே அடிப்படையான கருத்தை அடைய முடியாத நிலையிலேஅவர்கள் உள்ளத்தைத் தொட்டுப் பார்க்கமுடியாத நிலை யிருக்கிறது. எனவே மக்கள் உள்ளத்தைத் தொட்டுப் பார்க்கின்ற வரைக் கொண்டாடினாற்றான் சமயவாழ்க்கை வளம் பெறும் என்ற நம்பிக்கை உண்டு. இக்காரணத்தால் தான் திருவள்ளுவருக்கு விழா எடுக்கின்றோம். இவ்வாறு அடிப்படைக் கருத்தைப் புகுத்தியவர் திருவள்ளுவர்.

திருவள்ளுவருக்கு உயிர்நாடியாக இருப்பது அன்புநிலை என்பதை மறந்துவிடுதல் கூடாது. அடிப்படையிலே இந்த அன்பு நிலையை உள்ளத்தில் வைத்து வள்ளுவர் மாளிகை கட்டவேண்டும். திருவள்ளுவர் கழகத்தார் செய்கின்ற முதல் தொண்டாக எல்லா மக்களிடத்திலும் திருக்குறள் காட்டுகின்ற அற வாழ்க்கையை யூட்டவேண்டும். அதற்கு வள்ளுவர் மாளிகையை இந்நகரில் எடுக்க அருணையாதீனச்சார்பில் ரூபாய் ஆயிரத்தொன்று கொடுக்க முற்படுகின்றோம். இந்தப் பணியை நல்லமுறையில் முன்னின்று தொடங்குகின்றபொழுது நாமும் அன்பர்களும் வந்து இப்பணியை முற்றுவிக்க முற்படுகின்றோம். தமிழோடு மட்டு மன்று—சைவம் வளர்த்த, மதுரை என்று எண்ணுகின்ற பொழுது தமிழ்தான் நினைவுக்கு வருகிறது. தமிழ்ச் சங்கம் இருந்த மதுரை என்றுதான் பாராட்டுகின்றோம். அந்தத் தமிழ்ச் சங்கத்தை இன்று இந்தக்கோவிலில் வைத்து விட்டோம். பிற நாட்டு யாத்திரீகர்கள் இந்நாட்டிற்கு வந்தால் எங்கள் நாட்டிற் பிறந்த வள்ளுவரின் மாளிகை இது என்று காட்ட வேண்டும். மாணிக்கவாசகருடைய அருள் மாளிகையை எழுப்பும் பணியைக் காலத்தில் நிறைவேற்றத் திருவருள் துணைபுரியும் என்று நம்புகின்றோம். இந்த நிலையில் ஒன்றேயொன்று மட்டும் நினைவுபடுத்திப் பின்னே சில செய்திகளைச் சொல்லிப் பேச்சை முடித்துக் கொள்ளுகின்றோம். இந்த ரூபாய் ஆயிரத்தொன்றையும் இப்பொழுதே கழகத் தலைவரிடம் ஒப்படைக்கின்றோம். மாளிகை எழுப்ப நமது பெயரால் அப்படியே பாங்கில் போட்டு விடட்டும்; பின்னர் எடுத்துக்கொள்ளட்டும். பணி நடக்கின்ற காலத்தில் அன்பர்களிடத்திற் சொல்லி வேண்டுவன செய்யத் தயாராக இருக்கின்றோம்.

இனி திருவள்ளுவரின் நூல், வாழ்க்கை நூல் என்று பன்முறையும் சொல்லிவந்தது பற்றி ஒரு சிறிது விளக்குவோம். வள்ளுவர் நல்வாழ்வுக்கு எடுத்துக்காட்டும் அடிப்படையான கருத்துக்கள் இரண்டை நினைவுபடுத்த ஆசைப்படு கின்றோம். அவர் காட்டும் வழியைக் கூர்ந்து நோக்குங்கள். ஒன்று அன்பு மற்றொன்று தூய்மை. ஆயிரத்து முந்நூற்று முப்பது குறளையும் துருவித் துருவிப் படித்துவந்தீர்களானால் அவர் சொல்லும் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவங்கள் இந்த இரண்டும்தான் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

           முதற்கண் அன்பை நோக்குவோம்.


          அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க்
          கென்புதோல் போர்த்த வுடம்பு

என்கின்றார்.

மனிதனுக்கு உயிர்நிலையாக இருப்பது எது என்பதைத் திருவள்ளுவரைத் தேடிப்போய்க் கண்டுபிடிக்க வேண்டுவ தில்லை. இந்த உயிர்நிலையைக் கானுங் கருத்தைத் தேடி எங்கும் அலைதல் வேண்டாம். வாழ்க்கையில் அன்பு இருக்கிறதா என்று பாருங்கள். அன்பின் வழிய துயிர்நிலை என்று உயிர்நிலையின் அடிப்படையைச் சொல்லுகின்ற பொழுது வள்ளுவர். இங்கனம் கூறுகின்றார்.

இனித் துய்மையை நோக்குவோம். வள்ளுவர் சொல்லுகின்றபொழுது சிலவிடங்களில் கடுமையாகச் சொல்லுகிறார். சிலவிடங்களில் எளிமையாகச் சொல்லுகிறார். சிலவிடங் களில் ஆசாரியார் முறையிற் சொல்லுகிறார். தூய்மையில்லாதவர்களை அழுத்தமாகச் சிலவிடங்களில் கண்டிருக்கிறார்.

         மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்
         ஆகுல நீர பிற,

என்று இலக்கணம் சொல்லுகிறார். தூய்மைக்கு மாறுபட்டவர்களைக் கண்டபோது வள்ளுவருக்குக் கோபம் கடுமையாகத்தான் வருகிறது. வெகுளாமையைச் சொல்லிவைத்த வள்ளுவர் அதைக் கடைப்பிடித்தார் என்று நாம் நம்ப வில்லை. அவருக்கு இருக்கின்ற கோபம் நம்மிடத்திலேகூட இல்லை.

         செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
        அவியினும் வாழினும் என்

இது கோபமா இல்லையா? கோபம் கொடிது என்று சொல்லுகிற திருவள்ளுவர் கோபப்படுகிறார். துறவிகளைப் பற்றிப் பேசும்பொழுது,

     
        தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து
        வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று

என்கிறார்.

திருவள்ளுவரை முன்னின்று பார்ப்போமாயின் அவர் கோபமுடையவர் என்பது தெரியும். தவமறைந் தல்லவை செய்தல் தமிழகத்தின் பண்பாட்டுக்குப் புறம்பான வாழ்க்கை, அதைப்பார்த்தபோது அவருள்ளம் கொதித்திருக்கிறது. கொதித்த உள்ளத்திலிருந்து அந்தச் சொற்கள் வந்திருக்கின்றன. அறத்திற்கு மாறுபட்டவர்களைக் கண்டபோது ஒறுக்கவேண்டும் என்ற உணர்ச்சி அவருக்கு இருந்தது. அதனாற்றான்,

          மழித்தலும் நீட்டலும் வேண்டா வுலகம்
          பழித்த தொழித்து விடின்

என்று கூறுகின்றார். இச்சொற்களை யெல்லாம் கோப நிலையில் வள்ளுவர் சொல்லியிருக்கின்றார். இவற்றை யெண்ணுகின்றபொழுது வள்ளுவரின் உயிர்நாடிஅவருடைய அடிப்படை யெண்ணம் வேறொன்றின்கண் இருந்ததென்று சொல்ல முடியாது. அன்பு, அறம், தூய்மை இவை மூன்றும் வாழ்க்கையின் அடிப்படை என்று அவர் கண்டார். இந்த மூன்றில் ஒன்று இல்லாது போனாலும் அது வாழ்க்கையன்று என்பது வள்ளுவர் கருத்து.

 
         விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
         தீமை புரிந்தொழுகு வார்

என்ற குறளில் உயிரோடிருந்தாலுங்கட விளிந்தார் கூட்டத்துடன் சேர்க்கத் தக்கவர் என்று பேசுகிறார். அதனால்தான் நாம் இதை நினைவுபடுத்த எண்ணினோம். வள்ளுவரைப் பாராட்டுவதோடு மட்டும் இல்லாது வள்ளுவரின் பண்பாட்டிற்குப் பாராட்டு எடுங்கள் என்று சொல்ல ஆசைப்படுகிறோம்.

ஆசிரியரைப் பற்றியும் அவர் காலம், சமயம் இவற்றைப் பற்றியும் சண்டை செய்தல் வேண்டாம் என்று சிலவிடங் களில் நாம் நினைவுபடுத்துவது உண்டு. வள்ளுவர்தான் ஆசிரியர் என்று சொல்வதாலன்றோ சண்டை எழுகிறது. திருக்குறளை ஊன்றிப் படிக்கின்றபொழுது எவ்வளவோ தெரிந்து கொள்ளலாம். இப்பொழுது புதிய ஆராய்ச்சி யொன்று வந்திருக்கிறது. அது, திருவள்ளுவர் திருக்குறள் செய்யவில்லை. பெயரில் அவர் ஒருவரை வஞ்சித்தார் என்று முடிவுகட்டி எழுதியிருக்கின்றார். அது ஆங்கிலத்தில் அச்சானதன் காரணத்தால் இந்நாட்டு மக்களிடைக் கிளர்ச்சியைத் துாண்டவில்லை. திருவள்ளுவர் திருக்குறள் செய்யவில்லை என்பதற்கு அவர் எடுத்துக் கொண்ட சான்றுகள் இரண்டு. ஒன்று:---


ஆவனவும் ஆகா தனவும் அறிவுடையார்
யாவரும், வல்லா ரெடுத்தியம்பத்-தேவர்
திருவள்ளுவர் தாமும் செப்பியவே செய்வார்
பொருவி லொழுக்கம் பூண்டார்

தேவர் என்ற புலவர் திருக்குறள் செய்தார். திருவள்ளுவர் என்பவர் அவருடைய மாணாக்கர். தேவர் முதுமை காரணமாகத் தாம் செய்த திருக்குறளைத் திருவள்ளுவரிடங் கொடுத்து மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்குக் கொண்டு போகச் சொன்னார். அவரை வஞ்சித்துத் திருவள்ளுவர் மதுரையில் திருக்குறள் செய்தவன் நானே என்று கூறி விட்டார் என்பது.

வள்ளுவன் என்பான் ஓர் பேதை என்று ஒரு பாட்டு உண்டு. இந்த அடியையும் அவர் சான்றாக எடுத்துக் கொண் டார். உலகப் பெரு நூலை ஆக்கித்தந்த திருவள்ளுவரை வள்ளுவன் என்று சொல்பவர் பேதை என்று சொல்வது. அவர் இதை வள்ளுவன் வஞ்சகன் ஆகையால்தான் பேதை என்று கூறினார் என்று ஆராய்ச்சி செய்து திருவள்ளுவர் திருக்குறள் செய்யவில்லை என்று முடிவு கட்டி ஆங்கிலத்தில் புத்தகமும் வெளிவந்தவிட்டது. அது எவ்வாறிருந்தால் என்ன? நமக்கு வேண்டுவது திருக்குறள், அதிலே இருக்கிற ஒழுக்கம், வள்ளுவன் என்பான் பேதை என்னும் அடியில் உயர்ந்த கருத்து விளங்குகிறது. கடவுள் நிலையில் அவரை வைத்துப் பேசவேண்டும். யாரேனும், வள்ளுவன்' என்று சொல்வாரானால் பேதை வள்ளுவர் எனச் சொல்லல் வேண்டும். திருவள்ளுவமாலையில் இவ்வாறு சொல்கிறார் ஆசிரியர்.

இதை ஆதாரமாகக் கொண்டு திருவள்ளுவர் ஆராய்ச்சி வந்திருக்கிறது. இதை எழுதியவர் ஒரு பட்டதாரி; B.A., B.L., என்ற பட்டம் பெற்றவர். அது எவ்வாறேனும் ஆகுக. நமக்கு வேண்டுவது திருவள்ளுவர் கண்ட ஒழுக்க நெறி; அறநெறி; அன்பு நெறி; பண்பாடு. உலகம் எங்கிருக்கிறது என்று சொல்கிறார்?

          பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
          மண்புக்கு மாய்வது மன்

என்கின்றார்.

நம்நாட்டிலே தாய்மார்கள் மண்ணோடு மண்ணாப் போக என்று சொல்வார்கள், வெஃகாமை பேசிய திருவள்ளுவர் பண்பின்றி இந்த நாட்டில் மனிதர் வாழ முடியாது என்ற காரணத்தாலேயே இவ்வாறு கூறியிருக்கிறார். எனவே, வள்ளுவரைப் பாராட்டுகிறோம் என்று சொன்னால் வள்ளுவர் கண்ட பண்பாட்டை நினைவு படுத்துகின்றோம். அதனால்தான் தமிழகம் வாழமுடியும் தமிழகத்தின் கண்ணே பிறந்துவளர்ந்த நாமும் பெருமை யுடன் வாழமுடியும் என்பதை மறந்துவிடக்கூடாது. நாம் நினைவுபடுத்துவதெல்லாம். கேட்டுக்கொள்வதெல்லாம் "வள்ளுவரைப் படிக்க வேண்டும்; அதன்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதே. திருவள்ளுவர் எத்தனை ஆணிகள் அறைந்துகூறுகிறார் பாருங்கள்!

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

ஒவ்வொரு சொல்லுக்கும் உட்பொருள். திருக்குறள் படிக்கவேண்டிய நூல்; படித்து அனுபவிக்கத் தக்க நூல். பிரான்சிஸ் பேக்கன் என்ற பேராசிரியர் ஒருசில நூல்கள் பார்க்கத்தக்கவை. ஒரு சில நூல்கள் படிக்கத்தக்கவை. ஒரு சில நூல்கள் படித்து அனுபவிக்கத்தக்கவை என்று சொல்லு கிறார். இந்த அருமைகளெல்லாம் நிறைந்துள்ள நூல் ஒன்றி ருக்கிறது என்று சொன்னால் அந்நூல் திருக்குறள். அது பெரும் நூல். அதைப் படித்து அனுபவிக்கவேண்டும். அதன் நெறி நின்று வாழ முயற்சிசெய்ய வேண்டும். என்னுடைய நோக்கம் முழுதும் இதுதான். அந்த நெறியில் நின்று வாழ ஆசைப்படுவோமானால்,

இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

என்பது உணரலாகும். அறிவுள்ளவர் வாய்ச்சொல் என்று கூறவில்லை; ஒழுக்கமுள்ளவர் வாய்ச்சொல்தான் உதவும் என்று கூறுகின்றார். ஆதலால் வள்ளுவர் கண்ட ஒழுக்கநெறி இந்த நாட்டில் வளர வேண்டும். இது வளராத நிலையில் எது வளர்ந்தாலும் பயனில்லை. இந்த வளர்ச்சியில்லாமல் 'தமிழ் மகன் என்று சொல்லிக் கொள்ளக்கூடக் கொஞ்சம் அச்சமாகத்தானிருக்கிறது. - 江·13, 

          நலத்தின்கண் நாரின்மை தோன்றி னவனைக்
          குலத்தின்கண் ஐயப் படும்.

ஆகையால் நம்மிடத்தில் குறையிருக்குமானால் தமிழ்க் குலத்திற்கே இழிவு வந்துவிடும். ஆகையால் தமிழ்ப் பண்பாட் டிலே நெறியிலே வாழாதவர்கள் தமிழ் மகன் என்று சொல்லிக் கொள்ளாமலாவது இருக்கட்டும். ஏன்? தமிழ்க் குலத்தின்கண்ணே பலரும் ஐயப்பாடு கொண்டு விடுவார்கள். இவைகளை யெல்லாம் நாம் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.

இந்த உலகத்தைப் பார்க்கிற பொழுதெல்லாம் வள்ளுவர் ஒரு ஆராய்ச்சி செய்கிறார். ஒன்றுபோல் தோன்றும் கருத்தை இரண்டொரு விடத்திற் சொல்லுகிறார்.

        எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
        மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்றும், மற்றொரு இடத்தில்,

        எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
        மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்றும் கூறுகிறார்.

இந்த இரண்டுக்கும் வேற்றுமை இருக்கத் தானே வேண்டும்? இந்தக் குறளின் நோக்கம் வேறு. அந்தக் குறளின் நோக்கம் வேறு. ஆனால் உரையாசிரியர்கள் சிலர் ஒரே பொருள்தான் காட்டுகின்றனர். இதற்குப் பரிமேலழகர் "கோச்சேரமான் யானைக்கட்சேய், மாந்தரஞ்சேரல் இரும்பொறை" என்ற மேற்கோள் காட்டுகிறார். இது அவ்வளவு சிறப்புடைத்துத்தானா என்று கூறல் வேண்டும். எத்தன்மைத் தாயினும் என்ற இடத்தில் "பொருளின் தன்மைப் பாட்டிலே வைத்து இந்த வுலகத்தில் காணுகின்ற, உணர்கின்ற, அனுபவிக்கின்ற பொருள் எது? நிலைத்த இன்பம் தருவது எது? அப்படியில்லாதவை எவை? என்று அறிந்து முடிவுகட்டுக; நிலைத்த இன்பம் தருகின்ற ஒன்றைப் பற்றிக்கொள்க'வென்று சொல்கிறார். இதில் எத்துணையோ ஆழ்ந்த பொருள் உண்டு. எத்தனை உரையாசிரியர்கள் தோன்றினும் வள்ளுவரை முழுதும் காண இயலாது. வள்ளுவரை யாரும் முடிவுகட்ட முடியாது. திருக்குறள் அறிவுக் கருவூலம். வாழ்க்கையிலே அறிவு பெறாது குழந்தைகளாக இருக்கின்றவர்கட்கு இடமே கிடையாது. நாம் இன்னும் வளர்ச்சியடையவேண்டும். சங்கத்தமிழ் முழுவதும் பயின்ற பேரறிஞர்கள் அனைவரும்கூடச் சில விடங்களிலே தவறிவிட்டார்கள் என்று நமக்குத் தோன்றுகிறது. நாம் தவறிவிட்டோம் என்று நமக்குப் பின் வருகின்ற பரம்பரை சொல்லும். தவம் என்ற அதிகாரத்தில் ஒரு குறள்,

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

இதற்குப் பரிமேலழகர், செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது உண்மையின்மைகளையுங் குறித்து நின்றன என்று குறிப்பிடுகின்றார். மணக்குடவர் அறிவின். என்று முதலில் எழுதுகிறார். செல்வம் என்றும் கல்வி என்றும் சொல்லுகிறார். இதன் கருத்தை நோக்குவோம். செல்வத்தின் கண் உள்ள வெறுப்பால்தானே தவஞ்செய்ய முனை கின்றனர். அவ்வாறு அவர்கள் தவஞ்செய்தால் செல்வம் பெறுவார் என்று சொன்னால் பயனில்லையே. மற்றொன்று: அறிவு என்று கொண்டால் அறிவின் துணைகொண்டு அதை உணர்ந்து தானே தவத்திற்கு நாடிச்செல்லுகிறான். ஆகை யால் அறிவின் முழுத் துணையிருந்துதானே அவன் செல்லுகிறான். ஆகையால் அறிவு என்று சொன்னாலும் அவ்வளவு பொருத்தமாக இல்லை. ஆதலின், இரண்டையுஞ் சொல்ல முடியாது.

நம் இலக்கியத்தை வைத்துப் பேசுகிறபொழுது ஒன்று சொல்ல வேண்டியிருக்கிறது. எப்பொழுதும் தவஞ் செய்கின்ற பெரு மக்கள் தமக்காகத் தவஞ் செய்வாரல்லர். "உலகை வாழ்விக்கத் துறந்தவர்க்குத் துப்புரவு வேண்டியே மற்றையவர் தவம் மறந்தார்” என்று வள்ளுவர் குறிப்பிடுதலுங் காண்க. தவஞ்செய்கின்றவர் தம்மைக் குறித்த நினைவில்லாதவர், ஆகையால் தவஞ்செய்ய எண்ணுகின்ற பொழுது தம்மை மறக்கின்ற நிலை வேண்டும். அதனைத் தான் மற்றோரிடத்தில்,

தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்

என்ற மேற்கொள் காட்டிச் சொல்லுகின்றார்.

"நாம் ஒழிந்து, சிவமானவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ” என்று மாணிக்கவாசகர் பாடுகின்றார்.

கோவில்களில் சீர்திருத்தம் வரவேண்டும் என்று விரும்புகின்றவர்களில் நானும் ஒருவன். கோவிலுக்குப் போகின்ற நம்மிடத்தில் என்ன எண்ணம் இருக்கின்றது? இங்கிருந்து தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் எல்லாம் கொண்டு போகிறோம்.-ஆண்டவன். எங்கும் நிறைந்தவர். உள்ளுகின்றவர் உள்ளத்தில் எல்லாம் ஒளி விளக்காய்க் காட்சியளிக்கின்றவர். இவ்வாறு நிறைந்து விளங்கும் ஆண்டவன் திருமுன்னர்ச் சென்று நான்தான் அருணாசல தேசிகர், என்னுடைய நrத்திரம் இது எனச்சொல்லி அர்ச்சனை செய்வோமானால் அதைவிட வேறு நிலை யில்லை. அவனருள் வாழவேண்டும்; அவன் திருவடி வாழவேண்டும். ஞாலம் நின்புகழே மிகவேண்டும் என்று ஏன் பாடினார்? ஞானசம்பந்தர் ஏன் மதுரை வந்தார்? சமணர்களை வெல்ல வேண்டும் என்பதற்காக வந்தார். சமணர்களைப் புறங்காணவேண்டும். அதற்குத் துணைசெய் என்றல்லவா ஆண்டவனிடம் கேட்கவேண்டும்? ஆனால் அவர் அப்படியொன்றுங் கேட்கவில்லை. ஞாலம் நின்புகழே மிக வேண்டும் என்று வேண்டினார். இத்தகைய வழக்காறு கொண்ட நாட்டில் இன்று நாம் இப்படியெல்லாம் வாழ்கின்றோம். இந்த நிலையால் பிறருக்கு என்ன பயன் என்று பார்க்க வேண்டும். சமய வாழ்க்கை சொல்லுகிறபடி இந்த நினைவு வரவேண்டும். தவஞ் செய்கின்ற முனிவர் பெருமக்களாலே நாம் எல்லாப் பயன்களையும் பெறுகின்றோம் என்ற கருத்தைக் கொள்ளவேண்டும். இவ்வாறு நாம் இக்கருத்துக்குச் சிறிது சுற்றிவர வேண்டும். இவ்வாறு சொல்வதுதான் முறையென்று கருதுகின்றோம். உரையாசிரியர்கள் உரையைப் புரட்டுவதற்குள் மூலத்தைப்படித்து இக்கருத்தை உணர்ந்து கொள்ளலாம். சிலர் பலராகிய காரணம் என்ற குறளுக்கு வருகின்றோம். பலர் சிலரா வதற்குக் காரணம் தவஞ்செய்யு முனிவர் சிலராயிருத்தலே; நோலாதவர் பலராய் இருத்தலே என்ற கருத்தை விளக்குவது அக்குறள்.

தவஞ்செய்யு முனிவர் பெருமக்கள் அதிகமாக இருந்தால், அவர்கள் எண்ணம் சிந்தனையெல்லாம் சிலராகிய எல்லா மக்களுக்கும் சிறப்புடைய வாழ்வு கிடைக்கச் செய்யும். அப்படியில்லாத காரணத்தினால்தான் இல்லாதவர் பலராகிறார்கள். இப்படிச் சொல்வதற்கு வள்ளுவரே இடந்தருகின்றார். துறந்தார்தான் முதலில் பேணத்தக்கவர் என்று அவர் குறிப்பிடுகின்றார்.

இல்லறத்தார் கடமையை வற்புறுத்துகின்றவிடத்தில்,


          துறந்தார்க்கும் துவ்வா. தவர்க்கும் இறந்தார்க்கும்
          இல்வாழ்வான் என்பான் துணை

என்று போற்றிச் சொல்லியிருக்கிறார். அவர்கள் தவத்தின் காரணமாக, அன்பு நிலையின் காரணமாகத்தான் இங்ங்ணம் கூறினார். இத்தகைய முனிவர் எங்கேனும் கன்னி முனையில் இருந்தால் மதுரையில் உள்ளார் யாது செய்ய முடியும்? ஆகையால் மதுரையிலே இரண்டொருவர் இருத்தல் வேண்டும். மற்றவூர்களில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள்! ஆகையால் அவர்கள் நாடெங்கும் நிரம்பியிருத்தல் வேண்டும் என்ற கருத்தை வள்ளுவர் எண்ணியிருப்பார் என நம்புகின்றோம்.

          ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்
          சான்றோர் பலர்யான் வாழு மூரே

என்ற அடிகளில் பலர் என்ற சொல்லை வைத்துப் புறநானூற்று ஆசிரியர் இடத்தருகின்றார். இதனாலும் துறவியர் பலர் உளராதல் வேண்டும் என்பது பெறப்படுகின்றது.

இந்த நிலைகளிலே யெல்லாம் திருவள்ளுவர் பேரருளைத்தானே தருகின்றார். அறநெறியைக் காட்டு கின்றார். தமிழகத்தின் பெருமையைத் திருக்குறள் காட்டுகின்றது. தமிழகத்தின் பெருமை திருவள்ளுவரின் திருவடியில் தான் இருக்கிறது.

தமிழன் அன்றையத் தமிழனாகவே வாழ்கிறான்; திருவள்ளுவர் கண்ட தமிழனாகவே வாழ்கிறான் என்ற நிலையைத் தமிழகம் பெறவேண்டும். அந்த உணர்ச்சியைப் பெற முயற்சிக்கின்ற காலத்தில் நாம் பெற்றிருக்கும் பெருமை நம்மால் இன்னும் அதிகமாக வளரும் என்ற நம்பிக்கையை உங்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டு, அந்த உணர்ச்சியைப் பெற முயற்சிக்கின்ற காலத்தில் நாம் பெற்றிருக்கும் பெருமை நம்மால் இன்னும் அதிகமாக வளரும் என்ற நம்பிக்கையை உங்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டு, திருவள்ளுவர் புகழ்பாடி அவர் காட்டிய ஒழுக்க நெறியை, அறநெறியைவிடாது கைப்பிடித்தல் வேண்டும் என்று கூறுகின்றோம்.

               ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்கம்
               உயிரினு மோம்பப் படும்

இக்குறள் காண்க

திருவள்ளுவர் உலகத்தைத் துறந்துவிட்டு விரைவில் மடிந்துபோ என்று சொல்ல ஆசைப்படவில்லை. ஒழுக்கம் விழுப்பந்தரலால் உயிரினும் ஒம்பப்படும் என்று சொல்லுகின்றார். ஆகையால் பொன்னேபோல் போற்றிவாழ அவர் காட்டிய சாதனம் உயிரைவிட ஒழுக்கம் சிறந்தது என்பது தான். இந்த ஒன்றினால் மட்டும் நாம் காட்சியளிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டு திருவள்ளுவர் கண்ட பண்பாடு, திருவள்ளுவர் கண்ட நாகரிகம், இந்த நாட்டில் நின்று நிலவ திருவள்ளுவரின் திருவருளைச் சிந்திக்கின்றோம்.

உலகத்தை இயக்கும் ஆலவாயண்ணலின் திரு வருட்டுனையால் விரைவில் இந்நலன்கள் நிரம்பப் பெறுவோம்; திருவள்ளுவர் கண்ட தமிழகத்தைப் பார்ப்போம் என்ற நம்பிக்கையுடன் முடித்துக்கொள்கின்றோம்.

அன்புடைய பெருமக்களே! தாய்மார்களே!.

இரண்டொரு மணிநேரங்கழித்துத் திரும்பவும் கடமை யென்ற காரணத்தை முன்னிட்டு மாத்திரம் ஒரு சில சொற்கள் சொல்ல ஆசைப்படுகின்றோம். தலைவர் முடிப்புரை பெரும்பான்மையும் பேசிய அறிஞர்களின் பேச்சையொட்டித்தான் அமைவது இயற்கை. இந்த நிலையிலே, கல்லூரி மாணவர் என்ற பெருக்கு ஏற்ப, ஒளவை துரைசாமி பிள்ளை அவர்களின் புதல்வராக இருப்பினும் கல்லூரி மாணவர் என்ற நிலைக்கு ஏற்ப, சொன்மாரி பெய்தார். தந்தையைப்போல் மகனல்லவா?

கல்லூரி மாணவர், உலகத்திலே வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கத் தோன்றிவிட்டால் அது ஆச்சரியந்தான். வாழ்க்கையின் அடிப்படை சிந்தனைதான். கல்லூரி மாணவன் வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கின்ற நிலையில் அவன் என்னவாகிறான்? இதே நிலையில் பேரறிஞனாக வாழ்ந்து வாழ்க்கையை அமைத்துக்கொள்ளட்டும் என்று வாழ்த்துகிறோம்.

பின்னே பண்டித முத்துச்சாமிப் புலவரவர்கள் பேசினார்கள். திருவள்ளுவர் குறளின் முறை, அமைப்பு முறைகள் சிலவற்றைச் சொன்னார். திருவள்ளுவர் அன்பாகச் சொல்ல வேண்டியவற்றை அன்போடு சொல்வார்; அடித்துச் சொல்லவேண்டியதை அடித்துச் சொல்லி விடுவார். அவர் தாம் கூற எடுத்துக்கொண்ட கொள்கைகளைச் சற்றும் பிறழாது வற்புறுத்திக் கூறுகின்ற பண்புநலமுடையவர். வள்ளுவரிடத்திற் காணப்படும் அருமையான பண்பாடு, பெருமையானதாக, உயிர்நாடியாக இருப்பவைகளையெல்லாம் ஓரிடத்திலன்று.இரண்டிடத்திலன்று; மூன்று இடங்களுக்கு அப்பாலுஞ் சொல்வார்.

இன்னாசெய் தாரை யொறுத்தல் அவர்நாண,
நன்னயஞ் செய்து விடல்

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்,
என்ன பயத்ததோ சால்பு

இப்பண்பாட்டைச் சற்றேறக்குறைய ஐந்து குறள்களுக்குமேல் வற்புறுத்தியிருக்கிறார். இப்படிப் பல்வேறிடங்களில் திரும்பத் திரும்பச் சொல்கிற தன்மையால் வள்ளுவரின் ஈடுபாடு புலப்படுகிறது.

உயிர்க்கு ஊதியம் ஒன்று வள்ளுவர் சொல்கிறார். திருநாவுக்கரசுப் பெருமான் ஒரு ஊதியத்தைச் சொல்கிறார். இரண்டும் சொல்லளவில் வெவ்வேறாகத் தோன்றினும் முடிவில் ஒரே கருத்தில்தான் காட்சியளிக்கும். "ஈதல் இசைபட வாழ்தல் அது வல்ல, தூதியமில்லை யுயிர்க்கு” என்று வள்ளுவர் சொல்கிறார். திருநாவுக்கரசப் பெருந்தகை யார் "தொண்டு அலாது உயிர்க்கு ஊதியமில்லை” என்று சொல்கிறார். இவ்வாறாக இரண்டு பெருமக்களும் உயிர்க்கு ஊதியம் கூறுகிறார்கள்.

கொடுப்பதற்காகவே பிறந்த நாடு தமிழ்நாடு என்று சொல்வார்கள். "வடவேங்கடம் தென்குமரி, ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம்” எனத் தொல்காப்பியர் கண்ட தமிழகத்தை இன்று காணமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. வருகின்றவர் களையெல்லாம் 'வாருங்கள், வாருங்கள் காவிரியாற்றுத் தண்ணீர் இருக்கிறது; நல்ல சோறு இருக்கிறது' என்று வரவழைத்து அள்ளிக்கொடுத்ததன் காரணத்தால் இன்று கூவத்திற்கு இப்பால் ஒதுக்கப்படுகின்ற நிலை வந்துவிட்டது. கொடுப்பதன் காரணமாக வறுமைவரினும் கொள்ளத்தக்கது என வள்ளுவர் சொல்கிறார். கடல்கொண்ட நாட்டுக்குத் தள்ளிவிட்டாலும் போகலாம்; வந்தவனுக்கு இடங் கொடுத்துத் தமிழன் போனான் என்ற பண்பாடு இருக்குமன்றோ? இத்தகைய பண்பாடு தமிழனுக்கே உரியது.

திருவள்ளுவர் புலமைக்கு ஒரு இலக்கணம் கூறுகிறார். 'நுண் மாண் நுழை புலம்' என்று சொல்கின்றார். எல்லோரும் உயர்வு தாழ்வு இல்லை என்று சொன்னாலும் நாம் ஒத்துக்கொள்ளவில்லை. திருவள்ளுவர் "பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா, செய்தொழில் வேற்றுமை யான்" என்று பேசுகிறார்.

அதுபோலக் கொடுக்கின்ற கூட்டத்தையும் மூன்று வகையாகக் காண்கின்றார். அதில் ஒருவகை மக்கட் கூட்டத்தைக் காண்போம். இக்கூட்டத்தைப் பற்றிக் கூறும் போது வள்ளுவர் "ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம், பேரறிவாளன் திரு” என்று குறிப்பிடுகின்றார். ஊருணி நீர் பிறரால் எடுத்துக்கொள்ளப்படாமல் இருந்தால் கெட்டு விடும். ஆனால், பிறர் எடுத்துக் கொண்டிருந்தால், அந்நீர் அடிக்கடி வெளியேற்றப்படுவதன் காரணமாகத் துய்மைத் தன்மை பெறுதல் இயல்பு. தன் துய்மையைப் பெற்றுக் கொள்வதற்காகவே ஊருணி பிறருக்கு நீரையளிக்கிறது. அதுமட்டுமன்று, ஊருணியைத் தோண்டத் தோண்டத் தண்ணீர் வருகிறது. இது ஒரு அடிப்படை இதுபோல் இன்னது செய்தால் இன்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிக் கொடுப்போர் அவ்வகையினர் என வள்ளுவர் நினைத்திருக்க வேண்டும்.

இனி அதற்கு அடுத்த வகையினரைக் காண்போம். நடுவூரில் ஒரு பயன் மரம்; பிழைப்பற்றவர்க்கெலாம் பிழைப்புக் கிடைக்கும் என்று மக்கள் தேடி வருகின்ற மதுரை மாநகரிலே, பயன் தரும் மரம் இருக்குமானால் போகலாம். ஆனால் நடுவூர் மரத்திற்குக் கொஞ்சம் ஆபத்து. அவர் தண்ணீர் ஊற்றுவார் என்று இவரும், இவர் தண்ணீர் ஊற்றுவார் என்று அவரும் எண்ணி யாவரும் சும்மா இருந்துவிடுவர். ஆனால் யாவரும் குச்சி ஒடிக்க வந்துவிடுவர்; இத்தகைய மரம் வளர்ந்து காய்த்துப் பயன்படும் நிலையில் நம்முடைய கடமையைச் செய்துவிட வேண்டும் என்று எண்ணுவோர். இவ்வகையினர் என்கின்றார் வள்ளுவர்.

இனி மூன்றாம் வகையினரைத்தான் வள்ளுவர் மனமாரப் பாராட்டுகின்றார்; வாயாரப் பாராட்டுகின்றார்; 'பெருந்தகையாளர்' என்று பாராட்டுகின்றார். இதைச் சொல்லும் பொழுது மருந்து நினைவுக்கு வருகிறது. சிலருக்குச் செல்வம் இருக்கும். கொடுக்கமாட்டார்கள்; ஆனால், கொடிறுடைக்கும் கூன்கையர்க்குக் கொடுப்பார்கள். இவ்வாறின்றி எல்லோர்க்கும் பயன் கொடுக்கும் முறையில் கொடுக்குங் கூட்டத்தார்க்கு மருந்து மரத்தை உவமை காட்டுகிறார். அம்மரம் பக்கத்திற் கிடைக்கூடிய மரம்; எளிதாகப் பறிக்கலாம். அவ்வகையில் 'பக்கத்திலிருந்து பயன் தரும் மருந்து மரம்போல்' என்கின்றார். வைத்திய முறையில் சில மரங்களுக்கு ஆபத்துண்டு. வைத்தியர், ஒருவரிடத்தில் 'பட்டையை உரித்துக் கஷாயம் வைத்துச் சாப்பிடு' என்பர்; மற்றொருவரிடத்தில் 'இலையை அரைத்துச் சாப்பிடு' என்பர்; இவ்வாறு வேரிலிருந்து பட்டை வரை அனைவர்க்கும் மருந்துசொல்லிவிடுவர். இத்துணை மக்களும் அந்த ஒரே மரத்தை முற்றுகையிடுவர். ஒருவர் வேரை வெட்டுவர்; ஒருவர் பட்டையை வெட்டுவர். இத்தனை பேருக்கும் அசைந்து கொடுக்காது கொடுத்து வாழ்கின்ற மரத்தைப் போன்ற பெருந்தகையாளர் என்று பாராட்டுகிறார்.

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்

என்ற குறள் நயம் காண்க. இவ்வாறு உவமை கூறிய பெருமை திருவள்ளுவர்க்கே உண்டு.

'செல்வத்தின் பயன் ஈதல்' என்ற பண்பாடு தமிழ் நாட்டிற்கே உரியது.

சிலர், ஏதாவது கேட்கின்றபொழுது தங்களிடத்தில் இல்லையே என்று சொல்கிறார்கள். இவ்வாறு சொல்வது கூடப் பிழையாம். இல்லையே என்று சொல்கிறவனிடத்தில் உடல் வலிவு இருக்கும்; அது இருக்கும்போது இல்லையே என்று சொல்லுதல் பிழை. கேட்கின்றவரைச் 'சற்று இருங்கள்' எனச்சொல்லிவிட்டுச் சென்று தேடிச் சம்பாதித்துக் கொடுக்கவேண்டும் என்று தமிழ்நாட்டு நாகரிகம் சொல்லுகிறது. 'தனக்கு மிஞ்சித் தானதருமம்' என்பது நம் நாட்டுப் பழமொழி அன்று. அப்படிப்பட்ட நாகரிகத்தில் வாழ்ந்த இந்நாட்டில் இன்னும் இந்தநிலை வளரத்தான் செய்கிறது. இந்த நிலை வளர்ந்து வரும் என்ற நம்பிக்கை உண்டு.

சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், கன்பூஷியஸ் போன்ற மேல்நாட்டு அறிஞர்களிடத்தில் திருவள்ளுவர் கருத்துக்கள் பலவும் காணப்படுகின்றன. இத்தனை அறிஞர்களும் ஒத்துப்போகிற நிலையைப் பார்க்கும்போது திருவள்ளுவரைப் பார்த்துத்தான் இவர்கள் எல்லோரும் சொன்னார்களோ, அவர்களைப் பார்த்துத் திருவள்ளுவர் சொன்னாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் இலக்கியத்தைப் படிக்கும்போது திருவள்ளுவர் அவர்கட்கெல்லாம் முற்பட்டவர் என்று அறியப்படுகிறது. இதை அறிஞர்கள் முழுவதும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அவர்கள் அறிவுத் துறையிலே, ஆராய்ச்சித் துறையிலே, உணர்ச்சித் துறையிலே வளர்ந்த பிறகு அவர்களுடைய எண்ணம் ஒன்றாக இருக்கிறது. திருவள்ளுவரை வைத்து சாக்ரடீஸ் சொன்னார் என்றும் சாக்ரடீஸை வைத்துத் திருவள்ளுவர் சொன்னார் என்றும் எண்ணவேண்டாம். அந்த உள்ளமும் உயர்வை, உண்மையை எண்ணிற்று. இந்த உள்ளமும் உயர்வை, உண்மையை எண்ணிற்று. அவர் வாழ்ந்த சூழ்நிலை வேறு. இவர் வாழ்ந்த சூழ்நிலை வேறு. எனினும் உணர்ச்சியால் ஒன்றுபடுகிறார்கள். இக்கருத்தினை எத்தனையோ இடங்களில் சிறப்பாகச் சொல்ல ஆசைப்படுவதுண்டு.

இந்த நாட்டிற்கு அடுத்த முறையில் அறத்துறையிலே, பண்பாட்டுத் துறையிலே, பெயர் பெற்ற நாடு கிரேக்க நாடு. அதற்கு அடுத்த நிலையில் சீனா இடம் பெறுகிறது. கன்ஷியஸ் நூலில் வள்ளுவர் கருத்துக்கள் இடம் பெறுகின்றன. அவரும் வள்ளுவரைப் போல் அறம் என்று சொல்லுகிறார்; அறம் தென்றல் என்று கூறுகிறார். அறம் அல்லாத வற்றை வாடை என்கிறார். தென்றல் உடலுக்கு வளம் தருகிறது; வாடை வருத்து கின்றது, இதையே தான் திருவள்ளுவரும் பேசுகின்றார். அந்த நாட்டுப் பெருமக்கள், அறிஞர்கள் உணர்ச்சியால் நம் திருவள்ளுவர் கண்டவற்றை கண்டிருக்கின்றனர். ஆனால் அது காலத்தால் முற்பட்ட எண்ணமாக இருக்கலாம். எனினும் தமிழ் நாட்டு நாகரிகம்போல் பல நாடுகளிலும் இருந்துதான் வருகிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மனிதாகப் பிறந்த அனைவர்க்கும் வாழத் தகுதி உண்டு என்பதைத் திருவள்ளுவர்,

எவ்வ துறைவ துலகம் உலகத்தோ,
டவ்வ துறைவ தறிவு

என்று சொல்கிறார். 'உலகத்தோ, டவ்வ துறைவ தறிவு' என்று சொல்கின்றமையால் உலகத்தையொட்டிச் செல்ல வேண்டும் என்ற நிலையில் தமிழ்ச் சமுதாயம் இருத்தலால் இவ்வுண்மையை ஒப்புக் கொள்ளவேண்டும்.

தமிழ்நாட்டைப்பற்றி இன்னும் உலகம் அறிந்து கொள்ளாமல் குறை கூறுகிறது. ஏன், அண்டையிலுள்ள வடநாடுகூட அறியவில்லை. தபால் தலைகளில் கவிஞர்களின் உருவத்தைப் பொறிப்பதாக வடநாட்டரசாங்கம் அறிவித்திருந்தது. தாகூர், மீரா போன்றவர் இடம்பெற்றனர். உள்ளத்தை உருக்குகின்ற உயர்ந்த அறங்கூறும் ஞான நூலை ஆக்கித் தந்த மணிவாசகர் இடம் பெறவில்லை. திருவள்ளுவர் இடம்பெறவில்லை. இந்த நிலையில் நாம் விழிப்புடனிருக்கவேண்டும். என்பால் இதைப் பற்றிக் கேட்ட அன்பர்க்கு ஒன்று சொன்னேன். இதுபோல் அவர்கள் செய்து விடுவாராயின் அவைகளை வாங்கி நீங்கள் உங்கட்குப் பிடித்தமான தமிழ் நாட்டுக் கவிஞர் உருவங்களைப் பொறித்துவிடுங்கள் என்றேன். அம்முறையில் கம்பர், மாணிக்கவாசகர், திருவள்ளுவர் போன்றோரின் உருவங்களை அச்சிட்டுப் பயன்படுத்த ஒரு கூட்டம் முன்வந்திருக்கிறது. இதைப்போல் திருவள்ளுவர் கழகச் சார்பில் உள்ள மக்களும் தமிழ்நாட்டுக் கவிஞர் உருவப் படத்தைப் பொறித்து வடநாட்டினர்க்கு அனுப்புதல் வேண்டும். தமிழகத்தில் தோன்றி இலக்கியங்களை ஆக்கித்தந்த பேராசிரியர்களைப் போல், திருவள்ளுரைப்போல் யாரும் இல்லை. திருவள்ளுவர் கூறியதுபோல் அறிவுரையை அழுத்தந் திருத்தமாகக் கூறிய பெரும் புலவர் இல்லை.

இதுபோலவே உருகாதார் உள்ளத்தில் ஒரு புரட்சியை உண்டாக்கிய அருமையான அமுதமொழி திருவாசகம்போல் உள்ளத்தை மாற்றும் உணர்ச்சி வேறு எந்த மொழியிலும் இல்லை. இவ்வாறு பேசும்பொழுது உள்ளம் தன்னையுமறியாமல் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்கின்றது. ஆனால் பள்ளியில் படிக்கின்றபொழுதுகூட இந்நாட்டுக் கவிஞர் பெயர் சொல்லப்படுவதில்லை. பாண்டியன் வரலாறு, நெடுஞ்செழியன் வரலாறு இவைகளையெல்லாம் சொல்லிக் கொடுப்படுதில்லை. ஆனால் சிவாஜி வரலாறு இருக்கும் அதைப் படித்துத்தான் தீரவேண்டும். படித்தே தீருவான். சம்பந்தரை அறியமாட்டான். மத்துவாசாரியரைப் பற்றி அறிந்திருப்பான். இந்த நிலை அடியோடு மாறவேண்டும். அந்த உணர்ச்சி நம்மிடையே வளரவேண்டும். அப்படி வளர்ந்தால்தான் நாம் பெரும்பயன் பெறமுடியும். அவர்களும் நம் நாட்டுக் கவிஞர்களை விட்டுவிட்டு அச்சுப்போடத்தான் போகிறார்கள். நாமும் வாங்கத்தான் போகிறோம். ஆனால் அவர்கள் அச்சுப் போடுதற்கு முன்னே நாம் கம்பர், மாணிக்கவாசகர், திருவள்ளுவர் படங்களைப் பொறித்துவிட வேண்டும். இனி இந்த உருவங்களை தாமே பொறித்துவிடவேண்டும் என்கிற உணர்ச்சி ஊட்ட வேண்டும்.

கல்வியைப் பற்றிச் சிறிது சொல்வோம். கல்வியைப் பற்றி எத்தனையோ கருத்து. அவற்றையெல்லாம் விளக்க வேண்டும் என்ற ஆசையில்லை. ஒரு பேரறிஞர், "நீ சொல்லித்தரும் படிப்பு ஒருவனை மகாத்மாவாக்க வேண்டாம், மனிதனாகவாவது ஆக்கட்டும்" என்று சொல்கிறார். அந்த நிலையிலே அத்துணைப் பெரிய சிறந்த மனிதப் பண்புடையவராக வாழச்செய்ய வேண்டும் கல்வி, அப்படிச் செய்யாவிட்டால் அன்று திருவள்ளுவர் கண்ட பேய்க்கூட்டந்தான் வாழ்கிறது என்று பொருள். ஏன்? "உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப்படும்” என்றாரல்லவா? உலகம் அவரைப் பேய்க்கூட்டம் என்று சொல்கிறது. அப்பேய்க் கூட்டத்தை உற்பத்தி செய்யும் நிலையங்களாகப் பள்ளிகள் இருக்கின்றன. அந்த நிலையொழிந்து திருவள்ளுவர் விரும்புகின்ற நிலையில் கல்வி நிலையங்கள் பணி புரியவேண்டும். அப்படிப் பணிசெய்யும் போது திருவள்ளுவர் 'நிலையாமை' யைப் பற்றிக் கூறியதை நினைவுபடுத்தவேண்டும். நிலையாமையைப்பற்றிச் சொன்னால் அது நஞ்சாயிருக்கிறது என்று சிலர் சொல்கின்றனர். திருவள்ளுவர் என்ன கூறுகின்றார்? “நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும், பெருமை யுடைத்திவ்வுலகு” என்று நிலையாமையை வற்புறுத்துகிறார். திருவள்ளுவர் 'இந்தவுலகில் வாழ்கின்ற நாம் வரையறை உணர்ந்தவர்கள் அல்லேம்' என்று சொல்கிறார். ஆகையால், 'நீ செய்யவேண்டும் என்று எண்ணியதை உடனே செய்' என்கிறார். காயமே இது பொய்யடா’ என்ற பாட்டைப் பாடவில்லை. செயல் முறையில் ஆற்றுப்படுத்தற்காகவே சொல்கிறார். இந்நிலையில் அப்படிப்பட்ட உணர்ச்சியை யூட்டவேண்டும்.

'தான் நாட்டித் தனாஅது நிறுத்தல்' என்ற நிலை புலவர்க்கு இயல்பாகவே உண்டு. திருவள்ளுவர் கண்ட துறவறம் இல்லறத்திற்குப் பிறகா? முன்னா? இது ஒரு பெரிய வாதம். சில பெரும் பேராசிரியர்களிடத்திற்கூட இந்தச் சர்ச்சை எழுந்திருக்கிறது. பிள்ளையவர்கள் 'இல்லத்திற்குப் பின்' என்று சொல்கிறார்கள். அது பற்றிச் சில கருத்துக்கள் சொல்ல வேண்டியிருக்கிறது. திருவள்ளுவர் இல்லறத்திற்குப் பெருமை கொடுத்திருக்கிறாரா என்றால் இல்லறத்தைவிடத் துறவறத்துக்குத் தான் பெருமை கொடுத்திருக்கிறார். கடவுளைப் பேசிய நாவால் உடனே 'நீத்தார் பெருமை’ பேசுகிறார். அதோடு மட்டுமன்று. துறவறத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அழுத்தமாகப் பேசுகிறார். "இருமை வகை தெரிந் தீண்டதும் பூண்டார், பெருமை பிறங்கிற்றுலகு" என்று. "அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும், பிறன் பழிப்பதில்லாயின் நன்று” எனக்கூறி இல்லறத்திற்குத்தான் திருவள்ளுவர் பெருமை கொடுத்தார் என்று இல்லறத்தார் அனைவரும் தெரியாமல் சொல்வர். இதுபோல தெய்வத்தானாகாதெனினும் முயற்சிதன், மெய்வருத்தக் கூலி தரும்" என்றமையால் கடவுள் இல்லையென்று சொல்லிவிட்டார் என்பர் சிலர். பரிமேலழகர் 'அஃதும்' என்ற சொல்லுக்கு 'ஏனைத் துறவறம்' என்று வலிந்து பொருள் காட்டுகிறார். 'அஃதும்' அந்த இல்லறமும் என்று கொண்டு பெயரளவில் இல்லறம் நல்லதுதான்; அவ்வாழ்க்கை பிறன் பழிப்பதாக இல்லையானால் நன்று என்கிறார். திருஞான சம்பந்தர் காலத்தில் 'ஆலயந் தொழுவது சாலவும் நன்று' என்று சொன்னால் போதும். அந்த நிலை அன்று இருந்தது. இன்று அப்படிச் சொன்னாலும் போவதில்லை. இன்றைய நிலையில் 'கோயிலுக்கு உள்ளன்போடு போ' என்று சொல்லவேண்டும்.

இல்லறம் மட்டும் அறம் என்று எண்ணிவிடுதல் கூடாது. அஃதும் என்று சொல்கிறபோது அந்த இல்லறமும் என்று சொல்லவேண்டுமின்றி துறவறத்திற்குச் சென்று நுழைதல் கூடாது. திருவள்ளுவர் 'மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம், பழித்த தொழித்து விடின்' என்ற குறளில் 'பிறன் பழிக்க இயலாவண்ணம் துறவறநெறி நிற்க' என்று கூறியவர் ஈண்டும் அதே கருத்தைக் கூறவே மாட்டார். ஆதலால் இது பிறன் பழிக்காவண்ணம் இல்லற நெறி நிற்க என்ற கருத்தை வற்புறுத்த வந்ததேயாகும்.

திருவள்ளுவர் இல்லறத்தார்க்கு வீட்டின்பம் இல்லை என்று சொல்வார்போல் சொல்கிறார். "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும், தெய்வத்துள் வைக்கப்படும்" என்றார். ஈண்டுத் தேவவாழ்க்கைதான். சொல்லப்படுகிறது. துறவு நிலையைச் சொல்லும்போது, "யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த வுலகம் புகும்” என்றார். இவ்வாறு திருவள்ளுவர் துறவியாக இருந்துதான் சொன்னாரோ என்று எண்ணுவதுண்டு. இவற்றைப் பார்க்கும்பொழுது இல்லறத்தைவிடத் துறவறமே சிறந்ததென்று தெரிகிறது.

இல்லறத்திலிருந்து துறவறத்திற்கு வருபவன் எல்லாவற்றையும் அனுபவித்துத்தானே வரவேண்டும். இவ்வாறு வருவதாயிருந்தால் 'கூடா வொழுக்கம்' என்று சொல்வானேன். திரும்பவும் ஆசை வரலாம். அந்த ஆசைவரினும் அதைக் கூடாவொழுக்கம் என்று சொல்லவேண்டுவதில்லை. அந்தத் துய்மையோடு நின்றுவந்ததால்தான் அவன் மனம் திருந்தும். ஆகையால்தான் கூடாவொழுக்கம் என்று வற்புறுத்துகிறார். இல்லறத்திற்குப்பின் துறவறம் வேறு எந்த நாட்டில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தமிழகத்தில் இல்லறமில்லாமலே துறவறம் உண்டு. இல்லறத்திலிருந்தும் வந்திருக்கிறார்கள். அதனால்தான் தமிழ் நாட்டுச் சமயநிலையங்களிற் கூடத் திருமண்ம் ஆகாதவர்களுக்குத் தான் பட்டம் உண்டு. திருவள்ளுவர் முதலில் ஒழுக்கத்திற்கு இடங்கொடுத்தார். இந்நாட்டில் சிலர் துறக்காமல் இருக்கிறார்களே அது எதற்காக என்று கேட்கின்றார்? வேலை செய்கிறவன் உயர்ந்தவனா? வேலைவாங்குகின்றவன் உயர்ந்தவனா? வேலை வாங்குவோன் தானே உயர்ந்தவன். அதுபோல துறவு உயர்ந்ததா? துறக்காமல் இருப்பது உயர்ந்ததா? எனில் துறந்தவர்க்குத் தொண்டு செய்தற்காகவே ஏனையோர் துறக்காமல் இருக்கிறார் என்றால் துறவு பெரிதா? இல்லறம் பெரிதா? யார் பேசினும் திருவள்ளுவர் எதிரில் காட்சியளிக்கின்ற நிலையில் இருக்கிறார். ஆகவே, இரண்டையும் உயர்த்தித் தாழ்த்திமட்டும் சொல்லவில்லை. இல்லறத்தில் நின்று அறத்துடன் வாழ்தல் எளிது. ஆனால் துறவறத்தில் அப்படி வாழ்தல் மிகக் கடினம். இல்லற்த்தில் தவறிவிட்டாலும் மன்னித்து விடுவார்கள். ஆனால் துறவறத்தில் தவறிவிட்டால் மன்னிக்கமாட்டார்கள். துறவு நிலையில் உள்ளவன் கரடு முரடான மலையில் செல்கின்றான். அவன் அங்கிருந்து தவறி விழுந்தால் அவன் கதி அதோகதிதான். "புறங் குன்றி கண்டனையரேனும் அகங் குன்றி, மூக்கிற் கரியாருடைத்து” எனல் காண்க. தவறி விழுந்தாலும்கூட பயனற்ற வாழ்க்கையாக நாட்டிற்கே நலம் பயக்காத வாழ்க்கையாக அமைந்துவிடும் என்ற காரணமாக ஒரு சில அதிகாரத்திற்குப் பின் வைத்தார்.

இல்லறத்தைப் பாராட்ட வள்ளுவருக்கு 'அறம்' என்ற ஒரு சொல் கிடைத்துவிட்டது. 'அறம்' என்ற சொல் பாராட்டப்படுகிறது. ஆனால் துறந்தார் நிலை சொல்லுக்கும் சிந்தனைக்கும் அப்பாற்பட்டது. துறந்தார் நிலையைச் சொல்லச் சொல் கிடைக்கவில்லை. எண்ணம் கிடைக்க வில்லை. ஆகையால்

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று

என்றார். இதனாலும் துறவின் மாட்சி புலனாகும். இருந்தாலுங்கூட பண்டித முத்துசாமிப் புலவர் சொன்னதுபோல் இன்றைக்கும் இந்நாட்டில் துறவு பாராட்டப்படுவதில்லை. ஏன்? அவர்கள் அப்படியில்லை. அதனால்தான் வள்ளுவர் “மழித்தலும்...விடின்” என்றார். மழித்தலும் நீட்டலும் இந்த நாட்டுக்குத் தேவைதான். பழிப்பற்ற வாழ்வை மேற்கொண்டிருந்தால் தேவைதான். ஆகத் திருவள்ளுவர் இரண்டையும் பாராட்டுகிறார். அதனால்தான் பேரறிஞர், “He was not an age but for all time" என்பதாக சொன்னார்.

எந்தக் காலத்திற்கும், எந்த நூற்றாண்டிற்கும், பல்வேறு காலத்திற்கும், வருகிற சமுதாயம் அனைத்திற்கும் வேண்டியவர் திருவள்ளுவர் என்பதை நினைவுபடுத்தி அந்த அருமைப் பெரும் புலவரை உள்ளக் கோயிலில் வைத்து அவர் கண்ட ஒழுக்கம் என்பால் பொருந்துவதாக என்று ஆண்டவனை வாழ்த்தி வாழ்த்தி, திருவள்ளுவர் திருவடியை வாழ்த்தி வாழ்த்தி, திருவள்ளுவர் புகழ் வாழ, திருவள்ளுவர் கண்ட அறம் வளர, உண்மை ஓங்கி மக்கள் அறநெறியில் வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறோம். 'சான்றோர் அவையில் பாம்பும் உய்யும்' என்பதைக் கண்கூடாகக் காணும் அளவில் அருமையான சூழ்நிலையிருந்தது. திருவள்ளுவரின் திருக்குறளை அனுபவித்த உங்களுக்குத் தூய இறவாத இன்ப அன்பை நினைத்துக்கொண்டு திருவள்ளுவர் திருவருள் நமக்குத் துணைசெய்வதாகுக என வாழ்த்திப் பல்வேறு இடங்களுக்குச் சென்று சென்று எண்ணுகிற நிலையில் அத்துணைக் கூட்டங்கள் இருத்தல் கண்டு மகிழ்ச்சியைப் புலப்படுத்திக் கொள்கிறோம்.

திருவள்ளுவர் மாளிகை கட்ட எத்தனையோ பெருமக்கள் இருக்கின்றனர். இதை நாம் செய்தால் அவர்களும் செய்வார்கள் என எண்ணித்தான் செய்தோம். உடன் வந்திருக்கும் சைவசித்தாந்தப் புரவலர் அவர்கள் ஏனையோர் எல்லோருமாகச் சேர்ந்து இந்த அருமைப் பணியைச் சங்கத்தமிழ் வளர்ந்த மதுரையில் நிறைவேற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் நிறுத்திக்கொள்கின்றோம்.