குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2/வாழ்க்கை விளக்கு

2



வாழ்க்கை விளக்கு

என்ன செய்தோம்?

திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டு விழாக் கொண்டாடுவதில் வழக்கம் போலத் தமிழகம் ஈடுபட்டிருக்கிறது. இந்த உலகிலேயே சடங்குகள் செய்து வாளா இருத்தலில் சமர்த்தர்கள் தமிழர்களேயாம். சிலைகள் எழுப்பியும் சின்னங்கள் காட்டியும் வழிபாடுகள் செய்தும் (வழிப்படுதல் அன்று) வாளா உறங்கும் உரிமை தமிழினத்தின் தனி உரிமையோ?

திருவள்ளுவர் பிறந்து ஈராயிரம் ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இந்த ஈராயிரம் ஆண்டுகளில் தமிழகத்தில் நிகழ்ந்ததென்ன? திருவள்ளுவர் தீதெனக்காட்டி விலக்கிய தீய ஒழுக்கத்திலிருந்து நாம் விடுதலை பெற்றிருக்கிறோமா? நன்று இதுவெனத் தேர்ந்து காட்டிய ஒழுக்க நெறிகளில் நிலை பெற்றிருக்கிறோமா? திருக்குறளை ஈன்றெடுத்த தமிழினம் இன்று எந்தத் துறையில் விழுமிய சிறப்பினைப் பெற்று விளங்குகிறது? ஒரு பயனுமின்றி இரண்டாயிரம் ஆண்டுகளை உருட்டி விட்டோமே என்ற மகிழ்ச்சிக்கு விழாவா? அல்லது திருக்குறளுக்கு விழாவா? விழாவெடுப்பதனாலேயே ஒரு நூல் சிறந்து விடுவதில்லை. விழாவெடுப்பவர்களின் தரத்தைப் பொறுத்தே விழாவுக்குச் சிறப்பு. திருவள்ளுவருக்கு நாம் என்ன கைம்மாறு செய்துள்ளோம்? அவருக்கு நன்றியுடையவர்களாகவாவது இருந்திருக்கிறோமா?

இன்றைக்கு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத் தெட்டு ஆண்டுகட்கு முன்பு ஏசு பிறந்தார். ஏசுவைப் பின்பற்றிய மக்கள், ஏசுவையே கண்கண்ட தெய்வமெனப் போற்றும்-போற்றிப் பின்பற்றி ஒழுகும் ஒரு பெருங்கூட்டத்தை நாடு, மொழி, இனம், சமயம் கடந்து உருவாக்கியுள்ளனர். அவர்தம் பெயரால் மக்கள் சமுதாயத்தின் விழுமம் துடைக்கும் பணிமனைகள் பாரினில் பலப் பலவுண்டு. ஆனால் நாம் வள்ளுவருக்கு என்ன செய்தோம்?

'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்,' என்றார் திருவள்ளுவர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த இனிய உயிரொருமைப் பாட்டு நெறியினை எடுத்துக் காட்டினார் திருவள்ளுவர். இன்றளவும், தமிழர்களிடையே உள்ள சாதிப் பிரிவினைகள் போகவில்லை. எல்லா உயிர்களும் பிறப்பொக்கும் என்று பேசும் திருக்குறளைப் பாராட்டும் நாட்டில் இனவழிப்பட்ட ஒருமைப் பாட்டைக்கூட இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் காண முடியவில்லை. கவிஞன் இக்பால், இஸ்லாமிய சமுதாயத்தில் ஏற்படுத்திய மாறுதலைக் கூட திருவள்ளுவரால் தமிழினத்தில் செய்ய முடியவில்லை.

இன்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு கார்ல் மார்க்ஸ் தோன்றினார். பொருளாதார ஏற்றத் தாழ்வற்ற ஓர் ஒப்பற்ற சமுதாயத்தைக் காண மூலதனம் என்ற அரிய நூலைச் செய்து தந்தார். கார்ல் மார்க்ஸுக்குக் கிடைத்த லெனின், ஸ்டாலின் ஆகிய சீடர்கள் உலகின் மக்கள் தொகையில் ஐந்திலொரு பகுதி மக்களைக் கார்ல்மார்க்ஸ் மாமுனிவரைக் கட்டுப்பாடாகப் பின்பற்றி, ஒழுகும் மக்களாக ஆக்கியிருக்கிறார்கள். மற்ற பல நாடுகளிலும் அதனுடைய ஒளி வீச்சு இருக்கிறது. சோவியத் யூனியனில் ஏழைகளும் பிச்சைக்காரர்களும் இல்லாத நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். நம்முடைய திருவள்ளுவருந்தான் 'இரந்து முயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகி யற்றியான்' என்று நெஞ்சு துடிக்கக் கூறினார். இது கார்ல் மார்க்ஸுக்கும் முந்திய கருத்து. பிச்சையெடுக்கச் செய்யும் சமுதாயத்தை எதிர்த்தது மட்டுமின்றி அரசனையும் கடவுளையும் எதிர்த்துத் திருவள்ளுவர் முழங்கினார். ஈராயிரம் ஆண்டுகள் கழித்தும் இந்த நாட்டின் நிலை என்ன? பிச்சையெடுக்கிறவர்களின் எண்ணிக்கையாவது குறைந்திருக்கிறதா? குறைந்தபாடில்லை. பிச்சையெடுக்கக்கூடிய சூழ்நிலையை மாற்றாமல் பிச்சையெடுப்பவர்களைத் தடை செய்யும் சட்டத்தையல்லவோ செய்து சாதனை செய்திருக்கிறோம். திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் நாம் என்ன தான் செய்திருக்கிறோம் என்பதைச் சிந்தனை செய்யுங்கள்.

சென்றது போகட்டும். இனிமேலாவது திருக்குறள் தமிழினத்தின் வாழ்க்கை நூலாக விளங்கும் நிலை உருவாக வேண்டும்.

வள்ளுவரும்-லெனினும்

ன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் திருவள்ளுவர் தோன்றினார். அவர் திருக்குறளை இயற்றித் தந்தார். தமிழக மக்கள் போதிய நல்லூழ் இன்மையின் காரணமாகத் திருக்குறளை ஒர் இலக்கியமாக மட்டுமே கருதி, பதவுரை-பொழிப்புரை கண்டு அமைந்து விட்டனர். ஆனால், திருக்குறள் மனிதவியல் விஞ்ஞானமாகும். அது வரலாறு காட்டும் வான் விளக்கு; அலை மோதும் மனித உணர்வுகளை ஒழுங்கு செய்யும் ஒப்பற்ற உணர்வு நூல்; வேற்றுமைகளைக் கடந்து மனிதகுல ஒருமைப்பாட்டை உணர்த்தும் நூல்; மண்ணகத்தை விண்ணகமாக்கும் உயர்ந்த தத்துவங்களடங்கிய விந்தை நூல்; புதுமையும் பொதுமையும் பொலிவுற்றிருக்கும் பொது நூல்! வேறுபாடுகளற்ற ஒப்பற்ற பொதுமைச் சமுதாயம் காண்பதற்குரிய கருப்பொருள்கள் வள்ளுவத்தில் கால்கொண்டு கிடக்கின்றன. திருக்குறளில் கால்கொண்டு கிடக்கின்ற பொதுமைக் கருத்துக்களுக்கு கார்ல் மார்க்ஸ் மாமுனிவர் உரை விளக்கம் செய்தாரோ என்று கருதினாலும் தவறில்லை. கார்ல் மார்க்ஸ் மாமுனிவரின் மூதறிவிற் பிறந்த மூலதனத்திற்கு வாழ்க்கையில் விளக்கம் காண விளாதிமிர் இலியட் லெனின் முயன்றார். கார்ல்மார்க்ஸ் செய்த தவத்தை வள்ளுவன் செய்யவில்லையோ? இல்லை, இல்லை! வள்ளுவன் உயர்த்திப் பிடித்த ஒளிவிளக்கை வள்ளுவனே அஞ்சிய அவன் இனச் சார்பு மூடி மறைத்துவிட்டது! ஆனாலும், உலகப் பேரொளியாகப் பிறந்த குறள், உலகில் வழங்கும் தகுதி பெற்றது; அத்தகுதியைப் பெற்று வருகிறது; இனியும் பெற்று விளங்கும்.

வள்ளுவம் போன்ற நூல்களுக்கு நிகண்டுகள்வழிப்பொருள் காண்டது ஓரளவு வரவேற்கத் தக்கதே. யாயினும், அது போதாது. வள்ளுவன் பொழுது போக்கிற்காக அதனைச் செய்தானா? அல்லது காவியம் செய்தானா? அவன் படைத்த காமத்துப் பாலில்கூட இரண்டு உயிர்களின் உணர்வுகளை உளவியல் அடிப்படையிலல்லவா இணைக்கின்றான்! குறைகளை நீக்குகின்றான்; குணங்களைக் காட்டுகின்றான்; இன்புறுத்துகின்றான்! வாழ்வாங்கு வாழ்வது என்று சொன்னானே, அதற்குரிய நெறிகளையும் முறைகளையும் அவனே காட்டுகின்றான். ஆயினும், இதுகாறும் நாம் கண்டு சுவைத்தது கவிதைச் சுவையையே. செவிப் புலனுக்குச் சுவையாக மட்டுமா செய்தான்? உயிர்ச் சுவையும், உணர்வுச் சுவையும் கூட்டிப் பாடிய கவிஞனின் ஆற்றல் என்னே! என்னே!!

கார்ல்மார்க்ஸ் மாமுனிவன் செய்த மூலதன நூலுக்கு விளக்கம் கொடுத்து, வையகத்தில் விளங்கிடச் செய்த பெருமை லெனினுக்கே உண்டு. லெனின், ஒரு சிந்தனையாளன்; வாழ்க்கைப் பட்டறையில் புடம் போட்ட சுடர்த்தங்கம். அவன் கற்பனையில் வாழ்ந்ததில்லை. அறிவு, அனுபவம் ஆகிய இரண்டினை மையமாகக் கொண்டே அவன் தத்துவங்கள் தோன்றின. லெனின், மனிதாபிமானத்தின் உச்ச நிலையில் உணர்வு பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும் வளர்த்த மேதை அப்படியே வாழ்ந்து காட்டியவன்-வாழத் துரண்டியவன். மனிதாபிமானம் என்பது உலகின் எல்லா மொழி இலக்கியங்களிலும், சிறப்பாகப் பக்தி இலக்கியங்களிலும் பரக்கப் பேசப்படுகின்றது. லெனினுக்கு முன்பே இங்ஙனம் பேசிய மொழிகள் உண்டு. ஆயினும், அவை உணர்ச்சிகளையே வெளிப்படுத்தின - அழுது தீர்த்தன. அந்த உணர்ச்சிகளுக்குச் செயல் உருவத்தை அந்த இலக்கியங்களைப் பாராட்டியவர்கள் கொடுக்கத் தவறி விட்டார்கள். வெறும் உணர்ச்சி அல்லது அழுகை, வாழ் வித்துவிடுமா என்ன? 'அறிவினா லாகுவதுண்டோ? பிறிதின் நோய்- தந்நோய்போல் போற்றாக்கடை' என்றான் வள்ளுவன். 'அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்' என்றும், 'ஈசனுக்கன்பில்லார் எவ்வுயிர்க்கும் அன்பில்லார்' என்றும் கூறினார் திருமூலர். இவைகளையெல்லாம்விட மனிதாபிமானத்தின் உச்சக்கட்ட வெளியீடாக 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று உருகி உருகி வெளியிட்டார் வள்ளல் இராமலிங்க அடிகள். இந்த உணர்வு வெளியீடுகள் என்ன பயனைத் தந்தன? சமுதாயத்தில் என்ன மாறுதல்களை உண்டாக்கியிருக்கின்றன என்று ஆராய்ந்தால் வெட்கஉண்டாக்கியிருக்ப்பட வேண்டியிருக்கிறது. இந்த உணர்வுகளின் வெளியீடுகள் செயற்படாததோடு மட்டுமின்றி, இந்த உணர்வு வெளியீடுகளை-தமக்கே உரியனவாக-தம்முடைய வர்க்கத்திற்கே உரிமையுடையன வென்று பாடியும் பரப்பியும் வர முயலுகின்றவர்களைப் பார்த்தால் நமக்கு வேதனை ஏற்படுகின்றது! இந்த மனிதாபிமான உணர்வுகளைச் சராசரி அளவு கூடப் பெறாத ஏகபோக வர்க்கத்தினர் (திருக்கோயில்கள் திருமடங்கள் தொடங்கிச் செல்வந்தர்கள் ஈறாக) எடுத்துக் கொண்டிருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது! லெனினோ, தன்னுடைய மனிதாபிமானத்தை உணர்வாக மட்டுமின்றிச் செயற்படுத்தி மனித சமுதாயத்தின் வரலாற்றில் ஒரு திருப்பத்தையே உண்டாக்கியிருக்கிறான். அவனுக்கு முன்பு அன்பைப் பற்றிப் பேசியவர்கள் உண்டு. ஆனால் லெனினோ, அன்பிற்கு ஒர் உயிர்ப்புடைய ஒரு வடிவத்தை வாழ்க்கையில் ஏற்படுத்தி இனம் கண்டு காட்டினான். துன்பமேயில்லாத இன்ப உலகத்தைப் பற்றி-நிலப் பிரபுத்துவத்தின் மடியில் தவழ்ந்து கவிஞர்கள், கற்பனை உறக்கத்தில் பாடியதுண்டு. சொர்க்கலோகக் கற்பனையின் தோன்றிய புராணங்களும் உண்டு. ஆனால் வாழப் பிறந்த மனிதன் மட்டும் அவற்றைக் கண்டதேயில்லை. அதிலும், பலரைத் தம் உழைப்புத் திறனால் வாழ்விக்கும் உழைப்பாளர் வர்க்கம் அன்பின் சுவையை - வாழ்க்கையின் சுவையை முற்றிலும்-முழுதுமாக அனுபவித்துச் சுவையைக் கண்டதேயில்லை. லெனின் கற்பனை உலகின் சுவையை வாழ்க்கையில் எல்லோரும் சுவைக்கக் காட்டிய மேதை.

தாம் இன்புறுவதை மற்றவர்களும் இன்புற வேண்டும் என்று விரும்புவது அறிஞர் கடமை. இது மனித இன ஒழுக்கத்தின் அடிப்படை நியதி. இதனையே திருவள்ளுவர்,

தி.II.8

தாம்இன் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்

என்று கூறுகிறார். இந்தத் திருக்குறளுக்கு உரையாக லெனின் வாழ்க்கை அமைந்திருக்கிறது.

தாக்கிஸ்தான் விவசாயி ஒருவர் லெனினைப் பார்க்கச் சென்றார். அதுபோது தாக்கிஸ்தானைச் சேர்ந்த கைவினையிற் சிறந்த தொழிலாளர்கள் செய்த சில பொருட்களை லெனினுக்குப் பரிசிலாகக் கொண்டு சென்றார். லெனின் அவர்களின் கைவினைத் திறனைப் பாராட்டினார். ஆனாலும், அந்தப் பரிசுப் பொருட்களை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு லெனின் சொன்ன ஒரே காரணம்; "இந்தப் பொருள்களின் அழகை எல்லோரும் பார்த்துப் பாராட்ட வேண்டும்” என்பதேயாகும்.

(“It would be unfair for me admire them alone" Every-body should have a chance to admire them; send them to a museum.)

எல்லா அழகையும் தாமே அனுபவிக்க வேண்டுமென்றது அறிவெனக் காட்டும் அறியாமையை லெனின் தம் வாழ்க்கையின் மூலமாகவே கடிகின்றார். அறிவு என்பது ஒரிடத்திற்கோ, ஒரினத்திற்கோ, ஒரு மனிதனுக்கோ மட்டும் சொந்தமில்லை. அறிவு, எல்லா மனிதர்களிடத்தும் உண்டு. ஆயினும், வளர்ச்சியடையாமலும், முழு நலம் பெறாமலும், தொய்வுகள் உடையதாக இருக்கக் கூடும். ஒரு சிறந்த அறிஞன் என்பவன் மற்றவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்ற மனோபாவத்தில் மற்றவர்களை முட்டாளாக்கி, அவ்வழி தன்னையும் முட்டாளாக்கிக் கொள்ளக் கூடாது. மற்றவர்களிடத்திலிருந்தும் சிறந்த செய்திகளைக் கேட்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செவிமடுக்க வேண்டும். இன்றுதான் வளர்ந்தவர்களாகத் தம்மைக் கருதுபவர்கள் செவிமடுக்க மறுக்கிறார்களே! வாய்ப்பூட்டுப் போடுகிறார்களே! திருவள்ளுவர்,

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு

என்றார்.

ஆலைப் பெண் தொழிலாளர் தங்கியிருந்த ஒரு விடுதிக்கு லெனின் சென்றிருந்தார். அப்பொழுது தொழிலாளர்கள் லெனினிடம் பல் செய்திகளைச் சொல்லுகிறார்கள். அவ்வளவையும் லெனின் மிகக் கவனத்துடன், அறிவு வேட்கையுடன் கேட்கின்றார். உலகு முழுதும் அவரிடத்திலிருந்து அறிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, அவர் மற்றவர்களிடமிருந்து அறிவைத் தாகத்துடன் எதிர்பார்ப்பதைப் பெருமைக்குப் பெருமை என்றுதான் சொல்லவேண்டும். இதனை, 'ஒசிவாணிக்கோ' என்ற பெண் தொழிலாளி சிறப்பித்துப் பாராட்டுகின்றாள்.

"The man from whom the whole world learnt the truth, himself learnt from the people."

என்பது அவள் கூறியது.

தாமரைக் குளத்தின் தண்ணிர் அளவு உயர்ந்தால் தாமரையும் உயரும். அப்பொழுதும் தாமரை தண்ணிர் அளவுக்கு உய்ர்வதே இயல்பு. அதுபோல, சமூதாயத்தின் வாழ்க்கைத்தரம் உயர உயரத்தான் தனி மனிதனின் வாழ்க்கைத் தரமும் உயரவேண்டும். அப்படியல்லாமல் தனி மனிதனின் வாழ்க்கைத் தரம் மிக உயர்ந்து, சமுதாயத்தின் வாழ்க்கைத் தரம் அதலபாதாளத்தில் கிடக்குமாயின் அஃது ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை, அதுமட்டுமன்று. மேலும் மேலும் ஒழுக்கத்தைச் சீர்குலையச் செய்து மனித சமுதாயத்தை ஆழ்ந்த துயரத்தில் அழுத்துவதாக அமையும். லெனின் இந்தத் தத்துவத்தைச் சிந்தனையில் இந்த உலகத்திற்கு உணர்த்தி னார். அதைவிடச் சிறப்பாகத் தமது வாழ்க்கையின் மூலம் உணர்த்தினார். லெனினுடைய வீட்டுப் பாதுகாப்புத் தொண்டின் ஈடுபட்டிருந்த ஒரு பெண் தொழிலாளியின் உணர்ச்சிக் கொப்பளிப்பும் அதற்கு லெனின் சொன்ன சமாதானமும் நினைந்து நினைந்து நெஞ்சு நெகிழத்தக்க செய்திகளாகும்.

ஒரு நாட் காலை லெனினுடைய உடுப்பைப் பெண் தொழிலாளி தூய்மை செய்து கொண்டிருந்தார். அது கிழிந்தும், ஒட்டுகள் போட்டும் இருந்தது. அந்தப் பெண் தொழிலாளி தன்னுடைய உணர்ச்சியை அடக்கமாட்டாமல் 'நாடு முழுதும் நிர்வாகம் செய்யும் லெனினுக்குத் தனக்கொரு நல்ல உடுப்பு வாங்கிக் கொள்ள முடியவில்லையே' என்று வாய் விட்டுச் சொல்லி முணுமுணுத்தாள். தற்செயலாக அந்த இடத்திற்கு வந்த லெனின் காதில் இந்த முணுமுணுப்பு விழுந்தது. அவர் இதைக் கேட்டு ஒரு வெடிச்சிரிப்பே சிரித்தார். "பரவாயில்லை, பரவாயில்லை" என்று இரண்டு தடவைகள் கூறி, மிகவும் பிரியத்துடன் அந்தப் பெண் தொண்டரின் தோள்களைத் தட்டி, "நாம் எப்பொழுது செல்வத்தில் வளருகிறோமோ அப்பொழுது நானே எனக்கொரு நல்ல உடுப்பை வாங்கிக் கொள்வேன். அப்பொழுது உனக்குக் கொஞ்சம் தொல்லையும் குறையும்" என்று கூறினார். இந்த உரை, நம்மைக் கவர்ச்சிப்பதைவிட அடக்கமான-ஆழமான மனித சமுதாயத்தைத் தழுவிய லெனினின் சீலத்தை - உயர் மேம்பாட்டை நமக்கு உணர்த்துகிறது.

லெனின் தத்துவ இயல் அறிஞன்; சிறந்த சிந்தனையாளன்; செயல் வல்லன்; வையத்து வேறுபாடுகளை அகற்ற வந்த விடிவெள்ளி; அவன் புகழ் நமக்கு ஒளி நிறைந்த வழிகாட்டி, அவன் வழி நடை பயிலுவோமாக! வையகத்தை வாழ்வித்து வாழ்வோமாக! மகிழ்வித்து மகிழ்வோமாக!

வள்ளுவத்தில் அறிவியல்

திருவள்ளுவர் இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவர். ஆயினும் அன்றே வாழ்வியலின் இயல்பை - உயிரியலின் உணர்வை - உயிரினத்தின் தன்மையை நுண்மாண் துழைபுலமையுடன் ஆராய்ந்து ஈடு இணையற்ற பரிசாகத் திருக்குறளை எழுதி உலகத்திற்குத் தந்தார். உயிர் அறிவுத் தன்மை யுடையது; உணரும் இயல்பினது; அனுபவ ஆர்வமுடையது; இயல்பில் குறையுடையது; முயற்சியில் முழுநிறை பெறவல்லது; துணையும் தோழமையும் பெற்று உயரவல்லது என்றெல்லாம் அறிந்து கூறும் பெருமை திருக்குறளுக்கு உரியது.

உடல் எப்படியும் கருவியே. இக் கருவியை இயக்கும் நாயகம் உயிரேயாம். உடலாகிய கருவிக்கும் உணவு உண்டு. நாயகமாகிய உயிருக்கும் உணவு உண்டு. உடலுக்கு ஐம்பூதங்களிடையில் ஐம் பூதங்களின் கூட்டால் விளைந்த உணவே உணவு, உயிருக்கோ, உயிரினத்தின் சிந்தனையில் தோன்றும் கல்வியும் கேள்வியுமே உணவு. கல்வியால், கேள்வியால் மனிதன் குறை நீங்கி நிறை பெற்று வளர்கிறான். இந்த உண்மையை எவருக்கும் புரியும் வகையில் முதலில் எடுத்துணர்த்திய பெருமை திருக்குறளுக்கே உண்டு.

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.

என்பது குறள்.

ஐம்பூத விளைவு உணவு. அது மிகினும் குறையினும் நோய் செய்யும். ஏன்? உணவாக மட்டுமின்றி ஐம்பூதத் தன்மையிலேயே கூட மிகினும் குறையினும் நோயேயாம். நிலம், நம்மிடத்தில் மட்டுமல்ல, மற்றவரிடத்தில் பகையையும் விளைவிக்கும் தன்மையுடையது. கல்வியும் கேள்வியும் குறைந்தாலும் பெற்ற அளவுக்குப் பயனுண்டு. மிகுதிப்படின் நோயில்லை; வளர்ச்சியே!

வள்ளுவர் மனிதனின் இன்றியமையாத் தேவை அறிவுடைமையே என்றார். அறிவை முதனிலைப்படுத்தி முன்னிறுத்தியது போல், திருவள்ளுவர் வேறு எதனையும் முன்னிறுத்தவில்லை.

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்

என்று கூறுகிறார். அறிவின்றி வேறு எவை எவை பெற்றிருந்தாலும் அவற்றால் பயனில்லை என்கிறார். 'என்னுடைய ரேனும்' என்ற சொற்றொடரில் சிக்காது எஞ்சியது ஒன்றுமில்லை. திருவள்ளுவர் அறிவுபற்றிக் கூறும் கருத்து அறிவியலுக்கு ஒத்தது. பலர், பல நூற்கள் கற்ற புலமையை அல்லது செய்திகள் அறிந்து கொண்டமையை-அவற்றை எடுத்துச் சொல்லும் திறனையெல்லாம் அறிவு என்று கருதிக் கொண்டிருக்கின்றனர். திருக்குறள், கற்பதையும் கேட்பதையும் அறிவு பெறுதற்குரிய வாயிலாகக் கருதுகிறதே தவிர, அவை தம்மையே அறிவு என்று கருதவில்லை. உணவு செரிக்கப்பெற்றுச் செங்குருதியாக மாறி உடலுக்கு வலிமையாதல் போல், கல்வியும் கேள்வியும் வாழ்க்கைப் பட்டறையில் சோதனை செய்யப் பெற்று அனுபவத்திற்குரியனவாகி உயிர்க்குரிய குணமாகவும், சீலமாகவும், அல்லது ஒழுக்கமாகவும் அது வடிவம் கொள்ளும் பொழுதே அறிவு என்ற நிலையை அடைகிறது. மனிதனை - மனித உலகத்தைத் துன்பத்திலிருந்து விடுதலை செய்யப் பயன்படுவதே அறிவாகும். இந்த உண்மையை நாடும் நானிலமும் மறந்து, கற்றவர்கள் வறுமை உடையவர்களாகத் தானிருப்பார்கள் என்று கதையே கட்டிவிட்டன. அறிவு, துன்பத்தை மாற்றாது போனால் அறிவு அறிவேயன்று. இதனை,

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்

என்று கூறுகிறது.

அறிவு, மேலும் மேலும் வளரத்தக்கது என்பதும் வள்ளுவர் முடிவு. அறிவுக்கு என்றும் ஒரு முடிவில்லை. "அறிதோ றறியாமை” என்பது வள்ளுவத்தின் வாய்மொழி. இந்தத் திருக்குறளைப் புரிந்து கொண்டு நாம் நம்முடைய அறிவைப் பெருக்கி வளர முயன்றிருப்போமானால் நம்மைப் பீடித்திருக்கின்ற வறுமையிலிருந்து விடுபட்டிருப்போம். நாம்தாம் 'வறுமைக்கே காரணம் நாமல்ல, நமக்கு அப்பாற் பட்டுக் கருணை வடிவமாக இருக்கின்ற கடவுளே' என்ற முடிவுக்கு வந்தவர்கள் ஆயிற்றே! இவ்வுலகின் வேறு எந்த இனமும் கடவுளுக்கு இவ்வளவு பெரிய களங்கத்தை உண்டாக்கவில்லை. இந்த முறையில் அறிவைப் பெருக்கி வளர்ந்திருந்தால் நாமும் மற்ற நாடுகளைப்போல் வளர்ந்திருப்போம்.

இந்த நூற்றாண்டு, அறிவியல் நூற்றாண்டு. அமெரிக்கக் குடி மகன், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியங்களில் பேசப் பெற்ற நிலாவுலகைத் தீண்டியிருக்கிறான். தமிழனோ தமிழ் அறிவியல் மொழியாக வளருமா? வளராதா? என்ற ஐயப்பாட்டில் இன்னும் கிடந்து குழம்புகிறான்! வேறு சிலர் அன்று "ஆண்டவனுக்கு வட மொழியே உரியது” என்று சொன்னதைப் போல அறிவியலுக்கு ஆங்கிலமே உரியதென்று வாதாடுகின்றனர். கூர்ந்து ஆராயின் அது அறிவியல் நாட்டத்தின் விளைவல்ல என்பதும், ஆங்கிலம் படித்த வர்க்கத்தினரின் பாதுகாப்புப் பணியேயாகும் என்பதும் விளங்கும். அறிவியலுக்கு இனம் ஏது? எல்லை ஏது? மொழித்தடைதான் ஏது? ஒரு மனிதன் இயல்பாக எந்த மொழியில் சிந்திக்கின்றானோ அதுவே அறிவியல் மொழி, துறைதோறும் ஆய்வு செய்யவும், மேலும் மேலும் சிந்தனை பெருகி வளரவும் தாய்மொழியே துணை. அறிவைத் திருவள்ளுவர் "ஊறும் அறிவு” என்றார். சுய சிந்தனையின் பாற்பட்ட அறிவே செழுமையான அறிவு. ஊற்றுக்கால் வறட்சியடைவதில்லை; வரத்து நீரை வாங்கித் தேக்கித் தரும் குட்டை, வரவு நின்றால் வறட்சிப்படும். பிறமொழி அறிவு, வரத்து நீர் வாங்கித் தரும் குட்டையேயாகும். சுய சிந்தனையைத் தூண்டி வளர்க்கும் தாய் மொழியறிவு ஊறும் அறிவாகும். இந்த உண்மையை நாடறிந்து, நல்லறிவு வளர்த்துப் பயனடையும் நாளே தமிழகத்தின் நன்னாள்.

ஒரு குறளும் - ஒருமைப்பாடும்

சுதந்திர பாரதத்திற்கு ஒருமைப்பாடு இன்றியமையாதது என்பது எல்லாரும் ஏற்றுக்கொண்ட முடிபு. புரட்சிக் கவிஞன் பாரதி, பாரதநாட்டின் சுதந்திரத்தை ஆங்கிலேயர்கள் பறித்து எடுத்துக் கொண்டதாகக் கூறவில்லை. அதற்கு மாறாகச் சுதந்திரம் கெட்டுப்போய்விட்டது என்று குறிப்பிடுகிறான். 'விடுதலை தவறிக்கெட்டுப் பாழ்பட்டு நின்றதாமோர் பாரததேசம்' என்றே பாடுகின்றான். சுதந்திரம் தவறிக் கெட்டுப்போனதற்குரிய அடிப்படைக் காரணம், பாரத நாட்டு மக்களிடையே நிலவிய வேற்றுமைகளேயாம். பாரத நாட்டு மக்களிடையே ஒத்த உரிமையுணர்வு இல்லாது போய் பல நூற்றாண்டுகள் ஆயின. சாதி, இனம், மொழி சமயம் ஆகிய வேறுபாடுகளால் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாகப் பிறந்திருந்தும் பற்றும் பாசமுமின்றிக் காழ்ப்பொடு கூடிய கலகம் விளைவித்துக் கொண்டனர். இதன் பயனாக நம்முடைய பேரரசுகள் வீழ்ந்தன. இந்த வேற்றுமையுணர்ச்சிகளை இலக்கியத்துறையிலும் சரி சமயத்துறையிலும் சரி, எதிர்த்துப் புரட்சி செய்த சான்றோர்கள் இமயம் முதல் குமரி வரையிலும்-பரந்து கிடக்கும் பாரதப் பூமியில் பலர் தோன்றினார்கள். ஆயினும் நிறைய பயன் கிடைக்கவில்லை. பயன் விளையாமைக்குக் காரணம் சிந்தை வேறு, செயல் வேறுபட்ட வாழ்க்கையேயாம்.

ஒருமைப்பாடு என்பது ஒரு மிகச் சிறந்த பண்பாடு. ஒருமைப்பாடு என்பது ஒரு கலை; ஒரு நோன்பு. அகத்தில் ஒத்த உரிமையினராகி எல்லோரும் இன்புற்று வாழ வகை செய்வது ஒருமைப்பாடு. ஒருமைப்பாட்டுணர்வு மெல்ல மெல்ல வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு விழுமிய பண்பாகும். உலகியற்கையில் - இறை நலப்படைப்பில் ஒருமைப்பாடே அதிகம். அங்கு மோதுதலில்லை. அந்தரத்தில் தொங்கும் அண்ட சராசரங்களும் கூட ஒன்றோடொன்று மோதாமல் இயங்குகிற அமைப்பில் வியத்தகு ஒருமைப் பாட்டினைப் பார்க்கிறோம். வெளித்தோற்றத்தில் முரண் பாடுகள் காணப்பட்டாலும் ஒருமைப்பாடே மிகுதியும் மேம்பட்டு விளங்குகிறது. வேற்றுமைகளுக்குள்ளும் ஒற்றுமை-ஒருமை காண்பது பாரதப் பண்பு. இந்தப் பண்பின் வழியாகப் பாரிலுள்ளோரைப் பகையின்றி வாழச் செய்யலாம்.

ஒற்றுமையும் ஒருமைப்பாட்டுணர்வும் ஒன்றல்ல. ஒற்றுமை என்பது தற்காலிகமான கூட்டுச்சேர்க்கை அது தற்காலிகமானதாகவும் இருக்கலாம்; நிர்ப்பந்தத்தின் காரணமாகவும் இருக்கலாம். ஒற்றுமையை விட ஒருமைப்பாடு மிகமிக உயர்ந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகுக்கு ஒரு நூல் செய்த திருவள்ளுவன் ஒருமைப் பாட்டையே உயர்த்திப் பார்க்கிறான். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது அவன் வாக்கு.


ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து

என்றான். மானிட இனத்தின் சிறப்புமிக்க இயல்பு ஒழுக்க முடைமை. திருவள்ளுவர் ஒழுக்க நெறியில் பலவற்றைப் பகுத்துக் கூறினாராயினும் 'உலகத்தோடொட்ட ஒழுகல்' மிகச் சிறந்த ஒழுக்கமென வரையறுத்து வலியுறுத்திக் கூறுகின்றார்.

இன்றையச் சூழ்நிலையில் நமது பாரதநாட்டுக்கு ஒருமைப்பாடு மிகவும் தேவைப்படுகிறது. நாள்தோறும் செய்திதாள்களைப் புரட்டினால் கந்தல் துணியைப் பார்ப்பது போன்ற ஓர் உணர்ச்சி நமக்கு ஏற்படுகின்றது. அதாவது, இன, வகுப்புக் கலவரச் செய்திகளையும், அரசியல் காரணமாக ஏற்படும் குழுக்களின் பகைமையுணர்ச்சியால் விளைந்த மோதல்களையும் செய்தித்தாள்களில் நிறையப் படிக்கிறோம். இந்தச் செய்திகளைப் படிக்கின்ற ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் வெட்கித் தலைகுனிய வேண்டியவனாக இருக்கிறான். தென்னகத்தில் தாய்மொழிப் பற்று இயற்கையாகவே உண்டு. ஆனால், நாட்டின் ஒருமைப் பாட்டை, தாய்மொழியுணர்ச்சிக்குப் பின் தள்ள முடியாது. அதுபோலவே நாலைந்து மொழிகளுக்கு மேலாகப் பேசப் பெறும் நாட்டில், ஒரு மொழியின் மூலம் ஒருமைப் பாட்டை உண்டாக்க முடியாது. அதுபோலவே ஆட்சி முறைச் சட்டங்களாலும் ஒருமைப்பாட்டை உருவாக்கி விட முடியாது.

ஒருமைப்பாடு என்பது உணர்வின்பாற் பட்டது. அஃதொரு கலை; ஒரு தவம். ஒருமைப்பாட்டுணர்வினைப் பயிலுதல் எளிதன்று. ஒருமைப்பாட்டைச் சிந்தனை, கல்வி, வாழும் இயல்பு ஆகிய வழிவகைகளாலேயே காண முடியும். அதனாலன்றோ 'ஒரு நாட்டு மக்களை ஒத்த உரிமை யுணர்வுடன் இணைக்க, ஒரு சிறந்த தேசிய இலக்கியம் இருக்கவேண்டும்' என்று கார்லைல் கூறினான்.

பாரத நாடு விடுதலை பெற்றுப் பல ஆண்டுகளாயின. பாரத நாட்டின் தனி-பொது அரசியல் வாழ்க்கை விரிந்த மக்களாட்சி அடிப்படையில் அமைந்துள்ளது. எந்த ஒருவருடைய அல்லது எந்தவோர் இனத்தினுடைய அடிப்படை உரிமைகளுக்கும் பாதுகாப்பு உண்டு. ஆயினும் பாரதநாட்டில் பொது நலனுக்கு இடையூறு செய்கின்ற தனி நலன்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கனவல்ல. ஒருவருடைய நலன் பலருடைய நலன்களுக்குக் கேடு விளைவிப்பதாயின் அது நலனேயன்று, தீமையேயாம். நன்மை, நன்மையைத் தோற்று விக்குமே தவிரத் தீமையைத் தோற்றுவிக்க முடியாது. ஆதலால் உயர்ந்த கல்வி - மற்றும் மாறுபாடுகளைக் காட்டாத கல்வி - மூலமே ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும். ஆதலால்தான், தேசிய இலக்கியம் வேண்டுமென்று கார்லைல் கூறுகிறார்.

பாரத நாட்டு இலக்கியங்களில் பெரும்பான்மையானவை மொழி, இன, சமயச் சார்புடையனவேயாம். இவைகளின் சார்பில்லாத இலக்கியங்கள் அருமை. இஃது உலகியற்கை. இன்று உலகின் நெருக்கம் வளர்ந்திருப்பதன் காரணத்தினாலும், போர்க்கருவிகளின் ஆற்றல் பெருகி வளர்ந்திருப்பதன் காரணத்தினாலும் ஒருமைப்பாடு இன்றியமையாத் தேவையாகிறது. பாரதநாட்டு இலக்கியங்களில் திருக்குறள் ஈடு இணையற்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இனம், மொழி, சமயச் சார்பின்றி மனித உலகத்தின் நல்வாழ்க்கையை மையமாக வைத்துச் செய்யப் பெற்ற சிறந்த நூல் திருக்குறள். திருக்குறள் எடுத்துக்கூறும் ஒழுக்க நெறிகள் கற்பனையில் தோன்றியவையல்ல. அதீத மானவைகளுமல்ல.

சாதாரணமாக ஒரு சராசரி மனிதன் நடைமுறைப்படுத்தக்கூடிய வாழ்க்கை முறைகளையே ஒழுக்கமென்று கூறியுள்ளார். சமுதாயத்தின் பல்வேறு தரப்பினருக்கும் ஏற்ற ஒழுக்கங்களை எடுத்துக் கூறியுள்ளார். புலால் உண்ணாமை என்ற ஒன்றைத் தவிர, மற்ற எந்த ஒழுக்க நெறிகளையும் யாரும் மறுக்க மாட்டார்கள். புலால் உண்ணாமையும் கூட குறையாகக் கூறினால் துறவறவியலிலேயே இருக்கிறது. ஆதலால் இல்வாழ்வோர் புலால் உண்ணுதலைத் தவிர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று வரையறுத்தால் அதற்கும் மறுப்பில்லை.

மனித சமூகத்தினைச் சார்ந்த ஒழுக்க நெறிகளைப் பேணி வளர்த்துப் பாதுகாக்க வேண்டும். இதுவே திருவள்ளுவரின் இலட்சியம். இந்த ஒரே நோக்கத்தோடு செய்யப்பெற்ற நூல் திருக்குறள். திருக்குறள் பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் என்று வரையறுத்துக் கூறுவதால், 'ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்' என்று கூறினமையால் சமூக ஒழுக்க நெறியை எடுத்துக்காட்டுகிறது. ஒழுக்கங்களில் உயர்ந்த ஒழுக்கமாகிய ஒப்புரவினால், பொருளியல் ஏற்றத் தாழ்வுகளை மாற்ற முடியும். பொருளியல் ஏற்றத்தாழ்வு குறைந்து சமநிலைச் சமுதாயம் அமைந்தால் சமுதாயமும் ஒன்றுபடும்; ஒழுக்க நிலையும் உயரும்; இன்பமும் பெருகும்.

திருவள்ளுவர் கல்வியை ஒருமைப்பாட்டுக் கல்வியாகவே கருதுகிறார். ஒருமையுணர்வினைத் தராத கல்வியை-அறிவைத் திருவள்ளுவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்

என்றும்,

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு

என்றும் கூறியிருப்பது அறியத்தக்கது. எல்லா நாடுகளையும், எல்லா ஊர்களையும் தமதென ஏற்றுத் தழுவி வாழுதலுக்கே கல்வி தேவையென்று கருதுகின்றார். இதனை,

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு

என்ற குறளால் அறிக.

ஆதலால், பாரத நாட்டு ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அதற்கு உடனடியான தேவை பாரத நாட்டு இலக்கியம் - அதாவது தேசீய இலக்கியம்! நிலம், சாதி, சமயம், இனம், மொழி ஆகிய எந்தச் சார்பினையும் சாராது, மானிட சமுதாயத்தின் மேம்பாட்டினைக் கருதியே செய்யப் பெற்ற நூலை, உடனடியாகப் பாரத நாட்டு இலக்கியமாக அறிவிக்க வேண்டும். இமயம் முதல் குமரி வரை வாழும் அனைத்து மக்களின் சிந்தனைக் கும் வாழ்க்கைக்கும் அடிப்படைச் சுருதியாகத் திருக்குறள் அமையவேண்டும். அது போழ்து பாரத ஒருமைப்பாடு உருவாகும்; பாரத சமுதாயமும் வாழும்.

வாழ்விக்க வந்த வள்ளுவம்

முன்னுரை

மிழ் காலத்தால் மூத்த மொழி, கருத்தாலும் மூத்த மொழி. தமிழினம் தொன்மைப் பழமை நலம் சான்ற இனம்; வையத்துள் வாழ்வாங்கு வாழ வகையும் வழியும் கண்ட இனம், வளம்பல படைத்த இனம், வளத்துடன் வாழும் உயிர்க்கும் இலக்கணம் செய்த இனம். நிலவுலகங்கள் நெருங்கி வாரா முன்னம் நெஞ்சங்கள் நெருங்கிவர நெறி கண்ட இனம்; இருளகற்றி இன்பம் பெருக்கும் இனி நெறிகளைக் கண்ட இனம்; பாரையும் பரத்தினையும் இணைக்கும் இன்புறு காதல் நெறிகள் கண்ட இனம். இறையும் முறையும் கண்டு இனிது வழி நடத்திய இனம் துன்பத்திற்கு மருந்தாக இன்பத்திற்கு ஊற்றாக அமைவதாக பொருள் நெறிகண்ட புதுமைச் சமுதாயம்; பொதுமைச் சமுதாயம்.

திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவர். திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய நூல். திருக்குறள் போன்ற ஒரு முழுதுறழ் அறநூலைத் தரத் தகுதியுடையதாக வாழ்ந்த இனம் தமிழினம். அறிவுக்கும், அனுபவத்திற்கும், நெறிவழி உணர்விற்கும் வழி வழித் தொடர்பு அதாவது பாரம்பரியம் உண்டு என்ற கருத்து வரலாற்றாசிரியர் உலகத்துக்கு உடன்பட்டதேயாம். திருக்குறள் தோன்றிய காலத்தில், தோன்றிய சமுதாய இலக்கியங்களை ஒரு கண்ணோட்டம் செலுத்திப் பார்த்தால் கிரேக்க நாட்டு நாகரிகம் ஒன்றே அண்மித்து வருகிறது. திருக்குறளுக்கு எவ்வளவு பெருமையுண்டோ அதைப்போல நூறு மடங்கு பெருமை அதன் ஆசிரியருக்கு உண்டு. அத்தகைய பெருமைசான்ற நூலாசிரியனை ஈன்று புறந்தந்து வளர்த்த பெற்றோருக்கும், அளவற்ற பெருமையுண்டு. ஆனாலும் தமிழர்தம் சீலமும் சிறப்பும் தாங்கப் பொறாதார் திருவள்ளுவர் வரலாறு பற்றிய தவறான கதைகளைக் கட்டி விட்டிருக்கின்றனர். ஐயகோ, என்னே அறியாமை! தமிழர்தம் அறிவு நுட்பத் திறனும், ஒழுக்கச் சார்பு ஆர்வமும் வேறு எந்த இனத்திற்கும் இல்லை. ஆயினும், போற்றி வளர்க்கும் திறன் இன்மையின் காரணமாகப், பலபொழுது இந்த இயல்புகள் ஒளிபெற்று விளங்குவதில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழினம் புகழ்பெற்று வாழ்ந்த இனம். அந்தப் புகழ்மிக்க இனமே தமிழர்தம் தனிமறையும் உலகத்தின் பொதுமறையுமாகிய திருக்குறளைத் திருவள்ளுவர் வாயிலாகத் தந்தது.

திருக்குறள் கவிதை நூல்; காவியம், பண்பு நலம் காட்டும் காப்பியம்; இனிய நூல்; எளிய நூல்; காலத்தை வென்று நிற்கும் திருநூல், அறநூல்; முழுதுறழ் அறநூல், காதல் நூல்; கடவுள் நூல்; வாழ்விக்கும் மறை, வையகத்தை இணைக்கும் பெருநூல்; புதுமையும் பொதுமையும் தழுவிய மறைநூல்; இருளகற்றும் அறிவு விளக்கு; இன்பம் பெருக்கும் பொருள் நூல்; கடல்களை, காடுகளை மலைகளைக் கடந்து உலகந் தழீஇ நிற்கும் ஒருமறை.

அறிவு நெறி

வாழ்க்கை யென்பது கட்டி முடிக்கப் பெற்ற மாளிகை யன்று. அல்லது அதிட்ட தேவதையோ, ஆண்டவனோ மட்டும் கட்டி முடிப்பதும் அன்று. நமது வாழ்க்கை செம்மையுற அமையத் திட்டம் தீட்டும் பொறுப்பும் நம்முடையதே. நிறைவேற்றும் பொறுப்பும் நம்முடையதே. வயிற்றுக்குச் சோறு யாரும் இடலாம். ஆனால், நம்முடைய மன உணர்வின் உடன்பாடும் உறுதியுமில்லாமல் நம்மை யாரும் வளர்த்துவிட முடியாது. நமது வளர்ச்சி முன்னேற்றத்தின் மையம் நாமேயாம். இந்த இயற்கை நியதியை

உணராதார் ஏராளம்! இங்ஙனம் கூறுவதால் இறைவன் பங்கு என்ன என்ற கேள்வி பிறக்கலாம். இறைவன் நமது வாழ்க்கையின் ஆசிரியன்; தலைவன். அதிலொன்றும் மறுப்பில்லை. ஆசிரியர் கற்றுத்தான் தரமுடியுமேயன்றித் தேர்வு எழுதித் தருவாரோ? தலைவன் வழிநடத்துவானேயன்றித் துரக்கிச் சுமந்து போவானோ? அப்படியே தூக்கிச் சுமந்தால் உயிர் சவலையாய்ப் போகாதோ? மாணிக்கவாசகரும் "சவலையாய்ப் போனால் சிரியாரோ?” என்று பேசுகின்றார். ஆதலால் திருவள்ளுவர் திருக்குறள் செய்ததின் தலையாய நோக்கம் ஒவ்வொருவருக்கும் அவர்தம் வாழ்க்கை மாளிகையைக் கட்டி முடிக்கக் கற்றுக் கொடுப்ப்தேயாம். மாளிகை என்பது ஒரு கல்லால் கட்டப் பெறுவதா? ஒரு பொருளால் கட்டப்பெறுவதா? இல்லை, ஒருவரால்தான் கட்டப் பெறுவதா? பல நூறு கோடி செங்கற்கள் மாளிகை கட்டத் தேவை. அதுபோல, வாழ்க்கையென்ற மாளிகையைக் கட்ட, பலப்பல நற்சிந்தனைகளும் குணங்களும் தேவை.

அடுக்கப்பெறும் கற்களுக்கிடையே இசைவும் உறுதியும் தேவை. இதனைத் தருவது கலவைச் சாந்து, அதுபோல, நற்சிந்தனைகளை, நற்குணங்களை வாழ்க்கையோடு இசைவித்து உறுதிப்படுத்தச் செயலும் அனுபவமும் தேவை. ஒரு மாளிகை கட்டி முடிக்கப் பலர் உதவி தேவை என்பது போல ஒரு வாழ்க்கையென்னும் மாளிகையைக் கட்டி முடிக்க நல்ல இனச் சேர்க்கையும், நட்பும் தேவை. திருவள்ளுவர் இவ்வளவையும் தம்முடைய அருமை நூல் மூலம் வழங்குகின்றார். வாழ்க்கையின் அடித்தளமும், மூல முதலும் அறிவேயாகும். அறிவு, மனிதனின் மிகப் பெரிய சொத்து. அதனால் திருவள்ளுவர், 'அறிவுடையார் எல்லாம் உடையார்' என்று ஐயத்திற்கிடமின்றிக் கூறுகின்றார். இங்ஙணம் தெளிவாகக் கூறியதோடு மட்டுமன்றி எதிர் முகத்தானும் மற்று 'என்னுடையரேனும் இலர்' என்று கூறி, அந்நிலையை உறுதிப்படுத்துகின்றார். திருவள்ளுவர் கல்வி வேறு, அறிவு வேறு என்று உணர்த்துகின்றார். இன்று நம்மிடையில் கற்றவர்கள் ஏராளம்! கற்ற மூடர்களும் ஏராளம்: கல்வி, அறிவு பெறுதற்குரிய சாதனமே யொழிய அதுவே அறிவன்று. கல்வியால், கேள்வியால், சிந்தனையால் அறிவு வளர வேண்டும். அதனால், கல்வி, கேள்வி என்ற அதிகாரங்களைப் போலவே அறிவுடைமை என்று தனித்து ஒரு அதிகாரமும் வைத்தார். அறிவு, வாழ்வதற்காக மட்டுமன்று. எல்லாருந்தான் வாழ்ந்து விடுகிறார்கள். நாயும் நரியும் வாழ வில்லையா? காக்கையும் கழுகும் வாழவில்லையா? அது போல மனித வடிவத்தில் விலங்கினும் கேவலமாக வாழ்பவர்கள் பலர் உண்டு. அதை வாழ்க்கையென்று சொல்வதை விட வயிறு வளர்ப்பு என்றே சொல்லலாம். வாழ்க்கை நெடிய உயர்ந்த இலட்சியம் உடையது. அதில் இந்த உலகியலும் ஒரு பகுதி உண்ணலும், உடுத்தலும், உறவினை நாடுதலும் வாழ்க்கையின் மிகச் சிறிய ஒரு பகுதியேயாம். அதுவும் வாழ்க்கையின் நெடிய பயணம் சுமையாகத் தோன்றி, எய்ப்பும் களைப்பும் ஏற்படாமல் இருப்பதற்கேயாம். அறிவு, ஆற்றலுக்கெல்லாம் மேம்பட்ட ஆற்றல், அறிவு, தலை சிறந்த அரண் அறிவு பிணிக்கு மருந்து, வளர்ச்சிக்கு மழை அறிவு, நாழிகைக்கு நாழிகை வளர்வது; துன்பங்களைத் துவைப்பது; இருளுக்கு ஒளி, உணர்வுக்கு ஊட்டம்; வரலாற்றுக்கு வடிவம் கொடுப்பது. அறிவுடைய மனிதன் எல்லையினும், துன்பம் வராது. அப்படியே வந்தாலும் அவன் அறிவினால் அதனை வெல்லுவான். அறிவு, கடந்த காலத்தைக் கவலையாக்கி அழிவதினின்றும் தடுத்து, இனி எதிர்காலத்தில் ஆவது பற்றி ஆராயத்துரண்டும். இதனை 'அறிவுடையார் ஆவதறிவார்' என்று கூறுகிறது குறள்.

ஆள்வினை

மனிதன் ஆளப் பிறந்தவன்; தம்மினும் மெலியரை ஆள அன்று காணியை, பூமியைக் கண்காணம் செய்து ஆள அன்று. இங்கு ஆளுமை என்பது திறன். சிலர், பலரை ஆளத் துடிப்பார்கள். ஆனால் அவர்களையே அவர்கள் ஆண்டு கொள்ள முடியாது. என்னே, கொடுமை! அச்சு முறிந்த வண்டியில் பாரம் ஏற்றிச் செலுத்த முடியுமோ? அதுபோலத் தன்னாட்சித் திறனற்றவர்கள் எப்படிச் சமுதாய வாழ்க்கையை நடத்த முடியும்? அறிவினை அடுத்த தேவை ஆள்வினை யென்பது வள்ளுவம். சிலர் அல்லற்படுவர்; அழுவர்; கொஞ்சம் மூர்க்க உணர்ச்சி இருக்குமானால், மற்றவர்மீது ஆத்திரமும் படுவர்; அணுகிக் கேட்டால் 'காணி இல்லை; காசு இல்லை; கருவிகள் இல்லை' என்று இன்னும் என்னென்னவோ சொல்வர். திருவள்ளுவர் இந்த சமாதானங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராயில்லை. ஆள்வினையின்றி அவல வாழ்க்கை வாழ்ந்து அழுதுச் சாவ தோடன்றி, மற்றவர் மீது பழியைச் சுமத்தும் மனிதனைப் பார்த்து, "மனிதனே, பழியை நீ மற்றவர் மீது சுமத்தாதே! பூரமன் மீது சுமத்தாதே! பக்கத்தில் இருப்பவர் மீது

தி.II.9

சுமத்தாதே! பழி உன்னிடத்திலேயாம்!” என்று இடித்துச் சுட்டிக் காட்டுகிறார்.

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை யின்மை பழி

என்பது குறள்.

தெய்வமே நம்முடைய காரியத்தைச் சாதித்துக் கொடுக்கத் தவறிவிட்டாலும், அல்லது தெய்வத்தால் முடியாது போனாலும் நாம் முயன்றால் முடிக்க முடியும் என்பது வள்ளுவத்தின் முடிபு. இன்று நமக்கெங்கே அந்தக் கருத்து? நம்மில் பலர் முடிச்சுப் போடுவதில் இருக்கிறார்களே தவிர, முடிப்பதிலா இருக்கிறார்கள்? ஊழ் உள்ள தொன்றேயாம். அதிலொன்றும் பொய்யில்லை. ஆனாலும், அது நம்மிடத்தில் இன்றைக்கு வகிக்கின்ற பதவியிருக்கிறதே அதுதான் ஆபத்து. ஊழ் நம்முடைய ஆண்டானன்று; மாற்ற முடியாததுமன்று. மேலும், மாற்றக் கூடியது மட்டுமின்றி, மிகச் சுலபமாக மாற்றக்கூடியதாகும். புறக்கருவிகள் தேவையில்லாமலே மாற்றலாம். வேண்டியது சிந்திக்கும் திறன்; தெளிவான புத்தி, சபலமற்ற உள்ளம், உடம்பை வருத்தி உழைப்பதற்கேற்ற மனப்பக்குவம். இவையிருந்தால் ஊழை ஒடஒட விரட்டலாம். வாழ்வாங்கு வாழலாம். மனிதனின் மனப்போக்கை நிர்ணயம் செய்து திசை திருப்பிவிடுவது சுவை நுகர்வுப் புலன்களேயாம். இன்று பலர் சோற்றுச் சுவையன்றி வேற்றுச் சுவையறியார். துரங்கித் துரங்கிக் கழிக்கும் மடியின் சுவையின்றி மாற்றுச் சுவையறியார். உடல் வியர்வை சிந்துவதில்லை. அதன் பயன், பின்னே இரத்தம் கக்குகிறது. இன்பம் விழையாது இடும்பை இயல்பென்று எண்ணி முயல்பவனே உலகத்தின் தனியுடைமையாகிறான். மண்ணொடு தொடர்பு கொள்ளாத வித்து முளைக்குமோ? நீரொடும் நெருப்போடும் தொடர்பு கொள்ளாத பொருள் வேகுமோ? உடலொடு சாராத உணவு வலிமை தருமோ? அதுபோல ஆள்வினையொடு தொடர்புபடாத வாழ்க்கை பயன் தராதது மட்டுமின்றிப் பயனை அழிக்கும்; பழியும் சேர்க்கும். ஒரு தலைமுறைக்கன்று ஏழேழ் தலைமுறைக்கும் ஆள்வினையற்றவன் துறவியாக வேண்டும். நாம் இங்குக் குறிப்பிடுவது இன்றையத் துறவிகளையன்று. விழைவும், வேண்டுவனவும் இல்லாத துறவே துறவு. இன்றோ விழைவிலும் விருப்பத்திலும் நாட்டிலுள்ளோர்க்கும், துறவிகளுக்கு மிடையே போட்டி வைத்தால் துறவிகளே வெற்றி பெறுவர். இவர் தம்மையும். திருவள்ளுவர் கண்டிக்கின்றார். ‘துவரத் துறவாதார் துறவு உப்புக்கும் காடிக்கும் கூற்று'. துவரத் துறவாத துறவின் காரணமாகவே நம்முடைய நாட்டில் துறவி வடிவத்தில் பிச்சைக்காரர்கள் தோன்றினர். மேலும், அதனால்தானே துறவு அமைப்பில் நிலப்பிரபுத்வ அமைப்பைப் பின்னணியாகக் கொண்ட நிறுவனங்கள் தோன்றின. ஆதலால், ஆள்வினை போற்றுதல் தலையாய கடமை. ஆள்வினையற்றோர் உண்ணுதற்கும் உரிமையற்றோர். அப்படியே உண்டால், அதனை ‘உண்ணல்’ என்ற சொல்லுக்குப்பதில் ‘தீனி தின்பது’ என்றே கூறலாம். மீண்டும் மீண்டும் வள்ளுவர் ஆணை மறவன்மின் ஆள்வினை போற்றுமின்!

பொருள்

இன்று - இன்று மட்டுமன்று, என்றுமே - வாழ்க்கை யென்ற நடைப்பயணத்திற்குப் பொருள் இன்றியமையாத ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. மனித வரலாற்றில் தொடர்ந்து பாத்திரம் வகித்து வருவது இந்தப் பொருளேயாம். மனிதனின் படைப்பே பொருள். ஆனாலும் ஆச்சரியம், அந்தப் பொருள் அவனுக்கே எஜமானனாகி விடுகிறது! மகன் தந்தைக்குத் தந்தையாகி விடுவதில்லை. ஆனால், பொருளுக்கு மட்டும் இது விதி விலக்கு. பொருள் என்பது, பல பொருளைத் தருகின்ற ஒரு சொல். ஆனால், இன்று யாருக்கும் பொருள் என்றவுடன் “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்” என்ற திருவாசக அடிகள் நினைவுக்கு வருவதில்லை. “பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனும்” என்ற செந்தமிழ்க் குமரகுருபரர் கூறிய பொருளும் யாருக்கும் நினைவு வருவதில்லை. பொருள் என்றால் நுகர்ந்து அனுபவிக்கக் கூடிய பொருள்களின் நினைவும் யாருக்கும் வருவதில்லை. “யாஅம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமுமல்ல” என்ற பரிபாடல் அடிகளை எண்ணுங்கள். இந்தப் பொருளுணர்வையெல்லாம் ஆழப்போட்டுப் புதைத்து விட்டு அந்தக் கல்லறையில் இயல்பிலே மதிப்பில்லாத - செயற்கை மதிப்பைப் பெற்ற காகித நோட்டுக் கற்றைகள் ஆட்சி செய்கின்றன. இந்த இழிதகைமையால் இன்று நம்முடைய நாடு வறுமையடைந்திருக்கிறது. திருவள்ளுவர் பொருளியல் துறையில் மிகச் சிறந்த கருத்துக்களைக் கூறினார். இன்று வளர்த்து வந்துள்ள பொருளியல் தத்துவங்களோடு ஈடு கொடுத்து நிற்கக் கூடிய பொருளியல் சித்தாந்தங்களைத் திருக்குறள் பேசுகிறது. பொருள் என்றால் உயிர் வாழ்க்கையின் உலகியல் பயணத்திற்குத் துணைநிற்கும் பருவுடலுக்கு, ஆற்றல் தரத்தக்க எரிபொருள்களாகிய உணவுப் பொருள்களேயாம். அருளியல் உலகில் உயிர் உணர்வுக்கு ஆற்றல் தரத்தக்க இறைவனே பொருள். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய உயிர் வாழ்விற்குத் தேவையான உண்பொருள்களைத் தானே முயன்று உற்பத்தி செய்து கொள்ளவேண்டும். இதுவே நாணயமான - சுதந்திரமான வாழ்க்கை. அப்படி முடியாதவர்கள் இவற்றை உற்பத்தி செய்யக்கூடியவர்களின் நல்வாழ்வுக்குரியனவற்றையாவது செய்து, அதை ஈடுகட்டக் கடமைப் பட்டிருக்கிறார்கள். இதையேதான் அண்ணல் காந்தியடிகள் “சுய தேவை பூர்த்தி” என்றார். இப்பொழுதும் பலருக்குத் தேவை பூர்த்தியாகிறது. ஆனால் எப்படிப் பூர்த்தியாக வேண்டுமோ அப்படியன்று. உறிஞ்சுதல், சுரண்டுதல், முதலிய வழிகளின் மூலம் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளுகிறார்கள். பொருள், உற்பத்தி செய்யக் கூடியதே தவிர, “பண்ண”க் கூடியதன்று. பொருள் சேர்ந்தால் மட்டும் போதாது. சேரக்கூடிய வகையில் சேரவேண்டும். இதனைப் பழியஞ்சிப் பொருளீட்ட வேண்டுமென்கிறது குறள். பொருள்களையும் பலரும் ஒரேவகையில் திரட்ட முயன்றால் அப்பொழுதும் பொருட் பற்றாக்குறை ஏற்படும். பொருள் வருதற்குரிய வழிகளும் விரிந்தனவாகவும், பரந்தனவாகவும் இருக்க வேண்டும். அடுத்த வீட்டு மனிதன் எந்தத் தொழில் செய்து பணம் திரட்டுகிறானோ, அதே தொழிலில் அவனுக்குப் பங்காளியாகி அவன் தொழிலைக் கெடுக்கக் கூடாது. பொருள் வருதற்குரிய புதுப்புது வழிகளைக் காணுதல் வேண்டும். பொருளை ஈட்டவேண்டும். ஈட்டினால் மட்டும் போதாது. பொருட் செல்வத்தைப் போற்றி வளர்க்கவேண்டும். ‘பொருட்செல்வம் போற்றுவார்கண் உண்டு’ என்பது குறள், இங்குப் போற்றுதல் என்பது மற்றவர்களுக்கு வழங்காமலும் துய்க்காமலும் காப்பது என்று பொருளன்று. இவறிக் கூட்டிச் சேர்ப்பது காப்பதாகாது. ஒரு பொருள் தன்னுடைய துய்த்தலுக்கும் வழங்குதலுக்கும் கூட ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை அடையவேண்டும். அந்தப் பொருள் வற்றாது வளந்தரக்கூடிய இயல்பை அடைய வேண்டும். அப்பொழுதுதான் இயற்கை இன்னல்கள் விளைந்துழியும் இடர்ப்பாடின்றி வாழமுடியும். பொருள் வர வர, அது வளமான முதலாக வளம்பெற வொட்டாமல் சில்லறையாகவே அழித்தால் பொருள் அழியும் என்பது ஒரு சிறந்த பொருளியல் கருத்து. அடுத்து, பொருளாதாரத் தத்துவத்தில் பொருள் விநியோகம் மிகவும் முக்கியமானதாகும். இன்று நம்முடைய நாட்டில் இந்த விநியோகம் சீராக இல்லை என்பது பலருடைய கருத்து. தனிமனிதன் அளவிலும் சரி சமுதாய அளவிலும் சரி, திட்டமிடப் பெற்ற - ஒழுங்குபடுத்தப்பெற்ற பொருட்பங்கீடு வேண்டும். ஒரு மனிதன் தன்னுடைய வருவாயில் தன்னுடைய பொறுப்புக்கள் கடமைகள் அனைத்துக்கும் ஏற்றவாறு பங்கிட்டுக் கொள்வது அவசியம். அதிலும் தனிமனிதன் தன்னுடைய வருவாயில் ஒருபங்கைச் சமுதாயத்திற்கென்று ஒதுக்கவேண்டும். அந்தச் சமுதாய நிதி; சமுதாய அளவில் பரவலாகப் பலருக்குப் பயனுறத்தக்க வகையில் பயன்படுத்தப் பெற வேண்டும்.

இதனை,

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு

என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

அன்பு நெறி

கடவுளை இந்த உலகத்தில் காணோம். கடவுள் காண முடியாத பொருளா? வெற்றுக் கண்ணாடியில் முகம் தெரியுமோ? அதுபோல வெற்று மனிதர்கள் கடவுளைக் காணமுடியுமா? வடிவத்தில் தேங்காய். ஆனால் உள்ளீடில்லை. அதற்கு ‘வெறும்பாடைக்காய்’ என்று பெயர். காயில் மட்டுமா வெறும்பாடை? மனிதரிலும் ‘வெறும் பாடைகள்’ உண்டு. காயில் வெறும்பாடைக்காய் அடுப்பெரிக்கவும், ஆக்கவும் எரிபொருளாகப் பயன்படும். வெற்று மனிதரோ எரிபொருளாகக் கூடப் பயன்படமாட்டார்கள். அவர்களை எரிக்கவே வேண்டியதிருக்கிறது. ஆருயிர்க்கு அழிவற்ற உடலோடு இயைபு ஏற்பட்டதே அன்பு கொண்டு ஒழுகவேயாம். மனிதனுக்கு உயிர் உண்டு; உயிர்சார்ந்துலவும் உடலு முண்டு. இவற்றிற்கு மேலாக உயிர்த்தன்மையும் உண்டு. ஆனால் இன்று பலருக்கு உடல்மட்டுமே தெரிகிறது; உடல் தேவைகளையே தேடி அலைகின்றனர்; உயிரை மறந்தே விட்டார்கள். உயிரையே மறந்த பிறகு உயிர்த்தன்மை இருக்குமா என்ன? ஒருமனிதனுக்கு உயிர் இருக்கிறதா இல்லையா என்பதற்கு அளவுகோல் அவன் உண்டு திரிந்து நடமாடுவதன்று. அன்பு காட்டி வாழும் பண்பில்தான் அவனது உயிர்நிலை இருக்கிறது. இதனை,

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

என்று குறள் பேசுகிறது.

உலகத்தில் தனிமனிதனுக் காயினும் சரி, சமுதாயத்திற்காயினும் சரி வளம்பல பெற்று இனிதே வாழ அன்பே அடிப்படை மனித உலகத்தைப் பகையிலிருந்து விலக்கிப் பண்பு தழீஇய சமுதாயமாக மாற்றுகிற சக்தி அன்புக்கே உண்டு. ஏன்? மண்ணுக்கும் விண்ணுக்கும் இணைப்பூட்டும் ஆற்றல் அன்புக்கு உண்டு. அன்பு மனிதனை விலங்கியல் தன்மையிலிருந்து விடுதலை செய்கிறது. முழு மனிதனாக்குகிறது; தெய்வமாக்குகிறது. திருவள்ளுவர் காட்டும் அன்பு அறத்திற்கு மட்டும் சார்புடையதன்று; மறத்திற்கும் துணையாகும். வள்ளுவம் காட்டும் அன்பு நெறி இன்றைய உலகத்திற்கு மிகவும் அவசியமான தேவை. இந்த அன்பு நெறி தழைப்பதாக

ஒழுக்க நெறி

யாரொருவருக்கும் இடையூறு இன்றி வாழும் நெறியே ஒழுக்க நெறியாகும். இதனையே திருக்குறள் ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல்’ என்று கூறுகிறது. விலங்கிலிருந்து மனிதர்களைப் பிரித்து உயர்த்திக் காட்டுவது ஒழுக்கச் சார்பேயாகும். ஒழுக்கம் உள்ளத்தினைச் சார்ந்து அவ்வழி உடற் சார்பிலும் மேம்பட்டு விளக்கம் காட்டுவது. கைகளால் திருடாமல் மட்டும் இருந்தால் போதாது. ஊர்காவல் படையின்கண் உள்ள அச்சத்தினால், கையால் திருடாமலிருக்கலாம். ஆனால், உண்மையான ஒழுக்கம் என்பது எது என்பதனை, ‘உள்ளத்தால் உள்ளலும் திதே’ என்று குறள் கூறுகிறது. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய உரிமைகளுக்கும் இன்பத்திற்கும் மட்டும் பாதுகாப்பாளனாக இருக்கக் கூடாது. தன்னுரிமையில் நாட்டம் காட்டுவது விலங்கினங்களிடத்திலும் உண்டு. ஒவ்வொரு மனிதனும் மற்றவர்களுடைய உரிமைக்கும் நலனுக்கும் இன்பத்திற்கும் பாதுகாப்பாளனாகவும், உத்தரவாதம் தருபவனாகவும் இருக்க வேண்டும். இன்று ஏது அந்த நிலைமை? பாதுகாப்பாளனாக இருக்க முடியாது போனாலும் உபத்திரவம் தராமல் இருந்தால் போதுமானது என்று கருத வேண்டிய திருக்கிறது. இதனை,

ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்

என்று கூறுகிறது திருக்குறள். இன்று இலக்கியம் சமயம் சட்டம் இத்தனைக்கும் ‘பேப்பே’ சொல்லிவிட்டுத் தப்பித்துக் கொண்டு சாமர்த்தியமாக வாழ்வதைத் தானே விரும்புகிறோம். இந்த நிலைமாறி, தற்சார்பான ஒழுக்க இயல்புகளுடன் சமுதாயத்தைச் சார்ந்த பொது ஒழுக்க நெறியினோடும் நாளும் வளர்ந்து விளங்குவதாக.

ஒருமை நெறி

உலகம் ஒன்று. உலகிடை வாழும் மனித குலமும் ஒன்று. உலகு தழுவிய உறவு நெறியைக் கண்ட பெருமை தமிழுக்கு உண்டு. “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்பது புறநானூறு. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பது திருமந்திரம். மனிதகுல ஒருமைப் பாட்டு நெறியை, ஆன்ம நேய ஒருமைப்பாடு என்று கூறுவர் இராமலிங்க அடிகள். இன்பத்தமிழின் இணையற்ற இலட்சியம் மனிதகுல ஒருமைப்பாடு. ஆனால் அந்த மொழி பேசும் மக்களிடத்திலேயும் கூட இன ஒருமைப்பாடு இல்லாமல் பல்வேறு சாதிகளாகப் பிரிந்து ஆதிக்க வர்க்கத்தின் கீழ் அடிமைப்படுகிறார்கள். இந்திய நாட்டின் பாதுகாப்பு இந்திய ஒருமைப்பாட்டிலேதான் தங்கியிருக்கிற்து. இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டினை, ஒரு வலிமை பெற்ற அரசினால் மட்டும் காப்பாற்ற முடியாது. அல்லது இந்தி மொழியை எல்லோரும் ஏற்றுக்கொள்ளச் செய்வதனாலும் ஒருமைப் பாடு உருவாக முடியாது. ஒருமைப்பாடு என்பது ஒழுக்கச் சார்புடையது; உள்ளச் சார்புடையது; சிந்தனை மலர்ந்து விளங்க வேண்டியது. இதுவே உண்மையான ஒருமைப்பாடு. இத்தகைய ஒருமைப்பாட்டை உருவாக்கச் சட்டங்கள் மொழிகளை விட, சிந்தனையும், சித்தனையைச் சார்ந்த செம்மையான வாழ்க்கையுமே துணை செய்ய முடியும். மனவிகாரத்துக்கும் வேறு பாட்டுக்கும் வித்திடுகின்ற எந்தக் கருத்துகளையும் மக்கள் எண்ணக்கூட சந்தர்ப்பம் வழங்கக் கூடாது; கேட்க வாய்ப்பளிக்கக் கூடாது. மனமாறுபாடுகளும் பகையும் மக்கள் மன்றத்தின் முன் கால்கொள இடங்கொடுக்கக் கூடாது. இத்தகு சீரிய ஒருமைப்பாட்டினை-சிறந்த ஒரு இலக்கியத்தை மக்களைப் பயிலச் செய்து அவ்வழி வாழ வழிநடத்துதலின் மூலமே முடியும். இன்று நம்மிடையில் விளங்கும் இலக்கியங்கள் எல்லாவற்றையும் விட ஒருமைப் பாட்டை உருவாக்கும் இலக்கியமாகத் திகழ்வது திருக்குறள் ஒன்றேயாம். திருக்குறளில் நாடு உண்டு. ஆனாலும் நாடொடு மோதும் நாடு இல்லை. நல்ல நாட்டுக்கு இலக்கணம் உண்டு. திருக்குறளில் தென்றல் தவழும் பொதிகையைக் காணோம். இமயப் பனிவரையையும் காணோம். தண்ணார்ந்த நெஞ் சுடைய இளங்கோவடிகளும், "காவிரி போற்றுதும்” என்றார். ஆனால், திருவள்ளுவர் எந்தவொரு ஆற்றையும் பாடினா ரில்லை; திருக்குறளில் சாதிகளில்லை. அதற்கேற்ற உயர்வு தாழ்வுகளில்லை. செல்வத்தால் அமையும் எந்தவித ஏற்றத் தாழ்வுகளையும் வள்ளுவர் எந்த நியாய்மும் காட்டி ஒப்புறுதி வழங்கவில்லை. மாறாக "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உழவர் பெருங்குடி மக்களுக்கு உரிமை கொடுத்த நூல், நஞ்சுண்டு அமையும் நயத்தக்க நாகரிகத்தை நற்றமிழில் வடித்துத் தந்த ஒப்பற்ற சமாதான நூல். திருக்குறள் நெறி பரவினால் மனப்பகை ஒடுங்கும். போர் முனை அருள் முனையாகும். இந்த மண்ணகம் விண்ணகம் ஆகும்; உலகின் மனித குல ஒருமை உறுதியாகும்.

அருள் நெறி

திருக்குறள் எல்லாச் சமயங்களும் ஏற்றுப் போற்றக் கூடிய பொதுமறையாக விளங்குகிறது. கடவுளை நம்பாத உலகாயதவாதிகள் உட்பட திருக்குறளை நம்புகிறார்கள். உயர்ந்த சமய நெறியின் இயல்பு, எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருப்பதுதானே! வேறுபாடுகளைக் காட்டிக் காழ்ப்பையும் கலகத்தையும் உருவாக்குகிற ஒன்று, நிறைவான சிறந்த சமயமாக இருக்க முடியாது. திருக்குறள் காட்டும் சமயம் வேறுபாடுகளைக் கடந்த சமயம். தத்துவ சீலங்களால் உயர்ந்து காட்டுதல் என்பது வேறு; தாக்கித் தாழ்த்தி உயர்தல் என்பது வேறு. திருக்குறள் சமய நெறி மிகவுயர்ந்த சமய நெறி. திருக்குறளை மையமாகக் கொண்ட சமய இயக்கமொன்றைத் தொடங்கியிருந்தால் உலகப் பொதுச் சமயம் தோன்றியிருக்கும். கடந்த காலத்தில் அதைச் செய்யத் தவறியது, பொதுவாக உலகத்துக்கும் சிறப்பாகத் தமிழகத்திற்கும் இழப்பேயாம். இனி எதிர் காலத்திலாவது திருக்குறள் சமய இயக்கம் தோன்ற முயலுவோமாக.

முடிப்புரை

திருக்குறள் வாழ்க்கை நூல். அது ஒரு தனிமனிதனை அறிவூட்டி, உணர்வூட்டி, ஆள்வினை கூட்டி, அன்பில் தோய்த்து, வேண்டுவன தந்து, ஒழுக்க நெறியில் செலுத்தி, அருள் நெறியில் நிற்கச் செய்து வளர்த்து வாழ்விக்கிறது. திருக்குறள் மனித சமுதாயத்தை இறைநெறியில் நிறுத்தி, முறைமையில் முறைப்படுத்தி, நடுவு நிலைமையில் நடை பயிலச் செய்து, உயர்நெறியாம் ஒப்புரவில் ஒழுகச் செய்துகடலுக்குப் புயலும், புயலுக்குக் கடலும் போல. தனி மனிதனோடு உறவு கொண்டு வளர்த்துத் தன்னையும் வளர்க்கிறது.

திருக்குறள் பாட நூலன்று. இன்றைய சூழ்நிலையில் பாடப் புத்தகங்களுக்குரிய பார்வை திருக்குறளைச் சாரக் கூடாது. இன்றைய சூழ்நிலையில் வேலை என்பதன் பின்னுள்ள சுமை உணர்ச்சி திருக்குறளைச் சாரக் கூடாது. திருக்குறள் கற்பது, உணர்வது, நாள்தோறும் உயிர் வாழ்க்கை யிலுள்ள விருப்பத்தைப் போலச் செய்ய வேண்டிய ஒன்றாக இடம் பெறவேண்டும். நாளுக்கு நாள் நம்மைத் திருக்குறள் வளர்த்துப் புதுமைப்படுத்த வேண்டும். வீடுகள் தோறும் திருக்குறள் பயிற்சி. விதிகள் தோறும் திருக்குறள் வினைகள் வளரவேண்டும். குறைந்தது நூறாண்டுகளாவது மனிதன் வாழலாம். முறையாக வாழ்ந்தால் வாழ முடியும். சராசரி பதினொரு வயதுக்குள் கற்கவும் கேட்கவும் தெளிவாக உணரவும் கூடிய பருவம் வரலாம். பதினொரு வயதில் திருக்குறளைக் கற்க, கற்று நெறி நிற்க முயன்றால் பதினெட்டு வயதுக்குள்ளாகச் சீலமும் நெறியும் நிறைந்த மனிதனாகத் தன்னை வளர்த்துக் கொள்ள முடியும். வாழ்க்கைக்கு ஒரு மனிதனை நெறியும் நிறைவும் உடையவனாக வளர்க்க, இனிறியமையாது ஏற்று ஒழுகத் தக்க நெறிகளாக-அடிப்படை ஒழுக்க நெறிகளாக ஐம்பத்து நான்கு நெறிகளைக் காட்டு கிறது. வள்ளுவம். அவற்றினும் அடிப்படை ஒழுக்க நெறி களுக்கும் நிலைக்களனாக-அடி நிலமாக உள்ளன. மூன்று என்று கூறுகிறது. அவை முறையே அறிவுடைமை, ஆள்வினை யுடைமை, அன்புடைமை ஆகியனவாகும். இந்நெறிகளை ஏழாண்டுக் காலம் முயன்று கற்று, வருந்தி வழக்கப் படுத்திக் கொண்டால் வாழ்நாள் முழுதும் இன்பத்தோடு வாழலாம். பலரை வாழ்வித்தும் வாழலாம். ஏழேழு பிறப்புக்கும் வாழலாம்; எல்லாம் வல்ல இறைவனுக்கும் விருந்தாக அமையலாம். முயலுவோமாக! திருக்குறள் சாதனை நூல். திருவள்ளுவருக்குக் கைம்மாறு நம்முடைய வாழ்க்கைச் சாதனையே யாம். வாழ்க வள்ளுவம்! வளர்க வள்ளவ நெறி! வையகம் இன்புறுக.

கல்வி உலகத்திற்கு...

னிதன் மனித வடிவத்திலேயே பிறக்கிறான்; ஆனால் பின்னே மனிதனாக வளர்கிறான். மனிதனை முழு நிறை மனிதனாக்குவதில் கல்வியே முக்கியமான இடத்தை வகிக்கிறது. கல்வி மனிதனுக்குக் காற்றைப்போல இன்றியமையாதது. உடல், உயிர்க் கூட்டுக்குக் காற்றே களம் உயிர், ஒழுக்கத்திற் சிறக்க கல்வியே களம்.

கல்வி என்பது உயிரிடத்தில் ஒளிந்து கிடக்கும் அறிவை, ஆற்றலை வெளிப்படுத்துவதாகும்; அந்த அறிவிலும், ஆற்றலிலும் இயற்கையில் காணப்பெறும் குறைகளை நீக்கி நிறைவு செய்வதுமாகும். கல்வி மனிதனை அறிவுடைய வனாக்கி, ஆற்றல் உடையவனாக்கி, ஒழுக்க நெறியில் உயர்ந்தவனாக்கி முழு மனிதனாக்கும் ஆற்றல் உடையது. அத்தகைய சாதனைகளைச் செய்யும் ஒன்றுகே கல்வி என்று பெயர். இன்றோ, கல்வி இத்தகைய நலன்கள் செறிந்ததாக இல்லை. இன்றையக் கல்வி சில செய்திகளைத் தெரிந்த கொள்ளவே பயன்படுகிறது; அல்லது மூளையில் சிலவற்றை ஏற்றித் திணித்துச் சந்தர்ப்பம் வரும்பொழுது பெருமையாக ஒப்பித்துக் காட்டப் பயன்படுகிறது. இன்றையக் கல்வி அறிவுப் புலனுக்கு ஆற்றல் தருவதாக இல்லை. கல்வியின் பயனாகிய அறிவு, நம்முடைய சமுதாயத்தில் வளரவில்லை. நிறையப் படித்த பலரைக் காண்கிறோம். ஆனால் அவர்களிடத்தில் அறிவு என்பது சிறிதளவேனும் இல்லை என்பது வெளிப்படை

கல்வி பற்றித் திருக்குறள் தெளிவுறப் பேசுகிறது.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

என்ற திருக்குறள் கல்வியின் தத்துவத்தை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. ஆனால் இந்தத் திருக்குறளுக்கு ஏற்றவாறு நம்முடைய சிந்தனைப் போக்கு வளரவில்லை. கல்வி கற்பதற்குப் பயனுடைய நூல்கள் தேவை. சிறந்த நூல்கள் உயிர்க்கு மருந்தாகவும் உணவாகவும் பயன்படும். நூல்கள் உயிர்க்கு மருந்து என்று குறிப்பிடுவது ஆன்றோர் வழக்கு. கோணல் நீக்கி நேர் நிறுத்துவது நல்ல நூல் என்பது தமிழ்க் கருத்து. நம்முடைய மனக் குற்றங்களை நீக்குதற்குரிய நூல்களாகத் தேர்ந்தெடுத்துக் கற்கவேண்டும். அந்தக் குற்றங்கள் நீங்குகின்ற வரையில் கற்கவேண்டும். இந்த அடிப்படையில் நூல்களைப் பொறுக்கி எடுக்கும் பண்பு வளரவில்லை. மாறாக, உள்ள நோயினைப் பெருக்கிச் சீரழிக்கும் நூல்களே மலிந்து கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப், பழகின சுவைப் புலனுக்குத் தீனி தந்து மாறுபட்டு நின்று வஞ்சனை செய்யும் வஞ்சப் புலனைந்துக்கும் இரை போட்டு அழியத் துணைசெய்யும் நூல்களின் பெருக்கமும் நினைத்தால் நெஞ்சம் நடுக்கமுறுகிறது! அம்மம்ம, கொடுமை !

பயில்வதைவிட பயில்தற்குரிய நூலைத் தேர்ந்தெடுப்பதிலேயே அதிக கவனம் தேவை. அதிலேயே வாழ்க்கையின் வெற்றி அமைந்து கிடைக்கிறது. நூலாசிரியனாதல் அருமை யில் ஆகக்கூடிய முயற்சி, நூலைவிட நூலாசிரியன் உயர்ந்து விளங்க வேண்டும். சிந்தையில் சிறந்த தெளிவை, வாழ்க்கை என்ற ஏட்டில் சாதனை என்ற எழுதுகோலால் உணர்வு என்ற மையில் நனைத்து எழுதுபவனாக இருக்கவேண்டும். இதற்குப் பிறகே புற வெளிப்பாடாகிய நூல் தோன்ற வேண்டும். இங்ங்னம் தோன்றும் நூல்கள் மக்கட் சமுதாயத் திற்கு ஏணியெனவும் தோணியெனவும் பயன்படும். ஆதலால் "கற்க கசடறக் கற்பவை” என்ற வள்ளுவத்தின் ஆணை மீற முடியாத ஒன்று.

கல்வி, தொடர்ந்து பயிலத்தக்க ஒன்று. அதற்குக் கால எல்லை கிடையாது. இப்பொழுதோ பலர் படித்து முடித்து விட்டதாகவே கூறுகிறார்கள். மனிதன் சாகிற வரையில் கற்கவேண்டும். இந்த அடிப்படையில்தான் "சாந்துணையும் கற்கவேண்டும்" என்று வள்ளுவம் ஆணையிடுகிறது. இன்று நம்முடைய தமிழக அரசு கல்வியில் போதிய ஆர்வம் காட்டுவது பாராட்டத்தக்கதேயாகும். ஆனாலும் கல்வியின் தரம் உயர-மக்கள் மன்றத்தில் அறிவு வீச்சு ஏற்பட-மேலும் பல பணிகளைச் செய்ய வேண்டும். இன்றைய ஆரம்பக் கல்வி, அறிவுக்கிளர்ச்சி செய்யத் தக்கதாக இல்லை என்பது பெரிய உண்மை. ஆரம்ப ஆசிரியர்களை மிகக் குறைந்த தரமுடையவர்களாகப் பார்த்து எடுக்கிறோம். சிந்திக்கும் திறன் பெற்ற வயது வந்தவர்களுக்குச் சிறந்த ஆசிரியர் களையும், சிந்திக்கும் திறனையே கற்றுத் தரவேண்டிய அறியாப் பருவத்தினருக்குத் தரங்குறைந்த ஆசிரியர்களையும் வழங்கும் முறை நன்றன்று. குழந்தைப் பருவத்தில் வண்ணமும் வடிவமும் பெறாது பசுமையென நிற்கும் உள்ளத்தோடு பழகி, சிந்திக்கக் கற்றுக் கொடுத்து, சிந்திக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி வண்ணமும் வடிவமும் கொடுக்கக் கூடிய கைதேர்ந்த பேராசிரியர்கள் தேவை. அப்பொழுது தான் உறங்கிக் கிடக்கும் அறிவொளி வெளிப்படும்.

கல்விக்கூடங்களுக்கு மிகச்சிறந்த நூலகங்கள் தேவை. நூலகத்திற் பயிலுதலையும், பாடத்திட்டத்தோடு சேர்க்க வேண்டும். எல்லாப் பள்ளிகளிலும் அறிவியல் ஆய்வுக் கூடங்கள் இருக்க வேண்டும். அறிவியல் துறையில் போதிய அறிவைப் பெற ஓயாது உழைக்க வேண்டும்.

எல்லாப் பள்ளிகளும் கல்லூரிகளும் தங்கிப் படிக்கும் வகையினதாகவே அமையவேண்டும். வளமற்றோர் அரசுப் பொறுப்பிலும், வளமுடையோர் சொந்தப் பொறுப்பிலும் தங்கிப் பயிலவேண்டும். இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பல பள்ளிகள் அமைவதைவிட மையப்படுத்திய எண்ணிக்கைக்கு உட்பட்ட பள்ளிகளே நலம் தருவன. எண்ணிக்கையில் பள்ளி அதிகமாகும் போது, போதுமான மாண வர்கள் இல்லாமல், வீண் செலவும், சில்லரைச் செலவுகளும் அதிகமாகின்றன. பள்ளிகளை மையப்படுத்தி எண்ணிக் கையைக் கட்டுப்படுத்தும்பொழுது, வீண் செலவைத் தவிர்க்க முடியும். அதோடு நூலகம், அறிவியற்கூடம் ஆகியவைகளைச் சிறந்த முறையில் மையப்படுத்துவதில் வேறொரு சிறந்த பயனும் உண்டு. அதாவது தற்போதைய பள்ளி அமைப்பு முறையில் மாணவர்கள் தங்களை யொத்த திறனுடைய மாணவரிடத்திலேயே பழக முடிகிறது. பள்ளிகளை மையப்படுத்தும் பொழுது வேறு பிற பகுதி மாணவர் களிடமும் பழகும் வாய்ப்பு ஏற்படுவதால், கொண்டும், கொடுத்தும் அறிவு-ஆற்றல்களைப் பரிமாறிக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.

பொதுவாக நம்முடைய நாடு இரண்டு தலைமுறைகளுக்கு மேலாக அரசியலடிமைப்பட்டுக் கிடந்த நாடாகும். ஒரு நாடு அரசியல் அடிமைப்படுவதற்கு ஏதுவாக வேண்டு மானால் அதற்கு முன்பே பலநூறு ஆண்டுகள் அறிவிலும் ஆற்றலிலும் அது முடங்கி முடப்பட்டுப் போயிருந்தால்தான், அரசியல் அடிமைத்தனம் உருவாகும். இந்த வகையில் ஆழச் சிந்தித்தால் நம்முடைய நாடு, கடந்த பல நூற்றாண்டுகளாகச் சிந்தனையிலும், செயலிலும் முடக்குவாதம் கொண்டு அழிந்து இருப்பது தெரியவரும் திருவள்ளுவர். திருநாவுக் கரசர் போன்ற சிறந்த மருத்துவர்களாலும் இந்த முடக்கு வாதத்தை அடக்க முடியவில்லையே என்ற உண்மையை அறியும் பொழுது நமக்கு இரக்கமே மேலிடுகிறது. ஆதலால் கல்வி உலகத்தில் மிகவும் விழிப்புடனும் தீவிர உணர்ச்சி யுடனும் அணுகினாலேயே இந்தத் தலைமுறையிலாவது வரலாற்றை மாற்ற முடியும். பொதுவாகக் கல்வியில் இன்று சுவைத்திறன் ஊட்டம் தரக்கூடிய சக்தி நம்முடைய கல்வி உலகுக்கு இன்னும் வரவில்லை என்பது என்னவோ உண்மை. கல்வி, சுவையுடையதாக மாறி, அறிவு ஆக்கத்தினைத் தந்து நம்மைப் பிடித்துள்ள மூடப்பழக்க வழக்கங்களும் துன்பமும் தொலைந்து, வலிவும் எழுச்சியும், ஏற்றமும், ஆள்வினையும், ஆக்கமும், அன்பும், அறனும் நிறைந்த சிறந்ததொரு வாழ்க்கை உருவாக வேண்டும். இதைச் சாதிக்க முடியுமா என்பது இன்றைய கல்வி உலகத்திற்கு ஒர் அறைகூவல்.

திருக்குறள் ஒழுக்கம்

தமிழின் சிறப்பு

தமிழ் காலத்தால் மூத்தது; கருத்தாலும் மூத்தது. தமிழ் வாழ்க்கையோடு இயைந்து வளர்ந்த மொழி, வாழக்கையை வளர்த்த மொழி. தமிழினம் உலகின் வரலாற்றுக் காலந்தொட்டே சீருடனும் சிறப்புடனும் வாழ்ந்து வந்திருக்கிறது. தமிழினத்தின் கருத்துக்கள் நம்பிக்கை, நல்வாழ்க்கை இவை களுக்கு இயைபுற அமைந்தன. வரட்சித் தன்மையுடைய கற்பனைகளோ, இசைவான நடைமுறைகளுக்கு அப்பாற் பட்டவைகளோ, தன்னிச்சையான மனப்போக்குகளின் படைப்புக்களோ தமிழில் இல்லை.

தமிழ், மொழியாக மட்டும் வளரவில்லை. நாகரிகம், பண்பாடு, சமயம் ஆகியவற்றையும் தழுவி வளர்ந்திருக்கிறது. தமிழ், வாழ்க்கையை ஏனோ தானோவென்று கணிக்க வில்லை. வாழ்க்கையை வாழ்க்கையாகவே பார்க்கிறது. ஏன்? "வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல்” தமிழ்தந்த பாடம். இன்றா? நேற்றா? இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயாம். உலகமொழி என்று பாராட்டப்படுகின்ற ஆங்கிலத்திலும், அம்மொழி பேசும் மக்களின் வாழ்க்கைக்கு இலக்கணமில்லை. இந்திய நாட்டின் இணைப்பு மொழியாகச் செயற்கைக் கோலம் தாங்கும் இந்தியிலும் வாழ்க்கைக்கு இலக்கணமில்லை. ஏன்? இந்திய நாட்டின் சமயத்திற்குரிய மொழி என்றும், பாசம் ஒன்றின் காரணமாகவே சிலரால் பாராட்டப்பெறும் சமஸ்கிருதத்தில் கூட வாழ்க்கைக்கென்று முறையான இலக்கணமில்லை. தமிழில் எழுத்து, சொல், பொருள் என்ற அமைப்பில் இலக்கணத்தை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் இயற்றித் தந்துள்ளார். தமிழிலக்கிய வழக்கில் பொருள் என்றால் பயன் என்றே கொள்ளப் பெறும். மொழியின் பயன் நல் வாழ்க்கையேயாம். ஆதலால் தொல்காப்பியர் பொருளதி காரத்தில் தனி மனிதன், வாழ்க்கைத் துணையுடன் கூடிவாழும் மனையற வாழ்க்கைக்குரிய நெறிமுறைகளை அகத்தினை இயவிலும், அவனே சமுதாயத்துடன் தொடர்பு கொண்டு வாழ்வதற்குரிய நெறிமுறைகளைப் புறத்திணை இயலிலும் இலக்கணமாக வகுத்துச் செய்துள்ளார். இத்தகு சிறப்புடை மரபில் உலகுபுகழ் திருக்குறள் தோன்றிற்று.

திருக்குறளின் சிறப்பு

திருக்குறள் பயில்தொறும் இன்பந்தரும் நூல். ஒரு முழுதுறழ் அறநூல். இனிய தமிழ், எளிய நடை, மனம் கொளத்தக்க குறுகிய அளவு. இருபொருள்படாத தெளிந்த நடை ஐயத்தின் நீங்கிய துணிபு, இனம், மொழி, மதம் சார்பற்ற தன்மை. காலவெள்ளத்தில் அழியாத நீதி, ஓரின ஒழுக்கம் பேசாமல் உலக ஒழுக்கம் பேசிய ஒட்பம். வீட்டையும், நாட்டையும் பிணைத்த பெட்பு இருவகைக் காதலையும் எடுத்துக் காட்டிய இனிய சால்பு. குற்றங் காட்டுதல்-குற்றம் கடிதல், நன்றின்பால் உய்த்தல் ஆகியன. நிகழ்த்தும் ஆற்றல். இப்படி எத்தனை எத்தனையோ சிறப்புக்கள். விரிப்பில் பெருகும்; தொகுப்பின் எஞ்சும்.

திருக்குறள் வளர்க்கும் முறை

தனிமனிதன், குடும்பம், சமூகம், சமுதாயம், உலகு என்ற முறைவைப்பை வரலாற்றுப் போக்கு காட்டுகிறது. இந்த முறைவைப்பின் பல்வேறு படிகளில் உள்ள பாத்திரங்களை முறைப்படி வளர்த்து, ஒன்றுக்கும் பிறிதொன் றுக்கும் இடையில் தொய்வில்லாமல், ஒன்று பிறிதொன்றின் நலனுக்கு இடையூறு இல்லாமல் வளர்த்து, வழி நடத்தும் பெருமை திருக்குறளுக்கே உரியது. திருக்குறள் தனிமனிதனை நம்புகிறது; முற்றிலும் முழுவதும் நம்புகிறது. அவனே மனித சமுதாயத்தை வரலாற்றை இடையீடின்றி எழுதும் பாத்திரம் என்றும் நம்புகிறது. அவனை அகத்தாலும் புறத்தாலும் வளர்த்து உறுதிப்படுத்த-நிலைநிறுத்த திருவள்ளுவர் முயற்சிக்கின்றார்.

சிற்பிக்குச் சிலை வடிப்பதே நோக்கம். உழவனுக்குக் காடுகளைக் கழனியாக்குவதே நோக்கம். திருவள்ளுவருக்கு மனிதனை, மனித சமுதாயத்தை வளர்ப்பதே நோக்கம். திருக்குறளில் இலக்கிய இன்பம் உண்டு; கவிதை நலமுண்டு; எதுகை மோனைகள் ஏராளம்; அணியின்பங்கள் ஆயிரமாயிரம். எனினும் இவையனைத்தும் மனிதனை முழுமைப்படுத்துகின்ற குறிக்கோளுக்குத் துணையே தவிர அவையே மேம்பட்டு விளங்கவில்லை. மனிதனை வளர்க்கும் நோக்கமே திருக்குறளில் நிறைவுற்று வெளிப்பட்டுக் காட்சி அளிக்கிறது. தனிமனிதனைத் தன்நிலைஒழுக்கத்தில் ஈடுபடுத்தி, வளர்த்து, துணையுடன் கூட்டி, அவ்வழி உலகுடன் இணைத்து, அவ்வழி இறை யின்பத்துடன் இணைத்துப் புகழ் உண்டாக்குகிறது.

உயிர்க்குறுதி

தமிழ்மரபு, உயிர் உண்மையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இன்று வரையில் பிறமொழி இலக்கியங்கள் உயிரைப் பற்றித் தெளிவாக விளக்க முடியாமல் அல்லற்படுகின்றன. திருக்குறள் உயிர் உண்மையை ஒத்துக் கொள்கிறது. உயிர், தோற்றமும், அழிவும் இல்லாத நிலை யான ஒன்று என்பது திருக்குறள் முடிபு. இதனை "மன்உயிர்” என்னும் சொல்லாட்சியால் உணரலாம். இதனை மேலும் அரண் செய்ய எழுபிறப்பு உண்மை துணை செய்கிறது. அது துன்பத் தொடக்கிலிருந்து விடுதலைபெற்று நல்லின்ப வாழ்க்கை பெறுதற்குரியதென்று காட்டுகிறது. உயிர் அறிவுப் பொருள் என்றும் நம்புகிறது. ஆனால் அது இயல்பான அறிவன்று. உயிர், அறிவு பெற்று விளங்குவதற்குரிய பொருள். அறிவே உயிர்க்கு முதல்துணை என்பது திருக்குறள் முடிபு. அதனால் "அறிவுடையார் எல்லாம் உடையார்” என்று பேசுகிறது. இந்த அறிவினைப் பெறுதற்குரிய வழிவகைகளையும் ஐயத்திற் கிடமின்றி அறிவுறுத்தலோடு ஆணையாகவும் கூறுகிறது.

          கற்க கசடறக் கற்பவை கற்றபின்
          நிற்க அதற்குத் தக

என்பது குறள். இத் திருக்குறள் திறனாய்வுக்குரிய நிறைந்த செய்திகளைக் கொண்டது. உடல் நலமில்லார் மருத்துவரிடம் காட்டுவர். மருத்துவர் உடலினைச் சோதனை செய்து உடலில் நலம் விளைவித்தற்குரிய இன்னின்ன உயிர்ச் சத்துக்கள் இல்லை என்று எடுத்துக் கூறுவர். நலம்பெற விரும்புவோர் தம் உடலில் இல்லாத உயிர்ச் சத்துக்களைப் பெறுதற்குரிய உணவுப் பொருள்களையும் மருந்துகளையும் தேடி உண்பர் நலம் பெறும்வரை உண்பர். அதுபோல ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே சில உயிர்க்குறைகள் குணக்குறைகள்) உண்டு. இந்த உயிர்க்குறைகளை இன்னவை எனத் தெளிந்து அக்குறைகளை நீக்கி நலந்தரக்கூடிய நல்ல நூல்களைக் கற்கவேண்டும். அக்குற்றங்கள் நீங்கி நலம் பெறும்வரை கற்க வேண்டும். இக்கருத்தினைக் 'கசடறக் கற்பவை” என்ற சொற்களின் மூலம் விளக்குகின்றார்.

மனிதன் புறத்துறுப்பால் காணப்படுபவன் மட்டு மல்லன். புறத்துறுப்பால் மட்டும் மக்கள்போல் தோற்றம் அளிப்பவர்களை மக்களே போல்வர் என்று கிண்டலும் கேலியும் செய்கிறது. இந்த இரு சொற்களில் திருவள்ளுவர் வெளிப்படுத்தும் வேதனை கலந்த போலிமனிதனை விமர்சனம் செய்யும் உணர்வு, வால்டேர், இங்கர்சால் போன்றவர்களின் உணர்வைவிட விஞ்சி நிற்கிறது என்பதை மறுக்கமுடியாது.

"புறத்துறுப்பெல்லாம் எவன் செய்யும்?" என்பது திருக்குறளின் வினா. புறத்துறுப்புக்களைப் பொருளுக்கு உரியன வாகவும் புகழுக்குரியனவாகவும் ஆக்குதல் அகத்தியல் வளமையேயாம். உடல் வளத்திற்கு அடிப்படை உணவு, செரித்தல், வலிமை ஆதல், அகத்தியல் வளத்திற்கு அடிப்படைக் கருத்து, அநுபவம், ஒழுக்கமுமாம்.

அன்புடைமை

அறிவைத் திருவள்ளுவர் கருவியாகவே கருதுகிறார். "அறிவு அற்றங் காக்கும் கருவி" என்பது குறள் அறிவின் உயிர்ப்பும் பயனும் அன்பேயாகும்.

          அறிவினா லாகுவ துண்டோ பிறிதின்நோய்
          தந்நோய்போல் போற்றாக் கடை

என்பது குறள். திருவள்ளுவர் உயிரை எல்லாவற்றிலும் சிறந்ததாகக் கருதுகிறார். "உயிரினும்" என்று குறிப்பிடுவதே இதற்குச் சான்று. இந்த உயிர் தங்கியிருந்து இயங்குவது உடலிலேயாம். இதனை "உடம்பொடுயிரிடை நட்பு என்று கூறும். ஆயினும் உயிர் அமைப்பாலும் தோற்றத்தாலும் உடம்பிடைத் தங்கி இருந்தாலும் அன்பினில் உயிர் நிலையைப் பொருத்திக் கொள்ளுமாறு வள்ளுவம் வழி நடத்துகிறது. உடலிடை மட்டும் உயிர் தங்கிக்கிடக்க வாழ்தல் விலங்கியல் வாழ்க்கை. அன்பினில், குறிக்கோளில், சால்பில் உயிரை நிறுத்தி வாழ்தல் வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை யாகும்.

அரசியல் நீதியில் உயிரை நிறுத்தி வாழ்ந்த பாண்டியன் நெடுஞ்செழியனும், தெய்வக் கற்பின் உயிரை நிறுத்தி வாழ்ந்த பாண்டிமாதேவியும், இன்பநட்பில் உயிரை நிறுத்தி வாழ்ந்த பிசிராந்தையாரும் கொடையில் உயிரை நிறுத்தி வாழ்ந்த குமணனும், தமிழின நாகரிகத்தின் காப்பில் உயிரை நிறுத்தி வாழ்ந்த அப்பரடிகளும் எண்ணத்தக்கவர்கள். ஆதலால் உயிருடைமைக்கும் இன்மைக்கும் அடையாள்ம் உண்ணலும் ஒடித்திரிதலும் அன்று.

          அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்
          என்புதோல் போர்த்த உடம்பு

என்பது திருக்குறள். எலும்பு போர்த்த உடம்பு யாதொன் றிற்கும் பயன்படாது. அதுமட்டுமின்றி நாற்றத்தால் மற்ற வர்க்கும் கேடு செய்யும். ஏன் தோற்றத்தாலேயே கண்டாரை வெருட்டும். அதுபோல அன்பில்லாத மனிதர்களால் அவர்களுக்கும் மனித உலகத்திற்கும் பயனில்லை. பயனில் லாததோடன்றித் தீமையும் விளைக்கும்.

உடைமையியல்

இன்றைய மனித சமுதாயத்தில் உடைமை உணர்வு மிகுதியும் மேலோங்கி நிற்கிறது. அதாவது நிலம், பொன், பொருள் ஆகியவைகளைத் தனிமனிதர்கள் தத்தம் உடைமையாக்கிக் கொள்ளப் போரிடுகின்றனர். வெற்றி பெற்ற பின்பு, உழைப்பின் வழி வாழாமல் உடைமைகளையே சார்ந்து வாழத் தலைப்படுகின்றனர். மனிதனுக்கு ஏவல் செய்ய வேண்டியன உடைமைகள். ஆனால் உடைமைகளுக்கே மனிதர்கள் அடிமைகளாகி விடுகின்றனர். இங்ங்ணம் மனித குலத்தின் ஆற்றலை, பண்பை அரித்து அழிக்கும் உடைமைகள் மீது சான்றோர்களுக்கு வெறுப்பு ஏற்படுவது இயற்கை இந்தவகையில் காரல்மாக்ஸ் மாமுனிவரின் சிந்தனை ஏற்றுக் கொள்ளத்தக்கது; பாராட்டத்தக்கது. அவர் “உழைக்காதவனுக்கு உண்ணவும் உரிமை இல்லை” என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றார். ஆனால் இதே கருத்தினை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறள் கூறியது என்று எண்ணி மகிழ்வாரில்லை.


உடைய ரெனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.


உள்ள முடைமை உடைமை பொருளுடைமை}}
நில்லாது நீங்கி விடும்.

என்பன போன்ற திருக்குறள்கள் புதுமையும் புரட்சியும் நிறைந்த கருத்துக்களைத் தாங்கி நிற்கின்றன.

பொருளியல்

உலகியல், பொருளியல் வலையில் பின்னப் பெற்றுச் சுற்றிச் சுழன்று வருகிறது. உலகியலே பொருளியல். ஏன்? பொருளியலே உலகியலும்கூட “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று பிறிதொரு கருத்துக்கு இட மின்றித் தெளிவாகத் திருக்குறள் பேசுகிறது. ஆனால் எது பொருள் என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. இன்றைய சூழலில் பலர் பொருள் என்றால் நேரிடையாகத் துய்த்து நுகர்வதற்குப் பயன்படாமல் நாணயமாக, பொன்னாக, மணியாக இருப்பனவற்றையே பொருள் என்று கருதுகின்றனர். துய்த்து நுகர்வதற்குரியவை அல்லாதவை எங்ஙணம் பொருளாக முடியும்? பொருள் என்பது துய்த்தற் குரியவைகளையே. “யாம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல” என்ற பரிபாடல் அடி பொன்னையும் பொருளையும் பிரித்து உணர்த்துவது உணரத் தக்கது. தீ ஏதாவது ஒரு பொருளைப் பற்றுக் கோடாகக் கொண்டே இயங்குகிறது. அதுபோல உயிர் யாதானும் ஓர் உடம்பினைப் பற்றுக் கோடாகக் கொண்டே இயங்கும். உடலினுக்கு எரிபொருள்களாக உணவு முதலிய பண்டங்கள் தேவை. அஃதின்றேல் உடலியக்கம் ஒடுங்கும். அதுபோலப் “பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை” என்று தெளிவாகத் திருக்குறள் எடுத்துக் கூறுகிறது. இப் பொருள்களை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுவதாலும், கால வெள்ளத்தில் அழியாமல் பொருள்களின் மதிப்பைத் தாங்கித், திரும்ப அப்பொருள்களைப் பெறுதற்குக் கருவியாக இருப்பதாலும் உபசார வழக்கில் பொன்னையும் பொருளெனப் போற்றினார்கள்.

இத்தகு வாழ்க்கைக்குப் பயன்படும் பொருளியலைப் பற்றித் திருக்குறள் தெளிவான கருத்தை மேற்கொண்டிருக்கிறது. இன்றைய பொருளியல் சாத்திரங்கள் பக்கம் பக்கமாக விரித்துரைக்கும் பொருளியல் சித்தாந்தங்களைத் திருக்குறள் மிக எளிமையாக நான்கைந்து சீர்களில் விளக்குவதில் வெற்றி பெற்று நிற்கிறது.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு

இந்த ஒரு திருக்குறள் பொருளியல் தத்துவத்தின் சிறந்த விளக்கமாக அமைந்திருக்கிறது. உலகம் வளர்ந்து கொண்டிருக்கிறது. மனித எண்ணிக்கையால் மட்டுமன்று, தேவைகளின் பட்டியல்களும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. வளரும் தேவைகளை ஒரு வழித்துறையில் முற்றிலும் அடைய முடியாது. ஆதலால் தேவைகளை நிறைவு செய்துகொள்வதற்காகப் புதிய புதிய பொருள் நுட்பத்திற்குரிய புதிய வழிகளைக் காணவேண்டும். இதனை “இயற்றலும்” என்ற சொல் மூலம் காட்டுகிறார் திருவள்ளுவர். அதாவது திட்டமிட்டுத் தொழில்புரட்சிகளைச் செய்து புதிய வருவாய்த் துறைகளைக் காணுதல் என்பதாகும். இயற்றலைத் தொடர்ந்து ஈட்டுதல், பின்பொருள் சிறு திவலைகளாகச் சிதறிக் கிடக்குமாயின், அங்ஙணம் சிதறிக்கிடக்கும் பொருள் மீண்டும் பொருள் உற்பத்திக்குப் பயன்படும் ஆற்றலை, தகுதியை இழந்து விடுகிறது. ஆதலால் ஈட்டப் படுகின்ற பொருள்கள் மூலதனமாக வளர்ச்சியடைகின்ற வரையில் காக்கப் பெறுதல் வேண்டும். பின் முறையான பங்கீடு அல்லது விநியோக முறை வேண்டும். இன்றைய நம்முடைய பொருளாதாரத்தில், உள்ள சிக்கல் பெரும்பாலும் முறையான பங்கீடு இன்மையேயாகும். இவ்வளவு தெளிவாகப் பொருளியலைக் கண்டுணர்த்திய திருக்குறளில் பெருமைக்கீடுண்டோ!

சமுதாய உறவு

திருக்குறள் தனி மனிதனைச் சமுதாயப் பொது மனிதனாக வளர்ப்பதில் நிறைய அக்கரை காட்டுகிறது. அவனுடைய சமுதாய உறவுகளை வளர்ப்பதிலும் பக்குவப்படுத்துவதிலும் திருக்குறள் முழுக்கவனம் செலுத்துகிறது. தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இருக்க வேண்டிய நல்லுறவைத் தடுத்துக் கெடுக்கும் தடைகளைப் பற்றியும் தெளிவாக வரையறுத்துக் காட்டுகிறது. இந்த உறவினை வளர்த்துக் கட்டிக் காப்பதற்காகப் பலப்பல குறள்களைத் திருவள்ளுவர் இயற்றியுள்ளார். மற்றவர்களைச் சார்ந்து நலம் செய்து வாழ்வதால், கேடுவருமாயினும் ஏற்றுக்கொள் என்று ஆணையிடுகிறார்.

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து

என்பது திருக்குறள்,

மனித உறவை வளர்ப்பதில் பொறையுடைமைப் பண்பிற்குச் சிறந்த பங்குண்டு. ஆனால், பொறையுடைமை என்பதை இன்று பலர் கருதுகிற பார்வையில் திருவள்ளுவர் கருதவில்லை. கோழைத்தனத்தினாலும் அச்சத்தினாலும் பொறுத்தாற்றுதலுக்குத் திருவள்ளுவர் உடன்படார். பொறையுடைமை என்றே ஓர் அதிகாரம் செய்துள்ளார். அதில் மிகவும் சிறந்த திருக்குறள்,

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை என்பது.

பொறையுடைமைக்கு எடுத்துக் காட்டும் உவமை எண்ணி எண்ணி இன்புறத்தக்கது. மலையையும் உடைத்துக் கல் எடுக்கிறோம். அது பொறுமையாகவே இருக்கிறது. அணைகளும் மாளிகைகளும் கட்டக் கற்களைத் தருகின்றது. நன்னூல் ஆசிரியர் போன்றவர்கள் நிலை தளராத ஆசிரியப் பெருமக்களுக்கு மலையை உவமையாகக் கூறுவர். ஆனால் திருவள்ளுவர் பொறுத்தாற்றும் பண்பிற்கு நிலத்தை எடுத்துக் காட்டாகக் கூறுவானேன்? மலை, உடைப்போரைப் பெரும் பாலும் எதிர்த்துத் தாக்குவதில்லை. ஒரோவழி எதிர்த்துத் தாக்குதலும் உண்டு. அது மட்டுமன்று: அது உடைக்க உடைக்க அழிந்து போகிறது. அதனாலேயே மலையை ஒதுக்குகிறார் திருவள்ளுவர். நிலம், உழுவோர் தரும் துன்பத்தைத் தன் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டு வளர்கிறது. நிலம் உழ உழ வளம் பெறும். பயன் பெருக்கித்தரும். உழுவோருக்கே தரும். பயன்படும் வகையால் தன் மதிப்பினை உயர்த்திக் கொள்ளும். ஆதலால் உழுபவன் நிலத்தினுடன் உரிமையும் உறவும் கொள்கிறான். அது போலவே பகைவர்கள் துன்பங்கள் தருவார்களானால் அத்துன்பங்களை உரமாக்கிக் கொண்டு வளர்தல் வேண்டும். அப்படி வளர்ந்தால் துன்புறுத்தியவர்களும் உறவும் உரிமையும் கொண்டாடுவர், என்ற மிகச் சிறந்த கருத்து எண்ணி எண்ணி இன்புறத்தக்கது.

இறைநிலை

திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை உடையவர். திருக்குறள் கடவுள் வாழ்த்துப் பாடுகிறது. ஆயினும் திருவள்ளுவர், நம்பிக்கைக்கும் நல் வாழ்க்கைக்கும் இசைவில்லாத வெற்றுச் சடங்குகளைச் சார்ந்த சமய நெறிகளில் நம்பிக்கை இல்லாதவர். தூய தெளிவான வாழ்க்கை யோடியைந்த மெய்ந்நெறியில் நம்பிக்கையுடையவர். இவருடைய சமயம் உலகியலில் அழுந்துவது மன்று; அப்பாற்பட்டதுமன்று. இவர் வாழ்த்தும் கடவுள், கோலம் குறிகளுக்கு அப்பாற் பட்டவர்; வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர்; தனக்குவமை இல்லாத தலைவர். இத்தகு தூய “அருள் நெறியே” இந்த நூற்றாண்டிற்கும் ஏன் இனிவரும் நூற்றாண்டு களுக்கும் ஏற்ற நெறியாகும்.

திருக்குறளும் தமிழ் இனமும்

தமிழினம் முன்னர்க் குறிப்பிட்டது போலக் கடந்த கால வரலாற்றுச் சிறப்புடையதாயினும் இடைக்காலத்தில் அதற்கேற்பட்ட வீழ்ச்சி மறைக்கவோ மறக்கவோ முடியாத ஒன்று. பிறமொழி நுழைவு தமிழின் தூய்மையைக் கெடுத்தது. ஆயினும் சிறந்த தமிழ்ச் சான்றோர்கள் தமிழின் துய்மையைக் காப்பாற்றி வந்தனர். அயலினத்தாரின் நுழைவால் ஓரினமாக வாழ்ந்த தமிழினம் பலநூறு சாதிகளாகப் பிரிக்கப்பெற்றது. தமிழினத்தையே சார்ந்த ஒரு சாதியினர் பிறிதொரு சாதியினரிடம் ஓரினம் என்ற அடிப்படையை மறந்து காழ்ப்புக் கொண்டனர்; பகை பாராட்டினர். இந்த இன்னாத சூழ்நிலையை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

ஊக்கத்தையும் உழைப்பையும் மையமாகக் கொண்டு வளர்ந்த தமிழினம், நாளையும் கோளையும் அவ்வழிப்பட்ட அதிட்டத்தையும் நம்பத் தலைப்பட்டது, ஊழையும் உப்பக்கம் காணும் கொள்கை கண்ட இனம் “தலைவிதி” என்ற தத்துவத்தின் தாளடியில் சிக்கிச் சீரழிந்தது. உயர்ந்த திருக்குறளைப் பயிலாமல் ஒரு குலத்திற்கொரு நீதி உரைக்கும் நூலையும், நடுவாக நன்றிக்கண் தங்காமல் அநீதிக்கும் நீதிக்கும் சமரசம் செய்துவைக்கும் நெறியல்லா நெறியை நெறியெனக் காட்டிய நூலையும் பயின்று வீழ்ச்சி யுற்றது. இந்த வீழ்ச்சியிலிருந்து தமிழகத்தை எடுத்து நிறுத்த, இந்த நூற்றாண்டில் சிறந்த சான்றோர் அடுத்தடுத்து முயற்சித்து வந்துள்ளனர்-வருகின்றனர்.

புறப்புற இருள்நெறி கடிந்து தமிழ் ஞாயிறு எழுகின்றது. இந்த எழுச்சி, தமிழக வரலாற்றில் முன்னைப் பழமையைப் புதுப்பிக்கும், புதிய புதுமைகளைச் சேர்க்கும்.

ஓர் உலகம்

இன்று எங்கும் ஒர் உலகம் பற்றியே பேச்சு. இன்று நம்மிடையில் ஓர் உலக அமைப்பாக உலக நாடுகள் பேரவை (ஐ. நா. சபை) தோன்றியிருக்கிறது. இந்த ஓர் உலக அமைப்பு நல்லெண்ணத்துடனேயே தோன்றியிருக்கிறது. அதாவது மனித குலத்தினிடையில் கொண்டும் கொடுத்தும் கூடிக் கலந்து இன்ப அன்புடன் வாழ்கின்ற பண்பாட்டை உருவாக்குவதே இந்தப் பேரவையின் நோக்கம். பேரவை தோன்றிய நோக்கமும் பேரவையின் பயனும் போற்றுதலுக்கு உரியவையேயாம். ஆயினும் இப் பேரவையின் தோற்றத்திற்குக் காரணமான துன்பச் சூழலை வரலாறு மறைக்க முடியாது. இரண்டு உலகப் போர்களின் படிப்பினையாகவே உலக நாடுகளின் பேரவை தோன்றிற்று. உலக நாடுகளின் பேரவைத் தோற்றத்தில் அச்சமும் பங்கு பெற்றிருக்கிறது. அதனால்தான் போலும் அந்தப் பேரவையால் உலகத்தை-மானிடசாதியை முற்றிலும் போர்ப் பயத்திலிருந்து விடுதலை செய்ய இயலவில்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் ஓருலகக் கருத்தைக் கண்டு காட்டினார். இவர்தம் நூலே ஓருலகக் கருத்தை மையயமாகக்கொண்டு விளங்குகிறது. இவர்தம் ஓருலகக் கருத்து, அச்சத்தில் விளைந்ததன்று; அன்பில் விளைந்தது. பெரும்பாலும் நூல்கள் தன் நாடு, தன்மொழி, தன் இனம், தன்சமயம் ஆகியனவற்றைச் சிறப்பித்தே எழுதப்பெறும். ஒரோ வழி தம்முடையதைச் சிறப்பித்தும், மற்றையதை இழித்தும் எழுதப்பெறுவதும் உண்டு. திருக்குறள் இந்தக் குறைகளினின்று முழுதும் நீங்கிய நூல். திருக்குறளில் தமிழ் என்ற சொல் இல்லை. தமிழன் என்ற சொல்லும் இல்லை. பெயர் குறிப்பிட்ட காடு, மலை ஆறு, நாடு ஆகியவை பற்றிய செய்திகளும் இல்லை. எந்தக் கடவுளின் பெயரும் இல்லை. எந்தச் சமயச் சின்னங்களும் இல்லை. ஆதலால் திருக்குறள் இனச் சார்பற்ற நூலாக, நாடும் எல்லையும் கடந்த நூலாக, மனிதகுலத்தின் பொது நெறி நூலாகத் திகழ்கிறது.

இன்றைய தேவை “மனிதகுல ஒருமைப்பாடு.” இதனைச் சமயச் சான்றோர் “ஆன்ம நேய ஒருமைப்பாடு” என்று கூறுவர். இத்தகு ஒருமைப்பாட்டைக் காணுதலும் வளர்த்தலும் அருமையான முயற்சி; ஆயினும் இன்பம் பயக்கும். ஆனால் உண்மையான ஒருமைப்பாட்டைக் காணல் வேண்டும். ஒற்றுமையே ஒருமைப்பாடென மயங்கிவிடுதல் கூடாது. ஒற்றுமை கட்டாயம், தேவை ஆகியவை கருதியும் தோன்றலாம். கலகம் செய்வதற்குச் சக்தியின்மையின் காரணமாகவும் ஒற்றுமை இருக்கலாம். இது நெடிய பயனைத் தராது. ஒருமைப்பாடு என்பது சிந்தனையினால், உணர்வினால், குறிக்கோளால், வாழ்க்கை அமைப்பால் ஒன்று கலந்து இருப்பதாகும். இத்தகு ஒருமைப்பாட்டை அரசுகளால் தோற்றுவிக்க முடியாது. அறநெறியினாலேயே முடியும். அதனாலன்றோ கார்லைல் என்ற பேராசிரியர் “மக்களை இணைத்துப் பிணைக்க வலிமை பெற்ற ஒரு தேசீய இலக்கியம் வேண்டும்” என்று குறிப்பிடு கின்றார். இன்றைய உலகத்தை இணைக்க உலகப் பேரிலக்கியமாகத் திகழ்வது திருக்குறளேயாம். பாரதியும் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று பாடிப் பரவுகின்றார்.

இந்தியப் பேரரசு இந்திய ஒருமைப்பாட்டைப் பெரிதும் விரும்புகிறது. விரும்பி வற்புறுத்துகிறது. இந்திய ஒருமைப்பாட்டை வலிமை பொருந்திய மத்திய ஆட்சியின் அதிகாரத்திலும் இந்தி மொழியாலும் காணமுடியும் என்று நம்புகிறது. இது வெறும் கானல் நீரே. இந்திய நாட்டின் இணையற்ற தேசிய இலக்கியமாகத் திருக்குறளை ஏற்றுக் கொண்டு, இந்தியநாட்டு மக்கள் அனைவரையும் திருக்குறள் சிந்தனையிலும் திருக்குறள் நெறி வாழ்க்கையிலும் ஈடுபடச் செய்தால் இந்திய ஒருமைப்பாடு தானே உருவாகும். இந்திய நாட்டின் தேசிய இலக்கியமாகவும், உலகப்பேரிலக்கியமாகவும் திருக்குறள் விளங்கி அமையும் நாளே, மனித சமுதாயத்தின் இனிய வரலாறு தொடங்கும் நாள்.

கடமைகள்

திருக்குறள் இலக்கியமே. ஆயினும் அதன் நோக்கம் இலக்கிய இன்பம் தருவதன்று. வாழ்க்கையில் இருள் நீக்கி இன்புந் தருவதேயாகும். திருக்குறளை மையமாகக் கொண்டு இலக்கியத்திறனாய்வு செய்யலாம். துறைதோறும் இன்பந்தரும். பல நூற்றாண்டுகளுக்குத் திறனாய்வு செய்யலாம். ஆயினும் திருக்குறளை மனித குலச் சிறப்பிற்குரிய ஒழுக்கத் துறைகளில் நடைமுறைப்படுத்தித் திறனாய்வு செய்வதே பாராட்டுதற்குரியது மட்டுமன்று கடமையுமாகும்.

மனிதராய்ப் பிறந்தோர் அனைவரும் நாள்தோறும் திருக்குறள் கற்றலும் கேட்டலும் கடமையெனக்கொள்ள வேண்டும். தமிழராய்ப் பிறந்தோர் இதனைக் கடமையாக மட்டுமல்லாமல் ஒழுக்கமாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய தமிழக அரசு, திருக்குறளுக்கு உரிய இடத்தை மக்கள் மன்றத்திலும், அரசிலும் அளிக்க ஆர்வத்துடன் முன் வந்திருக்கிறது. இது, நன்றி உணர்வுடன் என்று பாராட்டுதலுக்கு உரியதாகும். இந்த இனிய சூழலை முழுவதும் பயன் படுத்திக்கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பாகும். எங்கும் முத்தமிழ் முழங்கவேண்டும். திருவள்ளுவர் எழுப்பிய திருக்குறள் ஒலி நாற்புறமும் ஒலிக்கச் செய்யவேண்டும். தமிழர் இல்லங்களைத் திருவள்ளுவர் திருவுருவம் அணி செய்ய வேண்டும். தமிழர்தம் நெஞ்சங்களில் திருக்குறள் கருத்துக்கள் தங்கவேண்டும். தமிழனத்தின் வாழ்க்கையில் திருக்குறள் ஒழுக்கநெறி. கால்கொண்டு அமையவேண்டும். இந்த உயரிய குறிக்கோளோடு நாம் அனைவரும் இனிய இன்ப உலகத்தைக் காண முயற்சிப் போமாக.

வாழ்க தமிழ்! வாழ்க வள்ளுவம்!