குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2/மனம் ஒரு மாளிகை

1



மனம் ஒரு மாளிகை

அன்பு

வாழ்க்கை, உழைப்பு என்ற அச்சில் சுழல்கிறது என்பதே உண்மை. ஆனால், அந்த அச்சுத் தேயாமல் கழன்று ஓடாமல் பாதுகாப்பது அன்பேயாம். அன்பு அம்மம்மா! அன்பிற்கு எவ்வளவு ஆற்றல்! ஆற்றல்மிக்க அன்பு என்று அருள் நூல் கூறும். அன்பே சிவம் என்பது திருமந்திரம். அன்பு, உயிரின வாழ்க்கைக்கு மூச்சுப் போன்றது. அதனாலன்றோ வள்ளுவம், அன்பின் வழியது உயிர் நிலை என்றது.

உண்மையான ஒரு மனிதனுக்கு உயிர் இருக்கிறதா? இல்லையா? என்பதன் அடையாளம் அவனுடைய நட மாட்டமல்ல. அவன் உண்ணும் உணவின் அளவல்ல; அவனுடைய இனப் பெருக்கமுமல்ல. வீட்டில் சில நடைப் பிணங்கள், இடுகாட்டில் சில பிணங்கள் என்று யாரோ ஒரு பழுத்த மனிதர் சொன்னதைப் போல அன்பில்லாதவர்கள் வாழ்பவர்கள் ஆகார். எது அன்பு? எந்த உயிரிடத்தும் காரணம் இல்லாமலேயே பள்ளந்தாழ் உறுபுனல் போலத் தோன்றி வளர்வது அன்பு. தூய அன்பிற்குக் காரணம் கிடையாது. காரியசாதனை அல்லது நோக்கமும் கிடையாது. காரியங்கள் நிகழும். தாம் வாழும் காரியமன்று. மற்றவர் வாழும் காரியங்கள் நிகழும். உயிர் இயற்கையின் அடிப்படையே, வாழ்வித்து வாழ்தல்தான்! அதுதான் அன்பின் இலக்கணம். இன்றும் இந்த இலக்கணத்திற்கு தாவர இனங்கள், விலங்கினங்கள் மாறுபடாது உயிர் வாழ்கின்றன.


ஆனால், பகுத்தறிவு படைத்த மனிதனோ அன்பிற்குப் போலி முலாம்பூசிப் பொய்மை பெருக்கிப் பகைமை வளர்த்துக் களவும் காவலும் படைத்துச் சிறைச் சாலையைக் கட்டி வாழ்ந்து கொண்டு இருக்கிறான். ஏன் ? அன்பின்மையே காரணம். அதனால், உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத எலும்பினைப் பெறாத புழுக்களைக் கதிரொளி காயும்; நீதி முறைப்படி பார்த்தால் கதிரவன் குற்றம் சாட்டப்படுவான். புழுவிற்கு எலும்பில்லாதது இயற்கையின் குறை! படைப்பின் விசித்திரம் ஆதலால், எலும்பு இல்லாத புழுவைக் கதிரவன் காய்தல் நீதியுமன்று; நெறியுமன்று.


ஆனால், வினைப்பயனில் நம்பிக்கை உடையவர்கள், உயிர்க்குப் புழுப் பிறப்புக் கிடைத்தது அதற்கு ஒரு வகையான தண்டனை என்று கூறினாலும் கூறலாம். ஆனால், அப்பரடிகள் வாக்குப்படி பார்த்தால் அது புண்ணியப்பிறவி என்று கூறப்படும். மனிதனிடத்தில் இருக்கும் கெட்ட குணமாகிய ஆங்காரம் புழுவினிடத்தில் இல்லையெனத் தெரிகிறது. புண்ணியத்தின் பயன் என்னவோ? என்பில்லாத புழுவை வெயில் சுடுவதைப் போல அன்பில்லாத மனிதனை அறக்கடவுள் சுடும். இன்று உலகியலில் எலும்பில்லாத மனிதன் என்று கோழையை அழைக்கின்றனர்.

வீரம் இல்லாதவன் மட்டுமா கோழை? அன்பில்லாத மனிதனும் ஒரு கோழைதான்! வீரமாவது இன்னொரு மனிதனிடத்தில் காட்டப்பெறுவது! ஒரு மனிதன் அன்பினைக் காட்ட, அன்பினில் வளரத் தன் அடங்காப்பிடாரித் தனத்தோடு போராட வேண்டும்; தன்னலத்தை எதிர்த்துப்போராட வேண்டும்; ஆர்ப்பரிக்கும் ஆணவத்தை எதிர்த்து அடக்க வேண்டும்; செருக்களத்தில் போராடும் ஒருவர் இந்தக் களத்தில் தோற்றுவிடுவர். இந்தக் களத்தில் வென்று வாழ்வதே உண்மையான வீரம்! ஈரப்பசை இல்லாத நிலத்தை எளிதில் கண்டுணரலாம். அதுபோலவே அன்பில்லாத மனிதர் வாழும் நிலப் பகுதியையும் எளிதில் கண்டு கொள்ளலாம். ஆங்கு ஏழ்மையிருக்கும்; சண்டை சச்சரவுகள் இருக்கும்.

காவல் நிலையங்கள் ஓயாது தொழிற்படும். ஏன்? சில சமயங்களில் போட்டியில் கடவுளுக்கு விழாக்கூட எடுப்பர். ஆனால், அந்த விழாவில் கடவுள்தான் இருக்கமாட்டார்! அறக்கடவுள் சீரான துலாக்கோல் போன்றவர். இவர் அன்பில்லாதவரைச் சுட்டெரிப்பார் என்று வள்ளுவம் கூறுகிறது.

மனித உலகம் அமைதியாகக் கூடிக் கலந்து சிரித்து மகிழ்ந்துவாழ அன்பே தேவை. அன்புநெறியில் மனித உலகம் வாழும். அதனால் இந்த மண்ணகம் சொர்க்கம் ஆகும். யார்மாட்டும் அன்பு காட்டுவோம்! அன்பு காட்டும் உயர்ந்த சீலத்தில் பகைமையையும் மறப்போம்! வையகம் வாழ அன்பினைப் போற்றி வளர்ப்போம்.


அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.

அன்பின் வழியது உயிர்நிலை; அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

அறிவு

றிவு, வாழ்க்கைக்கு இன்றியமையாதது; மனித வாழ்க்கைக்குக் கடவுள் வழங்கிய பரிசுகளில் தலையாயது. ஆனால் இன்று எது அறிவு என்று இனம் தெரிந்து கொள்ளாமலேயே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. ஏன்? பலரிடத்தில் அறியாமையே அறிவுபோலக் காட்சியளிக்கிறது. அம்மம்ம! தம்மிடமுள்ள அறியாமையையே அறிவு என நம்பி நிலைதடுமாறி நிற்பவர்கள் இன்று ஆயிரம் ஆயிரம் பேர்! அவர்கள் அகந்தை கொண்டவர்களாக நடமாடுகிறார்கள். "ஒண்மை உடையம் யாம் என்னும் செருக்கு" என்று வள்ளுவர் கூறுகிறார்.

பன்றிகளைக் கட்டுத்தறியினின்றும் அவிழ்த்து விட்டால் சந்தனக் குவியல்பால் நாடா. மலக்குவியலை நோக்கியே ஓடும். அதுபோல் அறியாமையையே அறிவென நம்பித் திரிபவர்கள் எதிலும் அறிவை நாடமாட்டார்கள்; ஆபாசங்களையே தேடுவர்.

அதையே விரித்து விரித்து உரைப்பர். ஆனால், தமது அறியாமையை மறைக்க "அறிவு, அறிவு” என்று சொல்லிக் கொள்வர். இஃது அறிவு என்ற பெயரில் உலா வரும் ஒருவகை அறியாமை. வேறுசிலர், சில செய்திகளை அறிந்துகொண்டு அவற்றைக் கிளிப்பிள்ளை போலச் சொல்வர். சொல்லும் செய்திக்கும் அவர்களுக்கும் உணர்வு அடிப்படையில் யாதொரு விதமான தொடர்பும் இராது.

இதுவும் ஒருவகை அறியாமையே. வேறு சிலர், புத்தகங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பர். இவர்கள் ஒருவகையான அஜீரண வாதிகள். இவர்களுக்கு அறிவினுடைய வாசனையே இருப்பதில்லை. ஆதலால் உணர்வும் இருக்க வழியில்லை. கல்வி, அறிவு பெறுதற்குரிய வாயில்; ஆனால், கல்வியே அறிவல்ல. செய்தி அறிவு பெறுதற்குரிய வாயில்;

செய்தியே அறிவல்ல. கேள்வி அறிவு பெறுவதற்குரிய வாயில்; ஆனால், கேள்வியே அறிவல்ல. சிந்தனை அறிவு பெறுவதற்குரிய வாயில்; ஆனால், சிந்தனையே அறிவல்ல.

அறிவு என்பது நுட்பமானது, திட்பமானது. ஒருவர் அறிவுடையவர் அல்லது அறிவில்லாதவர் என்பதை அவருடைய பேச்சுக்களைக் கொண்டும் அறிய முடியாது. அவர் எழுதும் நூல்களைக் கொண்டும் அறிய முடியாது. அவருடைய வாழ்க்கையே அறிவையும் அறியாமையையும் காட்டும்.

அதாவது, யாதொரு வகையான துன்பத்தையும் தொடர்ந்து அனுபவிக்காதவர்கள் அறிவுடையோர்கள். அதுபோலவே பிறர்க்குத் துன்பம் செய்யாதவர்கள் அறிவுடையோர்கள். இதனை வள்ளுவம் அறிவு அற்றம், காக்கும் கருவி என்று எடுத்துக் கூறுகிறது. அதாவது, உயிர்களைத் துன்பத்தொடக்கினின்றும் பாதுகாப்பதே அறிவு. இத்தகைய அறிவைப் பெறுதற்குரிய வாயில்களில் முதன்மையானது சிந்தனை.

அறிவு, புறத்தில் இருந்து மட்டும் பெறக்கூடியதில்லை. ஆன்மாவின் ஆழமான அடிமனம் தொழிற்படுவதன் மூலம் சிந்தனை பிறக்கிறது. அச்சிந்தனை அகத்தே நிகழும் உணர்வுப் போராட்டங்களைத் திறனாய்வு செய்கிறது. சிந்தனையுடையவன் வாழ்க்கையில் நாள்தோறும் புதுமை காணலாம்."பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே!” என்ற சொற்றொடர் சிந்தனையின் செழுமையைக் காட்டவல்லது.

சிந்தனை இயல்பாகத் தொழிற்படாது போனால் சிந்தனையைத் துண்டித் தொழிற்படுத்த நல்ல நூல்களைக் கற்றலாகிய கல்வி துணைசெய்கிறது. பாத்திரத்தைத் துலக்கல் போல ஆன்மாவைத் துலக்குவது கல்வி கற்றல், மிக நுட்பமான ஒரு செயல்முறை, மனப்பாடம் செய்தல் நினைவுக்குப் பயன்படலாம். ஆனால், அது முழுமையான கல்வியாகாது. கற்கும்நூலை, அந்த நூலாசிரியன் உணர்வோடு ஒன்றிக் கற்க வேண்டும்.

எழுதப்பட்டவையெல்லாம் நூல்களாகா, அறியாமையின் மொத்த உருவம் எனத் திகழும் சிலர்கூட நூல்களை எழுதிவிடலாம். அவை, மனித உருவில் நடமாடும் பேய்களைப் போல நூல்வடிவில் உலவும் 'சைத்தான்கள்." இந்தச் சைத்தான்களைப் பிடித்துக் கொண்ட சிலர், ஆய்வுக்குரிய நூல் எது என்று முடிவு செய்யாமலே தவறான நூல்களை மையமாகக் கொண்டே பேய் பிடித்த மனிதர்களைப் போலப் பேசியும் எழுதியும் வருவர்.

இன்று பகுத்தறிவின் பேரால் பரப்பப்பெற்று வரும் நாத்திகம் இதுவே. கார்ல்மார்க்சும் நாத்திகரே லெனினும் நாத்திகரே! பழங்காலத்திலிருந்த புத்தர் கடவுள் நம்பிக்கை யில்லாதவராதலால் அவரும் நாத்திகரே! ஆனால், அவர்களுடைய நாத்திகம் அறிவின் பாற்பட்டது; திறனாய்வுக்குத் தகுதியுடையது.

அவர்களுடைய நாத்திகத்தால் மனித சமுதாயத்திற்குப் பெரிய கேடு வந்துவிடாது. காரணம் கடவுள் நம்பிக்கையின் பேரால் எத்தகைய நெறிமுறைகளை ஒழுக்கங்களைத் தோற்றுவிக்க முயற்சி செய்யப் பெற்றதோ அதுபோலவே மார்க்சீயம் லெனினியம் ஆகியவையும், ஒரு புதிய நெறி முறைக் கோட்பாடுகளை வகுத்துக் கொடுக்கின்றன. எப்படிக் கடவுள் நம்பிக்கையுடையவன் மனித உலகத்திற்குக் கேடு செய்யும் ஒழுக்கக்கேடு உள்ளவனாக இருக்க முடியாதோ அது போலவே உயர்ந்த கம்யூனிசக் கொள்கையுடையவனும் மனித உலகத்திற்குக் கேடு செய்யும் ஒழுக்கக் கேடுடையவனாக இருக்க முடியாது.

ஆனால், நம்முடைய நாட்டில் பரப்பப்படும் நாத்திகம் கொச்சைத் தனமானது, நல்லொழுக்கத்திற்கு மாறானது. இவர்களுக்குக் காதல், கற்பு என்பதெல்லாங் கூட வெறும் பேச்சுத்தான். இவர்கள் தேடித் தேடித் தம்முடைய பேச்சுக்கும் எழுத்துக்கும் மோப்பம் பிடிப்பதெல்லாம் பெரும்பாலும் ஒழுக்கங்கெட்டவர்கள் எழுதிய கதைகள் தாம்! தப்பித் தவறி ஒன்றிரண்டு நல்லநூல்கள் இவர்கள் கையில் அகப்பட்டுவிட்டால் கருவாட்டுக்காரி கதை போல் பழக்க வாசனையால் ஆபாசத்தையே காண்கிறார்கள்; அல்லது ஏற்றுகிறார்கள்.

இத்தகைய தவறான நூல்களைக் கற்பதைவிட கல்லாமை கோடி நன்மைதரும். காரணம் ஒரே வகையான அறியாமை மட்டுமே இருக்கும்! முறைபிறழ்ந்த உணர்வுகளும் மயக்கமுமே இருக்கும். நல்ல நூல்கள் கடவுளைப் போல் பாராட்டத்தக்கன. நல்ல நூல்கள் நல்ல நண்பனைப்போல நல்லாற்று நெறிப்படுத்துவன. நல்ல நூல்கள் அகனமர்ந்த காதலியைவிட இன்பமளிப்பன. நல்ல நூல்கள் உயிர்க்கு உற்ற மருந்து என்ற ஒரு மேலை நாட்டுப் பழமொழி உண்டு.

ரஸ்கின் என்னும் ஏடுதேடு காதலர், நூல்களைக் கற்கும் முயற்சியைவிட கற்பதற்குரிய நூல்களைத் தேர்ந் தெடுக்கும் முயற்சியில் அதிக கவனம் தேவை” என்று வலியுறுத்துகிறார். நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்க வேண்டும். நூலாசிரியன் உணர்வோடு ஒன்றித்துக் கற்க வேண்டும். நூலாசிரியன் காலத்திற்கும் கற்போன் காலத்திற்கும் உள்ள இடைவெளியை உய்த்தறிந்து காலத்தின் வளர்ச்சியினால் ஏற்பட்டுள்ள தேவையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

காலச் சுழலில் சிக்கிய நூலாசிரியன் கூறும் செய்தி துளில் உள்ள நல்லனவற்றையே தேர்ந்தெடுக்க வேண்டும். தேனெடுக்கும் தேனி, இதழ்களை எண்ணுவதில்லை; எடுப்பதுமில்லை. மலர்ச்செடியின் கொம்புகளை, காம்புகளை எடுப்பதில்லை. அது போலத்தான் நூலாசிரியன் படைப்புக்களில் நமக்குப் பயன்தரத்தக்க விழுமியவற்றையே ஏற்றுக் கொள்ள வேண்டும்; மற்றவற்றை மறந்து விடுதல் வேண்டும்.

அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

.


வாய்மை

வாழ்க்கையென்ற மாளிகைக்கு ஒழுக்கம் ஒளியூட்டுகிறது. அம்மாளிகைக்கு வளத்தை-வனப்பைச் சேர்ப்பது வாய்மையேயாம். நன்னெறியின் அடிப்படை வேறு. செயல்முறை வேறு. நன்னெறியின் அடிப்படை எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமை. அதுமட்டுமன்று, ஏற்புழி இன்பம் சேர்த்தல். இவ்வடிப்படை நியதிக்கு ஏற்றவாறு ஒழுகலாறுகள் அமையவேண்டும். ஒரோவழி ஒழுகலாறு அடிப்படை நன்னெறியோடு மாறுபடலாம். அங்ஙணம், மாறுபடும்பொழுது வழக்கத்தில் வந்த ஒழுகலாற்றுக்குப் பதில் நன்னெறியையே ஏற்றுக் கொள்ளவேண்டும். பகைவன் ஒருவன் துரத்திவர ஒருவன் அடைக்கலமாக வந்து சேர்ந் திருக்கிறான். தன்னிடம் அடைக்கலமாக வந்து ஒளிந்திருப்பவனை, பொய் சொல்லக்கூடாது என்ற நெறிவழி "இங்கே ஒளிந்திருக்கிறான்” என்று காட்டுவது நெறியாகாது. அது தோற்றத்தில் வாய்மைபோலத் தோன்றினாலும் வாய்மையன்று.

"வாய்மை எனப்படுவது யாதெனின், யாதொன்றும் தீமை இலாத சொலல்’ என்பார் வள்ளுவர். யாதொன்றும் தீமையிலாத சொலல் என்ற சொற்றொடர் எண்ணத்தக்கது. சொல்லினால் வரும் தீமைகள் அனைத்தையும் ஒருமுகப்படுத்திக் கூறுகின்றார். சொல் எளிதில் தோன்றுகிறது. ஆனால், நிறைந்த விளைவுகளை உடையது. ஆதலால், எளிதில் சொல்லாது எண்ணிச் சொல்லும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். நாம் சொல்லும் சொல்லால் யாருக்கும் எத்தகைய துன்பமும் வரக்கூடாது. அதுவே வாய்மை.

வாய்மை நிறைந்த சொற்களைச்சொல்லப் பழகுதலே ஒர் அரிய பயிற்சி. ஒருவரிடம் தகுதியில்லாதன கண்டால் அவரைத் தனியே அழைத்துத் தண்ணளி சேர்த்து இன்புறச் சொல்லி அத்தகுதியல்லாதன நீக்குதலே வாய்மை நெறி. மற்றோர் அறியத் தூற்றுவது வாய்மையாகாது. மற்றவருடைய புகழுக்கும் பெருமைக்கும்-உரிமைக்கும் உடைமைக்கும். உணர்வுக்கும் பாதுகாப்பாக இருக்கும் சொற்களே வாய்மையுடைய சொற்கள்.

வாய்மையால் வையகத்திலுள்ளோர் நெருங்கி வாழ்வர்; நேசம் காட்டுவர். அகத்துய்மை வாய்மையினா லேயே பெறமுடியும். அகத்துய்மையை எடுத்துக் காட்டுவதும் வாய்மையேயாம். வாய்மை வழியின்றி அகத்துாய்மை பெறுதற்கோர் வழியில்லை. பகைவரையும் வாழ்த்தி, மறத் தன்மையில் செய்து முடிப்பதே வாய்மையின் சீலம். பகைவரின் புகழுக்கு இகழ்ச்சி தரும் வகையில் பழி தூற்றுதல் வாய்மை யாகாது.

சொல்முறையில் பொய்போலத் தோன்றுவதும் கூட நன்மை விளைவிக்குமானால், அது வாய்மையேயாம். அன்பும் பாசமும் அகத்தினில் இல்லாது புறத்தே காட்டுதல் பொய். அது வாய்மையன்று. வாய்மை, வாய்வழி விளக்க

முறுவதன்று. நெஞ்சத்தில்-நெஞ்சத்தின் உணர்வில் விளக்கம் பெறுவது. அதுவே, புகழ் மிக்க வாய்மை. அதனாலேயே வாய்மையிற் சிறந்தது பிறிதொன்றுமில்லை என்றார் வள்ளுவர்.

வாய்மை, மனத்தில் தங்கவேண்டும். மனத்தில் வாய்மை கொண்டு வாழ்த்துவோர் வாழ்த்து, வையகத்தை நடத்தும். அச்சொற்கள். மந்திரத்திற் சிறந்த செம்பொருட் சொற்கள். இங்ங்னம், மனத்தில் வாய்மை தேக்கிப் பேசு வோர், தானம் செய்வாரினும், தவம் செய்வாரினும் உயர்ந்தோர். தானம் பிறர் நோக்கிச் செய்யப்பட்டாலும், அதன் நோக்கம், தான் சொர்க்கம் புகவேண்டும் என்பதே.

ஆக, தானத்தின் நோக்கம் தற்சார்புடையது. தவம், முற்றாகத் தற்சார்புடையது; அதனால்தான் போலும், சில ஆண்டுகள் தவம் பயிற்றியோர் உலகியலுக்கு வந்தபோது முரண்பாடுகளின் மொத்த உருவமாயினர். அவர்களால் மற்றவர்களுக்கு விளைந்தது தீங்கே! காரணம், தற்சார்பி லேயே சுழன்ற மனம், பிறர்நலம் எண்ண மறுக்கிறது. ஆனால், வாய்மை பிறருக்குத் தீங்கு செய்யாத நோக்கத்தில் முகிழ்க்கிறது. பிறரை இன்புறுத்தலில் வளர்கிறது. அவ்வழி தானும் வளர்கிறது. இந்த வாய்மை, தவத்தினும் சிறந்தது.

வாய்மை வழி வாழப்பயிலுவோமாக எவ்வுயிர்க்கும் தீமையிலா அன்பு காட்டுவோமாக! அதுவே, வாய்மையின் ஊற்று! வாய்மை வழியே வள்ளுவர் வழி.


மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.

ஆள்வினை

லகம், தொழில் வயப்பட்டது. இயற்கை உலகம் ஓயாது தொழிற்படுகிறது. தொழிற்பாட்டில்தான் ஐம்பூதங்கள் இயங்குகின்றன. வளி சுற்றுகிறது. வான் மழை பொழிகிறது; நலம் வளம் கொழிக்கிறது! உலகிற்கு உழைக்கும் உயிரின்றி இயக்கம் இல்லை. உயிரினங்களில் மூத்தவனாகிய மனிதன் மற்ற உயிரினங்களைவிட அதிகமாகவே உழைக்கக் கடமைப் பட்டிருக்கின்றான். ஆனால், நடைமுறையில் அப்படி இல்லை.

நாளைய உணவுக்குச் சேர்த்து வைக்கும் குணத்தி லிருந்து சொத்துடைமை உணர்வு பெருகி உடைமைவர்க்கம் ஏற்பட்டமையின் காரணமாக, உடைமையற்றோர் உழைத் தலும் உடைமையுடையோர் உடைமையற்றோர் உழைப்பி லிருந்து வாழ்தலுமாகிய சூழ்நிலை சமுதாய அமைப்பில் தோன்றிவிட்டது. அதற்குப் பிறகு உழைப்பது உயிரின் இயல்பு என்ற கொள்கை மாறி உழைக்காமலே உண்பது பெருமைக் குரியது என்ற கொள்கை தோன்றிற்று. உடன் உடைமை வர்க்கத்தோடு இயல்பாகத் தழுவிக் கொள்ளும் இயல்புடைய-பிழைப்பு வழிப்பட்ட மதப் புரோகிதர்கள், உழைக்காமல் உண்பது புண்ணியத்தின் பயன் என்றும், உழைப்பது பாபத்தின் பயன் என்றும் உடைமை வர்க்கத் திற்குச் சாதகமாகப் பிரசாரம் செய்தனர்.

அது மட்டுமா? உழைப்பின் பயனை உழைப்பவன் அடைய முடியாதபொழுது அல்லது அடைவதற்குத் தடை யாக உடைமை வர்க்கம் நின்றபொழுது இதே புரோகித வர்க்கம் "அவ்வளவுதான் கொடுத்து வைத்தது; தெய்வம் அனுமதித்த கூலி கிடைத்திருக்கிறது” என்றெல்லாம் பிரச்சாரம் செய்து உபதேசித்து செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆகவும் ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகவும் செய்தனர். ஆனால், உண்மையான சமயம் இதை ஏற்றுக் கொள்வதில்லை.

உண்மையான மெய்ந்நெறி காட்டிய திருவள்ளுவர் ஆள்வினையை உயிரின் இயல்பான உடைமை என்கிறார். ஆள்வினையுடையாருக்கு அருமையுடையதில்லை. தெய்வம் என்பது மனிதர்களை அவரவர் வினைவழி, வழி நடத்துதல் என்பதேயாகும். ஆனால், மனிதனின் வாழ்க்கையில் தெய்வத்திற்கு எதேச்சாதிகாரமான ஆளுமை இல்லை. அஃதொரு நியதி. நேற்றைய தீவினையை இன்று அறிந்து நினைந்து வருந்தி மாற்றிக் கொண்டு நல்வினை செய்யப் பெறுமானால் தீவினையை வெற்றி காணலாம்.

அதற்குத் தேவை முயற்சியே! நேற்றைய தவற்றை இன்றைய முயற்சியால் திருத்திக் கொள்ளத்தானே வாழ்க்கை! மண் திருத்தப்பெற்று சோலைகளாவதைக் காண்கின்றோம். மனம் திருந்தினால் மாண்புகள் சேராவோ? உடலின் பளபளப்பைவிட உழைப்பின் வடுக்கள் தேவதைகள் கண்டு மகிழும் காணிக்கைகளாகும்.

உழைப்புக்குணம் என்பது நல்ல-வளர்ந்தஆரோக்கியமான ஓர் உயிரின் குணம்ாகும். அதனாலன்றோ பாரதி, "கைவருந்தி உழைப்பவர் தெய்வம்” என்றான். பொதுமையுலகு கண்ட மாமுனிவர் மார்க்ஸ் "உழைக்காத வனுக்கு உண்ணும் உரிமையில்லை" என்று கூறினார். உழைப்பு என்ற அச்சிலேயே உலகம் இயங்குகிறது.

மனிதன் அறிந்து அனுபவிக்கும் அனைத்துப் பொருள்களும் மனித உலகத்தைச் சார்ந்த உழைப்பு வர்க்கத்தின் உழைப்பின் பெருமையைப் பண்பாடிக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கை வளர, இன்பமுற வாழ அறிவறிந்த ஆள்வினை தேவை. இதுவே வள்ளுவர் ஆணை.

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா(து) உஞற்று பவர்.

சிந்தனை

சிந்தனை, மனத்தின் தொழில். மனம் ஒன்றைப் பற்றி நின்று அதனையே திரும்ப எண்ணுதல் சிந்தனையாகும். அதனையே என்றால் ஒரே மாதிரியல்ல. ஏன்? எதனால்? எப்படி? என்ற வினாக்களை எழுப்பி அந்த வினாக்களுக்கு விடை காண்பதே சிந்தனைப் பயிற்சி. இன்று சிந்தனை என்பது எளிய சொல். சிந்தனை என்ற சொல்லுக்கு உரிய முழுநிறைப் பொருள் பலருக்குப் புரிவதில்லை.

வரலாற்றுச் சுவட்டில் கலந்து வந்துள்ள தீமைகளைத் தொகுத்துக் கூறுவதைக் கூடச் சிலர் சிந்தனை என்கின்றனர். சிந்தனை என்பது குறையும் நிறையும் அறிந்து அளப்பது: குறையை மறப்பது; நிறையைப் போற்றுவது. நிறையைப் போற்றத் தெரியாத இடத்தில் குறை நீங்காது. அதுபோல் குறை மறக்கப் பெறாத இடத்தில் நிறை தோன்றாது. உலகியல் குறையும் நிறையும் கலந்ததே. குறையை நிறைவாக்குவதே சிந்தனை.

சிந்தனை என்பது வைரத்துக்குள் ஒளிந்து கிடக்கும் ஒளியைக் கடைந்து வெளிக்கொணர்வதைப் போல உயிரிடத்தில் ஒளிந்து கிடக்கும் அறிவாற்றல் திறனை வெளிப்படுத்துவது. இதற்குச் சுயசிந்தனை என்று பெயர். முன்னேயே தோன்றியுள்ள ஒரு கருத்தைத் தொடர்ந்து சிந்தனை தோன்றி அக்கருத்திற்குரிய முழுநிறைப் பொருளை வெளிப்படுத்துவது சுயசிந்தனை.

சிந்தனை வளர்ச்சியின்பாற்பட்டதாக, நிறையினைச் சார்ந்ததாக வளரும்பொழுது, மனித உலகத்திற்குப் புதிய செய்திகள் கிடைக்கின்றன. மனித சமுதாயம் அறிவில், கருத்தில், உணர்வில் முதுமையடைந்து எய்த்துப் போகாமல் ஒயாது உயிர்ப்பளித்துக் கொண்டிருப்பது சிந்தனையேயாகும். ஊற்றுவளம் நின்றாலும் ஆற்றின் நீரோட்டம் தடைப்பட்

டாலும் குட்டைகள் தோன்றும், அதுபோல், சிந்தனையற்ற சமுதாயம் தேக்கநிலை அடைந்துவிடும்.

சங்ககாலத்திலும், காப்பியக் காலத்திலும் தமிழ்ச் சமுதாயத்தில் சிந்தனைத் துடிப்பு இருந்திருக்கிறது. தேவாரக் காலத்திலும் கூடச் சிந்தனைத் துடிப்பு இருந்திருக்கிறது. ஆனால், அச்சிந்தனைக்கு எதிர் சக்திகளாக இருந்தவர்கள் அதாவது, சிந்தனை செய்ய மறுத்தவர்கள் அந்தச் சிந்தனையின் ஆற்றலைச் சிதைத்து விட்டனர். வெளிப்படையாகச் சிதைத்தால் மக்கள் எதிர்ப்பு ஏற்படும் என்று அஞ்சி அச்சிந்தனைக்கு செயலுருவம் கொடுப்பதற்குப் பதிலாக அப்பட்டமான வழிபாட்டுருவம் கொடுத்து விட்டனர்.

ஆக, சிந்தனை செய்து பழகுக. கண்ணாற் காணப்படுகின்ற காட்சியை ஒட்டிச் சிந்தனையைத் தொழிற்படுத்துக படிக்கும் நூற் கருத்துக்களை விரிவாக்கும் வகையில் சிந்தனையை இயக்குக. செவிகளால் கேட்கும் செய்திகளை, உணர்ச்சி கலக்காமல் முதலில் சிந்தனைப் பட்டறைக்கு அனுப்பித் துய்மை செய்து அறிவாக்குக. மனிதனுக்குள்ள ஒரே ஒரு சிறந்த இயல்பு சிந்தனைதான். சிந்திக்கத் தெரியாதவன் முழு மனிதனாதல் அரிது.

ஆகவே, சிந்தனையால், சொல்லால், செயலால் எல்லாம் அறங்கள் செய்யுங்கள்.

குறையை அகற்றி நிறை வாழ்வு பெற நாளும் தூய சிந்தனை செய்யுங்கள். தூய சிந்தனையை ஆக்கமாக வளர்த்துக் கொள்வதும், வாழ, வளர வழிகாட்டுவதும் நல்லோர்களின் பண்பு ஆகும்.

'சிந்தனை செய் மனமே! என்னும் இனிய பாடலும் நினைவுகூரத் தக்கது.

இன்பமே எந்நாளும், துன்பமில்லை.

மக்கள் அனைவரும் தூய சிந்தனை வளர்ச்சியும் செயலாற்றும் திறனும் கொண்டவர்களாகச் சிறப்புற வாழ வேண்டும்.

மனந்துரய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்துரய்மை துரவா வரும்.

அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொல னாகப் பெறின்.

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.


மனம்

நினைப்பு என்ற தொழில் இயல்பாக இருவகையானது. ஆனால் உலகியலில் ஒன்றென்றே கூறப்படுகிறது. அதாவது, ஏற்கெனவே தெரிந்த ஒன்றை மறந்து விட்டு, பின் நினைவு கூர்தலையே பெரும்பாலும் நினைவு என்று கூறுவது மரபாக இருந்து வருகிறது. நம்முடைய இலக்கிய உலகத்தின் கருத்தும் மிகுதியும் அதுவே. திருக்குறள் காமத்துப் பாலில்,

உள்ளினே னென்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்

(1316)

என்று ஒரு குறள் உண்டு. தலைவன், தலைவியைப் பிரிந்திருந்த காலத்தில் நினைத்திருந்ததாகத் தலைவியிடம் கூறுகிறான். தலைவி, நினைத்து நின்ற நேரம் ஒழிந்த எஞ்சிய நேரத்தில் மறந்தீரே என்று கூறி அழுகிறாள். இதன் பொருள் என்ன? மறதியைத் தொடர்ந்து நினைப்பு வருகிறது. "பால் நினைந்துட்டும் தாயினும்” என்ற மணி மொழிக்கும் இதுவே கருத்து.

ஆனாலும் மனத்தில் மாறாது நிற்கும் இயல்புக்கு நினைவு என்று பொருள் கோடல் தவறன்று. பழகிப் பிரிந்த இருவர் சந்திக்க நேரிடுகின்ற பொழுது "நினைவிருக்கிறதா?” என்று கேட்பதை நாம் அன்றாட வாழ்வில் காண்கின்றோம். நினைவைக் கொல்லும் மறதி, வாழ்க்கையை அழிக்கும் பெரும்பகையாகும். மறதித் தன்மையுடையவர்கள் எநத ஒரு காரியத்தையும் முறையாகச் செய்யமாட்டார்கள். மறதி, காரியங்களைக் கெடுக்கும்; நண்பர்களை இழக்கச் செய்யும். பொருளை இழக்கச் செய்யும். இத்தகைய கொடிய மறதியை அழித்து வெற்றி வாகை சூடுவது நினைவேயாகும். மறதியைப் புறங்கான, நினைவாற்றலை யடைந்து மகிழ என்ன செய்ய வேண்டும்? அதற்குரிய முயற்சி அரிதானது அல்ல; எளிதே!

தான் எண்ணிச் செய்யும் செயல்களில் ஒருமைப் பாட்டுணர்வுடன் ஈடுபட வேண்டும். அடுத்து, எதையும் எவ்வளவு இடர்ப் பாடுகள் இருந்தாலும் குறித்த நேரத்தில் குறித்த முறையில் செய்ய வேண்டும். காலம் தவறிச் செய்யும் கடமைகளும், முறை தவறிச் செய்யும் கடமைகளும், ஆர்வ எழுச்சியுடன்-இலட்சியத் துடிப்புடன் செய்யப் பெறாத கடமைகளும் மறதிக்குத் துணை செய்யும் களன்கள். இதுவரை, தெரிந்த ஒன்றை நினைவிற் கொள்ளவும் அல்லது மறதி வாராதிருக்கவும், வழிவகை கண்டோம்.

மனத்தின் அடுத்த மிக நுட்பமான தொழிற்பாடு எண்ணுதல் என்பதாகும். எண்ணுதல் நினைவிற்கு முந்திய தொழிற்பாடாகும். சிந்தனை, தொடர்ந்துவரும் தொழிற் பாடாகும். எண்ணுதல் என்பது ஒரு குறிப்பிட்ட காரியத்தை அடைய வேண்டும் அல்லது செய்யவேண்டும் என்று. அலை வின்றி எண்ணுவதாகும். இன்று நம்மில் பலர், "நினைத்துக் கொண்டுதான் இருந்தேன். தவறி விட்டது; எப்படியோ தவறி விட்டது" என்று பல தடவை சொல்லி அழுகின்றனர்.

எப்படித் தவறிற்று என்பது கேட்டால் மீண்டும் விடை கிடைக்கும். "எப்படியோ தவறி விட்டது" என்பர். ஒரு சிலர், வேலை மிகுதியால் தவறி விட்டது என்பர். இது தவறு. வேலை மிகுதியால் காரியங்கள் தவற முடியாது. வேண்டு மென்றால் ஒத்திப் போடலாம்.

இங்கேயும் ஒர் ஆபத்து உண்டு. ஒத்திப் போடுதல் என்பது வேலை மிகுதியினாலும் உண்டு. சோம்பேறித் தனத்தினாலும் உண்டு. வேலை மிகுதியினால் ஒத்திப் போடுபவர் எண்ணிக்கை மிகக் குறைவு. காரியத்தின் பாலுள்ள அலட்சியப் பார்வையினாலும் சோம்பேறித் தனத்தினாலுமே பலர் ஒத்திப் போடுகின்றனர்.

எண்ணுதல் என்பது வாழ்க்கையின் வெற்றி அனைத்திற்கும், அடிக்கல் போல் அமைவதாகும். எண்ணத்தில் தெளிவும் உறுதியும் இருக்குமானால் காரியங்கள் தவறா. இன்று பலர் அழுது புலம்புகின்றனர், ஏன்? நினைத்தபடி காரியங்கள் நடக்கவில்லையே என்று எண்ணத் தெரியாதவர்கள்-அதேபொழுது பழிதூற்றும் இயல்பினர் தங்களுடைய காரியக்கேட்டுக்கு அவர் காரணம், இவர் காரணம் என்று பிறர்மேல் பழிதூக்கிப் போடுவர். ஆனால் வள்ளுவர், ஒருவரின் வெற்றிக்கும் தோல்விக்கும் அவரவர் காரணமே தவிர மற்றவர்கள் அமைய முடியாது என்கின்றார். எண்ணியதை யாதொரு குறையுமின்றி எண்ணியபடியே அடையலாம் என்பது வள்ளுவர் கருத்து.

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.

எண்ணிய எண்ணியாங்கு பெற வேண்டுமென்றால் எண்ணத்தில் திண்மை யிருக்கவேண்டும். இன்று யாருக்குத் தான் எண்ணம் திண்ணியதாக இருக்கிறது. இன்று பலருக்கு நொய்ந்து கிடக்கிறது; சபலங்களால் சலித்துக் கிடக்கிறது;

தன்னயத்தால் தளர்ந்திருக்கிறது; சுகவுணர்வில் சோர்ந்து கிடக்கிறது. ஐயோ, பாவம்!

வயிறு பசிக்காது போனால் அவர்களுக்கு உணவைப் பற்றிக் கூட நாட்டமிருக்காது. இத்தகையோர் வாழ்கிறார்கள், அல்லர்; பிழைப்பை நடத்துகிறார்கள்; மற்றவர்க்கும் சுமை யாக இருக்கின்றனர். ஏன்? எண்ணத்தெரியாத காரணமே! ஏன் எண்ணத்தெரியவில்லை? வாழ்க்கைக்கு நோக்கம் கற்பித்துக் கொள்ளவில்லை. மனத்தை மட்டும் கடமைகளைச் சுற்றி எண்ணப் பழக்கிவிட்டால் இந்த உலகத்தில் நடவாதது எது?

மனம், மிக்க நுட்பமான ஒர் உறுப்பு, அது நுட்பத்தினும் திட்பமுடையது; காலத்தை-எல்லையைக் கடந்து செல்லும் தன்மையது. உலகத்தில் விரைந்து செல்லும் தன்மையன இரண்டு. ஒன்று மனம்; மற்றொன்று காற்று. இவ்விரண்டும் இன்றி வாழவே முடியாது. இவ்விரண்டும் வாழ்விக்கும் தகுதியும், கெடுக்கும் தகுதியும் உடையன.

மனம், பல்வேறு தொழில்களையுடையது. குறிப்பாக நினைப்பு என்பது மனத்தினுடைய மிகச் சிறந்த தொழில். மனித வாழ்க்கையில் நினைப்பு, பயனுடைய அகத்தொண்டு. நினைத்தல்-தொழில் ஒருவகையானது அல்ல. பல பொருள் தன்மையது. அறிவுப் பெருக்கத்திற்கு, கற்றலும் கேட்டலும் துணை செய்தலைப்போல, நினைத்தலும் துணை செய்யும். அதுமட்டுமல்ல. அறிவு வளர்ச்சிக்குக் கற்றல்-கேட்டலை விட நினைத்தல் மிக்க பயனைத் தருகிறது.

கற்றல்-கேட்டலின் மூலம் பெறும் அறிவு, என்ன இருந்தாலும் கடன் வாங்கிய பிழைப்பே நினைத்தலின் மூலம் பெறும் அறிவே, உண்மை அறிவு. முன் இரண்டின் வழிப்பட்ட அறிவு, முற்றிலும் முழுமையாகி விடுவதில்லை. நினைத்தலின் மூலம் பெறும் அறிவே முழுமையான

அறிவாகும். கற்றல் கேட்டலின் மூலம் பெற்ற அறிவுக்கு மறதி நேரலாம். நினைப்பில் தோன்றிய அறிவுக்கு மறதியில்லை.

அதுமட்டுமா? கற்றல்-கேட்டலின் வழிப் பெற்ற, அறிவையும் நினைவு உயிர்க்கு நிலையானதாகச் செய்யும். உற்றுழி உதவச் செய்வதும் இந்த நினைவேயாம். சிலர் நிறையப் படித்திருப்பார்கள். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரெனத் தடவுவார்கள்_தட்டுத் தடுமாறுவார்கள்; தலையைச் சொறிவார்கள்; உதட்டைக் கடிப்பார்கள்; கையை உதறுவார்கள். தம்மில் எளியார் யாராவது பக்கத்திலிருந்தால் எரிந்து விழுவார்கள். இவ்வளவு அலங்கோலமும் எப்பொழுது? நினைவு கைகொடுக்காத பொழுது!

மேலும் நினைவுப் பண்பு நன்றியோடு தொடர்பு உடையது. அது போலவே சில சமயங்களில் தீமையோடும் தொடர்புடையது. ஏன்? தெளிவாகச் சொன்னால் நினைவு நல்ல வழியில் இயங்கும் பொழுது, நன்றி, பண்பாடு, சான்றாண்மை என்ற நன்னெறிகளில் படர்கிறது. அதுவே நெறியில்லா நெறியில் படருமானால் வன்கண்மை, கயமை ஆகிய புன்னெறிகளில் படர்ந்து தன்னையுடைய மனிதனை இம்மையோடன்றி, எழுமையும் நின்று அழிக்கின்றது.

மனம், வாழ்க்கையின் மையம். ஆம்! உடல் பெரியது தான்; கண்ணுக்குத் தெரியக்கூடியதுதான்; கால்கள் நடக் கின்றன; கைகள் செய்கின்றன; கண்கள் பார்க்கின்றன; வாய் பேசுகிறது. ஆயினும், சுதந்திரமாகவா? அவ்வவற்றின் விருப்பத்தின் அடிப்படையிலா? இல்லை, இல்லை! உள் நின்று இயக்குவது மனமே!

மனம் உயிரின் மிகச் சிறந்த கருவி. ஆனாலும், உயிர், மனத்தை எடுத்துப் பயன்படுத்துவதைப் பொறுத்திருக்கிறது. மனம் உயிரின் நல்வளர்ச்சிக்கும் துணை செய்யலாம்; வீழ்ச்சிக்கும் துணை செய்யலாம்; 'மனம் போல வாழ்வு' என்பது அனுபவ வாக்கு. ஏன்? மனம் உடையவனே மனிதன். மனிதன் என்ற சொல்லே மனத்தின் அடிப்படையில் வந்தது என்று அறிஞர் கூறுவர்.

ஒரு மனிதனின் மனம் எப்படி இருக்கிறதோ, அது போல அவன் வாழ்வான். மனத்தில் கறை யிருந்தால் வாழ்க்கையில் கறை இருக்கும்; மனத்தில் கள்ளம் இருந்தால் வாழ்க்கையில் கள்ளம் இருக்கும். மனத்தில் கரவு இருந்தால் வாழ்க்கையில் சூது இருக்கும். மனத்தில் காழ்ப்பு இருந்தால் வாழ்க்கையில் கலகம் இருக்கும்: மனத்தில் ஆத்திரம் இருந்தால் வாழ்க்கையில் அடி, உதை இருக்கும். இதுவே இயற்கையின் நியதி.

ஒரோவழி, மனமும் செயலும் மாறுபடுவதும் உண்டு. அந்த மாறுபாடு தற்காலிகமானதே தவிர நிலையானதன்று. அது நடிப்பு, விளைவு, செயலின் அடிப்படையில் அமையாது, மனத்தின் அடிப்படையிலேயே அமையும். மனம் அன்பினைப் பற்றுமானால் வாழ்க்கை அமைதியைத் தழுவும்! மனம் அமைதியைத் தழுவுமானால் வாழ்க்கை அரவணைப்பில் நிகழும். வாழ்க்கை வளர்வது என்பது ஒருநாளில் திடீரென நிகழக் கூடியதல்ல.

வாழ்க்கையென்ற மாளிகையைப் பல நாள் முயன்று கட்ட வேண்டும். நாள்தோறும் வாழ்க்கையைக் கூட்ட வேண்டும். கூட்ட வேண்டுமென்று குறிப்பிடுவது வசதியை அல்ல. நாள்தோறும் வீட்டைக் கூட்டுவது பெருக்குவது) என்ற வழக்கு இருக்கிறது. கூட்டுவதன்மூலம் என்ன நிகழ்கிறது? தூய்மையற்ற குப்பை அகற்றப் படுகிறது; தூய்மை சேர்க்கப்படுகிறது; ஒளி ஊட்டப்படுகிறது; இன்ப நலம் இணைக்கப்படுகிறது.

அதுபோலவே வாழ்க்கையில் நாள்தோறும் மனத்தைக் கூட்டுதல் நடைபெற வேண்டும். நேற்றைய வாழ்க்கையின் நடைமுறையில் மனத்தில் சேர்ந்த துய்மைக் கேடு

அகற்றப்பட வேண்டும். நேற்றுக் கூட்டப்பெற்ற வீட்டில் எப்படி இன்று குப்பை வந்து சேர்ந்ததோ, அதுபோல நம்முடைய வாழ்க்கையிலும் மனத்தில் தீயன சேர்தல் இயல்பு. அவற்றை, நாள் தோறும் அகற்றி நல்லன சேர்த்துக் கொள்ளுதல் நல்ல வண்ணம் வாழுதற்கு அடிப்படையாகும்.

வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய அறங்கள் பலப்பல. அவை ஒவ்வொன்றையும் தனித்தனியே முயன்று அடைதல் எளிதன்று. ஆனால், மனத்துய்மை என்ற பேரறத்தை நாம் அடைந்து விட்டால் அவ்வழி மற்ற அறங்களும் குண நலன்களும் வாழ்க்கையில் எளிதில் வந்து அமையும்.

ஒரு சின்னஞ்சிறிய புகைவண்டி நிலையத்திற்குச் சென்றால், அங்கிருந்து நாட்டின் பல்வேறு ஊர்களுக்கும் நேரிடையாகப் பயணத்தைத் தொடங்க முடியாது. ஆனால், ஒரு புகைவண்டிச் சந்திப்பு நிலையத்துக்குச் சென்றால் அங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஊர்களுக்கும் பயணம் மேற்கொள்ள இயலும்.

நல்லறங்களின் சந்திப்பு எது? மனத்துரய்மை, மனத்தூய்மை என்ற ஒரு சிறந்த பண்பாட்டின் வழியாகப் பல்வேறு பண்பு நலன்களை நாம் பெற முடியும்.

திருவள்ளுவர், மனத்துாய்மை என்ற கொள்கையில் ஆழமான நம்பிக்கையுடையவர். மனத்துாய்மையில்லாது செய்யப் பெறுகிற அறங்கள் அறங்களல்ல. அவை ஆரவாரத் தன்மையான-வெளிப்பகட்டு என்று திருவள்ளுவர் மறுக்கின்றார்.

சிலர், வீட்டிற்கு வெளியே வெள்ளையடிப்பர். அங்ங்னம் செய்வது வாழ்வதற்காக அல்ல. மற்றவர்கள் மெச்ச வேண்டும் என்பதற்காக! ஆனால், அந்த வீட்டிற்குள்ளே சுவர்களில் ஏராளமான சந்து பொந்துகளும் அவற்றுக்குள்ளே உயிர் குடிக்கும் நச்சுப் பூச்சிகளும் இருக்கும்.

அதுபோல, இன்று பலர் மனத்தில் கறுப்பு வைத்து வேளிவேடம் புனைந்து நாடகமாடுகின்றனர்; நல்லனபோலக் காட்சியளிக்கும் தீயனவற்றைச் செய்கின்றனர். இவையெல்லாம் எப்படி அறமாக முடியும்? இதனைத் திருவள்ளுவர்,

மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற

என்றார்.

மனிதனுக்கு இயற்கை துணை செய்வதைப் போல வேறு எதுவும் துணை செய்வதில்லை. மனிதன் இயல்பில் குறையுடையவனாக இருக்கிறான். ஆனால், அவனுடைய குறையை நிறை செய்யப் பலப்பல வழிகளை இயற்கை அளித்திருக்கிறது. ஐம்பொறிகள் குறையை நிறைவு செய்யும் வாயில்களேயாம்.

ஆனால், பலர் அறியாமையின் காரணமாக, பொறிகளைக் குற்றவழிப்படுத்துகின்றனர்; நிறை அழிகின்றனர். ஐம்பொறிகளும் அறிவின் வாயில்கள். ஒரோ வழி, தொடர்ந்து வாழும் உயிர்க்கு ஏற்படும் களைப்பை மாற்றுவதற்காகக் களிப்பினை நுகரும் வாயில்களாகவும் பொறிகளை இயற்கை அமைத்துத் தந்தது. அது மட்டுமன்று. பொறிகளால் மட்டுமே துய்க்கப்படும் இன்பம் அல்லது களிப்பு செழுமையானது அல்ல.

பொறிகள் வாயிலாகப் புலன்களுக்குச் சென்று துய்க்கும் உணர்வினைத் தரப்படுத்தித் துய்க்கும் பொழுது மகிழ்வு, இன்ப மகிழ்வு ஆகிறது. அத்தகைய மகிழ்வு உயிர்க்கு ஆக்கம் சேர்க்கின்றது. இன்ப அன்பிற்கு வாயிலாக அமைகின்றது. 'ஐம்புலன்கள் ஆர' என்பார் மாணிக்க வாசகர். இத்தகைய துய்ப்பில் உடல் வலிவு பெறுகிறது; வனப்புப் பெறுகிறது. உயிர்க்குரிய குறையை நிறைவு செய்யும் வாயிலில் முதன்மையானது கல்வி, உடலுறுதிக்கு உணவும், உயிர் உறுதிக்குக் கல்வியும் இன்றியமையாதன.

ரோமாபுரிப் பேரரசன் ஒருவன் தன்னுடைய நூலகத் தின் வாயிலில் "உயிர் மருந்து நிலையம்” என்று பெயர் எழுதி அமைத்தனன். உடலுக்குப் பசி ஒருவகைப் பிணியேயாம். தமிழ் இலக்கிய உலகம் "பசிப்பிணி" என்றே கூறும்.

உடற்பசிக்கு உணவளிப்பவனைப் "பசிப்பிணி மருத்து வன்” என்று புறநானூறு வாழ்த்தும். அதுபோல வாழும் உயிர்க்கு அறிவுப்பசி இருத்தல் வேண்டும். இந்தப் பசிக்குரிய கல்வியை வழங்குபவனை ஆருயிர் மருத்துவன் எனல் மிகையன்று.

திருவள்ளுவர் உயிர்க்கு இன்றியமையாத, கற்றல் கடமையினை உடன்பாட்டிலும் உணர்த்துகின்றார்; எதிர் மறையிலும் எடுத்துக் காட்டுகின்றார். மனிதனுக்குக் கண்ணிற் சிறந்த உறுப்பில்லை. மனிதன் கண்ணினால் பெறும் பயன் ஒன்றல்ல; பலப்பல. மனிதனுடைய அறிவு வாயில்களில் கண்களே தலையாயவை.

கண்கள் தாம் காணும் காட்சியின் மூலம் உயிர்க்கு அறிவைச் சேர்க்கிறது. நூல்களைக் கற்கப் பயன்படும் ஒளி தந்து உயிர்க்கு அறிவைச் சேர்த்துக் கொள்ளத் துணை செய்கிறது. சிறந்த காட்சிகளைக் கண்டு களித்து மகிழத் துணை செய்கிறது. ஏன்? ஒரு மனிதனை இன்னொரு மனிதனோடு அல்லது பால் வேறுபட்ட பிறிதோருயிரோடு அன்பு வழியில் இணைத்து இன்பம் சேர்ப்பதில் கண்தானே முக்கியமான பங்கு வகிக்கிறது!

இத்தகைய அருமையான கண்கள் சிலரிடத்துப் புண்களாக விளங்கிவிடுவதைத் திருவள்ளுவர், இடித்துக் காட்டத் தவறவில்லை. யாருக்கு எப்பொழுது கண்கள் புண்களாகின்றன: கல்லாதான் முகத்தின் கண்கள் புண்கள் ஒன்கிறார். ஏன்?

கண் வழியாக உயிர் எத்தகைய பேறுகளைப் பெற வேண்டுமோ அவைகளைப் பெறாத, அதற்கு மாறான கல்லாதான்கண்கள் துன்பங்களைச் சேர்ப்பதால் புண் என்றார். இது திருவள்ளுவர் கல்வியின் அவசியத்தை எதிர்மறையால் உணர்த்தியதாகும்.

அடுத்து, உடன்பாட்டில் உணர்த்தும் குறள் ஒன்றும் கவனத்திற்குரியது. கற்க என்று ஐயத்திற்கிடமின்றி ஆணையிடுகின்றார். ஆம்! உண்ணும் பழக்கத்தை மனிதன் மேற்கொண்டிருப்பதைப் போல நாள்தோறும் நல்ல நூல்களைக் கற்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

எத்தகைய நூல்களைக் கற்பது: கற்கும் நூல்கள் இரு வகையின. ஒன்று கற்கும் பயிற்சியைப் பெறக் கற்கும் புத்தகங்கள். இவைகளே பள்ளிகளின்-கல்லூரிகளின் பாடப் புத்தகங்கள்! அடுத்து, உயிர்க்கு நலம் சேர்க்கும் நூல்களைக் கற்றல் பிறிதொரு வகை.

இத்தகைய நூல்கள் மனிதனுக்கு மனிதன் மாறுபடலாம். இயல்பில் மனிதர்க்குச் சில குறைகள் உண்டு. இக்குறைகள் மனிதர்க்கு மனிதர் மாறுபடுவது இயற்கை ஆதலால், ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய உயிர்ச் சார்பான உள்ளத்தின் குற்றங்குறை யறிந்து அக்குற்றங் குறைகளை நிறைவு ஆக்குதற்குரிய நூல்களாகத் தேர்ந்தெடுத்துக் கற்றல் வேண்டும்.

தன்னிடம் உள்ள குற்றங்கள் நீங்குகிறவரையில் கற்க வேண்டும். குற்றங்களினின்று நீங்கி நிறை நல்வாழ்க்கைக்கு வந்த பிறகு, மீண்டும் பழக்க வாசனையால் பழைய வாழ்க்கைக்குப் போகாமல் நிறை நல்வாழ்க்கையில் நிலைத்து நிற்க வேண்டும். இதனைத் திருவள்ளுவர்,

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

என்று மனித குலம் வாழ்க்கை மாளிகையைக் கட்டுதற்குரிய வழியைக் காட்டுகின்றார்.

தொட்டனைத் துரறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் துரறும் அறிவு.

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

கல்விக்குரிய நூல்கள்

வாழ்க்கைக்கு உண்ணுதல் அளவுக்குக் கற்றல் இன்றியமையாத கடமை. இல்லை, உண்ணலினும் சிறந்தது கற்றல். உண்ணல் உடலை வளர்க்கிறது; உயிர் வாழ்க்கைக்குத் துணை செய்கிறது. கற்றல் உயிர்க்கு ஊட்டம் தருகிறது; உடல் நலம் பேணுவதற்கும் துணை செய்கிறது. உணவை ஒரோவழி மருந்தென்பாரும் உண்டு.

ஆனால், கல்வி, உயிரின் அறியாமையை நீக்கும் அருமருந்து. சிறந்த நூலகள் தொகுக்கப் பெற்ற நூலகத்திற்கு 'உயிர் மருந்தகம்' என்று ஆன்றோர் வழக்கு உண்டு. ஆதலால், உயிர்க்குறை நீங்கி நிறைநலம் பெற்று வாழ விரும்புவோர் நல்ல நூல்களைத் தேடிக் கற்க வேண்டும்.

நல்ல நூல்கள்...! என்ன இலக்கணம். நத்தையிலிருந்து முத்து பிறக்கலாம். சேற்றில் செந்தாமரை தோன்றலாம். ஆனால், நல்ல நூல்கள் நல்ல மனிதர்களிடத்தில்தான் தோன்றும்.

சிந்தனையில், சீலத்தில் சிறந்தவர்களாலேதான் நல்ல நூல்களைத் தோற்றுவிக்க முடியும். நல்ல நூலாசிரியன் புலமையுடையவன் மட்டுமல்ல; எழுதத் தெரிந்தவன் மட்டுமல்ல. புலன்களில் அழுக்கற்றவனாக இருக்க வேண்டும். இன்று பொறிகளிலேயே அழுக்கைச் சுமந்து திரிபவர் பலர், இலக்கியக் கர்த்தாக்கள் ஆகிவிட்டனர். இந்தக் கொடுமை அவ்வளவு பெரிதல்ல. பொறிகளில் அழுக்கு வெளிப்படையானது.

ஆனால், பொறிகளில் தூய்மை காட்டிப் புலன்களின் அழுக்கைச் சுமந்து நடமாடுவோரை நல்ல இலக்கியப் படைப்பாளர்கள் என்று கூறுவது இழுக்கேயாம். ஆதலால், படித்தற்குரிய நூல்களைத் தேர்ந்தெடுக்குமுன் அந்த நூலின் படைப்பாளனைப் பற்றியும் அறிந்துகொள்வது நல்லது. இது பொதுவிதி.

ஆனால், நாற்றமுள்ள நத்தையிலிருந்து முத்துப் பிறக்க வில்லையா? தமது நிலையை இயல்பில் உணர்ந்து கழிவிரக்கம் கொண்டு வளர்ந்து உய்ய வேண்டும் என்ற பேரார்வத்தில் இலக்கியம் செய்யும் சிந்தனையாளர்களும் உண்டு. அவர்களுடைய வாழ்க்கை நமக்குப் படிப்பினையல்ல. அவர்கள் படைத்த இலக்கியங்களே நமக்குப் படிப்பினை.

உதாரணமாகத் தமிழகத்தில் அருணகிரிநாதரை எடுத்துக்கொள்ளலாம். திருப்புகழ் பாடத் தொடங்கிய அருணகிரிநாதரின் முன்னைய வாழ்க்கை, இரங்கத்தக்க வாழ்க்கையே! ஆனாலும், தமது இரங்கத்தக்க நிலையை அவர் உணர்ந்ததைப் போல வேறு யாரும் உணரவில்லை. இத்தகையோர் படைப்பு, சிறப்பு விதி.

நூல்களைப் படித்தலைவிட, படித்தற்குரிய நூல்களைத் தேர்ந்தெடுப்பதிலே வாழ்நாளில் பாதி முடிந்து விடுகிறது என்பார் ரஸ்கின், நூல்களைப் படித்தலும் தேர்ந்தெடுத்தலும் ஒரே வகையா? நிறைய நூல்களைப் படிக்கும் வழக்கமுடைய பிஃரான்சிஸ் பேக்கன் "பல நூல்கள் படிக்க!” என்றார்; "சில நூல்கள் படித்து மகிழ!” என்றார்: "மிகச் சில நூல்களே படித்துச் சீரணித்துக் கொண்டு வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகத் தக்கன” என்றார்.

திருவள்ளுவர் படித்தற்குரிய நூல்களைப் பொதுவாக வலியுறுத்தவில்லை. அவர் நூலைப் படிக்கும் மனிதனுடைய தகுதிக்கேற்றவாறு-மனநிலைகளுக்கேற்றவாறு நூல்களைத் தேர்ந்தெடுக்கும்படி வழி காட்டுகிறார். அது என்ன வழி? என்பதை அடுத்து ஆராய்வோம்.

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.


கற்பதற்குரிய நூல்கள்

நூலாசிரியனாதல் எளிதன்று. பழுத்த மனத்தை உடைய சான்றோர்களே சிறந்த நூலாசிரியராக முடியும். உயர்ந்த நூலாசிரியர்கள் எந்த நாட்டிலும் மலிவான சரக்காக இருக்க முடியாது. எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் எண்ணிக்கையில் வளர்ந்திருப்பது அறிவினுடைய தர வீழ்ச்சியைத்தான் நினைவூட்டும்.

திருக்குறளை எழுதிய திருவள்ளுவரும் நூலாசிரியர், கூளப்பநாயக்கனின் காதல் எழுதியவரும் நூலாசிரிய ரென்றால், இது என்ன நியாயம்? திருக்குறளும் ஒரு நூல், கூளப்பநாயக்கனின் காதலும் ஒரு நூலென்றால், அங்ங்னம் சொல்பவரின் அறியாமையை என்னென்பது? ஒதுபவரின் உள்ளத்தை உருக்கி உயர்த்தும் திருவாசகமும் ஒரு நூல். தீமையைக் கண்டிக்கும் பாவனையில் சிருங்கார ரசத்தையும் சேர்ந்து, ஊடே இரண்டு மூன்று பக்திச் சொற்களையும் சேர்த்தாலே அந்த நூல் பக்தி நூலாகி விட முடியுமா? திருவாசகத்துக்குப் பக்கத்தில் அதை வைத்து எண்ணத்தான் செய்யலாமா?

உணவு, உண்பதில் நாவுக்கினியதா, உடலுக்கினியதா, என்று நன்கு ஆராய்ந்து உடலுக்கினிய உணவையே தேர்ந்தெடுக்க வேண்டும். இயலுமாயின் நாவுக்கும் இனியதாக அமைந்து உடலுக்கும் நலம் பயப்பதாயின் அது முழுமையான நல்ல உணவு.

அதுபோல் கற்க இனிய மொழிநடையும், உயிர்க்கு நலஞ் சேர்க்கும் உயர் கருத்துமுடைய நூல்களாக இருப்பன நல்லவையாம். இத்தகைய பெருஞ் சிறப்புப் பொருந்திய நூல்களுள் தலையாயது திருக்குறள். திருக்குறளை உள்ளவாறு கற்போர் உள்ளம் எப்பொழுதும் தரத்தில் உயருமே தவிரத் தாழாது.

திருக்குறளோடு ஒப்ப வைத்தெண்ணப்படும் நூல்கள் வேறு சிலவும் தமிழில் உண்டு. நம்முடைய சைவ நாயன்மார்கள் அருளிச் செய்த திருமுறைகள் தேனினும் இனிய சுவையுடையன. அறியாமை இருளை அகற்றும் அகல் விளக்காகவும், ஞானப் பேரொளியை வழங்கி வாழ்விக்கும் அருமருந்தாகவும் திகழ்வன.

சேக்கிழார் தந்த திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணத்தைப் போன்றதொரு நூல் வேறு எம்மொழியிலும் தோன்றவில்லை. புராணம் என்ற பெயரிருப்பதால் யாரும் அந்த நூலின் சிறப்பினைப் பற்றி ஐயுற வேண்டியதில்லை.

பெரிய புராணத்தில் வருகிற அடியார்கள், தம் வாழ்க்கையில் குறிக்கோள் வைத்துக் கொண்டு போராடியவர்கள். பெரிய புராணம் அன்பின் பிழிவு தொண்டின் சாறு. நூல்முழுதும் திருவருட் பதிவு நிறைந்திருக்கின்றது. திருவரங்கத்து அமுதனின் திருவருளில் ஆழக்குளித்த ஆழ்வார்களின் அமுதத் தமிழ் மிக உயரியது. அந்தத் தமிழ் அமரகுலத்துச் சுவையினும் விஞ்சிய சிறப்புடையது. இத்தகைய நூல்களை நாள்தோறும் முறையாகக் கற்பதுதிரும்பத் திரும்பக் கற்பது, நினைந்து நினைந்து கற்பது, உணர்வது வாழ்க்கையை உயர்த்தும்.

இதுபோல ஆங்கிலத்தில் ஜேம்ஸ் ஆலன் இயற்றிய வாழ்வியல் நூல்களும், மார்க்கஸ் அரேலியஸ் எழுதிய நாட்குறிப்புகளும் வாழ்க்கையை உயர்த்தும் உயரிய நூல்கள்.

தமிழ் இலக்கியங்களில் சங்க காலத்து இலக்கியங்கள் விழுமியனவே. அவற்றில் அகத்துறை இலக்கியங்கள் இருந்தாலும் அவை மிகவுயர்ந்த அகத்துறை இலக்கியங்கள். காப்பியங்களில் இளங்கோவடிகளின் சிலம்பு சாலச் சிறப்புடையது. இத்தகைய நூல்களைத் தமிழராய்ப் பிறந்தோர் படிக்காமலும், படித்து உணராமலும், உணர்ந்து செயற்படாமலும் வாழ்ந்து மடிவது வம்பேயாம்-விணேயாம்.

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி
ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து.


வாழ்க்கை என்ற மாளிகை

வாழ்க்கை மிக மிக அருமைப்பாடு உடையது. "வாய்த்தது. நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்" என்பது அருள்வாக்கு. உடல்கொண்டு உண்டு, உறங்கி நடமாடுவதெல்லாம் வாழ்வாகி விடாது. வாழ்க்கை உயிர்ப்புள்ளது; வளர்ச்சி பொருந்தியது. உயிர்ப்பும் வளர்ச்சியும் இல்லாத வாழ்க்கை வசை நிறைந்த வாழ்க்கை வாழ்க்கை நிறைந்த அறிவியலின் பாற்பட்டது; நிறைந்த அருளியற் சார்புடையது. வாழ்க்கையின் ஆழத்திற்கும் அகலத்திற்கும் உயர்வுக்கும் எல்லையில்லை. எப்படி இறைவனுடைய அடியும் முடியும் காண முடியாதனவோ, அது போலவே, வாழ்க்கையின் வளர்ச்சிக்கு முடிந்த முடிபுமில்லை; வரையறுக்கப் பட்ட ஒரு நிலையுமில்லை.

உலகில் வளமுள்ள குளம், என்றும் பயன்படும்; தூய்மையாக இருக்கும். அதற்கும் அதனைச் சார்ந்தோருக்கும் என்றும் இன்பம் உண்டு. ஏன்? அது புண்ணியத் தீர்த்தமாகவும் ஆகும். ஆனால், ஊற்று வளமில்லாத குளமாக இருக்குமானால் குட்டை என்று பெயர் மாற்றம் பெறும்; துய்மை கெடும்; தொல்லை கொடுக்கும். அதனால் அது துார்த்து மூடப்பெறும்.

அதுபோல மேலும் மேலும் சிந்தனை ஊற்றும், செயல் வளமும் உடையோர் வாழ்க்கை, பயன்பெறும். அத்தகையோர் வாழ்க்கை, பிறந்த இனத்திற்கும், நாட்டிற்கும், பேசும் மொழிக்கும் நிறைந்த பெருமை சேர்க்கும். ஆனால் சிந்தனை செய்யாமல்-சிந்தனை செய்ய மறுத்து, உண்டு உடுத்து வாழும் விலங்கியல் வாழ்க்கை யுடையோரின் வாழ்க்கை அவர்களுக்கும் துன்பம் தரும்; மற்றையோருக்கும் துன்பம் தரும்.

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.


மனம் ஒரு மாளிகை

திருவள்ளுவர் அருளிச் செய்த திருக்குறள் தமிழினத்தின் தனிமறை; உலகப் பொதுமறை; அறநூல்; முழுதுறழ் அறநூல்; உலகியலை நெறிப்படுத்திக் காட்டிய முறை நூல்; வீடு பற்றி விளக்கம் தந்த இன்பநூல்.

திருக்குறள் சமயச் சார்பற்ற நூல். ஆனாலும் சமய நெறி தழுவிய நூல். சார்பு வேறு; தழுவுதல் வேறு. சார்பு என்பது ஒன்றில் பற்றும், பிறிதொன்றில் காழ்ப்பும் காட்டுவதாகும். அதனாலேயே சார்பின்றி வாழ வேண்டும் என்பதை,

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்

என்று குறள் கூறுகிறது. யான், எனது என்ற சார்புகளின் காரணமாக மனிதன் தன்னலச் சுழலில் சிக்குகின்றான். இந்தச் சார்புகளிலிருந்து மனிதன் விடுதலை பெற்றாலேயே பொதுமை தோன்றும்; மனித இனத்தை அரித்து அழிக்கும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் என்பவனாகிய தீமைகள் அழியும். 'எல்லோரும் வாழ்க, இனிதே வாழ்க’ என்ற பொதுமை தோன்றும். திருக்குறள் இத்தகைய நெறியினைச் சார்ந்த பெருநூல். ஒப்பற்ற ஒரு நூல்.

இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய பொதுமை நூலைத் தந்த பெருமையை என்னென்போம்! இன்று சிதறிக் கிடக்கும் நாடுகளை-கண்டங்களை விந்தை மிகு விஞ்ஞான உலகம் இணைத்திருக்கிறது. விண்வெளிப் பயணமும், வானொலி நிழற்படக் காட்சியும், தொலைபேசியும் நாடுகளை இணைத்து நெருக்கத்திற் கொண்டு வந்துள்ளன. ஆனால், மனித நெஞ்சங்களை இணைப்பதில், உலகப் பொதுமை காண்பதில், இன்னமும் மனித சமுதாயம் வெற்றியடையவில்லை. அதனாலன்றோ இன்னமும் உலகத்தை விட்டுப் போர்ப் பதற்றம் நீங்கினபாடில்லை. ஏன்? உலகத்தை விட்டு என்ன? தனி மனிதனை விட்டும் போர் உணர்ச்சி நீங்கினபாடில்லை.

ஒவ்வொரு மனிதனும் யாரோ ஒருவருடன் போராடிக் கொண்டிருக்கிறான். வலிமையற்றவன் கூடத் தனக்குள் முணுமுணுத்து எதிர்ப்பைப் பேசி முடிக்கிறான். பொழுது விடிந்து பொழுது போனால் உயர, தாழ என்று உறுமுகின்றான். இவன் உயர்ந்தால் கவலையில்லை. ஆனால், உயர இருப்பவனைத் தன் நிலைக்கு இறக்கித் தன்னை உயர்த்திக் காட்ட அல்லவோ விரும்புகின்றான்.

இத்தகு வேடிக்கை உலகத்தை இன்று பார்க்கிறோம். திருவள்ளுவர் இந்த விகார உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு விளங்கிய சான்றோர். பொறிகளாலும் புலன்களாலும் சிறந்து விளங்கிய சீலம் நிறைந்தவர். அதனாலன்றோ எந்த ஒரு சார்புப் பற்றுமின்றிப் பொதுமையறம் செய்தார். ஆயினும், அவருடைய நூல் சிறந்த சமயம் தழுவியது.

சமயம் என்பதே பொதுமையான தத்துவம். சார்புகளில் சிக்கிச் சுழன்ற மனிதர்களே சமயம் என்ற உயர்ந்த தத்துவத்தை-வாழ்வியலைச் சார்புகளுக்குள் சிக்க வைத்து, சழக்கு நெறியாக்கி உண்மையான சமயத்திற்குச் சமாதி கட்டி விட்டனர். சமயத் துறையில்-சமய எதிர்ப்பாளர்கள் சமயத்துக்குச் செய்த கேடுகளை விட சமயச் சார்பாளர்கள் செய்த கேடுகள் அளப்பில. அம்மம்ம, நினைத்தாலும் கொடுமை! வரலாறு இவர்களை மன்னிக்காது.

சமயம் என்பது மனிதனை - அவனுடைய பொறிகளை - அவனுடைய புலன்களை நெறிப்படுத்திசெழுமைப்படுத்திப் பக்குவப்படுத்துவதேயாகும். இதை யார் செய்தால் என்ன? எந்த மொழி செய்தால் என்ன? ஆனால், இன்றோ சமயம் என்பது சாதிச் சழக்குகளுக்கு ஆட்பட்ட தாகவும், சமுதாயத்தின் மேடு பள்ளங்களைத் தோற்றுவித்துப் பேணிப் பாதுகாப்பதாகவும் விளங்கும் கொடுர நிலையைப் பார்க்கிறோம்.

நந்தமிழ் மக்களோ இறைவனை மன்றில் ஆட வைத்தனர். மன்றம் பொது இடமின்றோ? பொருள் மாயம் செய்வோம் என்று கருதி, பொதுவிலும் ஆட வைத்தனர். இன்று நம்முடைய திருக்கோயில்கள் பொதுவில் விளங்கும் புனிதத் தன்மையை இழந்து கிடக்கின்றன.

திருக்குறள் காட்டும் சமயம், காழ்ப்புகளைக் கடந்த கவினுறு நெறி; மேடு பள்ளங்களைக் கடந்த மேலான நெறி; ஒன்றே குலம் என்ற உத்தம நெறி; தடைகளைக் கடந்த பொது நெறி ; இன்ப நெறி; வையத்துள், வாழ்வாங்கு வாழ வைக்கும் சமயநெறி. இத்தகு பொதுமைச்சமயத்தில் திருக்குறள், உலகில் எந்தச் சமய நூல்களையும் விட மேம்பட்டு விளங்குகிறது.

இறைவனைத் திருவள்ளுவர் வாழ்த்துகிறார். நம்மையும் வாழ்த்தத் துரண்டுகிறார். ஆனால், அவர் இறைவனைக் கண்டு காட்டும் முறை, பொதுமை முறை என்பதை மறுக்க முடியாது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்பதுகுறள். உலகின் எல்லா மொழிகளின் எழுத்துக்களுக்கும் அகர ஒலி நேரிடையாகவோ மறைமுகமாகவோ அடிப்படை ஒலியாக-மூலமுதலாக விளங்குகிறது. அதுபோல, உலகின் எல்லா உயிரினங்களுக்கும் இறைவனே அடிப்படை ஆற்றலாக, ஆதாரமாக விளங்குகிறான் என் பதன்மூலம் உலக உயிர்களின் வழிபாட்டியக்கத்தை, மனிதகுல ஒருமைப்பாட்டியக்கத்தை வாயார வாழ்த்தித் தொடங்கி வைக்கிறார். மனிதகுல ஒருமைப்பாடு பேச்சாலும் எழுத்தாலும் மட்டும் உருவாகி விடுவதன்று; நேர்மை நிறைந்த வாழ்க்கையினாலேயே மனிதகுல ஒருமைப்பாடு தோன்ற முடியும். நேர்மை என்ற சொல்லை நேர்தல் என்ற மூலச் சொல்லின் ஆக்கமாகக் கருதலாம்; அதாவது ஒருவருடைய உணர்வும் இன்ப நலனும் மனித குலத்தின் உணர்வோடு, இன்ப நலனோடு மாறுபாடு கொள்ளாமலும், தீங்கு பயவாமலும் ஒத்து, நேராக விளங்குதலே நேர்மையாகும்.

இத்தகைய நேர்மை மிக்க வாழ்க்கையே சமய வாழ்க்கையினுடைய அடித்தளமாகும். இதனை, அகர எழுத்தை எடுத்துக் காட்டியதன் மூலம் திருவள்ளுவர் விளக்குகிறார். அகர எழுத்து ஒரு பகுதி வளைந்து கிடந்தாலும், வளைந்த வட்டத்தைத் தாண்டி ஒரு நேர்க்கோட்டில் முடிகிறது. அப்பொழுதே "அ முழுதாக அமைகிறது. அதுபோலவே மனிதன் சார்புகளின் காரண மாக வளைந்து கிடக்கும் வாழ்கையினை நேராக்கிக் கொள்ளுதலை அகரத்தை எடுத்துக் காட்டுதலின் மூலம் விளக்குகிறார். சமுதாயப் பொதுநெறிச் சார்பே சமய நெறி என்பதற்கு இது எடுத்துக்காட்டு.

இறைவனை, திருவள்ளுவர் ஐயத்திற்கு இடமின்றிச் சார்பற்ற உலகப் பொதுப் பொருளாகத் தெளிவாகக் காட்ட விரும்புகிறார். ஆதலால்,

வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

என்று ஒதுகிறார். இறைவன் வேண்டுதல் இல்லாதவன். அவனுக்கு இன்ன சாதி பிடிக்கும் என்பதும் அவனுக்கு இன்ன மொழி பிடிக்குமென்பதும், அவனுக்கு இன்ன சோறு பிடிக்குமென்பதும், இன்னதைக் கொடுத்தால் இன்னது தருவான் என்பதும் பொய்ம்மை; மனிதர் செய்து வைத்த சூது. அவன் எல்லாவற்றையும் கடந்தவன். வைதாரையும் வாழ வைப்பவன். இதுவே உயர்ந்த சமயம். சமுதாயத்தைத் தழுவி நிற்கும் சமயம். வேண்டுதலும், வேண்டாமையும் உடைய மனிதன் பிரிவினைகளை விரும்புவான்; வேற்றுமையை விழைவான்; பொல்லாத வேற்றுமைக்குப் போலிக்காரணங்கள் கூறி நியாயம் காட்டுவான், சமயம் எல்லாவித வேற்றுமைகளையும் கடந்தது. மனித உலகத்தின் ஈடேற்றமே சமயத்தின் இலட்சியம். சமயம் சமுதாயப் பொது நெறி.

மலர், மணம் பரப்புவது; மனம் உலக உயிர்களின் பொதுமையான நுகர் பொருள். இறைவன் மலர்மிசை மேவுகின்றான். உலகப் பொதுச்சின்னமாக இன்று விளங்கு வது மலரேயாகும். இறைவன் மலரில் மேவுகின்றான் என்பதன் மூலம் சமுதாயத்தைத் தழுவிய சமய நெறியைக் காட்டுகிறார் வள்ளுவர். புறத்தில் கிடக்கும் மலர் மட்டுமல்ல, வாழும் தகுதி படைத்த மனித இனம் அனைத்திற்கும் நெஞ்சுண்டு. ஆனால் நெஞ்சு நெஞ்சாகவா விளங்குகின்றது. கல்லாக, முள்ளாகக் காடாக மேடாகக் களர் நிலமாகவன்றோ நெஞ்சம் விளங்குகின்றது. நெஞ்சம் மலர ஒத்திருக்க வேண்டும். இதில் அன்பு மணம் கமழ வேண்டும். இன்பத்தேன் பிலிற்ற வேண்டும். கருணைக்கசிவு இருக்க வேண்டும்.

இங்ஙனம், நெஞ்சம் மலர வேண்டுமானால், தனிமை அழிந்து தற்செருக்கு ஒழிந்து, ஆங்கு ஒண்டுக் குடித்தனம் செய்யும் பொல்லாங்குகளைச் சுட்டுப் பொசுக்கி, மலரச் செய்ய வேண்டாமா? மலர் உலகப் பொது; உலகுயிர்கள் அனைத்திற்கும் மணம் தருவது. அதுபோல நெஞ்சமென்ற மலர் மலர்க, அந்தத் துரய மனம் என்ற மாளிகையில், இறைவன் எழுந்தருளுவான் என்ற திருக்குறளின் கருத்து, சமுதாயம் தழுவிய சமய நெறியையே காட்டுகிறது. உலகின் பொது நெறியைத் தோற்றுவிக்கும் சமய நெறியே நெறி. கோயிலுக்கும் குடிசைக்கும் இடையே இருக்கும் துரத்தைக் குறைப்பதே சமய நெறி. இத்தகைய சமய நெறியே திருவள்ளுவத்தின் சமய நெறி.

புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றுச்
சித்தம் கலங்கித் திகைப்பதேன்?-வித்தகன்
தெய்வப் புலவன் திருவள் ளுவன்சொன்ன
பொய்யில் மொழியிருக்கும் போது.

மக்களுக்கு மாநிலத்தில் வாழ்க்கை வழிகளெல்லாம்
சிக்கலறக் காட்டிநலம் செய்நூலாம்-மிக்கபுகழ்ச்
செந்தமிழ்ச் செல்வத் திருக்குறளை நெஞ்சமே
சிந்தனை செய்வாய் தினம்.
-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

கடவுள் கண்ணால் காட்டப்படும் அல்லது காணப்படும் பொருள் அல்ல; அது உணர்வுப் பொருள். மனிதனுக்குக் கண்களேதான் சிறந்த உறுப்பு அல்ல; அவனது சிந்தனையே உயர்ந்தது. அந்த உணர்வில் எழும் துய சிந்தனையாலேயே மனிதன் கடவுளைக் காணமுடியும். இறையுணர்வே இல்லாதவர்கள் எப்படிக் காண முடியும்? எதற்கும் அவன் அருள் வேண்டும்.

கல்லாத பாமரர்களின் குறைமதிக்கு விஞ்ஞானத்தின் மிக நுட்பமான உண்மைகள் புலப்பட மாட்டா. அதனால், விஞ்ஞான உண்மைகள் யாவும் கட்டுக் கதைகள் என்று நாம் பொருள் கொள்ளலாமா? ஆன்மீக உணர்வு கிட்டும் பேறு கிடைத்தால் இறைவன் நமக்கும் உண்மையிலும் உண்மை யாவான். கடவுளை வணங்குவது அவனுக்குத் தொண்டு செய்ய அல்ல; மனிதனுக்குத் தொண்டு செய்ய எனக்கு வலிமையைத்தா, என்று கேட்க, மாபாரதத்தில் கர்ணன் கூடக் கண்ணனிடம், "இல்லையென்று இரப்போர்க்கு இல்லையெனா இதயம் தா" என்றுதான் கேட்டான்.

உற்றநோய், நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.

என்று குறள் கூறுகிறது.

மன மாளிகையில் அறம்

வாழ்க்கையின் மையம் மனமே. சிந்தனைக்குக் களம் மனம் செயல், ஊக்கத்திற்குக் களம் மனம் செயலின் நோக்கமும் மனத்திலேயேயாகும். கைகள் செய்யலாம். கால்கள் நடக்கலாம்; கண்கள் பார்க்கலாம். ஆனாலும் அச்செயல்களின் நோக்கத்தைத் தெளிவாக வெளிக்காட்டா. ஒரோவழி காட்டலாம். ஆயினும் சிந்தனைக்கும் செயலுக்கும் முரண்பாடிருக்கலாம். அப்போது சிந்தனை பயன் தருமா? செயல் பயன் தருமா? ஒருவன் இனிமையாகப் பேசுகிறான். ஆனாலும் நெஞ்சில் கரவு இருக்கிறது. இவற்றில் எது பயன்தரத் தக்கது? இனிய பேச்சன்று. நெஞ்சில் மறைந்து கிடக்கும் கரவே.

சிலர் முயற்சிகள் பல செய்தும் வெற்றி அடைவ தில்லை. அத்தகையோர் ஏதாவது சமாதானம் சொல்வர்; கொடுத்து வைக்க வில்லை; போதாத காலம், உலகம் சரியாக இல்லை என்பன போன்ற வேதாந்த மொழிகளை உதிர்ப்பர். ஆனால் உண்மை அதுவன்று. அவர்கள் செயல்பட்டது என்னவோ உண்மை. ஆனால் அச்செயல் பற்றிய எண்ணம் தெளிவாக-உறுதியாக அவர்களுக்கு இல்லை.

மண்ணில் நிற்கும் மரமெல்லாம் புயலில் நிற்பதுண்டோ? மண்ணில் ஆழமாக வேர்விட்டு வளர்ந்த மரமே புயலில் நிற்கும். அதுபோல மனத்தில் தெளிவாகஉறுதியாக எண்ணிச் செய்யும் செயல்களே வெற்றி தரும்.

அறம் செய்தால் போதாது. அறச்சிந்தனை வேண்டும். "அறந்தரு சிந்தையோன்” என்பது இலக்கிய வழக்கு. அறம் எந்த நோக்கத்துடன் செய்யப்படுகிறதோ அந்தப் பயனையே தரும். அறம் புகழ் கருதிச் செய்யப்பெற்றால் புகழைத் தரும்-அறத்தினைத் தாராது; புண்ணியத்தினைத் தாராது; இவ்விரண்டிற்கும் மேலாய இன்ப அன்பினை எப்போதும் தாராது.

இந்த யுகத்தில் அறமும் கூட வணிகமாகியுள்ள கொடுமையைப் பார்க்கிறோம். அறப்பணிகளாகக் கருதப் பெறும் கல்விப்பணி, திருக்கோயிற்பணி ஆகியவை இன்றைக்கு வணிக வடிவத்தைப் பெற்றிருக்கின்றன. இவை இரண்டும் வணிக வடிவத்தைப் பெற்ற பிறகு சமுதாயத்தின் அடித்தளமே புரண்டுவிட்டது. இதனால் அந்நிலையங்களுக்கு வருவாய் வரலாம். வணிகத்தின் நோக்கம் இலாபம் தானே! ஆனால் கல்வியின் பயனாகிய அறிவும் அருளியலின் பயனாகிய ஒப்புரவும் உயர் வீடும் கிடைக்காது. நோக்கம் எதுவோ அதுவே கிடைக்கும்.

ஆதலால் செயலைச் செயலுக்காகவே சிந்தனை செய்து செய்வது சிறந்தமுறை. கல்வி கற்பது அறிவின் ஆக்கத்திற்காகவே என்ற நோக்கம் அமைதல் வேண்டும். அங்ங்ணமின்றித் தொழில் பெறும் நோக்கத்தோடு கற்கும் பொழுது அறிவு கிடைப்பதில்லை. ஆனால் தொழில் கிடைக்கும். நட்புப் பாராட்டுவது நட்பிற்கே அதற்கு நோக்கம் என்றால் நட்பு பயிலுதலே நோக்கம்.

அதற்கு மாறாக நலன்கள் சேர்ப்பதை நாட்டமாகக் கொண்ட நட்பினால் அது தோற்றத்தால் உள்ள நட்பே, அது தொடர்ந்து வளர்வதில்லை; இடையறவுபடும். அது மட்டுமன்று, அத்தகையோர் பிரியின் பெரும்பகை கொள்வர். நன்னோக்கமாகக் கொண்ட நட்பே நன்மை தரும். அதனாலன்றோ, உயிர்களை இறைவன் காதலிக்கிறான்; அவற்றுக்குக் கருணை பொழிகின்றான். ஏன்? உயிர்களை ஆட்கொண்டருளுவதுதான் அவனது நோக்கம். கருணையின் பயன் கடவுளுக்கல்ல உயிர்களுக்கேயாகும்.

உயிர்களை ஆட்கொண்டருளுவதில் கடவுளுக்குத் தற்சார்பானது எதுவும் இல்லை. குறையொன்றும் இல்லாத கூத்து என்று மணிமொழி பேசும், சுந்தரர் பித்தன்' என்பார். அதுபோல் கடவுளைப் பூசனை செய்வோரும், கலந்த

அன்பிற் பூசிப்பதைக் கூடும் அன்பினில் கும்பிடலை' நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

அங்ஙனமின்றித் தேவைப் பட்டியலைக் கையில் வைத்துக்கொண்டு கடவுளை வணங்கினால் ஒருகால் தேவைகள் கைகூடலாம். ஆனால் மனத்தின் மாசு அகலாது; மனம் வளராது; திருவருள் கிடைக்காது; ஆக, செயல் பலனைத் தராது. செயலுக்குரிய நோக்கமே பயன் தரும்.

இத்தகைய நியாயமான அறவுணர்வு பழந்தமிழர் வாழ்க்கையில் விளங்கித் தோன்றிற்று. பழந்தமிழர் அறம் செய்தனர். அறத்தை அறத்தின் நோக்கத்துடனேயே செய்தனர். வீடுபேறு கூட அவர்களின் நோக்கமாக இருந்ததில்லை. அன்றைய தமிழக அரசர்களும் இத்தகைய அருளார்ந்த சீலத்தோடுதான் விளங்கினர்.

ஆய்அண்டிரன் ஒரு குறுநில மன்னன், அறம் செய்யும் இயல்பினன்; அவனை முடமோசியார் அறிந்து பாராட்டுகிறார். இப்பிறப்பில் அறம் செய்தால் மறுமையில் இன்பம் பெறலாம் என்ற எண்ணத்தில் ஆய் அண்டிரன் அறம் செய்வதில்லை. ஆய் அண்டிரனின் வாழ்க்கையில் அறம் வாணிகப் பொருளில்லை. அறமே அவன் செயல், அறமே அவன் நோக்கம்.

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆய்அலன்

என்பது பாடல் அடிகள். இத்தகைய அறச் சிந்தனை நம் மனமாளிகையில் நின்று நிலவுமானால் உலகில் ஒப்புரவு நெறி வளரும். நனி சிறந்த நட்பு கால் கொள்ளும். கல்விக் கூடங்கள் அறிவாலயங்களாகத் திகழும். திருக்கோயில்கள் கடவுட் கோயில்களாகத் திகழும்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன
ஆகுல நீர பிற.

உயிர் வாழ்வான்

திருக்குறள் ஒரு சமுதாய ஒழுக்க அமைப்பு நூல். மனிதர்கள் தம்முள் கூடிவாழக் கடமைப்பட்டவர்கள். அதுவே, மனித நாகரிகத்தின் விழுமிய சிறப்பு. மனிதன் ஒரு சமூகப் பிராணி என்றார் ஓர் ஆங்கிலப் பெரும்புலவர். விலங்குகளில் கூட்டு வாழ்க்கை இல்லை. ஒரோவழி, சில விலங்கினங்களிடத்தே கூட்டு வாழ்க்கை முறை இருந்தாலும் கூட அஃது அச்சத்தின் பாற்பட்டதே யொழிய, அன்பின் பாற்பட்டதன்று.

சமுதாயக் கூட்டு வாழ்க்கையை வளர்ப்பதென்பது மிக நுண்ணிய ஆற்றல். தம் இச்சைவழிச் செல்லும் பொறிகளின்மீது தனியரசு செலுத்துவோரே கூட்டுப் பொது வாழ்க்கையைத் திறமையாக நடத்த முடியும். சமுதாயக் கூட்டு வாழ்க்கைக்கு உரிய சிறந்த பண்புகளில் ஒன்று ஒப்புரவு அறிதல்.

ஒப்புரவறிதல் அதிகாரத்தில் வரும் குறட்பாக்களுக்கு உரையாசிரியர்கள் பெரும்பாலும் இல்லாதவர்களுக்குக் கொடுத்தல்-உதவி செய்தல் என்ற தன்மையிலேயே பொருள் கண்டுள்ளனர். இல்லாதவர்களுக்குக் கொடுக்கும் பண்பை-இயல்பை ஈகை என்ற தனி அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுகின்றார். ஈகை, ஒப்புரவறிதல் இவ் விரண்டும் ஒன்றுபோலத் தோற்றமளித்தாலும் ஆழமான கருத்து வேறுபாடு உடையன.

ஈகை வழிப்பட்ட சமுதாயத்தில், உடையார்-இல்லார் என்ற வேற்றுமை விரிந்திருக்கும். அவ் வழி புகழ்ச்சியும் இகழ்ச்சியும் தலைதூக்கி நிற்கும். ஒப்புரவறிதலில் உடையார் இல்லார் வேற்றுமையின்றி, உயர்வு தாழ்வு இன்றிக் கொடுத்தல் கடமை எனவும், கொள்ளல் உரிமை எனவும்

கருதும் அடிப்படையிலேயே அந்த அதிகாரம் அமைந்துள்ளது.

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்

என்பது திருக்குறள். இங்கு ஒத்தது என்ற சொல்லுக்கு வழக்கம்போல் பரிமேலழகர் உலக நடையினை என்று எழுதித் தப்பித்துக் கொண்டு விட்டார். அது நிறைவான கருத்தன்று. தன்னைப் போல் பிறரை நினை' என்பது ஒரு விழுமிய ஒழுக்கநெறி அருள் வாக்கு,

இன்றையச் சமுதாயத்தில் பலர் தம்மோடு பிறர் ஒத்துவர வேண்டும் என்று விரும்புகிறார்களே தவிர, பிறரோடு தாம் ஒத்துப்போக வேண்டும் என்று கருதவில்லை. பலருக்கு எது ஒத்ததோ அதற்குச் சிலர் இணங்கியே லாம வேண்டும். அதுவே சமுதாய நியதி-ஒழுக்கம். உணர்ந்து வாழ்பவர்களே வாழ்பவர்கள். அவர்கள் யிலேயே இன்பமும் அமைதியும் இருக்கும். ம. அவர்தம் வாழ்க்கையாற் பயனுண்டு.

இங்ஙனம், ஒத்ததறிந்து ஒழுகத் தெரியாதவர்கள் வாழ்ந்தாலும் நடமாடினாலும் பிணம் என்றே கருத வேண்டும் என்று திருக்குறள் கூறுகிறது. காரணம், பிணத்திற்கு மனித உருவ அமைப்பு இருந்தாலும் உணர்ச்சியில்லை; உதவும் பண்பில்லை. அதுபோலவே, ஒத்ததறிந்து வாழும் இயல்பில்லாதவர்களுக்கும் அன்பு, சமுதாயம் ஆகிய உணர்ச்சிகள் இல்லை. அவர்களும் உதவ மாட்டார்கள். பிணத்தை நடு வீட்டில் நடுத்தெருவில் பல நாட்கள் வைப்பதரிது. காரணம் நாற்றமெடுக்கும்; காற்றைக் கெடுக்கும்; சமுதாயத்திற்கு நோய் தரும்.

அதுபோலவே, ஒத்ததறிந்து உதவி வாழ முடியாத மனிதன் நெஞ்சத்தால் நாற்றமெடுத்தவனாவான். பிணம் போல் நாறுவான். அந்நாற்றத்தைத் தன்னுடைய சொற்களாலும் செயல்களாலும் வெளிப்படுத்துவான். தொல்லை செய்வான். பிணத்தை வீட்டிலிருந்து விரைவாக எடுத்துச் செல்வதுபோல, சமுதாயத்திலிருந்து இந்த மனிதர்களையும் விரைவில் எடுத்தாக வேண்டும்.

ஒத்தது அறிவான் என்று சொன்னமையால் தானே வலிய முயன்று அறிந்து செய்தலையே திருவள்ளுவர் இங்கு குறிப்பிடுகின்றார். இதையே (Volunteer Service) என்று குறிப் பிடுகிறார்கள். குறட்பாவைப் பாருங்கள்.

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

பொருளியல்

திருவள்ளுவர் நடைமுறை வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட கற்பனை உடையவரல்லர். அவருடைய சிந்தனைப் போக்கு வாழ்வியலை ஒட்டியே அமைந்துள்ளது. நடைமுறை உண்மைகளுக்கு அவர் மாறுபட்டவரல்லர். ஆதலால், மனித வாழ்க்கைக்கு மிக மிக இன்றியமையாததாகிய பொருளைப் பற்றிய திருவள்ளுவரின் கருத்து இரண்டுபட்ட தன்று; குழப்பமானதுமன்று; மிகமிகத் தெளிவானது; உயர்வானது.

பொருளின் அடித்தளத்திலேயே தனிமனிதனின் வாழ்க்கையையும் சமுதாயத்தின் வாழ்க்கையையும் காட்டுகின்றார். ஏன்? பழந்தமிழ் மரபும் அதுதானே! மனிதன் அடையக் கூடிய பேறுகள் நான்கு என்பது தமிழ்மறை. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாகும். அவற்றுள் நடுவனவாகிய பொருள் எய்த இருதலையும் எய்தும் என்பது தமிழ் நூல் முடிபு.

அதனாலன்றோ திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்று முப்பால் நூல் செய்தார். வீடு பற்றி அவர் தனி இயல் அமைக்கவில்லை. காரணம், அறம், பொருள், இன்பம் ஆகியவை மனிதன் முயன்று செய்யக்கூடியவை -பெறக் கூடியவை. ஆனால் வீடு, அறம் பொருள் இன்பத்தை முறையாகச்செய்து அனுபவித்து வெற்றி பெற்றவர்களுக்கு இறைவனால் வழங்கப் பெறுவது. வாழும் மனிதர்க்கே திருவள்ளுவர் நூல் செய்தமையின் காரணமாக, வீடு பற்றிய தனி இயல் அமைக்கவில்லை. எனினும் ஒரோவழி குறிப்பிட்டுள்ளார்.

திருவள்ளுவர் ஒரு பொருளியல் துறை அறிஞர். பொருளின் தோற்றத்திற்குரிய நிலைக்களனான பாதுகாத்தல், பங்கீடு ஆகியவைபற்றித் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார்: பொருளில்லையானால், உலகியல் இல்லை என்று கூறுகிறார். வறட்சித் தன்மையுடைய மாயாவாதம், பெளத்தம், சமணம் ஆகிய சமயக் கருத்துக்கள் தமிழகத்தில் ஊடுருவத் தொடங்கிய பிறகுதான், தமிழர் வாழ்வியல் கெட்டது; வாணிகம் வீழ்ந்தது. ஆட்சி அந்நியர் கைக்கு மாறியது. இந்த நிலையினை உணர்ந்த தமிழகச் சிவநெறிச் சான்றோர் களாகிய மாணிக்கவாசகர், அப்பரடிகள், சுந்தரர் போன்றோர் பொருளின் மேம்பாட்டினை வலியுறுத்தினர்.

"முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்!” என்பது மாணிக்கவாசகரின் வாக்கு "ஏரி நிறைந்தனைய செல்வம் கண்டாய்” என்றும், "பொன்னா னாய், மணியானாய்” என்றும் அப்பரடிகள் பாடுகின்றார். சுந்தரர் வாழ்க்கைக்கு இறைவன் பொற்காசு வழங்கியதைச் சேக்கிழார் சிந்தை இனிக்கப் பாடுகின்றார்.

பொருள் உலகியல் அச்சு; அதை வைத்தே உலகியல் நடைபெறுகிறது. திருவள்ளுவர் பொருளைப் போற்ற வேண்டும் என்று கூறுகின்றார். பொருளைப் போற்றுதல் என்றால் பொருளைப் பூசித்தல் என்பது பொருளன்று. பொருளைப் பாதுகாத்தல் என்பதுதான் பொருள். பாதுகாத்தல் என்றால் செல்வத்தின் பயனாகிய இன்பம் நுகர்தல், ஈத்துவந்து மகிழ்தல் ஆகியன செய்யாமல் பூட்டிவைத்துப் பாதுகாப்பது என்பதும் பொருளன்று. பொதுவாகவே, போற்றுதல் என்ற சொல்லிலேயே வளர்த்தல், பாதுகாத்தல் என்ற இரு கருத்துகளும் அடங்கும்.

"பொருட் செல்வம் போற்றுவார் கண்ணே உள” என்கிறார் திருவள்ளுவர். பொருட் செல்வம் போற்றுதற்கு வேண்டிய முதற்குணம், பொருளின் மதிப்பினை-சிறப்பினை உள்ளவாறு உணர்தல். பொருள் என்றால், அது வளரும் இயல்புடையதேயன்றி, குறையும் இயல்புடையதன்று. பொருட் செல்வத்தை வாழ்க்கை என்ற களத்தில், உழைப்பு என்ற நீரூற்றிச், சிக்கனம் என்ற வேலி கட்டிப் பாதுகாத்தல் வேண்டும். பொருளின் தாய் உழைப்பேயாகும். உழைப்பின்றேல் பொருள் இல்லை. வந்த பொருளைச் சிக்கன முறையில் பாதுகாக்க வேண்டும்.

அதனாலன்றோ அப்பரடிகள், "ஏரி நிறைந்தனைய செல்வம் கண்டாய்” என்றார். ஏரிக்குக் கரைகட்டித் தண்ணீரைக் காப்பது போல், பொருளுக்குச் சிக்கனம் என்ற கரை தேவை. சிக்கணம் என்றால் கஞ்சத்தனம் என்று பொரு ளல்ல-அப்படிப் பொருள் கொள்ளக் கூடாது. ஒரு ரூபாய் செலவில் முடிக்கக்கூடிய காரியத்திற்கு இரண்டு ரூபாய் செலவு செய்வது பொருள் இழப்பிற்குரிய வழியாகும். அத்தகையோரிடத்தில் செல்வம் தங்குவதில்லை. மேலும், பொருள் வருவதற்குரியனவாகக் கிடைத்துள்ள வாய்ப்புகளை இழக்காமல் முறையாகப் பயன்படுத்திப் பொருளிட்ட வேண்டும்.

வாய்ப்புகளை இழப்பதும்கூடப் பொருள் இழப்பே யாகும். அதுபோலவே ஒரு களம்-அதற்குப் பயன்படுத்தக் கூடிய உழைப்பு ஆகியவை மூலம் எவ்வளவு பொருள் ஈட்டவேண்டுமோ, அவ்வளவையும் ஈட்ட வேண்டும். அதற்குக் குறைவாக ஈட்டுதலும் பொருள் இழப்பிற்குரிய வழியேயாகும். பொருள் இழப்பு மட்டுமல்ல-அதைத் தொடர்ந்து வருகிற இழப்புக்கள் பல உண்டு. பொருள் இழப்பினைத் தொடர்ந்து சிறப்பிழத்தல், வறுமை, நோய், வாழ்க்கைச்சுமை ஆகியவையும் அவற்றினைத் தொடர்ந்து நரகமும் வரும்.

“பொருளாட்சி போற்றாதார்க் கில்லை” என்பதைத் திருவள்ளுவர் “புலால் மறுத்தல்” என்னும் அதிகாரத்தில் தெளிவாக விளக்கியுள்ளார். இது, பொருளாட்சியின் அவசியத்தை எளிதில் மனங்கொள்ள உணர்த்துவதற்கே யாகும்.

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.

வள்ளுவம் பிறந்ததேன்?

மிழினம் நிலவுலகத்தை முடியிருந்த நீர்ப்பரப்பு மறைந்து, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த இனம். வீரத்தில் மட்டுமல்ல; சிந்தனைத் திறத்திலும், சிந்தனையைச் செப்பும் மொழித் திறத்திலும், இலக்கியப் படைப்பாற்றலிலும், இலக்கியத்தின் பயனாகிய நனிநாகரிகத்திலும் சிறந்து விளங்கிய இனம் தமிழினம்.

இதற்குச் செல்வச் செழிப்பும் இருந்தது. அதனால், காலப்போக்கில் மதோன்மத்தமான வாழ்க்கையை நடத்தத் தொடங்கிவிட்டது. அதனால் தமிழினத்தில் கள்ளும்

காமமும் இடம் பெற்றன! ஐந்திணை ஒழுக்கத்திற்கு மாறாகப் பரத்தையர் ஒழுக்கம் கால்கொண்டது.

ஓரினத்திற்குள் உயர்வு தாழ்வு மனப்பான்மைகள் தலைகாட்டத் தொடங்கின; அவ்வழி பல்குழுத் தோற்றமும், பாழ்செய்யும் உட்பகையும், வேந்தலைக்கும் கொல்குறும்பும் வளரத் தொடங்கின. பொழுது விடிந்து பொழுது போனாற் போலப் பண்பாட்டை வளர்க்கும் சமயநெறிகளும் பலவா யினமையின் காரணமாகச் சமயநெறியாளர்க்கு மாறாகச் சமயக் கணக்கர்கள் தமிழ்ச் சமுதாயத்தில் தோன்றினர்.

அவர்களும் சமுதாயத்தைப் பண்பியல் வழியில்அமைதி நெறியில் "இவர் தேவர்", "அவர் தேவர்” என்று இரண்டாட்டுகின்ற புன்நெறியை வளர்த்தனர். இங்ங்னம், புகழ் பூத்து வாழ்ந்த தமிழினத்தின் வீழ்ச்சி தலைகாட்டிய பொழுது திருவள்ளுவர் பிறந்தார்.

இருள் கடிந்தெழுகின்ற ஞாயிறெனத் தோன்றினார் திருவள்ளுவர். திருவள்ளுவர் என்று ஞாயிறு கனன்ற கதிரொளியே திருக்குறள். ஓரினத்தை அழிவு வராமல் பகைப்புலத்தில் காக்கும் போர் வீரனை விட வாழ்வியல் நெறியில் நயத்தக்க நாகரிகத்தினைக் கட்டிக் காப்பாற்றிய வள்ளுவர் போற்றுதற்குரியர், ஏழேழ் பிறப்பும் போற்றுதற் குரியவர்.

வடபுலம் கண்டு ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் வாகை, கொண்ட வெற்றியைவிட, செந்தமிழ்ப் பேராசன் திருவள்ளுவர் புகழ் போற்றுதற்குரியது. ஆரியப் படை கடந்த செழியனின் வெற்றி ஒரு பொழுதே பகையைத் தடுத்தது. நாவலர் வள்ளுவர் வெற்றி, ஊழி ஊழிக்காலத் திற்கும் வெற்றி கொண்டது.

நெடுஞ்செழியனின் வெற்றி பகையை மட்டுமே தடுத்தது. பண்பினை வளர்க்கப் பயன்படவில்லை. திருவள்ளுவர் செய்த திருக்குறளோ நந்தமிழ் நெறியினை

நஞ்சனைய நெறியின் கலப்பினின்று தடுத்துக் காப்பாற்றியது. நமது சமுதாயத்தை வாழ்வாங்கு வாழும் நெறியில் வழி நடத்தியதன் மூலம் பண்பியலையும் பேணிக் காத்து வந்திருக்கிறது.

வள்ளுவம் வையகத்தின் வரலாற்றுச் சந்திப்பில் பிறந்தது. வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தப் பிறந்தது; தேங்கிக் கிடந்த சமுதாயத்தில் தெளிவு காணப்பிறந்தது. நூல்கள் பல கற்பதிலும் நுண்ணிய அறிவு ஆற்றலுடையதெனக் காட்டப் பிறந்தது. கல்வி, கற்கின்ற ஆற்றலைப் பொறுத்ததல்ல. கசடு அறுதலிலேயே இருக்கிறது என்று உணர்த்தப் பிறந்தது. மண் வழிப்பட்ட உடைமைகளிலும் உள்ளம் உடைமையே உடைமையென உணர்த்தப் பிறந்தது. ஆனதைக் கதையாக்கிக் கவலையாக்கிச் சாகாமல் தடுக்க-ஆவது காட்டப் பிறந்தது.

நிலத்தில் தூய்மை, உடலில் தூய்மை, நெற்றியில் தூய்மை இவையனைத்தும் கைகள் செய்பவை. இந்தத் தூய்மை பெருகி வளர்ந்தும், பேணும் சமுதாயம் பகையினின்று விடுதலை பெற்றபாடில்லை. காழ்ப்பின் தோற்றம் காசுகளில்லை. கலகங்களின் தோற்றம் கடவுளிடத்திலில்லை. கொலையுணர்வின் தோற்றம் கொடுவாளிடத்திலில்லை. உருக்குலைக்கும் உட்பகையின் தோற்றம் உடலின்கண் இல்லை. ஆங்கார உணர்வின் தோற்றம் நெற்றியின்கண் இல்லை; ஆங்கு இலங்கும் திருநீற்றின் கண்ணும் இல்லை. பின் எங்கு?

நஞ்சின் நிலைக்களம் மனமேயாம். மனத்துள் கருப்பு வைத்து மாநிலம் முழுவதும் தூய்மை செய்தாலும் பயனில்லை என்று பாங்குறக் காட்டி, மனத்தின்கண் மாசறுக்கப் பிறந்தது வள்ளுவம்.

மனிதன், உருவெளித் தோற்றத்தால் தனிமனிதன்; மக்கட் கணக்கெடுப்பில் தனி மனிதன், வயிற்றால்-வாயால் தனி மனிதன். ஆயினும் அவன் படைத்திடும் வாழ்க்கை, தனி

மனித வாழ்க்கையன்று-சமுதாய வாழ்க்கை-கூட்டு வாழ்க்கை! அவனிடத்தில் உருவாகித் தோன்றும் உணர்வுகள் உலகம் தந்த உணர்வுகளேயாம்.

ஈண்டு உலகம் என்பது மனித சாதியைப் போல எளிதில் ஒழுக்கங்களைக் கடப்பனவல்ல; முறைகளை மீறுவன அல்ல; நீதிகளை நீப்பன அல்ல, இயற்கை உலகில் மாற்றங்கள் உண்டு. ஆனால், ஏமாற்றங்கள் இல்லை. மனித சாதியிலோ முறைகளை எளிதில் கடந்த சீலத்தின் சிதை வினையும் ஏமாற்றங்களையும் வரலாறுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன; இலக்கியங்கள் எடுத்துக்கூறுகின்றன. கீழே விழுந்து விடாமல் தன்னை அடிக்கடி தூக்கி நிறுத்திக் கொண்ட மனிதசாதி கெட்டதைப் போல மரம் செடிகள் உலகம் கெடவில்லை; கொடிகள் உலகம் கெட வில்லை; விலங்குகள் உலகமும் கெடவில்லை.

ஆனால், மனிதனோ தம்பட்டம் அடித்துக் கொள்ளுகிறான். விலங்குகளுக்கு ஐந்து அறிவாம். இவனுக்கு ஆறாவது அறிவாம். ஐயகோ! மனிதர்களே! வாயும் வார்த்தைகளும் கிடைத்தமையால் ஏன் இப்படி வையகத்தை ஏமாற்றுகிறீர்கள்? எங்கே இருக்கிறது உங்கள் ஆறாம் அறிவு: நுமக்கு அறிவு இருப்பதின் அடையாளம் என்ன? அதற்குப் பதில் ஆரவாரம்தானோ?

விலங்குகளும் துன்பம் அனுபவிக்கின்றன. ஆனால், ஒர் அதிசயம். விலங்குகள் அனுபவிக்கும் துன்பம் பெரும்பாலும் இயற்கை வழியில் வந்த துன்பங்கள். ஒரோவழி அறிவின்மையின் காரணமாகச் சில அல்லல்களையும் அடைகின்றன. ஆயினும், மனித சாதியைப் போல் செயற்கை இன்பங்களும், செயற்கைத் துன்பங்களும் விலங்கினத்திற்குக் கிடையா.

அறிவிருப்பதைக் காட்டுதற்குரிய அன்பு பிறந்திருக்கிறதா? மேடையில் தான் பிறக்கிறது! வணிகம்தான் நடைபெறுகிறது என்று இடித்துக் கேட்க


அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை

என்று வள்ளுவம் பிறந்தது.

வாழ்க்கை என்பது என்ன? ஒன்றரை.அடியில் பிறந்து ஆறடிக்கு வளர்ந்து மண்ணுக்கு உரமாகவோ, நிலத்தில் விளைந்தவைகளைத் தின்று திரிந்து கதை முடிக்கவோ, உண்ட உணவின் கொழுப்புகளால் விளைந்த உடலெரிச்சலைக் கூடித் தணித்துக் கொள்ளவோ, இல்லை, இல்லை, மனிதன்-அவனே வையகத்தின் நாயகன்! கடவுளின் சாட்சியாக விளங்க வேண்டியவன்.

மனிதன் வாழ்வாங்கு வாழ்ந்தால் வையகம் வளரும்; வானகம் மண்ணுக்கு வரும். அங்ங்னம் வாழ்தல் வாழ்க்கையெனக் காட்ட, "வையத்துள் வாழ்வாங்கு வாழ்க’ என்று வள்ளுவம் கூறுகிறது.

மண்ணுக்கு இயற்கையில் உயிர்ப்பாற்றலிருக்கிறது. அந்த உயிர்ப்பாற்றலின்வழி இழுத்தெறியப்படாமல் மேலே உயர ஓங்கி உயர இயற்கை ஆற்றலும் தந்தது. விலங்குகளுக்குக் கால்களும், மரம் செடிகொடிகளுக்கு வேர்களும் கிளைகளும் அந்த நோக்கத்துடனே அமைந்தனவாம். மரம் செடி கொடிகள் மண்ணிடை வேர் பாவிக் கிளைகள் விட்டு அதன் உயிர்ப்பாற்றலின் சக்தியைத் தடுத்து நிறுத்தித் தன்னை இழுத்தெறியும் ஆற்றலுடைய மண்ணையே, தான் நின்று வளரும் களமாக மாற்றி, தான் வளர்வதோடன்றிப் பூத்துக் குலுங்கிக் காய்ப்பதோடன்றி விலங்குகளுக்கும் மனித உலகத்திற்கும் கூட வாழ்வு அளிக்கின்றன.

ஆனால், மனிதனோ, மண்ணின் ஆற்றலால் உடல் மட்டுமின்றி உள்ளத்தையும் பறிகொடுத்துத் தானும் வாழாமல் மற்றவர்களுக்கும் வாழ்வளிக்காமல் பயனின்றி நடமாடுகின்றான். அதனாலேயே வாழ்வாங்கு வாழ்தலைத் தெய்வமாக்கினான்.

வள்ளுவர் காலத்தில் மனிதர் பூசித்தது தெய்வத்தை பூசிப்பவன் சாத்தான். ஆனால், பூசனையால் வரும் பயனென்ன? தெய்வ மணம் கமழும் இன நலம் உடையவனே தெய்வத்தைப் பூசித்தற்குரியவன். சாத்தானின் இடம் சுடுகாடு.

தெய்வங்களின் இடம் மனித இனம் நடமாடும் மலர்ச்சோலை; திருக்கோயில்கள். ஆதலால், சாத்தானாக விளங்கும் மனிதனைத் தெய்வமாக்கவே வள்ளுவம் பிறந்தது. ‘வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வம் என்று வள்ளுவம் பேசுகிறது.

வள்ளுவம் ஏன் பிறந்தது? என்று இதயத்தில் பட்டதை எழுதியிருக்கின்றோம். வள்ளுவம், பதவுரை பொழிப்புரைக் காகப் பிறக்கவில்லை. மண் செழிக்க மழை பொழிவதுபோல, மனிதகுலம் செழிக்க-மனிதகுல உள்ளங்கள் செழிக்க-உலகு செழிக்க-உயர் கடவுள் சிரித்து மகிழ வள்ளுவம் பிறந்தது!

முடிந்தால்-மனமிருந்தால் வள்ளுவம் பிறந்ததன் பயனையடைய வழி காணுங்கள்! வையகம் சிறக்கும்! அல்லது வழக்கம் போல வாழ்த்துரைகளில் வாணாளை வீணாக்குங்கள்! அது உங்கள் விருப்பம்! வள்ளுவரே, ஏவவும் செய்கலான் தான் தேரான் என்று நொந்து கூறியுள்ள பொழுது நாம்தான் என்ன செய்யமுடியும்?

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினுரஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.

ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே
செல்லும் வாயெல்லாம் செயல்.

ஒழுக்கம்

ரந்துபட்ட இந்த வையகத்தை, உயிரினத்தை, மக்கள் தொகுதியை ஒன்றோடொன்று முரணாகாமல்-மோதாமல் வழி நடத்துவது ஒழுக்கமேயாகும். நல்லொழுக்கத்தின் ஊற்று அன்பேயாகும். யாருக்கும் தீமை செய்யாது, எந்த உயிருக்கும் தீமை செய்யாது எவ்வுயிர்க்கும் அன்புகாட்டி, நல்லன. செய்தலே நல்லொழுக்கம்.

இத்தகைய நல்லொழுக்கம் தன்னியல்பினதாகஆற்றொழுக்காக அமையும்பொழுது உயர்ந்த ஒழுக்கமெனப் போற்றப்பெறுகிறது. ஒழுக்கத்தின் குறிக்கோள் உயிர்களுக்கு அன்பு செய்தல் ஆனாலும், அதன் செயல் முறைகள் விரிந்தது; நுட்ப மானதுங்கட! உயிரிலும், உணர்விலும், அறிவிலும், புலன்களிலும், பொறிகளிலும் தூய்மையும் துணிவும் கொண்டோரே ஒழுக்கமுடையவராய் வாழ்க்கையில் வெற்றிபெற இயலும். தூய்மையும் துணிவுமே துணை.

நல்லொழுக்க நடைப்பயணத்தில் விழுந்து விழுந்து எழுவோரே ஏராளம். இன்று ஒழுக்கமுடைமை என்ற சொல்லுக்கு நடைமுறையில் பொருள் மிகக் குறுகிய எல்லைக்கு வந்துவிட்டது. பொதுவாக மனிதனிடத்தில் தன்னிலை ஒழுக்கம், பொதுநிலை ஒழுக்கம் அல்லது சமுதாய ஒழுக்கம் என்ற இரண்டுவகை ஒழுக்கம் தேவைப்படும். மனிதர்கள் இவ்விரண்டிலும் ஒருசேர வெற்றிபெற்று விளங்குவதில்லை.

ஆனால், நம்முடைய நாட்டு அமைப்பில் தன்னிலை ஒழுக்கத்தில் வெற்றி பெற்றோர் எண்ணிக்கை மிகுதி. தன்னிலை ஒழுக்கத்தில் வெற்றிபெற்றுப் பொதுநிலை ஒழுக்கத்தில் வெற்றி பெறாது போனால், கொங்கண முனிவர், இராவணன், சூரபத்மன் ஆகியோர் அடைந்த

நிலைதானே! இவர்கள் உடலிச்சையில் வெற்றி கண்டவர்கள் நிறைந்த தவம் செய்தவர்கள்.

ஆனால், மற்றவர்களை மதிக்கத் தெரியாதவர்கள் மற்றவர்களின் துன்பத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள். யான்னகூட சைவம்தான்! அது புலால் உண்பதில்லை. கள் குடிப்பதில்லை. ஆனாலும் அறிந்தறிந்தும் அது பாகனையே கொல்கிறது. இதனால், தன்னிலை ஒழுக்கம் போதாது என்பதல்ல. தன்னிலை ஒழுக்கத்தின் நிறைவு, பொதுநிலை யொழுக்கத்தில்தான் இருக்கிறது என்பதுதான் உண்மை. தன்னிலை ஒழுக்கம், பொதுநிலைவொழுக்கத்திற்கு வழிவகுக் காது போனால், பயனில்லை.

அதுபோலவே, பொதுநிலை ஒழுக்கம் நிலைபெற வேண்டுமானாலும் தன்னிலை ஒழுக்கமும் தேவை. ஒரோ வழி, பொதுநிலை ஒழுக்கத்தில் வளர்ந்திருந்து தன்னிலை ஒழுக்கத்தில் தவறுகள் இருந்தாலும் தரணி தாங்கிக் கொள்ளும். ஆனால் பொதுநிலை ஒழுக்கத்தில் ஏற்படும் புரை, வேறு ஒழுக்கக் கேடுகளுக்குக் காரணமாக அமைகிறது.

திருவள்ளுவர், மனிதனின் தனி வாழ்க்கையிலும் சரி, சமூகப் பொதுநிலை வாழ்க்கையிலும் சரி சிறப்புக்கும் நல்லின்பத்திற்கும் அடிப்படை ஒழுக்கமென்றே கூறுகிறார்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப் படும்

என்பது குறள்.

உலகியலில் அனைத்துத் துறையிலும் துய்ப்பிற்கு மூலமாய், முதலாய் இருப்பது உயிரே! உயிரில்லையாயின் உடல் தனியே துய்ப்பிற்குத் தகுதியற்றதாகி விடும்; மதிப்பற்ற தாகிவிடும். அஃது ஒரு பிணம். உயிரற்ற உடலால் என்ன பயன்? ஆதலால், வாழ்க்கையின் உண்மை உணர்ந்தோர் உயிரைப் பேணத்துடிப்பதைப்போல உயிர்க்கு உயிராயிருந்து உயிரைப் பொருளுடையதாகப் புகழுடையதாக ஆக்கும் ஒழுக்கம் உயிரினும் சிறந்தது.

உயிரின் இன்பநெறித் துய்ப்பிற்கும் பெருமைக்கும். ஒழுக்கம் காரணமாக ஆதலால், "உயிரினும் ஒம்பப்படும்” என்றார். ஒம்புதல் என்ற சொல், தொடர்ச்சியாகப் பேணுதல்-பாதுகாத்தல் என்ற பொருள் தரும். ஒழுக்க நெறி நிற்பார்க்கு இழுக்கல் வருவது இயற்கை.

இழுக்கல் வந்துழியும் ஒழுக்கத்தில் தாழாது, இடையறாது இடர்களையும் தாங்கிக்கொண்டு ஒழுக்கத்தைப் பேணுதல் வேண்டும் என்ற குறிப்புத் தோன்ற "ஓம்பப்படும்" என்றார். வாழ்க்கை யென்ற மாளிகைக்கு உண்மையான ஒளியூட்டுவது ஒழுக்கமேயாம்.

பத்திமை-அருள்

வாய்மை நெறியை முயன்று அடைதல் அரிது. பெற்ற வாய்மையைப் பேணிப் பாதுகாக்கத் துணை செய்வது பக்தி, பத்திமை என்பது முழு நிறை ஞானத்தில் தோன்றும் உணர்வு உயிரினை இன்ப அன்பில் வளர்க்கும் உணவு. பக்தி, நிறைவில் விளையும் ஆக்கம். பத்திமையால் பழவினைகள் மாறும்.

நேற்றைய துன்பங்கள் துடைத்து எறியப்படும். துன்பத்திற்குரிய காரணங்களும் அகற்றப்படும். நிகழ்கின்ற வினை அனைத்தும் தூய தவமாக அமைந்திருக்கும். ஆதலால் எதிர்வினை இல்லை. இந்நிலையிலேயே "இன்பமே எந்நாளும் துன்பமில்லை" என்ற முழக்கம் கேட்கிறது. துன்பத்திற்குக் காரணமாய மாசுகளினின்றும் அதாவது அவாக்களினின்றும் அறவே விலகிய புலன்களே பத்திமையில் தோய்ந்த புலன்கள்.

ஆரூரர், தில்லையின் திரு நடனத்தை ஐந்து பேரறிவும் ஒரு நெறியில் நின்று வழிபாடு செய்த நிலையே பத்திமையின் முதிர்ந்த நிலை. பொறிகளும் புலன்களும் அருள் வழியால் தலைவன் வழியில் நிற்கும்போது ஏது துன்பம்? எரிகின்ற நெருப்பில் குப்பைகள் விழுந்தால் நெருப்பு அணையாது. தூய்மை கெடாது. ஆனால், குப்பை எரியும். குப்பைகள் துய்மையுறும்.

பத்திமையுடையோர் எங்கும் இறையருளைக் காண்பர்; எதிலும் இறையருளைக் காண்பர்; அவர்களுக்கு விருப்பும் இல்லை. வெறுப்பும் இல்லை, பகைவரும் இல்லை, நண்பரும் இல்லை. மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கித் தண்ணிர் ஓடி வருவதைப் போலப் "பள்ளந்தாழ் உறுபுன லாகத்" திருவருளை நோக்கியே உணரத் தலைப்படுவர். செயல் செய்வர். பத்திமை என்பது செயலற்ற நிலையன்று. செயல் நிறைந்த நிலை.

ஆனாலும் பத்திமையின்பாற்பட்டொழுகுபவர்கள் செய்யும் செயலில் இலாப நோக்கு இல்லை. புகழ் நாட்டமில்லை. உயிர்கள் இன்டறுதலே நாட்டம். பத்திமையிற் பழுத்தவர்கள் வேற்றுமைகளை அகற்றுவர். ஒருமைப் பாட்டை வளர்ப்பர். அதுவே தூய அருள் நெறி.

வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை யில

என்பார் வள்ளுவர். துன்பத்தின் பிறப்பிடமே வேண்டுதல் வேண்டாமை தான். உண்ணுதற்குத் தகுதியில்லாத கிழங்கை உண்ணும் நிலைக்குச் சுவையாக்கித் 'தருவது அவித்தல் தொழில், கிழங்கு அவித்தல், இட்டலி அவித்தல், இடியாப்பம் அவித்தல் என்ற சொல் வழக்கை அறிக. அதுபோல் தனக்கும் மற்றவர்களுக்கும் சுவையற்றவையாக-ஆனாலும் சுவையுடையன போல நடிக்கும் பொறிகளை அன்பில் நனைத்து, உணர்வுகளை அவித்தலே பத்திமை நெறி.

ஐம்பொறிகளை அடக்குதல் என்பது பொருந்தா வழக்கு. இயலுவதும் அன்று. ஐம்பொறிகளை, தன்னல வழியில் நாடிச் செல்லும் பொறிகளை மடைமாற்றிப் பத்திமையில்- அருள் வழியில் செலுத்துக என்பார் திருமூலர்.

உண்ணுதல் நாள்தோறும் நடைபெறும் கடமை. உண்ணுதற்காகவே வாழ்தல் விலங்கியல்பு. வாழ்தலுக்காக உண்பது வளர்ந்த நிலை மற்றவர்களை வாழ்விக்க வாழ்தல் பத்திமையில் பழுத்த அருள்நிலை. மற்றவர்களை வாழ்விப்பதற்குரிய தொண்டு செய்ய உடல்நலம் வேண்டும் என்பதற்காக உண்பது அருள்நிலை. பொருளை இவறிக் கூட்டி எண்ணிச் சேர்ப்பதற்காக ஈட்டுவது அசுர குணம். இரப்பவர்க்கு ஈந்து உதவப் பொருள் வேண்டும் என்று ஈட்டுவது தவம்: அறநெறி முயற்சி.

பொறிகளால் மற்றவர்களுக்குத் துன்பம் தாராமல் அவித்துப் பக்குவப்படுத்திய நிலையே அன்பின் நிலை; இன்ப நிலை, அப்போதே இறைவன் அருள் அவர்கள் வாயிலாக வையத்திற்குக் கிடைக்கிறது. எல்லாச் செல்வத்திலும் மேற்பட்டது அருட்செல்வம்.

அருட்செல்வம் செல்வத்துட் செல்வம்

என்பது வள்ளுவம்.

அருள் நெறியில் வையகம் வளரும் பொழுது துன்பம் தீரும். என்றும் இன்பம்பெருகும். குறைவிலாது உயிர்கள் வாழும். நீதி நிலவும். விண்ணகத்தை மண்ணகத்தில் காணலாம். அதுவே வள்ளுவர் வழி. அவ்வழியில் சென்று வாழ்க்கையாகிய மாளிகையைக் கட்டுவோம். அந்த மாளிகையில் நானிலத்தார் அனைவரும் ஒரு குலமாகக் கூடிக் கலந்துண்டு மகிழ்வோம்.

செல்வம்

"செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்” என்பது வள்ளுவர் திருவாக்கு செல்வங்களில் எல்லாம் சிறந்தது செவி வழியாகக் கேட்கும் கேள்விச் செல்வம். ஏன்? ஏனைச் செல்வங்களை யெல்லாம் பெறுதற்குத் துணையாய அறிவினை வழங்குவதில், கேள்வி துணை செய்வதைப் போலப் பிறிதொன்று துணை செய்வதில்லை. ஏன்? கற்கும் கல்வியின் மூலம் அறிவு பெற நூல்களைக் கற்கின்றோம்.

நூல்களை ஆக்கியோர் எல்லோரும் முழுமையான பட்டறிவுடையோர் என்று கூறுதல் இயலாது. அதோடு நூல்களின் ஆசிரியன் காலமும் வாழ்கின்ற நமது காலமும் மாறுபட்டன. ஆதலால், நூல்கள் நடைமுறை வாழ்க்கைக்கு ஒரளவுதான் துணை செய்யும். ஆனால், கேள்வியோ நமது காலத்திலேயே வாழும் மனிதர் சொல்வது; அதுமட்டுமல்ல. இங்கே சொல்லுபவர் பல நூல்களைக் கற்றவராகவும், அனுபவங்களைப் பெற்றவராகவும் இருப்பார். மேலும், நூலாசிரியன் சொல்லுகிற ஆசிரியன் அளவுக்கு உணர்விற் கலப்பதில்லை. ஆதலால், நூல்கள் கற்கும் முயற்சியிலும் சிறப்புடையதே ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் சொல்வதைக் கேட்பது.

இங்ஙனம், செவிச் செல்வம் உயர்ந்ததாயினும் நூல்களைக் கற்பதால் விளையும் தீங்கைவிடச் செவியினால் விளையும் தீங்கும் அதிகமாகின்றது. நூல்களைக் கற்க முயற்சி தேவை. இந்த முயற்சியை எளிதில் எல்லோரும் பெறுவ தில்லை. ஆனால், செவிகள் எப்போதும் திறந்த நிலையின; கேட்டுக்கொண்டேயிருக்கும் இயல்பின.

அதுபோலவே, நூலாசிரியர்களாக எல்லோரும் ஆகி விடுவதில்லை. மிகச் சிலர்தான் எழுதுகின்றனர். ஆனால், வாய் படைத்தவர்களெல்லாம் சொல்லுகின்றனர். எதைச் சொல்லுகின்றோம் என்று எண்ணிக்கூடப் பார்த்துச் சொல்லும் தகுதி யில்லாதவர்கள், இன்று சொல்லுகின்றனர். நூலிலே விளையும் குற்றங்களை விடச் சொல்லிலே விளையும் குற்றங்கள் மிகுதி, வள்ளுவர் சொல்லிலே தோன்றும் குற்றங்களை, வகுத்தும் விரித்தும் கூறியுள்ளார்.

அதாவது, பயனில சொல், நயனில சொல், இன்னா கூறல், புறங்கூறல், பொய்மை, தீச்சொல் என்றெல்லாம் சொல்லில்வரும் குற்றங்களை எடுத்துக்காட்டியுள்ளார். வாய் படைத்தவர்கள் உண்ணலாம்; அது அவர்களின் ஏகபோக உரிமை, அந்த உரிமையில் நாம் யாரும் தலையிடத் தயாராயில்லை. ஆனால், வாய் படைத்தவரெல்லாம் சொல்லத் தொடங்கினால், அது மற்றவர்க்கு அல்லவா வேதனையாகிறது.

இன்று வதந்தி என்ற ஒரு புதுவகைச் சொல் சமுதாயத்தை எவ்வளவு அலைக்கழித்து வருகிறது! அது போலவே, அரசியலின் பேரால் நடைபெறும் மேடைகளில் இன்று வார்த்தைகளா வழங்கப்பெறுகின்றன! இல்லை, இல்லை வசையேதான்! ஆதலால், செவிச்செல்வம் உயர்ந் ததும் கூட! ஆனால் அதை அடைவது எளிதன்று. அதனால் தான் வள்ளுவம் "எனைத்தானும் நல்லவை கேட்க!” என்றது.

இன்று நிறைவான செவிச்செல்வம் மிகுதியும் கிடைப்பதில்லை. ஒன்றைச் சொல்லும் தகுதி, நிறைந்த பட்டறிவுடை யோருக்கேயுண்டு. ஆனால், இன்று நம் நாட்டில் ஒரு புதுவிதமான விவாதம் தொடங்கியுள்ளது. அது என்ன? சொல்லுகிறவருடைய சிந்தனையும் செயலும் ஒத்திருக்க வேண்டுமென்பது. இந்தக் கொள்கை, கொள்கை யளவில் தவறில்லை; அல்லது மனிதனின் பரிணாம வளர்ச்சி என்பதை மையமாகக் கொண்டு எண்ணும்பொழுது இக்கொள்கை நடைமுறைக்கு இசைந்ததன்று.

ஏரித்தண்ணிரில் வீழ்ந்து தவிக்கும் ஒருவன், கரையில் நிற்பவனை 'ஏரி ஆழமானது; வீழ்ந்து விடாதே!” என்று எச்சரிப்பதில் என்ன தவறு? ஒன்றில் வீழ்ந்து தத்தளிப்பவர் தானே மற்றவர்களை விழாதே என்று எச்சரிக்க முடியும். அதுபோலவே வாழ்க்கையில் தவறுகள் செய்தவர்களும், தவறுகளை நினைந்து வருந்துபவர்களும், தவறுகளிலிருந்து மீளப் போராடிக் கொண்டிருப்பவர்களும் மற்றவர்களைத் தவறு செய்யாதே என்று கூறுவது தவறு அன்று. ஆயினும், சொல்பவர் முழுமைான அனுபவ முதிர்ச்சியுடைய வராகவும், கேட்போரிடம் கங்குகரையற்ற பரிவு உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

ஆதலால், செவி கேட்பதற்குரியது; கேட்பதன் மூலம் நிறைந்த ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்குரியது. ஆனால், செவிச் செல்வத்தைத் தேர்ந்து கேட்க வேண்டும்! தெளிந்து கைக்கொள்ள வேண்டும். இயல்பான வடிகட்டிகள் செவிகளுக்கு இல்லாததால், நாம் நம்முடைய பகுத்தறிவை வடிகட்டியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல், செவியிற் கேட்பதைச் செயலுக்குக் கொண்டுவரக் கூடாது. பகுத்தறி வோடு தொடர்பில்லாத செவிவழிச் சொற்கள், உணர்ச்சிகளையே தூண்டும். இவை அறிவுக்கும் பயன்படா. ஆள்வினைக்கும் துணை செய்யா, வாழ்க்கைக்கும் உதவா.

ஆதலால், செவியினை முறையாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வது அவசியம். வாய்ப்பிருந்து நல்ல செவிச் செல்வம் கிடைக்குமானால், கோடை மழை பெய்ததைப் போல ஆன்மா செழிக்கும். அதனால்தானே, ஆன்றோர் காலந்தொட்டு உணர்வைத் தரும் தகுதியில் நூலினும் மிகவும் சிறந்தவர் அதனை விளக்கிச் சொல்லும் ஆசிரியனே என்பதைச் சமய மரபில் தோன்றிய ஆலமர் செல்வனிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. செவிச்செல்வம் கொள்வோம்! தேர்ந்து கொள்வோம்! தெளிந்து செயற்படுவோம்!

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

திருக்குறள் தேசிய நூல்

யிர்க்குலம் எண்ணில அளப்பில; கணக்கில் வந்துள்ள உயிர்க்குலம் ஒரு பகுதியே! பெயர் பெற்று வழக்கில் வந்துள்ள உயிர்க்குலமும் ஒரு பகுதியே! நம்முடைய கவனத்தைக் கடந்து-பெயர்களைக் கடந்து வாழும் உயிர்க்குலம் பலப் பல. உயிர்க்குலத்தின் எண்ணிக்கை பல நூறாயிரமாக இருப்பினும் அவற்றுள் விஞ்சிய பெருமை மனித உயிருக்கே உண்டு. மானிட உயிர் விலைமதிப்பற்றது.

பலநூறு ஆண்டுகளின் வளர்ச்சியில்-முதிர்ச்சியில் முகிழ்த்ததே மானிட உயிர். மற்றைய உயிர்த்தொகுதிகள் வெற்றிக்கு ஆட்படுபவை. மானிட உயிர் வெற்றிகளை ஆளுபவை. “மானுடம் வென்றதம்மா!” என்பான் கம்பன். மானிட உயிரின் அருமை நோக்கித்தானே "மனிதப் பிறவியும் வேண்டுவதே" என்றார் அப்பரடிகள். இயல்பில் மானிட சாதி உயர்வுடையதே.

ஆயினும்; உயர்வுக்குரிய காரணங்கள் முற்றப் பொருந்தாவிடின் "மானிட அமைப்பில் விலங்குகள்” என்று இலக்கியம் ஏசும்; சான்றோர் பழிப்பர்! மானிட சாதியின் உயர்வுக்கு அடிப்படை அது அறிவுள்ளது என்பதுதான்! மனம் உள்ளது. இல்லை. இருக்கும் மனம் இயங்குவது; உணர்வுடையது. இந்தச் சிறப்பியல்புகள் சிறப்பாக அமையாது போனால் மானிட சாதியிலும் விலங்கியல் உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் காரணமாக வேற்றுமைகள் கால் கொள்கின்றன. அவ்வழி பகை கால்கொள்கின்றது; கலகங்கள் தோன்றுகின்றன போர்கள் மூளுகின்றன. வளம்-வறுமை வேறுபாடுகளின் காரணமாகப் பொதுமை மறைகிறது.

இந்தக் குறைகள் நீங்க மனிதனைச் சிந்திக்கப் பழக்க வேண்டும். அவனுடைய அறிவுப் புலனை இயக்குதல் வேண்டும். மனத்தின் இயக்கத்தை வெளிப்படுத்துவது உணர்வே. உணர்வின் மையம் கருத்துக்களே! கருத்துக்களைப் பெறும் வாயில் கற்றலும் கேட்டலுமாம். கற்ற-கேட்ட நற்செய்திகளின் வழி வாழ்க்கையை இயக்கும்பொழுது அறிவு தோன்றுகிறது. அறிவு மற்றவர்களோடு பழகும்பொழுது ஒழுக்கமாக உருப்பெறுகிறது.

இத்தகைய மானிட சாதியின் ஒழுக்கம் சிறப்புற அமைய வேண்டும். மனித குலத்தில் பொது ஒழுக்கம் சிறக்குமாயின் ஒருலகம் தானே தோன்றும். இன்று "ஒருலகம்” என்பது வாய்ப்பேச்சே! "யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்பது மேடையோடு சரி! "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்!” இந்த முழக்கம் பஜனை மடங்களிலேயே கேட்கிறது. ஆனால், பஜனை முடிவில் மரியாதை யாருக்கு? என்ற சண்டை நீங்கினபாடில்லை. சுண்டல் விநியோகச் சிக்கல்கள் தீர்ந்தபாடில்லை. அன்பிற் பிறந்த மதங்கள் ஆதிக்க உணர்வுடையவர்களின் கையில் சிக்கி மதச்சண்டைகள் மலிந்து வருகின்றன.

பாபத்தை நீக்க-புண்ணியத்தை வழங்கத் தோன்றிய பிரார்த்தனைக் கூடங்கள் பணம் பேரம் பேசும் வணிக நிலையங்களாக உருமாறிவிட்டன. இவ்வளவுக்கும் காரணம் மனிதமனம் தடம்புரண்டதுதான்! தடம் மாறியதற்குக் காரணம் தகுதியல்லாத போதனைகள்; எல்லைவயப்பட்ட சிறுமைச் சிந்தனைகள்! மனித உலகம் மேம்பாடடைய மனம் திருந்த வேண்டும். மனம் திருந்த மருந்து நற்கருத்தேயாம். நச்சுத் தன்மையான கருத்துக்கள் எழுத்தில், பேச்சில் அகற்றப்பெற வேண்டும். உயர்ந்த கருத்துகள் ஊட்டப் பெறுதல் வேண்டும்.

உயர் கருத்துகளே மானிட சாதியின் புகழுக்கு ஊற்று. இத்தகைய உயர் கருத்துகள் உலக மொழிகளில் உள்ளன: சமயச் சாத்திரங்களில் உள்ளன. ஆயினும் முழுமையான நலக்கருத்துகளே நமக்குத் தேவை. காலத்தின் விளைவாகச் சில உயர்ந்த கருத்துக்களோடு களையும் கலந்திருக்கும். களை நீக்குதல் கற்றறிந்தார் கடன். எந்த விலை கொடுத்தும் மனிதகுல ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற வேண்டும். ஒருமைப்பாட்டுக்குரியதான கருத்துக்களையே வற்புறுத்த வேண்டும்; விளக்க வேண்டும்; எழுத வேண்டும்! பேச வேண்டும்.

ஆனால் ஒரு தற்காப்பு விதியும் தேவை. புலிக்கும் பூனைக்கு மிடையில் ஒருமைப்பாடு நிலவத்தான் வேண்டும். ஆனால் புலி, புலியாகவே பூனையை எடுத்துச் சாப்பிடும் பட்சத்தில், பழக்கத்தில் இருக்கும் வரையில் பூனையிடம் போய், புலியிடம் நேசமாக இரு என்று பேசுவது நெறியும் அன்று முறையும் அன்று.

அதுபோலத்தான் ஆண்டான்-அடிமை; உடையார்இல்லாதார், உயர்ந்தார்-தாழ்ந்தார் என்ற வேறுபாடுகளைச் சகித்துக் கொள்கின்ற ஒருமைப்பாடு. உபதேசம் நீதிக்குத் துணை செய்யாது. ஆதலால், மனிதகுல ஒருமைப்பாட்டுத் தத்துவம் மிகமிக உயர்ந்தது. அதை நோக்கித்தான் உலக அறிஞர்கள் கருத்துக்களைத் தீட்டினர். சமய ஞானியர் சித்தாந்தங்களைக் கண்டனர். ஆயினும், வேற்றுமைகளே வளர்ந்து வந்துள்ளன. எல்லைகளே பெருகியுள்ளன. இதயங்கள் சுருங்கி வந்துள்ளன.

இன்று சுருங்கிக் காட்சியளிக்கும் மனித இதயத்தை விரிவடையச் செய்ய - வேற்றுமைகளைக் குறைக்கவேற்றுமைகளைக் கடந்த ஒருமைப்பாட்டைக் காணஒருமைப்பாடுடைய ஒருலகம் காண முயற்சி செய்ய வேண்டும். அந்த வழியை நமக்குக் காட்டும் கருத்து எது? அக்கருத்தினை வழங்கும் நூல் எது? அது உலகப் பொது மறையான திருக்குறள் ஒன்றே.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.


நாட்டு வெறி உண்டாக்காத இலக்கியம்

ந்த உலகம் விரிந்தது, பரந்தது. கட்புலனுக்கு வந்துள்ள உலகமே நமக்குத் தோன்றுகிறது. கட்புலனுக்கு வராத உலகமும் உண்டு. இந்த விரிந்த உலகம் உயிரினங்கள் வளர்ந்து வாழவே. இயற்கையின் மாறுபாடுகளால் உலகம் பிரிக்கப்பட்டிருக்கிறது. உலகத்தை இயற்கையில் பிரித்திருப்பது வேலியல்ல; இயற்கையின் சின்னங்களே!

ஆழமான கடல்கள்! உயரமான மலைகள்! இவைகளே இன்று உலகத்தைப் பிரித்துக் காட்டும் எல்லைகள்! இவையும் நிலையான எல்லைக்கோடுகளல்ல. இன்று கடலாக இருப்பவை ஒரு காலத்தில் மலையாகவும், இன்று மலையாக இருக்குமிடங்கள் ஒரு காலத்தில் கடற் பகுதியாகவும் இருந்துள்ளன. ஊழி மாற்றங்கள் உலகத்திற்கு உருமாற்றங்கள் தந்துள்ளன. அதனால், உலகம் முழுவதும் ஒருநாடே என்ற சிறந்த உணர்வு தோன்ற வேண்டும்.

தகுதி வாய்ந்த மனிதர்கள் என்றும் எல்லைகளைக் கடந்தே வாழ்ந்து வந்துள்ளனர். எல்லைகள் சிறுமைத் தனமுடையன. எல்லைகளைக் கடந்து அன்பு பாராட்டுதல் உயரிய பண்பு. மனித சமுதாயத்தின் தொடக்க காலத்தில் நாடு, எல்லை நிர்ணயிப்புப் போராட்டங்கள் இருந்ததில்லை. மக்கள் சுதந்திரமாக வாழ்ந்தனர். உலகின் பரப்பளவு அதிகமாக இருந்ததாலும், இயற்கைத் தடைகள் இருந்ததாலும் உறவுகள் வளராமல் இருந்திருக்கலாம்; ஆனாலும் பகையில்லை. அதற்கு மாறாக எனது நாடு, உனது நாடு என்று நாட்டுப் பற்றுக்களை வளர்ப்பது நன்றன்று. இந்தக் குறுகிய நாட்டுப் பற்றுக்களின் காரணமாகவே ஒருநாடு இன்னொரு நாட்டோடு மோதுகிறது. நாட்டுக்கும் நாட்டுக்கும் இடையே சண்டைகள்! ஒரே சமயத்தைச் சார்ந்த இரண்டு நாட்டில் வாழும் மதத்தலைவர்கள் தத்தம் நாடு வெற்றி பெற வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திக்கும் வேடிக்கையை ஐரோப்பிய வரலாற்றில் பார்க்கின்றோம்.

இந்திய மொழி இலக்கியங்களில்கூட மன்னர் வழி நாட்டுச் சண்டைகள் ஏராளம்.! புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை முதலிய நூல்கள் இத்தகைய சண்டை களைத்தானே வருணிக்கின்றன! உலகு தோன்றிய நாள் தொட்டு நாளதுவரை நாட்டுப்பற்றின் காரணமாகவும், ஆக்கிரமிப்புக்களின் காரணமாகவும் நடைபெற்று வந்துள்ள போர்கள் பலப்பல. மனித சக்தியில் ஒரு கணிசமான விழுக்காடு நேற்றும் போரிலேயே கழிந்திருக்கிறது; இன்றும் கழிந்து வருகிறது; போரில் செலவழிந்த-செலவழிந்து கொண்டிருக்கிற மனித சக்தியை மனித குலத்தின் ஆக்கத் திற்குப் பயன்படுத்தியிருந்தால் இந்த உலகைவிட்டு வறுமையை அறவே அகற்றியிருக்க முடியும். ஆனால் அந்த உயர்ந்த எண்ணம் உலகில் இன்னும் உருப்பெறவில்லை.

வாழப்பிறந்த உயிர்களையும் வாழும் உலகத்தையும் அழிப்பது நாட்டுப்பற்றாகாது. குறுகிய எல்லைக்குட்பட்ட நாட்டின் சிறப்பை எடுத்துக்கூறி,அதில் உணர்வை வளர்த்து நாட்டுப்பற்றை உண்டாக்கிப் பிற நாட்டாரோடு போராடத் தூண்டும் தன்மையனவாக அமைந்துள்ள இலக்கியங்கள் நாட்டு இலக்கியங்களாக-உலக இலக்கியங்களாகத் திகழும் தன்மையுடையனவாகா.

திருவள்ளுவர் காலத்திற்கு முன்பும், அவர் காலத்திலும் குறுகிய நாட்டுப்பற்று வளர்ந்து மனித உலகத்தை அழித்துக் கொண்டிருந்தது. ஆனால், திருவள்ளுவர் இந்த நாட்டுப் பற்றைக் கடந்து சிந்தித்தார். அவரது சிந்தனை உலகம் தழிஇயது. திருவள்ளுவர் நாடு பற்றிய பல குறட்பாக்கள் இயற்றி உள்ளார். எந்த நாட்டைப் பற்றி? தமிழ் நாட்டைப் பற்றியல்ல; "நேமம் நாட்"டைப் பற்றியுமல்ல. திருவள்ளுவர் காட்டும் நாடு, மக்கள் வாழும் நாடு.

வள்ளுவர் கூறும் நாட்டிலக்கணம்-எல்லைகளின் இலக்கணமல்ல. திருவள்ளுவர் நாட்டு எல்லைகளுக்கு உட்பட்டுத் தவிக்கும் மனிதனை எல்லைகளைக் கடந்து வளர்க்க ஆசைப்பட்டார். நாடு, எந்த நாடாக இருந்தாலென்ன? ஊர் எதுவாக இருந்தாலென்ன? அந்தந்த நாட்டையும் தான் பிறந்து வளர்ந்த நாட்டைப் போலவே உறவாலும் உணர்வாலும் ஆக்கிக் கொள்ள வேண்டும். அங்ங்னம் வாழக் கற்றுக் கொள்ளுதலே கல்வி என்றார்.

யாதானும் நாடாமால்

என்பது திருக்குறள். நாட்டுப்பற்று என்ற பெயரில் குறுகிய எல்லைப்பற்றை உண்டாக்கவில்லை. குறுகிய நாட்டுப்பற்றை அல்லது வெறியை உண்டாக்கத்தக்க வகையில் திருவள்ளுவர் ஒரு சொல்லைக்கூடப் பெய்யவில்லை, எந்த ஒரு மலையையும் கடலையும் ஆற்றையும் எடுத்துக்காட்டுக்குக் கூட அவர் பெயர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. திருவள்ளு வரின் நாடு இது அன்று; அது அன்று. மானிடசாதி வாழும் உலகமனைத்தும் அவருடைய நாடேயாகும்.

அப்படியானால், படை அரண் ஆகியன பற்றி வள்ளுவர் கூறியுள்ளாரே என்று கேட்கலாம். அவை நாட்டெல்லையின் விரிவாக்கத்தை நோக்கமாகக் கொண்டு கூறியவையல்ல. அவை தற்காப்பு முயற்சி குறித்தனவே. நீதி,

மனிதகுலம் முழுவதுக்கும் உரிமையாகிற வரையில் நீதியை, நீதியிடமிருந்து காப்பாற்ற வேண்டியிருக்கிறது. காப்பாற்றும் முயற்சிக்கே வள்ளுவர், படை என குறிப்பிட்டுள்ளார்.

உலக இலக்கியங்களிலேயே நாட்டு வெறியை உண்டாக்காத இலக்கியம் திருக்குறள் ஒன்றே. மார்க்ஸ் மாமுனிவரும் குறுகிய எல்லைக்கோடுகளைக் கண்டிக்கிறார். பொதுவுடைமைத் தத்துவத்தின் இலக்கே சர்வதேசீயம்தான். இந்த இழையோட்டம் பழைய இலக்கியங்கள் சிலவற்றில் இல்லாமல் இல்லை. இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய புறநானூற்றுப் புலவன் கணியன் பூங்குன்றன் "யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்று ஒலித்தது பாராட்டுதலுக்குரியது. ஆனால், அந்தத் தத்துவம் முழுமையடையவில்லை.

சேக்கிழாரும் கூட அற்புத நிகழ்ச்சிகளைக் குறிப்பிடும் பொழுது "உலகம் உய்ய” என்று கூறியுள்ளார். ஆயினும் தொண்டை நாட்டைச் சேக்கிழார் பாராட்டுவதைப் பார்த்தால் தொண்டை நாட்டுப்பற்றே தோன்றும். அது அவர் காலத்தின் சூழ்நிலை.

ஆனால், திருக்குறள் படித்தால் நாட்டுப்பற்று வளரும். வள்ளுவர் காட்டும் நாடு எது? எல்லைகளில் சிக்கிச் சீரழியும் நிலப் பரப்புக்களை வள்ளுவர் நாடு என்று கருதவில்லை. மக்கள் வாழும் நிலமனைத்தும் வள்ளுவரது நாடே. ஆதலால் குறுகிய எல்லைக் கோட்டுப் பற்றுக்களை அகற்றும் திருவள்ளுவரது திருக்குறளே தேசீய நூலாக இருப்பதற்குத் தகுதியுடையது.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

மொழி வெறி உண்டாக்காத இலக்கியம்

நாட்டுப்பற்றை அடுத்துத் தோன்றுவது மொழிப் பற்று. மனித குலத்திற்கு மொழி இன்றியமையாதது. மொழித் தோற்றத்திற்குப் பிறகுதான் மனித உலகம் வளர்ந்திருக்கிறது. மொழித்தோற்றத்திற்குப் பிறகு, மொழிகளால் மனித குலம் பெற்றிருக்கும் கொடைகள் பலப்பல. ஒரு மனிதன், இன்னொரு மனிதனைப் புரிந்து கொள்ள மொழியே துணை செய்கிறது. மொழி வழிதான் காதல் சிறக்கிறது; நட்பு நனி வளர்கிறது. பக்தி மலர்கிறது; நாகரிகம் தோன்றுகிறது; பண்பாடு செழிக்கிறது.

மனிதன் பேசத் தொடங்கிய மொழியால் இவ்வளவு பயனைப் பெற்றிருந்தாலும் மொழி, உலக வரலாற்றில் மாறுபாடுகள் வளர்வதற்கும் துணையாய் இருந்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் அது மொழியின் குறையன்று. மொழிப்பற்று மனிதனுக்கு விழிபோல இன்றியமையாதது; உயிரினும் இனியது. ஆயினும் ஒருமொழி எல்லையில் சிந்தனையைச் சிறைப்படுத்துதலும், அயல் மொழியை வெறுத்தலும் ஆகாது. மொழி வேறுபாடுகள் கால எல்லைகளின் மாறுபாட்டாலும், நில எல்லைகளின் தொலைவாலும் தோன்றியவையே! மொழி வேறுபாடு இயற்கையன்று. அதாவது முடிந்தால் மாற்ற முடியாததன்று. மொழிகள் தம்முள் மாறுபட்டாலும் உயர் தத்துவங்கள் மாறுபடுவதில்லை; ஆதலால் 'எனது மொழி, 'உனது மொழி என்ற சண்டை-மனித குலத்திற்குத் தீமையையே தரும். ஒருமொழி எல்லைக்குள் சிறைப்படுத்திக் கொண்டு, சிந்தனையில் வறட்சியடைதல், வளர்ச்சிக்குத் துணை செய்யாது. மொழியில் உயர்வு, தாழ்வு பாராட்டுதலும், இன்ன மொழியில்தான் கடவுளை வணங்க லாம் என்பதும் மனித குலத்தின் ஒருமைப்பாட்டுக்கு முரணானவை. வேற்றுமைப்படுத்தும் நெறியும், ஒருமைப் பாட்டுக்குத் துணை செய்யாது. உயர்வு தாழ்வு பாராட்டுதல், அவ்வழி இகழ்தல், அல்லது ஏற்றுதல் ஒருமைப்பாட்டுக்குத் துணை செய்யாது.

ஒரு மனிதன் மிகச் சிறந்த பண்பாளனாக, நாகரிகமுடையவனாக வளர்ந்து வாழ விரும்பினால், குறைந்தது ஐந்து மொழிகளையாவது படிக்க வேண்டும். வீட்டுச் சாளரங்களைச் சாத்தி விட்டால் காற்றோட்டமில்லை. அறை வெப்பத்தன்மையடையும். அதுபோல பிறமொழிச் சர்ளரங் களை அடைத்து விட்டால்-மனிதன் மிகச் சின்ன மனிதனாக மாறிவிடுவான். அவனை அற்பப் புத்திகளே ஆட்டிப் படைக்கும். இன்றைய தமிழன் மிகச் சிறந்த தமிழனாக வளர-நான்கு மொழிகளையாவது கற்க வேண்டும். அவனுடைய தாய்மொழியாகிய தமிழ், தமிழோடு உயர் கலைகளில் இணைந்து வளர்ந்துள்ள சமஸ்கிருதம், இந்தி யர்கள் பலரோடு பேச இந்தி, அறிவியற் கலைகள் கற்க ஆங்கிலம். பழந்தமிழ்ப் பண்பாட்டோடு ஒத்த, கலை நாகரிக முடைய கிரேக்க மொழி ஆகியன கற்றால், வாழ்வில் புத்துணர்வு தோன்றும். தாய்மொழிப் பணியில் முழுமையாக ஈடுபட்டவர்கள் பிற மொழிகள் பயின்றாலும், தாய் மொழியை மறக்க மாட்டார்கள். மாறாகத் தாய்மொழி அறிவில் முறுகிவளர்வர்.

அதுபோலவே இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரானாலும், தமிழைக் கற்காமல் ஒரு முழு இந்தியனாக உருப்பெற முடியாது. இங்ங்னம் பல மொழிகள் பயிற்சியும், பன்மொழிக் கருத்துக்கள் வெளிவரும் உணர்வும் தான் வாழ்வியலை வளர்க்கும். மொழிவழி வெறுப்பு சிந்தனையைத் தடுக்கும். அறிவுக்கு எல்லை கட்டும்: அருளுணர்வைத் தடுக்கும்; ஒருமைப்பாட்டுக்கு இடையூறாக முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும். இதனை நன்கு உணர்ந்த திருவள்ளுவர்-தம் நூல் முழுவதும் மொழியின் பெயரைக் குறிப்பிடவில்லை.

திருவள்ளுவரின் மொழி-தமிழ்தான் என்பதற்குச் சான்று ஏது: திருவள்ளுவர் எந்த ஒரு மொழியையும் எடுத்துக் கூறவில்லை. ஆனால் அவர் பல நூல்களின் கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதற்கு நிறையச் சான்றுகள் உண்டு.

பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாம் தலை

என்ற திருக்குறளும்,

உலகத்தார் உண்டதென்ப தில்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்

என்ற திருக்குறளும் எண்ணத்தக்கன. பரந்த தேசீயத் தன்மைக்கு, மொழிப்பற்று தடையாக இருக்கக் கூடாது. திருக்குறள் எந்த ஒரு மொழிப்பற்றையும் வளர்க்கவில்லை. ஆதலால் "திருக்குறள் ஒரு தேசீய நூலாதற்குரிய” தகுதி முழுதும் பெற்றிருக்கிறது.


இனவெறி உண்டாக்காத இலக்கியம்

யற்கையின் அடிப்படையிலும், மெய்ந் நெறியின் அடிப்படையிலும், மனிதகுலம் ஒன்றேயாம். மனித குலத்திற்கு இடையேயுள்ள வேறுபாடுகள் மாறுபாடுகளாகா. முரண்பாடுகளும் இல்லை. அவை இயற்கையில் அமைந்த தவிர்க்க முடியாத வேறுபாடுகளேயாம். மனித குலத்தை நாட்டு அடிப்படையிலோ, நெறி நிற்கும் சமய அடிப்படையிலோ வேற்றும்ைப் படுத்துதல் தவறு.

திருவள்ளுவர், நாடு, மொழிகளைக் கடந்த சிந்தனையாளராக விளங்குவது போலவே இனங்களைக் கடந்தவராகவும் விளங்குகிறார். திருவள்ளுவர் எந்த ஒரு இனத்தையும் உயர்த்தியும் பேசவில்லை; இழித்தும் கூறவில்லை. அதுமட்டுமின்றி உயிர்க் குலம் அனைத்திற்கும் ஒத்த உரிமை இருக்க வேண்டுமென்று ஐயத்திற்கு இடமின்றிக் கூறுகின்றார். உயிர்க்குலம் பிறப்பளவிற் பெறத்தக்க அடிப்படை உரிமைகளாகிய வாழும் உரிமை, கல்வி உரிமை, தொழில் செய்யும் உரிமை இவற்றில் எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்பது ஆகியன திருவள்ளுவர் கருத்து.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

என்பது திருக்குறள்.

திருவள்ளுவர் தம் நூலில் இனம், குலம், குடி என்று குறிப்பிட்டுப் பேசுவது உண்மை. இவைகளுக்குச் சில சிறப்பியல்புகளும் திருவள்ளுவர் தந்துள்ளார். ஆனால், இனம் என்ற சொல், திருக்குறளில் காட்டும் பொருள் வேறு. இன்று உலக வழக்கில் இனம் என்ற சொல் பெற்றிருக்கும் பொருள் வேறு. திருக்குறளில் இனம் என்ற சொல், ஒருவர் விரும்பி நலங்கருதி நாடிக் கொள்ளும் நட்பினைக் குறிக்கிறது.

ஆனால் இன்று உலக வழக்கில் இனம் என்ற சொல், பெரும்பாலும் மொழியின் அடிப்படையில் வழங்கப் பெறுகிறது. சிறு பகுதி சமய அடிப்படையிலும் வழங்கப் பெறுகிறது; சில இடங்களில் அகந்தையின் காரணமாக நிற அடிப்படையிலும், இனம் பிரித்துச் சுட்டப்படுகிறது. இங்ங்ணம் குறிக்கப்பெறும் இனங்கள் திருக்குறளுக்கு உடன் பாடுடையன அல்ல. திருவள்ளுவர் நட்பு நெறியில் நல்லினத்தைச் சிறப்பிக்கின்றார். நட்பு நெறியில் இனம் என்று சொல்லப்பட்டாலும் அஃது ஒரு கூட்டத்தைக் குறிக்காது. ஒருவர் அல்லது இருவரையே குறிக்கும். நண்பர்கள் பலராதல் இயல்பன்று. நட்பினர் பலராதல் நலம் தராது. மாறாகத் தீமை தரும். நட்பியலில் சார்ந்தவரை இனம் என்றது, பழகுவார் உடன் நின்று ஒத்துப் பழகி உயர்வினை வழங்கும் பாங்கினாலேயாகும்.

ஓர் எழுத்துக்கு இனமாகும் எழுத்து, பொருளைச் சிறப்பிக்கும்; செவிச் சுவையைக் கூட்டும். ஒரு சுவையுடைய பொருளுக்கு இனமாகும். மற்றொரு சுவைப்பொருள் பொருளின் சுவையை மேலும் கூட்டும். அதாவது, பாலுக்குத் தேன் இனம். அதுபோல ஒருவர் மற்றொருவருடன் கொள்ளும் நட்பு அவரை உயர்த்தும் வகையதாக அமைய வேண்டும். தாழ்த்துவதாக அமையின் அது தீது, அது சிற்றினம் என்று கூறித் திருவள்ளுவர் விலக்குவார்.

இங்கு, இனம் என்ற சொல், பண்பின் வழிப்பட்ட மனிதனைக் குறிக்கிறது என்பது தெளிவு. அது போலவே திருவள்ளுவர் குலம், குடி என்ற சொற்களையும் கையாளுகிறார். வடமொழி வழக்கில் நால்வகை வருணம் பேசப் பெறுகிறது. அதாவது பிராம்மணர், கூடித்திரியர், வைசியர், சூத்திரர். இந்த நால்வகை வருணமும் கூடக் கூர்ந்து நோக்கின் பிறப்பின் அடிப்படையில் அல்ல; தொழிலின் அடிப்படையிலேயேயாகும்.

தொழிலின் அடிப்படையில் சிறப்புத் தன்மை எல்லோருக்கும் அமையாது என்பதை சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமையான் என்று திருவள்ளுவர் உடன்படுகிறார். ஆனால், தமிழ் வழக்கில் குலம் திரிந்ததைப்போல, இங்கும் நால்வகை வருணத்தின் பொருள் திரிந்து விட்டது. இன்று நால்வகை வருணம் பிறப்பின் அடிப்படையிலேயே வற்புறுத்தப்படுகின்றது. பண்டு, ஒரு வருணத்திலிருந்து இன்னொரு வருணத்திற்கு முறையாக வளர்ந்து உயர்த்திக் கொள்ளும் உரிமை இருந்தது. இன்று அந்த உரிமை மறுக்கப்படுகிறது.

வடமொழி வழக்கில் வசிஷ்டரும், தமிழ் வழக்கில் திருநாளைப்போவாரும் முறையாக வளர்ந்து உயர் வருணத்தை எய்தினர். அதை அன்றைய சமூகம் ஏற்றுக் கொண்டது. வசிஷ்டர் காலத்தில் எளிதாக இருந்த ஒன்று, திருநாளைப் போவார் காலத்தில் கடுமையாக இருந்தது என்பதை உய்த்துணர முடிகிறது. ஆனாலும், திருநாளைப் போவார் காலத்தில் உரிமைகள் முற்றாக மறுக்கப்பட வில்லை என்பது உண்மை.

திருவள்ளுவர் காலத்தில் குலம், குடி என்ற சொற்களுக்கிருந்த பொருள் வேறு. மாணிக்கவாசகர், அப்பரடிகள் காலத்தில் குலம் என்ற சொல்லுக்குரிய பொருள் திரிந்து போயிற்று. அப்பரடிகள் காலத்தில் குலம் என்ற சொல் பிறப்பின்வழி சாதியைக் குறிப்பதாக அமைந்து விட்டது. அதனால் அப்பரடிகள்,

சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?

என்று கேட்கிறார். மாணிக்கவாசகரும்,

சாதி, குலம் பிறப்பென்னும் சுழிப்
பட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை

என்று குறிப்பிடுகின்றார். இங்குக் குலம் என்பது உயர் பொருளில் கையாளப்பெறவில்லை. திருவள்ளுவர் காலத்தில் குலம் என்ற சொல் குறிப்பிட்ட பண்பின் வழிக் கூடி வாழும் சிலரைக் குறித்தது. குலத்தின் இலக்கணமாகத் திருவள்ளுவர் கூறுவது நற்பண்புகளேயாம். பிறப்பை யாண்டும் குறிப்பிட வில்லை. குலம் என்பது ஒரிடத்தில் தொகுதியாக ஒரு நெறியில் கூடி வாழும் சிலரைக் குறிப்பதாகும். இந்தக் குல அமைப்பு, வேறுபாடுகளைத் தோற்றுவிக்காது உயர்வின் புலே உய்த்துச் செலுத்தும்.

இதனாலேயே கம்பர்,

குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிகட்கெல்லாம்

என்றார். கம்பரின் கருத்து, அவர் சிந்தனைச் செழுமையே தவிர அவர் காலத்து நடைமுறை அதுவன்று.

திருவள்ளுவர் அடுத்துக் கையாளும் சொல், குடி என்பது. இதுவும் பண்பின் வழிப்பட்ட சொல்லேயாம். ஒரு தலைமுறையைக் குறிக்கும் சொல்லைத்தான் குடி என்று குறிப்பிடுகின்றார். ஒருவனுடைய வழிவழித் தலைமுறை, குடி என்று குறிப்பிடப்பெறும். மூதாதை என்று திருவாசகம் குறிப்பிடும். ஆக திருவள்ளுவர், மனிதகுலத்தை வேற்றுமைப் படுத்தும் இன, சாதி, வகுப்பு வேறுபாடுகளை ஊக்கு விக்கவில்லை. பரந்த தேசிய உணர்ச்சியை வளர்ப்பதற்குரிய விழுமிய நூல் திருக்குறளேயாம்.

திருக்குறள் காட்டும் குலம், திருக்குறள் காட்டும் குடி, திருக்குறள் காட்டும் இனம் ஆகியன நாட்டு வழிப்பட்டதல்ல. பிறப்பின் வழிப்பட்டதல்ல; பண்பாட்டின் வழி, வட துருவத்தில் வாழும் மனிதன், தென் துருவத்தில் வாழும் மனிதன் ஒருவனை இனமாகக் கொள்ளலாம். கொள்ளவேண்டும். இதுவே திருக்குறட் கருத்து.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாடு, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து மனிதர் எங்குப் பிறந்தாலும், ஒத்த உரிமையுடையவர்கள் என்று முழங்கிய திருக்குறள்,

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.”

என்று கூறியது. இந்நெறி வையகத்தில் வளர்க! ஒருமைப் பாட்டுக்குரிய ஒரு தனி நூல் திருக்குறளேயாகும்.

தேசீயத் தன்மையுடைய நூல்

யர்ந்த ஒருமைப்பாட்டை அளிக்கும் கருத்துகள் உலகில் எல்லா மொழிகளிலும் உண்டு. ஆயினும், வேற்றுமை என்பதை மறந்தும்கூடக் காட்டாது இனம், மொழி, சமயம் ஆகிய வேறுபாடுகளைக்கடந்து பொது நிலையில் தோன்றிய நூல், மக்களாகப் பிறந்தோர் பேசும் வேறு எம்மொழியிலும் இல்லை. தமிழில் உள்ள திருக்குறள்தான் அத்தகைய சிறப்புடைய நூல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருவள்ளுவர் மனிதகுல ஒருமைப்பாட்டுக்குரிய மிகச்சிறந்த நூலை இயற்றித் தந்தார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித குலத்தில் நாட்டுச் சண்டைகள், மொழிச் சண்டைகள், சமயச் சண்டைகள், இனச் சண்டைகள் மலிந்திருந்த காலம். நாட்டுப்பற்றைப் பெரிதுபடுத்தி ஒருநாடு பிறிதொரு நாட்டோடு மோதி அழிப்பதை வீரம் என்று பாராட்டிச் சண்டைகளில் வெற்றி பெறுவதற்காகக் கடவுளைக்கூடப் பிரார்த்தனை செய்தனர். அந்த மாதிரியான காலச் சூழ்நிலையில் திருக்குறள் தோன்றியது தமிழகத்தின் ஒருமைப் பாட்டுணர்வுக்கு ஒர் சிறந்த எடுத்துக்காட்டு.

தமிழகம் பழங்காலந்தொட்டே ஒருமையுணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்", "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்", "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்", "எல்லா உலகமும் ஆனாய் நீயே", "எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்ற சொற்றொடர்கள், காலத்திற்குக் காலம் மனிதகுல ஒருமைப்பாட்டைத் தமிழகம் வற்புறுத்தியமைக்கு எடுத்துக் காட்டுகள். இங்ங்ணம் மிகச் சிறந்த ஒருமைப்பாட்டுச் சிந்தனைகள் த்மிழகத்தில் தோன்றினாலும், தமிழகத்தில் ஒருமைப்பாடு வளரவில்லை யென்பது என்னவோ உண்மை.

கார்லைல் என்ற அறிஞன், "ஒரு நாட்டு மக்களை இணைக்கக்கூடிய ஆற்றல் மிக்க ஒரு தேசிய இலக்கியம் இருக்க வேண்டும்” என்று கூறுகின்றான். பாரதம் விடுதலை பெற்றிருக்கிறது. பாரதம் விடுதலை பெறும் பொழுதே நாடும் துண்டாடப்பட்டுவிட்டது. இயற்கையாக இருந்த ஒருநாடு சமயத்தின் காரணமாகத் துண்டாடப்பட்டுவிட்டது. இஃது என்றும் நீங்காத வேதனை. நாடு துண்டாடப்பட்டு விடுதலை பெற்ற பிறகும் எஞ்சியுள்ள நாட்டில் இன்னமும் உணர்வு பூர்வமான ஒருமைப்பாடு வளரவில்லை.

திரும்பத் திரும்ப ஜாதி, இன, மொழிக்கலவரங்கள் தலைதுாக்குகின்றன. இந்திய நாட்டு மக்களிடம் வலிமைமிக்க ஒருமைப்பாடு தோன்றினால்தான் இந்தியாவின் விடுதலைக்குப் பாதுகாப்பு. பல்வேறு வேற்றுமைகளுடைய மக்களை ஒருநாட்டு மக்களாக்கக் கூடிய ஆற்றல் எந்த இலக்கியத்திற்கு இருக்கிறது? பாரத நாட்டில் எல்லா மாநிலங்களிலும் பரவியுள்ள காதைகள் இராமாயணமும், மகாபாரதமுமாம். இந்திய மொழிகள் எல்லாவற்றிலுமே இந்தக் காதைகள் இருக்கின்றன. இந்தக் காதைகள் தோன்றிய காலத்தில் அவை மக்களிடத்திற் சில பண்பாடுகளைத் தோற்றுவித்தன. இன்றைக்கும்கூடச் சில இன்றியமையாத சிறந்த மனித இயல்புகளைப் பெற இந்த நூல்களின் பயிற்சி துணை செய்யும்.

மகாபாரதம் வியாசமுனிவரால் செய்யப்பெற்றது. மூலம் வடமொழியிலுள்ள கதை. ஆனால், இந்திய மொழிகள் அனைத்திலும் பாரதம் உண்டு. தமிழில் பெருந்தேவனார் பாடிய பாரதமும், வில்லிப்புத்துராழ்வார் பாரதமும், நல்லாப்பிள்ளை பாரதமும் ஆக மூன்றுண்டு. பின்னால் பாரதி, பாரதத்தின் ஒரு பகுதியைப் "பாஞ்சாலி சபதம்” என்று பாடியுள்ளான். தமிழகக் கிராமங்கள் முழுவதிலும் பாரதக் கதைக்குச் செல்வாக்கு உண்டு. சாதாரணமாகக் கிராமங்களில் பாரதக் கதையை ஆண்களும் பெண்களும் கூடி இரவு முழுதும் கேட்பர். பாரதம் படித்தால் மழை பொழியும் என்ற நம்பிக்கை இன்றும் நிலவுகிறது. ஒரு மொழியில் தோன்றிய காவியம் மொழியால், வாழ்க்கை முறைால் மாறுபட்ட பிறிதொரு இனத்தில் செல்வாக்குப் பெறுவதென்பது சிறப்புத்தான். அந்த வகையில் மகாபாரதம் சிறந்த காவியம் என்பதில் கருத்து வேறுபாடில்லை.

ஆயினும் மகாபாரதம் ஒரு குடும்பத் தகராறில் பிறந்த காவியம்; சொத்துச் சண்டையில் பிறந்த காவியம். சொத்துக்களுக்காகப் பங்காளிகள் யுத்தம் செய்து கொள்ளும் கொடிய காட்சியைக் காவியத்தில் பார்க்க முடிகிறது. காவியத்தின் நாயகனே சூதாடுகிறான். பெருமைப்படுத்தப் பட வேண்டிய பெண்மை இழிவுப்படுத்தப்படும் அளவுக்கு வளர்ந்த சின்னத்தனம் காவியத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆதலால், மகாபாரதக் காவியம் ஒரளவு வளர்ந்த- பக்குவப் பட்ட மக்களிடத்தில்தான் பயனைத்தர முடியும். அதோடு, மகாபாரதம் தனிமனித ஒழுகலாற்றுச் சிறப்புக்களை எடுத்துக் கூறுவதிலேயே சிறப்புற்று விளங்குகிறது. ஒருமைப்பாட்டுக்கு மகாபாரதம் பயன்படுவது ஒரளவே.

இராமகாதை மிகச் சிறந்த காவியம். தமிழில் கம்பன் மிக அற்புதமாக அக்காவியத்தைப் படைத்திருக்கிறான். இனிய நெறிகளை இலக்கியச் சுவையுடன் படைப்பதில் கம்பன் வெற்றி பெற்றுள்ளான். இராமகாதையும் ஓர் அரச குடும்பத்தின் காதையே. மாற்றாந்தாயின் கொடுமையால் கதை வளர்கிறது. இராமகாதையிலும் அண்ணன் தம்பிகளில் யாருக்கு அரசுரிமை என்ற பதவி மோதலே. ஆனால், இராமன் உரிமையின் பெயரால் மோதாமல் தம்பிக்கு விட்டுக் கொடுத்துத் தான் காட்டுக்குப் போய் விடுகின்றான். இராமனின் பண்பாடு, தியாகம் மிகமிக உயர்ந்தது. மக்களாட்சி முறை நிலவும் நாட்டில் தேர்தல் வெற்றி, தோல்விகள் நெடிய காழ்ப்புக்கும் பகைக்கும் வித்திடுகின்றன. இராமனின் பண்பு நாடு முழுதும் கால் கொள்ளுமானால் அமைதியான தேர்தல் அரசியலில் நடைபெறும். இராம காதையில் ஒருமைப்பாட்டுக்குள்ள வித்துகள் நிறைய உண்டு.

அயோத்தியில் அரசகுடும்பத்தில் பிறந்த அண்ணல் இராமனுக்கு வானரகுலத்துச் சுக்கிரீவனும், அரக்கர் குலத்து வீடணனும், வேடுவர் குலத்துக் குகனும் உடன்பிறந்தார்களாகின்றனர். இஃது இனங்களைக் கடந்த ஒருமைப்பாடுதானே! ஆயினும், நாடு, பெண் தொடர்பான சண்டைகள், அவ்வழிப்பட்ட கொலைகள் மலிந்த காவியம். ஆதலால், இராமகாதை ஒருமைப்பாட்டுக்கு நூற்றுக்கு நூறு என்ற அளவில் துணை செய்ய இயலாது. இராமாயணம், பாரதம் என்ற நாட்டளவில் பயிலப்படும் இவ்விரண்டு காதைகளே ஒருமைப்பாட்டை வளர்க்க இயலாதென்றால் அந்த இடத்தில் வேறு எந்த நூலை வைத்து எண்ணுவது?

ஒருமைப்பாட்டை வளர்க்கும் தேசீயத் தன்மையுடைய நூல் வேற்றுமைகளை-சண்டைகளை விளக்காத நூலாக இருக்க வேண்டும். பொதுவான அறங்களைக் காட்ட வேண்டும். எல்லா மொழிவழி இனத்திற்கும், அந்த நூல் கூறும் அறநெறி ஏற்புடையதாக இருக்கவேண்டும். எல்லோரும் படித்தற்கு எளிதாகவும் இருக்க வேண்டும். அது விதித்தன செய்ய வழிகாட்டும் நூலாகவும் இருக்கவேண்டும். செய்யத் தகாதனவற்றை விலக்க வழி காட்ட வேண்டும். இந்த வகையில் மனித குலத்தை ஒருமைப்பாடுடையதாக-வளர்க்கத்தக்கதாக அமைந்துள்ள ஒரே நூல் திருக்குறளேயாகும்.

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

திருக்குறளில் சமவுடைமை

னித உலகம் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் ஒடி விட்டன. மனித உலகத்தின் சென்ற கால வரலாறு சிந்தனைக் குரியது. மனித குலம், தோன்றிய காலத்தில் நாகரிகமாக வாழ்ந்திருக்க முடியாது. ஆனாலும் சுதந்திரம் நிச்சயமாக இருந்திருக்கும். மனித குலம் வளர, வளர உடைமை, உணர்வுகள், புறஇயல் நாகரிக உணர்வுகள் ஆகியவை வளர்ந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனாலும் அதே பொழுது அவனுடைய வாழ்க்கையில், அவன் அனுபவித்து வந்த சுதந்திரம் மெதுவாகக் குறைந்து வந்திருக்கிறது. அவன் சுதந்திரப் பறவையாக அச்சமின்றித் திரிந்து வாழ்ந்தது போய், ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு அச்சப்படும் சூழ்நிலை உருவாயிற்று. இந்தப் பலவீனத்தால் தோன்றியவைதான் பேரரசுகள்.

மனிதனின் வாழ்க்கையில் இயல்பிலேயே சுதந்திர உணர்வு ஊற்றெடுத்துக் கிடக்கிறது. இயற்கையின் காரணமாகவோ, சூழ்நிலையின் காரணமாகவோ உள்ளுணர்வை இயக்கி, ஒளியூட்டிக் கொள்ளப் பலர் தவறுவதினாலோ, சிலர் ஆள்கின்றவர்களாகவும், பலர் ஆளப்படுகின்றவர்களாகவும் சமுதாயத்தில் உருவாகி விடுகிறார்கள்.

காலத்தின் நியதி இங்ஙணம் படைத்தாலும், ஆளுகிறவர்கள், ஆளப்படுகிறவர்களுடைய நலத்தில் அக்கறை காட்டாமல், ஆளத் தொடங்கியபோது, அடிமை வாழ்க்கை முறை தோன்றியது. மனித குலத்தில், அடிமை வாழ்க்கை முறை தோன்றியதுதான், நாகரிக வீழ்ச்சியின் கடைசி எல்லை. அந்தக் கடைசி எல்லை வரையில் மனித உலகம் அறிந்தோ, அறியாமலோ சென்று விட்டது.

ஆனால் மனித குலம் தனது வீழ்ச்சியைத் தெரிந்து கொண்டு தெளிவு பெற்று, அடிமைத் தளையை அகற்றிடத் துடித்தது. உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இந்த ஆர்வம் தலையெடுக்காது போனாலும், ஐரோப்பிய நாடுகளில் சர்வாதிகாரத் தன்மையுடைய முடியாட்சியை எதிர்த்துப் புரட்சிகள் தோன்றின. புரட்சி என்பது வெளி உலகத்தில் தோன்றக் கூடியதன்று. எந்த மனித சாதி விடுதலையை அடைந்து அனுபவிக்க விரும்புகிறதோ, அந்த மனித சாதியில், அக நிலையிலேயே விடுதலை ஆர்வம் கொழுந்து விட்டு எரிய வேண்டும். மாமேதை இலெனின் புரட்சி உருவாகும் விதத்தை அடியிற் காணுமாறு விளக்குகிறார்.

"கோழி முட்டை ஒட்டுக்குள் உயிர்க் கரு இருக்கிறது. அது வளர்ந்து வரும்போது அதனுடைய வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் முட்டையின் ஒடு தடையாக இருக்கிறது. முட்டைக்குள் இருக்கும் குஞ்சு தன்னுடைய வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் ஒட்டை முட்டி முட்டி உடைக்கிறது. முட்டை ஓடு உடைகிறது. குஞ்சு வெளியே வருகிறது”

"அதுபோல மனிதன் வளர்ந்துவருகிறான். அல்லது மனிதகுலம் வளர்ந்து வருகிறது. தன்னுடைய வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் சக்திகளை எதிர்த்துப் போராடுகிறான் - எதிர்த்துப் போராடும் மனப்பான்மையைப் பெறுகிறான் - புரட்சி தோன்றுகிறது; மனித உலகம் இயற்கை அளித்த சுதந்திரத்தை ஆழ்ந்து அனுபவிக்கிறது.”

இங்ஙனம் மனித உலகம் செய்த புரட்சிகளில் நினைவில் நிலைத்து நிற்கும் புரட்சி, பிரெஞ்சுப் புரட்சியாகும். இது 1789ல் நடந்தது. சர். வால்டேர் ரூசோ இந்தப் புரட்சியை அறிவுக் கருவில் வைத்து வளர்த்துத் தந்தவர். 'சமுதாய ஒப்பந்தம்' என்ற அருமையான அரசியல் நூலைத் தந்ததும் ரூசோவே. மனித உலகம் முழுவதற்கும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற தத்துவங்களையும் மந்திரங்களையும் தந்தது பிரெஞ்சுப் புரட்சியே. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகுதான், உலகமெங்கும் விடுதலை முழக்கம் கேட்டது.

மக்கள் அரசியல் விடுதலை பெற்றாலும், வேறு விதமான சமூக ஆதிக்கங்கள் இருக்கவே செய்தன. அதாவது, பொருளாதார ஆதிக்கங்கள், மத, சமூக, ரீதியான கட்டுப்பாடுகளின் வழி மேலாதிக்கம் செய்து வந்தன. சமூகப் பொருளாதார ஆதிக்கத்தையும், மனித குலம் தாங்கிக் கொள்ளத் தயாராக இல்லை.

சமூகப் பொருளாதார ஆதிக்கங்களை எதிர்த்துக் கார்ஸ் மார்க்ஸ், மிக அருமையான ஒரு மனித இயல் விஞ்ஞான நூலை "மூலதனம்" என்ற பெயரில் தந்தார். கார்ல் மார்க்ஸ் தந்த 'மூலதனத் தத்துவத்தின்' அடிப்படையில் இலெனின் 1917-இல் சோவியத் புரட்சியைச் செய்து வெற்றி பெற்று ஏற்றத் தாழ்வற்ற-ஒப்பற்ற சமுதாயத்தை அமைத்தார். சோவியத்துப் புரட்சிக்குப் பிறகு உலக சமூகத்திற்குச் சோஷலிசம் என்ற ஒரு சமூகக் கொள்கை கிடைத்தது.

இன்றைக்கு இந்திய நாட்டில் சோஷலிசம் என்ற சித்தாந்தத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் பேசுகின்றன.

1955-ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசியல் உலகில் சோஷலிசம் என்ற தத்துவத்தைப் பற்றிப் பேசாத அரசியல் தலைவர்கள் இல்லை; மேடையில்லை. ஆனாலும் சோஷலிசத்தைப் பற்றித் தெளிவான கருத்து நமக்குக் கிடைக்க வில்லை. மேலும் நமது தமிழ்ச் சமுதாயம் வழி வழி வளர்த்து வந்துள்ள வாழ்வியல் மரபிற்கு இந்தச் சோஷலிசத் தத்துவம் இசைவு உடையதுதானா? இல்லையா? என்பதை ஆராய்வோம்.

திருவள்ளுவர் இயற்றித் தந்த திருக்குறள் இலக்கிய வடிவில் அமைந்தது. ஆனால் அது ஒரு இலக்கியம் மட்டுமன்று; அது ஒரு அரசியல், பொருளாதார, சமூக அறிவியல் நூல். இற்றைக்கு 2000ஆண்டுகட்கு முன் வாழ்ந்தவர் திருவள்ளுவர். காலத்தால் திருவள்ளுவர்க்கு மிகப் பிந்தியவர்களே ரூசோவும், கார்ல் மார்க்சும். ஆனாலும் திருவள்ளுவரின் அரசியல் சமுதாய பொருளாதாரச் சிந்தனைகள் மிக முற்போக்கானவை. கார்ல்மார்க்சீயச் சிந்தனைக் கருக்களைத் திருக்குறளில் காணலாம்.

இந்த நூற்றாண்டில் மனித குலத்தின் தேவை சோஷலிச சமுதாய அமைப்பு. தமிழர்கள், காரல் மார்க்சீயச் சிந்தனைக்கு எதிராகச் சிந்திக்காது போனாலும் தங்களுடைய சமுதாய அமைப்பு, திருவள்ளுவர் வழியதாக அமைய வேண்டும் என்றே விரும்புவார்கள். அதுவே இயற்கை.

திருக்குறளை வாழ்க்கையில் பயில்க

திருவள்ளுவர் அருளிச் செய்த திருக்குறள், உலகப் பொது மறை. மிகச் 'சிறந்த சமயநூல்; அறிவிற்கும் அனுபவத் திற்கும் உரிய சமயநூல். நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் உரிய ஒப்பற்ற நூல். கல்லாடர் கூறியதுபோல் "சமயக் கணக்கர் மதிவழிச்" செல்லாது, அதேபொழுது சமயத் தெளிவினைத் தரும் தெள்ளுதமிழ்ப் பொதுமறையாகத் திகழ்கின்றது.

திருக்குறள், கடவுள் நம்பிக்கையை ஒத்துக்கொள்கிறது; ஒரு கடவுளை ஒத்துக் கொள்கிறது. அந்தக் கடவுளை நிறைகுணங்களின் உருவமாகவே படைத்துக் காட்டுகிறது: ஆயினும், உயிர்க்குப் பற்றுக் கோடாகத் திகழவேண்டும் என்ற அடிப்படையில் திருவடியைக் காட்டுகிறது. இறைவன்றன் திருவடியைப் பேசுதல்-பற்றுதல் அருள் முதிர்ந்த உயர் நிலையாகும்.

திருக்குறளுக்கு உயிர் உண்டு என்ற கொள்கை உடன்பாடு. இந்த உயிர் ஒன்றல்ல, பலப்பல என்பதைப் பன்மை விகுதியிட்டுக் குறிப்பிட்டதனாலேயே அறிய முடிகிறது. அதோடு, உயிர் இயல்பிலேயே அறியாமை உடையது என்பதும், உயிர் முயன்று அறிவினைப் பெற்று உயர முடியும் என்பதும், திருக்குறள் கொள்கை. உயிர்க்கு அறியாமையின் சார்பும், அச்சார்பினின்று விலக அவை செய்யும் அறிவு முயற்சியும், இம்முயற்சியில் அவை ஈடுபடும் பொழுது உருவாகும் வினைச் சார்புகளும், வினைச்சார்பு நீங்கிய பின், பெறுகின்ற விண்ணிற்குயர்ந்த தூய இன்பத்தையும் திருக்குறள் தெளிவாகப் பேசுகிறது. ஆதலால், திருக்குறள் உயிர்-இறை-தளை என்ற மூன்றும், என்றும் உள் பொருள் என்று நம்பும் தத்துவச் சமய நூலாகும்.

திருக்குறள் ஒரு பொதுமறை. ஆங்குப் பிறப்பினால் உருவாகக்கூடிய சாதி வேறுபாடுகள் இல்லை. "பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனினும், செயல்களாலும் குணங்களாலும் வேறுபாடுகள் இருந்தாலும், அவ்வேறுபாடுகளைக் காட்டிக் கொள்ளக் கூடாது என்னும் பொருள்படச் "சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்றும் அறிவுறுத்துகின்றது.

திருக்குறள் ஒருகுலநெறி உணர்த்தும் ஒருநூல்; வையத்து வாழும் இயல்பினைக் காட்டி வாழ்வாங்கு வாழச் செய்து வானுறையும் தெய்வத்துள் சேர்த்து, வானோர்க்கும் உயர்ந்த உலகம் அடையும் வழிகாட்டும் அருள்நூல். திருக்குறள் பயிற்சி, தெளிந்த அறிவைத் தரும். திருக்குறட்சார்பு சஞ்சலம் கெடுக்கும். திருக்குறள், பிறப்பின் அருமை காட்டி, பிறப்பின் பயன் கூட்டும் பேரற நூல். திருக்குறள் ஒழுக்கம், உயர்வு நலஞ்சான்ற ஒழுக்கமாகும். அஃதோர் அருளியலைக் காட்டும் மாமறை. திருக்குறளை வாழ்க்கையில் ஏற்று ஒழுகுதல், இன்ப அன்பினைத் தரும்; இறையருளில் சேர்க்கும். அனைவரும் திருக்குறள் பயில்க! திருக்குறள் நடையை வாழ்க்கையில் பயில்க!


கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.