குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/எல்லைக்கண் நின்றார் துறவார்
இனிய செல்வ,
தமிழ் நாட்டில் புதிய அரசு, கலைஞர் தலைமையில் அமைந்திருக்கிறது. கலைஞர் அவர்கள் நம்மை அரசியல் அரங்கத்திற்குத் தாமே நினைந்து வலிய அழைத்தவர்! ஆம்! தமிழக மேலவைக்கு அழைத்தார்; பல்வேறு பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார். கலைஞர் அவர்களுடைய அரசு அளித்த உதவியினால்தான் தெய்விகப் பேரவை மிகவும் சிறப்பாக இயங்கியது. அதனுடைய இயக்க நடைமுறை தடைப்படாமல் இருந்திருந்தால் இந்த நூற்றாண்டில் அது ஒரு பன்முக இயக்கமாக வளர்ந்து, அரிய பணிகளில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். வழி வழியாகத் தமிழினத்திற்கு கேடு செய்யும் அயலினத்தின் சூழ்ச்சியாலும், நம்மவரின் துரோகத்தாலும், நெருக்கடி கால அரசு பேரவை இயக்கத்தை முடக்கியது.
இனிய செல்வ, திருநாளைப் போவார் திருவவதாரம் செய்த சிற்றூராகிய, மேலாதனூர் மேம்பாட்டுப் பணியும் கலைஞர் ஆட்சியில்தான் தொடங்கியது. இடையில் அந்தப் பணியிலும் தொய்வு. நடக்கவில்லை! இந்த பணியும் சிறப்பாக நடைபெற வேண்டும். கலைஞர் ஆட்சியில் தொடங்கப் பெற்றவை கலைஞர் ஆட்சியிலேயே நிறைவு பெற வேண்டும் என்ற நியதி இருக்கிறது போலும். நாம் என்ன செய்ய இயலும்?
இனிய செல்வ, நெருக்கடி கால அரசு நம்முடைய வாழ்க்கையில் கடுமையான பாதிப்புகளை உருவாக்கியது. அதனால், பொது வாழ்விலிருந்தும் மெள்ள மெள்ள ஒதுங்கிக் கிராமப்புற மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டோம். அறிவியல் தமிழ் வளர்ச்சிப் பணியிலும் ஈடுபட்டோம். கலைஞர் அறிமுகப்படுத்திய பணியிலிருந்து விலகவில்லை. ஆயினும், தமிழ் நாட்டில் கலைஞரோடு திருமண மேடைகளைத் தவிர வேறு மேடைகளில் கலந்து கொள்ளவில்லை. அந்த வாய்ப்பை ஒரு தடவை கலைஞரின் ஆர்வலர்கள் வழங்கினார்கள். அதாவது கலைஞரின் சட்டசபைப் பணி வெள்ளி விழாக் கொண்டாட்டத்திற்கு அழைத்திருந்தார்கள்! இசைவும் தந்திருந்தோம்! அந்த நேரம் தென்குமரியில் மண்டைக் காட்டில் பற்றி எரிந்த சமய, சமுதாயக் கலவரச் சமாதானப் பணியில் ஈடுபட்டிருந்த காலம்! அந்தப் பணிகளின் சுமையாலும் எதிர்பாராமல் ஏற்பட்ட பெரிய இடத்து விபத்துக்களாலும் கலந்து கொள்ள இயலாமற் போய் விட்டது. அதனைக் கலைஞருடைய ஆர்வலர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர்; சொன்னார்கள். அதாவது அன்றைய முதல்வர் தடுத்து விட்டார் என்றும், அவருடைய நட்பைக் கருதி வரவில்லை என்றும் கூறினார்கள்! இது உண்மையல்ல. உண்மையிலேயே பணிச்சுமைதான் காரணம்! ஆயினும் மரபுப்படி நமது வாழ்த்துக்களையும் பரிசினை அனுப்பிவைத்திருந்தோம்! அது பற்றி கலைஞர் என்ன நினைத்தார்! அது நமக்குத் தெரியாது! இந்த இடைக்காலத்தில் கலைஞர் தொடர்புக்காக மேவிச்செல்லாத நிலை உண்டு! ஆனால் வேண்டாம் என்று எண்ணியதில்லை; விலகியதில்லை! ஆட்சியாளர்களுக்காக நாம் கலைஞரைப் பிரிந்ததும் இல்லை; பிரியப் போவதும் இல்லை! ஆண்டு தவறாமல் கலைஞர் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை அனுப்பிவைத்துள்ளோம். நமது இதழில் கலைஞர் அவர்கள் படத்தை அட்டைப் படமாகப் போட்டுப் பாராட்டி எழுதியிருக்கிறோம்.
இனிய செல்வ, திராவிட முன்னேற்றக் கழகம் படித்த புத்திசாலித்தனம் நிறைந்தவர்களைக் கொண்ட உயிர்த்துடிப்புள்ள இயக்கம். எல்லாவற்றையும் விட அந்த இயக்கத்தினிடத்தில் நிலவும் நட்புணர்வு வியக்கத்தக்கது; மகிழத் தக்கது. மதுரையில் உலகத் தமிழ்மாநாடு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த காலம். திருப்புத்தூரில் திருமுருகன் பேரவையில் நமது பேச்சு! நமக்கு ஒரு பழக்கம், எந்த மேடை, எந்த அமைப்பாக இருந்தாலும் சமுதாய நலந்தழுவியதாகவே பேசுவது. அந்த உலகத் தமிழ் மாநாட்டில் கலைஞர் கலந்து கொள்ளாதது பற்றிய விவாதம் நடந்து கொண்டிருந்த நேரம்! நமது திருப்புத்தூர்ப் பேச்சில் தமிழினத்தின் ஒருமையின்மையைப் பற்றி, .
"குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்"
என்ற திருக்குறளை அடிப்படையாக வைத்துப் பேசினோம். அப்போது உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடக்கிறது. நமது மொழிமாநாடு இதில் எல்லோரும் பங்கேற்க வேண்டும் என்று கூறிவிட்டு, இதுபோன்ற மாநாடுகளில் கூட "நம்மை அழைக்க வேண்டும்" என்று பெருமை பாராட்டக்கூடாது என்று பேசினோம். நமது எடுத்துக்காட்டு பொதுவானது தான்! ஆயினும் கூட்டத்திற்கு வந்திருந்த புதுப்பட்டி தி.மு.க. ஆர்வலர் ஒருவர் இந்தப் பேச்சின் சுருக்கத்தை, கலைஞருக்கு அனுப்பிவைத்து அந்தக் கருத்தை கலைஞரைத் தாக்கிப் பேசியதாக முடிவெடுத்தும் எழுதி விட்டார். கலைஞர் அவர்கள் அந்தக் கடிதத்தை நமக்கே அனுப்பிவைத்தார்கள்! கலைஞர் அவர்களுக்கு விளக்கம் எழுதினோம்! இனிய செல்வ, இவ்வளவு முன்னுரை எதற்காக? என்று கேட்கிறாயா? இதோ முடிவுரை!
கலைஞர் அரசு, அமைந்தது! கலைஞரின் தமிழ்நாடு அரசு, அறநிலையத்துறை ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு அழைத்தது! நாமும் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து நீண்ட நேரம் சிந்திக்க நேரிட்டது. வேறு காரணம் அல்ல. பணிப் பொறுப்புக்களை மேலும் ஏற்கத் தயக்கம்! ஆயினும் அருள் தந்தை பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளும் வற்புறுத்தினார்கள்! ஒருவழியாக இசைவு! கூட்டத்தில் கலந்து கொள்ளும் முடிவு! அன்றைய கூட்டத்தில் முனை முறியாத அரிசியைப் போல மணம் நிறைந்ததாக கலைஞர் அவர்களுடைய செயற்பாடு இருந்தது! நாம் எப்போது பேச வேண்டும்? எப்படிப் பேச வேண்டும் என்று கலைஞர் அவர்களிடமிருந்து வழிகாட்டுதல்கள் அடுத்து! கலைஞர் வழக்கம் போல விரைவில் முடிவெடுத்து விட்டார்; ஆலோசனைக் குழு அமைப்பது என்று! அந்த முடிவினை - அமைப்பின் பெயரை மட்டும் (உறுப்பினர்கள் பெயர் இல்லை) தமது முத்தான எழுத்தில் எழுதி அனுப்பினார்! நமது இசைவுக்குத் தடை ஏது? முதலமைச்சரின் முடிவு! தமிழினத்தலைவரின் முடிவு! அதற்கு நமது இசைவு கேட்கப் பெறுகிறது என்றால் அதற்குக் காரணம்தான் என்ன? வேறொன்றும் இல்லை! இதோ திருக்குறள் விடை கூறுகிறது."எல்லைக்கண் நின்றார் துறவார் தொலை விடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு"
(806)
இன்ப அன்பு
அடிகளார்