குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/அரசுக்குப் பரிந்துரை

30. அரசுக்குப் பரிந்துரை

இனிய செல்வ!

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”

என்று திருவள்ளுவர் கூறியதற்கு இணங்கத் தமிழ் நாட்டு மக்கள் கலைஞரிடம் ஆட்சியை ஒப்படைத்துள்ளனர். மகிழ்ச்சிக்குரிய முடிவு; பாராட்டுதலுக்குரிய முடிவு. முதலமைச்சர் மாண்புமிகு கலைஞரை வள்ளுவர் கோட்டத்தில் வள்ளுவர் வரவேற்றுள்ளார். மாண்புமிகு கலைஞர் தலைமையில் அமைந்துள்ள ஆட்சி, வள்ளுவர் வழி நிகழும் ஆட்சியாக அமையும்.

இனிய செல்வ, இன்றுள்ள சூழ்நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவதைவிடக் கடினம், தமிழ் நாட்டை ஆளுவது! ஏன் என்றா கேட்கிறாய்? சொல்லுகிறோம் கேள். முதலில் நிதி நெருக்கடி இருக்கிறது. அடுத்து, தொடர் வறட்சியால் களஞ்சியத்தில் இருப்பு இல்லை. வேலையில்லாத் திண்டாட்டம் வேறு! இவற்றையெல்லாம் விடப் பெரிய சிக்கல் நம்மனோருடைய மனோபாவம்! இத்தகு சூழ்நிலையில் கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளார். கலைஞருடைய ஆட்சி முழு வெற்றி பெற ‘வள்ளுவர் வழி’ துணை செய்யும். நாம் அனைவரும் அரசின் பணிகளுக்கு உறுதுணையாக அமைய வேண்டும்.

திருவள்ளுவர் "இதனை" என்று எதனைக் கூறினார்? அது ஒன்றா? பலவா? ஒன்றல்ல. பலப்பல! ஆயினும் ஒன்றிரண்டைப் பட்டியலிட்டு ஆய்வு செய்வோம்.

முதலில் நிதி நெருக்கடியைத் தீர்த்துக் கொள்வது. முதலமைச்சர் சத்துணவு மையத்திற்குப் பெரும்பணம் செலவாகிறது. இந்த முதலமைச்சர் சத்துணவு மையத்தை ஆங்காங்கு நடைபெறும் லாபகரமான தொழிற்சாலைகளிடம் ஒப்படைக்கலாம். அத்தொழிற்சாலைகளின் பொறுப்பிலேயே ஏற்று நடத்தும்படி செய்யலாம். அடுத்து, பத்து லட்சத்துக்கும் மேல் வருவாய் வரும் கோயில்கள் தங்கள் ஊரில் உள்ள முதலமைச்சர் சத்துணவு மையத்தை நடத்தலாம். இவைகளுக்கு வேண்டுமானால் செலவின் அடிப்படையில் 50 விழுக்காடு அரசு மான்யம் வழங்கலாம். இந்த மான்யம் தணிக்கை மேலாண்மை வசதிக்காக, இதனால் அரசின் நிதிப் பற்றாக்குறை கணிசமாகக் குறையும்.

அடுத்து இருப்பது இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை. இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் ஆரம்பகாலத்திலிருந்து தவறான அணுகுமுறை இருந்து வந்துள்ளது. ஆதி திராவிடர் இட ஒதுக்கீட்டு முறையும் அப்படியேதான். சாதி அடிப்படையில் மட்டும் இட ஒதுக்கீட்டுமுறை இருந்தால் அது உண்மையில் பயன்படாது. சாதி முறையோடு தலைமுறை வரலாறு, குடும்ப அடிப்படை ஆகியனவும் அளவு கோலாக அமைந்தால்தான் கடைகோடி மனிதனுக்கும் பயன்படும். சாதி, பொதுவான அணுகுமுறை. இட ஒதுக்கீடு-கல்வித் தலைமுறை குடும்பத்தின் கல்விச் சூழல் எப்படி அமைந்திருக்கிறது? மூன்று தலைமுறை பட்டதாரிகளாக அமைந்துவிட்ட குடும்பத்தில் கல்வியின் ஊற்றுக்கண் நன்றாகவே அமையும். குடும்ப வருமானம் என்ன? நிலவருவாய், வியாபார வருவாயாக இருந்தால் வருவாயைக் கொண்டு கணக்கிடாமல் அளவைக் கொண்டே நிர்ணயித்து விடலாம்.

தமிழினத்திற்குரிய பகை ஆரியப்பகையோ-பார்ப்பனப் பகையோ அன்று. சாதி வேற்றுமைகள்தான் தமிழினத்தை உள் நின்றழிக்கும் பகை கடந்த பல நூற்றாண்டுகளாக இந்தச் சாதி முறைகளை எதிர்த்துப் போராடியும் சாதிப்பகை அகன்றபாடில்லை. இந்தச் சிக்கலிலும் அதிகமான உணர்வுப் பாதிப்புகள் வேறு ஏற்பட்டுள்ளன. இனிய செல்வ, இயல்பாகவே செயல்திறம் மிக்க கலைஞர், இந்தச் சாதிச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் வெற்றி பெறுவார் என்றே நம்புகின்றோம்.

இனிய செல்வ, மூன்றாவது, கடுமையான ஒரு சிக்கல்; தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இன்மை. வேலை வாய்ப்பை வழங்குவது என்பது இன்றுள்ள அவசர அவசியமான பணி! ஆயினும் நெடிய நோக்குடன் இந்தப் பிரச்சினையை அணுகவேண்டும். அதாவது, உற்பத்தியோடு தொடர்பில்லாத பணியிடங்களைத் தோற்றுவித்து வேலை வாய்ப்பை வழங்கினால் மேலும் நிதி நெருக்கடி ஏற்படும். கடந்த பத்து ஆண்டுகளில் ஏராளமான பேர் வேலை பெற்றுள்ளனர். ஆனால், உண்மையில் வேலை இல்லை. உதாரணமாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இரண்டு காவல் ஆய்வர். இரண்டு காவல் நிலையத்திற்கு ஒர் உயர் ஆய்வர். இது அவசியமில்லாத செலவு மட்டும் அல்ல, பயனற்றதும் கூட! ஆதலால், உற்பத்தியோடு தொடர்புடைய தொழில்களைத் தொடங்குவதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இனிய செல்வ, இந்தச் செய்திகள் மாண்புமிகு கலைஞருக்குத் தெரிந்தவையே! அவர் ஓர் எரிகின்ற விளக்கு! ஆனால் நமக்கும் ஒரு வேலை வேண்டாமா? அவர் தூண்டா விளக்கானாலும் நமக்கு வாய்த்துள்ள தூண்டும் பழக்கத்தின் வழி இந்தப் பரிந்துரைகள்!

இன்ப அன்பு

அடிகளார்