குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/தேர்தல் சிந்தனை-2

29. தேர்தல் சிந்தனை-2

இனிய செல்வ,

இப்பொழுது உனக்கு எதிர்பாராமல் கிடைத்திருக்கும் மதிப்பில் மூழ்கிக் களித்துக் கொண்டிருப்பாய்! உன்னுடைய நன்மைக்காக அள்ளி வழங்கப்பெறும் உறுதிமொழிகளில் திளைத்துக் கனவில் ஈடுபட்டுக் கொண்டிருப்பாய்! உனது கனவை விட்டுச் சற்றே நனவுலகத்திற்கு வருக!

ஆம்! இது தேர்தல் காலம்! வேட்பாளர்கள் கும்பிட்ட கையை இறக்காமல் உலாவரும் காலம்! கட்சிகள்-கட்சிகளின் தலைவர்கள் உறுதிமொழிகளைத் தாராளமாக அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் காலம்! தனி மனிதனின் குறை-குற்றங்கள் அலசப்படும் காலம்! இந்தச் சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று திருக்குறள் கூறுகிறது? நம் நாட்டில் ஒரு பழக்கம் ‘விளம்பரம்’ ஆனவர்களை-விளம்பரம் ஆனவைகளை அப்படியே நம்பிவிடுவது! பின்பற்றுவது! ஒரு திறமை வாய்ந்த ஜோசியர் இருந்தால் ஒரு கோயில்-ஒரு கடவுள் எளிதில் வெற்றி பெற்று விடுகிறது. அதுபோல், ‘பாராட்டுபவர்கள் - அர்ச்சகர்கள் சிலரும் ஒரு பத்திரிகையும் இருந்தால் போதும்-எளிதில் தலைவராகி விடலாம்’ நாமும் நம்பி விடுவோம்! அது போலத்தான் பயன்படுத்தும் பொருள்களையும் கூட நம்பி விடுவோம்! விளம்பரமான பொருள்கள் மீது நமக்கு ஒரு அலாதியான நம்பிக்கை! பற்று! சோதனை செய்யாமல் நம்பி விடுவோம்! அவை தரம் குறைந்தவையாக இருந்தால்கூட நாம் அதை வெளியில் கூறுவதில்லை; வாங்காமலும் இருப்பதில்லை! நமது நாட்டில் இங்ஙனம் நடப்பவைகள் பலப்பல! லஞ்ச லாவண்யம் என்று குறைகூறிக் கொண்டிருப்பவர்கள் வாங்கும் கையூட்டுகளுக்குக் கணக்கே இல்லை! ஆதலால் தேர்தலில் யார் நிற்கிறார்கள் என்று ஆய்வு செய்வதில் பயனில்லை! பேசுபவர்கள் யார்? ஆராய்ச்சி வேண்டவே வேண்டாம்! உறுதிமொழிகளை வழங்குபவர் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் நாம் அவரை நம்பி, எதையும் நம்பக்கூடாது. பின்பற்றக் கூடாது! எடுத்துக் கூறும் உறுதி மொழிகள் சாத்தியமானவையா? இன்று இவ்வளவு உறுதி மொழிகளை அள்ளி வீசுபவர் இதற்கு முன்பு அவருக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களில் என்ன செய்தார்? அவற்றின் பயன் என்ன? என்று ஆய்வு செய்வது நமது கடமை. இங்ஙனம் ஆய்வு செய்யாததால் இன்று கூட நாம் அளவுக்குமேல் ஒருவரைத் தலைவராக, இல்லை! - அவதார புருஷராக மதித்து வருகின்றோம். ஆனால் அவர்களுடைய சொல்லையும் செயலையும் கூர்ந்து நோக்கின் அவர்கள் ஒரு சராசரி மனிதர்கள்தாம் என்பது விளங்கும்! அதுபோலவே, சில வரலாற்று நிகழ்வுகளில் சிலர் பழிசுமத்தப்படுவர். சிலர் பாராட்டப்பெறுவர். வரலாற்றைக் கூர்ந்து நோக்கின் புகழுக்கும் பழிக்கும் உரியவர்கள் மாறுபடுவார்கள்! ஆதலால், நமது கவனத்திற்குரியது ஒரு தலைவர் பெற்றுள்ள விளம்பரம் அல்ல. அல்லது அந்தத் தலைவருக்குள்ள கூட்டம் கூட்டும் சக்தியல்ல; கூட்டமும் அல்ல. நல்லது செய்யும் மனப்பண்பும் ஆளுமையும் உள்ளதா என்பதே ஆய்வுக்குரிய செய்தி! அருச்சனை ஆடம்பரமாக - ஆரவாரமாக இருப்பதில் மூர்த்தி சிறப்புப்பெற்று விடாது. ஆதலால் யார் சொல்லுகிறார் என்று கவனித்தல் பயன் தராது. என்ன சொல்லுகிறார்? அதன் பயன் என்ன? என்று ஆய்வு செய்து உண்மை தெரிந்து வாக்களிக்க வேண்டும்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

'யார்யார் வாய்க் கேட்பினும்’ என்ற சொற்றொடரின் அமைவு ஆழ்ந்த சிந்தனைக் குரியது. ‘எவரேனும்', 'யாரேனும்’ என்ற வழக்குச் சொற்களுடன் இணைத்துச் சிந்திக்க வேண்டிய சொற்றொடர் ‘யார் யார்’ என்பது.

ஆதலால், தேர்தல் உரைகளைக் கேளுங்கள்! ஆய்வு செய்யுங்கள்! செய்திகள் முக்கியமானவை. செய்திகளை விடச் சொல்பவரின் தகுதியும் திறமையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பெறுதல் வேண்டும்.

தமிழ், தனக்குரிய இடத்தைப் பெறுதல் வேண்டும்! துறைதோறும் தமிழ் வளர்ந்து இடம் பெறுதல் வேண்டும்! நாட்டில் வேலை வாய்ப்புப் பெருக வேண்டும்! வறுமை அகல வேண்டும்! வாழ்வு சிறக்க வேண்டும்! இதுவே நமது தேவை! நமக்குத் தேவை சோறும் துணியும் அல்ல! வாழ்வு தேவை! இவற்றை வழங்கக்கூடிய தகுதியும் திறனுமுடைய அணிக்கு வாக்களிப்பது நமது உரிமை; கடமை!

இன்ப அன்பு

அடிகளார்