குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/நடிப்புப் போலிகள்

47. நடிப்புப் போலிகள்

இனிய செல்வ,

இன்று பெருமை எது? நன்மை எது? பெரியோர் யார்? இவையெல்லாம் துணிந்து தெளிவு காணமுடியாத வண்ணம் நாட்டின் நடப்புகள் சென்று கொண்டிருக்கின்றன. மனித மதிப்பீடுகள் மறைந்து பண மதிப்பீட்டுச் சமுதாயம் தோன்றிக் கொண்டு வருகிறது. அறிவினைவிடப் பணம் பெரிது. இன்று அறிவு விற்பனைப் பொருளாகிவிட்டது; என்றும் இல்லாத அளவுக்குச் சாதிகள் உயர்வு பெற்றுவிட்டன. விதண்டாவாதம் செய்தல், சொற்சிலம்பம் ஆடுதல் முதலியன வரவேற்கப் படுகின்றன. வன்முறை கலாச்சாரமாகிவிட்டது; இனிய செல்வ,

"மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்”

(278)

என்று திருவள்ளுவர் கூறியது போல, மனத்தில் மோசமான நாற்றம் அடிக்கும் குப்பை கூளம்; ஆனால் உடலோ புனிதம் காட்டுகிறது. மிகமிகப் பெரியர் போல-ஐம்புலன்களை வென்ற வீரம் உடையவர்களின் கோலம் தாங்கி நிற்கின்றனர். இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள் திருவள்ளுவர் காலத்திலேயே பலர் இருந்துள்ளனர். இன்று கேட்பானேன்? இன்றைய சூழ்நிலையில் நல்லது எது? என்று தெளிந்து துணிய முடியுமா? அப்படியயே துணிந்து விட்டால் சொல்லத்தான் முடியுமா? ஒரோவழி சொல்லியேவிட்டாலும் யார் கேட்பார்?

இனிய செல்வ, ஆணவத்தின் மொத்த உருவம், விருப்பு - வெறுப்புகளின் கொள்கலம், சாதி வெறி, விளம்பர ஆசை, ஆதிபத்திய ஆசை. மறைவாகச் சூது செய்யும் பசுத்தோல் போர்த்த புலித்தன்மை, இணைந்து போகமுடியாத அளவுக்கு அசுரத்தனம். இவ்வளவுமுடைய மனிதர் எந்த உருவைக் கொண்டால் என்ன? ஒன்றும் பயனில்லை. இத்தகைய மனிதர்கள் பலர் தோன்றியுள்ளனர். இனிய செல்வ, உய்த்துணரும் திறன் இருக்கிறதா? இனம் காட்டுக!

நாம் யாருடன் சேர்வது? இனத்துய்மை வேண்டும் என்று வள்ளுவர் சொன்னார். ஆனால் இத்தகு இனமல்லா தார்-இனம்போல் நெருங்குகின்றனர்; பேசுகின்றனர்; நாடக மாடுகின்றனர். விரைந்து புகுகின்றனர். இத்தகையோர் நாட்டில் நடமாடுவதால் யாது பயன்? இந்தப் போக்கில் திருப்பெருந்துறை நினைவிற்கு வருகிறது.

"நாடகத் தால் உன்னடியார் போல்
நடித்து நான் நடுவே, வீடகத்தே புகுந்
திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்'

என்னும் திருவாசகம் நினைவிற்கு வருகிறது. என்ன விரைவு? பொய்ம்மை கண்டு கொள்ளப்படாது என்பதால் விரைவு! எப்படி விரைந்தால் என்ன? புகுந்தால் என்ன? திருவள்ளுவர் கண்டு காட்டிய செருக்கும் மெய்கண்ட சிவம் உணர்த்திய ஆணவமும் நகைக்கும்; நகைத்து எள்ளல் செய்யும்; இனிய செல்வ கவனமாகப் படி! இயலுமானால் எழுதுக:

இன்ப அன்பு

அடிகளார்