குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/வாழ்க, வருவாய்க்குத் தக

48. வாழ்க, வருவாய்க்குத் தக

இனிய செல்வ,

இந்தியாவின் இன்றைய கடன் பல்லாயிரம் கோடிக்கும் மேலாக இருக்கிறது. அந்நிய நாட்டுச் செலாவணி இருப்பு குறைந்துவிட்டது! ஆம்! இந்தியா ஏழை நாடாக, கடன்கார நாடாக ஆகிக்கொண்டிருக்கிறது! நமது நாட்டு மக்களில் 58.9 விழுக்காட்டு மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். ஆற்றல் மிக்க இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்! வேலை பார்ப்போரிலும் பாதிப்பேர் போதிய ஊதியமின்றி முறையாக வாழமுடியாமல் அல்லற்படுகின்றனர்! இஃது இன்றைய பாரதத்தின் நிலை.

இனிய செல்வ, இந்த இடர்ப்பாடான நிலையைச் சமாளிக்க முயலுகிறார் பாரதப் பிரதமர்! பிரதமர் அந்நிய நாட்டு முதலாளிகளை பாரதத்தில் முதலீடு செய்து தொழில் தொடங்கும்படி கெஞ்சுகிறார்! நடை பாவாடை விரிக்கிறார்! நாட்டின் அரசியற் கட்சிகள் அனைத்தும் இதனை எதிர்க்கின்றன. பாரதப் பிரதமர் சொல்லும் ஒரே சமாதானம் "நிதி இல்லை! பணம் இல்லை என்ன செய்வது? இனிமேலும் கடன் வாங்க முடியாது” என்பதுதான்.

ஆம்! பிரதமர் சொல்லுவதில் உண்மை இல்லாமல் இல்லை! ஆயினும் நாட்டில் பணம் இல்லை என்று கூறுவது தான் உண்மையில்லை! நாட்டில் நிறைய பணம் இருக்கிறது! நாட்டில் பெரிய முதலாளிகளிடம் உள்ள கருப்புப் பணம் கங்கை-காவிரி இணைப்புத் திட்டத்திற்குப் போதும்! கருப்புப் பணம் சற்றேறக்குறைய 40,000 கோடி! இதுபோக அரசியற் கட்சிகள் தேர்தல் செலவுகளுக்காக மறைமுகமாக ஈட்டி வைத்துள்ள பணம் பற்பல கோடிகள்! இவையெல்லாம் நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படாமல் சாதி, இன, மதக் கலவரங்களை வளர்க்கவும் அரசியல் கட்சிகளுக்குள் உட்பூசலை வளர்க்கவும் பயன்படுகின்றன! உண்மையாகச் சொன்னால் நாட்டின் அழிவுக்குச் செலவாகின்றன!

நாட்டு மக்களில் எந்தத் தரப்பு மக்களிடத்திலும் நிதியைப் பற்றிய பொறுப்பான சிந்தனை இல்லை! அணுகுமுறை இல்லை! கடன் வாங்குதல், கடனை வஜா செய்யப் போராடுதல் முதலிய தீய பழக்கங்கள் மக்களிடையே பரவிவிட்டன! அரசு, நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கென வழங்கும் நிதி உதவிகள் அரசுக்குத் திரும்ப வருவதும் இல்லை! வங்கிகளுக்கும் இதே கதிதான்! இனிய செல்வ, நீ கேட்பது சரியான கேள்வியே! அரசுக்குத் திரும்ப வராதது ஒருபுறம் இருக்கட்டும்; மக்களாவது முன்னுக்கு வந்தார்களா? திட்டத்தின் இலக்காகிய ஏழை மக்களிடத்தில் கூட உருவாகவில்லை! 10 விழுக்காடு தான் செலவழித்த பணத்திற்குள்ள சொத்து உருவாகியிருக்கக்கூடும்! ஏன் இந்த அவலம்? பணிகள் முறையாக நிறைவேற்றப்படத்தக்கவாறு திட்டங்கள் அமையவில்லை! அவசரத்தில் அள்ளித் தெளிக்கும் நிலை!

இனிய செல்வ, நாம் ஏழைகள், நமது நாடு ஏழை நாடு என்ற எண்ணம் சமுதாயத்தில் எந்தமட்டத்திலாவது இருக்கிறதா? நமது நாட்டில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நமது நாட்டுத் தலைவர்கள் தாமே! நமக்குத் தெரிந்தவர்கள் தாமே! நமக்கு உறவினர்கள் தாமே! இவர்களுடைய வரவேற்புக்கு எத்தனை இலட்சங்கள் செல்லுகின்றன. தெரியுமா? அரசியல் பேரணிகளுக்குச் சொல்லவே வேண்டாம்! அதேபோலத்தான்! அரசியல் தலைவர்களின் பவனிகளில் வரும் நூற்றுக்கணக்கான கார்களின் அணி வகுப்பு, இனிய செல்வ, அரசியல் இயக்கங்களுக்குச் சளைத்ததல்ல, மத சம்பிரதாயங்கள்! கும்பாபிஷேகங்கள், திருவிழாக்கள் இவைகளில் சிக்கனப் பார்வையே கிடையாது! பலப்பல இலட்சங்கள் செலவழிக்கப்படுகின்றன!

நமக்கு அறிமுகமான ஒரு சிற்றறூரில் அண்மையில் முளைப்பாரி விழா எடுத்தார்கள்! பத்து நாள் விழா! பத்து நாளும் இரவும் பகலும் ஒலிபெருக்கிகள் அலறின! இரவெல்லாம் திரைப்படக் காட்சிகள்! கொட்டு மேளங்கள்! கோலாகல வைபவம்! நமது மதிப்பு, இந்த திருவிழாவை முன்னிட்டும் பொதுவாகவும் தனித்தனியாகவும் செலவழித்த ரூபாய் ஒரு லட்சம் இருக்கும்! திருவிழா எடுத்தவர்களில் பலர் வசதி அதிகம் இல்லாதவர்கள்! திருவிழா வேண்டியது தான்! பக்தி சிரத்தையுடன் திருவிழாக் கொண்டாடும் மக்களைப் பாராட்ட வேண்டியதுதான்! பக்தியைவிட, களியாட்ட உணர்வு மிகுதியாகி விட்டது! பக்தி, சாந்தம், அமைதி ஊக்கம் முதலிய குணங்களைப் பெறுவதற்காகவும், தனித்தனியாகவும் கூட்டாகவும் வளர்வதற்குரிய ஒரு சாதனம்! ஆனால், திருவிழா என்ற பெயரில் "அடிதடி" களைத் தவிர வேறென்றும் இல்லை... என்ற திரைப்படங்களுக்கு என்ன வேலை! திருவிழா முடித்த கையுடனேயே அடிதடி ரகளைகள், ஒரு பஜனை உண்டா? பக்திப் பாடல்கள் பாடும் அரங்கு உண்டா? பக்திச் சொற்பொழிவு உண்டா? ஒன்றும் இல்லை! திரைப்படங்களின் ஆக்கிரமிப்புத்தான்! ஏற்கனவே நாட்டில் திரைப்படக் கொட்டகைகள் அதிகம்! இரவும் பகலும் காட்சிகள் நடக்கின்றன! போதும் போதாதற்குத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வேறு திரைப்படங்கள் காட்டுகின்றன! இனிய செல்வ, இவ்வளவும் ஏன் எழுதினோம் என்று நினைக்கிறாயா? நமது நிதியைப் பற்றிய பொறுப்புணர்வுடன் கூடிய அணுகுமுறை பாரிடமும் இல்லை.

இனிய செல்வ, சம்பாதிப்பதனால் மட்டும் செல்வனாகிவிட முடியாது! நிதியை எப்படிச் செலவழிக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் செல்வனாக முடியும். "வறுமையைவிடச் சிக்கனமின்மை மிகக் கொடிது” என்பது சீனப் பழமொழி! வறுமையை மாற்றலாம். சிக்கனமின்மையை மாற்றுவது கடினம்! பணம் செலவழிக்கப் போகிறாயா? இந்தச் செலவால் உனக்கு என்ன நன்மை? உன் குடும்பத்துக்கு என்ன நன்மை? ஊருக்கு என்ன நன்மை? என்று ஆராய்ந்து அறிந்து செலவு செய்யும் பழக்கம் வேண்டும். சிக்கனம் என்பதும் வருவாயை ஒத்தது என்ற எண்ணம் வளர்ந்தால் பலகோடிக் கணக்கில் நமது நாட்டில் பணம் மிஞ்சும். ‘எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தை’யே நமது நாட்டினர், சிக்கனச் சேமிப்பிலிருந்து நிறைவேற்ற முடியும். இனிய செல்வ, நமது திருவள்ளுவர், "வருவாய் நிறைய வரவில்லையா? ‘கவலைப்படாதே’ செலவுகளுக்குரிய வாயில்கள் அகலாமல் பார்த்துக் கொள்” என்றார்.

“ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை”

(478)

என்பது திருக்குறள்.

இன்ப அன்பு

அடிகளார்