குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/நல்லன நடப்பதாகுக!

40. நல்லன நடப்பதாகுக!

இனிய செல்வ,

நமது நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் ஒருவாறாக நடந்து முடிந்துவிட்டது. ஆனால், நமது நாட்டு வாக்காளர்கள் தேர்தலுக்குப் பின் தெளிவை உண்டாக்காமல் குழப்பத்தை உண்டாக்கிவிட்டார்கள். இதனை நினைக்கும் பொழுது

"தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்"

(510)

என்ற திருக்குறள் நினைவுக்கு வருகிறது. வாக்களிப்பு என்பது நமது தலைவிதியை அதாவது சமூக, பொருளாதாரத்தை வளர்த்து நல்வாழ்க்கையை அமைக்கக் கூடியது என்று நினைக்கிறார்களா? அல்லது சீட்டாட்டத்தில் உட்கார்ந்து ஆடுகின்ற துருப்புச் சீட்டு என்று நினைக்கிறார்களா என்பதை நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

நமது வாக்காளர்கள் தம்தம் மனப்போக்கில் அல்லது குழு மனப்போக்கில் அல்லது இயக்குகிறவர்களின் மனப் போக்கில் வாக்களிக்கிறார்கள் என்று தெரியவருகிறது. வாக்காளர்களில் பல கோடிப் பேர்கள் மருத்துவமனையில் வைத்துக் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என்று சொன்னால்கூடத் தவறில்லை என்று தோன்றுகிறது. இனிய செல்வ, ஆம்! கோபம்தான்! ஏன் கோபம்!

எந்த ஒரு அணியையும் ஆட்சியில் அமரக்கூடிய பெரும்பான்மை தந்து நிலையான ஆட்சி ஏற்பட வாக்களிப்புச் செய்யாதது முதற் குற்றம்! பத்துப் பேர்களுக்கிடையில் தனித்து நின்று தனிப் பெரும்பான்மையாக வந்துள்ள காங்கிரஸ் கட்சியை சற்றேறக்குறைய 1, 2 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ள கட்சியைப் பார்த்து, 100, 80, 30 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தனித் தனியாகப் பெற்றுள்ள கட்சிகள் ஆர்ப்பரிக்கின்றன. மக்கள் காங்கிரஸை நிராகரித்து விட்டார்கள் என்று! இது உண்மையல்ல. மக்கள் எல்லாக்கட்சிகளையுமே நிராகரித் திருக்கிறார்கள் என்பதே உண்மை. 1984 இல் காங்கிரசுக்கு மிகமிகப் பெரும்பான்மையைத் தந்திருந்தார்கள். அதனால் காங்கிரஸ் ஆட்சிப் போக்கில் சறுக்கியது! மதச்சார்பின்மையை 2-ஆம் நிலைக்குத் தள்ளியது! ஜனநாயக நடை முறைகள் கட்சியிலும் ஆட்சியிலும் அருகிப் போயின. இங்ஙனம் ஏற்பட்ட வழுக்கல்களைச் சரி செய்யலாம் என்று கருதி மிக மிகப் பெரும்பான்மையைக் குறைக்க வாக்காளர்கள் எண்ணியிருக்கலாம். ஆயினும் பிடியைக் கொஞ்சம் கூடுதலாக இறுக்கிப் பிடித்துவிட்டார்கள் என்று சொல்லத் தோன்றுகிறது. அவ்வளவுதான் நடந்தது! எதிர்த்து நின்றவர்களுக்கு ‘இராமபிரானின் திருவருளும்’ கிடைத்தது என்று 'தினமணி’ கூறுகிறது.

இனிய செல்வ, இது நமது ஊகம். வாக்காளர்களின் எண்ணம் நமக்குத் தெரியாது. ஆனால், வாக்குகள் அளிக்கப் பெற்றுள்ள நடைமுறைகளைப் பார்த்தால் வாக்காளர்களுக்கு இத்தகைய எண்ணம் இருந்ததாகத் தெரியவில்லை; இருக்கவும் முடியாது ஏன்? தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் தந்த தேர்தல் அறிக்கையைப் பற்றி நாட்டில் யாரும் அதிகம் பேசவில்லையே! பத்திரிகைகளிலே கூடத் தேர்தல் அறிக்கைகளைப் பற்றி விவாதங்கள் நடை பெறவில்லையே! இந்த நிலையில் வாக்காளர்களுக்கு எப்படி அரசியல் தெளிவு வரும்! சாதி, பணம், மதம், பிரச்சார பவனிகளின் தோரணைகளிலே வாக்காளர்களின் வாக்குகளைக் கவர்ச்சிக்க முயன்றன அரசியல் கட்சிகள்! இனிய செல்வ, அது மட்டுமா! தேர்தலில் நின்ற அரசியற் கட்சிகள் வெற்றி தோல்விகளை மட்டுமே கவனத்தில் கொண்டிருந்தன. அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து எப்படி அகற்றுவது என்பதைத் தவிர வேறு நோக்கங்கள் இருந்ததாகத் தெரியவில்லை.

இனிய செல்வ, இந்தியா ஒரு பெரியநாடு! பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் நாடு; பல மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் நாடு; ஏழைகள் அதிகம் வாழும் நாடு. இந்த நாட்டை ஆள்கின்ற எந்தக் கட்சியானாலும் அந்தக் கட்சியின் ஆட்சி, இந்திய ஒருமைப்பாட்டினைக் கட்டிக் காப்பாற்றக்கூடிய கொள்கையும், கோட்பாடும் உடையதாக இருக்கவேண்டும். மதச் சார்பற்ற தன்மையுடைய அரசே இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்றது. மேலும், நமது இந்திய நாடு பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நிறைய உள்ள நாடு. அதுபோலவே சம வாய்ப்புக்களும் பெறாத பல கோடி மக்கள் வாழும் நாடு. ஆதலால் சமநிலை சமவாய்ப்பு சமுதாயக் கோட்பாடே நமக்கு ஏற்றது. இவைகளில் எந்த ஒரு தன்மையையும் நாம் இழப்பது விரும்பத்தக்கதல்ல.

இனிய செல்வ! தேசீய முன்னணி ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் சூழல் உருவாகக் கூடும்! அமைய இருக்கும் புதிய ஆட்சிக்கு நமது வரவேற்பு! இந்த ஆட்சி நாட்டின் நலன் கருதித்தீட்டிடும் திட்டங்களை நாட்டின் குடிமக்கள் என்ற உணர்வில் - நிறைவேற்றிட ஒத்துழைப்போம்! உழைப்போம்! இனிய செல்வ! ஜனநாயக ஆட்சிமுறை உள்ள நாட்டில் அரசியல் கட்சிகள் பகைமை உணர்வுடைய எதிர் எதிர் கட்சிகளாக இயங்கக்கூடாது! அரசியல் கட்சிகளுக்கிடையில் நட்பியல் அடிப்படையில் விவாதங்கள் வளர வேண்டும். கட்சி-பிரதி கட்சி அடிப்படையில் நாடாளுமன்ற சட்டமன்ற விவாதங்கள் நடைபெறுவதைத் தவிர்க்க வேண்டும். நாட்டின் நலனுக்குரிய காரிய சாதனை அடிப்படையிலேயே அணுக வேண்டும்! ஜனநாயக வழி ஆட்சி நடைபெறும் நாட்டில் ஆட்சிகள் மாறுவது தவிர்க்க இயலாதது! இப்படி மாற்றங்கள் நேரும்போது துள்ளி மகிழ்தலும் துயருறுதலும் தவிர்க்கப் பெறவேண்டும். காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவரும் தேதிய முன்னணியின் ஆட்சிக்குச் சரியான முறையான எதிர்க்கட்சியாக இருந்து ஒத்துழைப்புத் தரவேண்டும். அப்படியே தருவார்கள் என்று நம்புகின்றோம். தேசிய முன்னணிக்கு காங்கிரஸ் தாய் வீடு போல, ஆதலால் தேசிய முன்னணியும், அதன் தலைவர்களும் காங்கிரஸ் கட்சியின் ஒத்துழைப்பையும் கேட்பார்கள் என்று நம்புகின்றோம்.

இனிய செல்வ! நல்லன நடப்பதாகுக!

இன்ப அன்பு

அடிகளார்