குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/வாக்காளர் கடமை

39. வாக்காளர் கடமை

இனிய செல்வ,

நமது நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் களத்தில் இறங்கிவிட்டனர்; இங்கும் அங்கும் சுறுசுறுப்பாக நடமாடுகின்றனர்! ஆரவாரமான காட்சிகள்! வெடி தெறிக்கும் பேச்சுகள்! தேர்தல் குடு பிடித்து விட்டது! ஆனால், வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தான் சூடு பிடித்திருக்கிறது! ஐயோ, பாவம்! இனிய செல்வ, தேர்தலில் தீர்ப்பு வழங்க வேண்டிய வாக்காளர்கள் இன்னும் சுறு

தி.24. சுறுப்பு அடையவில்லை! இனிமேலும் அடைவார்களா? என்பதும் கேள்விக்குறியே!

இனிய செல்வ, நாட்டின் தலைவிதி வாக்காளர்கள் கையில் இருக்கிறது! ஆனால் வாக்காளர்களோ வாளா இருக்கிறார்கள்! வாக்காளர்களுக்குத் திருவள்ளுவர் அற்புதமான ஆலோசனைகளைக் கூறியுள்ளார்! திருவள்ளுவர், வாக்காளருக்கென்று எழுதியுள்ள திருக்குறள்:

"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”

(517)

என்பதாகும்.

"இதனை’ - அதாவது வாக்காளர்களின் குறிக்கோளை-திட்டத்தை-தனிமனிதச் சார்பற்ற நாட்டின் பொதுத் திட்டத்தை என்பது பொருள். இன்றைய சூழ்நிலையில் நமது வாக்காளர்களின் பொதுத்திட்டம் எதுவாக இருக்க முடியும்?

1. வறுமையையும், ஏழ்மையையும் முற்றாக ஒழித்து வளமான சமுதாயத்தை அமைக்கப் பொதுத் துறையை வலிமைப் படுத்துதல்-கூட்டுறவுத் துறையை வலிமைப்படுத்துதல் மூலம் சமவாய்ப்புச் சமுதாயம் (சோஷ லிசம்) காணத் திட்டமிடல்; செயற்படுத்துதல்.

2. சாதி, மத வேற்றுமைகளற்ற ஒருமைப்பாடுடைய சமுதாய அமைப்பைக் காணல்.

இவையிரண்டும் இன்றையத் தேவை! முதல் தேவை! மேலும் சிலவும் உண்டு. ஆயினும், இவையே முக்கியமானவை! இந்த இலக்குகளை நாடு அடையக் கூடிய வழிவகைகளை ஆராய்ந்து செயல்புரியத் தக்காரே நமது பேராளராக-நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கத் தகுதி உடையவர். இன்றைய தேர்தலில் நிற்கும் கட்சிகள் அளித்துள்ள தேர்தல் அறிக்கைகளைக் கவனமாகப் படிக்க வேண்டும்! இவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளைக் கவனமாகக் கேட்க வேண்டும்; இதற்கும் திருவள்ளுவர்,

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

(423)

என்று அழகுற அறிவுரை கூறியுள்ளார்.

இனிய செல்வ, இந்தக் குறிக்கோள்களை அடைவது எளிதல்ல. சுயநல சக்திகள் தடைகளாகக் குறுக்கே வந்து நிற்கும். ஆட்சியையே கூடக் கவிழ்த்து விடுவதாகப் பயமுறுத்தும். இதுவே, நமது சென்றகால வரலாறு! இனிய செல்வ, குறிக்கோளில் ஊசலாட்டம் இல்லாதவர்கள் தேவை! சுயநலத் தன்மையுடைய சமுதாயப் பிற்போக்குச் சக்திகளுடன் அதிகாரப் பசி காரணமாகச் சமாதானம் செய்து கொண்டு குறிக்கோள்களைக் காற்றில் பறக்க விடுபவர்களாக இருக்கக் கூடாது. இனிய செல்வ, இந்த விவேகம் நமது வாக்காளர்களுக்கு என்று வருகிறதோ, அன்றுதான் நமக்கு நல்ல காலம்! தேர்தலின் முடிவை எதிர்பார்த்து......

இன்ப அன்பு
அடிகளார்