குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/வன்சொல் தவிர்க்க!
வன்சொல் வேண்டாம்! வேண்டவே வேண்டாம்! ‘சொல்’ சொல்லப்படுவது அன்புப் பரிமாற்றத்திற்கே! ‘சொல்’ சொல்லப்படுவது உறவினை வளர்த்துக் கொள்வதற்கே! சொல், பயனுடையதாக அமைதல் வேண்டும். வன்சொல் என்ன பயனைத் தரும்? யாதொரு பயனும் தராது! எதிர் விளைவுகளைத்தான் உருவாக்கும். வன்சொல் தவிர்த்திடுக! இனிய சொற்களையே வழங்குக!
சொற்கள் அன்பில் கலந்தவையாக இருக்க வேண்டும். செவிக்கும் சிந்தனைக்கும் வாழ்க்கைக்கும் இன்பம் பயப்பனவாக அமைதல் வேண்டும். சில சொற்கள் செவிக்கு இனிமையாக இருக்கும். ஆனால் சிந்தனைக்கு இனிமையாக இருப்பதில்லை. வாழ்க்கைக்கும் இன்பம் பயப்பனவாக இருப்பதில்லை! ஆதலால் வாழ்க்கையை வளர்க்கும் இன்சொல் கூறுக!
குணங்களைச் சொல்ல வேண்டும். குற்றங்களைப் பேச வேண்டும். இது அப்பர் அடிகள் காட்டும் வாழ்க்கை முறை. ஒருவருடைய குணங்களை அவரில்லாத இடத்தில் எடுத்துக் கூற வேண்டும். யாதானும் குற்றமிருப்பின் அவரிடம் நேரில் பேசும்பொழுது அதை எடுத்துக் கூறல் வேண்டும். நம்மில் பலர் இந்நெறிக்கு மாறுபட்டே வாழ்கின்றனர். ஒருவரது குற்றங்களை எடுத்துக் கூறுதலே ‘சிறுமை’ என்பார் திருவள்ளுவர். ‘சிறுமைதான் குற்றமே கூறிவிடும்" என்பதறிக!
வன்சொல் வரிசையில் தூற்றுதலுக்கு அடுத்தது கோள். ஆண்டாள் நாச்சியார் ‘தீக்குறள்’ என்பார். கோள் மிகவும் கொடுமையானது; கலகம் விளைவிப்பது; அமைதியைக் கெடுப்பது. வன்சொல் வரிசையில் தவிர்க்க வேண்டியவற்றுள் கோள் தலையாயது. அடுத்து இன்சொல்போலத் தோற்றித் தீமை செய்வது முகமன். இது அமைப்பில் வன்சொல் அல்ல. பயனில் வன்சொல் என்றே கூற வேண்டும். பாராட்டுதல் வேறு; முகமன் வேறு. முகமன் மூலம் ஒருவருடைய வளர்ச்சி பாதிக்கிறது. ஆதலால் முன்னே வைத்து உரைக்கும் முகமனைத் தவிர்த்திடுக! முகமனைத் தவிர்த்திடுக!
இன்சொல், கரும்பனையது; சொல்லுவார் கேட்பார் இருபாலாருக்கும் நன்மை பயப்பது; இன்பம் பயப்பது. இன்சொல் சொல்வதற்கு அதிக உழைப்புத் தேவையில்லை. பதற்ற நிலை தேவைப்படாது. ஆதலால் இன்சொல் கூறுபவர் இளமையும் இன்பமும் பேணி நிற்பர். வன்சொல், இரும்பனையது. இரும்பைக் கடித்தால் என்னாவது! இரும்பு கடித்தல் யாதொரு பயனையும் கூட்டுவிக்காது. அது எய்ப்பினையும் களைப்பினையுமே தரும். ‘இரும்பு கடித்து எய்த்தவாறே’ என்பார் அப்பரடிகள். இனிய சொற்கள் இயல்பாய் அமைந்தன; உரிமை உடையன; எளிதில் வழங்கத் தக்கன. இன்சொல் கனி! உரிமையில் உள்ள கனிகள்! வன்சொல்லோ செயற்கை அழுக்காறு, அவா, வெகுளி ஆகிய தீமைகளைத் துணைக் கொண்டு வருவது வன்சொல். வன்சொல் உயிர்க்கு அந்நியத் தன்மையுடையது; காய் அணையது. உரிமையுடைய தன்று. வன்சொல் கவர்ந்தே கூறுதல் வேண்டும். கவர்தல் எப்போதும் நன்மையன்று.
அன்பினைக் கெடுத்து உறவினை அகற்றும் வன்சொல் தவிர்த்திடுக. அன்பு கலந்த இன்பம் விளைவித்து எல்லாருக்கும் இன்பம் பயக்கும் இன்சொற்களையே கூறுக! இனிய சொற்களே கூறத்தக்கன! கூறுக! பழகுக!
'இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது’
என்பது. வள்ளுவம். சொற்களின் பயன் ஒருவரை ஒருவர் நெருங்கச் செய்வது; ஒருமையுடையராக்குவது; அகனமர்ந்த அன்பினராக ஒழுகச் செய்வது. வன்சொல் தோன்றும் களம் தற்சார்பேயாம். தற்சார்பான தன்னலத்திற்குக் கேடுவருமோ என்று ஐயுறும் பொழுது, தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் வன்சொல் தோன்றுகிறது. அடுத்து, வன்சொல் தோன்றும் களம் ஏமாற்றங்களும் தோல்விகளுமாகும். அழுக்காற்றின் காரணமாகவும் வன்சொல் தோன்றும். இந்தக் களங்களில் தோன்றிய வன்சொற்கள் யாதொரு பயனையும் தந்ததில்லை. மாறாக எதிர்விளைவையே உண்டாக்கியுள்ளன என்பதே வரலாற்று உண்மை, அதுமட்டுமல்ல, கருத்து வளர்ச்சியும் மாற்றங்களும்கூட வன்சொல் வழங்குவதின் மூலம் தடைப் படுகின்றன. நிலம் செப்பமாக இல்லாதபோழ்து விதைத்து என்ன பயன்?. முளைக்காது. கேட்பார் மனம் செப்பமாக இருக்கத்தக்க வகையில் இன்சொற்களைக் கூறாது போனால் பயன் கிடைக்குமா? மற்றவர் கூறிய இனிய சொற்கள் இன்பம் விளைவித்திருப்பதைச் சென்ற காலவரலாற்றிலும் காணமுடிகிறது. நிகழ்கால வரலாற்றிலும் காண்கிறோம். இன்சொல் இன்பத்தைத் தருகிறது. பழகும் இனிய நட்பினைத் தரும்! இத்தகு மேம்பட்ட பயன்களை இன்சொல் அளிப்பதை அறிந்திருந்தும் ஏன் வன்சொல் வழங்குகிறீர்கள்?
வன்சொல், வாளினும் கொடிது; நாவினால் வன் சொல் கூறிச் சுடுவது தவறு. வன்சொல் இன்ப அன்பிற்குப் பகை; அறத்திற்கு முரண். வன்சொல் அமைதியைக் கெடுத் திடும். வன்சொல் வழங்கற்க! இன்சொல்லைச் சொல்லிடுக!
வன்சொல், சிறுமை பொருந்தியது. இன்சொல், பெருமையோடு தொடர்புடையது. வன்சொல் இம்மையையும் கெடுக்கும்; மறுமையையும் கெடுக்கும். நன்றைத் தரும் இன்சொல் கூறிப் பழகுக! இன்சொல்லை அணியெனப் பற்றுக!22-3-1987