குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4/சமநிலைச் சமுதாய அமைப்புக்குத் திருக்குறள் முரணாகாது
திருக்குறள் ஒரு அறநூல்; நீதி நூல்; வாழ்க்கை நூல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மனித குலத்தின் வாழ்வியல் நிலைகளைக் கணித்து நோக்கின் திருக்குறளின் சிறப்புத் தோன்றும். திருக்குறள் மனித குலத்தை வாழ்வாங்கு வாழத் தூண்டுகிறது; வழி நடத்துகிறது. ஆனால் மனித குலத்தின் நடைப்பயணம் இன்னமும் வள்ளுவர் வழியில் நடைபெறவில்லை. அது தன் போக்கிலேயே பயணம் செய்து கொண்டிருக்கிறது. வள்ளுவம் வாழ்க்கையை வாழ்க்கையாகவே அணுகுகிறது; வாழ்க்கையைப் பயனுடைய தாக்கவே விரும்பி நெறிமுறைகளை வகுக்கிறது.
வள்ளுவம் வாழ்க்கையை அணுகும் முறை அறிவியல் முறை; நம்பிக்கைக்குரிய நெறிமுறை. வள்ளும் மனித குலச் சிக்கல்களுக்குக் காரணமாய் அமைந்துள்ள பல்வேறு உண்மைகளை ஆராய்ந்து அந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டுள்ளது. மனித குலத்தின் அல்லது மனிதர்களின் வாழ்க்கை அவர்கள் சம்பந்தம் உடையதா? அல்லது அவர்களே விரும்பிப் படைத்துக் கொள்ளக் கூடியதா? அல்லது அவர்கள் அல்லாத அவர்களுக்கும் மேம்பட்ட கடவுளின் செயலா? என்பது முதற்கேள்வி; முதற்சிக்கல்! உயிர், கடவுளின் படைப்பு என்ற கொள்கையில் உயிருக்கும் பயன் இல்லை; கடவுளுக்கும் பயனில்லை. அதுமட்டுமன்று. கடவுளுக்கு இந்தக் கொள்கை குறை கற்பிக்கும். அறியாமையும் குறைகளும் உடைய உயிர்கள் கடவுளால் படைக்கப்பட்டன என்றால் படைப்பாளனின் திறம் ஐயப்பாட்டிற் குரியதாகி விடுகிறது உயிர். கடவுளால் படைக்கப் பெற்றது என்றால் உயிர்களுக்குச் செயற்பாடு இல்லை. அதனால் வளர்ச்சி இல்லை தேக்கம்! வள்ளுவம் ‘உயிர்’ கடவுளால் படைக்கப்பெற்றதல்ல என்ற கருத்துடையது-உயிர் என்றும் உள்பொருள் என்பது குறளியம்.
மன்னுதல்=நிலைபெறுதல்
‘மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் கழ் நிறீஇத் தாமாய்ந் தனரே!’
(புறம்-165)
என்ற புறநானூற்றுச் செய்யுட் கருத்தை அறிக.
‘தம்மில்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.’
68
‘மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற் கில்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.’
244
என்ற குறட்பாக்கள் ‘உயிர்’ நிலையானது என்றே கூறுகின்றன. இக்கருத்தின் மூலம் ‘உயிர்கள் என்றும் உள்ளவை; படைக்கப் பெற்றவையல்ல’ என்பது உறுதிப்படுத்தப் பெறுகிறது. இதனால் பல்வேறு சிக்கல்கள் தோன்றாமலே போகின்றன.
‘உயிர், கடவுளால் படைக்கப் பெற்றது; உயிர்களின் இன்ப துன்பங்கள் கடவுளால் உயிர்களுக்கு வழங்கப்பெறுகின்றன’ என்ற கொள்கைகள் குமுகாய அமைப்பிற்கு ஊறு விளைவிக்கும் கொள்கைகள். இக்கொள்கைகளால் குமுகாயத்தில் சாதி வேற்றுமைகள் நிலவும், அதனால்தான் குமுகாயப் புதுமையை, பொதுமையை நாடியவர்கள் எல்லாரும் சமயத்தை எதிர்ப்பவர்களானார்கள். இத்துறையில் திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புதிய முறையில் கருத்தை வெளிப்படுத்தியது. உயிர்கள் நிலைபெற்றவை. உயிர்களின் இன்ப துன்பங்கள் அவரவர் வினைவழி வருபவை; "வினை"-செயல், உயிர், உயிர்ப்புள்ளன. ஓயாது தொழிற்படுவது. செயல்கள் செய்வோர் அச்செயல்களுக்குரிய பயனை அடைய வேண்டும் என்பதே இக்கொள்கையின் கருத்து. உழைப்பின் பயன் உரியவர்களுக்கு என்ற கொள்கை அறிவுக் கிசைந்ததுதானே!
ஆயினும் ஓர் ஐயம்! திருக்குறள் மறுபிறப்புக் கொள்கைக்கு உடன்படுகிறது. "எழுபிறப்பு” என்று வள்ளுவம் கூறுகிறது. சமய நூல் மரபில் எழு பிறப்பென்பது.
'புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும்'
என்று பேசப் பெறுகிறது. தொல்காப்பியம் உயிர்களின் பிறப்பினை ஓரறிவுயிர் முதலாக ஆறறிவுயிர் ஈறாக வகுத்துக் கூறுகிறது. ஆறு பிறப்பு வரை மண்ணியல் சார்ந்த வாழ்க்கை. ஏழாவது பிறப்பு கிடையாமல் சார்புடைய இன்ப அன்பியல் வாழ்க்கை என்பது கொள்கை. எல்லையற்ற பிறப்புகள் என்ற கருத்தும் உண்டு. ‘எழு’ என்பதற்கு இனி எழுகின்ற பிறப்புகள் என்றும், பொருள் கொள்வர். மறு பிறப்பில் நம்பிக்கை யில்லாதவர்கள் “எழு பிறப்பு” என்பதனை வாழ்க்கையின் ஏழு நிலைகளை எழு பிறப்பு என்று கொள்கின்றனர். இதனைச் செகப்பிரியாரும் “The Seven Stages of life” என்று கூறியுள்ளார். இவற்றில் எந்தக் கருத்தைக் கொண்டாலும் பிழை பெரிதொன்றும் இல்லை.
நேற்றைய தீய குணங்களினின்றும் விடுதலை பெற்றுப் புதிய குணமும் பொறியும், பெற்றால் “புதுப்பிறவி” என்றும், செத்துப் பிறந்துள்ளான் என்றும் கூறுவது வழக்கிலும் உண்டு. பல பிறப்புகள், மறுபிறப்புகள் என்ற கொள்கையின் மையம். உயிர்கள் படிமுறையில் வளர்ச்சியடைவது என்பதேயாகும். இங்கு வளர்ச்சி என்பது, உயிர்த் தொடர்பான அறிவும் குணங்களுமேயாம். கல்வி - ஒழுக்கத்தின் பயன்தான் எழுமையும் தொடரும். நிலம், பொன், பொருள் முதலியன உடற்சார்புடையன. இவை உயிரைத் தொடர இயலா. ஆதலால் சமநிலைச் சமுதாய அமைப்புக் கொள்கைக்குத் திருக்குறள் முரணாக இல்லை என்பது கருத்து.
தி.iv.21