குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4/பெரியாருக்குப் பிடித்த குறள்

11
பெரியாருக்குப் பிடித்த குறள்!

1969-ஆம் ஆண்டு, ஒரு நாள் தலைவர் தந்தை பெரியார் அவர்களும் நாமும் ஒரே காரில் மதுரையிலிருந்து திருநெல்வேலிக்குச் சென்று கொண்டிருந்தோம். திருப்பரங்குன்றத்தைக் கடந்தவுடன் ஐயா அவர்கள் தமது சட்டைப் பையில் வைத்திருந்த திருக்குறள் மூலநூல் ஒன்றை எடுத்தார்கள். அதில் “குடிசெயல் வகை” என்ற அதிகாரத்தை நம்மிடம் தந்து படிக்கும்படி சொன்னார்கள். அதில் அவர்கள் படிக்கச் சொன்ன குறள் இன்னும் நம் நினைவில் பசுமையாக இருக்கிறது.

‘குடிசெய்வார்க்கு இல்லை பருவம்; மடிசெய்து
மானம் கருதக் கெடும்.’

(1028)

என்பது அத்திருக்குறள். நாம் குறளைப் படித்துவிட்டு ஐயா அவர்களின் முகத்தைப் பார்த்தோம். ஐயா அவர்கள் அதற்குப் பொருள் கேட்டார்கள். நாம் தயங்கினோம். ஐயா அவர்களிடமிருந்து பொருள் கேட்பதற்காக! அவர் கூறும் பொருள் நடைமுறைப் பட்டறிவிலிருந்து தோன்றி, பகுத்தறிவிற் சிறந்து விளங்குமல்லவா? அதற்காகத்தான்! ஐயா அவர்கள் சிரித்துக்கொண்டே பொருள் விளக்கம் கொடுத்தார்கள்.

“நமது தமிழ்க்குடியை வளர்க்க வேண்டும்; நாள், நட்சத்திரம் பார்க்காமல் விரைந்து தொண்டு செய்ய வேண்டும். தமிழ்க் குடியைத் தழைக்கச் செய்யும் தொண்டினை “இன்று” “நாளை” என்று ஒத்திப் போட்டுச் சோம்பல் செய்யக் கூடாது. தமிழர்கள் தமக்குள் மானம், அவமானம் என்ற அடிப்டையில் பழகக் கூடாது. மானம், அவமானத்தைக் கடந்ததுதான் தமிழினத்திற்குச் செய்யக்கூடிய பணி. இந்த உணர்வோடு தொண்டு செய்தால்தான் தமிழ்க்குடி வளரும். இதைத்தான் இந்தக் குறள் நமக்குச் சொல்கிறது” என்றார்.