குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4/திருவள்ளுவர் உணர்த்தும் இறையுணர்வு
அன்புக்கும் போற்றுதலுக்குமுரிய தலைவர் அவர்களே! பெரியோர்களே! நண்பர்களே! சகோதரர்களே! சகோதரிகளே! பொதுவாக, நம் அனைவரையும் மீண்டும் மீண்டும் கூடிச் சிந்திப்பதற்கு வாய்ப்பளிக்கின்ற திருவருளுக்கும், நண்பர்களுக்கும் நன்றி! வாழ்த்துக்கள்.
சாதாரண சாலைவழிப் பயணத்திலும் நிகழ்ச்சி அமைப்பிலும் கூட, நாம் பல தவறுகளைச் செய்கிறோம். இந்த மாதிரி தவறுகள் நிறைந்த வாழ்க்கை சமூகத்திற்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பெரிய பயனைத் தருவதில்லை. அதனால்தான் இன்றைக்கும் பேச்சு இருக்கிறது. நாளைக்கும் பேச்சு இருக்கிறது என்று என்னுடைய செயலாளர் சொன்னார். நான் இன்றைக்குத் திருவள்ளுவரைப் பற்றியும், நாளைக்குச் சேக்கிழாரைப் பற்றியும் பேசலாம் என்று இருந்தேன். இன்றைக்குக் கடைசிப் பேச்சு என்று சொல்கிறார்கள். ஆகவே இன்றைக்கு என்னுடைய பேச்சை எப்படி அமைத்துக் கொள்வது என்று காரிலே ஏறிய பின்புதான் கலந்து பேசினேன். இன்னும் எத்தனை நாள் மாரியம்மன் கோவிலில் பேச வேண்டும் என்று கேட்டதற்கு ‘இன்றும், நாளையும்’ என்ற செய்தி கிடைத்தது. அறிவிப்பாளர் இன்றோடு கடைசிப் பேச்சு என்று சொல்லுகிறார். நான் இப்போது திருவள்ளுவரைப் பற்றிப் பேசுவதா, சேக்கிழாரைப் பற்றிப் பேசுவதா என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். இன்று சேக்கிழாரில் பேச்சை முடிக்கலாம் இந்தக் கூட்டத்திலே என்று இருந்தேன். இருந்தாலும் இன்றைக்கு நான் சிந்திப்பதற்கும் பேசுவதற்கும் எடுத்துக் கொண்ட தலைப்பு, திருவள்ளுவரைப் பற்றிக் கடவுள் நெறி, கொள்கை, வாழ்க்கைப்போக்கு என்ற நிலையிலே எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்தேன். அந்தத் துறையிலேயே சிந்திக்கலாம். நான் கீழ்த்திசை நாடுகளுக்குப் போய் வந்த பின்பு ஒருநாள் பேசப் போவதாகச் சொல்கிறார்கள். அல்லது திருமுறை மாநாடு வருகிறது. பன்னிரு திருமுறைகளிலே சேக்கிழார் புராணமும் ஒன்று. எனவே, அப்பொழுது பெரிய புராணத்தைப் பற்றி உங்களுக்கு நினைவூட்டலாம். காரணம், எந்தச் சொற்பொழிவாக இருந்தாலும் பெரிய புராணத்தில் நின்று சில கருத்துக்களை நாம் நினைவூட்டத் தவறினால், நம்முடைய சான்றோர்கள், முன்னோர்கள் செய்த மாற்றங்கள், எழுச்சிகள் மறந்து போகும். எனவே எந்த ஒரு சமயச் சொற்பொழிவானாலும், சேக்கிழாருடைய அடிச்சுவட்டை வைத்துச் சிந்திப்பது நல்ல பழக்கம். அன்றைக்குத் திருமுறை மாநாட்டில் நான் பெரிய புராணத்தைப் பற்றிப் பேசலாம் என்று நினைக்கிறேன்.
திருவள்ளுவர் முதன் முதல் மானிடராகப் பிறந்த முறையில், மனிதர்கள் பேசுகிற முறையில், மனிதர்களுக்காக, அவர்களுடைய வாழ்க்கைக் கட்டுமானம் எப்படி இருக்க வேண்டும் என்ற நிலையில்; முதல் முதலாகச் சிந்தித்து ஒரு நூலைச் செய்கிறார். அது தமிழில் தோன்றியதால் தமிழ்மறையாகவும், அது உலகத்திற்கே பொதுமறையாக இருப்பதால் உலகப் பொதுமறையாகவும் விளங்குகிறது. திருக்குறள் சமயச் சார்பற்ற நூல் என்று எல்லோராலும் வலியுறுத்தப்படுகிறது. அதிலே ஓரளவு உண்மையும் இருக்கிறது. ஆனால், சமயச் சார்பற்றது என்று சொன்னால், சமய நம்பிக்கை இல்லாத நூல் என்று பொருள் கொள்ளக் கூடாது. சார்பற்றது என்பதற்குப் பொருள் ஒன்றை வலிந்து வற்புறுத்தி, திணிக்காத நூல் என்றுதான் பொருள். கல்லாடர் என்ற ஆசிரியர், ‘சமயக் கணக்கர் மதிவழி செல்லாது’ என்று கூறுகிறார். இந்தச் சமயக் கணக்கர் யார் என்று சொன்னால், அவர்கள் கடவுளைக் கூட வழிபட மாட்டார்கள். தன் கடவுள்தான் உயர்ந்தது என்று சண்டை போடுவார்கள். மதத்தினுடைய கொள்கை கோட்பாடுகளை வாழ்க்கையில் பின்பற்ற மாட்டார்கள். ஆனால், தம்முடைய மதம் உயர்ந்தது என்று சண்டை போடுவார்கள். பலர், இந்த நாட்டில் மட்டுமல்ல, உலக சமுதாயத்திலேயே போராடுகிறவர்கள் இருக்கிறார்கள். எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள்; பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால், மதத்தை அனுட்டித்து வாழ்க்கையில் வெற்றி பெற முயற்சிப்பவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதை உலக வரலாறு, நமக்கு நினைவூட்டுகிறது. அதனால்தான் மதம் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடத்தில் கூட சண்டைகள், கலவரங்கள் தோன்றுகின்றன. திருவள்ளுவர், உலகப் பொதுமறையாக ஆக்கித் தந்ததின் காரணமாக இவர் இன்னார் என்று தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் பொதுவாக மனித இயல்புக்குரிய அறங்களையெல்லாம் சொல்லியிருக்கிறார்.
ஓர் ஐந்தாறு குறள்களை இன்றைக்கு நாம் சிந்திக்கலாம். அடிப்படையிலிருந்து ஆதார சுருதியிலிருந்து என்னுடைய இந்தப் பேச்சு விலகிப் போகாது. அப்படி விலகிப் போனால் ஒன்றுக்கொன்று முரண்பாடு இருப்பது போலத் தெரியும். மாணிக்கவாசகர் என்ன வற்புறுத்தினாரோ, நாவுக்கரசர் என்ன வற்புறுத்தினாரோ, அதையே தான் வேறு வார்த்தைகளில், வேறு முறையில் திருவள்ளுவர் நமக்கு நினைவூட்டுகிறார். திருவள்ளுவருக்கும் உயிர் உண்டு என்ற நம்பிக்கை உண்டு. அதற்குப் பல்வேறு சான்றுகள் நாம் நினைப்பூட்டலாம். அவருடைய குறள்வழி பார்த்தால், ஒரு கூட்டுக்குள் ஒரு பறவை இருக்கிறது. அந்தப் பறவை அந்தக் கூட்டுக்குள் இருந்து பறந்து போய் விடுகிறது.
‘குடம்பை தனித்தொழியப் புள் பறந்தற்றே’
என்பார். தூக்கணாங் குருவிக் கூடு பார்த்திருப்பீர்கள். அதிலே பறவை குடி இருக்கிறது. அது பறந்து போகிறது. அதேபோல, ஓர் உடம்பில் உயிர் தங்கி இருக்கிறது. இதுவும் பறந்து போகிறது. மூச்சு விட மறந்துவிட்டார் என்று சொல்கிறோம். நாகரிகமாகச் சொல்பவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். இறந்துவிட்டார் என்று சொல்லாமல், மூச்சு விட மறந்து விட்டார் என்று சொல்லுவோம். ஆக உயிர், என்று ஒன்று உண்டு. அந்த உயிருக்கு இன்ப துன்பங்கள் உண்டு. அதற்குத் துய்ப்பும், மகிழ்வும் உண்டு; அதற்குப் பொறிகள், புலன்கள் உண்டு. அது வாழ்க்கையில் வாழ்கிறது. அது ஏழு பிறப்புகள் பிறக்கிறது. அது ஈட்டுகிற ஈட்டங்கள் ஏழு பிறப்பும் தொடரும், என்றெல்லாம் பல்வேறு செய்திகளை வரிசைப்படுத்திச் சொல்லுகிறார். ஆக உயிர் உண்டு என்பதால் ‘மன்னுயிர்’ என்று சொல்லுகிறார். ‘மன்னுயிர்’ என்று சொன்னால் நிலைபெற்ற உயிர். நிலைபெற்ற உயிர் என்று சொன்னால் தோற்றமும் அழிவும் இல்லாத உயிர் என்று பொருள். இவ் உயிரை வாழ்க்கையிலே இப்படியெல்லாம் இயக்குவது எது என்பதற்கு, கடவுள் வாழ்த்திலே திருவள்ளுவர் நாம் செய்கிற வினைகளை, செயல்களைச் சொல்லுகிறார். மீண்டும், மீண்டும் கூறுகிறேன், ஒன்றைத் தயவு செய்து மறந்துவிடக் கூடாது. வினை, விதி என்று சொன்னால், ஏதோ நமது மூளையிலே ஒரு பயங்கரமான பீதி உண்டாக்கி இருக்கிறார்களே, அதுபோன்ற ஒரு பீதியை நாம் கொள்ளக் கூடாது. ‘வினை’ என்றாலே செயல் என்றுதான் பொருள். ‘வினையே ஆடவர்க்கு உயிர்’ என்று தமிழ் இலக்கியம் பேசும். ஓர் ஆண் மகன் என்று சொன்னால், செயல் செய்வதுதான் அவனுக்கு இயற்கை. செய்வதுதான் அவனது உயிர் இயற்கை. செய்யாமல் இருந்தால்தான் தவறு. எனவே, செயல்கள் செய்யாமல் சோம்பி இருப்பது வாழ்க்கையன்று.
செயல்களின் பயன்களைவிட, செயல்கள் செய்வதற்குரிய நோக்கத்தின் பயன்தான் விளையும். ஆக வினை துன்பமாக மாறுவது, அல்லது வினை இன்பமாக மாறுவது, எந்த நோக்கத்தில், எதற்காக ஏன் செய்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது. இப்பொழுது நான் கோயில் ஒன்று கட்டுகிறேன். கோயில் கட்டுகிற செயல் நல்ல செயல். அதிலே புண்ணியம் கிடைக்க வேண்டும்; கிடைக்கலாம். ஆனால் நான் கோயில் கட்டுகிறபொழுது வேறு யாரையாவது ஏமாற்றி முதலடிப்பதற்காகக் கோயில் கட்டினால், பணம் பெட்டியிலே நிறையும்; ஆனால் புண்ணியம் வந்து சேராது. செய்கிற செயல்களைவிட, செய்வதற்குரிய நோக்கம் என்ன? அதனால்தான் பொறுத்தார் ஓர் இடத்தில் பாராட்டப் பெறுகிறார் சேக்கிழாரால். வெகுண்டு தாக்குவார் ஓர் இடத்தில் பாராட்டப் பெறுகிறார். சேக்கிழாரையும் நாம் இன்றைக்குக் கூடவே சேர்ந்து பார்க்கலாம். ஓர் இடத்திலே ஒருவன் மிகப் பெரிய பொறுமைசாலியாக இருக்கிறான். பகைவன் வருகிறான்.
திருவள்ளுவரே,
‘மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.’
278
என்று சொன்னார்.
‘மனத்தது மாசாக’ மனத்திலே ஏகப்பட்ட குப்பை. நகராட்சிக் குப்பைத் தொட்டிகளைவிட மோசமான குப்பைத் தொட்டி, அதை நம்முடைய பாரதி ஓரிடத்தில் நகைச்சுவையாகக் கிண்டல் - கேலியாகச் சொல்வார். யாழ்ப்பாணத்துச் சாமியார் என்று ஒருவரைச் சந்திக்கிறார் பாரதி. அந்த யாழ்ப்பாணத்துச் சாமியாரைத் தெருவிலே நடமாட விடுகிறார். அவர் ஒரு கிறுக்கர். பைத்தியம் மாதிரி தலையிலே கந்தைத் துணியெல்லாம் கட்டிக் கொண்டு போகிறார். சின்னப் பிள்ளைகளுக்குப் பொதுவாக சாமியாரைப் பார்த்தாலே, ஒரே மாதிரியாகப் பார்க்கின்ற பார்வை தோன்றும். அதிலும் ஒரு கந்தலையும் கிழிசலையும் தலையிலே கட்டிக் கொண்டு போனதால், ஏளனமாகப் பார்த்துப் பரிகாசம் செய்திருக்கிறார்கள். உடனே இந்த யாழ்ப்பாணத்துச் சாமியார் அவர்களை யெல்லாம் பார்த்து ‘கந்தலும், கிழிசலும் என் தலைமீது தான் இருக்கின்றன. நான் இப்படி ஆட்டினால் கீழே விழுந்துவிடும். ஆனால், நீ தூக்க முடியாத அழுக்கு மூட்டையை உள்ளத்தில் சுமந்து கொண்டிருக்கிறாயே’ என்று கேட்டார். தாங்க முடியாத அழுக்கு மூட்டையைச் சிலபேர் சுமந்து கொண்டிருப்பார்கள். இந்த அழுக்கு மூட்டைகளை யெல்லாம் நீக்குவது என்பது தான் செயலினுடைய நோக்கம். ஆக எதற்காகச் செய்கிறோம்? கோயில் கட்டியதனாலேயே கோயில் என்று வந்துவிடாது. ‘மனத்தது மாசாக மாண்டார் நீராடி’ அதாவது, 'மிகப் பெருமைக் குரியவர்களுடைய கோலத்தையும், மிகப் பெரியவர்களுக்குரிய தன்மையையும் தான் பெற்றிருப்பதாகக் காட்டி’ என்பர்.
மாணிக்கவாசகர் இதிலும் கேலி செய்வார்,
‘நாடகத்தால் உன்னடியார்
போல்நடித்து நானடுவே
வீடகத்தே புகுந்திடுவான்
மிகப்பெரிதும் விரைகின்றேன்’
என்பார்.
சமய வாழ்க்கையில் கொஞ்ச நாளைக்கு நடிப்பது நல்லதுதான். கண்ணை மூடி இருப்பது போலக் கொஞ்ச நாளைக்கு மூடினால்தான் மூடுகின்ற பழக்கம் வரும். ஆனால் நடிப்பதற்காக அப்படி மூடக் கூடாது. மூடிப் பழகுவதற்காக மூடலாம்; நடிப்பதற்காக மூடக் கூடாது. மாணிக்கவாசகர் சொல்கிறார். அடியார் எல்லாம் நின்று கொண்டிருக்கிறார்கள். இவர் அப்பொழுதுதான் முதன் முறையாக வந்திருக்கிறார் அந்த வரிசைக்கு. ஏனென்றால் மாணிக்கவாசகருக்கு இந்த அனுபவமெல்லாம் அதிகம். இன்னோர் இடத்திலே இரக்கப் பட்டு, உரிமையோடு கேட்பார்;
‘பழஅடியீர்! பாங்குடையீர்!
புத்தடியோம் புன்மைதீர்த்
தாட்கொண்டாற் பொல்லாதோ’
என்று. இந்து மதத்திலே பழைய அடியராக இருப்பவர்கள், புதிய அடியார் வந்தால் அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இப்பொழுது நான் கூட மலேயாவிற்குப் புது அடியாராகப் போய்விட்டேன். இவர்கள் கூட என்னை அவ்வளவு சீக்கிரமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் இவர் இங்குப் பரம்பரையாக இருக்கின்ற அடியாராக இருக்கின்றார் என்று. ஆகவே, ‘பழ அடியீர்! பாங்குடையீர்! புத்தடியோம்! புன்மை தீர்த்தாட் கொண்டால் பொல்லாதோ’ என்கிறார். மிகவும் மாற்றுப் பார்ப்பார்கள்; தரம் பார்ப்பார்கள். இந்த அடியார்கள் சீக்கிரம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்கிறார்.
‘மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்’
278
‘தான் நினைத்த அப்பரிசே செய்ய’
என்கிறார் சேக்கிழார். ‘குத்தி விட்டான்’ என்று சேக்கிழார் சொல்லப் பயப்படுகிறார். அவ்வளவு கொடுமை செய்தவனை வெட்ட வரும் தத்தனைப் பார்த்து மெய்ப் பொருளார் தாம் கீழே விழுகிற பொழுது, ‘தத்தா நமர்’ என்கிறார். அங்கே பொறுத்தாற்றுகின்ற பண்பு பாராட்டப் பெறுகிறது. ஆனால், சண்டேசுவர நாயனார் புராணத்தில் தன்னை ஈன்ற தந்தையின் காலையே தடிந்து, கோடரியால் வெட்டுகிறார். அங்கு வெகுளியைச் சேக்கிழார் வாழ்த்துகிறார். ஓர் இடத்தில் பொறையுடைமையை வாழ்த்துவானேன்? ஓர் இடத்தில் வெகுளியை வாழ்த்துவானேன்? என்று சொன்னால், மெய்ப்பொருளாருக்கு வந்தது அவரைப் பற்றிய சொந்த, தன் சார்பான கேடு. எனவே, தற்சார்பாக வருகின்ற கேடுகளையெல்லாம் மனிதன் தாங்கிக் கொள்ள வேண்டும்; பொறுத்தாற்ற வேண்டும். ஆனால், சண்டேசுவர நாயனார் வரலாற்றில் வருகின்ற கேடு, பரம்பரையாக வருகின்ற ஓர் இனத்தினுடைய பண்பாட்டு நாகரிகத்தைக் கெடுக்கின்ற கேடு. ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக வழிபாட்டுக்கென்று பயன்படுகிற மூர்த்தியை, அந்த வழிபாட்டுச் சடங்கை, அந்த வழிபாட்டு முறைகளை அலட்சியப்படுத்தியதனாலே கோபம் வருகிறது.
இப்பொழுது நம்முடைய நிலை அப்படி இல்லை. தலை கீழாக மாறி இருக்கிறோம். இப்பொழுது யாராவது நம்மைத் திட்டினால், நமக்குக் கோபம் வந்துவிடும். நம்முடைய மொழியை, நம்முடைய மதத்தை, நம்முடைய சமூகத்தை, யாராவது பேசினால் கோபம் வராது; ‘அதெல்லாம் கடவுள் இருக்கிறார் பார்த்துக் கொள்வார்’ என்று சொல்லி விடுவோம். பழங்காலத் தமிழ் மக்கள் தங்களைவிடத் தங்களுடைய கலை, மொழி, நாகரிகம், சமயம் இவைகளை முன்னிலைப்படுத்தித் தாங்கள் பின்னே நின்று கொண்டார்கள். இன்று நம்முடைய வாழ்க்கையில் நாம் முன்னே நின்று கொண்டு, நம்முடைய மொழி, கலை, சமயம், நாகரிகம், பண்பாட்டைப் பின்னே வைக்கிறோம். தெளிவாகச் சொன்னால், நமக்குத்தான் எல்லாம் இருப்பதாகச் சொல்கிறோமே தவிர, அவைகளுக்காக நாம் இல்லை. இந்தப் போக்கை அந்தச் சண்டேசுவர நாயனார் வரலாற்றில் பார்க்கலாம். எனவே,
‘மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.’
278
என்று சொல்வதைப் போல, காரியங்கள் செய்வது மட்டும் முக்கியமல்ல. காரியங்கள் செய்வதற்குரிய நோக்கம் என்ன என்பதே முக்கியம். எந்தக் கோலம் கொண்டிருக்கிறோம் என்பது முக்கியமல்ல. நம்முடைய மனம் எங்கே தங்கியிருக்கிறது என்பது முக்கியம்.
‘எக்கோலம் கொண்டால் என்ன?
ஏதவத்தைப் பட்டால் என்ன?
முத்தர் மனமிருக்கும் மோனத்தே’
என்று சொன்னார்கள். நீ இருப்பது உப்பரிகையாக இருக்கலாம். நீ இருப்பது கோயிலாக இருக்கலாம். ஆனால் உன்னுடைய மனம் கோயிலில் இருக்கிறதா? உப்பரிகையில் இருக்கிறதா? அல்லது குப்பை மேட்டில் இருக்கிறதா என்று கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். இந்த மனம் எங்கிருக்கிறது. எந்த நோக்கத்தில் செயல்படுகிறது என்பதுதான் முக்கியம். எனவே வினை என்பதற்குச் செயல் என்ற பொருள் எடுத்துக் கொண்டு, அது இருள் சார்புடையதாக இருக்கின்றதா? ஒளிச் சார்புடையதாக இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். இரண்டு வினையும் அப்படித்தான். திருவள்ளுவர்தான் முதன் முதலில் உலகத்தில் ஒரு புதுநெறி வகுக்கிறார்.
‘அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை’
76
என்றார். ஒரு தவறுக்குக் கூட, ஒறுத்தலுக்குக் கூட அறம் துணை செய்யும்; அன்பு துணை செய்யும். மருத்துவர் ஒருவரை அறுத்துச் சுடுகிறார். ‘வாளால் அறுத்துச் சுடினும் மாளாத காதல்’ வைத்தியரிடத்திலே. நம்முடைய உடல் நோய்வாய்ப்பட்டிருக்கிற போது ஓர் அறுவை வைத்தியர், அறுத்து வைத்தியம் செய்கிறார். அவரிடத்திலே காதல் வருமா? வெறுப்பு வருமா? ஆகவே நம் நாட்டினுடைய நாகரிகத்தின்படி - பண்பாட்டின்படி, தண்டித்துக் கண்டித்துத் திருத்துவதும் நல்லது. அது அன்பினால் செய்யப்படுகின்ற காரியம். இந்த அடிப்படையிலே செயலை வைத்து நன்மையா, தீமையா என்று முடிவெடுக்கக் கூடாது. அதனுடைய விளைவு என்ன? பயன் என்ன? சில பேர் நல்வினை செய்யலாம்; தீவினை செய்யக் கூடாது என்பார்கள். நல்வினை செய்யலாம். செய்கின்ற பொழுது கூட, தனக்காக என்று செய்தால் அது பொன்விலங்கு.
நான் நல்வினை செய்தால் கூட, அது நான் செய்கிறேன் என்று செய்தால் நமக்குப் பயன் கருதிச் செய்தால், அந்தக் கணக்குப்படி இலாபம் நமக்குத்தான். தஞ்சை மாவட்டம் முழுவதும் சுற்றிப் பார்த்தால் தெரியும். தஞ்சைப் பெருவுடையார் கோயில் யார் கட்டினார் என்பது, மக்களாகச் சொல்லுகின்ற பெயரே தவிர, அங்கு இராஜராஜன் கட்டினான் என்று ஒரு கல்வெட்டு இல்லை. அவன் காலத்திலேயே அவன் தனக்கு ஒரு சிலை வேண்டுமென்றால், அவன் வைத்திருக்க முடியும். ஆனால், அவர்கள் தங்களையா முன்னிருத்திக் கொண்டார்கள். இல்லை! அவர்கள் தங்களைப் பின்னிருத்திக் கொண்டார்கள். கலைகளை முன்னே வைத்தார்கள்; கோயில்களை முன்னே வைத்தார்கள்.
அதனால்தான், நான் நகரத்தார் கோயிலிலே பேசுகிறபொழுது சொன்னேன், ‘தன்னுடைய தலையைக் காப்பாற்றிக் கொள்வதைவிட, காளையார்கோவில், கோவிலைக் காப்பாற்றுவது பெரிது’ என்று மருது சகோதரர்கள் நினைத்தார்கள். ஆக, தான் வாழ்வதைவிட, தன்னுடைய நாடும், தன்னுடைய மொழியும், தன்னுடைய கலையும், தன்னுடைய நாகரிகமும் வாழ்வது பெரிது என்று நினைத்தார்கள். எனவே, ‘இருள் சேர் இருவினையும் சேரா’ என்று சொன்னால் இந்த உயிர்களை இரண்டு வினைகளும் வந்த சேரக் கூடாது. சேரக் கூடாது என்று சொன்னால், இரண்டு வினைகளாலும் இருக்கின்ற பயன் வந்து சேரக் கூடாது. வேறு வார்த்தைகளில் சொன்னால், மனிதன் என்றைக்கும் தன்னுடைய கணக்கை நேராக முடித்து, பற்று வரவைக் குறைத்து, இறுதியில் அவன் என்றைக்கும் கணக்கை நேராக ஒத்து வைத்துக் கொள்வது நல்லது. இந்தக் கணக்கு நேராக ஒத்துப் போகாது போனால், அதனால் வருகிற விளைவுகளை நாம் அனுபவிக்க வேண்டிவரும். ஆக, ‘இருள் சேர் இருவினையாக இருப்பதால்’ சரியாகச் செயல்களைச் செய்ய வேண்டும். அதே நேரத்தில் அவை நமக்கு இன்பத்தை, துன்பத்தைத் தருவதாக வரக்கூடாது. இன்னொன்றை மறந்து விடக்கூடாது. இன்பமாக இருந்தாலும் மருந்துதான்; துன்பமாக இருந்தாலும் மருந்துதான். இந்த அடிப்படை உணர்வு நமக்கு வராது போனால், நம் வாழ்க்கையில் வெற்றி பெற மாட்டோம். திடீரென இன்றைக்கு ஒரு துன்பமே வருவதாக வைத்துக் கொள்ளுங்கள். இந்தத் துன்பத்தையும் நாம் சிரித்த, மகிழ்ந்த, மலர்ந்த முகத்தோடு வரவேற்று அனுபவித்தால் தான் நமக்கு இவற்றினால் உள்ள துன்பம் நீங்கும். நமக்குத் துன்பம் என்றால் உடனே துவண்டு போகிற பழக்கங்கள், கசப்பான மருந்தாக இருந்தாலும் எப்படியாவது மூக்கைப் பிடித்துச் சாப்பிட்டுத்தான்னே ஆக வேண்டும். அந்த நோய்க்கு அது மருந்து என்று சொன்னால், மருந்து சாப்பிட முடியாவிட்டால், அப்புறம் நோய் எப்படிப் போகும்? அதே மாதிரி ஒரு நல்ல மருந்து மருந்துதான். அது இனிப்பாக இருக்கிறது. ஓர் அவுன்ஸ்தான் குடிக்கச் சொல்லுகிறார் மருத்துவர். யாராவது இரண்டு அவுன்ஸ் குடிப்பார்களா? மருந்து என்று சொல்லிவிட்டால், அது இனிப்பாக இருக்கிறது, சுவையாக இருக்கிறது என்று சொல்லி, கூடுதலாகக் கொஞ்சம் குடிப்பார்களா? மாட்டார்கள். அதேபோல, வாழ்க்கையில் இறைவனுடைய கருணையினாலேயோ, நம்முடைய முயற்சியினாலேயோ, நாம் அடைகின்ற இன்பமும் மருந்துதான்; துன்பமும் மருந்துதான். எது மிகினும் துன்பம்தான். நமக்கே தெரியும், இன்பம் மிகுந்தாலும், சுவையாக இருக்கிறது என்று மிகுத்து உண்டாலும் துன்பம்தான். கசப்பாக இருக்கிறது என்று சொல்லி, கசப்புப் பண்டங்களை, உவர்ப்புப் பண்டங்களை சேர்த்துக் கொள்ளாமல் போனாலும் துன்பம்தான். எனவே இந்த அடிப்படையில் இருள்சேர் இருவினையும் நம்மைப் பற்றாது இருக்க வேண்டும் என்று சொன்னால், திருவள்ளுவர் நமக்குச் சில வழிகள் சொல்லுகிறார். அன்றைக்கு நான் சிலவற்றைக் குறிப்பாகச் சொல்லி உணர்த்தியிருக்கிறேன். இன்றும் சிலவற்றைத் திருவள்ளுவரை மையமாக வைத்து உணர்த்துகிறேன்.
‘பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்’
6
நான் தினந்தோறும் எவ்வளவு ஈட்டிக் கொண்டேன் என்பதைவிட, நான் எவ்வளவு செலவழித்தேன் என்று சொல்வதைப் போலத்தான் நம்முடைய வாழ்க்கைப் போக்கு அமைந்திருக்கின்றது. எனவேதான் ‘பொறிவாயில் ஐந்து அவித்தான்’ என்கிறார். ‘அவித்தான்’ என்று சொன்னால் மீண்டும் தயவு செய்து மறந்துவிடாதீர்கள் ‘அழித்தல்’ என்ற சொல் பொருள் அல்ல. நிரம்பப் பேர் ‘அழித்தல்’ அல்லது ‘அடக்குதல்’ என்று பொருள் கொள்ளுகிறார்கள். ‘அழித்தல்’ பொறிகளை அழிக்க முடியாது. அழித்தலும் கடவுளுக்கு விரோதமானது. இயற்கைக்கு விரோதமானது. கடவுள் கொடுத்த பரிசை, கடவுள் கொடுத்த கொடையை, முறையாகத் துய்த்து மகிழ்ந்து வாழாமல், அவற்றை அழிப்பதிலே நமக்கு என்ன உரிமை இருக்கிறது. ஆகையினால்தான் காலையிலே நான் படித்த ஒன்றிலே கூட ‘விரதங்கள் எல்லாம் வேண்டாம்’ என்று ஞானசம்பந்தரே சொல்லுகின்றார். நீ விரதங்கள் இருந்து உடம்பை வருத்த வேண்டாம்.
பௌத்த, சமண சமயங்கள் வந்த பொழுது, அன்றைய நாயன்மார்கள் அதற்கு உடன்படாமல் எதிர்த்ததற்குக் காரணம், அவைகள் இந்த நாட்டினுடைய வாழ்வியலுக்கு முரணாக இருந்தன. இவன் பாட்டும், இசையும், கூத்தும் கேட்டு மகிழ விரும்புகிறான். மகிழ்ந்து கூத்தாட விரும்புகிறான். அவர்கள் ‘பண்ணொடு இசை கேளார்’ என்று சொன்னார்கள். இவர்கள் இயற்கையோடு இசைந்து வாழ ஆரம்பித்தார்கள். இவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. குறிஞ்சி நிலத்தை ஒட்டியும், முல்லை நிலத்தை ஒட்டியும், மருத நிலத்தை ஒட்டியும், பாலை நிலங்களை ஒட்டியும், இயற்கையை ஒட்டியும் ஒழுகலாறுகளை அமைத்து மிகச் செழிப்பாக வாழ்ந்தார்கள். ‘மலரிடை மணம் நுகரார்’ என்று சொன்னார்கள். இவர்கள் பழங்காலத்திலிருந்து ஐந்திணை, அகத்திணை வழியாக, அவனும் அவளுமாகச் சேர்ந்து வாழ்கின்ற வாழ்க்கைப் பேற்றில் வளர்ந்தவர்கள். அவர்கள் பெண்ணைக் கீழ்மைப் படுத்தி, ‘பெண் என்பது பாவமான பிறப்பு, வீடு பேறு இல்லை’ என்றெல்லாம் கீழ்மைப் படுத்தியதைப் பார்த்து, நம்முடைய நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் பிடிக்குப் பிடி ‘நமச்சிவாய’ என்று சொல்வதைப் போல இறைவனை அம்மையப்பராகவே சொல்லி, நாடு முழுதும் சுற்றிச் சுற்றிப் பரப்பினார்கள். ‘பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்தது’ என்று கேட்டார்கள். ‘ஆதிபகவன்’ என்ற சொல்லுக்குக் கூட அப்படித்தான் பொருள் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய கருத்து. ஆக நாம் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்கிறவர்கள். ‘ஐந்து அவித்தான்’ என்ற சொல்லுக்குப் பொருள், நான் அவற்றை மற்றவர்களுக்குக் கேடு செய்யாவண்ணம் பக்குவப்படுத்துதல் என்பதுதான். சிலபேர் சிலரைப் பார்க்கிறபொழுதே மனது சங்கடமாக இருக்கிறது. பயந்து ஓடி விடுவார்கள் போலத் தெரிகிறது. அப்படியெல்லாம் இல்லாமல் குளிர்ந்த கண், யார் சொல்வதையும் கேட்கிற பாங்கு, நல்ல இனிய வார்த்தைகளைச் சொல்லுதல் வேண்டும்.
அதனால்தான்
‘இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.’
100
என்று கூறினார். இனிய சொற்களை வழங்க வேண்டும் என்றார். ‘காய் கவர்ந்தற்று’ என்றார். இனிய உளவாக - அதுவும் கனி இருப்பக் காய் கவர்ந்தற்று என்றார். கணி இருப்ப என்று சொன்னால் இவன் கையில் ஏற்கனவே நல்ல பழம் இருக்கிறது. இதைத் தின்று சுவைத்து மகிழாமல் கீழே போட்டு விட்டு அடுத்த வீட்டுத் தோட்டத்திலே இருக்கிற காயைப் போய்த் திருடப் போகிறான்.
‘கனி இருப்பக் காய் கவர்ந்தற்று’
என்று சொன்னார். ‘கவர்ந்தற்று’ என்று சொன்னால் திருடுதல். அது தனக்கு உரிமை உடையது அல்ல. உரிமை உடையது அல்லாததை, இல்லாத ஒன்றை, இன்னொருவரிடத்தில் இருப்பதை, இன்னொருவருக்கு உரிமையானதைத் திருடப் போகிறான். ஆனால், அது பயனற்றது. இவனிடத்தில் கனி இருக்கிறது. இது ஒரு பைத்தியக்காரத் தனமான வாழ்க்கை. இப்படிச் சிலபேர் இருக்கிறார்கள்.
தி・IV・15 இவர்களுக்கு இக்கரைக்கு அக்கரை பச்சை! இப்படி வாழ்கின்ற மனப் போக்கு உடையவர்கள் இருக்கிறார்கள். ஆதலாலே ‘பொறிவாயில் ஐந்தவித்தான்’ என்று சொன்னால் நான் அன்று சொன்னதைப்போல நல்ல வீணை ஒன்றை அவன் நன்கு வாசித்தால் அவனுக்கும் மகிழ்ச்சி. வீணைக்கும் பெருமை. கேட்பவர்களுக்கும் மகிழ்ச்சி. அதேபோல ஒருவன் வள்ளுவர் வழியில், நம்முடைய சமயநெறியில் வாழ்ந்தால் அவனுக்கும் பெருமை; அவனுடைய வீட்டுக்கும் பெருமை; அவனுடைய நாட்டுக்கும் பெருமை. சுற்றத்தார்கள் எல்லாம் மகிழ்வார்கள். சுற்றமாக உலகம் அவனைச் சுற்றும். சில பேர் ‘என்னை யாருமே அங்கீகரிக்க மாட்டேன் என்கிறார்கள்; ஆதரிக்க மாட்டேன் என்கிறார்கள்’ என்று சொல்லுவார்கள். அதற்குக் காரணம் இவர்களுக்கு என்று இவர்கள் சில குணப்போக்குகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
‘பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்’
6
என்று சொன்னார் திருவள்ளுவர். இதற்கு ஏதாவது பயிற்சி வேண்டுமே. இறைவனின் துணை நமக்கு வேண்டுமே. இந்த இறைவனை எங்கே தேடுவது? அவர் சொல்கிறார், ‘நீ கூப்பிடு, கூடவே வந்து விடுவார்’ என்று இவன் கூப்பிடுவது இல்லை.
‘பன்னாள் அரன்தன்னை அர்ச்சிக்க
மெய்ஞ்ஞானம் கூடும்
பன்னாள் இவன்அழைத்தால் அழைப்
பொழியான்என்று எதிர்ப்படும்’
என்றார், தேவார ஆசிரியர். பன்னாள் அழைக்க வேண்டு மென்று சொன்னார்கள். ஆனால் திருவள்ளுவர் சொல்லுகிறார், ‘நினைத்தவுடனே உன்னுடைய மனத் தாமரையில் வந்து குடிபுகுந்து விடுவார்’ என்று.
‘மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.’
3
என்றார். ‘மலர்மிசை ஏகினான்’ என்றார். ‘ஏகினான் என்றே சொன்னார். நினைத்தது முந்தியா, அவன் மனதில் வந்து குடி புகுந்தது முந்தியா என்று கேட்டால், நினைப்பதைவிட முந்தியே வந்து குடிபுகுந்து விடுகிறான் என்று சொன்னார். அவ்வளவு விரைவாக, யார் கூப்பிடுவார்கள் என்று இறைவன் காத்துக் கொண்டிருப்பான் போலத் தெரிகிறது. இவன் கூப்பிடுவதுதான் அவனுக்குத் தேவை. ‘மலர்மிசை ஏகினான்’ என்று கூறுகிறார்.
பரிமேலழகர் பல இடங்களில் நல்ல உரை எழுதவில்லை என்ற குறை இருந்தாலும், சில இடங்களில் அவருடைய உரைக்கு மிகப் பெருமை உண்டு. இந்த உரை மிகவும் பொருத்தமானது. ‘யார், யார் எந்த வடிவத்தோடு நினைக்கிறார்களோ, அந்தந்த வடிவத்திலேயே வந்து சேருகிறான்’ என்றார் பரிமேலழகர். இப்பொழுது நம்முடைய நாட்டில் ஒரே சாமிக்கு இவ்வளவு திருவுருவம் வந்தது இப்படித்தான். கடவுள் ஒருவர் தான்; கருத்து வேற்றுமை இல்லை. விநாயகர் ஒரு கடவுள்; அம்மை ஒரு கடவுள்; சிவன் ஒரு கடவுள்; திருமால் ஒரு கடவுள்; எல்லாம் ஒன்றுதான். யார் யார் எப்படி நினைத்தார்களோ, அவரவர்கள் நினைத்த வடிவத்தில் இறைவன் வந்து சேர்ந்து விட்டான். ஆக, அவரவர்கள் எந்த வடிவத்தை நினைத்தார்களோ, அந்த வடிவத்தைக் கொடுத்து விட்டார்கள். ஆக, கடவுள் ஒருவர்தான். அதில் யாரும் இரண்டு, மூன்று, ஐந்து, ஆறு, பத்து என்று நினைக்காதீர்கள். ஆனால் நமக்கு மட்டும் ஏனோ அந்தப்பேத உணர்ச்சி போகவில்லை. இந்தச் சாமியைக் கும்பிடாமல் அந்தச் சாமியைக் கும்பிட்டால், ஏதாவது குறை வந்துவிடுமோ என்று பயப்படுகிறோம். பயப்படவே பயப்படாதீர்கள். எந்தச் சாமியைக் கும்பிட்டாலும் - சத்தியமாகச் சொல்லுகிறேன் - அந்தக் கடவுளுக்குப் போய்ச் சேரும். இந்த வேற்றுமை வந்ததற்குக் காரணம், யார் யார் எந்தெந்த வடிவத்தை நினைக்கிறார்களோ, அந்தந்த வடிவத்தோடு - ஏனென்றால் அவன் பயப்படக் கூடாதே என்று வருகிறான்.
மதுரையிலே பன்றிக்குட்டி ஒன்று பட்டினி கிடக்கிறது; காப்பாற்ற வேண்டும். காப்பாற்ற வேண்டு மென்றால், அந்தப் பன்றிக்குட்டிக்குப் பாலை நக்கிக் குடிக்கின்ற சக்தி இன்னும் வரவில்லை. ஆகப் பாலாடையினால் ஊட்டவும் முடியாது. தாய்ப் பன்றிதான் ஊட்ட வேண்டும். தாய்ப் பன்றி செத்துப் போய்விட்டது. என்ன செய்வது? சிவபெருமான் தாய்ப் பன்றியாகவே வடிவெடுத்து, அந்தப் பன்றிக் குட்டி, தன்னைக் கண்டு மிரளாதவாறு தன் மடியைப் பிடித்துத் தன்னை அணுகுகின்றவாறு தன்னை ஆக்கிக் கொண்டு, பாலை ஊட்டி வளர்த்த சமயம் நம்முடைய சமயம். ஆக, யார் என்ன வடிவம் என்பது பிரச்சனை யல்ல. யாருக்காக இரங்குவது, யாருக்கு அருள் செய்ய வேண்டும் என்பதுதான்.
நிரம்ப உயிர்ப்புள்ள உயிரோட்டமுள்ள ஒரு சமயமாக நமது சமயம் இருந்தது. காலப் போக்கில் நாம் அதைக் கொண்டுபோய்க் கடவுளை முன்னிட்டு வைத்தோம். கடவுளே தானாகப் பன்றியாக வருகிறார். பன்றிக்கு வந்து பாலூட்டிக் காப்பாற்ற வேண்டுமென்றால், அவன் தேவனாக இருந்தால் முடியுமா? திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும்போது அம்மையப்பராக வரலாம்; அது பிள்ளை. அதற்குப் புத்திசாலித்தனம் இருக்கிறது; தெரிகிறது; ‘தோடுடைய செவியன்’ என்று பாடுகிறது. பன்றிக்குட்டி என்ன செய்யும். இவர் மான், மழுவோடு இங்கு நின்றார் என்றால், அதற்குப் பயந்து உடனே மூச்சு நின்று போய் விடும். ஆதலால், என்ன செய்தார்? தாய்ப் பன்றியாகவே வடிவமெடுத்தார். ஆக, அவருக்குள்ள வடிவம், அவருடைய தென்பதல்ல. அவருக்கு அந்த வடிவம்தான் பெரிது என்பதும் அல்ல. யார், எந்த வடிவத்தை நினைத்தார்களோ அந்த வடிவம்.
பிரெஞ்சில் அந்த மாதிரி ஒரு பழமொழியே உண்டு. ஒரு நாயைப் போய், கடவுளைக் கற்பனை செய் என்றால், அதனுடைய கற்பனா சக்தி எப்படிப் போகும்? தன்னைப் போல அது ஒரு நாயாக இருக்கும் என்று அது கற்பனை செய்யும். அதற்குமேல் அதற்குச் சக்தி போதாது. அதனால் தான், நம்முடைய நாட்டிலே கூட, கடவுளுக்குச் சாதம் படைக்கிறோம்; உடை உடுத்துகிறோம். அணிகலன் போடுகிறோம்; அதற்குக் கல்யாணம் செய்து வைக்கிறோம். உடனே பகுத்தறிவுவாதிகள் இதெல்லாம் சுவாமிக்கு வேண்டுமா என்று கேட்பார்கள். ஆனால் இந்த மனிதன் இருக்கிறானே, அவன் தன்னில் கடவுளை வேறாகப் பார்க்கவில்லை; அவன் உண்ணாத கடவுள் என்று இவனுக்குத் தெரியும். உண்பிப்பதில் இவனுக்கு ஒரு மன ஆறுதல். அது உறங்காத கடவுள் என்று இவனுக்குத் தெரியும். ஆனால் உறங்க வைக்கிறான். ஒன்பது மணிக்கு வழிபாடு முடித்துப் பள்ளியறைக்குச் சுவாமியை எடுத்துக் கொண்டு போய், அதைப் படுக்க வைத்து, ஊஞ்சல் ஆட்டிப் பார்க்கிறான். அவன் கடவுளை ஓர் உயிர்ப்புள்ள பொருளாக - தன் வாழ்க்கையில் பங்காளியாகக் கருதுகிறான்.
அது ஒரு சிலை; கண்ணுக்கு அப்பாற்பட்டது; கருத்துக்கு அப்பாற்பட்டது; கற்பனைப் பொருள் என்ற நம்பிக்கை இவனுக்குக் கிடையாது. உலகத்தில் மற்ற மதமெல்லாம் அப்படித்தான் சொன்னது. பயத்திலிருந்து மதம் பிறந்தது என்றே சிலபேர் சொல்லுகிறார்கள். பயத்திலிருந்து நமது மதம் பிறக்கவில்லை.
கேட்டால், கல்லை இடித்துக் கொண்டான். காலில் இரத்தம் வந்தது. உடனே கும்பிட ஆரம்பித்து விட்டான் என்கிறார்கள். இவ்வளவு பைத்தியக்காரனாக நம்முடைய ஆள் இருக்க மாட்டான். இவனுக்கு மதம் பிறந்த களம் நன்றிப் பெருக்கு, அன்புப் பெருக்கு; அன்பு வெள்ளம்! அவன் இந்த உலகத்தைப் பார்க்கிறான். இதில் ஏதோ வியத்தகு ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஓர் ஒருங்கிணைப்புகள் இருக்கின்றன; ஒழுகலாறுகள் இருக்கின்றன என்று சொல்லி அந்த அடிப்படையிலேதான் உண்ணாத கடவுளை உண்பிக்கிறான். அரசன் ஒருத்தன். ஒரே காலைத் தூக்கி, வலக் காலைத் தூக்கி இவர் ஆடிக் கொண்டிருக்கிறார். ‘வலிக்காதா? கொஞ்சம் கால் மாற்றி ஆடேன்' என்று கேட்டான். கால் மாற்றி ஆடினார் மதுரையில். கண்ணப்பர் கடவுளை எப்படிப் பார்த்தார். 'உனக்குப் பசிக்குமே! சாப்பிட முடியவில்லையே!’ என்று கேட்டார். 'கண்ணில் இரத்தம் வருகிறதே’ என்று கேட்டார். அவர்கள் கடவுளை அந்நியமாகப் பார்க்கவில்லை. ஊனாக உயிராக, உடைமையாக, உணர்வாக, தானும் அதுவும் அந்நியம் அல்லாததாகப் பார்க்கின்ற பார்வை இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது.
அதனால்தான், யார் எந்த வடிவத்தோடு நினைக்கிறார்களோ, அந்த வடிவத்தில் பார்க்கிறார்கள். தாய்மார்கள் பொங்கலன்று சாணத்தை எடுத்துப் பிள்ளையார் பிடிப்பார்கள். இந்த நாட்டில் இருக்கிறதோ, இல்லையோ தெரியவில்லை. மாட்டுச் சாணத்தை எடுத்துப் பிள்ளையார் பிடித்து அருகம்புல்லை வைத்துப் பொட்டு இடுவார்கள், அந்தப் பிள்ளையார் பிடிப்பதற்காக, சின்னப்பாப்பா சாணம் கொண்டு வந்தது. ஒரு பிடியை எடுத்துப் பிள்ளையாராகப் பிடித்து வைத்தாகி விட்டது. மீதிச் சாணத்தைப் பக்கத்திலே போட்டது. தாய் சொல்கிறாள் தன் மகளிடம், ‘சீ! அந்தச் சாணத்தைத் தூக்கி வெளியே போடு’ என்று. அதைப் பிடித்து எடுத்துப் பிள்ளையாராக வைத்த பிறகு பிள்ளையார். பிள்ளையாராகப் பிடிக்காமல் வெளியே போட்டது சாணம் தான். ‘அதைத் தூக்கி வெளியில் போடு’ என்கிறார். ஆக இவர்கள் பிள்ளையாராகப் பிடித்தால் தான் பிள்ளையாரே தவிர, சாணத்தைப் பிள்ளையாராகச் சொல்லவில்லை. ஆதலால்தான் பழைய காலச் சித்தர் சொன்னார்,
‘நட்ட கல்லும் தெய்வமாமோ, நாதன் உள்ளிருக்கையில்’
என்று! கடவுளை அந்தத் திருவுருவத்தில் எழுந்தருளச் செய்வது என்பது ஒரு கலை. அது ஓர் அருள் ஞானக்கலை; யோகக் கலை, எங்கோ வானாக, மண்ணாக, வளியாக, ஒளியாக, உயிராக, ஊனாக, உண்மையுமாய் இன்மையுமாய் இருக்கிற பரம்பொருளை நினைந்து, நினைந்து, உருகி, உருகி, கொஞ்ச நேரம் இதிலே இருக்க வேண்டும் என்று எழுந்தருளச் செய்கிறான். அவனுக்குப் பேச, உறவாட ஒரு துணை வேண்டும். பக்கத்தில் இருக்கும் மனிதனுடன் பேசினால் சேர்ந்தாற்போல் பேச மாட்டேன் என்கிறானே. நேற்றுப் பேசினான்; இன்றைக்குச் சண்டை போட்டுக் கொள்கிறான். நான்கு நாட்களில் சண்டை வந்து விடுகிறது. அவனுக்கு யாரை நம்புவது என்றே புரிய வில்லையே. அவனுக்கு நம்பிக்கைக்கு உரியவனாக வேறு யாரையும் - மனிதனையே பிடிக்க முடியவில்லையே. இதிலாவது அந்தக் காலத்தில் கொஞ்சம் மத நம்பிக்கை இருந்தது; இப்பொழுது வரவரப் பொய்யாகப் போகிறது.
ஆதலாலே, அவனுக்கு நம்பிக்கையாகப் பேச உறவாட வேண்டும். அதனால்தான் சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றில் சேக்கிழார், கடவுளை வாழ்வுப் பொருளாக ஆக்கிக் காட்டுகிறார். அவர் காலத்திலேயே கடவுளை வாழ்த்துப் பொருளாக்கி, கோயில் பொருளாக்கி, குருக்கள் பொருளாக்கி, அதை மேட்டுக் குடியினருக்குரிய பொருளாக்கி அதற்கு ஒரு சிறைக்கூடமே அமைத்து விட்டார்கள். சேக்கிழார் அதை உடைத்து, அதை வாழ்க்கைப் பொருளாக்கி, ‘உனக்குப் பொன் வேண்டுமா? கடவுளிடத்திலே கேள்! உனக்குப் பொருள் வேண்டுமா? கேள்! திருமணம் வேண்டுமா கேள்; ஏச வேண்டுமானால் ஏசு! பேச வேண்டுமானால் பேசு' என்று செய்தார்.
சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனைத் திட்டியதுபோல ஒருவரும் திட்டியிருக்க மாட்டார்கள். ‘மகத்திற் புக்கதோர் சனி எனக்கானாய்’ என்றார். ஓரிடத்தில் ‘சனியனே’ என்று திட்டுவோமே, அதைப்போல இறைவனை ‘மகத்திற் புக்கதோர் சனி எனக்கானாய்’ என்று சொன்னார். என்ன தைரியமாக, ‘உன்னுடைய அலுவலகத்தை விட்டுச் சிறிது நேரம் வெளியில் போய் இருந்து கொள். நான் ஒரு சத்தியம் செய்யப் போகிறேன்; இந்த சத்தியத்தை உன் முன்னால் செய்தால் மிகவும் தவறு. எனவே சத்தியம் செய்யும் வரை சிறிது நேரம் வெளியில் போய் இரு’ என்று சொல்லுகிறார். காரணம் வாழ்க்கையின் நெளிவு சுழிவுகள்! மனிதன் என்று சொன்னால் அவனுக்குச் சில ஆவல்கள் இருக்கின்றன; ஆர்வங்கள் இருக்கின்றன. அந்த ஆர்வங்களைத் தணிக்காமலும் அவனுடைய ஆன்மா ஈடேற முடியாது. தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்ற தாகம் இருக்குமானால் தண்ணீர் குடித்துத்தானே ஆக வேண்டும். அவனுடைய தாகம் தீராதபோது ஆன்மாவை எப்படி ஈர்க்க முடியும்? ஆகவே தான் பட்டினத்தார், ‘வினைப்போகமே ஒரு வேகம் கண்டாய், வினைதான் ஒழிந்தால் தினைப்போதளவும் நில்லாது கண்டாய்’ என்றார். ஆகக் குறிக்கோள்வழி நமக்குச் சில துய்ப்புகள், மகிழ்வுகள் இருக்கின்றன. அவைகளை அடைகிற காலம்வரை இவனுடைய கற்பனை இருக்கும் என்று சொல்லக் கூடாது. கடவுளாகப் பார்த்தான்; அவன் எந்த வடிவத்தில் நினைத்தானோ, அந்த வடிவத்தில் சேர்ந்து விட்டான். பின்னாலே சிலபேர் கத்தி, சூலம் எல்லாம் வைத்திருப்பவனைக் காட்டேறி, முனீசுவரன் என்று வைத்து விட்டார்கள். அவர்கள் மனதில் அப்படி வந்து சேர்ந்து விட்டார்! பாவம்.
இப்பொழுது சிறிது ‘நாகரிகமாக நினை’ என்று சொல்ல முயற்சி செய்து பார்க்கலாம். அந்தக் காலத்தில் அவனுடைய வாழ்க்கைச் சூழல் அப்படி சிலபேர் கள் குடிக்கும் சாமியாகவே கடவுளை நினைத்துப் பார்த்திருக்கிறார்கள்! அவன் கள் குடிக்கிறான்; அதனால் கள் குடிக்கும் சாமியாக இருந்தால் தேவலாம் என்று நினைக்கிறான். அவனுடைய கற்பனையை அவனாலே தட்ட முடியவில்லை, பாவம்! இவரும் வந்து கள்ளையும் குடித்து விட்டு, ஒரு தண்டாவையும் வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார் பாவம்! இப்பொழுது நாம் கற்பனையை வேறு மாதிரி செய்து, இப்படிச் செய்தாலும் கடவுள் வருவார் என்று நாம் நம்பிக்கை தர வேண்டும். அந்த நம்பிக்கை கொடுப்பதற்கு உயர்ந்த ஜாதியினர், உயர்ந்த சமூகத்தினர் வர மாட்டேன் என்கிறார்கள்.
எனவே ‘இது அவனது திருவுரு’ என்று சொல்வது போல, ‘இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன்’ என்று எழுதிக் காட்டுவதைப் போல, எழுதிக் காட்ட முடியாத கடவுள் இவன் என்ன நினைக்கிறானோ, அந்த வடிவத்தோடு வந்து சேருகிறான். அந்த வடிவங்கள் எல்லாம் மனிதன் நினைப்பதற்கும், ஆர்வத்திற்கும், கற்பனைக்கும் ஏற்றவாறு கடவுள் எடுத்துக் கொண்டனவே தவிர, அது இவனுடைய படைப்பும் அல்ல.
ஆக, இரண்டு பேரும் சேர்ந்து செய்த ஒரு காரியம். அந்த ‘இதயத் தாமரையிலே இறைவனை எழுந்தருளச் செய்த பிறகு, அவனுடைய ஒளியை நீ வேண்டிய அளவு தூண்டிக்கொள்’. இது திருநாவுக்கரசருடைய தேவாரம்; விளக்கை ஏற்றினால் மட்டும் போதாது. அது ஒளியை வேண்டிய அளவு தரும் வரை தூண்டி விட்டுக் கொள்ள வேண்டும். பெருமான் நம்முடைய நெஞ்சத்திலே வந்துவிட்டால் மட்டும் போதாது. அவனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிற வாழ்க்கை முறை தேவை. அதனால்தான்,
‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு’
1
என்பதிலே கூட அழகான சுவையான ஒரு கற்பனை இருக்கிறது. இந்த ‘அ’ என்கிற வரிவடிவத்தைப் பாருங்கள். வரிவடிவம், மேலே ஒரு புள்ளியில் ஆரம்பிக்கும். பழைய காலத்து ‘அ’ வில் கொஞ்சம் தொந்தி தொப்பையெல்லாம் விழுந்திருந்தது. இப்பொழுது சிறிது இளைத்திருப்பது போல் தெரிகிறது. அது என்ன காரணம் என்று தெரியவில்லை. பழைய காலத்து ‘அ’ வில் கீழே வந்து தொந்தி விழுந்து பின் மேலே போய் நேர்கோட்டில் சென்று முடியும். ‘அ’ என்ற வரிவடிவத்தில் மேலே இருக்கின்ற புள்ளி இறைவன். அவன்தான் பரிபூரணன். உயர்புள்ளியாக இருக்கிறான். அவன் உயிர்களை ஆட்கொண்டு அருள் வழங்க வேண்டும் என்பதற்காக இறங்கி வருகிறான். இறங்கி வரும் பொழுது மனிதன் அவன் முன்னால் நிற்கிறான். அவன் தனியனாய்த் தருக்கித் தலையால் நிற்கிறான். அவன் கடவுளை மதிக்க மாட்டேன் என்கிறான். என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான். கடவுள் அவன் பின்னால் கெஞ்சிக் கொண்டே வருகிறார்.
இவன் முன்னால் போகிறான்; பின்னாலேயே வருகிறார். அது தொந்தி விழுந்த பகுதி. மனிதன் முன்னேயும் கடவுள் பின்னேயும் வந்த பகுதி. இவன் கொஞ்ச தூரம் போய் அடிபட்டு, உதைபட்டு சங்கடப்பட்டுத் தொல்லை பட்ட பிறகு, இவன் ‘இந்த ஆள் என்னதால் சொன்னாலும் விட மாட்டேன் என்கிறாரே, இவர் என்னதான் சொல்கிறார், என்று கேட்போமே’ என்று திருப்பிப் பார்க்கிறான். அவர் ‘நீ வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். நான் முன்னால் போகிறேன். நீ பின்னால் வா! சரியாகப் போய்விடும்’ என்கிறார். அதுதான் இந்த ‘அ’ வந்து கீழே இருந்து மேலே ஏறுகிற இடம். மேலே ஏறிய உடனே கடவுள் முன்னால் போக ஆரம்பிக்கிறார்; மனிதன் பின்னால் போகிறான். கீழே ‘அ'வுக்கு இருந்த வளைவு மேலே வராது. அது நேராக இருக்கும். நேராக இருப்பது மட்டும் மல்ல; வளைவுகளைக் கடந்து ஒரு நேர்க்கோட்டில் போய் முடிகிறது.
வாழ்க்கையில் அடிக்கடி எல்லாரும் சொல்வார்கள். ‘நேர்மையாக இரு; நேர்மையாக இரு’ என்பார்கள். நேர்மை என்றால் என்னவென்று நிறையப் பேருக்குப் பொருள் சொல்லத் தெரியாது. ‘நேர்மை, நேர்மை’ என்பார்கள். நேர்மை என்றால் வேறொன்னும் இல்லை. இரண்டு புள்ளிகளை இணைக்கிற நேர்கோட்டைப் போல, ஒருவருடைய நலம், இன்னொருவருடைய நலத்தையும் இணைக்குமானால் அதற்கு நேர்மை என்று பொருள். எனக்கு நலமாக இருப்பதெல்லாம் இன்னொருவருக்கும் நலமாக இருக்க வேண்டும். எனக்கு மட்டும் நலமாக இருந்து அஃது இன்னொருவருக்கு நலமாக இல்லையென்றால் அது குறையுடைய நலம் நேர்மையுமல்ல; நீதியுமல்ல. ஆக இரண்டு புள்ளிகளை இணைக்கின்ற நேர்கோட்டைப் போல உலகத்தில் எல்லா உயிர்களுக்கும் இருக்கின்ற நலனையும், என்னுடைய நலனையும் ஒத்ததாக அமைக்கின்ற ஓர் இணைப்பு, ஒரு சூழ்நிலை, ஒரு சிந்தனைப் போக்கு இருக்குமானால் அதற்கு நேர்மை என்று பெயர். அந்த நேர்மை வாழ்க்கையில் வருகிறபொழுதுதான், கடவுள் நமக்கு அருள் செய்வார். உயர்ந்த சமய வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று சொன்னால் பொருள், முதலில் மற்றவர்களின் நலன் தனக்கு உகந்ததாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும்.
எங்கே தன்னலம் இருக்கிறதோ, எங்கே பொது நலனுக்கு விரோதமான தன்னலம் இருக்கிறதோ எங்கே மற்றவர்களுக்குக் கேடு செய்தும், தனக்கு நன்மை செய்தும் கொள்ளுகின்ற மனப்போக்கு இருக்கிறதோ, அங்கே கடவுள் இருக்க மாட்டார்; பேய்தான் இருக்கும்; சைத்தான் தான் இருக்கும். ஆனால் நம்முடைய மனப்போக்கில் இன்றைக்குக் கடவுளையும் கூட நம்முடைய சாட்சிக்கு அழைத்துக் கொள்கிறோம். இந்த முயற்சியை நாம் தவறாகப் பயன் படுத்தக்கூடாது. கடவுளை நம்முடைய வாழ்க்கைக்குத் துணையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, நம்முடைய துன்மார்க்கமான வாழ்க்கைக்குத் துணையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்று எழுத்துக்களுக்கு அகரம் முதலாக இருப்பதைப் போல, உலகத்திற்கு இறைவன் முதலாக இருக்கிறான். அவன்தான் முதற் பொருளாக இருக்கிறான் என்பதுதான் பொருள். இந்த அடிப்படையில் உலகத்திற்கு முதலாகவும், வாழ்க்கைக்கு முதலாகவும் இருக்கின்ற கடவுளை, நினைந்து வாழ்த்தி, அந்தக் கடவுளை நாம் நினைந்த வடிவத்தோடு, நமக்கு எந்த பூர்த்தி, எந்தத் திருமேனி, எந்தப் பெயர் நமக்கு உவப்பாக இருக்கிறதோ, அந்த உவப்பான திருப்பெயரில் எது என்று நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. உங்களுடைய வாழ்க்கையில், நீங்கள் வழிபாடு செய்கின்ற பொழுது, இத்தனை நாட்கள் நீங்கள் உண்மையாகவும், முறையாகவும் வழிபட்டிருந்தால், உங்களுக்குச் சில பெயர்களைக் கேட்கின்ற பொழுது, நம்மை அறியாமல் ‘உழுவலன்பு’ பெருக்கெடுக்கும். அது திரு முருகனாக இருந்தால் நல்ல மூர்த்தி எந்தப் பெயராக இருந்தாலும் பெயரைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்; திருவுருவைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். கோலத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். ஏதோ ஒன்று நாம் சிந்திப்பதற்குப் பற்றுக் கோடாகத் தேவைப்படுகிறது.
வாணவெளியில் உலா வருகின்ற ஒலி அலையை வாங்கிக் கொடுக்க ஒரு வானொலிப் பெட்டி தேவைப்படுகிறது. அதுபோல இறைவனோடு நம்மை இணைப்பதற்கு ஏதோ ஒரு கருவி ஏதோ ஒரு செயல்முறை நமக்குத் தேவைப்படுகிறது. அந்தச் செயல்முறை நாம் இன்னும் தெளிவாகவும் சீக்கிரமாகவும் உய்தி பெறுவதற்காகத் தேவைப்படுகிறது. எனவே அந்தத் திருமூர்த்தியை அந்தப் பெயரை, அந்த உருவத்தை, உங்களுடைய மனத்திலே எழுந்தருள வைத்துக் கொண்டு, நினைந்து நினைந்து வழிபடுவதன் மூலமாக, செயல்களைச் செய்கின்ற பொழுதெல்லாம் அந்த ஞானப் பேரொளி எப்படிச் சொல்லுகிறதோ, அதை உணர்ந்து, அது சொல்வதைக் கேட்டு, அறநெறியில் வாழ்ந்து, தீவினைகள் செய்யாது - நல்வினைகள் செய்து - பற்றற்றுச் செய்து, நல் நோக்கத்தோடு செய்து, வாழ்ந்து நம்முடைய பொறிகளையும், புலன்களையும் பக்குவப்படுத்தி, நம்முடைய கண்ணோ, காதோ, வாயோ இன்னொருவருக்குத் தீங்கு செய்யாது, மற்றவர்கள் எளிதாக நம்மிடத்திலே அணுகி, பழகி, மேவி, உறவு கொண்டாடவும், நம்மிடத்திலே ஒன்றைக் கேட்டுப் பெறவும், நாம் இன்னொருவரிடத்திலே கேட்டுப் பெறவும், எளிதாக வாழ்க்கைச் சமுதாயம் அமைக்கின்ற அமைப்பு இருக்கின்றதே, அதுதான் சிறந்த சமய வாழ்க்கை. அந்தச் சமய வாழ்க்கைக்குத் தீமை என்பது கூடவே கூடாது.
உலகத்திலே தீமை என ஒன்று நிலவுகிற வரையில் சமுதாயத்திலே நிச்சயமாக நன்மை வளர முடியாது. எனவே, தீமைகளுக்கு மாற்றாக நன்மைதான் இருக்க முடியும். நன்மைக்கு மாற்றாகச் சமயநெறிதான் இருக்க முடியும். சமயநெறி வளர்ச்சி அடைய வேண்டுமென்றால், நம்முடைய மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற பொறிகள் பக்குவமடைந்து அன்பினாலே புடம் போடப்பட்டு அவை தூய்மையுடையனவாக இருக்க வேண்டும். தூய்மையுடையதற்கு அடையாளம் மற்றவர்கள் மகிழ்வதுதான் என்பதை மறந்துவிடக் கூடாது. நம்முடைய மனநிறைவோ, நம்முடைய மனமகிழ்வோ தூய்மைக்கு அடையாளம் அல்ல. மற்றவர்களுடைய மனநிறைவும், மற்றவர்களுடைய மன மகிழ்வும் தான் தூய்மைக்கு அடையாளம். அந்தத் தூய்மையைப் பெற வேண்டுமென்றால், நாம் தீமை செய்யவே கூடாது; தவிர்த்துவிட வேண்டும். நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும். செய்கின்ற பொழுது; மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நமது இதயக் கமலத்திற்குள்ளாக, நெஞ்சத் தாமரைக் குள்ளாக, நாம் நினைக்கிற ஒரு மூர்த்தியை எழுந்தருளச் செய்து, குறித்த நேரத்தில் அதனுடன் பேசிப் பழகி, உறவெடுத்துக் கொண்டு, ஆசிரியனாக ஏற்றுக் கொண்டு அது உணர்த்துகிற முறையை வள்ளுவம் காட்டுகிறது; வள்ளுவம் தோன்றிய காலத்திலிருந்து இந்த மனித உலகத்தை வாழ்விப்பதற்காகவே தோன்றிய ஒரு மாமறை; பொது மறை; அந்தப் பொது மறை நம்முடைய வாழ்க்கையின் மறையாக விளங்கட்டும் என்று வாழ்த்துக் கூறி விடை பெறுகிறேன்.