குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4/பொங்கல் பரிசு

4
பொங்கல் பரிசு


பொருளியல் நூல்

திருக்குறள் ஒரு வாழ்க்கை நூல். ஒரு முழு அறநூல். தனி மனித வாழ்க்கை, சமுதாய வாழ்க்கை, அரசியல் ஆகியவற்றில் மிகவும் முற்போக்கான கருத்துக்களை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே உணர்த்திய பெருமை திருவள்ளுவருக்கு உண்டு. திருக்குறள் எல்லாரும் எல்லா நலன்களும் பெற்று வாழும் சமநிலைச் சமுதாய அமைப்பை வலியுறுத்துகிறது. இன்றையச் சமுதாய அமைப்பில் நிறையப் பொருளாதாரச் சிக்கல்கள் இருக்கின்றன. இச் சிக்கல்கள் களையப்படுவதற்குச் சிலரின் தான தர்ம உணர்ச்சிகள் மட்டும் போதா; அல்லது தீவிர சட்டங்களும் ஆட்சி முறைகளுமே பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிடவும் மாட்டா. அடிப்படையான சில உணர்வு மாற்றங்களும் தேவை. இத்தகைய கருத்துக்களைத் திருக்குறள் வாயிலாகக் காணலாம். பொருளாதார முன்னேற்றத்தை நாடும் ஒரு சமுதாயத்தில், பரம்பரைச் சொத்துரிமை ஒரு முட்டுக் கட்டையேயாகும். பரம்பரைச் சொத்துரிமையின் மூலம் மீண்டும் மீண்டும் முயற்சியால் பொருளீட்ட வேண்டுமென்ற ஆர்வமும், அதன் வழிப்பட்ட முயற்சிகளும் இளைத்துப் போகின்றன. ஆதலால், திருவள்ளுவர், தன் முயற்சியால் ஈட்டிய பொருளைக்கொண்டு விருந்தோம்பல் முதலியவற்றைச் செய்ய வேண்டும் என்கிறார். "தாளாற்றித் தந்த பொருளெல்லாம்" என்பது குறள். காதலிருவர் கருத்தொருமித்துக் கூடி மகிழும் காதல் இன்பத்திற்கு எடுத்துக் காட்டாகத் திருவள்ளுவர் ‘தம்மில் இருந்து தமது பாத்துண்டற்றால்’ என்ற குறட்பாவைச் செய்துள்ளார்; அதாவது, தான் முயன்று ஈட்டிய பொருளில் தன்னாலேயே கட்டப் பெற்ற சொந்த வீட்டில் தன் முயற்சியால் ஈட்டிய பொருளைக்கொண்டு அறுசுவை உணவாக்கிப் பலரோடு இருந்து கூடி மகிழும் இன்பம் போன்றது காதலின்பம் என்று குறிப்பிடுகிறார். ஆதலால் முயற்சியின் வழி வருவதே செல்வம் என்ற அடிப்படை உணர்வு மக்களிடத்தே பெருகி வளர வேண்டும்.

பொருள் தேடினால் மட்டும் போதாது; தேடக் கூடிய வழிகளிலும் தேட வேண்டும். அறமல்லாத வழிகளில் பொருள் ஈட்டுவதால் தவறுகள் பெருகுவதோடு தாளாண்மையும் குறைகிறது. பொருள் வருவதற்குரிய புதிய புதிய வழிகளைக்கண்டு அவ்வழிப் பொருளீட்ட வேண்டும். ஈட்டுதலைவிடப் பொருள் வருவதற்குரிய புதிய வழிகளைக் காணுதல் அவசியமாகும். அதனாலன்றோ திருவள்ளுவர், ‘இயற்றலும்-ஈட்டலும் காத்தலும் காத்து வகுத்தலும் வல்லது அமைச்சு’ என்று குறிப்பிடுகின்றார். ஒருவர் ஒரு துறையில் முயன்று பொருள் ஈட்டினால் அவ்வழிகளையே மற்றவர்களும் பின்பற்றக் கூடாது. அப்படிப் பின் பற்றினால் புதிய வாயில்களைக் காணும் ஆர்வம் குன்றும்; முயற்சி தடைப்படும்; மேலும், ஆரோக்கிய மில்லாத போட்டிகள் ஏற்படும். இதனை இன்று நம் நாட்டில் பெருகி வளர்ந்துள்ள வணிகத் தொழில் மூலம் அறியலாம். ஆதலால், பொருள் வருவதற்குரிய வாயில்களைக் கண்டுபிடிக்கும் புதிய முயற்சியில் பொது மக்களை ஈடுபடுத்தலே பொருளாதாரச் செழிப்புக்கு வழி கோலும்.

பொருள் முயற்சி இருவகைப்படும்; ஒன்று, பொருள்களை உற்பத்திச் செய்யும் முயற்சி; இன்னொன்று பொன் (நாணயம்) பெறும் முயற்சி. அதாவது, பணம் தேடும் முயற்சி, நல்லதன்று. பொருளை உற்பத்தி செய்யும் முயற்சியே வரவேற்கத்தக்கது. வட்டிக் கடை நடத்துதல், வாணிகம் செய்தல் ஆகியன பணம் தேடும் முயற்சியின்பாற்பட்டவை. வேளாண்மைத் தொழில் செய்தல், வேறு பல துறைகளின் மூலம் மக்கள் பொருள்களை உற்பத்தி செய்தல் ஆகியன பொருள் உற்பத்தியைச் சார்ந்தவை. முன்னையது ஒறுக்கத் தக்கது-பின்னையது வரவேற்கத் தக்கது.

ஒரு நாட்டின் பொருளாதாரச் செழிப்பு அந்த நாடு பொருள் உற்பத்தியில் ஈடுபடுவதைப் பொறுத்ததே யாம். பொருள் உற்பத்தி பெருகாமல், சமநிலைச் சமுதாயத்தை எப்படி அமைக்க முடியும்? தரித்திரத்தையா பங்கு போடுவது? அதனாலேயே திருவள்ளுவர் வலிமை நிறைந்த குரலில், “செய்க பொருளை” என்று ஆணையிடுகிறார். செய்க பொருளை என்று ஆனையிட்டமையாலேயே “செய்க பொன்” என்பது விலக்கப் பெறுகிறது. பொருள் எனும் வழக்கு மனித குலம் அனுபவிக்கக் கூடிய பொருள்களையே குறிக்கும். இதனைப் பரிபாடலில் வரும் “சேர்வாராதலின்யாம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமுமல்ல-நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளிணர்க் கடம்பின் ஒலிதாரோயே” என்ற பாடலால் உணரலாம்.

பொருள் உற்பத்தி செய்யும் உணர்ச்சியில் பொருள்களுக்கு மதிப்புத் தருகிற உணர்ச்சியில் நம் நாட்டு மக்களின் உணர்வு இப்பொழுது பின் தங்கியே இருக்கிறது. விலை மதிப்புள்ள மாடுகளை-கால்நடைகளைக் கவனிப்பதில்லை. தான்ியங்களைப் பாதுகாப்பதில்லை-ஆனால், சிறு காசுகளைக் கூட முடிந்து பத்திரமாகக் காப்பாற்றுகிறார்கள். பணம், பொன் இவற்றில் உள்ள பற்றுதல் குறைந்து பொருள் உற்பத்தித் துறையில் நாட்டு மக்களின் ஆர்வம் பெருக வேண்டும்.

பொருள்களை உற்பத்தி செய்தால் மட்டும் போதாது. உற்பத்தி செய்த பொருள்களை ஓரிடத்தில் குவியாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவை போக மிஞ்சும் பொருளைத் தன்னியல்பாகவே தேவையுடையவர்களுக்குக் கொடுப்பது ஒரு சிறந்த சமுதாய ஒழுக்கம். இப்படி நாம் சொல்வதானது ஈதல், ஏற்றல் என்ற முறையில் அல்ல. திருவள்ளுவர், கடமை உரிமை என்ற அடிப்படையில் இப்பண்பாட்டை ‘ஒப்புரவறிதல்’ என்று குறிப்பிடுகிறார். ஒப்புரவறிதல் அதிகாரத்தில் அவர் பயன் மரம்-கணிகளைக் கணித்துத் தரும் மரங்களை எடுத்துக் காட்டாகக் காட்டுகிறார். மரம் தான் வளர்வதற்காக எரு, தண்ணீர் முதலியவற்றைப் பூமியிலிருந்து எடுத்துக்கொண்டு, உணவாக அதை மாற்றி உண்டு உயிர் வாழ்கிறது. தன்னுடைய தேவை போக எஞ்சிய பொருளைக் காய்களாக-கனிகளாக மாற்றித் தானே தந்து விடுகிறது. அதே போல மனிதனும் தான் உயிர் வாழ்வதற்குத் தான் உற்பத்தி செய்த பொருளில் தேவையானதை எடுத்துக் கொள்ள வேண்டும். எஞ்சியதைச் சமுதாய நியதி-ஒழுங்கு என்ற பெயரால் சமுதாயத்திற்குத் தானே தந்து விட வேண்டும். இந்தக கொள்கைக்குப் பெயர் ‘சோஷலிசம்’ என்றால் அதில் என்ன தவறிருக்கிறது? இங்ஙனம் சமுதாயக் கொள்கை அமைப்புக் குறித்து மிக முற்போக்கான கருத்துக்களைச் சொல்லுவதால் திருக்குறளை ஒரு சிறந்த சோஷலிசப் பொருளியல் நூல் என்றும் கூறலாம்.

சோஷலிசம்

தமிழ் காலத்தால் மூத்த மொழி. கருத்தாலும் மூத்த மொழி. இன்றைக்குச் சற்றேக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது தொல்காப்பியம். இன்று தமிழ் இலக்கியங்களில் மிகப் பழமையானது, தொல்காப்பியமேயாகும். மூவாயிரமாண்டுகளுக்கு முன்பே வாழ்க்கை நெறி முறைகளைப் பற்றித் தமிழர்கள் கவலைப்பட்டிருக்கிறார்கள். வேறு எம்மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழுக்கு உண்டு. தமிழில் எழுத்துக்கும் சொல்லுக்கும் சொல்லோடு தொடர்புடைய பொருளுக்கும் வளர்ந்த இலக்கண மரபுண்டு. ஆரிய மொழியைவிடத் தமிழ் இலக்கண வரம்பிற் சிறந்ததென்று பரஞ்சோதி முனிவர் பாராட்டுகின்றார். எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம் மட்டுமில்லாமல் வாழ்க்கைக்கும் இலக்கணம் கண்ட மொழி தமிழ். பாட்டுக்குப் பொருள் என்றாலே நல்வாழ்க்கை என்று கருதுவது தமிழ் மரபு. அதனாலன்றோ எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்று இலக்கண நூலை முறைப்படுத்தினார்கள். பொருளதிகாரம் தனிமனிதன், அவனுடைய காதல் வாழ்க்கை, ஆகியவற்றை அகத்திணை என்றும், அதே தனிமனிதன் வெளிப்புற உலகத்தோடு கொள்ளும் தொடர்புகளைப் புறத்திணை என்றும் வகுத்துப் பேசுகின்றது. இங்ஙனம், வழிவழியாக வாழ்க்கையின் நெறி முறைகளைப் பற்றித் தமிழினம் கவலைப்பட்டமையின் காரணத்தால் தமிழில் காலத்திற்கும் காலம் அறநெறி நூல்கள் நிறையத் தோன்றின. இங்ஙனம் தோன்றிய நூல்களுள் மிகமிகச் சிறந்தது திருக்குறள். மக்களாகப் பிறந்தோர் பேசுகின்ற வேறு எம்மொழியிலும், திருக்குறளைப்போல் ஒரு வாழ்க்கை நூல் தோன்றியதில்லை. ஏசு பெருமானுக்கு முற்பட்டவராகிய திருவள்ளுவர், மனித இனத்தின் வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து அரியதொரு நூலைச் செய்துள் ளார். அர்த்த சாஸ்திரத்தை ஆக்கித் தந்த கௌடல்யருக்கும் திருவள்ளுவர் முற்பட்டவர் என்பது வரலாற்றுண்மை.

திருக்குறள் தனிமனிதன், குடும்பம், சமுதாயம், அரசு ஆகிய படிமுறை வளர்ச்சிகள் வளர்ந்திருந்த காலத்திலே தோன்றிற்று. மனித சமுதாய அமைப்பில் மேற்கூறிய படிகளைப்பற்றித் திருக்குறள் தனித்தனியே ஆய்வு செய்து விளக்குகிறது. சமுதாயத்தின் தொடக்கத்தில் தோன்றிய நூலன்று. எனினும், சமுதாய அமைப்பில் பல்வேறு படிகள் தோன்றியிருந்தாலும், அந்தப் படிவளர்ச்சிகள் நிறைவு பெறாமலும், பூரணத்துவம் அடையாமலும் அவல நிலையிலிருந்த பொழுது திருக்குறள் தோன்றிற்று. திருக்குறள், முறையாக சமுதாயத்தின் பல்வேறு படிகளின் வளர்ச்சி முறைகளைப் பற்றியும், அவை அமையவேண்டிய இயல்புகளைப் பற்றியும் தெளிவாக விளக்குகின்றது. தனிமனிதன், குடும்பம், சமுதாயம், அரசு எனும் முறைவைப்பைத் திருக்குறள் ஏற்றுக் கொள்ளுகிறது. சமுதாயத்தின் மேற்கூறிய அமைப்புகளுக்குள் இருக்க வேண்டிய உறவு முறைகளைத் திருவள்ளுவர் வரையறுத்துக் காட்டுகிறார். அறத்துப் பாலில் தனிமனிதனின் வாழ்க்கைக் கடமைகளை வற்புறுத்திக் கூறுவதோடு, தனிமனிதன் சமுதாயத்தோடு உறவு கொண்டு வாழ்வதற்கு இன்றியமையாத நல்லியல்புகளையும் எடுத்துணர்த்துகிறார். பொருட்பாலில் அரசு, குடி மக்கள் இயல்பு ஆகியவைகளை விரிவாக விளக்குகிறார்.

திருக்குறள் ஒரு நல்ல இலக்கியம். இலக்கியத்திலும் சிறந்த அறநூல்; அரசியல் நூலும் கூட. கற்பனைக் காட்டுக்குள் கருத்துக்கள் ஒளிந்து போகாமல் கண்ணாடியின் முன் உருவமென அவை வெள்ளிடை மலையென விளங்கும் வண்ணம் அமைக்கப்பெற்ற நூல். குறைகளைக் காட்டுகின்றார்; ஆனால், அப்பட்ட நிர்வாணமாக அல்ல. குறைகளைக் காட்டும் முயற்சியைவிட நிறைவைக் காட்டும் முயற்சியே திருக்குறளில் மேம்பட்டுள்ளது. திருக்குறள் ஒரு சிறந்த ஒழுக்க நூலாகத் திகழ்கிறது. திருக்குறள் காட்டும் ஒழுக்கம் அதிமானுட (superman)னுக்கு உரியதன்று. சராசரி மனிதன் கடைப்பிடிக்கக்கூடிய ஒழுக்க நெறிகளை வாழ்க்கையோடு இணைக்க முடியவில்லை என்று யாராவது சொன்னால் அவர்களை ஐந்தறிவுடையவற்றோடு வைத்தெண்ணுவது தவிர வேறு வழியில்லை.

திருக்குறள் பழமை தழுவிய நூல். எனினும், புதுமை நலம் போற்றும் நூல். திருக்குறள் ஒரு முற்போக்கு நூல். அரசியல் மரபுச் சொற்படி கூறுவதென்றால் அது இடதுசாரி நூல். சமநிலைச் சமுதாய அமைப்பிற்குரிய வித்துக்களைப் பன்னூறாண்டுகட்கு முன்பு கண்டு காட்டிய பெருமை திருக்குறளுக்கு உண்டு.

கொம்புகளும் கொப்புகளும் அடர்ந்து நிறைந்து விளங்கும் ஒரு மரம். தோற்றத்திற்குக் கொம்புகளும் கொப்புகளுமே மிகுதியும் வரும். பயனும் அப்படியே. எனினும் கொம்புகள் கொப்புகளின் தோற்றத்திற்கு நிலைக்களனாகவும் அவற்றைத் தாங்கி நிற்பதுவும் ஆகிய அடிமரத்தை மறக்க முடியாது. மறுக்கவும் முடியாது. அடிமரம் இன்றேல் கொம்புகள் இல்லை; கொம்புகளும் கொப்புகளும் இல்லையானால் அடிமரத்திற்கு அழகில்லை; ஆற்றலில்லை. பயன் தரும் வகையிலும் சிறப்புக்குறையும். இதுபோன்றே தனிமனிதன்; சமுதாய அமைப்பு. பரந்துபட்டு, வளர்ந்திருக்கும் சமுதாய அமைப்பில், தனிமனிதன் முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறான். தனிமனிதனின் சிந்தனையால்-சீரிய முயற்சியால்-உருவாகியதே சமுதாய அமைப்பு. தனிமனிதனின் உரிமைகள் மதிப்பிற்குரியவை. அவை மதிப்பிற்குரியவை என்ற கொள்கை ஒரு மனிதனுக்கு மட்டுமன்றி சமுதாயத்தில் வாழும் எல்லாத் தனிமனிதனுக்குமே பொருந்தும். ஒவ்வொரு தனிமனிதனும் பிறிதொரு தனிமனிதனின் உரிமையைக் காப்பாற்றிக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கின்றான். தனிமனிதனிடத்தில் காணப் பெறும் சிறப்புகள் சமுதாய வாழ்க்கைக்கும் பொருந்தி அமைவனவாகும். தனிமனிதன் கெட்டால் நாடு கெடும். ஆதலால், சமுதாயத்தின் அடித்தளமாக அமைந்துள்ள தனிமனிதனை வளர்க்கும் அரிய முயற்சியில் திருவள்ளுவர் ஈடுபடுகின்றார். முதற்பாலாக விளங்கும் அறத்துப் பால் முழுவதிலும் தனிமனித வாழ்க்கையைப் பற்றியே பேசுகின்றார். ஏன்? பாயிரத்திலே தனிமனிதனை உருவாக்கும் முயற்சியில் திருவள்ளுவர் ஈடுபடுகின்றார்.

காலம் மனிதனின் சிறந்த கருவி. அதை உணர்ந்து பயன்படுத்துகிறவன் வளர்கிறான்; முன்னேறுகிறான். மனிதன் பெறக்கூடிய அறிவு, செல்வம், புகழ் ஆகிய பேறுகள் அனைத்தையும் காலம் என்ற கருவியின் மூலமே மனிதன் அடைகின்றான். ஆதலால் காலத்தே செய்ய வேண்டுமென்பது வள்ளுவ நெறி. செல்வத்தை இழந்தால் திரும்ப சட்டலாம். இழந்த புகழையும் கூட திரும்பப் பெறலாம். ஆயினும், இழந்த காலத்தைத் திரும்ப அடைதல் - அல்லது பெறுதல் சாத்தியமில்லை. காலம் விலை மதிப்பற்றது. அதனாலன்றோ ‘பேசாத நாளெல்லாம் பிறவா நாளே’ என்று அப்பரடிகள் கூறியுள்ளார். ஒரு சோஷலிச சமுதாயத்தினுடைய அமைப்பின் அடித்தளம் உழைப்பேயாகும். உழைப்பு உருப்பெறுவது காலம் என்னும் அடிப்படையிலேயே. அதனால் தான் திருவள்ளுவர்,

‘வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்’

38

என்கிறார்.

காலத்தை ‘வீழ்நாள்’ என்று குறிப்பிடுவது அறிவியலின் பாற்பட்ட கருத்து. மனிதன் வேறு எதை நிறுத்தினாலும் நிறுத்தி வைக்க முடியும். ஆனால் காலத்தை வராமலோ போகாமலோ நிறுத்தி வைக்க முடியாது. இயல்பாக நம்முன் வேலைக்கென்று-கடமைகளுக்கென்று வீழ்கின்ற நாட்கள் என்று பொருள்படும். பிறிதொரு வழியிலும் பொருள் கொள்ளலாம். நன்றாற்றின் நாள் வீழாமல் என்றும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளலாம்.

அதாவது, கடமைகளைச் செய்வதற்காக நம்முன் நாள் என்ற பெயரோடு வந்த காலத்தை வீணாக்காமல் பயன்படுத்தி நல்லன செய்தால் வையக வாழ்வு இன்பமாக அமையும். வையக வாழ்வு இன்பமாக அமையப் பெற்றால் இன்பங் கருதிச் செய்யப்படுகின்ற தீவினைகள் இல்லாமற் போகும். கொலை, களவு, பொய் போன்ற குறைகளில் இருந்து விடுதலை பெறலாம். இந்த விடுதலை கிடைக்கப் பெற்றபின் பிறப்பினின்றும் விடுதலை கிடைக்கும். அதன் காரணமாக மீண்டும் பிறத்தல் தடைப்படும். இதுவே சிறந்த சமயநெறி சமயக் கருத்து. இக்கருத்தையே திருவள்ளுவர் ‘வாழ்நாள் வழியடைக்கும் கல்’ என்று குறிப்பிடுகின்றார். ஈண்டு திருவள்ளுவர் கல் என்று குறிப்பிட்டது மிகமிகச் சிறந்த கருத்து. திருவள்ளுவர் காலத்திலேயே வாழ்நாள் வழியடைக்கும் முயற்சி - அதாவது பிறவிப் பெருங்கடலிலிருந்து கரையேறும் முயற்சி நடைபெற்று வந்தது. இம்முயற்சியைப் பலர் பாராட்டினார்கள்-வழிவகை காட்டினார்கள். ஆயினும் பலர் காட்டிய வழி வெள்ளத்திலே கட்டிய மணற்சுவர் போன்றிருந்தது-நெருப்பிடை எழுப்பிய விறகுக் குவியல் போன்றிருந்தது. முன்னது வெள்ளத்தில் கரைந்தழியும்; பின்னையது எரிந்தழியும், அதுபோல, வாழ்நாள் வழியடைக்கும் முயற்சிகளுக்குப் பலர் நெறியல்லா நெறி தன்னைக் காட்டியபோது உண்மை நெறி காட்டுகின்றார் திருவள்ளுவர். அதாவது, உலகியல் வாழ்க்கைக்கு உரியது; வாழ்க்கைக்கு உரிய காலத்தை ஓடி ஒளிதல் மூலமோ உட்கார்ந்து உறங்குதல் மூலமோ பாழ்படுத்தல் பாலைப் பாலைவனத்தில் கொட்டியதற்கொப்பாகும். நன்றாக வாழ்தல் மூலமே விடுதலையே தவிர, வேறு வழியினால் அன்று. பசித் துன்பத்திற்கு விடுதலை, பட்டினியன்று; உண்பதேயாகும். ஆர்வம் ஆசையினால் துடித்திடும், ஆன்மா அதனைப் பெற்றனுபவித்து அதனினும் மேலான ஒன்றுக்கு இலட்சியத்தை விரிவடையச் செய்து கொள்ளுதலே வாழ்க்கை முறை. குழியில் தலைகாட்டிய கொடியே கொம்பில் படர முடியும். அதுபோல, உலகியல் அனுபவத்திற்குரியன இல்லாமையை வழியின்பாற்படுத்தி வாழாக்கிடக்கச் செய்தலோ அல்லது கிடைக்காமையின் காரணமாக அவை நிலையற்றன-பயனற்றன என்று கூறுதலோ வாழ்க்கையின் முழுநிறை வளர்ச்சிக்குத் துணை நிற்கமாட்டா. அதனால் திருவள்ளுவர் வாழ்க்கையை ஒத்துக் கொள்ளுகின்றார். பொருள் செய்தல் வேண்டும் என்று வற்புறுத்துகின்றார்; வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று வற்புறுத்துகின்றார். வாழ்வாங்கு வாழ வழியும் காட்டுகின்றார். ஆதலால் தனிமனித வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் காரணமாக இருக்கின்ற காலத்தைப் பயன்படுத்திக் கடைமைகளைச் செய்தலைத் திருவள்ளுவர் வற்புறுத்துவது மிகவும் முற்போக்கான கருத்து.

ஊக்கமுடைமை

மனித உயிருக்கு இயல்பிலேயே அறிவறியும் ஆற்றல் உண்டு. கிளர்ந்து எழுகின்ற இயல்பும் உண்டு. உயிரின் இந்தக் கிளர்ந்தெழும் ஆற்றல் நல்வழிப் படுத்தப்பெறும்பொழுது சிறந்த பயனைத் தருகின்றது. உயிர் கிளர்ந்தெழுந்து செயல் செய்யும் உணர்வுக்கு ஊக்கமுடைமை என்பது பெயர். ஒப்பற்ற சமநிலைச் சமுதாயத்தை அமைக்க மனிதன் விரும்புவானாயின் அவனுக்கு முதலில் தேவை ஊக்கமுடைமை. ஊக்கமுடையவர்கள் முற்பிறப்பு, அவ்வழிவரும் பலாபலன்களை நம்பமாட்டார்கள். அப்படியே ஒருகால் நம்பினாலும் தம்முடைய முயற்சியால் அதை மாற்றியமைக்க முடியும் என்ற உறுதிப்பாடு தோன்றும். திருவள்ளுவர், ‘கூற்றம் குதித்தலும் கைகூடும்’ என்று கூறுகின்றார். ஆதலால் மனிதனுடைய ஊக்கம், அவ்வழி சமுதாயத்திற்கு இன்றியமையாத ஒன்று. கைப்பொருள் அழியலாம். ஆனால், உள்ளக் கிளர்ச்சியும் ஊக்கமும் அழியமாட்டா. சமநிலைச் சமுதாய அமைப்பைத் தோற்றுவிக்கும் முயற்சியின் முதற்படி மக்களைச் செல்வமுடையோராக்குதல் அல்ல-உழைப்பதற்கு அறிவையும், ஆற்றலையும் தருவதேயாகும். அதனாலன்றோ திருவள்ளுவர்,

‘உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதிலார்
உடையது உடையரோ மற்று’

591

என்கிறார். இன்றைய உலகியலிற்போல நிலவுடைமை - பொருளுடைமை முதலியவற்றை முதன்மைப்படுத்தாமல் அவற்றைப் படைக்ககூடிய ஆற்றலையே, அல்லது ஊக்கத்தினையே உடைமை என்று திருவள்ளுவர் குறிப்பிடுவது மிகவும் திருந்திய கருத்து. அது மட்டுமா? உள்ளக் கிளர்ச்சியும் ஊக்கமும் இல்லாதார்மாட்டுச் சமுதாய அமைப்பில் உள்ள சீர்கேடுகளின் வழியாகக் குருட்டாம் போக்காகச் செல்வம் கிடைத்துவிட்டாலும் அப்பொருளுடைமை நில்லாது நீங்கிவிடும் என்பதும் திருவள்ளுவர் கருத்து.

பொதுவாக, பொருளைத் தேடிச் செல்வோர் பலருண்டு. பொருளைத் தேடிச் செல்வோர் பெருகியுள்ள சமுதாயம் வளர்ச்சியடைந்த ஒரு சமுதாயம் அல்ல. பொருள் மனிதனுடைய ஆற்றல்மிக்க படைப்பினால் படைக்கப் பெறும் ஒன்று. தான் படைத்து அனுபவிக்கக் கூடிய ஒன்றினைத் தேடிச் செல்வது அறிவுடைமையாகாது. பொருள் மனிதனை நோக்கி வரவேண்டும். அது எப்போது நிகழும்? நடுக்கமற்ற நம்பிக்கையுணர்வோடு எவனொருவன் உழைக்கின்றானோ அவனை நோக்கிச் செல்வம் வழிகேட்டுக் கொண்டு வலிய வந்து குடிபுகும்.

‘ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையா னுழை’

594

என்கின்றார் திருவள்ளுவர். ஊக்கத்திற்கு அசைவிலா ஊக்கம் என்று அடைமொழி கொடுத்துப் பேசுகின்றார். பலருக்குத் தொடக்க நிலையில் - முதல் தடவையில் கிளர்ச்சியும் ஊக்கமும் தோன்றும். ஆனால் எடுத்த காரியம் கைகூடாது போனாலும் இடையில் இடுக்கண்கள் பல ஏற்பட்டாலும் சோர்வடையாமல் மீண்டும் உழைப்பவனே பொருள் உடையவனாக விளங்க முடியும். பெருங்கதை, "ஊக்கவேந்தன் ஆக்கம்போல்” என்று பேசுகின்றது. ஆதலால் இன்பத்தைக் கண்டு மகிழாமலும், துன்பத்தைக் கண்டு துவண்டு விடாமலும் தொடர்ந்து முயற்சித்தலே வாழ்க்கையை வெற்றி முகமாக்கிக் கொள்ளுதற்கு உரிய வழி. சிறந்த முறையில் எண்ணி ஊக்கத்தோடு செயற்பட்டால் காரியம் கை கூடினாலும் கூடாதுபோனாலும் அந்த எண்ணத்திற்கும் ஊக்கத்திற்கும் பயனுண்டு. ‘வாழ்க்கைப் போராட்டங்களில்தான் நற்பண்பு தங்கியிருக்கிறது-வெற்றியிலல்ல’ என்னும் அனுபவ உரை எண்ணி இன்புறத்தக்கது. உலகியல் இயற்கையிலும் செயற்கையிலும் பல்வேறு துன்பங்களால் சூழப் பெற்றது. இச்சூழலை வெற்றிகொண்டு பொருளை உற்பத்தி செய்து குவித்தலின் மூலமே சமநிலைச் சமுதாயத்தை உருவாக்க முடியும். தரித்திரத்தைப் பங்கு போடுவதும் மிகச் சிறிதாக இருக்கும் - முடங்கிக் கிடக்கின்ற மூலதனத்தைப் பகிர்ந்து கொள்ளுதலும் சமநிலைச் சமுதாயமல்ல. உழைப்பும் உற்பத்திப் பெருக்கமும் சமநிலைச் சமுதாயத்தின் இரட்டை நாடிகள். பொருள் செய்து குவிக்க வேண்டும் என்ற உள்ளம்- உள்ளத் துடிப்பு- உள்ளக் கிளர்ச்சி-ஊக்கம் இல்லாதவர்கள் செல்வமுடையோர் என்ற செருக்கை ஒரு பொழுதும் பெறமாட்டார்கள் என்று திருவள்ளுவர் திட்டவட்டமாகக் கூறுகின்றார்.

‘உள்ளம் இல்லாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு.’

598

என்பது திருவள்ளுவர் வாக்கு. ஆதலால், வாழ்க்கையின் இன்றியமையாத் தேவையாகிய பொருளை-அப்பொருள் பற்றிய மதிப்பீட்டை-அப்பொருளைப் பெறுதற்குரிய வழியைத் திருவள்ளுவர் விளக்கும் முறை முற்றிலும் விஞ்ஞானப் பார்வையின்பாற் பட்டதாக உள்ளது. மிகவும் முற்போக்கான கருத்து. வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாதது என்பதை இரு பொருள்படப் பேசாமல் திட்டவட்டமாக ஒத்துக் கொள்ளுகின்றார். அந்தப் பொருள் பரம்பரை வழியாகக் கிடைத்திடுமாயின் அது உடைமையல்ல என்றும் கூறுகிறார். பொருள் உடைமையைவிடப் பொருளைப் படைக்கின்ற ஆற்றலுடைமையை - ஊக்க முடைமையையே உடைமை எனப் பாராட்டுகின்றார். இஃது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிகமிக வியக்கத்தக்க ஒரு கருத்து. இதனையே இன்றையப் பொருள் முதல் வாதம் சித்தாந்தமாக எடுத்துக் கொண்டிருக்கிறது. தனிமனிதன் காலம் என்ற களத்தில் நின்று, ஊக்கமுடையவனாகப் பொருள் செய்து குவிக்க வேண்டும். இதுவே சமநிலைச் சமுதாய அமைப்பிற்குத் தொடக்க நிலையாகும்.

அறிவுடைமை

முற்போக்குச் சமுதாயம் அமையக் காலமும் ஊக்கமும் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியமானது அறிவும் ஏன்? காலத்தையும் ஊக்கத்தையும்விட அறிவுடைமை மிகமிக இன்றியமையாதது. அறிவுடைமைதான் காலத்தையும் ஊக்கத்தையும் முறைப்படி பயன்படுத்தத் துணை செய்கின்றது.

சோஷலிச சமுதாய அமைப்பை உருவாக்க வேண்டுமானால், மக்களிடத்தில் சரியான அறிவு பரவுதல் வேண்டும். சென்ற காலத்தில் தனி மனித வாழ்க்கையிலும் சரி, சமுாய வாழ்க்கையிலும் சரி ஏற்பட்டுள்ள எண்ணற்ற தவறுகளுக்கு அடிப்படை அறியாமையேயாகும். மயக்கத்தின் பாற்பட்ட - முறை பிறழ உணர்ந்த அறிவினாலும் தவறுகள் நிகழ்வதுண்டு.

வாழ்க்கை ஆக்கத்தின் பாற்பட்டது. ஆக்கமும் அறிவினாலாயது. ஆனால், ‘ஆக்கம் அறிவினாலும் முயற்சியினாலும் ஆவதில்லை-அது அவன் செயல்’ என்று கருதி வாழ்க்கையை இழந்தோர் ஏராளமானவர்கள். இதனை புணர்ந்த திருவள்ளுவர் அறிவுடைமையின் இன்றியமையாமையை வற்புறுத்துகின்றார். அவர் காட்டும் அறிவு அமிழ்ந்து கிடக்கும் அறிவு அல்ல; அத்திட்டத்தை எதிர் நோக்கியிருக்கும் அறிவல்ல; ஆண்டவனையே நம்பிக் கிடக்கும் அறிவுமல்ல; ‘அறிவுடையார் ஆவதறிவார்’ என்று திருவள்ளுவர் கூறுவது மிகச் சிறந்த கருத்து. சோஷலிச சித்தாந்தத்திற்கு உடன்பட்ட கருத்து.

உலகம் தொன்மையானது. சென்ற காலத்திலும் உலகம் நிகழ்ந்தது. இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்று வாழும் பலர், அறிவிலும் உணர்ச்சியிலும் சென்ற காலத்திலேயே இருந்துகொண்டிருக்கிறார்கள். அஃது அறிவின் சின்னமல்ல. இன்றைய உலகம் எங்ஙனம் இயங்குகிறதோ அதன் இயல்புக் கேற்றவாறு தம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதல் அறிவுடைமை. யதார்த்த உலகம், நடைமுறையனுபவம் இவற்றோடு இணைக்கப்பட்ட அறிவே அறிவு என்பது சோஷலிச சித்தாந்தத்தின் அடிப்படை இதனைத் திருக்குறள்,

‘எவ்வ துறைவ துலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு’

426

என்று பேசுகின்றது.

மேலும், அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கக் கூடிய ஒன்று. அஃது நிலைபெற்ற தன்மையுடையதல்ல. இன்றைய அறிவு நேற்றைய அறிவைவிட வளர்ச்சியுடையதாக இருக்க வேண்டும். இன்றைய அறிவைவிட நாளைய அறிவு வளர்ச்சியுடையதாக இருக்க வேண்டும். இதுவே உலக நியதி. திருவள்ளுவரும்,

‘தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.’

68

என்ற குறட்பாவின் மூலமும் இக்கருத்தை வலியுறுத்துகிறார். ‘அறிதோ றறியாமை கண்டற்றால்’ என்ற சொற்றொடராலும் அறிவின் வளர்ச்சியைத் திருவள்ளுவர் ஏற்றுக் கொள்ளுகின்றார்.

1. மனித வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் ஏற்றத்திற்கும் அறிவு இன்றியமையாதது;

2. அறிவு, உலகியலில் யதார்த்த நடப்புக்கு ஒத்திருக்க வேண்டும்;

3. அறிவு வளர்ச்சி அடையக்கூடியது,

என்னும் மூன்று கருத்துக்களும் சோஷலிச சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகள். இம்மூன்றையும் 19-ம் நூற்றாண்டின் மக்கள் மன்றத்தில் அறிமுகமான சோஷலிச சித்தாந்த இலக்கியப் படைப்புக்கள் விரிவாக ஆராய்ச்சி செய்கின்றன. அக்கருத்தினையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருவள்ளுவர் குறட்பா வடிவில் எடுத்துக் காட்டியுள்ளதை எண்ணுகிற பொழுது பெருமித உணர்ச்சி மேலிடுகிறது. எனினும் பெருமித உணர்ச்சி தோன்றிய கவட்டையும்கூட கண்டு கொள்ள முடியாத வண்ணம் சிறுமை மூடிவிடுகிறது. திருவள்ளுவர் காட்டிய அறிவுப் பார்வை இன்றளவும் தமிழகத்தில் வளரவில்லை. மாறாகத் திரிந்த கருத்துக்கள் கால்கொண்டுள்ளன. இன்று அறிவு என்றால் புத்தக அறிவு-உலகம் என்றால் உயர்ந்தோர்-நிகழ்கால அறிவைவிடச் சென்றகால அறிவு சிறந்தது என்பன போன்ற கருத்துக்களே பரவி வருகின்றன. அதனாலேயே, தமிழ் இனம் வளர்ந்து வீழ்ந்து இருக்கிறது. இந்த அவல நிலைமைக்குப் பிறகாவது திருவள்ளுவர் இனங்காட்டி எடுத்துக் கொள்ளத் தூண்டிய அறிவை எடுத்துக் கொள்வோமாக!