குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5/இராமனும் சீதையும்






16


இராமனும் சீதையும்


இராமாயணம் ஓர் இந்திய தேசிய காதை, பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே நாடு முழுதும் பேசப்பட்ட ஒரு காதை. இக் காதை சாதி, மொழி, இனம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து நாடு முழுதும் பரவியது. இக் காதையை இலக்கியமாகப் படைக்க விரும்பியவர்கள் தத்தம் மொழியில் அந்தந்தச் சூழலுக்கேற்பக் கூட்டியும் குறைத்தும் செய்துள்ளார்கள். இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் இராமகாதையுண்டு. இவை எல்லாவற்றிலும் கதை ஒரு மாதிரியாக இல்லை. நிறைய வேறுபாடுகளும் முரண்பாடுகளும் உண்டு. முரண்பாடுகளுக்குக் காரணம், காலத்தின் சூழ்நிலையும் மொழிவழி நாகரிக அமைப்புமாகும். வால்மீகி, வடமொழியில் இராமகாதையைச் செய்தார். தமிழில் கம்பன் செய்தான். வால்மீகிக்கும் கம்பனுக்கும் காவியப்போக்கில் நிறைய வேறுபாடுகள் உண்டு. கம்பராமாயணம் ஒரு மொழி பெயர்ப்பு நூலன்று. முதல் நூலைத் தழுவி எழுந்ததேயாகும். இத்தகைய இராம காதையை ஆராய்கின்றபோது, அந்தக் கவிஞனின் கூற்றுக்களை வைத்தே ஆராய வேண்டும். இங்கொன்றும் அங்கொன்றுமாக எடுத்து ஆராய்வது-விமரிசனம் செய்வது இலக்கிய மரபுக்கு உகந்ததன்று.

கம்பனின் கருத்துப்படி இராமன் ஒரு சிறந்த தலைமகன். தெய்வத்தன்மை உடையவன். ஆனால், வான்மீகியின் கருத்துப்படி இராமன் ஒரு சாதாரண மனிதனே. வான்மீகி, இராமனைத் தெய்வத் தன்மையுடையவனாக யாண்டும் குறிப்பிடவில்லை. இராமனைப் பற்றி ஆராய வேண்டுமென்றால், ஒன்று முழுவதாக வான்மீகத்தை வைத்து ஆராய வேண்டும் அல்லது கம்ப ராமாயணத்தை வைத்து ஆராய வேண்டும். ஒன்றோடொன்றைப் போட்டுக் குழப்புவது-உப்பையும் சீனியையும் கொட்டிக் கலப்பது போலாகும்.

கம்பன் இராமகாதை செய்ததன் நோக்கமே மிகச் சிறந்தது. தமிழகத்தின் முச்சந்திகளில் வான்மீகத்தின் வழி இராமகாதை பயின்றது. கம்பனும் அப்படிப் பயின்ற இடங்களிலிருந்து கேட்டிருக்கின்றான். அக்கருத்துக்கள் தமிழ் நாகரிகத்திற்கு இயைந்தவாறு இல்லாமையையும் தன் மனத்திற்கு இசைவில்லாமையையும் உணர்ந்து வான்மீகத்தின் கருத்துக்கள் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் நோக்கத்துடனேயே கம்பன் இராமகாதையைச் செய்தான். இரண்டுக்கும் அச்சு ஒன்றே தவிர செய்தி வெவ்வேறு என்பதை மறந்துவிடக் கூடாது.

‘இராமனும் சீதையும்’ என்ற தலைப்பில் தலைவர் பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை மேற்குறிப்பிட்டவாறான குழப்பத்தையே விளைவிக்கிறது.

தந்தை பெரியார் அவர்கள் “இராமனுக்கு அவன் தந்தை அவசரமாக நாளைக்கே முடிசூட்ட வேண்டுமென்கிற முடிவுக்கு வந்து, இராமனை அழைத்து, “இராமா! நாளைய தினம் உனக்கு முடிசூட்ட முடிவு செய்து வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். பரதன் இங்கு இல்லாத நாளே உன் முடிசூட்டுக்கு ஏற்ற நாள். ஆதலால், இன்று இரவு உன்னுடைய நண்பர்களோடு ஜாக்கிரதையாக இருந்து உன்னைப் பாதுகாத்துக்கொள். ஏன், இப்படிச் சொல்லுகிறேன் என்றால் பரதனுக்கு வேண்டியவர்களால் உனக்கு ஆபத்து நேரலாம். ஒரு சமயம் பரதனாலும் முடிசூட்டு நிகழ்ச்சி தடைப்படலாம். ஆதலால், ஜாக்கிரதையாய் உன்னைப் பாதுகாத்துக்கொள் என்பதாக தசரதன் சொல்லுகின்றான்” என்று எழுதுகிறார். தலைவர் பெரியார் அவர்களின் இக்கருத்து வான்மீகத்தின் வழியது. இத்துறையில் கம்பன் முற்றிலும் மாறுபடுகிறான். தசரதன் இராமனைக் கூப்பிட்டு இரந்து கேட்கிறான். தன்னுடைய பொறுப்பிலிருந்து தன்னை விடுதலை செய்யும்படி, அங்கு முடிசூட்டும் நாள் பற்றித் தசரதன் குறிப்பிடவில்லை.

“அனைய தாதலின் அருந்துயர்ப்
பெரும்பர மரசன்
வினையின் என்வயின் வைத்தனன்
எனக்கொளல் வேண்ட
புனையு மாமுடி புனைந்திந்த
நல்லறம் புரக்க
நினையல் வேண்டும்யான் இன்வயிற்
பெறுவது ஈதென்றான்”

இதுவே கம்பன் கருத்து. பரதன் இல்லாத நாளாக இருக்க வேண்டும் என்ற செய்தி கம்பனில் இல்லை. மேலும் இராமன், முடிசூட்டிக் கொள்வதற்குக் கடமையுணர்ச்சி யோடு ஏற்றுக் கொண்டானேயொழிய விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டானில்லை. முடிசூட்டிக் கொள்வதில் இராமனுக்கு விருப்புமில்லை-வெறுப்புமில்லை. தந்தையும் நாட்டின் அரசனுமாக இருக்கின்ற தசரதன் கடமை என்றேவியதை ஏற்றுச் செய்யும் உணர்வுடனேயே ஒத்துக் கொண்டான் இராமன். இதனைக் கம்பன்,

“தாயைப் பரிசுரை செயத்
தாமரைக் கண்ணன்
காத லுற்றில் னிகழ்ந்தினன்
கடனிதென் றுணர்ந்தும்
யாது கொற்றவ னேவிய
ததுசெய லன்றோ
நீதி யெற்கென நினைந்துமப்
பணிதலை நின்றான்

.

-அயோ. 72.

என்ற பாடலில் விளக்குகிறான். இக்கருத்துக்களின்படி இராமனிடத்து எந்தக் குற்றமுமில்லை. மாறாக, குணத்திற் சிறந்தவனாகத் திகழ்கின்றான்.

கைகேயிக்குப் பிறக்கும் மைந்தனுக்கு முடிசூட்டி வைப்பதாய்த் தசரதன் உறுதி கூறியதாகக் கம்பனில் செய்தியில்லை.

தமிழர் பின்பற்றக் கூடிய ஆதார நூல் கம்பனே யொழிய வான்மீகம் அல்ல. தமிழகத்தில் வழங்கிய வான்மீக இராமாயணத்தின் வழுக்களை நீக்கித்தான் கம்பன் தமிழ் நாகரிகத்திற்கேற்றவாறு இராமகாதையைச் செய்தான். தமிழ்நாட்டு மக்கள் இன்று விரும்பிப் படிப்பது கம்ப இராமாயணமே தவிர வான்மீக இராமாயணமன்று. ஆதலால், இத்துறையில் இராமன் தவறு செய்ததாகக் கம்பனும் நினைக்கவில்லை. கம்பனைப் பயில்கின்ற தமிழரும் நினைக்கவேண்டிய அவசியமில்லை.

கைகேயி, இராமனுக்கு முடிசூட்டும் செய்தியை எடுத்த எடுப்பில் மறுக்கவில்லை. மாறாக, மகிழ்ச்சியடைகிறாள். இராமனுக்கு முடிசூட்டும் செய்தியைக் கொண்டுவந்த மந்தரைக்குத் தான் அணிந்திருந்த முத்துமாலையைக் கழற்றிப் பரிசாகத் தருகிறாள். கைகேயிக்கும் இராமனுக்கு முடி சூட்டுவதில் உடன் பாடேயாம். பின்னர்தான் மந்தரை யினுடைய-ஆசையூட்டுகின்ற-சூது நிறைந்த சொற்களால் மனம் திரிந்தாள். இதனைக் கம்பன்,

“தீய மந்தரை யிவ்வுரை,
செப்பலுந் தேவி
தூய சிந்தையுந் திரிந்தது
சூழச்சியி னிமையோர்
மாயை யும்மவர் பெற்றுள்ள
வரமுண்மை யாலும்
ஆய வந்தண ரியற்றிய
அருந்தவத் தாலும்”

அயோ. மந்தரை. 77.

என்று பேசுகின்றார்.

‘தூய சிந்தையும் திரிந்தது’ என்ற சொற்றொடர் நினைந்தின்புறத்தக்கது. இக்கருத்தினையே, பின்னர் இராமன் கூற்றாக வைத்துக் கவிஞன் கூறுவது சிந்தனைக்குரியது.

“நதியின் பிழையன்று
நறும்புனவின்மை யற்றே
பதியின் பிழையன்றே
பயந்து நமைப் புரந்தான்
மதியின் பிழையன்று
மகன்பிழை யன்று மைந்த
விதியின் பிழைநீ
இதற்கென்னை வெகுண்ட தென்றான்”

அயோ. நகர்நீங். 134

என்பது பாடல்.

‘ஆற்றில் நீர் இல்லாதது ஆற்றின் பிழையன்று அதுபோல, இந்நிகழ்ச்சிக்கு தசரதனும் பொறுப்பல்லன். தசரதன் பிழையன்று-தம்மை வளர்த்த தாயாகிய கைகேயியின் மதியிலும் பிழையில்லை-பரதனின் பிழையுமன்று. விதியின் பிழையே’ என்று வெகுண்ட இலக்குவனுக்கு இராமன் ஆறுதல் கூறுகின்றான். இங்ஙனமிருக்கக் கைகேயிக்குத் தெரியுமென்றும் இராமனுக்குத் தெரியுமென்றும் கம்பராமாயணத்தில் இல்லாத ஒன்றை எடுத்துக் காட்டிக் கூறி விவாதிப்பதில் பயனென்ன? இக் குற்றச் சாட்டுக்குக் கம்பனின் பாடல் ஒன்றையே சான்றாகக் காட்டியிருப்பது வியப்பைத் தருகிறது. பாட்டுடைப் பொருள், குற்றச்சாட்டுக்கு உடன்பாடாக இல்லை. இராமன் கூறுவதாகக் கவிஞன் கூறும் பாடல்;


“வரனில் உந்தைசொன்
மரபி னாலுடைத்
தரணி நின்னதென்
றியைந்த தன்மையால்
உரனில் நீபிறந்
துரிமை யாதலால்
அரசு நின்னதே
ஆள்க வென்னவே!

அயோ. திருவடி. 111

இப்பாட்டுக்குப் பெரியார் பொருள் கொள்ளும்முறை தாம் கொண்ட முடிவுக்கு ஏற்றவாறு பொருள் காண்பதாக இருக்கிறதே தவிர பாட்டுக்குப் பொருள் காணும் முறையில் இல்லை. இந்தப் பாடல், இராமன் பரதனை நோக்கிக் கூறியது. சொல்லுமிடம் திருவடி சூட்டும் படலம். இந்த பாடலில் ‘வரனில்’ என்று குறிப்பிடுவது கைகேயி தசரதனிடத்தில் வாங்கிய இரண்டு வரத்தைக் குறிக்குமே தவிர,‘சுல்கம்’ தொடர்புடைய தன்று. தந்தை சொன்னதன் காரணமாகவும் தரணி உன்னது என்றும் குறிப்பிடுகின்றான். இப்பாடலுக்கு இங்ஙனம் பொருள் காண்பதே முறை. ஆதலால், இராமன் முடிசூட்டிக் கொள்ள விருப்பமுடை யவனாகவும் இல்லை. தனது தந்தையும், நாட்டின் அரசனுமாகிய தசரதனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடத்தல் கடமை என்ற உணர்விலேயே முடிசூட்டிக் கொள்ள ஒப்புக் கொள்ளுகிறான். தசரதன், கைகேயிக்கு அவளிடத்தில் உண்டாகும் புத்திரனுக்கு முடிசூட்டி வைப்பதாகச் சொன்ன செய்தி கம்பனில் இல்லை. கைகேயி பெற்ற வரம், அவள் தசரதனுக்கு மனைவியான பிறகு சம்பராசுரனுக்கும் தசரதனுக்கும் நடந்த போரில் தசரதனுக்குத் திறமையாகத் தேரோட்டி, போரில் அவன் வெற்றிப் பெறக் காரணமாக இருந்தமைக்காவே வழங்கப்பெற்றது. வரம் பொதுப்படையாக வழங்கப்பெற்று, வேண்டிய பொழுது வேண்டியதை அளிப்பதாக அளிக்கப் பெற்றதே தவிர வரம் இன்னது என்று கைகேயியும் கேட்டுக் கொள்ளவில்லை. தசரதனும் குறிப்பிடவில்லை. அயோத்தியா காண்டம் மந்தரைச் சூழ்ச்சிப் படலத்தில் வரும் 81, 82-ஆம் பாடல்கள் இதனையுணர்த்தும்.

கைகேயி, பரதன் நாடாள வேண்டும்: இராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்று சொன்ன பொழுது இராமன், துறந்தாரில் தூய்மையுடையோனாக-சற்றும் சலனமின்றி மனம் நிறைந்த மலர்ந்த முகத்துடன்,

“மன்னவன் பணியள் றாகின்
நும்பணி மறுப்ப னோவென்
பின்னவன் பெற்ற செல்வம்
அடியனேன் பெற்றதன்றோ
என்னிதின் உறுதி யப்பால்
இப்பணி தலைமேற் கொண்டேன்
மின்னொளிர் கான மின்றே
போகின்றேன் விடையுங் கொண்டேன்”

அயோத். சூழ். 110

என்கிறான்.

இந்தப் பாடல் இராமனின் பற்றற்ற உணர்வுக்கும் ஒழுக்கத்திற்கும் சீலச் சிறப்பிற்கும் எடுத்துக்காட்டு. கவிஞன் கம்பன் இந்த இடத்தில் இராமனுடைய பண்பாட்டை வியந்து தன் கூற்றாகக் கூறும் பாடல் பெரியார் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்படுகிறது.


“இப்பொழுது எம்ம னோரால்
இயம்புதற் கெளிதோ யாரும்
செப்பருங் குணத்து இராமன்
திருமுகச் செவ்வி நோக்கின்
ஒப்பதே முன்பு பின்பு அவ்
வாசக முணரக் கேட்ட
அப்பொழு தலர்ந்த செந்தா
மறையினை வென்ற தம்மா.

அயோத். கைகேயி சூழ். 108.

மேலும், இராமன் பற்றற்றவனாக இருந்ததோடு மட்டுமின்றி, அரசுப் பொறுப்பினின்றும் தான் விலக்கப் பெறுவது கருதிக் கவலை கொள்ளவுமில்லை. மாறாக மகிழ்ச்சி அடைகின்றான். பெரும் பாரத்தைச் சுமக்கும் வண்டியில் பூட்டப் பெற்ற எருது அவிழ்த்து விடப் பெறும் பொழுது மகிழ்தல் போல் மகிழ்ந்ததாகக் கவிஞன் கூறுகின்றான். இங்கனம் குணத்தின் குன்றாகத் திகழும் இராமனை வடபுலக் கருத்தை மையமாக வைத்துக் களங்கப்படுத்துவது நியாயமில்லை. வான்மீகி காட்டும் இராமன் வேறு; கம்பன் காட்டும் இராமன் வேறு. தமிழர் போற்றும் தலைவன் கம்பன் காட்டும் இராமனே யாம்.

கம்பனின் காவியப்படி சீதை பெண்ணிற் பெருந்தக்காள், கற்பின் செல்வி, சீதையைப் பற்றிய விமரிசனத்திலும் கட்டுரையாசிரியர், ஒரு நூலை மையமாக வைத்துக் கொண்டு ஆராயவில்லை. இங்கேயும் நமக்குக் கம்பனே ஆசிரியன், கம்பனை மையமாக வைத்துப் பார்ப்பதே தமிழர் கடமை. வான்மீகத்தின் வழியை அடைப்பதற்காகத்தானே கம்பன் இராமகாதை செய்தான். ‘இராவணன் பிறிதொரு பெண்ணின் உடன்பாடின்றி அவளைத் தீண்டினால் இராவணனின் தலை வெடித்துப்போம்’ என்ற சாபம் வான்மீகி இராமாயணத்தில் இல்லை. கம்ப இராமாயணத்திலேயே இந்தச் செய்தி பேசப் பெறுகிறது. அதனாலேயே கம்பன் சீதையின் திருமேனியைத் தொட்டுத் தூக்காமல் அவளிருந்த நிலத்தொடு பெயர்த்து எடுத்துக் கொண்டு போனான் என்று கம்பன் கூறுகின்றான். வான்மீகியோ, ‘திருமேனியைத் தீண்டித் தூக்கிக் கொண்டு போனான்’ கைகளைப் பற்றித் தூக்கிக் கொண்டு போனான் என்றே பேசுகின்றான். வான்மீகியிலும் சாபத்தைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. ஆனால், கற்பழித்தாலேயே தலை வெடிக்கும் என்றிருக்கிறதே தவிர தீண்டினால் தலை வெடிக்கும் என்றில்லை. கம்பனோ இதில் வான்மீகியோடு முற்றிலும் மாறுபட்டு மெய்திண்டினாலேயே தலை வெடிக்கும் என்று மாற்றினான். தன்னுடைய மாற்றத்திற் கேற்ப நிலத்தோடு பெயர்த்தெடுத்துக் கொண்டு போனான் என்றே காப்பியம் செய்தான்.

“மண்ணொடும் கொண்டு போனான்
வானுயர் கற்பினாள் தன்
புண்ணிய மேனி தீண்ட
வஞ்சுவா னுலகம் பூத்த
கண்ணகன் கமலத் தண்ணல்
கருத்திலான் தொடுதல் கண்ணின்
எண்ணருங் கூறாய் மாய்தி
என்றதோர் மொழியுண் டென்பான்”

சுந்தர, திருவடி.

என்ற பாடலைப் பெரியாரே எடுத்துக் காட்டுகிறார். அவரெடுத்துக் காட்டும் மேற்கோள் பாடல் அவர் கூற்றுக்கே மாறாக இருப்பதை அவருடைய நினைவுக்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

பிறிதொரு பெண் விரும்பாமல் அவளை இச்சித்தால் தலை வெடிக்கும் என்ற செய்தி வான்மீகத்திலோ, கம்பனிலோ இல்லை. ஆதலால் இவ்வழியிலும் பெரியார் வலிந்து, மரபு மீறி பாத்திரங்களைக் களங்கப்படுத்துகிறாரே தவிர, காவியத்தின் போக்கிலும் தமிழர் தம் கருத்திலும் இராமனும் சீதையும் பொற்புடையோர்! போற்றுதலுக் குரியவர்கள்!