குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5/மெய்யறிவு






17
மெய்யறிவு


“மெய்” என்ற சொல்லை, உண்மை என்று வழங்குவது மரபு. இல்லை, உண்மை என்ற வழக்கே பெருவழக்கு. உண்மை என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் “சத்” என்ற சொல் வழங்குகிறது. உண்மை என்ற சொல், இன்றைய உலக வழக்கில் நடந்தது என்ற கருத்தில் வழங்கப் பெறுகிறது. இஃது ஒரு திரிபேயாம் அல்லது உபசரணை வழக்காக ஏற்றுக் கொள்ளலாம். உண்மை என்றால் எது உள்ளதோ அதுவே உண்மை. அதாவது கால தத்துவத்திற்கு உட்படாது அப்பாற்பட்டு நின்று விளங்கும் பொருள் எதுவோ, அதுவே உண்மை. இந்த உண்மையைத் தேர்ந்து தெளிதல் எளிதன்று.

அப்பரடிகள் “சிந்தையுள் தெளிவுமாகித் தெளிவினுள் சிவமுமாகி” என்றார். ஏன்? நமது பொறிகளும் புலன்களும் வரையறுக்கப் பெற்ற ஆற்றலுடையவை. இவை எல்லைகளைக் கடந்த ஒன்றை எங்ஙனம் தேர்ந்து தெளியும்? உண்மை-மெய் என்று போற்றப் பெறுவது கடவுளேயாம். தெளிதல் எளிதன்று. அறியாமையும் மயக்கமுமே உயிர்களிடம் இயல்பாய் அமைந்தவை. அறியாமை என்றால் ஒன்றும் தெரியாமை என்பது பொருளன்று. ஒன்றைப் பிறிதொன்றாக முறை பிறழ அறிதலே அறியாமை, பழுதையைப் பாம்பென்றும், பாம்பைப் பழுதை என்றும் முறை பிறழ்ந்து உணர்தல்! அதுபோலவே நன்மையைத் தீமையென்றும் தீமையை நன்மையென்றும் உணர்தல்: ஒன்றும் தெரியாமையைவிட அறியாமை கொடிது, பெரிதும் துன்பம் தரும்.

மாலை நேரம்! பகலும் இரவும் தம்முள் மயங்கும் நேரம் ! ஒளியை விழுங்கி இருள் மேவும் நேரம்! ஒரு நெடிய மலர்மாலை நெளிந்த தோற்றத்தில் கிடக்கிறது. உள் பொருளை உள்ளவாறு அறிய இயலாத நிலை. இருட்டு காரணமாகக் கட்புலனில் அந்த மாலையின் நீளமும் தெளிவும் பாம்பின் தோற்றத்தைக் காட்டுகின்றன. தேர்தல் இல்லை; தெளிவும் இல்லை! பயம்! பாம்பு என்ற அடிப்படையில் பயம் வந்துவிட்டது: மானுடத்தின் கொடிய பகை அச்சமே! அச்சமும் பயமும் ஒரு பொருட் கிளவிகள். அஞ்சி அஞ்சிச் சாவார் வாழ்விற்குரியரல்லர். இதுபோல நிலம், நீர், தீ, வளி, வெளி எனும் ஐம்பூதங்களால் ஆய சடவுலகம் மாறுதலுக்கு இசைந்த உலகம்; அழியும் தன்மை யுடைய உலகம். இந்த உலகத்தின் தன்மை, பரம்பொருளைகடவுளைக் காண இயலாவண்ணம் மறைத்துவிடுகிறது. ஆம்! கண்டதே காட்சி! கொண்டதே கோலம்! இதுவே மயக்க நிலை; அறியாமையின் வெளிப்பாடு. இந்தச் சூழலிலிருந்து தப்பி, உண்மையைத் தேறுதல் வேண்டும்; தெளிதல் வேண்டும். இஃது எங்ஙனம் சாலும்? அறிவுதான் அறிவைத் தூண்ட இயலும். உண்மைதான் உண்மையைக் காணத் துணை செய்ய இயலும், “அவனருளாலே அவன்தாள் வணங்கி” என்றும், “காண்பார் யார் காட்டாக்கால்” என்றும் வரும் அருள் மொழிகளை உணர்க.

மெய்யுணர்தல் வாழ்க்கையின் குறிக்கோள்; ஆக்கம்; பயன். உண்மையும் இன்மையும் கலந்து கிடக்கும் இந்த உலகில் உண்மையை உணர்தல் வேண்டும். உண்மையை உணர்தலுக்கு, உண்மையைத் தேடும் பசி வேண்டும். அந்த உண்மையைத் தேடும் உணர்வு தலைகாட்டிய உடனேயே அந்த உண்மையும் நம்மை நோக்கி நகர்ந்து வரும்; நம் முன் வந்து நிற்கும். அப்போது உண்மையைக் காணமுடியும்; அனுபவிக்க முடியும் நான் எனது என்ற கொடுமையிலிருந்து விடுதலைப் பெற்றவர்கள் உண்மையை உணர முடியும்; காண முடியும்; அனுபவிக்க முடியும். அந்த உண்மையே நாம் தேறுதற் பொருட்டு அயோத்தியிலும் வந்து நின்றது.

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவு என, பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால்
அவர் என்பர் கைவில் ஏந்தி
இலங்கையில் பொருதார் அன்றே
மறைகளுக்கு இறுதி ஆவார்!

- கம்பன்