குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6/பாரதியின் இலட்சியம்


11
பாரதியின் இலட்சியம்


பாரதி தமிழன்-தமிழனாகப் பிறந்து-வாழ்ந்து வளர்ந்து புகழ்க்கொடி நாட்டியவன். அவனுக்குத் தமிழ்மொழி யிடத்தில் அன்பு உண்டு-ஏன் பாரதி ஒரு தமிழ்ப் பித்தன் என்றுகூடக் கூறலாம்.

‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவ தெங்கும் காணோம்"

என்று பாடுமளவுக்கு


"தெள்ளற்ற தமிழ் அமுதின் சுவை கண்டார்
இங்கு அமரர் சிறப்புக் கண்டார்” -

என்று செம்மாந்து பேசுமளவுக்கு அவன் தமிழ் மொழியில் ஊறித் திளைத்தவன். "புத்தம் புதிய கலைகள் மேற்கே மெத்த வளர்வதால் இன்று அக்கலைகளைப் பெறாத தமிழ்ச் சாதியைப் பார்த்து, "தமிழ்ச் சாதியே காலவெள்ளத்தில் கரைந்து அழிந்து போக எண்ணமா? இல்லை, இணையற்ற வாழ்வில் செம்மாந்திருக்க எண்ணமா?” என்று சீற்றத்துடன் மான உணர்வைத் துண்டும் முறையில் கேட்கிறான். இந்த இடங்களையெல்லாம் நோக்கும்போது பாரதி தமிழ் மொழியினிடம் பற்றும் பக்தியும் பைத்தியமும் பிடித்தவனாக வாழ்ந்திருக்கிறான் எனலாம். ஆயினும் இவற்றை வைத்துக் கொண்டு மட்டும் பாரதியை எடை போட்டுவிட முடியாது.

வாழ்க்கையின் இயல்பும், அதில் தோன்றும் வெவ்வேறு ஆசைகளும் வளர்ச்சி நோக்குடையன. ஒரு குடும்பத்தில் தலைவனும் தலைவியுமாக இருவர் இருப்பினும் இருவரும் இருவேறு பண்புகளைப் பெற்றிருப்பினும், குடும்பம் என்றாகும்போது ஒருவர் மற்றவருடன்-இணைந்து வாழ்கின்றனர். பின் அவர்களே அண்டை அயல் வீட்டாருடன், அந்த ஊரிலுள்ள எல்லா குடும்பங்களுடன் ஒத்து இணைந்து வாழ்கின்றனர்- அதுதான் தலைசிறந்தது என்றும் எண்ணுகின்றனர். ஊரிலுள்ள குடும்பங்கள் அனைத்தும் நாட்டுக் குடும்பத்தில் இணைந்து ஒத்துக் கரைந்து போகின்றன. அது போல பாரதி தமிழ்க் கவிஞனாக வாழ்ந்தான். ஆனால் நாட்டைவிட்டு விலகி வேறாகி வாழவில்லை. நாட்டுடன் ஒட்டி வாழக் கற்றுக் கொண்டான். நான் தமிழனாகவும் வாழமுடியும். அந்த நிலையில் இந்த பாரத நாட்டுடன் ஒட்டி ஒரு பாரதக் குடிமகனாகவும் வாழமுடியும் என்பதை அவன் நடைமுறையில் காட்டினான்.

தனிமனிதன் தனித்துத் தன்னூருடன் மட்டும் வாழாது. நாட்டுடன் உலகுடன் ஒட்டிவாழ எண்ணும் போதுதான் பரிபூரண மனிதனாக-முழு வளர்ச்சியடைந்த மனிதனாகத் திகழ்கிறான். அவன் ஊருடன் நாட்டுடன் உலகுடன் ஒத்துவராதபோது அதனால் பயனில்லை. வளர்ச்சியும் இல்லை. ஆகவே பாரதி தமிழனாகப் பிறந்து தமிழனாக வாழ்ந்தான். ஆனாலும் தேசியம், நாடு என்றபோது இந்த நாட்டின் ஒரு குடிமகன் என்று வாழ்ந்திருக்கிறான். தனிமனித வரலாறு நாட்டு வரலாற்றைத் திருப்பியதாக வரலாறு இல்லை. தேசத்தின் பொதுத்தன்மைகளே தேசத்தின் வரலாற்றை மாற்றும்; செம்மைப்படுத்தும். ஆகவே தமிழனாக வாழ்ந்து பாரத நாட்டுடன் இணைந்து கலந்தவன் பாரதி,

"வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
'வாழிய பாரத மணித்திரு நாடு”

என்ற பாடலில் செந்தமிழையும் தமிழரையும் வாழ்த்திய பிறகுதான் பாரத நாட்டை வாழ்த்துகிறான். எனவே பாரதியார் மிகுதியும் வற்றுத்தியது தமிழ்த் தேசியமே என்றனர்.

பாரதி செந்தமிழை ஏற்றுக் கொண்டான். நற்றமிழை ஏற்றுக் கொண்டான். பாரத மணித்திரு நாட்டை ஏற்றுக் கொண்டான்-வாழ்த்துகிறான். அவன் தமிழ் பேசுபவனாகதமிழ் இனத்தவனாக இருப்பதுடன் பாரத நாட்டுக் குடிமகனாக இருப்பதிலும் பெருமை கொள்கிறான்-நாடு என்று வரும்போது பாரத நாட்டைக் காண்கிறான்.

அறையின்றி வீடு இல்லை. வீடு இன்றி வீதியில்லை; வீதியின்றி ஊரில்லை; அனைத்தும் ஒன்றையொன்று பிரிக்க முடியாது சாய்ந்து தழுவி நிற்கின்றன. பாரதம் என்ற நாட்டில் இருக்கின்ற வீதி தமிழகம், வீடு தமிழினம். வீட்டிலுள்ள சிறு அறை நாம் அறையின்றி வீடோ, வீடின்றி வீதியோ, வீதியின்றி ஊரோ இல்லை. அதுபோலத் தனித்தமிழன் இன்றித் தமிழினமோ, தமிழினமற்ற பாரதமோ இல்லை. எனவேதான் மொழி, மொழி வழிப்பட்ட இனம், நாடு என்று சொல்லும்போது தமிழ், தமிழர், பாரத நாடு என்று பேசுகின்றான்.

பாரதி தமிழினத்தைத் தமிழ்ச்சாதி என்று பேசுவதில் பெருமை கொள்கிறான். எனவே பாரதி வற்புறுத்தியது தமிழ்ச்சாதியின் சிறப்பையே என்றனர்.

உண்மைதான், பாரதி தமிழ்ச்சாதியைப் போற்றுகிறான்-புகழ்கின்றான்-செம்மாந்து பாடுகிறான். ஆனால் பாரத சமுதாயத்தை மறக்கவில்லை.

சாதி வேறு, சமுதாயம் வேறு. மாம்பழம் என்று சொல்லும்போது கிளிமூக்கு, மல்கோவா, ருமேனியா முதலிய பல சாதிகள் நினைவுக்கு வருகின்றன. மாம்பழச் சமுதாயத்தில் அமைந்த கிளிமூக்கு, மல்கோவா போன்றன வெல்லாம் பல்வேறு இனங்கள்-சாதிகள். அது போல பாரத சமுதாயத்தில் தமிழினம் ஒரு பிரிவு; சாதி, அதுபோலவே ஆந்திர இனம், கன்னட இனம், மலையாள இனம், வங்காள இனம் முதலிய பல உட்பிரிவுகளும் உள்ளன. இதனை நன்கு உணர்ந்துதான் பாரதி தமிழ் மக்களைக் குறிக்கும்போது தமிழ்ச்சாதி என்றும், தமிழர் உள்ளிட்ட பாரத மக்களைக் குறிக்கும்போது பாரத சமுதாயம் என்றும் பாடுகிறான்.

"விதியே தமிழ்ச்சாதியை எவ்வகை விதித்தாய்"


என்று விதியை நோக்கி வினவும்போது விதித்தாய் என்று தமிழ்ச்சாதியைக் குறித்தவன், பாரத மக்களை வாழ்த்தும் போது "வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே” என்று வாழ்த்திக் களிப்படைகின்றான். ஆகவே தமிழினத்தைத் தமிழ்ச்சாதி என்றும், பலவகை இனங்களையும் உள்ளடக்கிய பாரத மக்களைப் பாரத சமுதாயம் என்றும் வேறு வேறு பிரித்துக் காட்டுவதன் மூலம் சிறப்பாகப் பாரத தேசியத்தைச் சார்ந்து நிற்கின்றான்.

அடுத்து பாரத நாட்டைப் பாடும்போது பெற்ற உணர்ச்சி உணர்வைக் காட்டிலும் தமிழகத்தைப் பாடும் போது வெளியிடும் கவிதை உணர்ச்சி மிகச் சிறந்ததாக உள்ளது என்பது குறித்து, அதன் மூலம் தமிழ்த் தேசியம் என்று குறுகிய இடத்துள் பாரதியை அடைத்தார்கள்.

தன்மொழி, தன்னாடு இவற்றைப் பாடும்போதும் பேசும்போதும், எண்ணும்போதும் உணர்ச்சி மிகப் பாடுவதும், பேசுவதும் இயற்கையாயினும் பாரத நாட்டிற்குத் தந்துள்ள அளவுக்கு, சிறப்பைத் தமிழ்நாடு என்று பிரித்து எண்ணும்போது தமிழகத்திற்குப் பாரதி தரவில்லை.

பெயர், நாடு, நகர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி என்ற பத்தினையும் வைத்துச் சிறப்பித்துப் பாடுவது தன்னேரில்லாத் தலைவனுக்கே ஆகும். இப்பத்தும் சேர்ந்தது தசாங்கம் என்பதும், அது தன்னேரில்லாத் தலைவனுக்கே உரியதாக வேண்டும் என்பதும் தசாங்கத்தின் இலக்கணம் ஆகும். அந்தத் தசாங்கத்தின் இலக்கணத்தை மனத்தில் இருத்திப் பார்க்கும் போது பாரதி பாரத நாட்டுக்குத்தான் தசாங்கம் பாடியுள்ளானே தவிர தமிழ் நாட்டிற்குப் பாடவில்லை. வீட்டிலே சிற்றன்னைகள் பலர் இருப்பினும் பெரிய அன்னைக்கு உரிய மதிப்பை, அப்பெரிய அன்னைக்கும் எனைய சிற்றன்னைக்குரிய மதிப்பிற் குறைவுபடாது சிற்றனையருக்கும் கொடுப்பது போல, பாரதக் குடும்பத்தில் பெரிய அன்னையாகிய பாரதத் தாய்க்குத் தரும் மதிப்பை, மற்ற தமிழ், தெலுங்கு, குஜராத்தி, வங்காள அன்னையருக்குத் தருவதனைக் காட்டிலும் சற்று அதிக மாகத் தர எண்ணியே தமிழ்த் தாய்க்குப் பாடாத தசாங்கத்தைப் பாரதத் தாய்க்குப் பாடியுள்ளான். அதில் அவன் நாடாக,

"பேரிமய வெற்புமுதல்
பெண்குமரி ஈறாகும்
ஆரியநா டென்றேஅறி"

என்று தன்னாட்டின் எல்லைக்குள்ளாக இமயத்தையும், குமரி முனையையும் காட்டுகின்றான்.

பாப்பாவுக்குக் கூறும்போது பாரதி தமிழ்நாட்டை மிகவும் வற்புறுத்துகிறான்.

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா என்று கூறுகிறார். அப்பாட்டின் இறுதியில் ஆன்றோர்கள் "தேசமடி பாப்பா என்று முடிக்கின்றார். பாரதியைப் பொறுத்தவரையில் தேசம் என்ற சொல்லைப் பாரத நாட்டைக் குறிப்பதாகவே பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார். மேலும் அப்பகுதியிற் பாடும் பாரதி பாரத நாட்டிற்கு ஒன்றும் தமிழ்நாட்டிற்கு ஒன்றும்; பின் பாரத நாட்டிற்கு இரண்டுமாக நான்கு கண்ணிகளை எழுதியுள்ளான். ஒற்றுமைப்பட்டு இணைந்து நிற்கும் பாரதத்தைப் பாப்பாவுக்கு வற்புறுத்தவே பாரதத்திற்கு மூன்று பாடல்களைப் பாடியுள்ளான். அப்படி யானால்,

"தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா"

என்ற பகுதிக்குப் பொருள் கொள்வது எப்படி? "பாரதத் தாயைத் தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள் தாய் என்று கும்பிடு" என்று பொருள் கொள்ள வேண்டும். தமிழ்த்திரு நாடு ஒரு மகள்; அவளை ஈன்றெடுத்தவள் பாரதத்தாய் என்று பொருள் கொள்ள வேண்டும். ஏனென்றால், தமிழகம் உள்ளிட்ட பாரத நாட்டை-அன்று முப்பத்து முக்கோடி மக்கள் வாழ்ந்த பாரத நாட்ட்ை ஒரு வட்டமைப்பாகக் காண்கிறான்.

"முப்பத்து முக்கோடி மக்களுக்கும் ஒரு சங்கம்-அது பொதுவுடைமை" என்று பாடுகின்றான். அவன் தமிழனாகப் பிறந்து-தமிழனாகச் செத்தபோதிலும், பாரதநாடு என்று நோக்கும் போது தன்னைப் பாரத நாட்டுக் குடிமகனாக ஆக்கிக் கொள்ளும் வழியில் வளர்த்து வைத்திருந்தான். ஏன்? அதனிலும் மேலாக உலகக் குடிமகனாக வளர்கின்ற வரையில் தன்னை வளர்த்துக் கொண்டிருந்தான். அதனால் தான் பெல்சியப் புரட்சியை-சோவியத் புரட்சியை அவன் வாழ்த்த முடிந்தது-வாழ்த்தினான். இத்தாலியைக் கண்டு மாஜினியின் வீரமொழிகளை மொழிபெயர்த்துத் தந்தான். ஆகவே அவன் தமிழனாகவும், பாரதக் குடிமகனாகவும், ஏன் உலக மகனாகவும் கைகொடுத்து நின்றான். எனவே சிறு எல்லைகட்கு உட்பட்ட மொழிவழித் தனித்து வாழும் தேசியங்களை ஏற்றுக் கொண்டவனல்லன் பாரதி.

மொழிவழித் தனித்தும் பிரிந்தும் வாழும் தேசியத்தை ஏற்றுக் கொண்டவனல்லன் என்றால் தன் மொழியையும், தன் இனத்தையும் பேணாதவன் என்று பொருளல்ல, எடுத்துக் காட்டாகப் பல்வேறு சிற்றாறுகள் இன்றிப் பேராறு இல்லை; பேராற்றுடன் கலவாத சிற்றாறுகளால் பெரும் பயன் இல்லை. பேராறுதான் சிறப்புடையது; சிற்றாறுகள் சிறப்புடையனவல்ல என்று ஒதுக்கித்தள்ளவும் முடியாது. பேராற்றின் மூலம் வாழ்வுக்குத் தேவையான சிறப்பு. சக்தி, மின்சாரம், போன்ற பெருஞ் சக்திகளைப் பெறமுடியும். ஆகவே பேராறுபோல பாரத தேசியம்; சிற்றாறுகள் போல பிறமொழி வழித் தேசியங்கள். பாரதி தமிழ் நாட்டையும் பார்த்தான். பாரத நாட்டையும் பார்த்தான். ஆனால் பாரத நாட்டினின்று பிரிந்த தமிழ் நாட்டை ஏற்றக் கொள்ளவில்லை ஏன்? அகில உலக தேசியத்தை விட்டுப் பிரிந்து நிற்கும் பாரத தேசியத்தையும் ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு அவன் உயர்ந்திருந்தான்-தன்னை வளர்த்துக் கொண்டிருந்தான்.

இங்ஙனம் பாரத தேசியத்தைக் காணும் அளவுக்கு அவன் வளர்ந்திருந்ததாலேயே காவிரியாறுபோல் பிறிதில்லை. வேங்கடம்போல பிறிதில்லை என்று பாடாது,

"இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே"
"மன்னும் இமயமலை எங்கள் மலையே"

என்று பாடுகின்றான். இங்ஙனம் பரந்துபட்ட பாரத தேசியத்தைக் கண்டதால்தான் தமிழ்நாட்டு மணமகனுக்குச் சேரநாட்டுப்பெண் வேண்டும் என்கிறான். தமிழன் தமிழ்ப் பெண்ணை மாத்திரம் மணந்து கொண்டு தமிழ் நாட்டுக்குள்ளேயே "குண்டுசட்டிக்குள் குதிரை ஒட்டக் கூடாது" என்கிறான். மணமகளும் மணமகனும் நீர்விளை யாடச் சிந்து நாட்டுக் கரைக்குச் செல்ல வேண்டும் என்கிறான். இசைக்கும் பாடல் தெலுங்காக மிளிர வேண்டும் என்கிறான். எனவே தமிழ் மணமகன் தமிழ்த் தேசியத்தைத் தாண்டிக் கேரளத்தில் பெண்ணெடுத்து, இசையில் தெலுங்கை ஏற்று, பொருளாதாரத்திலே சிந்து நதித் தேசியத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்; கேரள, ஆந்திர, பஞ்சாப் தேசியத்தையும் தமிழன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவதன் மூலம் அனைத்துப் பிரிவுகளும் இணைந்த பார்த தேசியத்தை வற்புறத்துகிறான்.

பழங்காலத்தில் இந்தப் பாரத நாட்டில் 400-க்கும் அதிகமான பேரரசர்கள், 4000-க்கும் அதிகமான அரசர்கள், அவர்களுக்குக் கீழே கணக்கில் அடங்காத ஜமீன்தார்கள் இருந்தனர். நாடு, சிறுசிறு பகுதிகளாகப் பிரிந்து நின்று ஒருவருக்கொருவர் சண்டை சச்சரவுகள் வைத்துக் கொண்டதால்தான் அந்நியரிடம் அடிமைப்பட நேர்ந்தது. மொழி, உணர்வு என்பனவெல்லாம் தேசியத்தை ஒட்டியன அல்ல. மொழி ஒற்றுமை, சிந்தனை ஒற்றுமை, பொருளாதார ஒற்றமை, இயற்கைப் பாதுகாப்பு அரண், என்று இந்த நாட்டை வெவ்வேறாகக் கூறுபோட்டுவிட்டால் நாட்டின் நிலை என்ன ஆகும்? எனவேதான்,

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே-நம்மில்
ஒற்றுமை நிங்கின் அனைவர்க்கும் தாழ்வே"

ஒன்றுபட்ட பாரதத்தின்-அதன் மேம்பாட்டினைக் கூறினான் பாரதி,

இத்தனையும் எண்ணும்போது தமிழ்த் தேசியம் வேண்டும். தமிழ் நாகரிகம் வேண்டும். ஆனால் அதே காலத்தில் குடிமக்கள், நான் ஒரு பாரத நாட்டுக் குடிமகன்' என்பதையும் உணரவேண்டும். ஆகவே பாரத தேசியத்தை ஒட்டிய-தழுவிய தமிழ்த் தேசியத்தை வற்புறுத்தினான் பாரதி எனலாம். இரண்டையும் ஒன்றுக்கொன்று முரண்படுத்துவதாகப் பாரதி காணவில்லை. இரண்டும் வேண்டும், இரண்டும் இன்றியமையாதது. இரண்டும் இரண்டு கண்போல எனலாம். ஒரு கண்ணை இழந்துவிட்டு, ஒரு கண்ணுடன் விளங்குவதால் பலனில்லை. ஒன்றை ஒன்று விழுங்காது ஒற்றுமைப்பட்ட பாரத தேசீயமும் தமிழ்த் தேசீயமும் தேவை. அவை இரண்டும் உயிரும் உடலும், கிணறும் நீரும்போல, எது உயர்ந்தது எது தாழ்ந்தது என்று மிகுதி குறைவு கூற முடியாத அளவுக்கு இரண்டும் ஒத்த நிலையில் இருக்க வேண்டும். பாரத தேசியத்தில் உள்ளிட்ட தமிழ்த் தேசியம் வேண்டும் என்கிறான் பாரதி.

இராமேசுவரத்தில் இருப்பவர்கள் காசிக்கும், காசியில் இருப்பவர்கள் இராமேசுவரத்திற்கும், போவது பழக்கமாகி விட்டது. ஆகவே தமிழ்த் தேசியத்தைக் கடந்த பாரத தேசியம் தன்னியல்பாக மொழி, கலை, சமயம் முதலிய நாகரிகங்களில் வளர்ந்து கொண்டிருக்கிறது. நம்முடைய குழந்தைகள் நல்ல தமிழர்களாகத் தமிழ் நெஞ்சத்தோடு வாழவேண்டும். அதே நேரத்தில் பாரத நாடு நம் நாடு. நாம் அனைவரும் பாரத நாட்டு மக்கள். 40 கோடி பேரும் குடும்பத்து மக்கள்-ஒரு கும்பத்தைச் சேர்ந்தவர்கள்-ஒரு சமுதாயம் என்ற தேசிய எழுச்சி மிக்க உணர்ச்சியோடு வாழவேண்டும். இந்த நாட்டு இனத் தலைமுறையினருக்கு இந்த இரு எண்ணங்களும் வரவேண்டும்-அவர்கள் உள்ளத்தில் வளர வேண்டும் என்ற எண்ணத்தில்தான்.

"பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள் பாரத நாடு”

என்று பாடினான் பாரதி.

பாரத தேசியத்தைத் தழுவிய தமிழ்த் தேசியம் தமிழ்த் தேசியத்தை அணைந்த பாரத தேசியம் இவைகள்தான் பாரதி கண்டார். அவர் கண்ட பாரத தேசியம் தமிழ்த் தேசியங்களுள் முரண்பாடு இல்லை. அவற்றுள் முரண் பாட்டை அவர் பார்க்கவும் இல்லை-முரண்பாடு இருக்கவும் முடியாது.