குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6/பாரதியின் தேசியப் பாடல்கள்



12
பாரதியின் தேசியப் பாடல்கள்


எட்டையப்புர மண்ணிலே பிறந்து வளர்ந்து பாரத நாட்டிற்காக இந்த உலகச் சமுதாயத்துக்காக வாழ்ந்தவன் பாரதி. தாழ்வுற்று வறுமை மிஞ்சிப் பாழ்பட்டுக் கிடந்ததாம் ஒர் பாரத தேசந்தனைத் தன் பாட்டுத் திறத்தாலே பாலித்தவன் பாரதி. சுதந்திரப் போராட்ட இயக்கம் வளரசமுதாயத்தின் விடுதலை உணர்ச்சி பீறிட்டு எழ-சமுதாயம் விடுதலை வேட்கை கொள்ள அவன் பாடிய பாடல்கள்தேசியப் பாடல்கள் இன்றைய நிலையில் காலங்கடந் தவையா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனது இம்முன்னுரையை வெறும் செய்திகளை மட்டும் தரும் செய்திப் பத்திரிகை அளவில் அமைத்துச் சொல்கிறேன். அதுதான் தலைமைக்கு ஏற்றது. இரு கட்சிகளின் சார்பிலும் ஒத்த தகுதியுடையவர்கள்-திறமுடன் வாதிடக்கூடியவர்கள் அமைந்துள்ளனர்.

கட்சியாளர்களது கருத்துகளை ஏற்றும் விளக்கியும், விடையிறுக்கப் பெறாத வினாக்களுக்கு ஏற்ற விடை தந்தும் பாரதியின் தேசியப் பாடல்கள் காலங் கடந்தவை எனச் சிலர் விவாதிக்கிறார்கள். 

"சிந்துநதியின் மிசை நிலவினிலே
சேரதன் னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிகள் ஒட்டிவிளை யாடிவருவோம்”

என்ற பாடலில் குறிப்பிட்ட சிந்துநதி பாகிஸ்தானுக்குப் போய்விட்ட பிறகு இந்தப் பாடலுக்கு வேலை ஏது? இது காலங்கடந்த பாடல் அல்லவா என்கின்றனர்.

"இப்பாடல் நடைமுறைக்கு ஒவ்வாதது” என்ற அவர்கள் கருத்து, சரியானதுதானா? அன்றை நிலையில் ஒன்றுபட்டு நில்லாது பிரிந்துபோன பாகிஸ்தான் இப்போது சீனாவுடன் உறவாடுவதால் தனக்குத் தீங்கு நேர்வதை-நேர இருப்பதை நினைத்து ஏன் இந்தியாவுடன் இணைந்து நிற்க நினைக்கக் கூடாது? நாடுகள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு விலகுவதும் பின் ஒன்றுபட்ட கொள்கையால்-பிறர் நெருக்கடியால் இணைவதும் இயற்கைதானே? அம்முறையில் நேற்றுப் பிரிந்த பாகிஸ்தான் நாளை-எதிர்காலத்தில் இந்தியாவுடன் சேராது-சேரக் கூடாது என்று எப்படிக் கூற முடியும்? அன்று சிந்துவையும் கங்கையையும் இணைக்க முடியாதா? இருநாடுகளும் ஒன்று சேர்ந்து கைகோத்து நிற்கும் நிலை ஏற்பட்டால் அத்தகைய சிறப்பு வேறு எந்த நாட்டுக்கு வரும்? சிந்து நதியில் படகோட்டும் இந்த நோக்கம் அன்று நிறைவேறத்தானே செய்யும்? சிந்து நதிக் காலத்தின் கோளாறால்-ஆட்சியால் பிரிந்தது. காலம் மாறும்போதுஇந்தியா பாகிஸ்தான் இணையும்போது நனவாகும். இன்றைய எண்ணமல்லவா அது? இரு நாடுகளும் இணையும் அத்தகைய நிலை எதிர்காலத்தில் வரும்-வரத்தான் போகிறது.


"என்று தணியும் எங்கள் சுதந்திரதாகம்
என்று மடியும் இந்த அடிமையில் மோகம்"

என்ற பாடலைக் காட்டி சுதந்திரதாகம் தீர்ந்த பிறகு அடிமைத்தளை நீங்கிய பிறகு இந்தப் பாட்டுக்குச் சிறப்புண்டா? இது காலங்கடந்த பாடல்தானே என்கின்றனர்.

அடிமையில் மோகம் தணிவது மட்டும் சுதந்திரமாகுமா? அந்நியர் ஆட்சியிலிருந்து விடுபடுவது மட்டும் சுதந்திரமாகுமா? பொருளியல் விடுதலை-இறப்பினின்று விடுதலை-பிறப்பிலிருந்து விடுதலை பெற வேண்டாவா? சுதந்திரம் என்பது அடிமைத்தளை நீக்கம் மட்டுமன்று. பொருளாதார விடுதலை இறப்பும் பிறப்பும் விடுதலை ஆகிய இவை அனைத்தையும் குறிப்பது; உள்ளடக்கியது. சுதந்திரம் ஒரு பெரிய வட்டம். அந்த வட்டத்திலுள்ள ஒரு பள்ளிதான் அடிமைத்தளை நீக்கம். அந்த ஒரு புள்ளி மட்டும் வட்ட மாகுமா? ஏனைப் புள்ளிகள் வேண்டாமா? செல்வமற்ற ஏழைக்கு-உழைத்தும் பயன் பெற முடியாது தவிக்கின்ற உழைப்பாளிகளுக்குப் பொருளாதார விடுதலை வேண்டாவா? இத்தகைய எல்லாவித சிக்கல்களிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறுவதுதான் சுதந்திரம் என்ற கருத்தைப் புலப்படுத்துவதற்காகத்தான்-எல்லாவகை விடுதலையும் பெறுவதுதான் நான் வேண்டும். சுதந்திரம்' என்பதைக் குறிக்கத்தான் பாரதி அழகுற "ஆனந்த சுதந்திரம்" என்று பிறதோரிடத்தில் குறிப்பிடுகின்றான்.

ஆகவே இந்த நாட்டில் தூய அறிவும் ஆண்மையும் வளரும் வரையில் வலிமையுடையோர் வலிமையற்றோரைச் சுரண்டுவதை விடும் வரையில் சுரண்டப் படுபவர் இல்லையென்று முழங்கும் வரையில் பாரதி குறிப்பிடும் ஆனந்த சுதந்திரம்-முழுச் சுதந்திரம் பெற்றதாகக் கூற முடியுமா? அன்று நாம் பெற்றது சுதந்திரத்தில் வீசும் பங்கே ஆகும். எஞ்சிய முக்காலே மூன்று வீசும் பங்குச் சுதந்திரமும் பெறும் வகையில் இந்தப் பாடல் உயிர்ப்புடன் ஒலித்துக் கொண்டிருக்கும்.

இன்றைய உலகம் விரிந்து பரந்து உள்ளது. நிலத்திலும் வானத்திலும் புதிய புதிய கண்டங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்தியாவில் இல்லாவிட்டாலும்-அமெரிக்காவில் இல்லாவிட்டாலும் - தென்னாப்பிரிக்காவில் இத்தகைய சுதந்திரம் கிட்டாத போது, இந்தப் பாடல் அவர்களது உள்ளத்தில் எழுச்சியைத் துாண்ட வேண்டாவா? எட்டயபுர மண்ணில் பிறந்தவரானாலும் அவர் தமிழகத்திற்குபாரததிற்கு மட்டுமின்றி உலகச் சமுதாயத்துக்கும் சிறந்த கருத்துகளைத் தரும் அளவுக்குத் தன்னை வளர்த்துக் கொண்டவன். அவன் இந்த நாட்டுக்கு மட்டுமன்றி உலக முழுமைக்கும் சொந்தமானவன். உலகச் சமுதாயத்தில் எங்கு எங்கு சண்டை சச்சரவுகள் உள்ளனவோ அங்கெல்லாம் அவன் பாடல் பயன்படும். இனவெறி நிறவெறி பிடித்த நாடுகள் சுதந்திரம் பெறாத நாடுகள் இந்த உலகில் இன்னும் எத்தனையோ உள்ளன.

தென்னாப்பிரிக்காவில் நிறவெறி பிடித்தாட்டக் காண்கிறோம். அடிமைத்தளையில் சிக்குண்டு தவிக்கும் நாடுகள் பலவற்றைப் பார்க்கிறோம் இன்றைய உலகத்தில். ஆகவே அங்கெல்லாம் பாரதி போக வேண்டும், அவன் பாடல் ஒலிக்க வேண்டும். உலகப் பிரச்சனைகள் தீரும் வரை-அவை வளர்ந்து கொண்டிருக்கும் வரை இந்தப் பாடல் வேண்டியது தானே? காலங் கடந்ததாக முடியுமா?

ஆதிசிவன் பெற்று விட்டான் என்னை
ஆரியமைந்தன் அகத்தியன் என்றோ?
வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்

என்ற பாடலைச் சுட்டிக் காட்டி இது. காலங்கடந்த பாடல், சிவபெருமான் தமிழ் மொழியைத் தோற்றுவித்திருக்க முடியுமா? மொழியைத் தனி ஒருவன் தோற்றுவிக்க முடியுமா? இது கருத்துப் பிழையல்லவா? எனவே காலங்கடந்ததல்லவா என்கின்றனர்.

ஆதிசிவன் என்பதை அப்படியே வைத்துக் கொண்டு பார்த்ததால் வந்த பிழை. அதன் உண்மைப் பொருள் என்ன? சீவன் என்ற சொல் சிவன் என்று திரிந்து வந்துள்ளது. பாடலில் சொற்களை எற்ற இடங்களில்-இன்றியமையாத இடங்களில் நீட்டியும் குறைத்தும், திரித்தும் வழங்குவது என்பது இலக்கணமும் ஏற்றுக் கொண்ட நெறி-மரபு ஆகும். வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல் விரித்தல் தொகுத்தலும் வரும் செய்யுளுள் வேண்டும் என்பது இலக்கணம். எனவே சீவன் என்பது பாடலின் சந்த ஒட்டம் தடைப்படா திருப்பதற்காகச் சிவன் என்று வந்துள்ளது. சீவன்-மனிதன் பெற்றெடுத்ததுதானே மொழி? இந்தக் கருத்தில் எங்ங்ணம் வேறுபாடு கொள்ள முடியும்?

"தோன்றக் கூடியன வெல்லாம் மாறக்கூடியன" என்பது மார்க்ஸ்சின் சித்தாந்தம். காரல்மார்க்ஸ்சின் கொள்கைப்படி, தோன்றியது மாறுமானால்-அழியுமானால் சுதந்திர வேட்கையின் காரணமாக-சுதந்திரம் பெறுவதற்காக எழுதப்பற்ெற தேசியப் பாடல்கள் அழியக்கூடியன-காலங் கடந்ததுதானே என்று விவாதிக்கின்றனர். உலகில் தோன்றிய எந்தப் பொருளும் நிலைப்பதில்லை என்பது உண்மை.

நிலைத்தல் வேறு. மாறுதல் வேறு. தோன்றிய பொருள்களிடையே மாறுதல்-வளர்ச்சி உண்டு. பிறந்தது போன்று நிலைத்து நிற்றல்தான் இல்லை. பிறந்தது அப்படியே இல்லாது வளரும், மாறும். மாற்றம் அழிவல்ல, வளர்ச்சியே ஆகும்.

உலகில் தோன்றிய எல்லாம் அழிவன என்ற கொள்கை இடைக்காலச் சமயத்தில் சில சுயநலவாதிகளால் புகுத்தப்பெற்ற கொள்கை அது தவறு. மாற்றம் உண்டே தவிர அழிவில்லை.

பாரதியின் கவிதை காலத்திற்கேற்ற புதுப்புதுக் கருத்துக்களை மாறி மாறித் தந்து கொண்டிருக்குமே தவிர அழியாது. அன்று சிந்து நதியின்மிசை படகு விடுமாறு பாடிய பாரதி வாழ்வானானால் பாரத நாடனைத்தையும் ஒன்றாக அன்று கண்டதுபோல் உலக நாடுகள் அனைத்தையும் ஒன்றாகக் கண்டு "அமேசான் நதியின் மிசை நிலவினிலே படகு விடுவோம்” என்று பாடுவான். அன்று தன்னாட்டின் எல்லைப்போக்கில் அவனுக்கு சிந்துதான் கிடைத்தது. இன்று சிந்துவில் இல்லாவிட்டாலும் கங்கையிலாவது படகோட்ட எந்தத் தமிழனாவது முன்வந்துள்ளானா? இவையெல்லாம் செய்ய முன்வராத தமிழன், பாரதி கூறியபடி ஒன்றே ஒன்றினை மட்டும் முயல்கிறான்-முன் வருகிறான். சேரநாட்டுப் பெண்களை மணக்க மட்டும் முன்வருவான். தன் ஊர் விட்டு-தன் மாமனார் ஊர்விட்டு வேற்று ஊர்களுக்குச் சென்று வேலை செய்யப் பயப்படும் தமிழன் படகோட்டுவது எங்கே?

ஆகவே காரல்மார்க்க்ஸ், தோன்றியன அப்படியே நிலைத்திருக்க மாட்டா வளர்ச்சிக்குரியன வளரும் என்ப தைத்தான் குறிப்பிடுகின்றார்.

தேசியம் என்பது நாட்டை நேசிப்பது மட்டும்தான் என்று சொல்கிறார்கள்.

தன்னாட்டை நேசிப்பது மட்டும் அன்று. மனிதனுடைய உணர்வு-சிந்தனை-செயல்வாழ்க்கை-வீடு-அரசு - ஆட்சி அனைத்துமே தேசியம் என்று சிலர் விளக்கம் தருகின்றனர்.

அழகான விளக்கம் அது. ஆங்கிலேயனை-அந்நியனை எதிர்ப்பது-தன்னாட்டை நேசிப்பது மட்டும் தேசியமல்ல, நாட்டினுள் அமைந்த வீடும் வாழ்க்கையும், மனிதனும் அவன் கருத்தும், சிந்தனையும் அவனையாளும் அரசும் ஆட்சியும் செம்மையுடன் சிறக்க வேண்டும் என்று உழைப்பதுதான். தேசப்பற்று தேசிய உணர்ச்சிட, இந்த நாட்டு மக்கள் மற்றவருடன் கலந்து உரையாடும் உரையாடல் உறவு இவை எல்லாமே தேசியம் ஆகும்.

'குழந்தை தாயிடம் அன்பு செலுத்துவது இயற்கை அது வளர்ந்த ஒருத்தியை மணந்து கொண்டபின் தாயன்புக்கு இடமில்லை. தாரத்திடமே அன்பு செலுத்துகிறான். அது போல தேசபக்தியை ஊட்டுவதற்காக-சுதந்திரம் பெறுவதற்காகப் பாடப்பெற்ற பாடல்கள். அது பெற்ற பிறகு பயனற்றுப் போவது இயற்கைதானே?' என்கின்றனர்.

தாயன்பு அவன் வளர்ந்த பிறகு தாரத்திடம் செல்கிறது. தாயன்பு மறக்கப்படுகிறது என்கின்றனர்.

அது பொருந்தாது. உலகம் தாயன்பால் இன்று நேற்று வளரவில்லை. உழைப்பின் பயனை அனுபவிக்கும் போது பயன் நல்கிய முன்னோர் உழைப்பை மறுக்கக் கூடாது. பின்பரம்பரை முன்னோடியாக இருந்து பயன் தந்த முன்னோரை மறக்கக் கூடாது என்பதற்காகவே-நன்றியறிதல். மாம்பழத்தைத் தின்றவன் அதைத் தரும் வகையில் உழைத்த தன் முன்னோரை மறக்காது போற்ற வேண்டும் என்பதற்காக நீ உன் பின் பரம்பரைக்காக அதன் கொட்டையை நட வேண்டும் என்று கூறப் பெற்ற கருத்து சிறப்புடையது.

பாராட்டும் பண்பு-முன்னோரைப் போற்றும் பண்பு -நன்றியறிதல் சமுதாயத்திற்கு மிகமிக இன்றியமை யாததாகும். எனவேதான் எத்தகைய தீய செயல் செய்த போதிலும் இழிசெயலில் ஈடுபட்டபோதும் நன்றியறிதல் வேண்டும். "ஆன்முலையறுத்த அறனிலோர்க்கும் குரவர் தப்பிய கொடுமையோர்க்கும் கழுவாய் உண்டு” என்ற புறநானூறு,

"ஒருவன் செய்தி கொன்றார்க்கு
உய்தி இல்லென அறம்பாடிற்று"

என்று கூறுகிறது. எனவே சுதந்திரத்தை அனுபவிக்கும் நாம் அதைத் தருவதில் முக்கிய பங்கு வகித்த தேசியப் பாடல்களை மறக்காது போற்ற வேண்டும்.

கோகலே, வ.உ.சி, காந்தி, குருகோவிந்தர் போன்ற தேசிய இயக்கத் தலைவர்களைப் பற்றிய பாடல்கள் காலங் கடந்தவை அல்லவா? அவர்களது வரலாற்றை அறிய இன்று தெளிவான வரலாறு இல்லையா? பள்ளிக்கூட வரலாற்று ஆசிரியர் போதுமே. எனவே அவர்களைப் பற்றிய அப்பாடல்கள் காலங் கடந்தவைதான் என்கின்றனர்.

சிறை வென்று அடி உதை பட்டு இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் தந்த தலைவர்களைப் போற்றுவதுவணங்குவது-நினைப்பது நன்றியுணர்வின் பாற்பட்டதாகும். அவர்களை நினைக்க சமூக அறிவு நூல் போதும் என்கின்றனர். அது தவறு. பள்ளியில் சமூக நூல் பாடத்தில் அவர்களது. வரலாற்றைத்தான் படிக்கலாம். வினாவுக்கு விடை எழுதலாம்; மதிப்பெண்கள் பெறலாம். உள்ளத்தில் எழுச்சியை- உணர்வைப் பெற முடியுமா? நவீன ஆசிரியனும் சிறு கதை ஆசிரியனும்கூட அத்தகைய எழுச்சியைத் தரமுடியாது. ஒரு நல்ல கவிஞன்-மக்கள் கவிஞன்தான் அந்த எழுச்சியை ஊட்ட முடியும். எத்தனையோ பேர் சுதந்திரப் போராட்டக் காலத்தில் பக்கம் பக்கமாகச் சுதந்திரம் பற்றியும் தேச பக்தி பற்றியும் எழுதினர். இருந்தாலும் வங்கக் கவிஞனும் தமிழகம் தந்த சிங்கக் கவிஞனும் தந்த எழுச்சியைஊட்டிய உணர்வை ஊட்ட முடியவில்லை. இன்று படித்தாலும் உடல் புல்லரிக்கிறது-உள்ளம் துள்ளி எழுகிறது. இத்தகைய உணர்வை வெறும் வரலாற்று நூலோ வரலாற்று ஆசிரியனோ ஊட்ட முடியாது. அத்தகைய சிறந்த உணர்வைப் பெற அப்பாடல்கள்தான் வேண்டும்.

"ஆயிரம் உண்டிங்கு சாதி எனில்
அந்நியர் வந்து புகல் என்ன நீதி-”

என்று கேட்டான் பாரதி. அவன் ஆங்கிலேயரை மட்டும் பார்த்துக் கேட்கவில்லை. இன்று நம் எல்லைப் புறத்தில் ஓயாது தொல்லைக் கொடுத்துக் கொண்டு இருக்கும் பகைவரைப் பார்த்தும் அவன் இதே வினாவை எழுப்புவான். உயிரோடு இருந்தால், அவன் அன்று எழுப்பிய வினா இன்று தென்னகத் தலைவர்கள் உள்ளத்தில் பீறிட்டு எழுந்து நின்றதைக் கண்டோம். நாட்டுப் பிரிவு பற்றிய எண்ணம் தூக்கி எறியப்பெற்றது அந்த நேரத்தில். அனைவர் பார்வையும் இந்தப் பாரதத்தைக் காக்கத் திரும்பியது. இங்ங்னம் பல கட்சித் தலைவர்களையும் மக்களையும் ஒன்றுபடுமாறு ஊக்குவித்த அந்தப் பாரதியின் பாடல் காலங்கடந்ததா? அது நமக்கு வேண்டாவா?

"செப்புமொழி பதினெட்டுடையாள்-எனிற்.
சிந்தனை ஒன்றுடையாள்"

என்று பாடினான் பாரதி.


இன்று பல்வேறு மொழிகளைப் பெற்றிருக்கும் பாரத நாடு சிந்தனையால் ஒன்றாய்விட்டதா? இல்லை. ஒன்றாக்கசிந்தனையால் ஒன்றாக்க முயற்சித்து வருகிறோம். ஆற்றில் பிள்ளையார் கட்ட முயற்சிப்பது போல முயல்கிறோம். காலம் சற்று நீடித்தாலும் இறுதியில் வெற்றியடைவோம். ஒத்து ஊதுபவனுடைய ஒத்து ஒலி, நாதசுரத்திலிருந்து வேறாக வேறுபட்டு ஒலித்தாலும் அவன் ஊதும் சுதி நாதசுரத்துடன் ஒத்திருப்பது போல மொழிகள் பலவாக-பதினெட்டாக வேறுபட்டிருப்பினும் அம்மொழிகள் பேசும் மக்களது சிந்தனை ஒத்திருக்க வேண்டும். ஒன்றாய் இருக்க வேண்டும் என்கிறான். சாதியைத் தொலைப்பதில்-பொருளாதார ஏற்றத் தாழ்வைப் போக்குவதில் அனைவரும் இந்தப் பாரத நாட்டின் குடிமக்கள்-நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்பதில் சிந்தனை ஒன்றாய் இருக்க வேண்டும் என்கிறான். ஆகவே மொழி வேறு பட்டாலும் சிந்தனை ஒன்றுபடாத இந்தக் காலத்தில் அச்சிந்தனையை ஊட்டும்-வற்புறுத்தும் பாரதியின் பாடல் வேண்டாவா?

புவியிசை தருமமே அரசியலதனினும்
பிறஇய லதனினும் வெற்றிதரும் என
வேதம் சொன்னதை முற்றும்பேண
முற்பட்டு நின்றார் பாரத மக்கள்

என்று பாடுகின்றான்.

சுதந்திர காலத்தில் மக்களுடைய நோக்கத்தை எல்லாம் சுதந்திரம் பெறுவதில் செலுத்தச் செய்த நாம் சுதந்திரமே குறிக்கோளாக-இலட்சியமாக வைத்த நாம் சுதந்திரம் பெற்ற பிறகு அத்தகையதொரு சிறந்த இலட்சியத்தை மக்கள் மன்றத்தின் முன் வைக்கவில்லை. மறந்து விட்டோம். இன்று நாட்டு நலத் திட்டங்கள் பல தீட்டிச் செயல்படுத்தும் நோக்குடன் முன்னேறும் நாம் அவற்றை விடச் சிறந்த-சாதி வேறுபாடு இல்லை-எல்லாரும் ஓர் குலம்-எல்லாரும் ஓர் நிலை-எல்லோரும் இந்தியப் பெரு நாட்டின் குடிமக்கள் என்ற பெரியதொரு இலட்சியத்தை மக்கள் மன்றத்தில் நிறுத்தி மக்களை எழுச்சியுறச் செய்ய மறந்துவிட்டோம். சமதர்ம சமுதாய அமைப்பை வலியுறுத்தி இலட்சியமாக்க மறந்தோம். மக்களது இலட்சியமாக ஆக்கவில்லை.

அரசியல் ஆட்சி, போகும் வரும், ஆனால் நீதி அறம் என்றும் நிலையாக நிற்பது-மாறாதது-அழியாதது. ஆயினும் இன்று மக்களிடம் அரசியலுக்கு இருக்கும் மோகம் எல்லா மனிதருக்கும் சோறு போட வேண்டும் என்பதில் இல்லை. எல்லார் வயிற்றையும் நிரப்ப வேண்டும் என்பது போன்ற நீதியை-அறத்தை வற்புறுத்தும் பாரதியின் பாடல் வேண்டாவா?


"கோத்திரம் ஒன்றாய் இருந்தாலும்-ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்”

பிறந்த பிறப்பால்-பாரத நாட்டுக் குடிமகன் என்ற ஒத்த நிலையால் ஒன்றாய் இருக்கும் நம்முன் பொதுவாகக் கருத்து வேறுபாடிருக்கக் கூடாதாயினும் ஆங்காங்கு கருத்து வேறுபாடு உண்டாவது இயற்கை. அப்படிக் கருத்து வேறுபாடு கொண்டவனை நோக்கித் தாழ்த்தி. இழித்துப் பழித்துப் பேசுவது தவறு. தாம் கொண்ட வேறுபட்ட கொள்கைகளுள்ளும் ஒற்றுமை காண்டதுதான் அறிவுடைமை. வேறுபட்ட புளிப்பும் கார்ப்பும் உவர்ப்பும் துவர்ப்பும் கசப்பும் இனிப்பும் சேர்ந்து அறுசுவை உணவு அமைதல் போல வேறுபட்ட கொள்கைகளின் அடிப்படையிலும் ஒற்றுமை காணாது- காண முயற்சிக்காது. அக்கொள்கை உடையவரைக் குறைத்துப் பேசுவது தவறு என்று கண்டிக்கும் பாரதியின் தேசியப் பாடல் வேண்டாவா?


"இனி ஒரு விதி செய்வோம்-அதை
எந்தநாளும் காப்போம்
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்
சகத்தினை அழித்திடுவோம்"

பசிப் பிரச்சனை இன்றைய நிலையில் ஒரு நாட்டுப் பிரச்சனையாக மட்டுமல்லாது உலகப் பிரச்சனையாகவும் ஆகிவிட்டது "ஒரு நாளைக்குப் பத்தாயிரம் பேர் சோறின்றி உலகில் இறந்துவிடுகிறார்கள்" என்று அமெரிக்காவில் கூடிய அகில உலக உணவு மாநாட்டு அறிக்கை கூறுகிறது. ஒன்று அனைவர்க்கும் சோறுபோட வேண்டும்; இன்றேல் பாரதிக் கருத்துப்படி உலகத்தை அழிக்க வேண்டும்-செய்தோமா? உள்ளத்துண்ர்வைத் தூண்டி, உண்பதை மறைக்காதே, உதவி வாழ் என்பதை மாற்றிப் புது விதி வகுக்கச் சொன்ன அப்பாடல் வேண்டாவா? வீர மன்னன் சிவாஜியின் மொழியில் வைத்துப் பாரதி கூறும் சொற்கள், எல்லையில் சீனர் தரும் தொல்லைகளை ஒட்டப் பாடுபட்டுக் கொண்டு வரும் நமக்கு, நல்லுணர்வு ஊட்டுவனவாய் உள்ளன. சிவாஜியின் சொற்களை அப்படியே இன்று பயன்படத்தின சீனர்களது படையெடுப்புக்காகப் பாரதியே வந்து பாடியதைப் போல மிளிர்கின்றன. அவை.


"வானகம் அடக்க வந்திடும் அரக்கர்போல்
இந்நாள் படைகொணர்ந்து இன்னல்
செய்கின்றார்”
"தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடும் மிலேச்சரை
மாய்த்திட விரும்பான் வாழ்வும்ஓர் வாழ்வுகொல்?"
"தாய் திறன் கைபடச் சகிப்பவனாகி
நாயென வாழ்பவன் நமரில் இங்குளனோ?”


-என்பனவும்


"ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ'
"கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
கைகட்டிப் பிழைப்பாரோ?”
"இன்பச் சுதந்திரம் நின் இன்னருளால் பெற்றதன்றோ
அன்பற்ற மாக்கள் அதைப் பறித்தால் காவாயோ?

என்பன போன்ற பாடல்கள் சீனர்களுக்காவே பாடப் பெற்றன போலப் புத்துருவம் பெற்று மிளிர்ந்து பாரத மக்களிடையே விழிப்பூட்டி எழுச்சியுறச் செய்வனவாகும். சீனர் படையெடுத்துள்ள இந்நேரத்தில் மக்களிடையே ஏற்றமிக்க எழுச்சியூட்டும் பாரதியின் பாடல் வேண்டாவா? வேண்டும் வேண்டும் வேண்டும். முக்காலும் (மூன்று முறை) வேண்டும் என்றுதான் உள்ளம் முரசறைகின்றது.

எனவே நாட்டு ஒற்றுமையைப் பேணுகின்ற-அறத்தின் சிறப்பை வற்புறுத்துகின்ற-கொள்கையிற் பிரிந்தவனை இகழாதே என்று ஆணை இடுகின்ற-உணவு கொடுத்துக் காத்துப் புதுவிதி படைக்கக் குரல் எழுப்புகின்ற-கண்ணிர் விட்டுக் காத்த சுதந்திரத்தைச் சீனரிடம் பறிகொடுக்காது காத்து நிற்குமாறு ஆணையிடுகின்ற பாரதியின் தேசியப் பாடல்கள் காலங்கடந்தவை அல்ல-அல்ல-அல்ல.