குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/அடியார்க்கு நல்லவையே

19
அடியார்க்கு நல்லவையே!

இன்று தமிழ்ச் சாதியை - பாரத சமுதாயத்தை அரித்து அழிக்கும் தீய பழக்கங்களில் ஒன்று நாள் பார்த்தல் என்பது. ‘நாள் பார்த்தல்’ என்ற வழக்குத் தொன்மைக் காலத்தில் நாளை உரியவாறு பயன்படுத்துதல் என்ற பொருளிலேயே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இன்றோ, பணிகளைத் தள்ளிப் போடவும், அவ்வழி பயனை இழக்கவும்தான் நாள் பார்த்தல் என்னும் கொள்கை பயன்படுகிறது. மனிதனோடு தொடர்புடைய தத்துவங்களிலெல்லாம் மிகச் சிறந்த தத்துவம் காலம்தான். காலத் தத்துவம்தான் மனிதனை வளர்க்கிறது; பதப்படுத்துகிறது; துய்ப்பிற்குத் துணையாக நிற்கிறது. மனிதன் காலத் தத்துவத்திற்குக் கட்டுப்பட்டவன். அதாவது விரைந்து செல்லும் காலத்தின் இயல்பை அறிந்து, காலத்தை உரியவாறு பயன்படுத்திக் கொள்ளத் தவறி விடுவானானால் காலம் அவனை அழிக்கும். இம்மையும் மறுமையும் நரகமே கிடைக்கும்.

நாள் என்பதே காலத் தத்துவத்தை மனிதனுக்கு உணர்த்தும் ஒரு சொல். நாள் என்பது மனிதனின் வாழ்நாளின் ஒரு பகுதி. ஒரு மனிதனின் வாழ்நாள் சட்டென முழுமையாக அழிந்து விடுவதில்லை. இரும்பைத் துரு அரித்து அழிப்பதைப் போல், மரத்தைக் கரையான் அணைந்து அரித்து அழிப்பதைப் போல், காலமும் நாள் என்ற பெயரில் வளர்வது போல, நயந்து காட்டி, அரித்து அழிக்கிறது.

கோள் என்பது, பூத காரியங்களுள் ஒன்று. கோள்கள் மாறுபடின் தட்ப வெப்பம் மாறலாம். தட்பவெட்பம் மாறுபடின் மனிதனின் வாழ்வில் மாறுபாடுகள் தோன்றலாம். ஆனாலும் அவை மனிதனை அழித்து விடா. மனிதன் காலத்தத்துவத்தில் காலூன்றி நின்று கடமைகளைச் செய்து, காலம் அவனிடத்தில் கிழட்டுத்தனத்தைச் சேர்க்காமல் காலத்தை வெற்றி கொள்ள வேண்டும். இதுவே வாழ்க்கை முறை.

ஆனால் எதையும் எளிதில் வழிபடும் மனப்போக்குடைய நம்முடைய சமுதாயத்தினர் நாளையும் கோளையுங் கூட வழிபாட்டுப் பொருளாக்கி விட்டனர். அதுவும் அன்பில் மலர்ந்த வழிபாடா? இல்லை! அச்சத்தில் தோன்றிய வழிபாடு! வழிபாட்டிற்கு அடிப்படை, அச்சமாக இருப்பது முறையன்று. இன்று பலர், கடவுளைக் கூட வழிபடுவதில்லை. ஒன்பது கோள்களையே (நவக்கிரகங்களையே) வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். என்ன பேதைமை! எப்படியிருந்தாலும் சைத்தான் சைத்தான் தானே! சைத்தான் என்னதான் நன்மை செய்தாலும் அது மாறாகத் துன்பத்தைத்தான் தரும். வழிபடுதற்குரியது கடவுள் ஒன்றேயாம்.

திருஞானசம்பந்தர், சமணரோடு பொருத மதுரைக்குப் பயணமாகிறார். பாலறாவாயர்மீது பரிவு கொண்டோர் “நாளும் கோளும் நன்றாக இல்லை” என்று சொல்கின்றனர். காழிப் பிள்ளையாரோ நாளும் கோளும் நமக்கு என்றும் நன்றே என்று ஐயத்திற்கிடமின்றிக் கோள்வழிப் பட்ட அச்சத்தை மறுக்கின்றார்.

“எனது தந்தை ஈசன், அருளே உடனாகவுடைய அம்மையைப் பங்கில் கொண்டவன். அந்த அருள் முன்னே இந்தக் கோள்கள் என்ன செய்ய முடியும்? எந்தை ஈசனோ நஞ்சையும் அமுதாக்கியவன். காக்கும் கருணையைக் காட்டும் கறைக் கண்ட முடையவன். அவன், இணையற்ற இன்பப் பேரொலியாகிய வீணையொலியுடன் என் நெஞ்சத்தில் எழுந்தருளியுள்ளான். திங்களின் குறை நீக்கி நிறை வழங்கியவன். வையத்து இடர் நீக்கக் கங்கையைச் சடையில் தாங்கியருளினவன். அவன், என்னுள்ளத்தே புகுந்திருக்கின்றான். இனி, நான் மனிதனல்லன். எந்தை ஈசனின் அடியார்களில் ஒருவன். அவனுடைய தண்ணருளை, நாடி நரம்பில் எல்லாம் தேக்கி நான் வாழ்கிறேன். அதனால் நாளும் கோளும் நம்மைத் தீண்டா. இயல்பில் துன்பந் தரும் அவை, எமைத் தீண்டித் துன்பந் தராததோடன்றி நல்லவையும் செய்யும். எந்தை ஈசனின் கொற்றாள், நந்தமக்கும் கொற்றாளல்லரோ? எனவே நாளும் கோளும் சிவனடியார்க்கு நல்லவையே! என்றும் நல்லவையே; எப்பொழுதும் நல்லவையே! அவை அஞ்சுதற்குரியனவும் அல்ல”. இங்ஙனம் நாளையும் கோளையும் வழிபடுவதை ஏழாம் நூற்றாண்டிலேயே மறுத்துப் பேசிய பெருமை திருமுறைத் தமிழுக்குண்டு.

ஐயன்மீர்! ஆளுடைய பிள்ளையின் வழிபாட்டைப் போற்றுமின்! நாளை - கோளைக்கண்டு அஞ்சன்மின்! இறைவன் உம் நெஞ்சத்தில் வந்து அமரத்தக்கவாறு தூய தவம் பேணுமின்! துன்பம் நலியும். இன்பம் பெருகும். இது திருஞானசம்பந்தரின் அறவுரையன்று; ஆணை!

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல ணிந்தென்
உளமே புகுந்த வதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.