குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/பொய்யிலா அடிமை


20
பொய்யிலா அடிமை

அடிமை என்ற சொல்லின்மீது அண்மைக் காலமாக அரசியல் உலகத்திற்கு வெறுப்பு அதிகம். ஆம்! அடிமை வாழ்க்கையை அகற்றவே உலகம் முழுதும் எல்லா நாடுகளிலும் போராடினார்கள். மக்களின் அடிமைத் தளையை அறுத்தெறிந்த ஃபிரெஞ்சுப் புரட்சியும், அமெரிக்கப் புரட்சியும், சோவியத் புரட்சியும், இந்திய விடுதலைப் புரட்சியும் மனித உலக வரலாற்றின் மைல் கற்கள்; திருப்பு மையங்கள். நீங்கா நினைவுகள்! இங்ஙனம் ஒருபுறம் அடிமைத் தளையை அறுத்தெரியும் முயற்சி ஆவேசத்தோடு வெற்றி பெற்று வருகிறது! அதே போழ்து அருளாளர்கள் மையத்தில் அடிமை ஆர்வம்! ஏன் இந்த முரண்பாடு? விடுதலைக் கவிஞர் பாரதியும் கூட,

பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்-பரி
பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்

என்றார். ஏன்? உலகியலில் ஒரு மனிதன் பிறிதொரு மனிதனுக்கு அடிமையாவது, வயிற்றுப் பிழைப்புக்காக! ‘வயிறு பிழைத்தல்’ என்பதே எண்ணியும் பார்க்க முடியாத கேவல வாழ்க்கை! தன்னறிவில், தன் திறனில், தன்னுழைப்பில் வாழ்ந்தும் - வாழ்வித்தும் வாழ்தலே வாழ் வாங்கு வாழும் வாழ்க்கை! உலகியலில் மனிதன் அடிமைப் படுத்தப்படுகிறான். உலகியல் அடிமையில் அன்பின் கிழமை இல்லை; அறிவின் ஆக்கமில்லை; இன்பம் ஆமாறில்லை. இஃது அறியாமை வாழ்வு; அச்சத்தின் வழிப்பட்டது; துன்பமே சூழ்வது!

அருளியல் அடிமை பிழைப்புக்காக அல்ல; வாழ்தலுக்காக! அருளியல் அடிமையில் அடிமை கொள்வானும் அடிமையாக இருக்கிறான். அடிமைப்படுவானும் அடிமையாக இருக்கிறான். அடிமை ஏற்கும் ஆண்டவன் ‘அடியார்க் கெளியன் சிற்றம்பலவன்’ என்று எழுதிய கைச்சாத்து, வரலாற்றுச் சிறப்புடையது. அருளியல் அடிமையில் அறிவு சிறக்கிறது; ஞானம் பெருகி வளர்கிறது; அன்பு நனிசிறந்து அருளாக மலர்கிறது. அம்மம்ம! அடிமைப் படுதல் தவறன்று. ஏன்? எதனால்? என்ற கேள்விக்கு விடை வரும்பொழுதே அடிமை கண்டிக்கப் பெறுகிறது. வெறும் ஆணுக்கு ஒரு பெண் அடிமையானால் இரங்கத் தக்கது. ஆனால், காதல் வழியில் அதே பெண் காதலனுக்கு அடிமையாதலும், அக்காதலன் காதலிக்கு அடிமையாதலும் வாழத் தெரிந்தவரின் சிறந்த பண்பு. அந்த வாழ்க்கையில் யார் ஆளுநர்? யார் அடிமை? என்ற கேள்விக்கே இடமில்லை. அந்தக் கேள்வி பிறக்குமானால் பிறந்த நிலையிலேயே அந்த மனையறம் இறக்கும். அங்கு உடல் பேசலாம். ஆனால் உயிர் பேசாது; உணர்வு பேசாது. உயிர்ப்பும் உணர்வும் இல்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? அது போலவே வளரக் காமுறும் ஓர் உயிர் இறைவனைக் காதலித்து ஆர்வமுடைய தாகி அடிமை பூணுகிறது. இந்த அடிமை வாழ்க்கையில் இறைவனுக்கு இருக்கும் இன்பத்தைவிட உயிருக்கே இன்பம் அதிகம். உலகியல் அடிமை வாழ்க்கையில் உயிர் தேய்கிறது; அருளியல் அடிமை வாழ்க்கையில் உயிர் வளர்கிறது.

இறைவனுக்கு அடிமை! ஆம்! இறைவன் அருளே கருதி அடிமை பூணுதல்; வாழ்த்துவதன்றி வகையறியா வகையில் அடிமை பூணுதல்; திருவடியே பற்றுக்கோடாக அடிமை பூணுதல். அதுவே உண்மையான அடிமை! அத்தகைய அடிமைத் திறம் நாயன்மார்களிடத்தில் இருந்தது. இறைவனும் உவந்து கேட்டு அருளிச் செய்தான். அது மெய்யடிமை. இன்றோ, அருளியற் சூழலில் அடிமை என்ற சொல் வழக்கு அடிபடுகிறது. ஆனால் பொருள் வழக்கு இல்லை. இறைவன் பெயரால் ஓர் ஆதிக்கம் நடைபெறுகிறது; ஓர் ஆளும் வர்க்கம் உருவாக்கப்பெற்றுள்ளது. பல கோடி மனிதர்கள் அடிமைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். ஆம்! இன்று இறைவன் பெயரை அடியார் உச்சரிக்கும் பொழுதெல்லாம் கோயிற் காணிக்கைகள் நினைவிற்கு வருகின்றன; காணி, பூமிகள் நினைவிற்கு வருகின்றன. சாதி, சமூக நினைவுகள் வருகின்றன; இன, மொழி நினைவுகள் வருகின்றன. இவையெல்லாம் அருளியல் அடிமைப் பண்புகளா? இல்லை, இல்லை! இவையெல்லாம் இறைவன் பெயரில் நடக்கும் அடக்கு முறை ஆதிக்கம்! இந்த அடிமை, பொய்யடிமைத் தனமாகும். உடல், சிவத்தின் அடிமையாகக் கோலம் காட்டலாம். உதடுகள் சிவத்தின் அடிமையென்று சொல்லலாம். ஆனால் அந்தோ பரிதாபம்! உள்ளம் காணிக்கு, பூமிக்கு, காணிக்கைக்கு, சாதிச் சழக்குகளுக்கு, வம்புக்கு, பிழைப்புக்கு அடிமைப்பட்டிருப்பதை யார்தான் மறுக்க இயலும்? அதனாலே - பொய்யடிமைத்தனம் மிகுந்திருப்பதால் இறைவனும் பேச மறுக்கிறான். நாட்டில் நடமாட முன் வருகின்றானில்லை. அவன் பொய்யிலா அடிமை பூண்டவர்களுக்கே அருள் செய்பவன். பொய்யில், உண்மை கலக்கலாம். அதனால் பொய் உண்மையாக மாறி வளரும். ஆனால், உண்மையில் பொய் கலப்பது பாவத்திற் பாவம்! அருளியலில் பொய்யடிமைத்தனம் வேண்டாம். அருளியலில் பொய்யடிமையைத் தவிர்ப்பது உடனடியான தேவை. எங்ஙனம் தவிர்க்க முடியும்? பொய்யடிமைத்தனமே அரியணையும் ஏறி விட்டது; உபதேசங்களை உதிர்க்கின்றது. நாமெல்லாம் எளியவர்கள். என் செய்ய? புரட்சி தேவை. அருளியலில் பொய்யடிமை பூண்டொழுகுவோர் அறவே அகற்றப் பெறவேண்டும். இதுவே திருஞானசம்பந்தரின் திருவுள்ளம்.

கையளிவையர் மெல்விரல்லவை காட்டி யம்மலர்க்
காந்தளங்குறி பையராவிரிவும் புற வார்பனங் காட்டூர்
மெய்யரிவையொர் பாகமாகவு மேவினாய்கழ லேத்தி
நாடொறும் பொய்யிலாவடிமை புரிந்தார்க் கருளாயே.

- திருஞானசம்பந்தர்