குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/அப்பரடிகளின் போராட்டங்கள்

28

அப்பரடிகளின் போராட்டங்கள்

தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டில் நடமாடிய அருள் நலஞ்சார்ந்த புரட்சிக்கனல் அப்பரடிகள். அப்பரடிகள் ஒரு போராளியார்; தமிழாளியர். சமுதாய நலம் நாடிய அருள்நெறித் தலைவர். மூடத்தனங்களைச் சாடிய சமயத் தலைவர். முடியாட்சியை எதிர்த்துப் போராடி, குடிமக்கள் உரிமையைக் காத்த காவலர். பூரண சுதந்திரம் நாடிய நற்றவத்தர். தமிழகம் முழுதும் நடந்து, கிளர்ச்சி செய்தவர்; உழைப்பும் தொண்டுமே உயிரெனக்கொண்டு உலாவிய உத்தமர். நடையறாப் பெருந் துறவியாக நடமாடிப் பணி செய்தவர் நாவுக்கரசர்.

ஒரு மனிதன் வாழ்க்கையில் வீர மிக்குடையவனாக வாழவேண்டுமானால், முதலில், அவன் தனக்குத்தானே போராடிப் புலன்கள்-பொறிகள் மீது, ஏன்? தனது ஆன்மாவின் மூலமே, ஆணை செலுத்துதற்குரிய தகுதி பெற வேண்டும். நாளும் ஆன்மாவை அரித்து அழிக்கும் ஆணவத்திலிருந்து விடுபடவேண்டும். ஆணவம்! ஆம்! அறியாமையின் திரண்ட வடிவமே ஆணவம்! ஆணவத்திலிருந்து விடுதலை பெற எல்லாம்வல்ல இறைவனுக்கு அடிமையாதல் வேண்டும். ஆண்டவனுக்குத் தொழும்பாய் அடிமை செய்தல் வேண்டும். யார் மாட்டும் எளியராய்த் தாழ்வெனும் தன்மையுடன் பழகவேண்டும்.

அப்பரடிகள் அச்சமின்றி வாழ்ந்தவர். “அஞ்ச வருவது யாதொன்றும் இல்லை” என்றார். ஏன்? அச்சம் ஆசைகளின் சேய், அதிகாரத்தின் சேய். அப்பரடிகளுக்கு ஆசை ஏது? அவர் இனியன என்று கண்டவை இவை:

கனியினும் கட்டி பட்ட கரும்பினும்
பனிம லர்க்குழற் பாவைநல் லாரினும்
தனிமுடி கவித் தாளும் அரசினும்.....
இனியன் தன்னடைந் தார்க்கிடை மருதனே!

என்பது அப்பரடிகள் திருவாக்கு. இத்தகு பழுதிலாத் துறவு சார்ந்த உள்ளத்தினருக்கு ஏது அச்சம்? அச்சம் இல்லாமையால் அரசின் ஆணையை ஏற்க மறுக்கிறார். தாம் யாருடைய ஆட்சிக்கும் அடங்கி வாழவேண்டிய அவசியமில்லை என்கிறார்;

நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை யில்லோம் .
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்ப மில்லை
தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச் சேவடியினையே குறுகி னோமே!

என்று வீரமும் விவேகமும் அருள்ஞானமும் கலந்த நிலையில் பல்லவப் பேரரசின் துதுவர்களுக்குப் பதில் கூறுகின்றார் அப்பரடிகள். இந்த வீரம், துணிவு எங்கிருந்து கிடைத்தது, அல்லது பெற்றார் அப்பரடிகள்? இறைவனுக்குத் தொழும்பு பூண்ட பெற்றிமையால் வந்தது. இந்தத் துணிவு என்பதை அப்பரடிகள் அருளிய இத் திருப்பாடல் நமக்கு விளக்கிக் காட்டுகிறது.

தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான
சங்கரன் நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடியினையே குறுகி னோமே.

என்பதை உணர்ந்தறிக.

ஆதலால், அப்பரடிகள் தம்மைத் தளைகளிலிருந்து விடுதலை செய்துகொண்டு- பரிபூரண சுதந்திர மனிதராய் விளங்கினார். அப்பரடிகள் சந்தித்த முதற் போராட்டம் பல்லவ அரசின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டம்! இந்தப் போராட்டத்தில் அறவழியில் துன்பங்களை ஏற்று, அனுபவித்துப் போராடிய வகையில் தமிழக வரலாற்றில், அப்பரடிகளே முன்னோடியாவார். பல்லவப் பேரரசை, அப்பரடிகள் எதிர்த்துப் போராடிய போராட்டத்தில், பெற்ற தண்டனைகள் பலப்பல. பாற் சோற்றில் நஞ்சு கலந்து கொடுத்தது, யானையின் காலில் இடறச் செய்தது, நீற்றறையில் இட்டது, கல்லில் கட்டிக் கடலில் எறிந்தது ஆகிய கொடுமையான தண்டனைகள் வழங்கப்பெற்றன. இந்தக் கொடிய தண்டனைகளை தைரியமாக ஏற்றுப் போராடி, இறைவன் திருநாமத்தால் வெற்றிபெற்றவர் அப்பரடிகள். அதிகாரமும் ஆயுதங்களும் இன்றி ஆதிக்கக் குணமுள்ள ஓர் அரசை எதிர்த்துப் போராடிய அப்பரடிகள் ஒரு போராளியர்தானே!

அப்பரடிகளிடம், துணிவும், வீரமும் இருந்தது போலவே அடக்கமும் எளிமையும் இருந்தன. அப்பரடிகளை ஞானாசிரியராக ஏற்றுக்கொண்டு, அப்பரடிகளைக் காணாமலே, உணர்வினால் போற்றித் தொழுது வாழ்ந்து வந்த அப்பூதியடிகளிடம், அப்பரடிகள், தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட முறை நம்மனோர்க்கு எடுத்துக் காட்டு. “தெருளும் உணர்விலாத சிறுமையேன் யான்” என்று தம்மை அப்பூதியடிகளிடம் அப்பரடிகள் அறிமுகப் படுத்திக் கொண்ட பாங்கு, அப்பரடிகளின் எளிமைக்கு ஒர் எடுத்துக் காட்டு என்று துணிந்து கூறலாம்.

அப்பரடிகள் நாளும் தமது பொறிகளுடன் புலன்களுடன் போராடி வெற்றி பெற்றுச் சீரான நிலையில் வைத்துக்கொண்ட ஞானத் தலைவராக விளங்கினார் என்பதை உன்னுக.

அப்பரடிகள் நாளும் உய்யும் நெறி நாடுகின்றார். அவர்தம் அகத்தினில் ஞானவிளக்கை ஏற்றிக்கொண்டு வேண்டிய அளவு தூண்டிவிட்டு மகிழ்கின்றார். இந்த மகிழ்ச்சியை அப்பரடிகள் அனுபவிக்க முடியாதபடி ஐம்பொறிகள் அகநிலையில் போராடுகின்றன என்று அருளியுள்ளார்! அப்பரடிகள் தனக்குத்தானே போராடித் தன்னை வென்ற தலைமகனாக விளங்கிய பெற்றிமை உலக வரலாற்றிற்கு ஒர் அற்புதமான செய்தி!

அப்பரடிகளை உலகியல் மட்டுமல்ல, வானுலகமே வந்து கவர்ச்சியூட்டினாலும் அப்பரடிகள் சித்தம் திரிந்தாரில்லை. கலங்கினாரில்லை என்பதைச் சேக்கிழார்,

இத்தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல்புரிய
அத்தனார் திருவடிக்கீழ் நினைவகலா அன்புருகும்
மெய்த்தன்மை உணர்வுடைய விழுத்தல்த்து மேலோர்தம்
சித்தநிலை திரியாது செய்பணியின் தலைநின்றார்.

என்று அருளியுள்ள பாடல் உணர்த்துகிறது. அப்பரடிகள் தன்னைத்தானே வென்றெடுத்து விளங்கிய அருள்ஞானச் செல்வர் என்பதை உணர்த்துகிறது.

இங்ஙனம் அப்பரடிகள்,

ஈர நெஞ்சினர் யாதும் குறைவிலர்
வீரம் என்னால் விளம்பும் தகையதோ
என்று சேக்கிழார் போற்றியபடி விளங்கினார். அப்பரடிகள் தற்சார்பான ஆசைகளினின்று நீங்கியவர். ஆயினும் சமுதாய நல ஆர்வலர், சமுதாயத்தில் நிலவிய பல்வேறு தீமைகளைக் கடிந்து ஒதுக்குகின்றார். அந்தத் தீமைகளை, பொய்ம்மைகளைப் பாதுகாக்கப் போராடிய பழைய பஞ்சாங்கங்களை எதிர்த்துப் போராடுகின்றார். இந்தப் போராட்டத்தில் அவர் யாருடைய தயவையும் உதவியையும் எதிர்பார்க்கவில்லை. தந்தாலும் ஏற்கத் தயாராக இல்லை. தீண்டாமை, சாதி வேற்றுமை முதலிய தீமைகளுடன், அத் தீமைகளை அனுட்டிப்பார்களிடம் அப்பரடிகள் எந்தவிதச் சமாதானமும் செய்து கொள்ள விரும்பவில்லை. மிகமிகக் கண்டிப்பாகவே தீண்டாமையையும், சாதி வேற்றுமையையும் எதிர்த்தார். இன்றுகூட நாம் அப்பரடிகளைப் போல் தீண்டாமை, சாதி வேற்றுமைகளை எதிர்க்க விரும்பவில்லை; துணிவில்லை. அரசியல் இயக்கங்கள் சொல்வது தீண்டாமை ஒழிப்பு! சாதி வேற்றுமைகளற்ற சமுதாயம்! ஆனால், நடைமுறையில் அவர்கள் தீண்டாமை, சாதிவேற்றுமைகளால் பிரிவுபட்டுக் கிடக்கும் சமுதாய அமைப்பையே விரும்புகின்றனர் என்பது அவர்களுடைய செயல்முறைகளினின்றும் நாடறியும் உண்மை. அப்பரடிகளை அவர் காலத்துச் சமுதாயப் பழைமை வாதிகள் சங்கநிதி, பதுமநிதி முதலியவற்றைக் கொடுத்துத் தீண்டாமையை எதிர்த்துப் பேசவேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றனர். அப்பரடிகள் அவற்றைத் துச்சமெனக் கருதி ஆர்ப்பரித்துச் சமூகத் தீமையை எதிர்த்தார். மீண்டும் பழைமைவாதிகள் நிலம், ஆட்சி முதலியவற்றை அப்பரடிகளுக்கு வழங்குவது என்று பேரம் பேசுகின்றனர். அப்பரடிகளோ தீண்டாமை விலக்குவதில், சாதி வேற்றுமையை அகற்றுவதில் தயவு தாட்சண்யம் இல்லாமல் போராடுகின்றனர். ஏன்? தீண்டாமையை, சாதிகளை ஏற்க மறுக்கிறார்.

சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டென் செய்வீர்
பாத்தி ரம்சிவ மென்று பணிதிரேல்
மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே

என்பது அப்பரடிகள் வாக்கு தீண்டாமை விலக்கு, சாதி வேற்றுமைகளை அகற்றுவதில் தமிழக வரலாற்றில் முதற் போராளி அப்பரடிகளே என்று துணியலாம். ஏன்? இந்திய வரலாற்றிலேயே கூட அப்பரடிகள்தான் முதற் போராளி!

அடுத்து, மனித குலத்தை வருத்தும் தீமை, வறுமை - ஏழ்மை! நமது சமுதாயம் ஒரு விதமான அமைப்பு. வளமும், வறுமையும் அருகருகில் நிலவும்-வள்ளல்களும், வறியவர்களும் வாழும் நாடு. இந்த வறுமை தொடர்ந்து இருந்து வருவது. பொருளியல் சித்தாந்தத்தில் தனி உடைமைச் சமுதாயம்-அமைப்புத் தோன்றிய காலத்திலிருந்தே வறுமை கால் கொண்டு வளர்ந்து வருகிறது. வல்லாளர்கள் உடைமை சேர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். வல்லமை இல்லாதவர்கள், இருப்பதையும் இழக்கின்றனர். தனியுடைமைச் சமுதாயம் இருக்கும் வரை வறுமை நிலவும். பொதுவுடைமைச் சமுதாயம் கண்டாலும் மனிதன், உடைமை ஆர்வமே காட்டாமல்-முழுமையான உழைப்பாளியாக வாழாமல் “பொதுவுடைமைதானே” என்று அலட்சியமாக இருக்கிறான். இன்று சோவியத் வரலாறு தரும் படிப்பினை என்ன? ஏன்? நமது நாட்டில் நடப்பது என்ன? நாட்டின் பெயரால் வாழ்கிறவர்கள் கூட நாட்டைத் திருடத்தான் நினைக்கிறார்கள்; திருடுகிறார்கள்; திருடிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய சமூகத்தில் தனி மனித உணர்வு பூதாகாரமாக வளர்ந்து வருகிறது. ஊர், நாடு என்ற சமூக உணர்வு இளைத்துப் போய் விட்டது. அதனால், அப்பரடிகள் தனியுடைமைச் சமுதாயம், பொதுவுடைமைச் சமுதாயம் என்ற இரண்டு அமைப்பையும் சாராமல், ஒரு புது நெறி காட்டுகின்றார். தர்மகர்த்தாப் பொருளாதார முறையை அறிமுகப்படுத்துகின்றார். தனியுடைமைச் சமுதாயந்தான்! ஆனால் உடைமைகள் இறைவன் தந்தவை; இறைவனுக்குச் சொந்தமானவை. அந்த உடைமையின் பாதுகாப்பாளனே மனிதன்! உடைமைகளின் பயன் தேவைப்படுவோருக்குச் சென்றடைய வேண்டும். இஃதொரு புதுமையான பொருளாதாரக் கொள்கை. இந்தக் கொள்கையை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அறிஞர்கள் ஏற்று வரவேற்றனர். அண்ணல் காந்தியடிகள் பொருளாதாரத்தில் தர்மகர்த்தா முறையை விரும்பினார். ஆனாலும் நடைமுறையில் தர்மகர்த்தா முறை வெற்றிபெறவில்லை. அப்பரடிகள் தர்மகர்த்தா முறையை,

இரப்பவர்க் கீய வைத்தார் ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர்க் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார் ஐயன்ஐ யாற னாரே

(4 ஆம் திருமுறை)

என்று கூறி விளக்குகின்றார்.

தர்மகர்த்தா முறை, ஏன் சமுதாயத்தில் வெற்றி பெற வில்லை. தர்மகர்த்தா முறை வெற்றிபெற முதல் தேவை மனித மதிப்பீட்டுச் சமுதாய அமைப்பு. அதாவது, மனிதனை மனிதனாக மதிப்பதற்கு வேறு தேவைகள்-சாதி, பொருள், பதவி முதலியன அவசியமில்லை. இன்று நம்மிடையே நிலவுவது பணமதிப்பீட்டுச் சமுதாயமே. ஆதலால் எப்படியும் பணத்தைச் சேர்! உடைமையைப் பெறு! என்ற நிலை உருவாயிற்று. இதன் காரணமாகப் பணம், உடைமை, சமுதாயத்தை மேலாண்மை செய்வதால் மனிதன் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டான். இந்த நிலைமாறவேண்டும். இந்த நிலை எளிதில் மாறுமா? மாறாது! இதற்கு முதலில் மக்கள்நலம் கருதும் அரசு (Welfare State) தேவை. மக்கள் நலனுக்குரிய அடிப்படைத் தேவைகளுக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய அரசு வேண்டும். மக்களின் அடிப்படைத் தேவையாகிய கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம் ஆகியன அனைவருக்கும் எளிதில் தரமான முறையில் கிடைக்க அரசு பொறுப்பேற்க வேண்டும். இன்று நமக்கு வாய்த்துள்ள அரசு, பெயரளவிலேயே 'மக்கள் நல அரசு’. நடைமுறையில் அப்படி இல்லை. ஆதலால், சுரண்டல் முறைப் பொருளாதாரம் ஒழிய எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதான இடம் நோக்கி இவ்வையகம் நகர, அப்பரடிகள் காட்டிய-அமைக்கப் போராடிய தர்மகர்த்தா முறையே நல்லது.

அப்பரடிகள் மெய்ப்பொருள் தேடிய தவநெறிச் செல்வர். செம்பொருள் உணர்ந்த செம்மல். அப்பரடிகள் சமயத்துறையில் அகம் நிறைந்த அன்பில் கனிந்து நிகழும் வழிபாட்டையே விரும்புகின்றார். மற்றபடி சடங்குகளை எதிர்த்துப் போராடுகின்றார். வழிபாட்டுக்கு “அன்பலால் பொருளும் இல்லை” என்பது அப்பரடிகள் கொள்கை - கோட்பாடு. அரனுக்கு அன்பில்லாது, உயிர்களிடம் அன்பில்லாது, ஆயிரம் ஆயிரம் தீர்த்தமாடுவதில் என்ன பயன்? என்பது அப்பரடிகளின் கேள்வி.

கோடி தீர்த்தம் கலந்து குளித்தவை
ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல்
ஒடும் நீரினை ஒட்டைக் குடத்தட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே!

என்றும்,

கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
பொங்கு தண்கும ரித்துறை யாடிலென்
ஒங்கு மாகடல் ஒதநீ ராடிலென்
எங்கும் ஈசன் எனாதவர்க் கில்லையே!

என்றும் அப்பரடிகள் அருளிச் செய்துள்ள பாடல்கள் பழைமைக்கு வைத்த தீ அல்லவா?

ஏன்? இன்னும் ஒருபடி மேலே சென்று நூல், புல், கூர்ச்சம் முதலியன வேண்டுமா, என்றும் அறைகூவல் விடுகின்றார். பழைய பொருளற்ற சடங்குகளை எதிர்த்துப் போராடிய சமயத் தலைவர் அப்பரடிகள்.

அப்பரடிகள் தமிழுணர்வுடையார்; தமிழாசிரியர். ஆனாலும் மனிதகுல ஒருமைநலம் கருதி எல்லா மொழிகளையும் இனங்களையும் தமிழ், தமிழர் என்னும் தனித் தன்மைக்குப் பழுதின்றி ஏற்றவர்; அங்கீகரித்தவர். மொழி ஆதிக்கமும் இன மேலாதிக்கமும் ஒருமை நலனைக் கெடுக்கும் என்ற உண்மையை அப்பரடிகள் அறிந்தவர்; உணர்ந்தவர்.

வடமொழியும் தென்தமிழும் ஆனான் கண்டாய்

என்றும்

ஆரியன் கண்டாய்! தமிழன் கண்டாய்!

என்றும் அருளி வேறு வேறாந் தன்மையையும் கடவுள் முன்னிலையில் அனைவரும் ஒன்றாந் தன்மையையும் விளக்கும் பான்மை அற்புதமானது. இன மேலாண்மை, இன ஒதுக்கல், இன இழிவு ஆகிய பொருந்தாக் கொள்கைகளை அப்பரடிகள் ஏற்காது மறுத்துப் போராடிய பெருந்தகை என்பதறிக.

அப்பரடிகள் தனது ஆத்ம நாயகனாக, உயிர்ப்பாக விளங்கிய இறைவனிடமும் போராடியுள்ளார். இறைவனிடம் இவர் நிகழ்த்திய போராட்டம் வாழ்வைப் பற்றியதல்ல. தூய்மையான அர்ப்பணிப்பு, அடையாளம் இவற்றுக்காகவே போராடினார். தனது ஆன்மா, தூய்மையாயிற்று, அவ்வழி உடலும் துய்மையாயிற்று என்ற அடையாளம் காட்ட, அடையாளம் வைக்க வேண்டுகின்றார். இந்த அடையாளத்தைப் பெறவே சாகும்வரை போராடத் துணிந் துள்ளார் என்பதனை,

புன்னெறியாம் அமண் சமயத்
தொடக்குண்டு போந்த வுடல்
தன்னுடனே உயிர் வாழத்
தரியேன் நான் தரிப்பதனுக்கு
என்னுடைய நாயக! நின்
இலச்சினையிட் டருள்! என்று
பன்னு செழுந் தமிழ்மாலை
முன்னின்று பாடுவார்

(பெரிய புராணம் திருநாவுக்கரசு சுவாமிகள் பக். 211)

என்ற பாடல் விளக்குகிறது. ஆதலால், சாகும்வரை போராட்டம் என்பது அப்பரடிகள் கண்ட முறை.

அப்பரடிகளுக்குத் திருக்கயிலைத் திருக்கோலம் காண விருப்பம். தமிழகத்திற்கும் கயிலைக்கும் உள்ள நெடுந் தொலைவுபற்றி எண்ணினார் இல்லை; கவலைப்பட்டாரில்லை. கயிலைக்குப் பயணம் தொடங்கிவிட்டார். தொடர்ந்து நடக்கமுடியவில்லை. படுத்து ஊர்கிறார். உடம்பெல்லாம் தேய்கிறது. செங்குருதி சிந்துகிறது. ஆயினும் அப்பரடிகளிடத்தில் சோர்வில்லை. போர்க்குணம் ஒய வில்லை. அப்பரடிகள் கயிலையைக் காணும் போர் முனையில் வெற்றி பெறுகிறார். ஆம்! அப்பரடிகளின் போராட்டத்தினை, நிறுத்துவான் வேண்டிக் கயிலையையே ஐயாற்றுக்கு மாற்றினான் எம்பெருமான்! கயிலையையே திருவையாற்றுக்கு மாற்றுகின்ற அளவுக்கு அமைந்த அப்பரடிகளின் போர்க்குணம் போற்றத்தக்கது.

இன்று எங்கும் அச்சம்! ஆசை! சோம்பல்! முழுச் சோம்பல்! வாழவில்லை; பிழைப்பு நடத்த ஆசை! இந்த உலகியல் வாழ்க்கையில் யாருக்கும் போர்க்குணம் இல்லை! ஆன்ம ஞான வாழ்க்கையிலும் போராட்டம் இல்லை! பழுதிலாத் துறவையும் எங்குத் தேடினும் காணோம்! எஞ்சியிருப்பது சோம்பல்! சுகவாழ்க்கையில் நாட்டம்! சமயத்துறையில் பொருளற்ற சடங்குகள்! சாதிகளின் கொட்டம்! இன்னோரன்ன தீமைகள் நாள்தோறும் வளர்கின்றன.

இன்றைய தமிழகத்திற்கு அப்பரடிகளே சிறந்த வழிகாட்டி! அப்பரடிகளின் அடிச்சுவட்டில் புதுமையும் பொதுமையும் காண, அன்பும் ஞானமும் காணப் போராடுவோமாக! தமிழகம், அருள்நலம் கொழிக்கும் திருநாடு. விண்ணளந்து காட்டி வினைமறைக்கும் திருக்கோயில்கள் பல விளங்கும் நன்னாடு. கல்லெல்லாம் கலையாக்கிப் பேசும் பொற்சித்திரம் படைத்துப், பேணும் தெய்வமாக்கிப் பெரு நெறி கண்ட நாடு. தமிழ், இலக்கண வளம் பெற்றமொழி. ஆம் அதனினும் சிறப்பான இலக்கிய வளம் பெற்ற மொழி. 'ஆம்’ அதனினும் நெஞ்சை நெகிழச் செய்து நினைந்துருகச் செய்யும் பக்தி நெறியைப் பேணி வளர்ப்பதில் உலக மொழிகளில் தமிழே சிறந்தது.

தமிழக வரலாற்றில் போர்கள் உண்டு. காதல் உண்டு. ஆயினும் இவையிரண்டையும் விஞ்சி நிற்பது திருவருள் நெறியேயாகும். இத்தகு அருள் நலம் பெற்ற தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டில் ஒரு ஞாயிறு தோன்றிற்று. அது செங்கதிர் ஞாயிறல்ல; செந்நெறி ஞாயிறு: செங்கதிர் ஞாயிறு ஒரோ வழி சுடும். இஞ்ஞாயிறு மாறாச் செந்தண்மை ஞாயிறு! செங்கதிர் ஞாயிற்றுக்கு எழுதலும் படுதலும் உண்டு. இஞ்ஞாயிற்றுக்கு அவை யில்லை. தமிழகம் நெறி தவறி மயங்கிக் கிடந்த பொழுது, இந்த ஞாயிறு தோன்றிற்று. தமிழினத்திற்கு - தமிழுக்கு - தமிழ் நெறிக்குப் புத்துயிரூட்டிய அப்பரடிகளே ஏழாம் நூற்றாண்டில் எழுந்த ஞாயிறு. அப்பரடிகள் உலக மனித சமுதாய வரலாற்றிலேயே போற்றத் தக்க விழுமிய பெருமையுடையவர். உலகம் முழுவதும் அகத்தாலும், புறத்தாலும் ஒடுங்கி முடியாட்சியின் கீழ் ஆட்பட்டிருந்த காலம். அப்பரடிகளோ கொத்தடிமைத் தனத்திற்கு மூல காரணமாகிய முடியாட்சியின் சின்னமாகிய மன்னனின் அதிகாரத்தை முதன் முதலில் எதிர்த்தவர். 'நாம் யார்க்கும் குடியல்லோம்' என்று அரசை நோக்கி முதன் முதலில் பேசிய பெருமை - முடியாட்சியை மறுத்த பெருமை அப்பரடிகளுக்கே உண்டு.

அது போலவே, 'மக்கள் குலம் ஒன்று, அவர்களிடையே எந்த வகையான வேறுபாடும் இருத்தல் கூடாது' என்ற இனிய கருத்தைத் தொன்மைக் காலத்திலேயே எடுத்தோதியவர் அப்பரடிகள். “கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்” என்று கேட்கிறார். மனித குல ஒருமைப்பாடு அப்பரடிகளின் இலட்சிய கீதமாக இருந்தது. “வடமொழி ஆனான் கண்டாய்; தென் தமிழ் ஆனான் கண்டாய்!” என்று பாடி ஒருமையுணர்வை யூட்டுகிறார். “ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்” என்று இந்திய ஒருமைப்பாட்டுக்கு முதன் முதலில் கால்கோள் செய்த பெருமை அப்பரடிகளுக்கேயுண்டு.

அடுத்து முடியாட்சியை எதிர்த்து முழங்கி, மரணத்தையும் வென்று வாழத் தூண்டுகிறார். மனித உலகத்துக்குச் சாதல் ஒரு பெரிய கொடுமை. சாகாமல் இருப்பதற்குரிய வழி வகை காண்பதில் அறிவியல் உலகமும் அருளியல் உலகமும் தொடர்ந்து முயன்று வருகின்றன. அந்த முயற்சிகளின் பயனாகச் சாதற்குரிய நாள் நீண்டு, வாழ்தலுக்குரிய நாள் வளர்ந்து வருகிறது. சாதல் ஒரு கொடுமை. ஆயினும்