குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/அப்பரடிகள் காட்டிய நெறி
அதைவிடப் பெரிய கொடுமை சாதலுக்கு அஞ்சுவது. என்றோ சாதல் நாள் என்பது முடிவு செய்யப் பெற்ற ஒன்று. அதை எதிர்நோக்கி எழுச்சியுடன் கடமைகளைச் செய்து முடித்துச் சாதல் கரத்தில் தன்னை ஒப்படைக்கத் தயாராக இருப்பவனே சிறந்த மனிதன்.
ஆனால் இன்றோ, சாதற் கொடுமையினும் சாக அஞ்சும் அச்சம், மனித உலகத்தை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. சிலர் நாள்தோறும் நூறு தடவை செத்துப் பிறக்கிறார்கள். அதனால், அறிவு மழுங்குகிறது; ஆற்றல் அழிகிறது; திறன் தேய்கிறது; துன்பமே சூழ்கிறது. வாழ்நாள் முழுதும் அழுதே முடிக்கின்றனர். இதனை உணர்ந்த அப்பரடிகள் 'சாதலுக் கஞ்சாது சதுரப்பட வாழ்' என்று எடுத்து மொழிகிறார். “நமனை அஞ்சோம்” என்று எடுத்து மொழிகிறார். நரகம் இங்கும் இருக்கிறது. அங்கும் இருக்கிறது. துன்பத்தின் எல்லைக்கு நரகம் எனப் பெயர். இப்பொழுது அஃது எங்கு இருக்கிறது என்று கேட்பவர் யார்? நரகத்திலிருந்து கரையேறவும் முயற்சிக்காமலும் அதற்குள்ளேயே நொந்து இடர்ப்பட்டு மாளுதல் கூடாதென்பதனை 'நரகத்திலிடர்ப்படோம்' என்று கூறினார்.
மனிதன், வளரும் தன்னை மறந்தும் பொய்யென்று கருதக் கூடாது. அவன் உறு பொருள். அவனுக்கு அறிவுண்டு; திறனுண்டு; தொழிலுண்டு; துணைநிற்கச் சுந்தரத் தோழ னாகச் சொக்கேசன் உண்டு; இன்பமுண்டு; அவனுக்கொரு வரலாறு உண்டு என்று கருதாமல், தன்னையே பொய் யென்று கருதி, அழியக்கூடாது என்ற குறிப்பில் நடலை யல்லோம் என்று பாடுகின்றார். மேலும், திறனற்ற - பயனற்ற வண்ணம், நடைப் பிணமாக வாழ்தலையும் “நடலை” யென்றே குறிப்பிற் காணலாம்.
மனித வாழ்க்கையில் ஆர்வமும், ஆள்வினைத் திறனும், உணர்வும் சிறந்து விளங்க மனக்களிப்பு இன்றியமையாதது. கவலைப்படுதலும் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு அழுதுகொண்டிருப்பதுமல்ல. இவை மேலும் துன்பத்தை வளர்க்கவே செய்யும். அதற்குப் பதிலாக நிகழ்ந்த சம்பவங்களை மறந்து மனத்தைச் சோர்வுபடாமல் தடுத்துக் களிப் பூட்டிக்கொள்ள வேண்டும். அப்பரடிகள் இந்த வாழ்க்கையினை 'ஏமாப்போம்’ என்று எடுத்துக் கூறி விளக்குகிறார்.
அடுத்து, மனித உலகத்தை வருந்துவது பிணி, உடற் பிணி இயற்கையன்று; செயற்கையேயாம். உடல் திறன் தெரிந்து நெறியோடும் முறையோடும் வாழ்ந்தால் பிணி வாராது. இன்று நம்மிற் பலருக்குக் குறை, அவர்தம் உடல் திறன் தெரியாதது. தெரிந்து தெளிந்து பேணும் ஆர்வமும் இல்லை. என்னவோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பிணியில்லாத வாழ்க்கையே பெருவாழ்க்கையென்பதால் 'பிணி யறியோம்' என்றார். அப்பரடிகளுக்குப் பிறந்த நாள் தொட்டுப் பிணி கிடையாது. அவர் உடலறிந்த ஒரே ஒரு பிணி சூலைப் பிணியேயாம். அந்தச் சூலையும் இயற்கைப் பிணியன்று; திருவருள் செய்த பிணி. அதனால், “அருட் பெரும் சூலை" யென்று அப்பரடிகளே குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கையில் இன்றும், என்றும் எப்பொழுதும் எவ்விடத்தும் இன்பமே யிருத்தல் வேண்டும். எந்நாளும் துன்பங்கள் கூடாது. அத்தகைய ஒர் உயரிய வாழ்க்கையை அப்பரடிகள் வையகத்திற்குக் காட்டுகின்றார். அந்த வாழ்க்கை ஏன் கிடைக்கவில்லை? அந்த வாழ்க்கை எப்பொழுது கிடைக்கும்? துன்பக் கலப்பில்லாத இன்பமே எழில் உருவமாகக் கொண்ட சங்கரனின் திருத்தாளை நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து, பொறி புலன்களெல்லாம் அத்தன்மையவாகி, அவன் தன் திருவடியை நாம் அண்ணித்து அடையும்பொழுது அவலங்கள் வாரா. இன்பமே! இன்பமே! இன்பமே! என்பது அப்பரடிகள் காட்டிய நெறி.