குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/சமய இலக்கியங்களில் அறநெறிர்

33

சமய இலக்கியங்களில் அறநெறி


மனிதனின் ஏற்றத்தாழ்வு, பெருமை, சிறுமை ஆகியன மனத்தையே சார்ந்திருக்கின்றன. மனம், விந்தையானது. மனம் நன்மையும் செய்யும், தீமையும் செய்யும். மனம் நல்வழியில் பழக்கப்படுத்தப்பட்டால் அஃது இனிய துணையாக அமையும். மனிதனின் பொறிகள், புலன்கள் அனைத்தும் மனத்தின் வழி இயங்குபவை. மனம், புத்தியால் இயக்கப்படும். புத்தி, சிந்தையால் சிறப்படையும். சிந்தனை, புத்தி, மனம் ஆகியவை ஒருங்கிணைந்து நன்னெறியிற் செயற்படுமானால் மனத்துய்மை வந்தமையும். தூய்மையான மனத்தால் இயக்கப்பெறும் பொறிகளும் புலன்களும் அறநெறியில் நிற்கும்; ஒழுகும்; மகிழ்வைத் தரும்; வாழ்வை இன்பமயமாக்கும்.

மனம் இயல்பில் மயங்கும் தன்மையது; எளிதில் கவர்ச்சி வசப்படும்; தெளிவில்லாமல் ஒன்றினைப் பற்றும் அல்லது விடும். மனத்தின் அவலத்திற்கு அடிப்படை இன்ப விழைவு. அதனால், இன்ப விழைவு தீயதென்று கொள்ளுதல் கூடாது. வாழ்க்கையின் நோக்கமே இன்ப விழைவுதான். ஆனால், மயங்கிய மனம் இன்பமல்லாதனவற்றை இன்பம் என்று கருதுகிறது; அடைய முயல்கிறது. மனம் தெளிவு இல்லாமல் குழப்பமடைந்து விடுவதால், இன்பத்தைத் துன்பம் என்றும் துன்பத்தை இன்பம் என்றும் முறை பிறழக் கருதுகிறது; நாடி முயல்கிறது.

ஒரு குடிசை; அந்தக் குடிசையில் வாழ்வோர் உயிரிரக்கவொழுக்கத்தில் வளராமையால் புலாலூண்பவர்கள். ஆமையைச் சமைத்து உண்பவர்கள்; அவர்கள் அந்தக் குடிசையின் அடுப்பில் உலைப் பானையை ஏற்றித் தீமூட்டி எரித்தனர். உயிருள்ள ஆமை ஒன்றை உலைப்பானை நீரில் அவிக்க இட்டனர். உலை நீரில் இளஞ்சூடு ஏறியபொழுது அந்த ஆமை கொள்ளை இன்பம் கண்டது. குளிர்நீரில் கிடந்து மரத்துப்போன ஆமைக்கு இதமான இளஞ்சூடு இன்பக் கிளர்ச்சியைத் தந்தது. பானையில் கிடந்த ஆமை அவ்வின்பக் கிளர்ச்சியில் திளைத்து மகிழ்ந்து விளையாடியது. ஐயோ, பாவம்! நீர் இளஞ்சூட்டில் இருக்கும் பொழுது மகிழ்வைத் தருகிறது; அடுப்பில் நெருப்பு எரிதலால் நீரின் கொதிநிலை மாறும்; சுடு நீராகும்; ஆமை அழியும். இப்படி எண்ணிப் பார்க்க ஆமைக்கு மனம் இல்லை. ஏன்? ஆமையின் அறிவு சூழ்நிலைகளுக்கு இசைந்ததே கட்டுப்பட்டதே. சூழ்நிலைகளை மாற்றியமைத்துக் கொள்ளும் அளவுக்கு விலங்குகளின் அறிவுத்திறன் வளரவில்லை; அமையவில்லை.

........உலையை ஏற்றித்
தழல்எரி மடுத்த நீரில்
திளைத்துநின் (று) ஆடுகின்ற
ஆமைபோல் தெளிவி லாதேன்

என்றார் அப்பரடிகள்.

இந்த வாழ்க்கையை மனித வாழ்க்கையோடு பொருத்திப் பாருங்கள். வாழ்க்கையென்பது அடுப்பு; அனுபவம் என்பது பானை, ஆசையென்பது தீ; ஆமை என்பது உயிர்; அவ்வப்பொழுது பெறும் சிறுபொழுதின்பம் இளஞ்சூடு, சிறு பொழுதின்பங்கள் அனைத்தும் சிறுமை பொருந்தியவழி வருவனவேயாகும். சிறுமை பொருந்திய இன்பங்கள் அன்பைக் கெடுக்கும்; உறவைப் பிரிக்கும்; பகையை வளர்க்கும். தெளிவற்ற மனமுடையோர் இந்நெறி நின்று அலமருவர். தெளிவுடையார் சிறுபொழுதின்பத்தை விரும்பார்; நிலையான இன்பத்தையே விரும்புவர். நிலையான இன்பம் என்பது கால எல்லையைக் குறிப்பதன்று. எங்கும் எல்லோருக்கும் இன்பமாக இருப்பதுதான் உண்மையான இன்பம்; அறநெறியின் பாற்பட்ட இன்பம். ஆதலால் சிந்தையில் தெளிவு தேவை. சிந்தையில் தெளிவுடையாராலேயே அறநெறியில் நிற்றற்கு இயலும். இதனை அப்பரடிகள்,

சிந்தையுள் தெளிவு மாகித்
தெளிவினுட் சிவமு மாகி

என்றார்.

தெளிந்த அன்புடையார் அன்பு நெறியில் நின்று வாழ்வர். அன்பில் விளைவதே அறநெறி. அன்பும் அறமும் பிரிக்க இயலாத இரட்டைப் பண்புகள்; ஒன்றையொன்று தழுவி நிற்பன. அன்பு மனித குலத்தின் கற்பு. அன்புதான் சிவம்; சிவம்தான் அன்பு! அன்பு ஆற்றல் மிக்குடையது. “ஆற்றல் மிக்க அன்பு” என்று அப்பரடிகள் பாராட்டியுள்ளார். அன்பில் தோய்ந்த மனம் அறநெறியில் நிற்கும். கடவுளை நம்பிச் செய்கின்ற சடங்குகள், கடவுளுக்காக செய்யப்பெறுவன அல்ல. அன்பினைத் தோற்றுவித்து வளர்க்கச் சடங்குகள் பயன்படும். சமயச்சடங்குகளுள் சிறப்பான சடங்காகக் கருதப் பெறுவது வற்றாத நீர்ப் பெருக்குடைய நீர்நிலைகளில் குளிர்ப்பது; தீர்த்தம் ஆடுவது; கங்கைக்குச் சென்று குளித்தல்; குமரிக்கடல் துறைக்குச் சென்று குளித்தல்.

இந்நீர்நிலைகளிற் சென்று குளிப்பது மிகுந்த பயனைத் தரத்தக்கது. எப்படி? அங்குச் சென்று குளித்தலால் மட்டுமே பயன் விளையாது. கங்கை, காவிரி போன்ற ஆறுகளை நாடிச் செல்லும்பொழுது அந்தப் பயணத்தில் பல்வேறு மனிதர்களைச் சந்தித்தல், அவர்களுடன் பழகுதல், அதுபோழ்து ஏற்படும் புகழ்ச்சி இகழ்ச்சிகளைப் பொருட்படுத்தாதிருத்தல், பயண வழியில் பெறும் இன்பதுன்பங்களிற் சமநிலை உணர்வைப் பெறுதல் ஆகிய அறநெறிப் பண்புகள் கிடைக்கும். ஆறு, கடல் ஆகியன துய்மையின் சின்னங்கள்; பொதுமையைக் கற்பிக்கும் கழகங்கள். எந்த நாட்டிலும் குட்டைகள் தீர்த்தமாவதில்லை. ஏன்? அவை எல்லைக்குள் முடக்கப்பட்டவை. அவை தேக்கமுடையவை. அவைகட்குப் போக்கும் இல்லை, வரவும் இல்லை. ஆனால், ஆறு அப்படியா? கங்கை இமயமலையின் உச்சியில் தோன்றி மண்ணில் வீழ்ந்து பல நூறு கல்தொலைவு ஒடிச்சென்று கடலைச் சார்கிறது. உயர்ந்த இலட்சியப் பயணத்தின் பெருக்கன்றோ கங்கை? மலையினின்றும் அது மண்ணுக்கு வருகிறது. ஏன்? அது மண்ணுக்கு வளம் சேர்க்கவும் மனித குலத்திற்கு வாழ்வளிக்கவும் வருகிறது. இந்த உயர்ந்த இலட்சியத்தோடு அது தடைகளைக் கடந்து, விளைவுகளைக் கடந்து உயிர்க்குலம் அனைத்துக்கும் வாழ்வளித்துக் கடலைச் சார்கிறது. இடையில் அதனைத் தீர்த்தம் என்று போற்றிக் குளிப்பாரும் உளர்; அறியாமையால் அதனை மாசுபடுத்து வாரும் உளர். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு அது பயணம் செய்து கொண்டிருக்கிறது. இந்த நினைப்புக்களோடு கங்கையிற் குளித்தால், கங்கை நீரால் உடல் தூய்மையாகிறது. கங்கையின் பெருந்தன்மையை, இலட்சியப் பயணத்தை, உயிர்க்குலமனைத்துக்கும் கைம்மாறு கருதாது வாழ்வளிக்கும் பண்பாட்டினை, தூய்மையின்மையையே தூய்மையாக்கிக் கொண்டு வாழ்வளிக்கும் நிகழ்ச்சிகளை நினைக்கும் பொழுது மனம் தூய்மையாகிறது. அங்ஙனம் மனம் தூய்மையானால் “இங்கு ஈசன், அங்கு ஈசன்” என்று சொல்லார். அவர்கள், 'ஈசன் எங்கும் இருக்கின்றான்; எல்லா உயிர்களிடத்தும் இருக்கின்றான்' என்று கருதி அன்பு செய்வர். இந்த அன்பு நெறியே அறநெறி. இதனை அப்பரடிகள்,

கங்கை ஆடில்என்? காவிரி ஆடில்என்?
கொங்கு தண்கும ரித்துறை ஆடில்என்?
ஓங்கு மாகடல் ஒதநீர் ஆடில்என்?
எங்கும் ஈசன் எனாதவர்க்(கு) இல்லையே

என்று பாடியருளினார்.

இத்தகைய அன்புநெறியில் நிற்பவர் தொண்டு நெறியின் தலைப்படுவர். அன்பு என்பது ஒர் உணர்வு. அது செயல்வழிதான் வெளிப்படும். அன்பின் வழியதாகச் செய்யப் பெறும் செயலே தொண்டு. அன்பின் வழியினர் தம் உடைமையைத் தனி உடைமை என்று கருதார். அவர்தம் உடைமை பயன்படும் வகையால் பொதுவுடைமைப் பாங்கினைப் பெறும். அறநிலைப் பொருளுடைமை என்பதைத் தான் 'தர்மகர்த்தா முறை' என்று பொருளியல் மேதைகள் கூறுகிறார்கள். அண்ணல் காந்தியடிகள் இந்திய சமூகப் பொருளாதாரத்திற்கு அறநிலைக் கொள்கையையே வற்புறுத்தினார். இன்றைய பாரத அரசியல் சிந்தனையும் இந்தக் கொள்கை வழி நின்று முன்னேற முயல்கிறது. நடைமுறையில் இந்தக் கொள்கை வெற்றிபெறுவது எளிதன்று. ஏன்? நம்முடைய சமூகப் பழக்க வழக்கங்கள் நெகிழ்ந்து கொடுப்பனவாக இல்லை.

அறநிலையங்கள் என்று பெயர் விளங்கி நிற்பனவற்றின் பொருளுடைமைகள்கூட மக்களுக்குப் பயன்படாமல் இருப்பதைக் காண்கிறோம். அவற்றிலேயே குறைகள் மலிந்தமையால் அவை அறவழியிற் செயல்படாமல் நெறிமுறைப் படுத்தப்பட வேண்டிய அளவுக்குத் தாழ்ந்து போயின. ஆயினும், அறநிலைப் (தர்மகர்த்தா) பொருளாதார முறை நடைமுறைக்கு வந்தால் நாடு நன்மையுறும். இந்த அறநிலைப் பொருட் கொள்கை (தர்மகர்த்தா முறை) ஏழாம் நூற்றாண்டில் அப்பரடிகளாலேயே எடுத்துக் கூறப் பெற்றது. ஒருவர் மருத்துவம் பயின்றார். தம் சொந்தப் பொறுப்பிலேயே மருத்துவமனை அமைத்தார். அம்மருத்துவ மனையில் அவருடைய சொந்தப் பொருளிலேயே மருந்துகளை வாங்கி வைத்தார். மருந்துகள் அவருக்குச் சொந்தமானவையே. அவர் உரிமை கருதி அந்த மருந்துகளையெல்லாம் தாமே உண்பாரா? பிணியுடையாரின் பிணியை நீக்கத்தானே அந்த மருந்துகள் பயன்படவேண்டும். அங்ஙனமின்றி, உரிமை கருதி அவரே அந்த மருந்துகளை உண்பாரானால் அவர் மரணமடைவார். வறுமைக்குப் “பிணி" என்றும், செல்வத்திற்கு “மருந்து” என்றும் பெயருண்டு. வறுமையுடையார் “பிணி” யுடையார், செல்வமுடையார் “மருந்து"டையார் செல்வமுடையார் செல்வத்தைத் துய்த்தற்கு இயலாது; வறுமையுடையாரே துய்த்தற்கு இயலும். அதனாலன்றோ புற நானூறும்,

செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே தப்புந பலவே

என்று பாடிற்று. இக்கருத்தினை அப்பரடிகள்,

இரப்பவர்க்(கு) ஈய வைத்தார்;
ஈபவர்க்(கு) அருளும் வைத்தார்

என்று அருளிச் செய்தார். ஆதலால், கடின உழைப்பால் செல்வத்தை ஈட்டுதலும், ஈட்டிய பொருளைப் பசிப்பிணியால் வருந்துவோர்க்கு வழங்கி வாழ்வித்தலும் உயர்ந்த அறநெறிகளாகும்.

இங்ஙனம் வருந்துவோர்க்கு உதவி செய்து வாழ்வளிப்பதில் வேறுபாடுகள் காட்டுவது கூடாது. உயிர்க்குலம் ஒன்றேயாம். நாடு மொழி ஆகிய வேறுபாடுகள் இயற்கையாக அமைந்தவை. அவை பொருட்படுத்தத்தக்கன அல்ல. சமய வேறுபாடுகள் சிந்தனை வளர்ச்சியாலும் தத்துவ வளர்ச்சியாலும் உருவானவை. இவையும் பொருட்படுத்தத்தக்கன அல்ல. குல வேறுபாடுகளோ பண்புவழி அமைந்தன. ஆனால், அவை மாறுபாடுகளுக்கும் பிரிவினைக்கும் உரியன அல்ல. சாதி வேறுபாடுகள் செயற்கை முறையில் தன்னல நாட்டத்துடன் கற்பிக்கப் பெற்றவை. ஆகவே, சாதி வேற்றுமை தீது; சாபக்கேடு. எந்தக் காரணத்தாலும் உயிர்க் குலத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக நினைப்பதும் பேசுவதும் ஒழுகுவதும் தீமைகளாகும். எவ்வளவு பெரியவராகத் தெரிந்தாலும் சாதி வேற்றுமைகளை மேற்கொண்டொழுகுபவராயின் அவர் தீயோரே!

சமயங்கள் மனித உலகத்தைச் செழுமைப்படுத்தத் தோன்றியவையே. ஆனால், சமயங்களை மையமாகக் கொண்டே மாறுபாடுகளும் முரண்பாடுகளும் பகையும் வளர்க்கப்படுமாயின், சமயங்கள் பயன் தரா. இதனை அருளால் உணர்ந்த வள்ளற் பெருமான், சமயங்களைக் கடந்த பொதுநெறிக்கு மக்களை அழைத்துச் சென்றார். அந்நெறிதான் சன்மார்க்க நெறி. அப்பரடிகள் “எல்லா உலகமும் ஆனாய் நீயே” என்றார். இது மனித உலக ஒருமைப்பாட்டின் குரலுமாகும். அப்பரடிகள், பிறப்பினால் சாதி வேற்றுமை பாராட்டும் பொய்ச் சாத்திர நெறியைக் கடுமையாகச் சாடியுள்ளார். சாத்திரங்களைக் காட்டி, ஊழ்வினையைக் காட்டி, உணவுப் பங்கீட்டு அட்டை (Ration Card)யை உவமையாகக் காட்டிப் பிறப்பில் ஏற்றத் தாழ்வாக அமைந்துள்ள இன்றையச் சமுதாயக் கொடுமைகளைக் கட்டிக் காப்பாற்ற அன்றும் பலர் முயன்றனர். இன்றும் சிலர் முயன்று வருகின்றனர். அவர்கள் “ஆதாரமில்லாமலா பேசுகின்றனர்? ஒரு வகுப்பினர் ஆவுரித்துத் தின்று உழல்கின்றனராம்; அவர் புலையராம்; அதனால், தீண்டத்தகாதவராம்.” இங்ஙனம் கூறுபவர்கள் என்ன செய்கிறார்கள்? இவர்கள் மனித இரத்தத்தையன்றோ உறிஞ்சிக் குடிக்கின்றனர்? நாட்டின் நல்லூழின்மையால் ஏற்பட்ட விபத்துக்களால், இவர்கள் உயர்ந்த இடத்தில் ஒதுக்கப்பட்டு விட்டனர். இருக்கும் இடம் உயர்ந்தது என்பதாலேயே உபதேசமும் உயர்ந்ததாகிவிடுமோ? அப்படியானால், ஆவுரித்துத் தின்று உழல்வது தவறா? இல்லையா? தவறு தான்! தவழ்ந்து நடப்பவர் தவறித்தான் வீழ்வர். ஏற்ற முடையவர் அவரை எடுத்தாள வேண்டாமா? வேண்டும் என்பதனால்தான்,

ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்....
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே

என்றார் அப்பரடிகள்.

சாத்திரங்களைக் காட்டிக் குல கோத்திர வேற்றுமையைக் கற்பிப்பதும் காப்பதும் அறநெறியல்லவே. எல்லாவுயிர்களும் இறையருள் பெறுதற்குரிய பாத்திரங்களே என்று கருதி அன்பு செய்தல்-அவ்வுயிர்களுக்கு உரியனவற்றைச் செய்து உதவுதல்-ஒப்புரவுக் கொள்கை. இதுவே சமய இலக்கியங்கள் காட்டும் அறநெறி.

தென்னாட்டுக்குச் சிவனாகவும், மற்றெல்லா நாடு களுக்கும் இறைவனாகவும் உள்ள பெருமான் உயர்த்தியுள்ள கொடி எருதுக் கொடி, எருது ஒரு சின்னமே! சின்னத்தின் பின்னணியில் சிந்தனை மாட்சியிருக்கிறது. வேளாண்மைக்குத் துணை செய்வது எருது. அது தன் உழைப்பினால் விளைந்த உயர் நெல்லையும், காய்களையும், கனிகளையும் மனித குலம் உண்டு மகிழ அளிக்கிறது. ஆனால், அது மனிதருக்குப் பயன்படாத வைக்கோலைத் தின்று வாழ்கிறது. எருதின் குணங்களைப் போன்ற பண்பாடுடையாரின் நெஞ்சில் பெருமான் எழுந்தருள்வான் என்பதே எருது ஊர்தியின் தத்துவம்.

சமய இலக்கியங்கள் சிந்தனையைத் தருகின்றன; புத்தியைப் புதுமைப்படுத்துகின்றன; மனத்தைத் தூய்மை செய்கின்றன; அன்பினைத் தருகின்றன. அன்பிற் பொதுவுடைமை மலர்கிறது; ஒப்புரவுக் கொள்கை உயர்ந்து விளங்குகிறது; உயிர்க்குலம் ஒன்றாக இணைகிறது. இது சமய இலக்கியங்கள் காட்டும் அறநெறி. அத்தகு அறநெறி நின்று அவனியை வாழ்வித்து வாழ்வோமாக!