குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/சுந்தரர்



34

சுந்தரர்

நம்பியாரூரர், சுந்தரர், ஆளுடைய நம்பிகள் என்றெல்லாம் போற்றப்பெறும் சுந்தரமூர்த்தி நாயனார் தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு திருப்பு மையமாகத் திகழ்ந்தவர். செந்தமிழுக்கும் சிவநெறிக்கும் ஏற்றம் இருந்த காலம் அவர் காலம்.

நம்பியாரூரர் இறைவனைத் தம் அன்றாட வாழ்க்கையில் உடன் உறைவோனாகவே கொண்டார்; இறைவனோடு அளவளாவினார்; உகந்தும் கூடியும் பழகினார். அவர் ஏத்தியும் வழிபட்டார்; ஏசியும் உறவு கொண்டார். ஆயினும் எந்தச் சூழ்நிலையிலும் திரு ஆரூரானை மறக்கவில்லை.

வழுக்கி விழினும் திருப்பெய ரல்லால்
மற்று நான்அறி யேன்மறு மாற்றம்

(7.54.1)

என்று பேசியவர் நம்பியாரூரர். ஆயினும் அவர் இறைவனிடத்தில் உருகிப் பேசிய இடங்களும் உண்டு. நிகழ்ச்சிகளும் உண்டு. -

இறைவனுக்கும் நம்பியாரூரருக்கும் இடையில் இருந்த உறவு, அறிவு எல்லைகளைக் கடந்தது. அவர்கள் உறவினைக் கலிக்காமராலேயே புரிந்துகொள்ள முடியவில்லையே! இப்பிறவிலேயே இருமை யின்பமும் அடைந்த அருளியற் சமர்த்தர் நம்பியாரூரர்.

நம்பியாரூரர் பெருமை

நம்பியாரூரரைப் புகழ்ந்து போற்றியர்வர்கள் பலர். நால்வர் புகழ் போற்றுவதில் சிவப்பிரகாசர் இயற்றிய நால்வர் நான்மணிமாலை முதன்மையானது. பரவையாரின் ஊடல் நீக்க, நாயகனை-இறைவனைத் தூது அனுப்பியது தவறு என்பது கலிக்காமர் கருத்து. இதனைக் கலிக்காமர்,

நாயனை அடியான் ஏவும்
காரியம் நன்று சால
ஏயும்என் றிதனைச் செய்வான்
தொண்டனாம் என்னே பாவம்!

(ஏயர்கோன் புரா. 384)

என்று கூறுவதாகப் பெரியபுராணம் பேசும். நம்பியாரூரர் இறைவனை உற்றுழி உதவ வேண்டுகிறார். அவ்வளவுதான். இக்குறை முடிக்க இறைவனே செல்ல வேண்டும் என்பதில்லை.

இறைவன் திருவுள்ளம் பற்றியிருந்தால் பிற வழிகளிலும் பரவையாரின் ஊடலைத் தீர்த்திருக்க முடியும். தம் தோழனுக்கு உற்ற குறையைத் தாமே முடித்தலே இனிது; தோழமைக்குரிய இயல்பும் இதுவே.

எனவே, இறைவன் அடியார்க்கு எளியனாயிருக்கும் பாங்கினை விரும்பித் தானே தூது சென்றான். அதுவும் ஒரு நடையில் முடிக்காமல், பிரிவை நீட்டித்துக் காதலின் - தோழமையின் அருமைப் பாட்டை உணர்த்த இரண்டாந் தடவையும் நடந்தான்.

பரவையாரிடம் தூது சென்றமையால் இறைவன் தன் எளிமையையும் “நமக்கு அன்புபட்டவர் பாரமும் பூண்பர்" என்ற ஆப்த மொழியையும் உலகிற்கு உணர்த்தவே தூது நடந்தான். இதனை நால்வர் நான்மணிமாலை,

நோக்குறு நுதலோன் நின்னிட விருப்பால்
நூற்பகவு அன்னநுண் மருங்குல்
வார்க்குளி முலைமென் மகளிர்தம் புலவி
மாற்றுவான் சென்றனன் என்றால்
கோக்கலிக் காமன் வயிற்றிடைக் குத்திக்
கொண்டதே துக்குநீ புகலாய்
காக்கரு மதலை விழுங்கிய முதலை
கான்றிடத் தோன்றும்நா வலனே!

(நால்வர் நான்மணிமாலை 15)

என்று கூறும். நம்பியாரூரர்பால் உள்ள விருப்பத்தால்தான் இறைவன் துது போனான். இறைவன் அடியார்க்கு எளியவன் என்பது மட்டும் கருத்தல்ல; நடைமுறையும் அதுவேயாம் என்பதை நிரூபணம் செய்கிறது இந்த நிகழ்வு.

வேதன் நாரணன் ஆர ணம்மறி
யாவி ழுப்பொருள் பேதைபால்
துரத னாயிரு கால்ந டந்திடு
தோழன் வன்மைசெய் தொண்டனுக்(கு)
ஆத லால்அடி யார்க ளுக்கெளி
யான்அ டிக்கம லங்கள்நீ
காத லால்அணை ஈண்டவன் வேண்டின
இம்மை யேதரும் கண்டிடே!

(சித்தியார் பரபக்கம்-57)

என்று சிவஞானசித்தியாகும் இந்தக் கருத்தை உறுதி செய்கிறது.

மாதவச் சிவஞானமுனிவர் நம்பியாரூரரை “எமது குல தெய்வம்” என்று போற்றுகின்றார். நம்பியாரூரர்க்கும் சடங்கவி சிவாச்சாரியார் மகளுக்கும் நடைபெற இருந்த மரபுவழி திருமணத்தைத் தடை செய்தார் சிவபெருமான். தடுத்தது, ஒரே ஒரு திருமணத்தை! அதற்கு ஈடாக ஆளுடைய நம்பிகள் அதே சிவபெருமானைக் கொண்டு இரண்டு திருமணங்களைச் செய்து முடித்துக் கொண்ட வல்லாளன் என்று பாராட்டுகின்றார் மாதவச் சிவஞான முனிவர்.

ஒருமணத்தைச் சிதைவு செய்து வல்வழக்கிட்
டாட்கொண்ட வுவனைக் கொண்டே
இருமணத்தைக் கொண்டருளிப் பணிகொண்ட
வல்லாளன் எல்லாம் உய்யப்
பெருமணச்சீர்த் திருத்தொண்டத் தொகை விரித்த
பேரருளின் பெருமாள் என்றும்
திருமணக்கோ லப்பெருமாள் மறைப்பெருமாள்
எமதுகுல தெய்வ மாமால்,

(காஞ்சிப் புராணம் பக்.6)

என்பது மாதவச் சிவஞான முனிவர் பாடல்.

நம்பியாரூரர், சேக்கிழார் இயற்றிய பெரியபுராணக் காப்பியத்திற்கு நாயகன் என்பதை நினைவிற் கொள்வது நல்லது. நம்பியாரூரர் வரலாறுதான் பெரியபுராணத்துக்கு அடிப்படை மற்ற நாயன்மார்கள் வரலாறுகள் துணை வரலாறுகள் என்று கருதினால் தவறில்லை.

நம்பியாரூரர் திருமுதுகுன்றம் மணிமுத்தாற்றில் பொன்னை இட்டு, திருவாரூர்க் குளத்தில் எடுப்பதைச் சேக்கிழார் “தன்னை வினையின் குழியினின்று எடுத்தார்” என்று கவிக் கூற்றாகப் பாடுவது உள்ளத்தைத் தொடுகிறது; உருக்குகிறது.

உள்ளத்திலொரு துளக்கமிலோம்
உலகுய்ய இருண்டதிருக்
களத்துமுது குன்றர்தரு
கனகமாற் றில்விட்டு

கு.இ.VII.23 

வளத்தின்மலிந் தேழுலகும்
வணங்குபெருத் திருவாருர்க்
குளத்திலெடுத் தார்வினையின்
குழிவாய்நின் றெனையெடுத்தார்

(ஐயடிகள் காடவர்கோன் புராணம்.9)

என்பது அந்தப் பாடல்.

இங்ஙனம் பலராலும் போற்றப் பெற்றவர் நம்பியாரூரர். சமுதாயத்துறையிலும் சமயத்துறையிலும் நம்பியாரூரர் புதிய திருப்பு மையங்களைக் கண்டு தமிழக வரலாற்றுக்கு உந்து சக்தியாக விளங்கினார்.

தமிழ் நெறியை, தமிழிசையை, தமிழ்ப் பண்பாட்டை, தமிழக அகத்திணை வாழ்க்கையைப் புதுக்கி உயிர்ப் பளித்ததால் தமிழர்க்கு நம்பியாரூரர் குலதெய்வமே! அவர் தம் அடிமலர்கள் போற்றி! போற்றி!

வாழ்ந்த காலம்

நம்பியாரூரர் வாழ்ந்த காலம் துல்லியமாகக் கணக்கிடப்படவில்லை. ஆனாலும் சுந்தரர் வரலாற்றில் அகச் சான்றுகளுக்கிணங்க கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியும் எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியுமாக இருக்க வேண்டும் என்று கொள்ளலாம்.

திருத்தொண்டத் தொகையில் இடம் பெற்றுள்ள “கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமாள் காடவர் கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்” என்று போற்றப் பெற்ற பல்லவர் குலத்தோன்றல் நம்பியாரூரர் காலத்தில் வாழ்ந்தவன்.

பல்லவ அரசன் கழற்சிங்கன் சிறந்த சிவபக்தன். இந்தக் காடவர் கோமனாகிய கழற்சிங்கன்தான் பூசலார் நாயனார் வரலாற்றில் பேசப்பெறும் பல்லவ அரசன். காடவர்கோமான் கட்டிய கயிலாயநாதர் திருக்கோயில் கடவுள்மங்கலம் எழுந்தருள்வதைத்தான் இறைவன் ஒத்திப் போட்டுவிட்டு, பூசலார் நாயனாருடைய மனக் கோயிலுக்கு முன்னுரிமை கொடுத்து எழுந்தருளினான்.

நம்பியாரூரரை எடுத்து வளர்த்த நரசிங்கமுனையரையன் திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட சிற்றரசன். இந்தக் காலத்திலேயே சுழறிற்றறிவார் என்று போற்றப் பெறும் சேரமான் பெருமானும் (சேரமன்னர்) வாழ்ந்தார்.

நம்பியாரூரர் காலத்தில் பல்லவர், பாண்டியர், சோழர், சேரர் ஆகிய மன்னர்கள் தமிழ்நாட்டை ஆண்டனர் என்பதும், இந்த அரசர்கள் சிவநெறியில் தோய்ந்த பக்தியுடையவர்களாய் இருந்தனர் என்பதும் புலப்படுகிறது.

நம்பியாரூரர் திரு ஆலவாய், திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களில் மூவேந்தர்களுடன் கூடி நின்று வழிபட்டதாகச் சேக்கிழார் கூறுகிறார்.

ஆதலால், நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த திருஞானசம்பந்தர், கைத்திருத்தொண்டினால் நாட்டை நடத்திய திருநாவுக்கரசர் இவர்களைத் தொடர்ந்து திருவவதாரம் செய்தவர் நம்பியாரூரர்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இவர்களுடைய திருவவதாரம் அயல் வழக்கினை வென்று விளங்கப் பயன் பட்டது. ஆயினும் ஒன்றை வெற்றி பெற்றால் மட்டும் போதுமா? அதனைத் தழுவி நிற்பதற்குரிய நெறியை அறிமுகப்படுத்த வேண்டும்.

வாழ்க்கையைத் துன்பச் சுமையாகக் கருதிய கருத்துக்களை-நெறியைப் புலமாக்கிய பெளத்த, சமண சமயங்களின் கொள்கைத் தாக்கம் தமிழகத்தில் இல்லாமல் போய் விடவில்லை.

இந்தச் சூழ்நிலையில் வாழ்க்கையை அற்புதமானதாக விளக்கிக் கூறி நெறிப்பட வாழ்ந்து, இம்மையிலேயே இப்புவியிலேயே இறைநிலை எய்தலாம் என்பதனை உணர்த்துவது நம்பியாரூரர் வரலாறு.

நம்பியாரூரர் வரலாறு விறுவிறுப்பானது; சுவையானது அனுபவங்கள் மிகுதியும் உடையது. அது தமிழக வரலாறாக இயங்கியிருக்கிறது; தமிழ்த் தத்துவ வரலாறாக, தத்துவங்களின் விளக்க வரலாறாக இயங்கியிருக்கிறது. இவர் வரலாறு ஒண்மை யுடையது!

சாதிகளின் சங்கமம்

நம்பியாரூரர் திருமுனைப்பாடி நாட்டில், திருநாவலூரில் ஆதிசைவ மரபில் திருவவதாரம் செய்கின்றார். பெற்றோர் சடையனார்-இசைஞானியார். நம்பியாரூரர் சிறு தேர் உருட்டி விளையாடும் பருவத்தில் நரசிங்க முனையரையர் என்ற அரசர் அவரை எடுத்துப் போய் முறையாக வளர்க்கிறார். நம்பியாரூரர் முறையாக வளர்கிறார்.

இவர் வரலாற்றில் சாதிகள் சங்கமம் ஆகின்றன. நம்பியாரூரர் பிறப்பால் ஆதிசைவ மரபினர்; தமிழ்க் குடியினர்தான்; பார்ப்பனர் அல்லர். இதனை ஆட் கொண்டருள வந்த வழக்காடி அந்தணரிடத்தில் நம்பியாரூரர் கூறுவதால் அறியலாம்.

அனைத்துநூ லுணர்ந்தீர் ஆதி
சைவன்என் றறிவீர் என்னைத்
தனக்குவே றடிமை என்றிவ்
வந்தணன் சாதித் தானேல்,
மனத்தினால் உணர்தற் கெட்டா
மாயையென் சொல்லு கேன்யான்
எனக்கிது தெளிய வொண்ணாது
என்றனன் எண்ண மிக்கான்

(தடுத்தாட்கொண்ட புராணம் 54)

என்பதறிக. தமிழ்க் குடியில் பணிப் பகிர்வு ஏற்பட்ட காலத்தில் திருக்கோயில் பூசனைக்கு என்று ஒதுக்கப் பெற்றவர்கள் ஆதிசைவர் என்ற மரபினராக வந்தனர். பண்டைக் காலத்தில் இவர்கள் தமிழ்க் குடியினரோடு உடனிருந்து உண்ணல், மகள் கொடுத்தல், எடுத்தல் முதலியன நிகழ்த்தி வந்துள்ளனர்.

இவர்கள் வைதிக சந்தி செய்யார். இவர்களுக்கு 'காயத்ரி' இல்லை. சைவ சமயத்தில் ஸ்மார்த்தக் கலப்புத் தோன்றிய பிறகுதான், ஆதிசைவர்கள் மெள்ள மெள்ள பார்ப்பனச் சார்புடையராயினர். ஏன்? பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் அரசர்களிடம் செல்வாக்கும் பெற்று வந்தனர்.

இதனால், ஏற்பட்ட பாதிப்பால் ஆதிசைவர்கள் பார்ப்பனரைச் சார்ந்து ஒழுகினர். அப்படியிருந்தும் ஒரு சிலர் தனித்து ஆதிசைவர்களாகவே அன்று போல் இன்றும் வாழ்கின்றனர். ஸ்மார்த்தக் கலப்புத் தோன்றிய பிறகுதான் திருக்கோயில்களில் பக்தர்கள் எல்லாரும் வழிபடும் முறைக்கு விபத்து ஏற்பட்டிருக்க வேண்டும்.

சேக்கிழாரின் பெரியபுராணத்திலேயே கண்ணப்பர், திருநீலநக்கர், சாக்கியர் முதலியோர் திருக்கோயில் வழிபாடு செய்தமையை அறிகிறோம். முறையாகச் சிவபூசை செய்தல் எளிதாக எல்லோராலும் இயலாது.

ஆதலால், திருக்கோயில்களில் எழுந்தருளியுள்ள இறைவனை முறையாக எழுந்தருளச் செய்து பூசித்து, வரும் பக்தர்கள் பூசனை செய்து கொள்ள, அருகிருந்து கற்றுக் கொடுப்பதும் செய்துகாட்டுவதும் ஆதிசைவர் பணி.

இந்நிலையில் நம்பியாரூரர், ஆதிசைவ மரபில் தோன்றினாலும் நரசிங்கமுனையரையர் என்ற மன்னரால் வளர்க்கப்படுகிறார். நற்றமிழ்ச் சுந்தரர் உருத்திர கணிகையர் மரபிலும், வேளாண் மரபிலும் திருமணம் செய்கிறார். பழந்தமிழ்க்குடி மரபுப்படி சுந்தரர் வரலாற்றில் ஆதிசைவ அந்தணர், அரசர், வேளாண் மரபினர் கலக்கின்றனர்.

ஆவணங்காட்டி ஆட்கொண்டான்

நம்பியாரூரை நரசிங்கமுனையரையர் “அன்பினால் மகன்மை கொண்டான்” என்று சேக்கிழார் பாடுகிறார். இதனால் அவரை நரசிங்கமுனையரையர் உரிமைப் பிள்ளையாக - காதற்பிள்ளையாக எடுத்துக் கொண்டார் என்பது உய்த்துணர வேண்டிய செய்தி.

மன்னர் திருவும், வைதிகத் திருவும் பொங்க நம்பியாரூரர் வளர்ந்தார்; வளர்ந்து மணப்பருவமெய்தினார். பெற்றோர் நற்றமிழ் நாவலூரருக்கு, புத்துார் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை மணம் பேசி முடித்தனர்.

திருமண நாளும் நாழிகையும் வந்தது. திருமணப் பந்தலில்-மணவறையில் நம்பியாரூரர்! திருமணக் கோலத்துடன் மணமக்கள் இருக்கையில் அமர்ந்திருந்தனர். மங்கலநாண் சூட்டும் நேரம்.

திருமணப் பந்தலில் ஒரு புதிய அந்தணர் நுழைந்தார். அங்கே குழுமியிருந்தவர்களையும் நம்பியாரூரையும் நோக்கி மணமகனுக்கும் தனக்கும் வழக்கு ஒன்று உண்டு என்றார்; திருமணம் நின்றுவிட்டது. மணப்பந்தலில் கூடியிருந்தவர்கள் வியப்படைந்தனர்; அதிர்ச்சியடைந்தனர்!

நம்பியாரூரர் முதியவரை அணுகி வழக்கு என்ன என்று வினவினார். “நீயும் உன் மூதாதையரும் எனக்கு வழி வழி அடிமை. அடிமை ஒலை இருக்கிறது” என்றார். நம்பியாரூரருக்கு அதிர்ச்சி! ஆதிசைவ அந்தணர் எப்படி ஒரு வேதியருக்கு அடிமையாக இயலும்? இந்த வழக்கு உலகில் இல்லையே! இந்த வழக்கைக் கூறும் இவர் ஒரு பித்தனாக இருக்க வேண்டும் என்று கருதி முதியவரை நோக்கி “எங்கே ஒலை?” என்றார்.

உன்மீது நம்பிக்கை இல்லை! ஒலையைத்தர இயலாது; நீ கிழித்தாலும் கிழித்துவிடுவாய் என்று கூறி ஒலையைத்தர மறுத்தார் முதியவர். நம்பியாரூரர் நெருங்கிப் போய் ஒலையைப் பறிக்க முயன்றார். முதியவர் ஒலையைத் தர மறுத்தார்; போராடினார்.

நம்பியாரூரர் ஒலையைப் பிடுங்கிக் கிழித்துப் போட்டு விட்டார். ஒலையைக் கிழித்தது முதியவரின் வழக்குக்குச் சாதகமாக மாறியதோடு வழக்கிற்குரிய ஆவணத்தை மறைக்கக் கிழித்ததாக முதியவர் கூறினார். வழக்கு, முதியவர் பக்கம் சாதகமாகத் திரும்பும்படி நம்பியாரூரர் செய்தது ஏனோ?

என்னதான் அவதாரமாக இருந்தாலும் மண்ணின் இயல்பும் சுற்றுச் சூழலும் யாரை விட்டுவைக்கிறது?

மீண்டும் திருமணப் பந்தலில் உள்ளோரும், நம்பியாரூரரும் "நும் ஊர் எது?” என்று முதியவரைக் கேட்கின்றனர்! முதியவர் திருவெண்ணெய் நல்லூர் என்று கூறுகின்றனர். திருவெண்ணெய்நல்லூர்த் திருக்கோயில் ஊர்ச்சபைக்கு இந்த வழக்கைக் கொண்டுபோக இருவரும் உடன்பட்டனர்.

திருவெண்ணெய்நல்லூரை நோக்கி முதியவர் நடக்கிறார். நம்பியாரூரர் காந்தத்தை நோக்கி இரும்புத் துண்டு செல்வதுபோல முதியவர் பின் போகிறார். திருவெண்ணெய் நல்லூரிலிருந்த ஊர்ச் சபையை அணுகினார். முதிய வேதியர் வழக்கை அவையின் முன் எடுத்துரைத்தார்.

“திருநாவலூரனாகிய இவன் எனக்கு அடியான். இவன் அடிமை என்பதற்குரிய சான்றாக விளங்கிய ஒலையை என் கையிலிருந்து பிடுங்கிக் கிழித்தெறித்து விட்டான்” என்று வழக்கை எடுத்துக் கூறினார்.

திருக்கோயிலில் ஊரவையினர் “ஆதிசைவ அந்தணர் மற்றோர் அந்தணருக்கு அடிமையாதல் இல்லையே!” என்றனர்.

“நம்பியாரூரரின் பாட்டன் உளமார இசைந்து எழுதிக் கொடுத்த அடிமை ஒலை இருக்கிறது. நகல் ஒலையைத்தான் இவன் கிழித்தான்; மூல ஓலை என்னிடம் இருக்கிறது” என்றார் முதியவர்.

மூல ஓலையைப் பாதுகாப்பாக வைத்துப் பார்த்து விட்டுத் திருப்பித் தருவதாக உறுதி கூறினால் மூல ஓலையை அவையின் முன் வைப்பதாகக் கூறினார். அவையினர் ஒத்துக் கொண்டனர். வேதியர், அவையினர், முன் ஒலையை வைத்தார்.

அவையினரின் கரணத்தான் ஒலையை வாசித்தான். ஒலையில் “திருநாவலூரில் வாழும் அருமறைவல்ல ஆதி சைவனாகிய ஆரூரான் எழுதியது. வெண்ணெய் நல்லூரில் வாழும் முனிவர் பெருமானாகிய பித்தனுக்கு யானும், என் குடும்பத்தில் வழிமுறை வழிமுறையாக இனி வருபவர்களும் அடிமைத் தொண்டு செய்வதற்கு இதுவே ஆவண ஒலையாகும். உள்ளமும் செய்கையும் ஒத்த நிலையில் இதனை எழுதிக் கொடுக்கிறேன்! இதற்கு இவை என் கையெழுத்து” என்றிருந்தது.

ஊரவையினர் முறையாகக் கையெழுத்தை ஒத்துப் பார்த்து ஒலை சரியானதே என்ற முடிவை அறிவித்தனர். முடிவு என்ன? முதியவராகிய வேதியருக்கு நம்பியாரூரர் அடிமை செய்ய வேண்டும் என்பதேயாம்.

ஊரவையினர் திருவெண்ணெய் நல்லூரில் உள்ள வேதியரின் வீட்டு முகவரி முதலியனவற்றைக் கேட்டனர். வேதியர் “அறியீரோ” என்று கூறி முன்னே நடந்தார். திருவெண்ணெய் நல்லூர்த் திருவருள்துறைத் திருக்கோயிலினுட் புகுந்து மறைந்தார்.

உடனே விசும்பில் இறைவன் அம்மையப்பனாகக் காட்சி தந்தருளி, கயிலையில் கொடுத்த வாக்குறுதியால் தடுத்தாட்கொண்டதாக அருளினார்.

நம்பியாரூரர், இறைவன் கருணையை நினைத்து நெஞ்சுருகி நெகிழ்ந்து போனார். இறைவன் நம்பியாரூரருக்கு “வன்தொண்டன்” என்று பெயரிட்டார். இந்த வரலாற்றுக்கு சுந்தரர் தேவாரத்தில் அகச் சான்றுகள் உண்டு.

அன்று வந்தெனை அகலிடத் தவர்முன்
ஆளதாக என்று ஆவணங் காட்டி
நின்று வெண்ணெய்நல் லூர்மிசை ஒளிந்த
நித்தலத் திரள் தொத்தினை

(7.62.5)

என்று சுந்தரர் பாடுகின்றார். மேலும்,

தன்மையினால் அடியேனைத்
தாம் ஆட்கொண்ட நாள் சபைமுன்
வன்மைகள் பேசிட வன்றொண்டன்
என்பதோர் வாழ்வு தந்தார்

(7.17.2)

என்றும் குறிப்பிட்டுக் கூறுவது அறிக. வழக்கின்போது ‘பித்தன்’ என்றதால் “பித்தா! என்றே பாடுக” என்றான் இறைவன்.

திருப்புமையம்

இந்த வரலாற்றுப் போக்கில் சில ஐயங்கள் எழுவது இயற்கை. முதலாவது ஐயம், “நம்பியாரூரருக்குத் திருமணம் நிச்சயிப்பதற்கு முன்பே, அதாவது பேசி முடிக்கும்பொழுதே இறைவன் திருமணத்தைத் தடுத்து இருக்கக் கூடாதா? ஏன் திருமண நாள்-நாழிகை வரை காத்திருந்து தடுக்க வேண்டும்?” என்பது. இரண்டாவது ஐயம். “அடிமை ஒலை எப்போது பிறந்தது? எப்படிப் பிறந்தது? ஒலையில் வரலாறு கூறப் படவே இல்லை. ஒலை இயல்பாக எழுதப்பெற்றதா? அல்லது தயாரிக்கப்பெற்றதா? மூல ஓலையின் படி ஒன்று நம்பியாரூரரின் வீட்டில் இருக்க வேண்டுமல்லவா? அப்படி இருந்ததாகச் சேக்கிழார் கூறவில்லை; முதியவர் கூறவில்லை. ஏன்?” என்பது.

இறைவன் இந்த வரலாற்றின் மையக் கருத்தாகிய சாதி ஒழிப்பைப் பலரும் அறியத்தக்க வகையில், நாடக மரபில் உணர்த்த விரும்பியுள்ளான். சாதி வேற்றுமை அகற்றும் பணி எதிர்மறையாகவும் செய்யப்பெறுதல் வேண்டும்; உடன் பாட்டு முறையிலும் அணுகி செய்யப் பெறுதல் வேண்டும் என்பது இறைவன் திருவுள்ளம்.

நம்பியாரூரருக்கு மரபு வழி நடைபெறவிருந்த திருமணத்தைத் தடைசெய்தது எதிர்மறை. ஒரே சாதி வழித் திருமணம் தடைசெய்யப் பெறுகிறது. இது முதல் முயற்சி. இன்னும்கூட இந்த முயற்சி பரவலாக மேற்கொள்ளப் பெற வில்லை. இதனைப் பலரும் அறியச் செய்ய நினைத்ததால் திருமண நிகழ்ச்சி வரை காத்திருந்து பலரும் அறியத் திருமணம் நிறுத்தப் பெற்றது. தமிழ்நாட்டு வரலாற்றில் இஃதொரு திருப்புமையும்.

நம்பியாரூரர், வேதியருக்கு அடிமையாக இருந்தால் அடிமைத் தொழில் செய்துவிட்டுப் போகிறார். அதற்காகத் திருமணத்தைத் தடை செய்வானேன்? “அடிமைக்குத் திருமண உரிமை இல்லை” என்ற மனுஸ்மிருதியின் தாக்கமா?

சென்ற நூற்றாண்டு வரை ஏன் இன்றும் பல இடங்களில் தமிழர் இல்லத் திருமணங்களில், திருமணத்தின் போது மணமகனுக்குப் பூணுல் அணிவித்துப் பார்ப்பனனாக்கிப் பின் திருமணம் செய்து வந்தனர்; செய்து வருகின்றனர். இந்தப் பழக்கமும் மனு ஸ்மிருதியின் தாக்கம் தானா? இவையெல்லாம் ஆய்வுக்குரியன.

தோழமையாகத் தன்னைத் தந்தனன்

திருவெண்ணெய் நல்லூரில் சிவபெருமான் நம்பியாரூரரின் திருமணத்தைத் தடுத்து ஆட்கொண்டருளினன். நம்பியாரூரர் திருப்பதிகங்கள் பாடத் தொடங்கினார். திருத்தலப் பயணமும் செய்யத் தொடங்கினார்.

வரலாற்றை விரித்துக் கூறவேண்டிய அவசியமில்லை. சித்தவட மடத்தில் திருவடி தீட்சையும் பெற்றுக் கொண்டார். தில்லைக்கூத்தன் நம்பியாரூரைத் திருவாரூருக்கு ஆற்றுப் படுத்தினார். திருவாரூருக்கு எழுந்தருளிய நம்பியாரூரர்,

ஆரு ரவர் எம்மையும் ஆள்வரே கேளிர்

என்று வினவுகின்றார். திருவாரூர் நாயகன், “நம்பியாரூரனே! தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்” என்று கூறி ஆட்கொண்டருளினன். ஆட்கொண்டருளியதுடன் “என்றும் திருமணக் கோலத்துடன் வாழ்க!” என்று வாழ்த்தியும் அருளினன். திருவாரூர், நம்பியாரூரரைத் “தம்பிரான் தோழர்" என்று ஆக்கியது; அழைத்தது. தம்பிரான் தோழரும் “என்றன்னை ஆள் தோழனே!” என்று விதந்து சிவபெரு மானை வாழ்த்துகின்றார்.

பரவையார் திருமணம்

திருவாரூர்த் திருக்கோயிலில் நம்பியாரூரர் பரவையாரைச் சந்திக்கின்றார். பரவையார் தம்பிரான் தோழர் காதல் முகிழ்க்கிறது. இது, பண்டு தோன்றிய காதலின் தொடர்ச்சி என்று கூறவும் வேண்டுமோ? திருவாரூர் இறைவனும், தம்பிரான் தோழருக்கும்-நங்கை பரவையாருக்கும் இனிதே திருமணத்தை முடித்து வைக்கிறார். நங்கை பரவையாருக்கும் நம்பி தம்பிரான் தோழருக்கும் ஏற்பட்ட காதலை, சேக்கிழார் அகத்திணை மரபுப் படி விளக்குகின்றார். யார் யார் மனம் எதில் தோய்ந்து கிடக்கிறதோ அது அதற்கேற்பச் சொற்கள் வெளிவரும் என்பார் திருவள்ளுவர்.

தம்பிரான் தோழரும் சிவபக்தர்; நங்கை பரவையாரும் அப்படியே. ஆதலால் அவர்களிடையே முகிழ்த்த காதல் பற்றிப் பெரியபுராணம் பேசுவது எண்ணத்தக்கது. நங்கை பரவையாரைக் கண்ட தம்பிரான் தோழர் நிலைபற்றி,

கற்பகத்தின் பூங்கொம்போ
காமன்றன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின்
புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர்
மதியூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ
அறியேனென் றதிசயித்தார்

,

(தடுத்தாட்கொண்ட புராணம் 140)

என்று கூறுகிறது பெரியபுராணம்.

தம்பிரான் தோழரைக் கண்ட நங்கை பரவையார்,

முன்னேவந் தெதிர்தோன்றும்
முருகனோ பெருகொளியால்
தன்நேரில் மாரனோ
தார்மார்பின் விஞ்சையனோ
மின்நேர்செஞ் சடைஅண்ணல்
மெய்யருள்பெற் றுடையவனோ
என்னே!என் மனத்திரித்த
இவன்யாரோ? எனநினைத்தார்,

(தடுத்தாட்கொண்ட புராணம் 144)

என்றும் சேக்கிழார் அருளியுள்ள பான்மையை உணர்க. இத்தகு காதல் மரபு இன்று என்னாயிற்று? தரங்கெட்டுப் போயிற்று!

தம்பிரான் தோழர், திருவாரூர் ஈசன், பரவையாரைத் தந்தருளியதை,

ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோனுழமாய் யான்செய்யும் துரிசுகளுக்கு உடனாகி
மாழைஒண்கண் பரவையைத்தந் தாண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆருர் இறைவனையே,

(7.51–10)

என்று உள்ளம் கனிந்தும் கசிந்தும் பாடியுள்ளமை இந்த வரலாற்றை உறுதிப்படுத்துகிறது.

அடியார்க்கும் அடியார்

இந்தச் சூழ்நிலையில்தான் தென்தமிழ் மொழியின் பயன் என்று பாராட்டப்பெறும் திருத்தொண்டத் தொகையைத் தம்பிரான் தோழர் அருளிச் செய்துள்ளார். ஆதிசைவ குடும்பத்தில் பிறந்து அரச குடும்பத்தில் வளர்ந்து வன்மை பேசி வன்தொண்டராக விளங்கிய தம்பிரான் தோழர் “அடியார்க்கும் அடியேன்” என்று எத்தனை தடவை தான் சொல்வது? புதுமாதிரியான, ஆக்கவழியிலான தண்டனை இது.

திருவாரூர் இறைவன் “தில்லை வாழந்தணர்” என்று அடியெடுத்துக் கொடுக்கத் திருத்தொண்டத் தொகையைத் தம்பிரான் தோழர் அருளிச் செய்கின்றனர். இந்தத் திருத் தொண்டத் தொகையின் விரிவாக்கமே பெரியபுராணம் என்று போற்றப்பெறும் திருத்தொண்டர் புராணம். பொன்பெற்றமை

இறைவன் திருப்புகலூரில் செங்கல்லைப் பொன்னாக்கித் தர, பொன் பெறுகிறார், தம்பிரான் தோழர். பின், சில நாட்களிலேயே திருப்பாச்சிலாச்சிராமத்திலேயும் பொன் வேண்டுகிறார். திருப்பாச்சிலாச்சிராமத்துறையும் தலைவன் இப்போது பொன் தரவில்லை. உடன் தம்பிரான் தோழருக்கு முறைப்பாடு வந்துவிடுகிறது.

வைத்தனன் தனக்கே தலையும் என்நாவும்
நெஞ்சமும் வஞ்சம்ஒன்று இன்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை
உரைத்தக்கால் உவமனே ஒக்கும்
வைத்த பாம்புஆர்த்தோர் கோவணத்தோடு
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பித்தரே ஒத்தோர் நச்சில ராகில்
இவரலாது இல்லையோ பிரானார்,

(7.14–1)


என்று பாடுகிறார். இந்தப் பதிகத்தில் “இவரலா தில்லையோ பிரானார்” என்று பாடுவதால் இறைவன் பால் உண்மையில் முறைப்பாடா? சிவபெருமான் தலைமையிலிருந்து விடுதலை பெற்று வேறு கடவுள் தேடுகிறாரா? அப்படியெல்லாம் நினைக்கத் தம்பிரான் தோழர் வரலாறு இடம் தராது.

சிவபெருமானிடம் உறைப்புள்ள அடிமை பூண்டவர் தம்பிரான் தோழர். இங்ஙனம் பாடுவதெல்லாம் உரிமையும் உறவும் மேவினமையின் விளைவு! இந்தப் பதிகத்தின் திருக்கடைக் காப்புப் பாடலில்,

ஏசின வல்ல இகழ்ந்தன அல்ல
எம்பெரு மான்என்றெப் போதும்
பாயின புகழான் பாச்சிலாச் சிராமத்து
அடிகளை அடிதொழப் பன்னாள்

வாயினாற்கூறி மனத்தினால் நினைவான்
வளவயல் நாவல்ஆ ரூரன்
பேசின. பேச்சைப் பொறுக்கில ராகில்
இவரலா தில்லையோ பிரானார்,

(7.14.12)

என்று தாம் இறைவனை ஏசவில்லை, இகழவில்லை என்று கூறித் தாம் பேசிய பேச்சைப் பொறுத்தருள வேண்டுவதையும் ஓர்க! இறைவனும் பிழை பொறுத்தருளி, பொன் தந்தருளினன். இந்த அற்புதத்தையும் தம்பிரான் தோழர்,

புன்மைகள் பேசவும் பொன்னைத்தந் தென்னைப் போகம்

புணர்த்த


நன்மையி னார்க்கிடம் ஆவது தந்திரு நாவலூரே"

(7.172)

என்று அருளியுள்ளமையை நினைத்தின்புறுக. அடுத்து, தம்பிரான் தோழர் வரலாற்றில் சிந்தனைக்குரியனவற்றுள் ஒன்று “ஆற்றிலிட்டுக் குளத்தில் எடுத்தது” திருவருளால் எதுவும் சாலும் போலும்!

சங்கிலியார் திருமணம்

தம்பிரான் தோழர் பல திருத்தலங்களை வணங்கிக் கொண்டு திருஒற்றியூர் வந்தடைகிறார். திருஒற்றியூரில் நடந்த வரலாற்று நிகழ்வுகள் சிந்தைக்கினியன. பண்டை நல்லூழ் கூட்டத் தம்பிரான் தோழர் நங்கை சங்கிலியாரிடம் மனம் போக்கிக் கவலையுடன் இருக்கின்றார்.

திருஒற்றியூர் இறைவன் எழுந்தருளி, சங்கிலியாரிடத்தில் தம்பிரான் தோழரை அறிமுகம் செய்துவைக்கும் பாங்கு நினைத்து நினைத்து மகிழ்தலுக்குரியது. பண்பார்ந்த நட்பியலுக்கு ஓர் அறிமுகமாக விளங்குகிறது.

சாருந் தவத்துச் சங்கிலி! கேள்,
சால என்பால் அன்புடையான்
மேரு வரையின் மேம்பட்ட
தவத்தான் வெண்ணெய் நல்லூரில்



யாரும் அறிய யான்ஆள
உரியான் உன்னை எனை இரந்தான்
வார்கொள் முலையாய்! நீஅவனை
மணத்தால் அணைவாய் மகிழ்ந்” தென்றார்!

(ஏயர்கோன் 239)

என்று பேசும் சேக்கிழார் வாக்கு நினைத்தின்புறத் தக்கது. இவ்வாறு கூறிய இறைவனிடம் சங்கிலியார், தம்பிரான் தோழருக்குத் திருவாரூரில் உள்ள ஈடுபாட்டை விண்ணப்பிக்கிறார்.

பெருமான் அதற்கு “உன்னைப் பிரியேன்” என்று ஆரூரன் சபதம் செய்து தருவான் என்று பதில் கூறுகிறார். அதன்பின் சிவபெருமான் தம்பிரான் தோழரிடம் வந்து “சங்கிலியார் தம்மைப் பிரியேன் என்று சபதம் செய்யுமாறு கேட்கிறாள்” என்றார்.

தம்பிரான் தோழர் திருவாரூர் மற்றும் தலங்களுக்குச் செல்லத் தடையாக அமையுமே என்று எண்ணிப் பெருமானிடம் “ஐய, எனை ஆண்ட தலைவ! சங்கிலியார்க்கு நான் சபதம் செய்யும் காலத்தில் நீ, கருவறையில் எழுந்தருளியில்லாமல் மகிழின் கீழ் எழுந்தருள வேண்டும்” என்று வேண்டுகிறார், இறைவன் முன் சபதம் செய்தலைத் தவிர்க்க!

இறைவன் முன்னால் செய்தால்தான் சபதமா? இறைவன், கருவறையில் மட்டும்தான் எழுந்தருளியுள்ளானா? மகிழ மரத்தடியில் இறைவன் இல்லையா?

இந்த வினாக்களுக்கு எல்லாம் கிடைக்கக்கூடிய ஒரே விடை, காதல் மீதூரும்பொழுது இவையெல்லாம் கவனத்திற்கு வாரா என்பதைத் தவிர வேறு என்ன?

அதன்பின், சங்கிலியாரிடம் இறைவன் நம்பியாரூரர் சபதம் செய்ய முன்வந்துள்ளார் என்று கூறியதுடன் “திருக்கோயில் கருவறை முன் சபதம் செய்யவேண்டாம். மகிழ மரத்தடியில் சத்தியம் செய்தால் போதும் என்று மகிழ மரத்தடியில் சபதம் பெற்றுக்கொள்” என்றும் அறிவுறுத்துகின்றான். எம்பெருமான் திருவிளையாட்டு என்னே!

வைகறைப் பொழுது! சங்கிலியார் தோழிகளுடன் திருக்கோயிலுக்கு வருகிறார். நம்பியாரூரர் சங்கிலியாரை அணுகி, பெருமான் அருளியதைக் கூறிச் சபதம் செய்து தரவும், திருமணம் செய்து கொள்ளவும் இறைவன் எழுந்தருளியுள்ள கருவறையின் திருமுன்புக்குச் சங்கிலியாரை அழைத்தார்.

சங்கிலியாரின் பாங்கிகள் “இதற்காக இறைவனின் கருவறைக்குச் செல்லவேண்டுமா? அவசியமில்லை. இந்த மகிழமரத்து அடியிலேயே சபதம் செய்தால் போதும்” என்கின்றனர்.

நம்பியாரூரர் மனமருட்சி அடைகிறார். ஆயினும் திருமண வேட்கை வெற்றி பெறுகிறது. நம்பியாரூரர் மகிழின் கீழ்ச் சங்கிலியாருக்கு “நின்னைப் பிரியேன்” என்று சபதம் செய்து கொடுக்கிறார். திருமணமும் நடக்கிறது.

இத் திருமணத்தில் திரு ஒற்றியூர் இறைவன் அறச்சங்கடத்திற்கு ஆளானார். தம்பிரான் தோழர் விருப்பத்தையும் புறக்கணிக்க முடியவில்லை. சங்கிலியார் நலனையும் புறக்கணிக்கத் திருவுள்ளம் இல்லை. முதற் கட்டத்தில் சதுரப்பாட்டுடன் நடந்து கொண்டு விட்டான் இறைவன். இந்த நிகழ்வுகள் பற்றித் தம்பிரான் தோழர் நமது தேவாரத்தில்,

பொன்னவிலும் கொன்றையினாய் போய்மகிழ்க்கீழ்
இருவென்று
சொன்னஎனைக் காணாமே சூளுறவு மகிழ்க்கீழே
என்னவல்ல பெருமானே இங்கிருந்தாயோ என்ன
ஒன்னலரைக் கண்டாற்போல் 'உளோம் போகீர்’
என்றானே,

(7.89.9)

என்று பாடுவதை அறிந்து மகிழ்க.

கு.இ.VII.24

கண்களை இழந்ததும் பெற்றதும்

இளவேனில் பருவம் வருகிறது. அப்போது நம்பியாரூரருக்குத் திருவாரூர் வசந்த விழா நினைவுக்கு வருகிறது. வசந்த விழாவைக் காணும் அன்பு மேலிடுகிறது. “எழிலாரூர்ப் பெருமானே! ஆரூர் அரசே! நின்னை யான் எங்ஙனம் பிரிந்திருப்பேன்?” என்று எண்ணி அழுகிறார்; புலம்புகின்றார்; ஆரூரை நோக்கிப் புறப்பட்டுவிட்டார்.

திருஒற்றியூர் எல்லையைக் கடக்கிறார்; கடந்த அளவில் அவர் கண்கள் இரண்டையும் இழக்கிறார்; மூர்ச்சையாகிறார், சபதம் பிழைத்தமையால்! நம்பியாரூரருக்கு வேறு ஏது பற்றுக்கோடு? இறைவனிடத்தில் கண்களைத் தரவேண்டிப் பாடுகிறார்.

அழுக்கு மெய்கொடுன் திருவடி அடைந்தேன்
அதுவும் நான்படப் பாலதொன் றானால்
பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்
பிழைப்பன் ஆகிலும் திருவடிப் பிழையேன்
வழுக்கி விழினும் திருப்பெய ரல்லால்
மற்று நான்அறி யேன்மறு மாற்றம்
ஒழுக்க என்கணுக்கு ஒருமருந் துரையாய்
ஒற்றி யூரெனும் ஊர்உறை வானே,

(7.54.1)

என்று கசிந்துருகின்றார். கண் கிடைக்கவில்லை. மீண்டும் அழுது அரற்றிக் கைக்கோலாவது தருக என வேண்டுகிறார். இதனை,

மூன்று கண்ணுடை யாய் அடியேன் கண்
கொள்வ தேகணக் குவழக் காகில்
ஊன்றுகோ லெனக் காவது ஒன்றருளாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே!

(7.54.4)

என்பதால் அறியலாம். “இறைவா! உனக்கோ மூன்று கண்! எனக்கிருந்த இரண்டு கண்ணையும் பிடுங்கிக் கொண்டாய்! இங்ஙனம் என் இரண்டு கண்ணையும் பிடுங்கிக் கொண்டதன் மூலமாவது கணக்கு வழக்கைத் தீர்த்துக் கொண்டாயா? அல்லது தொடருமா?” என்னும் பொருள் படக் “கணக்கு வழக்கும்” பேசுகிறார்.

சபதம் பிழைத்ததற்குக் கண்களைப் பறிப்பதுதான் தண்டனையா? வேறு தண்டனை கொடுத்திருக்கக் கூடாதா? சத்தியம் செய்தது வாய்தானே! ஏன் ஊமையாக்கி இருக்கக்கூடாது? என்ற கேள்வி எழலாம்.

திருமுறைத் தமிழில் உள்ள விருப்பத்தால் பெருமான் ஊமையாக்கவில்லை. நம்பியாரூரர் தம் கண் இழந்த பிறகு பாடும் பதிகங்கள் அற்புதமானவை; நெஞ்சு நெகிழத்தக்கவை. தாம் விரும்பிக் கேட்கும் நம்பியாரூரரின் நற்றமிழ்ப் பாடல்களை அனுபவிக்க இயலாதே என்று ஊமையாக்கவில்லை.

நம்பியாரூரரின் கண்கள் காதலுக்குத் துணை நின்றதாலும் நாடு காண ஆசை அவருக்கு ஏற்பட்டதால் சபதம் பிழைத்ததாலும் கண்களைக் குருடாக்கினார் என்றும் அமைதிகொள்ளலாம். இந்த இடையீடு தம்மீது காதலை மேலும் தூண்டும் என்றும் பெருமான் எண்ணியிருக்கலாம்.

திருஒற்றியூர் இறைவன், நம்பியாரூரரின் துன்பம் கண்டு இரங்கவில்லை. நம்பியாரூரர் தொண்டர்கள் வழி காட்டத் திருமுல்லைவாயிலை அடைகிறார். திருமுல்லை வாயில் திருப்பதிகத்தில் “சங்கிலிக்கா என் கண் கொண்டனை பண்ப” என்று பாடுகிறார். “பண்ப” என்ற சொல் சங்கிலிக்கு நல்ல விதமாக நடந்து கொள்வதற்காக என் கண்களைப் பறித்தாயோ என்னும் பொருள் படக் கூறியதோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.

பின் திருவெண்பாக்கம் திருக்கோயிலையடைந்து இறைவனை வணங்கிப் “பிழைகளைப் பொறுப்பதே பெரியோர் கடன்! நீ என் பிழையைப் பொறுப்பாய் என்று எண்ணியே பிழை செய்தேன்! ஆனால், பிழை பொறுத்தருள் செய்ய மறுக்கிறாய்! இதனால் உனக்குப் பழி வாராதா?” என்று கேட்கிறார். திருவெண்பாக்கத்திறைவன் திருவுள்ளம் இரங்கிக் கோல் ஒன்று தந்தருள்கின்றான்.

மான்திகழும் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல்லாம்
தோன்றஅருள் செய்தவித்தாய் என்றுரைக்க உலகமெலாம்
ஈன்றவனே வெண்கோயில் இங்கிருந்தா யோஎன்ன
ஊன்றுவதோர் கோலருளி 'உளோம்போகீர்’ என்றானே!

(7. 89. 10)

என்ற பாடல் திருவெண்பாக்கத்திறைவன் ஊன்றுகோல் தந்தருளி “உளோம் போகீர்!” என்று ஒன்னலரிடம் - அதாவது பொருந்தாப் பகைவரிடம் பேசுவது போல் பேசி அனுப்பிவிடுகிறான் என்பதைக் குறிப்பிடுகிறது. மேலும் பல திருத்தலங்களையும் பணிந்தேத்திக் கொண்டு காஞ்சிபுரத்திற்குச் சென்று கச்சியேகம்பனைப் போற்றிப் பரவுகின்றார்.

கச்சியேகம்பன் நம்பியாரூரருக்கு இடக்கண்ணை அருளிச் செய்கிறான். இது உண்மையா? நம்பியாரூரர்க்கு இடக்கண்ணை அருளிச்செய்தவன் கச்சியேகம்பனா? அல்லது கச்சியேகம்பனின் பங்கிலுறையும் அன்னை காமாட்சியா? பெற்றது இடக்கண். ஆதலால், காமாட்சி அம்மையின் கருணை என்றே கருதவேண்டும். அன்னை தானே முந்திப் பொழிபவள் கருணையை! இதனை,

ஆலந்தா னுகந்து அமுதுசெய் தானை
ஆதியை அமரர் தொழுதேத்தும்
சீலந்தான் பெரிதும் உடையானைச்
சிந்திப்பார்.அவர் சிந்தையுள்ளானை
ஏல வார் குழலாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற

கால காலனைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே,

(7.61.1)

என்று பாடி விளக்குகிறார். மீண்டும் பலபதிகளைக் கண்டு வணங்கிக் கொண்டு-திருவாவடுதுறைக்கு வந்து சேர்கிறார். இந்நிலையில் உடலில் நோய் வேறு வந்து விட்டது. இதனை,

கண்ணி லேன்உடம் பில்அடு நோயால்
கருத் தழிந்து உனக்கே பொறை யானேன்,

(7.70.2)


 
என்று பாடி வருந்துகின்றார். அடுத்து, திருத்துருத்திக்குச் செல்கின்றார். திருத்துருத்தி இறைவனின் ஆணைப்படி திருக் கோயில் திருக்குளத்தில் நீராடி நோய் நீங்கப் பெறுகிறார். இதனை,

மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி
வெடிபடக் கரையொடும் திரைகொணர்ந்து எற்றும்
அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார்
அடியிணை தொழுதெழும் அன்பாராம் அடியார்
சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன். நாயேன்
என்னைநான் மறக்குமாறு எம்பெரு மானை
என்னுடம்பு அடும்பிணி இடர் கெடுத்தானை,

(7.74.1)

என்ற பாடல் புலப்படுத்துகிறது.

சொன்னவாறறிவார் திருவருளால் உடல் நோய் நீங்கப்பெற்றுப் பல தலங்களையும் வழிபட்டுக் கொண்டு திருவாரூரை வந்தடைந்தார். திருவாரூர் பரவையுண் மண்டளியை வாழ்த்தி வணங்கிப் பின்பு இராக்கால வழி பாட்டிற்குத் திருவாரூர்த் திருமூலட்டானேசுவரர் திருக் கோயிலுக்குச் செல்லுகிறார். இந்த நிலையில் திருவாரூர்ப் பெருமானோடு தான் அயலாய்ப் போனது போல எண்ணி வருந்திப் பாடுகின்றனர்.  அதன்பின் புற்றிடங்கொண்ட ஈசன் திருமுன் நிலந்தோய வீழ்ந்து வணங்கிப் பிறிதொரு கண்ணையும் தந்தருளும்படி வேண்டுகிறார். இந்தப் பதிகம் மிக மிக அற்புதமானது; உருக்கமானது. பாடலில் அடிமைத் திறமும் இருக்கிறது. மேவிப் பழி சுமத்தும் பாங்கும் இருக்கிறது.

மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவாருரீர் வாழ்ந்து போதீரே.

(7.95.1)

விற்றுக் கொள்வீர் ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றும் செய்ததில்லை கொத்தை ஆக்கினீர்
எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர்? நீரே பழிப்பட்டீர்!
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே

(7.95.2)

என்று பாடுகிறார். திருவாரூர் பெருமான் இரங்கியருளி வலக் கண்ணையும் தந்தருளுகின்றார். தம்பிரான் தோழர் ஆவல் தீர இரு கண்களாலும் ஆரூரானைத் தொழுதேத்திப் போற்றினார்; ஆடினார்; பாடினார்; மகிழ்ந்தார்.

பரவையார்பால் பெருமான் தூது

சங்கிலியார் திருமணச்செய்தியை அறிந்த பரவையார் சுந்தரருடன் புலவிகொண்டார். இதையறிந்த சுந்தரர் சான்றோர் சிலரைத் துதனுப்பினார். பரவையார் உடன்பட வில்லை. மாறாகப் பரவையார் தாம் உயிர் துறப்பது உறுதி என்று கூறினார்.

தூது சென்றவர்கள் திரும்பி வந்து நடந்ததெல்லாம் நம்பியாரூரரிடம் கூற, அவருக்குக் கவலை மேலிட்டது; திகைத்தார்; விதிவிடங்கப் பெருமானைச் சரண் அடைந்தார்; துயர் தீர்க்குமாறு வேண்டினார்.

நள்ளிரவில் வீதிவிடங்கர் நம்பியாரூரரிடம் வந்து “என்ன நேரிட்டது! யாது துன்பம்?” என்று ஒன்றும் தெரியாதவர் போலக் கேட்கிறார்? பரவையார் சம்மதம் பெற்றுச் சங்கிலியாரைத் திருமணம் செய்திருக்கலாம். அப்படிச் செய்யவில்லை.

ஏன்? நம்பியாரூரர் வரலாறு நீடிக்கவேண்டும் என்பது நோக்கம்! நம்பியாரூரரின் தோழமைத் திறத்திலும் தண்டமிழிலும் தோய்ந்து மகிழ இயலாமல் போகுமே! நம்பியாரூரரின் தவிப்பை, அதன்மூலம் அவர் தம் இசைத் தமிழை அனுபவிப்பதில் இறைவனுக்கு ஆர்வம் அதிகம்! அது போகட்டும்.

திருவாரூருக்கு நம்பியாருரர் வந்த பிறகாவது இறைவன் தாமே வலியச் சென்று பரவையார் புலவியைத் தீர்த்து வைத்திருக்கக்கூடாதா? “கூடலையாற்றுாருக்கு வா” என்று அழைத்து வழிகாட்டி முன் செல்ல முடிகிறது. பரவையார் புலவியைக் காலத்தால் தீர்த்திருக்கக்கூடாதா? வேண்டி நிற்கும்பொழுதும் ஒன்றும் அறியாதவர்போல் யாது துயர் என்று கேட்கிலார் வீதிவிடங்கர்.

பரவையார் புலவியைத் தணிக்கச் சைவ அந்தணர் கோலத்தில் பரவையார் வீட்டுக்குச் செல்கிறான் இறைவன். பரவையார் உடன்படவில்லை. முதல் சுற்றில் பரவையார் உடன்படவேண்டும் என்று திருவாரூர் இறைவனே விரும்ப வில்லை. அப்படி விரும்பியிருந்தால் வீதிவிடங்கப் பெருமான் தன் உருவத்துடனேயே சென்றிருப்பான் - வீதிவிடங்கனாகவே சென்றருளியிருப்பான்; பரவையார் மறுத்திருக்க மாட்டார்.

திருவாரூர் இறைவனுக்குப் பரவையார் புலவி நீடிக்க வேண்டும். நம்பியாரூரரின் தவிப்பு கூடுதலாக வேண்டும். அடுத்து, நம்பியாரூரரின் உள்ளத்தில் எழும் தூய அன்பில்  திளைத்தாட வேண்டும்; அவர் செந்தமிழை மேலும் அனுபவிக்க வேண்டும் என்பது திருவுள்ளம்.

ஆதலால் விதிவிடங்கன் “பரவையார் சமாதானம் அடையவில்லை; மறுக்கிறாள்” என்ற செய்தியுடன் தம்பிரான் தோழரை அணுகுகிறார். நம்பியாரூரருக்கு ஏற்பட்ட ஏமாற்றம் தாங்கொணாத் துயரத்தைத் தந்தது.

திருவாருர் இறைவனை நோக்கி, “ஐயன்மீர்! பரவையாருடன் கூட்டுவிக்கத் தவறுவீராயின் உயிர் தரியேன்” என்றார். மீண்டும் திருவாரூர் இறைவன் துது போக உடன் பட்டார்.

வீதிவிடங்கன் தம் திருக்கோலத்துடன் பரவையார் மாளிகையை நண்ணினார். வீதிவிடங்கப் பெருமானின் திருக்கோலக் காட்சியில் ஈடுபட்ட பரவையார் விரைந்து சென்று வணங்கினார்.

பெருமான், “நம்பியாரூரன் நின்னையடைதல் வேண்டும்” என்றார். பரவையாரும் இசைந்தார். விதி விடங்கப் பெருமான் விரைந்து போந்து சுந்தரரை அணுகிப் பரவையாரின் உடன்பாட்டைத் தெரிவிக்கிறார்.

நம்பியாரூரர் பரவையாரின் மாளிகைக்குச் செல்லப் பரவையார் அன்புடன் வரவேற்றாள். தங்கள் பொருட்டு இறைவன் திருவாரூர்த் தெருவில் இருமுறை திருவடி நோக நடந்த கருணையை நினைத்து இருவரும் உருகினர். இந்த நிகழ்ச்சிகளைச் சுந்தரர் நினைத்து நினைத்து நெஞ்சுருகிப் பாடியுள்ளார்.

.....அடியேற்கு எளிவந்த
துதனைத் தன்னைத் தோழமை அருளித்
தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும்
நாதனை.....,

(7.68.8)

என்ற வரிகள் அவ்வரலாற்றுக்கு அகச்சான்று. இந்தத் துது தொடர்பாக ஏயர்கோன் கலிக்காமர் பிணக்குக் கொள்ள இறைவன் அப்பிணக்குக்கு நம்பியாரூரர் மூலமே தீர்வு காண்கிறார்.

சேரமான் தோழர்

சுந்தரர் தொடர்ந்து திருமணக் கோலத்தில் மகிழ்ந்து வாழ்தலை விரும்புகின்றார். திருநாகைக் காரோணப் பதிகத்தில் அணிகளும் பிறவும் வேண்டிப் பாடுகின்றார்.

பத்துரர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடி
பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநாள் இரங்கீர்
முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
அவையூணத் தந்தருளி மெய்க்குஇனிதா நாறும்
கத்துரரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே
                                                           (7.46.1)

.

இந்தப் பாடலில் நட்புரிமையின்பாற்பட்ட கிண்டல், கேலியெல்லாம் இருக்கிறது. நாகைக் காரோணத்து இறைவனும் ஆரூரர் வேண்டியன எல்லாம் வழங்கியருளினார். மேலும் கடிதில் செல்லக் குதிரையும் கொடுத்தார்.

நம்பியாரூரர் வாழ்க்கை இனிதே நடைபெற வேண்டும் என்ற கவலை இறைவனுக்கு உண்டு. தாமே தோழமையாக இருந்தாலும் யாதும் குறை வந்துவிடக் கூடாதே என்ற கவலை, இறைவனுக்கு இருந்தது. கலிக்காமருடன் இருந்த பிணக்கைத் தவிர்த்து, நட்பாக்கித் தந்தார்.  இந்தச் சூழ்நிலையில் சுந்தரரின் வாழ்க்கைத் தேவைகள் வளர்ந்து விட்டமையை நாகைக் காரோணப் பதிகம் விளக்கிக் கூறுகிறது. இவற்றை ஈடு செய்யத் தக்க வகையில் சேர அரசராகிய சேரமான் பெருமாளுக்குத் தகுதி மிகுதியும் கூடிய நிலையில் அறிமுகப்படுத்தி நட்புரிமைப் படுத்துகிறார்.

நம்பியாரூரைப் பற்றிய அறிமுகம் கிடைத்தவுடனேயே அவர் சுந்தரரைக் காணத் திருவாரூருக்கு வந்துவிட்டார். சுந்தரரும் அவரை வரவேற்று மகிழ்ந்தார். நம்பியாரூரரும் சேரமான் பெருமாளும் புற்றிடங் கொண்டானை வணங்கி மகிழ்ந்தனர்.

சேரமான் பெருமாள் தாம் இயற்றிய மும்மணிக் கோவையை மொழிந்தார். தம்பிரான் தோழர் "சேரமான் தோழ"ருமானார்.

சேரமான் தோழரும் சேரமான் பெருமாளும் திருஆல வாயிலை வணங்க எழுந்தருளினர். இடையில் பல திருத்தலங்களை, திருப்புத்துரர் உள்பட வணங்கிக்கொண்டு ஆலவாயை நண்ணினர். அங்கு, பாண்டிய அரசன், பாண்டியனின் மகளை மணந்திருந்த சோழன், சேரமான் பெருமாள் ஆகிய மூவேந்தர்களுடன் நற்றமிழ் வேந்தராகிய சுந்தரர் ஆலவாயிலுறை அடிகளை வணங்கிப் போற்றினார்.

சேரமான் பெருமானுக்கு ஆலவாயவண்ணல் முன்பே அறிமுகம் திருமுகப்பாசுரத்தின் வாயிலாக! திருப்பரங் குன்றத்து இறைவன் முன் மூவேந்தருடன் வழிபட்ட முறையைச் சேரமான் தோழர் திருப்பதிகம் கூறுகிறது.’

அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதும் என்று
அமரப் பெருமானை ஆருரர் அஞ்சி
முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே
மொழிந்து ஆறும் ஒர் நான்கும் ஒரொன்றினையும்



படியா இவை சுற்றுவல்ல அடியார்
பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே
குடியாகி வானோர்க்கும் ஒர்கோவும் ஆகிக்
குலவேந்தராய் விண்முழுதும் ஆள்பவரே

(7.2.1)

இப்பாடல் நம்பியாரூரர் வரலாற்றுக்கு ஒரு சிறந்த அகச் சான்று. பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் பலவும் வணங்கிய நிலையில் சேரமான் பெருமான், சேரநாட்டுக்கு எழுந்தருளும் படி வேண்டி நின்றார்.

சேரமான் தோழரும் உடன்பட்டுச் சேரமான் பெருமானுடன் எழுந்தருளிச் செல்லும் வழியில் காவிரி வெள்ளத்தைக் கடந்து கரையேறி ஐயாற்றிறைவனை வணங்கிக் கொங்கு நாட்டைக் கடந்து சேர நன்னாடு அடைந்தனர்.

சேர நன்னாட்டில் திருவஞ்சைக்களத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனைப் போற்றி வணங்கினார். சேர நன்னாட்டில் சேரமான் தோழருக்கு அரச வரவேற்பு வழங்கப் பெற்றது. சேரமான் தோழருக்குத் திருவாரூர் நினைவு வந்துவிட்டது.

பொன்னும் மெய்ப் பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னை என் பிழையைப் பொறுப்பானைப்
பிழையெல்லாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்றறி யொண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற் பழனத்தணி
ஆரூரானை மறக்கலும் ஆமே,

(7.59.1)

என நினைந்து பாடினார். இப்பாடல் மூலம் இறைவன் ஆன்மாவை ஆணவத்தின்-ஆதிக்கத்திலிருந்து மீட்பதற்கான மாயா கன்ம மலங்களை அதாவது, பொன், போகம் முதலியவற்றை ஆன்மாவுக்குக் கூட்டுவித்துப் பக்குவபடுத்திப் பின் மெய்ப் பொருளும் திருவும் கூட்டுவிக்கிறான் என்ற உண்மையை உணர்த்துகின்றார்.

பிழை பொறுத்தல் மட்டும் போதாது. பிழை தவிர்க்கவும் பணிக்கவேண்டும் என்ற வாழ்வியல் நெறி உணர்த்தப் பெறுகிறது.

சேரமான் தோழர் திருவாரூருக்குப் பயணமானார். அதுபோழ்து சேரமான் பெருமான் பெரும்பொருள்களுடன் சேரமான் தோழருக்கு விடை தந்து வழியனுப்பி வைத்தார். இடைவழியில் திருமுருகன் பூண்டி வருகின்றார், சேரமான் தோழர்!

திருமுருகன் பூண்டியில் கடவுள் ஆணைவழி, பொருள்கள் வழிப்பறி கொள்ளப்படுகின்றன. சுந்தரர் திருமுருகன் பூண்டித் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனை நோக்கி,

கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவ லாமை சொல்லித்
திருடு மொட்டெனக் குத்திக் கறைகொண்டு ஆறலைக்குமிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ் முரு கன் பூண்டி மாநகர்வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக்கு இங் கிருந்தீர் எம்பிரானீரே

(7.49.1)

என்று பாடுகிறார்.

வேடுவர் வழிப்பறி செய்கின்றனர். “நீர் எதற்காக இங்கு இருக்கின்றீர்” என்று வினவும் முறையில் இந்தப் பதிகம் முழுவதும் அமைந்துள்ளது. இறைவன் வழிப்பறி செய்த பொருள்களைத் திரும்பத் தந்தருளினன்.

இந்த நிகழ்ச்சிக்கும் - அதாவது நம்பியாரூரர் கொண்டு வந்த - சேரமான் பெருமாள் தந்த பொருளை வழிப்பறி செய்தமைக்குச் சேக்கிழார் ஒர் அருமையான காரணம் காட்டுகின்றார்; அக்காரணத்தை ஐய வினா வாக்குகின்றார், என்ன காரணம்?

திருமுருகன் பூண்டிஅயற்
செல்கின்ற போழ்தின்கண்
பொருவிடையார் நம்பிக்குத்
தாமேபொன் கொடுப்பதலால்
ஒருவர்கொடுப் பக்கொள்ள
ஒண்ணாமைக் கதுவாங்கிப்
பெருகருளால் தாங்கொடுக்கப்
பெறுவதற்கோ? அதுஅறியோம்,

(கழறிற்றறிவார் புராணம் 165)

என்பது பெரிய புராணம்.

தம்முடைய தோழனாகிய தம்பிரான் தோழருக்குப் பொருள் தாமே தரவேண்டும். மற்றவர் தரவும் கூடாது; இவர் பெறவும் கூடாது. மற்றவர் கொடுத்துப் பெற்றால் தம் நட்புரிமைக்கு இழுக்கு என்று சிவபெருமான் கருதியிருப்பார் போலும்! என்று சேக்கிழார் பாடுவது நினைந்து மகிழத் தக்கது.

இரண்டும் உடன் நிகழ்வது ஏன்?

அதன்பின், திருவாரூர் சென்றடைந்து சில நாள் தங்கியிருந்தார் நம்பியாரூரர்; மீண்டும் சேரமான் பெருமாளைக் காண வேணவாக் கொண்டு சேர நாட்டுக்குப் பயணமானார்; பயண வழியில் அவிநாசித் திருத்தலத்திற்கு எழுந்தருளுகின்றார்.

அவிநாசியில் அருகருகில் ஒரு வீட்டில் மங்கல முழங்கொலியும், மற்றொரு வீட்டில் அழு குரலும் கேட்கிறது. இந்த முரண்பட்ட நிலை சுந்தரருக்கு உவகையைத் தரவில்லை.  “இரண்டும் உடன் நிகழ்வது ஏன்?” என்று வினா எழுப்பி, அழுகுரல் கேட்ட வீட்டுக்குச் செல்கிறார். அருமந்தப் புதல்வனை முதலை வாய்ப் பறிகொடுத்த தாயின் அழுகை அது. உடனே சிவபெருமானை வேண்டி முதலையுண்ட பாலகனை மீண்டுத் தந்து தாய்க்கு மகிழ்வூட்டுகின்றார்.

கயிலைப் பயணம்

சேர நன்னாடு அடைந்து சேரமான் பெருமாளுடன் மகிழ்ந்துறைகின்றபோது திருவஞ்சைக் களத்தில் எழுந்தருளியுள்ள இறைவனைக் காதல் மீக்கூர வணங்கித் “தலைக்குத் தலைமாலை” எனும் பதிகம் பாடி அருள்கின்றார். இப்பதிகம் முழுவதிலும் திருவடிசாரும் வேட்கையைப் புலப்படுத்தினார்.

கயிலாயத்துறையும் இறைவன் வெள்ளை யானையை அனுப்பித் தம்பிரான் தோழரை அழைத்து வரும்படி தேவர்களை அனுப்பினான். சேரமான் தோழர் சேரமான் பெருமாளைச் சிந்தித்துக் கொண்டே வெள்ளை யானையின் மீது அமர்ந்து கயிலைக்குப் பயணமானார்.

இதனை அறிந்த சேரமான் பெருமாள் தனது குதிரையின் செவியில் திருவைந்தெழுத்தை ஓதி அவரும் பயணமானார். சுந்தரர் இவர்ந்து சென்ற வெள்ளை யானைக்கு முன்பாகக் குதிரை செல்கிறது.

தம்பிரான் தோழர் கயிலைநாதனை அணுகி வணங்கி நின்று சேரமான் பெருமாள் வந்திருப்பதை விண்ணப்பித்தார். சேரமான் பெருமாளும் அழைக்கப்பெற்றார்.

சேரமான் பெருமாள் உள்ளே சென்று வீழ்ந்து வணங்கித் “திருவுலாப் பாடினேன்; திருச்செவி சாத்தியருளப் பெறவேண்டும்” என்று விண்ணப்பித்தார். ஈசனும் 'சொல்லுக' என்றருளித் திருவுலாவைக் கேட்டார். திருக்கயிலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்குச் செந்தமிழில் இயற்றிய ஞான உலா பரிசு. சிவ பெருமான் ஞான உலாவைக் கேட்டருளினன். கயிலையில் பேசப்படும் மொழி எது? அம்மையப்பனுக்கு மொழி ஏது?

உண்மையில் கடவுளுக்கு நாடு, மொழி, இனம், மதம் இவற்றிற்கும் இணைப்புண்டாக்கி வேறுபாடு தோன்றப் பேசுவது தவறு. எல்லைகளைக் கடந்ததே கடவுள். கடவுளுக்கு நாடும் இல்லை; மொழியும் இல்லை; இனமும் இல்லை; மதமும் இல்லை.

ஆயினும் வாழும் மாந்தருக்கு நாடு, மொழி, இனம், மதம் இவையெல்லாம் உள்ளனவே. இந்த அடிப்படையில் ஆய்வு செய்தால் கயிலையின் மொழி தமிழேயாதல் வேண்டும். அல்லது கயிலைநாதனுக்குத் தமிழ் தெரியும் என்று அறியவேண்டும்.

சேரமான் பெருமானின் ஞான உலா அரங்கேறியது கயிலையில்! கயிலை வாசி அம்மையப்பன். அம்மை, திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தருளிய பின், திருஞான்சம்பந்தர் பாடிய மொழி “தோடுடைய செவியன்” என்ற தமிழ்தானே!

ஆதலால், சிவநெறி மரபுப்படி தமிழில் இறைவனை வழிபடலாம்; தமிழன் வழிபடலாம் என்பதே உண்மை. தமிழில் பாடிய சேரமான் பெருமானும் தம்பிரான் தோழரும் கயிலையில் பணிபுரியும் பேரின்ப வாழ்வில் திளைத்து மகிழ்ந்திருந்தனர்.

சுந்தரர் நெறி

சுந்தரர் வரலாற்றில் படிப்பினைகள் பல உண்டு. ஆய்வு செய்ய வேண்டியனவும் உண்டு. கயிலாயத்துறை இறைவன் சிவன், உமையொருபாகம் கொண்டவன்; உமையின் மீது நீங்கா விரும்பினன். அப்படியிருக்கச் சுந்தரரின் காதல், கயிலாயத்தில் அனுமதிக்கப்பெறாதது ஏன்?

சிவன் உமையிடத்துக் கொண்ட காதல் கவர்ச்சிக் காதல் அல்ல; ஐந்தொழில் நிகழ்த்தும் குறிப்புடைய காதல்; உலகுய்யச் செய்யும் காதல்! சுந்தரர் காதல் அத்தகையதன்று. இன்று நிகழ்கின்ற காதல் வாழ்வு, காமவேட்கை தணிந்ததாக நிகழ்வுறின் நன்மக்கட் பேறுண்டாம்!

நம்பியாரூரர் பிறப்பு, வளர்ப்பு, திருமண வாழ்க்கை அத்தனையிலும் வருணக்கலப்பு ஏற்பட்டுள்ளமையை ஒர்க! பிறப்பு, சைவ அந்தணர் குலத்தில்; வளர்ப்பு, அரசர் குலத்தில்; திருமணங்கள், முறையே உருத்திர கணிகையர் குலம், வேளாண் குலத்தில்! இங்ஙனம் சிவபெருமான் திட்டமிட்டு வருணக் கலப்பைச் செய்து வைத்தமையால் இறைவன் திருவுள்ளம் வருணபேதமற்ற சமுதாயமே என்பது தெளிவான உண்மை.

ஆனால், இன்று சமுதாய ரீதியிலும் சரி, சமய ரீதியிலும் சரி, சாதி வேற்றுமை நெகிழ்ந்து கொடுக்கக் கூட மறுக்கிறது! சாதி முறைகள் இறுக்கமாகிக் கொண்டு வருகின்றன. இது வரலாற்று உண்மைக்கு மாறானது; பண்பாட்டுக்கு முரணானது; தீது!

தமிழ்நாட்டில் பரவிய அயல் வழக்குகள் காரணமாகத் தமிழர் வாழ்க்கையில் நிலையாமையுணர்வு ஆதிக்கம் செலுத்தியது. வாழ்க்கையையே துன்பச் சுமையாக்கி விட்டனர். மனையற வாழ்க்கை கொச்சைப்படுத்தப் பெற்றது. கடவுள் பயப்படக்கூடிய பொருளானார்! கடவுள் வாழ்த்துப் பொருளாகவே விளங்கினார்.

இத்தகு வாழ்க்கை முறை நன்றன்று என்று தமிழ் மக்களுக்கு உணர்த்தி வாழ்வாங்கு வாழும் நெறியில் ஆற்றுப் படுத்தவே சுந்தரர் வரலாற்றைத் திருவருள் முன்னின்று இயக்கியதாகும். வாழ்க்கை பொருளுடையது; அர்த்தமுடையது. கடவுள் வாழ்த்துப் பொருள் மட்டுமல்ல; வாழ்வுப் பொருள் என்ற நெறிமுறை உருவாகியது சுந்தரர் வரலாற்றின் மூலம்தான்! இதனால் தமிழ்நாடு தனது நாகரிகத்தை வளர்த்துக் கொண்டது.

சமஸ்கிருத மொழியே அருச்சனை மொழி என்ற நடைமுறையைச் சுந்தரர் வரலாறு மாற்றியது. “அருச்சனை பாட்டேயாகும்” என்று சொற்றமிழ்ப் பாடல்களை அருச்சனையாக்கித் தமிழருக்காகத் தொடங்கி வைத்ததே சிவபெருமான்தான்! முதல் தமிழருச்சனை செய்தவர் சுந்தரர்.

இன்று தமிழருச்சனை தமிழ் மக்களால் கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பெற்றுள்ளது. ஆயினும் பரவலாக நடைமுறைக்கு வரவில்லை. தமிழ் மக்களுக்குத் தமிழார்வம் இல்லை! இஃது ஒரு தவக்குறைவே.

சைவ சமயம் சார்ந்த வாழ்க்கைக்குத் தாழ்வெனும் தன்மை இன்றியமையாதது. நம்பியாரூரர் தம்பிரான் தோழர்; அரச குடும்பத்தில் வளர்ந்தவர். யாராக இருந்தால் என்ன?

அடியார்களுக்கு வணங்கிய வாயினராதல் தவிர்க்க இயலாத கடமை என்பதைத் திருத்தொண்டத்தொகை விளக்குகிறது. அடியார்களிடம் வணக்கம் இன்றியமையாதது என்பதே திருத்தொண்டத்தொகையின் விழுமிய பொருள்.

இந்த உலகில் நிலவும் துன்பத்தை இயற்கை என்றும் நியதி என்றும் அனுபவிக்கும் கொள்கை தமிழருடையதன்று. இந்த உலகில் வாழ்க்கையை இன்புறு நலன்கள் நிறைந்த வாழ்க்கையாக மாற்ற வேண்டும் என்பதே வாழ்க்கையின் குறிக்கோள்.

சங்ககாலக் கவிஞன் வினா எழுப்பி விடை காண்கிறான். ஒரு வீட்டில் அழுகுரல், பிறிதொரு வீட்டில் மகிழ்ச்சி எதனால்? ஏன்? கடவுளின் படைப்பு என்பதைக் கவிஞன் கு.இ.vii.25.  மறுக்கிறான். அப்படி இன்ப துன்ப வேறுபாடுகளுடன் உலகத்தைக் கடவுள் படைத்திருந்தால், அக்கடவுள் பண்பில்லாதவன் என்பது கவிஞன் கருத்து.

மேலும் கவிஞன், “இந்த உலகம் இன்னாததாக இருக்கலாம் என்று அமைதி கொள்ளாதே; இனிய காண்க!” என்று ஆணையிடுகின்றான். “இனிய காண்க! இதன் இயல் புணர்ந்தோரே" என்பது சங்ககாலக் கவிஞன் வாக்கு!

இதே வாக்கினைச் சுந்தரர் அவிநாசியில் உயிர்ப்பிக்கிறார். ஒரு வீட்டில் மங்கல ஒலி முழங்கப் பிறிதொரு வீட்டில் அழுகை ஒலி கேட்க இரண்டும் உடன் நிகழ்வது ஏன்? என்று வினா எழுப்பி விடையும் கண்டார் சுந்தரர்.

ஆனால், நாம்தான் தொடர்ந்து இந்த இரு வேறு நிலையை மாற்றாமல் ஊழ் என்றும் விதியென்றும் சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலை நீடித்தல் விரும்பத்தக்கது அன்று.

சுந்தரர் வரலாறு முழுதும் நட்பின் இலக்கணம் பொதுளுகிறது. நட்பில் சிறந்து விளங்கச் சுந்தரர் வரலாறு துணை செய்யும். உயிர்த் தோழமை மனிதனை வளர்க்கும்; வாழ்விக்கும். நட்பு என்பது கடமை வழிப்பட்டது. சிறந்த நட்பில் பிழைகள் தெரியா. அப்படியே பிழைகள் ஒரோவழி தெரிந்தாலும் பிழைகளை ஏற்றுக்கொண்டு நட்பு பாராட்டுவதுதான் நட்பு.

குறைகளை மறந்துவிடுதல் மூலமே நட்பு வளரும். இதற்கு இலக்கியமாகத் திகழ்வது சுந்தரர் வரலாறு. நம்பியாரூரருக்கு வாய்த்த நண்பர்கள் இருதய சுத்தமான நண்பர்கள். சிவபெருமான், சுந்தரர், சேரமான் பெருமான் இவர்களிடையில் வளர்ந்த நட்பு எல்லையற்றது; அழிவற்றது. இத்தகு நட்பியல் நெறி நாட்டில் வளர வேண்டும்.

சுந்தரர் பாடிய பாடல்கள் ஏழாவது திருமுறையாக வரிசைப்படுத்தப் பெற்றுள்ளன. சுந்தரர் திருமுறையில் 100 பதிகங்கள் உள்ளன. 1026 பாடல்கள் உள்ளன. ஆயினும், சுந்தரர் அருளிய பாடல்கள் முழுமையும் நமக்குக் கிடைத்தில என்பதே வலிமையான கருத்து.

சுந்தரர் பதிகங்கள் அனைத்திலும் கடைக்காப்பு உண்டு. திருநாவுக்கரசர் பதிகத்தில் மட்டுமே கடைக்காப்பு இல்லை. சுந்தரர் திருமுறையின் விழுமிய சிறப்பு, சிவத்துடன் சுந்தரருக்கு இருந்த நெருங்கிய உறவும் உரிமையும் வெளிப்படும் நிலை, ஏவல், இகழ்தல், ஏசுதல் போன்றவை சுந்தரர் தேவாரத்தில் மிகுதி.

“மகத்திற் புக்கதோர் சனி எனக்கானாய்” என்றார். திரு ஒணக்காந்தளியில் “மதியுடையவர் செய்கை செய்யீர்” என்றார். இம்மொழிகளைத் திரும்பச் சொல்லவும் நாணம் ஏற்படுகிறது. ஆயினும் வன்தொண்டர் வாய்ச் சொற்கள் அன்றோ? அதனால் பெருமானுக்கு உவகையாயின.

சுந்தரர் இறைவனை அன்றாட வாழ்க்கையில் உடன் உறைவானாகப் பெற்றவர். பெற்று நடந்து கொண்டவர்; வாழ்ந்தவர்.

சங்க காலந்தொட்டே சிவபெருமானுக்கு “நீலமணி மிடற்று இறைவன்” என்ற பெயர் வழங்கி வருகிறது. ஒளவையார்,

நீலமணி மிடற்று ஒருவன்போல
மன்னுக பெரும நீயே!

என்றார். பாற்கடல் கடைந்த போழ்து கடலில் எழுந்த நஞ்சினைத் தான் உண்டும், அமுதத்தினை அமரர்களுக்குத் தந்தும் நஞ்சினை உமையம்மை துணையுடன் கண்டத்தில் அடக்கியதால் “நீலகண்டன்” என்ற பெயர் வந்தது. நஞ்சின் காரணமாகச் சிவபெருமான் கண்டம் கருத்திருந்தது.

சுந்தரர் திருமுறையில் “நீலமணி மிடற்றிறைவன்" என்று போற்றப் பெறுகிறான். திருப்புன்கூர்ப் பதிகத்தில் சுந்தரர் அந்த வரலாற்றையே குறிப்பிட்டுப் பாடுகின்றார். அதுமட்டும் அல்லாமல் நஞ்சுண்டிருந்த அருமைப் பாட்டைச் 'சீலம்’ என்று போற்றுகின்றார்.

கோல மால்வரை மத்தென நாட்டிக்
கோளரவு சுற்றிக்கடைந் தெழுந்த
ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய
அமரர் கட்குஅருள் புரிவது கருதி
நீலம் ஆர்கடல் விடந்தனை உண்டு
கண்டத்தே வைத்த பித்தநீ செய்த
சீலங் கண்டுநின் திருவடி அடைந்தேன்
செழும்பொழில் திருப்புன்கூர் உளானே,

(7.55.5)

என்பது அந்தப் பாடல்.

சைவம் வினைக்கொள்கையில் நம்பிக்கை உடையது. “இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்” விதிக் கொள்கையிலிருந்து நற்றமிழ் நம்பியாரூரர் மேலும் வளர்ந்து இம்மைச் செய்தது இம்மையிலேயே பயன் கூட்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.

தீவினையிலிருந்து அகலத் துணை செய்யவேண்டியது நெஞ்சமே! அப்படித் துணை செய்யாத நெஞ்சத்தை 'மட நெஞ்சமே!' என்று அழைக்கிறார். ஏன் மனிதனுக்கு மனம் நல்லதைச் செய்வதில்லை.

இந்த உலகில் ஒருவரைக் குத்திப் படுகாயப்படுத்தி உடைமையைப் பறித்தல் போன்ற களவினால் வரும் பாவங்களும் யாராவது ஒருவரைப் பகைத்துக்கொண்டு அப்பகை காரணமாக அவர்க்கு இழைத்த தீமைகளால் வரும் பாவங்களும் அடுத்த பிறவி வரை நீட்டிக்கா. இப் பிறப்பிலேயே வந்து வருத்தத்தைத் தரும். இது சுந்தரரின் கொள்கை; கோட்பாடு.

குற்றொரு வரைக் கூறை கொண்டு
கொலைகள் சூழ்ந்த களவெலாம்
செற்றொரு வரைச் செய்த தீமைகள்
இம்மையே வரும் திண்ணமே!
மற்றொரு வரைப் பற்றி லேன்மற
வாதெழும் மட நெஞ்சமே
புற்றரவுடைப் பெற்றம் ஏறி
புறம் பயந்தொழப் போதுமே!

(7.35.4)

ஆதலால், இப்பிறப்பிலேயே தீமைகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

மனித குலத்தில் உறவு முக்கிய இடத்தை வகிக்கிறது. உறவு மூலம் சமுதாயம் உருக்கொள்கிறது; வளர்கிறது; வாழ்கிறது. உறவு என்பது எல்லோருக்கும் உற்றுழி உதவுதல். “உற்று மற்றின்மை” என்று பாடுகின்றார்.

வாழ்க்கைக் கல்வி இன்றியமையாதது. சங்க காலத்தில் கல்வி போற்றப்படுவதாக இருந்தது. நீடூர்ப் பதிகத்தில் “கற்ற கல்வியினும் இனியானே இறைவனே!” என்றார்.

சுந்தரர் இறைவனை அனுபவித்தவர். சுந்தரர் பதிகங்கள், பதினேழு பண் வகையில் அமைந்துள்ளன. சுந்தரர் தமிழிசை கேட்பதில் சிவபெருமானுக்குள்ள விருப்பத்தை நினைவு கூர்கிறார்; திருஞானசம்பந்தருக்கும், திருநாவுக்கரசருக்கும் தமிழோடிசை கேட்கும் இச்சையால் காசு தந்த வரலாற்று நிகழ்ச்சியை நினைவு கூர்கின்றார். அவர்களுடைய தமிழிசைக்குக் காசு தந்த நீ, என் தமிழ்ப் பாடல் கேட்டு, கண் தரக்கூடாதா என்பது போலக் கேட்கின்றார்.

சுந்தரர் தம் காலத்திலும், தம் காலத்திற்கு முன்பும் வாழ்ந்த அடியார்களை மதித்தவர் போற்றியவர். திருஞானசம்பந்தர் திருஅவதாரம் செய்த சீர்காழி மண்ணைத் தம் காலால் மிதிக்க அஞ்சுகின்றார். தமது திருமுறையில் பல அடியார்களை நினைந்து பாடுகின்றார்.

திருநாளைப் போவாரைச் 'செம்மையே ஆய திரு நாளைப் போவார்' என்று பாராட்டுகின்றார். இங்ஙனம் அடியார்களைப் போற்றும் பாங்கு விழுமியது ஆகும். அடியார்கள் செய்த பிழைகளைப் பொறுத்தருளும் தலைவன் இறைவன் என்பதனை விளக்க ஒரு பட்டியலே தருகிறார்.

நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தன்
நாவினுக் கரையன் நாளைப் போவானும்
கற்ற சூதன்,நற் சாக்கியன், சிலந்தி
கண்ணப்பன் கணம் புல்லன் என்றிவர்கள்
குற்றம் செய்யினும் குணமெனக் கருதும்
கொள்கை கண்டுநின் குரைகழ லடைந்தேன்
பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்
பொய்கை சூழ்திருப் புன்கூரு ளானே! (7.56.4)

இந்தப் பாடலில் குறிப்பிடப் பெற்றுள்ள அடியார்கள் நன்றே செய்தனர். ஆயினும் உலகோர் பார்வையில் குற்ற மெனக் கருதப்படுகிறது. திருஞானசம்பந்தர் செய்த குற்ற மென்ன? திருவிழிமிழலையில் திருஞானசம்பந்தருக்கும் திருநாவுக்கரசருக்கும் படிக்காசு வழங்கிய இறைவன் திருஞானசம்பந்தருக்கு மட்டும் வாசியுள்ள காசாகத் தந்தருளினன்.

அப்பரடிகளுக்கு வாசியில்லாத காசு தந்தனன். இந்த வேற்றுமை நிலையைத் தாங்கிக் கொள்ளமாட்டாது இறைவனிடம் முறையிட்டு “வாசி தீரப்பாடி” வாசியில்லாத காசு பெற்றார் திருஞாசம்பந்தர்.

அதாவது அப்பரடிகள் வாசியில்லாத காசு பெற்ற மையைத் தாங்கிக் கொள்ளமாட்டாமை, இறைவன் அருளிய கொடையோடு மனம் நிறைவு பெறாமை ஒன்று. இரண்டாவது மதுரையில் பாண்டிய அரசன் சமணர்களைக் கழுவேற்றியபொழுது அந்த வன்செயலைத் தடுக்காமை.

திருநாவுக்கரசர் செய்த குற்றங்கள் சமண சமயத்திற்குப் போய் வந்தது; திருஞானசம்பந்தர் மதுரை செல்லத் துணிந்த பொழுது திருவருளை நம்பாது நாளையும் கோளையும் காரணம் காட்டித் தடுக்க முயன்றது; திருமறைக்காட்டில் மறைக்கதவம் திறக்கப் பாடியபொழுது, இறைவன் தமிழ் கேட்கும் இச்சையால் காந்தாழ்த்தியதை உணராது அயர்ந்தது ஆகியன.

திருநாளைப் போவார் இறைவன் திருவருள் கைவரப் பெற்றும் திருக்கோயிலுக்குள் நுழையாமல் தாழ்வு மனப் பான்மையுடன் தயங்கியது. மூர்க்கர் சூதாடியது. சாக்கியர் இறைவன்மீது கல்லெறிந்தது. சிலந்தி தன் வாய் எச்சிலால் இறைவனுக்குப் பந்தல் அமைத்தது; மேனியில் வீழ்ந்தது. கண்ணப்பர் மரபு மீறிய நிலையில் பூசனை செய்தது. அதாவது வாயில் நீர்கொணர்ந்து உமிழ்ந்து திருமஞ்சனம் செய்தது. இறைச்சியைத் திருவமுதாகப் படைத்தது; அதுவும் சுவைத்துப் பார்த்த இறைச்சியைப் படைத்தது. இறைவன் திருமுடியில் செருப்பணிந்த காலைத் துக்கி வைத்தது ஆகியன.

கணம்புல்லர் தலைமயிரைக் கொண்டு திருவிளக்கு எரித்தது. இவையெல்லாம் தூய மனத்துடன் செய்யப் பெற்றவை; குற்றமில்லாதவை.

எனினும் சுந்தரருக்குத் தன் குற்றத்தை இறைவன் மன்னிக்கவேண்டும் என்பது முறையீடு! அதற்காக முன்பே குற்றங்கள் மன்னிக்கப்பட்டிருக்கும் போது என் குற்றம் மட்டும் மன்னிக்கப்படக் கூடாதா? என்று கேட்கிறார். 1. உவமைகள்

சுந்தரர் தேவாரத்தில் நிறைய உவமைகள் உண்டு. ஒன்றிரண்டு உவமைகளைப் பார்க்கலாம். ஆடு கறப்பவர்கள், ஆடு கறக்கும்பொழுது பால் கறக்கும் பாத்திரத்தில் பிழுக்கை விழுந்துவிடும். பால் கறப்பவர்கள் பிழுக்கைகள் விழுந்த பால் என்று பயன்படுத்தாமல் கீழே ஊற்றிவிட மாட்டார்கள். பிழுக்கைகளை வாரிப் போட்டு விட்டுப் பாலை வீணாக்காமல் உபயோகப்படுத்துவார்கள்.

இறைவா! திருஒற்றியூர் உறையும் இறைவா! நான் உன் திருமுன்புக்கு அழுக்கு நிறைந்த உடம்போடு வந்தது உண்மை. ஆனால் நான் என்ன பிழுக்கை விழுந்த பாலைவிட மட்டமா? நான் பிழை செய்வேன்! என் சொந்த வாழ்க்கையில் பிழை செய்வேன்!

ஆயினும் இறைவா! நின் திருவடிக்கு யாதொரு தவறும் செய்யேன்! நின்னாமம் மறவேன்! ஏன் வழுக்கியே வீழட்டுமா? நான் வழுக்கியதால்தானே சபதம் செய்து கொடுத்தேன்!

ஆயினும் நின் திருப்பெயர் மறந்தேனா? இல்லை. இல்லை! என்னை ஆட்கொண்டு கண்ணுக்கு மருந்து கொடு என்றார். “பிழுக்கை வாரியும் பால் கொள்வர்” என்பது நல்ல உவமை.

அழுக்கு மெய்கொடுன் திருவடி யடைந்தேன்
அதுவும் நான்படற் பாலதொன் றானால்
பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்
பிழைப்ப னாகிலும் திருவடிப் பிழையேன்
வழுக்கி வீழினும் திருப்பெய ரல்லால்
மற்றுநான் அறியேன்மறு மாற்றம்
ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்
ஒற்றியூர்எனும் ஊர்உறை வானே!

(7.54.1)

சுந்தரர் கண்களை இழந்த நிலையில் மற்றவர் வழிகாட்டிச் செல்லும் தன் நிலையை, “கழித்தலைப்பட்ட நாயது போல” என்று கூறி விளக்குகின்றார். ஒருவன் நாயைக் கழியைக் காட்டி இழுத்துச் செல்லுதல் போல் தன்னையும் இழுத்துப் போவதாகக் கூறும் செய்தி உணர்வைத் தொடுகிறது; அழுகையை வரவழைக்கிறது.

அடுத்து, ஒரு சிறந்த உவமை, “வாழை தான் பழுக்கும் நமக்கென்று” என்பது. மானுட வாழ்க்கையில் இளமை நலம் பொருந்திய மகளிர் இன்பம் தருவர். அந்த இளைய மகளிர் என்றும் இன்பந்தருவர் என்று கருதுவது ஒருவகையான மயக்கம்.

ஒரு தடவை பழம் தந்த வாழை மீண்டும் தராது. அதுபோலத்தான் மகளிரும் தொடர்ந்து இன்பந்தர இயலாது என்று வாழையையும் இளைய மகளிரையும் உவமிக்கிறார்.

2. பழமொழிகள்

சுந்தரர் தமது பாடல்களில் பழமொழிகளை வைத்தும் பாடியுள்ளார். சுந்தரர் திருமுறையில் பயிலும் பழமொழிகள் பலகாலும் சிந்திக்கத் தக்கன.

நரியார்தங் கள்ளத்தாற் பக்கான பரி
சொழிந்து நாளும் உள்கித்....
திரியாத அன்பராய்ச் சென்றுமுன் னடி வீழும்
சிந்தை யாரைத்
தரியாது தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
பெரியோர்கள் புலியூர்ச்சிற் றம்பலத்துஎம் பெருமானைப்
பெற்றா மன்றே!

(7.90.3)

இந்தப் பாடலில் நரியின் வஞ்சனை எடுத்துக் காட்டப் படுகிறது. வஞ்சனையைக் கள்ளம் என்று குறிப்பிடுகிறார். இரண்டுபட்ட தன்மைக்குக் கள்ளம் என்று பெயர். அதாவது,  நன்றுடையார் போல் காட்டித் தீமை செய்தல். இது வஞ்சனை; தந்திரம்.

அடுத்து, உலக வழக்கில் பெருவழக்காகப் பயிலும் பழமொழி,

'பேயோடாயினும் பிரிவு தீயது' என்ற பழமொழி.

பேயோ டேனும் பிரிவொன் றின்னா
தென்பர் பிறரெல்லாம்
காய்தான் வேண்டிற் கனிதா னன்றோ
கருதிக் கொண்டக்கால்
நாய்தான் போல நடுவே திரிந்தும்
உமக்காட் பட்டோர்க்கு
வாய்தான் திறவீர் திருவா ருரீர்
வாழ்ந்து போதீரே!

(7.95.9)

ஆம்! பேயோடு கூடப் பிரிவு கூடாது. கூடிவிட்டால் பேய் உடனிருந்தபோது செய்த தீங்கைவிட அளவில் கூடுதலான தீமையைச் செய்யும்! ஆதலால், போயோடு ஆயினும் பழகிய பின் பிரியக்கூடாது. பெருந்தலைவர் காமராசர் இந்தப் பழமொழியை அடிக்கடி கூறுவார் என்பது நினைவு கூரத்தக்கது.

சுந்தரர், திருத்துறையில் எழுந்தருளியுள்ள இறைவனை நோக்கி “வேண்டினேன் தவநெறி" என்று வேண்டுகின்றார். சுந்தரர் நெறி எது? சுந்தரர் பரவையாருடன் கூடி வாழ்ந்ததைச் சேக்கிழார் யோகம் பயின்றார் என்று கூறி, சுந்தரரின் மனை வாழ்க்கையைச் சிறப்பிக்கின்றார்.

தென்னாவ லூர்மன்னன் தேவர்பிரான் திருவருளால்
மின்னாருங் கொடிமருங்குல் பரவையெனும் மெல்வியல்தன்
பொன்னாரும் முலைஓங்கல் புணர்குவடே சார்வாகப்
பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார்.

(தடுத்தாட்கொண்ட புராணம் 182)

என்றருளியமை அறிக. அதுபோலவே, “சங்கிலியார் மென் தடந்தோள் தோயும் பொழுதும் நின் திருவருள் மறக்க கில்லேன்” என்று அருளிய வற்றால் மனை வாழ்க்கை இழிவானதல்ல; முறையான மனைவாழ்க்கையிலேயே இம்மை, மறுமை நலன்களை அடையலாம் என்று உணர்த்துவது சுந்தரர் நெறி.

இறைவன் வாழ்த்துப்பொருள் மட்டும் அல்ல. வாழ்வுப் பொருள்; வாழ்க்கைப் பயணத்துக்கு அமைந்த தோழமை மிக்க துணை என்ற பார்வையில் இறைவனை வழிபட வேண்டும் என்பது சுந்தரர் நெறி.

மானுடத்திற்கு வாய்க்கும் நல்ல துணை தோழமையே யாம்! காதலிக்காமல் கூட வாழ்ந்து விடலாம். தோழர் இல்லாமல் வாழ முடியாது. ஒருவன் வாழ்க்கையில் அதிகம் பங்கேற்பவர் யார்? மனைவியா? தோழனா? தோழன்தான்!

மனைவி, துரிசுகள் - குற்றங்குறைகளை ஜீரணித்துக் கொள்ளமாட்டாள்; தோழன் ஜீரணித்துக் கொள்வான்; இதற்குப் பரவையார் - சிவபெருமான் இவர்களை ஒத்துப் பார்க்கலாம்! ஆதலால், வாழ்க்கை வளர, வாழ்க்கையில் இன்பம் பொதுள, பாதுகாப்புணர்வு தலைப்பட நல்ல தோழன் தேவை என்பது சுந்தரர் நெறி.

இன்பமும் துன்பமும் மனிதனின் படைப்பு. இவை மாற்றங்களுக்கு உரியன என்பது சுந்தரர் நெறி.

சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு நம்மனோர் வாழ்விற்கு ஓர் எடுத்துக்காட்டு! சுந்தரரின் திருமுறைப் பாடல்கள் நாளும் ஓதத் தக்கன.