குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/துறவு எது?


11
துறவு எது?

துறவு எது? துறவி யார்? என்பன போன்ற வினாக்கள் இன்றல்ல, நேற்றல்ல, பல நூறு ஆண்டுகளாகக் கேட்கப் பெற்றவை. இன்றும் கேட்கப் பெறுபவை. தமிழகம், தனக்கென ஒரு சிறந்த சமய நெறியைப்பெற்று விளங்கிய புகழுடையது. சேக்கிழார் தமிழகத்துச் சமய நெறியினைச் ‘செழுந்தமிழ் வழக்கு’ என்றார். இந்தச் செழுந்தமிழ் வழக்கு அயல் வழக்கை வென்று விளங்க வேண்டுமென்றார். திருஞானசம்பந்தர் வரலாற்றில் இந்தக் குறிப்பு நமக்குக் கிடைக்கிறது. இங்குச் சேக்கிழார் குறிப்பிடும் அயல் வழக்கு எது? சமண் சமயமே அயல் வழக்கு - சமண சமயம் கடுந்துறவின் பாற்பட்டது. அந்தச் சமணத்தை எதிர்த்தே திருஞான சம்பந்தர் கிளர்ச்சி செய்தார்.

மாணிக்கவாசகர் பௌத்தத்தைச் சந்தித்து இருக்கிறார்; பௌத்தத்தை வழக்காடி வென்றிருக்கிறார். அந்த வழக்கில் “நம் பெருமான் பெண்பால் உகந்தாடுகின்றானே” என்று பௌத்தர்கள் கேலி செய்திருக்கிறார்கள், மாணிக்க வாசகர்,

பெண்பா லுகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்
விண்பாலி யோகெய்தி வீடுவர்காண்.

என்று பதில் சொல்லுகிறார்.

அப்பரடிகள் ஐயாற்றில் கயிலையைக் காண்கிறார். கயிலைக் காட்சியை ஊனுருக, உளமுருக நின்று பாடுகிறார். கயிலையில் “காதல் மடப்பிடியோடும் களிறு வருவன” காண்கிறார். சுந்தரர், பரவையாரை மணந்து பெற்ற சிற்றின்பமே பேரின்பமாக வாழ்ந்தார் என்று சேக்கிழார் பாடுகின்றார். இவர்கள் நமது நாயன்மார்கள்; வழிகாட்டும் தலைவர்கள். ஒன்று தெளிவாகத் தெரிகிறது. வாழ்க்கைத் துறவை நம்முடைய சமய ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று.

வாழ்க்கை, பல்வேறு கூறுகளை உடையது. உடல் வாழ்க்கை - உயிர் வாழ்க்கை - உணர்வு வாழ்க்கை என்றெல்லாம் பகுத்துக் காணுவர். சிலர், உடல் வாழ்க்கைக்குரியதையே உயிர், உணர்வு வாழ்க்கைக்கும் உரியதாக்கிவிடுவர். அது விலங்கியல் வாழ்க்கை. இந்த வாழ்க்கைப் படிகள் அனைத்தையும் அடைந்து அனுபவித்து அதனதன் எல்லையிலே நின்று உணர்விற் சிறந்து வாழ்தல் சிறப்புடைய வாழ்க்கை - சீலம் நிறைந்த வாழ்க்கை.

திருஞானசம்பந்தர் சமணத் துறவிகளைப் பார்த்து வியப்புப் பொருள்படக் கூறுவதுபோலக் கூறுகிறார், “துறவி யாகுமே” என்று! நீ துறவியாவாய் - எப்பொழுது? துறப்பதினால் மட்டும் துறவியாகி விடுவதில்லை. துறக்கக் கூடாத ஒன்றைத் துறக்காமலிருப்பதின் மூலமே துறவியாகின்றாய்? துறந்த பொருட்களின் பட்டியல் பெருகலாம். ‘உடை துறந்தேன்’ என்பார் ஒருவர். அதில் அவருக்கென்ன இழப்பு? உடலுக்கல்லவா இழப்பு? “உணவைத் துறந்தேன்!” என்பார் ஒருவர். அதில் அவருக்கென்ன இழப்பு? உடலுக்கல்லவா இழப்பு? துறந்த பொருள்களின் பட்டியல் பெருகுவதால் பயனில்லை. எல்லாரும் எல்லாவற்றையும் வைத்து கொண்டா வாழ்கிறார்கள்? மகிழ்கிறார்கள்? காலால் நடத்தல் துறவு என்றால், உலகத்தில் ஆயிரம் ஆயிரம் பேர் கால்களால் நடக்கிறார்கள். அவர்கள் எல்லாம் துறவிகளா? ஒரு வேளை உண்பது துறவென்றால் அது தானும் உண்ணாதார் பலரிருக்கிறார்கள். அவர்களைத் துறவியாக்கி விடலாமா? ஆதலால் துறந்த பொருட்களைக் கொண்டு துறவியை நிர்ணயிக்க முடியாது. துறக்கக்கூடாததை அவன் துறக்காமல் இருக்கிறானா? திருஞானசம்பந்தர் உண்மைத் துறவு நிலையை விளக்குகின்றார். நீ துறவாதிருந்தால் துறவியாவாய் என்கிறார். எதைத் துறக்கக்கூடாது? இறைவன் திருநாமத்தை நெஞ்சு துறக்கக்கூடாது; மறக்கக்கூடாது; ஏத்தி வழிபடத் தவறக்கூடாது; இறைவன் திருநாமத்தை மறவாது நினைப்பற நினைந்து ஏத்தி வாழ்தலின் மூலமே துறவியாவாய் என்கிறார், அதுவே துறவுக்கு இலக்கணம் என்பதைத் ‘துறவியாகுமே’ என்று வலியுறுத்துகிறார்.

பௌத்தத் துறவிகள் கடவுளை மறந்தனர். சமணத் துறவிகள் நோன்பே கடவுளெனக் கொண்டனர். இன்றையத் துறவிகளில் சிலர், கடவுளை மறந்து சாதியே அனைத்தும் என்று சாதிவெறி பிடித்து அலைகின்றனர். சிலர் - உருத்திராக்கம் அதிகமாக அணிபவர்கள் - கடவுளை மறந்து காசுகளை எண்ணுகின்றனர். கடவுட் கோயில் நமக்கு வேண்டாம். காணிகளே வேண்டும் என்று சொல்லிக் கோயிலைப் பாழடித்து விட்டுக் காணிகளை வைத்துக் களிப்புறுகின்றனர். இப்படிப்பட்ட ‘துறவிகள்’ நம்முடைய தலைமுறையில் இல்லையா? என்ன? தில்லைக்குச் சென்று அங்குள்ளோரைக் கேட்டால் விடை கிடைக்கும். உடை துறவுக் கோலந்தான்! வாழும் வகை துறவு போலத்தான் தெரிகிறது! ஆனாலும் துறவன்று! கனியின் தோல் பழுத்து பின் உட்புறம் பழுப்பதில்லை. அகத்திற் கனிந்த, கனிவே தோலையும் பற்றுகிறது. சுமைமிக்க கனிவு புறத்திலிருந்து அகத்தே செல்வதன்று. புறம் வேண்டுமானால் வாயிலாக இருக்கலாம். முதற்கனிவு கனியின் உட்பகுதியேயாகும். கனியின் உட்புறம் கனியாமல் தோல் மட்டும் கனிநிறம் காட்டினால் அது கனியல்ல, வெம்பல்! துறவிலும் உள்ளம் பழுக்கவேண்டும். ‘பழுத்த மனத்து அடியார்’ என்பார் மாணிக்கவாசகர். இன்றோ உடல் பழுத்திருக்கிறது; உடை பழுத்துக் காட்டுகிறது; ஆனாலும் உள்ளம் பழுக்கவில்லை! ஆங்காரம் பிடித்தாட்டுகிறது. இவர்கள் திருஞான சம்பந்தர் கூறிய துறக்கக் கூடாத ஒன்றைத் துறந்துவிட்டனர். ஆதலால் இவர்கள் இன்னும் ‘துறவியல்ல இனிமேலும் துறவியாதல் அரிது. உண்மைத் துறவியாக வேண்டுமா? திருஞானசம்பந்தர் கூறுவதைப்போல இறைவன் திருநாமத்தை நினைப்பற நினைந்து ஏத்துங்கள்! அந்தச் சீலமே துறவாக்கும். இதனைத் திருஞானசம்பந்தர்,

பிறவி யறுப்பீர்காள்! அறவனாரூரை
மறவா தேத்துமின், துறவியாகுமே!

என்று பாடுகின்றார்.