குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/ஈதலுக்குக் காலம் ஏது?


10
ஈதலுக்குக் காலம் ஏது?'

தமிழர்நெறி வழங்கும் நெறியே! வாங்கும் நெறியன்று.

“நல்லாறு எனினும் கொளல் தீது, மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று” என்று வள்ளுவம் பேசும். ஒளவைபாட்டி “இட்டார் பெரியோர்” என்றே கூறினார். “தம்மை மாறியும் அறம் புரிவது இந்நாடு” என்றார் பெரும்பற்றப்புலியூர் நம்பி. ஆனால் ஆரிய மரபு கொடுப்பதல்ல; கொள்ளுவதேயாகும். அவர்கள் கொள்ளுவதன் மூலமே பெரும் பேறு எய்துகின்றனர். மனித இயலுக்கு மாறான அறமாகும் இது. கொடுப்பதிலேதான் உயிர். அன்பைப் பெறுகிறது. இன்பத்தை அடைந்து அனுபவிக்கிறது. உலகின் எல்லா உயிர் இனங்களுமே கொடுப்பதில் தான் மகிழ்ச்சியடைகின்றன. செடிகள், கொடிகள், மரங்கள் மனித குலத்திற்கு வழங்கும் கொடை அம்மம்ம, எவ்வளவு அற்புதமானவை! அதனாலன்றோ, வகை வகையாய் நிற்கும் செடி, கொடி மரங்கள் வையகத்திற்கு அன்பு செய்கின்றன என்று பாரதி பாடினான். கொடுத்தலினும் கொள்வது ஒருவகைத் தகுதிக் குறைவே. தமிழன் இத்தகு கொடை வளத்தை உயிரெனப் போற்றுபவன். தமிழன் பொருளீட்டுவான். ஏன்? வாழவா? இல்லை; வாழ்விக்கவே! வாழ்விப்பதன் மூலமே அவன் வாழ்வான். ‘இயல்வது கரவேல்’ என்பது அவனது பொருள் பொதிந்த வாழ்க்கைப் பழமொழி. கொடைத் தன்மைக்கு கையிலுள்ள பொருள் அளவல்ல. அல்லது இன்றைக்கு உருக்குலைந்து வழங்கும் பண்பற்ற பழமொழியாகிய “தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்” என்ற பழமொழியின் பாங்குமல்ல.

ஈதல், இசைபட வாழ்தல் உயிர்க்குற்ற நெறியாகும். கொடுத்தால் மட்டும் போதுமா? சிலர் கொடுப்பர், ஆனாலும் அது கொடையாகாது. பெறுவான் தவம் தூண்டக் கொடுப்பதும் உண்டு. இயல்பாக நிகழ்வதே கொடை. ஏதாவதொரு தூண்டுதலின் மூலம் கொடை நிகழுமானால் அதுவும் கொடையன்று. கொடைக்குக் கொடையே குறிக்கோள்! அஃதின்றி கொடைக்கு வேறு உள்நோக்கம் வருமானால் அது கொடையன்று; வணிகமே! அறவிலை வாணிகர் ஆதலைத் தமிழகத்து ஆன்றோர் விரும்பியதில்லை. இவையெல்லாவற்றையும் விட கொடை வழங்கக் காலம் தாழ்த்தக்கூடாது. காலம் தாழ்த்தப்படுமாயின் கொடை பெறுவானின் தகுதி குறையும். பெறுவானின் தகுதியைக் குறைக்கும் வகையில் வழங்குதல் கொடையன்று. பெறுவான் தகுதியை உயர்த்தும் வகையில் கொடை நிகழுதல் வேண்டும். ஆதலால் காலம் தாழ்த்திக் கொடையளித்தல் தகுதியுடையதன்று. சிலர் காலம் தாழ்த்துதல் மட்டுமின்றிப் பலதடவை கூறிக் காலத்தைத் தள்ளிப்போடுவர். சிலர் கொடைக்கு மனம் இருப்பதாகவும் ஆனால் காலம் ஒத்து வரவில்லையென்றும் கூறுவர். அங்ஙனம் கூறுதல் வண்மைக்கு அழகன்று; வாழும் நெறியுமன்று.

சீர்காழியில் வாழ்ந்த மக்கள், வண்மையிற் சிறந்தவர்கள்; வழங்குவதில் புகழ்பெற்றவர்கள்; காலத்தில் கொடுத்தவர்கள்; எக்காரணத்தை முன்னிட்டும் ‘நாளை’ என்றும், ‘மறுநாள்’ என்றும் காலம் கூறிக் கடத்தாமல் வழங்கியவர்கள். அதனால்தான் போலும், திருஞானசம்பந்தர் அழுதவுடன் அவர் தம் தந்தையைத் தேடாமல் - தேடி உணர்த்தாமல் - நேரடியாகவே - உடனடியாகவே அன்னைக்கு அன்னை பராசக்தி பாலட்டி ஊட்ட முன் வந்தாள். வாழும் மக்கள் இயல்பு கடவுளியல் இயங்கவும் துணை செய்யும்போலும்! இதனைத் திருஞானசம்பந்தர் -

மாலும் பிரமனும் அறியா மாட்சியான்
தோலும் புரிநூலும் துதைந்த வரைமார்பன்
ஏலும் பதிபோலும் இரந்தோர்க் கெந்நாளும்
காலம் பகராதார் காழிந் நகர்தானே,

என்று பாடுகின்றார்.