குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/பத்திமை யென்னும் வித்து


4
பத்திமை யென்னும் வித்து

பத்திமை வாழ்க்கை எளிய ஒன்றன்னு. பத்திமை வாழ்க்கையை இன்று மேற்கொண்டொழுகுவோர் பலகோடியாக இருக்கலாம். ஆனாலும் அவர்களில் எத்துணை பேர் பத்திமைப் புனலில் தோய்ந்து எழுந்தவர்கள்? எத்துணை பேர் பத்திமைப் புனலில் தோய்ந்து எழும் தகுதியுடையவர்கள்? என்பதை எண்ணிப் பார்த்தால் ஒருசிலர் கூடத் தேறமாட்டார்கள். சின்னங்கள், சடங்குகள் ஆகியவை கருவிகளே தவிர ஞானமாகா. சடங்குகள் தொடக்க நிலையேயன்றி முடிவு நிலையாகா. இன்று நம்மிடையில் நிலவும் சமய வாழ்க்கை, சடங்கு நெறிச் சமய வாழ்க்கையே தவிர சீலம் நிறைந்த சமய வாழ்க்கையல்ல.

நம்முடைய உடலியல் வாழ்க்கை விந்தையானது. உடலியற் பொறிகள் - புலன்கள் வேற்றுமை இயல்புடையன. ஆயினும், நோக்கத்தால், பயன்படும் திறத்தால் ஒற்றுமையுடையன. உடலியற் பொறிகள் - புலன்கள் தோற்றத்தால் ஒருமைப்பாடுடையன. இந்த உடலியல் வாழ்க்கை பழக்கத்தால் பண்படுத்தப் பெறவேண்டிய ஒன்றாகும்; வழக்கத்தால் வளப்படுத்தப் பெறவேண்டிய ஒன்றாகும்.

கு.இ.VII.3. 

இந்த உலகியலில் எங்கும் எதிலும் சுவையூற்றுக்கள் மலிந்துள்ளன. அச் சுவையினை மோப்பம் பிடித்துச் செல்லும் இயல்பின புலன்கள். புலன்கள் தாம் மட்டும் செல்வனவல்ல; தம்மையுடைய தலைவனையும் இழுத்துச் செல்லும் தகையன. அங்ஙனம் புலன்கள் இழுக்கும் பொழுது, இழுப்புழிச் செல்லாமல், செல்லும் நெறி தேர்ந்து அவ்வழியில் மட்டும் புலன்களைச் செலுத்தித் தாமும் செல்ல வேண்டியது மனித வாழ்க்கையின் கடமை. வேளாண்மைக்குக் களை, பகை, நல்ல பத்திமை வாழ்க்கைக்கு உயிர்ப் பகையாகிய காமம் முதலிய அறுவகைப் பகைகளையும் வெற்றி பெறுதல் வேண்டும். அடுத்து, மாறாத இன்ப அன்பை அடையத் தடையாக இருப்பவை குணங்களேயாம். அரச குணம் என்று சொல்லக்கூடிய உயர்ந்த குணம், அறிவு விருப்பமுடையது; ஆள்வினை யாற்றல் உடையது; விரைந்து தொழிற்படும் இயல்பினது. ஆயினும் இக் குணம், உலகியல் இன்பத்திற்கு ஏற்புடையதானாலும் நிறை இன்பத்திற்குத்தடையே. விண்ணின்றிழியும் துளிகள் பலப்பலவாகச் சிதறும் பொழுது உரிய பயனை அவை தருவதில்லை. அந்த நீர்த்துளிகள் ஒரு காலாக, ஓர் ஆறாக, ஓர் ஏரியாக உருமாறும் பொழுதே உண்மையில் அவை உலகுக்குப் பயன்படுகின்றன. அதுபோலவே, சிந்திக்கும் திறனுடைய சித்தம், சிந்தனையை ஒரு நெறியின்பாற் படுத்திக் கொள்ளத் தவறினால் சிந்தனைத் திறன் பயனற்றுப் போகிறது. அதனாலன்றோ, “ஒரு நெறிய மனம் வைத்து உயர்ஞான சம்பந்தன்” என்றார் ஆளுடைப் பிள்ளையார். “ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனம் இல்லை” என்றார் அப்பரடிகள். “ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்” என்றார் வள்ளலார். ஆதலால், நுண்ணுடலின் செயலுறுப்புக்களாகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு கருவிகளையும் ஒருநெறிப்படுத்தவேண்டும். இவையனைத்தும் செய்தாலும் இதயத்தின் ஆழத்தில் பேய்ச்சுரையை விதையாகப் போட்டுவிட்டால் என்ன பயன்? இதயத்தின் ஆழத்தில் பத்திமை யென்னும் விதையை விதைக்க வேண்டும். இங்ஙனம் பத்திமையாகிய வித்தை விதைத்த பிறகு, உலகப் பொது நூற் புலவர் திருவள்ளுவர் கூறிய செம்பொருளை - மெய்ப்பொருளை நிலையான உணர்வில் நினைவு கூர்தல் வேண்டும். தனக்குவமையில்லாத் தலைவனாக - சிவனெனும் நாமம் தனக்கேயுடைய செம்மேனியம்மானாக விளங்கும் சிவபரம் பொருளை நீள நினைந்தும் - நினையாமல் நினைந்தும் வாழ்த்தி வணங்குதல் வேண்டும். இங்ஙனம் வாழக் கற்றுக் கொண்டால் இறைவன் வாழ்க்கையை மட்டும் அளிப்பதில்லை. சிவபெருமான் தனக் குரியனவாகப் பெற்றிருக்கும் நலன்களையெல்லாம் உயிர்க்கு வழங்கி வாழ்வித்தருளுவான். சீவன், சிவமாதலிற் சிறந்த பேறு வேறு எது? இந்த இனிய பேற்றினையுடைய பொறிகள் வழி செல்லற்க; பொறிகளை அரன் பணியில் ஆற்றுப்படுத்துக! மூவாத் துன்பத்திற்கு ஆளாக்கும் முக் குணத்தை எண் குணத்தான் தாளை வணங்குதலில் ஈடுபடுத்துக! சித்தத்தைச் சிவன்பால் வைத்து ஒன்றுக! ஒரு நெறிய மனம் பெறுக! நீள நினைக்கும் நெஞ்சில் பத்திமை என்ற விதையை விதைத்திடுக! இன்ப அன்பை எளிதில் பெறலாம்.

பத்திப்பேர் வித்திட்டே பரந்தஐம் புலன்கள்வாய்ப்
பாலேபோகா மேகாவாப் பகையறும் வகைநினையா
முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள்வாய்
மூடாவூடா நாலந்தக் கரணமு மொருநெறியாய்ச்
சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள்
சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையுமிடங்
கத்திட்டோர் சட்டங்கங் கலந்திலங்கு நற்பொருள்
காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே.

- திருஞானசம்பந்தர்