குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/உயிருக்குரிய உணவு


3
உயிருக்குரிய உணவு !

ஊண் உண்ணப்படுவது. உண்பது ஒரு சடங்கல்ல. அஃதொரு கடமையல்ல; அஃதொரு பணி. பயன் கருதிச் செய்ய வேண்டிய பணி. பயன் அடையத்தக்க வகையில் செய்ய வேண்டிய பணி. ஊண் பலவகை. வாழ்க்கையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஊண் தேவை. இன்று உடல் இயக்கத்திற்கு உண்ணப்பெறும் உணவையே உணவு என்று பலர் கருதுகிறார்கள். மற்றைய உணவுகளைப்பற்றி அவர்களுக்குத் தெரியாது. ஏன்? உணவையுங்கூடப் பலர், உடலியக்கத்திற்கு என்று கருதி உண்பதில்லை. சுவைத்து உண்பது நன்று. ஆனாலும் சுவைக்காக உண்ணக்கூடாது. உடல் இயக்கத்திற்கும், பணிக்கும் தேவைப்படும் ஆற்றலுக்கும் ஏற்றவாறு உணவு முறை அமையவேண்டும். உண்ணும் உணவு, உடலுக்கு வலிமையே. அஃது இயங்கும் ஆற்றலை வழங்குவதாக இருக்க வேண்டும். உடல் இயக்கத்திற்காகவே உண்கின்றோம். உண்பதற்காக அல்ல. உடல் இயக்கத்திற்கு உண்ணப்பெறும் உணவைப்போலவே அறிவியக்கத்திற்கு உண்ணவேண்டிய உணவு உண்டு. அதனை வள்ளுவம், ‘செவியுணவு’ என்று கூறும். வாய் உணவிற் சுவைகாண்பது போலவே செவியாலும் சுவை கண்டு உண்ணவேண்டும். அறிவுடைய வாழ்க்கை வாழ வேண்டும். செவிச் சுவை உணரார், வாய்ச்சுவை உணவு உண்பது வறிதே பயனற்றுப்போகிறது.

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்?

என்பார் திருவள்ளுவர்; செவியால் சுவைத்து வாழாத வாழ்க்கை அறியாமையின் காரணமாக அவலத்தில் ஆழ்ந்து அழியும்.

உயிரியல் வாழ்க்கைக்கு உடல் கருவியேயாகும். உடற் கருவியற்ற உயிரியல் வாழ்க்கை பயன்படுதலும் இல்லை; பயன் கொள்ளுதலும் இல்லை. உயிரின் வளத்தை மையமாகக் கொண்டே உடலியல் வாழ்க்கை அமைகிறது; உலகியல் வாழ்க்கை உருவாகிறது - உயிர் செழித்து வளரவும் உணவு தேவை. அது எந்த உணவு? உடல் வளர்ச்சிக்குரிய உணவு ஒருபொழுது உண்பதில்லை, அடிக்கடி உண்ண வேண்டும். பசியை முற்றாக மாற்ற உணவால் முடியாது. பசித்து உண்பவர்க்கு மீண்டும் பசி வரும் என்பர் மாதவச் சிவஞான முனிவர். ஆதலால் உடல் இயக்கத்திற்குப் பயன்படும் உணவு, சிற்றுணவு என்று கருதப்பெறும். இந்த உணவுக்குப் பசியை ஆற்றுகின்ற ஆற்றல் உண்டு. ஆனால் பசியை மாற்றுகின்ற ஆற்றலில்லை. செவி வழியாக உண்ணப்படும் உணவோ நல்லுணவு. அது நாட்டில் எளிதாகக் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் செவிச்சுவை முற்றாகக் கைகூடுவதில்லை. அது மேலும் மேலும் பசியை எழுப்புகிறது. செவியுணவு, உயிர் நிறைவைப் பெறத் துணை செய்யும். ஆனாலும், அதுவே நிறைவாகாது. வாயுணவும் செவியுணவும் உடல் வாயில்களான வாய் வழியாகவும் செவி வழியாகவும் உண்ணப்பெறுவன; உயிர், நிறைவை நோக்கி நடத்தும் பயணத்திற்குத் துணை செய்வன. ஆனால் உயிருக்கு நேரடியான உணவாகா இவை. உயிருக்கு உணவு திருவருளே. உயிருக்கு உற்ற குறையை நீக்க, நிறைநலம் வழங்கத் திருவருளாகிய உணவாலேயே இயலும். குறைவிலா நிறைவாழ்வான நல்வாழ்க்கையை-துன்பத் தொடர்பில்லாத நிறை இன்ப வாழ்க்கையை நேரடியாக வழங்கும் ஆற்றல் வாயுணவுக்கும் செவியுணவுக்கும் இல்லை. ஆயினும், இவை இரண்டும் இன்றி உயிர் நிறை நலம் பெறமுடியாது. இவையிரண்டின் துணையுடன் உலாவரும்போதே உயிர் தனக்குரிய உணவை உண்ண முயலவேண்டும்.

உயிர்களுக்குரிய உணவு எது? இறைவன் திருவருளை நினைந்து தமிழ் செய்தலே உயிருண்ணுதற்குரிய உணவாகும். இறைவனை நினைத்தலின்மூலம் உண்ணும் உணவு, நிறைஉயிர் உண்ணத்தக்க உணவாகும். இந்த உணவு குறைந்தால் துன்பம் வந்துவிடாது; மிகுதியானாலும் துன்பம் வராது. இறையை - இறைவன் திருவருளை உன்னி உன்னி எண்ணுதலை உணவு என்றே திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். உடலுக்கிடும் உணவை உடல் ஏற்று, முறையாகச் செரித்து உணவின் பயன்கொள்ளும்பொழுது, உடல் பிணியினின்றும் விடுதலை பெறுகிறது; பயன் கொள்கிறது. உயிர் இறைவன் திருவருளை நினைந்து தவம் செய்தலின் மூலம் அத் திருவருளின் தன்மைகளைத் தனக்கு உரிமையாக்கிக்கொள்ளும்பொழுது, பிறவிப்பிணியிலிருந்து விடுதலை பெறுகிறது; வாழ்க்கையின் பயனைக் கொள்கிறது.

உயிர் உண்ணும் உணவெனத் தக்கது இறைவன் திருவருள் என்றால், அந்த உயிர் திருவருளில் ஒன்றித் திளைத்து உறுபயன் கொள்ளவேண்டும் என்பது தெளிவாகிறது. மேலும், உணவினால் உடலே பயன்பெறுகிறது; உணவிற்குப் பயனில்லை. உணவிற்காக யாரும் உண்பதில்லை. அதுபோலத் திருவருளால் உயிரே வளம் பெறுகிறது; உயிருக்கே ஆக்கம். உயிருக்கு உண்ணப்படும் திருவருள் நிறைவைத் தரவல்லது. உயிருக்கு நிறைவைத் தரத்தக்க வகையில் பத்திமை செய்தலே பாங்கான முறை. இதனைத் திருஞானசம்பந்தர்.

இறையூண் துகளோ(டு) இடுக்கண் எய்தி
இழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
நிறையூண் நெறிகருதி நின்றீரெல்லாம்
நீள்கழ லேநாளும் நினைமின் சென்னிப்
பிறைசூழ் அலங்கல் இலங்கு கொன்றை
பிணையும் பெருமான் பிரியாத நீர்த்
துறைசூழ் கடந்தைத் தடங்கோயில் சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே.

என்று பாடுகின்றார்.