குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/வெற்றி


23
வெற்றி

இறைவன் ஏத்தலுக்குரியவன், போற்றிப் புகழ்தற்குரியவன். ஏன்? இறைவன் என்ற காரணத்திற்காகவா? அவன் பலவற்றைத் தந்தருளுபவன் என்பதினாலா? அழித்திடுவான் என்ற அச்சத்தினாலா? அச்சம் பயம் ஆகியவற்றில் தொடங்கும் வழிபாடு, வழிபாடல்லவே.

பின் ஏன்? இறைவனுடைய வெற்றியைத்தான் பாடிப் பரவுகின்றோம். அவன் பெற்ற வெற்றிக்காகவே அவன் வாழ்த்தப் பெறுகிறான். வெற்றியா? யாரை வெற்றி கொண்டான்? வெற்றி கொள்ளப்பட்டவன் பகைவனா? வெற்றி என்றால் பகைவன் ஒருவன் வேண்டுமே! இறைவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்! குணம் குறி இல்லாதவன்! அப்படியானால் அவனுக்கு ஏது பகைவன்?

இறைவனுக்குப் பகைவனில்லை. பகைவனில்லை - என்றால் புராணங்களில் வருவன பொய்யா? முப்புரம் எரித்த வரலாறு! அறுமுகச் செவ்வேள் சூரபதுமனுடன் போர் புரிந்தது! இவையெல்லாம் என்ன? சூரபதுமன் இறைவனுக்குப் பகைவன் தானே! அரக்கர் இறைவனுக்குப் பகைவர்தானே!

புராணங்களைப் படித்துணரும் கலை, ஒரு நுண்கலை. புராணங்களுக்கு வெறும் சொற்பொருள் காண்பது போதாது; கூடாது. உய்த்துணர்தலுக் குரியன ஏராளம் உண்டு. அரக்கர் அரனுக்குப் பகைவரில்லை! சூரபதுமன் முருகனுக்குப் பகைவனல்லன்! பின் - சூரபதுமனுக்குப் பகையாகிய ஆணவம், அறியாமை, துன்பம் ஆகியன முருகனுக்கும் பகையே. தனக்குப் பகையாக - உடன் பிறந்தே கொல்லும் பகையாக விளங்கும் அறியாமை மேலீட்டால் அரக்கர் மெய்ப்பொருள் அறிவதில்லை; தம் அறியாமையறிந்து விலக்குவதில்லை. அதுமட்டுமா? ஆணவச் சேர்க்கையால் அதிகாரச் செருக்கு தலைகாட்டுகிறது. போற்றி வணங்கிப் பாங்காக இருந்து பணி செய்ய வேண்டியவர்களைக்கூட ஏவல் கொள்ளத் தூண்டுகிறது. அது தாயிற் சிறந்த இறைவனை - ஆற்றலை வழங்கிய அண்ணலைக்கூட எதிர்க்க அரக்கரைத் தூண்டுகிறது; முரட்டுத்தனம் சேர்க்கிறது; மிகை செய்கிறது.

கயிலையைத் தூக்க முயல்கிறான் இராவணன். ஏன்? தன் வலிமையைக் காட்ட! இராவணன் வலிமையுடையவன் தான்! ஆனால் அவன் வலிமைக்கும் எல்லை உண்டல்லவா? வலிமையின் எல்லை கடந்து விளங்கும் வலிமையோடு இறைவனோடு மோதுகிறான். இராவணன் மோதவில்லை; அவனது தீயபண்புகள் மோதுகின்றன.

இராவணன் தவத்தில் சிறந்தவன்; நாடோறும் பூசனை செய்பவன். “இராவணன் மேலது நீறு” என்று பாராட்டப் பெற்றவன். ஆனால் பெறவேண்டியன பெற்றபிறகு “தருக்கு” வந்து விட்டது. இல்லாதபோது உள்ள எளிமை, எளிமையாகாது; அது ஏழ்மையே. பெற வேண்டியன எல்லாம் பெற்று விளங்கும் போது பெறும் எளிமையே எளிமைப் பண்பு. இராவணன், இயற்கையில் நல்லவன்; ஆனால் தருக்கு வந்து சேர்ந்து விட்டது. வந்தடைந்த தருக்கு இராவணனுக்கு நலம் தருவதற்கு வரவில்லை. மரத்தோடு ஒட்டி வளர்ந்து மரத்திலேயே பின்னிக் கிடந்து - மரம் போலவே விளங்கினாலும், புல்லுருவி மரத்துக்குப் பகையே. புல்லுருவி வளர்ந்த மரம் வளம் குன்றும் - வலிமை குன்றும்; பூக்காது - காய்க்காது. புல்லுருவி, ஒரு “பூர்ஷ்வா”. அதாவது மரம் உழைத்து எடுத்துக்கொண்டு வரும் உணவை இடைமறித்துப் பறித்துக் கொள்வது அது. அதுபோல அறிவின் பயனை உயிர்க்குச் சேரவிடாமல் ஆணவம் தடுத்துப் பறிக்கும். அதனால் அவ்வாணவ முடையவன் மிண்டு செய்வான். எனவே, இறைவன் இராவணனை வெற்றி கொள்ளவில்லை; ஆறுமுகச் செவ்வேள் சூரபதுமனை வெற்றி கொள்ளவில்லை. அவர்களுடைய மிண்டுத் தனத்தையே வெற்றி கொண்டனர்.

இறைவன் பெற்ற வெற்றியால் இராவணனுக்கே பயன்; சூரபதுமனுக்கே பயன். மற்றவர்க்குப் பயன்தரும் வெற்றியே வெற்றி! அது இறைவன் பெறும் வெற்றியேயாம். தமக்கு நலன் சேர்க்கும் வெற்றி இறைவனின் வெற்றி! அதனாலேயே வணங்குகிறோம்; வாழ்த்துகிறோம்.

வண்டலார் வயற்சாலி ஆலைவளம் பொலிந்திடவார் புனல்திரை
கொண்டலார் கொணர்ந்தங் குலவுந்திகழ் கோட்டாற்றில்
தொண்டெலாம் துதிசெய்ய நின்றதொழிலனே! கழலால் அரக்கனை
மிண்டெலாம் தவிர்த்தென் உகந்திட்ட வெற்றிமையே.

- திருஞானசம்பந்தர்