குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/வீடு பெறும் வழி


22
வீடு பெறும் வழி

பிறவி, நோக்கமுடையதே - உயர் நோக்கமுடையதே. அதாவது, துன்பம் நீக்க வருவது பிறவி. இன்பம் தரவல்லது பிறவி. இல்லை; துன்பம் காரியம், துன்பத்துக்குக் காரணம் அறியாமை. காரணம் செழுமையுற்றாலே காரியம் கைகூடும். அறியாமை அகலவேண்டும். அறிவு பெருகி வளர வேண்டும். இந்த அறிவு ஐயத்தின் நீங்கியதாக இருக்க வேண்டும். ஐயத்தின் வழிபட்ட அறிவு, சொல் வழக்கால் அது அறிவு என்று சொல்லப்பட்டாலும், தன்மையால் அது தரும் பயனால் அது அறியாமையேயாகும். சிறந்த அறிவு சிற்றெல்லைக்குட் பட்டதன்று. எந்த ஒரு அறிவும் சிற்றெல்லைக்குள் பயிலும் வரையில் அது குறையுடைய அறிவே. எந்த ஒரு குறையும் அடுத்து முயன்றாலும் குறை நிலையிலேயே நிறைவைப் பெறமுடியாது. குறையறிவு, குறைவிலா நிறையறிவாய் இருக்கின்ற பரசிவத்துடன் உணர்வு நிலையில் உறவு பெற்று நிறைவு பெற்று, அந்த நிறைவைத் தனக்கு உரிமையாக்கிக் கொள்ளும் பொழுதே, முற்றாக அறியாமை அகல்கிறது: துன்பம் அகல்கிறது. இந்த நிலையிலேயே அறிவு, ஞானம் என்று பெயர் பெறுகிறது. துன்பத் தொடக்கிலிருந்து முற்றாக விடுதலை பெற்று, இன்ப அன்பில் ஒன்றித் திளைத்தலே வீடு ஆகும்.

மனித வாழ்க்கையின் இலட்சியம் விடுதலையே - வீடு பெறுதலே. உலகியலில், குடியிருக்கும் வீடு இல்லாத வாழக்கை துன்பமானது. குடியிருக்கக் குடிசை இல்லாத அவல வாழ்க்கை இரங்கத்தக்கது.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பிடைத்
துச்சில் இருந்த உயிர்க்கு,

- என்பது குறள்.

இந்த உலகியலில் எப்படி வீடு அற்ற வாழ்க்கை துன்பமானதோ, அதைப் போலவே உயிர்க்கு மறுமையில் இறைவன் திருவடியாகிய - இன்ப அன்பாகிய வீடு கிடைக்காது போனாலும் அவலமேயாம். இந்த உயர்ந்த வீட்டை ஞானத்தினாலன்றி வேறு எந்த வகையாலும் பெற முடியாது. சிலர், கொடிய விரதங்களாலேயே ஞானத்தை - வீட்டை அடைய முடியும் என்று நம்புகிறார்கள் - முயல்கிறார்கள். புத்தர்கூடத் துன்பத்தை மாற்றவே, விரதங்களால் ஆகிய துன்பத்தை ஏற்றுக்கொண்டார். அவர், துன்பத்தை மாற்றுவதற்கு உடலை வருத்தக்கூடிய விரதமுறைகளை எடுத்துச் சொன்னாரே தவிர, ஞானத்தைக் காட்டினாரில்லை. உடல் வருத்தமுறுவதனாலேயே, உயிர் அறியாமை நீங்குமா? உடல் வருந்தியதுதான் பயன்; உயிர்க்கு யாதொரு பயனும் இல்லை. சமணர்களும் அடிப்படித்தான். ஏன்? நம்முடைய நாட்டில் வறட்சித் தன்மையுடையதாக நடமாடும் வைதீகமும் அத்தகையதுதான். உண்ணாமல் உடலை வருத்துவதால் ஞானம் வராது. அதனால் உண்ணா நோன்பு முதலிய தவவொழுக்கங்கள் வேண்டாம் என்பது பொருளா? இல்லை. உடலை வருத்தும் உண்ணா நோன்பு வேறு, உடலைப் பதப்படுத்தும் உண்ணா நோன்பு வேறு. ஊனைப்பெருக்க உண்ணுதல் தவறு; ஊனைப் பாதுகாக்க உண்பது அவசியம். உடம்பை அழித்திடும் தவம் கொடியது. அவ்வழி உயிரும் அழியும். அதனாலன்றோ திருமூலர்,

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே,

என்றார். இங்கு, வளர்த்தல் என்பது ஊன் பொதி தசைகளை வளர்த்தலன்று. பயன்படு தகுதியும் திறனும் வளர்த்தலே, வளர்த்தல் என்பதற்குக் கொள்ள வேண்டிய பொருள்.

ஆதலால், ஞானம் வேண்டுமா? உயிரைச் சார்ந்துள்ள அறியாமையை அகற்றுங்கள்; உடலை வருத்திப் பயனில்லை; உடல் வாடுவதால் உயர் ஞானம் கிட்டாது; வீடும் கிடைக்காது. இதுவே நமது சமயநெறி; திருஞானசம்பந்தர் காட்டிய நன்னெறி,

வீடும் ஞானமும் வேண்டுதிரேல் விரதங்களால்
வாடின் ஞானம் என்னாவது?

என்று கேட்கிறார். இந்த வினாவினால் கிடைக்கும் விடை, விரதங்களால் உயிரின் ஞான முயற்சியும் கெடும். மண்ணைக் கெடுத்து மனை கட்ட முடியுமா? கண்ணைக் கெடுத்துக் காவியம் படைக்க முடியுமா?

ஞானம் பெறுவதற்குக் கருவிகளாக, மிகச் சிறந்த நுட்ப முறையில் வழங்கிய அறிவுக் கருவிகளும், செய்கருவிகளும் செப்பமாக அமைந்தது உடம்பு. புலன்கள் அறிவுக்கருவிகள்; பொறிகள் செய்கருவிகள். அறிதலும் செய்தலும்கூட அறியாமை அகலவும் அறிவினைப் பெறவுமேயாம். அவை நிகழும்போது களைப்புத் தோன்றாமல் இருக்கச் சில இன்ப அனுபவங்களும் உடன் நிகழ்வாக நிகழ்கின்றன. உடலினைக் கொண்டு வாழும் போதெல்லாம், செய்கருவிகளாகிய பொறிகள் வாயிலாகவும் அறிகருவிகளாகிய புலன்கள் மூலமாகவும் நல்லறிவைச் சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அறிவு வளரும்; வளர்ந்து பேரறிவாக மலரும்; ஞானம் என்று பெயர் பெறும். இக்கருவிகள் அழிந்து படின் எங்ஙனம் ஞானம் கிடைக்கும்? தூர்ந்த வாரியின் வாயிலாகக் கழனிக்கு நீர் கிடைக்குமா? ஞானமே கிடைக்காத போது ஞானத்தின் பயனாகிய வீடும் கிடைக்காது. அப்படியானால், திருஞானசம்பந்தர் ஞானம் பெறக் காட்டும் வழி என்ன?

திருஞானசம்பந்தர், ஞானம் பெற-வீடு பெறக் காட்டும் வழி மிக எளிய வழி. நீரில் பலகால் மூழ்க வேண்டாம்; நெருப்பிடை நிற்க வேண்டாம்; காற்றையே குடித்து வாழ வேண்டாம்; காதல் மனை வாழ்க்கையைத் துறக்க வேண்டாம்; செந்தமிழ்க் கலை தேர்ந்து கற்றிடல் வேண்டாம், இசை வேண்டாம். அது மிக எளிய வழி. அது என்ன? திருவலஞ்சுழியில் எழுந்தருளியுள்ள இறைவனைத் திருஞானசம்பந்தர் பாடிய திருப்பாடல்களைப் பாடும் ஞானம் பெற்றிருக்கின்றவர் அடி சேர்ந்து, அவர்களைப் பாராட்டி, அவர் வழி நின்று ஒழுகுதல் மூலம் ஞானம் பெறலாம்; அவ்வழி வீடும் பெறலாம். மீண்டும் பாடலைப் படித்துச் சிந்தனை செய்து செயற்படுவோமாக.

வீடும் ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால்
வாடின் ஞானம் என்னாவது? எந்தை வலஞ்சுழி
நாடி ஞான சம்பந்தன் செந்தமிழ் கொண்டிசை
பாடு ஞானம் வல்லாரடி சேர்வது ஞானமே.

- திருஞானசம்பந்தர்