குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9/சுந்தரர் பெருமை




4
சுந்தரர் பெருமை


அடியார்கள் பலர் வாழ்ந்தார்கள். அற்புதங்கள் பல புரிந்தார்கள். வேதம் பாடும் இறைவனை இன் தமிழ்ப் பாக்களால் ஏவல் கொண்டார்கள். இதயங்கலந்த உறவும் இன்னிசைப் பொழிவும் மெய்யடியார்களின் மேன்மைக்கு உதவி புரிந்தன. சைவ நன்மக்களின் வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் ஏனைய இனத்தவர்க்கும், மதத்தவர்க்கும் நமது அடியார் பயன்பட்டிருக்கிறார்கள். அவர்களது சிந்தனை ஆழியினின்றும் எடுக்கப்பெற்ற தத்துவ முத்துக்கள், நம்மை வாழ வைப்பதுடன்-வாழ்க்கை இன்னதுதான் என்று காட்டியும் நிற்கின்றன.

நமது நாயன்மார் வரலாற்றில் சுந்தரர் வரலாறு நாம் அறிந்திருக்கவேண்டிய ஒன்றாகும். இல்லறத்தில் வாழ்ந்து-இன்னல்களுக்கு இலக்காகி-இறைவனடி சேர்ந்த வரலாறு; அது தமிழர்களின் கருத்துடன் கலந்து நிற்கத்தக்கது. துன்பத்தின்போது சோர்ந்து வாழ்க்கையில் விரக்தி கொள்பவர்களைத் தட்டியெழுப்பி, வாழ்க்கையில் பிடிப்பை உண்டாக்கவல்லது சுந்தரர் வரலாறு.

சுந்தரர் வாழ்க்கைக் கடலில் ஆழக்குளித்து முத்தெடுத்தவர். அவரது காலம் கருத்துக்காலம்-கருத்தாளரை மதித்து நடந்த நாகரிகக் காலம். வழிவழியாக அந்த விழுமிய நாகரிகம் காப்பாற்றப்படாதது வருத்தத்தைத் தருகிறது. ஈன்று புறந்தருதலில் நம் தலைவர்கள் பின்நிற்கவில்லை. நாம்தான் பேணிக்காக்கத் தவறிவிட்டோம். தவற்றினை உணர்ந்து தக்கபடி செயல்பட்டால் இனியாவது நல்லகாலம் பிறக்கலாம். வையத்துள் வாழ்வாங்குவாழ வள்ளுவர் தந்த கருத்தினை நல்லபடி நடைமுறைக்குக் கொண்டுவர நாம் இன்னும் அதிக கவனம் எடுக்கவில்லை.

நம்மிடையே இருக்கும் கருத்துக்களைப்பற்றிச் சிந்திக் காமல் இறக்குமதிக் கருத்துக்களில் எண்ணத்தைத் திருப்பி விட்டிருக்கிறோம். வீட்டுத் தோட்டத்திலே கத்தரிக்காய் காய்த்துக் குலுங்கிக்கிடப்பதைக் கவனியாது- சந்தைக்குப் போகும் நிலைமைக்கு நாம் வந்திருக்கிறோம். சுந்தரர் காலம் வீட்டிலே காய்த்த கத்தரிக்காயைச் சமைத்துண்ட காலம். விரிந்த மனப்பான்மையோடு மற்றையோர் கருத்துக்களைப் பாராட்டி நம் கருத்தை வளர்க்க நாம் முனையவேண்டும். நம் நாட்டு நயத்தகு நாகரிகத்தின் சிறப்பினுக்கு, நமது கருத்துக்கள் பரவிய முறையினை எடுத்துக் காட்டலாம். மற்றைய நாடுகள் இரத்தம் சிந்தியே கருத்துக்களை வளர்த்தன-பரப்பின. தென்னாட்டிலே அப்படி யில்லை. கருத்துவழிப் போராட்டம் அதிகம் இருந்தது போலவே கனிவும் அவற்றுடன் இழையோடியிருந்தது.

புத்திக் கூர்மையும், தூய நோக்கமும் கொண்டவர் களது ஊக்கத்தினாலேயே புரட்சிகள் உண்டாகின்றன. கருத்துவழிப் புரட்சிக்கு நமது சமயக்குரவர்கள் பலகாலமும் முயன்றிருக்கிறார்கள். மணிவாசகர் இறைவனைக் காதலியாகவும் தன்னைக் காதலனாகவும் உருவகப்படுத்திக் கருத்துப் புரட்சி செய்தார். இப்படியே, ஆண்டவனை அப்பனாக, அம்மையாக, மாமனாக, மாமியாக, உருவகித்துப் புரட்சி செய்திருக்கிறார்கள். நமது சுந்தரரின் நிலை தனியானது. அவர் இறைவனைத் தோழனாக்கினார். மனம் விட்டுப்பேச நண்பன் தேவை. எல்லா நண்பர்களிடத்தும் மனம் விட்டுப் பேசுதல் என்பது முடியாத காரியம். சிலர் புறத்தால்-முகத் தால் நண்பர்களாகவும், அகத்தால் பகைவர்களாகவுமே இருப்பார்கள். எவருக்கும் உயிர்க்குயிராக ஒரு நண்பன்தான்் இருப்பான். இந்த விதிக்கு விலக்காக ஒருசிலர் இருக்கலாம்; ஆனால் எல்லாரும் இருக்க இயலாது; இருக்கவும். முடியாது. வாழ்க்கை அனுபவத்தில் உண்டாகும் அந்தரங்கங்களையும் அவலங்களையும் மனம்விட்டு உயிர்த்தோழனிடம் நாம் சொல்லுவது போலவே, சுந்தரர் இறைவனைத் தன் உயிர்த் தோழனாக்கித் தன் இன்னல்களை மனம்விட்டுச் சொன்னார்.

தோழமைக்கு இந்த இருபதாம் நூற்றாண்டில் அதிக சக்தி உண்டு. மேடையில் நின்று அவையைப் பார்த்து, அன்பர்களே! பெரியோர்களே! என்றோ சகோதர சகோதரிகளே! என்றோ, சீமான்களே! செல்வர்களே! என்றோ விளித்தால் அவ்வளவு வரவேற்புக் கிடைப்பதில்லை. தோழர்களே! என்றவுடன் கட்டுக்கடங்காத மகிழ்ச்சி ஆரவாரத்தையும் கையொலியையும் காணமுடிகிறது. இத்தகைய சக்திவாய்ந்த தோழமை சுந்தரர் காலத்திலேயே, அதுவும் ஆண்டவனிடத்திலேயே உண்டாகிய தொன்றாகும்.

சுந்தரர் உள்ளத்தால் ஞானி; உடலால் உலகியலார். சுந்தரரின் வாழ்க்கை நகைச்சுவை நிரம்பியது. இரண்டு மனைவியரை மணந்தார். ஆற்றில் போட்டுக் குளத்தில் எடுத்தார். கலப்புத் திருமணம் செய்து சமுதாய வேறுபாடுகளை ஒழித்தார். ஒருவனிடத்தில் மட்டுமே கடன்பட்டார். அதுவும் தன் தோழனான ஆண்டவனிடத்திலேயே தேவைகளை வேண்டிப் பெற்றார். இப்படிப் பலப்பல உண்டு.

"தம்பிரான் தோழன்" என்ற பெருமையும் பெருநலமும் எய்திச் சைவப் பெருமக்கள் வாழவழிகண்டார் சுந்தரர். மாழை ஒண்கண் பரவையாரைத் திருவாரூரில் மணந்தார். குண்டையூர்கிழார் அன்பின் வேண்டுகோளால் ஊர் நிறைந்த நெல்லைத் தந்தவனைக் கொண்டே திருவாரூரில் தருவித்தார். இங்கு இறைவனை ஏவல்கொண்ட தன்மையை நினைக்குந்தோறும் "ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே!” என்ற அடியை எண்ணுந்தோறும் உள்ளம் உருகுகின்றது. செங்கல்லைச் செழும்பொன்னாக்கினார். அருள்நெறியை மறந்து, ஆன்ம ஆக்கத்தைத் துறந்து பொருள்நெறிப் போரில் போய்க்கொண்டிருக்கும் நமக்கு இச்செய்திகள் வியப்பைத்தான்் தரும். ஆனால் சுந்தரரது அருட்பாக்களை-அவர் சிவனை வேண்டிப்பாடும் கசிவை உணர்ந்தோமானால் அவரது பாசுரங்களுக்கு மிகப்பெரு வலிமை இருந்தது-இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்வோம்.

திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்து "பிரியேன்” என்று சத்தியம் செய்தார். ஆயினும் திருவாரூர் இறைவனிடம் காதல் மீதுார அச் சத்தியத்தை மறந்தார். ஆம்! மன்றுளாடியைப் பாடவேண்டி மறந்தார். ஊர் எல்லை தாண்டியதும் கண்களை இழந்தார். இங்கேதான் சுந்தரரின் செந்தமிழ் உச்ச நிலையை அடைகிறது. "மூன்று கண்ணுடையாய், என்கண் கொள்வது நீதியோ?” என்று கேட்டார். "மகத்திற் புக்கதோர் சனியெனக்கானாய்" என்று ஏசினார். "வாழ்ந்தும் போதிரே" என்று திட்டினார். இறைவன் கண்கொடுக்காமல் இருக்க முடியுமா?

ஊடலுற்ற பரவையாபால், மூவருமறியா முக் கண்ணனைத் தூதுவிட்டார். அதனால், கலிக்காமரின் பகையைப் பெற்றார். இறைவனால் சந்து செய்துவைக்கப் பட்டார். திருப்புக்கொளியூர் அவினாசியிடம் முடியாத ஒன்றை முடிப்பித்தார்-முதலை உண்ட பாலனை அழைப்பித்தார். அரன் அடிசேர்ந்தார் பிறர் போன்றாரல்லர். இவ்வுட லுடனேயே வெள்ளை யானையில் வேண்டிய நண்பர் உடன்வர வெள்ளியங்கிரியை அடைந்தார். சுந்தரர் பெருமையைச் சொல்ல (ւՔւգ-աոg/, இறைவனின் திருவாயால் "மேருவரையின் மேம்பட்ட தவத்தான்் என்று புகழப்பட்டார். கல்வியில் மேம்பட்ட சுந்தரர் எல்லாவற்றுள்ளும் இனிய கடவுளை “கற்ற கல்வியினும் இனியான்" என்றும், "பண்டைத் தமிழ் ஒப்பாய்” என்றும் வாழ்த்தினார். என்னே அவர் செந்தமிழ் ஆர்வம்! அவர் ஆராய்ச்சித் திறம் இக்கால வரலாற்று ஆராய்ச்சியாளரையும் பிரமிக்கச் செய்கின்றது.

சுந்தரரது காலம் சமயத்துக்கு மதிப்பளித்த நல்ல காலம். ஆனால், சமயத் தொண்டர்கள் நலிந்து வாடிய காலம். இன்றோ சமயத் தொண்டர்கள் நன்றாகத்தான்் இருக்கிறோம். ஆனால், சமயத்துக்குத்தான்் நல்ல நிலை இல்லை. சூழ்நிலை இப்படி மாறியது வருந்தத்தக்கது. சூழலை மாற்ற-உருவாக்க மனிதனால் முடியும். ஆகவே பொன் கேட்டு, பெண் கேட்டு, கண் கேட்ட சுந்தரரின் காலத்துச் சம்ய நிலையை உண்டாக்க நாம் உழைப்போம்.