குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9/நாயன்மார்கள் காட்டும் வழி



3


நாயன்மார்கள் காட்டும் வழி

சமயவரலாறுகளைப் பலர் பலவிதமாகப் பார்க்கிறார்கள். வாழ்வுக்கு நெறியைக் காட்ட வேண்டிய சமய அமைப்புகள் தளர்ந்ததாலும், சோம்பியதாலும் ஒருவித மயக்கம் உண்டாகியிருக்கிறது. ஆண்டவன் அருள்பாடும் இன்றைய ஆத்திகர்கள் சிலரிடமிருந்து சமயத்தைக் காப்பாற்றவேண்டிய கட்டம் வந்திருக்கிறது. சமயத்தைப் பற்றிய ஐயப்பாடு நமது சமுதாயத்தில் எப்படி எழுந்தது என்பதைச் சிந்திக்க வேண்டும். சமயச் சார்புடைய புராணங்கள் எத்தகைய நோக்கத்தோடு தோன்றின என்பதையும் எண்ண வேண்டும். இத்தகைய சிந்தனைகளினாலும்- எண்ணங்களினாலும் முடிவான கருத்தொன்று பிறக்க வழியுண்டு. அந்த முடிவான கருத்தின் வழி சமயச் சார்புடைய சமுதாயத்தைப் படைக்க உழைக்கவேண்டும்.

சமுதாயப் பசியை-நாட்டுச் சிக்கல்களை எண்ணிய படியே புராணங்களை அணுகவேண்டும். நாம் பெரிய புராணத்தை அத்தகைய எண்ணங்களோடுதான் பார்க்கிறோம். பெரிய புராண அடிகளை ஆழச் சிந்தித்தால் மனித விடுதலைப் போராட்டம் நன்கு புலனாகும்; மண்ணகத்தை விண்ணகமாக்க எழுந்த காவியமே திருத்தொண்டர் புராணம். அரசியல் வரலாற்றையும் சமுதாய வரலாற்றையும் நாம் அதில் காண முடிகிறது. மனித வாழ்வின் எல்லாத் துறைகளையும் அலசி ஆராய்ந்து செய்திகளை வெளியிட்ட வாழ்வு நூல் பெரிய புராணம். பெருமான், அர்ச்சனை பூசைகளை ஏற்றுக் கொண்டிருப்பவர் அல்லர். அவர் அடியார்க்கு வேலையாளானவர்-துதுவரானவர். இரவோடு இரவாகத் தன் தோழனுக்காக ஒரு பெண்ணிடம் தூது சென்றிருக்கிறார். இத்தகைய செய்திகள் பெரிய புராணம் வாழ்க்கையை ஒட்டியது - வாழ்வோடு பிணைந்தது என்பதைக் காட்டி நிற்கின்றன.

மனித இனத்தை வறுமையினின்றும் மீட்டு ஈடிலா இன்ப வாழ்வு வாழ வழிகாட்ட வேண்டுமென்ற ஒப்பில்லா உயர்ந்த எண்ணத்தைப் பெரிய புராணம் தருகின்றது. "வாழ்வெனும் மையல்விட்டு வறுமையாம் சிறுமை தப்பி” என்கின்றது சித்தியார். வறுமை வாழ்வைச் சிதைத்து மாற்றம் செய்கின்றது. வறுமையால் வரும் சிறுமையை விலக்க வேண்டும். மன்றுளார் அடியார் வரலாறான பெரிய புராணம் உணர்ச்சி, குரோதம், ஆத்திரம் போன்றவைகளை விலக்கிவிட்டுப் படிக்கவேண்டிய ஒரு தெய்வ நூல். செழுமை யான நிலத்தில்தான் பயிர் நன்றாகச் செழித்து வளரும்; உள்ளத்தின் செழுமையில்தான் உண்மைத் தத்துவங்களின் வளர்ச்சி தங்கிக் கிடக்கின்றது.

மன்றுளார் அடியார் பொதுமக்களுக்கு உரியவர்கள்; பொதுவாழ்வைப் பற்றிச் சிந்தித்தவர்கள்; எப்பொழுதும் எம்பெருமானை எண்ணியபடி எவர்க்கும் இன்னல் களைபவர்கள்; மன்றத்துக்கு மக்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கவே தாங்கள் பிறந்திருப்பதாக எண்ணிச் செயல் பட்டவர்கள். இறைவனின் திருவடிகளே செல்வம் என்றெண்ணி வாழ்ந்தவர்கள். கேடும் ஆக்கமும் கெட்ட திருவினால் அவர்கள் நன்மையையும் தீமையையும் ஒன்றாகவே-ஒரேதன்மை உடையனவாகவே கருதினார்கள்; ஓட்டையும் செம்பொன்னையும் ஒக்கவே நோக்கினார்கள்; விடும் வேண்டாது, கூடும் அன்பினிற் கும்பிடுதலாகிய ஒரு செயல் கிடைத்தால் போதுமானது என்று அவர்களது நெஞ்சங்கள் ஏங்கின. ஆனந்த நடனமாடும் ஆண்டவனது குனித்த புருவத்தையும் பணித்த சடையையும் பவள மேனியையும் அம்மேனியில் திருநீறு அணிந்த காட்சியையும் பாதம் துரக்கி ஆடும் அற்புத அழகையும் காணவே-மானிடப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே என்றார்கள்,

இறைவனை எட்டத்தில் வைத்து ஏதோ வாழ்வோடு பிணைப்பில்லாத வாழ்த்துப் பொருளாக்கிக் கோவில் களிலும் குருக்கள்.மாரின் சமீபத்திலும்தான்் கடவுளை வணங்க வேண்டுமென்று கருதுநிற சமுதாயத்துக்கு நல்லதொரு விழிப்புணர்வை நமது நாயன்மார்கள் கொடுக் கிறார்கள். பொன்னும் மெய்ப்பொருளும் தந்து போகமும் திருவும் புணர்ப்பவராக நமது கடவுள் இருக்கிறார் என்ற எண்ணம் நம்மவர்களிடையே தோன்ற மன்றுளார் அடியார் பாடுபட்டுழைத்தார்கள். அவர்களது வாழ்க்கை முறையிலேயே-தொண்டு தெய்வத்தன்மை வாய்ந்தது என்றும் தொண்டல்லாது உயிர்க்கு ஊதியம் இல்லை என்றும் நாம் அறியக் கூடியதாயிருக்கின்றன.

தமிழர் வாழ்வு இசையோடு இணைந்தது. ஏழி சையாக-அவ்விசைகளின் பயனாக இறைவனைக் கண்ட வர்கள் தமிழர்கள். இயற்கையை வர்ணித்து அதன் வழி ஆண்டவனைக் கண்டு வணங்கிய இனமும் தமிழினந்தான்். இத்தகைய தமிழர் நிலை சமணர்களது குறுக்கீட்டால் பிறழக் கூடாதெனக் கருதியே, ஞானச் சம்பந்தர் தமிழர் நாகரிகம் காக்கப் புறப்பட்டார். தமிழர் நாகரிகம் பேணப் படவேண்டி சம்பந்தர் சமணர்களோடு வாதிட்டார்- வென்றார். இந்த வாதத்தை சமயச் சண்டையாக எண்ணி விடுதல் தகாதது. சண்டை வேறு-பாதுகாக்க எடுக்கும் முயற்சி வேறு.

இயற்கையோடியைந்த வாழ்வைத் தொல்காப்பியம் கூறுகின்றது. தமிழர்கள் வாழ்வு இயற்கையோடியைந்தது. இந்த இயற்கை வாழ்வைச் சமணர்கள் மாற்றி அமைக்க எத்தனித்தனர். அப்போதுதான்் அப்பரும் சம்பந்தரும் ஒரு நிலைமை மாற்றத்தைக் கொணர விழைந்தனர். பண்ணோடு இசை கேளாத சமணர்களின் போக்கை மாற்றியமைக்கும் பொறுப்பு சம்பந்தருக்குக் கிடைத்தது. சமணர்கள் மலரிடை மணம் நுகரார் என்றனர். அப்பரும் சம்பந்தரும் இதற்கொரு மாற்றத்தைத் தேட வேண்டியிருந்தது. சம்பந்தர் தாம் பாடும் தேவாரங்களில் இயற்கையைப் பற்றி எடுத்தியம்பினார். மேல் நாட்டுக் கவிஞர்கள்தான்் இயற்கையை வர்ணித்துப் பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள் எனக் கருதுபவர்கள் சம்பந்தர் திருப்பாடல்களை ஒருமுறை படித்து இன்புறுவார்களாக

சமண-புத்த சமயத்தவர்கள் பெண்மைக்கு மதிப்பளிக் காதவர்கள்-தெளிவாகச் சொன்னால் பெண்ணினத்தை வெறுத்தவர்கள். இந்நிலையிலேதான்் ஞானசம்பந்தர் பெண்ணினத்தைப் போற்ற முற்பட்டு இறைவனைப் பெண்ணோடு தொடர்புபடுத்திப் பாடினார். முதலில் பாடி அருளிய தேவாரத்திலேயே "தோடுடைய செவியன்” எனப் பாடியிருக்கிறார். "பெண்ணினல்லாளொடும் பெருந்தகை யிருந்ததே!” என்றார். மாதொரு பாகனாக நமது மகேஸ் வரனைக் காட்டிப் பெண்ணைப் பெருமைக்குரிய வளாக்கினார் சம்பந்தர்.

சமுதாயம் கோவில் தொண்டைப் புறக்கணித்தபோது சேக்கிழார் கோவில்தொண்டை வலியுறுத்திப் பாடினார், மனையில் வாழ்ந்த மாதவர்களைப் பாடினார். திருவருளை ஏற்று மனைவாழ்வு வாழ வேண்டுமென்பதைக் காட்டவே சுந்தரர் மனைவாழ்வை வாழ்ந்து காட்டினார். சமணத்தைத் தடுத்து, தமிழ் நாகரிகத்தைக் காத்த மங்கையர்க்கரசியாரை மங்கையர்க்குத் தனியரசி எங்கள் குலதெய்வம் எனத் தொழுகிறார். வேறொருவரையும் சேக்கிழார் பெருமான் தெய்வம் என விளம்பவில்லை; மங்கையர்க்கரசியையே கூறியுள்ளார். இவ்வாறாக மன்றுளார் அடியார் பெருமையினைப் பெரிய புராணம் பேசுகிறது. அன்று சமணர்கள் செயலைச் சம்பந்தர் தடுத்திராது போனால், இன்று நாமெல்லாருமே கையில் கமண்டலம் ஏந்துபவர்களாய் இருந்திருப்போம். நமது நாகரிகத்தைக் காப்பாற்றிய நல்லவர்களை நமது குல தெய்வங்களாக நாம் போற்ற வேண்டும்.

வேதம், ஆகமம் போன்றவற்றை ஆராய இப்பொழுது அவகாசம் இல்லை. கால வெள்ளம் ஓடுகிற ஓட்டத்தைப் பார்க்கிற பொழுது, நிம்மதியுடன் இருந்து நீண்ட நேரம் அவற்றை ஆராய முடியவில்லை. ஆதலால் நம் நாயன்மார்கள் காட்டும் வழிச் சென்று சிறப்புறுவோம்.

அன்பினாலே அம்மையப்பனை அணுகி அணைத்துக் கொள்வோம். கண்ணப்பர் கூட மோகமாய் ஒடிச் சென்று தழுவி மோந்து கொண்டார். சாக்கிய நாயனார் எறிந்த கல்லைக் கூட இறைவன் ஏற்று அருள் புரிந்தார். திருப்பனந்தாளிலே தடாகைப் பிராட்டியார் கொண்டு சென்ற மாலையை இறைவன் குனிந்து ஏற்றுக் கொண்டார். குங்கு லியக்கலயநாயனார் குங்குலியத் தூபம் போட்டார். இவைகளிலிருந்து அன்பின் நெகிழ்ச்சியே ஆண்டவனுக்கு வேண்டப்படுகிறது என்பதை உணர முடிகிறது. வழிபாட்டிற்குச் சாதி தடையாய் இருக்கக் கூடாது. பசித்தவன் சோறு பெற்றுப் பசி நீங்கி மகிழ்ச்சி நிறைவு கொள்ள வேண்டும். அது போலவே கோவிலுக்கு வருகிறவர்களும் அருள் வெள்ளத்தைப் பருகி, ஆன்ம தாகம் நீங்கி நிறைவு பெற வேண்டும். அதற்கு மொழிச் சுவரோ, இனச் சுவரோ, சாதிச் சுவரோ தடையாயிருக்கக் கூடாது. அப்பர் சுவாமிகள் கூட "போதோடு நீர் சுமந்தேந்திப் புகுவார்; அவர்பின் புகுவேன்" என்கின்றார். அங்கு சாதி, குலம், பிறப்பு என்னும் சழக்குகளை அறுத்தெறிந்து ஆண்டவன் சந்நிதான்த்தில் எல்லாரும் சமம் என்ற உணர்வினை உண்டாக்க வேண்டும். அவ்வுணர்வினை உண்டாக்கச் சைவர்களாகிய நாம் சமுதாயத்தில் இறங்கி உழைக்கவேண்டும்.

நல்லனவற்றை நினைப்பதிலும் சொல்வதிலும் பார்க்க அவற்றை நடைமுறையில் கொண்டுவர முயற்சிப்பதே மேலானது, அகத்திலே உள்ள தூய்மையும், அன்புப் பெருக்குமே ஆண்டவன் வழிபாட்டிற்கு உகந்தன. இக் காலத்தில் புறத் தூய்மையோடு நிறைவுகொள்கிறார்கள். நீறு பூசி உருத்திராக்கம் தரிப்பவர்கள் சிலரின் பக்கத்தில் நெருங்கினால் துர்நாற்றம் அடிக்கிறது. அகத்திலே தூய்மை இல்லாது-அன்பு இல்லாது திருநீற்றின் வெண்மை போன்ற உள்ளமில்லாது புறத்தை மட்டும் அலங்கரிப்பதில் என்ன பயன் ?

நமது சமயம் புனிதத்தோடு தொடர்புடையது. அகமும் புறமும் ஒருசேரப் புனிதமடையாத தன்மையாலேதான் நமது சமயத்தவர் எண்ணிக்கை நாளடைவிற் குறைகிறது. காந்தத் தோடு கலந்திருக்கும் இரும்பும் காந்தமாகிறது. மின் சாரத்தைத் தொட்ட கம்பியிலே மின்சாரம் ஏறுகிறது. அது போலவே நாமும் இறைவனைத் தொட்டால்-நினைத்தால் அவன் அருள்கிட்டும். இறைவன் உருத்தெரியாக் காலத்தே உட்புகுந்து மன்னி இருக்கின்றான். வண்டுகள் மொட்டை ஊதி மலர வைக்கின்றன. அதுபோலவே அடியார்களது இதய மொட்டுக்களை ஊதி மலர வைக்க வேண்டும். திரு மடங்கள் அடியார்களது மனமொட்டு மலருமாறு ஊதவும்ஒதவும் வேண்டும். கோவில் என்ற தாய் ஆன்மா என்ற குழந்தைக்குத் தெய்வ மணம் கமழச் செய்யவேண்டும். வேலி பெரிதல்ல பயிர்தான்-பெரிது; வரப்புப் பெரிதல்ல, பயிர் தான் பெரிது.

ஆகவே, ஆவியோடாக்கை புரை, புரை கனிய எம் பெருமானை நாம் வழிபட வேண்டும். நாம் ஆண்டவனை நோக்கிக் கைதொழுதால் அவன் நமது தொழுகையை அறிந்து அருள்பாலிப்பான். திருமுறைக்காலத்துச் சைவ சமய நிலையை உருவாக்கப் பெரியபுராணம் ஒன்றே போதும். நமது சமய வாழ்வோ-சமய அனுபவமோ சேக்கிழார் அளவுக்கு இல்லை. சேக்கிழார் சுந்தரர் வாழ்வை உலக நடைமுறைப்படுத்தினார். இன்று கண்ணப்பர் காலமில்லை. ஆதலால் கண் தேவைப்படாது. தேவைப்படினும் கண் வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம், கண்ணப்பர் குரு பூசை நாளன்று கண்பார்வை இழந்தவர்களுக்குக் கண்ணாடி வாங்கிக் கொடுக்கலாம். இயற்பகை நாயனார் குரு பூசையின் போது, வசதியில்லாமையினாலே திருமண மாகாதிருக்கும் ஏழைகள் நாலு பேருக்குக் கோவிலிலே திருமணம் செய்து வைத்தால் போதும். திருக்குறிப்புத் தொண்டர் திருநாளில் ஏழைக்கு உணவுப் பாத்திரம் கொடுக்கலாம்; ஏழை பணக்காரர் என்ற பாகுபாட்டினை மாற்றவேண்டும். பிட்டுக்கு மண் சுமந்தான்் என்பதை மண்சுமந்தான்் பிட்டுக்கு என்று மாற்றவேண்டும். இக்காலத்தவர் பிட்டுக்கு மண் சுமந்த கதையைப் படித்துவிட்டுப் பிட்டை உண்கிறார்களேயொழிய மண்சுமத்தலை நினைப்பதில்லை. எனவே தொண்டை முன்னும் உண்டியைப் பின்னுமாக மாற்றிக் கொள்ள வேண்டும். இன்று, கிணறு தோண்டல், வீதி அமைத்தல் ஆகிய சிரமமான முயற்சிகளை நாம் மேற் கொள்ளலாம். சுவாமியை விதி வலமாக எழுந்தருளச் செய்து கொண்டுபோய் வைத்துப் பிட்டினைத் திருமுன் நிவேதித்துச் சிரமதான்த்தின் பின்பு புனிதமான பிரசாதமாக உண்ண லாம். கற்பனைக்கு அப்பாலான வாழ்க்கை அனுபவந்தான் பெரிய புராணம். வான்முகில் வழாது பெய்து-நீர்வளம் பெருகி, மலிவளம் சுரந்து-அரசு அருள்நெறி வழிப்பட்டு இயங்கி-யாதொரு குறையுமின்றி உயிர்கள் வாழ்தலே சாலச் சிறந்ததாகும்.