குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9/சேக்கிழார் காட்டும் சமுதாயம்


11

சேக்கிழார் காட்டும் சமுதாயம்

தோற்றுவாய்

திருநாகேச்சுரம், சேக்கிழார் ஈடுபாட்டுடன் வணங்கிய திருத்தலம். சேக்கிழார் தமிழகத்தின் தவப் பயனாய்த் தோன்றியவர். தமிழக வரலாறும் நாகரிகமும் தலைமயங்கிக் கிடந்த பொழுது சேக்கிழார், காலத்தின் மாமருந்தெனத் தோன்றித் தமிழ் நாகரிகத்திற்கு அரண் அமைத்தார். சான்றோரை ஈன்று புறந்தந்து புகழ் பெற்ற தொண்டை நாட்டில் குன்றத்துரில் குணத்தில் மிக்காராகிய சேக்கிழார் தோன்றினார். வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய பெரியோர் வரலாற்றை மாகாப்பியமாகச் செய்தருளினார். சுந்தரமூர்த்தி நாயனார் சில சொற்களில் திருத்தொண்டத் தொகை மூலம் அறிமுகப்படுத்திய அடியார்களின் வரலாற்றை, வரலாறாக விரித்து எழுதிய பெருமைக்குரியவர் சேக்கிழார். -

நூலின் சிறப்பு

பெரியபுராணம் பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடப் பெற்றுள்ளது; நாள்தோறும் ஒதுதற்குரிய உயர்மறையெனத் திகழ்கிறது. இதனை நாள்தோறும் ஒதி உணர்ந்தால் தீவினை அகலும்-அன்பு தனி சிறந்து ஊற்றெடுக்கும்-உணர்வு சிறக்கும்-ஞானம் கைகூடும்-இன்ப அன்பினை எய்தி இன்புறலாம்.

பெரியபுராணம் அன்பினில் விளைந்த காப்பியம் -ஆற்றல்மிக்க அன்பினை அளிக்கும் காப்பியம்-வரலாற்று உண்மைகளைக் கூறுவதால் வரலாற்றுக் காப்பியம்-பெருங்காப்பியமெனச் சிறந்து விளங்குவதுமாகும்.

பெரியபுராணம், தொல்காப்பியம், திருக்குறள் முதலிய நூல்களையும் அக இலக்கிய இலக்கணங்களையும் திருமுறை களையும் போற்றித் தழுவிய காலத்தில் தேவையாகிய விரிவையும் பெற்றுச் சிறப்புற்றமைந்திருக்கிறது. பழமையான வரலாறு என்ற பொருளில் "புராணம்” என்ற பெயரைப் பெரியபுராணம் பெற்றிருந்தாலும், அது மற்றைய புராணங்களின் வரிசையில் வைத்து எண்ணத்தக்கதன்று; திருத்தொண்டத்தொகை, திருத் தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றைச் சார்ந்து தோன்றிய நூலெனினும் பெரிய புராணம், முதல் நூலுக்குரிய தகுதியனைத்தும் பெற்று விளங்குகிறது; உரை விளக்கம் தரும் நூலாகவும் விளங்குகிறது. மூவர் அருளிச் செய்த திருமுறைப் பாடல்களுக்குச் சேக்கிழார் செய்துள்ள உரை விளக்கம் அருமைப் பாடுடையது.

சேக்கிழார் செய்த நூல் பத்திக் காப்பியம்-ஆனாலும் உணர்ச்சிநிலைப் பக்திக் காப்பியமல்ல-மெய்யறிவு நூல்ஞானநூல். அதனால், சமுதாயத்தை மூடிக்கிடந்த மூடப் பழக்கங்கள், வாழ்க்கைக்கு ஒவ்வாத வழக்கங்கள் ஆகியவை களை அகற்றும் புதுமை நூல். ஏழாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையுள்ள தமிழக வரலாற்றினை நமக்குத் தரும் வரலாற்று நூல். அதற்கு முந்திய பழங்காலச் செய்திகளும் உண்டு. வரலாறு என்றால், காலம்-போர்களம் முதலியனவற்றைத் தொகுத்துக் கூறும் வரலாறல்ல தமிழகத்தின் கருத்து, உணர்வு, சமுதாயம் வளர்ந்து வாழ்ந்த இயல்பு ஆகியவற்றை அறிந்து கொள்வதற்குரிய காப்பியமாகப் பெரிய புராணம் திகழ்கிறது.

நூல் தோன்றிய களம்

தமிழ், காலத்தால் மூத்தமொழி, கருத்தாலும் மூத்து வளர்ந்த மொழி; தமிழ், இலக்கிய வளம்பெற்ற இனிய மொழி: இலக்கணத் திட்டம் வாய்ந்த மொழி, தமிழர்கள் வாழ்வியலிலும், தத்துவ இயலிலும், சமய வியலிலும் துறைபோகி வளர்ந்தவர்கள்; தனித்தன்மையுடைய தமிழர் நாகரிகம் பெருமிதமுடையது. அந்த நாகரிகம், யாதொரு குறிக்கோளும் பற்றுக்கோடு மில்லாத நாடோடிகளால் ஊடுருவப் பெற்று உரு மாற்றங்கள் அடைந்ததுண்டு. ஆயினும், பழமையின் பொலிவும் புதுமையின் துடிப்பும் இன்றும் தமிழ் நாகரிகத்திற்கு இருக்கவே செய்கிறது. அஃது என்றும் இருக்கும். உலகெலாம் என்று காப்பியத்தைத் தொடங்கிச் செய்த சேக்கிழார், உலகைத் தழுவ நினைத்தார். அஃதியற்கை அதுதான்் நாகரிகமுமாகும். ஆனாலும் தனித்தன்மையை இழக்கவோ, நாகரிகக் கலப்படக் கொடுமைக்கு ஆளாகவோ சேக்கிழார் விரும்பவில்லை. சேக்கிழார் தமிழ் நெஞ்சினர்; தமிழ் இன்பத்தில் துய்த்துக் களித்து அக்களிப்பைப் காப்பியத்தில் பொழிந்துள்ளார். சேக்கிழார், பாண்டிய நாட்டில் வீசும் தென்றல் தென்தமிழை நினைவூட்டுவதாக மூர்த்தி நாயனார் வரலாற்றில் பாடுகின்றார். தென்றல் உடல் வெப்பத்தைத் தணிக்கும்; தென்தமிழ் உயிர் வெப்பத்தைத் தணிக்கும்; அதனால் தமிழையும் தென்றலையும் ஒரு சேர எண்ணினார்.

"மொய்வைத்த வண்டின் செறிசூழல் முரன்ற சந்தின்
மைவைத்த சோலை மலயந்தர வந்த மந்த

மெய்வைத்த காலும் தரும், ஞாலம் அளந்த மேன்மைத்
தெய்வத் தமிழும் தரும் செவ்வி மணஞ்செ யிரம்"

என்பது சேக்கிழார் பாடல். இப் பாடலில் "ஞால மளந்த மேன்மை தெய்வத் தமிழ்" என்று தமிழின், பெருமையைச் சிந்தையினிக்கச் செயலினிக்க அருளிச் செய்துள்ளார். உயிர்களுக்குச் சால்பினை வழங்குவது தமிழ் என்றும், அதுவும் முத்தமிழ் என்றும் அத்தமிழ் தங்கிய மூதூர் மதுரையென்றும் சேக்கிழார் சிறப்பித்துப் பாடுகிறார். "சால்பாய மும்மைத் தமிழ் தங்கிய அங்கண் மூதூர்” என்பது சேக்கிழார் வாக்கு. ஆலவாயில் எழுந்தருளிய அழகமர் சொக்கன், தமிழுக்கு அகத்தினைப் பொருள் நூல் தந்தனன் என்பது வரலாறு. அந்த வரலாற்றை நினைந்து சேக்கிழார் மதுரையைப் புகழ்ந்து பாடுகிறார். ஆலவாயில் உறைகின்ற அப்பன், ‘கூடலின் ஆய்ந்த ஒண் தீந்தமிழின் துறை வாய்”த் திளைத்தவன், மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் இறைவன் இருந்து ஆராய்ந்தமையை எண்ணி எண்ணி மகிழ்கிறார் சேக்கிழார். அகத்தினை இலக்கணத்தை அகன்ற தமிழகத்திற்குத் தந்து அவ்வகனைந்தினை ஒழுக்கத்தின் வாயிலாகவே செம்மைப் பொருளும் தேர்ந்திடச் செய்த அருளை வியந்து பாராட்டுகின்றார்.

"மும்மைப் புவனங்களின் மிக்கதன் றேஅம் முதுரர்
மெய்ம்மைப் பொருளாந் தமிழ்நூலின் விளங்கு வாய்மைச்
செம்மைப் பொருளும் தருவார் திருவால வாயில்
எம்மைப் பவந்தீர்ப் பவர்சங்க மிகுந்த தென்றால்”

என்பது சேக்கிழார் பாடல்.

தமிழ் வழக்கு

திருஞானசம்பந்தரின் வரலாற்றில் சேக்கிழார், தமது நெஞ்சத்தைக் காட்டுகிறார். "செழுந்தமிழ் வழக்கு அயல் வழக்கின் துறை வெல்ல வேண்டும்" என்பதே சேக்கிழாரின் குறிக்கோள். "திசையனைத்தின் பெருமையெலாம் தென்திசையே வென்றேற வேண்டும்” என்பது அவர்தம் ஆர்வம், "செழுந் தமிழ் வழக்கு” என்பது சிந்துவெளி நாகரிகக் காலந்தொட்டுச் சிறந்து விளக்கமுற வளர்ந்திருக்கின்ற சித்தாந்தச் செந்நெறியே யாகும். இன்றும் சித்தாந்தச் செந்நெறிக்கு ஈடான சமயம் மனித குலம் கொண்டொழுகும் சமய நெறிகளுக்குள் தோன்றவில்லை.

உலகில் புகழ்பெற்ற சமயங்களில்கூட, பகுத்தறிவுத் திறனாய்வுக் களத்தில் நின்று வினாக்கள் கேட்க முடியும்-விவாதிக்க முடியும். சித்தாந்தச் செந்நெறியைப் பொறுத்தவரையில் வினாத் தொடுக்கும் எல்லைகளைக் கடந்து சிந்தனை முகட்டின் எல்லையில் முடிந்த முடிபாகத் திகழ்கிறது. கடவுள் நம்மைப் படைத்தான்் என்று சொல்லும் சமய நெறிகளும், நாமேதான் கடவுள்' என்றும் கூறும் சமய நெறிகளும், பகுத்தறிவின் முன்னே நிற்க இயலா.

"உயிர், கடவுள் இரண்டும் இருவேறு உள் பொருள்கள்என்று முள்ள உள்பொருள்கள். உயிர் படைக்கப்பெற்ற தல்ல; உயிர் குறையுடையது, கடவுள் நிறையுடையது. உயிரின் குறையும்-கடவுளின் நிறையும் கூட இயற்கை குறைஅறியாமை நிறை-அறிவு, ஞானம். குறை நீங்கி நிறைவு பெறும் உறவே உயிர்-கடவுள் உறவு! இந்த உறவு ஞானத்தின் பாற்பட்டது என்ற சைவ சித்தாந்தக் கொள்கையின் சீர்மையை என்னென்போம். இத்தகைய செழுந்தமிழ் வழக்கு, பிற அயல் வழக்குகளை வென்று விளங்கவேண்டும் என்பது சேக்கிழார் திருவுள்ளம். மீண்டும் மாயாவாத மயக்கத்திலிருந்து செழுந்தமிழ் வழக்கைக் காப்பாற்றுதல் நமது கடமை.

பகுத்தறிவு இயக்கத்தைவிடக் கொடுமையானது மாயாவாதம், பகுத்தறிவாவது மாறுபட்டுத் தோன்றுவதால் எளிதில் அவ்வழியில் மக்கள் செல்லார். ஆனால் மாயாவாதம் புல்லுருவியாக வேறுபாடு காட்டாமல் உடனிகழ்ந்து உள்ளிட்டழிப்பது. ஆதலால் விழிப்புத் தேவை. - இன்றும் நமது சமுதாயத்தைச் செழுந்தமிழ் வழக்கில் நிலைநிறுத்துவது நமது கடமை, அங்ங்னம் நிறுத்தினாலே பல தீமைகள் மறையும், பல தெய்வ வழிபாடு மறையும். அதாவது சிவத்தையே தொழுபவர்களாக வளர்வர். நாளையும் கோளையும் கண்டு அஞ்சார்; வழிபடார்; அன்பினால் இணைந்து வளர்வர். இந்தப் பணியைச் செய்தலே சேக்கிழாருக்குச் செய்யும் வழிபாடு.

வாழ்ந்தோர் வரலாறு

மானிட வாழ்க்கை அருமையானது, இனிமையானது. "வாய்ந்தது. நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்' என்டது - திருமுறை மொழி. இன்று வாழ்க்கையை மதித்திடுவோர் யார்? மாயாவாதம், பெளத்தம், சமணம் முதலிய கலப்பால் விளைந்த வாழ்க்கையைப் பற்றிய அச்சமே ஆட்கொண்டிருக் கிறது. வாழ்க்கையை வெறுத்துப் பேசுதல், மரணத்தை விரும்புதல், வாழ்க்கையை வளர்க்கும் சோதனைகளைத் தண்டனைகளாகக் கருதுதல், இந்த வாழ்க்கையைப் பாவச்சுமையெனக் கருதி அவலமடைதல் ஆகிய பொல்லாத -அறிவியலுக்கு ஒவ்வாத-சேக்கிழார் செந்நெறிக்கு மாறான மனப்போக்கே மேம்பட்டுக் காட்சியளிக்கிறது.

இது நமது மறை வழக்கன்று சேக்கிழார் செந்நெறியு மன்று.

வாழ்க்கை ஒர் அரிய கொடை அஃதை அறிந்து வாழ்தல் வேண்டும்; பிழைப்பு நடத்தக்கூடாது. வாழ்தல் வேறு பிழைத்தல் வேறு. இன்று பலர் பிழைத்தே பொழுது போக்குகின்றனர். வாழ்தலென்பது உயிர்ப்புள்ள கலை, நாள்தோறும் உயிர்ப்புடன் வளரும் மரங்கள் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும். அது போல வாழும் மனிதனும் உயிர்ப்புள்ளவனாக இருப்பான்- வளம் கொழித்து வாழ்வாங்கு வாழ்வான். இங்கு உயிர்ப்பு என்பது மூச்சு விடுவதன்று செயலாக்கம். ஒருவர் வாழும் பொழுதும், அவர் மறைந்த பிறகும் அவருடைய இருப்பை அல்லது தேவையை மற்றவர்கள் உணரும் வகையில் வாழ்தலே வாழ்தல். புவியீர்ப்பு ஆற்றலைவிட வரலாற்றின் இழுவைப் போக்கு, குறிக்கோளும் உறுதியும் இல்லாதவரை வீழ்த்தியே வேடிக்கை பார்க்கிறது. ஒரு சிலரே-அதாவது வாழ்வோரே வரலாற்றின் இழுவையிலிருந்து தப்பி வெற்றி பெற்று நிற்கின்றனர்விளங்குகின்றனர். உலகிற் பெரும்பாலோர் காலத்தைக் கடத்துபவர்கள். காலத்தைக் கணக்கிட்டு-வாழ்க்கையின் அணிகளாக மாற்றும் பழக்கம் நம்மிடம் இல்லவே இல்லை. நம்முடைய மக்களின் காலம் சிந்திச் சிதறி வீணாகிப் பாழாய்ப் போவதை எண்ணிப் பார்க்க வேண்டும். நமக்குக் காலத்தின் அருமையை உணர்த்தச் சேக்கிழார் காலங்கடந்த பெருமானுக்குக் காலத்தைத் தந்து காப்பியம் செய்துள்ளார்; சேரமான் பெருமான், நாயனாரின் பூசையை ஏற்றுக் காலந்தாழ்த்தி எழுந்தருளியமைக்குப் பெருமான் விளக்கம் கூறவேண்டிய நிலை எற்பட்டமையை எண்ணிப்பாருங்கள்! காலக் குறிப்பை உணர்த்தவே மனக்கோயில் புகுந்த வரலாறு! ஆதலால் காலம் போற்றுமின் குறித்த காலத்தில் வழிபாடு ஆற்றுமின்! வாழ்க்கை வளம் கொழிக்கும்! காலத்தை வென்று விளங்குபவர்கள் வாழ்ந்தோராவார். அவர்கள் வாழ்ந்த காலத்தால் அவர்கள் பெருமை பெறுவதில்லை. அவர்களால் அவர்கள் வாழ்ந்த காலம் பெருமை பெறுகிறது. காலத்திற்குக் கருத்தினையும் புது மாற்றத்தினையும் தருபவர்களே, வாழ்பவர்கள். அவர்களால் அந்தக் காலம் பொலிவு பெறுகிறது. இங்ங்னம் புகழ்பட வாழ்ந்தார் வரலாறே பெரிய புராணம்.

அன்பு நெறி

புறத்தே நிகழும் பயணங்களுக்குச் சாலைகள் பாதைகள் இன்றியமையாதனை, சிாலைகள் செப்பமாக அமையாதபோது பயணம் எளிதாக அமைவதில்லை. துன்பத்தையும் விளைவிக்கிறது; பயனுடையதாகவும் அமைவதில்லை. அது போல அகநிலை நிகழ்வுகளின் உணர்வு வழியது வாழ்வியல், மனிதகுலம், ஒருவர் குடும்பம் சமுதாயம் என்று தழுவி வளர்வதற்கு அகநிலை உணர்வு நிகழ்வுகளே காரணம். நிலத்தின் அடிப்பகுதி சுண்ணாம்பாக இருந்தால், ஊற்றெடுக்கும் தண்ணிரும் சுண்ணாம்பாகவே இருக்கும். நிலம் சீராக உழப்பெற்றுச் செப்பம் பெறாவிடில் தாவரங்கள் இனிது வளர்ந்து பயன் தரா. பால் பொழிந்து பாரினைப் பாதுகாக்கும் பசுவின் உடல் நலமாக இருந்தாலன்றிப் பாலும் நலம் தருவதாக அமையாது; அது போலப் பொறிகளைத் தாக்கி, பாதிப்பைத் தரும் காரியங்கள் தற்செயலாக நிகழ்வன அல்ல. திடீரெனவும் தோன்றுவன அல்ல. பல ஆண்டுகளாக நிகழ்ந்த அகநிலைகளின் விளைவேயாம். அகநிகழ்வுக்குக் களம் புலன்கள். புலன்களை இயக்குவது புத்தி, புத்தியின் செயற்பாடு அறிவு; அறிவு அன்புடன் கலக்குமானால் காரியங்கள் இன்பம் தருவனவாகவே அமையும். இருவேறு பொருள்கள் முரண்படலாம். ஆனால், உயிரின் அகநிலையும் புறநிலையும் அதாவது காரணமும் காரியமும் மாறுபடவே படா. அன்பு-சொல்வதற்கு எளிதாக இருக்கிறது. ஆனால் அன்புடையராதல் அரிது. 'அன்பே சிவம் என்பதை உணர வேண்டும். அன்பு, தவத்திலும் சிறந்தது. அதனினும் உயர்ந்த சீலம் உலகத்தின் இல்லை. இறைவன் திருவருளைப் பெறுதற்குரிய பொருளும் அன்பேதான்். "அன்பலால் பொருளும் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே" என்பது அப்பரடிகள் திருவாக்கு.

தன்னல நயப்பின் காரணமாகத் தோன்றும் உணர்ச்சி-நிர்ப்பந்தங்கள் காரணமாகத் தோன்றும் உணர்ச்சி அன்பு போலத் தோற்றமளிக்கும்-நடிக்கும்; ஆனால் அஃது அன்பன்று உடல் தன்னலமே நாடும்; உயிர் பிறர் நலமே நாடும்; அன்பு பிறர் நலமே நாடும்; தன்னல மறுப்பே அன்பின் அடையாளம். அன்பு கனன்று எரியும் நெருப்பைப் போல எரியும், அன்பு தூய வேள்வித் தீ; ஆற்றல் மிக்கது. இந்த அன்பு தீமையைச் சுட்டெரிக்கும்; இன்பத்தை வழங்கும். அன்பு உடையோர் வளர்வர் வாழ்வர்; அவர் தம்மைச் சார்ந்தோரையும் அன்பு உயர்த்தும்; உலகையும் உயர்த்தும். ஏன்? இறைவனையே ஏவல் கொள்ளும்! ஆற்றல் மிக்க அன்பு வளர்ந்தால் உலகத்தில் துன்பம் ஏது? அன்பினைப் பெற விரும்பாதவர்கள் அன்பினைப் பெறுதற்குரிய ஆவல் அற்றவர்கள், ஆசைகளை-பாசங் களை-அன்புபோலக் காட்டி மேவிப் பழகுகிறார்கள். அவர்தம் ஆசைகள் நிறைவேறாதபொழுது பிணங்கு கிறார்கள்; பிணக்குக்குக் காரணம் கண்டு பிடிக்கிறார்கள். பகைத் தீ மூட்டுகிறார்கள்; படைக்கலங்களைப் பெருக்கு கிறார்கள். கோளினைக் கொட்டி அளக்கிறார்கள்; வீதி தோறும் வதந்தியைப் பரப்புகிறார்கள். இத்தகைய அன்பிலிகள்-அன்பு வேடதாரிகள்-இன்று தொற்று நோயெனத் தெருத்தோறும் அலைகிறார்கள். இவர்கள் வாழ்ந்தாலென்ன? மாண்டாலென்ன? அதிசூரனும்-முத்த நாதனும் வாழ்ந்ததுபோல வாழ்கிறார்கள்; வாழ்ந்துவிட்டுப் போகட்டும். அங்ங்ணம் வாழ விடுதல் நமது நெறியுங்கூட. ஆனால், நாம் என்ன ஏனாதிநாதரைப் போலவும் மெய்ப்பொருளாரைப் போலவும் விளங்கியா விட்டுக் கொடுக்கின்றோம். அல்லவே!

சேக்கிழார் காட்டும் அன்பு தூய்மையானது. வணிக நோக்கில்லாதது. இன்று சிலர் பழகுதற்கே பணம் கேட்கிறார்களே! இலாப நட்டக் கணக்குப் போடுகிறார்களே! பழங்காலத்தில் பலரோடு பழகினால் ஆக்கம் இருந்தது; அழிவு தடுத்து நிறுத்தப் பெற்றது; அமைதி இருந்தது. சேக்கிழாரின் நெறி அன்பு நெறி; காப்பியம் முழுதும் அன்பு வெள்ளம்; அன்பு வேள்வி. அன்பில் அயராது வாழ்வோர் வெற்றி பெறுவர். தலைவியிடத்தில் தலைவன் காட்டும் அன்பும் உண்டு. தலைவனிடத்தில் தலைவன் காட்டும் அன்பும் உண்டு; இந்த அன்பு உயிரியலில் அற்பமானதல்ல; உயர்ந்தது. மிக மிக உயர்ந்தது என்று சேச்கிழார் பாராட்டுகின்றார். அதுவே அன்பு, மக்களிடத்தில் பெற்றோர் காட்டும் அன்பும் அன்பேதான்்! தோழர்களிடத்தில் காட்டும் அன்பும் அன்பேதான்்! சிவனடியாரிடத்தில் காட்டும் அன்பும் அன்பேதான்்! இறைவனிடத்தில் காட்டும் அன்பும் அனபேதான்்! இவற்றில் எந்த அன்பும் தாழ்ந்ததில்லை. ஒன்றில் ஒன்று உயர்ந்ததாக இருக்கலாம். ஒன்றில் ஒன்று உயர்ந்தது என்றால் ஒன்றில் தாழ்வு ஏது?

அன்பு என்பது உயிரின் உணர்வு; உயிரின் ஒழுக்கம். இந்த அன்பு எதன்மீது எவ்வகையில் காட்டப் பெற்றாலும் காட்டுகின்ற உயிரும் வளரும்; காட்டப்படுகின்ற உயிரும் வளரும். காட்டப்படும் இடம் நோக்கி நட்பு, காதல், பக்தி என்று அன்பு வேறு வேறு பெயரைப் பெறலாம். இம் மூன்றின் விளைவும் பயனும் ஒன்றேயாம். குறைவற்ற, நிறைவான அன்பு சிவத்தின் தன்மையைப் பெறுகிறது-சிவ மாகிறது. அந்த உணர்வில் திளைத்து நிற்கும்பொழுது நட்புக் கொண்டாலும், காதல் கொண்டாலும் அது சிவத்தின் பாற் காட்டிய பத்திமையைப் போலவே கருதப் பெறும். நட்பு காதலைக் கடந்து சிவத்தினிடம் அன்பு காட்டலாம். இஃது உலகியலில் ஒரோவழி நிகழும். அங்கேயும் சிவம் நட்புக் காட்டப்பெறும் பொருளாக, காதலிக்கப்பெறும் பொருளாக இடம் பெற்று அனுபவத்தை வழங்குகிறது. மாணிக்கவாசகர் சிவத்தையே காதலித்தார். அந்த அனுபவம் திருக்கோவை யாராக மலர்ந்தது. சுந்தரர் பரவையாரைக் காதலித்தார். இவ்விருவரின் காதலில் மாணிக்கவாசகர் காதல் உயர்ந்தது. ஆனாலும், சுந்தரர் காதல் தாழ்ந்ததன்று. அது சிவத்தினைக் காதலிப்பதற்கு முரணன்று. பரவையார் காதல் வழியிலேயே சிவத்தைக் காதலிக்க முடியும் என்னும் குறிப்பில் சேக்கிழார் பாராட்டுகிறார். அறியா மக்கள் உலகியல் காதலுக்கும் பக்திக்கும் இடையில் பெரிய இடைவெளியை உண்டாக்கிக் கொண்டு காதல் வாழ்க்கையைச் சிற்றின்பம் என இழித்துப் பேசும் புல்லறிவாண்மையை மறுப்பார் போலச் சுந்தரர், பரவையார் காதலை யோகமெனச் சிறப்பித்துப் பாடுகிறார்.

"தென்னாவ லூர்மன்னன் தேவர்பிரான் திருவருளால்
மின்னாருங் கொடிமருங்குல் பரவையெனும் மெல்லியல்தன்
பொன்னாரும் முலைஓங்கல் புணர்குவடே சார்வாகப்
பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார்."

இத்தகைய காதலராதல் எளிதன்று. நாள்தோறும் பழக்கத்தால் அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவரை ஒருவர் தழுவி வளர்ந்து அன்பை வளர்த்துத் துய்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இத்தகைய அன்பு நெறி, சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் தேவை. சமுதாய அமைப்பின் தோற்றமே அன்பினால் ஆயது; அன்பின் விளைவுக்குக் களமாக அமைய வேண்டியது. சேக்கிழார் காட்டும் சமுதாய அமைப்பு, தாங்குவது; வளர்ப்பது; திருந்தத் துணை செய்வது; வேலியாக அமைவது; ஆனால் இன்றோ, சமுதாய அமைப்பு போலித் தன்மையுடையதாக-உயிர்ப் பில்லாததாக இருக்கிறது. இன்று, சமுதாய அமைப்பு அச்சுறுத்துகிறது; பிடரியில் உட்கார்ந்து கொண்டு சவுக்கால் அடித்து அவமானப்படுத்துகிறது. சமுதாய அமைப்பை இந்த இழி நிலையிலிருந்து, சேக்கிழாரின் சமுதாய நெறியில் மனமாற்றம் செய்ய வேண்டும். இன்று பழகும் பழக்கம் வாழ்க்கையில் கழித்தற் குறியீடுகளையும் தருவதில்லை; கூட்டற் குறியீடுகளையும் தருவதில்லை. நாமும் மாற விரும்புவதில்லை; மற்றவர்களையும் மாற்ற விரும்புவதில்லை. எப்படியோ பல ஆண்டுகள் பயனின்றியே ஒரு சமுதாய வாழ்க்கையைப் பெயரளவில் நடத்திக் கொண்டு வருகின்றோம். நீரோட்டமில்லாத நிலத்தில் பசும் புல்லும் தலைகாட்டாது. அதுபோல ஈரநெஞ்சு இல்லாத வாழ்க்கை தளிர்த்தல் அரிது. நாம் ஒருவரோடொருவர் கூடிப் பழகுவதே கூட அகநிலையாக்கமாகிய பயன் பெறுவதற்குத்தான்!

திருவீழிமிழலையில் முருகநாயனார் திருமடத்தில் திருஞானசம்பந்தர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர், அப்பரடிகள் ஆகிய அடியார்கள் தங்கியிருந்தார்கள். எவ்வளவு அருமையான காட்சி! இங்குக் கூடிய அடியார்களில் யாரும் 'சந்தியாசிக'ளல்லர்; ஆயினும் துறந்தோரில் தூய்மையுடையவராக விளங்கியவர்கள். இன்று நமது 'சந்நியாசி'களை அப்படி ஒருங்கிணைத்துப் பார்க்க முடிகிறதோ? திருமடங்களின் தலைவர்கள் நிலை என்ன? ஒரோவழி இணைத்துப் பார்த்தாலும், அது செயற்கையாகவே அமைந்து விடுகிறது. இயற்கையாக அமையவில்லை என்பதை இந்த நூற்றாண்டு உறுதிப்படுத்தியுள்ளது. அகம் நெகிழ் அன்பும் உறவும் வளர வேண்டுமானால் தனித்திருக்கும் பொழுதும் பலரோடு கூடியிருக்கும் பொழுதும் உயர் குணங்களையும், உயர் அன்பையும் நினைத்தல் வேண்டும்; பேச வேண்டும். பழகுவோரின் நற்பண்புகளை எண்ணிப் பார்ப்பதின் மூலம்தான் மேலும் மேலும் அன்பு வளரும்.

"ஒன்று நன்று உள்ளல்” என்பார் திருவள்ளுவர். அன்பு வளர்வதன் மூலம்தான் குறைகள் நீங்கும்; அன்பு நெறியே குறைகள் நீக்கத்திற்குரிய வழி. "மறத்திற்கும் அஃதே துணை" என்ற தமிழ் மறை உணர்க. இந்த அடியார்கள் முருக நாயனார் திருமடத்தில் கூடியிருந்தபொழுது என்ன பேசினார்கள்? திருத்தொண்டர் பெருமையினைப் பேசினார்கள். அப்பெருமையினைப் பலவாறாக விரிந்துரைத்தார்கள், விரிவுரைகள் மாறுபட்டிருக்கக்கூடும்; ஆனால் முரண்பாடுகளாக அல்ல; குறிக்கோள் ஒன்றாக இருக்கும் இடத்தில் முரண்பாடுகள் தோன்றா. இம்மாறுபாடுகள், அன்பின் வளர்ச்சியில்-விகிதத்தில் ஏற்பட்ட மாறுபாடுகளே! முனைப்பால் ஏற்பட்ட முரண்பாடுகள் அல்ல. அனைவரும் ஒருமைப்பாடுடைய சிந்தையினர்; ஆதலால் அவர்கள் "உடனுறைவின் பயன் பெற்றார்" என்று சேக்கிழார் விளக்குகின்றார்.

திருப்பதிகச் செழுந்தமிழின் திறம் போற்றி
மகிழ்வுற்றுப்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பாகர்
பொற்றாளில்
விருப்புடைய திருத்தொண்டர் பெருமையினை
விரித்துரைத்து அங்கு
ஒருப்படுகிந் தையினார்கள் உடலுறைவின் பயன்
பெற்றார்.


என்பது சேக்கிழார் திருப்பாடல். இங்ங்னம் வீட்டிலும், நாட்டிலும் உடனுறைவின் பயன் எய்தி வாழ்கின்ற பண்பாடுடைய வாழ்க்கை தோன்ற வேண்டும்.

இறைவனைச் சடங்குகளால் மகிழ்விக்க இயலாது; "பொக்கமிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்குநிற்பவன்" பெருமான். கல்லடியும் செருப்படியும் ஏற்று மகிழ்பவன். சிவகோசரியாரின் வழிபாடு விதிமுறையைச் சார்ந்ததுதான்்; கண்ணப்பரின் வழிபாடு ஆகம விதி முறைகளை மீறியதுதான்்! ஆனால், கண்ணப்பரின் வழிபாடே இறைவனுக்கு உவப்பாக இருந்தது. மாமன்னன் கட்டிய கருங்கல் கோயிலினும் பூசலார் கட்டிய மனக்கோயிலே இறைவனுக்கு உவப்பையளிக்கிறது. இறைவனை நாள் தோறும் வணங்கினால் என்ன? கோடி அருச்சனை செய்தால் என்ன? வழிபாடு அகம் நிறைந்த அன்பினின்று எழுந்ததாக இல்லாது போனால் பயனில்லை.

வானவர்கள், இறைவனை வாழ்த்தத்தான் செய்கின்றனர். வானவர்கள், பதவி அதிகாரப் பித்துப் பிடித்து அலைபவர்கள்; அவற்றைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் பெறுவதற்குமாகவே அவர்கள் இறைவனை வாழ்த்து இன்றனர். தக்கன் வேள்வி நிகழ்வு இதற்குச் சான்று.

"வாழ்த்துவதும் வானவர்கள்
தாம்வாழ்வான்; மனம்நின்பால்
தாழ்த்துவதும் தாம் உயர்ந்து
தம்மையெல்லாம் தொழவேண்டி"


என்று மாணிக்கவாசகர் வானவர்தம் நிலையை எடுத்துக் காட்டுவார். "நாட்டுத் தேவர்களும்” அதே இயல்பினர்; அதனாலன்றோ பெருமான் வான்பழித்திடுகின்றான். மண்ணில் புகுந்து மனிதருடன் விளையாடி ஆட்கொள்கிறான். தூய அன்பில் குளித்து மகிழும் வாய்ப்பு இறைவனுக்குக் கிடைப்பதில்லை. அன்றே அந்த நிலை! இன்று அதைவிட மோசம்! இன்று வழிபாடு நூற்றுக்கு நூறு வணிகமாகி விட்டது. அதனால்தான் பழங்காலத்தில் "வானத்தில் இறைவனைக் காணமுடியாது-ஆனால் மண்ணில் பார்க்கலாம்” என்ற நம்பிக்கை இருந்தது; இன்று அந்த நம்பிக்கையும் பசுமையாக இல்லை. அடியார்களுடைய அன்பில் நனைந்து ஆடுவதற்காக இறைவன் மண்மீது வருகின்றான்.

அமர்நீதி நாயனார் வரலாற்றில்

தொண்டர் அன்பெனும் தூயநீர் ஆடுதல் வேண்டி
மண்டு தண்புனல் மூழ்கிய ஈரத்தை மாற்றத்
தண்டின் மேலதும் ஈரம்நான் தந்தகோ வணத்தைக்
கொண்டு வாரும்என் றுரைத்தனர் கோவணக்கள்வர்”


என்று பெருமான் கோவணக் கள்வராக அருளாடல் செய்ததைக் குறிப்பிடுகின்றார்.

வழிபாட்டில் விதிமுறைகள் இருக்கலாம். ஆனால் அன்பினைத் தடைசெய்யும் முள்வேலிகளாக விதிகள் அமையக்கூடாது. வழிபாட்டுக்கு அன்பே உயிர் என்பதைக் கண்ணப்ப நாயனார் வரலாறு உணர்த்துகின்றது. ஆனாலும் நாட்டில் நிகழ்ந்தது என்ன ? நடப்பது என்ன? சிவகோசரியார் பரம்பரை வருகிறது. கண்ணப்பர் பரம்பரை வரவில்லையே. கண்ணப்பரின் புகழ் கண்டு ஒளித்த சிவகோசரியார் பரம்பரை, அடுத்துக் கண்ணப்பர் தோன்ற முடியாமல் கருவறையைப் பூட்டிவிட்டதே வழிபடும் உரிமையைப் பறித்துவிட்டதே! புனலும் பூவும் சொரிந்து வழிபாடு செய்யும் ஞானப் பயிற்சியில்லாமல் எப்படி அன்பு வளரும்? ஞானம் வளரும்? திருஞான சம்பந்தர் முதலாகச் சமய ஆசாரியர்கள் வழங்கிய உரிமையைத் தட்டிப் பறித்துவிட்டனரே! ஆன்மாவின் ஞானப் பண்ணையாக விளங்கிய திருக்கோயிலைக் காட்சிச் சாலையாக-தொழிற் கூடமாக-மடைப் பள்ளியாக மாற்றிய கொடுமையை நினைத்தால் நெஞ்சு பொறுக்க வில்லையே! பக்தர்கள் ஆவார் எல்லாரும் திருக்கோயிலில் புனலும் பூவும் சொரிந்து வழிபாடு செய்யும் உரிமையைப் பெறும் நாளே-நன்னாள். தூய அன்பினால் இறைவனை வழிபடுதலே வழிபாடு. தூய அன்பினால் இணைந்து ஒருமைப்பாட்டுடன் வாழ்வதே வாழ்வு.

பெரியபுராணத்தில், சமுதாய அமைப்பில் பல்வேறு நிலைகளைக் காட்டும் அன்புநெறி பேசப் பெறுகிறது. ஆயினும், நூல் முழுவதும் மையமிட்டுக் கொண்டிருப்பது சிவனடியார்பால் காட்டும் அன்பேயாம். சிவத்தைப் பேணுவதாலும், சிவத்தைத் தம் நெஞ்சத்திற் கோயில் கொண்டருளச் செய்திருப்பதாலும், சிவத்தின் திருவேடத்தையே தம் திருவேடமாகக் கொண்டிருப்பதாலும், சிவனடியார்கள் அன்பு பாராட்டுதற்குரியவர்கள். சிவனடி யார்கள் 'யான்', 'எனது' என்னும் செருக்கற்வர்களாகச் சிவத்தையே நினைந்து தொழும் பழமை பூண்டவர்கள். இத்தகு சிவனடியார்கள்பால் அன்பு காட்டுதல் தமிழகத்தின் வழக்கு ஒரோவழி இவ்வழிபாட்டினைப் பெற்றார். பிழையுளராக இருந்தும், வழிபாட்டினைச் செய்தார், பெற்ற பேற்றினையே பெற்றிருக்கிறார்கள். காரணம், வழிபாடு, வேடத்தினைத் தாங்கியிருந்த மனிதருக்கன்று. அவர் மூலம் சிவத்தின் திருவேடத்திற்கே வழிபாடு நிகழ்த்தப் பெற்றது. நினைப்பும்-மறப்பும் சேர்ந்தது உயிரியல் வாழ்க்கை உலகியல் வாழ்க்கையில் சிவத்தை மறக்கும் வாயில்களே மிகுதி. அப்போது சிவத்தின் நினைவைத் தரும் திருவேடமும் திருக்கோயிலும் போற்றுதலுக்கு உரியனவான நினைப்பிக்கும் பணியினை எது செய்தாலென்ன? அதனாலன்றோ சேரமான் பெருமான்,

................தீருநீற்றின்
வாரவேடம் நினைப்பித்தீர் வருந்தாதேகும்”


என்று நினைப்பிக்கும் பணியின் பெருமையை விளக்குகின்றார்.

அன்பு, பகைக்கு மாறானது. எப்போது? பகையை இலட்சியமாகக் கொள்ளாத போது, அதிசூரன்-முத்த நாதன்களுக்குப் பகைமைக் குணம் மாறததுபோல இன்றும் பலர் வாழ்நாள் முழுவதும் பகைவர்களாகவே வாழ்கின்றார்கள். அவர்கள் வாழ்க்கை அவலத்தில்தான்் முடியும். இதனால் யாருக்கென்ன பயன்? பகைமைக் குணம் ஒருபொழுதும் பயன் தராது. ஒரோவழி பயன் கிடைப்பது போலத் தோன்றும்; அஃது ஒரு வாணவேடிக்கை. வாணம் வெடித்தபின் கரியே; அதுபோல்-பகைமை செறிந்த வாழ்க்கை துன்பமே தரும்; பயனைத் தராது. ஏனாதிநாதர், ஈழவர் குலத்தைச் சார்ந்தவர். அவருடைய தாயத்தில் உரிமை கொண்டாடி அதிசூரன் என்பவன் போரிடுகின்றான். பலமுறை போரில் தோல்வியடைகிறான். அதிசூரன் தான் அடைந்த தோல்வியின் காரணமாக வஞ்சகச் சூழ்ச்சியை எண்ணுகிறான். தனி இடத்துக்குப் போருக்கு வருமாறு ஏனாதிநாதரை அழைக்கின்றான். ஏனாதிநாதரோ நல்லவர். ஆதலால் தன்னோடு பொருதியவனையும் கூட அவர் ஐயுறவில்லை. ஐயுறுதலே தீய பண்புதானே! இங்ஙனம் ஐயுற்றுக் காதலை, நட்பை உறவை இழந்தவர்கள் ஏராளம்.

"ஐயப்பாடு தங்குகின்ற நெஞ்சு தவறுள்ள நெஞ்சு" என்று செகப்பிரியர் கூறுவார். அது மட்டுமன்று நம்பிக்கைக்கு எதிரானது ஐயுறல். ஐயுறல் நம்பிக்கையைக் கெடுக்கும்; ஊற்றெடுக்கும் அன்பை வற்றச் செய்யும், நன்னம்பிக்கை ஒரோவழி பிழைபடலாம். அதனால் ஒன்றும் பிழை வாராது; இழப்பும் வாராது. நம்பாமையினால் வரும் இழப்பைவிட எந்நிலையிலும் நம்பிக்கையினால் ஒரோவழி வரும் இழப்பு-இழப்பே அல்ல. அதுவும் வாழ்க்கையை வளர்க்கும்; புகழைத் தரும். நம்பிக்கையில்லாதவர்கள் காலப்போக்கில்-தம்மையே நம்பாத பைத்தியக்காரர்களாகிவிடுவர். ஐயத்தை வழக்கமாகக் கொண்டவர்கள், யாரையும் நம்பமாட்டார்கள். ஏனாதிநாதர் நம்பிக்கையில் திளைத்த நல்ல சிவனடியார் ஆதலால், அதிசூரன் குறிப்பிட்ட தனியிடத்திற்குத் தனியே போருக்குச் செல்கிறார். அதிசூரனும் போருக்கு ஆயத்தமாயிருக்கிறான். போர் தொடங்கிவிட்டது. கடுமையான போர் செய்யும் பொழுது, அதிசூரன் கேடயத்தால் தன் நெற்றியை மறைத்துக் கொண்டே போரிடுகிறான். போர் நல்ல வேகத்திலிருக்கும் பொழுது திடீரென அதிசூரன் தன் நெற்றியை மறைத்திருந்த கேடயத்தை விலக்குகிறான். நல்ல போருணர்வில் போர் செய்து கொண்டிருந்த ஏனாதிநாதர் கண்ணில், அதிசூரன் கொண்ட திருநீற்று வேடம்படுகிறது; தெரிகிறது. ஒரு விநாடி போருணர்ச்சி மாறுபடுகிறது. அன்பு ஊற்றெடுக்கிறது; அருள் உணர்வு தலைப்படுகிறது; அமைதி தவழ்கிறது; தம்மையே ஒப்படைக்கும் பெருந்தகைமை பிறக்கிறது. அவர் குறிக்கோள் வழி இசைந்து நிற்பதே கடமை என்பது ஏனாதிநாதர் திருவுள்ளம். ஆயினும் போரில் சிவனடியார் என்று கருதிப் போரிடாமலிருந்து விட்டால் படைக்கலமில்லாதாரைக் கொன்று தாயம் கொண்ட பழி சேரும்! அது சிவவேடம் கொண்டாருக்குப் புகழாகாது என்றெண்ணிப் போர் செய்வார்போல் நடித்துத் தம்மையே மரணத்திற்குள்ளாக்கிக் கொண்டு அதிசூரனுக்குத் தாயம் மட்டுமல்லாமல் தாவில் புகழும் சேர்த்தார். கொடிய பகைவரிடத்தும் ஒரு நொடியில் அன்பு கசிவெடுத்து வெள்ளமெனப் பாய்வது சேக்கிழார் காட்டும் சமுதாய நெறி.

மனையறத்தில் திருநீலகண்டரது மனைவியின் காதல்-அன்பு போற்றுதலுக்குரியது. குறை காணல் திருத்தத்திற்கேயாம் என்ற அறநெறியை அம்மையார் உலகிற்கு அளித்தார். வாழ்க்கையின் முதலாக, மையமாக, முடிவாகப் பரிணமிக்க வேண்டியது அன்பே என்பது சேக்கிழாரின் தத்துவம்; அன்பே சேக்கிழாரின் சமுதாயக் கொள்கை அன்பு நெறியே கோட்பாடு.

தொண்டு நெறி


தூய அன்பில் ஒப்புரவு நெறி தோன்றும்; திருத்தொண்டின் நெறி மலரும். அன்பின் விளைவு தொண்டு. அன்பின் பயன் தொண்டு. உயிர், உணர்விற் சிறந்ததை உறுதிப்படுத்தி, ஊதியமாக்குவது தொண்டேயாம். அன்பு ஆழமானதா? அன்பு, அன்பையே நோக்கமாகக் கொண்டதா? நிலையானதா? என்பனவற்றையெல்லாம் அளந்துகாட்டி விளக்கம் செய்வது தொண்டேயாம். அன்பினை மேலும் வளர்த்துப் பண்ணப் பணைத்த செல்வமாக்கி உறுதிப்படுத்தவதும் அன்பேயாம். அன்பிற் சிறந்தார் தொண்டராதல் இயற்கை அங்ஙனம் ஆகா திருந்தால் இயற்கைக்கு மாறு. அவர்கள் அன்பு உடைய வர்களா என்பது ஆய்வுக்குரியது. யாதொன்றன்பால் அன்பு காட்டப்படுகிறதோ அதனைப் பாதுகாத்தல் என்பது சராசரி அறிவு. ஆதலால், இறைவனின் துண்ணுடலாகவும் பருவுடலாகவும் விளங்கும் பரந்துபட்ட உயிர்த் தொகுதியின்பால் அன்பு காட்டுதல் என்பது அவ்வுயிர்த் தொகுதியின் பாதுகாப்பு, வளர்ச்சி, அவைகளுக்கு உற்ற இடர்நீக்கல் முதலிய தொண்டிலே கொண்டுபோய்ச் சேர்க்கும்.

தொண்டு என்பது புலன்களில் ஒன்றிய பொறிகளின் வாயிலாகச் செய்யப்படும் பணி. இப்பணிகள் யாரை நோக்கிச் செய்யப் பெறுகின்றன என்பதைவிடப் பணிகளின் வகையையும் தரத்தையும் விடப் பணி செய்யும் மனப்பாங்கே தொண்டா? வணிகமா? என்பதைப் பகுத்துக் காட்டும் அளவுகோல். எவ்விதக் குறிபெதிர்ப்புமில்லாமல் திரு வருளையே முன்னிட்டுத் திருவருளுக்குச் செய்வதெனவே கருதிச் செய்யப்பெறுவது தொண்டு. அதனால் அப்பரடிகள், 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று அருளிச் செய்தார். 'கிடப்பதே' என்பது அஃறிணைக் குறிப்புச் சொல். உலகில் எந்தவோர் அஃறிணைப் பொருளும் மனித குலத்திற்குப் பயன்படாததன்று. ஆனால் அஃறினைப் பொருள்களில் எதுவும் நன்றியை, புகழை விளம்பரத்தை விரும்புவதில்லை. துறவிகளும் கூட அதுபோன்று பணி செய்ய வேண்டுமென்பதுதான்் மரபு. ஆனால் அஃறிணை நிலையில் அவ்வாறு மனச் செழுமையடைந்து தொண்டு செய்யும் துறவிகளை இன்று காண்பது அரிது. இன்றைய துறவிகள் அழுக்காறு, அவ்வழிப்பட்ட போட்டிகள், போட்டிகளில் தொடர்ந்த வழக்குகள், விளம்பர மோகங்கள் ஆகியவற்றிலேயே "பெரியவர்க"ளாக விளங்குகின்றனர். அப்பரடிகள் திருக்கோயிலிலும் உழவார்ப் பணி செய்தார். தெருவிலும் தொண்டு செய்தார்.

"பார்வாழத் திருவிதிப் பணிசெய்து
பணிந்தேத்திப் பரவிச் செல்வார்"


என்று சேக்கிழார் பாராட்டுவார், மன்பதை உய்தி பெறுதற்கு உரியன செய்தல் அனைத்தும் தொண்டேயாம். அப்பரடிகள் இளமைக் காலத்தில் செய்த தொண்டகளைச் சேக்கிழார் முறைப்படுத்திக் கூறுகிறார். ஆதுலர்க்கு உணவளிக்கும் அறச்சாலைகள் அமைத்தல், தண்ணிர்ப்பந்தல் அமைத்தல், மழைவளம் தருவதுடன் மன்னுயிர்க்கு நிழல் தரும் காடு வளர்த்தல், மனிதரும் விலங்குகளும் குளித்து மகிழக் குளங்கள் தொடல், வேண்டுவார்க்கு வேண்டுவன தருதல், விருந்தளித்தல், செந்தமிழ் நாவலர்க்கு வழங்குதல், ஈதல் முதலிய அறங்களை அப்பரடிகள் செய்துள்ளார் என்பதனை,

"மாசில்மனத் துயரொழிய மருணிக்கி யார் நிரம்பித்
தேசநெறி நிலையாமை கண்டறங்கள் செய்வாராய்க்
காசினிமேற் புகழ்விளங்க நிதியளித்துக்

கருணையினால்
ஆசிலறச் சாலைகளும் தண்ணிர்ப்பந் தரும்

அமைப்பார்”.

"காவளர்த்தும் குளந்தொட்டும் கடப்பாடு வழுவாமல்
மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்தளித்தும்

விருந்தளித்தும்
நாவலர்க்கு வளம்பெருக நல்கியும்நா
னிலத்துள்ளோர்
யாவருக்கும் தவிராத ஈகைவினைத் துறைநின்றார்."


என்ற பாடல்களால் அறியலாம். அப்பரடிகளையே வழிபடும் தெய்வமாகக் கொண்டு போற்றி அவர் வழி நின்றொழுகிய அப்பூதியடிகள், பலரும் நடமாடும் வழியில் தண்ணிர்ப்பந்தல் அமைத்துப் பணி செய்துள்ளார். குளம் தொட்டும் பணி செய்துள்ளார். காடு வளர்த்தும் பணி செய்துள்ளார். இவை பொதுத் தொண்டு.

சிவனடியார்பால் அன்பு பூண்டொழுகி அவர்க்குத் தொண்டு செய்தலும் தொண்டேயாம். சிறுத்தொண்டர், இளையான்குடி மாற நாயனார் முதலியோர் அடியார்க்கு அமுதருத்தித் தொண்டு செய்தனர். திருநிலகண்டர் அடியார்களுக்குரிய உண்கலமாகிய திருவோடு தந்து உதவி செய்தார். திருக்குறிப்புத் தொண்டநாயனார் அடியார்களின் உடை அழுக்கைத் திருத்தித் தூய்மை செய்து தரும் தொண்டு செய்தார். இங்ஙனம் நடமாடும் கோயிலெனத் திகழும் அடியார்கள் மாட்டு அன்பு பூண்டு தொண்டு செய்தவர்கள் பலர். "நடமாடும் கோயில்” என்ற வழக்கு சாதாரணமாக மனிதனைக் குறிக்காது. கடவுள் எழுந்தருளாத கோயில், கோயிலாகாது, 'எம்பெருமானை, சிவத்தைத் தம் உள்ளத்தே கோயில் கொண்டருளச் செய்து உலாவரும் சிவனடியார்களே நடமாடும் கோயில்கள்'; இவர்களுக்குச் செய்வது சிறப்புத் தொண்டு. இவையனைத்தும் தொண்டு என்றே பெயர் பெறும். இத்தொண்டில் ஈடுபடுவார் யாருக்கும் உளத் தகுதியே தவிர வேறொரு ஈடுபாடும் இல்லை.

அடுத்து, பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயிலுக்குச் செய்யும் தொண்டு. அதைத் "திருத்தொண்டு” என்று சிறப்பாகக் குறிப்பிடலாம். அப்பரடிகள் திருக்கோயில்கள் தோறும் சென்று உழவாரப் பணி செய்துள்ளார். அப்பரடிகள் காலம் தமிழகத்தில் சமண சமயம் பரவியிருந்த, காலம். தமிழக அரசர்களில் பலர் சமண சமயத்தைச் சார்ந்து விட்டனர். அதனால் தமிழகத் திருக்கோயில்கள் பல, பேணுவாரற்ற நிலையை எய்தின. மக்கள் சமண சமய அரசர்க்கு அஞ்சித் திருக்கோயில்களைப் பேணும் கடமையிலிருந்து விலகிவிட்டனர். அதன் காரணமாகத், திருக்கோயில் மண்டபங்களிலும், மதில்களிலும், கோபுரங்களிலும் அவற்றை இடித்துப் பாழாக்கும் மரங்கள், செடிகள் முளைத்திருக்கக்கூடும். திருக்கோயில்கள் தூய்மை இழந்திருக்கக் கூடும். சமணர்கள் திருக்கோயிலை முடி மறைக்கவே முயற்சித்தனரே- அதுதானே பழயாறை வரலாறு. ஆதலால் திருக்கோயில்களைப் பேணுதல் அந்தக் காலக் கடமை என்று அப்பரடிகள் எண்ணியிருப்பார். அதனாலேயே அவர் திருக்கோயிலைப் பேணும் உழவாரப் பணியை மேற்கொண்டார் என்று கருதலாம். உழவாரப் பணிசெய்து திருக்கோயிலைக் காப்பாற்ற எண்ணிய அப்பரடிகள் மக்களைத் திரட்டினார். "நாமார்க்கும் குடியல்லோம்” என்று எடுத்தோதி-அடிமைத் தனத்தை அச்சத்தை நீக்கினார்.

வழிவழியாக வளர்ந்துவரும் செழுமைமிக்க அன்பு உழுவலன்பு எனப்பெறும். தமிழினம் வழிவழியாகச் சிவத்தினிடம் காட்டி வரும் அன்பு உழுவலன்பு, சிவம் உறையும் திருக்கோயில் பணி சிவநெறியைப் பேணும் அன்பில் தோன்றிய பணியாதலால் "உழவாரம்" என்று பெயர் பெற்றது போலும். மனத்தால், வாக்கால் செய்யும் தொண்டு உயர்ந்ததே ஆனாலும் அதைவிட உயர்ந்தது கைகளால் செய்யும் தொண்டு. கைகளால் செய்யும் தொண்டுக்கு உழைப்பு மிகுதியும் தேவை. உடலால் உழைப்பவர்கள் உயர்ந்தவர்களல்லர் என்ற கருத்து பொய்யானது; தவறானது. அது மட்டுமன்று. மனத்தினால் -வாக்கினால் செய்யும் தொண்டின் தகுதியை உறுதிப்படுத்துவது கையினாற் செய்யும் தொண்டேதான்். மேலும் மனத்தினால் வாக்கினால் செய்யும் தொண்டிற்கும் தொண்டிற்குக் காரணமான உணர்விற்கும் பாதுகாப்பளிப்பது "கைத் திருத்தொண்டே"யாம். மனத்தினால் வாக்கினால் செய்யும் தொண்டைவிடக் கைத்திருத்தொண்ட உயர்ந்தது என்பதைச் சிவம், திருவிழிமிழலையில் வாசியில்லாக் காசு தந்ததன் மூலம் உணர்த்திற்று. ஆயினும் அப்பரடிகள் அடிச்சுவட்டையொட்டி அந்தக் கைத் திருத்தொண்டு வளரவில்லை. இன்றளவும் வளரவில்லை. வளராதது மட்டுமின்றித் திருக்கோயில்களில் இன்று கைத்திருத்தொண்டு செய்வோர் நாலாந்தர ஊழியர்களாக நடத்தப்படுகின்றனர். அவர்கள் பெறும் ஊதியமும் குறைவு; மரியாதையும் குறைவு. திருக்கோயிலில் கைத்திருத் தொண்டு செய்தல் எளிதான் பணியன்று. இதற்குக் கணநாதநாயனார் பயிற்சியே கொடுத்தார் என்று பெரியபுராணம் கூறகிறது. ஆனால் இன்று இப்பணி, தொண்டின் பாங்கில் வளரவில்லை. தொழில் முறையாக மாற்றம் பெற்றுவிட்டது. திருவேடம் தாங்காதவர்களும், திருவைந்தெழுத்து எண்ணதவர்களும் இன்று இப்பணியைச் செய்கின்றனர். கைத்திருத்தொண்டு செய்யும் மனப்பான்மை ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். திருக்கோயில்களில் கைத்திருத்தொண்டு செய்பவர்கள் தரமும் தகுதியும் உடையவர்கள் ஆக வேண்டும். அவர்கள் சிறப்பு வாய்ந்த பணியாளர்களாகக் கருதப்பெற வேண்டும்; நடத்தப் பெற வேண்டும். அவர்களை, வருத்தும் வறுமையிலிருந்து மீட்க வேண்டும்.

அடுத்து, இறைவனை முன்னிட்டுச் செய்கிற தொண்டு. இந்தத் திருத்தொண்டில் கண்ணப்பர் ஈடு இணையற்ற தொண்டரானார். மற்றும் அரிவாட்டாய நாயனாரின், தொண்டு தலை சிறந்தது. சண்டீசர், குங்கிலியக்கலயர், அமர்நீதிநாயனார் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆக, சமுதாயத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் அன்பு காட்டித் தொண்டு செய்தவர்களைச் சேக்கிாார் நிரந்தினிது பேசியுள்ளார். இன்றைய சமயமும் சமுதாயமும் மீண்டும் தொண்டின் நெறியினால்தான் உய்தி பெறமுடியும். தத்துவங்கள் உயர்ந்தவையாக இருந்தால் மட்டும் போதாது; அத் தத்துவங்கள் செயலுருவம் பெற வேண்டும். ஆயிரம் தடவை தத்துவங்களைப் பற்றிப் பேசுவதைவிடத் தத்துவத்திற்குச் செயலுருவம் கொடுக்கும் பணியே சிறந்த பணி. பேச்சினால் வளர்ந்த கொள்கை கிடையாது; தொண்டினால் வளர்ந்த கொள்கைகளே உண்டு; அதனாலன்றோ சுந்தரர் வரலாற்றில் சிவத்தின் வாயிலாகச் சேக்கிழார் "வித்தகம் பேசவேண்டாம் பணி செய்ய வேண்டும்" என்று நமக்கு அறிவுறுத்துநின்றார்.

குறிக்கோள் வாழ்க்கை

உயிர்கள், உய்திபெற வேண்டிய நிலையில் உள்ளவை: உயிர்கள் உய்திக்குரியன. உயிர்கள் முயன்றால் உய்தி பெறமுடியும். உயிர்கள் உய்திக்குரிய அடிப்படைத் தகுதிகளைப் பெற வேண்டும். உயிர்கள் உய்திபெறல்- அதாவது நிறைவு பெறல் இறைவன் விருப்பத்தால் மட்டுமே நிகழக்கூடிய ஒன்றன்று. உயிர்கள் தகுதி பெற்றாக வேண்டும். உயிர்களைத் தகுதிப்படுத்துவது அவை ஏற்றுக் கொள்கின்ற குறிக்கோளைப் பொறுத்தது. வாழ்க்கையில் பொருள்பட வாழ்கிறவர்களுக்கெல்லாம் நிச்சயம் குறிக்கோளிருக்கும். குளிக்கோளில்லாத வாழ்க்கை கெட்ட வாழ்க்கை. "குறிக்கோள் இலாது கெட்டென்" என்பார் அப்பரடிகள்,

“நல்லாறு" என்பதும் "நன்னெறி" என்பதும் "அறம்' என்பதும் கடலினும் பரப்புடையது. எல்லாவற்றையும் எல்லாராலும் செய்தல் இயலாது. ஆதலால் தத்தம் இயல்புக் கேற்றவாறு ஒன்றை அல்லது சில துறைகளைக் குறிக்கோளாக ஏற்றுக் கொண்டு உறுதியுடன் செய்து நிறைவேற்ற வேண்டும். பலர் ஆசைகளையும் ஆவல்களையும் கூடக் குறிக்கோள்கள் என்று தவறாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். குறிக்கோள் என்பது தற்சார்பு இல்லாதது. பிறர் நலத்தைச் சார்பாகவுடையது. அது தூய அன்பில் விளைவது; இடர்களைப் பற்றி எண்ணாதது. உயர்குறிக்கோளுடையோர் பல்கிப் பெருகி வளர வளர நாடு வளரும்-சமுதாயம் மேம்பாடுறும். சிலர் சூழ்நிலைகளின் துண்டுதலால் ஒரு குறிக்கோளை எடுத்துக் கொண்டு விடுவர். அக்குறிக்கோளை அடைவதற்குத் தடை ஏதாவது வருமானால் துன்பம் வருமானால் குறிக்கோளைக் கைவிட்டு விடுவர்; பிழைத்துப் போய்விடுவர்.

பெரியபுராணத்தில் வருகிற அடியார்கள் அனைவரும் குறிக்கோளுடையவர்கள்; குறிக்கோளில் உறுதியாக நின்றவர்கள்; தம் உயிரினும் குறிக்கோள் உயர்ந்தாக எண்ணியவர்கள்; குறிக்கோளை அடைவதற்காகத் தம்மையே அர்ப்பணித்தவர்கள். இறைவனுக்குத் தாயனைய பரிவுடை யராகி அமுதருத்தும் இயல்பினர் அரிவாட்டாயர். அவருடைய பணிக்கு ஒரு தற்செயலான இடையூறு தோன்றியது. இறைவனுக்கு அமுதை எடுத்துச்செல்லும் பொழுது தடுக்கி விழுந்து விட்டது. அமுதுக்குக் கொண்டு போன மாவடு முதலிய பொருள்கள் வயல் வெடிப்புகளில் வீழ்ந்துவிட்டன. அரிவாட்டாயர் இறைவனுக்கு அமுதருத் துதல் தடைப்பட்டதே என்று தன்னையே மாய்த்துக் கொள்ள முனைகிறார். உடன் பெருமானுடைய திருக்கரம் அரிவாட்டாய நாயனாரின் அர்ப்பணிப்பைத் தடுக்கின்றது; உடனிகழ்வாக, வயல் வெடிப்புக்குள் 'கடுக்'கென்று மாவடுவைக் கடித்துண்ணும் ஒலியும் கேட்கிறது. இன்று இறைவனுக்கு அமுது அருத்தியே தீர வேண்டும் என்னும் அன்புடையார் யார்? குறிக்கோளுடையார் யார்? இன்று திருக்கோயில்களில் திருவமுது அருத்துதல் என்பது ஒரு போலிச் சடங்காகப் போய்விட்டது. இறைவன் அமுதருந்த வில்லையே என்று எண்ணிக் கவலைப்படுவாரில்லை. ஏன்? அத்தகைய குறிக்கோளுடையவரும் இல்லை. எல்லாம் தொழில் மயம்; பிழைப்புக்கு வழி. ஆதலால் இன்று உயிர்ப்பில்லை. அடுத்து, கண்ணப்பநாயனார் இறைவனி டத்தில் அன்பு காட்டுதல். அவர் சாத்திர சம்பிரதாயச் சடங்குகளைக் கடந்து ஊனும் உயிரும் நின்றுருக அன்புரு வானார். இறைவனுடைய திருமேனிக் கண்ணிலிருந்து செங்குருதி பாய்கிறது. அன்பின் குறிக்கோளாகவுள்ள உயிரின் உயிர்நிலையாகிய திருமேனியின் கண்ணில் செங்குருதியைக் கண்டவுடன் கண்ணப்பர் துடிக்கிறார். ஆனால் பலநாள் பழகிய சிவகோசரியாருக்கு அந்தத் துடிப்பில்லை, ஏன்? அதுதான் அன்புக்கும் தொண்டுக்கும் - பிழைப்புக்கும் உள்ள வேறுபாடு.

குறிக்கோள் நிறைந்த வாழ்க்கை என்பது இடர்களைப் பற்றிக் கவலைப்படாதது. ஆங்குப் பாசமும் இல்லை; பழிக்கஞ்சுதலும் இல்லை; குறிக்கோளை நிறைவேற்றுதலே இலக்கு குறிக்கோள் நெறியில் பயணம் செய்து இனிதே முடித்த பெரியாரின் வரலாறே பெரிய புராணம். வாழ்க்கைக்கு, உயர்ந்த குறிக்கோளாக எடுத்துக் கொள்வது நல்லது; இயலாதுபோனாலும் கவலைப்பட வேண்டிய தில்லை. உலகியல் வாழ்க்கையில் இன்பம் தரும் நட்பு, காதல் போன்ற துறைகளிலாவது குறிக்கோளுடைய வாழ்க்கை நடத்தக் கூடாதா? இன்பத்திலும் துன்பத்திலும் இழப்பிலும் ஈட்டத்திலும் குறைகளிலும் நிறைகளிலும் தோய்ந்து நின்றுவிடாமல் காதலையும் நட்பையும் குறிக்கோளாகக் கொண்டு வாழ்தல் சேக்கிழார் காட்டும் தனிநிலையில் சிறப்புற்ற வாழ்க்கை, சமுதாய நிலையில் சிறப்பையும் இன்ப அன்பையும் தரும் வாழ்க்கை இன்று இந்த நாட்டை வருத்தும் கொடிய நோய் குறிக்கோளிலாமைதான்். தனி மனிதன், குடும்பம், சமுதாயம், அரசியல் ஆகிய அனைத்துத் துறைகளிலுமே குறிக்கோளுடைய வாழ்க்கையைக் காணோம். ஆசைகளும் அவலங்களும் அலை மோதுகின்றன. அழுக்காறும் அவ்வழிப்பட்ட பகையும் சமுதாயத்தை உருக்குலைத்து அலைக்கழிக்கின்றன. இன்றைய காலக் கட்டத்தில் திருநீலகண்டநாயனார் மனைவியை ஒத்த தலைவியும், சிவபெருமானையொத்த நட்பும், மனுநீதிச் சோழனையொத்த அரசும், ஏனாதிநாத நாயனாரை ஒத்த பகைவர்க்கருளும் பண்பும் நாட்டில் கால் கொள்ளுமாயில் இந்தச் சமுதாயம் மேம்படும்.

சாதி வேற்றுமைகளற்ற சமுதாயம்

மனித குலத்தின் பிரிவினை தீது. பிரிவினை வேறு; வேறுபாடு வேறு. இயற்கை நியதியின் வழியிலும் சமுதாய அமைப்புக்களின் காரணமாகவும் வளர்ச்சி நிலைகளின் காரணமாகவும் தோன்றும் வேறுபாடுகள் வேறு. அத்தகு வேறுபாடுகள் அன்பையும் அனுதாபத்தையும் தோற்று விக்கும். இணக்கமுறச் செய்து வளர்க்கும். பிரிவினை என்பது பிரித்து வைப்பது. செல்வத்தை, அதிகாரத்தை, தமக்கே உரிமையாக்கிக் கொள்ளத் தந்திரங்கள் செய்து கண்ணுக்குப் புலனாகாத காரணங்ளைக் காட்டிப் பிரித்து வைப்பது. இத்தகு பிரிவினைகள் அறிவியல் முறைக்கு ஒவ்வாதன. இந்தப் பிரிவினைகளின் காரணமாகத்தான்் தீண்டாமை, இன ஒதுக்கல் முதலிய சமுதாயக் கேடுகள் தோன்றின. பிரிவினைகளில் தீயது என்று நாம் குறிப்பிடுவது பிறப்பின் காரணமாகக் கற்பிக்கப்படுகின்ற சாதி, குல வேற்றுமைகளைத்தாம். சேக்கிழாரின் பெரியபுராணத்தில் சாதிகள் இல்லாமல் இல்லை. குலங்கள் கூறப்பெறாமல் இல்லை. எந்தவோர் அடியாரைக் குறிப்பிடும் பொழுதும் சேக்கிழார் சாதி, குலம் ஆகியன கூறியே குறிப்பிடுகின்றார். ஏன்? திருநாட்டுச் சிறப்பில் "சாதிகள் நெறியில் தப்பா" என்று சேக்கிழார் தெளிவாகவே கூறுகிறார். பெரியபுராணம், அவர் காலத்திலும் அவர் காலத்திற்கு முன்பும் சாதிகள் இருந்தன என்பதை நமக்குத் தெரிவிக்கிறது. ஆனால் சாதி வேற்றுமைகள் இன்றிருக்கும் அளவுக்கு இறுக்கமாக இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாது.

பல்வேறு சாதிப் பிரிவினரிடையே கலந்து பழகுதல் தகாதெனும் கருத்து அன்று இல்லை. மகள் கொடுத்தல், மகள் கொள்ளுதல், உடனுறைதல், உடனுண்ணுதல் போன்ற நிகழ்வுகள் இருந்தன. ஏன்? ஞானாசிரியன்மாராக ஏற்றுக் கொள்கிற மரபு இருந்து வந்திருக்கிறது. சைவ அந்தணர் குலத்தில் தோன்றிய ஆரூரர், சிவத்தின் துணையோடு உருத்திரக்கணிகையார் குலத்தைச் சேர்ந்த சங்கிலியாரையும் திருமணம் செய்துகொண்டது இதற்கு எடுத்துக்காட்டு. மயிலையில் வைசிய குலத்தைச் சேர்ந்த சிவநேசச் செட்டியார் தமது திருமகளைத் திருஞானசம்பந்தருக்கு மணம் முடிப்பதற்கென்றே வளர்த்திருந்தது இதை அரண் செய்கிறது. வேளாளர் குலத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசர், வேதியர் குலத்தைச் சேர்ந்த அப்பூதியடிகள் இருவரும் உடனிருந்து உண்டது; சுந்தரமூர்த்தி நாயனார் சேரமான் பெருமான் நாயனார் இருவரும் உடனிருந்து உண்டது; திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், முருக நாயனார் ஆகியோர் உடனிருந்து உண்டது ஆகிய நிகழ்ச்சிகளை உன்னுக. இதனால் சாதி வேற்றுமைகள் அன்புக்கும் உறவுக்கும் தடையாக இல்லையென்பதை அறிய முடிகிறது. திருஞானசம்பந்தரின் திருப்பாடலுக்குத் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவராகக் கூறப்பெறும் திருநீலகண்ட யாழ்ப்பாணர் யாழ் மீட்டினார். வேதியர் குலத்தைச் சேர்ந்த திருநீலநக்க நாயனார் வீட்டில் வேள்வி செய்யும் துய்மை நிறைந்த அறையிலேயே திருநீலகண்ட யாழ்ப்பாணர் தங்கியிருந்தார். வேதியர் குலத்தைச் சேர்ந்த அப்பூதியடிகள் வேளாளர் குலத்தைச் சேர்ந்த அப்பரடிகளைத் தம் ஞானாசிரியராக வழிபடும் கடவுளாக ஏற்றுக் கொண்டமையை நினைதொறும் நெஞ்சு நெகிழ்கிறது. இவை மூலம் நாம் உணரத்தக்கது இயற்கை வழிப்பட்ட பிரிவுகள் அன்று இருந்தன; ஆனாலும் அவை வற்புறுத்தப் பெறவில்லை, உறவுக்குத் தடையாக இல்லை. தெளிவாகச் சொன்னால் சாதி வேற்றுமைகளைப் பாராட்டாத ஒரு சமுதாய அமைப்பு அன்று கால்கொண்டிருந்தது.

அன்று திருக்கோயில் வழிபாட்டிற்கூட எல்லைகளும் சாதிகளும் இருந்ததில்லை. வேடுவர் குலத்தைச் சேர்ந்த கண்ணப்பர் காளத்தியப்பர் திருமேனிக்குத் தாம் விரும்பிய வண்ணம் விழிபாடு செய்திருக்கிறார். அதற்கு யாதொரு தடையுமில்லை. சிவகோசரியாருக்கு ஏற்பட்ட வருத்தம் "யார் வழிபட்டவர்?’ என்பதன்று. பொதுவாகச் சிவநெறியில் புலால் படைத்தலில்லை. சந்நிதியில் புலால் சிதறியிருந்தது. அதை நினைத்துத்தான் சிகோசரியார் "இந்த அனுசிதம் கெட்டேன் யார் செய்தார்” என்று நொந்தார். திருக்கோயிலுக்குள் எழுந்தருளியிருக்கும் இறைவனை எல்லாரும் புனலும் பூவும் சொரிந்து வழிபடும் உரிமையைப் பெற்றிருந்தனர். பின்னர்தான் சாதி வேற்றுமையுணர்வு தடிப்பாக மாறியதோடு, திருக்கோயில் நாட்பூசனை செய்யச் சமுதாய ரீதியாக அமைக்கப்பெற்ற சைவ அந்தணர்கள் அந்த வழிபாட்டை உலகியல் இலாப நோக்கத்தோடு இணைத்துத் தொழில் மயமாக்கிய பிறகு, சாதி வேற்றுமைகளை வற்புறுத்தினர். இன்று தமிழர்கள் வழிபடுவோர்கள் அந்த உரிமையை இழந்திருக்கின்றனர். இங்ங்னம் கூறும்பொழுது திருநாளைப் போவார் வரலாறு என்ன? என்ற கேள்வி எழும். அதற்கு விடை காண்பது அவசியமே.

திருநாளைப்போவார் வாழ்ந்த காலம் கொழுத்த நிலப்பிரபுத்துவமுறை தோன்றி நிலவிய காலம். அவர் நிலப்பிரபுத்துவத்தின் தாயகமான இருந்த தஞ்சைத் தரணியில் பிறந்தவர். தற்செயலாக நிலப்பிரபுத்துவத்தோடு உயர்சாதி மனப்பான்மை கெண்ட வேதியரிடமும் பணி செய்தவர். இவ்வளவும் சேர்ந்து அவரிடத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி விட்டன. தில்லைத் திருக்கோயிலுக்குள் செல்ல அவருக்குத் தடையாக இருந்தது தில்லை மூவாயிரவர் ஆதிக்கம் மட்டுமன்று; திருநாளைப் போவாரின் தாழ்வு மனப்பான்மையும்தான். இதனை,

"தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார்" என்று சேக்கிழார் குறிப்பிடுவார். ஆதலால் அவருடைய தாழ்வு மனப்பான்மையை நீக்கும் திருவுள்ளக் குறிப்பி லேதான் இறைவன் வேள்வித் தீயில் மூழ்கும் செயலைச் செய்வித்தார். இதில் தாழ்வு மனப்பான்மை தோன்றுவதற்குக் காரணமாயிருந்த சமுதாய அமைப்பு கொடுமையானதுதான். சேக்கிழார் காட்டும் சமுதாய அமைப்பில் வேறுபாடுகள் இயல்பின் காரணமாக இருக்கலாம். ஆனால் அவை பிரிவினையல்ல. அங்கு ஒருகுல உணர்வுக்குத் தடையில்லை என்பதை அறிக: அத்தகையதொரு சமுதாய அமைப்பை நாம் காணவேண்டும்.

புனலும் பூவும் சொரிந்து வழிபடும் உரிமை

வழிபாடு என்பது உயிர்கள் தம் உய்தி நோக்கிச் செய்வது வழிபாட்டில் அகக் கருவிகளும் புறக் கருவிகளும் ஈடுபடவேண்டும். வழிபாட்டில் நாம் ஒவ்வொருவரும் சிறக்க வேண்டுமானால், நாள்தோறும் தனித்திருந்து திருமுறைகள் காட்டுகின்ற நெறி வழியில் அகப்பூசையும் புறப்பூசையும் செய்ய வேண்டும். இங்ங்னம் செய்வோர் எண்ணிக்கை, வரவரக் குறைந்து கொண்டே வருகிறது. தமிழகத்திலுள்ள ஆற்றங்கரைகளிலும் திருமடங்களிலும் இங்கனம் பூசை செய்வதற்கென்று அமைக்கப்பெற்ற மேடைகள் இன்று பயனற்றுக் கிடக்கின்றன. இங்ங்னம் ஒவ்வொருவரும் நாள்தோறும் முறையான சிவபூசை செய்ய இயலாது என்று கருதித்தான் போலும் திருக்கோயில் வழிபாட்டு முறையைக் கண்டன்ர். நாள்தோறும் எல்லாரும் முறையாக அகப்பூசை செய்தல் என்பது எளிதன்று. அத்துறையில் வல்லார் இன்று இருக்கிறார்களா என்பது ஐயத்திற்குரியது. அந்த அருமையான விஞ்ஞானக் கலையைக் கற்றுத் தருகின்ற சித்தர்கள் இன்று அருகிப் போயினர். ஆதலால் அகப்பூசை செய்வதி லுள்ள இடர்ப்பாட்டையும் காலத்தின் அருமையையும் கருதி அகப்பூசை நெறியில் நின்று, பெருமானைத் திருவுருவத்தில் எழுந்தருளச் செய்து நாம் எளிதாக வழிபடுவதற்கு உதவத்தக்க வகையில் தோன்றியதே திருக்கோயில் வழிபாடு என்று நாம் நம்புகின்றோம். இத்திருத்தொண்டைச் செய்து தருவதற்கு நம்மில் உயர்ந்தோராக-சான்றோராக-அந்தணராக விளங்கிய சிலரைத் தேர்ந்தெடுத்து ஒப்பித்தோம். அவர்களே ஆதிசைவர்கள். காலத்தாலும் சமுதாய வரிசையில் முன்னிற்பதாலும் அவர்கள் ஆதிசைவர்கள் ஆயினர். அவர்கள் சிறந்த செந்தமிழ்க் குடியினர்; நம்முடைய குலத்தினர்; நம்மோடு, நம் குலத்தினரோடு உண்ணல், உறவு முதலியன கொண்டிருந்தவர்கள். இதற்குச் சுந்தரர் வரலாறு சான்று. திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமானை நாள்தோறும் திருமுழுக்காட்டி, நாட்பூசனை செய்து, பெருமானைத் திருவருட் பொலிவோடு எழுந்தருளச் செய்து, வழிபட வருவோருக்குச் சிவாச்சாரியார்களாக இருந்து, உடனிருந்து வழிபாட்டைச் செய்யச் செய்து துணைநிற்கும் பணியே சிவாச்சாரியார்களின் பணி.

திருக்கோயிற் பூசையைப் "பரார்த்த பூசை" என்பர். பரார்த்த பூசை என்பதற்கு மற்றவர்களுக்காகச் செய்யும் பூசை என்பது பொருள். ஆதலால் மற்றவர்கள் வழிபடுவதற்காக இருப்பதுதான் திருக்கோயில் என்று கொள்ளவேண்டும்.

வழிபடுதல் என்பதில் புனலாட்டுதல், மலர் சொரிதல், பாடுதல், பரவுதல், ஆர்வத் துடிப்புடன் அணைத்தல், உச்சிமோத்தல் ஆகிய அனைத்தும் உண்டென்பதைச் சேக்கிழாரின் பெரியபுராணம் தெளிவாக வரையறுத்துக் காட்டுகிறது. இன்றையத் திருக்கோயில்களில் இதற்கு ஏது உரிமை? இந்த வழிபாட்டு முறை திருமுறைக் காலத்தில் இருந்தது என்பதை நமது திருமுறைகள் வாயிலாக அறிய முடிகிறது. திருஞானசம்பந்தர் அருளிச்செய்த திருமுறையில் சற்றேறக்குறைய 97 பாடல்களிலும், திருநாவுக்கரசர் அருளிச் செய்த திருமுறையில சற்றேறக்குறைய 44 பாடல்களிலும், சுந்தரர் அருளிச்செய்த திருமுறையில் சற்றேறக்குறைய 19 பாடல்களிலும், மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவாசகத்தில் 2 பாடல்களிலும் இந்நெறி எடுத்துக் கூறப்பட்டுள்ளது. கண்ணப்பநாயனார், திருநீலநக்கநாயனார் வரலாறுகளும் இதற்கு அரண் செய்வன.

நம் திருக்கோயில்களின் தல வரலாறுகள் அனைத்தையும் ஆராய்ந்தால் ஒவ்வொரு திருக்கோயிலும் இன்னின்னார் பூசித்தது என்பதை அறியலாம். இராமன் பூசித்தது இராமேச்சுரம், பாண்டவர் பூசித்தது திருமண்ணிப் படிக்கரை, வாலி பூசித்தது வாலீச்சுரம்; இப்படிப் பல திருக்கோயில்களின் வரலாறுண்டு. ஏன்? விலங்கினங்களும் புள்ளினங்களும்கூடப் பூசித்திருக்கின்றன. இன்றும் வட புலத்தில் இந்த முறை நடைமுறையிலிருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அந்தத் திருத்தலங்களின் பெருமை குறைந்துவிடவில்லை. இன்றைய கல்வி கூடசெய்முறையில்லாத கல்வி-பயனற்றது என்று சொல்கிறார்கள். சமயத் துறையில் மட்டும் செய்முறைக்கு வாய்ப்பில்லாத காணல் அளவேயுள்ள வழிபாட்டுமுறை நிறைபயனைத்தராது. ஆதலால் எல்லாரும் திருக்கோயிலுக்குள் எழுந்தருளியுள்ள பெருமானைப் புனலும் பூவும் சொரிந்து வழிபடும் உரிமை வேண்டும். இங்கு நாம் ‘எல்லாரும் என்று குறிப்பிடுவதால் "விதிமுறையில்லாமல் எல்லாரும் வழிபடலாம்” என்று கொள்ளக்கூடாது. "தகுதியுடையார் எல்லாரும் வழிபடலாம்” என்பதுதான் குறிப்பு. திருமுறை நெறிகாட்டும் "திருவாளன் திருநீறு" பெறும் சமய தீக்கை பெற்றோர், சமய நிறுவனங்களால் ஏற்பளிக்கப் பெற்றோர், சமய சீலமுடையோர் என்றெல்லாம் வரையறை வைத்துக் கொள்வது இன்றியமையாதது. இச் செயல்முறை வருவதால் சிவாச்சாரியாரின் தரமும் தகுதியும் உயருமேயன்றி யாதொரு குறைவும் வராது. அவர்கள், அயல்வழிக் கருத்தைக் கேட்டு அலமருதல் நியாயமன்று. அவர்கள் அருச்சர்களாக இல்லாமல் கிவாச்சாரியார்களாக இருந்து, கண்டு காட்டி வழி நடத்த வேண்டும் என்பதே நமது விருப்பம். இது நமது சமயத்தை வளர்ப்பதற்கும் சமுதாயத்தை ஒருங்கிணைப்பதற்கும் உரிய சாதனம். இதுவே சேக்கிழார் கண்ட வழிபாட்டு முறை.

திருமுறை வழிபாடு -

இறை வழிபாடு என்பது கடவுளுக்காகச் செய்யப் பெறுவதன்று. உயிர், இறையருளைப் பெறுவதற்குக் கருவியாகக் கொள்வது வழிபாடு, வழிபாட்டின்பயன், உயிருக்கேயாம். உயிர் நலமுறுதல், வழிபாட்டின்பயன், உயிருக்கேயாம். உயிர் நலமுறுதல், வழிபாட்டின் ஆக்கம். "உயிர், எல்லாம் வல்ல இறைவனை நோக்கிப் பெருமானின் நலம் பெறுதல்வேண்டி அழுகின்ற அழுகையே பிரார்த்தனை" என்பார் டெனிசன். மாணிக்கவாசகரும். உயிர் பொய்ம்மை நீங்கி வாய்மையடைந்து மெய்யாய நலமுறுதல் அழுதல்வழி நிகழலாம் என்று கருத்தை,

"யானே பொய் என் நெஞ்சும்
பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால்
நின்னைப் பெறலாமே,”

என்று அருளிச் செய்துள்ளார். பழந்தமிழகத்தில் தாய் மொழியே-அதாவது தமிழே வழிபாட்டு மொழியாக இருந்தது. அதுதான் இயற்கை இயற்கைக்கு இசைந்து வராதது எதுவும் இறைமைத் தன்மையுடையதாகாது. மூவர், தமிழிலேயே இறைவனைப் போற்றினர்; வழிபட்டனர். சிவபெருமான் அப்பரடிகளுக்காகக் கயிலையை ஐயாற்றில் காட்டியதே, "மன்னு தீந்தமிழ் புவியின்மேல் பின்னையும் வழுத்த” என்பதுதான் காரணம் எனச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். இங்ங்னம் ஏழாம் நூற்றாண்டில் வெள்ளமெனப் பெருக்கெடுத்த தெய்வத் தமிழ்ப் புனல், சுந்தரர் காலத்தில் வற்றிவிட்டது போலும்! அதனால், பெருமான் தமிழ் கேட்கும் விருப்பத்தால் ஆரூரரை வாய் திறந்து கேட்கிறார். "அருச்சனை போதும்; நாம் கேட்க விரும்புவது பண்பொலி பாடலே” என்று அறிவிக்கிறார்!


"...நமக்கும் அன்பினில் பெருகிய சிறப்பில் மிக்க
அறசனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல்
நம்மைச்
சொற்றமிழ் பாடுக” என்றார்...."


என்பது பெரியபுராணம். நாம் விரும்புவது தமிழருச்சனை மட்டுமன்று. அது முதற்படியே. நாம் உண்மையிற் செய்யவேண்டியது வைணவத் திருக்கோயிலில் செய்வதைப் போலத் திருமுறைச் சாத்துச் செய்து வழிபடுதலேயாகும். அதாவது மூவரருளிய திருப்பதிகங்களை ஒதி மலர் சொரிந்து வழிபடுதல்தான் திருமுறை காட்டும் வழிபாட்டு முறை. அதுவே தமிழ் முறை. திருமுறை வழிபாட்டு முறை யாண்டும் மலர்க! நமது சமய ஆசிரியன்மார்கள் அருளிச் செய்த திருமுறைப் பதிகங்களை ஓதி வழிபட்டால் துன்பம் நீங்கும்; நலமுற்று வாழலாம்; இன்பம் பெருகும். இதனைத் திருவிழிமிழலையில் அருளிய பதிகத்தில் திருஞான சம்பந்தர்,

"சினமலி கரியுரி செய்த சிவனுறை தருதிருமிழலையைமிகு
தனமனர் சிரபுர நகரிறை தமிழ்விர கனதுரையொருபதும்
மனமகிழ் வொடுபயில் பவர்.எழில் மலர்மகள் கலைமகள்
சயமகள்
இனமலி புகழ்மகள் இசைதர விருநில ணிடையினி
தமர்வரே.”

(பா.11)


என்று அருளிச் செய்துள்ளார். ஆதலால், திருமுறைச் சாத்து வழிபாட்டு முறையினை நடைமுறைக்குக் கொண்டு வருக!

காதல் திருமணம்

தமிழகம் அகனைந்திணை ஒழுக்கத்தை இனிதெனப் போற்றியது. அகத்திணை இலக்கணம் பெருமானாலேயே வழங்கப் பெற்றது என்ற கொள்கை உண்டு. அதை "இறையனார் அகப்பொருள்” என்பர். தமிழரின் மனையறம் விழுமியது. அன்பும் அறனும் பெற்று விளங்குவது. அவற்றைப் பண்பும் பயனுமாகக் கொண்டு பொலிவடைவது. தமிழர் வாழ்வியலில் திருமணங்கள் நிகழ்ந்தன; செய்விக்கப் பெற்றதில்லை. தலைவனுக்கும் தலைமகளுக்கும் காதலுரிமை உண்டு. மகளிரைச் சிறைவைக்கும் அயல் வழக்கு வந்த பிறகுதான் "சிறைகாக்கும் காப்பு எவன் செயும்" என்ற வள்ளுவம் தோன்றியது! பழந்தமிழர் போற்றிய காதல் உணர்ச்சி வசப்பட்ட தன்று! உணர்வு வழிப்பட்டது.

சேக்கிழாரின் பெரியபுராணத்தில் பழந்தமிழர் நெறியாகிய காதல் திருமணமும் பேசப் பெறுகிறது. இடையில் வந்த திருமணமும் பேசிமுடிக்கும் திருமணமும் கூறப்பெறுகிறது. ஆனால் திலகவதியாருக்குத் திருமணம் பேசம்பொழுது குலத்திற்குக் காரணமாகிய குணம் பேசப்பெற்றதே யொழியச் சாதிமுறைகள் பேசப்பெறவில்லை. இன்று நிலவும் வரதட்சணை முதலிய கொடுமைகள் இல்லை. சுந்தரர் வரலாற்றில் பெற்றோர்வழிப் பேசி முடிக்கும் ஒரு சாதித் திருமணம் நடைபெறாமல் தடை செய்யப்படுகிறது; காதல் திருமணம் நிகழ்கிறது. சுந்தரர், பரவையாரைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளுகிறார். அது போலவேதான் சங்கிலியார் திருமணமும் நடைபெறுகிறது.

திருஞானசம்பந்தர் வரலாற்றில் திருமருகலில் நிகழும் செட்டிப் பெண் வரலாறுகூட, தான் விரும்பும் ஆடவனை மணக்க, பெண் உரிமையுடையவளாக இருந்தாள் என்பதைக் காட்டுகிறது. அதற்குத் திருஞானசம்பந்தர் முதலியோர் துணையாக இருந்தனர் என்பதும் அறியக் கிடக்கிறது. இன்றைய மனையற வாழ்க்கை மங்கலமாக அமையாமல் அதன் பயனாகிய நன்கலமும் சிறப்பாக அமையாமல் அல்லற்படுவதற்குக் காரணம் காதல் திருமணத்தைப் புறக்கணித்ததுதான். காதல் திருமணத்தில் ஆங்காங்குச் சில தவறுகள் நிகழ்ந்திருக்கலாம். எந்தவொரு செயல்முறையிலும் சில தவறுகள் நிகழலாம் அதற்காக அந்தச் செயல்முறையே தவறு என்று கூறுதல் ஆகாது. மீண்டும் தமிழகம் காதல் திருமணத்தில் சிறந்து விளங்குவதாக!

பெண்ணின் பெருமை

சேக்கிழாரின் பெரிய புராணத்தில் மகளிர் பெருமைப்படுத்தப் பெற்றுள்ளனர். பெண்ணடிமை என்பதோ மகளிர் ஆணின் உடைமை என்பதோ தமிழர் கொள்கையன்று. சேக்கிழாருக்கும் மகளிரைப் பெருமைப்படுத்தும் செந்தமிழ் நெறியே ஏற்றதாக இருந்தது. வாழ்க்கையில் ஒரு பகுதியாகிய இல்லத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிற பெண், குடும்பத்தில் விருந்தோம்பல், வழங்குதல் முதலிய அனைத்துரிமைகளையும் பெற்றிருந்தாள். இதனைக் காரைக் காலம்மையார் புராணத்தில் வரும்,

"நம்பரடி யார்அணைந்தால் நல்லதிரு அமுதளித்தும்
செம்பொன்னும் நவமணியும் செழுந்துகிலும் முதலான
தம்பரீவி னால்அவர்க்குத் தகுதியின்வேண் டுவகொடுத்தும்
உம்பர்பிரான் திருவடிக்கீழ் உணர்வுமிக ஒழுகுநாள்"


என்ற திருப்பாடலால் அறியலாம்.

காரைக்காலம்மையார் பரமதத்தனுக்குப் பாங்காக அமைந்த மனைவி. தம் கணவன் மாங்கனியைச் சுவைத் துண்ணும் திறமறிந்து இல்லை என்று கூற மனம் வராது மாங்கனி தேட முயன்றமை அவர் கற்பிற்கு எடுத்துக் காட்டு. எண்ணரிய மாங்கனியை இறைவனிடத்தே பெற்றது அம்மையாரின் நிறைநலத்துக்குச் சான்று. கணவன் மனம் மாறியவுடன் தனது பொற்புடை அழகை, கணவனுக்குப் பயன்படாமையின் காரணமாகத் துறந்தமை அம்மையாரின் கற்புத் தவத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. அந்நிலையை அவலமாக மாற்றாமல் அருளாக மாற்றித் தவமே தவம் செய்தது போல அம்மையார் பேயுடம்புடன் செய்த தவமும், கயிலையாத்திரையும், "பெண்ணிற் பெருந்தக்க யாவுள?” என்ற வள்ளுவத்தின் வினாவுக்கு, "ஆம், பெண்ணோடொத்த பெருமை பெண்ணேதான்்" என்று விடையளிப்பதாக விளங்குகின்றது. அதனாலன்றோ நமையாளும் சிவமே "அம்மையே” என்று அழைக்கும் பேற்றினைப் பெற்றார்.

தமிழக வரலாற்றின் பெருமையை-சைவ நன்னெறியின் சீர்மையை இன்றளவும் நாம் அடைந்து, கடைப்பிடித்து ஒழுகத் தக்கவாறு விளங்கியருளிய பெருமை மகளிர்க்கே உண்டு. ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தை வருத்திய அயல் வழக்கின் நுழைவு தடுத்து நிறுத்தப்பட்டதும், தமிழகம் முழுதும் சைவ எழுச்சி நிகழுமாறு செய்த பெருமையும் மகளிருக்கே உரியது என்பதைப் பெரியபுராணம் எடுத்துக் காட்டுகிறது.

வழிவழிச் சைவ குலத்தில் தோன்றிய மருணீக்கியாரே சமணத்திற்குச் செல்லும் அளவுக்கு அச்சமயம் கவர்ச்சியாகப் பரவியது. வாழ்க்கைக்கு இசைவில்லாததாகவும், உண்மைக்குப் புறம்பானதாகவும் இருந்த சமண சமயம், மந்திரங்கள், துன்ப நீக்கம், துறவிப் படைகள், தமிழ் இலக்கிய இலக்கண ஆய்வு பரப்புப் பணிகள், உயிர்கள் பால் இரக்கம் காட்டுதல் இன்னோரன்னவற்றால் கவர்ச்சியாகப் பரவியது. தமிழகத்தை ஆண்ட பல்லவப் பேரரசரும், பாண்டியப் பேரரசரும் சமண சமயத்தவராயினர். இந் நிலையில் இரண்டு கதிர்கள் ஞாயிறெனவும் தண்நிலவெனவும் தமிழகத்தை வலம் வந்து சைவ எழுச்சியைத் தந்தன. கண்ணுக்குத் தெரிந்த கதிர்களை விட அந்த வரலாற்றுக்குப் பின்னணியாக விளங்கிய தவச் செல்வங்களை நாம் எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

திருவதிகையில் தவம் செய்த திலகவதியார், திருநாவுக்கரசரைச் சிவநெறியில் நிறுத்தி நமக்குத் தந்தருளினார். திலகவதியாரின் தவம்தான்் திருநாவுக்கரசரின் திருத்தொண்டாகப் பரிணமித்தது. சேக்கிழார், "எங்கள் தெய்வம்" என்று நெஞ்சு நெகிழப் போற்றும் மங்கையர்க்கரசியார் திருஞானச்சம்பந்தரின் சிவநெறிக் காப்புப் பணிக்கு ஊன்றுகோலாகத் திகழ்ந்தார். இந்த மகளிர் குலவிளக்குகள் இரண்டும் தோன்றியிராவிடில் இன்று ஏது திருக்கோயில்கள்? இன்று ஏது திருமுறைகள்? ஆதலால் ஒவ்வொரு சைவனும் சேக்கிழார் வாத்தியபடி மங்கையர்க்கரசியாரைக் குல தெய்வமாக வணங்கவேண்டும், திலவதியாரைத் தொழும் தெய்வமாகக் கொள்ள வேண்டும்.

அடுத்து இளையாங்குடிமாறநாயனார் விருந்து வந்த போது வறுமையின் காரணமாக அயர்ந்தார். "திரவே பசித்தார் செய்வதென்ன?” என்று இரங்குகின்றார். அப்போது அவர்தம் மனைவியார் அவர் அயர்ச்சி நீங்க நல்ல ஆலோசனை கூறும் பாங்கினை எண்ணிப் பார்ப்பின், அன்று மனைவியார் தத்தம் கண்வன்மாருக்கு ஆலோசனை கூறும் அறவுக்கு மதிநுட்பம் பெற்றிருந்தனர் என்பதும் அவர்தம் ஆலோசனையை அவரவர் கணவன்மார் பெருமை சிறுமை உணர்ச்சியின்றிக் கேட்டனர் என்பதும் பெறப்படுகின்றது.

"செல்லல் நீங்கப் பகல்வித்" தியசெந்நெல்
மல்லல் நீர்முளை வாரிக் கொடுவந்தால்
வல்ல வாறமு தாக்கலும் ஆகும்மற்(று)
அல்ல தொன்றறி யேன்"என் றவர்வுற.

மற்(று).அம் மாற்றம் மனைவியார் கூறலும்
பெற்ற செல்வம் எனப்பெரி துள்மகிழ்ந்(து)
உற்ற காதலி னால்ஒருப் பட்டனர்
சுற்று நீர்வயல் செல்லத் தொடங்குவார்.


என்ற திருப்பாடல்கள் படித்தின்புறத் தக்கன, தத்தம் கணவன்மார் எடுத்துக்கொண்ட குறிக்கோளை அடைவதில் சேக்கிழார் காட்டும் மனைவியர் உற்ற துணையாயிருந்திருக்கின்றனர். சிறுத்தொண்டர் மனைவி திருவெண்காட்டு நங்கையும், இயற்பகையார் மனைவியும் இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆவர். வாழ்க்கையின் உயர் குறிக்கோளை அடைவதற்குத் தானே மனையறம்! அதற்கு ஒத்திசைந்த வளாக வாழ்கிறவள்தான் மனைவி என்ற சிறப்பைப் பெறமுடியும். அதனாலன்றோ வள்ளுவமும் "வாழ்க்கைத் துணை நலம்” என்று வாழ்த்தியது. பெரியபுராண மகளிர் அத்தகைய சிறப்புடையவரே!

தோழமைச் சிறப்பு


வாழ்க்கையில் காதலை ஒப்பச் சிறப்புடைய பண்புநட்பு இல்லை, காதலைவிடக் கூட நட்பு சிறந்தது. எந்தவொரு உயிரும் தனித்து வளர்தல் அரிது. உயிர், முதல் நிலையில் சுதந்தரமாக மனம்விட்டுக் கலந்துபேசி உரிமையையும் உறவையும் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்றது நட்பேயாம். நட்பில்லாத வாழ்க்கை நிலவில்லாத வானம் போன்றது. நட்பு ஓர் உயரிய வாழ்க்கை முறை. ஆங்கிலச் சிந்தனையாளர்கள், "காதலிக்காமல் கூட இருக்க முடியும்; நட்பில்லாதிருக்க முடியாது” என்று கூறுகின்றார்கள். அகம் நிறைந்த நண்பினராகி வாழ்வளிக்கக்கூடிய நண்பர்கள் கிடைப்பதரிது. பழகுவோரெல்லாம் நண்பர்களாகி விடமாட்டார்கள்.

சமுதாய அமைப்பு தொய்வுள்ளது. அதுவும் அன்றாட வாழ்க்கையின் தேவைகளுக்கே பற்றாக் குறை மிகுந்துள்ள நாட்டில் அழுக்காறு உறவினைக் கெடுக்கும்; உணர்வினை அழிக்கும்; நெறி முறையிகந்த போட்டிகள் தோன்றும்; தேவைக்காகக் கூடிக்குலவுவர்; தேவை நிறைவாகாதபோது பிரிவர்; பிரிந்து நின்றும் பேயைப்போலத் துன்பம் செய்வர். இந்த மனிதர் சந்தையில் நண்பர் கிடைப்பது அரிதே. அது மட்டுமன்று, வளர்ந்த நட்பாகவும் கிடைக்காது. கிடைத்த நட்பை வளர்த்து, அனுபவிக்க வேண்டும். அதற்குரிய பொறுத்தாற்றும் பண்பும்-பரிவும் தேவை. நட்பில் பிரிவு தீது, நோயுற்ற உடலைத் துறப்பார் யார்? அது போலத்தான் நட்பிலும்கூட! நண்பனின் குற்றம் அன்புற்றமர்ந்த நண்பனுக்குத் தெரியாது. ஒரோவழி தெரிந்திருந்தாலும் குற்றம் நீக்க மருத்துவனாய்-தாதியாய் நின்று தொழிற்படுவானே யன்றித் தூற்றமாட்டான். குற்றம் கூறிப் பழிவாங்க மாட்டான். அதனாலன்றோ, சுந்தரர் திருவாரூர் திருப்பதிகத்தில்,

"ஏழிசையாய் இசைப்பயனாய்
இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யும்
துரிசுகளுக் குடனாகி"


என்று, தாம் செய்த துரிசுகளுக்கெல்லாம் பெருமான் உடனாகி இருந்ததாகப் பாடுகின்றார்.

பெருமான், சுந்தரர்க்கு உற்ற தோழராக இருந்தார். தோழமையில் அன்பும் இருக்கும்; விளையாட்டும் இருக்கும்; உதவியும் இருக்கம்; ஒறுத்தலும் இருக்கும்; இன்பமும் இருக்கும்; துன்பமும் இருக்கும். இவற்றை ஏற்றுத் தாங்கிக்கொண்டு நிகழ்வதே நட்பு. பெருமான் சுந்தரர்க்குச் சிறந்த நண்பராகத் திகழ்கிறார். ஐயோ, பாவம் கழுகும் கண்படுக்கும் நள்ளிரவில் தம் தோழர் ஆரூரருக்காகப் பரவையார் வீட்டுக்குத் தூது சென்றுவரும் காட்சியைச் சேக்கிழார் எடுத்தோதும் பொழுது, நமக்குச் சிவபெருமானமீது இரக்கமே தோன்றுகிறது. அதனால்தான்் போலும் அன்றும் ஏயர்கோன் கலிக்காமர் வருத்தினார். ஆனால் அதில் பெருமான் பெற்ற மனநிறைவு நாமறியோம். மீண்டும் மனித உலகம்- தோழமையில் தழைப்பதாக! ஆரூரர்-அண்ணல் சிவம் இருவரிடையே இருந்த நட்பைப் போல நட்பு நலன்களைப் பெற்று வளர்க வாழ்க!


ஒப்புரவு வாழ்க்கை

பெரியபுராணம் முழுதும் ஒப்புரவு நெறி பேசப் பெற்றுள்ளது. விருந்தோம்பல் சிறந்த வேள்வியாகப் போற்றப் பெற்றுள்ளது. இல்லையென்று சொல்லாது ஈதல் வாழ்வின் கடன் என்று கொண்டவரும் வாழ்ந்திருக்கிறார். பெரிய புராணம் காட்டும் ஒப்புரவு நெறியில் மிக உயர்ந்தது பரவையார் மேற்கொண்ட நெறி. திருவருளால் மழையெனப் பொழிந்த நெல் மலையை "எல்லாரும் அவரவர் தம் இல்லத்திற்கு எடுத்தேகுக' என்று அறிவித்து அள்ளிக் கொள்ளச் செய்த ஒல்காப் புகழ்மிக்க ஒப்புரவுப் பண்பாட்டை என்னவென்று வாழ்த்துவது! இளையான்குடி மாற நாயனாரின் விருந்தோம்பற் பண்பும் நெஞ்சில் நெகிழ்வு தரத்தக்கது. சேக்கிழாரின் பெரிய புராணத்திலுள்ள ஒப்புரவு நெறி இன்றைச் சமுதாயத்தில் மேற்கொள்ளப்பெறுமானால் நிர்ப்பந்தமான-வன்முறை வழிப்பட்ட சமுதாய மாற்றத்தை அவாவ வேண்டிய அவசியமில்லை.

தமிழ் நாகரிகம் சமநிலைச் சமவாய்ப்புச் சமுதாயத்தைக் குறிக்கோளாக, உடையது. அந்நெறியிலேயே முயன்று வாழ்ந்த பெருமை தமிழினத்திற்கு உண்டு. சங்ககாலத்துச் சான்றோர் பக்குடுக்கை நன்கணியார் என்பவர், 'ஒரு வீட்டில் மணமுரசு கேட்பானேன்? பிறிதொரு வீட்டில் சாப்பாறை கேட்பானேன்? இம்மாறுபட்ட நிகழ்வு கொடுமையானது. இதற்குக் காரணமாய் அமைந்துள்ள அடிப்படை பண்பில்லாதது. உலகத்தின் நடைமுறை இன்னாததாக இருக்கலாம்; ஆனால் நாம் முயன்று அதை இனியதாக ஆக்க வேண்டும்' என்று அறிவுறுத்துகின்றார்.

"ஒரில் நெய்தல் கறங்க ஒரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைத லுண்கண் பனிவார் புறைப்பப்
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்
இன்னா தம்மஇவ் வுலகம்
இனிய காண்க, இதன் இயல்புணர்ந் தோரே."

(புறம்.194)


இங்குப் பேசப்பெறும் துன்பம் இயற்கையின் வழிப்பட்டது. அதாவது இறத்தலைப் பற்றியது. இறத்தல் இயற்கை இயற்கை நியதியின் வழிப்பட்ட துன்பத்தைச் சாடுகிறார். அதையே மாற்றச் சொல்கிறார். ஆனால் இன்றைய தமிழகமோ இயற்கை நியதியின் வழிப்பட்ட துன்பத்தில் வருந்துவதைவிட, அறியாமையினாலும் தன்னல நயப்பினாலும் சமுதாய உணர்வின்மையினாலும் அல்லறும் துன்பம் கொடியதாக இருக்கிறது. தீண்டாமை, சாதி வேற்றுமை, காதல் திருமணமின்மை, வறுமை, சமயந்தழுவிய வாழ்வின்மை, வாழ்வைத் தழுவிய சமயமின்மை ஆகிய பிழைகள் பெருந்துன்பம் செய்வன. இப்பிழைகளினின்றும் நாம் விடுதலை பெறும் நாள் எந்நாளோ? இந்தப் பாடல் சற்றேறக்குறைய 2300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. இந்தப் பாடல் தோன்றி ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தரர் அதே உணர்வோடு வருந்தியதைச் சேக்கிழார் எடுத்துக் காட்டுகிறார்.

"மறையோர் வாழும் அப்பதியின்
மாட விதி மருங்கணைவார்
நிறையும் செல்வத்(து) எதிர்மனைகள்
இரண்டில், நிகழ்மங் கலவியங்கள்
அறையும் ஒலிஒன் றில், ஒன்றில்
அழுகை ஒலி வந்(து) எழலும் ஆங்(கு)
உறையும் மறையோர் களைஇரண்டும்
உடனே நிகழ்வ தென்! என்றார்”

என்பது சேக்கிழார் பாடல். இத்திருப்பாடலைச் சிந்தனை செய்யும் தமிழகமே! ஒதும் சைவ உலகமே! இத்திருப் பாடலுக்குச் செயலுருவம் கொடுக்க முன் வருக! "இரண்டும் உடனிகழ்வது ஏன்?” என்பது அன்று சுந்தரர் கேட்ட வினா. இன்றும் இந்த வினா கேட்கிறது. ஒரு வீட்டில் வறுமை; ஒரு வீட்டில் வளம். திருக்கோயிலில் செல்வச் செழிப்பு: மக்களிடத்தில் வறுமை,மடங்கள் மாளிகைகளென உயர்தல்; மக்கள் வறுமையுற்றுச் சிறுமையுறுதல். ஒரு வீட்டில் துன்பம், ஒரு வீட்டில் இன்பம். இந்நிலை சைவத்திற்கு ஏற்புடையதா? அப்படியானால் சைவம், "மேன்மை கொள் சைவ நீதி" என்று போற்றப் பெறுமா? எண்ணுங்கள்? துன்பத்தை எதிர்த்துப் போராடுங்கள்! தொழுதகைத் துன்பம் துடையுங்கள்! எங்கும் இன்பம்! எல்லாருக்கும் இன்பம் என்ற புதுமை நிறைந்த-பொதுமை நிறைந்த சமுதாய அமைப்பே சைவ சமுதாயமென முடிவு செய்யுங்கள்! முடிவுக்கு முனைப்புத் தாருங்கள்! முனைந்து நிற்கும் பணியைப் பொதுவில் ஆடுபவன் முடித்து வைப்பான்! பொதுமைச் சமுதாயம் அமையும்! இம்மண்ணகம் விண்ணகமாகும்! இதுவே சேக்கிழாரின் சமுதாயச் செந்நெறி.

வாணிகச் சிறப்பு

சேக்கிழார் சமுதாய நிகழ்வுக்குரிய அனைத்துத் துறை களையும் வாய்ப்பு ஏற்படும் பொழுதெல்லாம் பாராட்டு கிறார். பல்வேறு தொழில்களை மேற்கொண்டோரும் பெரிய புராணத்தில் உள்ளனர். நாம் பல்வேறு தொழில்களையும் எடுத்து விளக்க விரும்பினாலும் விரிவஞ்சி விடுக்கின்றோம். ஆயினும் இன்றைய சமுதாய அமைப்பில் வாணிகம் முதன்மை நிலையை அடைந்திருக்கிறது. நாடு விடுதலை பெற்ற பிறகு வாணிகம் வளர்ந்து வருகிறது. ஆனாலும் வாணிகத்திலும் வியாபாரமே வளர்ந்து வருவது வருந்து தலுக்குரியது. வாணிகம் என்பது உள்நாட்டுப் பொருள்களை அயல்நாடுகளில் விற்றுச் செல்வம் கொண்டு வந்து சேர்ப்பது. வியாபாரம் என்பது கிழக்கு வீதியில் வாங்கி மேற்கு வீதியில் விற்பது வியாபாரத்தில் உற்பத்தித் தொடர்புமில்லை; அயல்நாட்டுச் செல்வமும் இல்லை. மறைமுகமாகக் நம்மிடத்திலுள்ள செல்வத்தைச் சுழற்றிவிடுவதும் சுரண்டு வதும்தான்். இத்தகைய வியாபார முறை இன்று பெருகி வருகிறது. நகரங்கள் தோறும் கடைகள், பெருகி வருகின்றன. "பிழைப்பில்லையா? பெட்டிக்கடை வை” என்கின்றனர். இதனால் நம் நாட்டுச் செல்வ வளம் வற்றிவருகிறது.

"வியாபாரிகள் பெருகும் நாடு அழியும்” என்றார் கிரேக்க நாட்டு அறிஞர் சாக்ரட்டீஸ், உற்பத்திக்குப் பயன்பட வேண்டிய மனித ஆற்றல் உட்கார்ந்து அழிகிறது. இந்த வியாபாரத்தில் கலப்படம், அளவுக்குறைவு போன்ற மோசடிகளும் மலிந்து வருகின்றன. இத்தகைய வியாபாரிகளே இன்றைய அரசியல் இயக்கங்களுக்கும், சமய இயக்கங்களுக்கும் கூடப் பின்னணியாக உள்ளனர். இது வரவேற்கத் தக்கதன்று. சேக்கிழார் வாணிகத்தின் சிறப்பை வாயாரப் புகழ்கிறார். வாணிகம் அறவழியில் நிகழ வேண்டும்-வாய்மையில் வழாதிருக்க வேண்டும் என்பது சேக்கிழாரின் வாக்கு காரைக்கால் அம்மையார் வரலாற்றில் காலைக்காலை அறிமுகம் செய்து வைக்கும் சேக்கிழார்,

"மானமிகு தருமத்தின் வழிநின்று வாய்மையினில்
ஊனமில்சீர்ப் பெருவணிகர் குடிதுவன்றி ஒங்குபதி
கூனல்வளை திரைசுமந்து கொண்டேறி மண்டுகழிக்
கானல்மிசை உலவுவளம் பெருகுதிருக் காரைக்கால்”

என்று பாராட்டுகின்றார். அத்தகைய வணிகர் சமுதாயம் நம் நாட்டுக்குத் தேவை.

அரசியல் நீதி

சேக்கிழார் முதலமைச்சராக இருந்தவர். ஆதலால் அரசியலைப் பற்றி ஐயத்திற்கிடமின்றித் தெளிவாகப் பேசுகிறார். சேக்கிழாரின் பெரியபுராணத்தில் திருநகரச் சிறப்பு மிகுந்த சிறப்புடையது. அதில் அரசு, மன்னுயிரை எப்படிக் காக்க வேண்டுமென்பதை விளக்கிப் பாடுகிறார்.

மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத்
தான்தனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால்
ஆணபயம் ஐந்துந்தீர்த் தறங்காப்பான் அல்லனோ?

இந்தப் பாடலில் மிகவுயர்ந்த அரசியல் நீதியைக் கூறுகிறார். சேக்கிழார். நம்முடைய வாழ்க்கையில் நடைமுறை நிகழ்வு களைக் கூர்ந்து நேக்கி இந்தப் பாடலைச் சிந்திக்கும் பொழுது பலவற்றை உணரமுடிகிறது. உயிர்களுக்கு ஆட்சியால் தொல்லை நேரக் கூடாது. ஆட்சி என்பது உயிர்களுக்குக் காவற் பணியே தவிர அஃது அதிகாரமன்று. காலப்போக்கில் அஃது அதிகாரமாகிவிட்டது. ஆட்சி மக்களை வருத்துதல் கூடாது. ஆட்சியில் அமர்ந்துள்ளவரின் பரிவாரங்கள் இருக்கின்றனவே, அவற்றால் வரும் தொல்லைதான்் அதிகம். தன்னுடைய பரிவாரங்கள், உறவினர், சுற்றத்தார் முதலியோர் தன்னிடத்துள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி மக்களுக்குத் துன்பம் செய்யாமல் அரசு பாதுகாக்க வேண்டும்.

அடுத்து, மிக நுட்பமாகச் சேக்கிழர் ஒன்றைக் குறிப்பிடுகின்றார். பகையேயில்லாதவர் யாருமிலர்; இருந்தலும் இயலாது. அதிலும் இந்த நூற்றாண்டில் ஒருவர் பெற்றுள்ள திறமையும் பெருமையுமே மற்றவர்களால் தாங்கிக் கொள்ளமுடியாதபோது, பகையில்லாமலிருந்துவிட இயலாது. ஆனால் அந்தப் பகை வலிமையுடையதாக இருக்காது; நேரில் சந்திக்கச் சக்தியற்றிருக்கும். அப்போது ஆட்சியைக் கருவியாகப் பயன்படுத்தி அது தன் பகை முடிக்க எண்ணும். அன்று சமணர்கள் பல்லவ அரசைப் பயன்படுத்தினர். இன்றும் நெருக்கடிகால அரசைப் பயன்படுத்தினர்; தமது பகையைத் தாம் சந்திக்க முடியாமல் அரசைத் துணையாகப் பெற முயலும்போது அரசு உடன் போதல் நெறியன்று. ஆட்சியாளர், மற்றவர்தம் நடை முறையில் குற்றங்களை, ஆட்சியின் நடைமுறையிலேயே காண வேண்டுமே தவிரப் பகைவர் வாயிலாகக் கேட்டு, பகைவர் கூறும் அக்குற்றமிருக்கும் என்று நம்பி, பின் நம்பியது மோசமாகிவிடக் கூடாதே என்று கருதிக் குற்றத்தைப் படைத்துக் காட்டுதலோ, உள்ளதைப் பெரிதாக்கிக் காட்டுதலோ போன்ற குற்றத்தை அரசு செய்தல் கூடாது. மற்றபடி கள்வர், கொடிய விலங்குகள், விலங்கனைய மாக்கள் அதாவது கயவர் இவர்களிடமிருந்தும் அரசு குடிகளைக் காப்பாற்ற வேண்டும். இங்ங்னம் ஐவகை நெறியாலும் பாதுகாக்கும் அரசே அரசு. சேரமான் பெருமான் நாயனார், அவர் தம் ஆட்சியிலமைந்திருந்த அனைத்து உயிர்களும்- ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரை கழறுவன அறிந்து, அவையுற்ற துன்பம் நீக்கி ஆட்சி செய்தமையை எங்ங்ணம் வாழ்த்துவது! அத்தகைய நல்லரசு அமையத் தவம் செய்வோமாக!

இறைவன் வாழ்வுப் பொருள்

சேக்கிழார் இறைவழிபாட்டை எப்படிக் கருதுகின்றார்? ஒரு மனிதன், சராசரித் தகுதியுடையவனாக இருப்பதற்கு அவன் இறைவழிபாடு நிகழ்த்தபவனாக இருக்க வேண்டும் என்று சேக்கிழார் ஐயத்துக்கிடமின்றிக் கூறுகிறார். அதனால் சிவனடியார் என்ற தகுதி எங்கும் எதிலும் வற்புறுத்தப் பெறுகிறது. ஆனால் சிவம் வாழ்த்துப் பொருள் மட்டுமல்ல-வாழ்வுப் பொருள் என்பதைச் சேக்கிழார் தொடர்ந்து வலியுறுத்துகிறார். சுந்தரர் வரலாற்றில் சிவம், சுந்தரர்க்குத் தோழமையாய்ப் பொன்னும் மெய்ப்பொருளும் தந்து, போகமும் திருவும் புணர்த்து வாழ்வளித்தது அறிதற் குரியது. இறைவன் அச்சுறுத்துவான்! நரகமும் தருவான் என்ற பயக்கொள்கை அயல்வழி ஊடுருவலால் வந்தது. அந்தக் காலத்தில் சேக்கிழார், மண்ணில் பெருமானை நடமாட வைக்கின்றார். உற்ற தோழனாக உலாவர வைக்கிறார். திருக்கச்சூரில் இறைவன் ஆரூரருக்காக இல்லங்கள் தோறும் சென்று இரந்து வரும் நிலையை உலகில் உள்ள வேறு எந்தக் காப்பியத்தில் காண முடியும்? இன்றும் இறைவனை வாழ்த்துப் பொருளாகக் கொள்ளாமல் வாழ்வுப் பொருளாகக் கொள்ளும் சேக்கிழார் செந்நெறியை மேற்கொள்வோமாக!