குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9/சேக்கிழார் செந்நெறி
12
உலகிற்கு அனுபவம் பொது, ஆனால் அந்த அனுபவத்தை யடையும் நெறிமுறைகள் பொதுவல்ல, அவரவர் இயல்புக்கு ஏற்றவாறு மாறுபடும். இயல்பை நினைவிற் கொள்ளாமல் இலட்சியங்களை ஆய்வு செய்யப் புகுவதும், அவ் இலட்சியங்களை அடையும் நெறிகளை ஆய்வு செய்யப் புகுவதும், அதனால் ஏற்பட்ட முடிபுகளே, முடிபுகள் என்பதும் நெறியல்ல. எதற்கும், அதற்கென்று அமையும் வகையுண்டு; வழியுண்டு; சாதாரணமான அன்றாட உலக வாழ்வியலுக்குக் கூட ஏற்றுக்கொள்ளப் பெற்ற வழிவகைகள் உண்டு என்றால் அறிவியலுக்கு அதற்கென்று உரிய தனிமுறை இருக்காதா, என்ன? அறிவியலுக்கே நியதியின் பாற்பட்ட வாய்பாடுகள் உண்டு; வழிகள் உண்டு வகைகள் உண்டு என்றால் அறிவியலிலும் முதிர்ந்த அருளியலுக்குச் சிறப்புடைய வாய்பாடுகளும் அமைந்து இருக்கத்தான்ே செய்யும்!
ஏன்? சாதாரணக் கதை - பாட்டி பேரனுக்குச் சொல்லும் கதை. கதை, கதையே தானா? அந்தக் கதைக்குக் கருத்து இல்லையா? அந்தக் கதை சொல்வதில் நோக்கமில்லையா? இவை அனைத்தும் எல்லாருக்கும் ஒரு மாதிரி தோன்றுமா? கையில் சோற்றை வைத்துக்கொண்டு குழந்தைக்குப் பூச்சாண்டியை நினைவூட்டுகிறாள் பாட்டி அவளுக்குக் குழந்தையைப் பயமுறுத்துதல் நோக்கமல்ல. சோற்றை ஊட்டுவதே நோக்கம். ஆனால், பாட்டியின் பகைவர்கள் குழந்தையைப் பயமுறுத்துகிறாள் என்று குற்றம் சொல்லலாம்.
உடல்நூல் வல்லார் ஒருவர் "தேங்காய் தின்பது உடலுக்கு நல்லது” என்று ஒரு சொற்பொழிவில் கூறினார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவன் நேரே தேங்காய் விற்கும் கடைக்குச் சென்றான். அவன் தேங்காயை முன் பார்த்ததும் இல்லை; தின்றதும் இல்லை. ஆதலால் அவன், வழியில் சென்றவர்களைத் "தேங்காய் கடை எது?” என்று கேட்டுக்கொண்டு தேங்காய்க் கடைக்குச் சென்றான். அவன் சென்று சேர்ந்த தேங்காய்க் கடை மட்டையோடுள்ள தேங்காய் விற்கப்படும் கடை. காசு கொடுத்து தேங்காய் வாங்கினான். தேங்காய் தின்ன வேண்டுமென்ற ஆசையால் தனியிடம் தேடிச் சென்றான். அங்கிருந்தவாறே தேங்காயைக் கடித்துத் தின்ன முயன்றான். முடிவு பல் போயிற்று; செங்குருதி சிந்திற்று! சினம் கொண்டான். அறிஞர் கருத்தைப் பிழையெனத் துணிந்தான்். அவரை நாடிச் சென்று, அலறினான்! அவர் அமைதியாகத் தேங்காய் தின்னும் முறையை அறிந்துகொள்ளாமல் தேங்காய் தின்ன முயன்றது. தவறு என்று அவனை அமைதிப்படுத்தித் தேங்காய் தின்னும் நெறிமுறையை எடுத்துக் காட்டியதோடு, செய்துகாட்டி அவனுக்குத் தேங்காய்ச் சுவையைக் காட்டினார்.
இந்தக் கதைபோல்தான்் இன்று சிலர் நூல்களை ஆராய முற்படுகின்றார்கள். எழுதப்படிக்கத் தெரிந்தவர்க ளெல்லாம் நூலாராய்ச்சிக்குத் தகுதிவுடையவர்களாக முடியாது. அதுமட்டுமல்ல. ஒரு துறையில் துறைபோகக் கற்றவர்கள் பிறிதொரு துறையில் யாதும் அறியாதிருக்கலாம். அது தவறன்று. ஆனால், இந்த உண்மையை இன்று உணர்வாரில்லை. அறிவுத் துறையில் ஒரு போலி மயக்கம் எங்கும் காணப்படுகிறது. எல்லாம் தெரிந்தவர்களாகக் காட்டிக்கொள்ளும் தவறு மலிந்து வருகிறது. அறியாமையை விடக் கொடுமை, அறியாமையை அறிவு என நம்புதல்; மற்றவர்க்குக் காட்டுதல். இந்தப் புல்லறிவு இன்று எங்கும் பரவலாகக் காணப்பெறுகிறது.
ஒருநூலைக் கற்கவும், ஆராயவும் தொடங்கும் ஒருவன், முதலில் தன்னை நடுநிலைக்கு ஆளாக்கிக் கொள்ள வேண்டும். சார்புகளுக்கு ஆளானவர்கள் வழக்கைக் கேட்காமலேயே முடிவை எழுதி வைத்து விடுவார்கள். நூலை, நூல் வழி நின்று ஆராயாமலே எடுத்துரைக்கத் தலைப்படுவர். இம்முறை அறிவியலுக்கும் பயன்தாராது; அனுபவத்திற்கும் துணைவராது.
இலக்கியம் தோன்றிய பிறகே, அதன் இலக்கணம் அவ்விலக்கியத்தின் அடிப்படையில் தோன்றுகிறது. இலக்கியத்திற்குப் பின்னே தோன்றிய இலக்கணத்தின் அடிப்படையில் உரைநலம் காண்டது, பொருள்நலம் காண்டது நேரிய மரபு ஆகாது. அந்த இலக்கிய உத்திகளுக்கேற்பப் புதிய இலக்கண விதிகள் தோன்ற வேண்டுமே தவிர, இலக்கணம் நோக்கி இலக்கியச் செழுமை சிதைக்கப்படுதல் முறையன்று. நடைபயிலும் கால்களில் தளை பூட்டுதல் நடையைத் தடுக்கும். அதைவிடக் கொடுமை, சிந்தனைக்குப் பழக்கவழக்கங்கள் என்ற தளைகளைப் பூட்டுதல், பழக்க வழக்கங்கள் என்ற தளைகளுக்குள் சிக்கி நூலை ஆராயப் புகும் பொழுது, நூலின் கருத்து மேம்பட்டு விளங்குவதற்கு மாறாக, நமது பழக்க வழக்கங்களே மிஞ்சும். அதனால் நமது பழக்க வழக்கங்களுக்கு அந்த நூலாசிரியனைச் சாட்சியமாக்குவதே வழக்கம். நாம் நூலாசிரியனை நோக்கிப் பயணம் செய்வதென்பது இல்லை.
அடுத்து, நூலாசிரியனிடத்தில் மரியாதை - மதிப்பு என்பது நூலாசிரியனொடு மாறுபடாதது என்று கருதுகின்ற பொய்ம்மை நிறைந்த மூட நம்பிக்கை அறவே கூடாது. மதிப்பு என்பது வேறு மாறுபாடு என்பது வேறு விருப்பம் என்பது வேறு; வேறுபாடு என்பது வேறு. இவை தம்முள் முரண்பாடுகள் வளர்ச்சியடையாத-மானுடர் என்ற பெயரில் உலவும்-மாக்களிடத்திலேயே இருக்கும். தெளி வாகச் சொன்னால் சான்றோர்களிடத்தில் மாறுபாடுகள் ஏற்பட ஏற்பட மதிப்பு வளரும். அதற்குத் சான்றாண்மை என்று பெயர்.
தமிழகச் சமய, சமூக அமைப்பில் புராணங்களுக்கு நிறைந்த இடமுண்டு. இந்தப் புராணங்களை ஆதரித்தும் ஒர் அணி பிரசாரம் செய்து கொண்டு வருகிறது. எதிர்த்தும் ஓர் அணி பிரசாரம் செய்து கொண்டு வருகிறது. இவற்றில் பொதுமக்களாகிய நாம் அடையும் பாடு, திண்டாட்டமாகப் போகிறது.
சேக்கிழார், "மாக்கதை’ என்ற பெயரில் திருத் தொண்டர்கள் வரலாற்றைச் செந்தமிழில் செய்து தந்துள்ளார். அதனை வழக்கில் "பெரியபுராணம்" என்போம். இந்த நூலைக் கற்று, உணர்தல் எளிதன்று. பெரியபுராணம் இன்றைய சமுதாயத்தில் விவாதத்திற்குரிய பொருளாக மாறி வளர்ந்திருக்கிறது.
"பெரிய புராணத்தை எப்படி அணுகுவது?” வினாவிற்கு விடைகாணும் முயற்சியில் ஈடுபடுவோம். ஒன்று மட்டும் உறுதி. நம்முடைய நம்பிக்கைகளை மையமாக வைத்துச் சேக்கிழாரை நாம் அணுக மாட்டோம். பக்தியின் பெயரால் பெரிய புராணத்தை ஒற்றுத்தாள் மனோபாவத்தில் அணுகும் முயற்சியும் நாம் செய்யப் போவதில்லை. இந்த முயற்சியில் கிடைக்கும் விடைபற்றி மற்றவர்கள் எப்படி விமர்சிப்பார்கள் என்பது பற்றியும் கவலைப்பட வில்லை.
திருத்தொண்டர்கள் என்ற சொல் இனிய சொல்; கவர்ச்சி நிறைந்த வார்த்தை திருத்தொண்டர் யார்? இன்று திருத்தொண்டர், வார்த்தை வழக்கில் இல்லை. "பொதுத் தொண்டு” செய்வதாகச் சொல்லிக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் கூட "தொண்டர்" என்று கூறிக் கொள்வதில்லை; அழைக்கப்படுவது இல்லை. இன்று, பொதுத்தொண்டு எனப்படுவது எது? பெரும்பாலும் பேச்சே பொதுத்தொண்டு என்று கருதப்பெறுகிறது. ஒரோவழி, பேச்சாளர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதும் தொண்டு என்று கருதப் பெறுகிறது.
சேக்கிழார் காலத்தில் பொதுத்தொண்டு இருந்ததில்லை. ஆனால் திருத்தொண்டு இருந்தது. பொதுத் தொண்டு மக்களைப் பாமர மக்களாக-ஏழைகளாக எண்ணிக் கொண்டு செய்வது. திருத்தொண்டு, மக்களைக் கடவுளின் குழந்தைகளாக எண்ணிக் கடவுளுக்குச் செய்வதாக எண்ணிச் செய்வது. பழைய மனப்பான்மையுடையவர்கள் நேரிடையாகச் சொர்க்கத்திற்குப் போகும் யுக்தியைச் சொல்பவர்கள் மனிதனுக்குச் செய்யும் உதவியைப் பசு புண்ணியம் என்று ஒதுக்குவர். ஆனால், மாதவச் சிவஞானமுனிவர் மனிதனாக எண்ணாமல் கடவுளின் பாத்திரமாக நினைந்து செய்தால் பசுபுண்ணியமல்ல, பதி புண்ணியம் என்றார். திருத்தொண்டராதல் எளிதன்று. அப்பரடிகள் திருத்தொண்டின் திருவுருவம்; ஆலயங்களைப் பாதுகாத்துத் தந்த அண்ணல். அப்பரடிகள் ஆலயங்களைப் பாதுகாத்தது எப்படி? "ஆலயப் பாதுகாப்பு மாநாடு" நடத்தியா? வெள்ளைத்தாளில் கருப்பு மையால் தீர்மானங்கள் எழுதியா? இவையெல்லாம் இன்றைய நம்மனோர் முறைகள். அதனால் மாநாடுகள் ஒருபுறம் கோலாகலமாக நடக்கின்றன. மறுபுறம், ஆலயங்கள், செடிகொடிகள் முளைத்து இடிந்து கொண்டிருக்கின்றன. அப்பரடிகள் உழவாரப் படைதாங்கிக் கைத்தொண்டு செய்து, திருக்கோயில்களைப் பாதுகாத்தார். சேக்கிழார், "வாய்த்தொண்டை விலக்கவே கைத்தொண்டு” என்று கூறுகிறார். பழந்தமிழகத்தில் திருத்தொண்டர்கள் இருந்தனர். திருத்தொண்டர்கள் திருக்கோயில்களில் உழவாரப் பணி செய்தனர். இன்றோ, திருக்கோயில்கள் திருத்தொண்டர் களால் சூழப்பெற வில்லை. அது தொழிலாகிவிட்டது. பூசனை செய்பவரிலிருந்து, தூய்மை - துப்புரவு செய்யும் பணியாள் வரை இன்று தொழில் நினைவே! வணிகக் கண்ணோட்டமே!
அடியார்கள் ஆதல் எளிதன்று. அரிதினும் அரிது. ஆள்பவனாவதற்குரிய முயற்சியை விட அடியார் ஆதலுக்கு நிறைந்த முயற்சி தேவை. யாருடைய இதயம் அசைவின்றி ஆண்டவன் அடிகளைச் சார்ந்திருக்கிறதோ அவரே அடியார். நீரூற்று மடியில் உள்ள மரம் வளமான பசுமை பெற்றிருத்தல் போல் திருவடிகளைத் தாங்கிய இதயம் பெற்ற அடியார்கள் அன்பினால் - அருளினால் செழித்து வாழ் விப்பர். அடியார்கள் "நான் ஒழிந்தவர்கள். ஆங்கு முனைப் பில்லை. மரத்தின் வேர் மண்ணிலே மறைந்து வளம் தருதல்போல யார்க்கும் அடியாராகித் தொழும்பு பூண்டு பணி செய்வர். புகழ்மொழி அவர்களை மயக்குவதில்லை. இகழ்மொழி அவர்களுக்கு நோதலைத் தருவதில்லை. திருத்தொண்டர்கள் அளவிலாத பெருமை யுடையவர்கள். அவர்களுடைய வரலாறு அகத்திருள் நீக்கும். இருள் என்பது அறியாமை. அறியாமை, அணவத்தின் விளைவு. ஆணவம் அடங்காப் பிடாரித்தனமுடையது. அருளார்ந்த அனுபவம் தரும் பத்திமை வாழ்க்கையே, தாழ்வு எனும் தன்மைதருவது. திருவாரூரில் அடியார்களை மதியாது சென்ற ஆரூரரை “அடியார்க்கு அடியேன்” என்று திரும்பத்திரும்பச் சொல்லவைத்தார் திருவாரூர்த் தியாகேசர் அங்ங்னம் பிறந்ததுதான்் திருத்தொண்டத் தொகை. திருத்தொண்டத் தொகையிலிருந்து மலர்ந்தது திருத்தொண்டர் புராணம். புராணம் என்பது பழைய வரலாறு. சேக்கிழார் செய்த அந்தப் பழையவரலாற்றை அடியார்கள் வரலாற்றைக் கற்றால் அறியாமை அகலும் ஆணவத்தின் கொட்டம் அடங்கும்; அன்பு ஊற்றெடுக்கும்; பக்தி கணியும்; திருத்தொண்டு செய்யும் உணர்வு முகிழ்க்கும்.
பழங்காலத்தில் அடியார்கள் தனிமை வாழ்க்கையுடையவர்கள் அல்லர். அவர்கள் ஒரு கூட்டம். சாதாரணக் கூட்டமல்ல. திருக்கூட்டம். அடியார் திருக்கூட்டம், நாயன்மார் சொல்லமுதம் ஆர்ந்து அனுபவிக்கும் பேரவை யாகும். பேரவை, சமய உலகிற்கு-சமயவழி நிற்கும் மானிட சமூகத்திற்கு அனுபவத்தின் வழி விதிமுறைகளை வழங்கும். அந்த விதி முறைகளே சமூகத்தின் சட்டங்கள். -
திருத்தொண்டர் வரலாறு கயிலையில் தொடங்குகிறது. கயிலையில் முடிகிறது. ஆம்! எல்லாம் ஈசன் செயல் என்ற அநுபவ வாக்குப்படி - கயிலையே அம்முடிவாய கருத்தைத் தருகிறது. கயிலையே நிறைவேற்றி முடித்து வைக்கிறது. ஆதியே அந்தமாதலும், அந்தம் ஆதியாதலும் மரபு. மலை உயர்ந்தது; உயர்வுக்கு வழி செய்வது; எல்லா மலைகளிலும் சிறந்தது கயிலைமலை, ஓங்கி உயர்ந்த மலை; தண்ணளியிற் சிறந்த மலை; பயன்படு நிலையில் பாரினில் சிறந்தது. பனிமால்வரை, திருநீற்றுக் காப்பின் திருக் கோலத்தை நினைவிற்குத் தருகிறது. அறிவரியான், அநுபவத்திற்குரியான் என்று வாழ்த்தப் பெறும் கடவுள் உறையும் மலை. கயிலை மலை புண்ணியத்தின் திரட்சி, ஆம் அங்குப் பாபத்தின் வாசனைக்கும் இடம் இல்லை. எண்ணங்களில் உயர்ந்த மனிதர்கள் - சிந்தனையில் சிறந்த மனிதர்கள் செயலாலும் சிறந்தே விளங்கிடுவர்; செயல் உயர்ந்தால் பாபம் இல்லை. சிந்தனையில் - செயலில் சிறந்தவர்களே நிறை தவத்தினர். ஆசைகளை, வெறுத்து முனிந்தவர்களை முனிவர் என்று கூறுவது தமிழ் மரபு. வடமொழியில் முநி என்றால் நிறைந்த குணம் உடையவர். அதாவது மநநசீலமாகிய உள்ளத்தொழுக்கம் உடையவர் என்பது பொருள்: மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்று வள்ளுவம் கூறும். "புலன் அழுக்கற்ற அந்தணாளர் என்று புறநானூறு புகலும். பொறிகளில் தூய்மை காத்தல் எளிது; புகழ்ச்சியின் பால் உள்ளவிருப்பும், இகழ்ச்சியின்பால் உள்ள வெறுப்பும், தண்டனையின்பால் அச்சமும்கூட, பொறிகளின் தூய்மை காக்கத் துரண்டும். பொறிகளில் தூய்மை காத்துப் புலன்களில் மாசற்று இருந்தலைப் "புறம் சுவர்க்கோலம் செய்தல்” என்று நகைத்துப் புறக்கணிக்கும் சான்றோர் உலகம். புலன்களில், மனத்தில், உணர்வில், உயிரில் துய்மை காத்தலே தூய்மை. ஆதுவே தவம். புலன் தூய்மை பேணும் தவத்தின் பொலிவே பொறிகளில் துய்மை தர வேண்டும். புலன்களில் உள்ள சீலத்தினை - நோன்பினைக் காக்கும் வேலியாகப் பொறிகளின் துய்மை துணை செய்யலாம்.
பொறிவாயில் ஐந்தவித்தல் என்று வள்ளுவம் காட்டும் வாழ்வியல் எண்ணத்தக்கது. அவித்தல்-அழித்தல் அல்ல; ஒடுக்குதல் அல்ல; அடக்குதல் அல்ல; கிழங்கு அவித்தல், இட்டலி அவித்தல் என்ற உலகியல் வழக்குளை ஒப்பு நோக்குக. "சுவையில்லாத வற்றிற்கும் சுவை தந்து, நலந்தரு பொருளாக மாற்றுதல் அவித்தலால் பெறப்படும் பயன். அது போல உயிர்க்கு இன்பம் பயவாத புலன்களை, இன்பந்தரும் நெறியில் பக்குவப் படுத்துதலே அவித்தல் ஆகும்.
மோனத்திலிருந்து, பொறிபுலன்களை ஒருங்கிணைத்து உடையானின் திருவடிப்போதில் ஒன்றிய உள்ளம் பெற்றவர்கள் முனிவர்கள். கயிலையில் முனிவர்கள் சூழ இறைவன் - பரமசிவம் உமையொடு காதலித்தருள் பாலிக்கிறான். பெருமானுக்குப் பணிவிடை செய்தலை மேற்கொண்டிருந்த ஆலால சுந்தரம்-கமலினி, அநிந்திதை மீது மனம் செலுத்தினார். அண்ணல் பெருமானுக்கு இது தெரிந்தது. மாதர்மேல் மனம் வைத்த ஆலாலசுந்தரரை-மண் மீது மெல்லியலாளருடன் காதலின்பம் கலந்தணைந்து வாழ ஆணை பிறப்பித்தனன், இது என்ன நீதி: இறைவனக்கு ஒரு நீதி, அடியார்க்கு ஒரு நீதியா: கயிலையில் இறைவன் உமையொடு காதலித்து வாழலாம். ஆனால் அடியார் காதலித்து வாழக் கூடாதா? கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால், காதல் எல்லாம் ஒருதன்மையாமோ? இறைவன் உமையொடு காதலித்தல் உடல் நினைவு நீங்கிய உணர்வுக் காதல்; காரணங்கடந்த காதல், மயக்கம் இல்லா மாண்புறு காதல்; உலகு இன்புறக் காதலிக்கும் காதல். ஆலாலசுந்தரர் காதலோ உடல் வழிப்பட்டது. மயக்க நிலையினது. மயக்க நிலைக் காதலுக்குரிய இடம் மண்ணகமே. ஆலாலசுந்தரரின் காதல், ஆலாலசுந்தரருக்குப் பிறப்பைத் தந்தது; அடியார் உலகத்திற்குத் திருத்தொண்டத் தொகையைத் தந்தது; அமரர் தம் தலைவனை ஈசனை ஆரூர்த் தெருவில் நடக்க வைத்தது; தென்திசைப் புகழினை உலகுக்கு உணர்த்தியது. திருத்தொண்டர் புராணம் தொடங்குகிறது.
கயிலைக்கு நிகரான பெருமை தமிழகத்திற்கு உண்டு. தமிழகத்தின் திருவையாறு தென் கயிலையாயிற்று. அதனாலன்றோ மாதவம் செய்த தென்திசை என்று போற்றப் பெறுகிறது. ஆதலால், கயிலையில் தொடங்கிய திருத்தொண்டர் வரலாறு - தமிழகத்தில் நிகழ்கிறது. தையல் தமீஇய மனம் உடையவராய்த் தோற்றிய சுந்தரர் 'தம்பிரானைத் தம் உள்ளம் தழிஇயவராக வளர்ந்து - உபமன்னிய முனிவரும் தொழும் தன்மையராக உயர்ந்த வரலாறு திருத்தொண்டர் புராணத்தின் கருப் பொருள். ஆலால சுந்தரரின் காதல் கயிலையில் மயக்க நிலையில் தொடங்கினும், மண்ணகத்தில் அக்காதல் வளர்ந்து தூய்மை நிலை எய்தியது. "பெற்ற சிற்றின்பமே பேரின்பமெனின்" எனவும் "சங்கிலியார் மென்றடந்தோள் தோயினும் நின் திருவருள் மறக்க கில்லேன்" எனவும் வாழும் பெரு நிலைமையினைச் சுந்தரர் பெற்றார். காதல் சிறந்துழிவேட்கை தணியும், தூய காதல் விடுதலைக்குத் துணை செய்யும், மனையறம் தீதன்று நெறி வழி நிகழின் மனையறத்திலும் துறவு உண்டு. துய்ப்பின் எய்ப்பில் தொடங்கும் துறவினும், துறவில் தொடங்கும் துய்ப்பு மிக உயர்ந்தது. துறவில் தொடங்கும் துய்ப்பின் மூலமே எய்ப்பினில் வைப்பாகிய இறைவனை அடையலாம். இத்தகைய சிறப்புடைய இல்வாழ்க்கையே அறம், பெயரளவில் நிகழ்வது பழிப்பை ஆக்கும் பொழுது போக்காகும்.
திருத்தொண்டர் புராணம் சுந்தரரில் தொடங்குகிறது. பழுத்த மனத்து அடியார்கள் பலரை அறிமுகப்படுத்துகிறது.
நாடு! - எது நாடு? சேக்கிழார் அமைச்சுப் பணி செய்தவர். நல்ல நாட்டைப் பற்றி அவர் ஒரு சித்திரமே தருகிறார். நாட்டில் நல்ல நீர்வளம் இருக்க வேண்டும். சோழநாட்டைக் காவிரி வளப்படுத்தி வாழ்விக்கிறது. பொன்னனைய கதிர்களைத் தருவதால் பொன்னி என்று காவிரி பெயர் பெற்றது. காவிரியின் ஆற்றொழுக்கு அன்னை பராசக்தியின் கருணை போன்றது. ஆம்! அன்னையின் கருணை அனைவரையும் காக்கும்! அதுபோல், சோழநாடு - அதனில் ஒரு பகுதியாகிய இன்றைய தஞ்சைத் தரணி கோடானு கோடி மக்களுக்கு உணவை வழங்குகிறது. உயிர்க் கொடை அளிக்கிறது. காவிரி நாட்டில் காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்போர் அன்றும் இல்லை! இன்றும் இல்லை! காவிரி நாடு முழுதும் கழனிகளில் சுறுசுறுப்பாகக் கடமைகள் நிகழும். உழுதசாலில் தெளிந்த சேற்றின் இழுது செய்யினுள் இந்திர தெய்வத்தைத் தொழுது நாற்று நடுவர் என்று சேக்கிழார் கூறுகிறார். உழுதசேறு, கட்டிகளற்றதாக நெய் இழுது போல இருந்தது என்று சேக்கிழார் கூறுவது காவிரி நாட்டு உழவர் திறம் காட்டுகிறது. அஃது இன்றைய உழவர்களுக்கொரு பாடம்.
கழனிகளில் கதிர்கள் விளைந்து கிடக்கின்றன. எங்ங்னம்: பக்தியென்பது முனைப்பை முற்றாக அழிப்பது. ஊனினை-உயிரினை உருக்கி உணர்வளிப்பது. அத்தகு பக்தியுடையவர்களிடத்தில் அன்பு உண்டு. எதன் மீது? பலவற்றிலா? பலவற்றின் மீதும் அன்பு - அதாவது ஆண்டவன் மீதும் அன்பு: அரண்மனை மீதும் அன்பு: சங்கரன் மீதும் அன்பு, கங்காளன் மீதும் அன்பு; காணிகள் மீதும் அன்பு என்று சிலர் சொல்வர். இது பக்தர்களுக்கு இலக்கணமல்ல; திருத்தொண்டர்களுக்கும் இலக்கணமல்ல. பக்தர்கள் பரமனுக்கு மட்டுமே அன்பு பூண்பர்; ஆட்செய்வர். கதிர்மணி தாளை இடமாகக் கொண்டு உணவெடுத்துத்தான்் வளர்ந்தது. ஆனால், அந்தக் கதிர்மணி தன்னைத் தாங்கும் தாள் நிற்கும் நிலத்திடைக் கிடக்கும் உரம், தண்ணிர் ஆகியவற்றின் மீது மாளா அன்பு கொள்ளின் மனிதனுக்கு ஏது உணவு? அதுபோல் பரமனுக்கு ஆளாம் அன்பர்கள் வாழத்துடிப்பவர்கள் அல்லர். - வாழ்விக்கத் துடிப்பவர்கள். முற்றிய கதிர் பல ஒன்றோ டொன்று இணைந்து தழுவித் தலை வணங்கி நிலத்திடைக் கிடக்கும் காட்சி, ஊன்றிய கருத்துடையோருக்கு ஒரு தத்துவப் பல்கலைக் கழகம். பத்திமையிற் சிறந்த அடியார்களின் வாழ்க்கையில் தனிமை’ இருத்தல் கூடாது; இருத்தல் இயலாது. அடியார்கள் தத்தமில் அகந்தழிஇக் கூடுவர். யார் வணங்கினார் என்று அறிந்து, கொள்ள முடியாத வண்ணம் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு தொழுவர்; வணங்குவர். மெய்ப்பாட்டு மிகுதியால் வணங்கக் கிடைத்த தம்மையும் வணங்கிக் கொள்வர்.
வணக்கம், உள்ளீடு நிறைந்தது. முற்றிய கதிர்மணி இல்லாப் பதர் வணங்காது. உள்ளீடற்ற பதர், கழனியில் தலை நிமிர்ந்து நிற்கும்; ஆடும்; சுழன்று ஆடும்; காற்று ஆட்டிய வகையிலெல்லாம் ஆடும். அதுபோல, உள்ளீடற்றவர்கள் அபாரமாக ஆட்டம் போடுவர்; செருக்குடன் ஆடுவர்; ஆசைக் காற்று அலைக்கும் வழியெல்லாம் ஆடுவர். அடியார் வணக்கம் உள் நிறைந்து புறத்தே வெளிப்படுவதேயாம். அவர்கள் வயிற்றுக்காக வணங்குபவர்கள் அல்லர்; முகமனுக்காக வணங்குபவர்கள் அல்லர். ஞானத்தின் முதிர்ச்சியிலேயே உண்மையான வணக்கம் முகிழ்க்கிறது. இத்தகைய ஞானிகள் நாட்டின் மழைக்கு உதவுவார்கள். மாண்பினைச் சேர்ப்பார்கள். இவர்களே சான்றோர்கள். இத்தகு சான்றோர்கள் பல்கி வளரும் நாட்டிலேயே நரையிலா வாழ்க்கை கிடைக்கும்.
நாட்டிலுள்ள உழவர்கள் உழைத்துப்பொருள் சேர்க்கின்றனர். அரசுக்கு உரிய கடமையைச் செலுத்துகின்றனர். பழந்தமிழகத்தில் அது வரியல்ல. கடமை உணர்வுடன் செலுத்தப்பெறும் கடன். அரசுக்குத் தருவதை மகிழ்வுடன் முந்தித் தருவது முன்னோர் வழக்கம். அரசுக்குரிய வரியைச் குறைத்துக்காட்ட இரட்டைக் கணக்குமுறை இருந்ததில்லை; இருக்கக் கூடாது. காவிரி நாட்டு மக்கள் அரசுக்குரியன வற்றைக் கடமையெனக் கருதித் தந்தனர். அறங்கள் பல செய்தனர். கடவுளைப் போற்றினர்; ஆசிரியருக்கு அளித்தனர்; விருந்திற்கு வழங்கினர்; உற்றார் உறவினரைப் பேணிப் பாதுகாத்தனர். ஏன்? ஆட்சித் தலைவன் அநபாயனின் கொற்றக்குடை வெய்யில் மறைக்கும் குடையன்று. சமுதாயத்தைக் காப்பதில் தாய் குழந்தையைக் காப்பது போன்ற தண்ணளிக் குடையாக விளங்கியது. இஃது ஒரு சிறந்த நாட்டின் சமுதாய வாழ்க்கை.
இத்தகைய வாழ்க்கை சமுதாயத்தில் கால்கொள்ளு மானால், அங்கு இயல்பாகவே இன்றைய சோஷலிசத் தத்துவம் விளங்கித் தோன்றும். இந்த வாழ்க்கை முறையில் மாறுபாடுகள் தோன்றியதால் வளம் குறைந்துள்ளது; வறுமை பெருகியுள்ளது. அரசு வலிய ஏவலர் வைத்து அச்சுறுத்தி, கட்டாயப்படுத்தி வாங்குகிறது. திருக்கோயில்கள் கட்டாய மான கட்டணம் வைத்து வசூலிக்கின்றன. ஆசிரியருக்கு அரசு சம்பளம் வழங்குகிறது. சமுதாயம் நேரிடையாக வழங்கவில்லை விருந்தினர்கள் வீட்டுக்கு வருவதில்லை. “லாட்ஜ்"களுக்குப் போய் விடுகின்றனர். உற்றார், உறவினர் "ஒப்பு”க்குரியவராகி விட்டனர். நிர்ப்பந்தத்தின் அடிப் படையில் பழகுகின்றனர். ஆதலால், அரசும் செயற்கை முறையில் சோஷலிசம் படைக்க முயலுகிறது. அதற்கு மாறாகப் பழந்தமிழக வாழ்க்கை முறை - சேக்கிழார் காட்டிய நெறி வாழ்க்கையாக மலருமானால் இயற்கையாக சோஷலிசம் மலரும்.
மனு, இன்று விவாதத்திற்குரிய பெயர். மனுவைப்பற்றி ஆயிரமாயிரம் கதைகள். தர்மநீதி இன்று சர்ச்சைக்குரிய தாகியிருக்கிறது. மனோன்மணியம் தந்த சுந்தரம் பிள்ளை மனு தந்த நீதி முறையைக் கண்டிக்கின்றார்.
"உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி" என்று சாடுகின்றார். ஆனால், உண்மை என்ன? ஆராய்ச்சி என்பது சார்பு நிலையற்றதாக நிகழவேண்டும் என்ற விதியை மீண்டும் நினைவூட்டிக் கொள்வோம். மனு என்ற பெயரில் வழிவழி பல மாமேதைகள் வாழ்ந்துள்ளனர். மனு, மக்கள் குலத்திற்கு நீதியை-நெறியைத் தந்தவர். மனு என்ற பெயரில் நீதி தோன்றிய காலம் எது? வழக்கம்போல் வரலாற்றாசிரியர் களிடத்தில் சண்டையே! மனு, ஒருவரா? பலரா? காலத்திற்குக் காலம் மனு என்ற பெயரில் பலர் வாழ்ந்து நீதி சேர்த்தனர் என்பதே பலர் கருத்து. இங்கேயும் வழக்கம்போல் சிலர் முரண்படுகின்றனர். ஒன்றை மறந்துவிடக் கூடாது. மனுநீதி தொடங்கிய காலம் கிறித்து பிறப்பதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தியது. நாம் வாழ்வது இருபதாம் நூற்றாண்டு! கால வெள்ள்ம் கரைபுரண்டு ஓடி வந்திருக்கிறது. காலவெள்ளம் சமுதாயத்திற்குத் தந்த புதுக் கருத்தைப் பழைய மனிதர்களிடம் எதிர்பார்க்காதீர்கள்! அன்று அவன் வாழ்ந்த நிலையில் அவன் கருத்து வளர்ந்த கருத்தே! இன்று விமானத்தைப் படைத்த விஞ்ஞானிக்குப் பழைய கட்டைவண்டியைப் படைத்தோன் முன்னோடி என்பதை மறந்து விடுவது அறிவியலுக்கு அழகல்ல.
மனுநீதி தோன்றிய காலத்தில் வாழ்ந்த மனித சமுதாயத்தை நோக்கின் மனு ஆயிரம் மடங்கு உயர்ந்தவன். அவன் காலத்தில் வாழ்ந்த பிறநாட்டு அரசியல் சிந்தனையாளர்களை நோக்கின் அவனது அறிவியல் உயர்ந்தது. ஏன்? இன்றுமட்டும் என்ன வாழ்கிறது? மனுவை மறுப்பவர்கள் பெரிய குறையாகச் சொல்வது ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்ற முறையைத் தான்்! ஒரே வகையான குற்றத்திற்கு மனிதர்களைப் பொறுத்துத் தண்டனை மாறுகிறது என்பதுதான்ே! இன்று தண்டனை ஒரு மாதிரியாகவா இருக்கிறது? இன்றைய சிறைச்சாலையில் வகுப்பு வேறுபாடு இல்லையா? பாமரனுக்கு ஒரு தண்டனை-படித்தவனுக்கு ஒரு தண்டனை என்று இல்லையா? ஏழைக்கு ஒரு தண்டனை-செல்வருக்கு ஒரு தண்டனை என்று இல்லையா? அறிந்து திட்டமிட்டு அரசுக்கு எதிராகப் போட்டியாகக் கள்ளநோட்டு அடித்த செல்வந்தர் சிறையில் ஏ. வகுப்பில் வாழவில்லையா? அதே சிறையில் உணர்ச்சியின் தூண்டுதலினால் தவறு செய்தவர்கள் "சி" வகுப்பில் சித்திரவதைக்காளாக வில்லையா? தெளிவாகச் சொன்னால் மனுவின் நீதிமுறை குலப்பிரிவுகளில் மாறுபடுகிறது. ஆனால், செல்வ ஏற்றத் தாழ்வு காரணமான மனுவின் நீதி மாறுபடவில்லை. இன்றோ நாம் வளர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம். சமநிலைச் சமுதாயம் என்று வாய்கிழியப் பேசுகிறோம். ஆனால் மனுவின் காலத்திலில்லாத செல்வத்திற் கேற்றவாறு தண்டனையைக் கூட்டிக்குறைத்து வழங்குகின்ற முறை நிலவுகின்றதே! மனு குலத்தின் அடிப்படையில் மனிதகுலத்தைப் பிரித்தான்்.
மனுவினுடைய குலமுறைப் பிரிவு வள்ளுவருக்கும் உடன்பாடே. சாதிமுறை என்பது வேறு, குலமுறை என்பது வேறு. பழங்காலத்து முறை சாதிமுறைப்பிரிவு குலமுறைப் பிரிவு பிறப்பின் பாற்பட்ட தல்ல. கொண்டொழுகும் ஒழுக்கம், தகுதி ஆகியவற்றின் பாற்பட்டது. சாதிமுறைப்பிரிவு பிறப்பின்பாற் பட்டது. நாம் நெறி தவறிக் கிடக்கின்ற பிறப்பின் வழிப்பட்ட சாதிமுறைகளை நினைத்துக் கொண்டு குலமுறைகளைப் பற்றிய சிந்தனையை மறந்து விட்டோம்.
பார்ப்பனக் குலம்! இது பழங்காலத்துக் குலமுறையில் தலையாய குலம். இந்தப் பார்ப்பனரையே தொல்காப்பியம், 'அறிவர் என்றும் திருக்குறள் அந்தணர் என்றும் எடுத்துக் கூறின. பார்ப்பனர்', 'அறிவர் என்று அழைக்கப் பெற்றவர் முதிர்ந்த அறிஞர்கள். உயிர்களுக்கெல்லாம் ஒதுவித்து, ஞானம் நல்குபவர். அவர்கள் ஒழுக்கம் தண்ணளியே! மனு தொல்காப்பியத்தோடு திருக்குறளோடு இந்த அடிப்படையில் மாறுபடவில்லை. ஆனால், நமக்கு பார்ப்பனர் என்றவுடன் கோபம் வருவது ஏன்? நமக்குச் சோற்றுக் கடை நடத்துகின்ற சுப்பிரமணிய ஐயர் முதல், அரசுப்பணி மனையில் ஏவல் கேட்டொழுகும் பணிக்குப் போட்டிபோடும் அரிகரஐயர் வரை நினைத்துக் கொண்டு மாழ்குகின்றோம். சோற்றை விலைக்கு விற்பவன் பார்ப்பனல்லன். காசுக்குக் கல்வியை விற்பவன் பார்ப்பனல்லன், நாளைய வாழ்க்கையைப் பற்றிச் சலனப்படுபவன் பார்ப்பனனல்லன். போர்முனை அறியாதவன் சூத்திரியன் அல்லன். வாணிகம் செய்யாதவன் செட்டி அல்லன் உழாதவன் வேளாளன் அல்லன். இதனையே நமது தலைமுறைப் புரட்சிக் கவிஞன் பாரதி,
"பார்ப்பனக் குலம்
கெட்டழி வெய்திய
பாழடைந்த கலியுகம்."
என்று பேசினான். குலமுறைப் பிரிவு, தகுதி சீலத்தின் பாற்பட்டுப் பிரிக்கப்பட்டவை. குலங்களின் தகுதி, சீலத்திற்கு ஏற்றவாறு தொழில் மாறுபடுதல் தவிர்க்க முடியாதது. ஒத்த உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் காலத்திலும் மிகப்பெரிய மாளிகையில் வாழும் குடியரசுத் தலைவர் உண்டு. சின்னஞ்சிறு வீட்டில் அவருக்கு ஏவல் செய்து வாழும் பணியாளர்களும் உண்டு. இன்றும் வேறுபாடு உண்டு. ஆனால், வேறுபாடு இடைக்காலத்திலிருந்ததுபோல் அல்லாமல் அதாவது பிறப்பின் பாற்பட்டதல்லாமல் தகுதியின் பாற்பட்டதாக அமைந்துவிட்டது. ஆனால் இந்த மாற்றம் சட்டத்தின் அடிப்படையில் உலகியலில் அரசியலில் ஏற்பட்டிருக்ருக்கிறதே தவிர, சமுதாயம், முழுமையும் தழுவியதாக இல்லை. எனவே, மனுநீதி முற்றாக மறுக்கத் தக்கதுமல்ல, முற்றாக ஏற்றுக் கொள்ளத் தக்கதுமல்ல. மனுநீதி, மிகுந்த மரியாதை யுணர்ச்சியுடன் ஆய்வு செய்யத்தக்கது. அங்கனம் நடுநிலை உணர்வுடன் ஆய்வு செய்தால் மனுநீதி ஏற்றுப் போற்றத்தக்கதாகவே அமையும். அதனாலன்றோ ஆருரை ஆண்ட சோழன் ஆட்சி மனுநீதியில் அமைந்தது என்று சேக்கிழார் காட்டுகிறார்.
தமிழக வரலாற்றில் சோழப் பேரரசு புகழ்பூத்த பேரரசு. அரசுக்குரிய விழுமிய சீலமாகிய நீதியைப் போற்றிய பேரரசு சோழப் பேரரசனின் திருமகன் தேரில் உலா வந்தான்். அரச வீதியில் தேர் வந்து கொண்டிருந்த போது பச்சிளங்கன்று ஒன்று மிரண்டு யாரும் அறியா வகையில் ஒடித் தேர்ச் சக்கரத்தில் சிக்கி இறந்துவிட்டது. கன்றினை இழந்த பசு துயரம் தாங்க மாட்டாது அரண்மனை நோக்கி விரைந்தோடிற்று. சோழப் பேரரசின் கொற்றவனின் கோயில் முன்னேயுள்ள மணியைத் தன் கொம்பினால் இழுத்து ஒலிப்பித்தது. மணி ஓசை கேட்ட அரசன் பதறி ஓடி வந்தான்். கன்றை இழந்த பசு, கண்ணிருடன் நிற்பதைக் கண்டான். பசுவின் கண்ணிர் பாராளும் மன்னனின் நெஞ்சினைத் சுட்டது. அரசின் ஆணையைக் குற்றமற நிறைவேற்ற வேண்டிய அமைச்சரை இகழ்ச்சியுடன் நோக்கினான். அமைச்சர் நிகழ்ந்தன கூறினார். நிகழ்ந்தன மட்டும் கூறாமல் நிகழ்வுக்கு உரிய காரணங்களையும்-சமாதான்ங்களையும் கூடச் சேர்த்து அமைச்சர் எடுத்துக் கூறினார். "இளவரசன் ஊர்ந்து சென்றதோ நெடுந்தேர். அதாவது உயரிய தேர்: ஒலிக்கும் மணிகள் கட்டப்பெற்ற தேர்: எண்ணில் பல தேர்களும் படைகளும் சூழச் சென்றான் இளவரசன். தேரூர்ந்து சென்றதும் அரசுலாத்தெரு, இறந்தகன்று இளைய கன்று. தேர், கன்றின் மீது ஊர்ந்து செல்லவில்லை. கன்று தேரிடைப் புகுந்து இறந்தது” என்றார் அமைச்சர் அமைச்சரின் விளக்கம் நுண்ணறிவின் பாற்பட்டது. கன்று, இறந்து புட்டதற்கு வேறு யாரும் காரணமல்ல என்பதை இவ்வள்வு தெளிவாக விளக்க யாராலும் முடியாது.
ஊர்ந்த தேர், நெடுந்தேர். இளவரசன் தேரின் மீது அமர்ந்திருந்தான்். அதனால் தேரின் அடியில் என்ன நிகழ்கிறது என்பதைக் காணும் வாய்ப்பில்லை. தேர் ஒலிசெய் மணிகளால் ஒப்பனை செய்யப்பெற்றது. ஆதலால், தேர்ந் நகர்ந்த போது மணிகள் ஒலி செய்தன. எனவே இளங்கன்றின் குரலொலியும் கேட்க வாய்ப்பில்லை. தேர்களும் படைகளும் சூழ வந்ததால் மண்ணகம் அவற்றால் மூடப்பெற்று பருவத்தாலும் உருவத்தாலும் இளைய கன்று ஒன்று இடையிற் புகுந்ததைக் காணும் வாய்ப்பில்லாமல் போய் விட்டது. தேரூர்ந்த வீதி, அரசுலா விதி. அங்குப் பசுவும் கன்றும் வர விதியும் இல்லை. மரபும் இல்லை. எதிர்பாராத ஒன்று. கன்றும் இளையது. விண்வறியது அது ஓடி வந்தது. தேர் தடம் மாறிக் கன்றின்மீது ஊரவில்லை. கன்றே தேரிடையிற் புகுந்தது. என்ன அற்புதமான சமாதான்ம் ! சட்டப்படி நூற்றுக்கு நூறு சரி! இன்றையச் சூழ்நிலை யானால் இளவரசன் குற்றமுடையவனல்லன். கன்றே குற்றமுடையது. கன்று இறந்துபட்டதால் கன்று தவறு செய்திடத்துணையாகத் தாய்ப்பசு இருந்ததாகத் கருதப் பெற்றுத் தாய்ப்பசுவுக்கும் தண்டனை வழங்கும் முறை கிடைத்தாலும் கிடைத்திருக்கும், கொஞ்சம் மனச்சாட்சி இருந்தால் தாய்ப்பசுவுக்குக் கொஞ்சம் தண்ணிரும் வைக்கோலும் அதனை உடையோனுக்கு இழப்பீட்டு நிதியாகச் சில வெண்பொற்காசுகளும் வழங்கப்பெறும். ஆனால், வரலாறு நிகழ்ந்தது சோழப் பேரரசில். எவ் வுயிர்க்கும் நீதி வழங்குவதை உயிரின் சீலமாகக் கொண் டொழுகிய சோழப்பேரரசர் வழிவந்த அரசன் துணுக் குற்றான்; விடம் தலைக்கேறிய நிலையினை எய்தினான். அரசன் உற்ற துன்பம் கன்றினை இழந்த பசுவின் துன்பத்தினை விஞ்சியது. என்னசெய்வது? என்ற வினா பிறந்தது.
அமைச்சர்கள், பசுவைக் கொன்றவர்க்கு அந்தணர் விதிமுறைநூல்விதிக்கும் கழுவாய்களை இளவரசன் செய்ய லாம் என்று எடுத்துக்கூறினர். இளவரசன் நோன்பிருந்து முறையாகத் தீர்த்தம் மூழ்கி தங்கத்தினாற் செய்த பசு ஒன்றினை அந்தணர்க்குத் தான்்மாக வழங்குதல் ஒழு கழுவாய்முறை. இந்து சமூகத்தில் கழுவாய் முறை தோன்றியவுடன் பாவங்களும் பெருகின. தங்கமே கண்ணிரின் சின்னம். ஒர் உயிர்பட்ட துன்பத்திற்குப் பிறிதோர் உயிர்க்குப் போகம் வழங்குவதன் மூலம் எப்படி குற்றம் நீங்கும்? கழுவாய் என்பது எந்த உயிர்க்குத் தீங்கு செய்யப் பெற்றதோ அந்த உயிர்க்கு ஆறுதல் தரத்தக்கதாக இருக்க வேண்டும். அது மட்டுமின்றி ஒர் உயிர்க்குத் தீங்கு செய்த உயிர் தீங்கு செய்யும் இயல்பினுக்கு அடிப்படையாயிருந்த குற்றங்களினின்றும் விடுதலை பெற வேண்டும். தான்ம் செய்வதால் குற்றம் செய்யும் இயல்பு மாறாது. கண்ணிரைக் கண்ணிரால்தான்் மாற்ற முடியும். கண்ணிரை, கங்கையாலோ, காவிரியாலோ மாற்ற முடியாது. இந்த விழுமிய நீதியைச் சோழப் பேரரசன் ஏற்றுப் போற்றினான். பசு, தன் கன்றை இழந்து துன்புற்றதைப் போல் தான்் தன்னுடைய ஒரே மைந்தனை இழந்து துன்புறுதலே சரியான தண்டனை, விதிமுறை என்று அரசன் கருதினான்; அவ்வண்ணமே செய்ய முனைந்தான்! உலகுக்கு உணர்த்தினான். தனது ஒரு குலத்துக்கு ஒரு மைந்தனைத் தேர்க்காலில் கிடத்தித் தேரினைச் செலுத்தத் தலைப்பட்டான்! ஆரூர் அண்ணல், அச்செய்கை பொறாது காட்சி தந்தருளி மன்னவன்றன் நீதியின் சிறப்பை மண்ணுலகுக்கு அறிவித்தனன்!
திருக்கூட்டம் என்பது அழகான சொல். திரு என்பது எழுத்தாலான சொல் மட்டுமன்று, திரு - கண்டோரால் விரும்பப்படும் தன்மை என்பார் பேராசிரியர், இறைவனுக்கே திரு' என்றொரு பேருண்டு. திருவருட் சிந்தனையுடையோர் பலர் கூடிய கூட்டம், திருக்கூட்டம், திருவருட் சிந்தனையுடைய்ோர் தனித்து வாழார். தனிமையிழந்த நிலையிலேயே அடியாராகின்றனர். "நான்", "தான்"என்ற சொற்கள் வழிப்பட்ட முனைப்பு, கழனியில் உள்ள களையினும் கொடியது, அடியார் வாழ்க்கைக்கு!
தாம் பெற்ற அருளனுபவத்தைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளவும் மேலும். மேலும் வளர்த்துக் கொள்ளவும் பலர் சூழ வாழ்தலையே அடியார்கள் விரும்புவர். இன்று, அடியார்களைக் காண்பது அரிது. அதுவும் திருக் கூட்டமாகப் பார்ப்பது அரிது. அடியார்கள் புறத்தே திரு நீற்றொளிதாங்கி நடமாடுவர்; அகத்தே ஓசை நிலையிலும் புறத்தே ஒலி நிலையிலும் ஐந்தெழுத்தே எண்ணி நடமாடுவர். அடியார்கள் கைத்திருத் தொண்டு செய்யும் கடப்பாட்டில் சிறந்து விளங்குவர். பூசும் நீற்றினைப் போல உள்ளும் புனிதர்களாக விளங்குவர். நிலைதடுமாறினும், நிலை குலையா நெஞ்சத்தவர்; ஐம்பூதங்கள் நிலைதடுமாறினாலும் சங்கரன்தாள் மறவாதவர்; இவர்களே அடியார்கள். அவர்கள் மகிழ்ந்து அணிந்த அணி கண்டிகையே. உடுத்திய ஆடையும் கந்தையே. அவர்கள் ஈசன் பணியே பணியெனக் கொண்டவர்கள். உயிர் நலங்க்ாக்கும் ஈர அன்பினர்; குறை விலாதவர்; வீரத்தில் விழும்யர். அவர்களுக்குக் கேடும் இல்லை ஆக்கமும் இல்லை; கேடும் ஆக்கமும் கடந்த திருநிலை எய்தியவர்கள். ஒடு - செம்பொன் எல்லாம் அவர்களுக்கு ஒன்றுதான்். அவர்கள் மோட்சம், நரகம் பற்றிக் கூடக் கவலைப்படுவதில்லை. அவர்கள் 'கும்பிடு' குறியெதிர்ப்பு நோக்குடையதன்று. வணிக நோக்குடைய தன்று. கூடும் அன்பினில் கும்பிடுதலே அவர்கள் இயல்பு. இவர்களே அடியார்கள். -
சேக்கிழார் காட்டும் அடியார்களின் இலக்கணம் இது. ஆம்! தமிழகத்தில் இத்தகைய திருக்கூட்டம் கடலென நடமாடியதுண்டு. இன்றோ திருக்கூட்டத்திற்குப் பதில் நாட்டில் தெரு’க் கூட்டங்கள் வளர்ந்துள்ளன. சமயம் கருவுற்ற மனிதனை அழைத்துச் சென்று திருவிற்சேர்த்து மீண்டும் கருவுறா வண்ணம் காப்பதேயாம். இந்த அடியார்களின் வாழ்க்கை புறத்தால் அமைந்தன்று: அகத்தால் அமைந்தது. அதனால் புறம் இல்லை என்பது பொருளல்ல. புறத்தே நிகழும் நிகழ்வுகள் அகத்தே உணர்வுகளை வளர்க்கும் தகையன. பேணும் தகையன. திருநீறு சாதனத்திற் சிறந்த சாதனம்.இன்று திருநீறு, என்பது ஆன்றோர் உரைத்த நெறி முற்ைப்படி இல்லை. திருநீறு தூய்மையாக-வெண்மை நிறத்ததாக இருக்க வேண்டும். கருமை நிறம் கொண்டதாக இருத்தல் கூடாது. அது போலவே செந்நிறத்ததாகவும் இருத்தல் கூடாது. தூய வண்ணம் கலப்பற்ற வெண்மையான திருநீறே திருநீறு. திருவின் நிலை எய்தியவர்கள் ராகதுவேஷ’ங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களுக்கு விருப்பும் இல்லை; வெறுப்பும் இல்லை. காய்தலும் இல்லை, உவத்தலும் இல்லை. வேண்டுதலும் வேண்டாமையும் இல்லை. திருவருளைத் தவிர வேறு எந்த ஒன்றும் அவர்களை ஆட்கொள்ளாது. நிறங்களில் கூட வெண்மை ஒன்றே வெப்பத்தை ஈர்க்காதது. அதனாலேயே பழங்காலத்தில் கருப்பு நிறமுள்ள குடை வைத்திருந்தாலும் அதன்மீது வெள்ளைத்துணி தைத்திருப்பார்கள். ஆக, திருநீறு தூய்மையில் தூய்மையின் சின்னம், அதனால் திருநீறணிந்தவர்கள் உள்ளத்தில் நிறை தூய்மை பெற்றிருக்க வேண்டும். ஆனால், இன்றோ யாருக்கு முதலில் திருநீறு என்ற சண்டை வலுத்து இருக்கிறது.
இறைவனின் கண்டத்தை நினைவூட்டுவது கண்டிகை. ஆம்! இறைவன் நீலகண்டன், விண்ணோர்கள் வாழ அமுதத்தை வழங்கி விட்டு நஞ்சை உண்டு நிறுத்திய கண்டமல்லவா? கண்டிகை அணிந்தவர்கள் பிறர்க்கு இன்பத்தை வழங்க வேண்டும். தாம் துன்பத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான்் கண்டிகைக்குப் பெருமை. கண்டிகை அணிந்தோரின் சீலம் ஏற்றுப் போற்றப் பெறும் இன்றோ கண்டிகையின் தத்துவத்திற்கும், கண்டிகை அணிந்திருப்போரின் வாழ்க்கைக்கும் ஒட்டும் இல்லை; உறவுமில்லை. இன்று கண்டிகை பெற்றிருக்கும் ஏற்ற மெல்லாம் அதற்குத் தங்கவளை பிடிக்கப்பட்டிருப்பதுதான்். ஆம்! இதில் ஒரு நடைமுறை உண்மை புலப்படுகிறது. கருணையைத் தங்கம் கொள்ளை கொண்டு விட்டது என்பதே உண்மை. இறைவனைத் தொழுதல் ஓர் இன்பம். தொழுதலில்பெறும் இன்பத்திற்கு இணையான இன்பம் விண்ணிலும் இல்லை. மண்ணிலும் இல்லை. இன்று கூடும் அன்பினில் கும்பிடும் இயல்புமாறி, வணிகநோக்கில் கும்பிடும் கும்பிடுகள் அதிகமாகிவிட்டன. வணிகக் கும்பிடுகள் வஞ்சனைக் கும்பிடுகள்தான்். வணிகக் கும்பிடு வந்தவுடன் அடக்கம் போய் ஆணவம் தலையெடுத் திருக்கிறது. அதனால், தேவதேவன் முன்னாலேயே இந்தத் தெருக்கோடி மனிதன் பெயர் சொல்லப்படுகிறது. ஆம் அவன் அறியாத வனல்லவா? உடன் ஒரு தேவைப் பட்டியலும் அறிவிக்கப் படுகிறது. இந்த வணிகமுறை கும்பிடுதலில் கலந்திருக்கும் வரை இறைவனும் தலைப் படான். மண்ணுலகும் செழிக்கப்போவதில்லை. கூடும் அன்பினில் கும்பிடுதலே கும்பிடு. சேக்கிழார் படைத்துக் காட்டிய திருக்கூட்டம் மீண்டும் தமிழகத்தில் தழைக்க வேண்டும். அன்றே தமிழகத்திற்குப் பொன்னாள்.
சுந்தரரர் திருவாரூர்த் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனை வணங்க வருகிறார். திருவாரூர்த் திருக்கோயிலில் தேவாசிரிய மண்டபத்தில் விண்ணவர்களுடன் எண்ணற்ற அடியார்கள் கூடியிருந்தனர். ஆம்! எண்ணற்ற அடியார்கள்! அன்று அடியார்களின் அளவுக்குக் குறைவு இல்லை. இன்று எங்கே என்று தேடிக்கண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது. அதனால்ன்றோ திருமடங்களுக்கு வாரிசுகளைத் தேர்ந்தெடுப்பதில் கூட இடர்ப்பாடு ஏற்படுகிறது. இன்று பத்திமையிலும் தொண்டிலும் ஈடுபட்டு வளர்ந்து வாழும் மனப்போக்கைச் சூழ்நிலை கெடுத்திருக் கிறது. சுந்தரர், தேவாசிரிய மண்டபத்துக்குள் கூடியிருக்கும் அடியார்கள் கூட்டத்தைப் பார்க்கிறார். ஆரூரர்க்கு அடியார்களைச் சென்று வணங்கவும் அவர்களுக்கு ஏவல் செய்யவும் விருப்பம் மேலிடுகிறது. ஆயினும் பரமன் தாள்பணியும் ஆர்வம் தலையெடுத்ததால் திருக்கோயிலுக்கே சென்று விட்டார். ஆரூரரின் விருப்பத்தை அறிந்த பெருமான் அடியார்களை அறிமுகப்படுத்தி வணங்கி வாழ வழி காட்டுகிறார்.
பெருமான், உலகியலைச் சார்ந்த அறிமுகக் கலையில் தேர்ந்து விளங்குகிறார். திருவுள்ளம் நிறைந்த நிலையில் அறிமுகப் படுத்துகிறார். "அடியார்களின் பெருமை தம் பெருமையை ஒத்தது. அடியார்கள் தம்மை நெஞ்சத்திற் பெற்றுப் பேணலால் தம்ம்ை உரிமையாக உடையவர்கள்; ஒருமையுணர்வால் உலகை வென்று விளங்குகிறவர்கள்; யாதொரு குறையும் இல்லாதவர்கள்; அருமை என்று அறிந்து பாராட்டக் கூடிய நிலையில் நிற்கின்றவர்கள்; அன்பினால் இன்பம் அனுபவிக்கிறவர்கள். இம்மையும் மறுமையும் கடந்து நிற்கின்றவர்கள். அவர்களைச் சென்றடைக” என்று தம்மையடைந்த ஆரூரரை ஆற்றுப்படுத்துகின்றார். என்ன அற்புதம்! அடியார்களை இறைவன் அறிமுகப்படுத்தும் பாங்கைப் பாருங்கள்! இதுவன்றோ தோழமை !
இன்று இரு அடியார்கள்கூடத் தமக்குள் இப்படி அறிமுகப்படுத்திக் கொள்வதில்லையே! இன்று உலா வரும் அடியார்களுக்குள் இருக்கும் பிணக்குகள் வாஷிங்டனுக்கும் மாஸ்கோவுக்கும் இருப்பதைவிடக் கூடுதலாகவே இருக்கின்றன. எப்படி மனித சமுதாயத்தில் அன்பு வளரும்? தோழமை வளரும்? பெருமையை விளம்பரத்தைத் துறக்காத துறவு இப்போதையத் துறவு.
ஆரூரர், உடன் அடியார்களை அணுகுகிறார். அடியார்களை அணுகி வணங்கித் தொழுதலைத் துன்பம் துடைக்கும் நெறியென்று ஆரூரர் பரவுகின்றார். ஆம்! ஆண்டவன் முன்னே யாரும் பணிந்து விடுவார்கள். ஆனால், அடியார்களை நோக்கும் போதுதான்் தராதரங்கள் பார்ப்பார்கள். இன்றைய சமுதாயத்தில் தராதரம் மட்டும் பார்ப்பதில்லை. சாதிகளும் பார்ப்பார்கள். ஆரூரர், அடியார்களின் பண்பைத் தாம் எப்படி ஏத்தமுடியும்? என்று சிந்திக்கின்றார். இறைவன், "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடி எடுத்துக் கொடுக்கின்றார். இறைவன் எடுத்துக் கொடுத்த அடியினைக் கொண்டு தம் சிந்தனையில் நினைவுக்கு வரும் அடியார் களையெல்லாம் தனித்தனியே பாடித் தேவாசிரிய மண்டபத்திலிருந்த அடியார்களைப் பணிகின்றார். இங்ங்னம் அடியார்களை வணங்கி வாழும் முறையைச் சேக்கிழார் தமிழ் முறை என்று பாராட்டுகின்றார்.
ஞானம் வருதலுக்குத் தாழ்வு உணர்ச்சி தேவை. இங்குத் தாழ்வு உணர்ச்சியென்பது குறைமனப்பான்மையன்று. சிலத்திலும் தவத்திலும் நோன்பிலும் மெய்ப்பொருள் அறிவிலும் மிக்குயர்ந்தோர், தம்மை அடக்கத்துக்கு ஆளாக்கிக் கொள்வதற்குத் தாழ்வு என்று பொருள். தாழ்த்தப்பட்டு வந்த தாழ்வல்ல; தாழ்த்திக்கொண்ட தாழ்வு. இத்தாழ்வுணர்வு தழைக்கும் நெஞ்சில், நான் இல்லை; எனது இல்லை; வேண்டுவன இல்லை; வேண்டாமை இல்லை; இன்பம் இல்லை; துன்பமில்லை; பகைமை இல்லை. இங்ஙனம் அனைத்தையும் கடந்து பழுத்த மனத்தோடு விளங்கும் மனப்பான்மையை அடியார் வணக்கம் தரும்.
சுந்தரர், சிவபெருமான் திருவடியிற் பதித்த நெஞ்சுடை யாரேனும் மண்ணக வாழ்க்கையை நன்றாக ஆரத்துய்த்து வாழ்ந்தவர். அது மட்டுமா? இறைவனிடத்தில் நிறைய உரிமைகளைப் பெற்றவர். . நாம் கூசி நடுங்கக் கூடிய செய்திகள் பற்றிக் கூட அவர் இறைவனிடத்தில் தாராளமாகக் கேட்டிருக்கிறார். இல்லை, அமரர்களையும் மற்றவர்களையும் ஏவல் கொள்ளும் இறைவனை ஆரூரர் ஏவல் கொண்டுள்ளார். ஆரூரருக்கு நெல் முதலியன வழங்கும் கடப்பாடுடையவர்களில் ஒருவர் குண்டையூர்க்கிழார். குண்டையூர்க்கிழார் அளித்த நெற்குவியலை எடுத்துச் செல்ல ஆள் பணித்தருளும் படி ஆரூரர் திருக்கோளிலித் திருக்கோயிலில் வேண்டுகிறார். திருக்கோளிலி எம்பெருமான் அருளால் பூத கணங்கள் ஆரூர்க்குக் கொண்டு சேர்த்தன.
சந்தரர், காதல் விருப்புடையவர் என்பது உண்மை. ஆயினும் அவர் சீலத்திற் சிறந்தவர் என்பதையும் நினைவிற் கொள்ளுதல் வேண்டும். கோட்புலியார் தாம் பெற்ற அருமை மகளிர் சிங்கடியார், வனப்பகையார் இருவரையும் மணந்து மகிழ்ந்தருளும்படி வேண்டுகின்றார். சுந்தரர் இவர்கள் நான் பெற்ற மக்களனையர் அதனால் மணத்திற்கியலாது என்று மறுத்து விடுகின்றார்.
பங்குனித் திங்கள் வந்து கொண்டிருக்கிறது. திருவாரூர் பங்குனி உத்தரத் திருநாள் ஆரூரர்க்கு நினைவு வருகிறது. உடன் பரவையிர், திருநாளின் பொழுது வழங்கும் கொடை நினைவுக்கு வருகிறது. பரவையார், திருநாளின் பொழுது வழங்கும் கொடை நினைவுக்கு வருகிறது. பரவையார் கொடைக்கு முட்டின்றி நிறையப் பொன்கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நினைப்பும் தோன்றுகிறது. சந்தரர்க்குப் பொன் வேண்டும். எங்கே போவார்? அவர் பொன் வேண்டிப் புகுந்த இடம் திருப்புகலூர்! திருப்புகலூர் இறைவனை வணங்கி மகிழ்ந்து அருகில் இருந்த முற்றத்தில் திருப்பணிக்காகக் கொண்டு வந்து போட்டிருந்த செங்கல் ஒன்றை எடுத்துத் தலையணையாக வைத்துக்கொண்டு, துண்டை விரித்துப் படுத்துத் துரங்கினார். பொன் கவலையால் தூக்கம் வரவில்லை. இடையில் விழித்துப் பார்க்கிறார். தலைக்கு வைத்திருந்த செங்கல்லே செம்பொன் கட்டியாக விளங்கியமை கண்டு திருப்புகலூர் இறைவன் புகழைப் போற்றுகின்றார்.
அப்போது பாடிப் பரவும் பாடலில் "எதிரில் இன்பம் இம்மையே தருவார்’ என்று விளக்குகின்றார். இறைவனை ஏத்துவது மறுமை இன்பத்துக்காக மட்டுமல்ல. இம்மையிலேயே எல்லையற்ற இன்பங்களை ஆர்ந்து அனுபவிக்கலாம். உலக இன்பங்களைத் துய்த்து மகிழ்தல் இறைநெறிக்கு முரணானதன்று. இவ்வுண்மைகள் சுந்தரர் வரலாற்றினால் பெறப்படுகின்றன.
திருப்புகலூரில் சுந்தரர் பாடுகின்றார்.
"தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
சார்கினுந் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடாதே யெந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மை யேதரும் சோறும் கூறையும்
ஏத்தலாம் இடர் கெடலுமாம்
அம்மையே சிவ லோகம் ஆள்வதற்கி
யாதும் ஐயுற வில்லையே:
(திருப்புகலூர் - )
இத் திருப்பாடலில் உலகத்துச் செல்வந்தர்களின் பொய்ம்மையை இடித்துக் காட்டுகிறார். செல்வந்தர்களைச் சார்ந்து, அவர்களைப் புகழ்ந்து, அவர்களுக்கு அடிமைகளாய் வாழ்ந்தாலும் அவர்கள் எதையும் எளிதில் தந்து விடுவ தில்லை. ஆனால், அறமுடையார் போல பொய்ம்மை காட்டுவர். இவர்களைப் போற்றுவானேன்? புகழ்வானேன்? திருப்புகலூரில் எழுந்தருளியுள்ள எந்தை ஈசனைப் பாடுமின்! அவன் இப்பொழுதே உணவும் உடையும் கொடுப்பான்; இடர் கெடுத்தும் வாழலாம்; சிவலோகமும் ஆளலாம் என்று பாடுகின்றார்.
அன்பின் வழி அச்சம்
திருப்புகலூர் வழிபாட்டை முடித்துக் கொண்ட பின் சுந்தரரின் திருத்தலயாத்திரை தொடர்கிறது. பலதலங்களை வழிபட்டுக்கொண்டு வருகின்றர்ர். திருப்பாச்சிலாச்சிரமம் என்ற தலத்தை அடைகிறார். நம்பி பொருள் விரும்புகின்றார். சந்நிதியில் நின்று பொருள் இரந்து பாடுகின்றார். ஆனால், பொருள் கிடைக்கவில்லை. பொருள் எளிதில் கிடைக்குமா? அருமையில் கிடைத்தால்தான்் பொருளின் அருமைப் பாட்டினை அறிந்து கொள்வர். மேலும் கேட்டவுடனே பொருளினைக் கொடுத்து விட்டால், கொழிதமிழ்ப் பாட்டு தொடராதே! தமிழ் கேட்க வேண்டும் என்ற இறைவனின் விருப்பம் நிறைவேறாதே! அதுமட்டுமா? ஏசியும் பேசியும் தோழமை வளராதே! ஆதலால், திருப்பாச்சிலாச் சிரமத்து இறைவன் பொருள் வழங்குதலை நீட்டிக்கின்றான்; காலந்தாழ்த்துகின்றான். வருத்தம் மிகுந்து முறைப்பாடு செய்து கொள்ளும் எல்லை வரையில் சென்று விடுகின்றார். “எத்தனை அருளா தொழியினும் பிரானார் இவரலா தில்லையோ?” என்று பாடுகின்றார்.
பொதுவாக, உலகியலில் அன்பு இருக்குமிடத்தில் அச்சம் இருக்காது. அச்சம் உள்ள இடத்தில் அன்பு இருக்காது. ஆனால், சுந்தரர் வாழ்க்கையில் இவ்விரண்டும் கலந்திருந்தன என்பது ஒரு புதுமை, அன்பும் அச்சமும் கலந்தவர்கள் வாழ்க்கையில் அன்பின் வழியதான் அச்சம் இருக்கலாம் அல்லவா? அதாவது கொண்டுள்ள அன்பு கெட்டுவிடக் கூடாதே? என்ற அச்சம் இருக்கலாம் அல்லவா? அன்பின் வழி அச்சம் இருத்தல் நல்லது. அச்சத்தின் வழியிலும் அன்பு தோன்றலாம். ஆனால், இது சிறப்புடையதன்று. நம்பிகள் திருப்பாச்சிலாச்சிரமத்தில் அருளிய பதிகத்தில் அன்பும் அச்சமும் ஒருங்கிணைந்து நம்பியாரூரரை இயக்கியதை உணரமுடிகிறது. அன்பு தழுவிய - அன்பு நீங்காத அச்சம் நிறைநலம் சான்ற அன்புடை யாருக்கே கிடைக்கும்.
ஆரூரர் தம் வாழ்விற்குத் தாயைத் துணையாக நினைந்திலர்; தந்தையைத் துணையாக நினைந்திலர்; இறைவனை மட்டுமே நம்பியிருந்தார். இன்று பத்திமையில் இத்தகு உரமுடையோரைக் காண்பதரிது. பலரை நம்பி மோசம் போகும் காலம் இது. ஆரூரர் இறைவனை மட்டும் நம்பினார். இத்தகு ஒருமை நம்பிக்கையில் குறைவிலா உரிமைகள் வந்தமைதல் இயற்கை வழங்குதலும்கூட உரியலத்தில் வழங்கப்பெறாமல் காலந்தாழ்த்துவதில் பலன் இல்லை! இறைவன், மறுமையின்பங்களையே வழங்குவான் என்பது ஒரு கருத்து. ஆனால், ஆரூரர் இம்மையில் அருள் பெறுதலையே விரும்புகின்றார். ஆம் மறுமை நலனுக்குரிய ஆன்மா - நிறைநலம் பெறுதற்குரிய ஆன்மா - இன்ப அன்பினை அடையவேண்டிய ஆன்மா இப்பிறப்பில் வறுமையில் கழிந்து விடின் மறுமை ஏது? இம்மை இல்லையேல் மறுமையில்லை; இதுவே சைவமரபு.
சைவத் திருமுறைகள் வாழ்க்கை நலன்களை அளிக்கும் அருமறைகள். ஆரூரரின் திருப்பாச்சிலாச் சிரமப்பதிகம் விழுமிய சிறப்புடையது.
ஒருவர், மனம் மகிழத் தக்கவகையில் நடந்து கொண்டபோது மகிழ்வர், அள்ளி வழங்குவர். ஒரோவழி பழகுவோருக்கு மகிழ்வு தரத்தக்க நிலையில் நடக்க இயலாமல் சோர்வுபடும் பொழுது மகிழ்வைக்காட்டாமல் வேற்றுமை காட்டுவது கூடாது. எப்போதும் ஒரே நிலையைப் பேணல் அறவாழ்க்கை அருள் வாழ்க்கை:
"பெற்றபோ துகந்து பெறாவிடில் இகழில்
இவரலா தில்லையோ பிரானார்”
என்ற வாக்கினை அறிக.
அடுத்து, பழகுதற்கு இனிய நண்பராகத் தொண்டுழியம் செய்யும் பணிவிடையாக ஒருவர் இருத்தலே நன்று, பலர் இருந்தால் அந்த உறவினைப் பாதுகாத்தல் அரிது. உறவினைப் பேணி வளர்த்துக்கொள்ளும் செயல் முறைகளில் பரிந்து பேசுதல், உதவிகளைச் செய்தல் ஒருவகை. இத்தகு தோழமைச் செயல்கள் தோழர்கள் பலராயின் செய்தல் இயலாது. ஆதலால், அரிதாய் நட்புக்கொள்க! பெற்ற நட்பை தோழமையைப் பேணிக் காத்திடுக! என்பது ஆரூரர் வரலாற்றின் படிப்பினை!
ஆரூரரின் முறைப்பாடு பெருமானார்க்குத் தாங்க இயலாதது. ஆதலால், உடன் பொற்குவை வழங்கப் பெறுகிறது.
உலகெலாம் உய்ய உறுதியாம் பதிகம்
உலகியல் வாழ்வில் வளம் பொலியத் திருப்பாச்சிலாச் சிரமத்தில் பொன் முடிப்புப் பெற்ற ஆரூரர், தொடர்ந்து திருத்தலயாத்திரை செல்கின்றார். யாத்திரை சோழ நாட்டிலிருந்து கொங்கு நாட்டுக்குத் தொடர்கிறது.
கொங்கு நாட்டில் சுந்தரர் நெஞ்சு தங்கிப் பாடிய திருத்தலம் திருப்பாண்டிக் கொடுமுடி'. உடலியல் வாழ்க்கைக்குப் பொன் பெற்றாயிற்று. இனி என்ன கவலை? இந்தக் குறிப்பு யாத்திரையின் நடைமுறையிலும் தெரிவிக்கிறது. காவிரியின் வடகரையில் இருந்த நம்பி பொன் பெற்ற பிறகு, காவிரியைக் கடந்து தென் கரைக்குச் செல்கிறார். ஆம்! அருளார்ந்த வாழ்வியலுக்கு உலகியல் என்ற ஆறு கடக்கப் பெற வேண்டும் என்ற படிப்பினை கிடைக்கிறது. உயிர் வாழ்க்கை உய்தி பெற வேண்டும். அதற்கு என்ன வழி: இறைவன் திருநாமத்தை - ஐந்தெழுத்தை எண்ணுதல் தானே! உயிர் வாழ்க்கைக்குப் பொருள் திருவைந்தெழுத்து என்பதை "வைத்த பொருள்” என்ற அப்பர் அருள் வாக்கால் அறியலாம். திருப்பாண்டிக் கொடுமுடியில் சுந்தரர் திருவைந்தெழுத்துப் பாடியருளுகின்றார். சுந்தரர் திருப்பதி கத்தில் இந்த "நமசிவாயத் திருப்பதிகம்” மிகவும் சிறப்புடைய தாக அமைந்துள்ளது.
ஏன்; கொடுமுடி இறைவன் பால் ஆரூரருக்குப் பொங்கி எழுந்த வேட்கையை எடுத்துச் சொல்ல முடியாமல் சேக்கிழார் தவிக்கிறார். இத் திருப்பதிகத்தைச் சுந்தரர், செழுந்தமிழில் அருளிச் செய்ததாகக் கூறிப் போற்றிப் பாராட்டுகின்றார் சேக்கிழார். மெய்ப்பொருளை உணர்த்தி அதன் பெருமையை வழுத்த திருவைந் தெழுத்தை உட்கொண்ட தமிழாதலால் செழுந்தமிழ் என்றார்.
பற்றுக்கள் நிறைந்தது வாழ்க்கை. சுந்தரர் பொன்னும் மெய்ப் பொருளும் போகமும் பெற்றுத் துய்த்து வாழ்ந்தவர். ஆனாலும் அவை சுந்தரருக்குப் பற்றாகி விடவில்லை. இறைவன் திருநாமமே பற்று என்று அயரா அன்பில் பாடுகின்றார்.
"மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்
பாதமேமனம் பாவித்தேன்."
என்பது அருள் வாக்கு.
"நான் மறக்கினும் சொல்லும் நா
நமசிவாயவே!
அதாவது நினைந்து நினைந்து சொல்லுமியல்பில் மனத்தை நாவைப் பழக்குதல் என்பது கருத்து. பாண்டிக் கொடுமுடி பதிகம் உலகெல்லாம் உய்யும் திருப்பதிகம் என்று சேக்கிழார் எடுத்துக் கூறிப் பாராட்டி உயர்த்துகின்றார். திருப்பாண்டிக் கொடுமுடித் திருத்தலத்திலிருந்து நம்பிகள் கொங்கு நாட்டுப் பேரூருக்குச் செல்கிறார்.
என்இனிப் புறம்போய் எய்துவது?
கொங்குநாடு சிறப்புடைய நாடு. காஞ்சி நதி பாய்ந்து வளப்படுத்தும் நாடு. சுந்தரர் வரலாற்றில் கொங்கு நாடு மையம் கொண்டுள்ளது. சுந்தரர்பேரூர் வந்தணைகிறார்; பேரூர்த் திருக்கோயிலில் தில்லையில் கண்ட திருநடனக் காட்சியைக் காண்கிறார். இது ஒர் உபாசனை மரபு. அதாவது தமது மனங்கவர்ந்த மூர்த்தியைச் சென்ற இடத்திலெல்லாம் பார்ப்பது. சுந்தரர் தில்லையில் ஐந்து பேரறிவும் கண்களே கொள்ளப் பார்த்தவர்; வணங்கியவர். அந்த ஞானானுபவம் தொடர்கிறது. ஆடல்வல்லானின் ஆனந்தக் கூத்தைப் பேரூரில் காண்கிறார். கண்ட அளவில் அன்பு ஊற்றெழுகிறது! புலன்களைக் கடந்த மெய்யுணர்வில் திளைக்கிறார்: புலன்களைக் கடந்த இன்பத்தினை ஆர்கிறார்: சிவானந்த இன்பத்தில் திளைத்த சுந்தரர் அருள்பொலிவுடைய ஆண்ட கையானார். திருநடம் கும்பிடும் பேறு பெற்றமையை நினைந்து நினைந்து மகிழ்கிறார்! மகிழ்வின் பெருக்கில் இனிப் புறம்போய்த் தொழுவது என்னனென்று வினவுகின்றார்!
இதனால் இத்திருத்தலம் ஆடல்வல்லான் திருத்தலமாயிற்று. இதனை மேலைச் சிதம்பரம் என்றும் போற்றுவர். இன்றும் இத்தலத்தில் ஆடல்வல்லான் சந்நிதி திருவருட் பொலிவுடையதாக விளங்கி வருகிறது. சுந்தரரின் செந்தமிழ் வளர்க்கும் சாந்தலிங்க முனிவர் திருமடம் இத்தலத்தில் அமைந்துள்ளது. கொங்கு நாட்டுக்கு, சுந்தரர் காலம் முதல் இன்றுவரை பேரூரே சிறந்த திருவருள் நிரம்பிய திருத்தலம். பேரூரில், பெருகிய சிவஞானம் பெற்றுப் பொலிந்த சுந்தரர் பயணத்தைத் தொடர்கிறார்! வெஞ்சமாக் கூடல் வந்து சேர்கிறார்!
வெங்சமாக் கூடல் தலை நகரமாக விளங்கிய ஊர்: பழைய கோட்டைகளின் இடிபாடுகளை இன்றும் காணலாம். வெஞ்சமாக் கூடலில் சுந்தரர் அருளும் பதிகம் சுவையுடையது. பொருட் குறிப்புடையது. "வஞ்சியா தளிக்கும் வயலுடையது” கூடல் என்று பாடுகின்றார். இதனால் வெஞ்சமாக்கூடலின் மருத நிலவளம் - படுபயன் சிறப்பு அறியப்படுகிறது. வஞ்சியாதளிக்கும் வயலினை யுடைய ஊர்க்குத் தலைவனாகிய இறைவனும் வஞ்சியா தளிப்பான் என்பது கருத்து. இங்கு, சுந்தரர் மீண்டும் உறவு முறைப் பிணக்கில் ஈடுபடுகிறார்;
"வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும்
வேண்டுதியே”
என்று வினவுகின்றார். சிவபெருமான் - சுந்தரர் இருவரும் ஒருவருக்கொருவர் தவிர்க்க முடியாத தேவையாகி வளர்ந்த வரலாறு, சுந்தரர் வரலாறு முழுதும் காணப்பெறுகிறது. சிவபெருமானுக்குச் சுந்தரரை நிகர்த்த பத்திமை நலம் மிக்கார் எங்குக் கிடைப்பர். பொன்னையும் பொருளையும் உகந்து, உண்டியையும் உடையையும் உகந்து ஒடித்திரியும் உலகில் புறத்தே போய்ப் பெறுவது எவன் என்று நிற்பார் யார்? சுந்தரருக்கும் சிவபெருமான் தேவை, ஆயினும் "அடியேனையும் வேண்டுதியே” என்று கேட்பதன் கருத்து ஐயத்தின் பாற்பட்டதன்று உறுதிப் படுத்தவேயாம்.
புறம்பயம் தொழப் புறப்படு, நெஞ்சமே!
சுந்தரர், வெஞ்சமாக்கூடலிலிருந்து திருப்பேரூரில் எழுத்தருளியிருக்கும் பட்டிப்பெருமானை வழிபட்டு, திருக்கற்குடி வந்திருக்க வேண்டும். ஆனால், பேரூர்ப் பதிகம் கிடைக்கவில்லை.
திருக்கற்குடி என்ற திருத்தலம், திருச்சிராப்பள்ளிக் கருகில் இருக்கிறது. வெஞ்சமாக்கூடலில் பெருமானுடன் முறைத்துப் பேசிய சுந்தரர் திருக்கற்குடியில் அஞ்சிப் பேசுகிறார். வெயிலையும் மழையையும் ஒருங்கே காண்பது போன்றது. சுந்தரர் தம் வாழ்க்கையில் இறைவனுடன் கொண்ட உறவு. சுந்தரர் இறைவனை அடிகேள்! என்று நயம்பட விளிக்கிறார்! வெஞ்சமாக் கூடலில் தாம் பேசிய பேச்சில் இறைவனுக்குச் சினம் வரக்கூடாதென்பதால் திருக்கற்குடியில் பெரியோரே!' தவத்திற் சிறந்த அடிகேள் என்றும் விளித்தல் அறிக.
பெருமான், சினம் கொள்பவனாக இருந்தாலும் மருந்து போலத் துன்பம் நீக்குபவன் என்றும் அருட் சக்தியாகிய உமையம்மையை இடப்பாகத்தில் கொண்டிருப்பவன் என்றும் நயம்பட விளித்துப் பாடுகிறார்.
திருக்கற்குடிப் பதிகத்தில் 'அஞ்சற்க! என்று தன்னை ஆட்கொள்ளுமாறு வேண்டுகிறார். உலகியல் நோக்கி அஞ்சாமையை அருள் செய்யும்படி வேண்டுகிறார். திருக்கற் குடியிலிருந்து ஆரூரர் காவிரியைக் கடந்து வடக்கு நோக்கிப் பயணம் செய்கிறார். திருவாறை மேற்றளியை வணங்கித் திருஇன்னம்பருக்கு வருகிறார்.
திருஇன்னம்பரில் பலநாள் தங்கி, திரு இன்னம் பரீசனை வழிபடுகிறார். ஆயினும் திரு இன்னம்பர் இறைவன் ஆரூரர் செய்யத்தக்கது இன்னதென்று அருளிச் செய்ய வில்லையாம். இது ஆரூரர்க்கு இன்னம்பரில் ஏற்பட்ட மனக்குறை. அதனால், நெஞ்சமே, இன்னம்பர் இறைவன் செய்யத்தக்கது இன்னதென்று தெளிவித்தாரில்லை. புறப்படு! புறம்வயம்தொழச் செல்வோம்' என்று தமது நெஞ்சத்தை விளித்துக் கூறுகிறார்.
அங்கம் ஒதியோர் ஆறை மேற்றளி
நின்றும் போந்துவந்தின் னம்பர்த்
தங்கி னோமையும் இன்ன தென்றிலர்
ஈச னார்எழு நெஞ்சமே!’
(ஏழாந்திருமுறை - 351)
இதிலிருந்து ஆரூரர், இறைவன் திருக்குறிப்பின் வழியிலேயே தமது வாழ்க்கையை நடத்தி வந்தார் என்பது தெளிவாகிறது.
திருப்புறம்பயத்திற்குச் செல்லும் ஆர்வம் ஆரூரர்க்கு மிக்கிருந்தது. ஏன், திருஇன்னம்பரீசன் அருளாமையை புறம்பயத்தில் பெறலாம் என்று நம்புகின்றார். புறம்பயத்தில் இரவு பகலின்றி, வானோர்கள் இறைவனை ஏத்திப் போற்றி வழிபடுகின்றனர். அங்கு வழிபடும் வானோர்க்கெல்லாம் உயர்வு கிடைக்கிறது என்ற நம்பிக்கை, திரும்புறம்பயத்தை நோக்கி ஆரூரரை அழைத்துச் செல்கிறது. இதனை,
'கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள்
ஏத்தி வானவர் தாந்தொழும்
பொங்கு மால்விடை ஏறி, செல்வப்
புறம்ப யந்தொழப் போதுமே!
(ஏழாந்திருமுறை - 351)
என்பதால் அறியலாம். அதனால் திருப்புயம்பயம் செல்லும் வழியிலேயே பதிகத்தை அருளிச் செய்கிறார்.
வழித்துணை
ஆரூரர் திருவெஞ்சமாக்கூடலை வணங்கி, உடன் சோழ நாட்டுக்கு எழுந்தருளுகின்றார். சோழ நாட்டில், திருக்கற்குடிமலை, திருவாறை மேற்றளி, திருஇன்னம்பர், திருப்புறம்பயம் முதலிய திருத்தலங்களை முறையே வழிபாடு செய்து கொண்டு, திருமுதுகுன்று நோக்கி யாத்திரை செய்கின்றார். ஆரூரர் வழிபட்ட திருத்தலங்களுக்கிடையில் உள்ள தூரம் ஆரூரரின் இளைமைப் பொலிவையும், விரைவுணர்வையும் உணர்த்துகின்றது.
திருமுதுகுன்று செல்லும் வழியில் கூடலையாற்றூர் உள்ளது. ஆருரர் திருக்கூடலையாற்றூருக்குச் செல்ல விருப்பம் கொள்ளாமல் திருமுதுகுன்றுக்குச் செல்ல நினைந்து பயணம் செய்கின்றார். திருமுதுகுன்று நோக்கிச் செல்லும் ஆரூரரை - சுந்தரரைப் பெருமான் கூடலையாற்றூருக்கு வழிகாட்டி அழைத்துச் செல்கின்றார். திருமுதுகுன்று நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த ஆரூரருக்குத் திருமுதுகுன்றத்திற்கு வழி தெரியவில்லை. வழிகாட்டுபவனாக இறைவனே வந்து திருமுதுகுன்றத்திற்குச் செல்லும் வழி என்று கூடலையாற்றுக்குரிய வழியைக் காட்டி முன் செல்கின்றார். கூடலையாற்றூர் அருகில் சென்றவுடன், வழிகாட்டியரைக் காணோம். ஆரூரர் நிகழ்ந்தது அறிந்து, அதிசயித்து, இன்றமிழ்ப் பாடல்களால் பாடிப் பரவுகின்றார்.
திருக்கூடலையாற்றூரில் அருளிய பாடல்கள் பொருள் பொதிந்தவை. இறைவனை அடிகள் என்று அழைக்கின்றார். வழி காட்டும் ஆசிரியனாய் அமையும் பொழுது, அருள் நலம் சார்ந்த அடிகளாதல் மரபு. ஆயினும் இங்கு அடிகள் என்றமை அநீதிகளைச் சாடுவான் என்பதை உணர்த்த "வடிவுடை மழுவேந்தி” என்றும் "மதகரியுரிபோர்த்தும்" என்றும் அருளிச் செய்தமையறிக ஆம், அநீதிகளை அழித்தல் அருளுடைமைக்குப் புறம்பன்று. இதுவே சமுதாய நியதி. ஒறுத்தல் மட்டுமே ஆளுமைப் பண்பல்ல - அருளுதலும் ஆளுமைப் பண்பேயாம். இறைவன் அருளும் இயல்பினன் என்பதை உணர்த்த “புரிகுழல் உமையாளொடு” எழுந்தருளியுள்ளான் என்றருளிச் செய்து தேற்றுகின்றார். திருக்கூடலையாற்றூர் வளமானவூர். வண்மையாளர் வாழுமூர். ஆதலால், கொடி மாடங்கள் உடைய கூடலையாற்றூர் என்றார். அதனாலன்றோ இறைவன் ஆண்டவனாகவும், அதே போழ்தில் ஆர்வலனாகவும் இருந்தருள் புரிகின்றான். ஆர்வம் என்பது அன்பின் முதிர்ச்சியாகி -வலிய மேற்சென்று அன்பு காட்டுதல். அது எல்லையற்ற அன்பாக விரியும். வாளா அன்பு உணர்வாக இல்லாமல், முயற்சியும் கூடி வாழ்வித்தருளும் உணர்வுக்கு ஆர்வம் என்று பெயர். "அன்பினும் ஆர்வம் உடைமை" என்றார் திருவள்ளுவர்.திருமுதுகுன்றத்திற்குப் போகும் முன், திருக்கூடலையாற்றூருக்கு வரச் சொல்லி வழி மறித்ததிலும் ஒரு குறிப்புணரலாம். அதாவது வாழ்க்கையில் முதுமைக்கு முன் நிகழ்வன நிகழ வேண்டாமா? முதுமை வருதலுக்கு முன்பே, வாழும் வழி ஈதெனத் துணிந்து அவ்வழி நடத்தல் கடமையன்றோ? அதனால், தடுத்து-வழியில் நடத்தியருள்கின்றார்.
சேக்கிழார் நெஞ்சம்-சிவ நெறியில்-சித்தாந்தச் சிவ நெறியில் பதிந்தது. சித்தாந்தச் சமயமே சமயம், சித்தாந்தச் சமயமே செழுந்தமிழ் வழக்கு; சித்தாந்தச் சமயமே வெற்றி பெற வேண்டும்; அயல் வழக்குகள் பின் தள்ளப் பெறுதல் வேண்டும் என்ற உணர்வுகள் பெரிய புராணத்தைப் பயில்வாருக்கு வராமல் போகாது.
நம்பி ஆரூரர் திருமுதுகுன்றத்துக்குச் செல்லாமல் தடுத்து-திருக்கூடலையாற்றூருக்கு வழி காட்டிய இறைவனின் செயலை எடுத்துக் கூற வந்த சேக்கிழார் "ஒப்பரும் புகழார் செல்லும் ஒரு வழி” என்று அருளிச் செய்கின்றார். ஒப்பற்ற புகழினை உடைய அறிஞர்கள் விரும்புகின்ற சமயம்-சித்தாந்தச் சிவ நெறியே என்று விளக்குகின்றார். உயிர்கள் உய்தலுக்குரிய நெறியாகிய சமயத்தை வழியெனக் கூறுதல் மரபு. இங்ஙனம் உயிர்களுக்கு உய்தி காட்டும் வழிகளாக-உலகில் பல சமயங்கள் நிலவுகின்றன. அச்சமயங்களில் எல்லாம் ஒன்றாக உயர்ந்து சிறந்து விளங்குவது சித்தாந்தச் சமயமேயாம். மற்ற சமயங்கள் எல்லாம் உய்யும் நெறி காட்டுவதில் தலை தடுமாறிப் போயின. ஏன்? தெளிவின்மையால். வேதாந்தத் தெளிவு சைவ சித்தாந்தம் என்பர். பல்வேறு நெறியில் வாழ்ந்து-எய்த்துக் களைப்பானவர்களை-எய்ப்பிலிருந்தும் ஏமாற்றத்திலிருந்தும் மீட்கத் தோன்றி எழுந்த சமயம் சித்தாந்தச் செந்நெறியே! இறைவன் சிவபெருமானே!
போற்றும் தகையன பொல்லா முயலகன்
கோபப் புன்மை
ஆற்றும் தகையன ஆறு சமயத்(து)
அவ ரவரைத்
தேற்றும் தகையன தேறிய தொண்டரைச்
செந்நெறிக்கே
ஏற்றும் தகையன இன்னம்ப ரான்தன்
இணையடியே.
நாதர்பால் பொருள் வேண்டல்
நம்பி ஆரூரர், திருக்கூடலையாற்றூரிலிருந்து திருமுது குன்றம் செல்ல எண்ணிப் பயணத்தைத் தொடங்கினார். தேவார காலத்தில்-சேக்கிழார் காலத்தில், திருமுதுகுன்றம் என்ற தீந்தமிழ்ப் பெயர் நிலவிய திருமுதுகுன்றம், சமஸ்கிருத ஆர்வலர்களால் விருத்தாசலம் என்று மாற்றப்பட்டு விட்டது. இன்றும் வழக்கில் விருத்தாசலம் என்றே வழங்கப் பெறுகிறது. இது போல் நூற்றுக் கணக்கான திருத்தலங்களின் பெயர்களை சமஸ்கிருதப் படுத்தியுள்ளனர்.
மயிலாடுதுறை என்பது அழகான தமிழ்ப் பெயர். அது மாயவரம் ஆயிற்று. புரட்சித் தலைவர் எம்.ஜி. இராமச்சந்திரன் தலைமையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு மாயவரம் என்ற பெயரை மயிலாடுதுறை என்று மாற்றித் தமிழ் மக்கள் நெஞ்சில் மகிழ்ச்சியூட்டியுள்ளது. தமிழ்நாடு முழுதும் இங்ங்னம் பெயர் மாற்றங்களைச் செய்யத் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்.
தென்னார்க்காடு மாவட்டம் திருமுதுகுன்றம் நல்ல அழகான ஊர். இவ்வூர் மணிமுத்தாற்றங் கரையில் இயற்கைச் சூழலுடன் அமைந்து வளர்ந்து வருகிறது. திருமுது குன்றம் என்பது பெயர். ஆனால், குன்றைக் காணோம். குன்று இருந்து நிலத்திடை அமிழ்ந்திருக்க வேண்டும். குன்று உண்டு என்று பொருள் கொண்டால் திருவருள்மலை என்ற பொருளிலும் உருவகமாக எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? திருமுது குன்றம் நான்கு திசைகளிலும் பெரிய நிலைகளையுடைய அரச கோபுரங்களைக் கொண்டு நிமிர்ந்து நிற்கும் திருக்கோலம் காண்போரையெல்லாம் ஈர்த்திடும் தன்மையது.
ஆரூரர் இத்திருக்கோயிலில் நுழைந்து முறையே வலம் வந்து இறைவன் திரு முன்பை யணைந்து செந்தமிழ்ப் பாமாலை பாடுகின்றார்.நஞ்சி இடைஇன்று நாளையென் றும்மை நச்சுவார்
துஞ்சியிட் டாற்பின்னைச் செய்வதென் னடிகேள்
சொலீர்
பஞ்சி யிடப்புட்டில் கீறுமோபணி யிரருள்
முஞ்சி யிடைச்சங்கம் ஆர்க்குஞ் சீர்முது குன்றரே!.
(ஏழாந்திருமுறை - 435)
என்று தொடங்கி பதினொரு பாடல்கள் பாடி வேண்டுகிறார்.
இத்திருப்பதிகம் செந்தமிழ்ச் சுவை நிறைந்தது; நகைச்சுவை ததும்புவது. இறைவனை ஆரூரர் தோழமை யாகப் பெற்ற உரிமையில் எண்ணியவாறெல்லாம் பேசுகிறார். மானிட வாழ்க்கையின் சுவை நிறைந்த உணர்வுகளை இத்திருப்பதிகத்தில் அனுபவிக்க முடிகிறது. சேக்கிழாரின் துணையின்றி இத்திருப்பதிகத்தை நாம் படித்தால் சுந்தரர் மீது ஆற்றொனா வருத்தம் ஏற்படும். 'ஏயர் கோன்கலிக்காமர்கள் பலர் தோன்றிவிடுவர். ஆனால், சேக்கிழார் “நஞ்சியிடை” என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடிய சுந்தரரை,
"நாதர்பால் பொருள்தாம் வேண்டி
நண்ணிய வண்ணம் எல்லாம்
கோதறு மனத்துட் கொண்ட
குறிப்பொடும் பரவும் போது
தாதவிழ் கொன்றை வேய்ந்தார்
தரஅருள் பெறுவார் சைவ
வேதியர் தலைவர் மீண்டும்
"மெய்யில் வெண்பொடி"யும் பாட
(பெரிய புராணம். ஏயர்கோன் - 186)
என்று அறிமுகப்படுத்துகிறார்.
"கோதறு மனத்துட் கொண்ட குறிப்பொடும்” என்பது சேக்கிழார் வாக்கு. சுந்தரர் குற்றமற்ற மனத்தினராகவே பாடுகின்றார். சந்தரருக்குப் பொருள் தேவை! ஆனாலும் வெளிப்படையாகக் கேட்கவில்லை; குறிப்பால் புலப்படுத்துகின்றார். அதாவது கேட்டுப் பெறுவதை விட அவரே கொடுத்துப் பெற்றால் நல்லது என்ற கருத்து நம்பி ஆரூரருக்கு! ஆனால், பதிகம் வாழ்வியலின் உணர்வுகளை யெல்லாம் சித்திரித்துக் காட்டுகிறது. இதனைச் சுந்தரர் பொதுவாக உணர்த்திப் பாடுகிறார். "ஒரு குடுக்கையில் பஞ்சை அடைப்பதினால் குடுக்கை உடைந்து விடுமோ” என்று கேட்கிறார். அதாவது இறைவன் அடியார்க்கு அருளுவதன் மூலம் யாதொருகுறையும் அவனுக்கு வராதே என்பது கருத்து. அடியவர்கள் இறைவனின் அருள் இன்று கிடைக்கும்; நாளை கிடைக்கும் என்று ஏங்கியிருக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் இறைவன் அருளைப் பெறாமலே இறந்து போனால் என்ன செய்வது? "அவர்கள் இறந்து போன பிறகு நீ என்ன செய்யப் போகிறாய்? செய்யக் கூடியது ஒன்றுமில்லையே!” என்று இறைவனுக்கே எடுத்துக் கூறும் நிலையும் அமைந்துள்ள இப்பாடல் அருமையானது. ஆழ்ந்த வாழ்வு அனுபவத்திற்குரியது. ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் பயன்படக் கூடியது.
உலகியல் கடந்த அருளியல் இல்லை
இறைவன், வேண்டுவார் வேண்டுவதே ஈவான். அன்பர் மனத்துள் நின்ற கருத்தறிந்து முடிப்பான். ஆரூரருக்கும் அவர்தம் மனம் மகிழப் பன்னிரண்டாயிரம் பொன் வழங்கியருள்கின்றான். ஆரூரர் பொன் பெற்ற பின்னரும் இறைவனிடம் வேண்டுகோள் வைக்கின்றார். ஆம்! திருமுதுகுன்றத்திற்கும் திருவாரூருக்கும் இடையில் உள்ள தூரம் ஏறத்தாழ 120 கல். இவ்வளவு தூரம் யாரால் பொன்னைச் சுமந்து வரமுடியும்? எடுப்பிற்கெல்லாம் வாய்ப்பிருக்கும்போது தூக்கிச் சுமக்கத்தான்் மனம் வருமா? இந்தச் சராசரி மனித வியலுக்கு ஆரூரரும் விதி விலக்கல்லர். திருமுதுகுன்றில் வந்த பொன்னை - திருவாரூரில் கொண்டு வந்து தர வேண்டுமாம்.
சாதாரணமாகத் தாம் வாழ்வதில் மட்டுமே மனிதர்கள் நாட்டம் செலுத்துவதில்லை. தமது வாழ்க்கையை மற்றவர்கள் பார்த்து மயங்க வேண்டும்; வியக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஏன்? மற்றவர் வியப்பதற்காகவே சிலர் வாணவேடிக்கை போன்று வெற்று ஆரவார வாழ்க்கையை நடத்துகின்றனர். இஃது உலகியற்கை ஆரரருக்கம் தாம் பெற்ற பொன்னை ஆரூரில் கொண்டு வந்து தரவேண்டும்; பலரறியத் தரவேண்டும்; மற்றவர் மயக்கத்துடன் கூடிய வியப்பினை அடைய தக்க வகையில் தரவேண்டும் என்கிற விருப்பம், இந்த வேண்டுகோளையும் தம்மிடம் அன்புடையவரின் பாரம் தாங்கும் இறைவன் ஏற்றுக்கொண்டான். உடன் மணிமுத்தாற்றில் பொன்னை இட்டுவிட்டுப் போய் ஆரூர்க் குளத்தில் எடுத்துக் கொள்ளும்படி அருளுகின்றான் இறைவன்.
ஆரூரரும் மணிமுத்தாற்றில் பொன்னை இடுகின்றார். இந்த நிலையில் ஆரூரர் இரண்டு மனநிலையினராக விளங்குகின்றார். அதாவது இயல்மொழியை அருளாணை யென ஏற்று ஆற்றில் பொன்னை இடுகின்றார். மணிமுத்தாற்றில் இடும் பொன்னை ஆரூரில் உள்ள குளத்தில் எடுக்கலாம் என்று நம்புகின்றார். ஆயினும் மணிமுத்தாற்றில் இட்ட பொன்னே மாற்றுக்குறையாமல் ஆரூரில் கிடைக்கிறதா என்பதைச் சோதித்தறிய மச்சம் வெட்டிவைத்துக் கொள்கிறார். மச்சம் வெட்டி வைத்துக் கொள்ளுதலில் இறைவனிடத்தில் உள்ள நம்பிக்கை மாற்றுகுறைவதுபோல் தெரிகிறது. ஆனால் உண்மையன்று. "உலகியல் கடந்த அருளியல் இல்லை" என்பதே ஆரூரரின் வரலாற்று நோக்கம்.
பொன்னைப் பெற்ற பிறகு, அந்தப் பொன் ஆரூருக்குச் சொந்தம். அந்தப் பொன்னை ஆரூரர் பயன்படுத்தும் நிர்வகிக்கும் முறைகளால் இறைவன் திருவுள்ளம் மகிழ நடந்து கொள்ள வேண்டும். பொன், ஆற்றில் இடப் பெறுகிறது. தண்ணிரில் நெடுந்தொலைவு வருவதால் பொன்னின் மாற்றுக் குறையலாம். அல்லது மற்றவர்களாலும் மாற்றுக்குறைய நேரிடலாம் அல்லவா? அதனால், மச்சம் வெட்டி வைத்துக்கொண்டாரே தவிர இறைவன் திருவருள் செயல்மீது ஐயப்பாடு கொண்டல்ல. இறைவனே கூட அவன் வழங்கிய பேறுகளை மக்கள் பயனுற - அளவாக மதித்துப் பயன்படுத்துதலிலேயே திருவுள்ளம் மகிழ்வான். ஆற்றில் இட்ட பொன்னுக்கு மச்சம் வெட்டிக் கொண்டது நம்பிக்கையின்மையின் பாற்பட்ட செயல் அல்ல. இது உலகியல் வாழ்வியல்.
அடியேற்கு அங்கே!
இறைவன் மனத்துள் நிற்கும் கருத்தறிந்து முடிப்பவ னாயிற்றே! ஆரூரருக்குப் பொன் வழங்கப் பெறுகிறது. ஒன்றல்ல; இரண்டல்ல! பன்னிரண்டாயிரம் பொன் வழங்கப் பெறுகிறது. ஆரூரருக்கு அளவற்ற மகிழ்ச்சி! ஆயினும் விண்ணப்பம் தொடர்கிறது. என்ன விண்ணப்பம்? உரிமையால் இறைவனை மேலும் அண்மித்து நின்று விண்ணப்பிக்கின்றார். நீ அருளிச் செய்த பொற்குவியலை, நீயே ஆரூருக்குக் கொண்டுவந்து தரவேண்டும் என்பது கோரிக்கை "அடியேற்கு அங்கே என்கிறார். அங்கே என்ற சொல்லில் பல நயங்களும் வாழ்வியல் உண்மைகளும் பொதிந்து கிடக்கின்றன. ஒரிடத்தின் பெயரைச் சொல்லாமல் "அங்கே என்றால் அதில் ஏதோ மறைவு இருக்கிறது. பலர் அறியக் கூடாத-அறிய வேண்டாத மறைவு! ஒத்த-நெருக்க மான இருவருக்கிடையில் தான்் இங்ங்னம் மறைபொருளாக இடங்குறித்துப் பேசப்பெறும். இருவருக்கும் அது அறிந்த இடமாய், உறுதிப்படுத்தப்பெற்ற இடமாய் இருத்தல் வேண்டும்.
மற்றவர் மருள...
பழமலையுடையார் அருளிச்செய்த பன்னிரண் டாயிரம் பொன்னை ஆரூரர் அள்ளிச் செல்லத் தயாராக இல்லை! பொன் அவருக்கு ஆரூரில் கிடைக்க வேண்டும். பொன் கிடைத்தால் மட்டும் போதாது. இப்பன்னிரண்டாயிரம் பொன் ஆரூரில் கிடைக்கும் வகையில் ஆரூரில் உள்ளோர் மருள வேண்டும். இதற்குத் தக்கவகையில் பொன் ஆரூரருக்கு வந்தாக வேண்டும்.
ஒவ்வொருவரும் அவரவர் தம் வாழ்க்கை நடத்தால் சரி என்று நினைக்க மாட்டார்கள், அவர்களின் வாழ்க்கையைப் பார்த்து மற்றவர்கள் மயங்க வேண்டும் அதிசயமுறுதல் வேண்டும் என்று விரும்புவது உலகியல். இந்த உலகியல் விருப்பார்வம் நம்பி ஆரூரரையும் பிடித்தாட்டு கிறது. இறைவன் இதற்கும் உடன்படுகிறான்! ஆயினும் இறைவன் ஆரூரரை வாளாவிருக்க விடவில்லை. "இப் பொன்னை எடுத்துப் போய் மணிமுத்தாற்றில் இடுக! திருவாரூர் கமலாலயத் திருக்குளத்தில் எடுத்துக் கொள்க’ என்று அருள்மொழி செய்தார்.
பொன்னை மனிமுத்தாற்றிற்கு எடுத்துச் செல்லும்பணி ஆரூரருடையதாகிறது. ஒரு பொருளை எடுத்துச் செல்வதில் ஆற்றல் மிக்குடையது தன்னிர்! நிலத்தடியில் நீரோட்டம் பரவிக் கிடக்கிறது. அந்நீரோட்டத்தின் வழி எளிதில் பொருள்களை எடுத்துச் செல்லலாம் என்ற உலகியல் உணரத் தக்கது.
நடைமுறைக் கடமை
இந்த வரலாற்றுக்கு இவ்வுண்மை எவ்வாறு பொருந்தும் என்பது ஆய்வுக்குரியது. ஆரூரர் ஆற்றில் பொன்னை இடுகின்றார். இங்கு ஆரூரர் அப்பட்டமான உலகியலைச் சார்ந்த மனிதராகவே விளங்கி ஒரு செயல் செய்கிறார். நம்பிக்கை-நம்பிக்கையின்மை என்று போராடுவது மனித இயற்கை இறைவனின் ஆற்றலை நம்பி-ஆணையை நம்பி ஆற்றில் பொன்னை இடுகிறார். அதே போழ்து எந்த மச்சத்தில் பொன்னை இட்டாரோ அதே மச்சத்தில் திருவாரூருக்குப் பொன்வந்து சேருகிறதா என்று அறிந்து கொள்ள ஐயப்பாட்டுணர்வுடன் ஆற்றில் பொன்னை இடும் முன் மச்சம் வெட்டி வைத்துக் கொள்கிறார். அது மட்டுமா? அன்று வலிய வந்து "தோழன்" என்று சொல்லி ஆட்கொண்ட அருளினை-அந்த அருளிப் பாட்டின் உண்மையினை இச்செயலில் அறியப்போகிறேன் என்றும் கூறுகிறார். இச்செயல் ஐயப்பாட்டின் வழியது என்றும் கூறலாம்.
அங்ஙணம் கூறுவதை விட வேறு வகையிலும் நாம் எண்ணவது நல்லது. நம்பிக்கையின் பாற்பட்டு மட்டும் சிந்திக்கக்கூடாது; செயலாற்றக் கூடாது. வாழ்க்கையின் நடைமுறைகளுக்கு இசைந்ததாகவும் இருக்க வேண்டும். பொன்னை எண்ணுதல்; மச்சம் வெட்டி வைத்துச் சோதித்தல் போன்றவை வாழ்க்கையின் நடைமுறைக் கடமைகள் என்று பொருள் கொள்ளலாம். ஆரூரர், பழமலைநாதர் அருளித் தந்த பொன்னை மணிமுத்தாற்றில் இட்டுவிட்டுக் கவலையின்றி மேலும் திருத்தலப் பயணத்தைத் தொடர்கின்றார்; தில்லை நோக்கிப் பயணம் செய்கின்றார்.
தில்லையை நோக்கி நம்பியாரூரரின் புனித யாத்திரை தொடர்கிறது. இடையில் கடம்பூர் என்ற திருத்தலத்தை வணங்கியதாகத் தெரிகிறது. ஆனால் இதுபற்றிய விளக்கங்கள் கிடைக்கவில்லை. மற்றும் தில்லை செல்லும் வரையில் உள்ள பல்வேறு திருத்தலங்களிலும் வழிபாடு செய்து கொண்டு தில்லை நகரை வந்தடைகின்றார். தில்லைத் திருக்கோயிலில் மேற்குக் கோபுரப் புண்ணிய வாயில் வழியாகத் திருக்கோயிலுக்குள் செல்கிறார். சேக்கிழார் திருக்கோயிலின் வாயிலையே புண்ணிய வாயில் என்கிறார். சிவ புண்ணியத்தை ஈட்டித்தரும் வாயில் என்பதால் புண்ணிய வாயில் என்கிறார்.
மேற்குத் திருவாயில்வழி உள்ளே நுழைந்த நம்பியாருரர் இறைவன் ஆடல்வல்லானாக எழுந்தருளியுள்ள திருமுன் பிற்கு அழைத்துச் செல்லும் திரு அணுக்கத் திருவாயிலைக் கடந்து சந்நிதிக்குச் செல்கிறார். ஒளியாகிய இறைவன் உலகு தொழ ஆடும் அரங்கினைக் கண்டு பேரன்பு நிறைந்த உணர்வு அலை மோத எம்பெருமானை அணுகிச் செல்கிறார். பேரன்பு அழுத்தும் படியென்று சிறப்பிக்கப் பெறும் திருக்களிற்றுப் படியை அடைகின்றார். மேவிய காதலான், பதிகம் பாட இயலவில்லை. மெய்ப்பாடுறுகிறார். நிலந்தோய வீழ்ந்து வணங்குகிறார். தில்லையில் கண்ட திருக்கோலம் முன்பு ஆரூரர் தம் நெஞ்சில் நிறைந்து நின்று ஒரு திருக்கோலத்தை நினைவுக்குக் கொண்டு வந்தது. அது எந்தத் திருக்கோலம்: பேரூரில் கண்ட திருக்கோலம் நினைவிற்கு வருகிறது. பேரூரில் கண்ட பெருமான் திருவுரு மீண்டும் கரந்து போகாமல் நெஞ்சில் நிறைந்து மன்னிக் கிடந்ததாம். அதனால் பேரூர்ப் பெருமானுக்கு நெஞ்சிற் கரவிலாதவர் என்று சேக்கிழார் பெயர் சூட்டி மகிழ்கிறார். பலர், கட்புலனுக்குத் தெரிவர்; பொறிகளுக்குத் தெரிவர்; பொறிகளுக்கு விருந்தாய் அமைவர். என்ன பயன்: நெஞ்சிற்கரவாது ஒழுகினால்தான்் அன்பு சிறக்கும். ஆருயிர்த் துணையாய் அமைய முடியும். பேரூரில் எழுந்தருளியுள்ள பெருமான் நெஞ்சிற் கரவிலாதவர். ஆரூரர் நெடுந்துரம் வந்த பிறகும் அவர் நெஞ்சிலிருந்து இவர் நீங்கவில்லை.
தில்லைத் திருக்கூத்தைக் கண்டவுடன் ஆரூரர்க்குப் பேரூர்க் காட்சியே தென்படுகிறது. ஆம்! நம்முடைய வாழ்க்கையிலும் பேரூர்க் காட்சி பெருங்காட்சியே! இன்றும் நெஞ்சிற் கரவிலாத ஒரு மாமனிதர் பேரூரில் நடமாடுகின்றார். எளிய தோற்றம்! நிறைந்த அன்பு! மக்கள் பால் ஈடுபாடு கொண்ட தோழமைக்கு உற்றதுணை ! நமது நெஞ்சில் கரவிலாதிருக்கும் ஒரு தோழமை! தமிழுக்குக் கல்லூரி! வளரும் சமுதாயத்திற்குக் கல்வி நிலையங்கள் கண்ட அருளாளர்! பேரூர் அடிகள் நெடுந்தூரம் கடந்த பிறகும் நினைவு கூரத் தக்கவர்.
தில்லைத் திருக்கோயில் இறைவன் நன்னெறிக்கண் நின்றாரை வாழ்விப்பான். நன்னெறியினின்று வழுவி விழுந்தாலும், வீழ்ந்ததன் துன்பம் தாக்கா வண்ணம் தடுத்துக் காப்பாற்றுவான். இப்பெருமானை, தனிக்கூத்துடையானைக் காணப் பெற்ற பேறு பெரும்பேறு என்று களிப்பு மீதூரப் பாடுகின்றார். திருச்சிற்றம்பலப்பதிகத்தில் மடித்தாடும் பெருமான் என்றெடுத்துப் பாடுகின்றார். துரக்கிய திருவடிகள் அடிமைத் திறம் வழுவி வழி தவறிச் செல்லும் பொழுது தாமே தடுத்தாளும் என்ற குறிப்புணர்த்திப் பாடுகின்றார். தவறுகளுக்குக் காலம் கைப்பட்டுத் தண்டனை பெறாமல் தாமே வினைதிருத்தி ஆட்கொள்ளும் பெருங்கருணை முதல்வன் என்று உலகத்தார் உய்த்துணரப் பாடுகின்றார்.
தில்லையில் சிலநாள் தங்கி வழிபாடியற்றிக் கொண்டு திருக்கருப்பறியலூர் சொல்கிறார்.
வாழ்த்தும் நெறி
நம்பியாரூரரின் திருத்தலச் செலவு தொடர்கிறது. தில்லையிலிருந்து திருக்கொகுடித் திருக்கோயிலுக்குச் செல்கிறார். இது திருக்கருப்பறியலூர் என்றும் அழைக்கப் பெறுகிறது. இத்திருத்தலத்தில் நம்பியாரூரர் அருளிச் செய்துள்ள பதிகம், தெள்ளுத்தமிழ்ப் பதிகம். இயற்கை வளம் கொழித்திடும் திருக்கருப்பறியலூரை வளமிக்க தமிழால் வாழ்த்தியுள்ளார். வளமும்-வாழ்த்தும் வாழ்த்தும்-வளமும் இணைந்தவை; பிரித்தற்கியலாதவை. இறைவனை வாழ்த்து வோர் வளமோடு வாழ்வர்! இஃது இயற்கையின் நியதி! ஆனால், எப்படி வாழ்த்துவோர் வாழ்வர்? எப்படி வளமோடு வாழ்வர்; நம்பியாரூரர் இத்திருப்பதிகத்தில் சமய நெறியை இறைவனை வாழ்த்தும் நெறியை விளக்கியருளி யுள்ளார்.
"சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து
திறம்பா வண்ணம்”
"விருந்தாய சொல்மாலை கொண்டேத்தி வினைபோக
வேலி தோறும்"
"பொய்யாத வாய்மையால் பொடியூசிப்
போற்றிசைத்துப் பூசை செய்து"
இலமலிந்த மழுவானை மனத்தினால் அன்பு செய்(து)
இன்ப மெய்தி"
என்று வரும் தொடர்கள் நினைந்து நினைந்து படிக்கத் தக்கன ஒதுதலுக்குரியன உணர்ந்து ஒழுகுதற்குரியன. இந்தத் தொடர்களின் உணர்த்தப் பெறும் சமய வாழ்க்கை, வாழ்த்தும் நெறி இன்று உள்ளதா? எங்கிருக்கிறது? இன்று அன்பு நெறியாக, தொழும் நெறியாக, வாழ்க்கை நெறியாக இருந்த சிவநெறியை "இந்து சமயம்" என்ற கலப்பு - வெற்றுச் சடங்குச் சமயமாக ஆக்கிவிட்டது. அதனால், வழிபாடும் முறையாக இல்லை; வளமும் இல்லை!
வழிபாட்டில் முதல் நெறி-உற்றிருந்து நினைத்தல், அதாவது தனக்குள்ளேயே இறைவனைநாடுதல், விறகில் தீ, வெளிப்புறத்தில் இல்லை; விறகுக்குள்தான்! பாலில் நெய், பாலுக்குள்தான்; பாலுக்கு வெளியே இல்லை! அதுபோல இறைவன் ஒவ்வொருவர் உயிருக்குள்ளும் உயிர்க்கு உயிராக விளங்குகின்றான்! தனக்குள், தனது உயிர்க்கு உயிராக இருக்கும் இறைவனைத் தேடும் முயற்சியில் ஈடபடுவோரைக் காணோம்! வெளியிலேயே தேடுகிறார்கள்! அதனால் அவனும் அகப்படுவதில்லை. இன்று இறை வழிபாட்டிலும் பரபரப்பு: நெருக்கடி! ஆரவாரம்! தனியே இருந்து தேடுவாரைக் காணோம்! உலகியல் காதலுக்கு எவ்வளவு தனிமை தேவையோ அதே அளவு இறைவனிடத்து ஒருவர் காதலித்து அன்பு செய்யத் தனிமை தேவை. பலரறிய காதற் செல்கள் செய்வதை அநாகரிகம் என்று கருதுகிற உலகம், பொது மானிடஒழுங்கிற்குத் தீங்கு என்று கருதி அபராதம் விதித்திடும் உலகம், ஒருவர் தன்னுடைய ஆன்ம நாயகனாக விளங்கும் இறைவனைப் பூசிப்பதைக்கூட ஆரவாரமாக்கி, காட்சியாக்கிக் காசு பறிப்பதைக் கேவலமாகக் கருதவில்லை. இது சமய நெறிக்குப் புறம்பான போக்கு!
எது வழிபாடு?
நம்பியாரூரர், இறைவனை நினைத்து வழிபடும் நெறியில் நம்மை ஆற்றுப்படுத்துகிறார். காற்று மண்டலத்தைத் தண்மை செய்து உதவும் சோலையை நாடுக! தனிமையாக, நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்திடுக! கண்களைச் சற்றே மூடுக! இறைவனை உள்ளே தேடுக! தேடிப் பிடித்த இறைவனை உள்ளத்தில் அன்போடு நினைத்திடுக! உள்ளத்தால் உரையாடுக! இதுவே வழிபாடு. இந்த வழிபாடு, திருக்கோயிலை எடுத்து எழுந்தருளச் செய்யும் வழி பாட்டினும் சிறந்தது என்பதை, பூசலார் நாயனார் வரலாற்றில் சிவபெருமான் உணர்த்துகிறார். இன்று இத்தகைய வழிபாடு எங்கு நடக்கிறது? எந்தத் திருக்கோயிலில் செய்ய இயலும்? இந்த வழிபாட்டு நெறிக்குப் பதிலாக இன்று ஆரவாரமான திருக்கோயில் குட முழுக்குகள்! தனித்திருக்க, உன்னி உன்னி நினைத்திருக்க இயலாத நிலைக்கு உலகியல் வாழ்வு நம்மைப் பிடர்பிடித்துத் தள்ளுகிறது! ஏன்? இங்கனம் செய்கிற வழிபாடு உண்மையல்ல என்று சொல்கிற பொய்ம்மை உலகம் வெற்றி பெற்றாலும் வியப்பில்லை.
இனிய அன்புடையீர்! நாள்தோறும் உலகம் விழிப்பதற்கு முன் விழித்தெழுங்கள்! இயற்கை தழுவிய சூழ்நிலையை நாடிச் செல்லுங்கள்! புதிய காற்று, புத்துணர்வைத் தரவல்லது. உங்கள் தலைவனை, இறைவனை, துணைவனை உற்றிருந்து நினைந்து காணுங்கள்! தொழுங்கள்! இதுவே நம்பியாரரர் காட்டும் வழிபாட்டு நெறி!
மயக்கம் தெளியவில்லை!
அடுத்து வருவது அருமையான செய்தி! இறைவனை புகழ்ந்து பாட, துதிக்க, அருச்சனை செய்யப் புதிய புதிய சொற்களைத் தேடச் சொல்கிறார் சுந்தரர். கூறியதே கூறிக்கொண்டிருந்தால் என்றும் இளைஞனாக, புதுமைக்கும் புதியவனாக விளங்கும் இறைவனுக்கு உவப்பாக இருக்காது என்கிறார். ஆனால் தமிழகத்தின் நிலை என்ன? என்றோ வழக்கில் வந்த அஷ்டோத்திரம், சகஸ்ரநாமங்கள் திரும்பத் திரும்பக் கூறப்படுகின்றன. இந்த அருச்சனை நாமாவளிகள் புரியாத மொழியில் உள்ளன. உணர்வுக் கிளர்ச்சியினைச் செய்ய முடியாதன! ஒரோ வழி புரிந்தாலும அப்பொருள் நெஞ்சந்தைத் தொடுவதல்ல. அதனாலன்றோ சிவபெருமான் இந்த அருச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கும்படி ஆரூரரைக் கேட்டுக் கொள்கிறார்! சொற்றமிழ் பாடுக என்றார்! நாள்தோறும் இறைவன் அனுபவிக்கும் அனுபவத்தில் விளையும் புதிய புதிய சொற்களைக் கொண்டு வழிபடுக என்றார் நம்பியாரூரர்! நம்முடைய நாட்டிலோ அஷ்டோத்திரம், சகஸ்ர நாமங்களின் மயக்கம் தெளிந்த பாடில்லை.
மண்ணிப்படிக்கரை மாண்பினன்
நம்பியாரூரர் திருக்கருப்பறியலூர் இறைவனைப் போற்றி வணங்கிக் கொண்டு மண்ணியாற்றங் கரையிலுள்ள திருமண்ணிப் படிக்கரையென்ற திருத்தலத்துக்குச் சென்றார். - திருமண்ணிப் படிக்கரைத் திருத்தலம் இயற்கைச் சூழலில் அமைந்த திருத்தலம். இங்கு எழுந்தருளியுள்ள இறைவனை, அளவற்ற புகழ்படைத்த திருப்பதிகம் ஒதிப் பரவுகின்றார். திருமண்ணிப் படிக்கரைப் பதிகத்தில் பெருமானை "எங்கள் பிரான்” என்று பாடல் தோறும் அழைத்து மகிழ்கின்றார். திருமண்ணிப் படிக்கரையில் எழுந்தருளியுள்ள இறைவனை ஏத்தினால் வாழ்க்கை திருந்தும்; வாழ்க்கை திருந்தினால் வருத்தம் மாறும் என்றெல்லாம் கூறி நம்மை ஆற்றுப் படுத்துகிறார்.
அயனும் மாலும் அருச்சித்தற்குரிய மூர்த்தியாக எழுந்தருளியுள்ள பாங்கை இயம்புகின்றார். திருமண்ணிப் படிக்கரையிலுள்ள இறைவனை அட்ட புட்பங்களால் அயனும் மாலும் அருச்சித்தனர். அட்ட புட்டங்களாவன; புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தனம், பாதிரி, குவளை, அலரி, செந்தாமரை என்பனவாகும். திருமண்ணிப் படிக்கரையிலுள்ள இறைவன் நஞ்சினை உண்பவன், எருதில் ஊர்ந்து வருபவன். மண்ணிப் படிக்கரை இறைவனின் இந்தச் செயல்களால் அவனைப் பித்தன் என்று எண்ணற்க! இகழ்ச்சி செய்யற்க! அவனைப் பற்றித் தொழுது பாவங்கள் அறுத்திடுக! என்று அறிவுறுத்துகின்றார்.
இத்திருப்பதிகத்தை ஒதி முடித்த நம்பியாரூரர், கடைக்காப்புப் பாடலில் நிறைந்த பயனை அருளிச் செய்துள்ளார். இத்தமிழ்ப் பாடலை இரவிலும் பகலிலும் சொல்லுநருக்குத் துன்பமில்லை! கேட்டவர்க்கும் துன்ப மில்லை! இத்திருப்பதிகத்தைச் சொல்லுநர்க்கும் கேட்டவர்க்கும் அவர்தம் உற்றாருக்கும் அந்த உற்றாரைப் பின்பற்றி வரும் சுற்றத்தாருக்கும் துன்பம் மிகுதலில்லை என்று அருளிச் செய்துள்ளார். பல்லுயிர் வாழும் தெண்ணீர்ப் பழமண்ணிப் படிக்கரையைத் தொழுது வணங்கிப் பயணத்தைத் தொடர்கிறார்.
தன்னை நினைக்கத் தந்தவன்!
இடையில் உள்ள திருவாழ்கொளிபுத்தூர் என்ற திருத்தலத்தை நினையாது-தொழாது சென்று விடுகிறார் நம்பியாரூரார். ஆனால், சற்றுத் தொலைவு சென்றவுடன் நினைவு வருகிறது. திருவாழ்கொளிபுத்தூர் இறைவனை நினைந்து, திரும்பி வந்து வணங்குகின்றார். மறந்து நினைந்து வாழ்த்தியதால் இத்திருப்பதிகத்தில் அரனை "என்னை நினைக்கத் தருவானை” என்று நினைந்து பாடுகின்றார். பாடல் முடிவில் "வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே! என்றும் பாராட்டுகின்றார்.
எல்லாமாக இருக்கும் இறைவன்
திருவாழ்கொளிபுத்தூரை வணங்கிக் கானாட்டு மூள்ளூர் என்ற திருத்தலத்திற்குச் செல்கின்றார். கானாட்டு முள்ளூர்த் திருத்தலம் காவரியின் வட கரையில் உள்ளது. தற்போது கானாட்டாம் புலியூர் என்ற பெயரில் வழங்கப் படுகிறது. இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் பதஞ்சலி நாதர் அம்மையின் பெயர் கானார் குழலி, இறைவனின் பெயர் பதஞ்சலி நாதர், என்றிருப்பதால் பதஞ்சலி முனிவர் பூசித்த தலமென அறிக. இத்திருத்தலம் சிதம்பரத்திலிருந்து தென்மேற்கே சற்றேறக் குறைய 20 கல் தொலைவில் இருக்கிறது. செல்லும் வழியில் காட்டு மன்னார்குடி ஓமாம்புலியூர் என்ற ஊர்கள் உள்ளன. இத்திருத்தலத்திற்கு நம்பியாருரர் வரும் பொழுது பெருமான் எதிர் கொள்காட்சி யளிக்கின்றார். கானாட்டு மூள்ளூர்த் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனை எல்லாமாக இருக்கும் இறைவன் என்று போற்றித் துதிக்கின்றார்.
ஒருமேக முகிலாகி ஒத்துலகந் தானாய்
ஊர்வனவும் திற்பனவும் ஊழிகளும் தானாய்ப்
பொருமேவு கடலாகிப் பூதங்கள் ஐந்தாய்ப்
புனைந்தவனைப் புண்ணியனைப் புரிசடையி னானைத்
திருமேவு செல்வத்தார் தீமூன்றும் வளர்த்த
திருத்தக்க அந்தணர்கள் ஓதுநக ரெங்கும்
கருமேதி செந்தாம ரைமேயும் கழனிக்
கானாட்டு முள்ளுரில் கண்டுதொழு தேனே!
(ஏழாந்திருமுறை, பா.405)
கானாட்டு முள்ளூர் இன்று ஒரு சிற்றூராக இருக்கிறது. அன்று கானாட்டு முள்ளூரில் திருமகளும் விரும்பும் செல்வத்தையுடையவர்கள் இருந்ததாக ஆரூரர் பாடுகின்றார்.
சித்தநிலைத் திருப்பதிகம்
கானாட்டு முள்ளூரிலிருந்து நம்பியாரூரர் பயணத்தைத் தொடங்குகிறார். திருஎதிர்கொள்பாடியைச் சென்றடைய பயணம் நடைபெறுகிறது. இந்தப் பயணத்தில் நம்பியாரூரர் வழி நடையிலேயே எதிர்கொள்பாடியினை நினைந்து பதிகம் பாடிக் கொண்டே நடக்கிறார். இத்திருப்பதிகத்தை வழி நடைப் பதிகம் என்றுதான் கூற வேண்டும். எதிர்கொள் பாடித் திருத்தலத்தில் இறைவன் முன் பாடிய பதிகம் கிடைக்கவில்லை. இத்திருப்பதிகத்தைச் சித்த நிலைத் திருப்பதிகம் என்று வழங்குவதுமுண்டு. இத்திருப்பதிகத்தின் அமைப்பும் இதற்கிசைந்தவாறு இருக்கிறது.
வாழ்க்கையைப் பயனுடையதாக்குக!
வாழ்க்கையென்பது ஒரு பயணம். இந்தப் பயணத்தில் தோற்றமுண்டு; மரணமுண்டு. இந்தத் தோற்றத்திற்கும், மரணத்திற்கும் இடைப்பட்ட வாழ்க்கையைப் பொருளுடையதாக்க பயனுடையதாக்க வேண்டும் என்பது பதிகத்தின் செழும்பொருள். வாழ்க்கைக்குப் பயன்படும் யாக்கை தேய்ந்து, தேய்ந்து கடைசியில் இற்று வீழும் தன்மையுடையது. ஆதலால், இந்த வாழ்க்கை அத்தகைய இழி நிலையை அடைந்து மரணம் வருவதற்கு முன்பு பயனுடையதாக்க வேண்டுமென்று நம்பியாரூரர் வலியுறுத்துகிறார். இதனை.
தோற்ற முண்டேல் மரண முண்டு துயரமனை வாழ்க்கை
மாற்ற முண்டேல் வஞ்ச முண்டு நெஞ்சம்னத் தீரே
நீற்றர் ஏற்றர் நீல கண்டர் நிறைபுனல்நீள் சடைமேல்
ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி யென்பதடைவோமே.
(ஏழாந்திருமுறை-63)
செடிகொள் ஆக்கை சென்று சென்றுதேய்ந்தொல்லை வீழாமுன்
வடிகொள் வண்ணார் வஞ்சனையுட்பட்டுமயங் காதே
கொடிகொள் ஏற்றர்வெள்ளை தீற்றர் கோவணஆடையுடை
அடிகள் கோயில் எதிர்கொள் பாடி யென்பதடைவோமே!
(ஏழாந்திருமுறை-64)
இத்திருப்பதிகம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது. தோற்றமுண்டேல் மரணமுண்டு என்ற கருத்து, உயிருக்கு உரியதன்று. உயிருக்குத் தோற்றமுமில்லை; மரணமுமில்லை என்பது தமிழ்க் கொள்கை உயிர் உய்தற்கு எடுத்துக் கொள்ளும் கருவியே உடம்பு, இந்த உடம்பிற்குத் தோற்றமும் உண்டு அழிவும் உண்டு. உயிர் எடுத்த உடம்பினுள் இந்த மானுட உடம்பு அருமையானது ஆற்றல் மிக்குடையது; பன்னோக்குடையது. ஆனாலும் தேய்தலுக்குரியது; அழிதலுக்குரியது. அதனால் மிகச் சிறந்த இந்த மானுட உடம்பு அழிவதற்கு முன்பே, மீண்டும் ஓர் உடம்பை எடுக்க வேண்டுமென்ற அவசியமில்லாமல் சாதல் பிறத்தலைத் தவிர்த்து மரணமிலாப் பெருவாழ்வை-இன்ப அன்பு நிலையை அடைந்து விட முயற்சி செய்வது சான்றோர் கடன்; அறிந்தோர்க்கு அழகு, இந்தக் குறிப்பில் "தோற்ற முண்டேல் மரணமுண்டு" என்று ஆரூரர் குறிப்பிடுகின்றார்.
துயர மனைவாழ்க்கை?
"துயர மனைவாழ்க்கை, மாற்றமுண்டேல் வஞ்சம் உண்டு” என்று பாடுகிறார் நம்பியாரூரர். நம்பியாரூரர், பெற்ற சிற்றின்பத்தையே பேரின்பமாக நுகர்ந்தவர். பரவையாருடன் கூடி வாழ்ந்த வாழ்க்கையை யோக வாழ்க்கையென்று சேக்கிழார் பாராட்டுகின்றார். அப்படியாயின் துயர வாழ்க்கை என்று கூறியது ஏன்? இப்பாடலின் அடுத்த அடியில் "மாற்ற முண்டேல் வஞ்சமுண்டு என்கிறார். உயிர்க்கு இயல்பு அன்பாக இருத்தல். ஆனால் சுற்றுப்புறச் சூழ்நிலையின் காரணமாக அன்புக்குப் பதிலாக அன்பின் இடத்தில் ஆசை வந்து விடுகிறது; அன்பு வேறு; ஆசை வேறு. ஆசை கொச்சைத்தனமானது; முற்றாகத் தற்சார்புடையது. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் நிர்வாணத் தன்மையுடையது. ஆசை ஒரு தலைப்பக்கமாகவே இயங்கும். இத்தகைய ஆசை மேம்பட்டு அன்பு வாழ்க்கை இல்லாமற் போமாயின் வஞ்சமுண்டு; துயரமுண்டு. இந்த சூழ்நிலையில்தான்் மனைவாழ்க்கை துயரமாக உருமாற்றம் பெறுகிறது. மணவாழ்க்கையில் நாயகன் நாயகிகளாக இருந்தும் ஒத்த அன்பின்றி ஆசைகள் நிறைவேறாத பொழுது ஏமாற்றம் ஏற்படும். அதன் காரணமாக அன்புக்கே உரிய மனை வாழ்க்கை துயரமாக மாறிவிடுகிறது. அதனால் ஆசை நீக்கி அன்பு சேர்த்தி என்றும் இதே பதிகத்தில் நம்பியாரூரர் பாடுகின்றார். அதனால்தான் திருமூலரும் ஆசை அறுமின்கள்! ஆசை அறுமின்கள்! என்றார். இத்திருப்பதிகம் எதிர்கொள்பாடித் திருப்பதிகம். இத்திருப்பதிகத்தின் பெயரைக் கொண்டே திருத்தலத்தின் பெயரும் வந்திருக்குமானால் பொருத்த முடையது. இனிவரும் எதிர் காலத்தில் ஏற்றுக் கொள்ள விருக்கும் வீட்டினை-உடலினைத் தவிர்க்கும் பொருட்டுப் பாடியது. ஆதலால் வாழ்க்கையில் ஆசைகளை நீக்கு வோமாக! அன்பினைச் சேர்ப்போமாக! இதற்குத் துணையாக மூவர்க்கும் முதல்வனாக நிற்கும் இறைவனிடத்தில் வைத்த மனம்மாற்றாது நினைந்து வழிபடு வோமாக! இத் திருப்பதிகத்தைப் பாடிக்கொண்டே திருஎதிர்கொள்பாடியை வந்து அணைகின்றார்.
நம்பியாரூரர் திருஎதிர்கொள்பாடியில் எழுந்தருளியுள்ள இறைவனை வாழ்த்தி வணங்கிய பிறகு, திருவேள்விக் குடியை வந்தணைந்தார். திருவேள்விக்குடியிலேயே, திருத்துருத்தித் திருத்தலதையும் எண்ணி இணைந்து நினைந்து வழிபடுகிறார். ஆயினும் இத்திருப்பதிகத்தில் திருத்தலப் பதிகம் போல் பாதோறும் ஈற்றடியில் தலத்தின் பெயர் வரவில்லை. முதற்பாடலில் மட்டுமே தலங்களைப் பற்றிய குறிப்புக்குள் வந்துள்ளன. இத்திருப்பதிகம் இறைவனின் நிலையை விளக்கும் புதிகம். எந்த உயர்வுக்கும் உலகியலை நோக்க இழிநிலைகள் உண்டு. உலகியலும் உயர்வும் ஒத்தே இருத்தல் இல்லை. முற்றாக உலகியலைச் சார்ந்தவர்கள், உயர்நிலைகளை எள்ளுவர்; பழித்துரைப்பர். "சகம் பொய்யென்று சிரித்திட” என்றும், "நின்னடியான் என்று ஏசப்பட்டேன்” என்றும் திருவாசகம் கூறுவது காண்க.
சுந்தரரின் இத்திருப்பதிகத்தில் இறைவனின் உயர்வு நிலைகள் ஒதப்படுகின்றன. உலகியலை நோக்க உள்ள இழிவு நிலைகளும் பேசப்படுகின்றன. நம்பியாரூரர் தாம் இறை வனுக்கு ஆட்பட்ட நிலையை நகைச்சுவையுடன் உறுதிப் படுத்துகின்றார்.
மூப்பதும் இல்லை பிறப்பதும்
இல்லை இறப்பதில்லை!
சேர்ப்பது காட்டகத் துரரினு
மாகச்சிந் திக்கினல்லால்
காப்பது வேள்விக் குடிதண்
துருத்தினங் கோன் அரைமேல்
ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே!
(ஏழாம் திருமுறை 178)
என்பது முதற்பாடல்; இறைவன்-கடவுள், பிறவாதவன்; இறவாதவன், பிறத்தலும் இறத்தலும் இல்லாமையால் மூப்பு எய்தாதவன் என்பது உணர்த்தப்படுகிறது. சாதலும் பிறத்தலும் துன்பம் தரும்நோய், இத்துன்பங்கள் இல்லாத ஒன்றையே இறைவன் கூற இயலும், சைவம், இசுலாமியம், கிறித்தவம் ஆகிய சமய நெறிகளைச் சேர்ந்தவர்கள் இறைவனுக்குப் பிறப்பும் இல்லை மூப்பும் இல்லை, இறப்பும் இல்லை என்ற கொள்கையில் உறுதியாக உள்ளனர். இந்து சமயம் என்ற போர்வையில் மிண்டிய நிலையில் வளரும் மாயாவாதக் கொள்கையினர் "கடவுளே உயிர்; உயிரே கடவுள்" என்று கூறி, தம், அறியாமையைப் புலப்படுத்துவது நகைத்தற்குரியது. அதோடு கருவாய்ப் பட்டுப் பிறந்து வாழ்க்கையில் உழன்று வாழ்ந்தவர்களையும் உயர் ஆன்மாக்கள் என்றும், நம்மிலும் வளர்ந்தவர்கள் என்றும் ஆசிரிய நிலையை உடையவர்கள் என்றும் வாழ்த்தலாமே தவிர, கடவுள் என்று போற்றுதல் இயலாது. அதனாலன்றோ இளங்கோவடிகள் "பிறவா யாக்கைப் பெரியோன்” என்று வாழ்த்தினார். பிறத்தலும் இறத்தலுமாகிய ஐம்பூதங்களாலாகிய திருமேனி இறைவனுக்கு இல்லை. ஆதலால், நஞ்சும் அமுதும் இவருக்கு வேறுபாடு இல்லை. ஆதலால், நாகப்பாம்பு அணியாகிறது. இறைவன் கறுத்த கண்ட முடையான், நிறத்தால் கறுத்தது; ஆம்! கருணையால் கறுத்தது. அலைகடலில் எழுந்த நஞ்சினால் வானவர் துன்புறாமல், நஞ்சை உண்டதால் ஏற்பட்ட கறுப்பே கண்டத்தில் உள்ள கறுப்பு. அன்னை உமை இறைவன் நஞ்சை உண்டபொழுது கண்டத்தை அமுக்கியதால் நஞ்சு நின்றதென்பது கதை. கதையானாலும் கருத்து உள்ள கதை. ஆம்! ஆற்றல் மிக்குடையார் சமுதாயத் தீமைகளை, நஞ்சனைய கொடுமைகளை மேலும் மேலும் வளராமல் தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்திக் காக்க வேண்டும் என்ற பாடம் இக்கதையின் கருத்தாகும்.
இத்திருப்பதிகத்தில் திருமுருகன் பற்றிய குறிப்பு கிடைக்கிறது. வள்ளியை முருகன் மணந்த செய்தியை நினைந்து பாடுகின்றார்.
"குறவனார் தம் மகள் தம்மகனார் மணவாட்டி” என்று குறிப்பிடுகின்றார். குறவர் என்றால் இன்று பலர் நாடோடிகளாக வாழும் நரிக் குறவர் என்று கருதுகின்றனர். இது தவறு. குறிஞ்சிநில மக்களுக்குக் குறவர் என்று பெயர் உண்டு. முருகன் குறிஞ்சி நிலக் கடவுள். அன்னை வள்ளியும் குறிஞ்சி நிலப் பெண் என்பதறிக.
இறைவனே பித்தன்
இத்திருப்பதிகத்திலும் இறைவனைப் பித்தர் என்று நினைந்து பாடுகின்றார். பித்துப் பிடித்தல் ஓர் உயர் குணமே. ஆனால் இன்றைய உலகியலில் பித்து கீழ்மைக் குணமாகவே கருதப்பெறுகிறது. இது மரபுக்கிசைந்து வராத பொய்ம்மை. பித்தாவது ஒன்றினைத் தற்சார்பின்றி ஆலோசித்து அன்பும் ஆர்வமும் காட்டி விரும்புதலுக்குப் பித்துக் குணம் என்று கூறுதல் பழைய வழக்கு காதல், பித்தாக எண்ணப்படுதல் உண்டு. ஆனால், அக்காதல், காதலிக்கப் பெறும் பெண்ணுக்குத் துணையாதல், அப்பெண்ணுக்கு இன்ப வாழ்வளித்தல் என்று எண்ணப்படும் பொழுது பித்து என்று போற்றப் பெறும். ஒரு பெண்ணைத் தான்் அடைந்து துய்த்தல் வேண்டும் என்று எண்ணி முயலும் பொழுது கொச்சைத் தனமானகாமம் ஆகிவிடுகிறது. தொண்டு செய்தலில் பித்தாதல் உண்டு. அத்தொண்டே விளம்பரப் பெருமை கருதிச் செய்தால் பித்தன்று.
இறைவன் பித்தன். ஆம், அவனுக்கு அவன் நிகழ்த்தும் இன்பக் கூத்தால் ஆவதென்? ஐயன் தொழிலால் அடையக் கூடியது என்? எல்லாம் உயிர்களின் உய்தியின் பொருட்டேயாம்! ஆதலால் இறைவன் ஒருவனே பித்தன்! "பித்தரை ஒத்தொரு பெற்றியர்” என்று வாழ்த்துகின்றார்.
நம்பியாரூரர், திருவேள்விக் குடியை வணங்கி மகிழ்ந்து திருவாரூரைச் சென்றடைகின்றார்.
திருவாரூர் வந்து சேர்ந்த நம்பியாரூரர் திருவாரூரில் எழுந்தருளியுள்ள பெருமானை வணங்கி வாழ்த்தி மகிழ்கின்றார். பின், பரவையாரின் திருமாளிகைக்குச் செல்கின்றார். சேக்கிழார், பரவையாரை "தாவாத புகழ்ப் பரவையார் திருமாளிகை சார்ந்தார்” என்றருளிச் செய்துள்ளமை நினைவிற்குரியது. சேக்கிழார் பெண்மையைப் பெருமைப்படுத்தும் திருவுள்ளத்தினர். தமிழர் நெறி பெண்ணடிமைத் தனத்தை ஏற்பதில்லை; பெண்மையைக் கொச்சைப்படுத்துவதும் இல்லை. பெண்ணைத் துறப்பதே துறவு என்றும் தமிழ்நெறி கூறியதில்லை. நம்பியாரூரர் பெரும் புகழுடையவர். அவர்தம் வாழ்க்கைத்துணை நலமாக அமைந்த பரவையாரும் தாவாத புகழுடையவர்; எஞ்சுத லில்லாத பெருமையுடையவர். பரவையார் வசித்த மாளிகையை, "திருமாளிகை" என்று சேக்கிழார் பாடிப் பரவுகின்றார்.
பரவையார் வரவேற்பு
திருமாளிகைக்கு வந்த நம்பியாரூரைப் பரவையார் வரவேற்கின்றார். பிரிவின் காரணமாக வருந்தும் உணர்வு இருக்கிறது. ஆயினும் நம்பியாரூரரை வரவேற்பதில் அந்தப் புழுக்கம் இல்லை. உள்ளத்தில் பொங்கி எழுந்த பெருவிருப்பத்துடன் தோழியர்களுடன் கூடிப் பாராட்டி வரவேற்கின்றார். நீண்ட பிரிவினையை, நயமாக எடுத்துக் கூறும்பாங்கு அருமையாக இருக்கிறது. நகைச்சுவை நிறைந்த பகுதி.
- ‘எங்களையும் நினைந்தருளிற்று.'
என்ற அடிகள் ஆழமானவை! நம்பியாரூரர் திருத்தலம் தோறும் சென்று இறைவனையே வணங்கி வாழ்த்தி வருகின்றார். அவருக்கு இறைவனே நினைவு, உணர்வு; எல்லாம். இது நம்பியாரூரரின் நடைமுறை வாழ்க்கை இடையில் பரவையாரிடம் வந்துள்ளார். அதனால் பரவையார் "எங்களையும் நினைந்தருளி” என்று கேலி செய்கிறார். நம்பியாரூரர், பல நாள்கள் பரவ்ையாருடன் சேர்ந்து மகிழ்ந்து வாழ்கின்றார்.
திருக்குளத்தில் பொன் தேடல்
ஒருநாள் நம்பியாரூரர் முதுகுன்றத்தில் பொன் பெற்றதையும் அப்பொன்னை மணிமுத்தாற்றில் விட்ட தையும் பரவையாரிடம் கூறி, அப்பொன்னைத் திருவாரூர் கமலாலயத்தில் எடுக்க வேண்டும் என்றருளிச் செய்து கமலாலயத்திற்கு அழைக்கின்றார். இது கேட்டுப் பரவையார் வியப்படைகின்றார். "என்ன அதிசயம்? சொல்வது என்ன?” என்று சிரித்துக் கேட்கின்றார் பரவையார். நம்பியாரூரர் 'என்னுடைய தலைவன்' அருளால் நடக்கும். நான் குளத்தில் பொன்னெடுத்துத் தருவேன் என்று அழைக்கின்றார். பரவையாருடன் திருவருட் பூங்கோயில் புகுந்து இறைஞ்சிப் பின் கமலாலயம் திருக்குளத்தின் வடகிழக்குக் கரைக்கு வந்து சேர்ந்தார். பரவையாரைக் கரையிலிருக்கச் செய்துவிட்டுத் திருக்குளத்தில் பொன்னைப் போட்டு எடுப்பவர் போல தடவி எடுக்க முயல்கின்றார். பொன் கிடைக்கவில்லை நம்பியாரூரரின் நற்றமிழ்ப் பாடல்களை அனுபவிக்கும் திருவுள்ளத்தாராகிய இறைவன் பொன்னைத் தருவதில் காலந்தாழ்த்துகின்றார். பரவையாரோ 'ஆற்றிலிட்டுக் குளத்தில் தேடும் பெரியீர்!’ என்று வினவுகின்றார். நம்பியாரூரருக்கோ நிறைந்த வருத்தம்! தன்னுடைய நிலை பரவையாரால் நகைக்கக் கூடியதாக ஆகிவிடக் கூடாதே என்று வருந்துகின்றார். ஆண்மையாளர்கள் பெண்ணின் நகைப்பைத் தாங்குவதில்லை. இது வரலாறு. இராவணன் நாடு இழந்ததற்குக் கவலைப்படவில்லை; கொற்றம் இழந்ததற்குக் கவலைப்படவில்லை. செருக்களத்தில் சாவப் போவதைப் பற்றிக் கூட கவலைப்படவில்லை; சீதை சிரிப்பாளே என்று தான் கவலைப்படுகின்றான்.
"வான்நகும், மண்ணும் எல்லாம் நகும், மணி
வயிரத்தோளன்
நான்நகும் பகைஞர் எல்லாம் நகுவர் என்று அதற்கு
நாணான்.
வேல்நகுநெடும் கண் செவ்வாய் மெல் இயல் மிதிலை
வந்த
சானகி நகுவள்"
என்றே கவலைப்படுகின்றான். பாஞ்சாலி துரியனை நகைத்தமையினாலேயே பாரதப்போர் நடந்தது.
நம்பியாரூரர் மணிமுத்தாற்றில் இட்ட பொன்னை, திருவாரூர் கமலாலயக் குளத்தில் தேடுகின்றார்; இறைவன் ஆணைப்படி தேடுகின்றார்; கிடைக்கவில்லை. பரவையாரோ ஆற்றிலிட்டுக் குளத்தில் தேடும் பான்மையைக் கண்டு நகைக்கின்றார். ஆனால், நம்பியாரரர் நகைக்கவில்லை. நம்பியாரூரருக்குத் திருவருளில் நம்பிக்கை இருக்கிறது. ஆதலால் ஆரூரருக்கு நகைப்பு வரவில்லை. நம்பியாரூரர் பொன் கொடுத்த திருமுதுகுன்றத்து இறைவனை எண்ணிப் பாடுகின்றார்.
பொன்னை நினைந்து பாடும் பாடல் 'பொன் செய்மேனியினீர்' என்று தொடங்குகிறது. பாட்டின் நோக்கம் கமலாலயத்தில் பொன் கிடைக்க வேண்டுமென்பது. பரவையார் முன்னிலையில் பொன் பெறாதொழிவது பெருந்துன்பமாக இருக்கிறது. இடர்ப்பாடாக இருக்கிறது. இந்த இடத்தில் சேக்கிழார் ஐயத்தினை எழுப்பி விடையளிக்கும் வகையில் பாடுகின்றார். ஆரூரர் பற்றிச் சேக்கிழார் 'நீத்தாருள் தொடர்வரிய நெறிநின்றார் பரவுதலும் என்று அருளிச் செய்துள்ள பான்மை அறிக. நம்பியாரூரர் பொன் எடுக்க வேண்டித் திருக்குளத்தில் இறங்குகின்றார். பொன்னாசை பெண்ணாசை ஆகிய இரண்டும் உடையவராக விளங்கினார் நம்பியாரூரர்; ஆனாலும் நீத்தாருள் தொடர்வரிய நெறிநின்றார் என்று பாராட்டுகின்றார். இந்த இடத்தில் தமிழகச் சமய நெறி உணர்த்தும் உண்மையை உணர்தல் நல்லது. அப்பரடிகள்
Ф5. Іх 77. இறைவனை, 'துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ!' என்றார். ஆதலால் துய்த்தது அறவாழ்க்கையேயாம். இறை நெறிக்கிசைந்த வாழ்க்கையேயாம். ஆனால், துய்த்தலில் சில மரபுகள் உண்டு. துறவு நெறிப் பான்மையில் துய்த்தல் வேண்டும். ஆரூரர் பொன் வேண்டுகிறார். பரவையார் வருந்தாமலிருக்கவே பொன் வேண்டுகின்றார். பரவையாருக்கும் பொன், ஆடம்பர வாழ்க்கைக்கு அன்று. அடியார்களுக்குப் பணி செய்யவேயாம். ஆதலால் பொன் நாடுதல் குற்றமன்று. இல்லறத்திலே, சிறந்த துறவிகள் வாழ்ந்துள்ளனர். துறந்தாரைப் போலக் காட்டிப் பேராசை அவலத்துள் வீழ்ந்தவர்களும் உண்டு. ஆரூரர் அப்படிப் பட்டவரல்லர்.
நான் செய்த பிழை என்ன?
ஆரூரர் தொழுது வணங்கியே பழக்கப்பட்டவர்; தேவைக்காக வழிபடுபவர் அல்லர். இறைவன் அருளினாலும் சரி, அல்லற்படுத்தினாலும்சரி ஆரூரரால் இறைவனை ஏத்தி வழிபடாமல் இருத்தல் இயலாது. அதனால் ஆரூரரின் பாடலைக் கேட்பதற்காகப் பொன்னைத் தராமல் காலம் கடத்த வேண்டியதில்லை. காக்க வேண்டியதில்லை என்றெல்லாம் பதிகத்தில் பாடுகின்றனர். 'திருமுது குன்றுடையானே! முன்பு முயன்று கட்டிய மூன்று அரண்களை எரித்தீர்! அதுபோல் எம் ஆர்வத்தைக் கெடுத்து விடாதீர்! திருமுதுகுன்றத்துள் உறையும் இறைவனே! நீர் எனக்குப் பொன் கொடுத்தது உண்மை! ஆம்! நீர் பொன்கொடுத்ததற்குச் சாட்சியாகத் தேவர்கள் இருக் கின்றனர்! தேவர்களின் தலைவர்கள் இருக்கின்றனர். இறைவா, நின்னில் பாதியான பெண் உமையம்மை உடனிருக்கிறாள். உமக்குத் தெரியாதா பெண்களின் மனம்! அனுபவத்தில் தெரியாது போனாலும் நீர் படித்துணர்ந்த வேதங்கள் உணர்த்தவில்லையா? நீர் இப்போது எமக்குப் பொன்னைப் பெற அருள் செய்யாமைக்குக் காரணம் நான் செய்த பிழையா? அப்படியேதான்் பிழை என்று எடுத்துக் கொண்டாலும் திங்கள் செய்த பிழைகளைவிடவா நான் பிழை செய்து விட்டேன். பிழைகள் பல செய்த திங்களையே ஆதரித்துள்ளிர் என் மனைவி பரவையார் நல்ல குணமுடைய பெண். இப்போது நீர் பொன் கொடுக்கத் தாமதித்தால் அவள் குணம் திரிந்தால் நான் என்ன செய்ய இயலும்?' என்றெல்லாம் பொருள் குறித்த அருமையான ஒரு பதிகத்தைப் பாடித் தொழுகின்றார்.
பொன் எடுத்தல்!
பொன் கிடைத்து விடுகிறது. ஆரூரர் பொன் முடிப்பை எடுத்துப் பரவையார் பார்வையில் வைத்து உரைப்பொன் ஆணி கொண்டு பொன் முடிப்பின் நடுவிலிருந்த ஒரு பொன்னைச் சோதித்துப் பார்க்கிறார். பொன் முடிப்பில் இருந்த பொன் மாற்றுக் குறைந்ததாக இருக்கிறது. ஆருரருக்கு அதிர்ச்சி. மீண்டும் வருத்தமுறுகின்றார். இத் தருணத்தில் பாடிய பதிகம் கிடைக்கவில்லை. ஆனால் பதிகத்தை அன்பில் வரும் பாட்டு என்று புகழ்ந்துரைக்கின்றார் சேக்கிழார். பாடுவன வெல்லாம் பாட்டாகி விடாது. பெருகிய அன்பில் பாடும் பாட்டே பாட்டு. அன்பே காரணமாக அன்பிலே ஊறி அன்பையே நோக்கமாகக் கொண்டு உள்ளத்தெழுந்து வரும் பாடல்களே பாடல்கள்! நம்பியாரூரர் பாடல்கள் இத்தகையன.
ஆரூரரின் அன்புப் பெருக்கில் நனைந்த நற்றமிழ்ப் பாடல்களைக் கேட்டு இறைவன் களிப்பெய்தினான். ஆரூரருக்குப் பொன் கொடுக்கக் கூடாதென்பதல்ல இறைவன் திருவுள்ளம்! நம்பியாரூரரின் பாடல்களைக் கேட்டு மகிழ்வதற்காகச் செய்த விளையாட்டு - கூத்து! மீண்டும் ஆரூரர் திருக்குளத்தில் இறங்குகின்றார். இறைவன், குறைவிலாப் பொன்முடிப்பினைக் காட்டியருள்கின்றான். ஆரூரர் எடுத்துக்கொண்டு கரை ஏறுகின்றார். எடுத்த பொன் பொதியினை ஆட்களின் தலையிலேற்றிக் கொண்டு பரவையார் மாளிகை நோக்கிச் செல்கின்றார். இடையில் திருவாரூர் பெருமானைப் பணிந்து பரவிச் செல்கின்றார். பரவையாரின் மாளிகையில் சிந்தைமகிழ வாழ்கின்றார். "சிந்தை நிறை மகிழ்ச்சியுடன்", என்பது சேக்கிழார் வாக்கு!
பொன்-போதுமென்ற மனத்தைத் தராது; மேலும் மேலும் ஆசையை வளர்க்கும் இயல்பு, பொன்னின் இயல்பு, ஆனால் ஆரூரர் பொன்னின் மீது ஆசைகொண்டு தேடவில்லை. பரவையார்தம் தொண்டுக்குப் பயன்படவே பொன் விரும்பினார். கிடைத்த அளவில் மன நிறைவு; நிறைந்த சிந்தனை மட்டுமல்ல; மகிழ்ச்சியும் கூட.
இந்த மகிழ்ச்சி ஆனந்தக் களிப்பாக உருக்கொள்கிறது. தணியா ஆனந்தத்தில் தொண்டருடன் கூடிப்பாடுகின்றார். இறைவனையே மையமாகக் கொண்டு வினாக்களைத் தொடுக்கின்றார். இறைவன் திருமேனி வினாக்கள் வழி ஆய்வுப் பொருளாகிறது. ஆரூரர் இறைவனை ஆய்வா செய்கின்றார்! இல்லை, இல்லை! ஒருபோதும் ஆரூரர் ஐயப்பாட்டில் ஈடுபடார்! ஆய்வும் செய்யமாட்டார்! கண்டு அனுபவித்தவைகளை மீண்டும் மீண்டும் ஆர அனுபவிக்கும் எண்ணத்தில் வினாக்கள் எழும்! மற்றவர்களுக்கு அறிவுறுத்தவும் வினாக்கள் எழும். இது மட்டுமா? தம்மை உடையானின் புகழை மற்றவர் சொல்லக் கேட்பதிலே தோன்றும் மகிழ்ச்சிக்கு ஈடில்லை. சொல்லிக் கேட்கப் பெறுவதே புகழ்! அதனாலேயே வள்ளுவமும் 'கேட்ட தாய்' என்று கூறியது! அதனால் அடியார்கள் பலர் கூடி இறைவன் பெருமைகளைத் தம்முள் சொல்லியும் சொல்லக் கேட்டும் மகிழ்வது அடியார்களின் இயல்பு. நம்பியாரூரர் தமது வினாவைத் தொடங்குகின்றார்.
"பாறு தாங்கிய காடரோ, படு
தலைய ரோ, மலைப் பாவையோர்
கூறு தாங்கிய குழகரோ, குழைக்
காதரோ குறுங்கோட்டிள
ஏறுதாங்கிய கொடியரோ, சுடு
பொடிய ரோ, விளங் கும்பிறை
ஆறு தாங்கிய சடைய ரோதமக்
கடிக ளாகிய அடிகளே”.
-(ஏழாம் திருமுறை)
தலைவராகிய இறைவன் சுடுகாட்டில் வாழ்பவரோ என்பது முதல் வினா! அருள் நூல்களில் இடுகாடு என்று குறிக்கப் பெறுவது உலகியல் சுடுகாடு அல்ல! கடையூழி காலத்தில் பரசிவத்தைத் தவிர மற்றெல்லாம் அழியும்! அந்த யுக அழிவு நிலையையே இடுகாடு என்று கூறகின்றனர். அடுத்த கேள்வியும் இப்பொருளின் தொடர்புடையதாக அமைந்திருப்தை ஓர்ந்தறிக. கையில் உயிரற்ற தலைகளை ஏந்தித் திரிபவர்! ஆம்! இறைவன் கையில் நான்முகனின் மண்டையோட்டினைஏந்தி வையகத்தை நோக்கி இரக்கின்றான்! தத்துவம் செறிந்த கருத்து! நான்முகன் வேதங்களின் தலைவன். அவனே அழியாநிலை அறியாமல் அழிந்து போன நிலை உணரத்தக்கது. கற்பது பெரிதல்ல! அறிவின் ஆக்கம் வேண்டும்! மண்டையோட்டில் இரக்கின்றான் என்றால் மண்டையோட்டிற்குள் வைப்பது சோறன்று. அறிவேயாம். ஆதலால் வையகத்து மக்களை நோக்கி அறியாமையை இடுங்கள் என்றுணர்த்துவதே மண்டையோடு தாங்கி இரத்தல்.
அடுத்து 'மலைப் பாவையோர் கூறு தாங்கிய குழகரே!' என்ற வினா! பெண்மைக்குச் சமயம் தந்த ஏற்றத்தை இந்தப் பகுதியால் அறிய முடிகிறது. வாழ்க்கையில் ஒரு பாகமே பெண்ணாகின்றாள், பெண்மையைப் பெருமைப் படுத்திப் பேண வேண்டியது ஆடவர்க்கழகு; அழகுக்கு அழகு. இத்தகைய நெறிகண்ட இந்த நாட்டில்தான் பெண் இரண்டாவது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாள். அது மட்டுமா? வலிமைமிக்க ஆணை இன்று பெண் சுமக்கின்றாள். வரதட்சணைக்கு என்ன பொருள்? பெண், ஆணுக்குப் பொருளாதாய வாழ்வும் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகிறாள். பல வீடுகளில் பெண் உழைத்தே ஆண் சாப்பிடுகின்றான். இது கேவலம் இல்லையா? பெண்மை, பெண்மையாகவே பேணப் பெறுதல் வேண்டும். குழையணிந்த காதினையுடைய இறைவன் ஊர்ந்து வரும் எருது இளமையுடைய ஏறு! ஏறு-உழைப்பின் சின்னம். இறைவன் திருநீறணிந்த திருமேனியுடையவன். இறைவன் கடையூழிக் காலத்தில் இன்ப வெறிக் கூத்தியற்றிப் படைப்பைச் செய்கின்றான். அப்படி ஆடும் பொழுது ஏற்படும் புழுதியே இறைவன் திருமேனியில் படிந்து திருநீற்றுக் கோலம் தருகிறது. திருநீற்றுக் கோலம். 'அழி வின்மையை நினைவூட்டுகிறது. அழிவிலாதன எல்லாம் தூய்மையானவை என்ற படிப்பினையையும் தருகிறது. இறைவனை நமக்குத் தலைவன் என்று ஆரூரர் அருளிச் செய்துள்ளார். இந்த உலகில் பலர், பலரைத் தலைவர் என்று கூறுகின்றனர். ஆதலால் இறைவன் ஒருவனே நமக்குத் தலைவன் என்று அருளிச் செய்துள்ள பான்மையை அறிக.
திருவாரூரில் மகிழ்வோடு வாழ்ந்திருந்த ஆரூரர், மற்ற தலங்களிலும் எழுந்தருளியுள்ள இறைவனைத் தொழ எண்ணி யாத்திரையைத் தொடங்குகிறார். ஆரூரருக்கு ஆன்மநாயகர் ஆரூரில் எழுந்தருளியுள்ள புற்றிடங் கொண்டா ரேயாம். ஆதலால் புற்றீசரிடம் அருள்விடை பெற்றே மற்ற திருத்தலங்களுக்குப் பயணம் மேற்கொள்கின்றார். ஆரூர ருடன், ஆரூரருக்குப் பணி செய்யும் ஏவலர்களும் உடன் வருவதைப் "பரிசனமும் உடன்போத" என்றருளிச் செய்து விளக்குகின்றார். ‘பரிசனமும் உடன் வருவதை’ விதந்து கூறியது உலக வாழ்க்கையில் முற்றும் சிறந்த துணையாக அமையும் ஏவலர்கள் அமைவதில்லை என்பதை உணர்த்தவே! அதனாலேயே ஆரூரருக்கு இறைவனே தண்ணிரும் சோறும் தர வேண்டி வருகிறது; திருவிளமர் திருப்பள்ளி முக்கூடல் முதலிய திருத்தலங்களை வணங்கிக் கொண்டு திருநள்ளாறு சென்றடைகின்றார்.
திருநள்ளாறு நம்பிக்கை ஊட்டக்கூடிய திருத்தலம்; அரசன் நளனைப் பற்றிய துன்பம் விலக்கிய திருத்தலம்; இன்றும் துன்புறுவோர் நம்பிக்கையுடன் வழிபடும் திருத்தலம். திருதள்ளாற்றில் சுந்தரர் சிலநாள் தங்கி வழிபட்டார். திருநள்ளாற்றுப் பதிகத்தில் ஆரூரர் தமது வரலாற்றையே அகச் சான்றாக வைத்துப் பாடுகின்றார்.
"கற்ப கத்தினைக் கனகமால் வரையைக்
காம கோபனைக் கண்ணுத லானைச்
சொற்ப தப்பொருள் இருள் அறுத் தருளுந்
தூய சோதியை வெண்ணெய் நல்லூரில்
அற்புதப் பழ ஆவணங் காட்டி
அடியனா என்னை ஆளது கொண்ட
நற்ப தத்தைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே!"
(ஏழாம் திருமுறை 68-6)
என்பது ஆரூரர் திருப்பாடல்.
ஆரூரர் வாழ்ந்தவர்; வாழ ஆசைப்பட்டவர்; ஆரூரரது ஆசைகள் தீர அள்ளிக் கொடுத்தவன் இறைவன். ஆதலால் "கற்பகம்” என்றார். பொன் எண்ணிக் கொடுத்தால் போதாது. அள்ளிக் கொள்ளும் மலை என்ற கருத்தில் "கனகமால் வரை” என்றார். காமத்தைக் கடிந்த நெற்றிக் கண்ணுடைய தலைவன். சங்க காலத்தில் காமம் என்பது மங்கலச் சொல். காமம்-விருப்புறுதல். வாழ்க்கையை இயக்கும் விசையே காமம்தான்! பௌத்த, சமணச் சார்பு தமிழர்க்குக் கிடைத்த பிறகு “காமம்" தவறானது என்ற கருத்து உருவாகியது. உயிரியல் சாத்திர முறைப்படி விருப்புறுதலும் துய்த்தலும் தவிர்க்க இயலாதது. இறைவனே உயிர்க்குத் துணையாயிருந்து துய்ப்பிக்கின்றான் என்பதே தமிழர் கொள்கை சொல், பொருள் உணர்தலுக்குத் தடையாக இருக்கும் ஆணவத்தினை அறுத்தருளுபவன் இறைவன். தன்னைத் திருவெண்ணெய் நல்லூரில் பழைய ஆவணங் காட்டி ஆண்ட நிகழ்ச்சி நினைவு கூரப்பெறுகிறது. திருநள்ளாற்றிலிருந்து திருக்கடவூர், வந்தடைகின்றார். திருமயானம் என்ற திருத்தலத்தையும் வணங்குகிறார். திருக்கடவூரும், திருமயானமும் ஒரே தலமென எண்ணித் தொழக்கூடிய பதிகளாகும். மயானத்தை, திருக்கடவூர் மயானம் என்றும் கூறுவர்
திருக்கடவூர் சிறப்பு
திருக்கடவூர் புகழ் பெற்ற திருத்தலம். காலனைக் காலால் உதைத்து மார்க்கண்டேயருக்கு வாழ்வளித்த திருத்தலம். இன்றும் சாகாமல் வாழ ஆசைப்படுவோர் கடவூர் சென்று பூழிபடுவர். காலனைக் காலால் காய்ந்த காலசங்கார மூர்த்தியாக எழுந்தருளும் திருமேனியில் எழுந்தருளியுள்ளார். இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள அபிராமியும் கண் கண்ட தெய்வம். அபிராமி அந்தாதி நாளும் ஓதுதல் நற்பயனைத் தரும். கங்கு கரையற்று, அருளும் அன்னை இந்த அன்னை இத்திருத்தலத்தின்தான் முதன் முதலில் நமது சமயப்பணி-திருக்கோயிற்பணி கட்டளைத் தம்பிரான் என்ற பெயரில் தொடங்கியது. அன்னை அபிராமியின் அருளால் யாதொரு குறையுமில்லாமல் வாழ்க்கைப் பயணம் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, நமது வாழ்க்கையில் திருக்கடவூர் மயானம் நினைவகலாத் திருத்தலமாகும். குன்றக்குடி ஆதீனத்திற்குப் பட்டம் கட்ட ஒருவர் தேவை. அருளும் பொருளும் நிறைந்த நிறுவனங்களுக்கே பொறுப்பேற்க ஆள்தேடும் அளவுக்கு அவல நிலை, நமது சமயத்திற்கு நேர்ந்துள்ளமை வருந்தத்தக்கது. நம்மை அழைத்தனர். நாம் உடன்படவில்லை. நம்மை கடத்திக் கொண்டு வர முயன்றனர். அவர்கள் முயற்சி தோற்றுப் போயிற்று. பின் மூலையில் இருந்த நம்மை முற்றத்தில் கொண்டு வந்து விட்ட கயிலைக்குருமணி அவர்களை அணுகிக் கேட்டனர். குருமணி அவர்களிடமும் நாம் உடன்படவில்லை கயிலை குருமணி அவர்களுக்கு, குன்றக்குடி ஆதீனத்தைத் காக்கும் கடமை உணர்வு, நம்மைப் பிரிய இயலாப் பாசம், இவ்விரண்டிற்கும் இடையே ஏற்பட்ட அறச் சங்கடம்! சிந்தித்தார்கள். திருமுறைகளில் உறைப்புக் கொண்ட குருமணி அவர்கள் திருமுறைகளையே துணை யாகக் கொண்டு முடிவெடுக்கத் திருவுள்ளம் கொண்டார்கள்.
திருக்கடவூர்த் திருப்பதிகம்
கயிலைக் குருமணி அவர்கள், நாள் பூசையில் திருமுறைகளில் கயிறு சார்த்தினார்கள். திருக்கடவூர் மயானத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய திருப்பதிகமே கிடைத்தது. பதிகத்தின் திருக்காப்புப் பாடலில்
"விண்ணோர் தலைவர் வெண்புரிநூல்
மார்பர் வேத கீதத்தர்
கண்ணார் நுதலர் நகுதலையர்
கால காலர் கடவூரர்
எண்ணார் புரமூன் றெரிசெய்த
இறைவர் உமையோ ரொருபாகம்
பெண்ணா ணாவர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே”
(ஏழாம் திருமுறை 53-2)
என்ற திருப்பாடல் கிடைத்தது. திருப்பதிகத்தில் "விண்ணோர் தலைவர்” என்ற குறிப்புடைய பாடல் இருந்தமையால் நாம் குன்றக்குடிக்கு வருவது உறுதிப்பட்டது. இத்திருத்தலத்தில் அப்பரடிகள் அருளிச் செய்த ஐந்தாம் திருமுறையில்,
"அரவு கையின ராதி புராணனார்
மரவு சேர்கட வூரின் மயானத்தார்
பரவு வாரிடர் தீர்ப்பர் பணிகொள்வர்
பிரமன் மாற்கும் பெருமா னடிகளே”
-(ஐந்தாம் திருமுறை 38-8)
'என்ற பாடலிலும் 'பணி கொள்வர்' என்று வருவதும் அறியத்தக்கது. நாமும் பொதி சுமக்கும் மாட்டின் நிலையில் உடன்பட்டோம்.
"கனக்கும் பொதிக்கும் எருதுக்கும் தன்னிசை
கண்டதுண்டோ?
எனக்கும் உடற்கும் எனதிச்சையோ இணங்கார்
புரத்தைச் சினக்கும் கமலையுள் ஞானப்பிர காச சிதம்பர இன்(று)
உனக்கிச்சை எப்படி அப்படியாக உரைத்தருளே!”
என்பது குருஞான சம்பந்தர் வாக்கு. இந்த மனநிலையில் பொதி சுமக்கும் மாடு விருப்பு-வெறுப்பின்றித் தன் கழுத்தைக் கொடுப்பது போல நாமும் பொறுப்பேற்கலாயிற்று.
மரு ஈரத்தமிழ்மாலை
ஆரூரர் திருக்கடவூரில் எழுந்தருளியுள்ள இறைவனை, "மருஈரத் தமிழ் மாலை" பாடிப் பரவினார். இந்தப் பதிகத்தைச் சேக்கிழார் "மருஈரைத் தமிழ் மாலை" என்று போற்றுகின்றார். ஏன்? இந்தப் பதிகத்தின் பாடல்கள் ஒவ்வொன்றின் ஈற்றடியிலும் "என்னமுதே எனக்கார் துணை நீயலதே" என்று கேட்கின்றார். இறைவனைத் தவிர வேறு துணை-பற்றுக் கோடில்லாமையை உறுதியும், ஏக்கமும் கலந்த நிலையில் அருளிச் செய்கின்றார். இப்பதிகத்திலேயே தன்னுள் இறைவன் புகுந்தமையை நினைந்து பாடுகின்றார். அதேபோழ்து இறைவன் வெளியே போகாமல்-உள்ளத்தே பேணித்தாம் கொண்டமையை "என்னுயிருட் புகுந்தாய்இன்னம் போந்தறியாய்" என்று அருளிச் செய்துள்ளார். இந்தப் பதிகத்தில் அடைக்கலம் தரும் உணர்வும்,துணையாய் அமைய வேண்டும் என்ற வினாவும் நின்னைத் தவிர துணைவேறல்ல என்ற நிலையும் ஈரத்தன்மை உடைய கருத்துக்கள்.
திருநின்றியூரில்
பின் திருவலம்புரம் வணங்கி, திருச்சாய்க்காடு தொழுது திருவெண்காடு பணிந்தேத்தித் திருநின்றியூர் போய்ச் சேர்ந்தார். திருநின்றியூரில் நம்பியாரூரர் சிலநாள் தங்கியுள்ளார். அப்போது "திருவும் வண்மையும்" என்று தொடங்கும் திருப்பதிகத்தை அருளிச் செய்தார். இத்திருப் பதிகத்தின் பொருளடைவு நெஞ்சு நெகிழச் செய்வது; அன்பினால் கரைந்துருகச் செய்வது. இத் திருப்பதிகம்-இறைவன் ஆட்கொள்ளத் தக்கவரை ஆட்கொள்ள நிகழ்த்திய திருவிளையாட்ல்கள் பலவற்றைத் தொகுத்து அடைவு செய்து பாடியுள்ள பதிகம்; ஒரு அருமையான பதிகம். இறைவன் பலரை ஆட்கொண்டருளிய செய்திகள் கேட்டு, ஆரூரரும்- "ஆட்கொள்ளப் பெறுவேன்” என்ற எண்ணத்தில் வந்ததாக அருளியுள்ளார்.
செப்பரிய புகழ் நீடூர்
ஆரூரர், திருநின்றியூர் வணங்கி மகிழ்ந்து மேலும் யாத்திரையைத் தொடங்குகின்றார். யாத்திரையில் திருப்புன் கூரை நோக்கிப் பயணமானார். திருப்புன்கூரை நோக்கிச் செல்லும் பொழுது அண்மையில்-வழியில் இருந்த நீடுர் திருத்தலத்தைச் சென்று பணியாது சென்றார். பொதுவாக எல்லாத் திருத்தலங்களிலும் இறைவன் எழுந்தருளியிருக்கின்றான்! ஆயினும் ஆரூரர் நீடுருக்குச் சென்று வழிபாடியற்றினால் நீடுருக்குப் பெருமை சேரும்! நீடூர் மக்கள் நலம்பெறுவர் என்ற திருக்குறிப்பில் நீடுருக்கு வரும்படி அழைக்கின்றார்! ஆரூரரும் இறைவனின் அழைப்பை ஏற்று நீடூர் செல்கின்றார். சேக்கிழார் "செப்பரிய புகழ் நீடுர்" என்று பாராட்டுகின்றார்.
நீடுரின்கண் இப்பொழுது நமது சமய மரபினர் வாழ்நிலை எண்ணிக்கை குறைந்துள்ளது. முகம்மதியர்கள் நிறையப் பேர் வாழ்கின்றனர். ஹாங்காங் முதலிய நாடுகளில் சென்று பொருள் ஈட்டி நீடூரின் புகழ் வளர்க்கின்றனர். நீடுரைச் சார்ந்த திரு. அய்யூப்...ஹாங்காங்கில் வாழ்கிறார். நல்ல அன்பர்; விருந்தோம்பல் இயல்பினர். நாம் ஹாங்காங் கிற்கு 1982ஆம் ஆண்டில்சென்ற பொழுது இவருடைய இனிய அன்பில் மூழ்கும்பேறு கிடைத்தது.
திருநீடுரில் அருளிச் செய்த பதிகத்தை, "மெய்ப்பொருள் வண்டமிழ்மாலை" என்று சேக்கிழார் சிறப்பித்துப் பாராட்டுகின்றார். ஏன்? இறைவன் கற்ற கல்வியிலும் இனியான்! குற்றமொன்றும் இல்லாத அடியார்கள் எளிதில் இறைவனை அடையலாம். மாய மனம் கெடுத்து, மனம் கொடுத்து, மனத்துள் அறிவாக நின்றருள் செய்வான்! துன்பத் தொடக்கிலாததே இன்பம் என்றும், உயிர்களின் பிறப்பு, வினைகளியற்றல், வினைப்பயன் நுகர்தல், இன்ப அன்பு அடைதல் ஆகியவற்றை முறையாக வகுத்தும் தொகுத்தும், கூறுதலின் "மெய்ப் பொருள் வண்டமிழ்மாலை" என்றார். திருநீடுரை வணங்கி திருப்புன்கூரை யணைந்து வழிபாடு செய்து கொண்டு திருக்கோலாக்காவைச் சென்றடை கின்றார்.
திருக்கோலக்கா
திருக்கோலக்கா இறைவன் ஆரூரருக்கு எதிரில் வந்து காட்சி தருகிறார். ஆருரர் திருக்கோலக்காவில் எழுந்தருளியுள்ள இறைவன், திருஞான சம்பந்தர் கைகளால் தாளம் ஒற்றிப் பாடியதைக் கண்டு இரங்கி பொற்றாளம் கொடுத்தருளியதை நினைந்துருகிப் பாடுகின்றார்! இதனால் தமக்கும் இரங்கியருளுவார் என்று பாடியது, திருக்குறிப்புப் போலும்; திருக்கோலக்காவில் அருளிச் செய்த பதிகத்தில் தான்,
"நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும்
ஞான சம்பந்த னுக்குல கவர்முன்
தாளம் ஈத்தவன் பாடலுக் கிரங்கும்
தன்மை யாளனை என்மனக் கருத்தை
ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்
அங்கணன்றனை என்கணம் இறைஞ்சும்
கோளி லிப்பெருங் கோயிலு ளானைக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே!
(ஏழாம் திருமுறை-642)
என்று திருஞான சம்பந்தரைப் பாராட்டுகின்றார். திருஞான சம்பந்தர் சிவநெறியை வளர்த்தவர்; பரப்பியவர், ஆயினும் ஆரூரர் "தமிழ் பரப்பிய ஞானசம்பந்தன்” என்று சொல்வதன் பொருள் என்ன?”
தமிழே சைவம்! சைவமே தமிழ்
'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன்" என்றருளிய திருப்பாடல் படித்துப் படித்துப் பயன்பெற வேண்டிய திருப்பாடல். தமிழ் வளர்ந்த ஒரு மொழி. உலக மொழிகள் பலவற்றுக்கும் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் உண்டு. ஆனால் தமிழ் மொழியில் தமிழ் மொழி பேசும் மக்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் உண்டு. தமிழர் பன்னெடுங் காலத்துக்கு முன்பே சமயநெறி நின்றனர். தமிழ் ஒரு ஞானமொழி, இறைவனே ஆய்வு செய்து வளர்த்த மொழி; தமிழைப் படிப்பதில், தமிழ்ப் பாடல்களைக் கேட்பதில், தமிழை வளர்ப்பதில் சிவபெருமானுக்கு அளவிறந்த ஆர்வம் உண்டு.
மனிதகுல வரலாற்றியல் படி ஓர் இனத்திற்கு, சிந்தனையைத் தூண்டி வளர்ப்பது தாய் மொழியே! அறிவை வளர்ப்பதும் தாய் மொழியேயாம்; சமய ஞானத்தை வளர்ப்பதும் தாய் மொழியேயாம். உலகத்தில் எந்த ஒரு இனத்திற்குமுரிய சமயமும் அயல் மொழியில் தோன்றியதில்லை. அவ்வாறு தோன்றியதாக வரலாறு இல்லை. சமயங்கள் சில மத மாற்றங்கள் மூலம் அயலினத்தில் பரவியிருக்கலாம். நமது மொழி தமிழ், நமது சமயம் சிவநெறி; நமது சமயம் சம்ஸ்கிருதத்தையும் அம்மொழி வழிப்பட்ட வாழ்க்கை முறைகளையும் திணிக்கும் இந்து சமயமாக இருத்தல் இயலாது. நமது சமயத் தத்துவ ஞானம் காலங் கடந்த பழமையுடையது. பிள்ளைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியதாக விளங்குவது. தமிழே நாகரிகம்; நாகரிகமே தமிழ், தமிழே சைவம், சைவமே தமிழ்! அதனாலன்றோ சேக்கிழார் "செழுந்தமிழ் வழக்கு அயல்வழக்கின் துறை வெல்ல" என்றருளிச் செய்தார். இன்றோ நமது சமயத்தில் தமிழ், இரண்டாம் நிலைக்குத் தள்ளப் பெற்று சமஸ்கிருதம் முதல் நிலையை அடைந்திருக்கிறது. இது வாய்மைக்கும் வரலாற்றுக்கும் பொருந்தாத நிலை. தமிழ்மொழி வழிபாடு தமிழருக்குப் பிறப்புரிமையாகும். திருக்கோயில்களில் தமிழும் தமிழ் மரபுகளும் ஆட்சி செய்ய வேண்டும்.
திருஞானசம்பந்தருடைய பண்ணிசைப் பாடலுக்கு இரங்கி உலகோர் காணப் பொற்றாளம் தந்தருளியவன் இறைவன். திருஞான சம்பந்தருக்கு இறைவன் அருளிச் செய்ததை நினைத்த பொழுது தனக்கு, திருக்கோளில் நெல்மூட்டை எடுத்துக் கொண்டு வந்த பெருங்கருணைத் திறனும் நினைவிற்கு வருகிறது. அந்நிகழ்ச்சியை நினைந்து பாடுகின்றார்.
பொதிசோறும் குளிர்நீரும் கொடுத்தபிரான்
திருக்கோலக்காவை வணங்கி மகிழ்ந்த பிறகு சீகாழி என்று போற்றி வணங்கிக் கொண்டு திருக்குருகாவூர் செல்கின்றார். சுந்தரருக்குத் தோழன் இறைவன். தன்தோழன் நம்பி ஆரூரர் பசித்து வருந்திய நிலையில் வருவதை அறிந்து, தண்ணீரும் பொதி சோறும், கொண்டு போய் வைத்துக்கொண்டு ஆரூரர் வரும் வழியில் எம் பெருமான் காத்திருக்கின்றார். ஏன்? பெருமானுக்கு இரட்டைப் பொறுப்பு! ஒன்று, தோழர் சுந்தரரைப் பாதுகாப்பது. பிறிதொன்று பரவையாரின் கணவரைக் காப்பது! பெருமானே முன்னின்று பரவையாரிடம் தூது போய்த் திருமணம் செய்து வைத்தார். அந்த வகையில் சுந்தரருடைய வாழ்க்கைத் துணைநலமாகிய பரவையாருக்கு நலம் செய்து மங்கல - நூணைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பைச் சிவபெருமான் ஏற்றுக் கொண்டிருக்கிறார். சமய வாழ்க்கையில் இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் தனித்தனியே கடமைகளும் - பொறுப்புக்களும் உண்டு. இறைவன் நம்பியாரூரர் வரும் வழியில் இத்தண்ணீர்ப்பந்தல் இருக்கிறது. தண்ணீரும் பொதிசோறும் கொண்டு வந்து காத்திருக்கிறார். உண்பவர்கள் காத்திராமல் உண்பிக்கப் பெறுதல் வேண்டும் என்ற மரபு அறிக. தண்ணீர் என்று வாளா கூறாமல் "உண்ணீர்" என்றார். அடுத்து வரும் பாடலில் உண்ணீர் அமையும் பாங்கு கூறப்பட்டுள்ளது. "ஏலாறுங் குளிர் தண்ணீர்” என்று கூறப்படுதலறிக. குளிர்ந்த நீரே குடிக்கத் தக்கது. “குளிர்ந்த” என்பதால் கொதிக்க வைத்துக் குளிர்ந்த தண்ணீர் என்று பொருள் கொள்ளற்க; குளிர்ந்த நீரே உடலுக்கு நல்லது 'உண்ணீர்' என்பது உண்ணப் படுதலுக்குரிய தண்ணீர் என்று பொருள் தருகிறது. அதாவது உண்பதற்குத் தகுதியுடைய தண்ணீர். எல்லாத் தண்ணீரும் உண்ணக் கூடியதல்ல, "உண்ணீர்” என்று தண்ணீரை முதலிற் கூறியது பசியினும் நீர்வேட்கையே முதலில் தணிப்பதற்குரியது என்பதறிய! நீர்வேட்கை தணியாமல் உணவு உண்பது உடல் நலத்திற்குக் கேடு. தாமே விரும்பி வலிந்தாட் கொண்ட நம்பியாரூரரைப் பாதுகாக்கக் குருகாவூர் அமர்ந் தருளும் இறைவன் காத்திருந்தார். தம்பிரான் தோழரும் திருத்தொண்டர்களுடன் தண்ணீர்ப் பந்தலையடைந்து உட்புகுந்தார். -
வேதியர் வடிவில் நின்றருளும் இறைவன்பால் இனந் தெரியா ஈர்ப்பில் தம்பிரான் தோழர் இறைவனருகில் சென்று "சிவாய நம" என்று பேசி அமர்கின்றார். அதாவது பழைய காலத்தில் ஒருவரையொருவர் சந்திக்கின்றபோது முதலில் "சிவாய நம” எனச் சொல்வது மரபு. இப்போது இந்த மரபைச் சைவத் தமிழ் மக்கள் கடைப்பிடிப்பது நல்லது. ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுது "சிவ சிவ" என்று கூறலாம். வேதியர் (சிவம்) நம்பியாரூரருக்குப் பொதி சோறளிக்கின்றார். நம்பியாரூரர் யாண்டும் எளிதில் உண்பவரல்லர். ஆனாலும் ஈண்டு விலக்க இயலாது என்று கருதி வாங்கி உண்கின்றார். சுந்தரர் சிவச்சிந்தனையே தொழிலாகக் கொண்டவர். தண்ணீரைக் குடிக்கும் பொழுதும் இறைவன் திருவருளைச் சுவைத்து அனுபவிப்பது போல் குடித்தாராம். இறைவன் நாமத்தை உளம் நிறைந்து வழியும் பெருகிய அன்பால் வாழ்த்தி உண்கின்றார். ஈண்டு அவ்வுணவை விலக்கா மைக்குக் காரணம் சிவம் தருவது. அடுத்து, பசியின் கொடுமை. தம்பிரான் தோழருடன் அடியார்கள் மற்றும் பசித்து வந்தோர் எல்லோரும் உண்டார்கள். உண்டு முடிந்த பின் ஆரூரர் ஓய்வாகக் கண் துயின்றார். உண்டபின் உறங்கலாம்-உறங்கக் கூடாது என்று இரு வேறு கருத்துள்ளது. தமது நாட்டு மரபு பகலில் உண்ட பின் உறங்கக் கூடாது என்பது, மேலை நாட்டார் கருத்து உறங்க வேண்டும் என்பது. பகலில் ஒரு மணி நேரம் (பகல் 1 மணிமுதல் 2 வரை) உறங்குவது பல மணி நேரம் உறக்கம் கொண்ட பயனைத் தரும் என்று கூறுகின்றனர். நமது மரபிலும் பகலில் இவ்வாறு உறங்கும் பழக்கம் இருந்திருக்கிறது என்பதை இதனால் அறிய முடிகிறது. நம்பியாரூரர் உறங்கும் பொழுது வேதியர் மறைந்து விட்டார்; தண்ணிர்ப் பந்தருடன் மறைந்து விட்டார். நம்பியாரூரர், துயில் நீங்கித் திருக்குருகாவூர் வெள்ளடை சென்றடைகின்றார்.
திருக்குருகாவூர் வெள்ளடை என்ற திருத்தலம் இன்று திருக்கடவூர் என்ற பெயரில் வழங்கப் பெறுகிறது. இறைவன் பெயர் வெள்விடைநாதர். வெள்ளடை என்பது தத்துவ நிலையில் பரமாகாசத்தைக் குறிக்கும். "வேதனை தீர்தரு வெள்ளடை” என்பது திருமந்திரம்.
இறைவன் அளித்த சோறுண்டு உறங்கி விழித்த நிலையில் தண்ணீர்ப் , பந்தரைக் காணோம்! இத் திருப்பதிகத்தில் இறைவன் பசியால் வருந்திய ஆரூரனாருக்குப் பொற்சோறளித்துக் காப்பாற்றியதை ஆருரர் நன்றி உணர்வுடன் பாடிப் பரவுகின்றார். "ஆவியை போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்” என்றும் “பாடுவார் பசி தீர்ப்பாய்” என்றும் அருளியுள்ளமை அறிக. சுந்தரர் உலகியல் வாழ்க்கையை முழுதுற வாழ்ந்தாலும் இறைவனுடன் இரண்டறக் கலந்து நின்று இறைவன் திருவருளைத் துய்த்து அனுபவித்தார்
"பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற்
சுவையொப்பாய் கண்ணிடை
மணியொப்பாய் கருஇருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே."
(ஏழாம் திருமுறை-294)
என்பது சுந்தரர் திருப்பாடல். பண்ணிடைத் தமிழ் செவிப்புலனுக்கு இன்பம் தருவது பழந்தினிற்சுவை நாவிற்கும் உடலுக்கும் இன்பம் தருவது கண்ணிடைமணி, உறுதியுணர்த்துவது. கண்ணிடைமணி என்றதால் உயிரின் தண்மணியுள் நின்று இறைவனைக் கண்டு மண்ணில் வாழும்பொழுது இடர்கள் வாராமல் காத்து நிற்கும் அருள் திறனை ஆரூரர் நினைந்துருகிப் பாடுகின்றார்.
வெள்ளடைத் தலைவா! என் மரணத்தைத் தவிர்த்து என்னை ஆட்கொண்டருளிய தலைவா! அடியார்களின் துன்பத்தை இறைவன் ஒருபோதும் தரியான் என்பதை உணர்த்த "போந்தனை தரியாயே!” என்றார். நம்பியாரூரர் நன்றிக் கட்டுப்பாட்டுணர்வுடன் சாவே வந்தாலும் நின் கருணையை மறக்ககில்லேன் என்று திருவருள்பால் தாம் கொண்டுள்ள கடைப்பிடியை உணர்ந்துகின்றார்.
இறைவன் தோலுடுத்து உழல்கிறான். ஆனால் நம்பியாரூரருக்குப் பொன், துகில் முதலியன தந்தருள் செய்கிறான். இறைவன் உயிர்கள் மாட்டுக் கருணையுடன் பொன்னும், மணியும் தந்து போகத்தில் புணர்த்தி வாழ்வித்தருள்கின்றனன் என்ற சைவ உண்மை உணர்த்தப் பெறுகிறது. திருக்குருகாவூர் வெள்ளடையில் எழுந்தருளியுள்ள இறைவனை, இன்னமுதைச் சுந்தரர் தம் கண்களால் பருகி அனுபவித்தார். திருவருள்-திருவருளின்பம் நுகர்ச்சியாதலால் கண்களால் பருகியதாகக் கூறினார். பெருமானை உள்ளத்தே நாடி போக நிலையில் அனுபவித்து வரும் பெருங்காதலுடைய நம்பிகள், பெருகிய அன்புடன் இறைவனைத் தொழுது, சூழ்ந்துவந்த தொண்டருடன் திருக்குருகாவூர் வெள்ளடையில் தங்கி வாழ்ந்தார். இத்திருத்தலத்தில் பண்ணார்ந்த திருப்பதிகம் பாடியே வணங்கி வந்துள்ளார். இந்தத் திருப்பதிகம் கிடைத்திலது. சில நாள் திருக்குருகாவூர் வெள்ளடையை வணங்கி மகிழ்ந்த பிறகு இறைவன் விருப்புடன் எழுந்தருளியுள்ள பல திருத்தலங்களையும் வணங்கிக் கொண்டு திருத்தில்லையை அடைநதார்.
திருக்கழிப்பாலை
இத்த யாத்திரையில் தென் திருமுல்லைவாயில், திருமயேந்திரப் பள்ளி, திருநல்லூர் பெருமணம் முதலிய திருத்தலங்களை வழிபட்டிருக்கக் கூடும் என்று கருதப் பெறுகிறது. ஆனால் சேக்கிழர் 'கழிப்பாலை தொழுதேத்தி” என்று கூறுவதால் திருக்கழிப்பாலை என்ற திருத்தலத்தை வணங்கிச் சென்றுள்ளார். திருக்கழிப்பாலை என்ற திருத்தலம் இருந்தது. இந்தத் திருத்தலத்தை கொள்ளிடம் ஆற்றின் வெள்ளம் கொண்டு போய்விட்டது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் "மூர்த்தி, இப்போது சிவபுரி திருக்கோயிலில் எழுந்தருளச் செய்யப் பெற்றுள்ளது. திருக்கழிப் பாலையில் நம்பியாரூரர் அருளிச் செய்த திருப்பதிகம் மிகவும் அருமையானது. இறைவனின் திருவிளையாடல்கள் பலவற்றையும் வியந்து பாராட்டிப் புகழ்ந்து பாடிய பதிகம் இது தத்துவ விளக்கங்களும் நிறைந்த பதிகம் இது.
கண்டம் கறுத்தவன்
நம்பியாரூரருக்கும் இறைவனுக்கும் உள்ள உறவுகள் விரித்துரைக்கப் பெறும் பதிகம் இது. உயிர்கள் தீவினையில் கிடந்துழன்றாலும் இறைவன் வந்து உடன் எடுத்தாள மாட்டான் என்பது முதற்பாட்டின் கருத்து. வினை, துய்த்துக் கழிக்கப் பெற வேண்டியது. வினைப்போகம் அழியும் வரையில் இறைவன் மருந்துண்ணும் குழந்தைக்குத் தாய்போல நின்று ஆட்கொள்கிறான். இது பாசம் சேர்ந்த உலகியல் வாழ்நிலை. இறைவனுக்கு ஒருர் இல்லை. ஆதலால், ஆரூரர் எங்கிருந்து அழைத்தாலும் ஆங்கு இறைவன் சென்று ஆட்கொள்வான்! ஆட்கொண்டருளியது மட்டுமின்றி இறைவன் நம்பியாரூரருடன் நின்றருளி ஆட்கொள்பவன். இறைவன் தனது ஆட்கொள்ளும் திறத்தில் ஒறுத்தலும் உண்டு; பொறுத்தலும் உண்டு. ஆனால் முடிவாக இறைவன் அருளுதலையே தன்மையாக உடையவன் என்பதைப் புலப்படுத்த "கண்டங் கறுத்தாய்” என்றார்.
ஒறுத்தாய் நின்னருளில் லடியேன்பி ழைத்தனகள்
பொறுத்தாய் எத்தனையும் நாயேனைப்
பொருட்படுத்துச்
செறுத்தாய் வேலைவிடம் மறியாமல் உண்டுகண்டங்
கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே!
(ஏழாந் திருமுறை-231)
என்பது திருப்பாட்டு, திருக்கழிப்பாலையில் எழுந்தருளியுள்ள பழிசேரில் புகழானைப் பணித்தேத்தித் தில்லை நகருக்குப் பயணமானார்.
பெரியோனுக்கருளிய பெரியோன்
நம்பியாரூரர் திருத்தில்லையை மூன்றாவது முறையாக வழிபட்டார். தில்லை நகரில் பல ஆண்டுகள் தங்கி வணங்கினார். தில்லையின் மீது ஆரூரருக்குப் பெருமதிப்பு உண்டாதலின், புறத்தே வேறொரு பதியில் தங்கினார் என்று சிவக்கவிமணி கூறுவார். தில்லையில் பல பொழுதுகள் வணங்கி மகிழ்ந்த நிலையில், திருத்தினை நகர் என்ற திருத்தலத்திற்கு வந்து சேர்ந்தார்.
இன்று தீர்த்தன கிரி என்று விளங்கும் ஊர் 10ஆம் நூற்றாண்டில் ஆரூரர் காலத்தில் திருத்தினை நகர் என்று பெயர் பெற்றிருந்தது. கடலூர்-சிதம்பரம் சாலையில் உள்ள சிற்றூர். புதுச் சத்திரம் புகை வண்டி நிலையத்தின் அண்மையில் இருக்கிறது. இத்திருத்தலம் புதுமை விளைவித்தது; புரட்சி பூத்தது. பள்ளர் வகுப்பைச் சேர்ந்த பெரியான் என்ற ஒருவன், உழு தொழிலைத் தொழிலாக உடையவன். ஒரு நாள் பள்ளன் பெரியான் உழுது கொண்டிருக்கும் பொழுது, பெருமான், ஜங்கமர் திருக்கோலத்தில் வந்து உணவு கேட்கிறார். பெரியானிடத்தில் அப்போது கையில் உணவு இல்லை. ஊருக்குள் உணவு எடுத்து வரச் சென்றான். பெரியான் வருவதற்குள், அவன் உழுத நிலத்தில் தினை விளைந்து விட்டது. ஜங்கமரைக் காணோம். எல்லாம் இறைவனின் திருவருள் செயல். பள்ளன் பெரியான் சிலை திருக்கோயிலில் இருக்கிறது. திருத்தினை நகருக்கு ஆரூரர் வந்து வணங்கி மகிழ்ந்தார். பாடியருளிய பதிகங்கள் கிடைக்கவில்லை.
ஆவியிலும் அடைவுடையார்
திருத்தினை நகரிலிருந்த நிலையில் ஆரூரருக்குத் திரு நாவலூர் நினைவுக்கு வருகிறது-கருத்திற்கு வருகிறது! பிறந்த மண் அல்லவா? எல்லோருக்கும் அவரவர் பிறந்த மண்ணின் மீது ஒரு தனி விருப்பம் இருப்பதுண்டு. பலகாலும் ஓடி விளையாடிப் பழகிய நிலமல்லவா? இதற்கு ஆரூரரும் விதி விலக்கல்லர். திருநாவலூர் செல்லும் வழியில் திருமாணிகுழி, திருப்பல்லவ நகரம், திருமுண்டிச்சரம் திருக்குணபரவீச்சுரம், திருவதிகை வீரட்டம், திருவாமூர், சித்தவடம், திருமணம் வந்த புத்தூர் ஆகிய திருத்தலங்கள் வழியே திருநாவலூர் வந்தணைந்தார். திருநாவலூரின்கண் வாழ்வோர் மிக்க மகிழ்ச்சியோடு ஆரூரரை வரவேற்கின்றனர். ஆரூரர் திருநாவலூருக்கு வரும் நாள் "பெருவாழ்வு" வரும் நாள் என்று எண்ணி மகிழ்ந்து வரவேற்றனர். வரவேற்பில் உழவர்களும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். ஆரூரர் திரு நாவலூரில் எழுந்தருளியுள்ள ஆவியினும் அடைவுடையார் அடிக் கமலம் தொழுது வணங்குகின்றார். திருப்பதிகம் பாடியருளினார். ஆவியிலும் அடைவுடையார் என்பதற்கு, ஒருவர்க்கு அவர்தம் உயிர்நிலை செய்யும் உதவியிலும் மிகக் கூடிய உதவியைச் செய்யும் இறைவர் என்பது கருத்து. அதனால் இறைவனைச் சார்பாகக் கொண்டொழுகுதல் பயனுடைய வாழ்க்கை.
திருநாவலூர் வந்து சேர்ந்த நம்பி ஆரூரர் தமிழ்ப்பதிகம் ஓதி வழிபாடு செய்தார். இத்திருப்பதிகம் சிறந்த பொருட் செறிவு உடையது. இத்திருப்பதிகத்தில் நம்பி ஆரூரர் தமது வரலாற்றைப் பற்றி விவரித்துப் பாடுகின்றார். திருவெண்ணெய் நல்லூரில் இறைவன் ஆட்கொண்ட வரலாறு எடுத்துக் கூறப்பெறுகிறது. திருவெண்ணெய் நல்லூர்த் திருக்கோயிலில் உள்ள நாட்சபையில் ஆவணங்காட்டி ஆட்கொள்ளப் பெற்றார் என்ற செய்தி தெளிவாக ஐயத்திற்கிடமின்றி எடுத்துக் கூறப்பெற்றுள்ளது.
"நாட்சபைமுன்
வண்மைகள் பேசிட வன்றொண்டன்
என்பதோர் வாழ்வுதந்தார்”
"வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்டார்”
என்ற பதிகத்தின் வரிகள் நினைவில் கொள்ளத்தக்கன. நம்பியாரூரர் பல நாள் திருநாவலூரில் தங்கி வழிபட்டார். திருநாவலூரிலிருந்து திருக்கழுக்குன்றத்திற்குப் பயணம் செய்தார்.
திருக்கழுக்குன்றம், செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள ஓர் அழகிய சிற்றூர். மலைமீது திருக்கோயில் இருக்கிறது. மாணிக்கவாசகர் திருக்கழுக்குன்றத்தில் எழுந்தருளியுள்ள அம்மை அப்பர் மூர்த்தியைத் "தொன்மைக்கோலம்" என்று புகழ்ந்துரைக்கின்றார்.
"தோலும் துகிலுங் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசும் சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்துரதாய் கோத்தும்பீ”
என்பது திருவாசகம். தமிழ்நாட்டு வரலாற்றில், தொன்மைக் காலத்தில் அம்மையப்பர் திருமேனியை வழிபடுந் திருமேனியாகக் கொண்டொழுகு வந்திருக்கின்றனர்.
ஐங்குறுநூற்றில்,
"நீல மேனி வாலிழை பாகத்
தொருவ னிருதா னிழற்கீழ்
மூலகை யுலகு முகிழ்த்தன முறையே"
என்ற பாடலும் ஒப்பு நோக்கத்தக்கது.
பிச்சையெடுத்த பெருமாள்!
திருக்கழுக்குன்றத்தில் நம்பியாரூரர் பலநாள் தங்கியிருந்து வழிபாடு செய்தார். அதன்பின், உள்ளத்தில் வளர்ந்த சிவஞானப் பெருக்கு உணர்வில் திளைத்த வண்ணம் திருக்கச்சூரைச் சென்றடைந்தார். திருக்கச்சூர், வரலாற்றுப் புகழ்மிக்க திருத்தலம். சமூக விஞ்ஞானம் வெளிப்பட்டு ஒழுக்கமாகச் செயற்பட்ட திருத்தலம்.
திருக்கச்சூர், ஊர்ப்பெயர்: திருத்தலத்தின் பெயர் திரு ஆலக்கோயில், தலமரம் '(தலவிருக்ஷம்) ஆலமரம், ஆதலால் ஆலக்கோயில் என்று பெயர்பெற்றது. இறைவனின் பெயர், ‘விருந்திட்ட நாதர்'. அம்மையின் பெயர் உமையம்மை. இங்கு தியாகராசர் சன்னதியும் உண்டு. இத்திருக்கோயிலில் மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சியில் அமைத்த ஒரு கல்வெட்டில், திருக்கோயிலில் "அறிஞர் அவை இருந்தது தெரியவருகிறது. இது ஒரு நல்ல மரபு. இப்போது இல்லை. திருக்கோயில் வளர்ச்சியில் பெரிதும் ஆர்வம் காட்டும் மாண்புமிகு அமைச்சர் ஆர். எம். வி. அவர்கள் இத்துறையில் கவனம் செலுத்துவது நல்லது. திருக்கோயிலுக்கு மேற்கே மருந்துமலை, (ஔக்ஷத கிரி) என்ற பெயரில் ஒரு மலை இருக்கிறது. இங்கு விருந்திட்ட ஈசர் பெயரில் சன்னிதி விளங்குகிறது. நம்பியாரூரர், திரு ஆலக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனை தமக்கு இன்னமுதாய் விளங்கிய பெருமானை அன்புருக வழிபாடு செய்து புறம் போந்தார். இப்படி வந்தநேரம் நண்பகல் பொழுது, உணவருந்தும் நேரம். ஆரூரருக்குப் பசி, திருவமுது ஆக்கித்தரும் பரிசனமும் வந்து சேரவில்லை. பசித்துன்பத்துடன் திருக்கோயிலின் முன்றிலில் நம்பியாரூரர் அமர்ந்திருந்தார். சேக்கிழார் இந்த இடத்தில் நயத்தக்க நகைச்சுவையுடன்,
"தணந்தபசி வருத்தத்தால் தம்பிரான் திருவாயில்
புணர்ந்தமதிற் புறத்திருந்தார். முனைப்பாடிப்
புரவலனார்”
வன்றொண்டரின் பசி பொறாத இறைவன், உடனே முன்பு இருந்த பலி ஓடு நீத்துத் திருவோடு ஏந்திப் புறப்பட்டு ஆரூரரை வந்தணுகினார். தாம் சோறு இரந்து கொண்டு வருவதாகக் கூறி எங்கும் போகாது, தாம் வரும்வரை அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டு இல்லங்கள் தோறும் சென்று சோறும் யாசித்தார்! இறைவன் இரந்துதான் ஆரூரரின் பசிநீக்க வேண்டுமா? வேறு வழியில்லையா? நூறாயிரம் வழிகள் உண்டு! ஆனால் இரந்தூட்டும் வழியே மிகமிகப் பயனுடைய படிப்பினையைத் தரும்வழி! தமக்கு அன்புபட்டவர் துயரினை இரந்தாகிலும் மாற்றுவதே அறம், சால்பு கடமை நிறைந்த பெருவாழ்வு என்பதனை உணர்த்த இதனினும் சிறந்த வழி ஏது? இறைவன் இரந்து சேர்த்த உணவை ஆரூரர் முன் கொண்டுவந்து கொடுத்தான்! ஆரூரர் அந்தணாளரின் திறம் நினைந்து தொழுது வணங்கி வாங்கினார்! வாங்கிய திருவமுதைத் தமது திருக்கூட்டத்தினருடன் உண்டுகளித்தார்! அந்தப் பொழுதில் திருவமுது கொண்டுவந்தருளிய அருகிருந்த அந்தணாளரைக் காணவில்லை! ஆரூரர் அமுதளித்தவன் இறைவன் என்று உணர்ந்து இறைவன் தன் பொருட்டாக வீடுகள்தோறும் இரந்துவந்து ஊட்டிய அளப்பிலாக் கருணையை நினைந்து நினைந்து உருகிப் பாடுகின்றார்.
"கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
கண்டால் அடியார் கவலாரே
அதுவே யாமா றிதுவே கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே!”
என்றும்,
"கச்சேர் அரவொன் றரையில் அசைத்துக்
கழலும் சிலம்பும் கலிக்கப் பலிக்கென்(று)
உச்சம் போதா ஊருர் திரியக்
கண்டால் அடியார் உருகாரே!”
என்றும்,
"காதல் செய்து களித்துப் பிதற்றிக்
கடிமா மலரிட் டுனையேத்தி
ஆதல் செய்யும் அடியார் இருக்க
ஐயங் கொள்ளல் அழகியதே!”
என்றும் வரும் திருக்கச்சூர்த் திருப்பதிகப் பகுதிகள் நம்பியாரூரரின் வரலாற்றுக்குரிய அகச்சான்றுகள்.
இந்த வரலாற்றின் மூலம் பெறக்கூடிய படிப்பினை, பசி ஒரு பிணி, கொடிய பிணி, பசி நீங்கி வாழ்ந்திடச் சோறளிப்பது வாழ்வியல் ரீதியான கடமை - அறம் என்பதாகும். இந்தப் பணியை இறைவனே மேற்கொண்டு செய்தது, சைவத் தமிழுலகம் படிப்பினை பெற்றுக் கொள்ளவேயாம்! ஆனால் படிப்பினை கிடைத்ததா? இன்றைய சமய உலகு என்ன செய்கிறது? புதுப்புதுப் புனைவுகளை - சடங்குகளை இயற்றுகிறது! பிரச்சாரம் பலமாகச் செய்கிறது! ஆனால் எங்கேயும் தொண்டினைக் காணோம்; திருத்தொண்டினையும் காணோம்.
ஒருவரின் துன்பம் நீங்கினால் மட்டும் போதாது! துன்பநீக்கப் பணி, விலைப்பாடும் அருமைப்பாடும் உடையது என்று உணர்தல் வேண்டும். அதனால் நினைப்பின் அளவிலேயே காரியங்கள் ஆற்றவல்ல இறைவன் வீதிதோறும் நடந்து, மனைதோறும் சென்று இரந்து வருகின்றான். இத்தகு நிகழ்வுகளே, அன்பைத் தூண்டி இயக்கும். இன்று இதுபோன்ற நிகழ்வுகளைக் காண இயலவில்லை. மாறாகப் பசுத்தோல் போர்த்த புலிகள் போன்று களவும், சூதும் செய்பவரும் மனித நேயத்திற்கு எதிரான சுரண்டும் நெறி நிற்பவா்களுமே உலகில் மிகுந்து காணப்படுகின்றனா். இன்று சமய உலகின் பணியாளா்கள், தொண்டா்கள் என்போருக்கு உடைமைகள் உள்ளன, ஏன்? உடைமைப் பற்று பெருகிச் சிவச் சிந்தனையும் தொண்டாா்வமும் அருகி வருகின்றது. உண்மையான பத்திமை உணா்வு இருப்பின் என்றும் வரலாறு பொய்யாவதில்லை; பொய்த்துப் போவதில்லை; இன்றும் நிகழக்கூடியதே!
வரலாறு மாறலாம் மாறும். மாறுதல், வளா்ச்சியின் பாற்பட்டதே! அழிவதன்று! இங்ஙனமின்றி வரலாறு தொடராக நிகழவில்லை என்றால் வரலாற்றின் உயிா்ப்புத் தன்மையைப் பாதுகாக்கும் திறமை வாழ்வோருக்கு இல்லை என்றே கருதவேண்டும். உயா் ஆற்றல்கைளயும் இயக்கும் மனிதன் உயிா்ப்புடன் வாழ்ந்தால் நடக்க இயலாதது என்று ஒன்றும் இல்லை.
திருக்கச்சூாிலிருந்து நம்பியாரூரா் பயணமாகி, திருமுக்கூடல் திருவில்வம், திருமாகறல், திருக்குரங்கணில் முட்டம் முதலிய திருத்தலங்களை வழிபட்டுக் கொண்டு, காஞ்சிபுரம் சென்றடைந்தாா். காஞ்சிபுரம் செந்தமிழ் வரலாற்றிலும் புகழ் பெற்றுள்ள இடம். நம்முடைய தலைமுறையிலும் தமிழினம்-தலைநிமிா்ந்து வாழத் தொண்டு செய்து புகழ் பெற்ற பேரறிஞா் அண்ணா பிறந்து வளா்ந்து புகழ் பெற்றது இந்தக் காஞ்சிபுரத்தில்தான். அண்ணா அவா்கள் அனைத்தையும்விட தமிழின ஒருமைப்பாட்டையே மிகுதியும் விரும்பினாா்; வலியுறுத்தினாா்; வாழ்ந்து காட்டினாா். அண்ணாவின் சிறந்த நினைவு தமிழின ஒருமைப்பாடேயாகும். "பாட்டினில் அடங்காத காஞ்சியின் பெருமை" என்று கந்தபுராணம் போற்றும். "அவ்வூா் தன்னை (காஞ்சிபுரம்) எண்ணினும் கேட்பினும் சொல்லினும் வணங்கினும் போின்ப வீடெவா்க்கும் நல்குமே" என்று மாதவச் சிவஞானமுனிவா் காஞ்சிபுரத்தைப் பாராட்டுவாா். காஞ்சிபுரம் என்பது உலகியல் வழக்கு கச்சி ஏகம்பம் என்பது திருமுறை வழக்கு மீண்டும் கச்சி ஏகம்பம் என்ற வழக்கையே நடைமுறைக்குக் கொண்டு வருதல் நல்லது.
திருக்கச்சி ஏகம்பம் ஐம்பூதத் திருத்தலங்களுள் ஒன்று. அதாவது மண் (பிருதிவி) திருத்தலம் என்பர். திருத்தல வெண்பா பாடியருளிய ஐயடிகள் காடவர்கோன் ஆண்ட திருத்தலம். நம்பியாரூரர், அம்மையப்பன் கருணையால் இடக்கண் பெற்ற திருத்தலம். மற்றும் திருக்குறிப்புத் தொண்டர், சாக்கியநாயனார் முதலானோர் வாழ்ந்து, தொண்டு செய்த திருத்தலம். இங்கு எழுந்தருளியுள்ள அன்னையின் திருப்பெயர் காமாட்சி. அன்னை காமாட்சி அண்ணலைப் பூசித்த திருத்தலம்; முப்பத்திரண்டு அறங்கள் இயற்றிய திருத்தலம்; எண்ணற்ற ஆலயங்கள் நிறைந்த திருத்தலம். கந்த புராண ஆசிரியர் கச்சியப்ப சிவாச்சாரியார் வாழ்ந்து கந்தபுராணம் இயற்றி அரங்கேற்றியதும் இத்திருத்தலமேயாம்.
இத்திருத்தலத்திற்குக் கற்கக் கற்கச் சுவையமுதூறும் வகையில் புராணம் இயற்றியுள்ளார் மாதவச் சிவஞான முனிவர். காஞ்சிப் புராணம் ஒரு நல்ல தமிழ் நூல்; தத்துவங்களை எளிதில் விளக்குவது. காஞ்சிபுரத்தின் சிறப்புகளுள் முதன்மையானது, அன்னை உமையே சிவத்தைப் பிரிந்து வந்து இங்குப் பூசித்ததாகும். அன்னை காஞ்சிபுரத்தில் பெருமானை நினைந்து பூசித்துத் தவம் இயற்றிக் கொண்டிருந்தார். நாள்தோறும் கம்ப மாநதியில் மணலில் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்துகொண்டிருந்தார். எதிர்பாராமல் ஒரு நாள் கம்ப மாநதியில் வெள்ளப் பெருக்கு வந்தது. வெள்ளத்தில் சிவலிங்கம் அழியாமல் பாதுகாக்க அன்னை சிவலிங்கத்தை அணைத்துக் கொள்கிறார். வெள்ளம் வற்றுகிறது. பெருமான் திருமேனியில் வளையல் அடையாளங்கள் இன்னும் காணலாம். அடுத்து காஞ்சிபுரத்துக்கு ஏற்பட்ட பெருமை; பல்லவப் பேரரசின் புகழ்மிக்க தலைநகரமாக விளங்கியதாகும். வடமொழியையும் தமிழையும் வளர்த்த நகரம்; சிறந்த பல்கலைக் கழகங்கள் விளக்கமுற இருந்த நகரம். அப்பரடிகள் வரலாற்றில் திருப்பு மையத்தை உருவாக்கிய திருத்தலம். இத்தகைய காஞ்சிபுரம் தமிழின வரலாற்றில் புகழ் பெற்ற நகரம்.
இங்ஙனம் பழங்காலத் தொட்டு இன்றுவரை புகழ் பெற்று வளர்ந்து வருகின்ற, காஞ்சிபுரத்திற்கு கச்சி ஏகம்பத்திற்கு நம்பியாரூரர் எழுந்தருளினார். நம்பியாரூரர் தம் வாழ்வில் திருவெண்ணெய்நல்லூரில் நிகழ்ந்த நிகழ்வுகளை நினைந்து பாடுகிறார். திருவெண்ணெய் நல்லூர் இறைவனையே கச்சி ஏகம்பத்தில் பெற்றதாக நினைந்துருகி வழிபடுகின்றார். கச்சிமாநகர் மக்கள் நம்பியாரூரரை எதிர் கொண்டழைத்து வருகின்றனர். காஞ்சிபுரத்தில் நம்பியாரூர ருக்கு நடந்த வரவேற்பில்-வரவேற்பு மங்கலப் பொருள்களாகச் சிலவற்றைச் சேக்கிழார் எடுத்துக் கூறுகிறார். மணித்தோரணம், நிறைகுடம், நிறைவிளக்கு, தூபம், கொடி முதலியன கொண்டு வரவேற்கின்றனர். திரண்டு வந்த அடியார் திருக்கூட்டத்தினருடன் திருக்கோயில் நண்ணினார்; திருக்கோபுர முன்றிலிலேயே திருமேனி நிலந்தோய வணங்கி மகிழ்ந்தார்.
ஏகம்பநாதர் புண்ணியமூர்த்தி, அப்பரடிகள் தமது அருமையான தமிழால் ஏகம்பத்தில் உறை இறைவனை வாழ்த்திப் பாடியுள்ள பாடல்கள் நெகிழ்வைத் தரவல்லன. நம்பியாரூரர் ஏகம்பநாதரை நினைந்துருகிப்பாடி வழி பட்டார். கண்ணிழந்து துன்புறு நிலையில் கண் வேண்டிப் பாடுகின்றார். நம்பியாரூரர் அருளிய பதிகத்தில் பாடல் தோறும் அம்மை பூசித்த வரலாற்றை நினைந்துருகிப் பாடுகின்றார்.
"எள்க வின்றி இமையவர் கோனை
ஈச னைவழி பாடுசெய் வாள்போய்
உள்ளத் துள்கி உகந்துமை நங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி
வெருவிஒ டித்தழு விவெளிப் பட்ட
கள்ளக் கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே."
(சுந்தரர் - திருக்கச்சி. பா. 10)
என்ற பாடல் நினைந்தின்புறத்தக்கது. இத்திருப்பதிகத்தில் பாடல்தோறும், "கம்பன் எம் மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே" என்று பாடியருளியுள்ளார். இதனால், நம்பியாரூரர், இத்திருத்தலத்தில் ஒற்றைக் கண்ணை-இடக்கண்ணை அம்மையின் திருவருளால் பெற்றார் என்ற வரலாறு உணரப்படுகிறது. இத்திருத்தலத்தில் அம்மையின் தண்ணருள் நிறைந்து விளங்கியதால் இடக்கண் என்றும் உய்த்துணர்தல் இனிய இன்பமாகும்.
மாறா விருப்பிற் புறம் போந்தார்
நம்பியாரூரர் காமக்கோட்டம் தொழுது வணங்கிய பின் திருமேற்றளிச் சென்று பதிகம் அருளிச் செய்து வழிபாடு செய்கின்றார். காஞ்சிநகரத்தில் மட்டும் பல திருக்கோயில்கள் உண்டு. இதில் திருக்கச்சிமேற்றளி ஒன்று. இத்திருத்தலத்தில் அருளிச் செய்துள்ள பதிகத்தினைச் சேக்கிழார் “பாரார் பெருமைத் திருப்பதிகம்" என்று பாராட்டுகின்றார். இறைவனை வணங்கி அந்த மெய்யுணர்வைத் துய்ப்பதில் மாறாத விருப்பங்கொண்டுள்ளார் நம்பியாரூரர். அவர் “மாறா விருப்பினொடு திருக்கோயிலுக்கு வெளியே வருகிறார்” என்பது அறியத்தக்கது.
வன்தொண்டர் திருக்கச்சி மேற்றளி தொழுது பாடிய திருப்பதிகம் நிறைந்த பொருளுடையது. தத்துவ விளக்கங்கள் பொதிந்துள்ள பதிகம். இறைவழிபாட்டில் நினைப்பே தொன்மையானது; சிறப்பானது. இறை நினைப்பினைப் பெறவும் நினைப்பினை இழக்காது திரும்பப் பேணவும் பாதுகாக்கவுமே சடங்குகள். இன்றோ நினைப்பொழிந்த சடங்குகளே மிகுந்துள்ளன. இறைவன், நினைப்பில் உறவு கொள்ள வேண்டியவன். நாம் நினைத்தவுடனேயே நாம் நினைக்கின்ற வடிவுடன் நமது உள்ளத்தில் இறைவன் விரைந்து எழுந்தருள்வான். வன்தொண்டர் இந்தப் பதிகத்தில்,
“நுந்தா ஒண்சுடரே நூனையே நினைத்திருந்தேன்
வந்தாய் போயறியாய் மனமே புகுந்துநின்று
சிந்தா யெந்தைபிரான் திருமேற் றளியுறையும்
எந்தா யுன்னையல்லால் இனியேத்த மாட்டேனே"
என்பது ஒரு பாடல்.
வந்தாய் போயறியாய்
வன்தொண்டர் திருக்கச்சி மேற்றளியில் எழுந்தருளியுள்ள இறைவனை நினைத்தார். இறைவனும் வன்தொண்டர் மனதிற்குள் புகுந்தார். இங்ஙனம் வன்தொண்டர் மனதிற்குள் புகுந்த இறைவன் திரும்ப வெளியே போனதில்லை. ஆம்! பிரிவினை அறியாததுதானே இறைத் தத்துவம். ஒரோவழி தொடர்பு கொண்டு உறவுகளில் இடையறவு ஏற்படுவது விலங்கியல்பு; உறவினைப் பேணல் மானுட இயல்; என்றும் எந்தச் சூழ்நிலையிலும் பிரியாதிருத்தல் இறையியல். நாம் நரகம்புகினும் இறைவன் உடனிருப்பன். இதனை விளக்க "வந்தாய் போயறியாய்" என்றார். இறைவன் நினைப்பவர் மனம் கோயிலாகக் கொள்பவன் அல்லவா?
வன்தொண்டர் தமது வரலாற்றுக் குறிப்புகளையும் இந்தப் பதிகத்தில் எடுத்துக் கூறியுள்ளார். வன்தொண்டர் இறைவனிடம் கேட்கக் கூடியன எல்லாம் கேட்டுப் பெற்றேன் என்று கூறுகிறார். பொன், மணி, பொருள்கள், மனைவியர் ஆகிய அனைத்தையும் இறைவனிடம் கேட்டுப் பெற்றார் என்பதைக் "கேட்பதெல்லாம் கேட்டேன்” என்று கூறுகிறார். இதில் ஆரூரர் உணர்த்த நினைப்பது தாம் வாழ்தலுக்கு உரியவற்றைக் கேட்பதெல்லாம் கேட்டேன் என்றார். கேட்கக் கூடாதென எதுவும் கேட்கவில்லை என்றார்.
இந்த மானுடவாழ்க்கை, உய்தியைக் குறிக்கோளாக உடையது. உடலால் வாழ்ந்துதான் உய்தியை அடைய வேண்டியிருக்கிறது. ஆதலால் உடம்பொடு கூடிய வாழ்க்கை துய்த்து மகிழும் வாழ்க்கை இன்றியமையாதது. உயிர்கள் துய்ப்பனவாய் அமைந்துள்ள பொருள்களே உய்வைத் தரத்தக்கன. துய்ப்பனவெல்லாம் துய்த்து வேட்கை தணிந்துழித் துறவுள்ளம் தொடர்கிறது. பிறவாமை வேண்டிப் பெறும் உணர்வு கால்கொள்கிறது. வன்தொண்டர் கேட்பதெல்லாம் கேட்டுத் துய்த்தபிறகு பிறவாமை கேட்கும் நிலைக்கு உயர்ந்துவிட்டார்.
இறைவனுக்குக் குறிக்கோள் உயிர்களுக்கு உய்தியை வழங்குதல்; இன்ப அன்பினை வழங்குதல். உயிர்களுக்குக் குறிக்கோள் இறைவனை நாடி உய்தி பெறுதல். இன்ப அன்பினில் திளைத்தல், குறிக்கோள் தழுவியவர்கள் குறிக்கோளை எந்தச் சூழ்நிலையிலும் அடைய முயற்சி செய்வர்; அடைவர்; இறைவனுக்கு ஆரூரரை ஆட்கொண்டருளுவது குறிக்கோள். அதனால் ஒரோவழி நம்பியாரூரர் மறந்தாலும் இறைவன் நம்பியாரூரரை மறப்பதில்லை. இறைவன் ஏதாவதொரு யுக்தி மூலம் ஆரூரர் மனத்துள் புகுந்து நின்றருள் செய்பவர், நமது வாழ்க்கையில் என்றும் தப்பாது நின்றின்பம் பயப்பதால் இறைவனுக்கு மெய்ப்பொருள் என்றொரு திருநாமம் உண்டு.
வன்றொண்டர் இறைவன் திருவருளைப் பெற்று மகிழும் நிலையில் "என்னால் என்ன குறை” என்றே வியந்தோதுகின்றார். யாதொரு குறையுமில்லை என்பது கருத்து.
ஆரூரன் அடியான்
உயிர்கள் மேற்கொண்டுள்ள வாழ்க்கைப்பயணம் 'கருவூரில்' தொடங்குகிறது. இன்பபுரியில் முடிகிறது. ஒரே பயணமாக இடைச் சுற்றின்றி முடிந்தால் நல்லது. பலருடைய வாழ்க்கை அங்ஙனம் முடிவதில்லை. செத்துப் பிறக்கும் தொழிலுக்கே இரையாகியவர்கள் எண்ணிக்கையே மிகுதி. இவர்கள் தாயர் உலகத்திற்கும் இடுகாட்டு எரியூட்டும் தொழிலாளர்க்கும் ஓயாது வேலை கொடுப்பவர்கள்; இரங்கத் தக்கவர்கள்; ஏன் இந்த அவலம், நல்ல துணையை நாடி அடைவதில்லை. உயிர்களின் வாழ்க்கைப் பயணத்திற்குத் தனித் துணையாக விளங்கக்கூடியவன் இறைவனே யாம். மற்றவர் துணையெல்லாம் தொடர்ந்து வருபவை அல்ல. பலர் ஆசைகளின் காரணமாகப் பிரிந்து விடுவர். தன்னலந் துறந்து அன்பு பொழிந்த தாயும் செத்துப் போகிறாள். சிலர் அவர் தம் குறை காரணமாக நமக்கும் குறையுடைய வழியே காட்டுவர். இறைவன் ஒருவனே தன்னலம் இல்லாதவன். அதனால் அவன் கவனம் எல்லாம் நம்பாலதாகவே அமையும். இறைவன் திருவருளே குறைவிலா நிறைவு. ஆதலால் இறைவன் ஒருவனே குறையற்ற வழிகாட்ட இயலும். ஆதலால் இறைவனே உயிர்களுக்குற்றத் துணை, தனித்துணை என்று கூறி ஆற்றுப்படுத்துகின்றது இந்தப் பதிகம். இத் திருப்பதிகம் தன்னை ஆட்கொண்டருளிய ஆரூரருக்கே தான் வழியடிமை கொண்டிருப்பதை விளக்க 'ஆரூரரன் அடியவன்' என்று வியந்து கூறுவது அறிக.
- தோழமைத் திறனும் அடிமைத் திறனும்
திருக்கச்சிமேற்றளியைத் தொழுது மகிழ்ந்த நம்பியாரூரர் பயணத்தைத் தொடர்கிறார். கச்சியேகம்பத்திற்குச் சிறிதுதொலைவில் உள்ள திருவோணக்காந்தன்தளி என்ற திருத்தலத்திற்குச் செல்கிறார். ஒணன், காந்தன் என்கிற இரண்டு அசுரர்கள் பூசித்த திருத்தலமாதலால் அவர்கள் பெயரிலேயே இத்திருத்தலம் விளங்கி அழைக்கலாயிற்று. இந்த வரலாற்றால் பழங்காலத்தில் எல்லோரும் திருக் கோயிலில் இறைவனைப் பூசிக்கின்ற உரிமை பெற்றிருந்தனர் என்பது தெரியவருகிறது. இரண்டு மூர்த்திகள் ஒரே திருக் கோயிலுக்குள் அமைந்துள்ளன.
இத்தலத்தில் நம்பியாரூரர் அருளிச்செய்த பதிகம், நலம் பல உடையது. தோழமைத்திறமும் அடிமைத்திறமும் ஒருசேர விளங்கத்தக்க வகையில் பதிகம் அமைந்துள்ளது; அருமையுடையது. தோழமைத் திறத்தைக் கேலிப்பேச்சுக்களாலும் அடிமைத்திறத்தை ஏவல்கேட்பதாலும் அறியலாம். தோழமை யுடையாரில் பலர், தோழமையின் பாற்பட்ட சலுகையால் அடிமைத்திறம் அறியார்; அடிமைத்திறம் காட்டமறுப்பர். ஆனால் நம்பியாரூரருக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு தோழமை வழிப்பட்டதேயாம். ஆனாலும் நம்பியாரூரர், இறைவனுக்கு அடிமைத்திறம் பூண்டொழுகுவதிலும் சிறந்து விளங்கினார். நம்பியாரூரர் கொண்ட அடிமைத்திறம் பெருகும் அடிமைத்திறமாகும். அதாவது, அடிமை பூண்பதில்கூட சோர்வு படாமை என்றறிக "கையிலொன்றும் காணமில்லை" என்பது, நம்பியாரூரரின் வறுமை நிலையைக் காட்டுகிறது. அதாவது காசு ஒன்றும் கையில் இல்லாத நிலை. பூசையின் மரபுகூறி காணம் இல்லை என்றதால் பூசனை செய்யப் பொருள் வேண்டும் என்பதாயிற்று. இறைவழி பாட்டில் ஈடுபட்டால் ஐம்பொறிகளும், ஐம்புலன்களும் ஒத்துழைக்கும்; குற்றேவல் செய்யும். பூசையில் ஈடுபடுத்தப் பெறாத பொறிகள், புலன்கள் துன்பக்குழியில் வீழ்த்தும் என்பது உண்மை.
இத்திருப்பதிகத்தில் உள்ள அனைத்துப் பாடல்களுமே நாள்தோறும் ஒதத்தக்கன; நயமுடையன
கு.IX.19"பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்
பேணி உம்கழல் ஏத்து வார்கள்
மற்றோர் பற்றிலர் என்றி ரங்கி
மதியு டையவர் செய்கை செய்யீர்
அற்ற போழ்தும் அலந்த போழ்தும்
ஆவற் காலத் தடிகேள் உம்மை
ஒற்றி வைத்திங் குண்ண லாமோ
ஒண காந்தன் தளியு ளிரே"
- "பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்
- பேணி உம்கழல் ஏத்துவார்கள்”
- "பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்
என்ற அடிகள் பன்முறை படித்தின்புறத்தக்க அடிகள்.
வாழ்க்கையில் நட்பு முதலிய உறவுகள் தவிர்க்க இயலாதன. வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உறவுகள் தேவை. இந்த உறவுகள், உறவுகளுக்காகவே என்று அமையுமானால் பெரிதும் சிறந்து விளங்கும். அங்ஙனமின்றி யாதானும் ஒன்றை எதிர்பார்த்து நட்பும் உறவும் கொள்ளின் இத்தகு நட்பும் உறவும் வணிகமாகி விடும், அதாவது, இலாப நோக்குடையதாக அமைந்துவிடும். "இலாபம்" என்ற சொல்லே கொச்சைத்தனமானது. இலாப நோக்கு, தன்னலமே நாடும். மற்றவர் நலம் பற்றிக் கவலைப்படாது. இத்தகையோர் தாம் விரும்பிய ஒன்றினையடையும்போது மகிழ்வர், நட்பினைப் பேணுவர். யாதானும் ஒரு காரணத்தால் விரும்பியதைப் பெறாதபோழ்து பிரிவர்; நெஞ்சிற்பிரிவர்; காழ்ப்பும் பகையும் கொண்டு தீமையும் செய்வர்.
நட்பு, உறவுகள் விலைமதிக்க ஒண்ணாதன. இவை வாழ்க்கையின் இணையற்ற குறிக்கோளை அடையத் துணைசெய்வன; ஆக்கம் பயப்பன; இறைவனை உறவாகவும் நட்பாகவும் கொண்டு வாழ்தல் தமிழ் மரபு. அச்சம் வழிப்பட்ட நிலையிலோ விருப்பங்களுக்காட்பட்ட நிலையிலோ இறைவனை வணங்குதல் பயன்தராது. இறைவனைப் பற்றுதலில் தெளிவும் உறுதியும் வேண்டும். வாழ்க்கையில் ஒருவர்தான் உற்ற துணையாக அமைய இயலும்; முடியும். அந்த ஒருவன் இறைவன் என்று உணர்ந்து அவனைப் பற்றி நட்புப் பாராட்டுதல் அடியவர் இயல்பு. இறைவனிடம் அடியவர் கொள்ளும் நட்பு, தன்னல விழைவினால் அன்று. அடியவர்கள் இறைவனிடத்து நட்புரிமை கொண்டாடுதலுக்குரிய காரணம் இறைவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பது, உயிர்களின் உய்தி கருதி இறைவனின் கருணையினால் இயற்றப் பெறும் ஐந்தொழில் இயக்கத்தில் வாழும் உயிர்க்குலத்திற்குத் தொண்டு செய்தல் வாழ்க்கையின் குறிக்கோள். இக்குறிக்கோளினை அடைய இறைவனைத் துணையாகக் கொள்வதே நோக்கம், இறைவன் மாட்டு அன்பு செய்தலே, வாழ்க்கையின் குறிக்கோளான பிறகு, இறைவனிடம் எதை எதிர்பார்ப்பர். ஒரேவழி விரும்பிக் கேட்டாலும் அவனுக்காட்படும் நிலையையே விரும்பிக்கேட்பர்; இறைவன் குறிப்பறிந்து தொண்டு செய்யும் வாய்ப்பையே விரும்புவர். ஆதலால் அடியவர்கள் வாழ்க்கையில் பெற்றது. பெறாதது என்ற கணக்கும் இல்லை; அவ்வழிப்பட்ட துன்பமும் இல்லை. அடியவர்கள் இறைவனைத் தவிர வேறொன்றைப் பற்றாகவும் கொள்ள மாட்டார்கள். இங்ஙனம், முற்றாக இறைவனையே நம்பி - சார்ந்து வாழ்க்கை நடத்துபவ்ர்கள் அல்லற் படுத்தக் கூடாது. இறைவனைத் தவிர வேறு ஒரு களைகண்ணும் இல்லாது அலந்தார் போல வாழும் அடியார்களை இறைவன் காப்பாற்ற வேண்டும்; சோறும் கூறையும் தந்தருள வேண்டும். ஆனால் இறைவன் அப்படிச் செய்யும் "புத்திசாலியாக" இல்லை என்பது நம்பியாரூரர் கருத்து. ஆம்! இறைவன் அடியவர்களின் அன்பில் குளிப்பவன். அடியவர்களுடைய அன்பை நுகர்ந்து அனுபவிப்பதில் பித்துப்பிடித்தலைபவன். படும் துயரம் அதிகமாகும்பொழுது எல்லாம் அடியவர்கள் மேலும் அன்பில் வளர்கிறார்கள். அடியவர்களுடைய அன்பு அனுபவத்தில் மூழ்கித் திளைக்கும் இறைவன், அடியவர்கள் துன்பத்தைத் துடைப்பதை மறந்து விடுகின்றான். அதனால் "மதியுடையவர் செய்ன் செய்யீர்” என்றார். நம்மைச் சார்ந்தாரே நம்முடன் ஒன்றிக் கிடப்பாரின் துன்பத்தை மாற்றுதல் வாழ்வியல் கடமைகளுள் தலையாயது என்ற - உண்மை உணர்த்தப்படுகிறது. துன்பம் மிகுதியாக மிகுதியாக அன்பு குறைகிறது. வாழ்ந்திடல் வேண்டும் வேண்டும் என்ற உணர்வு மேலோங்குகிறது. அதனால் வாழ்க்கையின் மிகமிக விழுமிய பொருளைக்கூட ஒற்றி வைத்து உண்ணவிரும்புவது தவிர்க்க இயலாதது. அதுபோல அடியவர்கள் இறைவனை ஒற்றிவைத்து உண்ண அனுமதிக்கப்படுவது. அழகோ என்று கேட்கிறார். இறைவனை ஒற்றி வைத்தல் என்றால் என்ன? இறைவனுக்கு ஆட்படுதலுக்குப் பதில் சிறு தேவதைகளுக்கு ஆட்படுதல் ஆகும். இப்போது பலர் இறைவனுக்கு அன்பு காட்டி ஆட்படுவதற்குப் பதில் "சனியனுக்கு" அல்லவா ஆட்பட்டுள்ளனர். சனியனுக்கு "ஈஸ்வரன்” பட்டத்தைச் சேர்த்து சனி ஈசுவரன் என்று கூறுகின்றனர். இதுமுறை யன்று. "சென்று சிறுதெய்வங்கள் பால் சேர்வோமல்லோம்” என்றார் அப்பரடிகள்.
"ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே"
என்றார். திருஞானசம்பந்தர். ஆதலால் பரசிவமே கடவுள். பரசிவமே தனக்குவமை இல்லாத தலைவன் - வாலறிவன் என்று தெளிந்து துணிந்து வாழ்த்தி வாழ்தலே சமய வாழ்க்கை - சைவவாழ்க்கை என்பது இந்தப் பாடலின் சிறந்த பொருள்.
திருஓணக் காந்தன் தளியில் நம்பியாரூரர் அருளிய பதிகம் முழுதும் இறைவனுடன் நம்பியாரூரர் கொண்டிருந்த அன்புரிமை பற்றியதேயாம். இந்தப் பதிகம் நம்பியாரூரர் இறைவனிடத்தில் கொண்டிருந்த தோழமைத் திறத்தினை வெளிப்படுத்துகிறது. திருஓணக் காந்தன் தளி இறைவனைத் தொழுது வணங்கி மகிழ்ந்த பொழுது, இறைவன் அருகில் உள்ள புளியமரத்தில் ஒளிந்திருந்து புளியங் காய்களைப் பறித்து ஆரூரருக்கு அருளியதாகவும், அவை பொற்காசுகளாய் ஆயின என்றும், ஒரு மரபு வழி வரும் வரலாறு உண்டு.
திருஓணக் காந்தன் தளியை வணங்கி மகிழ்ந்த நம்பியாரூரர் அடுத்து திருக்கச்சி அநேக தங்காவதம் வணங்கி, திருக்கச்சியை நினைந்தவாறே அமர்ந்திருந்தார்.
பனங்காட்டூரின் பரமனை ஏத்தினார்
திருக்கச்சியில் தங்கியிருந்த நம்பியாரூரர் மீண்டும் திருத்தல வழிபாடுகளை விரும்பிப் பயணம் செய்யலானார். திருக்கச்சியிலிருந்து திருப்பனங்காட்டூர் என்ற திருத்தலத்திற்குச் சென்றார். இந்த ஊர் வன்பாக்கம் என்ற ஊருக்கு அருகாமையில் இருப்பதால், திருவன்பார்த்தான் பனங்காட்டூர் என்று பெயர் பெற்றது. இப்பொழுது திருப்பனங்காடு என்று பெயர் பெற்று விளங்குகிறது. இத்திருத்தல மரமும் பனை மரமேயாம். அகத்தியர், புலத்தியர் பூசித்த தலம் இது. இத்திருத்தலப் பதிகம் மிகவும் அருமையானது. நம்மனோரைத் தெளிவித்து ஆற்றுப் படுத்தும் தகைமையுடையது. ஒவ்வொரு பாடலிலும் நம்மனோரின் சார்பும், உணர்வும், அறிவும் திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியுள்ள நாயகனே என்று எடுத்துக் கூறுகின்றார். அன்பு நாயகன் திருவடியைப் பற்றிக் கொண்டு உய்யுமாறு உணர்த்தும் அற்புதமான பாடல்கள் அவை. காலன், காலத்திற்குத் தலைவன்; காலத்திற்குரிய முதல்வன். இது உண்மை. ஆயினும், காலனுடைய காலம் பற்றி நிற்கும் முதன்மை, சிவம் அருளியது என்று உணர்த்துகின்றார். காலனுடைய கால முதன்மைசுடப் பெருமானால் பறிக்கப்பெற்று, திரும்ப அளித்த வரலாற்றை நினைவூட்டுகின்ற பாடல் இப்பதிகத்தில் உண்டு.
"மெய்யன்வெண் பொடியூசும்
விகிர்தன் வேதமுதல்வன்
கையின்மான் மழுவேந்திக்
காலன்கா லம்மறுத்தான்்
பைகொள்பாம் பரையார்த்த
படிறன்றன் பனங்காட்டுர்
ஐயன்னங் கள்பிரானை
அறியாதார் அறிவென்னே!
(ஏழாந்திருமுறை-878)
இப்பாடல் கற்றுணரத்தக்க பாடல். இறைவன் மெய்யன், வெண்பொடி பூசும் விகிர்தன். பொய்க்கு எதிர்மறை மெய். மெய் என்பது உண்மை. உண்மையாவது உள்ளது. என்றும் உள்பொருள் இறைவன் என்றும் உள்ளவன் தோற்றமும் ஈறும் இல்லாதவன்; பிறப்பும் இறப்பும் இல்லாதவன்; இவனே பிறவாயாக்கைப் பெரியோன். இறைவன் சிவபெருமான், யாதொரு அந்தமும் இல்லாதவன் என்பதனை உணர்த்து வதே வெண்பொடியாகிய திருநீறு. கடையூழிக் காலத்தில் உலகம் ஒடுங்கும். ஆன்மாக்களும் இளைப்பாறுதல் கருதி ஒடுக்கப்பெறும். இந்தக் கடையூழியில் திரும்ப உலகைத் தோற்றுவித்தருளவே இறைவன் கடையூழிக் கூத்தாடு கின்றான். இந்தக் கடையூழிக் கூத்தில் எழும் புழுதியே திருநீறு என்பது கருத்து. ஆதலால் காலதத்துவத்தின் தலைவன் சிவமே. சிவம்தான்் காலனுக்குக் காலமுதன்மையைத் தந்தருளினன் என்ற கருத்து அறியத்தக்கது.
ஆரூரர், திருமாற்பேறு, திருவல்லம் ஆகிய திருத்தலங்களை வழிபட்டுக்கொண்டு திருக்காளத்திக்குச் சென்றார். திருமாற்பேறு, திருவல்லம் ஆகிய திருத்தலங்களில் நம்பியாரூரர் அருளிச் செய்த பதிகங்கள் கிடைக்கவில்லை. சேக்கிழார், திருக்காளத்தியை நம்பியாரூரர் நண்ணிய வரலாற்றை எடுத்த தமிழில் அன்புருகப்பாடத் தொடங்குகின்றார்.
"தடுக்க லாகாப் பெருங்காதல்
தலைநின் றருளுங் கண்ணப்பர்
இடுக்கண் களைந்தாட் கொண்டருளும்
இறைவர் மகிழ்ந்த காளத்தி
அடுக்கல் சேர அணைந்துபணிந்
தருளால் ஏறி அன்பாறு
மடுப்பத் திருமுன் சென்றெய்தி
மலைமேல் மருந்தை வணங்கினார்.”
(ஏயர்கோன். 4. 196)
மலைமேல் மருந்து
நம்பியாரூரர் திருக்காளத்தியை அடைந்து வணங்கும் காட்சி.
"தடுக்க லாகாப் பெருங்காதல்
தலைநின் றருளும் கண்ணப்பர்
இடுக்கண் களைந்தாட் கொண்டருளும்
இறைவர் மகிழ்ந்த காளத்தி
அடுக்கல் சேர அணைந்துபணிந்
தருளால் ஏறி அன்பாறு
மடுப்பத் திருமுன் சென்றெய்தி
மலைமேல் மருந்தை வணங்கினார்”
(ஏயர்கோன் 4. 196)
கண்ணப்பரின் மாட்சி இப்பாடலில் உணர்த்தப் பெற்றுள்ளது. கண்ணப்பர் காளத்தியப்பரிடம் காட்டிய அன்பு, எவராலும் தடுத்து நிறுத்த இயலாதது. எந்தச் சூழ்நிலையிலும் கண்ணப்பரின் அன்பு தடைப்படவில்லை. கண்ணப்பரின் பெருங்காதலின் முன் எதுவும் நிற்க இயலாது. கண்ணப்பரிடம் வளர்ந்த பெருங்காதல் அருளாக வளர்ந்தது.
காளத்தி இறைவன் கண்ணப்பரின் இடுக்கணைநீக்கி ஆட் கொண்டருளினன், திருக்காளத்தியில் கண்ணப்பருக்கு ஏது இடுக்கண்? காள்த்தியப்பனுக்கல்லவா இடுக்கண் வந்துற்றது! ஆம்! காளத்தி இறைவன் கண்ணில் உதிரம் கொட்டியது! கண்ணப்பருக்கு ஏது இடையூறு ! காளத்தி இறைவனின் கண்களில் குருதி கொட்டியதைக் கண்ணப்பர் தமக்குற்ற இடராக எடுத்துக் கொண்டார்! பிறர்க்குற்ற இடரைத் தமக்குற்ற இடராக எடுத்துக் கொண்டு தீர்வுக்கு முயல்வது உயர்சால்பு. கண்ணப்பர் அத்தகு உயர்சால்புநெறி நின்றவர். கண்ணப்பர் நிறைநலஞ்சான்ற அன்பு பெற்று வளரக் காளத்தி இறைவன்கண்ணில் குருதி கொட்டுகிறது. கண்ணப்பரின் மாறிலா அன்பில் காளத்தியப்பர் மகிழ்ந்துறையும் காளத்தியை நம்பியாரூரர் அணைந்தார். கண்ணப்பரின் அன்பில் நனைந்தமலையில், கண்ணப்பரின் அன்பொடு நம்பியாரூரரின் அன்பு காலந்து ஆறாகப் பெருக்கெடுத்து ஒடுகிறது. நம்பியாரூரர் இந்த ஈறிலாத அன்பில் நனைந்தவாறு காளத்தி மருந்தை வணங்கினார். காளத்தி இறைவன் கண்ணப்பரின் இடுக்கணுக்குப் பரிவு நிறைந்த மருந்து. நம்மனோரின் ஆணவம் சார்ந்த பிறவிக்கு மருந்து. காளத்தி இறைவன்மீது நம்பியாரூரர் "செண்டாடும்" என்று எடுத்துப் பதிகம் பாடிப்பரவினார்.
தவசீலரான தம்பிரான் தோழர்
நம்பியாரூரர் திருக்காளத்தியில் எழுந்தருளியுள்ள கணநாதப் பெருமானை வணங்கி மகிழ்ந்து "செண்டாடும்" என்று தொடங்கும் திருப்பதிகத்தை அருளிச் செய்தார். இத்திருப்பதிகத்தில் "சீரார் தமிழ்” என்று நம்பியாரூரர் குறிப்பிடுகின்றார். ஆம்! சிறப்புப் பொருந்திய தமிழ்; சிறப்பினைத் தரும் தமிழ், வீடு பேற்றிற்குச் சிறப்பு என்றும் கூறுதல் தமிழ்மரபு. திருக்காளத்தியைக் 'கண்டார் காதலிக்கும்” திருத்தலமெனப் போற்றிப் பரவுகின்றார்! கண்ணப்பரின் அனுபவம், கண்டதும் காதலித்த அனுபவம்தான்ே!
சைவத் தமிழ்மரபு ஒரு கடவுள் வழிபாடு என்பதனை உணர்தல் நல்லது. நால்வர், நாயன்மார்கள் சிவ பெருமானையே போற்றி வணங்கியுள்ளனர். சுந்தரர் திருக்காளத்திப்பதிகத்தில், "உன்னையல்லால் உகந்தேத்த மாட்டேன்” என்று உறுதிபடக் கூறுவது ஒர்க: இந்தப் பதிகம் முழுவதும் இந்தக் கருத்தை வலியுறுத்துகின்றார். ஏன்? நம்பியாரூரர் நாடு சுற்றியவர்; ஆகமங்கள் வந்து புழக்கத்திலிருந்த காலம்! கடவுள் என்ற பெயரில் பல்வேறு மூர்த்தங்கள் வழிபாட்டுக்கு வந்து நடை முறையில் இருந்த காலம்! ஆயினும், நம்பியாரூரர் சிவபெருமானைத் தவிர, வேறொருவழிபடும் பொருளை அறியார். என்னே உறுதி! இன்று நம்பியாரூரருடைய இந்த உறுதி இல்லை. அதனால் கடவுள் வழிபாட்டிற்குக் காலம் கூடுதலாகச் செலவாகிறது. அதே போழ்து உறுதியின்மையால் பயனும் இல்லாமல் போகிறது. ஆயிரம் ஆயிரம் திருமேனிகள் இறைவனுக்கு இருக்கலாம். ஆயிரம் கணநாதன் நம்பியாரூரருக்கு ஞானாசிரியனாக, ஞானமாக, நெறியாக, தோழமையாக விளங்கிய அருட்பெருக்கினை வாழ்த்தி மகிழச் சேக்கிழாரால் முடிந்தது.
நம்பியாரூரர், திருக்காளத்தியிலிருந்த படியே, வடபுலத்தில் உள்ள சீர்ப்பருப்பதத் திருத்தலத்தையும் திருக் கேதாரத் திருத்தலத்தையும் நினைந்து போற்றிப் பதிகம் பாடியருளினார். வடபுல வெல்லை அரணாக உள்ள இமயமலைச் சாரலில் விளங்கும் திருத்தலங்கள் திருச்சீர்ப் பருப்பதமும் திருக்கேதாரமுமாகும். இத்தலங்கள் இயற்கை வளங்கள் பலவற்றாலும் நிறைந்து விளங்கித் தோன்றுவன. திருக்கேதாரத்தில் எழுந்தருளியுள்ள இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பதிகத்தில் வாழ்க்கை யுண்மைகள் பலவற்றை நம்பியாரூரர் எடுத்தோதுவது சிறப்பாக உள்ளது.
இந்த வாழ்க்கை நிலையில்லாதது. நிலையில்லாதன வற்றைக் கொண்டு நிலையாயின பெற வேண்டும் என்பது ஆன்றோர் அறிவுரை. பிறவிக் கடலைப் பாழாக்குவானேன்? ஆழ்கடல் கூட முத்து விளைவிக்கிறது; மழைவளம் தருகிறது. பிறவிக் கடல் யாதொரு பயனுமின்றிப் பாழாகப் போனால் நியாயமா? தரிசாகப் போட்ட நிலத்தில் என்ன விளையும்? அதுபோலவே வாழுங்காலத்தினைப் பயன்படுத்தாமல் தரிசாகப் போட்டால் ஏது பயன்? காலத்தை வீணாக்காது அறம் செய்தல் வேண்டும். தமக்கு முன்னர்த் தமிழ் மறை அருளிய இருவர்க்கும் தம்மை அடித்தொண்டன் என்று செந்தமிழ்ச் சுந்தரர் அருளும் எளிமையை எண்ணுக! திருக்காளத்தியிலிருந்து பயணம் செய்யத் தொடங்கித் திருத்தலங்கள் பலவற்றையும் வணங்கிக் கொண்டு இவ்வையகத்தில் சிவலோகம் என்று புகழ் பெற்று விளங்கும் திருவொற்றியூர் என்னும் திருத்தலத்தை நம்பியாரூரர் அடைந்தார்.
இத்திருத்தலத்தில் சுந்தரருக்கு மங்கல முறையில் வரவேற்பளித்தனர். சுந்தரர், மக்கள் விரும்பும் தொண்டர் மட்டும் அல்லரே! மக்கள் விருப்பத்தில் ஏது நிலைப்பாடு? நற்றமிழ் ஆரூரர், "பிரானார் விரும்பும் திருத்தொண்டர்" என்று சேக்கிழார் அருளிச் செய்துள்ளமை உணர்ந்து அனுபவித்தற்குரிய செய்தி! திருவொற்றியூர்த் திருத்தலத்தில் ஆரா அன்பினில் ஆரூரர், ஊனும் உயிரும் கரைந்துருக வழிபட்டார் என்ற சேக்கிழார் வாக்கின் வழி, திருக்கோயில் வழிபாடு நிகழ்த்தப் பெற வேண்டிய வழிமுறை உணர்த்தப் பெறுகிறது. திருவொற்றியூரில் நம்பியாரூரர் தவசீலராகிறார்! சுந்தரரின் அறிவு, சுந்தரரின் வசத்தில் நில்லாமல் சிவானுபவத்தின் வசப்பட்டு அன்பு மீதூர விளங்கியது. திருவொற்றியூரிலேயே தங்கி, காலந்தோறும் வழிபட்டு வந்தார். திருவொற்றியூரிலேயே தங்கியருளினார்! இறைவனுக்கு ஏற்ற இடம் திருவொற்றியூரே என்று அருளிச் செய்துள்ளார். திருவொற்றியூரில் இரண்டு பதிகங்கள் அருளிச் செய்துள்ள பான்மையை அறிக.
திருவொற்றியூர் திருத்தலத்தில், நம்பியாரூரரின் வரலாறு வளர்கிறது; ஒரு திருப்பு மையத்தைப் பெறுகிறது. திருவொற்றியூரிலிருந்துதான் சுந்தரரின் வாழ்வு தொடர்கிறது என்று சொல்லும் அளவுக்கு நிகழ்வுகள் அமைந்துள்ளன.
ஒற்றியூரில் சங்கிலியார்
நம்பியாரூரரின் வரலாறு திட்டமிட்ட வரலாறு என்பதை உணர்தல் அவசியம். திட்டமிட்டதில் சாதி, குல அமைப்பு மரபுகள் பின்பற்றப்படாமையால் பழையன கழிதல் வேண்டும், புதியன புகுதல் வேண்டும் என்ற நியதியே நம்பியாரூரரின் வரலாற்றுக்கு நோக்கம் என்பது தெளிவு.
அமரர் உலகத்து அநிந்திதையார் திருஒற்றியூரில் நாலாம் குலத்தில் திருவவதாரம் செய்தார் என்பது சேக்கிழார் வாக்கு. நாலாம் குலம் எது? பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய குலமரபுகளையே இன்று பலரும் எண்ணுகின்றனர்; எழுதுகின்றனர்; பேசுகின்றனர். பிராமணர் முதலிய நான்கு வருணம் ஆகிய மரபு, அயல் வழக்கு தமிழ் மரபன்று தமிழர் நெறியும் அன்று. இங்கு சேக்கிழார் "நாலாங்குலம்’ என்றது தமிழ் மரபு வழியிலேயேயாம். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகைக் குலமே தமிழ் மரபு. அநிந்திதையார் நாலாவது குலமாகிய வேளாண் மரபில்-குலத்தில் வந்துதித்தார்.சேக்கிழார், வரலாற்றை விரைவாக நடத்துகிறார். சங்கிலியார் பருவம் தோறும் முறையாக வளர்ந்து நங்கையாகிறார். மணப்பருவம் வந்துவிட்டது. பெற்றோர்கள் திருமணப்பேச்சில் ஈடுபடுகின்றனர். சங்கிலியாருக்குத் திருமணப்பேச்சு பிடிக்கவில்லை. சங்கிலியார் தமது பெற்றோர்களிடம் தமக்கு ஈசன் திருவருள் பெற்ற ஒருவரே கணவராதலுக்கு உரியவர். தாம் ஈசன் திருவருள் பெற்ற ஒருவருக்கே வாழ்க்கைத் துணை நலமாக அமைய இயலும் என்பதைத் தெளிவுறுத்தினார். அதோடு அமையாது திருஒற்றியூர்த் திருத்தலத்திலிருந்து சிவபெருமான் வேட்டு நிற்கும் பணியில் ஈடுபட விரும்புவதையும் கூறினார். மகள் பேச வந்தவர்களிடம் யாது கூறுவது என்ற ஐயப்பாடு பெற்றோர்களுக்கு! சங்கிலியார் கூறுவதை அப்படியே சொல்வதும் நாகரிகமன்று. வருத்தம் வாராமலும் சொல்ல வேண்டும் என்ற சிந்தனைகள் அலை மோதுகின்றன. விடை சொல்வது பெரிதல்ல. தீமை பயக்காதவாறு சொல்ல வேண்டும் என்பதே முக்கிய செய்தி. ஏதம்-உறவினர்கள் பழகுபவர்களிடம் ஏற்படும் பிணக்கும் அதனால் வரக்கூடிய கேடுகளும் ஆம்! இந்தக் காரணத்திற்காக உண்மையை உள்ளவாறு சொல்லாமலும் இருக்கலாம். "புரை தீர்ந்த நன்மை” என்ற திருக்குறள் நெறி உணர்க. இத்தகு இடர்ப்பாடு களையும் சங்கிலியாரை மணம் பேச வந்தோர் துன்புற்ற நிகழ்வுகளையும் கண்ட சங்கிலி நாச்சியாரின் பெற்றோர் சங்கிலி நாச்சியாரை திருவொற்றியூரில் கன்னி மாடம் அமைத்து அந்தக் கன்னி மாடத்தில் இருக்கச் செய்வதென்று துணிந்தனர்; முன் வந்தனர். திருவொற்றியூரார் இசைவுடன் வசதிகள் பலவும் உடைய கன்னிமாடம் அமைக்கப் பெற்றது. கன்னிமாடத்திற்குத் தேவைப்படும் பொருள்களும் தொகுத்து வைக்கப் பெற்றன. முறையான காப்பு வசதிகளுடன் அமைந்த கன்னி மாடத்தில் சங்கிலிநாச்சியார் ஈசருக்கேற்ற பணி விரும்பி, தங்கித் தவம் செய்ய ஒருப்பட்டார்.தந்தையும், தாயும் சங்கிலி நாச்சியாரை வணங்கி விடை பெற்றனர்.
சங்கிலியார் திருமணம்
சங்கிலி நாச்சியார் திரு ஒற்றியூரில் திருமாலைப் பணிவிடை செய்து தவம் செய்கிறார். திருஒற்றியூருக்கு வந்த நம்பியாரூரர் திருக்கோயிலுக்குள் சென்று வணங்கி மகிழ்கின்றார். அன்றைய திருக்கோயில்களில் தொண்டு செய்யும் தொண்டர்கள் நிரம்பியிருந்தனர் என்று தெரிய வருகிறது. "தொண்டு செய்வார் திருத் தொழில்கள் கண்டு தொழுது” என்ற சேக்கிழார் வாக்கு பண்டைய மரபினை நினைவூட்டுகிறது. தொண்டு செய்வார் திருக் கோயிலுக்குள் யாண்டும் பரவித் தம் தம் நிலைக்கேற்பத் திருத்தொண்டுகள் செய்து வந்தனர். திருக்கோயில் வணங்கிச் செல்வோர் திருக்கோயிலில் செய்யப் பெறும் திருத்தொண்டுகளையும், திருத்தொண்டர்களையும் தொழுது செல்லுதல் மரபு. நம்பியாரூரரும் நல்லூழ் வந்து கூட்ட திருமாலை மண்டபம் போந்தருளினார். அங்குத்தவ அரசர், தவச்செல்வி சங்கிலியாரைக் கண்டார்.
நம்பியாரூரர் மனம் காதல் வழிப்பட்டது. இக் காதலின் சான்றாண்மை குறித்து ஆய்வு செய்து கொள்கின்றார் நம்பியாரூரர்; தம் நிலை உணருகின்றார். அருளால் அடைந்த பிறவியை எண்ணுகின்றார். நம்பியாரூரர் காதல் வழிப்பட்ட வருத்தத்திற்கு ஆளானார் ஆயினும் சங்கிலியார் மேற் கொண்டுள்ள தவத்தால் அவரை எளிதில் அடையத்தக்க தாயில்லை. நம்பியாரூரர் திருஒற்றியூர் ஈசன்பால் கேட்டுப் பெறத் துணிந்தார். திருஒற்றியூர் ஈசனிடம் "சங்கிலியைத் தந்து என்வருத்தம் தீரும்' என்று விண்ணப்பித்தார்.
நம்பியாரூரர் வருத்தம் தீர்த்தருளுவது திருஒற்றியூர் இறைவனது கடமை. சங்கிலியார் முன் இறைவன் தோன்றி நம்பியாரூரரை அறிமுகப்படுத்துகின்றார். இறைவன் சங்கிலியாரின் திருமனைக்கு எழுந்தருளி வந்திருப்பது அவர் தவத்திற்கு வரம் கொடுக்க அல்ல. நம்பியாரூரருக்கு மனம்பேச வந்துள்ளார். ஆயினும் சங்கிலியார் தவத்தின் அருமையினை உணர்த்துவான் வேண்டி சாருந்தவத்துச் சங்கிலி கேள்! என்று இறைவன் தொடங்குகின்றார். தவத்தின் செல்வம் சங்கிலி நாச்சியார். இறைவன் நம்பியாரூரரை அறிமுகப்படுத்தும் பண்பு கவனிக்கத் தக்கது. சங்கிலியாரை மணம்புரிய விரும்பும் நம்பியூரர் மேருமலையின் மேம்பட்ட தவத்தினையுடையவர். திருஒற்றியூரிலுள்ள ஈசனிடம் நிறைந்த அன்புடையவர். திருவெண்ணெய் நல்லூரில் நம்மால் ஆட்கொள்ளப்பட்டவர். உன்னைத்தருமாறு என்னை இரந்து நிற்கிறார். இரப்பார்க்கொன்று ஈவதே மரபு. சங்கிலி நம்பியாரூரருடன் மணம் செய்து கொள்வாயாக என்றார்! தமிழர் மரபில் தவமும் திருமணமும் மாறுபட்டதன்று என்பது நம்பியாரூரர் வரலாறு, மாயவாதம், பௌத்தம், சமணம் முதலிய சமயங்கள் தமிழகத்தில் பரவி மானுட வாழ்க்கையைக் கொச்சைப் படுத்தின. காதல் மனையற வாழ்க்கையை இகழ்ந்தன. இந்த வழக்கு செழுந்தமிழ் வழக்கிற்கு மாறானது. செழுந்தமிழ் வழக்கைத் தமிழகத்தில் நிலைபேறு கொள்ளச் செய்யவும், காதல் மனைவாழ்க்கைத் தமிழகத்தில் நிலைபேறு கொள்ளச் செய்யவும், காதல் மனைவாழ்க்கை மரபு வளரவும் திருவுள்ளம் பற்றிய இறைவன் நடத்திய திருவிளையாடலே நம்பியாரூரர் வரலாறு. சங்கிலியார் உடன்படுகின்றார். பெண்மைக்கே உரிய வகையிலும் தமிழ் நாகரிக வரம்பு நிலை உணர்த்தும் வகையிலும் திருவாரூரில் நம்பியாரூரர் பெரு விருப்பம் கொண்டவர் என்பதை ஈசன் அறிந்தருளுவது நல்லது என்று உணர்த்துகின்றார். ஆம்! பரவையாரும் பரவையாரைத் தந்தருளியவனும் உறைவது திருவாரூர் அல்லவா? திருஒற்றியூர் ஈசன் சங்கிலியாரின் குறிப்புணர்ந்து நின்னைப் பிரியா வகையில் சபதம் செய்வான் நம்பியாரூரன் என்று உறுதி கூறுகின்றார். என்னே ஈசன் திருவிளையாடல்.
திருஒற்றியூரையும், சங்கிலியாரையும் பிரியாமல் நம்பியாரூரர் வாழ்ந்தால் பரவையார் நிலை என்னாவது? இல்லை! இல்லை. "உன்னை இகந்து போகாமை” என்பது தான் இறைவனருளிய உறுதி மொழி. நம்பியாரூரர் சபதம் செய்ய ஒருப்படுகின்றார். ஆயினும் உண்மையான சபதமாக அல்ல. சபதம் செய்யும் பொழுது சந்நிதியில் இறைவன் இருக்காது, இடம் பெயர்ந்து மகிழ மரத்தடியின் கீழ் எழுந்தருள வேண்டும் என்று வேண்டுகிறார். தமக்கு அன்பு பட்டார் பாரமும் பூணும் தன்மையுடைய ஈசன் இதற்கும் உடன்படுகின்றார். ஆனால், சங்கிலியாரிடம் "மகிழின் கீழ் சபதம் கேள்” என்று உணர்த்தி விடுகிறார். சங்கிலியாரிடம் குறிப்பில் உணர்த்தியதை பெருமான் நிறைவேற்றித் திருமணம் செய்வித்தருள்கின்றார்.
மகிழின் கீழ் சத்தியம் - சரியா?
நம்பியாரூரர், இறைவன் முன்னிலையில் இறைவன் சந்நிதியில் சத்தியம் செய்ய முன் வராமையை எண்ணுக. ஆம்! மானுடவியல் குற்றங்கள் மிகுதியும் உடையது, வழுக்கி விழும் நிகழ்வுகளே வாழ்க்கையில் மிகுதி. “மனிதம்' என்ற பெயரே நிறைவு பெறாமை என்று பொருளாகும் என்பார் லெராய் பிரௌன்லோ (Leroy Brownlow) மனிதத்தின் பாவ மன்னிப்புகளிலேயே கடவுளின் புகழ் இருக்கிறது. ஆதலால் இறைவன் சந்நிதியில் இறைவன் பெயரால் சத்தியம் செய்வதை விரும்பாமல் கருவறையைவிட்டு மகிழின் கீழ் இருக்குமாறு இறைவனை வேண்டுகிறார். நபிகள் மதினாவில் மசூதியின் திசை நோக்கிக் கால் நீட்டித் தொழுததை மக்கள் ஆட்சேபித்துள்ளனர். அதற்கு நபிகள் இறைவன் இல்லாத திசையைக் காட்டியருளும்படி கேட்டதாக ஒரு வரலாறு உண்டு. எள்ளில் எண்ணெய்போல் இறைவன் எங்கனும் எழுந்தருளியிருக்கின்றான் என்பதே கடவுட் கொள்கை; தத்துவம். கருவறையை விட்டு மகிழின் கீழ் இருக்க இறைவன் ஒருப்பட்டால் கருவறையில் கடவுள் இல்லையா? இது தத்துவமுரண்பாடு இல்லையா? தத்துவ முரண்பாடு இல்லை. மின்விளக்குகளின் பிளக்கில் மின்சாரம் இருக்கிறது. ஆனாலும் பொத்தான்ை அழுத்தினால்தான்் மின்சாரம் இருப்பது காட்சிக்குப் புலனாகும். வான்வெளியில் ஒலியலை இருப்பது உண்மை. ஆனாலும் வானொலிப் பெட்டியை இயக்கினாலே ஒலி செவிப்புலன் நுகர்வுக்கு வரும். அது போல எல்லா இடத்திலும் இறைவன் இருப்பது உண்மை; ஆயினும் ஆன்மாக்களின் அனுபவத்திற்கு வராமல் உள்ளீடாக இருக்கும். திருக்கோயில் கருவறையில் எழுந்தருளி யுள்ள திருமேனியில் இறைவன் பலகாலும் பலரும் அரற்றி அழுதமையால் எப்போதும் வெளிப்பட்டு நிற்பான். வானொலி நிலைய ஒலிபரப்பு அறைக்குள் ஒலி நிறைந் திருப்பது போல, மின்சார உற்பத்தி கேந்திரத்தில் இடையீடில் லாது மின்சாரம் ஒளிபரப்புவது போல. ஆதலால், சுந்தரர் ஆன்மாக்களுக்கு எளிதில் அனுபவத்திற்கு வரும் திருக் கோயில் கருவறையை விட்டு மகிழின்கீழ் இருக்கும்படி இறை வனைக் கேட்டுக்கொண்டார். ஆனால் இறைவனே நம்பியாரூரரை வல்வினைகளுக்கு ஆட்படுத்தி அவரிடம் தோழமைப் பண்பினைத் திறம்பட வளர்க்கத் திருவுளம் கொண்டு சங்கிலியாரிடம் உள்ளதைக்கூறி மகிழின்கீழ் சத்தியம் செய்யும்படி கேட்குமாறு தூண்டினார்.
மகிழின் கீழ் எழுந்தருளியுள்ள இறைவன் முன்னிலை யில் நம்பியாரூரர் சத்தியம் செய்தமையை, சங்கிலியார் நினைத்து வருந்துகின்றார். திருக்கோயில் இறைவன் முன்னால், இறைவன் பெயரால் சத்தியம் செய்வது மரபன்று. ஏற்றுக்கொள்ள இயலாது என்பது தமிழ்நூற் கொள்கை தமிழ்மரபு இது என்பதால் சட்டமன்றங்களில் கடவுள் பெயரால் உறுதியெடுப்பது விரும்பத்தக்கதன்று. அரசியல் ஆட்சியியல் என்றால் முற்றிலும் உண்மை, நேர்மை, சாத்தியமல்ல. அதுவும் ஜனநாயக அரசியலில் நூற்றுக்கு நூறு உண்மையும் நேர்மையும் காண்பது இயலாது. மக்கள் நலங்கருதி நெகிழ்ந்து கொடுக்க வேண்டிய நிலைகள் ஏற்படும். அப்பொழுது சத்தியம் மாறுபடும். ஆதலால் எடுத்ததற்கெல்லாம் கடவுள் பெயரால் சத்தியம் செய்வது கூடாது; வரவேற்கத்தக்கதுமன்று என்பதை நம்பியாரூரர் செய்கையும் சங்கிலியார் வருத்தமும் உணர்த்துவது ஒர்க,
சங்கிலியார் திருமண்ம் நடந்து விட்டது. நல்ல காதலர்களாக - அருள் நலங்கனிந்த காதலர்களாக நம்பியாரூரரும் சங்கிலியாரும் மகிழ்ந்து வாழ்கின்றனர். காதற்கிழத்தியுடன் இனிது வாழ்தலைப் பிற்காலத்தில் நுழைந்த அயல் வழக்கின் வழி சிற்றின்பம் என்று இகழ்ந்து கூறுதல் மரபாயிற்று! இது தவறு. எங்கு வாழ்கிறார்கள்? எந்நெறியில் வாழ்கிறார்கள்? என்பதல்ல ஆய்வு. எப்படி வாழுகிறார்கள்? என்பதே முக்கியம். காதலிற்சிறந்து தோய்ந்து மகிழ்ந்து வாழ்ந்த நம்பியாரூரரை "பேரின்பம் இனிதமர்வார்" என்று சேக்கிழார் உணர்த்துவது அறிக.
வினைப்போகம் துய்த்தல் தவிர்க்க இயலாதது மட்டுமன்று அறமும் கூட. ஆனால் அந்த வினைப் போகத்தைப் பொறியின்பத்தைச் சார்ந்து திருவருள் சிந்தனை யின்றி அனுபவித்தால் வினை வளரும் ஒருபோதும் வினை நீக்கம் வராது. வாழ்வின்பயணத்தில் இறுக்கமான பற்று குறைந்து மக்கள் பாலும் பக்தியின் பாலும் நெகிழ்ந்த நிலையில் துய்த்தல் அருள் நெறி சார்ந்த அறமாகும் என்பது தமிழ் நெறி என்று உணர்த்துவது நம்பியாரூரர் வரலாற்றின் நோக்கம். எத்தகைய இன்பத்தில் தோய்ந்து வாழ்ந்தாலும் பழைய நினைவுகள் அகலா. பிடிவாதமாகச் சில நாள் மறக்கலாம். ஆனால் முறையான காலங்கள் வந்து புதிய அனுபவங்களின் அழுத்தம் குறைந்து மறந்துபோன பழைய அனுபவங்களின் நினைவுகள் மேலோங்கி வரும். இதுவே வாழ்க்கையின் நியதி.
நம்பியாரூரருக்குப் பரவையாரை அறிமுகப்படுத்தித் தோழமையாக இருந்து திருமணம் செய்து தந்தருளிய திருவாரூர் இறைவன் கருணைத் திறத்தை எளிதில் மறக்க இயலுமா? திருவாரூர் நினைவு வருகிறது. திருவாரூர் திருவீதி விடங்கப் பெருமான் திருவிழா மண்டபத்தில் காட்சி தருகிறார்; அவர் திருமுன்பு பரவையார் பண்ணின் இசை பாடி நடனமாடும் இனிய காட்சியை அகக்கண்ணால் காண்கிறார். அனுபவ ஆர்வமும் முகிழ்க்கிறது.
உளோம் போகீர் என்றான்!
திருவாரூர் நினைவு சுந்தரருக்கு மேலோங்கியது; திருவாரூர் இறைவனைப் பிரிந்து வாழும் நிலையை நினைந்து வருந்துகின்றார். வாழ்க்கையின் குறிக்கோள் பத்திமை, பிறி தொன்று அடிமைத்தன்மை. இவ்விரண்டையும் இழந்த நிலையை நினைந்து வருந்துகின்றார். திருவாரூர் இறை வனைப் பிரிந்திருக்க இயலாத மனநிலையைப் பெற்றார். தமது தவறுகளுக்கெல்லாம் உடந்தையாய் இருந்தருளிய இறைவனின் தண்ணருளை நினைந்து நினைந்து உருகு கின்றார்.
ஆம்! தோழமை என்பது என்ன? தோழன் தோழன் தான்்! தோழனின் தவறுகளைத் தோழன் விமரிசனம் செய்ய மாட்டான்; மற்றவர்களிடம் தோழனின் தவறுகளைக் கூறமாட்டான். தோழன் தவறுகளுக்குத் தண்டனை தரமாட்டான், துச்சமாக நினைக்கமாட்டான்; உபதேசம் செய்யமாட்டான்! ஏன் ஒரோவழி துரிசுகளுக்கு உடந்தையாகக் கூடப் போவான். பின் உற்றகாலம் வந்துழி, தாயிற்சிறந்த தயாவுடனும் மருத்துவரின் பரிவுடனும் குற்றத்திலிருந்து தோழனை மீட்க முயற்சி செய்வான். தாம் செய்த துரிசுகளுக்கு எல்லாம் இறைவன் தோழமை நிலையில் உடந்தையாக இருந்ததை நம்பியாரூரர் நினைந்து நினைந்து உருகிப்பாடுகின்றார். திருவாரூர் தொழும் விருப்பம் கனிந்து மேலோங்குகிறது.
ஒருநாள் திருவொற்றியூர் இறைவனை வணங்கிக் கொண்டு, திருவொற்றியூர் விட்டகன்று திருவாரூர் செல்லும் பயணத்தைத் தொடங்கினார். திருவொற்றியூரினின்றும் பிரிவதில்லை என்ற சபதத்தை மறந்தார்; சபதம் வேலை செய்தது. கண்கள் இரண்டும் ஒளி மழுங்கின; ஒளி குறைந்தன. செய்வதறியாது சுந்தரர் மூர்ச்சித்து நின்றார்; திகைத்தார். சபதத்தால் இது நிகழ்ந்தது என்று உணர்கின்றார். எந்தநிலையிலும் சிவமே தனித்துணை ! நம்பியாரூரர் உடன் பாடத் தொடங்குகின்றார். இத்தருணத்தில் பாடிய திருமுறைப் பாடல்கள் அற்புதமானவை.
"அழுக்கு மெய்கொடுன் திருவடி யடைந்தேன்
அதுவும் நான்படற் பாலதொன் றானால்
பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்
பிழைப்ப னாகிலும் திருவடிப் பிழையேன்
வழுக்கி விழினும் திருப்பெய ரல்லால்
மற்று நான்அறி யேன்மறு மாற்றம்
ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே."
(ஏழாந்திருமுறை 550)
"இறைவா! திருவொற்றியூர் உறையும் இறைவா! கிராமப்புறங்களில் ஆட்டுப்பால் கறப்பார்கள். அப்போது அந்தப் பாலில் ஆட்டுப் பிழுக்கை விழுந்துவிடும். ஆட்டுப் பிழுக்கை விழுந்தமையின் காரணமாக அந்தப் பாலை யாரும் தூக்கி ஊற்றி விடமாட்டார்கள். பாலில் விழுந்த பிழுக்கையை எடுத்து எறிந்து விட்டுப் பாலைப் பயன் பயன்படுத்துவார்கள். இதுவே உலக வழக்கு! அதுபோல் ஒற்றியூர் இறைவா, நீ ஏன் எனக்கருள் செய்யக்கூடாது? அழுக்குடம்புடன் உன் சந்நிதி அடைந்தேன். நான்பிழைகள் செய்தது, செய்வது உண்மை. ஆயினும் நின் திருவடியை மறக்கும் பிழையை நான் செய்ததில்லை. வாழ்க்கையில் வழுக்கி வீழ்ந்தாலும் உன்னுடைய திருநாமத்தை மறந்ததில்லை. ஒற்றியூர் இறைவா! என்னுடைய கண் நோய்க்கு ஒரு மருந்து கூறு!" என்று ஊன் உருக உயிர் உருகப் பாடியருளுகின்றார் நம்பியாரூரர். உலக வழக்கினை ஒத்தே சிந்திக்கின்றார். நம்பியாரூரர் கண்களை இழந்தது சபதம் மீறியதற்காகத்தான்! ஆனால் நம்பியாரூரரோ சங்கிலிக்காகப் பரிந்து கண்களை இறைவன் பறித்துக் கொண்டதாகக் கூறுகின்றார். மீண்டும் திருவடிப் பிழையா நிலையை எடுத்து வற்புறுத்துகின்றார். இந்தப் பதிகம் முழுதும் உறவும் உரிமையும் இணைந்து குரல் கொடுக்கும் பாடல்கள்தான். கண்ணொளி இழந்தார். ஆனால் ஆன்ம ஒளி இழக்கவில்லை. திருவாரூர் காணும் வேட்கை தணியவில்லை. சாலைவழிச் செல்வோர் வழிகாட்ட திருவாரூர்ப் பயணத்தைத் தொடங்கிவிட்டார். வழியில் திருமுல்லைவாயில் திருத்தலத்தை அடைகின்றார். திருமுல்லைவாயிலில் பாடியருளிய பதிகத்திலும் சங்கிலிக்காக இறைவன் கண்களைப் பறித்துக்கொண்டான் என்றே பாடுகின்றார். திருநெடுவெண்பாக்கம் செல்கின்றார். நம்பியாரூரருக்கு ஆற்றாமை மீதுர்கிறது. ஆதலால் நெடு வெண்பாக்கத்தில் பாடிய பதிகத்தில் இறைவனை நோக்கி, "நீர் மகிழ்ந்து கோயிலுக்குள் இருக்கிறீர் அல்லவா?" என்று வினவுகின்றார். இறைவன் திருவுளங் கொண்டு ஊன்றுகோல் ஒன்றருள்கின்றான். ஆயினும் இறைவனிடமிருந்து ஊன்று கோல் தான் கிடைத்தது. இணக்கமான எதுவும் கிடைக்க வில்லை. பகைவன் போல "உளோம் போகீர்" என்றான். ஊன்றுகோல் கிடைத்த மகிழ்ச்சியில் நம்பியாரூரர் "பிழையுளன பொறுத்து அருள்வர்" என்று பாடினார். கண் பெற்றார் சுந்தரர்!
நம்பியாரூரர் திருவெண்பாக்கத் திறைவரிடம் வேண்டியது கண். ஆனால், அவர் தந்ததோ ஊன்றுகோல்! நம்பியாரூரர் இறைவனின் கருணையை - கருணையின் பற்றா அளவை நினைந்து ஆறுதல் அடைகின்றார். வெண்பாக்கத்திலிருந்து பழையனூர் வழியாகத் திருவாலங் காடு செல்கின்றார். பின், திருவூறல் பணிந்து கொண்டு காஞ்சி மாநகரம் சென்றடைகின்றார்.
காஞ்சிக்கு நம்பியாரூரர் வந்தடைந்ததை'
"தேனிலவு பொழிற்கச்சித் திருக்காமக் கோட்டத்தில்
ஊனில்வளர் உயிர்க்கெல்லாம் ஒழியாத
கருணையினால்
ஆனதிரு அறம்புரக்கும் அம்மைதிருக் கோயிலின்முன்
வானில்வளர் திருவாயில் வணங்கினார்
வன்றொண்டர்’
என்று சேக்கிழார் கூறி விளக்குகின்றார். "தேனிலவு", "காமக்கோட்டம்” இவற்றை அறிந்து மகிழ்க அடுத்து, "ஊனில் வளர் உயிர்கள்” என்றதால் ஊனும் உயிரன்று என்ற கொள்கையை உணர்த்தியவாறாயிற்று. உயிர்கள் வளர ஊனுடம்பு சாதனம்! உயிர்கள் வளர்வதால் ஊனுடம்பு பேண வேண்டியதாயிற்று என்பதை உணர்க! ஊனில் வளர் உயிர்கள் வளர அன்னை காமாட்சி அறம் செய்கிறாள்! அறம் செய்து கொண்டே இருக்கிறாள்!
காஞ்சித் திருக்கோயிலில் அடியார்கள் வழிபாட்டுக்குக் காத்து நிற்கின்றனர். அவர்களுக்குப்பின் நம்பியாரூரரும் நின்று வழிபடுகின்றார்! ஒழுங்கு வரிசை இன்றுவந்ததல்ல. தமிழர்களிடத்தில் பழங்காலத் தொட்டும் இருந்து வரும் முறை. காஞ்சிக் காமக்கோட்டத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் முன் நம்பியாரூரரைப் புகழ்தல் மூலம் அன்பு செய்ய வேண்டிய கடமைப் பாட்டினை உணர்த்துகின்றார். பாற்கடலைக் கடைந்த பொழுது எழுந்த நஞ்சினை உண்டு கண்டத்தில் அடக்கி அமரர்களுக்கு வாழ்வளித்தவன் இறைவன்! அதனாலேயே இறைவனுக்கு நீலகண்டன் என்ற பெயர் பெருவழக்காக வழங்குகிறது.
- "விண்ணாள்வார் அமுதுண்ண மிக்கபெரு விடமுண்ட
- கண்ணாளா கச்சிஏ கம்பனே! கடையானேன்”
என்கிறார் ஆரூரர்.
விண்ணோர்களுக்கு அருள் செய்த நீ எனக்கு அருள் செய்யாதது ஏன்? என்கிறார். அடுத்து நம்பியாரூரர் தன்நிலை விளக்கம் ஒன்று தருகிறார். அதாவது அவர் பிழை செய்தது உண்மை. அந்தப் பிழையை எண்ணித் திட்டமிட்டுச் செய்யவில்லை என்பதை "எண்ணாத பிழை பொறுத்து" என்று பேசுகிறார்; கண் தந்தருளும்படி வேண்டுகிறார்.
காஞ்சியில் எழுந்தருளியுள்ள இறைவன். மங்கை தழுவக் குழைந்தவர். திருவருட் சக்தியாகிய அம்மையின் ஆதரவால் இடது கண் கிடைக்கிறது. அடுத்து நம்பியாரூரர்க்குத் திருவாரூர் செல்லும் ஆர்வம். திருவாரூர் செல்லும் வழியில் திருவாமாத்தூர் வந்து சேர்கின்றார். திருவாமாத்தூர் இறைவனை வணங்கி மகிழ்ந்து சான்றோர் வளர் தொண்டை நாடு கடந்து சோழ வள நாடு வந்தடைகின்றார். திருவாவடுதுறையை வணங்குகின்றார். திருவாவடு துறையில் ஒரு கண் இல்லாத குறையை நினைந்து வருந்திப் பாடுகின்றார்! இறைவா! எனக்கேது உறவு? நின்னையல்லால் உறவு ஏது? என்று கூறித் தாழ்ந்து பணிகின்றார். கண்ணில் நோய் ஒன்றும் சுந்தரரைப் பற்றியிருக்கிறது. "புதிய நோய்" என்று சேக்கிழார் கூறுவதால் அது வந்த நோய் என்று உணர முடிகிறது. திருத்துருத்தியில் எழுந்தருளியுள்ள இறைவனை நோய் நீக்கியருளுமாறு வேண்டுகின்றார். இறைவனும் வட குளத்தில் குளிக்கச் சொல்கின்றான். நம்பியாரூரரும் திருத்துருத்தி வடகுளத்தில் நீராடி வந்தடைந்த நோய் நீங்கி எழுகின்றார். திருவாரூருக்குப் பயணம் தொடர்கிறது.
நம்பியாரூரருக்கு ஈடுபாடு மிகுதியும் உடைய திருத்தலம் திருவாரூர். ஏன்? திருவாரூர் இறைவன் தானே பரவையாரை மணம் முடித்துக் கொடுத்தார். நம்பியாரூரரின் அகத்திலும் கண்ணிலும் திருவாரூரே இடம் பெற்றிருந்தது. திருத்துறையிலிருந்து திருவாரூர்க்குப் பயணமானார்.
நம்பியாரூரர் இன்புறு நலன்கள் பல நாடினும் திருவருளை மறப்பதில்லை என்பதைச் சேக்கிழார், "திருவருள் மறவாது” என்று கூறி விளக்குகிறார். நம்பியாரூரர் தொண்டர்களுடன் கூடி இறைவனைப் பாடிப்பரவுவதால் தொண்டர்களுக்கும் பயன்; நம்பியாரூரரின் அன்பும் பெருகி வளர்கிறது. இந்தப் பெருகிய அன்புடன் மாலை நேரத்தில் திருவாரூர்க்குள் புகுகின்றார். முதலில் திருவாரூர் பரவையுண் மண்டளித் திருக்கோயிலை வணங்கி மகிழ்கின்றார். இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் தூவாயர். அதாவது தூயவாயினை உடையவர். இறைவனுடைய திருவாய்க்கு என்ன தூய்மை?
ஒரு காலத்தில் திருவாரூரையே அழிக்கத்தக்க அளவுக்குக் கடற்கோள் நிகழ்ந்தது. அப்போது அந்தக் கடல் நீர் முழுவதையும் குடித்துத் திருவாரூரைக் காப்பாற்றியதால் தூய வாயாயிற்று! தூய்மைக்கு இலக்கணம் நீராடலும், நறுமணம் பூசுதலும், புலாலுண்ணாமையும் மட்டுமல்ல; பலகாலும் உண்ணாமல் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்தாலும் அது நோன்பாகாது! விரத சீலர் அவ்வளவுதான்! அதனால் பயன் என்ன ? ஆனால் உண்மையான நோன்பு பிறருக்கென்று முயல்வதுதான்! தூய்மை என்பது பிறர்க்கு எழும் தீமையைத் தாம் ஏற்றுக் கொள்ளுதல் என்பது தான்!
பரவையுண் மண்டளித் திருக்கோயிலை வணங்கி மகிழ்ந்து திருவாரூர் மூலட்டானத்து இறைவனை வணங்க வருகிறார் நம்பியாரூரர். திருமூலட்டானத்திற்கு நம்பியாரூரர் வரும்நேரம், அர்த்தசாம வழிபாட்டு நேரம் ! திருக்கோயில் பூசைகளிலேயே அர்த்தசாம வழிபாடு சிறந்தது! ஏன்? வேண்டிய வேண்டியாங்கு எய்தலால்! அப்பன் அருட் சக்தியுடன் கூடப் போகும் காலம் அல்லவா? நம்பியாரூரர் முன்பு திருவாரூருக்கு வந்த இன்ப அனுபவம் வேறு. இப்போதைய அனுபவம் துன்பம் கலந்தது. கடவுளிடத்து மானிடப்பெண் நயந்த குறிப்புடைய "குருகு பாய” என்று பாடித் தொழுதார். அடுத்து, "மீளா அடிமை” எனத் தொடங்கும் அற்புதமான பதிகத்தைப் பாடியருளினார். இந்தப் பதிகம் ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கும் பதிகம். இப்பதிகத்தில் வலக் கண்ணைத் தந்தருளுமாறு வேண்டுகிறார். நம்பியாரூரரின் ஒருமைநிலை இப்பதிகத்தில் தெரிகிறது. கடவுள் வழிபாட்டுக்கு ஒருமை நிலை வேண்டும். இன்று ஒரு கடவுள், நாளை ஒரு கடவுள் என்று தொழக் கூடாது. இதனை,
- "மீளா அடிமை உனக்கே ஆளாய்ப்
- பிறரை வேண்டாதே."
என்று தன்னிலை விளக்கமாகத் தந்துள்ளார். இந்தப் பதிகத்தில் நம்பியாரூரருக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு புலப்படுத்துகிறது. "வாழப் பிறந்த அடியார்கள் ! உனக்குத் தொழும்பராகத் தொண்டு செய்பவர்கள். அவர்கள் படும் துன்பத்தை வாய் திறந்து உன்னிடத்தில் சொன்னாலும் தீர்வு காண்பதில்லை. சொல்லாமலே உதவிசெய்யக் கடமைப் பட்டவன் நீ! ஆனால், நீயோ சொல்லியும் உதவிசெய்வதில்லை. இதுதான் இயல்பா? நீ மட்டும்தான் வாழ வேண்டுமா? வாழ்ந்து போ! போ” என்று உரிமையோடு ஏசுகிறார்.
அடுத்த பாடலில், "திருவாரூர் இறைவா! நான் விரும்பியபடியே உன்னிடத்தில் ஆட்பட்டேன்! என்னைப் பூரணமாக ஒப்படைத்து விட்டேன்! நீ என்னை விற்க முடியும்! ஒத்திவைக்க முடியும்.! உனக்குநான் ஆட்பட்ட குற்றத்தை தவிர வேறு ஒரு குற்றமும் செய்ததில்லை! என் கண்களைப் பறித்துக் குருடாக்கினாய்! ஏன் குருடாக்கினாய்? உனக்கே பழி. மற்றொரு கண்ணைத் தந்தருள்க! அப்படித்தர விருப்பமில்லையாயினும் ஆகுக! நீ வாழ்ந்து போ! திருத்துருத்தியில் உறையும் ஈசனே திருப்பழனத்தை ஊராகக் கொண்டவனே! திருச்சோற்றுத் துறையை ஆள்பவனே! ஆயினும், இறைவா! உனது நிலையான இடம் திருவாரூர்தான்! இறைவா, உனக்கு எத்தனை திருத்தலங்கள் இருந்தும் என்? அடியார்கள் மனமே உனக்குச்சிறந்த இருப்பிடம்! அடியார்கள் மனமே உனக்குத் திருக்கோயில்! சொல்லித் தெரிய வேண்டியதில்லை! ஆயினும், ஏன்? உன்பால்மிகவும் அன்புடைய அடியார்கள் அவர்களுடைய துன்பத்தைச் சொன்னாலும் தீர்த்து வைப்பதில்லை! அது மட்டுமா? உனது கோட்பாடே விரோதமாக இருக்கிறது! இப்பிறப்பில், இம்மண்ணில் அடியார்களை வருத்துவது, மறுமையில் இன்பம் தருவது என்று கொள்கை வைத்திருக்கிறாய்! இதுதான் உனது கொள்கையாயின் வாழ்ந்து போ” என்று பாடுகிறார்.
பொதுவாகச் சமயநெறிகள் மறுமை நோக்கியனவாகவே அமைந்துள்ளன; ஆற்றுப்படுத்துகின்றன. "இந்த உலகத்தில் துன்புறுகிறவர்கள் அடுத்த உலகத்தில் பாக்கியவான்கள்” என்று விவிலியம் கூறும். இந்தக் கொள்கை இன்று விவாதத்திற்குரிய பொருளாகிவிட்டது,
- "செத்தபிறகு சிலோகம் வைகுத்தம்
- சேர்ந்திடலாம் என்றே எண்ணியிருப்பார் பித்த
மனிதர்"
என்பார் பாரதியார். இந்த உலகத்தில் துன்புறுதலால் மறு உலகத்தில் இன்புறுதல் என்ற மதக்கோட்பாட்டு வழிதான் சாதி ஆதிக்கமும், சுரண்டும் பொருளாதார ஆதிக்கமும் கால் கொண்டுள்ளன. நம்பியாரூரர் இந்தக் கொள்கையை இந்தப் பாடல் வழி மறுக்கிறார். இவரே, "இம்மையே தரும் சோறும் கூறையும்” என்று அருளியுள்ளமையும் அறிக சித்தாந்த சிவநெறியைப் பொறுத்தவரையில் இம்மை நலன்கள் புறக்கணிக்கப்படுவதில்லை. இம்மையிலேயே முத்தராகக் கூட ஆகலாம். அவர்கள் தான் சீவன்முத்தர். “மதுரையில் இம்மையே நன்மை தருவார் கோயில்" என்று ஒரு திருக்கோயிலும் இருக்கிறது.
இந்தப் பதிகம் மேலும் மேலும் பல தன்மைகளை, உண்மைகளை விளக்குவனவாய் அமைந்துள்ளன.
பிரிவு, தீது! பேயொடு பழக்கம் ஏற்பட்டு விட்டது! பழகும் பொழுது பேயின் இயல்புகளும் புலனாகின்றன. அது பேய் என்று தெரிந்த பிறகும் பிரியக்கூடாது. பேயுடன் கூட இருப்பதைவிட, பேயைப் பிரியும் பொழுது அதிகத் தீமை ஏற்படும். இறைவா! நான் என்ன செய்ய? விளக்க முடியவில்லை. ஒருவன் கனியை விரும்புகின்றான்; ஆனால் கனி கிடைக்கவில்லை. காய் கிடைத்தது. அதனால் கனி கிடைக்கவில்லையே என்று கவலைப்படக்கூடாது. காயை ஏற்றுக் கொள்ள வேண்டும். திருவாரூர் இறைவா! நான் நாய் போல உன் கண்ணில்படுமாறு திரிகின்றேன்! நானே உமக்கு ஆட்பட்டவன்! ஏன் வாய் திறந்து ஒரு வார்த்தை கூறக்கூடாதா? போனால் போகட்டும்! வாழ்ந்து போவீர்! உமக்கே பழி! என்று பலப்பலவாக நட்புரிமையினால் பாடினார்; பரவினார்; ஏசினார்.
இந்தப் பதிகத்தை கேட்டருளிய திருவாரூர்ப் புற்றீசர், வலக் கண்ணைக் கொடுத்தருளினன்! இப்பதிகத்தினைத் தொடர்ந்து ஒதின் கண்ணொளி பெறலாம் என்பது இன்றும் உள்ள நம்பிக்கை
திருவாரூர் வந்த நம்பியாரூரர் திருக்கோயில் வழிபாட்டுக்குச் செல்கிறார். அவருடன் வந்த பணியாட்கள் மாளிகைக்குச் செல்கிறார்கள் செய்தி கூற; செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய! ஆனால், பரவையார் மாளிகைக்குள் நுழைய முடியவில்லை. புறத்தேயே நிற்கிறார்கள்! பரவையாரைச் சமாதான்ம் செய்யப் பெரிதும் முயற்சி செய்தனர். ஒன்றும் பலன் கிடைக்கவில்லை.
பரவையாரின் புலவி நீக்கத்திற்குத் தம்மைச் சார்ந்த முயற்சிகள் பயன் தரவில்லை. நம்பியாரூரர் தனித்து இருந்து சிந்தித்தார். சிந்தனையின் முடிவு தன் தலைவன் சிவபிரானையே தூது அனுப்புவது என்பதாயிற்று. வினையின் பயனாக இணைந்த பரவையாரின் புலவி தணிக்கத் திருவுள்ளம் கொள்ளும்படி இறைவனை வேண்டுகிறார். இறைவனும் நம்பியாரூரர் முன் எழுந்தருளினன்.
"இறைவா, குற்றத்தில் அகப்பட்டு ஆழ்கின்றேன். என்னை எடுத்தாள வேண்டும்” என்று வேண்டி நின்றார்; "இறைவா! தியாகேசா! நான் சங்கிலியை மணமுடித்து வாழ்ந்த நிகழ்வுகளைப் பரவை அறிந்து வைத்திருக்கிறாள். அதனால், என் மீது வெறுப்பு! என்னைப் பார்த்தால் உயிரை விட்டு விடுவதாகக் கூறுகிறாள்! இறைவா! நான் உனக்கு அடிமை! நீ எனக்குத் தோழன்! இது உண்மையானால், இப்போதே இந்த இரவிலேயே பரவையின் புலவி தீர்த்து வருக!" என்று வேண்டினார். தியாகேசனும் தூது போக உடன்பட்டுத் தூது போனான்.
இறைவன் அன்பர் துயர் நீக்கும் இயல்பினன். அமரர்களுக்கு அமுதை வழங்கத் தான் நஞ்சுண்டு "நீலகண்டன்” என்ற பெயரைப் பெற்றவன். அமரர்களும், முனிவர்களும், நம்பியாரூரர் மனமும் தொடரப் பரவையார் திருமாளிகை நோக்கி நடந்தனன். திருவாரூரில் பரவையார் வாழ்ந்த பகுதி சிவலோகம் போலக் காட்சியளித்தது. சிவன் எம்பிரான் திருவடிகளில் அணிந்துள்ள சிலம்பு ஒலி செய்கிறது. இறைவன் திருவடிகளைத் தேடித் தேடிக் காண முடியாமல் எய்த்துக் களைத்துப் போன நான்முகனையும், திருமாலையும் சிலம்பொலி அழைக்கிறது. "வருக! வருக! பரவையார் வீட்டிற்கு வருக! எளிதில் சிவபெருமான் திருவடிகளைக் காணலாம்” என்று சிலம்பொலி அழைப்பதாகத் செந்தமிழ்ச் சேக்கிழார் அருளும் நயம் படித்து அனுபவிக்க வேண்டிய பகுதி.
பரவையாரின் திருமாளிகைமுன் சிவபெருமான் வந்து சேர்ந்தான். தம்முடன் வந்தாரை யெல்லாம் பரவையார் மாளிகைக்குச் சற்று தூரத்தில் நிற்குமாறு பணித்துச் சிவபெருமான், சிவவேதியன் திருக்கோலம் கொண்டான்! பரவையார் மாளிகையை நண்ணினான். பரவையாரின் மாளிகை வாசற்கதவு சாத்தியிருந்தது. சிவவேதியன் கதவைத் தட்டினான். 'பாவாய்' - என்று பரிவுடன் அழைத்துக் கதவைத் திறக்கும்படி வேண்டினான். பரவையார் கண் துயிலாநிலையில் இருந்தார்; கதவைத் தட்டி அழைத்தவர் சிவவேதியராக இருப்பார் என்று துணிந்தார். கதவைத் திறந்து, சிவவேதியரை வரவேற்று அழைத்துச் சென்றார். "ஐய! இறைவன் எழுந்தருளியது போலக் காட்சி! ஐயன்மீர்! இங்கு எழுந்தருளியது எதற்கு?” என்று பரவையார் கேட்டார்.
சிவவேதியர் "நான் சொல்வதை நீ மறுக்காது ஏற்றுச் செய்ய உடன்பட்டால் சொல்லலாம்” என்றார். அதற்குப் பரவையார் புத்திசாலித்தனமாக, "ஐய, நீர் விரும்புவதை அருளிச் செய்தால், அது எனக்கு இசைவாக இருக்குமானால் செய்யலாம்" என்றார். சிவவேதியர் "நம்பியாரூரர் இங்கு வரவேண்டும்" என்றார். பரவையார் "பங்குனி உத்திரத்திற்கு வந்திருந்தார். பின் என்னைப் பிரிந்து சென்றார். பிரிந்து சென்றவர் திருவொற்றியூரை அடைந்து ஆங்குச் சங்கிலியாருடன் தொடர்பு கொண்டார். சங்கிலியாருடன் இணைந்து வாழ்ந்தார். சங்கிலியாருடன் வாழ்க்கை நடத்தும் ஒருவர் இங்கு என் வீட்டிற்கு வர என்ன நியாயம் இருக்கிறது? சிவபெருமானே ஆயினும் இதற்கு வரலாமா? அதுவும் நள்ளிருளில் வரலாமா? நிரம்ப அழகுதான் என்றார்!” சிவவேதியர் திருக்கோலத்தில் இருந்த பெருமான் பரவையாரின் பேச்சைக் கேட்டு மனத்திற்குள் சிரித்துக் கொண்டார். ஆயினும் தம் நிலையைக் காட்டவில்லை. தம்முடைய தன்னேரிலாத தோழர் நம்பியாரூரர் வேட்கையினால் மனம் வெதும்பித் துன்புறுதலைக் காண விரும்பினார். இதுவும் பெருமானுக்கு விளையாட்டுப் போலும்! ஆதலால், பரவையார் மறுத்த செய்தியை எடுத்துக் கொண்டு நம்பியாரூரரை வந்தணைந்தார்.
நம்பியாரூரர் பரவையாரின் புலவி நீக்கப் பிரானாரை அனுப்பிய செயலை எண்ணி வருந்துகின்றார். ஆயினும் வேட்கை மீதுரத் தலைவன் - பிரானார் பரவையாரின் இசைவு பெற்று வருவார் என்று நம்பிக் காத்திருந்தார். பிரானார் பரவையாரின் மனையில் என்ன செய்திருப்பார்? எந்தை பிரானாரைக் கண்டபின் பரவை மறுக்கமாட்டார். பிரானாருக்கு என்னுடைய தூய அன்பு தெரியும். ஆதலால் பரவையாரின் புலவி தீர்த்தன்றி வரமாட்டார் என்று நம்பியாரூரர்? திடமாக நம்புகின்றார். பிரானார் வரும் வழியில் நம்பியாரூரர் வரவேற்கச் செல்வார். பிரானார் வராமையைக் கண்டு மீண்டு வருவார். அழிந்த நெஞ்சுடன் மயங்கி நிற்பார். சோர்வுடன் நிற்பார். நெற்றிக்கண் உள்ள பிரானார் காலந்தாழ்த்த மாட்டார் என்று மீண்டும் எழுவார். காமவேளின் மலரம்புகளின் தாக்குதலினால் ஒதுங்குவார்; துன்புற்றார்; துயருற்றார்.
பிரானார் பரவையார் இல்லத்திலிருந்து திரும்பும் பொழுது பிரானார் திருக்கோலத்துடனேயே வருகிறார். எங்கு பார்த்தாலும் ஒளிக்கதிர் வீச்சு! இரவு பகல் போலக் காட்சியளிக்கிறது. பிரானாரை நம்பியாரூரர் எதிரணைந்து வரவேற்றார். அணை கடந்த ஆற்று வெள்ளம் போல் பிரானார் முன் சென்றார்; அளப்பில் களிப்புடன் நின்றார்; பிரானாரை வணங்கினார்; புன்முறுவல் பூத்தார். பிரானார் விளையாட்டை உணராத நிலையில் நம்பியாரூரர் பரவையாரிடம் இசைவு பெற்று வந்திருப்பார் என்று நம்புகிறார். சேக்கிழார் அருளிச் செய்த பெரியபுராணம் மக்கள் காப்பியம்; வாழ்க்கை நூல்! கடவுளை வாழ்த்துப் பொருளாக மட்டுமல்லாமல் வாழ்வுப் பொருளாக்கிக் காட்டிய பெருமை சேக்கிழாருக்கே உண்டு. இறைவன், சுந்தரர்-பரவையார் புலவி தீர்த்தருளிய கருணைத் திறனுக்கு ஈடு ஏது? இணை ஏது? பெருமானுடைய கருணைத் திறத்தை வியந்து போற்றிய நிலையில் சுந்தரரும் பரவையாரும் சிந்தை ஒன்றி, உயிர் ஒன்றாகி வாழ்ந்தனர். இறைவன் இங்ஙனம் எளிவந்த கருணையுடன் துது நடந்தமையைத் தீவிர பக்தர்கள் ஏற்பார்களா? 'புனிதம்' என்ற பெயரால் சமூகத்திலிருந்து கடவுளை விலக்கி வைப்பவர்கள் அன்றும் இருந்துள்ளனர். இன்றும் உள்ளனர். சமூகத்திலிருந்து விலகுவதுதான் புனிதம் என்றால் அந்தப் புனிதம் எதற்காக? அந்தக் கடவுள்தான் எதற்காக?
சுந்தரருக்காக, அதுவும் ஒரு பெண் பொருட்டு, இறைவன் திருவாரூர்த் தெருவில் கழுகுகளும் உறங்கும் நள்ளிரவில் நடந்து உழன்ற செய்தியை ஏயர்கோன் கலிக்காமர் என்பவர் தாங்கிக் கொள்ள இயலாமல் பொருமினார்; ஆத்திரப்பட்டார். எந்தக் காரியத்திற்கு இறைவனைத் தூதனுப்புவது? இதற்கு நெறிமுறை இல்லையா? ஒரு பெண்ணின் புலவி தீர்க்க, இறைவனைத் தூதனுப்பிய சுந்தரரும் தொண்டர்தானா? ஐயோ, பாவம் ! தாங்கிக்கொள்ள இயலாத பிழையை, செவியால் கேட்ட பிறகும் ஏன் நான் சாகவில்லை? என்றெல்லாம் வெகுண்டு பேசுகிறார் கலிக்காமர். "அடியார் துன்பம் பொறாமல் இறைவன் எளிவந்தாலும் இறைவனைத் தூது அனுப்பலாமா? கொஞ்சமும் மனநடுக்கமின்றி இந்தப் பாவச் செயலைச் செய்தவனை நான் என்று காண்பேன்? ஒரு பெண்ணின் பொருட்டு-காமத்தால் தூண்டப் பெற்று ஆளுடைய சிவனைத் தூதனுப்பியவனை நான் நேரில் காண்பேனாகில் விளைவது வேறு" என்று வெகுண்டார். கலிக்காமரின் சினம் சுந்தரருக்குத் தெரிய வந்தது. சுந்தரரும் கலிக்காமர் கருத்துக்கு-கலிக்காமரின் சினத்துக்கு உடன்படுகிறார். சுந்தரர் தன் பிழையை உணர்கிறார். இனி இதற்கு என்ன தீர்வு? ஆளுடைய சிவனிடமே தீர்வுக்குரிய வழி காட்டும்படி வேண்டுகிறார்.
ஆளுடைய சிவனின் இயல்பு, பிரிந்தவரைச் சேர்த்து வைத்தல்தான்! ஏயர்கோன் கலிக்காமரும் சுந்தரரும் நட்புரிமை பூண்டுவாழ வேண்டும் என்று ஆளுடைய சிவன் விரும்புகின்றான். ஏயர்கோன் கலிக்காமருக்குச் சூலை நோய் வருகிறது. தவறு செய்கிறோமோ என்ற உணர்வு-நெஞ்சில் நடுக்கம். சுந்தரருக்கு அறவே இன்றி எங்ங்னம் செய்யத் துணிவு வந்தது? தீவினை செய்ய அஞ்சும் இயல்பு இயற்கையானது. அந்த இயல்பையும் சுந்தரர் இழந்தது எப்படி? ஆட்கொண்டருளும் சிவனை, தம்பிரானைத் துதுவிடுதலே பிழை! அதுவும் பெண்பால தூது அனுப்பினார் என்பது பெரும்பிழை. பிழை மட்டுமல்ல. பழியும் கூட இந்த தூதுப் பணியை மற்றவரைக் கொண்டும் செய்து முடித்திருக்கலாம். அப்படி முடிப்பதற்குரிய ஆளும் கிடைக்கவில்லை போலும்! ஆட்கொண்டருளும் சிவனுக்கு அடியார்கள் பஞ்சம் போலும்! கலிக்காமரின் சினம் எண்ணெய் வழிப்பட்ட எரிபோல வளர்கிறது. ஆட்கொண்டருளும் சிவனுக்கு, அவன்றன் புகழுக்கு இழுக்குத்தேடிய செய்தி கிடைத்த போதே சாதல்வேண்டும் அல்லது பழிச்செயல் செய்தவரைக் கொல்ல வேண்டும். இல்லாமற்போனால் தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் கலிக்காமர் எண்ணுகிறார்.
இச்சூழ்நிலையில் சூலைநோய் வருகிறது. சூலை நோயால் வருந்துகின்றார். ஆட்கொண்டருளும் சிவன், நம்பியாரூரர் வந்து சூலைநோய் தீர்ப்பர் என்று உணர்த்துகின்றார். நம்யாரூரரும் வருகின்றார். நம்பியாரூரர் தன்னைக் காணவரும் செய்தி, கலிக்காமருக்கு உவப்பாக இல்லை. மேலும் சினம் வளர்கிறது. நம்பியாரூரரைக் காணவும் அவர்வழி சூலை நோய் தீர்தலையும் கலிக்காமர் விரும்பவில்லை. சூலையால் வருந்தும் குடலைக் கிழித்துக் கொண்டார். உயிர்ப்போராட்டம் வந்துவிட்டது. கலிக்காமரின் மனைவி கலிக்காமரின் உடலை ஓரிடத்தில் பத்திரப்படுத்திவிட்டு நம்பியாரூரரை முறையாக வரவேற்கும் முயற்சியில் ஈடுபடுகின்றார். துக்கமும் துயரமும் நிறைந்த நிகழ்ச்சிகளைக் கூட மறந்துவிட்டு அல்லது தாங்கிக் கொண்டு, அடியார்களை வரவேற்று உபசரிக்கும் பண்பு மேவி வளர்ந்திருந்தமையைப் பெரியபுராணத்தில் பல வரலாறுகளில் காணமுடிகிறது.
நம்பியாரூரர் கலிக்காமர் இல்லம்வந்து சேர்ந்தார். கலிக்காமரை வருத்தும் சூலையிலிருந்து மீட்டு அவருடன் தங்கியிருக்க விரும்புவதை நம்பியாரூரர் புலப்படுத்துகின்றார். கலிக்காமரின் மனைவி "தீதிலர்; பள்ளிகொண்டுள்ளார்" என்கிறார். திதிலையானாலும் நம்பியாரூரர் மனம் தெளிவு கொள்ளவில்லை. கலிப்பகையாரைக் காண விரும்புகிறார். கலிக்காமர் கிடத்தப்பட்ட இடத்திற்கு நம்பியாரூரர் அழைத்துச் செல்லப்பெறுகிறார். அங்கு கலிக்காமர் இரத்தம் சொட்டச்சொட்ட உயிர் பிரிந்த பிணமாய் கிடந்ததைக் கண்டார். கலிக்காமர் நிலையைக் கண்ட நம்பியாரூரர் தம்மை மாய்த்துக்கொள்ள முற்படுகின்றார். கலிக்காமர் உடலிற் கிடந்த வாளினை எடுத்துத் தமது உடம்பில் பாய்ச்சிக் கொள்ள நம்பியுர்ரூரர் முயன்றபோது ஆளுடைய சிவத்தின் அருளால் கலிக்காமர் எழுந்து நம்பியாரூரர் கையிலிருந்து வாளைப்பிடுங்கி, நம்பியாரூரரின் தற்கொலை முயற்சியைத் தடுக்கின்றார்; வன்தொண்டர் வீழ்ந்து வணங்குகின்றார். கலிக்காமரும் வணங்குகின்றார். நம்பியாரூரரும் கலிக்காமரும் இடைவிடா நண்பராயினர்.