குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்/காதல்



காதல்


காதல் காதல் காதல்
காதல் போயிற் காதல் போயிற்

சாதல் சாதல் சாதல்

இப்படித் தொடங்கும் பத்துப் பாட்டுகளைக் குயில் குக்குக்கூ வென்ற இன்னிசைத் தீம்பாட்டாய்ப் பாடுகிறது. இன்னமுதைக் காற்றினிடை எங்கும் கலந்ததுபோல், மின்னல் சுவைதான் மெலிதாய், மிகவினிதாய் வந்து பரவுதல் போல், வானத்து மோகினியாள் இந்தக் குயில் உருவம் எய்தித் தன் ஏற்றம் விளக்குதல்போல் இந்த இன்னிசைத் தீம்பாடல் இருப்பதாகப் பாரதியார் மயக்கந் தரும் மொழியில் எடுத்துரைக்கின்றார்.

குயில் தன் காதலை எடுத்துரைக்கும் பாங்கு மிக அழகாய் அமைந்துள்ளது. மானுடர் பாட்டில் மனத்தைப் பறிகொடுத்துப் பாவலரின் காதலை வேண்டிக் கரைவதாய்க் குயில் கூறுகிறது.

குயில் பாடிய காதல்பாட்டு பாவலரின் உள்ளமாம் வீணைதனில் உள்ள வீடத்தனையும் விள்ள ஒலிப்பதால் வேறோர் ஒலியில்லை என்று, மனம் அந்தப் பாட்டிலேயே மயங்கிக் கிடப்பதைக் கூறுகிறார். குயிலின் உருவம் தன் மனமெங்கும் நிறைந்திருப்பதைப் பாவலர். கோடி பல கோடியாய், ஒன்றே யதுவாய் உலகமெலாம் தோற்றமுற்றதாகக் கூறுகிறார்.

நான்காம் நாள்தான் குயில் பாவலரை வரச் சொல்லியிருக்கிறது. ஆனால், ஒருநாள் போவதே பெரும்பாடாய் விட்டது கவிஞருக்கு.

நாளொன்று போவதற்கு
        நான்பட்ட பாடனைத்தும்
தாளம் படுமோ தறிபடுமோ

        யாரறிவார்

என்று தான்பட்ட பாட்டை விளக்குகிறார்.

தாளம் எழுப்பும் ஒலி கேட்போர் காதுக்கு இன்பம் தருகிறது. பாடும் பாட்டுக்கு அது இனிமை சேர்க்கிறது. ஆனால் கையில் இருக்கும் தாளம் அடிபடுவதை உற்று நோக்கினால் அதன் துடிப்பு விளங்கும். அடிபடுவதும், அதிர்வதும், அடிதாங்காமல் விலகிச் செல்வதும், மீண்டும் அடிபடுவதும், பாட்டு முடியும் வரை அது படும்பாடு உற்றுநோக்கினால் மிகுந்த உயிர் வாதையாகத் தோன்றும்.

தறியில் ஊடு பாவு இடமும் வலமும் ஒடி ஒடி இடையறாது சென்று சென்று வரும் காட்சி துன்பத்தால் நெஞ்சு துடிக்கும் துடிப்புக்கு ஒரு சாட்சி.

தாளம் படுமோ தறிபடுமோ என்று மனத்துடிப்பை விளக்கவரும் பாவலரின் கற்பனை நயம் மிகச்சிறந்தது.

மனத் துடிப்புத் தாங்காமல் பொழுது விடிந்தவுடன் சோலையை நோக்கிக் கால்கள் நடைபோடுகின்றன.

மன்மதனார் விந்தையால்

புத்திமனம் சித்தம் புலனொன்றறியாமல் வித்தைசெயும் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மையெனக்


காலிரண்டும் கொண்டு கடுகவுநான் சோலையிலே நீலிதனைக் காணவந்தேன்.........

என்று தன்னை மறந்து கால் இழுந்துக் கொண்டு போகும் விந்தையைக் கூறுகிறார்.

குரங்கு குயிலின் பாட்டில் மயங்கிக் காதலுற்றுச் செய்யும் சேட்டைகளைக் கவிஞர் அப்படியே குரங்குப் பாணியிலேயே வருணிக்கிறார்.

வற்றற் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே
முற்றும் வெறிபோல் முழுவெறி கொண்டாங்ஙனே
தாவிக் குதிப்பதுவும் தாளங்கள் போடுவதும்
ஆவி யுருகுதடி ஆஹாஹா என்பதுவும்
கண்ணைச் சிமிட்டுவதும் காலாலும் கையாலும்
மண்ணைப் பிறாண்டி வாரி யிறைப்பதுவும்

என்று அந்தக் குரங்கு காதல் வெறி கொண்டு பேசுவதைப் பாவலர் பாரதியார் கூறும்போது, கண்ணின் முன்னே அந்தக் குரங்கு ஆட்டம் போடும் காட்சி தோன்றுகிறது.

சஞ்சீவி பர்வதத்தின் சாரலிலே குப்பன் வந்து காத்திருக்கின்றான். சொன்னபடி இளவஞ்சி வருவதை எதிர்நோக்கி தென்திசையைப் பார்த்தபடி இருக்கின்றான். அச்சடித்த செப்புச் சிலைபோலே அவன் அவளுக்காக-அவள் வரும் திசையையன்றி வேறு நோக்கின்றிக் காத்திருக்கின்றான். ஆடாமல் அசையாமல் வாட்டத்தோடு காத்திருக்கின்றான். அவள் அவனை நெடுநேரம் கூடக் காக்க வைக்கவில்லை. அவன் வந்து சிறிது நேரத்தில் அவள் வந்து விடுகின்றாள் அந்தச் சிறிது நேரத்திற்குள் அவன் வாடி விடுகின்றான். அவ்வளவு காதல் அவள் மீது. ஆவலோடு, நெஞ்சில் ஊறிச் சுமக்கின்ற காதலோடு கண்டதும் பாய்ந்தெழுந்து அப்படியே வாரியணைத்துக் கொள்ளத் தாவி வருகின்றான்.

“தொடாதீர்கள்!” என்று அவள் தடைவிதிக்கின்றாள். எப்படியிருக்கும் நெஞ்சு?

திடுக்கிடுகின்றான். இதயக்குரல் ஒலிக்கின்றது. துயரத்தோடு அவளை நோக்கிப் பேசுகின்றான். காதல் மொழிகள் பெருக்கெடுத்துக் கரைதட்டிக் கொண்டு பாய்ந்தோடி வருகின்றன.

கண்ணுக்குள் பாவையே! கட்டமுதை நான்பசியோ
டுண்ணப்போம் போது நீ ஓர் தட்டுத் தட்டிவிட்டாய்!
தாழச் சுடுவெய்யில் தாழாமல் நான்குளிர்ந்த
நீழலைத்தா வும்போது நில்என்று நீதடுத்தாய்!
தொட்டறிந்த கையைத் தொடாதே என்றாய் நேற்றுப்

பட்டிருந்த தேகசுகம் விட்டிருக்கக் கூடுவதோ?

என்று வேதனையோடு கேட்கின்றான்.

அவளோ, சஞ்சீவி மலையின் உச்சிக்கு அழைத்துச் சென்று மூலிகைகளைப் பறித்துக் கொடுக்குமுன் தன்னைத் தொடக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கின்றாள்.

புதுமைப் பெண்ணான அவளை வலியத் தழுவிக் கொள்ள வகையற்ற குப்பன் அவளைக் கெஞ்சுகின்றான்.

ஒரு முத்தமாவது கொடு என்று கேட்கிறான். மூலிகையைப் பறித்துக் கொடுத்தால் நூறு முத்தம் உறுதியாகக் கிடைக்கும்; அதற்குமுன்னே ஒன்று கூடக் கிடைக்காது என்று உறுதியாகச் சொல்லி விடுகிறாள்.

என்று கட்டுப்பாடு விதிக்கிறாள். இவளிடம் கெஞ்சியும் பயனில்லை; மிஞ்சவும் முடியாது என்ற நிலையில் குப்பன் மலையின் உச்சியை நோக்குகிறான். மலைப்பாய் இருக்கிறது. உச்சிக்குப் போய்ச்சேர எவ்வளவு நேரம் ஆகும். அதுவரை எப்படிப் பொறுப்பது என்று துடிக்கிறான். அவனுடைய மலைப்பைக் கண்டு அவள் ஏளனமாய் நோக்குகிறாள்.

குப்பன் கொண்டிருந்த காதல் வேகம் அவனைப் பறக்கச் செய்கிறது. அவளைத் தூக்கிக் கொண்டு மலையின் மேல் பாய்ந்து ஏறுகின்றான். அவளை நடக்க வைத்துக் கூட்டிச் சென்றால் நேரம் கடந்துவிடும் என்று தூக்கிக் கொண்டு பறக்கிறான். அவனுடைய வேகத்தைப் பாவலர் கூறும் அடிகளே வேகமாய்ப் பறக்கின்றன.

கிட்டரிய காதல்
கிழத்தி இடும்வேலை
விட்டெறிந்த கல்லைப்போல்
மேலேறிப் பாயாதே!
கண்ணின் கடைப்பார்வை
காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு
மாமலையும் ஒர்கடுகாம்!
மாமலைதான் சென்னி வளைந்து
கொடுத்ததுவோ
நாமலைக்கக் குப்பன்
விரைவாய் நடந்தானோ
மங்கையினைக் கீழிறக்கி
மாதே! இவைகளே
அங்குரைத்த மூலிகைகள்
அட்டியின்றிக் கிள்ளிக்கொள்

என்றுரைத்தான். காதலின் வேகத்தைக் குப்பனின் செயலிலே காட்டும் இந்த வரிகள், படிக்கும்போதே வேகத்தை உணர்த்தி நிற்கின்றன.

ஓர் இளைஞனுக்கு ஒரு மங்கையிடம் ஏற்பட்ட மாசு மருவற்ற காதலை-அவளுக்காகத் தான் எதுவும் செய்யச் சித்தமாயிருக்கும்-ஈடுபாட்டை அருமையாக விளக்குகின்றன இந்தக் கவிதை வரிகள்.

இலக்கியங்களிலும் சரி, நடைமுறை வாழ்க்கையிலும் சரி காதல் ஏற்பட்டபின் அந்தக் காதலுக்காக எதையும் செய்யத், துடிக்கும் துடிப்பு ஆண் பெண் இருபாலாரிடையேயும் காணப்படுகிறது. ஆனால் காதலுக்கு அடிமைப்படும் போக்கு ஆண்களிடம் மட்டுமே காணப்படுகிறது. தம்மேல் இச்சை கொண்ட ஆடவரைத் தம் கருத்துப்படி நடத்துகின்ற வல்லமையைப் பெண்கள் எப்படியோ பெற்று விடுகிறார்கள்.

தன்மேல் அன்பு வைத்த ஆணிடம் தனக்கு வேண்டியதை எல்லாம் கேட்டுப் பெற்றுக் கொள்ளும் ஆற்றல் அல்லது திறமை பெண்களிடம் இயல்பாகவே அமைந்திருக்கிறது. ஆண்களோ, காதல் வயப்பட்டபின், அவளுக்கு மனநிறைவு தர எதையும் செய்யச் சித்தமாய் இருக்கும் அடிமைகளாய் மாறி விடுவார்களே தவிர, அவனிடமிருந்து எதையும் கேட்டுப் பெறும் மனப்பான்மை பெறுவதே இல்லை.

பொருளாசை யில்லாத பெண்கள், தம்மேற் காதல் கொண்டவர்களைத் தம் கருத்துப்படி யாட்டிப் படைப்பார்கள். தாம் சொன்ன செயல்களைச் செய்து முடிக்கும்படி கட்டளையிடுவார்கள். அன்புக் கட்டளை யென்று அதை நிறைவேற்ற ஆண்கள் பறந்து கொண்டிருப்பார்கள். பொதுவாக, காதல் என்று ஒன்று ஏற்பட்டுவிட்டால் அங்கே பெண்கள் ஆட்சி செலுத்துவதும். ஆண்கள் ஆட்பட்டு நிற்பதுமே பெரும்பாலும் தொன்றுதொட்டு நிகழும் கூற்றாய் இருக்கிறது.

குயில் தன்னைக் காதலிக்கும் பாவலனைத் தன்னையே நினைந்துருகும் வண்ணம் செய்து விடுகிறது. அதுபோலவே தன்னைக் காதலிக்கும் நெட்டைக் குரங்களையும், மாடனையும் வயப்படுத்தி விடுகிறது.

காதலிக்கும் பாவலனை நான்காம் நாள் வருமாறு கூறுகிறது குயில், நான்காம் நாள் என்ன நாளையே வருகிறேன் என்று சொல்லத் தோன்றவில்லை பாவலனுக்கு. அது சொன்னதைக் கேட்டுக் கொண்டு திரும்புகிறான். ஆனால், நான்கு நாள் பொறுத்திருக்க முடியாமல் மறுநாளே காணப் புறப்பட்டு விடுகின்றான்.

குயில் தன் இசையால் மட்டுமன்றித் தன் திறமையான பேச்சாலும் பாவலனை அடிமைப் படுத்திவைக்கிறது.

அது காளை மாட்டையும் குரங்கையும் கண்டு காதல் மொழி பேசுவதைக் கேட்டு ஆத்திரமடைந்து வாளால் கொல்லக் கருதி வீசமுற்பட்ட போதும்கூட, பாவலன் அதன் காதலுக்கு மீறி நடக்க முடியவில்லை.

தனக்குப் போட்டியாய் வந்த இருவர் மீது காதல் செலுத்தும் குயிலைக் கண்டதுண்டமாய் வெட்டிப்போட நினைத்தாலும், மீண்டும் மீண்டும் அதன் மேல் பித்தாகி அதைத் தேடிச் செல்லும் பாவலனை நோக்கும்போது, அவன் கொண்ட காதல், அவனை மீளா அடிமையாக்கி விட்டதை யுணர முடிகிறது. நான்காம் நாளும் குயில் தன்முற்பிறப்புக் கதையைக் கூறி அவனை மேலும் தன்வயப்படுத்துகிறது. பொதுவாகவே, காதல் என்று வந்துவிட்டால் பெண்கள் அரியணையில் ஏறிக் கொள்வதும், ஆண்கள் இட்ட வேலையைச் செய்யும் அடியவர்கள் ஆவதும் உலகியற்கை போலும்.

சஞ்சீவி மலைச் சாரலில் வஞ்சியைக் காதலிக்கும் குப்பனும் அப்படித்தான் இருக்கிறான்.

எப்படியாவது அவள் தன் மேல் தயவு காட்டினால் போதும் என்ற நிலையில் குப்பன் இயங்குகின்றான்.

மலைச் சாரலில் ஆவலோடு காத்திருக்கின்றான். வஞ்சி எப்போது வருவாள்; இன்பம் தருவாள் என்று அவன் நெஞ்சு ஏங்குகின்றது.

சற்றே தாழ்த்து வருகிறாள். அந்தச் சற்று நேரம்கூட அவனால் பொறுக்க முடியவில்லை.

இப்படி உயிரையே வைத்திருக்கும் அவனை அவள் வந்தவுடன் “தொடாதீர்கள்” என்று தடைபோடுகிறாள்.

அதிர்ந்து போகிறான் குப்பன். கெஞ்சுகிறான். பசியோடு இருக்கிறேன். கட்டுச் சோறுபோல நீ அருகில் கிடைத்தாய்! ஆனால் அந்தக் கட்டுச் சோற்றை யுண்ணக் கூடாதென்று தட்டி விடுகிறாயே! நீதியா நியாயமா? என்று ஏங்குகின்றான்.

ஆவல் என்னும் வெயில் பொறுக்க முடியாமல் இருந்தேன். ஆலமரத்து நிழல் போல உன்னைக் கண்டேன். நிழலுக்கு வராதே என்று நிறுத்திவிட்டாயே! நெறிதானா என்று அறங்கேட்கின்றான்.

நேற்று அன்பாகத்தானே இருந்தாய்? இன்றென்ன சினம்? என்று காரணம் புரியாமல் தவிக்கிறான். 34 குயிலும்...சாரலும்

மூலிகையைப் பறித்துக் கொடுத்தால்தான் நான் உயிரோடு இருப்பேன் என்று வஞ்சி முரண்டு பிடிக்கிறாள்.

பேச்சுக்கள், கோபங்கள், சமாதானங்கள் என்னென்னவோ நடைபெறுகின்றன.

இறுதியில் மூ லி ைக ைய ப் பறித்துத்தர உடனே அழைத்துச் செல்வதாக உறுதி கொடுக்கின்றான்.

அழைத்துச் சென்று மூலிகையைப் பறித்துக் கொடுத்தால் நூறு முத்தங்கள் தருவதாக அவள் வாக்களிக்கின்றாள்.

அச்சாரமாக ஒரு முத்தம் கேட்கின்றான்.

சாதனைக்காரி அவள்.

மூலிகைப் பக்கத்தில்தான் முத்தம் கிடைக்கும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விடுகிறாள்.

வேறு வழியில்லை குப்பனுக்கு.

அழைத்துச் செல்கிறான். இல்லை. நடந்து சென்றால் நேரம் ஆகுமென்று துக்கிச் செல்கின்றான். மூலிகைச் செடியருகில் இறக்கி விடுகின்றான்.

மூலிகை தரும் அதிசயத்தில் ஈடுபட்டுத் தன் காதல் வேட்கையை மறந்து விடுகின்றான் குப்பன்.

மூலிகைக் காட்சியால் குப்பன் பகுத்தறிவு பெறுகிறான். தெளிந்தவனாகி விடுகின்றான்.

மீண்டும் காதல் உணர்வு தலையெடுக்கிறது.

கதிரவன் மேற்றிசையில் இறங்கும் காட்சி பார்! மாலை யழகுபார்! அன்னம் பேடுதேடும் அழகுபார்! என்னைப்பார்! என் நெஞ்சை உன் நெஞ்சு ஆக்கிப்பார் என்று வேட்கையோடு அழைக்கின்றான். ஒப்பீடு 35

  • மூலிகைக்குப் பக்கத்தில், உமைத்தழுவி நோகாமல் நூறு முத்தங்கள் தருவேன்’ என்று சாரலிலே வாக்களித்தவள், இப்போது என்ன சொல்கிறாள். 'சாரல்தான் காதலுக்குத் தக்க இடம்; அங்கே போவோம்’ என்கிறாள்.

பாவம் குப்பன்!

இவ்வளவு பொறுத்தோம்; இன்னும் சற்றுப் பொறுப் போம் என்று அடங்கிப் போகிறான்.

சாரலுக்கு மீண்டும் இறங்கி வந்தவுடன் வஞ்சி மேலும் அவன் பொறுமையைச் சோதிக்கவில்லை.

“அன்பு மிகுந்தே அழகிருக்கும் நாயகரே! இன்பமும் நாமும் இனி” என்று குப்பன் மனங்களிக்கக் கூடுகிறாள். நெஞ்சு முழுமையாக நிறைவெய்துகிறது.

கதை முடியும் போது சுவைஞர்களுக்குப் பலவிதமான நிறைவுகள் ஏற்படுகின்றன.

ஒரு நல்ல காதல் கதையைப் படித்தோம் என்ற மன நிறைவு.

அறிவுத் தெளிவு ஏற்படுத்தும் ஒரு புதுநெறிபரப்பும் இலக்கியத்தைப் பெற்றோம் என்ற மனநிறைவு.

துய காதல் உணர்வுகளை அழகிய கவிதைக் கண்ணிகளிலே வடித்துக் கொடுக்கும் ஒர் இலக்கியப் படைப் பாளியைத் தமிழகம் பெற்றதே என்ற மனநிறைவு.

துன்பியலாக இல்லாமல் கதை இன்பியலாக முடிந்த தனால், இயல்பாக ஏற்படும் மனநிறைவு.

புதிய பல உவமைகளை-இனிய சொல்லாட்சிகளை-நெஞ்சில் நிலைத்து நிற்கும் நாடகக் காட்சிகளை படிக்கும் போதே மனக்கண்முன் நிறுத்தும் நிகழ்ச்சிகளைக் கண்டு களித்து மனநிறைவு கொள்ளுகின்றோம்.