குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்/கிண்டற்சுவை



கிண்டற்சுவை


குயில் பாட்டிலே பாரதியார் மனிதர்களை அழகாகக் கிண்டல் செய்கிறார். குயில் நெட்டைக் குரங்கனாகிய வானரத்தைப் புகழும்போது, மனிதர்களை ஏளனமாகப்பேசி வானரத்தை யுயர்த்திப் பேசும் பகுதிகள் மிகச் சுவையாக அமைந்துள்ளன.

மாயக்குயிலின் கிண்டல் மொழிகள் அதன்மீது சினம் ஏற்படுத்துவதற்குப் பதிலாக அதன் திறனை வியந்து போற்றவே செய்கின்றன.

மண்ணில் உயிர்க்கெல்லாம் தலைவரென மானிடரே
எண்ணிநின்றார் தம்மை; எனிலொருகால் ஊர்வகுத்தல்
கோயில் அரசு குடிவகுப்புப் போன்ற சில
வாயிலிலே அந்த மனிதர் உயர்வெனலாம்.

நாகரிகத்தில் மனிதர் உயர்ந்தவர்தாம் என்று உண்மையை ஒப்புக்கொண்ட குயில் இனிமேல்தான் தன் கிண்டலைத் தொடங்குகிறது.

மேனி யழகினிலும் விண்டுரைக்கும் வார்த்தையிலும்
கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே
வானரர்தம் சாதிக்கு மாந்தர்நிகராவாரோ!

கேட்டுக் கொண்டிருக்கும் குரங்குக்கு இன்பபோதை தலைக்கேறுகிறது. குயில் தொடருகிறது; ஒப்பீடு 37

ஆனவரையும் அவர்முயன்று பார்த்தாலும்
பட்டு மயிர் மூடப் படாத தமதுடலை
எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்
மீசையையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம் ஆசை முகத்தினைப் போல் ஆக்க முயன்றிடினும்
ஆடிக் குதிக்கும் அழகில் உமை நேர்வதற்கே
கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில் ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும்
வேறெத்தைச் செய்தாலும், வேகமுறப் பாய்வதிலே வானரர்போல் ஆவாரோ? வாலுக்குப் போவதெங்கே ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ?
பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு, கந்தைபோல் வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே
தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ? சைவசுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும் வானரர்போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ?

என்று அந்த மாயக் குயில் மானிடரைக் கிண்டல் செய்து குரங்கைப் புகழ்ந்து அதன் காதலுக்கு ஏங்கித் தவிப்பதாகப் பாடுகிறது உண்மையில் இது குரங்கையே கிண்டல் செய்வது போல் இல்லையா? மதியில்லாத குரங்கு, தன்னைப் பாராட்டுவதாக நினைத்துக் கொண்டு ஆட்டம் போடுகிறது.

மானிடரைவிடத் தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் வந்ததும் அது குடிகாரன் போல் ஆடத் தொடங்கிவிடுகிறது. அவ்வளவு புகழ்ப்போதை!

இந்தக் குயில் காளை மாட்டைப் பார்த்துக் காதல் மொழி பேசும் போது உண்மையிலேயே மாட்டை யுயர்த்திப் புகழ்கிறது. மாட்டைப் புகழும்போது மானிடரை இகழ்கின்றது. அந்தச் சொற்கள் உண்மையிலேயே மானிடரைப் பழிப்பதாய் உள்ளது. அங்கே கிண்டல் எதுவும் காணப்பட38 குயிலும்...சாரலும்

வில்லை. முற்பிறப்பில் மாலையிட நினைத்த மணவாளன் என்பதால் மாட்டைக் கிண்டல் செய்ய மனம் வரி வில்லையோ? மாட்டைப் புகழும் மொழிகள் அற்புதமாக அமைந்துள்ளன. கற்பனை மிக நயமாக வெளிப்படுகின்றது.

நந்தியே,
பெண்டிர் மனத்தைப் பிடித்திழுக்கும்
காந்தமே!
காமனே மாடாகக் காட்சிதரு
மூர்த்தியே!

பூமியிலே மாடுபோற்
பொற்புடைய சாதியுண்டோ?
மானிடரும் தம்முள்
வலிமிகுந்த மைந்தர்தமை
மேனியுறும் காளையென்று
மேம்பாடுறப் புகழ்வார்.

நீள முகமும் நிமிர்ந்திருக்கும் கொம்புகளும்
பஞ்சுப் பொதிபோற் படர்ந்த திருவடிவும்
மிஞ்சு புறச்சுமையும் வீரத் திருவாலும்
வானத்திடிபோல மா வென் றுறுமுவதும்
ஈனப் பறவை முதுகின்மிசை யேறிவிட்டால்
வாலைக் குழைத்து வளைத்தடிக்கும் நேர்மையும்,பல் :காலம் நான் கண்டு கடுமோக மெய்திவிட்டேன்

இவ்வாறு மாட்டைப் புகழ்ந்துரைத்த குயில், தான் மாட்டுடன் எவ்வாறு கூடி வாழப் போகிறது என்பதைக் கூறுகிறது. அங்கே தான் மானிடரைப் பழிக்கிறது.

மானுடராம் பேய்கள் வயிற்றுக்குச் சோறிடவும்
கூனர்தமை யூர்களிலே கொண்டு விடுவதற்கும்
தெய்வமென நீருதவி செய்தபின்னர், மேனிவிடாய் :எய்தியிருக்கும் இடையினிலே பாவியேன்

வந்துமது காதில் மதுரவிசை பாடுவேன்
வாலி லடிபட்டு மனமகிழ்வேன் ‘மா’ வென்றே
ஓடிடும்நும் பேரொலியோ டொன்றுபடக் கத்துவேன்
மேனியிலே உண்ணிகளை மேவாது கொன்றிடுவேன்
கானிடையே சுற்றிக் கழனியெலாம் மேய்ந்து நீர்
மிக்க வுணவுண்டு வாய் மென்றசைதான் போடுகையில்
பக்கத் திருந்து பலகதைகள் சொல்லிடுவேன்!

காளை மாட்டோடு சேர்ந்து கானக்குயில் வாழ்க்கை

நடத்தவுள்ள முறை மிகச் சுவையாக உள்ளதல்லவா?

மாட்டையும் குரங்கையும் புகழ்வதற்காக மானிடரைக் கிண்டல் செய்யும் குயிலின் மாயப் பேச்சுகளைக் கேட்ட பிறகு, சஞ்சீவி மலைக்குப் போனால், அங்கே மூலிகையின் மூலம் உலகின் பல பகுதியினரும் பேசுவதைக் குப்பனும் வஞ்சியும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இங்கிலாந்து தேசத்தில் இருந்து ஒருவன் பேசுவது காதில் விழுகிறது. இருவரும் கவனிக்கிறார்கள்.

வெள்ளைக்காரன் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறான். காந்தியடிகள் தலைமையில் அவன் ஆட்சியை அகற்ற அறப் போர் நடத்திக் கொண்டிருக்கிறோம். பகவத்சிங், வாஞ்சி நாதன் போன்ற வீரர்கள் வெள்ளையரைச் சுட்டுக் கொன்றுதான் சுதந்திரம் பெறவேண்டும் என்று இரகசிய ஆயுதப் புரட்சிகளில் ஈடுபடுகிறார்கள். நேதாஜி அன்னிய ஜப்பானியர், செருமானியர் உதவியுடன் பாரதத்தை மீட்கப் படைதிரட்டி வருகிறார். இப்படி யாளுக்கொரு முறையில் சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இங்கிலாந்து தேசத்துக்காரன் ஒருவன்-நம்மை அடிமைப் படுத்தி வைத்திருக்கும் வெள்ளைக்காரன் ஒருவன்-பேசுவது காதில் விழுகிறது. குப்பனும் வஞ்சியும் கவனமாய்க் கேட்கிறார்கள். வெள்ளைக்காரன் இங்கிலாந்து நாட்டில் வெள்ளைக்காரர்கள் மத்தியில் சொற்பொழி வாற்றுகிறான்.

ஓ! என் சகோதரரே! ஒன்றுக்கும் அஞ்சாதீர்

நாவலந்தீவு நம்மைவிட்டுப் போகாது.

எவ்வளவு உறுதியாகச் சொல்லுகிறான். சுரண்டுவதற்கும், அடிமைகளாய்க் கூலிகளாய் வேலைவாங்குவதற்கும் ஏற்ற ஒரு நாட்டையிழந்துவிடுவோமோ என்று பயப்படுகிறீர்களா? பயப்படத் தேவையில்லை. ஏனென்றால்,

வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்களென்றால்
சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்
ஆகையால் எல்லாரும் அங்கே தனித்தனிதான்

ஏக மனதாகி அவர் நம்மை எதிர்ப்பதெங்கே?

பேதங்கள் பல இருக்கும்போது அவர்கள் ஒன்று சேர்ந்து போராடி நம்மை எதிர்த்து விரட்டி யடிக்க முடியாது. மேலும் மேலும் பேதம் வளர்த்துக் கொண்டேயிருக்க அங்கே இரண்டு சக்திகள் உள்ளன. அவை யிருக்கும்வரை நமக்குக் கவலையில்லை. அவை என்ன?

பேதம் வளர்க்கப் பெரும்பெரும் புராணங்கள்!

சாதிச் சண்டை வளர்க்கத்தக்க இதிகாசங்கள்!

இவை மட்டுமல்ல, மக்களை மடையர்களாகவே ஆக்கி நிரந்தரமாய் அடிப்படுத்தி வைத்திருக்க பூசுரர்கள் இருக்கின்றார்கள்.

கட்டிச் சமூகத்தின் கண்ணவித்துத் தாமுண்ணக்
கொட்டி யளக்கும் குருக்கள் கணக்கற்றார்.
தேன்சுரக்கப் பேசி இந்து தேசத்தைத் தின்னுதற்கு

வான்சுரரை விட்டுவந்த பூசுரரும் வாழ்கின்றார்.

சேறுபோல் சூழ்ந்திருக்கும் இந்தச் சிக்கலிலே மாட்டிக் கொண்டிருக்கும் இந்திய மக்கள், இந்தச் சேற்றிலிருந்து கரையேறி நம்மை எதிர்த்து விரட்டுவது என்பது நடக்காத காரியம் என்று ஆங்கிலேயன் கூறுகிறான்.

இந்த உளைச்சேற்றை, ஏறாத ஆழத்தை
எந்தவிதம் நீங்கி நமை எதிர்ப்பார்? இன்னமும்
சிந்தனா சக்தி சிறிதுமின்றி மக்களுக்குத்
தம்தோள் உழைப்பிலே நம்பிக்கை தானுமின்றி
ஊறும் பகுத்தறிவை இல்லா தொழித்துவிட்டுச்
சாறற்ற சக்கையாய்ச் சத்துடம்பைக் குன்றவைத்துப
பொற்புள்ள மாந்தர்களைக் கல்லாக்கியே அந்தக்
கற்கள் கடவுள்களாய்க் காணப்படும் அங்கே!
இந்த நிலையில் சுதந்திரப் போரெங்கே?
கொந்தளிப்பில் நல்லதொரு கொள்கை முளைப்ப
தெங்கே?

கல்வியறிவு, பகுத்தறிவு, சிந்தனாசக்தி சிறிதும் இல்லாத மக்கள் எடுப்பார் கைப்பிள்ளையாய் எது நன்மை எது தீமை என்று தெரியாதவர்களாய் மூடக்கருத்துக்களை நம்பிசுதந்திர சிந்தனை யில்லாமல் இருக்கும் வரையில் அன்னியரை எதிர்த்து விரட்டி உரிமை பெறுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இந்தக் கருத்தைக் கூறிய ஆங்கிலேயன் மேலும் சொல்லுகிறான்.

தேகம் அழிந்துவிடும் சுற்றத்தார் செத்திடுவார்
போகங்கள் வேண்டாம்; பொருள் வேண்டாம்
மற்றுமிந்தப்
பாழுலகம் பொய்யே பரமபதம் போஎன்னும்
தாழ்வகற்ற எண்ணுங்கால் சாக்குருவி வேதாந்தம்!
சாதிப் பிரிவு சமயப் பிரிவுகளும்
நீதிப் பிழைகள் நியமப் பிழைகளும்
மூடப் பழக்கங்கள் எல்லாம் முயற்சிசெய்தே

ஒடச் செய்தால் நமையும் ஓடச்செய்வார் என்பேன்.

இவ்வாறு ஆங்கிலேயன் கூறி முடிக்கின்றான். குயில் குரங்கையும் மாட்டையும் புகழ்ந்து மாந்தர் இனத்தைக் கிண்டல் செய்கிறது. ஆங்கிலேயன், இந்திய மக்கள் நிலையை எடுத்துக் கூறிக் கிண்டல் செய்கிறான்.

இந்தக் கிண்டல் மொழிகளைக் கேட்டு வஞ்சியும் குப்பனும், துன்புறுகின்றனர். ஆனால் அதிலேயும் வஞ்சிக்கு ஒரு மகிழ்ச்சி. நம் நாடு உள்ள நிலையை இப்போதாவது சிந்தித்து அறிய முடிந்ததே என்பதுதான்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மேயோ என்ற வெள்ளைக் காரியொருத்தி இந்தியாவுக்கு வந்து இமயம் முதல் குமரி வரை சுற்றிப் பார்த்து, நம் மக்களிடம் பரவியுள்ள அறியாமை, மூடநம்பிக்கை, சாதிப்பிரிவுகள், மூடச் சடங்குகள், பிற்போக்கான பழக்க வழக்கங்கள், ஏற்றத் தாழ்வான சமுதாய அமைப்பு முறை, மதமும் சாதியும் கொண்டுள்ள தீய ஆதிக்கம், பூசுரர்கள் மக்களை ஒடுக்கி வைத்திருந்த முறைகள் அனைத்தையும் ஒன்று விடாமல் எழுதினாள். அதைக் கண்ட நம் மேல்சாதித் தலைவர்கள் மேயோ இந்தியாவில் உள்ள குப்பைகளை மட்டுமே திரட்டியிருக்கிறாள். மேன்மைகளும் நன்மைகளும் அவள் கண்ணில் படவேயில்லை என்று மறுப்பு எழுதினார்கள். ஆனால், அவள் சுட்டிக் காட்டிய குப்பைகளை நீக்க முயன்றார்களா என்றால், இன்றுவரையிலும் இல்லை என்றே கூறலாம். அவள் சுட்டிக் காட்டியது தான் அவர்களுக்குக் குற்றமாகப் பட்டதே தவிர, அதை நீக்கி நாட்டில் புத்துணர்ச்சியும், புது வாழ்வும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பிறக்கவே இல்லை. பெரியாரும் அம்பேத்காரும் தான், மேயோ திரட்டிய குப்பைகளை யகற்ற வேண்டும் என்றும், தீயிட்டுப் பொசுக்க வேண்டும் என்றும் பிரசாரம் செய்தார்கள். பெரியார் குப்பைகளைக் கொளுத்தியே விழிப்புணர்வைத் தூண்டினார். பெரியார் வழியில் புரட்சிக் கவிஞர் பாரதி தாசனும் தன் பங்குக்கு இந்தத் தொண்டுகளை இடைவிடாது முழுக்க முழுக்கத் தீவிரமாகச் செய்தார்.

குயில் பாட்டு இலக்கியம் என்ற அளவிலேதான் சுவை கூட்டுகிறது. சஞ்சீவி மலைப்பாட்டு நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு தேவை என்ற கருத்தையும் எடுத்துக் காட்டுவதாக அமைகிறது.