குறட்செல்வம்/அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை.

31. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை!


மனித சமுதாய வாழ்க்கையின் இரட்டை நாடிகள் பொருளும் அருளும் ஆகும். இவை இரண்டும் முரண் பட்டன அல்ல. இணைந்த இரட்டைகளாம். ஒன்றின்றி ஒன்றில்லை. ஒன்றற்கொன்று அரணுமாகும். ஒன்று பிரிதொன்றைக் கொண்டுவந்து சேர்க்கும். இவ்விரட்டை எங்காவது பிரிந்து காணின், அது பொருளுமன்று அருளுமன்று,

அறியாதார் சிலர், அருள் உணர்ச்சியால் பொருளை இழக்க நேரிடும் என்பர். பொருள் இழத்தலே, மேலும் பெறுதற்குரிய வழி! ஆனால், சூதில் இழத்தல் இதில் சேராது. அருள் கருதி, பசித்தவர் பசிப்பிணி நீக்கப் பொருளை இழப்பவர் பொருளை இழப்பதில்லையே! இதனை வள்ளுவம், 'பொருள் வைப்புழி' என்றது.

பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை. இது வள்ளுவத்தின் தெளிந்த முடிவு. ஆனால், இன்று நாட்டில் பொருள் என்பதற்குப் பிழையான கருத்தே கொள்கின்றனர். பொருள் என்பது இன்று நாணயமாற்று விகிதத்தில் நம்மிடையே நடமாடுவதன்று.

நாணயத்திற்குள்ள மதிப்பு அதில் கலந்திருக்கிற உலோகத்தைப் பொருத்ததன்று, ரூபாய் நோட்டுக்குள்ள மதிப்பு, அது செய்யப்பட்டுள்ள தாளுக்குரியதன்று. அதனுடைய மதிப்பு, அதற்குப் பின்னணியாகவுள்ள மனிதர்களுடைய அனுபவத்திற்குள்ள பொருள்களை வைத்தே யாகும்.

இன்னும் தெளிவாகக் கூறினால் அப்பொருள்களை உற்பத்தி செய்வதற்கு மனிதன் செலவழித்த அறிவு—உடல் உழைப்புக்களை மையமாகக் கொண்டதேயாகும். பொருள்களை உற்பத்தி செய்வதற்குரிய உழைக்கும் சக்தியை எவர் உடையவராக இருக்கிறாரோ அவரே அந்த அளவுக்குப் பொருள்களையோ நாணயங்களையோ, பெறவும் அனுபவிக்கவும் உரியவர் என்ற நியதியே உயர்ந்த ஒழுக்கமான நியதி. இந்த நியதி நின்று நிலவினால் நீதியும் நின்று நிலவும்.

இன்று நம்மிடையில் இந்த நியதியுமில்லை; நீதியும் இல்லை. உழைப்பென்றால் இன்னதென்றே அறியாத ஒரு நூறு பேர்களிடம் பல நூறு கோடியல்லவா முடங்கிக் கிடந்திருக்கிறது. இந்த முடக்கத்தை உடைத்து, மக்கள் மன்றத்திற்கு மடைமாற்றிய பெருந்தகைமை சான்ற பாரதப் பிரதமர் இந்திரா காந்தி, இந்த நாட்டின் வரலாற்றில் புதுயுகத்தைத் தோற்றுவித்து, புகழ்பெற்று விளங்குகிறார்கள்.

பொருள் என்பது, மனிதன், உண்டு, தின்று, உடுத்தி அனுபவிக்கத் தக்கனவே யாம். உடல் — உயிர்க்கூட்டு நிலைபெற்றியங்க இந்த எந்திர வாழ்க்கைக்கும் எரி பொருள் தேவை. அதுவே தம் உணவு. உணவில்லாதார், இவ்வுலகத்தில் இவ்வுடலுடன் கூடி வாழ்ந்திடுதல் இயலாது. இதனையே திருவள்ளுவர் 'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்றார்.

இவ்வுலகம் என்பது அண்மைச் சுட்டு. இவ்வுலகம் என்பது குடும்பத்தைக் குறிக்கும். பொருள் பெற்று கூடித் துய்த்து மகிழ்வதுதானே குடும்பம்! அஃதில்லையேல் குடும்பம் ஏது? அதனால், பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றும் கூறலாம்.

அடுத்து அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்று கூறுகிறார் 'அவ்வுலகம்’ என்பதை வீடு என்று பொருள் கொள்வது மரபு. அங்ஙனம் பொருள் கொள்வதில் தவறில்லை. ஆயினும், இந்த அவ்வுலகம் என்பது கேள்விக்குறி! அஃது அறிவொடு படாதது. அதனால் ஆய்வு இருக்கவே செய்யும், அதைவிடச் சிறப்பாக அருளின் பொருள் விளக்கமாக விளங்கும் சிறந்த பொருள் ஒன்று கொள்ள முடியும்.

அவ்வுலகம் என்பது சேய்மைச் சுட்டு. குடும்பத்தினின்று விலகி, சற்றுத் தூரத்தில் இருப்பது. அதுவே மக்கட் சமுதாயம்!

பொருளுடையான் அருள் உணர்ச்சியுடையவனாக—மக்கட் சமுதாயத்திற்குப் பயன்படும் வழியில் பயன்படுத்தத் தவறிவிடுவானானால் அவனுக்குச் சேய்மையில் விளங்கும் சமுதாயம், அவனை நினைத்துப் பார்க்கமாட்டாது.

அவனை ஒரு பொருளாக மதிக்கமாட்டாது. சமுதாயத்தின் மத்தியில் அவனைப் பற்றிய பேச்சு இருக்காது.

ஒரோ வழி இருந்தாலும் அது பேணுதற்குரிய பெருமையைத் தராது; சிறுமையையே தரும் அவ்வுலகம் என்பதற்குச் சமுதாயம் என்று பொருள் கொள்வதே ஐயத்திற்கிடமின்றித் தெளிவுபடுத்துவதாகவும், அருளுடைமை விளக்கத்தின் மையமாக இருக்கிற சமுதாயத்தைப் பற்றி நிற்பதாகவும் இருக்கிறது. இது சிறந்த கருத்தாகும்.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.