குறட்செல்வம்/பொருளைப் போற்று
32. பொருளைப் போற்று
திருவள்ளுவர், வாழ்க்கைகளுக்கு அப்பாற்பட்ட கற்பனை உடையவரல்லர். அவருடைய சிந்தனைப் போக்கு வாழ்வியலை ஒட்டியே அமைந்திருந்தது. எதார்த்த உண்மைகளுக்கு அவர் மாறுபட்டவரல்லர்.
ஆதலால், மனித வாழ்க்கைக்கு மிகமிக இன்றியமையாததாகிய பொருளைப் பற்றிய திருவள்ளுவரின் கருத்து இரண்டுபட்டதன்று. குழப்பமானதுமன்று: மிகமிகத் தெளிவானது. பொருளின் அடித்தளத்திலேயே தனிமனிதனின் வாழ்க்கையையும் சமுதாயத்தின் வாழ்க்கையையும் காட்டுகின்றார். ஏன்? பழந்தமிழ் மரபும் அதுதானே!
மனிதன் அடையக்கூடிய பேறுகள், நான்கு என்பது தமிழ்மறை. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாகும். அவற்றில் நடுவனவாகிய பொருள் எய்த இருதலையும் எய்தும் என்பது தமிழ்நூல் முடிபு.
அதனாறன்றோ திருவள்ளுர் அறம், பொருள், இன்பம் என்று முப்பால் நூல் செய்தார். வீடுபற்றி அவர் தனி இயல் அமைக்கவில்லை. காரணம், அறம், பொருள், இன்பம் ஆகியவை மனிதன் முயன்று செய்யக் கூடியவை—பெறக் கூடியவை.
ஆனால் வீடு, அறம்—பொருள்—இன்பத்தை முறையாகச் செய்து அனுபவித்து வெற்றி பெற்றவர்களுக்கு இறைவனால் வழங்கப் பெறுவது. வாழும் மனிதர்க்கே திருவள்ளுவர் நூல் செய்தமையின் காரணமாக, வீடு பற்றிய தனிவியல் அமைக்கவில்லை. எனினும் ஒரே வழி குறிப்பிட்டுள்ளார். திருவள்ளுவர் ஒரு பொருளியல்துறை அறிஞர், பொருளின் தோற்றத்திற்குரிய நிலைக்களனான பாதுகாத்தல், பங்கீடு ஆகியவையற்றி தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார். பொருளில்லையானால், உலகியல் இல்லை என்று கூறுகிறார்.
வறட்சித் தன்மையுடைய மாயா வாதம், பெளத்தம், சமணம் ஆகிய சமயக் கருத்துக்கள் தமிழகத்தில் ஊடுருவத் தொடங்கிய பிறகுதான், தமிழர் வாழ்வியல் கெட்டது: வாணிகம் வீழ்ந்தது. ஆட்சி அந்நியர் கைக்கு மாறியது.
இந்த நிலையினை உணர்ந்த தமிழக சிவ நெறி சான்றோர்களாகிய மாணிக்கவாசகர், அப்பரடிகள், சுந்தரர் போன்றோர் பொருளின் மேம்பாட்டினை வலியுறுத்தினர். 'முனிவரும் மன்னவரும் முன்னுவ பொன்னால் முடியும்’ என்பது மாணிக்கவாசகரின் வாக்கு.
“ஏரி நிறைந்தனைய செல்வம் கண்டாய்” என்றும், “பொன்னானாய், மணியானாய்” என்றும் அப்பரடிகள் பாடுகின்றார். சுந்தரர் வாழ்க்கைக்கு இறைவன் பொற்காசு வழங்கியதைச் சேக்கிழார் சிந்தை இனிக்கப் பாடுகின்றார்.
பொருள் உலகியலின் அச்சு; அதை வைத்தே உலகியல் நடைபெறுகிறது. திருவள்ளுவர், பொருளைப் போற்றவேண்டும் என்று கூறுகின்றார். பொருளை போற்றுதல் என்றால், பொருளைப் பூசித்தல் என்பது பொருளன்று. ‘பொருளைப் பாதுகாத்தல்’ என்பதுதான் பொருள். பாதுகாத்தல் என்றால் செல்வத்தின் பயனாகிய இன்பம் நுகர்தல், கொடுத்து மகிழ்தல், ஆகியன. செய்யாமல் பூட்டி வைத்துப் பாதுகாப்பது என்பதும் பொருளன்று. பொதுவாகவே, போற்றுதல் என்ற சொல்லுக்கு நிறைந்த பொருள் உண்டு. போற்றுதல் என்ற சொல்லிலேயே வளர்த்தல், பாதுகாத்தல் என்ற இரு கருத்துக்களும் அடங்கும்.
“பொருட் செல்வம் போற்றுவார் கண்ணே உள” என்கிறார் திருவள்ளுவர். பொருட் செல்வம் போற்றுதற்கு வேண்டிய முதற் குணம். பொருளின் மதிப்பினை— சிறப்பினை உள்ளவாறு உணர்தல்.
பொருள் என்றால், அது வளரும் இயல்புடையதே அன்றிக் குறையும் இயல்புடையது அன்று. பொருட் செல்வத்தை வாழ்க்கை என்ற களத்தில், உழைப்பு என்ற நீருற்றிச் சிக்கனம் என்ற வேலி கட்டிப் பாதுகாத்தல் வேண்டும். பொருளின் தாய் உழைப்பே யாகும். உழைப்பின்றேல் பொருள் இல்லை. வந்த பொருளைச் சிக்கன முறையில் பாதுகாக்க வேண்டும்.
அதனாலன்றோ, அப்பரடிகள், “ஏரி நிறைந்தனைய செல்வம் கண்டாய்” என்றார். ஏரிக்குக் கரைக்கட்டித் தண்ணீரைக் காப்பதுபோல, பொருளுக்கு சிக்கனம் என்ற கரை தேவை. சிக்கனம் என்றால் கஞ்சத்தனம் என்று பொருளல்ல— அப்படிப் பொருள் கொள்ளக்கூடாது.
ஒரு ரூபாய் செலவில் முடிக்கக்கூடிய காரியத்திற்கு இரண்டு ரூபாய் செலவு செய்வது பொருள் இழப்பிற்குரிய வழியாகும். அத்தகையோரிடத்தில் செல்வம் தங்குவது இல்லை. மேலும், பொருள் வருவதற்குரியனவாகக் கிடைத்து உள்ள வாய்ப்புக்களை இழக்காமல் முறையாகப் பயன் படுத்திப் பொருளீட்ட வேண்டும். வாய்ப்புக்களை இழப்பதும் கூடப் பொருள் இழப்பேயாகும்.
அதுபோல ஒரு களம் — அதற்குப் பயன்படுத்தக் கூடிய உழைப்பு ஆகியவை மூலம் எவ்வளவு பொருள் ஈட்டவேண்டுமோ, அவ்வளவையும் ஈட்டவேண்டும். அதற்குக் குறைவாக ஈட்டுதலும் பொருள் இழப்பிற்குரிய வழியேயாகும்.
பொருள் இழப்பு ஒற்றையல்ல—அதைத் தொடர்ந்து வருகிற இழப்புக்கள் பல உண்டு. பொருள் இழப்பினைத் தொடர்ந்து சிறப்பிழத்தல், வறுமை, நோய், வாழ்க்கைச் சுமை ஆகியவையும் அவற்றினைத் தொடர்ந்து நரகமும் வரும்.
“பொருளாட்சி போற்றாதார்க் கில்லை” என்பதைத் திருவள்ளுவர் “புலால் மறுத்தல்” என்னும் அதிகாரத்தில் வைத்து விளக்கியுள்ளார். இது, பொருளாட்சியின் அவசியத்தை எளிதில் மனங்கொள்ள உணர்த்துதற்கே யாம்.
திருவள்ளுவர் ‘புலால் மறுத்தல்' அதிகாரத்தை துறவற இயலில் வைத்துள்ளார். ஆதலால், புஜால் உண்ணாமை எல்லோரும் மேற்கொள்ளக்கூடிய ஒழுக்கமன்று என்று திருவள்ளுவர் கருதினார் போலும் எனக் கருதவும் இடமுண்டு. திருவள்ளுவர் இல்லற இயலிலும், குடியியலிலும் புலால் உண்ணாமையைக் கூறவில்லை. துறவிகள் அல்லாதார் புலால் உண்ணுதலுக்கு உடன்பட்டார் என்பது நமது கருத்து.
தற்போது உலகத்தை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ள உணவுச் சிக்கல்களுக்குச் சரியான தீர்வு புலால் உண்ணுதலைப் பெருக்குதல் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். இன்றைய அறிஞர்களின் கருத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய திருவள்ளுவரின் சிந்தனை!
ஆனாலும், துறவிகள் புலால் உண்ணக்கூடாது என்பது திருவள்ளுவரின் திட்டவட்டமான கருத்து. இன்றைய உலகியலில் உயிர்க்கொலையை அடியோடு எதிர்த்த புத்தரின் வழிவந்த பெளத்தத் துறவிகள் புலால் உண்ணலில் முதலிடம் வகிக்கிறார்கள்.
அருளொழுக்கத்தின் தாயகமாகிய தமிழகத்திற்கு அண்மையில் வந்திருந்த திபெத்தின் பெளத்த மதத் தலைவர் தலாய்லாமா அவர்கள் இனிமேல் புலால் உண்பதில்லை என்று நோன்பெடுத்துள்ளார்.
துறவிகளின் வாழ்க்கைக் கடமை புறநிலைத் தொடர்புடையது மட்டுமன்று. உள்ளுணர்வு சார்புடையதுமாகும். சிறப்பாக அவர்கள் இதயத்தில் அருளுணர்வு இடம்பெற வேண்டும். -
அருள் என்பது யார் மாட்டும், எதன் மாட்டும் விருப்பு, வெறுப்புக்களின் கலவையில்லாத மாசற்ற பரிவும் பாசமும் காட்டுதலாகும். இத்தகு அருளுணர்வுடையோர் எங்ஙனம் கதறக்கதறக் கழுத்தையறுத்து இரத்தம் சொட்டச் சொட்ட இரக்கமின்றிப் புலாலை உண்பார்கள்? அப்படி உண்பவர்களை எங்ஙனம் அருளாட்சியுடையோராகக் கருத முடியும்? என்று வினவுகின்றார் திருவள்ளுவர்.
துறவற உலகிற்கு அருளாட்சியும், இல்லற உலகிற்குப் பொருளாட்சியும் இன்றியமையாதன. இவ்விரு வேறு உலகமும் தமக்குரிய அருளாட்சியையும், பொருளாட்சியையும் போற்றுமாயின், பொருளால் அருள் வளரும்—அருளால் இன்பம் பெருகும்!
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊண்தின் பவர்க்கு.