குறட்செல்வம்/அறிவறிந்த மக்கட்பேறு



9. அறிவறிந்த மக்கட்பேறு


வீடும் நாடும் சிறப்பது நன்மக்களாலேயேயாம். தன் மக்களின் தோற்றத்திற்கு நிலைக்களன் மனையற வாழ்க்கை. வாழ்க்கைத் துணை நலத்தைத் தொடர்ந்து திருவள்ளுவர் 'மக்கட் பேறு' பேசுகின்றார். ஒன்றிற் கொன்று தொடர்பிருக்கிறது.

நன்மக்கட்பேறு வேண்டுமானால், தலைவனும் தலைவியும் நல்லவர்களாக இருத்தல் வேண்டும். ஒழுக்கம், பண்பு போன்றவை வழி வழி வளரக்கூடியன. அதனாலன்றோ கம்பன் 'குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிகட் கெல்லாம்’ என்று பேசுகின்றான். திருவள்ளுவரும் ‘குலமுடையான் கண்ணே யுள' என்கிறார்.

பொதுவாக பால்வேறுபட்ட ஒருவர்—ஒருவன் ஒருத்தி கூடி வாழ்ந்தாலே குழந்தை பிறக்கும்—மக்கட்பேறு கிடைக்கும். அஃது இயற்கை. ஆனால், திருவள்ளுவர் இத்தகு இயற்கையான மக்கட் பேற்றினைப் பாராட்டிப் பேசவில்லை. அவர் விரும்புவதெல்லாம் 'அறிவறிந்த மக்கட்பேறு.'

இந்த அறிவறிந்த மக்கட் பேற்றினைப் பெற விரும்பும் தலைவனும், தலைவியும் தங்களை, முதலில் செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் சீலத்தால் சிறந்த வாழ்வு நடத்துதல் வேண்டும். வித்தின் இயல்பு — நிலத்தின் இயல்பு ஆகியவற்றைச் சார்ந்ததே பயிரின் இயல்பு பயிரின் — நலம். அடுத்து, இன்பத்திற்காக மட்டுமே மணவாழ்க்கையல்ல. இலட்சியத்தை நோக்கி நடைபோடும் வாழ்க்கையில்—வழியிலே களைப்புத் தோன்றாமல் பயணம் செய்யவே உலகியல் இன்பங்கள். மனைவாழ்க்கையும் அத்தகையதே. சிலர் கருதுவது போன்று அது தீமையுமன்று-சிற்றின்பமுமன்று. எனினும், இலட்சியத்தை மறந்த நிலையில்-இங்கேயே தங்கிக் கிடக்கும்போது சான்றோரால் அது தவறு எனக் கண்டிக்கப்பெற்று வந்திருக்கிறது.

வாழ்க்கையின் இலட்சியம் துன்பங்களினின்றும் விடுதலை பெறுதல். பிறப்பு இறப்புச் சுழற்சியினின்றும் நீங்கி திருவருட் சார்பு பெறுதல். இந் நோக்கத்தை நோக்கிப் பயணம் செய்யும்போதே, பிற உயிர்களுக்குத் தொண்டு செய்தலும் இணைக்கப் பெறுகிறது. மனையறத்தில் தலைவன், தலைவியாக இருந்து ஒருவருக்கொருவர் உதவி, இன்பம் பெற்று வாழ்தல் அமைப்பு.

இந்த அமைப்பிலேயே, இலட்சிய உணர்வோடு கூடிய வாழ்வியற் பயணம் செய்ய உதவும் மனித உடம்பைப் பெறாத உயிர்களுக்கு—துணை செய்யக் கூடிய மனித உடம்பைப் பெறாமல் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் உயிர்களுக்கு மனித உடம்பைத் தந்து உதவி செய்யக் கூடிய அரிய சாதனமாகவும் மனைவாழ்க்கை பயன்படுகிறது. ஆதலால், மனைவாழ்க்கையைச் சாதாரண ஒன்றாகக் கருதாமல் அதையே 'தவம்' செய்யும் சாதனமாகக் கருதி, பயன்படுத்தினால் அறிவறிந்த மக்கட்பேறு கிடைக்கும்.

திருஞானசம்பந்தரை ஈன்றெடுத்த குடும்பம் மனையறத்திலேயே தவம் செய்த குடும்பம் சிவநெறி வளர்க்கும் திருப்பிள்ளை வேண்டும் என்ற குறிப்பிட்ட குறிக்கோளோடு தவம் செய்தே அவர்கள் அப்பேற்றினைப் பேற்றார்கள். இத்தகு நோன்பினை எல்லாக் குடும்பங்களுமே நோற்க வேண்டும்.

திருவள்ளுவர் அறிவறியும் மக்கட்பேறு என்று கூறாமல் 'அறிவறிந்த மக்கட்பேறு' என்று கூறியமையால், "தந்தை தாயாரின் முயற்சியால் கருவிலேயே அறிவறிந்த" என்ற குறிப்பினை உணர்த்துகின்றார். கருவிலே அறிவுடையவர்கள்—இளமைப்பருவத்திலேயே—குழந்தைப் பருவத்திலேயே கூர்ந்த மதியுடையராகத் திகழ்கின்றார்கள். திருஞானசம்பந்தர் தம் மூன்றாம் ஆண்டிலேயே திருநெறிய தமிழைப் பாடியது நினைவு கூரத்தக்கது.

கவிஞன் பாரதியும், பிறப்பிலேயே கம்பன், வள்ளுவன், இளங்கோ போன்றவர்கள் கருவிலேயே அறிவுடையர் என்று குறிப்பிடுகின்றார். இதனையே வள்ளுவர்,

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

என்ற குறட்பா வாயிலாக உணர்த்துகின்றார்.