குறட்செல்வம்/வெய்யிலும் அறமும்



10. வெய்யிலும் அறமும்


காய்கதிர்ச் செல்கன் ஆக்கத்தின் சின்னம். இருள் நீக்கி ஒளிதருவது கதிரொளி; மடிநீக்கி ஏற்றத்திற்குரிய எழுச்சியை ஈவது ஞாயிறு. செந்நெல்லும் செங்கதிரும் பயனுறச் செய்வதும் செங்கதிரோன் ஒளியே யாம்! எழுகின்ற ஞாயிற்றின் ஒளி இருள்நீக்கும்-ஒளி பெருக்கும் -உறுதி பயக்கும்-வாழ்வளிக்கும்! -

எனினும், எலும்பில்லாத புழுக்களை அது தாக்கி வருத்தும் வெயிலின் கொடுமையினின்றும், தற்காத்துக் கொள்ள எலும்பு தேவை. எலும்பிருந்தால் தற்காத்துக் கொள்வது மட்டுமின்றிக் கதிரவனின் ஒளி கொண்டு வாழவும் முடியும். .

அநீதியை நீக்கி நீதியை நிலை நிறுத்துவது அறம். துன்பத்தை நீக்கி இன்பத்தை நிலைபெறச் செய்வது அறம். அறத்திற்கு விலை அன்பேயாகும். அன்புடை யோருக்கு அறம் தென்றல்! அன்பில்லாதவர்களுக்கு அது வருத்தும் வாடைக் காற்று-துன்பப் புயல்! ஏன்? அன்பின் விளைவு அறம், அன்பின் பயன் அறம். அன்பு பண்பு, அறம் பயன்! இன்பத்தின் தாய் அன்பு. . . .

அன்பில்லாமல் மனித குலத்திற்குத் தீமை செய்து வாழ்பவனை அறக் கடவுள் வருத்தும். இதிகாச உலகில் இராவணனும், பெளர்ானிய உலகில் பத்மாசுர்னும், அரசியல் உலகில் ஜார் மன்னனும் இதற்கு எடுத்துக் காட்டாவர். வெய்யிலின் காய்ச்சலிலிருந்து ஒரோவழி தப்பித்துக் கொள்ள மூடியும். வெளியில் தலைக்ாட்டாமல் மண்ணின் உள்ளேயே புழு வாழுமானால் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் அறக்கடவுளின் காட்சியிலிருந்து அன்பில்லாத மனிதன் தப்பித்துக் கொள்ள முடியாது. அறக்கடவுள் எல்லாமுமாய்-முழுவதுமாய் இலங்குகிறார். அவரது பார்வை ஆழ்ந்தகன்றது. ஆதலால், அன்புடையராக வாழ்தலும், அறக்கடவுளின் கருணையில் வ்ளர்தலும் தமது கடமை.

அன்புடையராக வாழ்தலின் மூலம் தற்காத்துக் கொள்ளுதல் முன்னேறுதல், இன்பம் துய்த்தல், திருவருள் நிலை பெறுதல் ஆகிய பேறுகள் கிடைக்கின்றன.

அன்பின்மையால் இவற்றை இழக்கிறோம். அழிவும்: ஏற்படுகிறது. -

என்பில் அதனை வெயில்போலக் காயுமே அன்பில் அதனை அறம்.

O දී) © Q C;